பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 23, 2010

மகாகவி பாரதியார் போற்றிப் பாடிய பெரியோர்கள்

மகாகவி பாரதியார் போற்றிப் பாடிய பெரியோர்கள்.

மகாகவி பாரதியார் தனது கவிதைகளில் பல பெரியோர்களையும் தலைவர்களையும் போற்றிப் பாடியிருக்கிறார். அவை தவிர தனது கட்டுரைகளில் மேலும் பலரைப் பற்றி விரிவாகவும் எழுதியிருக்கிறார். சிலரைப் பற்றிய குறிப்புகளை ஆங்காங்கே தந்திருக்கிறார். அப்படிப்பட்ட பெரியோர்கள் அனைவருமே மகாகவியின் மனதைக் கவர்ந்தவர்களாகவும், தங்களது அரிய பெரிய சாதனைகளால் மக்கள் உள்ளங்களில் குடிகொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் பற்றிய குறிப்புகளைப் பாரதியின் பாடல் வரிகளிலிருந்தும், அவருடைய கட்டுரைகளிலிருந்தும் சிறிது இந்த நூலில் எடுத்துக் காட்டப்படுகிறது..

முதலில் அவருடைய கவிதைகளில் குறிப்பிடப்படும் தேசிய தலைவர்களைப் பற்றிய அறிமுகத்துடன் இந்தக் கட்டுரையைத் தொடங்குகிறேன். அவர்கள் முறையே சத்ரபதி சிவாஜி மகராஜ், கோபாலகிருஷ்ண கோகலே, கப்பலோட்டிய தமிழன் என ம.பொ.சிவஞான கிராமணி அவர்களால் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை, சர் பெஃரோஸ்ஷா மேத்தா, பால கங்காதர திலகர், மகாத்மா காந்தி, குரு கோவிந்த சிங், தாதாபாய் நெளரோஜி, சுவாமி விவேகானந்தரின் இளவல் பூபேந்திரர், லாலா லஜபதி ராய், இத்தாலி புரட்சி நாயகன் மாஜினி, பெல்ஜிய நாட்டு மக்கள், ரஷ்யாவின் சர்வாதிகாரி ஜார் மன்னன், ரஷ்ய புரட்சி வீரர் லெனின், பிஜித் தீவில் வாழ்ந்த இந்திய மாதர்கள், அவரது தந்தையார் சின்னச்சாமி ஐயர், இந்திய நாட்டு பெருமைக்குரிய விஞ்ஞானி ஜகதீச சந்திர போஸ், புதுவையில் சுற்றித் திரிந்த சித்தர் குள்ளச்சாமி எனும் மாங்கொட்டை சாமியார், புதுவைச் சித்தர் கோவிந்தசாமி, யாழ்ப்பாணத்துச் சாமி, குவளைக் கிருஷ்ணமாச்சாரியார் எனும் குவளைக் கண்ணன், ஓவியர் மணி ராஜா ரவிவர்மா, இசையுலக மேதை சுப்பராம தீக்ஷிதர், தமிழ்த்தாத்தா பண்டித மகாமகோபாத்யாய உ.வே.சாமிநாதய்யர், எட்டயபுரம் ஜமீந்தார் வெங்கடேசரெட்டப்ப பூபதி, காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தார், வேல்ஸ் இளவரசர், பாரதியாரை மட்டம்தட்ட நினைத்து 'பாரதி சின்னப்பயல்' எனும் ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச்சொன்ன காந்திமதிநாதப் பிள்ளை, கானாடுகாத்தான் வயி.சண்முகம் செட்டியார் போன்றவர்களைப் பற்றியும், அவருடைய கட்டுரைகளில் குறிப்பிடப்படும், மண்டையம் திருமலாச்சாரியார், மண்டையம் ஸ்ரீநிவாச ஐயங்கார், யதுகிரி, சுரேந்திரநாத் ஆர்யா, வெல்லச்சு செட்டியார் எனும் சுப்பிரமணியன் செட்டியார், விளக்கெண்ணெய் செட்டியார் எனப்படும் பாரதியார் குடியிருந்த வீட்டின் உரிமையாளர், மகான் அரவிந்தர், வ.வெ.சுப்பிரமணிய ஐயர், சுப்பிரமணிய சிவம், புதுச்சேரி புஷ் வண்டிக்காரன், கனகசுப்புரத்தினம் எனும் பாரதிதாசன், கனகலிங்கம், ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர், வேலைக்காரி அம்மாக்கண்ணு, அடுத்த வீட்டுக்காரர் பொன்னு முருகேசம் பிள்ளை, அவரது மகன் ராஜாபகதூர், கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார், வ.ரா. எனும் திருப்பழனம் வ.ராமசாமி ஐயங்கார், வக்கீல் துரைசாமி ஐயர், அன்னிபெசண்ட் அம்மையார், சர் சி.பி.ராமசாமி ஐயர், சுதேசமித்திரன் இந்து பத்திரிகை அதிபர் ஜி.சுப்பிரமணிய ஐயர், சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரங்கசாமி ஐயங்கார், பரலி சு. நெல்லையப்பர், மதுரை ஸ்ரீநிவாசவரத ஐயங்கார், தான் இறப்பதற்கு சில மணிகளுக்கு முன்பாக பாரதி எழுத விரும்பிய கட்டுரைக்கு நாயகன் ஆப்கானிஸ்தான் மன்னர் அமானுல்லாகான் ஆகியோரைப் பற்றியும் சுருக்கமாக இந்தக் நூலில் பார்க்கலாம்.

1. சத்ரபதி சிவாஜி

முகலாய மன்னர்கள் இந்திய மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து சத்ரபதி சிவாஜி தனது படைவீரர்கள், தளபதிகள் அடங்கிய கூட்டத்தில் முழங்கிய முழக்கமாக இந்தப் பாடல் மகாகவி பாரதியால் எழுதப்பட்டது. இதற்கு முன்பு லோகமான்ய பால கங்காதர திலகர் அவர்கள் தனது பத்திரிகையில் சிவாஜி பற்றி எழுதிய கட்டுரை ராஜத்துரோகமானது என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்து அவர் மீது வழக்கும் தொடர்ந்தது. அதே கருத்தை மகாகவி பாரதி தனது "இந்தியா" பத்திரிகையில் எழுதிய இந்த நெடும்பாடல் மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் அமைந்ததென்றாலும், இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கவனத்தைக் கவர்ந்ததாகத் தெரியவில்லை. இந்த பாடலின் தொடர்ச்சி வெளிவரும் என்று பாரதி குறிப்பிட்டிருந்தாலும், இது ஏனோ முடிவடையாமல் அரைகுறையாகவே அமைந்திருக்கிறது. இதில் பாரதி மிகவும் ஆவேசமாகத் தனது தேசியக் கருத்துகளை வலியுறுத்துகிறார்.

பாடலின் தொடக்கத்தில் தனது குலதெய்வமான பவானி அம்மனையும், பாரத மாதாவையும் போற்றும் விதத்தில் "ஜய ஜய பவானி! ஜய ஜய பாரதம், ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!" எனத் தொடங்கி சத்ரபதி சிவாஜி காலத்தில் சற்றும் புழக்கத்தில் இல்லாத "வந்தேமாதரம்" எனும் வங்கத்து நாவலாசிரியர் எழுதிய "ஆனந்த மடம்" எனும் நெடுங்கதையில் வரும் சந்நியாசிகள் பாடும் "வந்தேமாதரம்" எனும் தேசிய எழுச்சிக் கோஷத்தையும் சேர்த்து எழுதத் தொடங்குகிறார். இதிலிருந்து இவர் சத்ரபதி சிவாஜி குறித்து எழுதினாரென்றாலும், மனதில் இந்திய சுதந்திரத்தை நினைத்துத்தான் எழுதியிருக்கிறார் என்பது தெரிகிறது. படைத் தலைவர்களே, அறிவிற் சிறந்த அமைச்சர்களே என்று விளித்து, தனது படையின் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்து வாழ்த்துச் சொல்லிவிட்டுத் தன் பிரசங்கத்தைத் தொடங்குகிறார். அப்படி இந்த பாரத நாட்டின் பெருமையைச் சொல்லப்புகுங்கால் மாற்று தேசத்தினரின் புலை நாற்றம் என்பதே அறியாத இந்தப் பாரத புண்ணிய தேசத்தில் வெளித்திசை மிலேச்சர்களாகிய அந்நியர்களின் பாதங்கள் படப் பொறுப்பளோ பாரத மாதா என்கிறார். நம் பாரத தேசம் எத்தகையது? வீரர்களும், புலவர்களும் பாரெங்கும் புகழ் பரப்பிய பாரத நாடு. தர்மத்தையே தன் முழுமூச்சாகக் கருதி ஆட்சி புரிந்த மன்னர்கள் வாழ்ந்த நாடு. தன்சுகம் எதனையும் நினைக்காத பெருமுனிவர்கள் நிரம்பிய நாடு. இந்த நாட்டின் பெண்கள் பெரும் புதல்வர்கள் வீரர்களாக இருத்தல் வேண்டும், அப்படிக்கில்லையேல் அவர்களை மலடிகள் என்றழைக்கும் நாடு இது. இந்த பாரத பூமி பழம்பெரும் பூமி, சபையில் கூடியிருக்கும் வீரர்களும், படைத்தலைவர்களும், அமைச்சர்களும் இந்த வீரபூமியின் புதல்வர்கள் இந்த நினைவினை அகற்றாதீர்கள் என்று வேண்டுகோளோடு சிவாஜி உரை நிகழ்த்துகிறார்.

இப்பூவுலகில் எத்தனையோ நாடுகள். அத்தனை நாடுகளுக்கும் இந்தப் புனித பாரத நாடு திலகம் போன்றது. இந்த புனித உணர்வை மறந்து விடாதீர்கள் என்று பேசுகிறார். இப்புனித நாட்டை வானையிடிக்கும் இமயமலையும், சுற்றிலும் மற்ற திசைகளில் அலைகள் வீசும் கடல்களும் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நாடு எந்த வளத்தில் குறைந்தது? பாவங்களைப் போக்கும் புனித கங்கை நதியும், இமயத்திலிருந்து சீறிப்பாய்ந்து வரும் சிந்து நதியும், மெல்லிய காற்றில் அளைந்து வரும் அலைகளைக் கொண்ட யமுனை நதியும், எண்ணற்ற சுனைகளும், நீர்நிலைகளும் வளப்படுத்தும் புனித பூமி இது. இந்த பூமி நற்கனிகளையும் தானியங்களையும் குறைவின்றி கொடுக்க நீர்வளம் பெருக வானில் கருத்த மேகங்கள் பொங்கிப் பொங்கி வரும் பேரருள் நாடு. வானுலகில் பிறந்தாரெனினும் இப்புண்ணிய பூமியில் தேவர்கள் வாழ விரும்புவார்கள், அத்தகைய நாட்டில் முனிவர்களும் ரிஷிகளும் தவமியற்றுதற்கு ஏற்ற நாடு. பாரத நாட்டின் பெருமையைப் புகல வார்த்தைகள் போதுமோ? வீரர்களே, படைத் தலைவர்களே, அமைச்சர்களே நீங்களெல்லாம் இந்த பூமியின் புதல்வர்கள். இந்த நினைவை அகற்றாதீர்கள்.

இவ்வளவு பெருமைமிக்க இந்த நாட்டிற்கு என்ன நேர்ந்துவிட்டது? பேய்க்குணம் படைத்த அந்நிய நாட்டார், மிலேச்சர்கள், நமது பெருமை, வள்ளன்மை, நமது ஞானம் இவைபற்றிய எந்த அறிவும் இல்லாதோர், படைகொண்டு வந்து ஆக்கிரமித்துக்கொண்டு இன்னல் பல புரிகின்றார். வானளாவிய நமது பாரம்பரிய பெருமைகளைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் ஆலயங்களை இடிக்கின்றார்கள். காலம் காலமாக செவிவழி பயின்று மக்களை நல்வழிப்படுத்தி நன்மைகளைச் செய்துவரும் வேதநூல்களைப் பழிக்கின்றார்கள் ஒழிக்கின்றார்கள். தமது உயிரினும் மேலாக நமது மாதர்கள் போற்றிக் காக்கும் கற்பினைக் கவர்கின்றார்கள். மறைவலோர்கள் செய்யும் வெள்விகளைத் தடுத்தும் வேள்விக்கூடங்களை அழித்தும் கொடுமை புரிகின்றார்கள். குழந்தைகளையும் முதியவர்களையும் நாம் வழிபடும் பசுக்களையும் கூட அவர்கள் விட்டுவைக்காமல் கொலை செய்கின்றனர். நமது சாத்திரங்களைப் பழித்து ஒழிக்கின்றனர். நல்வழிச்சார்ந்த நற்குலப் பெண்களின் வாழ்வைப் பாழ்படுத்தி வருகின்றனர். இக்கொடியோர் நமக்கு இழைக்கும் துன்பங்கள் எண்ணிலடங்கா. நம்மை கண்ணியமாக நடத்தவில்லை. ஆண்மைகொண்ட வீரர்களை அழித்தனர். நமது செல்வங்களையும் பொருட்களையும் சிதைத்து மனங்களில் அச்சத்தை பேடிமையை விதைக்கின்றனர். பெருமைக்குரிய பாரதம் எனும் பெயரை பழிகொள் தாழ்ந்தவர்களாகச் சித்தரிக்கின்றனர். சூரர்களாக வாழ்ந்த நம்மவர்களை அடிமைகளாக ஆக்கிவிட்டனர்.

நம் மக்களின் வீரியம் அழிந்தது; மேன்மைகள் ஒழிந்தன; பெருமைக்குரியராம் வீரர்கள் புலையராம் அந்நியருக்கு அடிமை ஆயினர். இவைகளையெல்லாம் பொறுத்துக்கொண்டு வாழ்வதோ வாழ்க்கை? நம்மை அடிமைகளாக்கிவிட்ட புலையர்கள் காலிலா வீழ்ந்து கிடக்கப் போகிறீர்கள்? செடியில் பூக்கும் மலர்கள் மொட்டுகளாகத் தோன்றி, மலர்களாக மலர்ந்துப் பின் வாடிவதங்கி அழிவதுபோல அழிவதுதான் மனித வாழ்க்கை. தாய்த்திரு நாட்டை மாய்த்திட நினைக்கும் மிலேச்சர்களை அழிக்க விரும்பாதோர் வாழ்க்கையும் ஓர் வாழ்க்கையா? மான உணர்ச்சி என்பது சிறிதுமில்லாமல் மாற்றார் காலடியில் அடிமைகளாய் வீழ்ந்து கிடக்கும் வாழ்க்கையை எவன் கொலோ விரும்புவான்? நம் கண் எதிரில் நம் தாயைப் பிறன் கவர்ந்து செல்வதைக் கண்டபின்னும் நாய்போல் வாழ்பவனும் நம்முள் இங்கு இருக்கிறானா? எங்கிருந்தோ வந்த அன்னியனின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அச்சத்தோடு பிச்சை வாழ்க்கை வாழ்பவன் சுத்த வீரனல்ல? தாய்நாட்டின்மீது அன்பில்லாமல் தன் ஊனுடம்பை மட்டும் பேண நினைப்பவன் எவனும் சுத்த வீரனல்ல. நம்மை அடிமைகளாக்கி நம்மீது அதிகாரம் செலுத்தும் அன்னியனின் ஆட்சியை ஏற்றுக்கொள்பவன் சுத்த வீரனல்ல. அப்படிப்பட்ட வீரமில்லா கோழைகள் எவரும் இந்தக் கூட்டத்தில் இருந்தால் ஓடிவிடுங்கள்.

போர்க்களம் கண்டு எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடவைக்காத கடைப்படு மனிதன் எவரேனும் இங்கிருந்தால் என் கண்முன் நிற்காதீர்கள். சொந்த சகோதரர்களை நம் எதிரிகள் அழிக்கும்போது, பெண்கள் சுகத்தில் மயங்கிக் கிடப்பவன் அங்ஙனமே கிடக்கட்டும். கவலையில்லை. நாட்டைப் பிறர் வசம் எடுத்துக் கொள்கிறார்களே என்று கவலையின்றி வீட்டிற்குள் ஒளிந்து கொள்பவன் அப்படியே ஒளிந்து கொள்ளட்டும். கவலையில்லை. எதிரிகள் ஆதிக்கத்தில் தேசமே நலிந்திடும் வேளையில் தன் குடும்பம் தன் மக்கள் பெரிதென நினைப்பவன் நினைக்கட்டும்; கவலையில்லை. தேசமக்கள் பசியினால் வாடுகையில் தான் மட்டும் எப்படியாவது வயிற்றை நிரப்பிக் கொள்ள நினைப்பவன் இங்கு நிற்க வேண்டாம்; ஓடிவிடட்டும். உருவத்தால் ஆண்போன்று தோற்றமளிக்கும் அலிகளும், கோழைகளும் இங்கு நின்று என் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டியதில்லை, ஓடிவிடலாம்.

வீரர்கள் இருங்கள்; ஆண்மக்கள் இருங்கள்; வீரியம் மிகுந்த மேன்மக்கள் இங்கு இருங்கள்; மானமே பெரிது என்று மதிப்பவர் இங்கு இருங்கள்; ஈனகுணத்தை வெறுப்பவர் இங்கு இருங்கள்; தாய்நாட்டு அன்பு கொண்ட பிள்ளைகள் இங்கு இருங்கள். நாட்டுக்காகத் தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவர் இருங்கள்; புலையராம் அன்னியர் நம்மை ஆட்டிப்படைப்பதைப் பொறாதவர் இங்கு இருங்கள்: நம் கலைகளை அழிக்கும் காட்டுமிராண்டிகளைத் தண்டிக்க நினைப்போர் இங்கு இருங்கள்; ஊரார் துயரத்தைக் கண்டு வருந்துவோர் இங்கு இருங்கள்; வஞ்சகமில்லாத் தூய மனத்தினர் இங்கு இருங்கள்; தேவி பராசக்தியின் தூய பாதங்களை வணங்குவோர் இங்கு இருங்கள்; பாவிகளின் ரத்தத்தைக் குடிக்க விரும்புவோர் இங்கு இருங்கள்; தன் உடல் நலமே பெரிதென்று எண்ணா உத்தமர் இங்கு இருங்கள்; கடலில் மூழ்கினும் மனம் கலங்கா உளத்தினர் இங்கு இருங்கள்; வாருங்கள் துணைவர்களே! மனத் துயர் இனி வேண்டாம்! நம்முடைய ஆற்றலை நொடிப்பொழுதேனும் தாங்க வல்லரோ நம் எதிரிகள்? மென்மலர் பாதங்களையுடைய தேவியின் கருணை நம் பக்கமே இருக்கிறது. நம் பூமியில் உதித்த புகழ்பெற்ற வீரர்களாம் அர்ச்சுனனும், கண்ண பிரானும், பீமனும், துரோணாச்சாரியும், பீஷ்மனும், ராமனும் வேறுள வீரர்கள் யாவரும் நமக்குத் துணையாக நின்று உதவி செய்வார்கள்; வெற்றியை அன்றி நமக்கு வேறெதுவும் இல்லை. மகா முனிவர்கள் ஆசி வழங்குவர். போரிட்டு எதிரிகளை வேரோடு அழிக்க போர்முனை வாருங்கள்! ஈட்டியால் அவர் சிரங்களை வீழ்த்திட வாருங்கள். கைகொண்ட வேல்களை நேர்நின்று வீசுங்கள். போர்க்களத்தில் எதிரிகள் வாள் முனையிலும், சூலங்களடியிலும், நின்று போரிடும் வீரர்கள் காலடிகளிலும் தேர்களின் சக்கரத்தடியிலும் மாற்றாரின் தலைகள் வீழ்ந்து கிடக்கட்டும். நம் எதிரிகளைப் போர்க்களத்தில் நிர்மூலமாக்கிய பின்னர்தானே நாம் ஆண்கள் எனப்படுவோம். அப்படி ஒருக்கால் போரில் மாண்டு போனாலும் தேவர்கள் மணியுலகம் அடைவோம். அந்நியர் கால்பட்டு பாழ்பட்டுப் போன பாரத தேவியை மீண்டும் புகழ்பெறச் செய்வோம். போர் என்றால் இதுதான் போர். புண்ணியத் திருப்போர், இதுபோன்றதொரு போரைப் பார்க்கக் கிடைக்குமா?

ஆடுகளைக் கொன்று வேள்விகள் செய்து வீடுபேறு அடைய விரும்புவர் சிலரே! நெஞ்சத்துக் குருதியை நிலத்தில் சிந்தி வஞ்சத்தை வீழ்த்தும் மகா யக்ஞம் புரிவோம் யாம். வேள்வியில் இதுபோல் வேள்வி எங்குமே இல்லை. தவத்தினில் இதுபோல் தவம் உலகில் எங்குமே இல்லை. அன்று பாரதப் போரில் போர்க்களத்தில் அர்ஜுனன் நின்று எதிரே நின்ற எதிரிகளின் படைவரிசையைப் பார்த்தான். அங்கே கலைகளைக் கற்றுத் தந்த குருமார்கள், சோதரர், மைத்துனர், தாதையர், காதலின் நண்பர்கள் ஆகியோர் நிற்பதைக் கண்டு மனம் பதைத்து தன் தேரினை ஓட்டிவந்த தெய்வீக சாரதியைப் பார்த்துச் சொன்னான்: "ஐயனே! கிருஷ்ணா! இதோ நிற்கும் இவர்கள் மீதா அம்பினைத் தொடுப்பேன்? இந்த பூமியை ஆளும் உரிமையும், வானகத்து ஆட்சியும் எனக்குக் கிடைக்காமலே போனாலும், நான் இவர்களைக் கொல்லேன். எனது உடல் நடுங்குகின்றது. கையில் தாங்கிய காண்டீவம் நழுவுகின்றது. வாய் உலர்ந்து போகின்றது. மனம் பதைக்கிறது. கால்கள் தளர்கின்றன. தலை கவிழ்கின்றது. வேண்டாம் எனக்கு போரில் வெற்றி. வேண்டாம் அதனால் கிடைக்கும் புகழும் பெருமையும். என் உறவினரையும் சுற்றத்தாரையும் கொன்றுவிட்டுப் பெறும் சுகம் எனக்கு வேண்டாம். என்னை இவர்கள் கொல்வதேயாயினும் நான் இவர்களைத் தீண்டேன். எல்லாம் அழிந்தபின் யாருக்காக ஆள்வது எனப் பல சொல்லி கையிலிருந்த வில்லினை வீசி எறிந்துவிட்டு சோர்ந்து வீழ்ந்தான். அப்போது வேதநாயகன் தேர்மீது நின்ற கண்ணன் சொல்வான்: புரியாமல் பேசுகிறாய் பார்த்தா! புல்லிய அறிவோடு பேசுகிறாய். அறம் என்பதை அறவே ஒழித்துவிட்ட சுயோதனாதியரைக் கொல்வது அறமல்ல என்கிறாய். நீ உண்மையைப் புரிந்து கொள்ள மறுக்கிறாய். உறவு முறைகளையும் சுற்றி நிற்போர் உன் உறவினர்கள் என்பதாலும் ஏதேதோ பிதற்றுகின்றாய். வஞ்சகர், தீயோர், மனிதர்களை வருத்துபவர்கள், அகம்பாவம் பிடித்த நீசர்கள் இப்படிப்பட்டவர்கள் சொந்த சகோதரர்களாயினும் அவர்களை வேரோடு அழித்தல்தான் வீரர்களின் செயல். நீ வீரன். உனக்குமா தர்மம் புரியவில்லை? வீரமிலாதவன் போல மனம் புழுங்குகின்றாயே! இப்படிப்பட்ட ஆண்மையிலா நிலையை எங்கு கற்றாய்? பேடிமையை அகற்று. உன் பெருமையை மறந்திடாதே. ஈடில்லா புகழை உடைய அர்ஜுனா, எழுந்திரு, ஊம், எழுந்திரு என்று பார் புகழும் அந்தக் கண்ணன் கூறினான்.

இச்சொற்களைக் கேட்ட மாத்திரத்தில் குன்றனைய தோளுடைய பார்த்தன் எழுந்தான். எது அறம் என விளங்கிய மனத்தினனாய் எழுந்தான். எதிரே நிற்கும் பகைவர் கூட்டத்தில் உறவு இல்லை, உற்றார் இல்லை, நண்பர் இல்லை, சோதரர் இல்லை, குருமார் இல்லை என்பதை உணர்ந்தான். எடுத்தான் வில்லினை. விடுத்தான் கணைகளை. கொன்றான் கணப்பொழுதில் எதிரிகளைப் போர்க்களத்தில். அப்பேற்பட்ட போர் விஜயன் வாழ்ந்த நாட்டில் வாழும் மாவீரர்களே! எழுங்கள். அன்று விஜயனுக்குப் போர்க்களத்தில் எதிரே நின்றவர்கள் உறவினர், நண்பர்கள். இன்று, உங்கள் எதிரில் நிற்போர் நமக்கு அன்னியர். நேர்மையற்ற மிலேச்சர்கள்; வேற்று நாட்டவர்; பிறப்பால் அன்னியர்; பேச்சினில் அன்னியர், நம் சீர்மை அறியாதவர்கள்".

இப்படித் தொடங்கி மேலும் எழுத பாரதியார் எண்ணம் கொண்டாரோ என்னவோ. அது முடியவில்லை. முடிவில்லா இந்தப் பாடலின் முடிவை நாமன்றோ தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்தல்லவா தொக்கி நிற்கிறது. எல்லா காலங்களுக்கும் ஏற்புடைய இந்த வீர உரையை நாம் மனத்தில் இருத்திப் பாரத நாட்டின் புகழ் நிலைக்கப் பாடுபட வேண்டும். அதுதான் பாரதியும் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. பாரதி சத்ரபதி சிவாஜியை போற்றிய இந்தப் பாடலோடு, சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியை இந்த இடத்தில் நாம் நினைவுகூர்வது அவசியமாகிறது. வரலாற்று நூல்களில் பலவாறு இந்நிகழ்ச்சியை மாற்றியும் திரித்தும் கூறப்பட்டிருந்தாலும், நடந்தது என்ன என்பதை விவரமாக விளக்குவதே நமது நோக்கம். அந்த வரலாறு இதோ:-


2. கோபாலகிருஷ்ண கோகலே.

இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஆரம்ப கால தலைவர்களில் கோபாலகிருஷ்ண கோகலே முதன்மையானவர். அப்போதிருந்த காங்கிரசின் மிதவாதத் தலைவர்களிலும் முதன்மையானவர். மகாத்மா காந்தி இவரைத்தான் தனது குருநாதராக ஏற்றுக் கொண்டார். இவரை குருநாதராக ஏற்றுக்கொண்டாரே தவிர இவரது மிதவாதக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டாரில்லை. மகாத்மா காந்தி மோகன்சந்த் கரம்சந்த் காந்தியாகத் தன் தென்னாப்பிரிக்க போராட்டத்திற்கிடையே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்திறங்கியதும் கோகலேயைத்தான் சந்தித்தார். அவர் சொன்னார். மிஸ்டர் காந்தி நீங்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்த நிலைமை வேறு. இந்தியா இருக்கும் நிலை வேறு. இங்கு நீங்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக இந்தியா முழுவதும் சுற்றிப் பாருங்கள். இங்குள்ள மக்களோடு பழகிப்பாருங்கள். அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தைப் பாருங்கள். அவர்களுடைய தேவைகளை நன்கு கண்டுபிடியுங்கள். நீங்கள் உங்களை இந்த பாரத மக்களோடு மக்களாக உணர்ந்தபின் இங்கு நடக்கும் சுதந்திரப் போரில் பங்கு கொண்டு பணியாற்றுங்கள் என்றார். குருநாதரின் பணியை தலைமேல் ஏற்றுக்கொண்டு காந்தியும் அன்றைய ரயில்வேயின் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறிக்கொண்டு மனைவி கஸ்தூரிபாயுடன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்த நாட்டு மக்கள் வாழும் நிலைமையை நேரில் கண்டார். தம் குருநாதர்தான் எவ்வளவு தீர்க்கதரிசி. இப்படி இந்த மக்களின் உணர்வுகளை, வாழ்க்கையை, தேவைகளை எதையுமே புரிந்து கொள்ளாமல் நான் என்ன செய்திருக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்ட காந்தி, இந்த ஏழை, எளிய, கல்வி அறிவற்ற, இந்த நாடு தங்கள் சொந்த நாடு என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத அப்பாவி மக்களுக்காகப் போராட முடிவு செய்தார். காந்தியடிகளின் குருநாதர் கோபாலகிருஷ்ண கோகலே 1915இல் காலமாகிவிட்டார்.

அந்த கோகலேயை சில இடங்களில் கிண்டல் செய்தும், அவரது மிதவாதக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாத பாரதியார் இப்படியொரு பாட்டை இயற்றினார். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியர்களுக்கு எத்தகைய சீர்திருத்தத்தை அல்லது எவ்வித சலுகைகளை அளிக்கலாம் என்று பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தனர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். அதில் மிண்டோ மார்லி சீர்திருத்தம் என்பதும் ஒன்று. இதனை கேலி பேசும் வகையில் பாரதி இந்தப் பாடலை, வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் இயற்றிய "களக்கமறப் பொது நடனம் கண்டுகொண்ட தருணம்" எனும் பாட்டின் மெட்டில் இயற்றினார். பாட்டு இதோ:

"களக்கமுறும் மார்லி நடம் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு கனிதான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பி விழுந்திடுமோ?
வெம்பாது விழினும் என்றன் கரத்திலகப் படுமோ?
வளர்த்த பழம் கர்சானென்ற குரங்கு கவர்ந்திடுமோ?
மற்றிங்கு ஆட்சி செய்யும் அணில் கடித்து விடுமோ?
துளக்கமற யான் பெற்றிங்கு உண்ணுவேனோ? அல்லால்
தொண்டை விக்குமோ ஏதும் சொல்லரிய தாமே."

இதற்கு "கோகலே சாமியார் பாடல்" என்று பெயர் சூட்டியிருக்கிறார் பாரதியார். மிண்டோ மார்லி சீர்திருத்தம் எந்த அளவுக்கு இந்திய மக்களுக்கு உதவிற்று என்பதையும், அதன்பின் வந்த சீர்திருத்தங்கள் எந்த அளவுக்கு இந்திய விடுதலைப் போர்வீரர்களை மகிழ்வித்தது என்பதற்கும் நம் வரலாறு பதில் சொல்லும். மகாகவி மிக நன்றாக, மிகமிக நன்றாக ஆங்கில ஆட்சியினரின் போக்கை அளந்து வைத்திருந்தார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இந்த இடத்தில் நாம் ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அன்றைய காலகட்டத்தில் இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்களில் மிதவாதிகள் தீவிர வாதிகள் என்று குறிப்பிடப்பட்ட போதிலும், இரு பிரிவினருமே புடம்போட்டெடுத்த தேசபக்தர்கள் என்பதைப் புரிந்து கொள்வதோடு, அவரவர்கள் பின்பற்றிய வழிமுறைகளில் மட்டுமே மாற்றம் இருந்தது நோக்கத்திலோ, தேசபக்தியிலோ இல்லை என்பதை நன்கு தெளிந்து கொண்டே இந்த சொற்களின் பொருளை அறிய வேண்டும். தீவிர வாதிகள் எனும்போது இன்றைய வழக்கில் குறிப்பிடப்படும் "பயங்கரவாதிகள்" எனும் பொருளில் இல்லை. தேசபக்தியிலும், இந்திய சுதந்திரத்தை அடைய கடைப்பிடிக்கப்போகும் வழிமுறைகளிலும் தீவிரம் காட்டியதாலும் இவர்கள் இந்தப் பெயரினைப் பெற்றார்கள். ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியாளர்களிடமிருந்து சிறுகச் சிறுக சலுகைகளைக் கேட்டுப் பெற்று இந்தியர்கள் பயன்பெறுவது என்பது மிதவாதிகள் எண்ணம். பரிபூரண சுதந்திரம் தான் நமது தேவை. அது என் பிறப்புரிமை. அதனை அடைந்தே தீருவோம் என்று வேகம் காட்டியது தீவிரவாதம். இதில் கோகலே எனும் தேசபக்தர் மிதவாத கொள்கையுடையவர் என்பதனை இங்கு தெளிதல் அவசியம். இந்த மிண்டோ மார்லி சீர்திருத்தம் நமக்கு நன்மைகளை விளைக்குமென்று அவர் கருதியதைக் கேலி செய்து பாரதி இந்தப் பாடலைப் புனைந்திருக்கிறார்.

3. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை.
மகாகவி உயிரினும் மேலாக மதித்த தமிழகத் தலைவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. இருவரும் ஒரே பகுதியான திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள், பிள்ளை அவர்கள் தூத்துக்குடியிலும், பாரதி எட்டயபுரத்திலும் அருகருகே இருந்தவர்கள் எனினும் பாரதியும் வ.உ.சியும் முதன்முதலில் சந்தித்தது சென்னையில்தான். பாரதி 'இந்தியா' பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம், சென்னை வந்த வ.உ.சி. பாரதியைச் சந்திக்க இந்தியா பத்திரிகை அலுவலகம் சென்றார். அங்கு சென்று பாரதியைப் பார்க்க வேண்டுமென்று சொல்ல, பத்திரிகாதிபவர் மண்டையம் திருமலாச்சாரியார் பாரதியை விளித்து, "பாரதி! உன்னைப் பார்க்க உங்கள் ஊர்க்காரர் ஒருவர் வந்திருக்கிறார்" என்றார். பாரதியும் கீழே இறங்கி வந்து தன்னைக் காண வந்திருக்கும் வ.உ.சியைப் பார்த்து யார் என வினவ, தான் உலகநாத பிள்ளையின் குமாரர் சிதம்பரம் என்று சொல்ல, "ஓ! அப்படியா, உங்கள் தகப்பனாரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் மகனா நீங்கள் உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் பார்த்ததில்லை, வாருங்கள் பேசிக்கொண்டே போகலாம்" என்று இருவரும் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள்.

இருவரும் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிக்கோண்டே கடற்கரையை அடைந்தனர். அப்போது தங்கள் உரையாடலின் நடுவே பாரதி, பராசக்தி அருள் புரிவாள், நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லும்போது தெரு விளக்குகள் பிரகாசமாக எரியத் தொடங்கின. அடடா! இதோ பாருங்கள் பராசக்தி என் சொல்லை ஆமோதித்து விட்டாள் என்று பாரதி மகிழ்ந்தார். இவர் சிறை சென்றபோது "வேளாளன் சிறை புகுந்தான்" என்று மனம் வருந்தி பாடியிருக்கிறார். அதுமட்டுமல்ல, என்று தணியுமிந்த சுதந்திர தாகம்" எனத் தொடங்கும் பாடலில் "பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ, பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?" என்று வ.உ.சி.யையும் சிறையில் தொழுநோய் பெற்ற சுப்பிரமணிய சிவாவையும் மனதில் வைத்துப் பாடிய வரிகளாகும். "சுதந்திரப் பயிர்" எனும் பாடலில் "மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும், நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?" என்று வ.உ.சி சிறையில் செக்கிழுத்தக் கொடுமையை எண்ணிப் பாடிய வரிகள்தான். "நின்பொருட்டு, நின்னருளால், நின்னுரிமை யாம்கேட்டால் என்பொருட்டு நீதான் இரங்காதிருப்பதுமேன்?" என்று பராசக்தியிடம் சண்டைக்குப் போனதும் இவரை எண்ணித்தான்.

திருநெல்வேலி கலெக்டர் விஞ்ச் துரைக்கும் வ.உ.சி.க்கும் நடந்த உரையாடல் பத்திரிகைகளில் வந்தவுடன் பாரதி அதனைத் தன் கவிகளால் வெளிப்படுத்தி எழுதி வைத்தான். அதில் வ.உ.சி.யிடம் விஞ்ச் கேட்பதாக வரும் பாடலையும், அதற்கு வ.உ.சி. பதிலளிப்பதாக வரும் பாடலையும் இனி பார்க்கலாம்.

விஞ்ச் கேட்பது:-- "நாட்டிலெங்கும் ஸ்வதந்திர வாஞ்சையை
நாட்டினாய் - கனல் - மூட்டினாய்
வாட்டியுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன் - வலி - காட்டுவேன்.

கூட்டங்கூடி வந்தேமாதரம் என்று
கோஷித்தாய் - எமைத் - தூஷித்தாய்
ஓட்ட நாங்கள் எடுக்கவென்றே கப்பல்
ஓட்டினாய் - பொருள் - ஈட்டினாய்.

கோழைப்பட்ட ஜனங்களுக்கு உண்மைகள்
கூறினாய் - சட்டம் - மீறினாய்
ஏழைப்பட்டு இங்கு இரத்தல் இழிவென்றே
யேசினாய் - வீரம் - பேசினாய்.

அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய் - புன்மை - போக்கினாய்
மிடிமை போதும் நமக்கென்று இருந்தோரை
மீட்டினாய் - ஆசை - ஊட்டினாய்.

தொண்டு ஒன்றே தொழிலாக் கொண்டிருந்தோரை
தூண்டினாய்- புகழ் - வேண்டினாய்
கண்டகண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
காட்டினாய் - சோர்வை - யோட்டினாய்.

எங்கும் இந்த ஸ்வராஜ்ய விருப்பத்தை
ஏவினாய் - விதை - தூவினாய்
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ - நீங்கள் - உய்யவோ?

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்
சொல்லுவேன் - குத்திக் - கொல்லுவேன்
தட்டிப் பேசுவோருண்டோ? சிறைக்குள்ளே
தள்ளுவேன் - பழி - கொள்ளுவேன்.

இதற்கு தேசபக்தன் ஆங்கிலேயருக்கு பதிலளிப்பதாக ஒரு பாடல். வ.உ.சி. ஆங்கிலேயனுக்கு அளிக்கும் பதிலாகப் படிக்க வேண்டும்.

"சொந்த நாட்டில் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம் - இனி - அஞ்சிடோம்
எந்த நாட்டினு மிந்த அநீதிகள்
ஏற்குமோ? - தெய்வம் - பார்க்குமோ?

வந்தேமாதர மென்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம் - முடி - தாழ்த்துவோம்
எந்த மாருயிரன்னையப் போற்றுதல்
ஈனமோ? - அவ - மானமோ?

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு
போகவோ? - நாங்கள் - சாகவோ?
அழுது கொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் நாங்கள்
அல்லமோ? - உயிர் - வெல்லமோ?

நாங்கள் முப்பதுகோடி ஜனங்களும்
நாய்களோ? - பன்றிச் - சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்களோ இது
நீதமோ? - பிடி - வாதமோ?

பாரதத்திடை அன்பு செலுத்துதல்
பாபமோ? - மனஸ் - தாபமோ?
கூறுமெங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ? - இதில் - செற்றமோ?

ஒற்றுமை வழியொன்றே வழியென்ப
தோர்ந்திட்டோம் - நன்கு - தேர்ந்திட்டோம்
மற்று நீங்கள் செய்யும் கொடுமைக்கெலாம்
மலைவுறோம் - சித்தம் - கலைவுறோம்.

சதையைத் துண்டுதுண்டாக்கினும் உன்னெண்ணம்
சாயுமோ? - ஜீவன் - ஓயுமோ?
இதயத்துள்ளே இலங்கு மகாபக்தி
யேகுமோ? - நெஞ்சம் - வேகுமோ?

வ.உ.சிக்கு எதிராக திருநெல்வேலியில் நடந்த கலவர வழக்கில் பாரதியும் ஒரு சாட்சியாகச் சேர்க்கப்பட்டாராயினும், அவர் சாட்சி சொல்ல திருநெல்வேலி போனபோது, இவர் சாட்சி சொல்ல அழைக்கப்படவில்லை என்பதுதான் வரலாறு. எனினும் வ.உ.சி. பற்றி வெளிவந்த திரைப்படத்திலும் சரி, அவரைப்பற்றிய பல வரலாற்றுச் செய்திகளிலும் பாரதியார் சாட்சி சொன்னார் என்றே தெரிவிக்கப்படுகிறது. பாரதி ஆராய்ச்சியாளர் பெ.சு.மணி அவர்கள் தனது ஆய்வு நூலில் பாரதி சாட்சி சொல்லவில்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்.

வ.உ.சி. அவர்கள் மகாகவி பாரதியாரை மாமா என்றே மரியாதையாக அழைப்பார். சென்னை பெரம்பூரில் வ.உ.சி. வசித்து வந்த காலத்திலும் பாரதியார் அவர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். வ.உ.சி. இறுதியில் இறக்கும் தருவாயில் மகாகவியின் "என்று தணியும் இந்த சுதந்திர தாகத்தை"ப் பாடச் சொல்லிக் கேட்டபின்னர் தான் கண்களில் நீர்வழிய உயிர் நீத்ததாக அவரது வரலாறு தெரிவிக்கிறது. உயிருக்குயிராக நேசித்த நண்பர்களில் பாரதிக்கு வ.உ.சியும் ஒருவர்.

4. சர் பெஃரோஸ்ஷா மேத்தா.
காங்கிரசின் தொடக்க கால தலைவர்களில் மிக முக்கியமானவர் பெரோஸ்ஷா மேத்தா. இவருமொரு மிதவாதத் தலைவர்தான். முன்பே குறிப்பிட்டபடி பாலகங்காதர திலகர் தீவிரவாதத் தலைவர். இந்த இரு கோஷ்டியினரும் 1905இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஒருவருக்கொருவர் நாற்காலிகளை எடுத்துக் கொண்டு அடித்துப் பிரிந்தனர். அப்படிப்பட்ட இருவேறு குழுவினராக இருந்த காங்கிரசாரில் மிதவாதத் தலைவரான மேத்தே திலகர் பெருமானைப் பார்த்துச் சொல்வதாக ஒரு பாடல் பாரதி பாடியிருக்கிறார். இங்கும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது இருவரும் மிகச் சிறந்த தேசபக்தர்கள், ஏற்றுக்கொண்ட வழிமுறைகளில் மாறுபட்டாலும்கூட. இதனை மறந்துவிடாமல் மேற்கொண்டு அந்தப் பாடலைப் பார்ப்போம். கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய நந்தனார் சரித்திரம் எனும் நூலில் அவர் எழுதிய "ஓய்! நந்தனாரே, நம்ம ஜாதிக்கடுக்குமோ?" எனத் தொடங்கும் பாடலை அடியொற்றி இப்பாடல் பிறந்திருக்கிறது. படிப்போம்.

"ஓய்! திலகரே, நம்ம ஜாதிக் கடுக்குமோ?
செய்வது சரியோ, சொல்லும்.

முன்னறியாப் புது வழக்கம் - நீர்
மூட்டி விட்டதிந்தப் பழக்கம் - இப்போது
எந்த நகரிலும் இது முழக்கம் - மிக
இடும்பை செய்யுமிந்த ஒழுக்கம்.

சுதந்திர மென்கிற பேச்சு - எங்கள்
தொழும்புக ளெல்லாம் வீணாய்ப் போச்சு இது
மதம் பிடித்தது போலாச்சு - எங்கள்
மனிதர்க் கெல்லாம் வந்தது ஏச்சு.

வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் - அன்றி
வேறெவருக்குமது தியாஜ்யம் - சிறு
பிள்ளை களுக்கே உபதேசம் - நீர்
பேசி வைத்தது எல்லாம் மோசம்.

திலகரை மேத்தா குற்றம்சாட்டிப் பேசுவதுபோல அமைந்திருந்தாலும் மேத்தாவை பாரதி குறைத்து மதிப்பிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

5. லோகமான்ய பாலகங்காதர திலகர்.
மராட்டிய சிங்கம் என வருணிக்கப்படும் லோகமானிய பாலகங்காதர திலகர்தான் வ.உ.சிக்கும் மகாகவி பாரதிக்கும் அரசியலில் குருநாதராக விளங்கியவர். இவருடைய தலைமையை ஏற்றுக்கொண்டதால்தான் இவர்கள் மற்ற நூறு பேரோடு ஒரு தனி ரயிலில் சூரத் காங்கிரசுக்குப் பயணித்தனர். அங்கு நடந்த மிதவாதிகள் தீவிரவாதிகளுக்கிடையேயான கலவரத்தில் இவ்விருவரும் திலகர் பக்கத்தில் இருந்தனர். கலவரம் நடைபெற்று காங்கிரஸ் மாநாட்டுத் தொண்டர்கள் சிதறி ஓடியதில் வ.உ.சி. எங்கே என்று அனைவரும் தேட, ஒவ்வொரு மாநில பிரதிநிதிகள் தங்கியிருந்த கூடாரங்களிலெல்லாம் சென்று பாரதி தேடினார். அவருக்கு என்னவாயிற்றோ என்ற கவலை அனைவர் முகத்திலும் காணப்பட்டது. வ.உ.சி. ஆந்திரப் பிரதேச பிரதிநிதிகளோடு அவர்கள் கூடாரத்தில் இருப்பதை அறிந்த பின்னர்தான் பாரதிக்கும் மற்ற தேசபக்தர்களுக்கும் நிம்மதி பிறந்தது. இப்படி காங்கிரஸ் இயக்கத்தில் பாரதியும் வ.உ.சியும் தீவிரமாகப் பணியாற்றியது திலகரின் தலைமையில்தான்.

இந்திய தேசிய காங்கிரஸ் ஆலன் ஆக்டோவியன் ஹியூம் எனும் ஆங்கிலேயரின் தலைமையில் பம்பாயில் 1885இல் பல இந்தியத் தலைவர்களின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட காலத்தில், ஆங்கிலேயரின் ஆட்சியில் இந்தியர்களுக்கும் ஏதாவது பங்கு வகிக்கக்கூடிய தகுதியை உண்டாக்க வேண்டுமெ என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் காங்கிரஸ். பரிபூரண சுதந்திரம் என்பது திலகர் காலத்தில்தான் பிரகடனப்படுத்தப்பட்டது. அதுவரை ஒவ்வோராண்டும் நடைபெறும் காங்கிரஸ் மகாநாட்டில் இங்கிலாந்து மன்னருக்கு வாழ்த்து தெரிவிக்கும் பாடலைப்பாடித்தான் தொடங்கும். பல காலம் ஆங்கிலேயர்களே காங்கிரசின் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு ஒரு பயம். இந்தியர்கள் விழித்துக் கொண்டுவிட்டால், தாங்கள் அடிமப்பட்டுக் கிடக்கிறோம், தங்களுக்கு இந்த ஆட்சியில் எந்த பங்கும் இல்லை, நிர்வாகத்திலும் எல்லா மட்டங்களிலும் ஆங்கிலேயர்களே இருக்கிறார்களே என்று புரிந்துகொண்டு விட்டால் தங்கள் ஆளுமைக்கு ஆபத்து என்று உணர்ந்து ஏதேனும் ஒரு வகையில் இந்தியர்களையும் நிர்வாகத்தில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில்தான் லார்டு மெக்காலே கொண்டு வந்த கல்வி முறையை அமல் செய்து சில இந்தியர்களைக் கல்வி கற்றவர்களாக ஆக்கினார்கள். இவர்களை ஆங்கில ஆட்சி நிர்வாகத்தில் பயன்படுத்திக் கொண்டால் இந்தியர்களின் அதிருப்தியை நீக்கிவிடலாம் என்பது அவர்கள் எண்ணம். இந்த நோக்கத்தில்தான் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கும் இந்திய சுதேசிகளுக்கும் இடையே ஓர் பாலமாக அமைவதற்கென்றே இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த வழிமுறை திலகரின் அரசியல் பிரவேசத்தினால் முறியடிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் அடிமைத் தளையிலிருந்து முழுவதுமாக விடுதலை பெற வேண்டுமென்பதுதான் திலகரின் நோக்கமாக இருந்தது. "சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்" என்று இவர் கச்சை கட்டத் தொடங்கினார். இவரது வேகத்தைக் கண்டு ஆங்கில அரசாங்கம் மட்டுமல்ல, காங்கிரசின் மிதவாதத் தலைவர்கள்கூட அச்சம் கொண்டனர். ஆனாலும் திலகரின் செல்வாக்கு நாளுக்கு நாள் இந்திய மக்களிடையே மிகுந்த வரல் கண்டு வாளாவிருந்தனர். இந்தப் போரின் உச்சகட்ட நிலைமைதான் சூரத் காங்கிரஸ். திலகரை விரட்டிவிட வேண்டுமென்ற மிதவாதத் தலைவர்களின் நோக்கம் ஈடேறவில்லை என்றாலும் சூரத் காங்கிரஸ் நின்று போயிற்று. இப்படி அரசியல் வானில் புகழின் உச்சிக்கு சென்றபோதே திலகருக்கு வயதும் அதிகமாகி விட்டதால் அவர் விரைவில் காலமானபோது, அவரது போராட்டம் மேலெடுத்துச் செல்லப்படவில்லை. அதோடு தென்னாப்பிரிக்காவில் போராடிக்கொண்டிருந்த மோகன்சந்த் கரம்சந்த் காந்தி இந்தியாவுக்கு வந்து இந்திய சுதந்திரப் போரில் தனது அகிம்சை, சத்தியாக்கிரகம் போன்ற புதிய போராட்ட முறைகளைக் கொண்டுவந்து விட்டபடியால் சுதந்திர வேட்கை கொண்டவர்கள் மகாத்மா காந்தியடிகளைப் பின்பற்றத் தொடங்கி விட்டனர்.

ஆரம்ப காலத்தில் மகாத்மாவின் வழிமுறைகள் வ.உ.சுக்கு ஏற்புடையதாக இல்லாமல் போனாலும், மகாகவி பாரதி மட்டும் இவரே இந்த நாட்டு விடுதலைக்கு விடிவெள்ளியாக இருப்பார் என்பதை தீர்க்கதரிசனத்துடன் உணர்ந்து கொண்டு "வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம், தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டு தாழ்வுற்று நின்ற பாரத தேசம் தன்னை, வாழ்விக்க வந்த மகாத்மா நீ வாழ்க வாழ்க" என்று பாடிவைத்தார். எவ்வளவு தீர்க்க தரிசனம்? அதுதான் நடந்தது.

திலகரின் மறைவு இந்திய விடுதலைப் போர் அரங்கத்தில் ஓர் வெற்றிடத்தைத் தோற்றுவிக்காமல், காந்தியின் பிரவேசம் அதனைப் பூர்த்தி செய்தது. திலகரின் பாதை என்ன? வழிமுறைகள் என்ன? அவர் காலத்தில் இந்திய அரசியல் வானில் எந்த மாதிரியான போராட்ட முறைகளைக் கடைப்பிடிப்பது என்ற குழப்பம்கூட நிலவியிருக்கலாம். அதனால்தானோ என்னவோ, ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்களும்கூட நடந்தேறின. பாரதமாதா சங்கம் என்று ஒன்று தொடங்கப்பட்டு, ரத்தத்தில் கையெழுத்திட்டு வெள்ளைக்காரர்களுக்கு எதிராக போராடும் தீவிர உணர்வு ஊட்டப்பட்டது. நீலகண்ட பிரம்மச்சாரி, வ.வெ.சு.ஐயர் போன்றவர்களும் ஐரோப்பாவில் இருந்துகொண்டு புரட்சித் தீயை வளர்த்து வந்த மேடம் காமா அம்மையாரும், லண்டன் மாநகரில் இருந்த சவார்க்கர் போன்ற புரட்சியாளர்களும் இங்கிருந்த சில தேசபக்தர்களை வழிநடத்தலாயினர். வாஞ்சிநாதன் என்ற இளைஞன் மணியாச்சி ரயில் சந்திப்பில் ஆஷ் எனும் ஆங்கில கலெக்டரைச் சுட்டுக் கொன்றான்; தன்னையும் மாய்த்துக் கொண்டான். இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லாம் மகாத்மா சுதந்திரப் போரை வழிநடத்தத் தொடங்கும் வரைதான். அதன்பின் அகிம்சை, சத்தியாக்கிரகம் போன்ற வழிகளைத்தான் காந்தி செயல்படுத்தினார்.

வ.உ.சி. சுதேசி கப்பல் கம்பெனி தொடங்கியதும், அதற்கு பங்குகளை விற்க படாதபாடு பட்ட விவரங்களையும் வ.உ.சியின் வரலாற்றைப் படிப்பவர்கள் உணர்வார்கள். வ.உ.சி. ஒருவழியாக நிதியை சேகரித்துக்கொண்டு பம்பாய் சென்று கப்பல் வாங்க முயன்றபோது, குஜராத்தி வியாபாரி இவர் ஆங்கில அரசுக்கு எதிரானவர் என்பதை அறிந்து கப்பலைக் கொடுக்க தயங்கிய நிலையில் திலகர்தான் தலையிட்டுத் தான் பொறுப்பு ஏற்பதாகச் சொல்லி கப்பலை வாங்க உதவினார். இவரது காலத்தில் எந்தவொரு அகில இந்திய காங்கிரஸ் தலைவரும் தமிழகம் அமைந்த சென்னை மாகாணத்துக்கு வரவில்லை. விபின் சந்த்ர பால் மட்டும் மகாகவி பாரதி வ.உ.சி. ஆகியோரின் முயற்சியால் சென்னை கடற்கரைக்கு வந்து பேசியிருக்கிறார். இவரது பேச்சைக் கேட்டு சுதந்திரப் போரில் ஈடுபட்ட பலரை நாம் அடையாளம் காட்ட முடியும்.

திலகர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, சிறந்த பத்திரிகையாளர். கேசரி, மராட்டா போன்ற பத்திரிகைகள் மராட்டிய மக்களிடையே புரட்சித் தீயை கனன்றெழச் செய்து கொண்டிருந்தது. இவரது எழுத்துக்களுக்காக இவர் சிறை சென்றார். இவர் சிறந்த கல்விமான். மராட்டிய மாநிலத்தின் அறிவுத் தலைநகராக விளங்கியது புனே நகரம். இதுதான் மராட்டிய கலை, கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றுக்குத் தலைநகரம். இங்கிருந்துகொண்டுதான் திலகர் பெருமான் இந்திய பிரிட்டிஷ் ஆட்சிக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார். இவரைப் பற்றி பாரதி குறிப்பிடும் இரண்டு பாடல்களை இங்கு பார்க்கலாம்.

1. வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே!
வீழ்க கொடுங் கோன்மை! வீழ்க! வீழ்கவே!

நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!
நரகமொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!
ஏலு மனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே!
எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே!

கல்வி யென்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் - நல்ல
கருத்தினால் அதனைச் சூழ்ந்தொர் அகழி வெட்டினான்
சொல்விளக்கம் என்று அதனிடைக் கோயிலாக்கினான்
ஸ்வாதந்தர்ய மென்ற தன்மேற் கொடியைத் தூக்கினான்.

துன்பமென்னும் கடலைக் கடக்கும் தோணி அவன்பெயர்
சோர்வு என்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன்பெயர்
அன்பு என்னும் தேன் ஊறித் ததும்பும் புதுமலர் அவன்பேர்
ஆண்மை என்னும் பொருளைக் காட்டும் அறிகுறி அவன்பேர்.

2. நாமகட்குப் பெரும் தொண்டு இயற்றிப் பன்
நாட்டினோர் தம் கலையிலும் அவ்வவர்
தாமகத்து வியப்பப் பயின்றொரு
சாத்திரக் கடலென்ன விளங்குவோன்
மாமகட்குப் பிறப்பிடமாக முன்
வாழ்ந்து இந்நாளில் வறண்டயர் பாரதப்
பூமகட்கு மனம் துடித்தே இவள்
புன்மை போக்குவ லென்ற விரதமே.

நெஞ்சகத்தோர் கணத்திலு நீங்கிலான்
நீதமேயோ குருவெனத் தோன்றினோன்
வஞ்சகத்தைப் பகையெனக் கொண்டதை
மாய்க்குமாறு மனதிற் கொதிக்கின்றோன்
துஞ்சுமட்டும் இப்பாரத நாட்டிற்கே
தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும்
அஞ்செழுத்தினைச் சைவர் மொழிதல்போல்
அன்பொடோதும் பெயருடை ஆரியன்.

வீரமிக்க மராட்டியர் ஆதர
மேவிப் பாரத தேவிதிருநுதல்
ஆரவைத்த திலகம் எனத்திகழ்
ஐயனல்லிசைப் பால காங்காதரன்
சேரலர்க்கு நினைக்கவும் தீயென
நின்ற எங்கள் திலக முனிவர்கோன்
சீரடிக்கமலத்தினை வாழ்த்துவேன்
சிந்தை தூய்மை பெறுகெனச் சிந்தித்தே.

6. லாலா லஜபதி ராய்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தேசபக்தர்கள் கூறிய மந்திரச் சொற்கள் "லால், பால், பால்" (பந்து என்பதின் ஆங்கிலச் சொல்லில் வரும் 'பா' அதாவது Bha எனும் ஒலியுடைய சொல்) எனும் மூன்று பெயர்கள். இவை முறையே லாலா லஜபதி ராய், விபின் சந்த்ர பால், பால கங்காதர திலகர் ஆகியோரைக் குறிக்கும் சொற்கள். இம்மூவரும் அன்றைய அரசியல் வானில் ஒளிபெற்று பிரகாசித்து வந்தனர். பஞ்சாப் மாநிலத்தில் லாலா லஜபதி ராய் முதிர்ந்த அரசியல் தலைவர். மக்களால் போற்றி வணங்கப்பட்டவர். அவர் பத்திரிகை வாயிலாக மக்களின் சுதந்திர வேட்கையை ஊட்டி வந்தார்.

லாலாவின் எழுத்தாற்றல், அவரது பத்திரிகை வாயிலாக பஞ்சாப் மக்களை விழித்தெழச் செய்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு லாலாஜி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தார். இவரை கைது செய்து தேசப்பிரஷ்டம் செய்தனர். நாடு கடத்துதல் என்பது மிக கொடிய தண்டனை. அப்போது லாலாஜி தன்னை சிறையிலிட்டதைக்கூட பெரிதாக நினைக்கவில்லை; தன்னை இந்த புண்ணிய பூமியிலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்காக நொந்து பாடியதாக, "லாலா லஜபதி ராயின் பிரலாபம்" எனும் தலைப்பில் பாரதியார் ஒரு பாடலை இயற்றினார். பிரலாபம் என்பது நொந்துபோய் புலம்புவது. அந்தப் புலம்பலை இப்போது பார்ப்போம்.

"நாடிழந்து மக்களையும் நல்லாளையும் பிரிந்து
வீடிழந்து இங்குற்றேன் விதியினை என்சொல்கேனே
வேதமுனி போன்றோர் விருத்தராம் எந்தை இரு
பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ?
ஆசைக் குமரன் அருச்சுனனைப் போல்வான் தன்
மாசற்ற சோதி வதனம் இனிக் காண்பேனோ?

No comments:

Post a Comment

You can give your comments here