பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 28, 2010

தியாகராஜ சுவாமிகள் வரலாறு.

தியாகராஜ சுவாமிகள் வரலாறு.
எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்

தியாகராஜ சுவாமிகள்

கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பெற்றிருப்பவர் தியாகராஜ சுவாமிகள். கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பெரும்பாலும் இவரது பாடல்களே இடம்பெறுகின்றன. முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் போன்ற இதர வாக்யேயக்காரர்களின் பாடல்களும் இடம் பெற்றாலும், பிரதானமாகப் பாடப்படுபவை இவரது பாடல்களே. இது நீண்டகாலமாக இருந்து வரும் பழக்கமென்பதை மகாகவி பாரதியாரின் "சங்கீத விஷயம்" எனும் கட்டுரைகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். தியாகராஜ சுவாமிகள் தெலுங்கிலும், மற்ற இருவரும் பெரும்பாலும் சமஸ்கிருதத்திலும் பாடியிருக்கிறார்கள். தியாகராஜரின் கீர்த்தனைகளை தெலுங்கு மொழி தெரிந்தவர்கள்தான் என்பதல்லாமல் அம்மொழி தெரியாதவர்களும் உணர்வுபூர்மாக கேட்டு ரசிக்கிறார்கள். உலகமுழுவதிலுமுள்ள சங்கீத ரசிகர்களுக்கு சங்கீதம் என்றால் அது தியாகராஜருடைய சங்கீதம்தான். அப்படி இவருடைய பாடல்களில், அதிலும் அந்த மொழி நமக்கெல்லாம் அன்னியமாயிருந்தபோதிலும், மனங்கவரும் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும். குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் அவரது பாடல்களில் அடங்கியிருக்கும் பக்தி ரஸமும், பாடல்களின் பொருளும், அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கிற இராகங்களுமே காரணம் என்றால் அது மிகையல்ல. மாணிக்கவாசக சுவாமிகள் பக்தி ரசம் சொட்டச் சொட்ட சிவபெருமானை அழுது புரண்டு மனம் உருகப் பாடியதைப் போல, தியாகராஜ சுவாமிகளும் அவரது இஷ்ட தெய்வமான இராமனை, சீதாபிராட்டியை அவர்கள் வரலாற்றில் காணப்படும் பல நிகழ்ச்சிகளைச் சொல்லிச் சொல்லி பக்தி ரஸத்தோடு பாடியிருப்பதும் அந்தப் பாடல்கள் உயிரோட்டத்தோடு மிளிர்வதற்குக் காரணங்களாகும். அவருக்கு முன்பாகவும் பக்தி ரஸத்தோடு பலர் பாடியிருக்கிறார்கள். அவைகளெல்லாம் அந்தந்த காலங்களில் பாடல் ரஸத்திற்காகவும், பொருளமைதிக்காகவும், இறைவனது பெருமையையும், புகழையும் பாடியிருப்பதனால் அவை பிரபலமாகியிருந்தன. நமது முன்னோர்கள், மகான்கள் இவைபற்றி மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் விவாதித்திருக்கிறார்கள். இவைகளையெல்லாம் எண்ணிப் பார்க்கின்றபோது, ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சாகித்தியங்கள் என்றென்றும் இந்த புண்ணிய பூமியில் நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய ஸாகித்தியங்களை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் அவரது வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய கீர்த்தனங்கள் எந்த சந்தர்ப்பத்தில் பாடப்பட்டவை, அவற்றைப் பாடுகையில் அவர் மனப்பாங்கு எங்ஙனம் இருந்தது என்பன பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அவருக்கு ஏற்பட்ட சோதனைகள், மன வேதனைகள், குடும்பத்திலிருந்த சூழ்நிலை இவற்றைத் தெரிந்து கொண்டோமானால், அவரது கீர்த்தனங்களில் இழையோடும் அந்தந்த பாவங்கள், ரஸங்கள் நமக்குத் தெளிவாகும். ஸ்ரீ இராமபிரானைப் பற்றியும் சீதாதேவி பற்றியும் அவர் பாடியுள்ள பாடல்கள் அனைத்தையும் பார்க்கும்போது, அவர் ஏதோவொரு மானசீகமான உலகத்தில் அவர்களோடு நெருங்கிப் பழகி, அவர்களோடு உரையாடியது போலவும், அந்த உரையாடலைத் தொடர்ந்து 'இராமா, நீ இப்படிச் செய்யலாமா? நீ ஏன் கருணை காட்ட மறுக்கிறாய், அன்று நீ அப்படிச் சொன்னாயே' இப்படியெல்லாம் அவர் சொல்வது அவர் வாழ்ந்த உலகம் தனி, அந்த உலகத்தில் இராம சீதா, லக்ஷ்மண அனுமன் போன்றோர் மட்டுமே இருந்தனர் என்பதும் நமக்குத் தெரியவரும். ஸ்ரீ தியாகராஜர் எந்த உணர்வில் இருந்தார், லோகாயதமான விஷயங்களில் அவருக்கு அக்கறை இருந்ததா என்பது போன்ற கேள்விகள்கூட நமக்கு எழலாம். இல்லாவிட்டால் சரபோஜி மன்னன் அவரை அழைத்துப் பொன்னும் பொருளும் தர விரும்பியபோதும், அதற்குச் சம்மதிக்காமல், இவைகள் சுகம் தரக்கூடியவைகளா, அல்லது இராமா உனது சேவடி கைங்கர்யம் சுகம் தருமா என்றெல்லாம் பாடியிருப்பாரா? வேதங்கள் எப்படி எழுதப்படாமல் வாய்மொழியாகத் தலைமுறை தலைமுறையாக வந்துகொண்டிருக் கிறதோ, அப்படியே, மகான்களின் பாடல்களும் வரிசைப்படுத்தியோ, ஸ்வரப்படுத்தியோ, எழுதிவைத்தோ பிற்கால தலைமுறையினருக்கு கொடுக்கப்படாமல், குருமார்களிடம் கற்றுக்கொண்ட சீடர்களின் மூலமே இன்றுவரை வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தானோ என்னவோ, ஒருசிலர் அவர் பாடிய தெலுங்கு மொழிச் சொற்களைச் சில இடங்களில் தவறாகக்கூட உச்சரிக்கிறார்கள்.

இதற்கு முன்பு ஸ்ரீ தியாகராஜருடைய வாழ்க்கை வரலாற்றைப் பலரும் எழுதியிருக்கிறார்கள். திருவையாறு க்ஷேத்திரத்தைப் பற்றிக் கூற வரும்போது, ஸ்ரீ தியாகராஜருடைய வாழ்க்கையையும் சாதனைகளையும், அவருடைய பெருமையையும் சொல்லாவிட்டால் முழுமையடையாது. பிழைகள் இருக்குமானால் பொருத்தருள வேண்டும்.

நாதத்தின் பெருமை.

நாதம் அல்லது ஒலி என்றால் என்ன பொருள்? இதற்கு மகான்கள் நல்ல விளக்கங்களைக் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். "நா" என்று சொன்னால் பிராணன் அல்லது உயிர், "த" என்றால் அக்னியென்றும் கூறியிருக்கிறார்கள். இவையிரண்டும் சேரும்போது ஏற்படும் ஒலியே "நாதம்" எனப்படும். இந்த நாதமே "ஓம்" எனும் ஓங்கார மந்திரமானதென்று கூறுகிறார்கள். சிவபெருமானின் முகங்களிலிருந்து தோன்றியவையே சப்தஸ்வரங்கள் எனப்படும். எனவே குருமுகமாய் கேட்டு, அறிந்து பழகும் ஸங்கீத ஞானம் இல்லாமல் மோக்ஷம் கிடைக்குமா?

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் "மோக்ஷமு கலதா" எனும் ஸாரமதி இராகக் கீர்த்தனையில் இப்படிச் சொல்லுகிறார். "உன்னுடைய சிறந்த பக்தியோடு கூடிய ஸங்கீத ஞானம் இல்லாதவர்களுக்கு மோக்ஷம் கிடைக்குமா? அந்தப் பாடலின் முழு அர்த்தத்தையும் இப்போது பார்க்கலாம். "இந்தப் பூவுலகில் ஜீவன் முக்தருக்கன்றி மற்றவர்களுக்கு மோட்ச கதி கிடைக்குமா? எப்பொழுதும் பிரத்தியட்சமான உருவத்தை உடையவனே! ராமா! உன்னிடம் பக்தியும் ஸங்கீத ஞானமும் இல்லாதவர்களுக்கு மோட்சம் கிடைக்குமா? பிராணவாயு, நெருப்பு ஆகியவற்றின் சேர்க்கையினால் பிரணவநாதம் சப்தஸ்வரங்களாகப் பெருக, வீணை வாசிப்பதன் மூலம் நாதோபாசனை செய்யும் சிவபெருமானின் மனப்போக்கை அறியாதவர்க்கு மோட்சம் உண்டா?" என்கிறார். ஆகவே இசை மார்க்கமே மோட்சத்துக்கு வழி என்பது அவரது முடிவு

வரலாறு

இந்த வரலாறு முழுவதும் பெரும்பாலும் ஸ்ரீ தியாகராஜரின் சீடர்களில் ஒருவரான வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர் அவர்களின் பேரனும், கிருஷ்ணசாமி பாகவதரின் மகனுமான ஸ்ரீ இராமசாமி பாகவதர் 1935இல் ஸ்ரீ தியாகராஜர் வாழ்க்கை வரலாற்று நூலான "ஸ்ரீ தியாக ப்ரஹ்மோபநிஷத்" முதல் நூலிலிருந்து கொடுக்கப்படுகிறது. பிற்காலத்தில் ஸ்ரீ தியாகராஜர் பற்றி எழுதியுள்ளவற்றுக்கும் இதற்கும் சற்று மாறுபாடுகள் இருக்கலாம். எனினும் இது தியாகராஜ சுவாமிகளின் சீடரின் பரம்பரையினர் எழுதியதால் இதுவே சரியானது என்று ஏற்றுக்கொள்ளலாம்.

நீர்வளம், நிலவளம் முதலான அனைத்துச் செல்வங்களும் நிரம்பப்பெற்று, சீர்மிகு சோழமன்னர்களால் நீதி தவறாமல் ஆட்சி புரிந்துவரும் சோழநாட்டில் திருவாரூர் எனும் தலம்; ஸ்ரீ தியாகராஜப் பெருமானும், கமலாம்பிகை அம்பாளும் குடியிருக்கும் திவ்ய க்ஷேத்திரம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தரிசித்து "திருத்தொண்டத்தொகை" பாடி சிவனடியார்களின் பெருமையை உலகறியச் செய்த புண்ணிய பூமி. இந்த புண்ணிய பூமியில் தற்போதைய ஆந்திரப் பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்த ஸ்ரீ ராமபிரம்மம் என்பவர் வாழ்ந்து வந்தார். தியாகராஜரின் கொள்ளுப் பாட்டனார் பஞ்சநதப் பிரம்மம் என்பவர். இவருடைய பெயரிலிருந்து இவர் திருவையாற்றில் வாழ்ந்தவர் என்பதை அறியமுடிகிறது. தியாகராஜரின் தாய்வழி பாட்டனார் வீணை காளஹஸ்தய்யா என்பவர் திருவாரூரில் வாழ்ந்தார். ராமபிரம்மத்தின் மனைவிக்கு சீதம்மா என்பது திருநாமம். ஸ்ரீ தியாகராஜர் தனது "சீதம்ம மாயம்ம ஸ்ரீராமுடு நாதன்றி" எனும்பாடலில் ஸ்ரீ இராமபிரானை மட்டுமல்ல, தனது தாய்தந்தையரையும் வணங்கிப் போற்றுகிறார். இவர்கள் அறவழியில் பூஜை, தியானம் என்று வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு ஸந்தான பாக்கியம் கிடைக்கப்பெற்று மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள். அவர்களுக்கு ஜல்பேசன் என்கிற பஞ்சநதம், ராமநாதன், தியாகராஜன் எனப் பெயரிட்டு வளர்த்துவந்தார்கள். ராமநாதன் இளம் வயதிலேயே காலமாகிவிட்டார். இவர்களில் மூன்றாவது, இளைய மகவாகப் பிறந்தவர்தான் நாம் இப்போது பார்க்கப் போகும் தியாகராஜன் எனப்படும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். இவர் கலியுகாதி வருஷம் 4868, சாலிவாகன 1689க்குச் சரியான ஸர்வஜித் வருஷம், சித்திரை மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை, வைசாக சுக்ல ஸப்தமி பூச நக்ஷத்திரம், கடக லக்கினம், சூரிய உதயாதி 15-1/2 நாழிகையில் கடக லக்னத்தில் (அதாவது 4--5--1767) பிறந்தார்.

சில ஆண்டுகள் கழிந்தபின்னர் ஸ்ரீ ராமபிரம்மம் திருவாரூரை விட்டு நீங்கி காவிரிக்கரையில் அமைந்துள்ள திருவையாறு க்ஷேத்திரத்திற்கு வந்து சேர்ந்தார். தந்தைவழி ஊர் என்பதால் அவர் திருவையாற்றில் வாழ்ந்து வரலானார். தஞ்சாவூர் அப்போதைய மராட்டிய மன்னர்களின் தலைநகர் என்பதால் பண்டிதர்களும் பல்வேறு கலைஞர்களும் தலைநகருக்கு அருகில் வாழ்வதையே விரும்பினர். தியாகராஜனுக்கு அவரது தந்தையார் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்பித்தார். தாயாரிடம் ஜெயதேவரது அஷ்டபதி, ராமதாஸர் கீர்த்தனைகள் மற்றும் பல பக்திப் பாடல்களைக் கற்றுக் கொண்டார். ஸ்ரீ தியாகராஜரின் எட்டாவது வயதில் அவருக்கு பிரம்மோபதேசம் செய்விக்கப்பட்டது. அப்படி பிரம்மோபதேசம் செய்விக்கப்பட்ட நேரத்தில் தந்தை குரு உபதேசமாகத் தன் மகனுக்கு "ஸ்ரீ ராம" நாம உபதேசமும் செய்வித்தார். அதுவரை ராமப்பிரம்மம் தான் பூஜை செய்துவந்து ஸ்ரீ ராம, லக்ஷ்மண, சீதா, அனுமன் விக்கிரகங்களை அவரிடம் கொடுத்து அவரே அதற்கு நித்ய பூஜைகளைச் செய்துவருமாறு பணித்தார். அதுமுதல் ஸ்ரீ தியாகராஜர் தினசரி கர்மானுஷ்டானங்களை கடமை தவறாமல் செய்துவந்ததோடு ஸ்ரீ ராமருடைய விக்கிரகங்களுக்கும் நித்ய பூஜைகளைச் செய்து வந்தார். இப்படிச் சில காலம் கழிந்த பின்னர் அப்போது திருவையாறு க்ஷேத்திரத்தில் வசித்து வந்த ஸ்ரீ ராமகிருஷ்ணானந்தா சுவாமிகள் என்பவர் ஸ்ரீ தியாகராஜருக்கு "ஸ்ரீ ராம ஷடாக்ஷரி" எனும் மந்திரோபதேசம் செய்வித்தார்.

சிறு பிள்ளையாயிருந்த காலந்தொட்டே ஸ்ரீ தியாகராஜருக்கு இராமபிரான் மீது அபாரமான பக்தி. அதிலும் தன் எட்டாவது வயதில் பிரம்மோபதேசம் செய்விக்கப்பட்ட நாளிலிருந்து ஸ்ரீ ராம விக்கிரகத்துக்கு பூஜைகள் செய்வித்து வந்ததாலும், பக்தி, அன்பு, பாசம், ஈடுபாடு ஏற்பட்டு, தானும் இராமனும் இணைபிரியாதவர்கள் என்ற உணர்வுபூர்வமான எண்ணத்தில் வாழ்ந்து வந்தார். ஸ்ரீ இராமனுக்கு அபிஷேகம், பூஜைகள், அர்ச்சனைகள் செய்யும் காலத்தில் உளப்பூர்வமாக, உணர்ச்சி பூர்வமாக மெய்மறந்து பூஜா கர்மாக்களில் தன் மனத்தை ஈடுபடுத்திச் செய்து வந்தார். அப்படி பூஜை செய்யும்போது, ஸங்கீத ஞானமுடையோர் நல்ல பாடல்களைப் பாடி வழிபடுவது முறை. அப்படியே ஸ்ரீ தியாகராஜரும் தான் பூஜை செய்யும்போது, ஸ்ரீ ராமபிரான்மீது புதிய புதிய கீர்த்தனைகளை இயற்றிப் பாடிவரலானார். அப்படி இவர் முதன்முதலில் செய்த கீர்த்தனையாக "நமோ நமோ ராகவாய" எனும் கீர்த்தனை சொல்லப்படுகிறது. இராமபிரானிடம் அபாரமான பக்தி கொண்டு அந்தப் பெயரைத் தொண்ணூற்றாறு கோடி முறை ஜெபித்து முடித்தவுடன் ஸ்ரீ ராமபிரான் காட்சி கொடுத்ததாகக் கூறுகிறார்கள். ஸ்ரீ ராமபிரான் மீது அபரிமிதமான பக்தி ஏற்பட்டு அவருடைய கவிதா ஊற்றுக்கண் திறந்து ஏராளமான பாடல்களைப் பாடத் தொடங்கினார்.

இப்படி ஸ்ரீ தியாகராஜர் தினப்படி கீர்த்தனைகளை இயற்றிப் பாடிவருவதை கவனித்து அதனை எழுதி, திருவையாற்றிலிருந்த பல பெரியவர்களிடம் ஸ்ரீ ராமபிரம்மம் காட்டி மகிழத் தொடங்கினார். அந்த கீர்த்தனைகளில் பொதிந்து கிடக்கும் பக்தி ரஸம், பாடல் யுக்தி, கவிதைச் சிறப்பு இவைகளைக் கண்டு மகிழ்ந்து அவர்கள் தியாகராஜரைப் புகழ்ந்து பாராட்டத் தொடங்கினார்கள். அந்தக் காலத்தில் தஞ்சாவூர் ராஜ்யத்தை மராட்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். கலைகளையும், கல்வியையும் போற்றி வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுடைய சபையில் சுமார் 360க்கும் மேற்பட்ட ஸங்கீத வித்வான்கள் இருந்தார்கள். அவர்கள் அத்துணை பேருக்கும் தலைவராக இருந்தவர் ஸ்ரீ ஸொண்டி வேங்கடரமணய்யா என்பவர். இவரது தகுதி கருதி இவருக்கு மன்னருக்கு இணையான ஆசனமிட்டு அதில் உட்கார வைக்கப்படுவார். தலைமை வித்வானாகிய இவர்தான் ஒவ்வோர் வருஷத்தின் முதல்நாள் மன்னன் சபையில் பாடி கெளரவிக்கும் வித்வான் எனத் தகுதி பெற்றவர். அத்தகைய சிறப்புப் பெற்ற தலைமை வித்வானிடம் நமது தியாகராஜர் முறைப்படி ஸங்கீத சிக்ஷை பெறலானார்.

ஸொண்டி வெங்கடரமணய்யா:

ஸ்ரீ தியாகராஜரின் குருவான ஸொண்டி வெங்கடரமணய்யா பற்றி பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி அவர்கள் கூறும் விவரங்களைப் பார்ப்போம்:- தியாகராஜர் சிறுவனாக இருக்கும்போது காலையில் மலர் கொய்வதற்கு நந்தவனம் செல்வார். அது திருவையாற்றையடுத்த அந்தணக்குறிச்சி எனுமிடத்தில் இருக்கிறது. போகும் வழியில் ஸொண்டி வெங்கடரமணய்யாவின் வீடு. அங்கு சீடர்களுக்கு அவர் பாட்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருப்பார். அந்த வீட்டு வாயிலில் நின்று தியாகராஜர் சங்கீதம் கேட்டுக்கொண்டிருப்பார். அப்படியொருநாள் இவர் நின்று கேட்பதை ராமப்பிரம்மம் கவனித்துவிட்டு, குருநாதரிடம் சென்று தன் மகனுக்கும் சங்கீத சிக்ஷை சொல்லிக்கொடுக்க வேண்டினார். அவரும் உவகையுடன் ஒப்புக்கொண்டாராம். சொல்லிக்கொடுக்க வேண்டியதனைத்தையும் சீடன் மகா மேதை என்பதை உணர்ந்து ஒரே ஆண்டில் சொல்லிக்கொடுத்து விட்டார்.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய தாய்வழித் தாத்தா வீணை காளஹஸ்தி அய்யர் என்பவர். அவர் பல ஸங்கீத நூல்களைத் தன்வசம் வைத்திருந்தார். அவைகளையெல்லாம் வாங்கி வந்து தியாகராஜர் படிக்கலானார். அந்த நூல்களில் ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கிக்கொள்ள இவர் அப்போது திருவையாற்றிலிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணாந்தா ஸ்வாமிகளிடம் சென்று பாடம் கேட்கலானார். அப்படி பாடம் சொல்லிக்கொடுக்கும்போது ராமகிருஷ்ணானந்தர் தியாகராஜரிடம், நாரத மஹரிஷியை உபாசனை செய்துவந்து வழிபட்டால் ஸங்கீதக் கலை வசப்படுவதோடு, மனதில் தோன்றும் ஐயப்பாடுகள் அனைத்தும் நீங்கிப்போகும் என்று எடுத்துரைத்தார். அதற்கான "நாரத உபாஸனா" மந்திரத்தையும் அவருக்கு உபதேசித்தார். ஸ்ரீ தியாகராஜர் தன் குருநாதர் கூறிய மந்திரத்தைத் தலைமேற்கொண்டு உபாசனை செய்து வந்தார்.

இவரது மந்திரோபாசனையையும், பக்தியையும் பாராட்டி நாரத மஹரிஷியே இவர்முன் தோன்றி, ஸங்கீத ஸ்வர ரகஸ்யங்களடங்கிய "ஸ்வரார்ணவம்" எனும் அரிய நூலைக் கொடுத்து மறைந்தார். ஸ்ரீ நாரத பகவான் தரிசனமும், அவர் அளித்த நூலின் சிறப்பாலும், தியாகராஜர் நிரம்ப ஸங்கீத ஸ்ருதி ஆதாரங்களைக் கொண்ட பாடல்களை இயற்றிப் பாட ஆரம்பித்தார். இப்படி இவரது பெயரும் புகழும் நாடு முழுவதும் பரவப் பரவ பல்வேறு இடங்களிலிருந்தும் சீடர்கள் இவரை நாடிவந்து சேர்ந்து கொண்டார்கள்.

ஸ்ரீ தியாகராஜருடைய வாழ்க்கை இப்படி ஸங்கீதம், பூஜை, தியானம், சீடர்களுக்கு இசை ஞானத்தை உபதேசிப்பது என்று போய்க்கொண்டிருந்த நேரத்தில் இவருக்கு பார்வதி எனும் கன்னிகையைத் திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுடைய மணவாழ்க்கை என்பது வெறும் ஐந்தே ஆண்டுகள் நடந்தன. பிறகு பார்வதி அம்மாள் ஸ்ரீ ராமனின் பாதாரவிந்தங்களில் ஐக்கியமாகிவிட்டார். பார்வதி இறந்த சிலகாலம் கழித்து அன்னாருடைய தங்கையான கமலாம்பாள் (கனகம்மாள் என்று திரு வி.ராகவன் குறிப்பிடுகிறார்) என்னும் கன்னிகையை இவருக்குத் திருமணம் செய்வித்தார்கள்.

அதன்பின்னர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சிலகாலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். தினமும் ஸங்கீதம் பாடுவது, ஸாஹித்யங்கள் இயற்றுவது, வேதங்களைப் பாராயணம் செய்வது, புராணங்களைக் கற்பது, பின் அவற்றைப் பிறருக்கு ஓதுவது, ஜோதிஷ சாத்திரத்தைக் கற்பது, அதில் ஆராய்ச்சி செய்வது, கணித சாத்திரத்தைக் கற்பது, இப்படிப் பற்பல கலைகளிலும் விற்பன்னராக விளங்கி வந்தார். இவர் பாடுவதோடு, வீணை வாசிப்பதிலும், கின்னரீ எனும் தந்தி வாத்தியத்தை வாசிப்பதிலும் நிகரற்று விளங்கினார். இவருடைய இசை ஞானத்தைப் பற்றி கேள்விப் பட்டவர்கள் இவரை பூலோக நாரதர் என்றே பெருமைப் படுத்திப் பேசினர். நாட்டில் மக்கள் இறையருளை மறந்து, பாவங்களைச் செய்து பாழ்நரகக் குழிக்கே செல்லும் பான்மை நீங்க மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய நல்ல பல பக்தி கீர்த்தனைகளை இவர் இயற்றி மக்களுக்குப் பயன்பட வைத்துக் கொண்டிருந்தார். சங்கீதம் மட்டுமல்லாமல், கணிதம், ஜோதிஷம் ஆகிய சாஸ்திரங்களையும் இவர் தனது சீடர்களுக்குப் பாடம் சொல்லி வந்தார். அந்தக் காலத்தில் குருமார்கள் தங்கள் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கென்று தட்சிணை எதுவும் வாங்கும் வழக்கம் கிடையாது. சீடர்களைத் தங்களோடு வைத்துக்கொண்டு, உணவளித்துப் பாடங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள்.

விசேஷமான உத்சவ தினங்களில் குறிப்பாக ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் இவர் பக்க வாத்தியங்களோடு ஊரில் உஞ்சவிருத்திசெய்து அதில் ஈட்டும் பொருள் கொண்டு திருவிழாக்களைக் கொண்டாடி வந்தார். திருமஞ்சன வீதியில் தியாகராஜரின் வீடு அமைந்திருந்தது. தினசரி உஞ்சவிருத்தி சென்று வீதிகளின் வழியாக நடந்து வந்து வீட்டை அடைவார். அங்கு அவருடைய பூஜை அறையில் ஸ்ரீ சீதாராமர், லக்ஷ்மணர், அனுமன் ஆகியோர் உள்ள விக்ரகத்தின் முன் உட்கார்ந்து தியானிப்பார். கையில் தம்பூரா, மெய்மறந்த நிலையில் அவர் பாடும் பாடல்கள், காவிரியின் பிரவாகம் போல பெருக்கெடுத்து ஓடிவருகின்றது. இசை இன்பம் ஊரை நனைக்கிறது.

இவர் சீடர்களிடம் பணம் வாங்குவது கிடையாது என்பதையும் முன்பே குறிப்பிட்டோம். இவரது ஸாஹித்யங்களில் ஸ்ருங்கார ரஸம்கொண்ட பாடல்கள் கிடையாது. இவர் நெளகா சரித்திரம் எனும் இசை நாடக வடிவத்தைப் படைத்திருக்கிறார். இதில் ஸ்ருங்கார ரஸ வருணனைகளுக்கு இடமிருந்தும் அவர் அப்படிப் பாடவில்லை. இவரது நோக்கமே மக்களுக்கு பக்தி ரஸத்தை அள்ளி வழங்க வேண்டுமென்பதுதான் என்பது தெரிகிறது.

இவர் சிறு வயதுமுதலே ஸ்ரீராம நாம ஜபத்தைச் செய்துகொண்டு வந்தார். தினம் தினம் இவர் ஜபிக்கும் ராமநாம ஜபம் பல கோடிகளைக் கடந்ததாக இருந்தது. இவர் எந்தக் காரியத்தைச் செய்துகொண்டிருந்தாலும், இவரது நா ஸ்ரீராமநாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருக்கும். இவர் தாய்மொழி தெலுங்கு என்றாலும், தெலுங்கு நாட்டிலிருந்து தமிழ்நாட்டின் இருதய ஸ்தானத்திற்கு குடிபுகுந்தவர் என்றபோதிலும், இவர் பெரும்பாலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சீடர்களைத் தன்னுடன் ஏற்றுக்கொண்டு இசை ஞானத்தை அவர்களுக்கு உபதேசித்து வந்தார். இவர் ஸ்ரீ ராமனை வழிபட்டாலும், இதர தெய்வங்களின்மீது பற்றும் பக்தியும் குறைந்தவரில்லை. தாய் மொழி தெலுங்கு என்றாலும், பிற மொழிகளின் மீது துவேஷம் இல்லை. தன் பாடல்களை மட்டுமின்றி பூஜையின் போது மற்ற பல பெரியோர்களின் கீர்த்தனைகளையும் இவர் பாடி வந்திருக்கிறார். அப்படி இவர் பாடிய பெரியோர்கள் ஸ்ரீ புரந்தரதாஸர், ஸ்ரீ ராமதாஸ், ஸ்ரீ வேங்கடவிட்டலஸ்வாமிகள், ஸ்ரீதாளபாக்கம் சின்னையா, ஆகிய பெரியோர்களின் பாடல்களும் இவரால் பாடப்பட்டன.

இவரை குருவாக ஏற்றுக்கொண்டு சீடர்கள் எனும் பெருமையைப் பெற்றவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் முறையே, வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர், தில்லைஸ்தானம் ராமய்யங்கார், திருவொற்றியூர் வீணை குப்பையர், ஐயா பாகவதர், மானம்புச்சாவடி வேங்கடசுப்பையர், தஞ்சாவூர் ராமராவ், லால்குடி ராமய்யர், நெய்க்காரப்பட்டி சுப்பையர், உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர், சுந்தர பாகவதர், ஸொஜிரி சீதாரமையர், நங்கவரம் நீலகண்டய்யர், கணேசய்யர் காரு, செவுனா வெங்கடாசலபதி பாகவதர் ஆகியோராவர்.

ஸங்கீதத்தை கிரமப் படுத்தி அதனை முறையாகப் பயிலுவதற்கு ஏற்ப அதற்கு ஸரளிவரிசை, ஜண்டை வரிசை, அலங்காரம், கீதம், வர்ணம், ஸ்வரஜதி, கீர்த்தனம் என்று வகைப்படுத்திக் கொடுத்தவர் ஸ்ரீ புரந்தரதாஸர். அப்படி அவர் ஏற்படுத்திக் கொடுத்த இலக்கணப் பாதையில் பற்பல ராகங்களில் அபூர்வமான சாஹித்தியங்களைச் செய்தருளியவர் தியாகராஜர். மகாகவி பாரதியார் குறிப்பிட்டிருப்பதைப் போல, சாஹித்தியத்தின் ரஸம் அந்தந்த ராகத்தில் வெளிப்படவேண்டும். அப்படி வெளிப்படும்படியான பாடல்களைப் பாடியவர் ஸ்ரீ தியாகராஜர். தற்காலத்தில் சிலர் தங்கள் மனதுக்கேற்றவாறு இவற்றை மாற்றியும், அழகு செய்தும் பாடமுயற்சிக்கிறார்கள், அங்ஙனம் செய்தல் கூடாது என்று பல பெரியோர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள்.

ஸ்ரீ தியாகராஜரை சந்தித்த ஆன்றோர்கள்.

சியாமா சாஸ்திரிகள்:- சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் (1762-1827) தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் பூஜை உரிமை பெற்ற பரம்பரையைச் சேர்ந்தவர். தெலுங்கு, சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் அம்பிகையைப் பாடியவர். தியாகராஜரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்த சியாமா சாஸ்திரிகள் அடிக்கடி திருவையாறு வந்து தியாகராஜரைக் கண்டு அளவளாவுவது வழக்கம். அத்தகைய சந்திப்புக்களில் தம்முடைய பாடல்களைத் தியாகராஜரிடம் பாடிக்காட்டுவாராம்.

கோபாலகிருஷ்ண பாரதியார்:- இவர் மாயூரத்தில் வசித்து வந்தார். திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை காலத்தில் வாழ்ந்தவர். அவரோடு நல்ல பழக்கம் உள்ளவர். நந்தனார் சரித்திரம் எனும் இசை நாடக வடிவத்தையும், வேறு பல தமிழ் சாகித்யங்களையும் இயற்றி பெரும் புகழ் பெற்றவர். இவர் காலம் 1811 முதல் 1881 வரையிலானது. தமிழ்த்தாத்தா என்று பிற்காலத்தில் புகழ்பெற்று பழைய சங்க இலக்கியங்களை வெளிக்கொணர்ந்து பதிப்பித்து தமிழ் வாழ பாடுபட்ட உ.வே.சாமிநாதய்யர் ஸ்ரீமான் பிள்ளையவர்களிடம் கல்வி பயின்று வந்த காலத்தில் மாயூரத்தில் சில காலம் கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசை பயின்று வந்திருக்கிறார். பிறகு பிள்ளையவர்கள் உ.வே.சாவிடம் நீ தமிழ் படிக்க வேண்டுமா, அல்லது சங்கீதம் பயில வேண்டுமா என்பதை முடிவு செய்துகொள் என்று சொன்னபின், கோபாலகிருஷ்ணபாரதியாரிடம் இசை பயில்வதை நிறுத்திக் கொண்டு, பிள்ளையவர்களிடம் தமிழை மட்டும் படிக்கலானார் என்று அவரது 'சுயசரிதை' கூறுகிறது. கோபாலகிருஷ்ணபாரதியார் சற்குரு ஸ்ரீ தியாகராஜரைப் பற்றிக் கேள்விப்பட்டு திருவையாறு வந்தார். ஸ்ரீ தியாகராஜர் தன் வீட்டில் சீடர்களுக்கு ஆபோகி ராகக் கீர்த்தனையைப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்து கோபாலகிருஷ்ண பாரதியார் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். குருநாதர் பாடம் சொல்லிவிட்டு காவிரிக்குச் சென்று ஸ்நானம் செய்து வருவதற்காக வாயிற்புறம் வந்தபோது திண்ணையில் உட்கார்ந்திருக்கும் கோபாலகிருஷ்ண பாரதியாரை யார் என்று விசாரித்தார். தான் மாயூரத்திலிருந்து வருவதாக பதில் சொன்னார். அப்படியானால் அங்கு தமிழில் சிறப்பான பாடல்களை இயற்றிப் பாடுகிறாரே கோபாலகிருஷ்ண பாரதியார் அவரை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். அடியேன்தான் அந்த கோபாலகிருஷ்ண பாரதி என்றார் இவர். தியாகராஜருக்கு மிக்க மகிழ்ச்சி. வந்திருக்கும் விருந்தினரை வரவேற்று உபசரித்தார். நீங்கள் ஆபோகியில் ஏதாவது பாடல் இயற்றிப் பாடியிருக்கிறீர்களா என்றார். இதுவரை இல்லை என்று இவர் பதிலிறுத்தார். சரி இருங்கள் நான் போய் காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சென்றவர் வீடு திரும்பியதும், பாரதி சொன்னார் நான் இப்போது ஆபோகியில் ஒரு பாடல் இயற்றியிருக்கிறேன் என்று. அப்படியா சரி பாடுங்கள் என்றார் தியாகராஜர். கோபாலகிருஷ்ண பாரதியார் பாடினார். "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா - தில்லை சபாபதிக்கு" என்று தொடங்கும் பாடல் அது. தான் காவிரிக்கு ஸ்நானம் செய்து திரும்புமுன் இப்படியொரு கீர்த்தனையை இவர் இயற்றியது கண்டு சுவாமிகளுக்கு பேரானந்தம். அவரை மனதாரப் பாராட்டினார். (இந்த வரலாற்றை டாக்டர் ராமநாதன் அவர்கள் "தியாகையருடன் ஒரு நாள்" என்ற தலைப்பில் இசைப் பேருரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டது) இந்த நிகழ்ச்சி பற்றி எழுதியுள்ள சான்றோர்கள் சிலர், நிகழ்ச்சி பற்றிய சந்தர்ப்பங்களை வேறு விதமாகவும் எழுதியிருந்தாலும், நிகழ்ச்சியின் கருப்பொருள் இதுதான் என்பதால் நடந்தது இதுதான் என்பதை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இவர்களைத் தவிர வேறு பல பெரியோர்களும் ஸ்ரீ தியாகராஜரை வந்து தரிசித்து உரையாடி மகிழ்ந்திருக்கின்றனர். சுவாதித் திருநாள் மகாராஜா ஸ்ரீ தியாகராஜரின் பாடல்களை கன்னையா பாகவதர் பாடக் கேட்டிருக்கிறார். ஆகவே அவரை நேரில் காண விரும்பினார். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த தஞ்சை மூவர் எனப்படுபவர்களில் ஒருவரான வடிவேலு என்பவர் மகாராஜாவின் சபையில் ஆஸ்தான வித்வானாக இருந்தார். அவரை மகாராஜா அழைத்து திருவையாறு சென்று ஸ்ரீ தியாகராஜரை சந்தித்து வரும்படி கேட்டுக் கொண்டார். அவரும் திருவையாறு வந்து தியாகராஜர் வாழ்ந்த திருமஞ்சன வீதியில் ஒரு வீட்டில் வந்து தங்கினார். தினமும் ஸ்ரீ தியாகராஜர் காலை மாலை இரு வேளைகளிலும் காவிரிக்குச் செல்வார். அப்படிச் செல்லும் வழியில் இருந்த ஒரு வீட்டில்தான் வடிவேலு தங்கினார். தியாகராஜர் காவிரிக்குச் செல்லும் நேரத்தில் வடிவேலு தன் இல்லத்தில் பாடிக்கொண்டிருப்பார், அது சுவாமிகளின் காதுகளில் விழும். அந்த இசை நயமாக இருந்ததால் தியாகராஜர் சற்று நின்று அவர் பாட்டைக் கேட்டுவிட்டுத்தான் நகருவார். ஒருநாள் தியாகராஜர் அந்த வீட்டினுள் நுழைந்து வருவதைக் கண்ட வடிவேலு, ஓடிவந்து அவரைப் பணிந்து, ஐயனே, தாங்கள் சொல்லியனுப்பி யிருந்தால் நான் வந்திருப்பேனே என்றார். அவரது இசையை தியாகராஜர் பாராட்டிவிட்டு மறுநாள் தன் இல்லத்துக்கு வந்து பாடும்படி கேட்டுக் கொண்டார். பாடியபிறகு அவருக்கு என்ன வேண்டுமோ தயங்காமல் கேட்கலாம் என்றார் தியாகராஜர். இவரும் தியாகராஜரிடம் தான் திருவையாற்றுக்கு வந்த விவரத்தைச் சொல்லி விட்டு அவர் திருவாங்கூர் வந்து மகாராஜாவைச் சந்திக்க வேண்டுமென்றார். குருநாதர் தயங்கிவிட்டுச் சொன்னார், எங்கள் சந்திப்பு நிச்சயம் நடக்கும், ஆனால் அது வைகுண்டத்தில் நிகழும் என்றார். இப்படி பலர் கோவிந்த மாரார் என்பவர் உட்பட பலர் ஸ்ரீ தியாகராஜரை வந்து சந்தித்தனர்.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சீதாலக்ஷ்மி என்று பெயர் சூட்டி வளர்த்தார். பருவம் வந்த காலத்தில் அந்தப் பெண்ணை திருவையாற்றையடுத்த அம்மாள்அக்ரஹாரத்தில் வசித்து வந்த குப்புசாமி என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தார். அந்தத் திருமணத்துக்காக பலரும், சீடர்கள் உட்பட பல்வகை பரிசுகளை வழங்கினார்கள். அதில் ஸ்ரீ ராமபிரான் சீதா லக்ஷ்மண அனுமன் சமேதராக இருக்கும் ஒரு படமும் வந்தது. அந்தப் படத்தை வாங்கிக் கொண்ட சுவாமிகள் உடனே அதனைத் தன் பூஜை அறைக்கு எடுத்துச் சென்று "நனுபாலிம்ப நடசி வச்சிதிவோ நா ப்ராணநாத" என்னும் கிருதியைப் பாடினாராம். வந்திருந்தவர்கள் அனைவரும் ஆனந்த பரவச நிலையடைந்தார்கள். இந்தப் படம் சுவாமிகளின் உறவினர் ஸ்ரீ பட்டாபிராம பாகவதர் என்பவரின் இல்லத்தில் நெடுங்காலம் இருந்ததாகத் தெரிகிறது. சுவாமிகளின் பெண் சீதாலட்சுமிக்கு தியாகராஜன் என்றொரு மகன் பிறந்தார். சங்கீதத்தில் தேற்சியடைந்த இந்த தியாகராஜன் வயலின் வாத்தியத்திலும் மிகத் தேற்சி பெற்றிருந்தார். குரவம்மாள் என்னும் பெண்ணை மணந்துகொண்ட இவர் தனது முப்பதாவது வயதில் வாரிசுகள் எதுவும் இல்லாமலேயே காலமாகிவிட்டார். எனவே ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு வம்சாபிவிருத்தி யின்றியே போயிற்று.

ஸ்ரீ தியாகராஜரின் கீர்த்தனைகளைக் கொண்டு சொல்லப்படும் நிகழ்வுகள்.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பெருமையையும், அவரது ஸங்கீதத்தைப் பற்றியும் கேள்விப்பட்டு அவர் தங்கள் சபையில் வந்து பாடவேண்டுமென்று கேட்டுக் கொண்டும், ஸ்வாமிகள் போகவில்லையாம். அப்போது "நிதிசால ஸுகமா" எனும் கீர்த்தனையைப் பாடியதாகக் கூறுகிறார்கள். "நிதிசால" எனும் கீர்த்தனையில் எல்லாவற்றினும் உயர்ந்ததாக இராம தரிசனத்தைத் தான் மதிப்பதாகவும், உலகியல் சார்ந்தவற்றின் பயன்களில் தனக்குள்ள வெறுப்பையும், தன் வைராக்கியத்தையும் தியாகராசர் உறுதி செய்கிறார். "நிதியும் செல்வமும், மிகுந்த இன்பத்தைக் கொடுக்கக் கூடியவைகளா? அல்லது ஸ்ரீ ராமனின் ஸந்நிதியில் சேவை புரிவது சால சுகம் தருமா? மனமே! இதற்கு உண்மையான பதிலைக் கூறு. தயிர், வெண்ணெய், பால் முதலியன சுவை தருமா? அல்லது தசரதகுமாரன் ராமனைத் தியானித்துப் பாடும் பாடல் ருசி தருமா? அடக்கம், சாந்தம் எனும் குணம் அமைந்த கங்கா ஸ்நானம் சுகம் தருமா? அல்லது சிற்றின்பச் சேறு நிறைந்த கிணற்று நீர் சுகம் தருமா? அகம்பாவம் நிறைந்த மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா? அல்லது நன்மனத்தவனாகிய தியாகராஜன் வணங்கும் தெய்வத்தைத் துதித்தல் சுகம் தருமா?" இதுதான் அந்தப் பாடலின் கருத்து. தஞ்சை மராட்டிய மன்னன் தன்னை அழைத்தபோது வரமறுத்து இந்தப் பாடலைப் பாடினார் என்று பலரும் எழுதுகிறார்கள். இதைப்போல பல சம்பவங்கள் இவரது வாழ்க்கை சரிதத்தை எழுதியவர்கள் கூறியிருந்த போதிலும், பல இவரது பாடல்களின் கருத்தின் அடிப்படையில் யூகித்து எழுதியிருக்கிறார்களே தவிர இதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பது சிலரது கருத்து. இது போலவே பல சந்தர்ப்பங்கள் இவர் வாழ்க்கை வரலாற்றில் காணப்படுகின்றன.. பெரிய மகான்களின் வரலாற்றை எழுதும்போது கூடியவரை உள்ளது உள்ளபடி எழுதுவது சிறப்பு.

ஸ்ரீ தியாகராஜர் திருப்பதி சென்றபோது திருவேங்கடத்தான் சந்நிதியில் திரைபோட்டு மறைத்திருந்ததாகவும், அது அறுந்து விழ வேண்டி "தெர தீயகராதா" எனும் பாடலைப் பாடினார் என்றும் கூறுகிறார்கள். சிறந்த இராம பக்தரான ஸ்ரீ தியாகராஜர் பெருமாள் சந்நிதிக்குச் சென்று அங்கு அலங்காரங்கள் நடைபெற்று தீபாராதனைக்காகத் திரை விலகும்வரை காத்திருக்காமல், திரை அறுந்து விழும்படியாக பாடியிருப்பாரா என்ற ஐயப்பாடு தோன்றுவது இயல்பு அல்லவா? திரை போடப்பட்டு வேங்கடவனின் தரிசனம் உடனே கிடைக்கவில்லையே என்று அவர் வருந்தியிருக்கலாம். அந்த நேரம் பார்த்து திரை விலக்கப்பட்டு இவருக்குத் தரிசனம் கிடைத்திருக்கலாம். அதுதான் சரியான நிகழ்வாக இருந்திருக்க வேண்டுமே தவிர, திரை அறுந்து விழும்படி இவர் பாடியிருப்பாரா என்பது கேள்விக்குறிதான். இந்தப் பாடலின் உட்கருத்து என்னுள்ளே இருக்கும் பொறாமை எனும் திரையை நீ விலக்கலாகாதா? பரமபுருஷா! அந்தப் பொறாமை எனும் திரை தர்மம் முதலான நான்கு வகை புருஷார்த்தங்களை என்னிடம் அணுகாத வண்ணம் விரட்டியடிக்கிறதே. கடவுளை உணராமலும், காணாமலும் மத, மாற்சர்ய, காமக்குரோதத் த்ிரைகள் நீங்கி இறை தரிசனம் கிட்டாதா என்ற கருத்தில்தான் இப்பாடல் உருவாகியிருக்க வேண்டும் என்ற கருத்தும் நியாயமானதாகத்தான் இருக்கிறது. இது போன்ற வேறு சில நிகழ்ச்சிகளையும் இங்கு பார்க்கலாம்.

பிலஹரி ராகத்தில் அமைந்த "நா ஜீவாதாரா" எனும் கீர்த்தனையில் இறந்து போன குழந்தையை எழுப்புவது பற்றி குறிப்பு எதுவும் இல்லை. அதுபோலவே தர்பார் ராகத்தில் அமைந்த "முந்து வேனுக" என்பதில் ஸ்ரீ தியாகராஜரை வழிப்பறி செய்யக் கொள்ளைக் கூட்டத்தார் முயன்றதாகவோ முன்னும் பின்னும் இராம இலக்குவர்கள் அவரைக் காத்து வந்ததாகவோ குறிப்பு எதுவும் இல்லை. இராமா, நீ என் முன்னும் பின்னும், இரு புறங்களிலும் எழுந்தருளி வருக. பாகவதர்களின் நேசனே என்னை நன்கு காப்பாற்ற வருக எனும் பொதுவான கருத்தை பிரதிபலிக்கும் விதமாகவே இந்தப் பாடல் அமைந்திருக்கிறதே தவிர கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற எனும் குறிப்பு எதுவும் இதில் இல்லை.

இந்தப் பாடலின் நேரடியான கருத்து இதுதான்:-- "முரனையும், கரனையும் கொன்றவனே!, என் முன்னும் பின்னும் இரு புறங்களிலும் நீ எழுந்தருளி வருக! எங்கேயும் உன் திருவழகைப் போல கண்டதில்லை ரகுநந்தனா! நீ விரைந்து வருக!!

புகழ்வாய்ந்த சூரிய வம்சம் எனும் கடலில் உதித்த சந்திரனே! கோதண்டத்தைக் கையில் ஏந்தி வா! அளவிடமுடியாத பலத்தைக் கொண்டவனே! உன் அருகில் இருந்து கொண்டு தொண்டு செய்யும் இலக்குவனோடு கூட வா!

ஓ! கஜேந்திரன் எனும் யானையைக் காப்பாற்றியவனே! ஓ! சக்கரவர்த்திக் குமாரா! ஓங்காரம் எனும் பிரணவத்தில் வாழ்பவனே, வா! பாகவதர்களை நேசிப்பவனே! தியாகராஜனைக் காப்பாற்ற வா!".

இராமனுக்குரிய ஒரு பொதுவான வழிபாட்டினையே இது சுருக்கமாகக் கொண்டுள்ளது. உண்மையில் இது ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தின் தெலுங்கு வடிவம் என்று கூறப்படுகிறது.

நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியச் செய்தி, தியாகராஜரின் அண்ணன் தியாகராஜரைக் கொடுமைப்படுத்தி இராம இலக்குவ சீதாபிராட்டி விக்கிரகங்களை எடுத்து காவேரி வெள்ளத்தில் வீசி எறிந்தது பற்றியது. இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே பல சோகரஸக் கீர்த்தனைகள் எழுந்தன என்பது உயர்வு நவிற்சி எனக் கூறப்படுகிறது. புகழ்வாய்ந்த பெரியோர்களுடைய பெருமைகளை பரப்ப வேண்டுமானால் அவர்களுக்கு பல துன்பங்கள் ஏற்பட்டு அதனால் வருந்துவது போலவும், அந்தத் துன்பங்களிலிருந்து விடுபட மாட்டோமா என்று கதறுவது போலவும் கதைகள் சொல்வது இயல்பு. அப்படிப்பட்ட தீங்குகளை விளைவிக்க யாராவது ஒருவரை சிருஷ்டித்துக் காட்டுவதும் புனைந்துரைத்து கதாநாயகனின் பெருமையை நிலைநாட்டுவதும் வழக்கம். காவிரியில் வெள்ளம் வடிந்த பிறகு தியாகராஜர் அந்த விக்கிரகங்களைத் தேடி அலைந்தார், அழுதார், புலம்பினார் என்கின்றனர். "நே நெந்துவெத குதுரா" முதலான கீர்த்தனைகள் அவர் அழுது புலம்பி தேடியதன் விளைவு என்கின்றனர். கர்நாடகபெஹாக் ராகத்தில் அமைந்த இந்தப் பாடலின் பொருள் வருமாறு:- "ஹரி! உன்னை நான் எங்கெல்லாம் தேடுவேனடா? நான்முகனான பிரமன் இட்ட முறைகளைக் கேட்டும் வராத உன்னை நான் எங்கே தேடுவேனடா? தியாகராஜனால் துதிக்கப்படுபவனே! பாவம் நிறைந்த உள்ளத்துடன் தீய செயல்கள் புரிந்து பல தடவைகள் தகாத மொழிகளைப் பேசிக்கொண்டு, உலகத்தில் சிறந்த பக்தனைப் போல் வெளி வேடமிட்ட நான் உன்னை எங்கே தேடுவேனடா?" கடவுளைக் காண்பதிலுள்ள கஷ்டங்களைப் பற்றிய மேலான குறிப்புகள்தான் இந்தப் பாடலில் காணப்படுகின்றன. தவிர, ஆற்று வெள்ளத்தில் தேடித் துழாவினார், ராமவிக்கிரகம் கிடைக்காமல் அழுது புலம்பினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இங்கே இக்கதை நிகழ்ச்சி ஸ்ரீ தியாகராஜரின் உடன்பிறந்த சகோதரரை கொடுமைக்காரராகக் படம்பிடித்துக் காட்டுகிறது. இப்படிப்பட்ட மகானுக்கு, இவ்வளவு கொடுமை மனம் படைத்தவரா தமையனாராக இருந்தார் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா. அவரது தமையனார் இவரைப் போலன்றி மாறுபட்டவராகவும் இருக்கலாம், இவர் குடும்பத்து வருமானத்துக்கு வழிதேடாமல் இப்படி பொழுதெல்லாம் இராமநாம ஜெபத்திலும் பாட்டிலும் ஆழ்ந்திருக்கிறாரே, இவரால் குடும்பத்துக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லையே என்று வருந்தியிருக்கலாம். இவை அனைத்தும் உண்மையாக இருந்த போதிலும் நம் மனத்தில் ஒரு உறுத்தல் ஏற்படாமல் போகவில்லை. இவ்வளவு சிறந்த பக்தரின் பெருமைகளையெல்லாம் கண்கூடாகப் பார்த்து வரும் தமையனார் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்திருக்க முடியுமா என்பதுதான் அது. மன்னரே அழைத்துத் தன் தம்பிக்குப் பொன்னும் பொருளும் கொடுக்கத் தயாராக இருக்கும்போது அவற்றை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இராம நாமமே தனக்குப் போதும் என்று இப்படி யாராவது இருப்பார்களா என்று அவர் ஆதங்கப் பட்டிருக்கலாம். கஷ்டப்படும் தன் குடும்பத்துக்குத் தம்பி செல்வம் எதையும் தேடிக் கொடுக்கவில்லையே என்று வருந்தியிருக்கலாம் மனக்கஷ்டப் பட்டிருக்கலாம். இந்த நிகழ்ச்சி பற்றி ஸ்ரீ தியாகராஜர் வரலாற்றை உணர்ந்தவர்களே ஊகித்து உணர்ந்து கொள்வது நலம். ஒருவருடைய பெருமைகளையும் ஏற்றங்களையும் போற்றி வணங்கும் அதே நேரத்தில் மற்றவர்களைத் தாழ்த்திப் பார்க்க வேண்டுமா? இவற்றையெல்லாம் நாம் மனதில் கொண்டே மகான்களின் வரலாற்றைப் படிக்க வேண்டும்.

ஸ்ரீ சுவாமிகளின் சீடர்களில் தஞ்சாவூர் ராமராவ் என்பவர் ஒருவர். இவர் மாத்திரம் சுவாமிகளிடம் அதிகமான உரிமையையும் அன்பையும் உடையவர், சில சமயங்களில் தான் விரும்பியபடி சுவாமிகள் கிருதிகளை இயற்றித் தரவேண்டுமென்று அடம்பிடித்து பாடச் செய்வாராம். சுவாமிகளும் அவர் விரும்பியபடியே செய்து தருவாராம். ஸ்ரீ தியாகராஜருடைய பெற்றோர்கள் வாழ்ந்த காலத்திலேயே தஞ்சாவூர் ராமராவ் எனும் இந்த சீடர் அவர்களைக் கேட்டு தியாகராஜருடைய ஜாதகக் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார் என்று திரு டி.எஸ்.பார்த்தசாரதி தனது நூலில் குறிப்பிடுகிறார். இவரை ஆஞ்சநேயரின் அம்சம் என்றும் கூறுவதுண்டு.

திருவையாற்றுக் கீர்த்தனைகள்.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் தன் இளம் வயது முதல் வாழ்ந்து வந்த திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் பஞ்சநதீஸ்வரர் பெயரிலும் அம்பாள் தர்மசம்வர்த்தனியின் பெயரிலும் எட்டு கீர்த்தனங்களைப் பாடியிருக்கிறார். இதில் ஸ்வாமியின் பேரில் நான்கும் அம்பிகையின் மீது எட்டும் அமைந்திருக்கின்றன. அந்தக் கீர்த்தனைகள் வருமாறு:-

பஞ்சநதீஸ்வரர் பேரில்: 1. அடாணா ராகத்தில் 'இலலோ பிரணதார்த்திஹருடு'
2. மாளவஸ்ரீ ராகத்தில் 'எவருந்நாரு பிரோவ'
3. ஸாரங்கா ராகத்தில் 'ஏஹி த்ரிஜகதீச'
4. மத்யமாவதி ராகத்தில் 'முச்சட பிரஹ்மாதுலகு'

தர்மஸம்வர்த்தனி பேரில்: 1. தோடி ராகத்தில் 'கருணஜூடவம்ம'
2. ஸாவேரி ராகத்தில் 'பராசக்தி மநுபராத'
3. ஸாவேரி ராகத்தில் 'நீவுப்ரோவவலெ'
4. ரீதிகெளளை ராகத்தில் 'பாலே பாலேந்து'
5. அடாணா ராகத்தில் 'அம்ம தர்மஸம்வர்த்தநி'
6. யமுனாகல்யாணி ராகத்தில் 'விதி சக்ராதுலகு'
7. கல்யாணி ராகத்தில் 'சிவே பாஹிமாம்'
8. ஆரபி ராகத்தில் 'அம்ப நின்னு நம்மிதி'

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் இசை நாடகங்கள்.

ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் ஸ்ரீ ராமபிரான் மீது தவிர பல தலங்களில் எழுந்தருளியிருக்கும் சுவாமி அம்பாள் பற்றியெல்லாம் பாடியதைத் தவிர இரண்டு இசை நாடகங்களையும் இயற்றியிருக்கிறார். அவை 'பிரஹலாத பக்தி விஜயம்' மற்றும் 'நெளகா சரித்திரம்'. இவை தவிர சீதாராம விஜயம் என்றொரு நாடகமும் இயற்றியதாகத் தெரிகிறது ஆனால் அது கிடைக்கவில்லை. இறைவனின் புகழ்பாடி ஆடும் நாட்டிய நாடகமே 'நாட்டிய மேளா' என நடத்தப்பட்டு வந்துள்ளது. மராட்டிய மன்னர்கள் காலத்தில் 'பாகவத மேளா' என இவை நடித்துக் காட்டப்பட்டன. தஞ்சை மராட்டிய மன்னர்கள் குறிப்பாக இரண்டாம் சரபோஜி மன்னர் கலை இலக்கியங்களைப் போற்றி வளர்த்தார். விஜயநகர சாம்ராஜ்யத்திலிருந்த பல கலை, இசை, நாட்டியக் கலைஞர்கள் தஞ்சை ராஜ்யத்தில் வந்து குடியேறினார்கள். இவர்கள் மெலட்டூர், சாலியமங்கலம், சூலமங்கலம், ஊத்துக்காடு, நல்லூர், தேப்பெருமாநல்லூர் ஆகிய இடங்களில் குடியமர்த்தப்பட்டதாகத் தெரிகிறது. மெலட்டூரில் இந்த பாகவத மேளா இன்று வரை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

காஞ்சி, திருவொற்றியூர், திருப்பதி விஜயம்.

இப்படி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் திருவையாற்றில் இசை உண்டு, தன் இராமனுண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில், காஞ்சிபுரம் ஸ்ரீ உபநிஷத் பிரஹ்ம சுவாமிகள் என்பவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளைத் தன் ஊருக்கு வருமாறு அழைக்கிறார். இந்த உபநிஷத் சுவாமிகள் தியாகராஜரின் தந்தைக்கு மிகவும் வேண்டியவர் மட்டுமல்லாமல் நூறு வயதைக் கடந்தவரும்கூட. சென்னை நகரத்தில் வசித்து வந்த பெரும் வணிகரும் பக்திமானுமான கோவூர் சுந்தர முதலியார் என்பவர் ஸ்ரீ தியாகராஜரைத் தன் கிராமத்துக்கு வரவழைத்துவிட வேண்டுமென்று விரும்பி உபநிஷத் பிரம்ஹ சுவாமிகளிடம் வேண்டிக்கொள்ள அவரும் அங்ஙனமே இவரை வரச்சொல்லி தகவல் அனுப்பினார். திருவையாற்றில் மிகவும் பிரபலமாகவும், ஸ்ரீ ராமபிரான் மீது கொண்ட பக்தியால் பற்பல பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பதையும் கேள்வியுற்ற உபநிஷத் சுவாமிகள் கோவூர் சுந்தர முதலியார் வேண்டுகோளுக்கிணங்க இவரை அழைக்கிறார். திரு வி.ராகவன் அவர்கள் தன் நூலில் சோழ நாட்டில் 18ஆம் நூற்றாண்டில் காமகோடி பீடத்தில் விளங்கிய அத்வைத சந்நியாசியாகிய திரு போதேந்திரர்தான் தியாகராஜரை காஞ்சிபுரம் வருமாறு அழைத்ததாகக் சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள நூலில் குறிப்பிடுகிறார்.

18, 19ஆம் நூற்றாண்டுகளில் காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த ஆச்சார்யார்களில் 6ஆவது ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்தான் (1813 முதல் 1875) ஸ்ரீ தியாகராஜர் காலத்தில் இருந்தவர். மேலும் இவர் அப்போது காஞ்சிபுரத்தில் இல்லாமல், முகலாயர் படையெடுப்பு காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தனது மடத்தை மாற்றிக் கொண்டு வந்துவிட்டார். அப்போது இவர் கும்பகோணம் அல்லது திருவிடைமருதூர் இங்கு எங்காவது இருந்திருக்க வேண்டும். மேலும் ஸ்ரீ தியாகராஜர் ஊர் சுற்றிப் பார்க்கவோ, பல தலங்களுக்குச் செல்ல வேண்டுமென்றோ விரும்பியது கிடையாது. அவர் திருவையாற்றைத் தவிரவும் தன் இராம பக்தி சாம்ராஜ்யத்தை விட்டும் எங்கும் போகவிரும்பாவிட்டாலும், சில நிர்ப்பந்தங்கள் காரணமாகத்தான் ஸ்ரீரங்கம், லால்குடி, திருப்பதி, கோவூர், திருவொற்றியூர், நாகப்பட்டணம் ஆகிய ஊர்களுக்குச் சென்று வந்திருக்கிறாரே தவிர ஊர்சுற்றும் ஆசை அவரிடம் இல்லவே இல்லை. ஸ்ரீ உபநிஷத் சுவாமிகள் அழைத்த காரணத்தால் காஞ்சி சென்றார் அவ்வளவுதான் அங்கிருந்து மற்ற இடங்களுக்கும் அவசியம் நேர்ந்ததால் சென்றார்.

ஸ்ரீ தியாகராஜர் காஞ்சிபுரம் தலயாத்திரை சென்றார் என்கிறார்கள். "History of Kanchi Sankaracharya Math and Acharyaparampara" எனும் ஆங்கில வரலாற்று கட்டுரையை "Make History" மூன்று மாதத்திற்கொருமுறை வெளியாகும் ஆங்கில பத்திரிகையில் 2003ஆம் வருஷம் ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான இதழில் வெளியாகியிருக்கிறது. இந்த கட்டுரையில் காஞ்சி மடம் தோன்றிய காலம் தொட்டு இப்போது 70ஆவது பீடாதிபதியாக வீற்றிருக்கும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வரை விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 1813 முதல் 1875 வரை ஸ்ரீ 6ஆம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பீடாதிபதியாக இருந்திருக்கிறார்கள். ஆகவே ஸ்ரீ தியாகராஜரை காஞ்சிக்கு அழைத்தவர் காஞ்சி சங்கராச்சாரியார் இல்லை, தியாகராஜரின் உறவினரான உபநிஷத் சுவாமிகள்தான்.

காஞ்சிக்குப் புறப்பட்ட சுவாமிகள் சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ வீணை குப்பய்யர் வேண்டுகோளுக்கிணங்க கோவூர் சுந்தர முதலியாருடைய பந்தர் தெரு கிரகத்தில் ஏழு நாட்கள் தங்கினார். அந்த செல்வந்தருடைய இல்லத்தில் மாலை நேரங்களில் பாட்டுக் கச்சேரிகள் நடந்தன. அங்கிருந்து தன்னை வரவேற்ற சுந்தர முதலியாரின் கோவூருக்குச் சென்றார். அங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீ சுந்தரேச்வரரைப் பற்றி பாடினார். அங்கு ஐந்து கிருதிகளைச் செய்து அவை 'கோவூர் பஞ்ச ரத்தினங்கள்' எனும் பெயர் பெற்றன. அந்த செல்வந்தர் தியாகராஜருக்குத் தெரியாமல் ஆயிரம் பொற்காசுகளைக் கட்டி அவரது பல்லக்கில் மறைத்து வைத்திருந்தாராம். தெரிந்தால் சுவாமிகள் வாங்கிக் கொள்ள மாட்டார் என்ற எண்ணம். சீடர்களுக்கெல்லாம் நல்ல சன்மானங்கள் வழங்கி வழி அனுப்பி வைத்தாராம்.

ஸ்வாமிகள் பற்றி கூறப்படும் நிகழ்ச்சிகள்.

இந்த இடத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதன் தீவிரத் தன்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் வாசகர்களுக்கு உரியது. சிலரது பெருமையை உயர்த்திக் காட்டும் வகையில் சில புனந்துரைகள் புகுந்துவிடுவது இயல்பு. இந்தக் கதையும் அதுபோன்ற புனந்துரையா, அல்லது நடந்ததா என்பதை நீங்களே புரிந்து கொள்ளுவதுதான் சரியாக இருக்கும். ஸ்ரீ சுவாமிகள் பயணம் செய்துகொண்டிருந்த போது வில்லில் கற்களை வைத்து அடித்து வழிப்பறி செய்யும் ஒரு கூட்டம் இவர்களை வழிமறித்ததாம். நாகலாபுரம் கள்வர்கள் எனப்படும் அவர்கள் வழிப்பறி செய்யும்போது அவர்கள் சீடர்களில் ஒருவர் சுவாமிகளிடம் சென்று முறையிட்டார். அதற்கு சிவாமிகள் நம்மிடம் என்ன இருக்கிறது கொள்ளையடிக்க என்கிறார். அப்போது அந்த சீடர் கோவூர் முதலியார் ஆயிரம் பொற்காசுகளைப் பல்லக்கில் வைத்திருப்பதைச் சொல்கிறார். அப்படியானால் அந்த காசுகளை எடுத்து அந்த கொள்ளையர்களிடம் கொடுக்கச் சொல்லி சுவாமிகள் சொல்கிறார். அதற்கு சீடர் கோவூர் முதலியார் அந்த பொன்னை அவரது சொந்த செலவுக்குக் கொடுக்கவில்லையென்றும் ஸ்ரீ ராமபிரான் உற்சவங்களுக்கென்று கொடுக்கப்பட்டவை என்றும் சொல்கிறார். அதற்கு சுவாமிகள் அப்படியானால் அது ஸ்ரீ ராமனின் சொத்து, அதனை அவனே காத்துக் கொள்வான் என்கிறார். அப்போது இரண்டு வில்வீரர்கள் தோன்றி அம்புகள் எய்து அந்த திருடர்களை விரட்டியடிக்கின்றனர். பின்னர் மறைந்து விடுகின்றனர். அவர்கள் யார் என்று விசாரிக்க அவர்கள் அங்கு காணப்படவில்லை. வந்தவர்கள் இராம லக்ஷ்மணர்களே என்று அனைவரும் மகிழ்ந்து போற்றுகின்றனர். இப்படியொரு வரலாறும் ஸ்ரீ தியாகராஜர் வாழ்க்கையில் பேசப்படுகிறது.

திருப்பதியை விட்டு காஞ்சிபுரம் வரும் வழியில் புத்தூர் அருகில் ஒரு கிணற்றங்கரையில் பலர் நின்றுகொண்டு வருந்துகின்றனர். விஷயம் என்னவென்று சுவாமிகள் விசாரிக்க, சேஷய்யா எனும் பிராமணர் ஒருவர் அந்த கிணற்றில் விழுந்து உயிர் துறந்துவிட்ட செய்தியையும், அவரது மனைவியும் குழந்தையும் கதறி அழுகின்றனர் என்றும் அங்கிருந்தவர்கள் சொல்ல, ஸ்ரீ தியாகராஜர் தனது சீடர்களைவிட்டு "லோகாவன சதுர பாஹிமாம்" எனும் பாடலையும், "ஏமானதிச்சேவோ யேமெஞ்சினாவோ" எனும் கிருதியையும் பாடச் சொல்லுகிறார். வேங்கடரமண பாகவதர் "நாஜீவாதார நா நோமுபலமா" எனும் பிலஹரி ராகக் கிருதியைப் பாடுகிறார். இந்தப் பாடலின் பொருள்: "என் உயிருக்கு ஆதாரமே! நான் நோற்ற நோன்புகளின் பயனே! பங்கயக் கண்ணனே! ராஜாதி ராஜருள் முதல்வனே! என் பார்வையின் ஒளி நீயே! என் நாசி நுகரும் நறுமணமும் நீயே! நான் ஜபம் செய்யும் அக்ஷரங்களின் உருவம் நீயே! நான் செய்யும் பூஜைக்கு மலரும் நீயே!" இவ்வளவுதான் அந்த பாடல். இறந்து கிடந்த அந்தணர் உயிர் பெற்றெழுகிறார். அனைவரும் ஸ்ரீ தியாகராஜரை வணங்கி வாழ்த்துகின்றனர்.

பின்னர் சுவாமிகள் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, ஸ்ரீரங்கம் முதலான இடங்களுக்குச் சென்றுவிட்டு திருவையாறு திரும்புகிறார். 1845 விச்வாவசு வருஷம் அவரது தர்மபத்தினியாரவர்கள் மோட்ச கதியை அடைகிறார்கள். அதற்கடுத்த பராபவ வருஷம் புஷ்ய சுக்ல ஏகாதசி ராத்திரியில் பஜனை நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஸஹானா ராகத்தில் "கிரிபை நெலகொன்னராமுனி" எனும் கிருதியைப் பாடி அங்குக் கூடியிருந்தவர்களைப் பார்த்து "அன்பர்களே! வரும் (1857) பகுள பஞ்சமி தினத்தில் ஓர் விசேஷம் நடக்கப் போகிறது. எல்லோரும் அந்த தினத்தில் அதிகாலை வேளையில் இங்கு வந்துவிடுங்கள்" என்று அழைப்பு விடுத்தார். அதன்படியே அன்றைய தினம் எல்லோரும் வந்து கூடினார்கள்.

ஆபத் ஸந்நியாசமும் முக்தியும்

அன்றைக்கு நாலைந்து நாட்களுக்கு முன்னதாக சுவாமிகள் ஸ்ரீ பிரம்மானந்த ஸ்வாமிகள் என்பவரை வரவழைத்து அவரிடம் ஆபத் ஸன்யாசம் வாங்கிக் கொண்டார். பகுளபஞ்சமி தினம் அதிகாலை ஸ்நானம் முதலான நித்ய கர்மாக்களை முடித்துக் கொண்டு பக்தர்களும் சீடர்களும் புடைசூழ ஸ்ரீ ஸீதாராமச்சந்திர மூர்த்தியை ஆராதித்தார். அதனைத் தொடர்ந்து பஜனை நடைபெறுகிறது. அப்போது சுவாமிகள் பஜனையை நிறுத்திவிட்டு அனைவரும் ஸ்ரீராம நாம ஜபத்தை இடைவிடாமல் செய்து வரச் சொன்னார். அதன்படியே அங்கு ஸ்ரீ ராம நாமத்தை அனைவரும் ஜபம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஸ்ரீ சுவாமிகள் மனோஹரி ராகத்தில் "பரிதாபமு கனியாடின பலுகுல மரசிதிவோ" எனும் கிருதியைப் பாடி, கரத்தில் சின்முத்திரை காட்டி முக்தியடைந்தார். அந்த சமயம் அவர் கபாலத்திலிருந்து ஒரு ஜோதி புறப்பட்டு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி விக்கிரகத்திலும், மேலே சென்றதையும் சிலர் பார்த்ததாகக் கூறுகிறார்கள்.

சமாதியும் குருபூஜை ஆராதனைகளும்.

பிறகு பக்தர்கள் சீடர்கள் ஒன்றுகூடி திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் அவர் உடலுக்கு மஹாபிஷேகம் முதலானவைகளைச் செய்து, பிருந்தாவன வடிவாக ஒரு ஸமாதியைக் கட்டி முடித்தார்கள். இவர் தனது சீடர்களிடம் தான் மறைந்த பிறகு 60 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தன் கீர்த்தி பிராபல்யமாகுமென்று கூறிவந்தாராம். அதன்படி சுவாமிகள் சமாதியடைந்து 60 ஆண்டுகள் கழித்து, அதே பராபவ ஆண்டில் ஆங்கில வருஷம் 1907இல் வாலாஜாபேட்டை ஸ்ரீரங்கதாம பாகவதர் அதிவிமரிசையாக புஷ்ய பகுளபஞ்சமி முதல் 10 நாட்கள் குருபூஜை உற்சவத்துக்கு ஏற்பாடு செய்தார். அடுத்த 1908ஆம் வருஷம் தில்லைஸ்தானம் ஸ்ரீ நரசிம்ஹ பாகவதர், பஞ்சு பாகவதர், பிடில் கோவிந்தசாமி பிள்ளை ஆகியோர் திருவையாற்றில் ஆராதனைகளை அதிவிமரிசையாக நடத்திவரலானார்கள்.

அதன்பிறகு புஷ்ய பகுளபஞ்சமியை சென்னையில் தில்லைஸ்தானம் ஸ்ரீ ராமய்யங்கார் வாரிசுகள் சிறப்பாகக் கொண்டாடலாயினர். சென்னை 'சுதேசமித்திரன்' ஆசிரியராக இருந்த C.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அதன் வார இதழில் ஸ்ரீ தியாகராஜரின் கீர்த்தனைகளை வாரம் ஒன்றாக வெளியிட்டு பிரபலப் படுத்தி வந்தார். மதுரை செளராஷ்டிர மக்களும், காஞ்சிபுரத்தில் நாயனாப் பிள்ளையும், திருவல்லிக்கேணி மிருதங்கம் பீதாம்பர தேசாயி அவர்களும் ஒவ்வோராண்டும் ஆராதனைகளைச் செய்து வந்தார்கள்.

மைசூர் ராஜ்யத்தில் பிறந்து பெங்களூரில் வாலாஜாபேட்டை கிருஷ்ணசாமி பாகவதரின் சீடர் முனுசாமி அப்பா என்பவரிடம் இசை பயின்று சென்னையில் வாழ்ந்த ஸ்ரீமதி பெங்களூர் நாகரத்தினம்மாள் என்பவர் ஸத்குரு சுவாமிகளின் ஸமாதியைத் தன் சொந்த செலவில் அழகிய சிறு கோயிலாகக் கட்டி, சுவாமிகளின் விக்கிரகத்தை 1925 ஜனவரி 7ஆம் தேதி பிரதிஷ்டை செய்து வழிபடலானார்.

பெங்களூர் நாகரத்தினம்மாள்.

சற்குரு தியாகராஜ சுவாமிகளுக்குக் கோயில் எழுப்பிய பெங்களூர் நாகரத்தினம்மாள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? இவர் மைசூரில் பிறந்தவர், எனவே மொழியால் கன்னடர். இவர் சமஸ்கிருதம், தெலுங்கு முதலான மொழிகளோடு சங்கீதமும் கற்றுத் தேர்ந்தார். நாட்டியக் கலையும் இவர் பயின்றார். தியாகராஜ சுவாமிகளிடம் அபார பக்தி கொண்டவர். அவருடைய பாடல்களைப் பாடி இவர் சங்கீதக் கச்சேரி நடத்துவார். இவருக்கு மைசூரைச் சேர்ந்த ஒரு அன்பர் கடிதம் எழுதியிருந்தார். அதில் திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் சமாதியையொட்டி சுகாதார சீர்கேடு அடைந்து மிகவும் மோசமாக இருப்பதாகவும், இதற்கு விடிவுகாலம் பிறக்காதா என்றும் கேட்டு எழுதியிருந்தார்.

இந்தக் கடிதம் கண்டவுடன் நாகரத்தினம்மாள் சென்னை சென்று அங்கு சங்கீதத் துறை சம்பந்தப்பட்டவர்களிடமும் பேசி அவர்கள் ஆலோசனையின்படி இவர் திருவையாற்றுக்குப் பயணமானார். அங்கு சென்று இவர் தஞ்சை மராட்டிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ராஜாராம் மன்னோஜி கர்வே என்பவரிடம் பேசி சமாதி நிலத்தை கையகப்படுத்திக் கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் ஏராளமான சமாதிக் கோயில்கள் இருந்தமையாலும், அசுத்தமும், அடர்த்தியான செடிகொடிகளும் வளர்ந்திருந்ததாலும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சமாதி எது என்பதைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. பின்னர் இதுதான் சற்குருவின் சமாதி என்பது உறுதி செய்துகொண்டபின் தன் சொந்தப் பணத்தில், வீடு, நகை முதலான ஐஸ்வர்யங்களை விற்றுக் கிடைத்த பணத்தில் சுவாமிகளுக்கு சமாதி மீது கோயில் எழுப்பி கும்பாபிஷேகமும் செய்வித்தார்கள். அங்கு காணப்படும் கல்வெட்டில் கீழ்காணும் வாசகம் பொறிக்கப்பட்டது.

"ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆலயமும் பிரகாரமும், மடப்பள்ளி முதலிய கட்டடங்களும் இவைகள் அமைந்திருக்கும் ஆஸ்ரமும் மேல்படி சுவாமிகளின் அடியாளும், மைசூர் புட்டலெக்ஷ்மி அம்மாளின் புத்திரியுமான வித்யாசுந்தரி பெங்களூர் நாகரத்தினம்மாளின் கைங்கர்யமாகக் கட்டப்பெற்று 7-1-1925இல் கும்பாபிஷேகம் நடைபெற்று 1930ல் கட்டடம் பூர்த்தியாகியுள்ளது"

திருமதி பெங்களூர் நாகரத்தினம்மாள் திருவையாற்றுக்கு வந்து தியாகையருடைய சமாதியில் கோயில் எழுப்பவும், இடத்தை வாங்கவும் மராட்டிய ராணி துர்க்காபாயி எனும் அம்மையாரிடமிருந்து அவருக்குச் சொந்தமான வாழைத்தோட்டத்தை விலைக்கு வாங்கவும், சட்டப்படியான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு எல்லா உதவிகளையும் செய்தவர் திருவையாற்றில் வழக்கறிஞராக இருந்த சி.வி.இராஜ கோபாலாச்சாரியார் என்பவராகும். சற்குரு தியாகராஜ சுவாமிகளின் சமாதிக் கோயிலும் அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் இசை விழாவையும் கண்டு கேட்டு ரசிக்கும் இந்த வேளையில் இவர் போன்ற மகான்களை நினைவுகூறுவது அவசியம்.

ஒவ்வோராண்டும் தை மாதம் பகுள பஞ்சமி திதியில் சுவாமிகளின் குருபூஜையை சங்கீத உற்சவமாகக் கொண்டாடி வந்தார்கள். தியாகராஜ சுவாமிகளின் ஆராதனையில் நடைபெற்ற கச்சேரிகளில் பெண் வித்வான்களை மேடையில் அமர அனுமதிப்பல்லை என்ற வழக்கம் இருந்து வந்தது. நாகரத்தினம்மாள் வந்த பிறகு இந்த நிலையை மாற்ற நினைத்தார். அவர் பெண்களை மட்டுமே வைத்து சமாதியின் பின்புறம் கச்சேரிகளை நடத்தத் தொடங்கினார். இதற்கான செலவுகளை நாகரத்தினம்மாளே ஏற்றுக் கொண்டார். மற்ற இரு பிரிவினரான சின்ன கட்சி, பெரிய கட்சி இவர்களில் வாய்ப்பு கிடைக்காத ஆண் வித்வான்களுக்கும் நாகரத்தினம்மாள் தனது கச்சேரி மேடைகளில் வாய்ப்பு நல்கத் தொடங்கினார். இவர்கள் நடத்திய இசை ஆராதனை பெரும்பாலும் பெண்களே பாடும் நிகழ்ச்சியாக இருந்தது. சுவாமிகளின் ஆராதனையை மூன்று கட்சிகளாகப் பிரிந்து தனித்தனியே நடத்தி வந்தார்கள்.

சமாதிக்கு அருகே மராட்டிய ராணி துர்க்காபாயி எனும் அம்மையாருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தை விலைக்கு வாங்கி அங்கு மணல் நிரப்பி மேடாக்கி அந்த இடத்தையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள். முதலில் ஒரு கட்சி தனது ஆராதனை விழாவை உயர்நிலைப் பள்ளி மைதானத்திலும், மற்றொரு கட்சி கல்யாண மகாலிலும், மூன்றாவதாக நாகரத்தினம்மாள் குழுவினரின் ஆராதனை சமாதிக்கருகிலும் நடத்தினார்கள். இப்படித் தனித்தனியே பிரிந்து நடத்தியதன் விளைவு விபரீதமாகப் போகக்கூடாது என்று கருதி 1940ஆம் வருஷத்தில் செம்மங்குடி சீனிவாசய்யர், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, முசிரி சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் கூடிப்பேசி அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே இடத்தில் ஆராதனையை நடத்துவதென்று தீர்மானித்து அதுமுதல் அங்ஙனமே நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா.

அவரது ஆராதனை விழா முன்பே கூறியபடி தை மாதம் பகுள பஞ்சமி தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இசைக் கலைஞர்களும், வாத்தியக் கலைஞர்களும், இசை ரசிகர்களும் பெருமளவில் வந்து கூடுகின்றனர். சற்குருவின் சந்நிதியில் பாடுவது தங்களுக்கு அவரது ஆசி பரிபூரணமாக அமைவதாக அனைவரும் நம்புகின்றனர். ஒரு வாரம் வரை நடைபெறும் இவ்விழாவில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கு கொள்கின்றனர். நாள் முழுவதும், நள்ளிரவு வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதுவரை பந்தல் நிறைந்த ரசிகர்கள் கூட்டம் அமைதியாக ரசிக்கிறது.

புஷ்ய பகுள பஞ்சமி அன்று காலை திருமஞ்சன வீதியில் ஸ்ரீ தியாகையர் வாழ்ந்த இல்லத்திலிருந்து உஞ்சவிருத்தி புறப்படுகிறது. மிக மூத்த இசைக்கலைஞர் இதற்குத் தலைமை தாங்கி உஞ்சவிருத்தி எடுக்கிறார். பின்னால் வேத கோஷங்கள் முழக்கிக் கொண்டும், ஸ்ரீ தியாகையர் கீர்த்தனைகள் பாடிக்கொண்டும் பக்தர்கள் செல்கிறார்கள். அவர்கள் ஸ்ரீ தியாகராஜர் சமாதி சந்நிதிக்கு வரும் சமயம் ஆராதனை நடைபெறும் பந்தல் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்து வழியும். மேல்சட்டை அணியாமல் மேல் வஸ்த்திரம் மட்டும் அணிந்தவர்கள் சமாதிக்கு எதிரே இரு வரிசையாக நடுவில் வழிவிட்டு அமர்ந்துகொண்டு ஆராதனையைத் தொடங்குகிறார்கள். காலை முதல் மங்கள் இசை வாசிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து புல்லாங்குழல் கலைஞர்கள் வாசிக்கும் கீர்த்தனையைத் தொடர்ந்து பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகள் பாடப்படுகின்றன. தமிழகத்தின் முன்னணி இசைக் கலைஞர்கள் அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பக்தி சிரத்தையுடன் இந்த பஞ்ச ரத்தினத்தைப் பாடுவதைக் கேட்பதே ஒரு இன்ப அனுபவம். இந்த பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகள் நாட்டை, கெளளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகிய ராகங்களில் அமைந்தவை. இது பாடி முடிந்ததும் சுவாமிகளுக்குத் தீபாராதனை நடைபெறும்.

ஸ்ரீ தியாகப்பிரஹ்ம ஆராதனை சபா சார்பில் மிகச் சிறப்பாக ஆராதனை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவையாற்றுக்குப் பெருமையும், புகழும் சேர்த்துக் கொடுப்பதில் இந்த ஆராதனை விழாவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது கபிஸ்தலம் ஸ்ரீ ரங்கசாமி மூப்பனார் அவர்கள் தலைமையில் விழாவை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். சென்னை தொழிலதிபர் டெக்கான் மூர்த்தி அவர்கள் இங்கு வருகைதரும் பக்தர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் விழாவின் எல்லா நாட்களிலும் உணவளிக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். விழாவின் எல்லா நாட்களிலும் திருவையாறு நகரமே மக்கள் கூட்டத்தால் குலுங்கும்.

இசைவிழாவின் போது சமாதிக்கெதிரே இசைக்கச்சேரிகள் நடைபெறும் கொட்டகைக்குச் செல்லும் வழியெங்கும் ஏராளமான கடைகள் அமைக்கப்படும். இசை நூல்கள், இசை வாத்தியங்கள், கேசட்டுகள் குறுந்தகடுகள் இவை விற்பனை தவிர அரசாங்க, வங்கி அலுவலகங்களும் திறக்கப்பட்டிருக்கும். தென்னக ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியும் இங்கு செய்து தரப்பட்டிருக்கிறது. அஞ்சல் துறையின் அலுவலகமும், தொலைத் தொடர்புத்துறை சார்பில் தொலைபேசி, டெலக்ஸ் ஆகிய வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. செயலாளர், இணைச் செயலாளர் ஆகியோருக்கு இந்த வளாகத்திலேயே தற்காலிக அலுவலகம் திறக்கப்படுகின்றன. கலைஞர்கள் வந்து தங்குவதற்கு அறைகளும், உணவுக்காக பெரிய ஹாலும் கட்டப்பட்டுள்ளன. திருவையாறு பாரதி இயக்கம் பல்வேறு பதிப்பகத்தாரின் ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் காட்சிக்கு வைத்திருப்பதோடு விற்பனையும் செய்து வருகிறார்கள். ராமகிருஷ்ண மடத்து நூல்கள் மற்றும் பல புத்தக வெளியீட்டாளர்களும் தங்கள் புத்தகங்களை இங்கு விற்பனை செய்கிறார்கள். நிறைவு நாளன்று இரவு ஆஞ்சநேயர் உத்ஸவமும், நாதஸ்வர வித்வான்களின் மல்லாரி இசையுடனும் விழா நிறைவு பெறுகிறது.

திருவையாறு வரலாறு

திருவையாறு வரலாறு
(திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது)
எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.


திருவையாறு - ஓர் அறிமுகம்.

திருவையாறு எனும் இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் நமக்கு இங்கு வானோங்கி நிற்கும் அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனாய ஐயாறப்பர் ஆலயம் எனப்படும் காவிரிக்கோட்டமும், இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்து மறைந்த தியாகராஜ சுவாமிகளின் கர்நாடக இசையின் பெருமையும், காவிரியாறு வளம் பரப்பி இருபுறமும் சோலையாக விளங்கும் இயற்கை அழகும்தான் நம் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட இந்த வரலாற்றுப் புகழ்மிக்கத் தலம் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தலங்களில் ஐம்பத்தோறாவது திருத்தலமாகும்.

சைவத் திருத்தலங்களை மூவர் பாடிய தேவாரங்களின் அடிப்படையில், காவிரியின் வடகரைத் தலங்கள், தென்கரைத்தலங்கள் என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். தேவாரத் தலங்கள் 274இல் காவிரியின் வடகரைத் தலங்கள் 63, தென்கரைத் தலங்கள் 127 ஆகும். இவை தவிர ஈழநாட்டுத் தலங்கள் 2, பாண்டிநாட்டுத் தலங்கள் 14, மலைநாட்டுச் சிவத்தலம் 1, கொங்குநாட்டுச் சிவத்தலங்கள் 7, நடுநாட்டுச் சிவத்தலங்கள் 22, தொண்டைநாட்டுத் தலங்கள் 32, துளுவநாட்டுத் தலம் 1, வடநாட்டுத் தலங்கள் 5 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தலம் பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க சிவத் தலங்களுள் ஒன்று, சிறப்புமிக்க பெருமைகளையுடையது.

இக்கோயில் திருக்கயிலாயப் பரம்பரை திருத்தருமையாதீனத்துக்குச் சொந்தமான 27 ஆலயங்களில் சிறப்பானதொன்று. ஊரின் நடுநாயகமாக நான்கு பிரகாரங்களுடன், தேரோடும் முக்கிய வீதிகள் நான்கும் கொண்ட அமைப்புடன் சுமார் 50 ஏக்கர் பரப்புடையதாகும். கிழக்குப் பார்த்த முதல்நிலை கோபுரம், வடக்கு தவிர மற்ற மூன்று புறங்களிலும் கோபுரங்கள் உடையது.

தஞ்சாவூர் நகரத்திலிருந்து வடக்கே சுமார் 12 கி.மீ. தூரத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ளது இத்தலம். தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டுச் செல்பவர்கள் வழியில் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என்று பல ஆறுகளையும், சுற்றிலும் பசுமையான வயல் வெளிகளையும், சோலைகளையும் காணமுடியும். நீர்வளமும் நில வளமும் ஒருங்கே பெற்ற இந்தப் பகுதி பண்டைய சோழநாட்டில் சிறப்பாக விளங்கியிருக்கிறது.

முன்பொருமுறை திருவானைக்கா ஆலய குடமுழுக்கை முடித்துக் கொண்டு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்குத் தாடகம் முதலியன செய்து போட்டபின் கையிலிருந்த பணம் முழுவதும் செலவழிந்துவிட்ட நிலையில், அப்போது காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த 6ஆம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (1816ஆம் ஆண்டு) பொருளதவி நாடி தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னனை அணுகினாராம். (1798 முதல் 1832 வரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி) அதற்கு அந்த மன்னன் உதவ மறுத்துவிடவே, சுவாமிகள் தன் பரிவாரங்களுடன், திருவானைக்காவில் புறப்பட்டு காவிரியின் வடகரையோடு கும்பகோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம். அச்சமயம் சுவாமிகள் திருவையாற்றைக் கடந்து செல்கையில் மன்னன் தன் படை வீரர்கள் சிலரை அழைத்து, குடந்தை செல்லும் காஞ்சி சுவாமிகளை தஞ்சைக்கு விஜயம் செய்யும்படி கேட்டுக்கொண்டும், அவர் மறுத்துவிடவே, அவரை அவர் பயணம் செய்த சிவிகையோடு சிறை பிடித்து தஞ்சைக்கு அழைத்து வரச் செய்தான். அப்படி அவர் தஞ்சைக்குள் நுழையும் சமயம் அவரை எதிர்கொண்டு பூர்ணகும்ப மரியாதையுடனும், மங்கள வாத்தியம், வேத கோஷங்களுக்கிடையே வரவேற்று மரியாதை செய்து, அவருக்குத் தேவையான பொருளுதவிகளையும் செய்ததாக வரலாற்றுச் செய்தியொன்று உண்டு. அந்த நிகழ்ச்சி நடைபெற்றதும் இந்தத் திருவையாற்றுக்கு அருகேதான்.

அந்நாளில் பூம்புகாரிலிருந்து கண்ணகியுடன் பிழைப்பு நாடி மதுரைக்குச் சென்ற கோவலன், காவிரியின் வடகரையோடுதான் திருவரங்கம் சென்று அங்கு காவிரி நதியைக் கடந்து உறையூர் வந்து அங்கிருந்து மதுரைக்குச் சென்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. அப்படி அவர்கள் காவிரியின் வடகரையோடு சென்ற வழித்தடத்தில்தான் திருவையாறு எனும் புனித நகர் அமைந்திருக்கிறது. அவர்கள் இந்தப் பாதையில் நடந்து செல்கையில் வழியெங்கும் வேதியர்கள் செய்யும் யாகங்களின் புகை மேக மண்டலங்களைப் போல எங்கும் பரவிக்கிடந்ததாக இளங்கோவடிகள் வர்ணிக்கிறார்.

"மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில்
மறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை
இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து" என்று

அப்படி இறைவழிபாடும், புனித வேள்விகளும் மக்கள் நலன்களுக்காக நாள்தோறும் நடந்து வந்த இடம்தான் திருவையாறு. இப்புனித நகருக்கு வருபவர்கள் அனைவரும் உணரக்கூடிய ஓர் அபூர்வமான செய்தி, இங்கு பூமியில் கால்வைத்து நடக்கும்போதே இது ஓர் புண்ணிய பூமி, புனிதமான தலம் என்ற உள்ளுணர்வுதான். எப்படி திருவண்ணாமலை சித்த புருஷர்களையும், மஹான்களையும் தன்வசம் வரவழைத்துக் கொள்கிறதோ, அதுபோல எல்லா கலைகளிலும் வல்லவர்கள் திருவையாற்றுக்கு வருவதென்றால் மகிழ்ச்சியும், மன அமைதியும் கொள்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மாயூரம் என்கிற மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் நடைபெறும் கடைமுகம் சிறப்பானது. அதற்கு அடுத்தபடியாக திருவையாற்றில் அதே நாளில் நடைபெறும் கடைமுழுக்கும் மக்களை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சியாகும். இங்கு காவிரி நதியில் நீராடுவது மிகவும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.

தேவாரத் திருப்பதிகங்களில் திருவையாறு.

இவ்வளவு புகழுக்கும் உரித்தான இந்த புனிதத் தலம் திருவையாறு எனப் பெயர் பெற பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இத்தலத்தைப் பஞ்சநதம் என்று அழைப்பதோடு, இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனுக்கு பஞ்சநதீஸ்வரர் அல்லது ஐயாறப்பர் எனப் பெயர் விளங்குவதாலும் இங்கு பாயும் ஐந்து நதிகளையொட்டியே இந்தப் பெயர் வந்ததாக ஒரு கருத்து இருக்கிறது. ஆகவே இவ்வாறுகள் முறையே வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி, கொள்ளிடம் இவற்றையொட்டியே இந்தப் பெயர் வந்ததாகக் கருதலாம். இத்தலத்தின் பெயரே இங்கு கோயில் கொண்டுள்ள இறைவருக்கும் அமைந்திருப்பது சிறப்பு. இத்தலத்தின் தலபுராணப்படி சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கங்கை, பாலாறு, நந்திவாய்நுரை எனப்படும் நந்திதீர்த்தம் ஆகிய தெய்வீக தீர்த்தங்கள் இங்கு கலப்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் செய்திகள் உண்டு. 'ஐயாறு' எனும் சொல்லுக்கு அகன்ற ஆற்றையுடைய ஊர் என்ற தெளிபொருளும் உண்டு. இதன்பொருட்டே

நல்லாறும், பழையாறும், கோட்டாற் றொடு
நலந்திகழும் நாலாறும், திருவையாறும், தெள்ளாறும் ...

என்று தனது திருப்பதிகத்தில் திருநாவுக்கரசர் கூறுகிறார்.

திருவையாற்றுக்கு பஞ்சநதம், பூலோக கைலாசம், ஜெப்பேசம், ஜீவன் முக்திபுரம் எனப் பல பெயர்கள் உண்டு என்று கூறுகிறார்கள். 'ஐ' என்றால் மேலான, உயர்வான என்றும் 'ஆறு' என்பதற்கு வழிகள், மார்க்கங்கள் என்றும் பொருள் உண்டு. இவற்றை மூலாதாரம், ஸ்வாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்கள் என்றும் சொல்லுகிறார்கள். இப்படிப் பலப்பல பெயர்க்காரணங்கள் கூறப்பட்டாலும், திருவையாறு எனும் பெயர் பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றுவிட்டது.

இத்திருத்தலத்தைக் குறித்துப் பாடப்பெற்று நமக்குக் கிடைக்ககூடிய நூல்கள் அனைத்துமே சைவ இலக்கியங்கள்தான். தேவாரம் பாடிய மூவர் காலம் முதல் இன்றுவரை இத்தலம் மிகச் சிறந்த சைவத் தலங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது. திருப்புகழிலும் அருணகிரிநாத சுவாமிகள் இத்தலைத்தைப் போற்றிப் பாடியுள்ளார். மாணிக்கவாசகர் பெருமானும் 'திருவாசகம்' கீர்த்தித் திருவகவலில் "ஐயாறதனில் சைவனாகியும்" என்று இங்கு சிவபெருமான் தனக்கு பூசை செய்யும் ஆதிசைவர் காசிக்குச் சென்றிருந்தபோது அவர் உருவில் வந்து தனக்கே பூசித்த வரலாற்றைக் குறிப்பிடுகிறார்.

திருஞானசம்பந்தர் தேவாரம்

இப்படிப்பட்ட புனிதமான நகருக்கு தேவாரம் பாடிய மூவரும் வந்து பாடியிருப்பது மிகமிகச் சிறப்புடையது. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருவையாற்றுத் தலத்தைப் போற்றி ஐந்து திருப்பதிகங்கள் பாடியுள்ளார். இப்பதிகங்கள் முதல் இரு சைவத்திருமுறைகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவர் திருவையாற்றின் இயற்கை எழிலையும், கலைச் சிறப்புக்களையும், ஐயாறப்பரின் அளப்பரிய கருணையையும் விரிவாக எடுத்தியம்புகிறார். ஆடற் கலையும் இசைக் கலையும் இத்தலத்தில் எங்ஙனம் செழித்து வளர்ந்தது என்பதை மிக அழகாக எடுத்துக் கூறுகிறார். காலை வேளைகளில் ஆலயத்தில் இன்னிசை முழக்கம்தான். இளமாதர்கள் கோயிலை வலம்வந்து நடனமிடுகின்றனர். திருஞானசம்பந்தப் பெருமான் இந்த க்ஷேத்திரத்திற்கு வருகை புரிந்தபோது, இவ்வூர் மக்கள் ஊரை நன்கு அலங்கரித்து வாயில் தெளித்து கோலங்கள் போட்டு, தோரணங்கள் கட்டி பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்றிருக்கிறார்கள். நந்தி அருள்பெற்ற நன்னகராம் இவ்வூரினுள் வரும்போது தான் கண்ட வளங்களை திருஞானசம்பந்தர் பாடும் அழகைச் சிறிது காண்போமே!

"மனிதனை நல்வழிப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய ஐம்புலன்களும் தங்கள் கடமை கெட்டு, வழிதவறி, அறிவிழந்து செய்யும் தவறால் வருந்துகின்ற காலத்தில் வந்து அபயம் தரும் ஐயாறப்பன் வாழும் கோயில் இது. அடடா! இந்த ஆலயம்தான் எத்தனை அழகு! இக்கோயிலை வலம் வருகின்ற பெண்கள் நடனமிடுகிறார்கள். அந்த நடனத்துக்கு பக்க வாத்தியங்கள் முழங்குகின்றன. அந்த முழவின் அதிர்வினைக் கேட்டு அங்குள்ள வனங்களில் அலையும் குரங்குகள் மழை வருகின்றதோ, அதற்காக இடி முழங்குகின்றதோ என்று அந்த முழவோசையை இடியென எண்ணி, வானத்தில் மேகத்திரள் உள்ளதோ என்று பார்க்க மரத்தின் உச்சிக்குச் சென்று வானத்தை அண்ணாந்து பார்க்கின்றனவாம்."

"இந்தக் கோயில் இருக்கிறதே இது தழல் உருவான சிவபெருமான் தங்குகின்ற கோயில். இங்கு வளம்பொருந்திய வனத்திடை மான்கள் பாய்கின்றன. அந்த ஓசை கேட்டோ என்னவோ அங்கு நிறைந்துள்ள மந்திகளெல்லாம் மரம் ஏறிப் பாய்கின்றன. அப்படி அவைகள் பாய்கின்ற வேகத்தினால் அங்கு இருக்கும் ஏராளமான தேன்கூடு களிலிருந்தெல்லாம் தேன் பாய்ந்து தெளிக்கிறது, அத்தேன்துளிகள் விழுந்ததால் மடுக்களில் உள்ள மீன்கள் துள்ளிப் பாய்கின்றன. அந்தச் சலசலப்பால் மடுவில் இருந்த தாமரை மொட்டுக்கள் மலர்கின்றன".

"கங்கையைத் தன் தலையில் தாங்கிக் கொண்டிருக்கின்ற சிவபெருமானார், அடியார்கள் பூசித்த வில்வம், எருக்கம்பூ முதலியவற்றைத் தன் சடையில் அணிந்துள்ளார். அப்படிப்பட்ட தத்துவனார் தங்கும் கோயிலிது. அடடா! இவ்வாலயத்தைச் சுற்றிலும் வானளாவிய தருக்கள் நிறைந்த சோலையாகக் காட்சி தருகின்றது. இங்குள்ள வீதிகளிலெல்லாம் அரங்கம் அமைத்து அங்கு மகளிர் நடனம் பயில்கின்றனர். காந்தாரத்தில் பண் அமைத்துப் பெண்கள் பாட, அதற்கேற்ப ஆடலரசியர் அரங்கேறி நடனம் புரிகின்றனர். எங்கோ இருக்கும் மலையில் குயில் கூவ, அங்கிருந்து புறப்பட்டு மெல்ல தவழ்ந்து வரும் தென்றல் காற்று வழிநெடுக தேனின் மணத்தை எடுத்துக் கொண்டு வந்து வயல்களில் விளைந்து நிற்கும் கரும்புப் பயிர்களைத் தாலாட்டுகிறது. இலங்கை வேந்தன் இராவணன் சிவபெருமான் வாழும் கயிலை மலையை அசைக்க நந்தியெம்பெருமான் காலால் அழுத்த அதில் சிக்கிக்கொண்டு அவன் கதற, அவனைக் கண்டு இரங்கி அவனுக்கு அருள்செய்த ஐயன் வாழும் கோயில் இருக்கும் திருவையாற்றில், தோப்பில் எருமை மேய்கின்றபோது அங்கு ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காயொன்று கீழே விழ, அதனைக் கண்டு பயந்து அந்த எருமை ஓடி நெல்வயலை மிதித்துத் துவம்சம் செய்துப் பின் தாமரை முளைத்த வயலில் சென்று படியும் ஐயாறு. இப்படி இயற்கை அழகும், வளமும், ஆடலும், பாடலும் நிறைந்து நிற்கின்றது திருவையாறு.

இவையெல்லாம் திருஞானசம்பந்தர் பார்த்து ரசித்துப் பாடிய தேவார பாடல்களில் காணப்படும் வருணனைகளாகும்.

திருநாவுக்கரசர் தேவாரம்

இனி திருநாவுக்கரசப் பெருமான் திருவையாற்றைக் கண்ட காட்சியினைச் சிறிது காணலாம். இவர் திருவையாறு பற்றி பன்னிரெண்டு திருப்பதிகங்களைப் பாடியிருக்கிறார். இவை முறையே நான்காம் திருமுறையில் எட்டும், ஐந்தாம் திருமுறையில் இரண்டும், ஆறாம் திருமுறையில் இரண்டுமாக அமைந்துள்ளன. இவ்வூரின் வளங்கள் அனைத்தையும், கலை மேன்மையையும், இறைவன் பெருமையையும் அழகாக எடுத்துக் கூறுகிறார். திருவையாற்றைச் சுற்றி காவிரியின் கிளை நதிகள் பாய்ந்து நீர்வளம் மிக்கதாகச் செய்வதாகக் குறிப்பிடுகிறார். இவை எல்லாவற்றையும் விட அப்பர் பெருமான் தான் இறக்கும்போது "சிவாய நம:" என்னும் பஞ்சாக்ஷரத்தைத் தம் உள்ளத்தில் தோன்ற அருள் புரிய வேண்டுமென்கிறார்.

வாகீசப் பெருந்தகை கயிலை மலையைக் கண்டு சிவபெருமானைத் தரிசிக்க விரும்பி வடக்கு நோக்கி கால்கள் தேய நடந்து முடியாமல், பின் கைகளால் ஊன்றி நகரவும் கைகள் சிதைந்து போகப் பின் மார்பால் தவழ்ந்து செல்ல மார்பும் நைந்து போக, உடல் ஊன் கெட உருண்டு புரண்டு செல்லும்போது சிவபெருமான் ஓர் முதியவர் வடிவம் தாங்கி அவர் முன் தோன்றி, 'மானுடர் உடலோடு கயிலை செல்வது முடியாத செயல் என்பதைச் சொல்ல', கயிலை சென்று தரிசிப்பதன்றி, இவ்வுடல் கொண்டு மீளேன்' என்று உறுதி பூண்டார் அப்பரடிகள். அப்போது விண்ணிலிருந்து கேட்ட ஒலி "நாவினுக்கு அரசனே! எழுந்திரு!" எனச் சொல்ல, நாவுக்கரசர் எழுந்து "ஐயனே! கயிலையில் நின்ற நின் கோலத்தை நான் தொழும்படி அருள்புரிவீராக!" என்றார். "அம்முறைமை திருவையாற்றில் காண்" என்று பரமேஸ்வரன் குரல் வந்தது. மகிழ்ந்த அப்பர் பெருமான் எழுந்திருந்து அங்கிருந்த குளத்தில் மூழ்கி ஐந்தெழுத்தை ஓதிப்பின் வெளியெழுந்த போது, தான் திருவையாற்றில் எழுந்து நிற்பதையும், எதிரே சிவபெருமான் அம்மையுடன்கூடி ரிஷபத்தின் மீது எழுந்தருளியிருந்து கயிலைக்காட்சி கொடுக்க, சிரம் மேல் கரம்கூப்பித் தொழுது மனமுருகிப் பாடினார்.


திருநாவுக்கரசர் திருவையாற்றில் கைலைக் காட்சியைக் கண்டு பாடிய பதிகம் இது.

மாதர்ப் பிறைக் கண்ணியாளை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந்து ஏத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது
காதன் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

போழிளம் கண்ணி யினானைப் பூந்துகி லாளோடும் பாடி
வாழியம் போற்றியென்று ஏத்தி வட்டமிட்டு ஆடவருவேன்
ஆழி வலவனின் றேத்தும் ஐயாறடை கின்றபோது
கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

எரிப்பிறைக் கண்ணியினானை ஏந்திழை யாளொடும் பாடி
முரித்த இலயங்களிட்டு முகமலர்ந் தாடா வருவேன்
அரித் தொழுகும் வெள்ளருவி ஐயாறடைகின்ற போது
வரிக்குயில் பேடையோடாடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

பிறையிளங் கண்ணியினாளைப் பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயிலாலும் ஐயாறடைகின்ற போது
சிறையிளம் பேடையோடாடிச் சேவல் வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

ஏடு மதிக்கண்ணியானை ஏந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற ஐயாறடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

தண்மதிக் கண்ணி யினானைத் தையல் நல்லளோடும் பாடி
உண்மெலி சிந்தையனாகி உணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறைகின்ற ஐயாறடைகின்ற போது
வண்ணப் பகன்றிலோடாடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி
வடிவொடு வண்ண மிரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்குங் கழலான் ஐயாறடைகின்ற போது
இடி குரல் அன்னதொர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

விரும்பு மதிக் கண்ணியானை மெல்லியலாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை எழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி யுந்தும் ஐயாறடைகின்ற போது
கருங்கலை பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

முற்பிறைக் கண்ணியினானை மொய்குழ லாளொடும் பாடிப்
பற்றிக் கயிற்றுக் கில்லேன் பாடியும் ஆடா வருவேன்
அற்றருள் பெற்று நின்றாரோடு ஐயாறடைகின்ற போது
நற்றுணைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

திங்கள் மதிக்கண்ணியானைத் தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொ லெந்தை எனக்கினி யென்னா வருவேன்
அங்கிள மங்கைய ராடும் ஐயாறடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப் பரந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

வளர்மதிக் கண்ணியி நானை வார்குழலாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிக் கின்றேன்
அளவு படாததோர் அன்போடு ஐயாறடைகின்ற போது
இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.


இந்தப் பாடலை சிறந்த நாவலாசிரியரான 'கல்கி' அவர்கள் தனது "சிவகாமியின் சபதம்" எனும் நெடுங்கதையில் சிவகாமி எனும் நடனப்பெண் சிவபெருமானின் அருளொன்றே உள்ளத்திற்கு ஊக்கமும் உறுதியும் தருவது என்று பாடுவது போலவும், வாழ்க்கையில் புதிய பாதையை நிர்ணயித்துக் கொண்டது போலவும் மிக அருமையாக அமைத்திருக்கிறார். அது போலவே மேலும் சில தேவாரப் பாடல்களையும் சிவகாமி பாடுவதாகத் தன் கதையில் அமைத்திருப்பது மிகவும் சிறப்பு.

இறைவன் திருவையாற்றில் அப்பருக்கு கயிலைக் காட்சியை வழங்கியருளியதை ஒவ்வோராண்டும் ஆடி அமாவாசை தினத்தன்று இத்தலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அதுபற்றிய செய்திகளை இவ்வாலய திருவிழாக்கள் எனும் தலைப்பில் பார்க்கலாம்.

சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்

இனி சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இங்கு ஏற்பட்ட அனுபவத்தையும் இப்போது பார்ப்போம். சுந்தரர் சேரமான் பெருமாள் நாயனாருடன் மலை நாட்டுக்குச் செல்லும் வழியில் திருவையாற்றையடுத்த திருக்கண்டியூர் வந்து பிரம்மசிரக்கண்டீசரைத் தரிசிக்கிறார். அங்கிருந்து ஆலயத்துக்கு வெளியே வந்த போது தொலை தூரத்தில் திருவையாற்று கோபுரம் தெரியக் கண்டார். உடன் வந்த சேரமான் பெருமாள் அங்கு சென்று வழிபடலாம் என்று கூற இருவரும் காவிரிக் கரையை அடைகின்றனர். அப்போது காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. என்ன செய்வோம், இறைவா, தங்களை தரிசிக்க இயலாமல் இந்த ஆறு இப்படி தடைசெய்கின்றதே என்று: "பரவும் பரிசொன்றறியேன் நான், பண்டே உம்மைப் பயிலாதேன்" எனும் பாடலைப் பாடுகின்றார். இறைவர் மனமிரங்கி காவிரி வெள்ளம் விலகி வழிவிட சுந்தரர் அவ்வழியே சென்று ஐயாறப்பரை தரிசித்தார். சுந்தரர் ஆற்றின் தென் கரையில் நின்றுகொண்டு பதிகம் பாடிய பொழுது "ஐயாறடிகளோ" என்று விளிக்க, வடகரையில் எழுந்தருளியிருக்கும் விநாயப்பெருமான் அவருக்கு விடையிறுக்கும் விதமாக பதில் ஓலமிட்டதாகவும், அதுமுதல் அவருக்கு 'ஓலமிட்ட விநாயார்' என்று பெயர் வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இந்த ஓலமிட்ட விநாயகர் சந்நிதியை ஆலயத்தின் தெற்குக் கோபுர வாயிலில், ஆட்கொண்டார் சந்நிதிக்குப் பக்கத்தில் இப்போதும் தரிசித்து வழிபடலாம்.

மாணிக்கவாசகர் திருவாசகப் பாடல்

மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்தில் குறிப்பிடும் இந்தப் பகுதி படித்து இன்புறத்தக்கது.

"கையார் வளைசிலம்பக் காதார் குழையாட
மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச்
செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை யெங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்கா ணம்மானாய்"

கையில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒலிக்கவும், காதில் அணிந்திருக்கும் தோடுகள் அசையவும், கருமையான கூந்தல் புரளவும், அணிந்துள்ள மலர்களிலிருந்து தேன் பெருகவும், அதை நாடிய வண்டுகள் ரீங்காரமிடவும் செய்கின்றன. சிவந்த நிறமுடையவனை, வெண்ணீறு அணிந்தவனை, நெருங்கிப் பழகுவோராலும் முழுதும் அறிந்துகொள்ள முடியாதவாறு ஆழ்ந்த இயற்கை நடைமுறைத் திட்டத்தை உடையானை, எங்கும் நிறைந்திருப்பவனை, அன்பர்க்கு மெய்ப்பொருளாய் இருப்பவனை, அன்பர் அல்லாதார்க்கு இருந்தும் இல்லாதவன் போன்றவனை, அறிவுப் பொருளை, திருவையாற்றில் எழுந்தருளியிருப்பவனைப் பாடி அம்மானை ஆடுவோமாக!

இது எட்டாம் திருமுறையாக விளங்குகின்றது. இவர்கள் தவிர அருணகிரிநாதர், ஐயடிகள் காடவர்கோன் தன் 11ஆம் திருமுறையில், பட்டினத்தடிகள், ஆகியோரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். 'திருவையாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி' எனும் பாடலிலும் திருவையாற்றுப் பெருமை பேசப்படுகின்றது.

திருவையாற்றின் சிறப்புக்கு மகுடமாக விளங்குவது இங்கு நடைபெறும் "சப்தஸ்தானம்" என்று வழங்கும் ஏழூர் திருவிழாவாகும். திருவையாற்றைச் சுற்றிலும் அமைந்துள்ள ஏழு ஊர்கள், அதாவது திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய இவ்வேழூருக்கும் உலா வரும் சப்தஸ்தானத் திருவிழா சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. திருநந்தியெம்பெருமான் திருமழபாடியில் நடைபெற்ற திருமணத்தையடுத்து சுயம்பிரகாசை யம்மையோடு வெட்டிவேர் சிவிகையில் திருவையாறு வந்து, இங்கிருந்து ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியோடு அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிப் பல்லக்கிலும் இந்த ஏழு ஊர்களுக்கும் சென்று, அந்தந்த தலமூர்த்திகளோடு சேர்ந்து ஏழு ஊர்களுக்கும் வலம் வரும் காட்சியே சப்தஸ்தான விழாவாகும். இத்திருவிழாக் காலத்தில் திருவையாறு மக்கள்வெள்ளத்தில் மூழ்கிப் போகும். மற்ற திருவிழாக்கள் பற்றியும் ஆலயத்தைப் பற்றியும் பிறிதொரு பகுதியில் பார்ப்போம்.

ஐயாறப்பர் ஆலயம் எழுந்த வரலாறு

வரலாற்றுச் செய்திகளின்படி இந்த ஆலயம் முதன்முதலில் கரிகால்பெருவளத்தான் எனும் புகழ்மிக்க சோழமன்னனால் கட்டப்பட்டது என்பது தெரிகிறது. கல்லணையைக் கட்டியவனும் இந்த கரிகால்வளவன்தான். அவனுடைய காலத்திற்குப் பிறகு பல்வேறு மன்னர்கள் குறிப்பாக பாண்டியர்கள், பல்லவர்கள், முத்தரையர்கள், நாயக்க மன்னர்கள், மராட்டிய அரசர்கள் என்று பலராலும் பல்வேறு காலகட்டத்தில் புதுப்பிக்கப்பட்டும், விரிவுபடுத்தப்பட்டும் வந்திருக்கிறது. திருத்தருமையாதீனம் இக்கோயிலுக்குப் பல்வேறு திருப்பணிகளைச் செய்துகொண்டு வருகிறார்கள். தற்போதும் 2009ம் ஆண்டு ஜுலை மாதம் இவ்வாலயத்தின் திருப்பணிக்கான தொடக்க பூஜைகள் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் தலைமையில் இவ்வாலயத்தில் நடைபெற்றது. சுமார் 5 கோடி ரூபாய் செலவில் எல்லா திருப்பணிகளையும் ஓராண்டு காலத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டமிட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். திருப்பணியில் பங்குபெற பலரும் முன்வந்திருக்கிறார்கள்.

சோழப்பேரரசன் கரிகால் பெருவளத்தான்

4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப்பேரரசன் கல்லணை கட்டிய கரிகால்பெருவளத்தான் காடுகளை அழித்து நாடுகளை உருவாக்கினான். கல்லணை கட்டி காவிரியின் கரை உயர்த்தி நாட்டை வளப்படுத்தியவன். இவன் காடாக இருந்த இந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது இவனது தேர் பூமியில் அழுந்தி நகரவில்லை. எவ்வளவு முயன்றும் பயனளிக்காத நிலையில் இந்த இடத்தில் ஏதோவொரு சக்தி ஈர்க்கிறதென்று உணர்ந்து, காட்டை அழித்துப் பூமியை அகழ்ந்து பார்த்தான். அங்கே சிவலிங்கம், சக்தி ஆதிவிநாயகர், முருகன், சப்தகன்னியர், சண்டர், சூரியன் ஆகிய திருவுருவங்களும் யோகி ஒருவரின் சடைகள் பரந்து விரிந்து புதைந்து வேரூன்றி கிடப்பதையும் கண்டான். மேலும் அகழ்ந்து பார்க்க அங்கு நியமேசர் எனும் அகப்பேய்ச் சித்தர் நிஷ்டையில் இருப்பது கண்டு மெய்விதிர்ப்பெய்தி அவர் காலடியில் வீழ்ந்து வணங்கினான்.

அவர் கரிகாலன்பால் இரக்கம் கொண்டு, இங்கு தேவர்களும் நந்தீசரும் வழிபட்ட மகாலிங்கமும் மற்றைய மூர்த்தங்களும் இருக்கின்றன; இவற்றிற்கு ஓர் கோயில் எடுப்பாயாக எனக் கூறி எவராலும் வெல்ல முடியாத தண்டமொன்றையும் அளித்து, கோயில் கட்டுவதற்கான பொன் முதலான பொருட்கள் நந்தியின் குளம்படியில் கிடைக்குமெனவும் அருள் புரிந்தார். அவ்வாறே கரிகால் சோழன் சிறப்பாக ஆலயத் திருப்பணி செய்து, குடமுழுக்கு செய்து, நிவந்தங்களும் அளித்தான்.

கரிகால் சோழனுக்கு எல்லாம் வல்ல சிவபெருமானே சித்தர் வடிவில் தோன்றி சுயம்பு வடிவமாகத் தான் இருக்கும் இடம் காட்டி மறைந்தார். இவ்வாலய கர்ப்பகிருகத்தின் முதல் பிரகாரத்தில் சிவபெருமானின் விரிசடை படர்ந்து கிடப்பதால் இதனை மிதிக்கக்கூடாது என்ற வழக்கம் இன்றும் இருக்கிறது. செம்பியன் எனும் இந்த சோழனுடைய பெயரே மருவி செப்பேச மண்டபம் என ஆயிற்று.

திருப்பணி செய்த ஏனைய மன்னர்கள்

பிறகு கி.பி. 825-850 தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் காலத்திற்கு முந்தைய காலத்தில் நடைபெற்ற திருப்பணியின்போது ஐயாறப்பர் எழுந்தருளியுள்ள கருவறை, துவாரபாலகர், யாளித்தூண்கள் ஆகியவை மாற்றியமைக்கப்பட்டன.

பின்னர் 982இல் வேங்கி நாட்டு விமலாதித்த தேவர் இதனைப் புதுப்பித்து மகாதேவர்க்குப் பல அணிகலன்களை வழங்கியுள்ளார். 1006இல் புகழ்மிக்க முதலாம் ராஜராஜ மன்னர் (985-1014) மனைவியான ஒலோகமாதேவியார் "வடகைலாயம்" எனும் 'ஒலோகமாதேவீச்சரத்தை' எழுப்பி பல உற்சவ மூர்த்திகள் விக்கிரகங்களை அளித்திருக்கிறார். பின்னர் முதலாம் இராஜேந்திர சோழன் (1014-1042) மனைவியான பஞ்சவன்மாதேவியார் 'தென்கைலாயம்' கோயிலை அமைத்தார்.

அடுத்து, கிருஷ்ணராஜ உடையாரால் இக்கோயிலின் திருச்சுற்று மாளிகை எடுக்கப்பெற்றது. பிறகு 1118-1135இல் இருந்த விக்கிரம சோழன் காலத்தில் மூன்று, நான்காம் திருச்சுற்றுகளும், மதில், கீழைக்கோபுரம் எடுக்கப்பட்டன. வடகிழக்கில் நூற்றுக்கால் மண்டபம் அடிப்பீடம் வரை அமைக்கப்பட்டது. கி.பி. 1381இல் சடையவர்ம சுந்தர பாண்டியன் ஆட்சிக்காலத்தில், வீரசிரவண உடையார் காலத்து செந்தலைக் கருப்பூர் கச்சிவீரப்பெருமான் மகனால் இக்கோயில் திருமண்டபத்தின் மதில் நேர் குலைந்து சீர்திருத்தம் பெற்றது. கி.பி. 1530இல் அச்சுதப்ப நாயக்க மன்னர் நின்றுபோன நூற்றுக்கால் மண்டபத்தை 144 தூண்களுடன் எழுப்பி முடித்தார். அவர் காலத்து இடைமருதூர் ஆனையப்பப் பிள்ளையாலும், அவர் தம்பி வைத்தியநாதராலும் மேலக் கோபுரம், முதற் பிரகாரம், தெற்குக் கோபுரம், திருக்குளம், குதிரை பூட்டிய தேர்மண்டபங்கள் ஆகியவை எடுக்கப் பெற்றன.

1784இல் காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்ப முதலியார் மூன்றாம் பிரகார முகப்பு மண்டபத் திருப்பணி செய்துள்ளார். அவரும் அவரது இரு மனைவியருடைய திருவுருவங்களும் ஒரு தூணில் காணப்படுகின்றன. மூன்றாம் சுற்றிலுள்ள கிழக்கு உள்கோபுரம் விக்கிரம சோழனால் கட்டப்பட்டது.

1971இல் திருக்கயிலாய பரம்பரை திருத்தருமையாதீனம் 25ஆவது குருமகா சந்நிதானம் கயிலைக் குருமணி ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களால் திருக்கோயில் முழுவதும் செப்பமிட்டுத் திருப்பணி முடிக்கப்பட்டது. 31-3-1971இல் திருக்குடமுழுக்கு நடைபெற்றது.

ஐயாறப்பர் ஆலயம் - கிழக்கு ராஜகோபுரம்.

ஐயாறப்பர் ஆலய இராஜ கோபுரம் வானளாவி உயர்ந்து ஊருக்கே அழகு செய்கிறது. கும்பகோணத்திலிருந்து வந்து சேரும் சாலை கீழ வீதியில் வந்து சேருகிற இடத்திற்கு நேரே அமைந்துள்ளது இந்த ராஜ கோபுரம். சந்நிதித் தெரு, கீழவீதியோடும், குடந்தை சாலை பிரியும் இடத்திலும் தேரடி எனும் தேர்கள் நிறுத்தி வைக்கப்படும் இடம் உள்ளது. திருவையாற்று ராஜகோபுரம் தவிர இங்கு மேலும் ஏழு கோபுரங்கள் உண்டு. ராஜகோபுரமே முக்கியமான கோபுரம் மட்டுமல்லாமல், மற்ற கோபுரங்களைக் காட்டிலும் உயரமாகவும், எடுப்பாகவும் அமைந்திருக்கும். இந்த கோபுரம் ஏழு நிலைகளை உடையது. இக்கோபுரத்தின் கீழ்ப்பகுதி கருங்கற்களாலும், மேற்பகுதி செங்கல் சுதை வேலைப்பாடு களாலும் ஆனது. இங்கு அதிக அளவில் சுதைச் சிற்பங்கள் இருக்கின்றன. கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள கோஷ்டங்களில் கீழ்புறம் விநாயகர், மயில்வாகனம் கற்சிற்பங்களும், மேற்புறத்தில், லிங்கோற்பவர் சிற்பமும் காணப்படுகின்றன. பாற்கடலில் அமிழ்தம் கடையும் காட்சியும், சிவபெருமானின் ஊர்த்துவ தாண்டவ காட்சியும், காளியின் நடனம், நந்தி மேளம் வாசித்தல், திருமால் தாளமிடல், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகியோர் வணங்கும் காட்சி இவையெல்லாம் சுதைவடிவில் காணக்கிடைக்கின்றன. இவை தவிர, சரப மூர்த்தி, காலசம்ஹார மூர்த்தி, பிக்ஷாடனர், சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி, நடராஜர் ஆகிய சிற்பங்களும் உண்டு. தென்புறம் ஒவ்வோர் அடுக்கிலும் தக்ஷிணாமூர்த்தி சிற்பம் இருக்கிறது. மேல்புறத்தில் திருமால் தொடர்புடைய பல அவதார சுதைச் சிற்பங்கள் இருக்கின்றன. வடபுறம் ஒவ்வோர் அடுக்கிலும் பிரம்ம தேவனின் காட்சியைக் காணலாம். இந்த கோபுரம் 16, 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். கிழக்கு நோக்கியுள்ள ராஜகோபுரத்தினுள் நுழைந்து ஆலயத்திற்குள் போகும் வாயிலில் வலதுபுறம் திரும்பினால் பெரிய நூற்றுக்கால் மண்டபம் அமைந்துள்ளது. விசாலமான ஆலயத்தின் வெளிப் பகுதி வழியாக அந்த மண்டபத்திற்குள் நுழைவோமானல் அங்கு பழனியாண்டவரை தரிசிக்கலாம். இந்த முதல் கோபுரத்தையும், அடுத்த இந்த விசாலமான பகுதியையும் பார்த்துவிட்டு, ராஜகோபுரத்துக்கு நேராக உட்புறம் உள்ள இரண்டாம் கோபுர வாயிலில் நுழையலாம்.

கிழக்கு இரண்டாம் கோபுரம்.

இந்த இரண்டாம் கோபுரம் அழகிய வேலைப்பாடுகள் எதுவுமின்றி எளிமையாகத் தோன்றுகிறது. கோபுரத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் சிற்பம் காணப்படுகின்றன. பெரிய ராஜகோபுரம் கட்டப்படுவதற்கு முன்னதாகவே இந்த கோபுரம் கட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டாம் கோபுரத்தைக் கடந்தால் ஒரு சிறிய மண்டபம். இந்த மண்டபத்தைக் கடந்து போனால் இடப்புறமாக சூரிய புஷ்கரணி எனும் அழகான திருக்குளத்தைக் காணலாம்.

தெற்கு கோபுரமும் ஆட்கொண்டார் சந்நிதியும்.

சூரிய புஷ்கரணியைக் கடந்து தென்புறம் திரும்பினால் தெற்கு கோபுரத்துக்குச் செல்லும் பாதையும், அங்கு ஆட்கொண்டார் சந்நிதி, ஓலமிட்ட விநாயகர் சந்நிதி இவற்றைக் காணலாம். ஐயாறப்பர் ஆலயத்தின் தென்புறம் மூன்றாம் பிரகாரத்தில் ஒரு சிறுகோபுர வாசலும், அதனைத் தொடர்ந்து நேர் எதிரே சற்று தூரம் தள்ளி தெற்கு வீதியில் (கடைவீதியில்) தெற்கு கோபுரமும் காணலாம். இந்த கோபுரவாயிலில் உள்ள துவாரபாலகரே ஆட்கொண்டார் எனப்படுகிறார். இவரைப் பற்றிய வரலாற்றை வேறொரு இடத்தில் பார்க்கலாம். இந்த ஆட்கொண்டார் சந்நிதி வாயிலில் கடைத்தெருவில் ஒரு வேலியிட்ட பள்ளம் காணலாம். இதில் எப்போதும் தழல் இருந்து கொண்டிருக்கும் பக்தர்கள் அருகிலுள்ள கடைகளில் குங்கிலியம் வாங்கி இந்த அக்கினி குண்டத்தில் போடுகிறார்கள். இது எப்போதும் புகைந்து கொண்டிருக்கும்.

ஆட்கொண்டார் சந்நிதிக்குச் செல்லும் பாதையைத் தாண்டி மேற்கே போனால் அங்கு இடப்புறம் அதாவது தென்புறமாக இறையனார் அப்பருக்குக் கயிலை காட்சியருளிய தக்ஷிண கயிலாயம் எனும் ஆலயத்தைப் பார்க்கலாம்.

தென்கயிலாயம்.

இந்த தென் கயிலாயத்தில் அர்த்த மண்டபம், மகா மண்டபம், கருவறை எனும் மூன்று பிரிவுகளைக் காணலாம். நுழைவாயிலில் மூன்று நிலை கோபுரமொன்றைக் காணலாம். இவ்வாலயத்தைச் சுற்றி நந்தவனம், பூக்கள் நிறைந்த செடிகளோடு காட்சி தருகின்றது. அக்காலத்தில் மன்னர்கள் மட்டுமல்ல, பட்டத்து ராணிமார்களும் தங்கள் பங்குக்குத் தங்கள் சொத்திலிருந்து பொன்னும் பொருளும் கொடுத்து சில ஆலயங்களை நிர்மாணித்திருக்கின்றனர். அப்படி இவ்வாலயத்தின் வடபுறமுள்ள பிரகாரத்தில் இராஜராஜ சோழனுடைய மனைவியாகிய தந்திசக்திவிடங்கியரான லோகமாதேவியார் நிர்மாணித் திருக்கிறார். தென்புறமுள்ள ஆலயத்தை அவருடைய குமாரனான ராஜேந்திர சோழனுடைய மனைவியார் பஞ்சவன்மாதேவியாரால் அமைக்கப்பட்டது. இங்குள்ள இறைவனது திருப்பெயர் பஞ்சநதிவாணன். அம்பாள் திருப்பெயர் அஞ்சலை. ஒரு கல்வெட்டுச் செய்தியின்படி ஒருகாலத்தில் இங்குள்ள திருவுருவங்கள் மறைந்து கிடந்தனவென்றும், அவற்றை வானவன்மாராயன் என்பவன் வெளிப்படுத்தினான் என்றும் கூறப்படுகின்றது. தென்கயிலாய கோபுரத்தின் முகப்பில் மன்னன் ஒருவன் தன் இரு தேவியருடன் வணங்கும் நிலையிலொரு சிற்பம் இருக்கிறது. இம்மன்னன் நாயக்க மன்னர்களில் ஒருவனாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அந்த நாயக்கமன்னன் இவ்வாலயத்தை புதுப்பித்துத் திருப்பணி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தென் கயிலாயத்தில் அழகிய அப்பர்பெருமானின் திருவுருவச் சிலையொன்றும் இருக்கிறது.

மேலைக் கோபுரம்.

இக்கோயிலின் மேலைக்கோபுரம் மேற்கு மடவளாகம் வழியாக உள்ளே வருவதற்கென்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக உள்ளே நுழைந்ததும் நேராக மதிற்சுவர்தான் இருக்கிறது. இடப்புறம் வழியாக வடகைலாயம், வலப்புறம் சென்றால் தென் கயிலாயமும் பிரகாரம் வழியாகச் செல்ல வழி இருக்கிறது. இது இடைமருதூர் ஆனையப்பப் பிள்ளையாலும், அவர் தம்பி வைத்தியநாதராலும் கட்டப்பட்டது. மேலக் கோபுரம் 18ஆம் நூற்றாண்டில் சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது பாண்டியர்களால் சீரமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சுதைச் சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. இங்கு மருது பாண்டியரின் கல்வெட்டு ஒன்றையும் காணலாம்.

வடகயிலாயம்.
தொடர்ந்து வெளிப்பிரகாரத்தின் வழியாக வடக்கே சென்று திரும்பினால் வடகயிலாயம் எனும் உலோகமாதேவீச்சுரம் கோயில் உள்ளது. இக்கோயில் முதலாம் ராஜராஜசோழனின் மனைவியாரான லோகமாதேவியாரால் கட்டப்பட்டது. இந்த ஆலயம் எழுப்பித்த வரலாற்றை வரலாற்றுத்துறை, கல்வெட்டுத்துறை ஆராய்ச்சியாளரும் தஞ்சை சரஸ்வதிமகால் நூலகத்து அதிகாரியுமாக இருந்த டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். மன்னன் ராஜராஜசோழன் பெருவுடையார் ஆலயம் கட்டிய காலத்தில் பொன்னால் ஒரு பசுமாட்டின் சிலாவடிவமொன்று அமைத்து அதன் உட்பகுதி வெற்றிடமாக வைத்து அதன் வாய்வழியாக அரசனும் அவன் குடும்பத்தாரும் உட்சென்று அங்கிருந்து அந்தப் பசு பிம்பத்தின் பிரஷ்ட பாகம் வழியாக வந்து தன் பிறவி நீங்க ஒரு யாகம் செய்ததாகவும், அதன்பின் அந்தப் பசுவின் உருவிலிருந்த பொன்னை உருக்கி பல்வேறு ஆலயங்களுக்கும் தானமாகக் கொடுத்ததாகவும் செய்தி இருப்பதாகக் கூறியிருக்கிறார். மாமன்னன் தஞ்சையில் பெருவுடையார் ஆலயம் எழுப்பிய போது அதற்கான முழு செலவையும் மன்னனே ஏற்றுக் கொண்டதனால், அவனது தேவியார் தன்னுடைய அணிகலன்கள், தங்கம் முதலான உலோகங்களைத் தன் பங்காக அளித்து இவ்வாலயத்தை எழுப்பியதாகத் தெரிகிறது. அதுபோலவே பின்னாளில் ராஜேந்திர சோழனின் மனைவி தென் கயிலாயத்தை எழுப்பியிருக்கிறார். இதிலிருந்து மன்னர்கள் மட்டுமல்ல பட்டத்து அரசிகளும் தங்கள் பங்காக இதுபோன்ற பல திருப்பணிகளைச் செய்திருப்பது தெரியவருகிறது. வடக்கு வெளிப்பிரகாரத்தை ஒருமுறை சுற்றி இரண்டாம் கோபுரத்துக்கும் அதனையடுத்த மூன்றாம் கோபுரமான விக்கிரம சோழன் கோபுரத்தை அடைவதற்காக இடைப்பட்ட மண்டபத்தை அடையலாம்.

விக்கிரம சோழன் கோபுரம்.

இரண்டாவது கிழக்கு கோபுரத்துக்கும் மூன்றாவது கோபுரத்துக் குமிடையேயுடைய மண்டபத்தைத் தாண்டி விக்கிரம சோழன் கோபுரம் இருக்கிறது. இதனைத் தாண்டினால் மூன்றாவது பிரகாரத்தின் கிழக்கு சந்நிதி வாயிலுக்கு வந்து சேரலாம். இந்த கோபுரம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. இதன் இரு புறங்களிலும் துவாரபாலகர்களின் பெரிய சிற்பங்கள் காணக்கிடைக்கிறது. இதன் மேல்தளத்தில் திக்பாலகர்களின் சிற்பங்கள் உள்ளன. இக்கோபுரம் விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்டதால் இதற்கு அவன் பெயரிடப்பட்டதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. இந்த கோபுரத்தைக் கடந்து உட்புறமுள்ள மூன்றாவது பிரகாரத்தில் நேர் எதிரே தங்கக்கவசம் சாத்திய கொடிமரம் காணலாம். அதன் முன்புறம் பலிபீடம். இடப்புறம் திரும்பி நடந்தால் பிரகாரத்தின் தென்புறம் ஒரு சிறு கோபுரம் காணப்படுகிறது. இதன் வழியாகத்தான் தென்கயிலாயத்திற்கு இறைவன் அருள்புரிய எழுந்தருள்வார். அந்த நேரத்தில் மட்டும்தான் இந்த வாயில் திறக்கப்படும், மற்றநாட்களில் இது மூடியே இருக்கும். கயிலாயத்தில் இறைவன் தென்புறமாகத்தான் அருள்புரிவாராம், அதனால்தான் இங்கும் இந்த தென்புற வாயில் பயன்படுகிறது. இந்த பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் நின்று குரல் கொடுத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும். இங்கு வரும் பக்தர்கள் இங்கு நின்று 'ஐயாறப்பா" என்று குரல் கொடுக்க அது பலமுறை திரும்பத் திரும்ப எதிரொலிப்பதை இன்றும் கேட்கலாம். 'ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' எனும் வாகீசப்பெருமானின் வாக்கிற்கேற்ப இங்கு ஆலயம் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் வியப்பான செய்தி. இந்த ஆலயத்தின் சிறப்புக்களில் இதுவும் ஒன்று.

இரண்டாம் பிரகாரத்தைச் சுற்றிவரும் வழியில் சோமாஸ்கந்தருக்கு ஒரு தனி ஆலயம் உள்ளது. இதன் மேல்புறம் ஜெப்பேச மண்டபம் எனும் இடம் இங்கு பஞ்சபூதலிங்கங்கள், சப்தமாதாக்கள், விநாயகர், நவக்கிரகங்கள் உள்ளனர். இச்சுற்றின் திருமாளிகைப்பத்தி பார்ப்பதற்குரியது. சுவர்களில் புராண ஐதிகச் சித்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. விநாயகர், தனுசு சுப்பிரமணியர், நடராஜர், சப்தஸ்தான மூர்த்திகள் உள்ளனர். ஜெப்பேச மண்டபம் எனும் இது முத்தி மண்டபம் எனவும் வழங்கப்படுகிறது. நவக்கிரகங்கள் இந்த மண்டபத்தில்தான் உள்ளது. நவக்கிரகங்கள் நின்றபடி ஐயாறப்பரை பூஜை செய்துகொண்டிருப்பதாக இங்கு அமைந்திருப்பதால், இங்கு நவக்கிரகங்களை வலம் வரும் வழக்கம் இல்லை. இங்கு சனிபகவான் சந்நிதியில் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வழிபட கிரக தோஷங்கள் நீங்கும். அது தவிர நவக்கிரஹத் தலங்களாக கீழ்கண்ட இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை முறையே:

சூரியன்: திருக்கண்டியூர், சூரியனார்கோயில்.
சந்திரன்: திங்களூர், திருப்பதி
செவ்வாய்: வைத்தீஸ்வரன்கோயில், பழனி
புதன்: திருவெண்காடு, மதுரை
வியாழன்: ஆலங்குடி, திருச்செந்தூர்
வெள்ளி: திருவரங்கம், திருநாவலூர்
சனி: திருநள்ளாறு, மதுரைகுச்சனூர்
இராகு: திருநாகேச்சரம், திருக்காளத்தி
கேது: கீழப்பெரும்பள்ளம், திருக்காளத்தி

இந்த முத்தி மண்டபத்தைவிட்டு வெளியே வந்தால் பிரகாரத்தில் நான்கு குழிகளைப் பார்க்கலாம். அவை நந்தியம்பிரானின் குளம்படியாகக் கருதப்படுகின்றன. கரிகால் பெருவளத்தான் இந்த ஆலயத்தை எழுப்புவதற்கு நியமேசர் எனும் அகப்பேய்ச் சித்தரால் தங்கம், வெள்ளி, வெல்லம், கருங்கல் ஆகிய பொருட்கள் கிடைக்கும்படி அவை அனைத்தும் நந்தியின் குளம்படியில் கிடைக்கும் என்றும் அருள் செய்தாராம். அப்படிக் கிடைத்த பொருட்களைக் கொண்டு கரிகால் சோழன் இந்தக் கோயிலை உருவாக்கியதாக வரலாறு. இந்தக் குழிகளை யாரும் மிதிப்பதில்லை என்பதால் வலம் வந்து தாண்டிச் செல்ல வேண்டும்.

சோழர்களுக்கு செம்பியன் எனும் பட்டப்பெயரும் உண்டு. எனவே கரிகால் சோழனால் கட்டப்பட்ட இந்த மண்டபம் "செம்பியன் மண்டபம்" எனப் பெயர் பெற்றது. கரிகால் சோழனும் அவனது மனைவியும் நிற்கும் அழகிய சிலா வடிவம் இம்மண்டபத் தூண்களில் காணப்படுகின்றன.

இந்த மண்டபம் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. காசிக்கு இணையானது. இங்குதான் சிலாத முனிவரின் குமாரர் ஜெப்பேசர் எனும் நந்திகேசுரர் மற்றும் பலரும் தியானம் செய்து சித்தியடைந்தார்களாம். ஜெப்பேசராகிய நந்திகேசுவரருக்கு ஐயாறப்பர் உபதேசம் செய்த இடமே இந்த முத்தி மண்டபம். இங்குதான் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் போன்ற அருளாளர்கள் ஜபம் செய்து சித்தியடைந்தார்கள். இங்கு உட்கார்ந்து அமைதியாகத் தியானம் செய்தால் ஐம்பொறிகள் கட்டுக்குள் வரும். ஐந்தெழுத்தை ஓதி புலனடக்கம் உண்டாகிப் பேரின்ப உணர்வு பெறலாம். இங்குள்ள தக்ஷிணாமூர்த்தியிடம்தான் திருமால் பஞ்சாட்சர உபதேசம் பெற்றாராம். அகத்தியருக்கும் உபதேசம் கிடைத்த இடம் இது. தியாகபிரம்மம் இம்மண்டபத்தில் அமர்ந்துதான் "நாத தனுமனுசம்" போன்ற பல கீர்த்தனைகளைப் பாடியருளினார். அவர் காலத்திய வாக்யேயக் காரரான கோபாலகிருஷ்ண பாரதியார் முதலானோர் இங்கு அமர்ந்து பாடல்களை இயற்றி யிருக்கிறார்கள்.

முத்தி மண்டபத்தையும் அங்கு எழுந்தருளியிருக்கும் மூர்த்தங்களையும் தரிசித்த பிறகு, பிரகாரத்திலுள்ள நான்கு குழிகளைத் தாண்டாமல் கடந்து வந்து மேற்புற பிரகாரத்தின் மத்தியில் இருக்கும் வேலவன் கோட்டத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தேவகுஞ்சரி மணாளனாம் முருகக் கடவுளை தரிசிக்கிறோம்.

இங்கிருந்து பிரகாரத்தின் வடக்குப் பகுதியிலுள்ள முச்சத்தி மண்டபம் காணலாம். இங்கு மலைமகள் (துர்க்கை) அலைமகள் (இலக்குமி) கலைமகள் (சரஸ்வதி) ஆகியோர் மூன்று சக்திகளாக இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி எனும் முச்சக்தியாக வீற்றிருப்பதால் முச்சந்தி மண்டபம் எனப்பெயர் பெற்றது. இங்குள்ள புனித தீர்த்தக் கிணறு தேவேந்திரன் கட்டளைப்படி விசுவகர்மா நிருவியதாகப் புராணம்.

அடுத்து இந்தப் பிரகாரத்தில் அமைந்திருப்பது சண்டேசர் சந்நிதி. சண்டேசர் சதா சிவத் தியானத்தில் இருப்பதால் இங்கு மெதுவாகக் கைதட்ட வேண்டும். அவரது தியானத்தைக் கலைக்கும்படி பெரும் ஓசை எழுப்புதல் கூடாது. இவரை வணங்கியபின் இரண்டாம் பிரகார சுற்று முடிந்து திருக்கோயில் மண்டபம் அடைகிறோம்.

தலவிருக்ஷம்.

இவ்வாலயத்தின் தலவிருக்ஷம் வில்வ மரம். மூன்று இதழ்களும், முக்குணமும் கொண்ட மரம் இது. முப்பிறவியின் பாவங்களையும் போக்கவல்ல தெய்வதாரு இந்த மரம். ஈஸ்வரனுக்கு அர்ச்சனை செய்ய உகந்த பத்ரம் இந்த வில்வ பத்ரம். சிறந்த மூலிகையாகவும் போற்றப்படும் இந்த வில்வ மரம் இங்கு உள்ளது.

ஐயாறப்பர் - மூலஸ்தானம்.

ஐயாறப்பர் கருவறையில் திருக்காட்சியருளும் சிவலிங்க தரிசனம் மிகவும் சிறப்பானது. இவர் சுயம்புமூர்த்தியாக உருவானவர். புற்று மண்ணால் ஆனவர். முற்காலத்தில் மக்கள் கல், உலோகம் இவற்றைப் பயன்படுத்தத் துவங்குவதற்கு முன்பு மரம். புற்று இவற்றை வழிபட்டார்களாம். எனவே புற்றாலான இறைவனது உருவை வழிபடுவது மிகத் தொன்மையானது எனலாம். புன்னைநல்லூர் மாரியம்மன்கூட புற்றாலான உருவம் தான். ஆகவே வரலாற்றில் மிக தொன்மையானது இந்த ஐயாறப்பர் மூலத்தானத்து சிவன். இவருக்கு வெள்ளிக் கவசமிட்டு தரிசனம் அளிக்கிறார். இந்த வெள்ளிக் கவசத்தில் பசுவின் உருவமும், அதன்மீது சூலமும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் காரணம் கொண்டே சுவாமிக்கு 'திரிசூலி' என்ற திருப்பெயர் உண்டு. இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருவது அப்பரடிகள் பாடியுள்ள 'திருப்பூவண' தேவாரப் பாடல்தான். அது இதோ:

"வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்,
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்,
காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்,
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்,
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்,
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே"

இந்தப் பாடலையும் அமரர் கல்கி அவர்கள் தனது 'சிவகாமியின் சபதம்' மூலம் சிவகாமி பாடிக்கொண்டு நடனமிடுவதாக எழுதி பிரபலப்படுத்தியிருக்கிறார் என்பதையும் நினைவு கூறலாம்.

திருவையாறு சிவலிங்கத்திற்கு அலங்காரங்கள் செய்து வழிபடும்போது மிக எழில் கொஞ்சக் காட்சியளிப்பார். இங்கு மூலவருக்கு, சிவலிங்கத்துக்கு அபிஷேகம் கிடையாது. புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகின்றது. அபிஷேகமெல்லாம் ஆவுடையாருக்கு மட்டுமே.

முதல் பிரகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி மிகச் சிறப்புடைய மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இந்தச் சுற்றிலேயே எல்லாப் பரிவார மூர்த்தங்களும், உமாமகேசர், சங்கரநாராயணர், பிரமதேவர் முதலிய மூர்த்தங்களும் உள்ளன. இந்த பிரகாரம் வலம் வருவதற்குரியதன்று. சிவபெருமான் சடாமுடி எங்கும் பரவியிருப்பதால் இந்த பிரகாரத்தை, அதாவது மூலஸ்தானத்தையடுத்த வெளிப்பிரகாரம் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியைத் தாண்டி செல்வதற்கில்லை. இவ்விடத்தை மிதிக்கக்கூடாது என்பதால் தக்ஷிணாமூர்த்தியைத் தரிசித்தவுடன் திரும்ப வந்துவிட வேண்டும்.

தக்ஷிணாமூர்த்தி சந்நிதி.

திருமூலர் தனது 'திருமந்திர'த்தில் குருவை இப்படி வணங்குகிறார்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த குரு தக்ஷிணாமூர்த்தியை இப்போது வணங்குவோம். இங்குள்ள தக்ஷிணாமூர்த்திக்கு ஸ்ரீ ஹரிகுருசிவயோக தக்ஷிணாமூர்த்தி என்று பெயர். பதினெண் தக்ஷிணாமூர்த்தி வடிவங்களுள் ஒன்று இது. வலது மேற்கரத்தில் கபாலமும், இடது புறத்தில் சூலமும் கீழ் வலது கரத்தில் சின்முத்திரையும் இடது கரத்தில் சிவஞானபோதமும், பாதத்தில் கூர்மம் (ஆமையின் வடிவமும்) அமைந்து அருள்புரிவதாக தருமையாதீன வரலாற்றுச் செய்தி கூறுகிறது. கருவறையின் தென்புறம் தக்ஷிணாமூர்த்தியின் சிலாமூர்த்தம் காணப்படுகிறது என்று சொன்னோமல்லவா? இந்த சிற்பம் ஏதோ காரணத்தால் சற்று சிதைவுற்று காணப்படுகிறது. இது ஒரு அழகான சிற்பம். இந்த தக்ஷிணாமூர்த்தியின் மேலே ஆலமரம், அதில் பாம்பு சிற்பம் காணலாம். ஆந்தையும் அணிலும், கிளியும், பல்லியும் காணப்படும். தக்ஷிணாமூர்த்தியின் ஜடாமகுடம், மார்பில் உபவீதம், வயிற்றில் உதரபந்தமும், இடையில் அணிந்த கச்சை, அக்கமாலை, அனலேந்திய கரங்கள், ஜடாமுடியில் மலர்கள், கழுத்தில் அணிகலன்கள், காலடியில் அரவம், மான்கள் இவை காணப்படுகின்றன. தக்ஷிணாமூர்த்தியின் காலடியில் ஆமை வடிவத்தைக் காணலாம். இந்த ஆமை தன் புலன்களையெல்லாம் தன்னுள் ஒடுக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றது. மனிதனும் தன் ஐம்புலன்களையும் ஒடுக்கி, மனத்தை ஒருமுகப்படுத்தி அறிவுக்கு அதிபரான தக்ஷிணாமூர்த்தியை, ஆலமரத்தினடியில் யோகநித்திரையில் இருக்கும் அற்புதனைக் கண்டு வணங்கி ஓசையெழுப்பாமல் திரும்ப வேண்டும்.

ஐயாற்று ஆடவல்லான்.

திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் அமர்ந்திருக்கும் ஆடல்வல்லான் செப்புத் திருமேனி சிலை சுமார் 4 அடி உயரமுள்ளது. ஆடவல்லான் தன் நான்கு கரங்களில் பின்னிரு கரங்களில் உடுக்கையும், தீப்பிழம்பும் தாங்கி, முன்னிரு கரங்களில் அபயஹஸ்தமும், கஜஹஸ்தமும் காட்டி, வலது காலை முயலகன் மீது ஊன்றி, இடது காலைத் தூக்கி ஆனந்தத் தாண்டவமிடும் தோற்றத்தில் காணப்படுகிறார். ஆடவல்லான் முடியிலுள்ள பிரபையில் 24 சுடர்கள் உள்ளன. இவை அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்தவைகளாகக் காணப்படுகின்றன. இறைவனது இருபுறங்களிலும் ஆறு விரிசடைகள் படர்ந்து காணப்படுகின்றன. அதில் கங்கையும், பாம்பும் இருக்கின்றன. முகத்தில் இளநகை காட்டி விளங்கும் இந்தச் செப்புத் திருமேனி கி.பி.12ஆம் நூற்றாண்டு சிலாவடிவமாக இருக்கலாம். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் பஞ்ச கிருத்தியத்தைக் காட்டும் இந்தச் சிலாவடிவம் காணக்கண் கோடி வேண்டும் எனலாம்.

மண்டபங்கள்.
துவஜஸ்தம்பம், பலிபீடம், நந்தியம்பிரான் மூர்த்தங்களைத் தாண்டி அமைந்துள்ள மண்டபங்கள் மிகச் சிறப்பானவை. தமிழ்நாட்டில் எல்லா ஆலயங்களிலும் இதுபோன்ற மண்டபங்கள் விஜயநகரப் பேரரசின் காலத்தில்தான் கட்டப்பெற்றிருக்கின்றன. பின்னாளில் தமிழகம் எங்கும் பரவி ஆட்சிபுரிந்த நாயக்க மன்னர்களும் இந்தத் திருப்பணியை இனிதே செய்துவந்திருக்கின்றனர். இவர்கள் செயல்பாட்டில் ஒரு சிறப்பு என்னவென்றால், புதிதாக ஆலயங்கள் கட்டுவதைத் தவிர்த்து, பழைய, சிதிலமான அல்லது அறைகுறையாக இருக்கும் ஆலயங்களின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு முடித்து வைத்திருக்கிறார்கள். செந்தலை எனும் ஊர் போன்ற இடங்களில், முகலாயர் படையெடுப்பினால் சிதிலமான ஆலயங்களில் கிடந்த இடிபாடுகளைக் கொண்டு முடிந்தவரை அவற்றில் சிலவற்றையாவது புதுப்பித்துக் கட்டியிருக்கிறார்கள். ஏற்கனவே இருந்த கோயில்களில் புதிய பகுதிகளையும் கட்டிமுடித்திருக்கிறார்கள். தென்னாட்டில் ஆலய புனருத்தாரணத்துக்கு நாயக்க மன்னர்களின் கைங்கரியம் மிக மிகச் சிறப்பானது, போற்றற்குரியது.

உற்சவ மண்டபம்.

சுவாமி சந்நிதியின் எதிரில் மூன்றாம் பிரகாரத்திலுள்ள மண்டபம் உற்சவ மண்டபம் எனப்படும். சப்தஸ்தான உற்சவத்தின்போது ஏழூர் சுவாமி முர்த்தங்களும் இந்த மண்டபத்தில்தான் எழுந்தருளப் பண்ணுவார்கள். இது மிகப்பெரிய மண்டபம். இதன் ஒருபுறம் இறைவன் சந்நிதி, மறுபுறம் கொடிமரம், நந்தியம்பிரான், பலிபீடம், மறுபுறம் தெற்கு வாயிலுக்குச் செல்லும் வழி, வடபுறம் சுவாமி புறப்பாட்டுக்கு அலங்காரம் செய்து ஆராதனை செய்யும் இடம். இந்த மண்டபத்தில்தான் திருக்கோயில் நிர்வாக அலுவலகம், வாகனங்கள், நூலகம், ஆகியவை அமைந்துள்ளன. சமீபகாலத்தில் இந்த மண்டபத்தின் உயரே, நவீன பிளெக்ஸ் போர்டில் சப்தஸ்தான உற்சவ காட்சிகள் படங்களாக அலங்கரிக்கின்றன. இவற்றைப் பல வியாபார நிருவனங்கள் செய்துகொடுக்க உதவியுள்ளன. இங்குதான் முன்காலத்தில் சதிர் எனும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. அதற்கேற்றவாறு தரையில் தாமரைப்பூ வடிவம் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

சொக்கட்டான் மண்டபம்.

ஐயாறப்பர் ஆலயத்தில் இறைவன் சந்நிதிக்கு முன்புறமுள்ள மண்டபம், சொக்கட்டான் மண்டபம் என வழங்கப்படுகிறது. இந்த மண்டபம் கி.பி.15ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டு விளங்குகின்றது. இதனையொட்டி சோமாஸ்கந்தர் மண்டபம். இதில் பல்வேறு செப்புத் திருமேனிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதனையடுத்து விளங்குவதுதான் முக்தி மண்டபம். இந்த மண்டபத்தால் இவ்வாலயத்திற்கு சிறப்பு உண்டு. மொத்தமுள்ள ஆலயங்களில் நாகப்பட்டினம், திருவையாறு, காசி இவை மூன்றில் மட்டுமே முக்தி மண்டபம் உண்டு. அதில் திருவையாறும் ஒன்று. விக்கிரமன் சோழன் கோபுரத்தையடுத்த மண்டபம் பச்சையப்ப முதலியார் மண்டபம் என்று பெயர்.

இந்த மண்டபம் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இதன் மையப் பகுதியில்தான் கமல பந்தவரி தாமரையிதழ் விரித்தாற்போலவுள்ள கருங்கல் தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் நாற்புறமும் பாதை அமைந்துள்ளது. இங்குதான் விசேஷ நாட்களில் தெய்வீகச் சொற்பொழிவுகள் நடைபெற்றதாக புலவர் செந்துறைமுத்து எழுதியுள்ள 'திருவையாறு' எனும் நூலில் கூறுகின்றார். சமீப சில ஆண்டுகளாக இந்த மண்டபத்தில் ஒவ்வோராண்டும் மகாசிவராத்திரியின் போது "நாட்டியாஞ்சலி" எனும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சிறந்த நடனக் கலைஞர்கள் தனியாகவும், குழுக்களாகவும் வந்து இறைவனுக்கு நடன அஞ்சலி நிகழ்த்துகிறார்கள். இந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நந்தியம்பிரானைத்தவிர, சுவாமி சந்நிதியின் மிக அருகில் நந்தியும் பலிபீடமும் அமைந்துள்ளன.

இந்த மண்டபத்தில் நூற்று எழுபத்தைந்துக்கு மேற்பட்ட தூண்கள் உண்டு. மண்டபத்தின் இடையே இரட்டைத் தூண்களும் அமைந்துள்ளன. இத்தூண்களில் யானைகளின் சிற்பங்களும், யாளி சிற்பங்களும் ஒன்றன்மீது ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளன. ஐயாறப்பர் சந்நிதியின் எதிரிலுள்ள அகண்ட நடுப்பகுதின் ஓரத்தில் அமைந்துள்ள தூண்கள் இரட்டைத் தூண்களாக இல்லாது மூன்று தூண்கள் ஒன்றுசேர்ந்தாற்போல அமைந்துள்ளன. இம்மண்டபத்திலிருந்து இறங்கிச் செல்வதற்குத் தென்புறத்திலும், கிழக்குப் புறத்திலும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

நூற்றுக்கால் மண்டபம்.

நாம் முன்பே எழுதியுள்ளபடி முதல் ராஜகோபுரத்தைத் தாண்டி உட்புறம் வந்து வடக்கு நோக்கிச் சென்றால் நான்காம் பிரகாரத்தில் ஒரு நூற்றுக்கால் மண்டபத்தைக் காணலாம். இந்த மண்டபத்தின் கடைசியில் தண்டபாணி ஸ்வாமி கோயில் கொண்டுள்ளார். இம்மண்டபத்தின் முகப்பில் தூண்களில் இராமபிரானும், தம்பி இலக்குவனும் சிற்பங்களாக அலங்கரிக்கின்றனர். அவற்றையடுத்து ஒரு தூணில் வீரனொருவன் ஒரு கையினால் தனது மீசையை முறுக்கிக்கொண்டு நிற்கும் சிற்பம் இருக்கிறது. அடுத்த தூணில் பைரவர் வில் அம்பு, கத்தி, கேடயங்களுடன் நான்கு திருக்கரங்களுடன் சிற்ப உருவில் காட்சி தருகிறார்.

இம்மண்டபத்தின் நடுப்பகுதியில் உள்ள தூண்கள் அதிகமாக இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தூண்களின் மேற்பகுதியில் சிம்மங்களும், அவற்றின் மீது உத்திரம் செல்ல, அதன் மீதி பொதிகையும் அமைந்து விளங்குகின்றன. மண்டபத்தின் பின்பகுதியில் உள்ள தூண்களில் இராமபிரான், காமன், கூந்தலை முடிந்துகொள்ளும் ஒரு பெண், இடையனொருவன் கோல் ஊன்றி முகம் மட்டும் தெரியுமாறு உடலைத் துணியால் மூடியபடி இருக்கும் சிற்பம், நடனமாடும் வீரன், பரதநாட்டியமாடும் பெண் ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த மண்டபத்தில் ஒரு அதிசய சிற்பம் இருக்கிறது. அது மாடு ஒன்றும், யானை ஒன்றும் சேர்ந்தமாதிரி இருக்கும் சிற்பம். இந்த சிற்பத்தில் மாட்டைக் கண்டால் யானை தெரியாது, யானையைக் கண்டால் மாடு தெரியாது. இப்படியோர் அதிசய சிற்பம் இந்த மண்டபத்தைச் சிறப்பு செய்கிறது.

இந்த மண்டபம் கி.பி.1118 - 1135 காலகட்டத்தில் விக்கிரம சோழனால் கட்டத் துவங்கி நின்று போய்விட்டது. கி.பி.1580இல் அச்சுதப்ப நாயக்க மன்னன் இதனைப் பூர்த்தி செய்து 144 தூண்களையுடையதாகக் கட்டினார். இங்குள்ள மேடை அமைப்பு ஐயாறப்பரின் திருக்கல்யாண மண்டபமாகவே அமைக்கப்பட்டாலும், ஐயாறப்பர் தமக்குத் திருமணம் செய்து கொள்ளாமல் அடியவர் திரு நந்திதேவருக்குத் தாமே முன்னின்று திருமணத்தை முடித்து, மணமக்களை ஏழூர் வலம் வரச் செய்த வரலாற்றை ஏழூர் திருவிழா எனும் தலைப்பில் பார்க்கலாம். எனவேதான் சித்திரைத் திருவிழா நந்திகேசுவரர் திருமணத்துடன் தொடங்குகிறது.

இந்தத் திருமண மண்டபத்தை மார்கழி மாதத் திருவாதிரை விழாவின்போது ஊஞ்சல் மண்டபமாகப் பயன்படுத்தி வந்தனர். அதாவது சுவாமி ஊஞ்சலில் அமர்ந்து திருவெம்பாவை உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும் டோலோற்சவமாக நடந்து வந்தது. எதிரில் உள்ள மயில் மண்டப மேடையில் தேவதாசியர் நாட்டியமாடினர். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு தம்பிரான் சுவாமிகள் பக்கத்திலிருந்த தண்டபாணி திருவுருவத்தை இங்கு பிரதிஷ்டை செய்தார். கார்த்திகைதோறும் இங்கு காவடி எடுத்தார். திருத்தருமையாதீனம் 8ஆம் பட்டத்திலிருந்த ஸ்ரீலஸ்ரீ அழகிய திருச்சிற்றம்பல தேசிக சுவாமிகள் (கி.பி.1680-1700) இத்திருக்கோயில் கட்டளை விசாரணையாக இருந்த காலத்தில் இத்தண்டபாணியை வழிபட்டுப் பல சித்திகளைப் பெற்றதாகக் கூறுகிறார்கள்.

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் பற்பல ஆலயங்களின் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. இந்த மண்டபத்தின் தூண்களில் இராமன், இலக்குவன், அனுமன் ஆகியோருடைய சிற்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது தவிர திருவையாறு கோயிலுக்கு நாயக்க மன்னர் ரதோஸ்தவப் பணி செய்திருப்பதாகவும், இன்றும் இந்த மன்னன் செய்தளித்த திருத்தேர் திருவையாற்றில் இருப்பதாகவும், அதில் மன்னன் இரகுநாத நாயக்கரின் மரச்சிற்பம் உருவங்கள் இருப்பதாகவும் கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், வரலாற்றாசிரியருமான குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் "தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு" எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

தேவாரப்பண் பாட மழை பொழிந்தது.

"ஐயாறகலாத செம்பொற்சோதியாம்" ஐயாறப்பரின் அருட்கடாட்சத்தால் நிகழ்ந்த ஓர் அற்புத நிகழ்ச்சி பற்றி "தருமைக் குருமணிகளின் அருள் வரலாறு" எனும் நூலில் காணப்படுகிறது. திருத்தருமையாதீனத்தில் 15ஆவது குரு மகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் கி.பி. 1842 முதல் 1858 வரை அருளாட்சி புரிந்திருந்த காலத்தில் கிரகங்களின் மாறுபாடுகள் காரணமாக மழை பெய்யாமல் நாடு நீரின்றி தவித்தது. ஆறு குளங்கள் வறண்டு கிடந்தன. மரம் செடி கொடிகளெல்லாம் வாட்டமுற்று பட்டுப் போயின. ஆலயங்களில் திருவிழாக்கள் நின்று போயின. மக்கள் உணவுக்கும் தண்ணீருக்கும் ஆலாய்ப் பறந்தனர். துன்புற்ற மக்களுக்கு இறைவனே கதி என்றெண்ணி மக்கள் திருத்தருமபுர ஆதினம் மகா சந்நிதானத்திடம் சென்று முறையிட்டனர். மக்களின் அவல நிலை கண்டு நெஞ்சம் பதைத்து, அவர்களுக்கு இரங்கி குருமகா சந்நிதானம் சொக்கநாதப் பெருமானுக்கு விசேஷ அபிஷே ஆராதனைகளைச் செய்து நெஞ்சம் நெக்குருக வழிபட்டார். திருநாவுக்கரசரின் திருவையாற்றுத் தேவாரப் பாடலான "புலனைந்தும் பொறிகலங்கி" எனும் மேகராகக் குறிஞ்சிப் பண்ணைச் சாரங்கி எனும் வாத்தியத்தில் பாடினார்கள். இறைவனின் அருள் சுரந்தது. வானம் கருத்து மேகங்கள் திரண்டு வந்து பெருமழை பெய்தது, மக்கள் உள்ளம் குளிர நீர்நிலைகள் நிறைந்து நாட்டு வளம் திரும்பியது. இந்த அதிசயத்தை எண்ணி எண்ணி மக்கள் வியந்து போனார்கள்.

இதுபோன்ற பிரிதொரு நிகழ்ச்சியும் தருமையாதீன குருமகா சந்நிதானமாக 14ஆவது பட்டத்தில் இருந்த ஸ்ரீலஸ்ரீ கந்தப்ப தேசிக சுவாமிகள் காலத்திலும் நடைபெற்றிருக்கிறது. இவர் 1840 முதல் இரண்டாண்டுகள் தருமையாதீன மகா சந்நிதானமாக இருந்திருக்கிறார். ஒரு முறை இவர் தென் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் போது திருநெல்வேலி நகரில் எழுந்தருளியிருந்தார்கள். அப்போது அந்தப் பகுதியில் மழை பொய்த்துப் போய் பயிர் பச்சையெல்லாம் தண்ணீர் இல்லாமல் அழிந்து போயிற்று. நீர்நிலைகள் எல்லாம் வறண்டு போயின. மக்கள் வருமானமின்றி மிகவும் துயருற்றிருந்த போதிலும் வரி வசூலிப்போர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வசூல் செய்து வந்தனர். மக்களின் துயர் பற்றி அவர்கள் சிறிதும் சிந்திக்கவில்லை. குடிமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு மாவட்ட கலெக்டரிடம் சென்று முறையிட்டனர். அவர் ஓர் ஆங்கிலேயர். அவர் குடிமக்களிடம் "என்னிடம் வந்து ஏன் சொல்லுகிறீர்கள். இதனால் என்ன பயன்? உங்கள் பாதிரியாரிடம் சென்று கூறினால் மழை பெய்யச் செய்து விடுவாரே" என்று மகா சந்நிதானத்தை மனதில் நினைத்துக் கொண்டு ஏளனமாகப் பேசினார். ஏற்கனவே மழை இல்லாமல் போய், அதனால் வருமானம் இல்லாமல் தவித்து, வரிவசூலிப்போரின் கெடுபிடிகள் தாங்காமல் கலெக்டரிடம் முறையிட்டல் இவர் இப்படிப் பேசியது அவர்கள் மனத்தைப் புண்படுத்தியது. அவர்கள் நெல்லையில் தங்கியிருந்த சந்நிதானத்திடம் சென்று நடந்ததைச் சொல்லி முறையிட்டனர். காட்சிக்கு எளியரான சந்நிதானம் நடந்ததைக் கேட்டு முறுவலித்தார். சொக்கநாதப் பெருமானை மனதில் தியானித்துக் கொண்டு ஆழ்ந்த சமாதியில் இருந்தார். பின் அவர் கீழ்கண்ட பாடலைப் பாடினார்கள்:

"சைவ சமயம் சமயமெனில் அச்சமயத்
தெய்வம் பிறைசூடும் தெய்வமெனில் - ஐவரைவென்று
ஆனந்த வெள்ளத் தழுந்துவதே முத்தியெனில்
வானங்காள் பெய்க மழை!

இப்பாடலை அவர் பாடியபின் வானம் கருத்து, மேகங்கள் திரண்டு மழை தொடர்ந்து பெய்து, நீர்நிலைகளை நந்நீரால் நிரப்பியது. மக்கள் மனம் குளிர்ந்தது. இப்படி சைவப் பெரியோர்கள் தங்கள் அருள் வலிமையை அப்போதைக்கப்போது மக்கள் நலனுக்காகத் தேவைப்படும்போது வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

அறம்வளர்த்தநாயகி அம்மன் சந்நிதி.

ஐயாறப்பர் ஆலயத்தினுள் நுழைந்து நூற்றுக்கால் மண்டபம் வழியாக அதன் பின்புறம் அமைந்துள்ள அம்மன் கோயிலுக்குச் செல்ல வழியிருந்தாலும், அம்மன் கோயிலுக்கென்று ஒரு ராஜகோபுரமும், தனி வழியும் கீழவீதியிலிருந்து அமைக்கப் பட்டிருக்கிறது. பார்ப்பதற்கு இது ஒரு தனி கோயில் போலவே தோன்றும். மேலும் இங்கு அமைந்துள்ள கருங்கற் கட்டடக்கலை சமீபகாலத்தியதைப் போல தோற்றமளிக்கும். பண்டைய மன்னர்கள் காலத்தினைப் போலவே சமீபகாலத்திலும் இதுபோன்ற கருங்கற் கட்டடக்கலை மிகச் சிறப்பாகவே கட்டப்பட்டு வந்திருப்பதற்கு இந்த ஆலயமே ஓர் எடுத்துக்காட்டு. ஐயாறப்பர் ஆலயத்தின் நான்காம் பிரகாரத்தில் வடகிழக்குப் பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அம்மன் கோயிலின் கீழைக் கோபுரம் கீழ்ப்பகுதி கல்லாலும், மேல்பகுதி, செங்கல் சுதை வேலைப்பாடுகள் அமைந்தது. இவ்வாலய கோபுரத்தில் பெண்கள் பலர் இருக்கும் சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக பன்னீர் சொம்புகளையும், சந்தனப் பேலாக்களையும் கையில் தாங்கிய பெண்களைக் காணமுடியும். இங்கு உள்ளே நுழைந்ததும் இடப்புறம் நவராத்திரி கொலு மண்டபமும், சுற்றுப் பிரகாரமும் அமைந்துள்ளது. வலதுபுறம், ஹோமங்களும் மற்ற நிகழ்ச்சிகளும், நடக்கும் விழா மண்டபம் இருக்கிறது. இங்கு கவசமிடப்பட்ட கொடிமரம், நந்தி பலிபீடம் ஆகியவை உள்ளன.உட்புறம் சென்றால் அம்மன் கோயில் உட்பிரகாரமும், கர்ப்பகிரகமும் காணலாம். இங்கு அன்னை அறம்வளர்த்தநாயகி அலங்கார கோலத்துடன் காட்சி தருகிறாள்.

அவள் திருவுருவைத் தரிசிப்போமா? அடடா! அன்னையின் பேரழகு நம் மனதைக் கொள்ளை கொள்கின்றது. அவளது புன்னகை தவழும் இதழ்களும், கருணை வடியும் முகமும் நம்மை அவள் ஆசீர்வதிப்பதை உணர்கிறோம். அன்னையின் சிற்ப வடிவம் ஆறடி உயரமும், ஒன்றரையடி குறுக்களவும், முக்கால் அடி கனமும் கொண்டதாம்.

"வளங்கிளரும் அண்டங்கள் அனந்தகோடி வாழுமுயிர்
ஏழ்கடலின் மணலும் ஆற்றா
உளங்குளிர உய்ந்தோர்க்குத் தக்கதேயாய் உயிர்த்துணை
இல்லா உயிர்க்கும் தக்கதேயாய்
தளர்ந்தொருவர் உண்டியால் வருதாவண்ணம் சைவ நாயகன்
ஐயாறுடைய நாதன் அளந்த படி
இருநாழி நெல்லும் கொண்டே அறம்வளர்த்த அன்னை
பதம் சென்னி வைப்பாம்."

இங்கு திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள அன்னையின் பெயர் "அறம்வளர்த்தநாயகி" என்பதாகும். தென்னாட்டுச் சிவன்கோயில்களில் 'படிநெல் திருவிழா' எனும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலிலும், திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்திலும் இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்தப் பிரபஞ்சத்தில் பூமியில் உயிர்கள் தோன்றி, மனிதன் வளர்ச்சியடையும் காலத்தில் கானகங்களில் கனிகளையும், கிழங்குகளையும் உணவாக உட்கொண்டு வருவதைப் பார்த்த உலகநாயகி அம்பாள் சிவபெருமானிடம் நம் குழந்தைகளின் உணவுக்காக தானியங்களை உற்பத்தி செய்துதரும்படி கேட்டுக்கொண்டபோது, சிவபெருமான் அன்னையிடம் 'இரு நாழி' தானியத்தை அளந்து கொடுத்து, உலகிலுள்ள மனிதர்கள் உண்டு வாழ வழிவகுத்தாராம். அந்த இரு நாழி தானியத்தை அன்னை தன் மக்களிடம் கொடுக்க, அவர்கள் அதனை பூமியில் விதைத்து ஒன்றைப் பத்தாக நூறாகப் பெருக்கி இன்று வரை உணவாக உண்டு வருகிறார்கள். இப்படி அம்பிகை 32 வகையான அறங்களைச் செய்து மக்கள் குறைவின்றி வாழ வழிவகுத்ததால்தான் அந்த பராசக்தி இங்கு "அறம்வளர்த்தநாயகி" எனும் அரும்பெயர் பெற்றாள்.

'அபிராமி அந்தாதி' எனும் பக்திப் பனுவலில் அபிராமி பட்டரவர்கள் திருக்கடவூர் அன்னை அபிராமியைப் போற்றி பாடும்போது

"ஐயனளந்த படியிரு நாழிகொண்டு இவ்வண்டமெல்லாம்
உய்ய அறம் செய்யும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்றன் மெய்யருளே"

என்று பாடுகிறார். இப்பூவுலகத்தைப் படைத்த ஈசன் இங்கு உயிர்களையும் படைத்து, அவை புல்லாய், பூண்டாய், புழுவாய், மரமாய், பல் மிருகங்களாய், பறவைகளாய், பாம்பாய், கல்லாய், மனிதராய், பேய்களாய், கணங்களாய், வல் அசுரர்களாய், முனிவர்களாய், தேவராய் இப்படிப் பற்பல நிலைகளில் படைத்தபோது, இங்கு பிறந்த நம் பிள்ளைகள் உணவுக்காய் ஏதேனும் அருளக்கூடாதா என்று அன்னை கேட்க, அதற்கு இறைவன் இரு நாழி தானியத்தைக் கொடுத்தாராம். தம் பிள்ளைகள் உயிர்வாழ இந்த தானியத்தைக் கொண்டுபோய் அன்னை பார்வதி முப்பத்திரெண்டு அறங்களைச் செய்து ஒன்று பலவாய், லட்சம் கோடியாய் பெருகி இவ்வுலகத்து உயிர்கள் வாழும்படி அறம்செய்த நாயகியாய், அறம்வளர்த்த நாயகி எனும் பெயர் பெற்றதாகச் சொல்கிறார்கள். மேற்கண்ட பாடலில் இப்படிப்பட்ட அறம்செய்த நாயகி நீ இருக்கும்போது, நான் கற்ற செந்தமிழ்ப் பாக்களால் வேறு எவரிடமெல்லாமோ சென்று பொய்யையும், மெய்யையும் சொல்லி முகஸ்துதி செய்து வாழ்வேனோ? இல்லை. உன் புகழ்பாடி உன் சந்நிதியில் உன் கோடி சூரிய பிரகாச முகதரிசனம் செய்வதையே பாக்கியமாகக் கருதுகிறேன் என்பது பொருள்.

அம்பாளுக்கு திரிபுரசுந்தரி, தர்மாம்பிகை எனும் திருப்பெயர்களும் வழங்கப்படுகிறது. இந்த அம்பாள் விக்கிரகம் மிக அழகானது, அற்புதமானது. பார்ப்போர் மனம் அம்பிகையின் அருளில் ஆழ்ந்திடும் வண்ணம் அணிகலன்கள், ஆடை அலங்காரங்கள் கொண்டு விளங்குகிறாள். நான்கு திருக்கரங்கள், அவற்றுள் பின் இரு கரங்களில் அக்கமாலை, கெண்டி தாங்கியும், முன்னிரு கரங்களில் ஒன்று அபயஹஸ்தமாகவும், மற்றொன்று வரதம் காட்டியும் அமைந்திருக்கிறாள்.

நின்ற கோலத்தில் முழு அலங்கார பூஷிதையாக அம்மனைக் காண்பதற்குக் கோடி கண்கள் வேண்டும். உலகத்திலுள்ள எல்லாம் உடையவள் அவள், ஒல்கு செம்பட்டு உடுத்தியவள், ஒளிர்மதிச் செஞ்சடையாள் அவள், வஞ்சகர் நெஞ்சு அடையாளவள், தயங்கு நுண்ணூல் இடையாளவள், எங்கள் பெம்மான் இடையாளவள், இங்கு நம்மையெல்லாம் மீண்டும் படையாமல் பார்த்துக்கொள்ள அவளிடம் வேண்டிக் கொள்ளலாம். அந்த ஆலயத்தின் அமைதியும், தனிமையும், இனிமையும் அன்னை இருக்குமிடம் நம் மனதையெல்லாம் கொள்ளை கொள்ளுமிடமாகத் திகழ்வதைக் காணலாம். அந்த ஆத்தாளை, அறம்வளர்த்த நாயகியை, அண்டமெல்லாம் பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளை, புவியடங்கக் காத்தாளை, தினம்தினம் கண்டு களித்து வரும் திருவையாற்று மக்கள் புண்ணியம் செய்தவர்கள். ஒரு முறை வந்து அன்னையை தரிசனம் செய்தவர்கள் மீண்டும் மீண்டும் வந்து தரிசனம் செய்ய விழைவார்கள். அந்த அன்னை அழியாத குணக்குன்று, அருட்கடல், இமவான் பெற்ற கோமளம். உலகத்து மக்களைக் காக்கும் பணியைத் தன் தலைமேல் ஏற்றுக் கொண்டவள்.

எல்லா சிவாலயங்களிலும் ஒரு காலத்தில் சிவபிரானின் சந்நிதி மட்டும்தான் இருந்திருக்கிறது. பிறகுதான் அம்பிகைக்கென்று தனிச் சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. ஒருக்கால் இது ஷண்மதப் பிரிவின் காரணமாக சைவர்கள் சிவாலயங்களையும், சாக்தர்கள் பராசக்திக்கான ஆலயங்களையும் வழிபட்டுப் பின் இவை ஒன்றாக ஆகிப்போனதால் இப்படி சிவாலயங்களிலேயே அம்மன் ஆலயங்களும் எழுப்பியிருக்கலாம். அப்படி இந்த அம்மனுக்கு ஆலயம் சென்ற நூற்றாண்டில்தான் கட்டியிருக்கிறார்கள்.

அம்பாள் ஆலயம் புதுப்பிக்கப்பட்ட வரலாறு

அப்படி இந்த அறம்வளர்த்தநாயகி ஆலயத்தை செட்டிநாட்டிலுள்ள தேவகோட்டையைச் சேர்ந்த சேவுகன் செட்டியார் அவர்கள் இங்கிருந்த பழைய அம்மன் கோயிலை மாற்றி புதிதாக கருங்கல் தளியாக அமைத்துத் திருப்பணி செய்து கொடுத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆலயங்களின் சிறப்புக்குச் சிறிதும் குறைவில்லாமல் இந்த அம்மன் ஆலயம் கருங்கற்களால் கட்டப்பட்டு புகழ்பரப்பி நிற்கிறது.

புதுமை மாறாமல், அழுக்கு, எண்ணெய் பிசுக்கு எதுவுமில்லாமல் புதுக்கருக்கு மாறாமல் திகழும் இந்தக் கோயிலில் முன்மண்டபம், கொலு மண்டபம் இவற்றோடு கொடிமர விநாயகரும் அமைந்திருக்கிறார். இவைகளைக் கண்டு வழிபட்டபின், கிழக்குப் பார்த்த அம்பாள் சந்நிதியினுள் அடியெடுத்து வைக்கிறோம். இந்த கோயிலின் பிரகாரத்தில் வலம் வரும்போது மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலினுள் இருப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது. மிக உயரமான கருங்கல் தூண்களால் அமைந்தது நாம் வலம்வரும் பிரகாரம். இங்கு செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ஏதோ நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது போல இல்லாமல் மிக பழமை வாய்ந்தது போலத்தான் காணப்படுகின்றது.

இங்கு முன்பு இருந்த பழைய கோயிலின் கற்கள் இங்கு அஸ்திவாரமாகப் போடப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் இந்த கற்களில் இருந்த கல்வெட்டுகள் 1894லிலும் பின்னர் 1918லும் படி எடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள்.

இந்த ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டிய செட்டிநாடு தேவகோட்டை உ.இராம.மெ.சுப.சேவு. சேவுகன் செட்டியார் அவர்களைப் பற்றி இங்கு சிறிது பார்க்கலாம். இவர் முதன்முதலில் 1910இல் திருவையாறு வந்து வழிபட்டார் என்று தெரிகிறது. அப்போது மிகவும் பழைமையாகிப் போயிருந்த அறம்வளர்த்தநாயகி ஆலயத்தைப் புதுப்பித்தால் என்ன என்று இவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. இந்த ஆலயத்தை நிர்வகித்துவரும் திருத்தருமையாதீனம் 20ஆவது பட்டத்திலிருந்த ஸ்ரீலஸ்ரீ சிவஞானதேசிகர் சுவாமிகள் (கி.பி.1914 - 1918) அவர்களை தரிசித்து இந்த ஆலயத்தைத் திருப்பணி செய்வது குறித்த ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டார்கள்.

பழைய கோயிலைப் புதுப்பித்துத் திருப்பணி செய்தாலும், இதன் பழமை மாறாமல் மிகவும் கவனத்துடன் திருப்பணி நடைபெற்றது. புதிய ராஜகோபுரம் எழுப்பப்பட்டது. நவீன சிற்ப சுதை வேலைப்பாடுகள் இடம்பெற்றன. மன்னர்கள் காலத்தில் வெகு தூரத்திலிருந்து கருங்கற்களையும் பாறைகளையும் கொண்டுவர வண்டிகள், யானைகள் பயன்படுத்தப்பட்டதாக படிக்கிறோம். இன்றைய நவீன யுகத்தில் இது எப்படி சாத்தியமாயிற்று. திருவையாற்றைச் சுற்றி அருகில் எங்கும் மலைகள் கிடையாது. வெகு தூரத்திலிருந்துதான் கற்கள் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். இப்போது போல கிரேன், இரும்புக்கம்பி, சிமெண்ட் எதுவும் இல்லாத 1918இல் இவை எதுவும் இல்லாத நாளில் என்ன செய்தார்கள்? சாரங்களைக் கட்டி அதை சிறிது சிறிதாக மேல்நோக்கி அமைத்து பாறைகளை அதன்மீது கயிறுகள் கொண்டு ஏற்றியல்லவா இவற்றை கட்டியிருக்கிறார்கள்.

திருவையாற்றுக்குக் கருங்கற்கள் வந்தது எப்படி?

திருவையாற்றுக் கோயிலுக்கு வடமதுரையிலிருந்தும், திருவண்ணாமலை அருகிலிருந்தும் கருங்கற்கள் கொண்டு வரப்பட்டனவாம். அங்கெல்லாம் செட்டியார் தனது ஆட்களை அனுப்பி இவற்றைக் கொண்டு வர ஏற்பாடுகள் செய்திருந்தார். இவற்றைக் கொண்டு சேர்ப்பதற்காக தென் இந்திய ரயில்வேயில் wagonகளை வாடகைக்கு எடுத்து ரயிலில் கொண்டு வந்து அய்யம்பேட்டை ரயில் நிலையத்துக்குக் கொண்டு சேர்த்தார்கள். தஞ்சாவூரிலிருந்து கொண்டு செல்வதாக இருந்தால் பல ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்ததால் பாலங்கள் தாங்காது என்பதால் இவை அய்யம்பேட்டைக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து பெரிய பெரிய மாட்டு வண்டிகளைக் கொண்டு வந்து அவற்றில் கற்களை ஏற்றி காவிரி, குடமுருட்டி ஆறுகளைக் கடந்து திருவையாற்றுக்குக் கொண்டு வரப்பட்டனவாம். இந்த வேலையைச் செய்வதற்காக பத்து ஜோடி காளைமாடுகள் வாங்கப்பட்டனவாம். நல்ல உடல் வலுவுள்ள ஐம்பது ஆட்கள் இந்தப் பணிக்காக நியமிக்கப்படனராம். இந்த வண்டிகள் போக மேலும் சில வண்டிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு வேலையில் அமர்த்தப்பட்டனவாம்.

வண்டி வாடகை கல்லின் ஒரு கெஜம் நீளத்திற்கு முக்கால் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டதாம். தமிழ் ஆண்டு ரத்தாக்ஷியில் வேலை நடைபெற்றபோது கல்தச்சர்களுக்கு ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் கூலி தரப்பட்டிருக்கிறது. அப்படி செலவு செய்து ரூ.10 லட்சத்தில் (இது 1918இல்) முடிவடைந்தது. இந்த 10 லட்சம் இன்றைய கணக்கில் எவ்வளவு வரும்? கணக்கு பார்த்தால் மயக்கம் வரும்.

பற்பல இடையூறுகளுக்கிடையேதான் சேவுகன் செட்டியார் இந்தத் திருப்பணியை மேற்கொண்டார். திருப்பணி வேலைகள் ஆகம விதிப்படி நடைபெறவில்லை என்று சிலர் வழக்கு தொடர்ந்தார்கள். அப்படி உருவானதுதான் இந்த அம்மன் ஆலயம்.


அறம்வளர்த்தநாயகி அம்மனின் அற்புதச் செயல்கள்.

அன்னையின் மகிமையை உலகுக்குணர்த்த பல அற்புத செயல்களை இங்குள்ளவர்கள் சொல்லுகிறார்கள். இவை என்றோ நடந்தவை அல்ல. நம் காலத்தில் அவற்றை மெய்ப்பிக்கும் சாட்சிகளோடு நடந்ததாகக் கூறும்போது அவை நம்மை புல்லரிக்கச் செய்கின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

1. திருவையாறு ஹரிகதா விற்பன்னர் அண்ணாசாமி பாகவதர் பற்றிய செய்தி:

திருவையாறு புகழ்பெற்ற ஹரிகதா விற்பன்னர் அண்ணாசாமி பாகவதர் அவர்களும், அவரது தம்பியும் கதாகாலட்சேப நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக வெளியூர் சென்றார்கள். அவர்கள் அப்படிப் புறப்பட்டுச் சென்று பல காலம் ஆகியும் அவர்களிடமிருந்து எந்தவித செய்தியும் வராத காரணத்தால் குடும்பத்தில் குழப்பத்தில் சிக்கி வருந்தினார்கள். இன்றுபோல் பலவிடங்களுக்கும் தொடர்பு கொண்டு பேசும் வசதிகள் இல்லை. என்ன செய்வது. அவரது குடும்பத்தினர் அறம்வளர்த்தநாயகியின் காலடியில் வந்து விழுந்து அழுதார்கள். அழுத உள்ளங்களுக்கு ஆறுதல் கொடுப்பதுபோல அன்னையின் அபய ஹஸ்தம் ஆதரவு நல்கியது. மனம் தெளிந்து எழுந்த உறவினர்கள் திரும்பிப் பார்த்தபோது அங்கு எதிரே அண்ணாசாமி பாகவதர் நின்றுகொண்டிருந்தாராம். அன்னையின் கருணையை என்னவென்று புகழ்வோம் என்று அனைவரும் அன்னையை நினைத்து உருகி வழிபட்டனராம்.

2. சேவுகன் செட்டியார் ஆச்சியிடம் அன்னை காட்டிய கருணை:

தனவணிகர் குடும்பத்தைச் சேர்ந்தவரல்லவா சேவுகன் செட்டியார். முதன்முதலாக அன்னை அறம்வளர்த்தநாயகியை வந்து செட்டியார் தரிசித்த காலத்தில் அவர் மிகப் பெரிய வணிகராக இருந்தார். அன்னையைத் தரிசித்துச் சென்றபின் அவரது வாணிகம் நன்கு பெருகியது. செட்டியார் நினைத்ததெல்லாம் நிறைவேறிற்று. அதன் மூலம் கிடைத்த லாபத்தில் செட்டியார் குடும்பம் அன்னைக்கு ஆலய புனருத்தாரணம் செய்தார்கள். சேவுகன் செட்டியாரின் மனைவி ஆச்சிக்கு அன்னையிடம் ஆறாத பக்தி.

ஒரு சமயம் சேவுகன் செட்டியாரின் மூன்று மகன்களுள் பஞ்சநதம் செட்டியார் என்பவர் மனவளர்ச்சிக் குன்றி வீட்டிலிருந்தார். பணியாட்கள் துணையின்றி அவரால் எந்த காரியமும் செய்ய இயலாது. ஒருநாள் திடீரென்று பஞ்சநதம் செட்டியாரைக் காணவில்லை. நாலாதிசைகளிலும் ஆட்கள் பறந்தார்கள் காணாமல் போன செட்டியாரைத் தேடி. ஆச்சி அழுது புரண்டார்கள். பெற்ற மனம் அல்லவா? அவருக்கு ஆறுதல் சொல்ல யாரால் முடியும். ஆச்சி அன்னை அறம்வளர்த்தநாயகியை வேண்டி அழுதார்கள். அப்போது ஒரு சிறு பெண் காணாமல் போன பஞ்சநதம் செட்டியாரைக் கையைப் பிடித்து அழைத்து வந்து ஆச்சியிடம் விட்டாள். மகனை உயிரோடு கண்ட ஆச்சிக்கு மகிழ்ச்சி. மகனைக் கட்டிக்கொண்டு அழுதார்கள். தன் மகனைக் கொண்டு வந்த சேர்த்த அந்தச் சிறு பெண் யார், அவளுக்கு நன்றி தெரிவிக்க ஆச்சி எழுந்து அந்தப் பெண்ணைத் தேடினார். எங்கு தேடியும் அந்தப் பெண்ணைக் காணவில்லை. ஆச்சிக்குப் புரிந்தது. தன் பக்தையின் மனத்துயரைப் போக்க அந்த அறம்வளர்த்த நாயகியே சிறு பெண்ணாக வந்து தன் மகனைத் தன்னிடம் சேர்ப்பித்தாள் என்று. மனம் உருகி நின்றார், அன்னையைப் போற்றி வணங்கினார்.

அன்னை அறம்வளர்த்தநாயகி 32 அறங்களைச் செய்தாள் என்று கூறுகிறார்கள் அல்லவா? அந்த 32 அறங்கள் எவை என்று தெரிந்து கொள்ளலாமா?

32 அறங்கள்.
1. சாலைகளில் வெயில் நேரத்தில் பயணம் செய்வோர் களைப்பாற மரங்களை நடுதல்.
2. பயணிகள் தாக சாந்திக்காகத் தண்ணீர்ப் பந்தல் அமைத்தல்.
3. மக்கள் சமயம் பற்றிய அறிவு பெற மடங்களை உருவாக்குதல்.
4. ஊருக்குப் பயன்படும் வகையில் குளம், குட்டை, ஏரி, சாலைகள் அமைத்தல்.
5. அநாதைகளாக ஆதரவற்று இருக்கும் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்தல்.
6. அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு தருதல் என்கிறோமே அப்படி பிறர் துன்பம் தீர்த்தல்.
7. கண்ணாடி அல்லது வாசனைப்பொருள்களை தானமாக வழங்குதல்.
8. வறியவர்கள் தலைக்குத் தேய்க்க எண்ணெய் வழங்குதல்.
9. கண்களில் வரும் நோய்களுக்கு மருந்து கொடுத்தல்.
10. ஏழைப் பெண்களின் காதுகளில் அணிய காதோலை, கருகமணி தருதல்.
11. பாலின்றி வாடும் குழந்தைகளுக்குப் பால் அல்லது சோறு வழங்குதல்.
12. பிறர் குழந்தைகளுக்குத் தின்பண்டம் அளித்தல்.
13. வழிப்பயணம் மேற்கொள்வோர் பயணம் செய்யும் பாதையில் சுமைதாங்கி அமைத்தல்.
14. பசியால் வாடும் ஜீவராசிகளுக்கு உணவிட்டு உயிரோம்புதல்.
15. கல்வி கற்க விரும்புவோர்க்குக் கல்வி, இடம், உணவு வழங்குதல்.
16. வழிப்போக்கர்களுக்குத் தங்க சத்திரம், சாவடி நிறுவுதல்.
17. பசுக்களைப் பேணுதல், அவற்றிற்கு புல், வைக்கோல், தீனி வழங்குதல்.
18. தேசாந்தரம் செல்லும் துறவிகளுக்கு உணவு வழங்குதல்.
19. அறுசமயத்தாருக்கும் உணவு வழங்குதல்.
20. சிறைப்பட்டிருப்போர்க்கு உணவு வழங்குதல்.
21. எதிர்பாரா விபத்தின் காரணமாக இழந்தார்க்கு உதவுதல்.
22. நோயாளிகளுக்கு மருந்து, உணவு கொடுத்து ஆதரித்தல்.
23. அநாதைகள், முதியோர், ஊனமுற்றோருக்கு உதவுதல்.
24. வீடுதேடிவரும் ஆதரவற்றோருக்கு பிச்சையிடுதல்.
25. திருமணம் போன்ற காரியங்களுக்கு உதவுதல்.
26. பிள்ளைபேற்றின் போது தாய்மார்களுக்கு உதவுதல்.
27. வறியோர்களுக்கு வஸ்திரங்களை தூய்மைப்படுத்திக் கொடுத்தல்.
28. வறியோர் முடி திருத்த, நீக்க உதவி செய்தல்.
29. அநாதையாக இறப்போர் சடலங்களை எடுத்து சமஸ்காரம் செய்தல்.
30. வசதியற்ற கன்னிப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தல்.
31. ஏழைப் பையனுக்குத் திருமணத்துக்கு உதவுதல்.
32. கொலைப்படும் உயிரை மரணத்தினின்றும் விடுவித்தல்.

அம்மன் ஆலயத்தைத் தரிசித்தபின் மீண்டும் வந்த வழியே சுவாமி கோயிலுக்கும் செல்லலாம், அம்மன்கோயில் கீழைக் கோபுரம் வழியாக கீழவீதிக்கும் செல்லலாம். அங்கு கோபுர வாசலைத் தாண்டியதும் திருத்தருமையாதீன மடம் இருக்கிறது. இவ்வூர் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் இங்குதான் தங்கியிருப்பார்கள். ஆலய தரிசனம் முடிந்து, தம்பிரான் சுவாமிகள் இருந்தால் அவரையும் தரிசனம் செய்து அவர் அருளாசியினைப் பெற்றுச் செல்லலாம். இங்கிருந்து வெளியேறும்போது மனம் அருளினால் கனிந்து, அன்பினால் நிறைந்து அமைதிகொண்டு காணப்படும்.

நித்ய பூஜைகளும், திருவிழாக்களும்.

திருவையாறு ஐயாறப்பர் ஆலயம் திருத்தருமை யாதீனத்தாரால் நிர்வகிக்கப் படுகிறது. தருமையாதீனத்தின் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தனது புலமையாலும், அனுபவத்தாலும், கற்றுணர்ந்த மேன்மையாலும், நிர்வாகத் திறத்தாலும், இவ்வாலய பரிபாலனத்தை மிகச் சிறப்பாகத் தன் ஊழியர்களைக் கொண்டு நிர்வகித்து வருகிறார்கள். திருவையாறு ஆலய கட்டளை விசாரணையாக திருச்சி மெளனமடம் முனைவர் குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இங்கு நடைபெறும் திருவிழாக்களும் மற்ற கோயில் உற்சவங்களும் சிறப்பாகவும், மக்கள் பெருமளவில் பங்கு பெறுமாறும் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

இவ்வாலய பூசைகள், விழாக்கள் இவற்றிற்காக பல கட்டளைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. அவை, தொண்டைமான் கட்டளை, மேலை அரண்மனை கட்டளை, அறம்வளர்த்த நாச்சியார் கட்டளை, மானோஜியப்பா கட்டளை, பச்சையப்ப முதலியார் கட்டளை, குமரக்கட்டளை, பிரதோஷ கட்டளை, மாதபூசை கட்டளை, புனுகுக் காப்புக் கட்டுக் கட்டளை, புதுக்கோயில் கட்டளை என்பன. இவ்வாலய நடைமுறையில் மேற்படி அத்தனை கட்டளைகளும் பங்கு பெறுகின்றன.

இங்கு நித்திய பூசைகள் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஐயாறப்பருக்கும், அறம்வளர்த்தநாயகி அம்பாளுக்கும் ஆறுகால பூஜையும், வடகயிலாயம், தென் கயிலாயம் கோயில்களில் ஒருகால பூஜையும் நடைபெறுகின்றன. ஆறுகால பூஜைகளாவன: அதிகாலை சந்தி, காலைசந்தி, உச்சிகாலம், சாயங்காலம், இரண்டாங்காலம், அர்த்த ஜாமம் ஆகியன. அதிகாலை சந்தியின்போது சோமாஸ்கந்தர் மண்டபத்தில் பேழையிலுள்ள ஸ்படிகலிங்கம், மரகதலிங்கம், ஸ்படிக அம்பிகைக்கும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு கால பூஜையிலும் இறைவனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் ஓரிரு நாட்கள் மட்டும் நிகழக்கூடிய விசேஷ வழிபாட்டு நிகழ்ச்சிகள் அதனையொட்டிய பூஜைகள் முதலியனவற்றை நைமித்திக பூஜைகள் என்று சொல்வார்கள். தற்போது பிரதோஷ வழிபாடு, ஒவ்வொரு தமிழ்மாதப் பிறப்பன்றும் அமாவாசை தினங்களிலும் நிகழும் தீர்த்தவாரி, திருவாதிரை தினங்களில் வட, தென் கயிலாயக் கோயில்களில் நடக்கும் வழிபாடு முதலியன நைமித்திய பூஜைகள் எனப்படும். இதில் பிரதோஷ வழிபாடு சமீப நாட்களில் மக்களை மிகவும் ஈடுபடச் செய்கின்ற விசேஷ நிகழ்ச்சிகளாகும். இந்த நாளில் நந்தியெம்பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதிலும் இந்தத் தலம் நந்திக்கு மிகவும் முக்கியமான தலமாகையால் இவ்வாலயத்தில் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறும். பிரதோஷ பூஜை என்பது மாலை நேரத்தில் நடைபெறுவதாகும். அப்போது ஐயாறப்பருக்கும், எதிரேயுள்ள நந்தியம்பெருமானுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெறும். பிரதோஷமூர்த்தி எனும் சந்திரசேகரமூர்த்தி அலங்கரிக்கப்பட்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயிலினுள் வலம் வரும் வழக்கம் உண்டு.

ஒவ்வொரு மாதமும் நடைபெறும் அமாவாசை, தமிழ்மாதப் பிறப்பு திர்த்தவாரிகளின்போது சோமாஸ்கந்தர், சூலதேவருடன் காவிரியாற்றுக்குச் சென்று புஷ்ய மண்டபத் துறையில் மண்டபத்தில் எழுந்தருளிய பிறகு, சூலதேவரை மட்டும் காவிரியில் நீராட்டிப் பின் சுவாமியை அலங்கரித்து நகரை வலம் வந்து கோயிலை அடைவது என்பது நடந்து வருகிறது. அதுபோலவே கிரஹண காலங்களிலும் ஆற்றில் நீராடி, ஊரை வலம்வரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

திருவிழாக்கள்.

சித்திரை மாதத்தில் முன்பே குறிப்பிட்ட ஏழூர் "சப்தஸ்தானம்" திருவிழா நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவிற்கு முன்பாக பங்குனி மாதத்தில் திருமழபாடி வைத்தியநாதஸ்வாமி ஆலயத்தில் நந்தியம்பெருமானுக்குத் திருமண விழா நடைபெறும். சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரத்திற்கு ஒன்பது நாட்களுக்கு முன்பாக இங்கு திருவிழா தொடங்கும். விழா தொடங்குவதற்கு முன்பு வழக்கமாக முதலில் பூஜை செய்யவேண்டிய விநாயகப் பெருமானுக்கு பூஜைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து வாஸ்து சாந்தி, திக்பலி முதலியன நடைபெறும். அதன்பிறகு கொடியேற்றம் ஆலய பலிபீடத்தினருகேயுள்ள துவஜஸ்தம்பத்தில் நந்திக் கொடி ஏற்றப்படும்.

திக்பலி ஒவ்வொருநாளும் தினசரி பூஜைகளின்போது நாம் பார்த்திருக்கலாம். அர்ச்சகர் நந்தியம்பெருமானுக்குப் பின்புறமுள்ள பலிபீடத்தில் நைவேத்தியத்தை வைத்துப் பூஜை செய்து, எல்லா திக்குகளிலும் காவல் செய்பவர்களாய் விளங்குகின்ற திக்பாலகர்களை ஆராதனை செய்து வணங்கி வழிபடுகிறார்கள். இங்கு சிவபெருமானையும் அம்பிகையையும் எழுந்தருளப் பண்ணி, ஒவ்வொரு திசை பாலகர்களிடம் அழைத்துச் சென்று அங்கு வழிபாடு செய்கின்றனர். அப்படி அட்டதிக் பாலகர்களுக்கும் நடக்கும் பூஜையில் அவரவர்கென்று அமைந்த பண்ணில் தேவாரம் இசைத்து வாத்திய இசை முழங்க தீபாராதனை செய்து வழிபடுவர்.

கொடியேற்றம் என்பது திருவிழாவின் முதல்நாள் நிகழ்ச்சியாக நடைபெறுவது. இங்கு அர்ச்சகர்கள் திருவிழாவுக்காக காப்புக்கட்டிக் கொண்டு, கொடிமரத்தில் ரிஷபம் சூலம் வரைந்த கொடியை ஏற்றி வைப்பார்கள். அன்றுமுதல் திருவிழா முடியும் வரை தினசரி சுவாமி புறப்பாடு உண்டு. வாத்திய இசையுடன் சுவாமி வீதிவலம் வந்து ஆலயம் திரும்புவார். தற்காலம் திருத்தருமையாதீனம் மிகவும் விசேஷமாக எல்லா நாள் நிகழ்ச்சிகளையும் அமைத்து, ஒவ்வொரு நாளும் மாலையில் பொதுமக்கள் அதிகம் வந்து கலந்துகொள்ளும்படியாக பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கிறார்கள். திருவிழாக் காலங்களில் ஒவ்வொருநாளும் ஆலயத்துக்கு ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் வந்து கலந்துகொள்வதால் ஊரே ஜேஜே என்று இருக்கும்.

இந்தத் திருவிழாவில் ஐந்தாம் நாள் திருவிழாவுக்கு வேறு எங்கும் காணமுடியாத ஒரு விசேஷம் உண்டு. அது இறைவன் தன்னைத் தானே பூஜித்துக் கொண்ட திருவிழா. அந்த விவரம் என்ன தெரியுமா?

இறைவன் தன்னைத் தானே பூஜித்துக் கொண்ட வரலாறு.

இந்த பெருமை பெற்ற தலத்தில் ஐயாறப்பருக்கு பூஜை செய்துகொண்டிருந்த ஆதிசைவர்கள் இருபத்திநான்கு பேர். அவர்களில் ஒருவர் காசிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவர் காசிக்குச் சென்ற பிறகு அவர் செய்ய வேண்டிய பூஜையைச் செய்ய வேறு எவரும் செய்யாததோடு அவருடைய நிலம் உடைமை முதலியவற்றைச் சிலர் கவர்ந்துகொண்டனர். அவருடைய மனைவி மக்கள் ஐயாறப்பரிடம் முறையிட்டு வேண்டினர். அப்போது இறைவனே ஒரு முதிய அர்ச்சகர் வடிவம் தாங்கிக் கொண்டு வந்து வழிபாடுகளை நின்றுவிடாமல் செய்து ஒரு மடத்தில் தங்கிக் கொண்டிருந்தார். இப்படி பலநாட்கள் நடந்துகொண்டிருந்த வேளையில் ஒருநாள் காசி சென்ற அர்ச்சகர் வந்துவிட்டார். தன் இடத்தில் மற்றொருவர் பூஜை செய்வதைக் கண்டு அவர் திகைத்துப் போய் நிற்கையில், இறைவன் தன் சுய உருவத்தை அவர்க்குக் காட்டி தரிசனம் தந்துவிட்டு மறைந்துவிட்டார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் விதமாக இன்றும் சோமாஸ்கந்த மண்டபத்தில் இந்த பூஜை நடைபெறுகிறது.

இவ்விழாவின்போது ஐயாறப்பர் விழா மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இத்தலத்துடன் தொடர்புடைய ஏழூர்த் திருத்தலங்களாவன திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஆலயங்களிலிருந்தும் சுவாமி இங்கு எழுந்தருளுகின்றனர். இவ்விழாநாளில் இந்த மண்டபத்தில் சிவனடியார்களுக்கு உணவளித்து மஹேஸ்வர பூஜை நடைபெறுகிறது. ஏனைய நாட்களில் சிவபெருமான் சிவிகைகளிலும், இத்தலத்துப் பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களிலும் காட்சிதருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வண்ணம் மாணிக்கவாசக சுவாமிகள் தனது கீர்த்தித் திருவகவல் 85ஆம் வரியில் இப்படிக் கூறுகிறார். "ஐயாறதனில் சைவனாகியும்" என்று. அதாவது காசிக்குச் சென்றுவிட்ட அந்தணனின் உடமைகளை ஏனையோர் பறித்துக் கொண்டதை அவனது மனைவி மக்கள் ஈசனிடம் முறையிட்டு அழ, அவர்களைக் காக்கும் வண்ணம், இறைவனார் அந்த சைவ அந்தணன் வடிவம் எடுத்து ஆலயத்தில் ஐயாறப்பனை பூசித்ததை நினைவுபடுத்துகிறார்.

திருநந்தித் தேவர் வரலாறு.

சிலாத முனிவர் என்பவர் மக்கட்பேறு இல்லாததால் மிகவும் வருந்தி, ஐயாறப்பனை வேண்டினார். அதற்கு சிவபெருமான் அவர்முன் தோன்றி "சிலாதரே! நீர் புத்திரகாமேஷ்டியாகம் செய். யாகம் செது யாகபூமியை உழும்போது ஒரு பெட்டி கிடைக்கும். அதில் ஒரு புத்திரன் இருப்பான். அவனுக்கு ஆயுள் பதினாறு. அவனை எடுத்துக் கொள்" என்றார்.

அப்படியே அந்த முனிவரும் யாகம் செய்ய ஒரு பெட்டியும் அதில் நான்கு தோட்கள், மூன்று கண்கள், சந்திரனை அணிந்த முடியோடு ஒரு மூர்த்தி இருக்கக் கண்டார். "பெட்டியை மூடித் திற" என்ற அசரீரி கேட்க சிலாத முனிவரும் அங்ஙனமே செய்தார். இப்போது பெட்டிக்குள் ஓர் அழகிய குழந்தை இருக்கக் கண்டார். சிலாத முனிவர் அக்குழந்தையை எடுத்து செப்பேசுவரர் எனப் பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தார். அந்த குழந்தைக்கு கல்வியைப் புகட்டினார். பதினான்கு வயதிற்குள் அது சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கியது.

இந்தக் குழந்தைக்கு மார்க்கண்டனைப் போல பதினாறு வயதுதானே என்று நினைவுக்கு வந்தது. அந்தக் குழந்தை ஐயாறப்பனைப் பூசித்து கடுந்தவம் புரிந்தது. நீருக்குள் நின்று அக்குழந்தை தவமியற்றியதால் அங்கிருந்த மீன்கள் முதலானவை அவர் உடலை அரித்துத் தின்றன. பெற்றோர் வருந்தினர். அந்தக் குழந்தையின் கடுந்தவத்தை மெச்சி இறைவன் காட்சி கொடுத்து, அதற்கு எல்லா பேறுகளையும் வரங்களையும் கொடுத்து மறைந்தார்.

அப்போது வெரும் எலும்புக்கூடாக மட்டும் காட்சியளித்த அந்தக் குழந்தையின் பரிதாப நிலை கண்டு ஈசன் அந்த எலும்புக் கூட்டுக்கு கங்கை நீர், மேகநீர், பிரமனின் கமண்டல நீர், அம்மையின் தாய்ப்பால், இடபதேவரின் வாய்நுரை நீர் இவை கொண்டு தாமே அபிஷேகம் செய்ய, அந்தக் குழந்தை சூரியப் பிரகாசத்துடன் புதியப் பொலிவுடன் எழுந்தது.

சிலாத முனிவர் பிறகு வியாக்ரபாத முனிவருடைய மகளும், வசிஷ்ட முனிவரின் பெளத்திரியும், உபமன்யு முனிவரின் தங்கையுமான சுயம்பிரகாசை எனும் பெண்ணைத் தன் மகனுக்கு பங்குனி மாதத்தில் புனர்பூச நக்ஷத்திரத்தில் திருமணம் செய்வித்தார். செப்பேசர் எனும் பெயர் கொண்ட அந்த இளைஞன் கயிலையில் சிவகணங்களுக்குத் தலமைப் பதவியையும், முதல் வாயிலைக் காக்கும் உரிமையையும், சிவாச்சாரியாருள் முதல்வராக இருந்து பணிபுரியும் வரத்தைப் பெற்று வாழ்ந்தார்.

ஆட்கொண்டார் சந்நிதியின் சிறப்பு.

சுசரிதன் எனும் சிறுவன், தன் பெற்றோரை இழந்த துக்கம் தாளாமால் தான் வசித்து வந்த ஊரை நீங்கி பல்வேறு தலங்களை தரிசிக்கும்பொருட்டு தலயாத்திரை புறப்பட்டான். அப்படி தலங்களை தரிசித்து வந்த சிறுவன் ஒரு நாள் திருப்பழனம் வந்து சேர்ந்தான். அன்றிரவு அவன் தூக்கத்தில் யமதர்மராஜன் தோன்றி "சுசரிதா! இன்றிலிருந்து ஐந்தாம் நாள் நீ மரணம் அடைவாய்" என்று கூறினான்.

இதைக் கேட்ட சுசரிதன் அதிர்ச்சியில் விழித்தெழுந்து செய்வதறியாது திகைத்து திருவையாறு வந்து சேர்ந்தான். காலதேவனின் அச்சுறுத்தலிலிருந்து தப்பிக்க சிவதரிசனமே வழியென்று அவன் ஐயாறப்பர் சந்நிதிக்கு வந்து சேந்தான். அங்கு வசிஷ்ட முனிவர் உபதேசித்தபடி சிவதரிசனமும் ஐந்தெழுத்து ஜபமும் செய்து வந்தான். இப்படி இவன் சிவதரிசனமும், பஞ்சாக்ஷர ஜபமும் செய்துவரும்காலை, எமதர்மன் உரைத்தபடி சரியாக ஐந்தாம்நாள் இவன் உயிரைப் பறித்துச் செல்வதற்காக வந்து சேர்ந்தான். சுசரிதன் வசிஷ்டரைச் சரணடந்து பரிகாரம் கேட்டான். அவர் அவனை ஐயாறப்பர் ஆலயத்தின் தெற்குக் கோபுர வாயிலுக்குச் சென்று அங்கு துவாரபாலகர் முன்பாக அமர்ந்து பஞ்சாக்ஷரம் ஓதும்படி கட்டளையிட்டுத் தானும் சிவபெருமானைத் துதித்து வேண்டினார்.

அந்த நிலையில் ஐயாறப்பர், தெற்கு கோபுர வாயிலைக் காவல் புரியும் துவாரபாலகரை ஏவி அந்தச் சிறுவனைக் காக்கும்படி கட்டளையிட்டார். அந்த துவாரபாலகர் சிறுவனின் உயிரைப் பறிக்க வந்துற்ற காலதேவனோடு போர்புரிந்து அவனை அழித்து முடித்தார். அப்படி காலன் சம்ஹாரம் செய்யப்பட்டவுடன், சிவபெருமான் அங்கு தோன்றி சுசரிதனை வாழ்த்தி நிறைந்த வாழ்வு பெற வரமளித்து, மணமுடித்து மகப்பேற்றினையடைந்து முக்தியடைய வரமருளினார். துவாரபாலகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட காலனையும் உயிர்கொடுத்து எழுப்பி அவனைத் தன் அடியார்களையும், இத்தலத்தில் வந்து தன்னை தரிசிக்கும் சிவநேசச் செல்வர்களையும் நெருங்காதிருக்கும்படி அறிவுறுத்தி அவனை அனுப்பி வைத்தார். திருக்கடவூரில் மார்க்கண்டனுக்கு உயிர்பிச்சையளித்து காலசம்ஹாரமூர்த்தியாக விளங்கும் அமிர்தகடேஸ்வரரைப் போலவே, இங்கு ஐயாறப்பரும் சுசரிதனுக்கு உயிர்பிச்சை அளிப்பதற்காக, துவாரபாலகரைக் கொண்டு காலனை வதைத்துப் பின் அவனை உயிர்ப்பித்து ஓர் திருவிளையாடல் புரிந்தார்.

எமபயம் தீர்த்து, சுசரிதனுக்காக யமனைப் போரில் மாய்த்த அந்த மூர்த்தியே இன்று தெற்கு கோபுரவாயிலில் இருக்கும் ஆட்கொண்டாராகும். இங்கு வந்து ஆட்கொண்டாரை தரிசித்து, அவர் சந்நிதியில் எப்போதும் புகைந்துகொண்டிருக்கும் குண்டத்தில் குங்கிலியம் வாங்கி இட்டவர், எமபயம், விஷ ஜந்துக்கள் பயம் இவை நீங்கி அமைதியாக வாழ்வர் என்பதால், இங்கு எப்போதும் மக்கள் குங்கிலியப் புகை போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த காரணங்கள் கொண்டே, சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் போன்ற சாந்தி நிகழ்ச்சிகளை இவ்வாலயத்தில் நடத்திக் கொள்வது மிகவும் சிறப்பானது.

தேர்த் திருவிழா.

சித்திரைத் திருவிழா ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவாக நடைபெறுகிறது. இத்திருத்தலத்தில் மூன்று தேர்கள் உண்டு. அவை ஐயாறப்ப சுவாமி தேர், அம்பிகை அறம்வளர்த்தநாயகித் தேர், சுப்பிரமணிய சுவாமித் தேர் என்பவை. ஏனைய மூர்த்தங்கள் தற்காலிக தேர்களில் எழுந்தருளச்செய்யப்பட்டு ஊர்வலம் வருகின்றனர்.

தேரடி எனும் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் சுவாமி தேர் மரச்சிற்ப அழகு நிறைந்தது. அதுபோலவே அம்பாளின் திருத்தேரிலும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்திருக்கும், அந்தத் தேர் அம்பாள் சந்நிதி கோபுரத்திற்கு எதிரே கீழவீதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தேர்த்திருவிழாவன்று சுற்றுப்புற கிராமங்களிலிருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசித்துச் செல்வர்.

பத்தாம்நாள் திருவிழா.

சித்திரைத் திருநாளின் பத்தாவது நாளன்று சித்திரை நட்சத்திரம் அமைந்த நாள். காலையில் சிவபெருமான் நடராஜ மூர்த்தியாகக் காட்சி தருகின்றார். இறைவன் மஞ்சள் நீராடி, நகர்வலம் வந்து தீர்த்தம் கொடுக்கிறார். இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பதினோராம் நாள் காலை பிக்ஷாடனர் எழுந்தருளி வலம் வருவார். அடுத்த நாளான பன்னிரெண்டாம் நாள்தான் 'சப்தஸ்தானம்' எனும் ஏழூர் திருவிழா.

'சப்தஸ்தானம்' எனும் ஏழூர் திருவிழா.

தென்னாட்டுத் தல விழாக்களில் திருவையாறு "சப்தஸ்தானம்" தனிச்சிறப்பு வாய்ந்தது. திருநந்தித் தேவர் சுயம்பிரகாசையை மணம் முடித்துத் திருமணக் கோலத்துடன் ஊர்வலமாக ஏழூர் தலங்களுக்கும் ஐயாறப்பரால் அழைத்துச் செல்லப்படும் விழாவே ஏழூர்த் திருவிழா.

முன்பே குறிப்பிட்டபடி திருமழபாடி திருத்தலத்தில் பங்குனி மாதத்தில் நந்தி தேவருக்குத் திருமண விழா நடைபெறும். அதன்பின் சித்திரை மாதம் பெளர்ணமியை அடுத்த விசாக நக்ஷத்திரத்தில், சித்திரைப் பெருவிழாவின் பன்னிரெண்டாம் நாளில் ஏழூர் விழா நடைபெறும். நந்தி தேவருக்குத் திருமணம் நடந்தபோது, திருவையாற்றுடன் தொடர்புடைய தலங்களான திருப்பழனத்திலிருந்து பல்வகைப் பழங்கள், திருச்சோற்றுத்துறையிலிருந்து திருவமுது, திருவேதிகுடியிலிருந்து வேதம் ஓதும் வேதியர்கள், திருக்கண்டியூரிலிருந்து மகாகண்டிகை முதலான ஆபரணங்கள், திருப்பூந்துருத்தியிலிருந்து பல்வகை மலர்கள், திருநெய்த்தானத்திலிருந்து நெய் முதலான அபிஷேகப் பொருட்கள் அனுப்பி உபசரிக்கப்பட்டதாகக் கூறப்படுவதால், அந்தத் தலங்களுக்கெல்லாம் நந்திதேவரும் ஐயாறப்பரும் நன்றி சொல்லிக்கொண்டு வருவதற்காக ஏழூர் செல்வதாக ஐதீகம். இது இந்த ஊர் தலவரலாற்றில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த "சப்தஸ்தான"த் தலங்கள் எவையெவை என்று பார்க்கலாமா: அவை 1. திருவையாறு. இத்தலம் குறித்து இந்த நூலில் முழுமையாகப் பார்த்து விட்டோம்.

2. திருப்பழனம்:
இவ்வூர் திருவையாறு கும்பகோணம் சாலையில் திருவையாற்றுக்குக் கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரை அடையுமுன் திங்களூர் எனும் அப்பூதியடிகளின் ஊர் உள்ளது. திருநாவுக்கரசர் சுவாமிகள் பாடிய விடந்தீர்த்த பதிகமாகிய "ஒன்றுகொலாம்" எனும் பாடல் இங்குதான் பாடப்பட்டது. இங்குள்ள சுவாமி ஆபத்சகாயர். அன்னை பெரியநாயகி. தேவாரப் பதிகங்கள் 6.

3. திருச்சோற்றுத்துறை:
திருப்பழனத்துக்குத் தெற்கே காவிரி, குடமுருட்டி ஆறுகளைக் கடந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சோற்றுத்துறை எனும் இந்தத் தலம். கெளதம முனிவர் தவம் செய்த இடமாக இது கருதப்படுகிறது. ஒரு பஞ்ச காலத்தில் சிவனடியார்களுக்கு சோறு அளித்து காத்தமையாலும், அருளாளர் எனும் அந்தணருக்கு அக்ஷய பாத்திரம் அளித்ததாலும் "சோற்றுத்துறை" என்று பெயர் பெற்றது. இந்த ஏழூர் திருவிழா காலத்தில் எல்லா மூர்த்தங்களும் இவ்வூருக்கு வரும் காலத்தில் இங்கு பெரிய அளவில் அன்னதானம் நடைபெறுகிறது. இங்கு கோயில் கொண்டிருக்கும் ஈசர் தொலையாச்செல்வர், ஓதவனேசுவரர், இறைவி ஒப்பிலாநாயகி, அன்னபூரணி. தேவாரப் பதிகங்கள் 6.

4. திருவேதிகுடி:
இவ்வூர் திருச்சோற்றுத்துறையிலிருந்து தெற்கே 3 கி.மீ தூரத்தில் உள்ளது. திருக்கண்டியூர் எனும் அட்டவீரட்டானத் தலத்திலிருந்து கிழக்கில் 3 கி.மீ. தூரம் வந்தாலும் இவ்வூரை அடையலாம். இறைவனை வேதங்கள் பூஜித்தமையால் இவ்வூர் திருவேதிகுடி எனும் பெயர் பெற்றது. இங்குள்ள விநாயகர் வேதவிநாயகர். இறைவன் வேதபுரீசர், இறைவி மங்கையர்கரசி. தேவாரப்பதிகங்கள் 2.

5. திருக்கண்டியூர்:
திருவேதிகுடியிலிருந்து மேற்கே 3 கி.மீ. தூரத்திலும், தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் இடையிலும் அமைந்துள்ளது இந்தத் தலம். அட்டவீரட்டானத் தலங்களில் இங்குள்ளவர் பிரம்மசிரக்கண்டீசர். பிரமனின் தலை கொய்யப்பட்ட தலம். இங்கு பிரம்மா, சிவன், விஷ்ணு மூவருக்கும் கோயில்கள் உண்டு. இங்குள்ள விஷ்ணுவுக்கு 'ஹரசாப விமோசன பெருமாள்' என்று பெயர். இறைவர் வீரட்டானேசுவரர். இறைவி: மங்களநாயகி. தேவாரப்பதிகங்கள் 2.


6. திருப்பூந்துருத்தி:
திருக்கண்டியூரிலிருந்து மேற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது இத்தலம். திருஞானசம்பந்தர் இவ்வூருக்கு வந்தபோது ஈசனை தரிசிக்க நந்தி விலகி வழிவிட்ட தலம். திருநாவுக்கரசர் ஒரு மடம் அமைத்துச் சைவத் திருப்பணியும் உழவாரப்பணியும் செய்த இடம். மதுரையில் பாண்டியன் நோய் தீர்த்து, சமணர்களை வென்று ஊர் திரும்பும் வழியில் திருநாவுக்கரசர் இவரது சிவிகையைத் தன் திருத்தொள்களில் தாங்கிவந்த தலம் இது. இறைவன் பெயர்: பூவணநாதர், இறைவி: அழகார்ந்தநாயகி. தேவாரப்பதிகங்கள் 3.

7. திருநெய்த்தானம்:
திருப்பூந்துருத்தியிலிருந்து வடக்கே குடமுருட்டி, காவிரி ஆகிய நதிகளைத் தாண்டி 3 கி.மீ. வந்தால் இவ்வூரை அடையலாம். திருவையாற்றிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செலும் நெடுஞ்சாலையில் வந்தாலும் 2 கி.மீ. தூரத்தில் இவ்வூரை அடையலாம். கலைமகள் பூசித்த இடம் இந்த நெய்த்தானம். சுவாமிக்கு நெய்யாடியப்பர் என்றும், அம்மனுக்கு இளமங்கையம்மை, வாலாம்பிகை என்றும் பெயர். தேவாரப் பதிகங்கள் 6. ஆக இவை ஏழும் சப்தஸ்தானத் தலங்கள்.

சப்தஸ்தான ஏழூர் உலா.

சப்தஸ்தானத் திருவிழாவின்போது நந்தியும் சுயாம்பிகையும் மணக்கோலத்தில் வெட்டிவேர்ச் சிவிகையிலும், ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடிப் பல்லக்கிலும் ஒவ்வோர் தலத்திற்கும் செல்கிறார்கள். அவ்வூர்களுக்கெல்லாம் இவர்கள் செல்லும்போது, அந்தந்த ஊர் சுவாமி இவர்களை எதிர்கொண்டு அழைத்துச் சென்று உபசரிப்பதாகவும், பின் அவர்களோடு புறப்பட்டு அடுத்த ஸ்தலத்துக்கு இவர்களும் செல்வதற்காகச் சேர்ந்து கொள்கிறார்கள், நிறைவில் அனைவரும் திருவையாற்றைச் சென்றடைகிறார்கள் என்பது ஏற்பாடு.

காலையில் திருவையாற்றில் புறப்பட்டு மேற்படி ஏழூர்களுக்கும் சென்றுவிட்டு கடைசியாக திருநெய்த்தானத்தை அடைந்த பின்னர் காவிரியாற்றில் இந்த ஏழூர் மூர்த்தங்களும் ஒன்றாகக் காட்சி கொடுப்பார்கள்.

இந்த காட்சி மிக அருமையானதும், மக்கள் ஆர்வத்தோடும், பக்தியோடும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியுமாகும். ஐயாற்றில் புறப்படும் இடத்திலிருந்து இந்த சுவாமிகளின் பின்னால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக எல்லா ஊர்களுக்கும் பின்னாலேயே சென்று இறுதியில் ஊர்திரும்பும் வரை உடனிருக்கிறார்கள். இந்த சுவாமியை மக்கள் தோளில் சுமந்து செல்வதால், இந்தப் பணியினைச் செய்வதற்காகவே பலர் பணியாற்றுகின்றனர். அப்படி தோளில் சுவாமியைச் சுமக்கும் இவர்கள் வழியில் காவிரி, குடமுருட்டி முதலிய ஆறுகளையும், ஊர்களையும் கடந்து செல்லும் களைப்பு தெரியாமலிருக்க பாடல்களைப் பாடிச் செல்வார்கள்.

ஏழூர் மூர்த்தங்களும் திருவையாறு நகர் புகும் காட்சி பொம்மை பூப்போடுதல் எனும் நிகழ்ச்சியோடு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்தத் திருவிழாவுடன் சித்திரை விழா நிறைவுக்கு வந்துவிடும்.

படித்துறைகள்

இங்கு காவிரியில் இருபத்து மூன்று புகழ்பெற்ற படித்துறைகள் உண்டு. காவிரி படித்துறைகளுக்கு விசேஷ சிறப்புக்கள் உண்டு. அதுபோலவே ஒவ்வொரு துறைக்கும் வெவ்வேறு பெயர்களும் உண்டு. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு. இன்றும் இந்த படித்துறைகள் புனிதமான இடங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றில் சில புகழ்வாய்ந்த இடங்களாகத் திகழ்கின்றன. குறிப்பாக புஷ்ய மண்டபத் துறை (பூச மண்டபம்). இங்கு நீத்தார் கடன்களைச் செய்யவும், திருவிழா காலங்களில் சுவாமி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடத்துவதும் சிறப்பாக நடைபெறுகிறது. அதுபோலவே செவ்வாய்க்கிழமை படித்துறை போன்ற மற்ற படித்துறைகளும் சிறப்பு வாய்ந்தவைகளாக விளங்குகின்றன. தற்போது புஷ்ய மண்டபத் துறையும், மண்டபத்தைச் சுற்றியுள்ள பகுதிகளும், அதற்குச் செல்லும் பாதையும் ஒரு நன்கொடையாளரால் சிமெண்ட் தரை அமைத்துக் கொடுத்து மிக அழகாக காட்சியளிப்பதைப் பார்க்கலாம்.

மற்ற விழாக்கள்.

மேற்குறிப்பிட்ட விழாக்கள் தவிர ஆனித் திருமஞ்சன விழா, ஆவணி மூலவிழா, நவராத்திரி விழா, மார்கழி மாதத் திருவாதிரை விழா, கார்த்திகை தீபவிழா, பங்குனி நந்திதேவர் திருமணவிழா, தவிர ஆடிமாதம் அறம்வளர்த்த நாயகிக்கு பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாக்களின்போது அம்மன் ஆலயத்தில் சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். நவராத்திரி ஒன்பது நாளும் அம்பாளுக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தை அமாவாசை - கைலைக்காட்சி.

ஆடிப்பூரத் திருவிழாவின்போது ஆடி அமாவாசையன்று திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் கைலைக் காட்சி அருளிய திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. வெகு தூரத்திலிருந்தெல்லாம் சிவனடியார்கள் கூட்டம் கூட்டமாக வந்து திருநாவுக்கரசரின் திருவுருவச் சிலையை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாகக் கொணர்ந்து கைலைக்காட்சி கண்டு வழிபடுகிறார்கள். ஐயாறப்பர் ஆலய வெளிப்பிரகாரத்தில் அமைந்திருக்கும் தென் கைலாயத்தில் இந்த விழா நடைபெறுகிறது. இங்கு சிவபெருமான் எழுந்தருளியிருந்து திருநாவுக்கரசருக்கு ரிஷப வாகனத்தில் அம்மையோடு கூடி காட்சி அளிக்கும்போது ஆயிரக்கணக்கான மக்கள் வழிபட்டு மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த விழாவினையொட்டி அப்பூதி அடிகள் - திருநாவுக்கரசர் பேரவை சார்பில் மிகப்பெரிய விழா நடத்தி இசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்கின்றனர். நூற்றுக்கால் மண்டபத்தில் தேவார இன்னிசை தொடர்ந்து நடைபெறும். இதனை வழக்கறிஞர் அருள் நமசிவாயம் தலைமையில் பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். சமீக காலமாக அவர் உடல் நலம் குன்றியிருப்பதன் காரணமாக இவ்விழாவை சேக்கிழாரடிப்பொடி திரு டி.என்.இராமச்சந்திரன், தில்லைஸ்தானம் மரபு ஃபவுண்டேஷன் ருக்குமணி அம்மாள், முனைவர் கெளசல்யா ஆகியோர் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

திருவையாற்றில் ஐயாறப்பர், அறம்வளர்த்தநாயகி ஆலயம் தவிர வேறுசில முக்கியமான இடங்களும் இருக்கின்றன. அப்பர் பெருமானுக்கு கயிலைக் காட்சியளித்த இடம் பிராமண மேட்டுத் தெருவில் அமைந்துள்ளது. அப்பர் குளம் எனும் அழகான பெயர் தற்காலத்தில் மருவி வழங்குகின்றது. இக்குளத்தின் கரையில் அமர்ந்த விநாயகர் கோயில் சிறப்பானது. ஆடிஅமாவாசையன்று இங்கு கயிலை காட்சி நிகழ்ச்சிக்காக ஐயாறப்பர் எழுந்தருள்வார்.