பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, May 7, 2020

பாஞ்சாலி சபதம் - 2ம் பாகம் சூதாட்டச் சருக்கம்


                                 பாஞ்சாலி சபதம் - 2ம் பாகம் சூதாட்டச் சருக்கம்



சூதாட்டச் சருக்கம் எனத் தலைப்பிட்ட இந்தப் பகுதியை மகாகவி பாரதியார் கலைவாணியை வேண்டித் தொடங்குகிறார். எதனையும் தெளிவுற அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல், சிந்திப்பவர்க்கு மகிழ்ச்சி உண்டாகுமாறு உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல், கண்ணீர் சிந்திடுமாறு சோக ரசத்தைப் பிழிந்து தருதல் இவையனைத்தும் ஒளி வளரும் தமிழ் வாணீ! நீ அருளும் தொழில்களன்றோ? அவற்றை எனக்கு சித்திக்கும்படி அருள்வாய் என்கிறார் கலைவாணி வாழ்த்தில்.

மன்னன் திருதராட்டிரனின் அழைப்பை, விதுரன் வந்து சொல்ல, அதன்படி இந்திரப் பிரஸ்தத்திலிருந்து புறப்பட்ட பாண்டவர்கள் அத்தினாபுரம் வந்தடைந்தனர். இவர்கள் வரும் செய்தியறிந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். அந்த நகரத்தின் சந்திகள், வீதிகள், சாலைகள், சோலைகள் எந்த திசை நோக்கினாலும் மக்கட்கூட்டம் நிறைந்து வழிந்தது. இவ்வளவு மக்கட்கூட்டமும் இதுநாள் வரை எங்கே இருந்தது என்று வியக்கும் வண்ணம் எள் விழவும் இடமின்றி நிரம்பியிருந்தனர்.

வேத விற்பன்னர்கள் வேதகோஷம் இசைத்தனர்; மன்னர்கள் தங்கள் தோள்தட்டி ஆர்ப்பரித்தனர்; யானைகளும், தேர்களும், குதிரைகளும் வீதிகள் தோறும் ஓசை எழுப்பிச் சென்றன. மங்கலம் பாடுவோர் இசைக்கும் ஒலியும், ஆடற்பெண்கள் நாட்டிய நிகழ்ச்சிகளும், கோடி வகை வாத்தியங்களின் இன்னிசை முழக்கங்களும் அந்த நகர் முழுதும் நிறைந்திருந்தன.

யுதிஷ்டிரன் முதலாய பாண்டவர்கள் ஓர் தேரில் ஏறி அம்மாண் நகர் வீதிகளில் வந்தபோது, பெண்கள் பொன் விளக்கேந்தி வர, பார்ப்பனர் பூர்ணகும்பங்கள் வழங்க, மக்கள் மலர் மழை பெய்திட, காற்றில் தோரணங்கள் ஆடிட அந்த நகரத்தின் எழில் கூடி விளங்கியது. இப்படி ஊர்வலமாக வந்த பாண்டவர் மன்னவன் அரண்மனை வந்தடைந்தனர். அரசவையிலிருந்த மன்னன் திருதராட்டிரனை வணங்கி ஆசி பெற்ற பின், பீஷ்ம பிதாமகரின் காலடிகளை வணங்கி, கிருபாச்சாரியார், துரோணர், அவரது புதல்வன் அசுவத்தாமன் மற்றுமுள்ள பெரியோர்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துப் பெற்றனர். பிரிந்திருந்தவர் கூடி அவரவர் குசலம் விசாரித்த பின் அந்தி வேளை வந்தது, சந்தி ஜபம் செய்ய அனைவரும் தங்கள் இருப்பிடம் சேர்ந்தனர்.

இரவுப் பொழுதை இனிதே கழித்தபின் மறுநாள் துயிலெழுந்து, தெய்வங்களைத் துதித்து, தூய பட்டாடைகளை அணிந்து, ஆபரணங்களையும், ஆயுதங்களையும் தரித்து மன்னனின் பொற்சபையினை அடைந்தனர். சபையில் கவுரவரும் கூட்டமாய் அமர்ந்திருந்தனர். பீஷ்மர் அமர்ந்திருந்தார், தர்ம நெறி தவறாத விதுரனும், பார்ப்பனக் குரவர்களும், நாட்டு மந்திரிமாரும் பிற நாட்டினர் பலப்பல மன்னர்களும், கெட்ட மதி படைத்த துரியோதனன் உறவினரும் நண்பர்களும் அந்த வான் பெரும் சபையிலே நிறைந்திருந்தார்.

புன் தொழில் சூதாட்டத்தில் இந்தப் புவியிலே யாரும் இணையில்லை என்று விளங்கிய சகுனி சபை நடுவினில் குதூகலத்துடன் வீற்றிருந்தான். சபையில் பெரிய பெரிய சூதர்கள் கூடியிருந்தனர். மாயம் வல்ல அவர்கள் கொக்கரித்து ஆர்ப்பரித்த வண்ணமிருந்தனர். இந்நிலையில் அவைக்கு வந்த பாண்டவர்கள் பெரியோர்களை வணங்கித் தங்கத்தாலான ஆசனத்தில் அமர்ந்த போது சூதில் வல்ல சகுனி சொல்கிறான். "தர்மத்தின் தோன்றலான உன் வரவினை எதிர்நோக்கி இவர்களெல்லாம் காத்திருக்கிறார்கள். போரில் வென்று பல வெற்றிகளைப் பெற்றிருப்பீர்கள், இப்போது வல்லுறு சூதெனும் போர்தனில் உனது வலிமையைப் பார்ப்போம் வா!" என்றான்.

சகுனியின் வார்த்தையினைக் கேட்ட தருமன் சொல்லுவான், "ஐய! சூது எனும் இந்தச் சதிச்செயலுக்கு என்னை அழைக்கிறாய். இதில் என்ன பெருமை இருக்கிறது. அறப் பெற்றிதான் இதற்குண்டோ? வீரத்தின் பெருமை உளதோ? உன் மனத்தில் வஞ்சனை கொண்டு, எங்கள் வாழ்வினை நீ விரும்பவில்லை என்பதனை அறிவோம். இம்மை மறுமை என இருமையுங் கெடுப்பது இந்தச் சூது. இதற்கு எம்மை அழைக்கிறாய்."

           பாபத்தை ஓர் சாத்திரமாகப் பயின்ற சகுனி கல கலவெனச் சிரிக்கிறான். "எதற்கு என்னென்னவோ பேசுகிறாய். உன்னை நாடாளும் மாமன்னன் என்று எண்ணி அழைத்து விட்டேன்; உன்னை மன்னரிலே தலை சிறந்தவன் என்று பலர் சொல்லக் கேட்டதனால், சில பொருள் விளையாட்டில் செலுஞ் செலவினுக்கு அஞ்சமாட்டாய் என்று நினைத்தேன். பாரத நாட்டின் அரசன் ஒரு உலோபி என்று எனக்குத் தெரியுமா? இதில் என்ன வஞ்சனை இருக்கிறது? மன்னர்கள் சூதாடுவது வழக்கம்தானே! இத்தனை பேர் மத்தியில் நட்டநடு மண்டபத்தில், அட சூரசிகாமணியே! உன்றன் சொத்தினை நான் திருடிக்கொள்வேன் என நினைக்கிறாயா? இதில் பயப்பட ஒன்றுமில்லை. விரைந்து ஆட வா! சூதாட அனைத்தும் இங்கு தயாராக உள்ளன. நிச்சயம் நீ வெல்வாய், வெற்றி உனக்கு எப்போதும் இயல்பானது தானே, நிச்சயம் நீ வெல்வாய், ஏன் பலவற்றை நினைத்து மனத்தைக் குழப்பிக் கொள்கிறாய். களியாட்டம் தொடங்கு" என்றான்.


          தோலுக்காகப் பசுவைக் கொல்லும் துஷ்டன் இந்த மகாபாவி இப்படிக் கூறலும், அறநூல்கள் தீது என்று விலக்கிய அனைத்துக்கும் அஞ்சுகின்ற தருமன் மனம் நொந்து சொல்லுகிறான்:- "அரசர்களுக்கு விதித்த நூல்களில் சூதாடுதல் விஷம் போன்றது என்று கூறியிருக்கிறார்கள், ஆதலால் நான் சூதாட்டத்தை விரும்பவில்லை. செல்வத்தின் மீதுள்ள பற்றினால் நான் இதனைக் கூறவில்லை. மேலோர் சொன்ன தர்மத்தை நிலைநிறுத்தவே இப்படிக் கூறுகிறேன். என்னை வஞ்சித்து என் செல்வத்தைக் கவருவோர் எனக்கு இடையூறு செய்யவில்லை. பழமையான வேதங்களைக் கொல்வதாக நினைக்கிறேன். என் உயிர்க்கிணையான பாரத நாட்டுக்குக் கேடு தரும் கலியை அழைப்பதாக நினைக்கிறேன். உன்னைப் பணிவோடு வேண்டுகிறேன், உன் நெஞ்சிற் கொண்ட தீய எண்ணத்தை விட்டுவிடு" என்றான்.

தீ கக்கும் விழிகளோடு சகுனி, "என்னப்பா சாத்திரம் பேசுகிறாய்" என்று கேட்டான். நற்குலத்தில் பிறந்த மன்னர்கள், பிறரைத் தாழ்த்தித் தன் சுயபெருமை பேசுவரோ? பேசத்தெரிந்தவன் என்பதற்காக நம்மவர் காத்துவரும் பழைய வழக்கத்தை மறந்தனையோ? மன்னர்களைப் போட்டிக்கு அழைத்தால் மறுப்பது உண்டோ? நன்கு தேர்ந்தவன் வெற்றி பெறுவான். இளைத்தவன் தோற்றிடுவான். இதில் ஏதும் சூது என்று இகழ்ந்திடுவாரோ? இப்படி வெட்கமில்லாமல் சாக்கு போக்கு சொல்ல வேண்டாம். இவ்வளவு மன்னர்கள் உள்ள சபையில் உன்னைச் சூதாட அழைத்து விட்டேன். வந்து ஆட சம்மதம் என்றால் சொல், மனத்தில் துணிவு இல்லை என்றால் அதனையும் சொல்லிவிடு" என்றான்.

வலிமையான விதியை எண்ணினான் தருமன். இந்தக் கேட்டைத் தவிர்க்க முடியாதோ? கேடுகெட்ட சகுனி சொன்னவை தருமன் நெஞ்சை வேதனைப் படுத்தியது. அந்த நாள் முதலாக இந்தச் சூதின் காரணமாக மக்கள் எத்தனை துன்பங்களை அனுபவித்தனர். எப்போதோ நடந்தது என்பதற்காக மூடர்களே! பொய்யை மெய் எனச் சாதிக்கலாமா? முன்பு என்று சொல்லும்போது அதற்கு ஏதேனும் கால வரையறை உண்டா? முன்னர் வாழ்ந்தவர்களெல்லாம் முனிவர்களா? நீங்கள் பிறக்கும் முன்பாக பாரில் மூடர்களே வாழ்ந்ததில்லையா? இந்த பூமி தோன்றிய காலந்தொட்டு இன்று வரையிலும் பற்பல கோடி மழைத்துளிகள் போல வாழ்ந்த மக்களுக்குள்ளேயும் நீங்கள் பிறப்பதற்கு முன்பும் மடமையும், நீசத்தன்மையும் இருக்கத்தானே செய்தன?

பொய் ஒழுக்கத்தை அறம் என்று ஏற்றுக் கொண்டும், பொய்மையைச் சாத்திர மென்று ஏற்றுக் கொண்டும் ஐயகோ! இந்த பாரத நாட்டில் அறிவில்லாதவர்களால், வருத்தமுற்று அழிந்து போன அறிவுடை யோர் பல கோடி. பற்பல அறநூல்களைப் பயின்றவன் என்றபோதும், உண்மை உணர்ந்தவர்களில் உயர்ந்தவன் என்றபோதும், விதியின் வசத்தால் தருமனும் சகுனியின் சூழ்ச்சிக்குப் பலியானான்.

புத்தியைக் காட்டிலும் விதி வலியதன்றோ? இந்த வையத்தில் விதியைக் காட்டிலும் வலிமை பொருந்தியது ஏதேனும் உண்டோ? நதியிலுள்ள ஓர் பள்ளத்தில் நாலாபக்கத்திலிருந்தும் அழுக்குப் படிவது போல செய்யும் கர்மப் பயன் நம்மைச் சேர்வதும் உண்டல்லவா?

பொய்மைச் சூதிற்கு தருமன் மனம் இணங்கி விட்டான். அங்கு தாயம் உருட்டலானார்கள். சகுனி ஆர்ப்பரித்துச் சிரித்தான். நல்ல பண்புகளுள்ள விதுரனைப் போன்ற சான்றோர்கள் எல்லாம் வாயை மூடிக் கொண்டனர். நடக்கும் சதியைக் கண்டு மதிமயங்கிப் போயினர். அந்த வேளையில் ஐவருக்கு அதிபன் தருமன் சொல்லுகின்றான்:- "சகுனி! பந்தயங்கள் சொல். பரபரக்காதே; அளவற்ற பல செல்வங்களுக்கு உரிமைபடைத்த அரசனாகிய என்னோடு சூதாடுவதற்கு நீ வந்துவிட்டாய். இங்கு பந்தயம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது" என்றான்.

இந்த வார்த்தையைக் கேட்ட துரியோதனன் எழுந்து சொல்கிறான்:- "அருமையான செல்வம் என்னிடம் அளவில்லாமல் இருக்கிறது. சூதில் நீ ஒரு மடங்கு வைத்தால் எதிரே நான் ஒன்பது மடங்காக வைப்பேன். வீண் பெருமை பேசாதே! மேலே நடக்கட்டும்" என்றான்.

"சூதில் ஒருவன் ஆட, வேறொருவன் பணயம் வைப்பதோ? இது என்ன தருமம், உன் பேச்சு அதர்மம் இல்லையா?"

"மாமன் சூதாடுவதற்கு மருமகன் பணயம் வைக்கக்கூடாதோ? இதிலே என்ன குற்றம் இருக்கிறது. பொழுது போவதற்காக இந்தச் சூதாட்டத்தை நடத்துகின்றோம். இதற்கு ஏன் இப்படி மூக்காலழுகின்றாய்?" என்று அங்க தேசத்தரசன் சொன்னான்.

சூதாட்டம் தொடங்கியது. தருமன் ஒரு மணிமாலையைப் பணயமாக வைத்தான், மகிழ்ச்சி யடைந்த பகைவன் கன தனங்களை வைத்தான், கண் இமைக்கும் நேரத்திற்குள் அதனை மாமன் வென்று தீர்த்து விட்டான். பழியில்லாத தருமன் பின்னர் ஆயிரம் குடம் பொன்னை வைத்தான், அதனையும் சகுனி வென்றான். பொன்னாலான தேர் ஒன்றை வைத்தான் தருமன், அங்கே தாயமுருட்டி சகுனி அதனை வென்றுவிட்டான். 

பாண்டவர்களிடம் சேவகம் செய்யும் ஆயிரக்கணக்கான அழகிய பெண்டிர், அவர்களைச் சூதில் வைத்திழந்தான் தருமன். வரிசையாக ஒவ்வொன்றாக இழந்து கொண்டே வந்தான் தருமன். நீருண்ட மேகம் போல ஆயிரக்கணக்கான கருத்த வாரணங்கள், அவை அனைத்தையும் இழந்தான். வெற்றிகளைக் குவித்து பெருமை சேர்த்த படைகளை வைத்து இழந்தான். தேர்களை வைத்தான், தேர்ப்பாகர்களை வைத்தான், எண்ணற்ற குதிரைகள் இவைகளையெல்லாம் வைத்து இழந்து விட்டான். பொற்கட்டிகள் நான்கு கோடி வைத்தான், கண் இழப்பவன் போல அவை அத்தனையும் இழந்தான். மாடுகளை மந்தை மந்தையாக வைத்து இழந்தான், ஆடுகளை இழந்தான், ஆட்களை வைத்து இழந்தான், இவற்றை யெல்லாம் கண்டு பூரித்துப் போன சகுனி சொல்வான், "தருமா இவையெல்லாம் இழந்தமைக்காக வருந்தாதே, இன்னும் உன்னுடைய நாடு இருக்கிறது. அதை இழக்க வில்லையே. வைத்து ஆடு. நம்பிக்கைத் தளராதே" என்றான்.

ஐயகோ! இதை என்னவென்று சொல்லுவது! ஒரு அரசன் செய்யக்கூடிய காரியமா இது? சூதாட்டத்தில் ஒரு நாட்டை வென்று அரசு புரிவதோ? இதென்ன கொடுமை! உலகம் இதனைத் தாங்குமா? வானம்தான் பொறுத்துக் கொள்ளூமா? புத்தியுள்ள மக்களா நாம்? தூ! என்று எள்ளி விதுரன் பேசுகிறான். "பாண்டவர்கள் உங்கள் தீச்செயலைப் பொறுத்துக் கொண்டாலும், துளசிமாலையணிந்த அந்தக் கண்ணனும் பாஞ்சாலத்து அரசன் துருபதனும் கடுங்கோபம் கொண்டு நம்முடைய வம்சத்தையே பூண்டோடு அழித்துவிடமாட்டார்களா? இங்கே அமர்ந்திருக்கக்கூடிய குரு குலத்து மன்னர்களுக்கெல்லாம் நான் ஒன்று சொல்லிக் கொள்வேன். மனதில் குறித்துக் கொள்ளுங்கள். இதனால் விளையப்போகும் போரில் மடிந்து போய் நரகத்தில் கிடந்து வருந்தும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள். குருகுலம் முழுவதும் அழித்திடவன்றோ வஞ்சகன் துரியோதனனை கெட்ட விதி நம்மிடையே வைத்திருக்கிறான். இந்த பூமியில் அவன் பிறந்தவுடனே கிழநரி போலவல்லவா அலறி ஊளையிட்டான். அதனைக் கேட்ட நிமித்திகர்கள் இந்தக் குழந்தை பிறந்ததனால் குலத்தில் பெரும் கலகமொன்று ஏற்படப்போகிறது பாருங்கள் என்று சொன்னதைக் கேட்டோமல்லவா?

விதுரன் திருதராஷ்டிரனை நோக்கி, "சூதாட்டத்தில் உன் மகன் வெற்றி பெறுவதை சொர்க்க போகத்தையே பெற்றவன் போல, பேதையாகிய நீ முகம் மலர்ந்து ஆசை மிகுதியோடு உட்கார்ந்திருக்கிறாய். மேலே சென்று மலையுச்சியில் இருக்கும் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டு வேடனொருவன் கால் நழுவிக் கீழே விழுந்து மாண்டுபோகக்கூடிய பெரிய சரிவு அங்கேயிருப்பதைக் கவனிக்காமலிருப்பதைப் போல உனக்கு ஏற்படப்போகும் அபாயத்தை எண்ணாமலிருக்கிறாய். இங்கு நடைபெறும் சூதில் உன் புத்தியும் கள்ளால் மயங்குவது போல மயக்கமடைந்து வருவதைப் பார். குலம் முழுதும் துரியோதனனுக்காக அழிந்து போகலாமா? அன்புகொண்ட இந்த பாண்டவர்களைப் பாதகச் செயலால் அழிக்க முற்பட்டிருக்கிறாய். நீ கற்ற கல்வியும் கேள்வியும் மண்ணாகிவிட்டது; அத்தனையும் கடலில் கரைத்தப் பெருங்காயம் போல ஆயிற்று. வீட்டிற்குள் நரியை, விஷப்பாம்பை பிள்ளையாக வளர்த்து விட்டோம். நாட்டில் உன் புகழ் ஓங்கிடுமாறு இந்த நரியை விரட்டிவிட்டுப் புலிகளைக் கொள்வாய். மோட்டுக் கோட்டானை, காக்கையை விரட்டிவிட்டு பலம்வாய்ந்த மயில்களைக் கொள்வாய். விளையப்போகும் கேட்டினைக் கண்டு மகிழ்ந்து போவாயோ? உன் காதுகள் கேட்கும் சக்தியை இழந்துவிட்டனவோ?"

"சாகப்போகிற வயதில் ஏன் அண்ணே உன் தம்பியின் மக்களுக்குரித்தான சொத்துக்களுக்கு ஆசைப்படுகிறாய்? அவர்கள் உன்னை நம்பித்தானே வந்திருக்கிறார்கள். உன்னைத்தானே தலைவன் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நீ விரும்பினால் அத்தனைச் சொத்துக்களையும் அவர்கள் உனக்குத் தானமாகத் தந்திடுவார்களே. தீயினையொத்த நரகத்தில் ஆழ்த்தக்கூடிய கொடிய செய்கையை ஏன் தொடர்ந்து நடத்த அனுமதித்திருக்கிறாய்?"

"குருகுலத்து அரசன் சபையில் ஆற்றல்மிக்க துரோணர், கிருபர், பெரும்புகழ் வாய்ந்த அந்த கங்கையின் மைந்தன் பீஷ்மர், பேதை நானும் மதிப்பிழந்து போக, கோணல் புத்தி சகுனி மட்டும் சொல்லும் மந்திரம் செல்லுபடியாகிறதே. அருகில் வைத்துக்கொள்ள தகுதியுள்ளவனா அவன்? அவனை வெளியேற்று அண்ணே! தர்ம நெறி தவறியபின் வாழ்வது இன்பம் என்று மட்டும் நினையாதே. புத்தி இழந்த சகுனியின் சூதால் புண்ணியர்களான பாண்டவர்களை எதிரிகளாக்கி, நீ ஒரு கீழ்மையானவன், பாதகன் என்று உலகத்தார் ஏசுவதைக் கேட்டுக் கொண்டு அரசாளக்கூடிய வாழ்வை விரும்பிடலாமோ? சூதாட்டத்தை நிறுத்து; நீ வாழ்க!" என்றான் விதுரன்.

அறிவு சான்ற விதுரன் பேசியதை அரவக்கொடியுடைய துரியோதனன் எரியும் நெஞ்சுடன். கேட்டான். மேலோர் சொல்லும் அறவுரைகளெல்லாம் நீசர்கள் ஏற்றுக் கொள்வதுண்டோ? கண்கள் இரண்டிலும் தீப்பொரி பறக்க புருவங்கள் துடிக்க கோபம் தலைக்கேற, மதி மழுங்கிப் போய் அவன் சொல்லுகிறான், "நன்றி கெட்ட விதுரா! சிறிதும் நாணமற்ற விதுரா! தின்ற உப்பினுக்கே நாசம் தேடுகின்ற விதுரா! அன்று தொடங்கி நீ எங்கள் அழிவையே நாடுகின்றாய். இந்த அரசவையில் உன்னை உட்காரவைத்த என் தந்தையின் மதியை என்னவென்று சொல்வேன்?"

"அந்தப் பாண்டவர்பால் நெஞ்சையும், எங்கள் அரண்மனைக்கு வயிற்றையும் வைத்துக் கொள்ளும்படி அன்றே தெய்வம் உனக்கு வகுத்துவிட்டது போலும்? உண்மையைச் சொல்லுபவன் போலும், பொதுவான விதிகளை உணர்ந்தவன் போலும் அந்தப் பாண்டவர் பக்கம் நின்றுகொண்டு எங்கள் அழிவுக்கு வழிவகுக்கிறாய். மன்னர்கள் சூழ்ந்த இந்த சபையில் எங்களுடைய எதிரிகளோடு சூதாட்டத்தில் முறையாகப் பணயம் வைத்து வெல்லுகின்றோம். இதில் என்ன குற்றத்தைக் கண்டாய்? யாரிடம் வந்து தர்மத்தைப் பற்றிப் பேசுகிறாய்? யார் வீட்டிலாவது கன்னம் வைத்துத் திருடுகிறோமா? அல்லது பற்களைக் காட்டி கெஞ்சி ஏய்க்கிறோமா? பொய்களைப் பேசியே வாழ்பவர்களும், உதட்டாற் புகழுரைகளைப் பேசி வாழ்பவர்களும் இந்த பூமியில் இருக்கிறார்கள். அவர் தம் வழியில் வந்ததுண்டோ? செய்யக்கூடாதவற்றைச் செய்பவர்களை நல்வழிப்படுத்த நீ முயன்றால், அறிஞர்களுக்கு அது இழுக்கு அல்லவா?

“உண்மையான அன்பு இல்லாத பெண்ணொருவளுக்கு ஒருவன் ஆயிரம் நன்மைகள் செய்தாலும், அவள் தருணம் கிட்டியபோது முன்பின் எண்ணாமல் அவனை விட்டு விலகிவிடுவாள். வீணான உபதேசம் தேவையில்லை; எங்கள் பொறுமையைச் சோதிக்காதே. உனக்கு எங்கே விருப்பமோ அங்கேயே போய்விடு" என்றான் துரியோதனன்.

நாலாபுறத்திலுமிருந்தும் வந்துள்ள மன்னர்கள் நிறைந்த சபையில் தன்னைக் கொல்வதைப் போன்ற சுடுசொற்களால் சாடுவதை அணுவளவும் பொருட்படுத்தாமல் விதுரன் சொல்லுகின்றான், "சென்றாலும், இருந்தாலும் இனி என்னடா? செய்யும் காரியத்தின் நெறியறியாத சிறியன் நீ! உன்னை அழிந்துபோகாதபடி காக்க முயன்று பார்த்தேன். பொல்லாத விதியிடம் நான் தோற்றுவிட்டேன். விஷம் தோய்ந்த மனத்தை உடையவர்கள் உனக்கு நன்மை செய்ய மாட்டார்கள் என்று கருதியே நானும் உனக்கு நல்வழி காட்ட முயன்றேன். நெடுமரம் போல் வளர்ந்து விட்ட உனக்கு யாரும் நல்லவைகளைக் கூறியதில்லை போலும்."

"தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழி காட்டுவோர் மொழிகளைக் கேட்காத நரபதியே! உன் அரசவையில் கூடியிருக்கிற மன்னர்களும், அமைச்சர்களும், நெறிமுறை காட்டிடும் பார்ப்பார் இவர்கள் உன் அவையில் இருப்பது சிறிதும் தகாது கண்டாய். பொற்கச்சணிந்த வேசைகளும், கேடுகெட்ட வேலைகளைச் செய்யும் அடிமைகளும் மற்றும் குலம்கெட்ட நீசர்கள், பைத்தியக்காரர்கள், இவர்களே உனக்குரிய அமைச்சர்களாக இருக்கத் தகுதியுள்ளவர்கள். போனாலும், இருந்தாலும் இனி என்னடா? உனக்காகவா நான் இவ்வளவையும் இங்கு சொன்னேன்? இந்த மன்றத்தில் நிறைந்திருக்கும் மன்னர்கள், பார்ப்பார், மதியில்லாத மன்னனும் தெரிந்து கொள்வதற்காகச் சொன்னேன். இதெல்லாம் இன்றோடு முடியக்கூடியதா? இனி நடக்கப் போவதை நானும் அறிவேன். பீஷ்மாச்சாரியாரும் அறிவார் தெரிந்துகொள்! புலன்களை அடக்கி, ஆசைகளையெல்லாம் பொசுக்கி விட்ட யோகியான பீஷ்மரும் ஒன்றும் பேசாமல் இருக்கிறாரே! இதெல்லாம் விதியின் வழியில் நடைபெறுகிறது என்பதை நான் உணர்ந்திருந்தாலும், பேதையாகிய நான் வெள்ளை மனம் படைத்தவனாதலால், மகனே! துரியோதனா! உன் சதி வழிகளைத் தடுத்திட இவ்வளவும் பேசினேன். சரி! சரி! இங்கே பேசுவதனால் எந்தப் பயனும் இல்லை. உன் மனம் போல செய்துகொள்" என்று விதுரன் சொல்லிவிட்டு வாய்மூடித் தலை குனிந்து தன் இருக்கையில் அமர்ந்தான். கலியும் கவலையில்லை இனி பூமியில் நமது ஆதிக்கம்தான் என மகிழ்ந்தான். பாரதப் போர் வரப்போகிறது என்று தேவர்களும் மகிழ்ந்தார்கள்.

மீண்டும் சூது தொடங்கியது. சூதாட்டக்காய் உருட்டப்பட்டது. மனவக்கிரம் கொண்ட சகுனி இப்போது பேசுகிறான். "தருமா! சூதில் நீ அழித்ததெல்லாம் மறுபடி உன்னிடமே வந்து சேரும். மனச் சோர்வடைந்திடாதே, ஊக்கத்தோடு விளையாடு" என்றான். கோயிலில் பூசனைகளைச் செய்ய வேண்டிய பூசாரி அங்குள்ள சிலைகளைக் கொண்டுபோய் விற்பது போலவும், வாயில் காப்போனாக இருக்கும் காவலாளி வீட்டை சூதில் வைத்து இழப்பது போலவும், ஆயிரக்கணக்கான நீதிகளை உணர்ந்த தருமன் நாட்டைச் சூதில் வைத்து இழந்தான், சிச்சீ! கீழோர் செய்யும் கேவலமான செய்கையைச் செய்து விட்டான்.

நாட்டில் வாழும் மக்கள் எல்லாம் தம்மைப் போல மனிதர்கள் என்று எண்ணவில்லை. ஆட்டுமந்தை யென்று இவ்வுலகை மன்னர் எண்ணி விட்டார். எத்தனையோ நீதி நூல்கள் அவற்றையெல்லாம் உணர்ந்தவர்கள்தான் என்றாலும் நாட்டை ஆளும் சட்டதிட்டங்களை மனிதர் நன்கு செய்யவில்லை. பாரபட்சம் இல்லாமல், தர்மத்துக்கெதிராகச் செயல்படாமல், வஞ்சனை இல்லாமல், பிறரைத் துயரில் வீழ்த்தாமல் ஊரை ஆளுகின்ற முறைமை உலகில் ஓர் புறத்திலும் இல்லை. ஊம்..... இவைகெளெல்லாம் சாரமற்ற வார்த்தைகள், இவற்றை இனிப் பேசி என்ன பயன்? கதையைத் தொடர்ந்து சொல்வோம்.

சகுனி சொல்கிறான், "தருமா! உன் செல்வம் முழுவதும் இழந்துவிட்டாய். தேசத்தையும், குடிமக்களையும் சூதாடி இழந்துவிட்டாய். பற்பல வளம் பொருந்திய இந்த பூமிக்கு தருமன் அதிபன் என்ற பெரும்புகழ் இனி பழைய கதையாகி விட்டது. இப்போது நான் சொல்வதை நீ கேள்! இன்னுமொரு பணயம் வைத்து நீ ஆடுவாயானால் வெல்வதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி நீ பெறும் வெற்றியினால் இதுவரை நீ இழந்த பொருள் அனைத்தையும் மீட்டு விடலாம்."

"செல்வம் எல்லாவற்றையும் இழந்த பின்னர் நீயும் உன் தம்பிமார்களும் எப்படி வாழ்வீர்கள்? பொல்லாத இந்த சூதாட்டத்தினால் உன்னை பிச்சையெடுக்கும்படியாக விடுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. உனது தம்பிமார்கள் இருக்கிறார்களே, அவர்கள் சூரர்கள், வல்லவர்கள். நான் சொல்வதற்காக வருத்தப்படாதே; அவர்களைப் பணயமாக வைத்து ஆடி, இழந்ததை மீட்டுக் கொள்" என்றான் சகுனி. இதனைக் கேட்ட தேரோட்டி மகன் கர்ணன் சிரித்தான். சபையிலிருந்தோர் கண்ணீர் சிந்தினர். இருள் நிறைந்த மனத்தினன், களவை இன்பமாக நினைப்பவன், அரவக்கொடி கொண்ட வேந்தன் துரியோதனன் உவகைமிக்கோனாய்ச் சொல்லுகிறான், "தருமன் தம்பிமார்களை வைத்து ஆடினால், பரந்து விரிந்த எங்கள் நாட்டினைப் பணயமாக வைக்கிறோம். இதில் அவன் வென்று விட்டால் முன்பு இழந்த அனைத்தையும் அவனிடமே மீண்டும் அளித்து விடுகிறோம். நம்பிக்கையோடு விளையாடு தருமா! நாட்டை இழந்த பிறகு அம்புபோல விழிபடைத்தவள், உங்கள் ஐவருக்கும் உரியவள் உன்னை இகழமாட்டாளா? அந்த மாடுமேய்க்கும் கண்ணன் தான் பேசுவானோ? உன் கவலைகளைத் தீர்த்து வைக்கிறோம் சூதாட்டம் தொடரட்டும்" என்றான்.

இவ்வளவான பிறகும் தம்பிமார்கள் வாய் திறக்கவில்லை. நெஞ்சம் துவண்டுபோய் தலை குனிந்து உட்கார்ந்திருந்தனர். பொந்திலிருக்கும் நாகம் போல பீமன் மூச்சு விட்டான். காமன் போல் அழகுள்ள பார்த்தன் முகத்தில் களை இழந்து விட்டான். ஒழுக்கமிக்க நகுலன் ஐயோ! நினைவிழந்து விட்டான். முக்காலமும் உணர்ந்த சகாதேவன் எதுவும் நடக்காதது போல அமைதியாக இருந்தான். கங்கை மைந்தன் பீஷ்மன் கனல்போல துடிக்கும் நெஞ்சத்தோடு இருந்தான். பொங்கி வரும் சினத்தீயால் கூடியிருந்த மன்னர்கள் வெப்ப மூச்சு விட்டார். அங்கங்கள் நொந்து விதுரன் சோர்ந்து போனான். சிங்கங்கள் ஐந்தை நாய்கள் சேர்ந்து கொல்லும் காட்சி கண்டு அனைவரும் இவ்வாறாயினர்.

எப்போதும் பிரமத்தில் சிந்தை செலுத்தி உலகம் ஓர் விளையாட்டு என்று எண்ணி வாழ்கின்ற ஞானி சகாதேவனை சூதில் பணயம் என்று வைத்தான் தருமன். பகடை உருட்டப்பட்டது; அங்கு சகுனி வெற்றி பெற்றான். நகுலனையும் சூதில் வைத்து இழந்தான் அப்போதுதான் தருமனுடைய புத்தியில் சிறுபொறி போன்றதொரு எண்ணம் தோன்றியது. என்ன கேவலமான செய்கை செய்து விட்டோம் என்று. அவ்வெண்ணம் தோன்றிய அடுத்த நொடி சகுனி சொல்கிறான், "ஐய! இவர்கள் இருவரும் வேறொரு தாயின் வயிற்றில் பிறந்தவர் என்றுதானே இவர்களைச் சூதில் பணயம் வைத்திழந்தாய்? பலம்கொண்ட பீமனும், பார்த்தனும் குந்தியின் வயிற்றில் பிறந்தவர் உன்னைவிட கண்ணியமிக்கவர் என்றுதானே இவர்களைப் பணயம் வைக்கவில்லை" என்று புண்ணியமிக்கத் தருமனை அந்தப் புல்லன் கேட்டான். தருமனுக்குச் சுள்ளென்று கோபம் வந்தது. அவன் சொல்லுகிறான், "அட! சூதில் அரசை இழந்துவிட்டாலும், எங்களில் ஒற்றுமை நீங்கிவிடவில்லை. உயிராலும், உள்ளத்தாலும் நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். இவர்களுக்குள் மித்திர பேதம் செய்து பிரித்துவிடலாம் என்று பாதக எண்ணம் கொண்டிருக்கிறாய்."

"இதோ! வில்வித்தையில் நிகரற்றவன், ஏழுலகங்களுக்கும் ஈடானவன், கண்ணனுக்கு ஆருயிர்த் தோழன், எங்கள் கண்களைப் போன்ற இனியவன், வண்ணமும், திண்மையும், சோதியும் பெற்று வானத்து அமரரைப் போன்றவன், எண்ணரும் நற்குணங்கள் சான்றவன், புகழ் ஏறும் விஜயனைப் பணயமாக வைக்கிறேன். உன் பொய்மைக் காயை உருட்டுவாய்!" என்று விம்மலோடு கூறினான் தருமன்.

மாயமே உருவான சகுனி மகிழ்ச்சியோடு கெட்ட பகடையை உருட்டினான், அவன் கூறியபடியே தாயம் விழுந்தது, சகுனியும் வென்றான். வெறும் ஈயத்தைப் பொன்னென்று காட்டுகின்றவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்களே. சகுனி கொக்கரித்து ஆர்த்தெழுந்தாடினான். அவன் சொல்லுகின்றான், "எட்டுத் திக்குகளையும் வென்ற பார்த்தனை வென்று தீர்த்துவிட்டேன், இனி பீமனைப் பணயமாகக் கூறு" என்றான். நெஞ்சம் நிரம்பிய கோபத்தால் நீதியை மறந்த தருமன், "ஐவர் தமக்கோர் தலைவனை, எங்கள் ஆட்சிக்கு வேர் போன்ற வலியனை, ஒரு தெய்வமே எதிர் நின்று எதிர்த்தாலும் சீறியடிக்கும் திறம் படைத்தவனை, நெடிய தும்பிக்கைகளையுடைய யானை பலவற்றின் பலத்தைக் காட்டக்கூடிய பெரும் புகழ் பீமனை உங்கள் பொய்வளர் சூதினில் பணயமாக வைக்கிறேன்! வென்று போ" என்று கோபத்தோடு உரைத்தான்.

அந்தச் சூதில் பீமனைத் தோற்றான். அந்தத் தீயவர்கள் வெல்வதைக் கண்ட துரியோதனாதியர் போர்க்களத்தில் ஒரு யானை அடிபட்டு வீழ்வதைக் கண்டு பல பூதங்கள், நாய், நரி, காகங்கள், மாமிசம் விரும்பும் கழுகுகள் இவையெலாம் உள்ளம் களிகொண்டு மகிழ்தல்போல் நின்று தங்கள் மார்பிலும் தோளிலுங் கொட்டி மகிழ்ந்தார். மனம் களிகொண்டு குதித்தாடினார். கூடியிருந்த மன்னர்கள் தங்களை மன்னர்கள் என்பது மறந்து போய் திருடர்களைப் போல் மகிழ்ந்தனர். சின்ன மதிபடைத்த சகுனி சிரிப்போடு, "இன்னும் வேறு பந்தயம் வை" என்றான். தருமன் துக்கத்தால் தன்னை மறந்திருந்ததால், தன்னையே பணயமாக வைத்தான். பிறகு முந்தைய கதையைப் போலத்தான், அந்த மோசச் சகுனிக்கு வெற்றிதான்.

துரியோதனன் பொங்கி எழுந்து பூதலத்து மன்னர்களுக்குச் சொல்கிறான், "பாண்டவர் ஒளி மங்கி அழிந்தனர். இந்தப் புவி மண்டலம் இனி நம்முடையது. இவர்களுடைய அளவற்ற செல்வம் இனி நம்மைச் சார்ந்தது. வாழ்த்துங்கள் மன்னர்களே!" என்று சொல்லி தம்பியை அழைத்து "இந்த நல்ல செய்தியை பறையறைந்து மாநிலம் முழுதும் அறிவிப்பாயடா" என்றான். அதுகேட்டு சகுனி, "வெந்த புண்ணில் வேலை நுழைப்பது போல் உன்னைப் போன்றவர்கள் செய்யலாமா? கண்ணில்லாத உனது தந்தை இவர்களை மிகவும் நேசத்தோடு எண்ணியிருப்பதை நீ அறிவாயல்லவா? இவர்களெல்லாம் யார்? உனது சகோதரர்களல்லவா? மகிழ்ச்சிக்காகத் தொடங்கிய சூதாட்டமல்லவா இது, இதில் இவர்களை வெட்கமடைய வைப்பது நியாயமா? இன்னும் பணயம் வைத்து ஆடுவோம். இப்போதுகூட இவர்கள் வெற்றி பெறலாம் அல்லவா? பழையபடி பொன்னும் குடிமக்களும் தேசமும் திரும்பப்பெற்று பெருமையோடு வாழ்வதற்கு இடமிருக்கிறதே. ஒன்று செய்யலாம். ஒளிபொருந்தியவளும் அமுதம் போன்றவளுமான இவர்களது தேவியை வைத்திட்டால், அவள் மிகுந்த அதிர்ஷ்டமுடையவள் அல்லவா, அதனால் இவர் தோற்றது அனைத்தையும் மீட்டலாமே."

இப்படி அந்த மாமன் உரைக்கவும், மனம் மகிழ்ச்சியடைந்த துரியோதனன்,"சரி சரி, நல்லது நல்லது" என்றான். நாய் ஒன்று தேன் கலசம் என்றெண்ணிக்கொண்டு வளைந்த வெற்று சட்டிக்குள் நாக்கைவிட்டுத் துழாவி இன்புறுதல் போல் மகிழ்ச்சியடைந்து ஒன்றும் பேசாமலிருந்து விட்டான். உலகத்து தர்மங்களெல்லாம் அழிந்து போயின.

பாவிகள் நிறைந்த சபையில் புகழ்ப் பாஞ்சால நாட்டின் தவப்பயனும், ஆவியினியவளும், உயிர்பெற்று உலாவும் அமுதம் போன்றவளும், ஓவியம் போன்ற அழகுடையவளும், அருள் ஒளியைப் போன்றவளும், புவிக்கு லட்சுமியும், எங்கு தேடினும் கிடைத்தற்கரிய திரவியம் போன்றவளும், உலகில் நடைபயிலும் தெய்விக மலர்க்கொடி போன்றவளும், மின்னல்போன்ற வடிவுடையவளும், பேரழகியுமான இன்பவனம் போன்ற திரெளபதியைச் சூதில் பணயமென்று கொடியோர் நிறைந்த அவைக்களத்தில் தர்மத்தின் நாயகன் நிச்சயித்தான்.

புனிதமான வேள்விக்குரிய பொருட்களை புலை நாய்கள் தின்றிட வைத்திடல் போல், பொன்னாலான உத்தரங்களுள்ள மாளிகை கட்டி பேய்களை அதில் குடியமர்த்துவது போல், மனிதனை விற்றுப் பொன் வாங்கி அதிலோர் அழகிய ஆபரணம் செய்து அதனை ஆங்கோர் ஆந்தைக்குப் பூட்டி அழகு பார்ப்பது போல், கேட்பதற்கு ஆளில்லாமல் உயிர்த் தேவியைக் கீழ் மக்கட்கு அடிமையாக்கினான் தருமன்.

செருப்பு தைப்பதற்குத் தோல் வேண்டுமென்று ஒரு செல்லக் குழந்தையைக் கொல்வார்களோ? ஆசைப்பட்டு விளையாடும் இந்தக் கேவலமான சூதாட்டத்தில் பணயப்பொருளா பாஞ்சாலி? தருமன் பாஞ்சாலியைப் பணயம் என்றவுடன் கெட்ட மாமனும் இரு பகடையென்று உருட்டினான். பொய்மைக் காய்களும் இரு பகடைகள் விழுந்தன.

கூடியிருந்த தீயவர் கூட்டம் எழுந்தாடியது. திக்குக்கள் எல்லாம் குலுங்கின. தக்குத் தக்கென்றே அவர்கள் தோளினைத் தட்டிக் குதித்தாடுகின்றார். வேண்டும் இந்த தருமனுக்கு என்று சொல்லி ஓ ஓ என்று கூச்சலிட்டார். கக் கக் கென்றே நகைத்திடுவார். ஓடிவந்து துரியோதனா கட்டிக்கொள் எமை யென்பார். சகுனி மாமனைத் தூக்கிக்கொள் என்பார். அந்தத் தீய சகுனிமேல் மாலைகளை வீசுவார். செல்வங்களை மட்டுமல்ல, நாட்டையும் காமத் திரவியமாம் இந்தப் பெண்ணையும் நம் கைவசமாகச் செய்தான், மாமன் ஓர் தெய்வம் என்பார். துரியோதனன் வாழ்க என்று சொல்லிக் கூத்தாடுவார்.

துரியோதனன் எழுந்தான், மாமன் சகுனியைத் தன் மார்புறக் கட்டித் தழுவினான். "மாமனே! என் துயர் தீர்த்தாயடா, எனக்கு ஏற்பட்ட இழிவைப் போக்கிவிட்டாய். அன்று என்னைப் பார்த்து நகைத்தாளடா மாமனே, அவளை எனக்குரிமையாக்கி விட்டாய். இதை என்றும் மறவேனடா மாமனே! நான் உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன். ஆசை தணித்தாயடா, மாமனே, என் உயிரைக் காத்தாயடா! உனக்கு பூசைகள் செய்வோம், பொங்கலிட்டு வழிபடுவோம். நமது நெடுநாட்பகை நாசமடைந்ததடா, நாம் இனி வாழ்ந்தோமடா! எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை, உயிர் மாமனே, எனக்குப் பேரின்பம் கூட்டிவிட்டாய்" என்று பல சொல்லிவிட்டு துரியோதனன் எண்ணி யெண்ணிக் குதிப்பான். குன்று ஒன்று எழுந்து குதிப்பதுபோல் அவன் கைகொட்டிக் குதித்து ஆடுவான். அந்த சபை குழப்பமடைந்து அங்கிருந்தோர் யாவரும் வகை தொகை யொன்றுமின்றி அன்று நடந்துகொண்டதெல்லாம், என்றன் பாட்டினில் ஆக்குதல் எளிதாகுமோ என்கிறார் பாரதி.

திரெளபதியை மன்றுக்கு அழைத்து வர துரியோதனன் இட்ட கட்டளையினால் பூமியில் ஏற்பட்ட அதர்மக் குழப்பத்தை மகாகவி இவ்வாறு வர்ணிக்கிறார். தர்மம் அழிந்து போய், சத்தியமும் பொய்யாகி, தவங்களனைத்தும் பெயர் கெட்டு மண்ணாகி, வானத்துத் தேவர் வயிற்றிலே தீப் பாய்ந்ததுபோலாக, மோன முனிவர்கள் முறை தவறி என்ன செய்கிறோமென்று அறியாமல் மதி மயங்க, வேதங்கள் பொருளை இழந்து வெற்றுரையாகி விட, நாதங் குலைந்து நடுமை யின்றிப் பாழாக, கந்தர்வ ரெல்லாம் களை யிழக்கச் சித்தர் முதல் அந்தரத்து வாழ்வோர் அனைவரும் பித்துற, பிரம்மன் நாவடைத்துப் போக, சரஸ்வதி தேவிக்கு புத்தி மயங்கிட, வான்முகில் போன்ற கருநிறத்துத் திருமால் யோகநித்திரை கலைந்து ஆழ்ந்த துயிலெய்திவிட, செல்வத்தின் அதிபதியாம் ஸ்ரீதேவி முகத்தின் செம்மை நீங்கிக் கருமையாக, மகாதேவன் யோகம் மதிமயக்கமாகி விட, சூரியனாந் தெய்வத்தின் முகத்தே யிருட் படர இப்படியெல்லாம் குழப்பம் ஏற்பட்டதாம்.

மூடன், உள்ளம் கருத்தவன், வீரமிலா கோழை துரியோதனனும் சுறுக்கெனத் திரும்பி விதுரனைப் பார்த்துப் பேசுகிறான். "போ விதுரா! நீ என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்? வளைந்த நெற்றியும் மிகுந்த அழகும் உடைய, முன்னே பாஞ்சாலனின் மகளாகப் பிறந்தவளும், இன்று சூதில் நாம் வென்றெடுத்த விலைமகளிடம் சென்று நடந்த விவரங்களையெல்லாம் சொல்லி நன்கு உணர்த்தி, ராஜ சபையிலிருக்கும் உன் மைத்துனர்களின் தலைவன் தன் வீட்டில் ஏவல் செய்வதற்கு உன்னை அழைக்கிறான் என்று சொல்லி அவளை இங்கு கொணர்வாய்" என்றான்.

          துரியோதனன் இங்ஙனம் சுடுசொற்கள் கூறியதைக் கேட்ட பெரியோன் விதுரன் பெரிதும் சினங்கொண்டு, "மூடனே, வரப்போகும் கேட்டை அறியாமல் சொல்லக்கூடாத வார்த்தைகளைக் கீழ்மையினால் சொல்லிவிட்டாய். புள்ளிச் சிறுமான் புலிமீது பாய்வது போல், சிறிய தவளை பெரிய பாம்பிடம் மோதுவதுபோல், பாண்டவர்களின் சினமெனும் நெருப்பைத் தூண்டுகிறாய். தெய்வத் தவத்தியைச் சீர்குலையப் பேசுகிறாய், உன் நன்மைக்காக நீதியெலாம் சொல்லுகிறேன். என் அறிவுரைகள் வேறு யாருக்காகவும் இல்லையடா! பாண்டவர்கள் நாளை இதற்காகப் பழி தீர்த்திடுவார், மாண்டுபோய் தரைமீது, மகனே, நீ கிடப்பாய். தானே தனக்கு அழிவைத் தேடிக் கொள்ளும் கொடுமையை என்னவென்பேனடா? நெஞ்சம் பதறப் பேசுதல் நேர்மை என நினைக்கிறாயா? நீ சொல்லும் கொடிய சொற்கள் உயிர்நாடியில் பாய்வதன்றோ? கெட்டுப் போனவர் வாயில் கொடிய வார்த்தைகள் எளிதாக வந்துவிடும், ஆனால் அது பாதிக்கப்பட்டோர் நெஞ்சங்களைவிட்டு நெடுநாள் அகலாது. நொந்துபோனவர் மனம் சுடும்படியாகச் சொல்லும் சொல் கொடிய நரகத்தில் சேர்த்துவிடும்; கற்கும் வித்தைகளைத் தடுத்துவிடும். கவுரவர்களே! சொல்லி விட்டேன், மறுமுறை சொல்லமாட்டேன். கீழ்மக்களுக்கு இன்பம் பூமியில் கிடைக்காது. பேராசை யினால் தவறானவைகளைச் செய்கிறீர்கள். வரக்கூடாத கொடுமைகளும், பெரும் விபத்துக்களும் உங்களுக்கு வந்து சேரும். ஆகையினால், பாண்டவர்களின் பாதங்களைப் பணிந்து அவர்களிட மிருந்து பறித்துக் கொண்ட எல்லாவற்றையும் மீண்டும் அவர்களுக்கே கொடுத்துவிட்டு பணிவுடன், "ஆண்டவரே, நாங்கள் அறியாமையால் செய்த நீண்ட பழியிதனை நீர் பொறுப்பீர்" என்று சொல்லி அவர்களைத் தங்கள் வளநகருக்கே செல்ல விடுங்கள். குற்றத்தைத் தவிர்க்கக்கூடிய இந்தச் செயலை நீங்கள் செய்யாவிட்டால், மாபாரதப்போர் வரும்; நீர் அழிந்திடுவீர்!" என்று அந்தப் புண்ணியன் விதுரன் கூறினான்.

            விதுரன் சொன்னவற்றைக் கேட்ட மூடன் துரியோதனன் இடி இடிப்பதுபோல் பேசலானான்: "சீச்சீ! மடையா! நீ கெடுக. எப்போதும் எம்மைச் சபித்தல் உனக்கு இயல்பாகிவிட்டது. உன் சொற்களை இப்போது எவரும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். யாரடா அங்கே, தேர்ப்பாகன்! நீ போய் இரண்டு கணத்தில் பாரதர்க்கு வேந்தன் பணித்தான் என்று சொல்லி பாண்டவர் தம் தேவியைப் பார்வேந்தர் அரசவைக்கு அழைத்து வா!" என்று இயம்பினான். உடனே அந்தத் தேர்ப்பாகன் விரைந்து சென்று பாஞ்சாலி இருக்கும் மனைக்குச் சென்று சோகம் ததும்பும் துடித்தக் குரலுடன், "அம்மனே போற்றி, அறங்காப்பாய் தாள் போற்றி! விதியின் சதியால் யுதிஷ்டிரர் மாமன் சகுனியோடு மாயச் சூதாட்டத்தில் நாட்டை இழந்து, பொருளெலாம் இழந்து, தம்பியர்களையும் பணயம் வைத்துத் தோற்றுப் பின் தன் சுதந்திரத்தையும் இழந்து விட்டார். சூதில் பணயமென்று, தாயே! உன்னையும் வைத்தார். சொல்ல நாவு துணியவில்லை, உன்னையும் தோற்றுவிட்டார். எல்லோரும் கூடியிருக்கும் சபையில் உன்னை அழைத்து வரும்படி அரசன் எனக்குக் கட்டளையிட்டான்" என்றான்.

            "யார் சொன்ன வார்த்தையடா? சூதர் சபையிலே நற்குலத்து மாதர் வருவது மரபோடா? யார் சொல்லி நீ வந்து என்னை அழைக்கிறாய்?" என்றாள் திரெளபதி.

            அதற்கு அவனும், "மன்னன் துரியோதனனுடைய ஆணையால் வந்தேன்" என்றான்.

            "நல்லது; நீ சென்று நடந்த விவரங்களைக் கேட்டு வா. சூதில் வல்ல சகுனியிடம் தோற்ற நாயகரிடம் தாம் என்னை முன்னே பணயம் வைத்து இழந்தாரா? தம்மையே முன்னால் இழந்த பின்னர் என்னை வைத்துத் தோற்றாரா? சென்று சபையில் இதற்கு பதிலைத் தெரிந்து வா" என்று பாஞ்சாலி கூறி, அந்த தேரோட்டி சென்ற பிறகு தன்னந்தனியளாய் தவிக்கும் மனத்தோடு, நிறம் வெளிர, மலர் விழிகள் கண்ணீர் சொரிய, மனத்தில் அச்சம் மேலோங்க, பேயைப் பார்த்த குழந்தையைப் போல வீற்றிருந்தாள். பிறகு அந்தத் தேர்ப்பாகன் மன்னனுடைய சபைக்குச் சென்று, "வேந்தே! ஆங்கு அந்தப் பொன்னரசி தாள் பணிந்து 'போதருவீர்' என்றிட்டேன், அதற்கு அவர் 'என்னை முதலில் வைத்திழந்த பின்பு தன்னை என் மன்னர் இழந்தாரா? மாறாகத் தம்மைத் தோற்ற பின்னர் என்னை இழந்தாரா? என்று இந்த அவையிடம் கேட்டுவருமாறு என்னை அந்த மின்னற் கொடியார் பணித்தார், வந்து விட்டேன்" என்று உரைத்தான். இதனைக் கேட்ட பாண்டவர்கள் நொந்து போய் ஒன்றும் பேசாதிருந்து விட்டார். மற்றும் அந்த சபையில் வீற்றிருந்த மன்னரெல்லாம் பேச்சிழந்து ஊமைகளாய் வீற்றிருந்தார்.

            மனம் துடித்துத் துரியோதனன் கோபம் கொப்பளிக்க வெறிகொண்டு சொல்லுகிறான், "அட! சிறுபிள்ளை போல கதை சொல்லுகிறாய். என்னுடைய தன்மை உணரவில்லை போலும் நீ. அந்தக் கள்ளக் கரிய விழியாள் சொன்ன கேலி மொழிகளைக் கேட்டுக் கொண்டு வந்து சொல்லுகிறாய். அவள் இங்கு வந்து கிளி போல பேசுவதைக் கேட்க என் மனம் விரும்புகிறது. இங்கு வந்து கேட்க விரும்புவனவற்றைக் கேட்கலாம், சொல்ல வேண்டிய வார்த்தைகளைச் சொல்லலாம். இங்கு வரத் தயங்க அவள் என்ன கூண்டுப் பறவையா? ஐவருக்கும் மனைவியல்லவா, அப்படியிருக்க நாணமேன்? நான் கோபமுற்று கடுமையான செயல்களைச் செய்யுமுன் அந்த மொய் குழலாளை இங்கு அழைத்து வா. மன்னன் அழைக்கிறான் என்று சொன்ன பின்பு அதற்கு மாறாக அவள் ஒன்று சொல்வதோ? உன்னைச் சிதைத்து விடுவேனடா; ஒரு கணத்தில் அவளை இங்கே கொண்டு வா" என்றான். துரியோதனன் சொன்ன மொழிகளை அந்தப் பாகன் பாஞ்சாலி முன்பு போய் வணங்கிக் கூறினான்.

அதற்கு அவள், "தம்பி! என்னை வீணாக அழைப்பதேன்? நாயகர் தன்னைத் தோற்ற பின் என்னை பணயம் வைக்க உரிமை இல்லை. கேவலமான சூதில் விலைப்பட்டபின் என்ன சாத்திரத்தின் அடிப்படையில் என்னைத் தோற்றிட்டார்? அவர் சூதில் தோற்று அடிமைப்பட்டவர், நானோ இப்போது துருபதன் புதல்வி. நிலைமை மாறி அடிமையானவருக்கு மனைவி எனும் உரிமை அவர்க்குண்டோ?

            "கெளரவர் சபையிலே தர்மம் தெரிந்தவர் யாருமில்லையோ? மன்னருடைய பலம் வீழும் முன்னரே அங்கு சாத்திரங்கள் செத்துக் கிடக்குமோ? புகழ் பெற்ற ஆச்சார்யார்களும், கல்வியிற் சிறந்த மன்னரும் செல்வங்களைச் சூதில் இழப்பதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள், என் மானம் அழிவதையும் பார்த்துக் கொண்டிருப்பார்களோ? பூமியில் எல்லோருக்கும் இன்பம் துன்பம் இவை வரத்தான் செய்யும். எனில் பூமியை ஆளும் மன்னர்கள் தங்கள் பெருமையைக் கொன்று மகிழ்வரோ? அப்படி நடப்பதை அன்பும் தவமும் உடையவர்களும், அந்தணர்களும் பார்த்து மகிழ்ச்சி அடைவரோ? நான் முன்பு கேட்ட அதே கேள்வியை மீண்டுமொருமுறை அவர்களிடம் கேட்டு அதற்குத் தெளிவான பதிலை அறிந்து வா" என்றாள் அந்த மாதரசி.

            இதனைக் கேட்ட அந்த ஏழைப் பாகன் என்ன செய்வான்? என்னைக் கொன்று போட்டாலும் கவலையில்லை, இவர் கேட்கும் கேள்விக்கு அவர்கள் விடை தராமல் மீண்டுமொரு முறை வந்து அழைத்துவரச் சொன்னால் நான் அதற்கு இணங்க மாட்டேன் என்று மனத்தில் உறுதி மேற்கொண்டு சபைக்குச் சென்று நடந்ததைக் கூறினான் அந்தப் பாகன்.

                "அந்த மாதரசி மாதவிடாயிலிருக்கிறாள் என்றும் கூறினான். கெட்ட பாதகனான துரியோதனன் மனம் இளகவில்லை. நின்று கொண்டிருந்த பாண்டவர்களின் முகத்தைப் பார்த்தான். அவர்கள் உன்மத்தராய் நிற்பது கண்டான். மேலும் அந்த சபையில் இருந்தவர்களில் எவருக்கும் இவனது இந்த தீமையான எண்ணத்தைத் தடுக்க மனத்தில் வலிமையில்லாமல் இருந்தனர்.

            தேர்ப்பாகனைக் கோபத்துடன் பார்த்து மீண்டும் துரியோதனன் சொல்லுகின்றான்: "மறுபடி போய் நமது கட்டளையைச் சொல்லடா! அவளை ஏழு கணத்தில் இங்கே வரும்படி செய். இல்லையேல் உன்னைச் சாகும்படி மிதித்துக் கொல்வேனடா" என்று மன்னன் சொல்லிடப் பாகனும் மன்னனின் கோபத்தை உணர்ந்து, அங்கு உட்கார்ந்திருந்தவர்களை நோக்கி, "என் மீது இப்படிச் சீறுகின்ற மன்னருக்கு நான் என்ன பிழை செய்தேன். அங்கு போய் தேவியை நூறு முறை அழைத்தாலும் அவர் இதே கேள்வியை கேட்டுத் திருப்பி அனுப்புவார். அவர் ஆறுதலடையும்படி ஒரு வார்த்தை சொல்லுங்கள், நான் போய் அழைக்கிறேன். மன்னன் சொல்லும் பணியைச் செய்யவேண்டியவன் நான், அந்தக் கோதை வராவிடில் நான் என் செய்வேன்" என்று புலம்பினான்.

            தேர்ப்பாகன் சொன்னதைக் கேட்ட துரியோதனன், "பாகன் அழைத்தால் அவள் வரமாட்டாள், இந்தப் பயலும் பீமனுக்குப் பயந்து கொண்டு செய்வதறியாமல் திகைக்கிறான். இவன் பயத்தைப் பின்னர் போக்குகிறேன் என்று சொல்லி துச்சாதனனை அழைத்து, "தம்பீ! நீ இப்போதே அங்கு போ, அந்தப் பொற்கொடியோடு இங்கு வருவாய்" என்று கூறினான்.

            இவ்வுரை கேட்ட துச்சாதனன் அண்ணனுடைய விருப்பத்தை மெச்சி எழுந்தான். இவனைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம். இவன் தீமை புரிவதில் அண்ணனை மிஞ்சியவன். கல்வி எள் அளவுகூட கிடையாது. கள்ளையும் பச்சையான மாமிசத்தை உண்பவன். எதிரிகள் இவனைக் கண்டு அஞ்சுவர். இவனைச் சார்ந்தவர்கள் இவனைப் பேய் என்று ஒதுங்குவார். புத்தி விவேகமில்லாதவன், புலி போல உடல்வலி கொண்டவன், அளவற்ற ஆணவத்தால் கள்ளினைக் குடிக்காமலே வெறிபிடித்தவன். தீமை வழி நிற்பவன், சிவசக்தி நெறி உணராதவன். இன்பம் வேண்டி முறையற்ற செயல் செய்பவன், என்றைக்கும் நல்லோர் இணக்கம் இல்லாதவன்.

            தன் அண்ணனைத் தவிர தான் இந்த பூமிக்கே தலையாயவனாக நினைப்பவன். அண்ணன் எதைச் சொன்னாலும் மறுக்காமல் செய்பவன். இரக்கம் என்பதே இல்லாத பாதகன். அந்தக் காரிகை தன்னை அழைத்து வா என்று அந்த அண்ணன் உரைத்திடல் கேட்டதும், நல்லது என்று உறுமிக்கொண்டு எழுந்தான். பாண்டவர் தேவி பாஞ்சாலி இருந்ததோர் மணிப் பைங்கதிர் மாளிகைக்குப் போய்ச்சேர்ந்தான். அங்கு தாங்க முடியாத சோகத்தால் நிலைகுலைந்து போன நேரிழை மாதினைக் கண்டான். அவள் தீட்டு என்று ஒதுங்கினாள், இவனோ, "அடி! எங்கே போகிறாய்?" என்று கத்தினான். இவன் வீரம் செறிந்த ஆண்மகன் அல்ல என்று அவள் பயமில்லாமல் இவனை எதிர்கொண்டு சொல்லுகிறாள்.

            "பாண்டவர்களின் தேவி நான்; துருபதனின் புதல்வி. இதனை இன்று வரை என்முன் யாரும் மறந்து நடந்துகொண்டதில்லை. தம்பி! இங்கு காவல் இல்லை என்ற தைரியத்தில் வரைமுறையின்றி பேசுகிறாய். நீ வந்த செய்தியை விரைவில் சொல்லிவிட்டு இவ்விடத்தை விட்டு நீங்கிவிடு!" என்றாள் அந்தப் பெண்கொடி.

            "பாண்டவர் தேவியும் அல்லை நீ, புகழ் பாஞ்சாலன் மகளுமல்ல நீ. புவி ஆளும் என் அண்ணனுடைய அடிமை நீ. மன்னனுடைய சபையிலே நடந்த சூதாட்டத்தில் எங்கள் நேசன் சகுனியோடு சூதாடி உன்னைப் பணயமாக வைத்துத் தோற்றுவிட்டான் தருமபுத்திரன். ஆட்டத்தில் தோற்று விலைப்பட்ட தாதி நீ. உன்னை இப்போது ஆள்பவன் என் அண்ணன் துரியோதனன். மன்னர்கள் கூடியிருக்கிற சபைக்கு உன்னைக் கூட்டி வருமாறு மன்னன் சொல்ல, ஓடிவந்தேன், இதுதான் நான்வந்த காரணம். இனி ஒன்றும் பேசாமல் என்னோடு கிளம்பி வா! அந்த பேடி மகன் தேர்ப்பாகனிடம் நீ பேசிய பேச்சுக்களை நானும் கேட்க விரும்பவில்லை" என்று துச்சாதனன் சொன்னான்.

            இதனைக் கேட்ட பாஞ்சாலி, "அச்சா! கேள். மாதவிலக்கென்பதால் நான் ஒற்றை ஆடையில் இருக்கிறேன். மன்னர் சபைக்கு என்னை அழைப்பது நியாயம் இல்லை. அதுமட்டுமின்றி, சகோதரனுடைய மனைவியைச் சூதில் பணயமாகக் கொண்டு ஜெயித்து அவள் ஆதரவின்றி இருக்கும்போது துன்பம் தருதல்தான் மன்னர் குலத்து மரபோ? அண்ணனிடம் என் நிலைமையைப் போய்ச் சொல். நீ போகலாம்" என்றாள்.

            இதுகேட்ட துச்சாதனன் 'கக்கக்க' வென்று கனைத்துக்கொண்டு பெருமூச்சுடன் பக்கத்தில் வந்து அந்தப் பாஞ்சாலியின் கூந்தலினைக் கையினால் பற்றிக் கரகரவென இழுத்தான். ஐயகோ என்று அலறிக்கொண்டு உணர்வு மயங்கிப் பாண்டவர் தேவி பாஞ்சாலி பாதி உயிர் போனவளாய் இருக்கும்போது, அவளது நீண்ட கருங் குழலை அந்த நீசன் பற்றி இழுத்துக் கொண்டு சென்றான். வழி நெடுக கூட்டங்கூட்டமாய் மக்கள் சாலையெங்கும் மொய்த்தவராய், "என்ன கொடுமை இது" என்று சொல்லிப் பார்த்துக் கொண்டு நின்றனர். ஊராரின் கீழ்மை சொல்லும் தரமாமோ? வீரமிலா நாய்கள், அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். விலங்காய் மாறிப்போன இளவரசன் துச்சாதனனை மிதித்துத் தரையில் வீழ்த்திவிட்டு அந்த மாதரசியை அவளது அந்தப்புரத்தில் கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டாமா? மாறாக நெட்ட நெடு மரங்களைப் போல் நின்று கொண்டு, என்ன கொடுமையிது என்று புலம்பிக் கொண்டு நிற்கின்றனரே. இத்தகைய பெட்டைப் புலம்பல் பிறருக்கு எந்த வகையில் துணைபுரியும்? பேரழகு உடைய பெருந்தவம் கொண்ட நாயகியைச் சீரழிய, கூந்தல் சிதையக் கவர்ந்து கொண்டு போய்க் கேடுற்ற மன்னனின் தர்மம் கெட்ட சபையில் கொண்டு போய்ச் சேர்த்தான் துச்சாதனன். அவள் அங்கு 'கோ' வென்று அலறினாள்.

            பாஞ்சாலி விம்மி அழுதாள். 'விதியோ கணவரே! அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, என்னை வேதச் சுடர்த்தீயின் முன் விரும்பி மணம் செய்து கொண்டபின், இந்தப் பாதகர் முன்னால் சீரழியப் பார்த்துக் கொண்டிருப்பீரோ?' என்றாள். வில் விஜயனும், புஜவலி கொண்ட பீமனும் பார்க்க, தருமன் தலை குனிந்து நின்றான். மனம் பொருமி அவள் மேலும் சொல்லுகிறாள், "அரசன் அவையில் புகழ்பெற்ற அறிஞர்களும், வேள்வி, தவங்கள் பல புரிந்த வேதியர்களும், மேலோரும் இருக்கின்றனரே. அவர்கள் இந்த அநியாயத்தைக் கண்டு கோபம் கொள்ளவில்லையா? என்னைக் காக்கும் உரிமை படைத்த பாண்டவர்களே அடிமைப் பட்டபின்னர், அவர்களைக் குற்றம் சொல்வது நியாயமில்லை. தர்மம் மங்கிப்போன இந்த அநியாயச் சபையிலே என்னைப் பிடித்து இழுத்து வந்து ஏச்சுக்கள் பேசுகின்றாய்? உன்னை எவரும் நிறுத்தடா என்று சொல்லவில்லையே. என் செய்வேன்?" என்று ஓவென்று ஓலமிட்டு அழுதாள். தீப்பொறி பறக்கும் விழிகளால் பாண்டவர்களை வெந்நோக்கு நோக்கினாள்.

            எல்லோரும் வாய்மூடி பெருமை இழந்து சிலைபோல நிற்பதைப் பார்த்து, வெறிகொண்டு துச்சாதனன் அந்த மாதரசியைப் பார்த்துப் பல தீதுரைகள் பேசி, "தாதியடி, தாதி!" என்று இழித்துரைத்தான். கர்ணன் சிரித்தான். பலே என்று சகுனி புகழ்ந்தான். சபையிலிருந்தவர்கள் .... அவர்கள் சிலைகளைப் போல் உட்கார்ந்திருந்தனர். அப்போது தகுதி வாய்ந்த பீஷ்மாச்சாரியார் சொல்லுகிறார்:-

            "பெண்ணே! யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் வைத்து உன்னைத் தோற்றுவிட்டான். இந்த மன்றத்தில் வாதாடி நீ அவன் செய்த முறை சரியல்ல என்கிறாய். சூதில் வல்லவன் சகுனி. அவனுடைய சூழ்ச்சியால் உன் மன்னவனை அவன் தோற்கடித்து விட்டான். இந்தச் சூதில் உன்னைப் பந்தயமாய் வைத்ததே தவறு என்று சொல்லுகிறாய். கோமகளே! பண்டைய காலத்து வேத முனிவர்கள் வகுத்த நீதிப்படி நீ சொல்வது சரியாக இருக்கலாம். இது ஆதிகாலத்து நிலைமை. ஆணுக்கு நிகர் பெண் என்ற நிலைமை அந்தக் காலத்தில் இருந்தது. பிந்நாளில் அந்த நிலை மாறிப் போய், இந்தக் கால நீதிநூல்களின்படி பெண்கள், ஆண்களுக்கு நிகரில்லை என்பதாயிற்று. ஒருவன் தனது மனைவியை விற்றுவிடலாம். தானமாக வேறொருவருக்குத் தந்துவிடலாம். முற்றிலும் மிருகங்களின் நிலைபோலத்தானேயன்றி வேறில்லை. தருமன் தன்னைப் பந்தயம் வைத்து இழந்த பிறகும் உன்னைத் தனக்கு அடிமையாக வைத்திருக்க நீதி உண்டு. தர்மங்களை உணராதவர்கள் இங்கு செய்தவற்றைப் பார்த்தால் கல்லும் நடுங்கும்; மிருகங்களும் வெட்கிக் கண்புதைக்கும். இங்கு நடந்தவை அநீதி என்று தெரிந்தாலும், சாத்திரம், வழக்கம், முறைமை பற்றி நீ கேட்பதனால் சொல்லுகின்றேன் உன் பக்கம் நின்று பேச முடியவில்லை. நடக்கும் தீமைகளைத் தடுக்கும் திறமும் எனக்கில்லை". இப்படி அந்த மேலோன் சொல்லிவிட்டுத் தலை கவிழ்ந்தான்.

            பாஞ்சாலி சொல்லுகிறாள்:- "மிகவும் நன்றாகத்தான் சொன்னீர்கள் ஐயா! முன்பு இலங்காபுரி இராவணன் சீதையை பாதகத்தால் கவர்ந்து சென்று ஆங்கோர் வனத்திடையே வைத்துவிட்டுப் பின் அரசவைக்குச் சாத்திரிமார்களையும் அமைச்சர்களையும் வரவழைத்து தான் இவ்வாறு சீதையைக் கவர்ந்து வந்த செய்தியைச் சொன்னபோது, அவர்கள் 'தக்கது நீர் செய்தீர்! உங்கள் செய்கை தர்மத்துக்கு ஒத்த செய்கைதான்' என்று கூறி மகிழ்ந்தனராம் சாத்திரிமார். 'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்'. சூதுவாதறியாத மன்னவனைச் சூதாட வற்புறுத்தியது வஞ்சனையா, நேர்மையா? முன்கூடியே திட்டமிட்டுச் செய்துமுடித்த செய்கை அல்லவா இது? புதிய மண்டபத்தை நீங்கள் கட்டியது எமது நாட்டை அபகரித்திடும் நோக்கத்தில்தான் அல்லவா? மனைவியும், பெண்களும் உடையவர்கள் இவர்கள். பெண்களோடு உடன்பிறப்பாய்ப் பிறந்தவர்கள். செய்வது பெண்பாவமல்லவா? இதனால் பெரும்பழி உங்களுக்கு வந்து சேரும். கண்திறந்து பாருங்கள்" என்று சொல்லி கையெடுத்துக் கும்பிட்டாள். அம்பு பாய்ந்து துடிக்கும் மான்போல துடிதுடித்தாள். கூந்தல் தரையில் புரண்டு புழுதிபடிய அழுவது கண்டும் துச்சாதனன் இரங்கவில்லை.

            அணிந்த ஆடை குலைவுற்று நின்றாள். அவள் ஆவென்று அழுது துடிக்கின்றாள். வெறும் மாடுபோன்ற துச்சாதனன் அவளுடைய மைக்கூந்தலைப் பிடித்து இழுக்கின்றான். இந்தக் காட்சியைப் பார்த்தான் பீமன். கரைபுரண்டெழும் கோபத்தோடு எழுந்தான். மனத்தில் கோபம் துயரம் மேலெழ தருமனைப் பார்த்துச் சொல்லுகின்றான். அவன் சொன்ன வார்த்தைகளைக் கேளுங்கள்:-

                "சூதாடுவோர் வீடுகளில் வேலை செய்யும் பெண்கள் உண்டு. ஆனால் சூதாட்டத்தில் பந்தயமாக எந்தப் பெண்ணும் அங்கு போவதில்லை. என்ன நினைத்து வைத்தாய்? அண்ணே! யாரைப் பணயம் வைத்தாய்? மாதர் குலத்துக்கே மணிவிளக்கு போன்றவளை, அன்பே வாய்ந்த வடிவழகை, பூமி அரசரெல்லாம் கண்டு போற்றி வணங்குபவளை, போரில்வல்ல பாஞ்சால மன்னனின் சுடர் மகளை, அண்ணே! சூதாடி இழந்து விட்டாய். தவறு செய்துவிட்டாய், அண்ணே, தர்மம் கொன்று விட்டாய். நாம் பெற்ற வெற்றிகள் சோரத்தினால் பெற்றது அல்ல, சூதினால் பெற்றதும் அல்ல, வீரத்தினால் படைத்தோம், வெம்போரில் வெற்றி பெற்று படைத்தோம். சக்கரவர்த்தி என்று உலகம் போற்ற வாழ்ந்திருந்தோம்; பொக்கென ஓர் கணத்தே எல்லாம் போகத் தொலைத்து விட்டாய். நாட்டையெல்லாம் சூதில் வைத்து இழந்துவிட்டாய் அண்ணே! அதனை நாங்கள் பொறுத்துக் கொண்டோம். மீண்டும் எங்களையெல்லாம் அடிமை செய்தாய், அதனையும் பொறுத்துக் கொண்டோம். துருபதன் மகளை, திருஷ்டதும்னன் சகோதரியை, இரு பகடையென்றாய், ஐயோ! இவர்களுக்கு அடிமை யென்றாய். இதனைப் பொறுப்பதில்லை, தம்பீ! சகாதேவா! எரி தழல் கொண்டு வா. கதிரை வைத்திழந்த இந்த அண்ணனின் கையை எரித்திடுவோம்" என்றான் பீமன்.

            இப்படி பீமன் சகாதேவனிடம் சொல்லியதைக் கேட்ட வில்விஜயன் பீமனுக்குப் பதில் சொல்கிறான். "பீமா! மனமாரச் சொன்னாயோ? என்ன வார்த்தை சொன்னாய்? எங்கு சொன்னாய்? யாவர் முன்னே? பெருமைக்குரிய துருபத ராஜனின் மகளைச் சூதுக் களியிலே இழந்தது குற்றமென்றாய்; சினம் எனும் தீ அறிவை எரித்துவிட்டதால் திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய். 'தருமத்தின் வாழ்வைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்' எனும் இயற்கை மருமத்தை நம்மாலே இந்த உலகம் கற்கும். வழி தேடி விதி இந்தச் செய்கை செய்தான். கருமத்தை மேன் மேலுங் காண்போம். இன்று கட்டப்பட்டு விட்டோம்; பொறுத்திருப்போம்; காலம் மாறும்; தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்: பீமா! இதோ பார் என்னுடைய வில் இருக்கிறது. அதன் பெயர் காண்டீபம்! இதை நினைவில் வைத்துக் கொள்" என்றான்.

            பீமன் தர்மனை வணங்கினான். அப்போது துரியோதனனின் மற்றொரு தம்பியான விகர்ணன் எழுந்து பேசுகிறான். "பெண்ணரசி பாஞ்சாலி கேட்ட கேள்விக்குப் பாட்டன் பீஷ்மர் சொன்ன பேச்சை நான் ஏற்கவில்லை. பெண்களை மனத்தில் விலங்கு போல எண்ணி கணவன்மார் எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்றான் பாட்டன். பெருமைக்குரிய வேத நெறிமுறைகள் மாறி பிந்நாளில் அப்படிப்பட்ட வழிமுறைகள் வந்து நிலைத்து விட்டதாகப் பாட்டன் சொன்னான். அப்படி அவன் தவறாகச் சொன்னான்.

            நம் முந்தைய தலைமுறையினர் பாட்டன்மார் இவர்களெல்லாம் மனைவியரை விற்றதாகச் செய்தி உண்டோ? இதுவரை அரசியரைச் சூதில் தோற்ற விந்தையை நீர் கேட்டதுண்டோ? விலை மாதர்களுக்கு விதித்தவைகளை பிற்காலத்தில் எல்லாப் பெண்களுக்குமென்று சாத்திரத்தில் புகுத்தி விட்டார். அதுவும் சொல்லளவில்தானே தவிர வழக்கத்தில் அப்படிச் செய்வதில்லை. சூதர் இல்லங்களில் கூட பணிப்பெண்களைப் பணயம் வைப்பதில்லை என்பதை அறிந்தோம். தன்னை இவன் சூதில் இழந்து அடிமையானபின் தாரம் ஏது? வீடு ஏது? அடிமையான பிறகு அவனுக்கென்று உடைமை என்று ஏதும் உண்டோ? என்று இந்தப் பெண்ணரசி பெண்ணுரிமைக்குரலில் கேட்கின்றார். மன்னர்கள் மகிழ்வெய்துதற்குச் சூதாடுகிறீர்கள் என்றாலும் மனுநீதி தவறி இங்கு நடக்கும் வலிய பாவந்தன்னை பார்த்துக்கொண்டு வாய்பேசாமல் இருப்பீரோ? தாத்தனே! இந்த நீதி சரிதானா? என்றான் விகர்ணன்.

            இப்படி விகர்ணன் பேசியதைக் கேட்ட சில மன்னர்கள் எழுந்து அவன் பேச்சுக்கு ஆதரவாகக் கூச்சலிட்டனர். "சகுனி செய்யும் கொடுமை ஏற்கமுடியாது" என்றனர். ஒரு நாளும் உலகம் இந்தக் கொடுமையை மறக்காது என்றனர் சிலர். இப்படி அநியாயம் செய்தால் அழிந்து போவீர், ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டாம் என்றனர் சிலர். செவ்வானம் போல இரத்தம் பாய்ந்து போர்க்களத்தில் இந்தப் பழி தீரும் என்றனர் சிலர்.

            விகர்ணன் எழுந்து பேசியதைக் கேட்ட கர்ணன் சொல்கிறான்:- "போதுமடா உன் பேச்சு, சிறியவனே, நாடாளும் மன்னர்கள் எவரும் இதில் தலையிட்டுப் பேசாமல் இருக்கும்போது நீ மட்டும் அதிகப்பிரசங்கம் செய்கிறாயே, விவேகமோ அறிவோ இல்லாதவனே! இவள் பெண் என்பதால் இவள் தூண்ட நீ பிதற்றுகின்றாய். நீபாட்டிலும் பேசிக்கொண்டே போகிறாயே! இவளை நாம் வென்றதால் பாவம் வரும் என்கிறாயே. வெட்கமோ அடக்கமோ இல்லாதவனே! கண்ணியத்தைக் காக்கத் தெரியவில்லையே. உனக்கு என்ன நீதி தெரியும்?"

            "மார்பில் துணிபோட்டு மறைக்கும் உரிமை அடிமைப்பட்டவர்களுக்குக் கிடையாது. இவள் சிறந்தவளுமல்ல. ஐவருக்கு மனைவியாக இருந்தவள். யாரடா அங்கே பணியாள்! இங்கே வா! பாண்டவர் மார்பில் கிடக்கும் சீலையையும் களைவாய், இந்தப் பெண்ணின் சேலையையும் களைவாய்" என்றான் கர்ணன்.

            இவ்வுரை கேட்டனர் பாண்டவர். வேலையாட்கள் வந்து எடுப்பதற்கு முன்பாக, முன்பு பகைவர் கண்டு அஞ்சும் தங்கள் மார்பினை மறைத்த வஸ்திரங்களைக் களைந்தனர். பெண்மான் போன்ற கண்களையுடைய ஞானசுந்தரி, பாஞ்சாலி 'என்ன நடக்குமோ' என்றே தயங்கினாள், தன்னிரு கரங்களைக் கோத்துக் கொண்டாள்.

            துச்சாதனன் எழுந்து சென்று அன்னையின் சேலையைக் கழற்றலுற்றான். 'அச்சோ தேவர்களே!' என்று அலறிக்கொண்டு விதுரன் மயங்கி தரைமேல் சாய்ந்தான். பைத்தியம்பிடித்தவன் போல் அந்தப் பேயன் துச்சாதனன் சேலையை உரிகையில், மன ஆழத்தின் ஜோதியினுள் லயித்தாள், அன்னை இவ்வுலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள். 'ஹரி, ஹரி, ஹரி' என்றாள். 'கண்ணா! அபயம் உனக்கபயம் என்றாள். யானைக்கு அருள்புரிந்து அன்று முதலையிடமிருந்து அதனைக் காத்தாய். நீல வண்ணச் சியாமளனே! அன்று காளிங்கன் தலைமீது நடனம் புரிந்தாய்! ஆதிப் பரம்பொருள் நீயே! கண்ணா! பழம்பெரும் வேதப் பொருளே! சக்கரம் கையில் ஏந்தி நின்றாய், கண்ணா! சாரங்க மெனும் வில்லினைக் கையில் உடையாய்! அக்ஷரப் பொருளாவாய்! கண்ணா! அக்கார அமுதுண்ணும் பசுங் குழந்தாய்! துக்கங்கள் அழித்திடுவாய், கண்ணா! தொண்டர் கண்ணீரைத் துடைத்திடுவாய். தக்கவர் தமைக் காப்பாய், அந்தச் சதுர்முக பிரம்மனைப் படைத்தாய். வானத்திற்குள் வானமாய், தீ, மண், நீர், காற்று என பஞ்ச பூதங்களாய் விளங்கிடுவாய். தவ முனிவர்தம் உள்ளங்களில் ஒளிர்பவனே, கானத்துப் பொய்கையிலே, தனிக் கமலமென் பூமிசை வீற்றிருக்கும் அந்தத் திருமகள் அவள் தாளிணைக் கைக்கொண்டு மகிழ்ந்திருப்பாய். ஆதியில் ஆதியப்பா! கண்ணா, அறிவினைக் கடந்த விண்ணகப் பொருளே, சோதிக்குச் சோதியப்பா, என்றன் சொல்லினைக் கேட்டு அருள் புரிவாய்.

            வானவெளியினின் நடுவினிலே பறந்திடும் கருடனின் மேல் சோதிக்குள் ஊர்ந்திடும் கண்ணா, சுடர்ப்பொருளே, பேரருட் பொருளே, அன்று இரணியன் மகன் பிரகலாதனிடம் "கம்பத்தில் உள்ளானோ, அடா! காட்டு உன் கடவுளைத் தூணிடத்தே, வம்புசெயும் மூடா" என்று மகனிடம் உறுமிக்கொண்டு தூணை உதைத்தவனை அந்தத் தீயவல் இரணியனின் உடல் பிளந்தாய்! நம்பி, நின் அடி தொழுதேன், என்னை மானமழியாமல் காத்தருள்வாய் என்று பலவாறாக இறைவனைத் துதித்து அந்தப் பாஞ்சாலி மேலும் பேசுகிறாள்.

            வையகம் காத்திடும் கண்ணா, மணி வண்ணா, என்றன் மனச்சுடரே, ஐய, நின் பதமலரே சரணம். ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி! என்று அவனிடம் முறையிடுகிறாள். அப்போது .... பொய்யர்கள் அடையும் துயரத்தைப் போல், நல்ல புண்ணியர் தம் புகழினைப்போல், தையலர் தம் கருணையைப் போல், கடலில் விளையும் அலைகளைப் போல், பெண்மையைப் போற்றுவோர் செல்வம் பெருகுதல் போல், கண்ண பிரானின் அருளால், பாவி துச்சாதனன் கழற்றிடக் கழற்றிடத் துணி புதிது புதிதாய் வண்ணப் பொற் சேலைகளாய், அவை வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே! எண்ணத்தில் அடங்காவே, அவை எத்தனை எத்தனை நிறத்தனவோ!

            புதிதுபுதிதாகச் சேலைகள் கழற்றக் கழற்ற வந்துகொண்டே யிருக்க அந்த மாதரசி தலைக்கு மேலே கைகுவித்து ஹரி நாமத்தைச் சொல்லச் சொல்லத் துகிற்கூட்டம் பெருகப் பெருக, அந்தப் பாவி துச்சாதனன் சோர்ந்து வீழ்ந்து விட்டான். தேவர்கள் வானிலிருந்து பூச்சொரிந்தார். 'ஓம் ஜய ஜய பாரத சக்தி' என்றே ஆவலோடெழுந்து நின்று முன்னை ஆரிய வீட்டுமனும் கைதொழுதான். சாவடி மறவரெல்லாம் 'ஓம் சக்தி சக்தி சக்தி'யென்று கரங் குவித்தார். அரச நீதி பிழைத்த அரவக்கொடியுடையோன் தலை கவிழ்ந்தான்.

            இவ்வளவையும் கண்டு கொண்டிருந்த பாண்டவரில், பீமன் எழுந்து சபதம் செய்கிறான். "இங்கு விண்ணவர் ஆணை, பராசக்தி ஆணை, தாமரைப் பூவினில் வந்தான், மறை வழங்கிய தேவனின் திருக்கழல் ஆணை, மாமகளைக் கொண்ட தேவன், எங்கள் மரபுக்குத் தேவன் கண்ணன் தாமரைப் பதத் தாணை, காமனைக் கண்ணழகாலே சுட்டுக் காலனை வென்றவன் பொன்னடி மீதில் ஆணை, இங்கு இந்த சபதம் செய்வேன். இந்த ஆண்மையில்லா துரியோதனன் தன்னை, பெரும் தீயினையொத்த எங்கள் பெண்டு திரெளபதியைத் தன் தொடை மீது வெட்கமின்றி வந்து இரு என்றானை, இந்த நாய் மகனாம் துரியோதனன் தன்னை, பெருமையிழந்த மன்னர் கண் முன்னே என்றன் வலிமையினால் யுத்த அரங்கத்தின் கண், இவனது தொடையைப் பிளந்து உயிர் மாய்ப்பேன்.

            தம்பி சூரத் துச்சாதனன் தன்னையும் ஆங்கே கடைபட்ட அவனது தோள்களைப் பிய்ப்பேன். அங்கு கள்ளென ஊறும் இரத்தத்தைக் குடிப்பேன். இது நடைபெறும் காண்பீர் உலகீர்! இது நான் சொல்லும் வார்த்தை என்று எண்ணிடல் வேண்டா. தடையற்ற தெய்வத்தின் வார்த்தை, இது சாதனை செய்க பராசக்தி!" என்றான்.

            பார்த்தன் எழுந்து சபதம் செய்கிறான். "இந்தப் பாதகக் கர்ணனைப் போரில் மாய்ப்பேன். தீர்த்தன், பெரும்புகழ் விஷ்ணு, எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழலடி ஆணை! கார்த்தடங்கண்ணி எம் தேவி அவள் கண்ணிலும் காண்டிப வில்லினும் ஆணை! போர்த் தொழில் விந்தைகள் அனைத்தும் அந்தப் போதில் காண்பாய் - ஹே! பூதலமே!" என்று சபதமேற்றான்.

            பாஞ்சாலன் மகள் தேவி திரெளபதி விரிந்த குழலோடு எழுந்தாள், வீர சபதம் ஏற்றாள்: "ஓம்! தேவி பராசக்தி ஆணை உரைத்தேன். பாவி துச்சாதனன் செந்நீரும் அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம் இவை மேவி இரண்டும் கலந்து குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன் யான் -- இது செய்யுமுன்னே முடியேன்" என்று உரை செய்தாள்.

            இவர்கள் எடுத்த சபதங்களைக் கேட்டதும் வானத்துத் தேவர்கள் ஓம், ஓம் என்று உரக்க உரைத்தனர். ஓம் ஓம் என்ற ஒலியுடன் உறுமிற்று வானம். பூமி அதிர்ச்சி உண்டாச்சு. விண்ணைப் பூழிப் படுத்தியதாம் சுழற் காற்று. சாமி தருமன் புவிக்கே என்று சாட்சி உரைத்தன பஞ்ச பூதங்களும். நாமும் கதையை முடித்தோம், இந்த நானிலம் முற்றும் நல் இன்பத்தில் வாழ்க என்று மகாகவி பாஞ்சாலி சபதத்தை முடிக்கிறார்.  

                                பாரதியாரின் பாஞ்சாலி சபதம் நிறைவு.


"பாஞ்சாலி சபதம்" முதல் பாகம்


                          மகாகவி பாரதியாரின் "பாஞ்சாலி சபதம்" 
                                                 முதல் பகுதி

மகாகவி பாரதியாரின் முப்பெரும் பாடல்கள் வரிசையில் 'பாஞ்சாலி சபதம்' ஓர் சிறப்பிடம் பெறுகிறது. தனது 'வழி வழி பாரதி' எனும் நூலில் சேக்கிழாரடிப்பொடி முது முனைவர் தி.ந.இராமச்சந்திரன் அவர்கள் கூறுவதாவது: "மகாபாரதம் ஐந்தாம் வேதம் என்று போற்றப்படுகிறது. மறை நான்கொடு ஐந்து என்று நிலை நிற்பது 'மகாபாரதம்' என்று வில்லிபுத்தூர் ஆழ்வார் அறிவிக்கிறார். இவ்விதிகாசத்தின் முக்கியப் பகுதி 'பாஞ்சாலி சபதம்'.  பெண்களைத் தாதர் என்று கருதி அவர்களுக்குக் கொடுமை இழைக்கும் சமூகத்தைச் சுட்டெரிக்கப் பாஞ்சாலி சூளுரைக்கிறாள். அவள் உரைத்த சபதத்தை நிறைவேற்றித் தந்தவன் கண்ணன். இதனை இந் நானிலம் அறிந்து பயனுறுதல் வேண்டுமென்று எண்ணி மகாகவி செயல்பட்டதால் அவர் திருவாயினின்றும் 'பாஞ்சாலி சபதம்' உருப்பெற்றது". 

புதுச்சேரியில் ஈஸ்வரன் தர்மராஜா வீதியில் குடியிருந்த நாளில், ஒருநாள் மகாகவி பாரதியார் தனது இளைய மகள் சகுந்தலாவுடன் உப்பளம் தேசமுத்துமாரி கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது வழியில் ஈஸ்வரன் தர்மராஜா கோயிலுக்குள் இருவரும் நுழைந்தனர். அங்கிருந்த சிலாரூபங்களைக் காட்டி சகுந்தலா இவர்களெல்லாம் யார் என்று கேட்க, பாரதியார், இவன் தான் பீமன், இவன் தான் அர்ச்சுனன் என்றும் அவைகளைப் பற்றி கூறிவந்தார். அங்கிருந்த பெண் சிலையைக் காட்டி இது யார் என்று கேட்க, இதுதான் திரெளபதி என்று விடையளித்த பாரதியிடம் பாப்பா, எனக்கு இவர்களைப் பற்றிய கதையைச் சொல்லுங்கள் என்றவுடன், பாரதி திடீரென்று மெளனமாகி விட்டார். அவர் மனதில் மகாபாரதக் கதையும், பாஞ்சாலியின் சபதமும் ஆக்கிரமித்துக் கொண்டது போலும். பாஞ்சாலி சபதம் அவர் மனதில் நிழலாடத் தொடங்கி விட்டது. 

'பாஞ்சாலி சபதத்தை' உருவாக்கி அதனைப் பற்றி கூறவந்த மகாகவி, "எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு - இவற்றினை யுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தமிழ் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்." "காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது. ஆசையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன். பிறர்க்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக" என்று அவையடக்கத்தோடு இதனைத் தொடங்குகிறார் மகாகவி.  தனது இந்த நூலை யாருக்குச் சமர்ப்பணம் செய்கிறார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அவருடைய வாக்கால் அதனைத் தெரிந்து கொள்வோம்: "தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற வரகவிகளுக்கும் அவர்களுக்குத் தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப் போகிற பிரபுக்களுக்கும் இந்நூலைப் பாத காணிக்கையாகச் செலுத்துகிறேன்." 

இந்த பாரத புண்ணிய பூமியில் இராமாயணமும், மகாபாரதமும் காலங்காலமாக மக்கள் போற்றிப் புகழ்ந்து, கற்று வரும் அறநூலாகும். இவ்வரலாற்றினை பல காலங்களிலும் பல்வேறு புலவர்களும் பாடிவைத்திருந்தாலும், அவை அத்தனையும் தமிழ் மக்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கம்பனின் 'இராம காதையும்', வில்லிபுத்தூராரின் 'வில்லி பாரதமும்' தமிழ் மக்களுக்குப் புதியதல்ல. வியாச பாரதத்தை அடியொற்றி எழுதப்பட்டுள்ள இந்த 'பாஞ்சாலி சபதம்' பற்றி மகாகவி கூறும்போது, "இந்நூல் வியாச பாரதத்தைப் பெரும்பாலும் தழுவி வரையப்பட்டது என்றாலும் பல அற்புத மாற்றங்களையும் இதில் காணலாம்" என்கிறார். 

 மகாகவியின் கூற்றுப்படியே, இதில் எளிய நடை, எளிய பதங்கள், இனிய சந்தங்கள் அடங்கியவையாகக் காணப்படுகிறது. சொல்வழக்கு எளிமையென்றாலும் கூட, அதில் பொதிந்திருக்கும் கருத்துக்கள் கனமானவை. மகாகவி இயற்றியுள்ள "பாஞ்சாலி சபதத்தை" இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, முதல் பிரிவினை கவிதை வடிவிலிருந்து உரைநடையாக கொடுத்திருக் கிறோம். இதன் இரண்டாவது பகுதி 'சூதாட்டச் சருக்க'மாக அடுத்த  பதிவில் வெளிவரும். புதிதாகப் படிப்பவர்க்கு எளிதில் விளங்க வேண்டுமென்பதற்காகப் 'பாஞ்சாலி சபதம்' உரைநடை வடிவில் கொடுக்கப்படுகிறது. எனினும் பாடத்தைப் படிக்கும்போது கவிதைப் பகுதியையும் உடன் வைத்துக் கொண்டு படித்தால் பயனுள்ளதாக இருக்கும். ஒரு முறை கவிதை, உரைநடை இரண்டையும் படித்தபின் மகாகவியின் எழுத்துக்களைத் தொடர்ந்து கவிதை வடிவிலேயே படியுங்கள்.  புதிய எண்ணங்கள், சிந்தனைகள் ஒவ்வொரு முறையும் தோன்றக்கூடும். இக்காப்பியத்தின் தொடக்கத்தில் மகாகவி பிரம்மத்தை வணங்கித் தொடங்குகிறார்.  
                                                                                                                                    
எந்தவொரு தனிக் கடவுள் வடிவத்தையும் போற்றி வணங்காமல், ஞானிகளுக்கே உரிய வகையில் பிரமம் எனும் மூலப்பொருளை வணங்கி இந்தக் காப்பியத்தைத் தொடங்குகிறார்.

அந்த பிரமம் எப்படிப்பட்டது? அது ஆணா, பெண்ணா, அலியா, அதற்கென ஒரு நாமம் உண்டா, உருவம் உண்டா, பிரபஞ்சத்தில் உண்டு எனும் அத்தனை பொருளிலும் இலங்கிடும் பொருளே பிரமம் எனப்படுகிறது. அந்த நிர்மலமான பொருளை நினைத்து மனம் கசிந்துருகி, பக்தியால் சிவசக்தி தன்னை ஆட்கொள்ளும்படியாக இந்த புதிய இன்றமிழ் நூலினை இயற்றத் துவங்குகிறார் பாரதி. 

இங்கு 'ஓர் பொருள்' எனக் குறிப்பிடப்படுவதை 'உணரத்தக்க' 'ஓர்ந்தறியத்தக்க' என்று பொருள் கொள்ள வேண்டுமென்று சேக்கிழாரடிப்பொடி தன் நூலில் குறிப்பிடுகிறார். இந்த பிரம ஸ்துதியில் மகாகவி வேண்டுவது சிவஞானம்; சிவசக்தி மேவினாலன்றி சிவஞானம் தோன்றாது என்றும் அவர் விளக்குகிறார். ஸரஸ்வதி வணக்கம் பிரம ஸ்துதியைத் தொடர்ந்து கல்வியின் தேவதையான ஸரஸ்வதிக்கு வணக்கம் செலுத்தப்படுகிறது. வெள்ளைக் கமலத்தில் வீற்றிருக்கும் அந்த கல்வி தேவதை கனியிசையை வழங்கும் நல் யாழினைக் கைக்கொண்டிருக்கிறாள். வேதங்களைத் தன்னிரு கண்களாகக் கொண்ட அந்த தேவி கலைவாணியைச் சரண் புகுந்து, அவள் அருள் வாக்களிப்பாள் என்ற தைரியத்தில் மகாகவி ஐவர் பூவை திரெளபதி புகழ்க் கதையை மாணியல் தமிழ்ப்பாட்டால் உருவாக்கத் தொடங்குகிறார்.   

பாஞ்சாலி சபதக் கதை அத்தினாபுரத்தில் தொடங்குகிறது. இந்தக் காப்பியத்தில் தமிழ்க்காப்பிய முறைப்படி நகர வர்ணனை கொடுக்கப்படுகிறது. அத்தினாபுரத்தில் நன்மைகளும் தீமைகளும் ஒருசேரக் காணப்படுகின்றன. மெய்த் தவம் புரிந்தோர் ஒருபுறமென்றால், வெறும் வேடங்கள் பூண்டவர் மறு பக்கம். உயர்ந்த சிவஞானம் ஒரு புறமென்றால், பொய்த்த இந்திர ஜாலம் நிகர் பொய்ம்மையில் பிழைப்போர் மறுபுறம். இருளும் ஒளியும் இணைந்தே காணப்படுவது அத்தினாபுரம். நன்மைகள் ஒரு புறம் என்றால் தீ நிகர் தீமைகளும் மறுபுறமுண்டு. 

அந்த நகரத்தில் அரவக்கொடி உயர்த்தி நின்றான் துரியோதனன் எனும் பெயருடைய துணிவுடை நெஞ்சத்தான், கரி ஓர் ஆயிரத்தின் வலி காட்டிடும் வீரத்தான். தந்தை திருதராட்டிரன் சொற்படி இந்தத் தடந்தோள் மன்னன் அரசு புரிந்து வந்தான். மந்திரமுணர் பெரியோர் பலர் அவன் அவையில் இருந்தனர். அறமுறை தவறாத வீட்டுமாச்சாரியன், மெய்நெறி உணர் விதுரன், இவர்களோடு துரியோதனின் பொய்நெறித் தம்பியரும், புலை நடைச் சகுனியும் உடனிருந்தார். இவர்களோடு கொடையில் சிறந்தோன், உயர் மானமும் வீரமும் மதியுமுள்ள கர்ணனும் இருந்தான். 

 இப்படி அரசாண்ட துரியோதனனிடம் எண்ணிலாப் பொருளின் குவையும், நாலா திசைகளிலும் செல்லும் ஆக்ஞாசக்கரமும், கடல்போன்ற சேனையும், நினைக்கும் இன்பங்களெல்லாம் துய்க்கும் வாய்ப்பும் இருந்தும், அந்த கண்ணற்ற திரிதராட்டிரன் மைந்தன் காய்ந்த நெஞ்சோடு பொறாமைத் தீயால் வாடிநின்றான். பாண்டவர்கள் பாரில் புகழோடு வாழும் வரை நான் ஆளும் அரசும் ஓர் அரசாகுமோ? என் வீரமும், செல்வமும் புகழ் பெறுமோ? அர்ச்சுனன் நெஞ்சிலும், திறல் வீமன் எண்ணத்திலும் எனக்கெதிரான எண்ணங்களே இருக்கின்றன. துரியோதனனின் பொறாமைத் தீ இவ்வுலகை ஆளுகின்ற மன்னர்கள் அனைவரும் வகைவகையா திரை செலுத்தி அந்த பாண்டவர் காலடியில் கொண்டு குவிக்கின்றனரே. அந்தத் தருமன் தனது தம்பியரின் தோள் வலியால் அனைவரையும் வென்று சக்கரவர்த்தி எனப் பெயர் சூட்டிக் கொண்டு விட்டான்.  இப்படி ஊராரும் உலகத்தாரும் இவர்களைப் புகழ்வதை நான் எப்படிப் பொறுத்துக் கொள்வேன்?

அடடா! அவர்களுக்கு வந்து சேர்ந்த பொருட்குவியல்தான் எத்தனை எத்தனை? இந்த உலகத்துச் செல்வங்கள் எல்லாம் இந்தத் தருமனுக்கேவா? இப்படி எண்ணியெண்ணி மனம் நொந்தான் துரியோதனன். பொறாமை எனும் தீ அவன் உள்ளத்தில் பற்றி எரிந்தது. என்ன நடந்தாலும், எந்த வகையாலும் அந்தப் பாண்டவர் வாழ்வைத் தீது செய்து முடித்திட எண்ணி, அதனை எப்படிச் செய்வது என்று திகைத்து நிற்கும்போது, அவனுடைய மாமனின் நினைவு வருகிறது. 

அந்த மாமன் சகுனி, சூதும் பொய்யும் உருக்கொண்டு நிற்கும் ஓர் கொடிய மனிதன். அவனை அணுகித் தன் மனத்தின் ஓட்டத்தைச் சொல்லி சரணடைந்தான். தனது மனக் கிலேசத்தைப் பலவாறும் அந்தக் கொடிய பாதகன் சகுனியிடம் முறையிட்டு அழுகிறான் துரியோதனன். அவர்கள் செல்வச் செழிப்பையும், மாளிகையின் மாண்பையும் பார்த்து வரும்போது ஏற்பட்ட அவமானத்தைச் சொல்லி அந்த ஏந்திழையாள் திரெளபதி என்னை எள்ளி நகையாடிச் சிரித்தாளடா மாமனே, அவர் பேற்றை அழிக்க ஓர் உபாயம் சொல் மாமனே, அவர் செல்வம் கவர்ந்து அவரைத் தெருவில் விட ஓர் வழியைச் சொல் மாமனே என்று முறையிடுகிறான்.
  
பொய்மையும் சூதும் வஞ்சகமும் ஒருங்கிணைந்த சகுனிக்கு இதைவிட ஓர் சந்தர்ப்பம் வேண்டுமா என்ன? சும்மா பேசிப் பயனில்லை துரியோதனா? வீண் வார்த்தை வளர்க்காதே. நான் உனக்கு ஓர் உபாயம் உரைப்பேன், கேள். தெய்வ மண்டபம் ஒன்றை உருவாக்கு. அந்த மண்டபம் காண அவர்களை வருகவென அழைப்பாய். அங்கு நம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். அவர்களை சூதுக்கழைக்கலாம். ஒரு நாழிகைப் போதினில் அவர்கள் செல்வங்களையெல்லாம் இழந்துத் தொண்டரென ஆக்கிடுவோம், என் சூதின் வலிமை உனக்குத் தான் தெரியுமே என்றான் சகுனி. 

போரிட்டு வெல்வோமெனில், போரில் வெற்றியும் தோல்வியும் யாருக்கு வருமென்று எப்படிச் சொல்ல முடியும்? அதிலும் அந்த பாண்டவர் வீரம் பெரிது. ஒரு அர்ச்சுனன் வில்லுக்கு இணையுண்டோ? சூதாடுவதை இகழ்ச்சியாக எண்ணாதே என்றான் சகுனி. இதற்கு முன்பும் சூதாடி எதிரிகளைத் தோற்கடித்தோர் ஏராளமாக உள்ளனர். நாட்டுக்காகவும், குடிமக்களுக்காகவும், செல்வத்திற்காகவும் பெரும் போர்களை இவ்வுலகில் செய்திருக்கிறார்கள். அந்த செல்வங்கள் அத்தனையும் சூதாடி ஒரு நொடிப்பொழுதில் வெல்லமுடியும் என்றால் உனக்கு வேறென்ன வேண்டும்?
 
அதுகேட்ட துரியோதனன் நல்ல யோசனை சொன்னாய் மாமனே என்று சொல்லி ஒரு ஹாரத்தைப் பரிசாகக் கொடுத்தான். அவனை மார்புறத் தழுவிக்கொண்டு எனக்கு இந்த பூமியில் இதமான சொற்களைக் கூறக்கூடியவர் உன்னைத்தவிர வேறு யாருமில்லை என்றான் துரியோதனன்.   

பிறகு இவ்விருவரும் திருதராட்டிரனுடைய அவைக்குச் சென்று அவனை வணங்கிவிட்டு, இரக்கமில்லாத சகுனி சொல்லுகிறான் "அரசே! உன் மகன் துரியோதனனைப் பற்றிய செய்தியைக் கேள். உடல் இளைத்துத் துரும்பு போல ஆகிவிட்டான். உயிர்வாழ்வதையே அவன் வெறுத்துப் பேசுகிறான். எந்த உணவையும் சுவைபார்த்து உண்பதை நிறுத்தி விட்டான். உடுக்கும் உடைகளிலும் கவனமின்றி அலட்சியமாகவே உடுத்துகின்றான். நண்பர்களோடு கூடி மகிழ்ந்து இருக்க மறுக்கிறான். இளம் மங்கைகளைக்கூட ஏரெடுத்தும் பார்ப்பதில்லை. கண்கள் சோர்வடைந்து காணப்படுகிறான். இதற்குக் காரணம் உங்களுக்குத் தெரியுமா அரசே!" என்றான் சகுனி.

 தன் மகன் துரியோதனனைப் பற்றி சகுனி சொன்னதைத் திருதராட்டிரன் கேட்டுக் கொண்டான். அவன் மனம் வருத்தமடைந்தது. என் மகனுக்கு என்ன குறை? இந்த சகுனி சொல்வதில் ஏதேனும் உண்மையிருக்கிறதா? மகனே துரியோதனா! உனக்கு ஏதேனும் மனக்குறை உண்டா? உன்னை எதிர்ப்பவர்கள்கூட இருக்கிறார்களா? நீ விரும்புவனவற்றை நொடிப்பொழுதில் கொண்டு வந்து கொடுக்க ஆட்கள் இல்லையா? அமுதம் போன்ற உணவு வகைகள்; இந்திரன்கூட வெட்கப்படுமளவுக்கு ஆடம்பரமான உடைகள்; இட்ட பணிகளைச் செய்யக் காத்திருக்கும் மன்னர்கள்; எதிர்வரும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் ஆற்றல்மிக்க அமைச்சர்கள்; நல்ல குடிமக்கள், படைவீரர்கள்; இந்த பூமியெங்கும் பெரும் புகழ் பெற்று விளங்கும் உன் சகோதரர்களான அந்தப் பாண்டவர்கள் இவர்கள் அனைவரும் இருந்தும் உனக்குத் துயரமா? 

 தந்தை இப்படிக் சொல்லக் கேட்ட அரவக்கொடியுடைய துரியோதனன், கொடிய நெருப்பினைப்போல் சினம் கொண்டு பேசத் தொடங்கினான். அவன் பேச்சை இடைமறித்து சகுனி சொல்கிறான், இவன் கொடுங்கோபத்தில் பேசுவதைப் பொறுத்துக்கொள்வாயாக. இவனுக்குள்ள குறைகளை, வருத்தங்களையெல்லாம் தங்கள் சந்நிதியில் வந்து முறையிடுமாறு என்னைக் கேட்டுக் கொண்டான். அதற்கு சம்மதித்து இவனை நான்தான் இந்த அவைக்கு வலியக் கூட்டி வந்தேன். இவன் சொல்பவைகள் நியாயமானவைதான், ஆனால் சரியாகச் சொல்லத் தெரியாமல் தடுமாறுகிறான். மனதில் கோபம் கொண்டவர்கள் சொல்ல வந்த செய்தியைச் சரியாகச் சொல்ல முடியாதல்லவா?  இவன் நீ பெற்ற பிள்ளை அல்லவா? நீதி நெறி முறைகள் அறியாமல் போகுமா? ஒரு விளக்கில் பல தீபங்களைக் கொளுத்தினாலும் அவற்றின் ஒளி குறைந்து போகுமோ? மன்னர்க்கழகு மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்கிக்கொள்ளும் ஆசையை நெஞ்சில் வளர்த்துக் கொள்வது. அப்படியிருக்க தன்னைக் காட்டிலும் வேறொருவர் செல்வத்தில் சிறந்து விளங்குவது ஆபத்து இல்லையா, அதனைத் தாங்கிக் கொள்ள முடியுமா?

இதோ உன் மகன் துரியோதனன் ஆயிரம் யானைகளின் பலம் கொண்டவன். இந்த பூவுலகத்தை ஆளும் உந்தன் வம்சத்தில் ஆளப்பிறந்த முதல் மகன் இவன். அந்த பாண்டவர் செய்த வேள்வியில் சூரியன் இருக்கும்போது மின்மினிப் பூச்சியைப் போற்றுவது போல உன் மகன் இருக்க அந்த கண்ணனுக்கு மரியாதை செய்தனர். அவர்கள் கொடுத்த அர்க்கியம் உன் மகனுக்கு இல்லை. மாறாகப் புவி ஆளும் மன்னர்கள் கூடிய சபையில் அந்தக் கண்ணனுக்குக் கொடுத்தனர். கூடியிருந்த மன்னர்கள் மனம் நொந்து போயினர். பலர் கேலி பேசும் படியாகவும், இளக்காரமாகப் பேசும்படியும் உன் மகனை வைத்துவிட்டனர். இப்போது இவன் வருத்தத்துக்குக் காரணம் புரிகிறதல்லவா? அந்த பாண்டவர்களுடைய செல்வத்தை உன் மகன் அடைய விரும்புகிறான். இந்தப் புவியை ஆளும் உரிமையை வேண்டுகிறான். உன் குலப் பெருமையை நிலைநாட்ட விரும்புகிறான். வீரனான உன் மகனின் ஆசை நியாயமானதுதானே! இல்லை என்றால் இந்த உலகம் சிரிக்காதா? 

 கங்கை நதியில் நல்ல நீர் அளவின்றி வந்து என்ன பயன்? அது அத்தனையும் கடலில் கொண்டுபோய் கொட்டுகிறதே. ஓர் அடர்ந்த காடு, அதில் மரங்கள் சூழ சூரிய ஒளிபடாதவாறு கீழே ஒரு குளம், அதன் தண்ணீர் பாசிபடிந்து ஒருவருக்கும் பயன்படாமல் இருக்கிறது. அது போல செல்வம் பிறருக்குப் பயன்படாமலே இருப்பது சரியா? 

இப்படியெல்லாம் கள்ள மனம் கொண்ட சகுனி பல கற்பனைக் கதைகளைச் சொல்லி திருதராட்டிரன் மனதைக் கலைக்க முயற்சிக்கிறான்.  சகுனியின் பேச்சைக் கேட்ட திருதராட்டிரனுக்குப் பெரும் கோபம் வந்தது. "அட! என் பிள்ளையை நாசம் செய்வதற்கென்றே ஒரு பேயைப் போல வந்து சேர்ந்தாயோ? பெரிய வெள்ளம் அடித்துக் கொண்டு வரும்போது ஒரு புதர் அதனை எதிர்த்து நிற்க முடியுமோ? இளம் வீரர்களான பாண்டவர்களை நம்மால் வெல்ல முடியுமோ? சகோதரர்களுக்குள் ஏதடா பகை? சொந்தக்காரர்களுக்குள் கோபதாபமா? நம்மை நம்பித்தானே அவர்கள் இருக்கிறார்கள்? இவன் முன்பு அவர்களுக்கெதிராகப் பல சூழ்ச்சிகள் செய்த போதும் அந்த ஸ்ரீதரன் கண்ணபெருமான் அருளாலும் நல்லொழுக்கத்தினாலும், தங்கள் பலத்தினாலும் எந்த தீங்கும் வராமல் காத்துக் கொண்டு புகழடைந்தவர்களல்லவா அவர்கள்? குழந்தைப் பருவத்திலிருந்தே இந்தப் பைத்தியக்காரனுக்கு அவர்கள் மீது பெரும் பகை! அவர்களுக்குச் செய்த தீங்குகளால் இவனுக்குப் பெரும் பழிதான் வந்ததே தவிர ஏதாவது நன்மை கிடைத்திருக்கிறதா? என்ன அப்படியொரு பகை அவர்கள் மீது? அவர்கள் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை தெரியுமா? இங்கு வந்து குருட்டுக் கதைகள் சொல்லுகிறாய், தரும நூல்களை இழிவு படுத்துகிறாய்.  ராஜாக்களுக்குள்ள நீதிகளை வந்து சொல்லுகிறாயே, ஒரு பெரிய மலை சிறிய மண்குடத்திற்குள் போனதாக ஒரு நூலைக் காட்டு. 

இப்படிப் பலப்பல சொல்லி சகுனியை திருதராட்டிரன் கோபித்துக் கொள்கிறான். தன் மகனைக் கெடுப்பதாக சகுனி மீது குற்றம் சாட்டுகிறான். அவர்கள் மாளிகையில் இவன் போய் தடுமாறி விழுந்தால் அந்த திரெளபதி சிரிக்காமல் என்ன செய்வாள்? அதில் என்ன பெரிய குற்றத்தைக் கண்டுவிட்டாய்? தவறி விழுபவர்களைப் பார்த்து பெற்ற தாய் கூட சிரிக்கத்தான் செய்வாள். அப்படியிருக்கும்போது இவன் விழுந்ததைப் பார்த்து மற்றவர்கள் சிரித்ததைப் பெரிய குற்றமாகச் சொல்ல வந்து விட்டான். மனதில் குறை வைத்துக்கொள்ள ஏதாவதொரு காரணம் வேண்டும், அவ்வளவுதானே. அதற்கு ஏன் இத்தனை கதைகள் அளக்கிறாய். ஆயிரம் வேலை கிடக்கிறது. போய் அதனைப் பாருங்கள், போங்கள்! என்றான் திருதராட்டிரன்.

 கண்ணனுக்கு முதல் அர்க்கியம் கொடுத்தார் என்கிறாய்? நமக்கு விருந்தினராக வந்தவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் நமக்குள்ளேயே செய்து கொள்வார்களா? அண்ணன் தம்பிகளுக்குள் இத்தகைய சம்பிரதாயங்கள் தேவையா? அவர்கள் நம்மை அன்னியமாகக் கருதவில்லை என்பதை உணரவில்லையோ. அந்த முகில்வண்ணன் கண்ணனை மரியாதைக் குரியவனாகக் கருதியதில் என்ன தவறு? கங்கை மைந்தன் பீஷ்மரும் கண்ணனுக்குத்தான் முதல் மரியாதை என்று சொல்லிவிட்டார். பிறகு அவர்களைக் குறைகூறி என்ன பயன்?

அது கிடக்கட்டும், அந்தக் கண்ணனை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை மன்னர்களுக்குள் எவரும் அவன் கால் தூசிக்குச் சமமில்லை தெரியுமா? உலகத்தில் ஞானமுடைய பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியு மல்லவா? இந்தக் கண்ணன் சாதாரணமானவனா? ஆதிப் பரம்பொருளான நாராயணன், பாற்கடலில் ஆதிசேடன் மேல் அனந்தசயனம் கொண்டிருப்பவன். அந்த சீதக் குவளை விழிகொண்டவன் இந்த பூமியில் அவதாரம் எடுத்திருக்கிறான் என்கிறார்கள். 

இப்படிப் பலபல சொல்லி திருதராட்டிரன் சகுனியின் பேச்சை மறுத்துப் பேசியது கண்டு துரியோதனன் கடும் கோபமடைகிறான். அரவக்கொடி கொண்ட துரியோதனன் பாம்பு போல சீறி, "அட! பெற்ற பிள்ளைக்கே தீங்கு நினைத்திடும் அப்பன் உன்னைப்போல உலகத்தில் வேறு யாரும் உண்டோ? என்னைக் கண்டால் இவனுக்கு வேப்பங்காய் போல கசக்கிறது. அந்த பாண்டவர்களோ, இவனுக்கு சர்க்கரை போல இனிக்கிறார்கள். அவர்கள் என்ன தீமை புரிந்தாலும் அவர்களைப் புகழ்கிறான். என்னதான் செல்வத்தைக் கொண்டு வந்து குவித்தாலும் என்னை இகழ்கிறான், என்று பலப்பல சொல்லி தந்தையை இழித்துப் பேசுகிறான் துரியோதனன்.  எனக்கு நயமாகப் பேசத் தெரியாது. உன்னிடம் வாதம் செய்து ஜெயிக்க இங்கு வரவில்லை. கருங்கல்லில் நார் உரிக்க முடியுமா என்ன? என்னைக் கொன்றாலும் சரி, வேறு என்ன செய்தாலும் சரி, நான் என் மனதில் கொண்ட கருத்தை விடமாட்டேன். அந்த புல்லியர் பாண்டவர் மேம்பட்டு வாழ நான் அதைப் பார்த்துக் கொண்டு வாழ விரும்பவில்லை. உன்னோடு வாதம் புரிய நான் விரும்பவில்லை.

கடைசியாக உனக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேள். நமக்கு எந்தவித தீங்கும் நேராமல் அந்த பாண்டவர்களை வெல்வதற்கு ஒரு வழியிருக்கிறது. அவர்களைச் சூதாட அழைத்து அதில் அவர்களை வென்று அவர்களது அளவிலடங்கா செல்வங்களையெல்லாம் அபகரித்துக் கொள்ளலாம். இந்த யோசனைக்கு நீ தடையெதுவும் சொல்லாமல் என் இஷ்டப்படி செயல்புரிய அனுமதிக்க வேண்டும் என்றான் துரியோதனன். 

தனது தீய மகனுடைய சொற்கள் காதில் தீயைப் போல புகுந்ததைக் கேட்ட திருதராட்டிரன் திகைத்துப் போனான். பெரும் துயரத்தைக் கொண்டு வந்தாய் மகனே! பேய் போன்ற பிள்ளைகளைப் பெற்று விட்டேனே! சிங்கத்தைப் போல அவர்களோடு போரிட உன்னால் இயலாது என்று நான் சொன்னேன், நீயோ நரியைப் போல் தந்திரமாக இந்த வெட்கமில்லாத செயலைச் செய்ய நினைக்கிறாய். ஆண்மை இல்லாத இந்தச் செயலை வீரர்கள் செய்வார்களா? உலகத்தில் மற்றவர் பொருளுக்கு ஆலாய்ப் பறக்கும் பதர்கள் உண்டோ? அளவற்ற செல்வங்களும், புகழும், பெருமையும் பெற விரும்பினால் அதற்கு செய்யக்கூடிய காரியம் இதுவா? என் வீரமகனல்லவா? இந்த நினைப்பை விட்டொழித்து விடு. 

 திருதராட்டிரன் இதுபோல மொழிகள் கூறியதைக் கேட்ட துரியோதனன், என் அப்பனாகிய உன்னிடம் நான் வாதம் புரிய விரும்பவில்லை என்று பலமுறை சொல்லியும் திரும்பத் திரும்ப வாதம் செய்கிறாய். நான் இங்கு வந்த காரியத்தைக் கேள்; அதன்படி நட. நீ சொல்லி அழைக்காவிட்டால் அந்த பாண்டவர்கள் இங்கு வரமாட்டார்கள். எனவே, நீ அவர்களை சூதாட இங்கு வரச்சொல்லி அழைப்பு விடு. நீ அப்படி செய்ய மறுத்தால் உன் முன்னாலேயே என் உயிரை விட்டுவிடுவேன் என்றான். 

ஒன்றை தெரிந்துகொள், வெற்றி என்பது நம் குலத்தொழில். எந்த விதத்திலும் வெற்றி பெறுவதில் தவறே கிடையாது. நல்ல வழி, தீய வழி என்று நாம் அதில் பேதம் பார்க்க முடியுமா? நம் போக்கில் எதிர் வரும் எந்தப் பகையையும் ஒழித்து வெற்றி காண்பது உத்தமம் என்றனர் பெரியோர்கள்.

இப்படித் துரியோதனன் பேசிய பேச்சுக்களைக் கேட்டு திருதராட்டிரன் மனம் ஒடிந்து போனான்.   விதி இப்படியெல்லாம் விளையாடுமென்று அறிவிற் சிறந்த விதுரன் அன்றே வரும்பொருள் உரைத்தான். இப்படியொரு வினையால் அரசர் குலம் அழிந்தே போகுமென்றான். நீ இப்போது சதி செய்யத் தொடங்கி விட்டாய். அந்த சதியால் அவன் சொன்னபடி எல்லாம் நடக்கத்தான் போகிறது.

விதி! விதி! விதி! மகனே, இனி நான் என்ன சொல்ல இருக்கிறதடா மகனே! கெட்ட காலம் வந்ததால் இந்த கயவன் சகுனி உனக்குத் துணையாக சேர்ந்திருக்கிறான். நீ வீணாக ஆத்திரப்பட வேண்டாம். நீ விரும்பியபடி நான் அந்த பாண்டவர்களை அழைக்கிறேன். நீ உன் மாளிகைக்குச் செல் என்று கண்களில் நீர் வழியச் சொன்னான் திருதராட்டிரன். 

தன் மகனும் அவன் மாமன் சகுனியும் அங்கிருந்து போனபிறகு மன்னன் பணியாளர்களை அழைத்து பாண்டவர்கள் கட்டியுள்ள புது மாளிகையைப் போன்றதோர் எழில்மிகு மாளிகையொன்றைப் புதிதாக நிர்மாணிக்கப் பணித்து அதற்காகப் பெரும் பொருள் தருவேனென்று உரைத்தான்.

மிகுந்த மகிழ்ச்சியோடு சென்று அவர்கள் ஓர் பொற்சபையினை கட்டி முடித்தனர். அதனைக் கண்ட ஊரார் வானளாவ அந்த மாளிகையைப் புகழ்ந்தனர். அது என்ன சாதாரண கட்டடமா? இல்லை இல்லை கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு ஒளிவீசும் பல மணிகளைச் சேர்த்து அழகான சொற்களாலான சிறந்த காப்பியம் போல அதனைச் செதுக்கினர்.

அறிவிற் சிறந்த தன் இளவலான விதுரனை மன்னன் அழைத்தான். அவனைத் தன் தம்பியின் மக்களிடம் அரிய சிறந்த பரிசுப்பொருட்களை எடுத்துச் சென்று கொடுத்து அவர்களையும் அவர்களோடு அவர்கள்தம் துணைவி திரெளபதியோடும் தாங்கள் அமைத்திருக்கும் புதிய மண்டபம் காணவும் விருந்துண்ணவும் வருமாறு உங்கள் பெரிய தந்தை திருதராட்டிரன் அழைத்தான் என்று கூறி அழைத்து வா என்றான்.  நாடு போற்ற நல்லதோர் புதிய மணிமண்டபம் எழுப்பியிருக்கும் செய்தியை அவர்களுக்குச் சொல்வாய். நீங்கள் நடத்திய பெரு வேள்விக்கு வந்து திரும்பிய பின் தன் மக்களை விருந்துக்கழைக்க முதியவனான மன்னன் விரும்பி அழைத்தான் என்று அவர்களிடம் சொல்.

அப்படி இதமாக அவர்களை அழைக்கும் போதே பேச்சோடு பேச்சாக, சகுனியின் சொற்கேட்டு பேயனத்தக்க பிள்ளை துரியோதனன் தன் மனதில் கொண்ட செயலையும் குறிப்பால் சொல்லிவிடு என்றான் திருதராட்டிரன். 

மன்னன் சொற்கேட்ட சான்றோன் விதுரன், "போச்சுது! போச்சுது பாரத நாடு! போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்! இனி கொடுமையான காட்சிகளைத்தான் காணப்போகிறோம். இதனைத் தடுக்க முடியாதா?" என்று பெரும் துயரடைந்து ஏங்கிப் பலப் பல பேசினான். 

மன்னன், "சென்று வா! தம்பி! இனிமேல் சிந்தனை எதுவும் இதில் செய்வதற்கில்லை. விதி வென்றுவிட்டது. இதனால் விளையக்கூடியதை நீ அறிவாயே! அன்றே முடிவு செய்துவிட்டதை இன்று தடுத்து விட முடியுமா?” என்று சொல்லி சோர்ந்து மயங்கி வீழ்ந்தான்.  
மன்னனிடம் விடைபெற்று விதுரன் சென்றான். வழியில் ஆறு மலைகளைக் கடந்து போய் வீரர்களாம் பாண்டவர்கள் ஆட்சி செய்யும் எழில் மிகுந்த மாநகர் புகுந்தான். வழியில் கண்ட நாட்டு வளங்களையெல்லாம் எண்ணிப்பார்க்கிறான் விதுரன். நீலநிற சிகரங்களைக் கொண்ட மலைகள், அமுதமென நீர் பாய்ந்து வளம் பெருக்கும் நாடு, பயன் தரும் நல்ல மரங்களடங்கிய சோலைகள் சூழ்ந்த நாடு, பசி என்பதே இல்லாத வகையில் நன்செயும் புன்செயும் வகையின்றி விளைந்து வளம்பெருக்கும் நாடு, பாலும் தேனும் உண்டு மக்கள் நலம்பெறும் நாடு என்று அந்த நாட்டின் சிறப்புக்களையெல்லாம் எண்ணி அப்படிப்பட்ட வளமிகுந்த பொன்னாடு நாசமடைய நானும் துணை புரிய நேர்ந்ததே என்று மனம் நொந்தவாறு சென்றடைந்தான்.  

அங்கே பாண்டவர் அரண்மனையில், விதுரன் தங்களை நாடி வருகிறான் என்ற செய்தி கேட்டு மனம் புளகாங்கிதமடைந்த பாண்டவர் நால்வகைச் சேனையுடன், பரிசுகளை ஏந்தி, மேள தாளத்துடன் அவரை எதிர்கொண்டழைத்து, தங்கள் மணிமுடி தாழ்த்தி வணங்கி விதுரனின் பாதமலர்களைப் போற்றிப் புகழ்ந்து, இன்மொழிகளால் அவருடைய நலன்களை விசாரித்தறிந்தபின், அவனை அழைத்துக்கொண்டு அரண்மனை சென்றடைந்தனர்.

அரண்மனை சென்றடைந்த விதுரன் குந்தி தேவியைச் சென்று வணங்கினான். அப்போது வீரம் செறிந்த பாஞ்சால மன்னன் துருபதனின் மகளான திரெளபதி குனிந்த தலையோடு அங்கு வந்து, அந்திமாலையில் வானத்தில் உதிக்கும் இனிய நிலவினைப் போல முகத்தோடு மாமனாரான விதுரனின் பாதங்களில் தலைவைத்து வணங்கினாள்.

தங்கப் பதுமைபோல் வந்து தன்னை வணங்கிய மருமகளை விதுரன் ஆசீர்வதித்தான். அங்கு வந்திருந்த உறவினர், நண்பர்கள், புலவர்கள், சேவகர், வீரர்கள் என எல்லோருடனும் பேசிக் களித்தபின் ஊரை வலம்வந்து வீடுதிரும்பவும் அன்றைய பகல் பொழுது முடிந்து இரவு தொடங்கியது.
   
இரவுப் பொழுது வந்ததும் விதுரன் பாண்டவர் ஐவரையும் தனித்து அழைத்துச் சென்று ஓர் அழகிய மண்டபத்தில் அமர்ந்து சொல்லுகிறான். "வேந்தர் பிரான் திருதராட்டிரன் நீங்கள் சீரோடும் சிறப்போடும் என்னாளும் வாழ்க என்று உங்களை வாழ்த்தி, உங்களிடம் ஓர் செய்தியைச் சொல்லச் சொன்னான்" என்றான். இந்த வையகம் மீது இணையற்றதாக ஓர் புதிய மண்டபத்தை உனது தம்பியர் சமைத்துள்ளனர், அதன் விந்தை அழகினைக் காண உங்களை அன்போடு அழைக்கிறான் வேந்தன். நீங்கள் அங்கு வந்து விருந்துண்டு களித்திட வேண்டுமென்று மன்னன் விரும்புகிறான் என்றான் விதுரன். 

அத்தோடு நான் உனக்குச் சொல்ல விழையும் செய்தி ஒன்றுண்டு. சகுனியின் சொற்கேட்டுத் தன் சுயத்தன்மையை இழந்துவிட்ட துரியோதன மூடன் விந்தை பொருந்திய புது மண்டபத்தில் உங்களை சூதாடிக் களித்திட அழைக்கும் சூழ்ச்சியொன்றும் அவன் மனத்தினில் இருக்கிறது என்பதையும் நான் உனக்குத் தெரிவித்தேன் என்று விதுரன் இயம்பத் தருமன் மனம் கலங்கினான்.

சில சொற்களை மட்டும் பேசுகிறான். புதிய மண்டபம் கட்டிய செய்தியும், அதில் சூதாட்டத்திற்கு அழைக்கப்போகும் செய்தியும் என் மனத்தில் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. மனத்தில் ஐயங்கள் எழுகின்றன. அந்த சுயோதனன் நமக்கு நன்மை விரும்புவனுமல்லன், அவனை நம்புவதும் முடியாத காரியம். நம்மைக் கொல்ல முன்பு பல சதிகள் செய்தவன் அவன். அவனால் நமக்கேற்பட்ட துன்பங்கள் எண்ணிலடங்கா என்பது உனக்குத் தெரியாததோ? வெல்லக் கூடியவர்கள் என்றாலும் மன்னர்கள் சூதினை விரும்பலாமோ? என் மனம் சங்கடப்படுகிறது, அது தெளிவடைய நீதான் ஓர் உபாயம் சொல்ல வேண்டுமென்றான். 

அதற்கு விதுரன் சொல்லுகிறான்: "பெரியோர்கள் இச்செயலை மேன்மையுடையதாகவா நினைப்பார்கள்; விஷம்போலக் கருதுவார்கள். இச்செயலின் தாழ்மையெலாம் அவர்களுக்கு உரைத்து விட்டேன் இது மிகத் தீது என்று, அண்ணன் எத்தனை சொல்லியும் இளவரசன் மதுவை அதிகமாகக் குடித்தவன் போல் அந்த ஒரு வார்த்தையையே திரும்பத் திரும்பக் கூறுகிறான்."

 "அண்ணன் கல்கூட கரைந்துவிடும்படி எடுத்துக்காட்டிய நீதிகளோ கணக்கற்றவை, ஆனால் அந்தப் புல்லன் எதனையும் உள்ளத்தில் வாங்கிக் கொள்ளவில்லை. தனது மடமையினால் சூது ஒன்றையே குறியாக நிற்கிறான், மன்னனும் அதுகண்டு அவன் விருப்பப்படியே உங்களை அழைக்கும்படி சொன்னார்." 

இதனைக் கேட்ட தருமனும் மனத்தளர்ச்சி நீங்கி ஓர் உறுதி கொண்டு சொல்லுகின்றான், "என்ன சூது செய்தாலும், மதி மருண்டு அவர்கள் விருந்தினரை அவமதித்தாலும், நாம் கருமமொன்றையே கருத்தில் கொண்டு நெறிப்படி நடப்போம். பெரிய தந்தை வரச்சொல்லி யிருக்கிறான், சிறிய தந்தை தூது வந்திருக்கிறான், இனி யோசிக்க எதுவுமில்லை. எது நடந்தாலும் சரி என்று துணிந்து விட்டேன். தவறுகளைச் செய்ய மாட்டோம். அறநூல்கள் காட்டும் வழிப்படி நடப்போம்" என்றான். 

தருமன் வீமனை அழைத்து நாம் இரண்டு நாட்களில் நமது படைகளோடு அத்தினாபுரம் செல்வதற்குரிய ஏற்பாடுகளை உடனே செய்வாயாக என்றான். பீமன் திகைத்தான். இளைய வீரன் அர்ச்சுனனை நோக்கிச் சொல்லுகிறான், "மாமன் சகுனியும் மருகன் துரியோதனனும் நம்மை அழிக்கக் கருதி இந்த சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். இனியும் தாமதம் செய்யலாமா? போவோம் போவோம் என்று இடிபோல நகைத்தான்.

அண்ணன் ஆணைப்படியே படைகொண்டு செல்வோம் என்றான் பீமன். நமக்குள்ளான இந்தப் பகை நெடுநாட் பகை. இதை நினைத்தே நான் பலநாட்கள் கழித்தேன். கெடுநாள் வருமளவும் நாம் ஒரு பூச்சியைக்கூட கொல்லக்கூடாதல்லவா? இப்போது வந்துவிட்டது. வில்லில் நாணைத் தொடுத்திடுவோம், நம் வில்லுக்கு இரை மிக விரைவில் கிடைக்கப்போகிறது. போருக்குச் செல்வோம்; அப்பன் பிள்ளை இவர்கள் சாதுரியத்தை யாரிடம் காட்டுகிறார்கள்? எத்தனை நாட்கள் இவற்றைப் பொறுத்திருப்பது? 

இப்படி வில்விஜயனும் பீமனும் பேசியபோதும் அண்ணன் தருமன் புன்னகை பூத்து அவர்களுக்கு மறுமொழி உரைத்தார். முன்பு துரியோதனன் செய்த கொடுமைகளும், இன்று மூண்டிருக்கும் இந்த கொடுங் கோலமும், இதன் பின்னர் விளையப்போவதும் நான் உணர்ந்தே யிருக்கிறேன். என்னைப் பித்தன் என்றெண்ணி பேசுகின்றீர்கள். கைப்பிடி கொண்டு ஒருவன் சக்கரத்தைச் சுழற்றும்போது அது கூடவோ குறைவாகவோ சுற்றுவது சுற்றுபவனின் வேகத்தைப் பொறுத்ததே தவிர சக்கரத்தின் தன்மையால் விளைவதல்ல. இதனை புவி மீது வாழும் உயிர்களுக்கும் ஒப்பிடலாம். இது ஏதோ செப்பிடு வித்தை போல தோன்றினாலும், உண்மையில் இவை யாவும் தவறின்றி சீராக நடப்பது விதியின் செயல்களால்தான்.  இப்படிப் பற்பல நீதிகளை தருமன் எடுத்துரைத்தான் தம்பியர்களுக்கு.

அண்ணன் சொற்கேட்ட தம்பியர்கள் கைகளைக் கூப்பி உலகில் அறத்தினை நிலைநிறுத்த வந்தவன் நீ என்று தருமனைப் புகழ்ந்தனர். உன் வார்த்தைகளை மீறி எந்தச் செயலையும் செய்ய மாட்டோம். ஆண்டான் ஆணையிட்டாலன்றி அடியார்களுக்கு வேறு கடமையுண்டோ? ஐயனே பாண்டவர்தம் ஆவி நீயே! என்றனர்.  அதன் பின் மூன்றாம் நாளில் தருமன் தம்பியரோடும் பாஞ்சாலன் திருவிளக்காம் திரெளபதியோடும், உற்றார் உறவினரோடும், படைகளோடும் பயணம் செய்து தங்கள் நகரினை நீங்கி தீயோர் ஊருக்குப் புறப்பட்டான்.

விதி வழிகாட்ட பாண்டவர் ஐவரும் பத்தினியோடும் மற்றவரோடும் நடந்து சென்றனர். நரி செய்யும் சூழ்ச்சியினால் வீரமிக்க அரிமா வலையில் விழும். சிற்றெரும்பால் ஓர் யானை இறந்து போகும். வரிபடர்ந்த புலிதனைக் கேவலம் புழுவும் கொல்லும். வருங்காலத்தை உணர்ந்தோரும் சிலநேரம் செய்வதறியாமல் மயங்கி நிற்பர். இப்படி விதியினால் பலவும் ஏறுக்கு மாறாகவும் தலை கீழாகவும் நடக்கும். 

 மாலைப்பொழுது வந்தது. திரெளபதியை அர்ச்சுனன் அழைத்துச் சென்று ஓர் தனியிடத்தில் பசும்புல் வெளியில் மேலை வானத்தில் மறைகின்ற கதிரவனைத் தொழுது கண்டான். அன்போடு அவன் மீது சாய்ந்த திரெளபதிக்கு அந்த மாலை நேர எழில் காட்சியை விளக்குகின்றான். “பாரடியோ வானத்துப் புதுமையெல்லாம். பண்மொழி! கணந்தோறும் மாறி மாறி ஓரிடம் போல் மற்றோரிடம் இன்றி மனதில் உவகை பொங்கப் புதிது புதிதாகத் தோன்றும் காட்சிகளைப் பார்! புவிமீது எண்ணரியப் பொருள் கொடுத்தும் இதுபோலே யாரே இயற்ற வல்லார்? வேத முனிவர்கள் போற்றும் இந்தச் செம்பொன் ஜோதி வனப்பையெலாம் ஒரு சேர இங்கு காண்பாய். ஒவ்வோர் கணமும் வியத்தகு காட்சிகள் தோன்றும். கணந்தோறும் வெவ்வேறு கனவுகள் தோன்றும். நவநவமாங் களிப்பு தோன்றும். இதையெல்லாம் கருதவோ சொல்லவோ முடியுமா? கணந்தோறும் புத்தம் புது வண்ணம் காட்டி காளி பராசக்தியவள் களிக்கும் கோலம், இதனைப் பெரியோர்கள் கணந்தோறும் பராசக்தி பிறப்பாளென்று சொல்லுகின்ற விளக்கத்தை இத்தோற்றத்தில் பார்ப்பாய்.”

“அடி வானத்தில் பரிதியின் கோளம், அது அளப்பரிய விரைவோடு சுழலக் காண்பாய். வானத்தில் மின்னலும் இடியும் கோடி கோடியாய், அவற்றை எடுத்து ஒன்றாய் உருக்கி வார்த்து, முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே சுழற்றுகிறாள்.”

இப்படி இயற்கையின், மாலைக் காட்சியின் மாண்பு இவற்றை அர்ச்சுனன் காட்டி எழுந்து நின்று பல்லாண்டு வாழ்க என்போம் என்கிறான்.                                                                                                                                                                                                      இனி பாரதியின் வாக்கால் அடுத்தபாட்டைப் படித்தால்தான் அதன் சிறப்பு புரியும். 

'செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்-அவன்
எங்களறிவினைத் தூண்டி நடத்துக'என்பதோர் நல்ல
மங்களம் வாய்ந்த சுருதி மொழிகொண்டு வாழ்த்தியே-இவர்
தங்க வினங்க விருந்த பொழி விடைச்சார்ந் தனர்-பின்னர்
அங்கவ் விரவு கழிந்திட,வைகறை யாதலும்-மன்னர்
பொங்குகடலொத்த சேனைகளோடு புறப்பட்டே,-வழி
எங்குந் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே,-கதிர்
மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை வந்துற்றார்

  
இப்படி அர்ச்சுனன் கண்ட இயற்கைக் காட்சியோடு முதல் சருக்கம் முடிவடைகிறது. இந்த இடத்தில் மகாகவி பாரதியார் அருளியுள்ள பாடல் காயத்ரி மந்திரத்தின் உட்பொருளை மக்களுக்கு விரித்துரைக்கிறது. இதோ அது: "செங்கதிர்த் தேவன் சிறந்த யொளியினைத் தேர்கின்றோம் - அவன் எங்க ளறிவினைத் தூண்டி நடத்துக" என்பதோர் - நல்ல மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே - இவர் தங்களினங்க ளிருந்த பொழிலிடைச் சார்ந்தனர் - பின்னர் அங் கவ்விரவு கழிந்திட வைகறை யாதலும் - மன்னர் பொங்கு கடலொத்த சேனைகளோடு புறப்பட்டே - வழி எங்குந் திகழு மியற்கையின் காட்சியி லின் புற்றே - கதிர் மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை வந்துற்றார்" 

                                                2ஆம் பகுதி தொடரும்.