பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, January 4, 2016

கண்ணன் பாட்டு.


 'முப்பெரும் பாடல்கள்' எனப் போற்றப்பெறும் மகாகவியின் பாடல்களில் கண்ணன் பாட்டும் ஒன்று. மற்ற இரண்டும் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவையாகும்.

 கண்ணன் பாட்டின் சிறப்பு என்ன தெரியுமா? பண்டைய நாட்களில் மாணிக்கவாசகர், ஆண்டாள் நாச்சியார் முதலானோர் தங்கள் பாடல்களில் இறைவனைத் தலைவனாகவும் மற்ற உயிர்கள் அனைத்தும் தலைவியாகவும் பாவித்துப் பாடல்களை இயற்றினர். இறைவன் ஒருவன். உயிர்கள் பல. அந்த ஒருவனான இறைவனை அடைய உயிர்களெல்லாம் நாயக நாயகி பாவங்களைக் கொண்டு பாடல்கள் வெளிவந்தன. ஆனால் மகாகவி பாரதி அந்தப் பழைமையை தவிர்த்துவிட்டு புதிய பாதை வகுத்தான். இங்கு பாரதி தன்னைத் தலைவனாகவும், இறைவனைத் தன் காதலியாக, காதலனாக, சேவகனாக, அரசனாக, அமைச்சனாக, தோழனாக இப்படிப் பற்பல முறையில் பாவித்துப் பாடியிருக்கிறான். இதுதான் அவனைப் புரட்சிக்கவியாகப் பார்க்க உதவுகிறது.

இந்தப் புரட்சி உள்ளத்தைப் போற்றும் விதத்தில்தான் "கண்ணன் பாட்டை" நாம் ஆய்வு செய்ய வேண்டும். கண்ணன் பாட்டு என்ற தலைப்பில் பாரதியார் 23 பாடல்களைப் பாடியிருக்கிறார். இவை முறையே, கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காந்தனாக, காதலியாக, ஆண்டானாக, குலதெய்வமாக என்று வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறார். மற்ற தலைப்புகளில் எல்லாம் ஒவ்வொரு பாட்டு வீதம் எழுதிய பாரதி காதலன் எனும் தலைப்பில் 5 பாடல்களையும், காதலி எனும் தலைப்பில் 6 பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

 "கண்ணம்மா என் காதலி" என்ற பாடல்களில் பண்டைய தமிழிலக்கிய அகத்துறை மரபு சார்ந்ததாக, காட்சி வியப்பு, பின்னே வந்து கண் மறைத்தல், முகத்திரை களைதல், நாணிக்கண் புதைத்தல், குறிப்பிடம் தவறியது, யோகம் எனும் தலைப்பில் பாடல்களை அமைத்திருக்கிறார். பொதுவான விளக்கமாக இல்லாமல் கண்ணன் பாட்டு ஒவ்வொன்றின் கருப்பொருளையும் சிறிது கவனமாக இங்கு பார்க்கலாம்.

 "கண்ணன் பாட்டில்" வரும் முதல் 7 பாடல்களின் கருத்தை மட்டும் கொடுத்திருக்கிறோம். அதற்குரிய பாடல்களையும் இந்த உரையோடு சேர்த்து படியுங்கள். கண்ணன் பாட்டை முதன் முதலில் பாரதியாரின் சீடர் பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் 1917இல் பதிப்பித்தார்கள். அவருடைய பதிப்பின் முன்னுரையில் அவர் பாரதி பற்றி கூறும் கருத்து மனதில் நிறுத்திச் சிந்திக்கத்தக்கது. அந்த பகுதி இதோ:- "பாரதியார் பாடல்களின் பெருமையைப் பற்றி யான் விரித்துக் கூறுவதென்றால், இந்த முகவுரை அளவு கடந்து பெரிதாய் விடும். ஒரு வார்த்தை மட்டும் கூறுகிறேன். இந்த ஆசிரியர் காலத்திற்குப் பின் எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின், இவர் பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான் இப்பொழுதே காண்கிறேன்"

பரலி சு.நெல்லையப்பர் அவர்களின் கூற்று எவ்வளவு தீர்க்கதரிசனமானது. இன்று பாரதியாரின் பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்படாத மேடைகளே இல்லை. பாரதியாரைக் குறிப்பிடாத பேச்சாளர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பரலி சு.நெல்லையப்பர் வெளியிட்ட முதல் பதிப்பிற்குப் பின் அதன் இரண்டாவது பதிப்பு 1919இல் வெளியானது. இந்த இரண்டாம் பதிப்பிற்கு வீர விளக்கு வ.வெ.சு.ஐயர் அவர்கள் முன்னுரை எழுதியிருக்கிறார்கள். அந்த முன்னுரையில் ஐயர் அவர்கள் குறிப்பிடுவதாவது:- "கவிதை அழகை மாத்திரம் அனுபவித்துவிட்டு, இந்நூலின் பண்ணழகை மறந்து விடக்கூடாது. இதிலுள்ள பாட்டுகளிற் பெரும்பாலானவை தாளத்தோடு பாடுவதற்காகவே எழுதப்பட்டவையாக இருக்கின்றன. கடற்கரையில் சாந்திமயமான சாயங்கால வேளையில், உலகனைத்தையும், மோக வயப்படுத்தி நீலக்கடலையும், பாற்கடலாக்கும் நிலவொளியில், புதிதாகப் புனைந்த கீர்த்தனங்களைக் கற்பனா கர்வத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான குரலில் பாடினதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்நூலில் உள்ள பாட்டுக்களை மாணிக்கங்களாக மதிப்பர்"

வ.வெ.சு.ஐயர் அவர்கள் இப்படிக் கூறியிருப்பதிலேயே பாரதியார் புதுவை கடற்கரையில் இந்தப் பாடல்களைப் பாடும்போது உடனிருந்து கேட்டு அனுபவித்திருக்கிறார் என்பது புலனாகிறதன்றோ? இங்கு ஐயர் கூறும் சொற்களைக் கவனிக்க வேண்டும். பாரதி பாடும்போது 'கற்பனா கர்வத்தோடும்' 'சிருஷ்டி உற்சாகத்தோடும்' பாடியதாக விளங்குகிறது. ஆம் உலக மகா கவிகளுக்கொப்பாகத் தானும் ஓர் அரிய பாடலை இயற்றிய அந்த மகாகவிஞனுக்கு கர்வமும், அப்படியொரு பாடலை சிருஷ்டித்ததாலேயே உற்சாகமும் கொள்ளுவதும் இயற்கையன்றோ? பாரதியின் குரல் மிகமிக இனிமையானது என்று அவர் பாடும்போது கேட்ட அனைவருமே சான்று பகர்கின்றனர். அப்படியொரு இனிமையான, கம்பீரமான குரலில் அவர் பாடும்போது கேட்டவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.

இதில் ஒரு வருத்தமான செய்தியும் உண்டு. மகாகவியின் இந்த அற்புதமான பாடல்களை அவர் காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் சரிவர ஆதரிக்கவில்லை. இதனைப் பலரும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். இதைக் குறிப்பிட்டு வ.வெ.சு.ஐயர் அவர்களேகூட இப்படிச் சொல்லியிருக்கிறார்:- "........ஆசிரியரின் நூல்களை நம் நாட்டவர் சரிவர ஆதரிக்காததனாலே, "சுற்றி நில்லாதே போ, பகையே - துள்ளி வருகுது வேல்" "கைதனில் வில்லும் உண்டு காண்டீபம் அதன் பேர்" என்றும் உள்ள அக்ஷர லக்ஷம் பெறுமான பாக்களை எழுதியிருக்கும் அவருடைய உற்சாகம் குன்றிப்போயிருக்கிறது" 

"வ.வெ.சு.ஐயர் அவர்கள் இப்படி எழுதியிருப்பதிலிருந்து கண்ணன் பாட்டு அக்காலத்தில் எப்படி மதிக்கப்பட்டிருக்க வேண்டுமோ அப்படி மதிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது" என்று "வழி வழி பாரதி" எனும் நூலில் சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் அவர்களும் எழுதுகிறார்.

அவர் மேலும் சொல்லுகிறார்:- "போப் ஐயர் வரைந்த "இலக்கண நூற் சுருக்கம்" அவர் காலத்திலேயே இலட்சக் கணக்கில் விலை போயிற்று. ஆனால் பாரதியாரின் கவிதை நூல் சில நூறு பிரதிகள் என்ற அளவில்கூட விலை போகவில்லை. இன்று தமிழ் பெற்றுள்ள எழுச்சிக்கு மூல காரணம் பாரதியாரே என்றாலும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை மதித்தவர் ஒரு சிலரே. குருவிந்தக் கல்லுக்கும் கோமேதகத்திற்கும் உள்ள வாசியை, கண்ட அளவிலே உணர்பவர் ஒரு சிலர்தாமே. அதுபோலத்தான் மேதைமையை உணர்தல் என்பதும்" என்று.

கண்ணபிரானை தோழனாய், தாயாய், தந்தையாய், சேவகனாய், சீடனாய், சற்குருவாய், குழந்தையாய், ஒரு விளையாட்டுப் பிள்ளையாய், காதலனாய், கணிகைக்கும் காந்தனாய், காதலியாய், ஆண்டானாய், குலதெய்வமாய் தரிசிக்கும் வழக்கம் ஆழ்வார்கள் காலத்திலிருந்தே நம் பண்பாட்டில் இருந்திருக்கிறது என்கிறார் சேக்கிழாரடிப்பொடி. அதுமட்டுமல்ல, இந்திய இலக்கிய மரபில் கிருஷ்ண பக்தி எனும் இலக்கிய மரபு தனது அழுத்தமானச் சுவடுகளைப் பல மொழிகளில் பதித்துள்ளது என்றும், பக்தி இயக்கம், இலக்கிய இயக்கமாகவும் விளங்கிய காலம் அது என்றும் பெ.சு.மணி அவர்கள் கூறுகிறார்கள். அவர் தனது கட்டுரையில் கூறுவதாவது:- "மகாகவி பாரதியார் அவர்கள், இந்தியக் கவிதை உலகில் கிருஷ்ணனைப் பற்றிய குறியீட்டுக் கவிதை பெற்றுள்ள சிறப்பைக் குறிப்பிட்டுள்ளார். மகாயோகி அரவிந்தரின் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றிற்கு (அஹானாவும் இதரப் பாடல்களும்) 1916 ஜூலை 16ஆம் நாள் வெளியான "காமன் வீல்" (ஆசிரியர் அன்னிபெசண்ட்) இதழில் எழுதிய விமர்சனத்தில் இந்தியக் கவிஞர்களைக் கவர்ந்த கிருஷ்ண பரமாத்மாவைப் பற்றிய பின்வருமாறு மொழிந்துள்ளார்: "Krishna-symbolism has been in the past, one of the most rapturous themes for the Indian poet's heart. In Hindusthan and in Bengal, in the Maharashtra and the Tamil land, the older seers have written some of their best songs about the picture of the cow-herd boy, his flute and his kine - of God. His love and His illuminations." இடைக்குலச் சிறுவனின் வேய்ங் குழலும், ஆநிரையும், அவன் அன்பும், அருளொளியும் கொண்ட சொல்லோவியங்களை வங்கம், மராட்டியம், இந்திப் பிரதேசம், தமிழ்நாடு முதலான பிரதேசங்களைச் சார்ந்த கவிஞர்கள் தங்கள் பாடல்களில் படைத்ததைப் பாரதியார் குறிப்பிடுகிறார். வ.வெ.சு.ஐயர் அவர்கள் கூறுகையில், "பாரத நாட்டின் குல தெய்வமாகிவிட்ட கண்ணனுக்கும் மாலை சூட்டாத கவிகள் அருமை" எனத் தமிழ் இலக்கிய விமர்சன முதல்வர் வ.வெ.சு.ஐயர் அவர்களும், பாரதியின் கண்ணன் பாட்டின் இரண்டாம் பதிப்பிற்கு 1919இல் எழுதிய முன்னுரையில் சுட்டிக் காட்டினார். கண்ணனை ஆயர்பாடியில் குழலூதும் கண்ணனாகவும், மகாபாரத யுத்தத்தில் கீதோபதேசம் செய்த கிருஷ்ணனாகவும் பார்க்கிறோம். பாரதியாரை முதலில் கவர்ந்தது, குருக்ஷேத்திரக் கிருஷ்ணனே என்பதையும் வ.வெ.சு.ஐயர் கண்ணன் பாட்டு முன்னுரையில் கூறுகிறார்.

அடிமைப்பட்டிருக்கும் நாட்டிற்கு குருக்ஷேத்திர யுத்த களத்தில் சங்கொலிக்கும் கிருஷ்ணனே தேவை; குழலூதும் கண்ணன் அல்ல என சுவாமி விவேகானந்தர் கூறியதை வ.வெ.சு.ஐயர் எதிரொலித்தார்.

1909இல் பாரதியார் பதிப்பித்த "ஜன்மபூமி"யில் இரு பாடல்களுக்கு "ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்" என்றுதான் பெயரிட்டார். பெ.சு.மணி தனது நூலில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பாராட்டிய கண்ணன் பாட்டு பற்றி குறிப்பிடுகையில் இவ்வாறு கூறுகிறார்: "கண்ணனைப் பாடிய ஆழ்வார்கள் அவன் பிள்ளைப் பருவத்தில் ஆய்ச்சியர் இல்லங்களில் புகுந்து வெண்ணெய் திருடி உண்டதையும் காளைப் பருவத்தில் கோபிகையரின் ஆடைகளைக் கவர்ந்ததையும், சுவைபட வருணித்துச் சொல்லியுள்ளார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளைப் பற்றி பாரதியார் "கண்ணன் பாட்டி"லே குறிப்பாகக்கூட எதையும் கூறவில்லை என்று தனது 25-10-1981 "செங்கோல்" இதழில் எழுதியுள்ளார்" என்கிறார். கண்ணன் பாட்டில் அமைந்துள்ள சிருங்கார ரசப் பாடல்களான "கண்ணன் - என் காதலன்", "கண்ணன் - என் காதலி" ஆகிய பாடல்களைப் பற்றி பாரதி புகழ் பரப்பிய கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் கூறும் கருத்துக்கள் கவனிக்கத் தக்கன. "எல்லாவற்றிலும் சிகரமாக விளங்குவது கண்ணனின் காதல் காட்சிகள்தாம். சாதாரண ஆண், பெண் காதல் நெகிழ்ச்சியின் பல்வேறு கவசங்களையே கையாண்டு தெவிட்டாத தேவ சுகத்தைப் பாடும் அந்தக் கவிதையின் கற்பனை, தமிழ் இலக்கியம் அகத்துறைக் காட்சிகளிலும், பக்தி இலக்கியப் பண்புகளிலும் எந்நாளும் அழியாத மகா கவிதை" என்கிறார் தனது "புது யுகக் கவிஞர்" எனும் நூலில். கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் கூறும் கருத்து: "பாரதி, "கண்ணம்மா என் காதலி" என்று அழைப்பது அவருடைய பரபக்தி அனுபவத்தின் முதிர்ச்சி என்றே கொள்ள வேண்டுமே அல்லாமல் வெறும் கவிதை அழகுக்காக அவர் படைத்த கற்பனையென்று தள்ளக்கூடாது". "கண்ணம்மா என் காதலி-6" எனும் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து "In Each Other's Arms" எனும் தலைப்பில் வெளியிட்ட பொழுது, பின்வரும் குறிப்பையும் மகாகவி பாரதியார் இணைத்துள்ளார். (Note:- In the following verses, the Supreme Divinity styled here Krishna is imaged as the beloved woman and the human soul as the lover - CSB) கண்ணன் பாட்டின் காதலன் காதலி பாடல்கள் பற்றி சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் இவை தமிழிலக்கிய அகத்திணை நெறியைப் பின்பற்றி எழுதப்பட்டதாகக் கூறுகிறார். "ஐந்திணை ஒழுக்கப்படி கண்ணன் பாடல்களைப் புனைந்த பாரதியார் அதற்குள்ள துறைகள் பலவற்றையும் கையாண்டுள்ளார். வள்ளலாரைப் போன்று அகப்பொருள் துறையில் அதிகப் பாடல்களைப் பாரதியார் பாடிக் குவிக்கவில்லை. "கண்ணன் என் காதலன்" என்ற தலைப்பிலே நாயகி பாவத்தில் ஆறு பாடல்களையும், "கண்ணம்மா - என் காதலி" என்ற தலைப்பிலே நாயக பாவத்திலே ஆறு பாடல்களையுமாக பன்னிரண்டு பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். தலைவன்பால் தோழியைத் தூது விடுதல், சிறைப்புறத்திருத்தல், நாணிக் கண்புதைத்தல், குறிப்பிடம் தவறுதல் ஆகிய அகப்பொருள் இலக்கியத் துறைகளைக் கண்ணன் பாட்டில் பாரதியார் பயன்படுத்தியுள்ளார். தொல்காப்பியம் அகத்திணையில் வரும் உள்ளப் புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி ஆகியவையும் கண்ணன் பாட்டிலே கூறப்பட்டுள்ளன. முன்கூறப்பட்ட அகத் திணைத் துறைகளோடு, "முகத்திரை களைதல்" எனும் புதிய துறை ஒன்றையும் பாரதியார் சேர்த்து வைத்துள்ளார்" எனக் கூறி ம.பொ.சி. தமது புதுமை நாட்டத்தைப் புலப்படுத்துகிறார்.

1. கண்ணன் - என் தோழன்.

ஒருவனுக்கு அமைந்த உயிர்த்தோழன் அவனுக்கு எந்தெந்த விதங்களி லெல்லாம் உதவி செய்வானோ அங்ஙனமெல்லாம் கண்ணன் தோழனாய் உதவி செய்கிறானாம். அப்படி கண்ணனைத் தோழனாய் அடைந்தவன் பார்த்தன் அல்லவா? அவன் சுபத்திரையை மணம் செய்ய என்ன வழி, அண்ணன் பலராமன் தடையாக இருக்கிறாரே என்று கேட்டதற்கு அவளை சிறையெடுத்துச் செல்ல ஓர் உபாயம் உடனே சொல்லி உதவி புரிகிறான்.

வில்வித்தையில் அர்ச்சுனனுக்கு நிகரான கர்ணனைப் போரில் எப்படி வெல்வது, அவன் தர்மங்கள் அவனைச் சுற்றி நின்று பாதுகாக்கின்றனவே இதற்கு நீதான் ஓர் உபாயம் சொல்லவேண்டுமென்று அவனைத் தஞ்சமடைந்தால் கண்ணன் ஓர் கணத்தில் அதற்கு வழி சொல்லுகிறான்.

 பாண்டவர்கள் கானகத்தில் சுற்றித் திரிந்த நாட்களிலும், குருக்ஷேத்திர யுத்தத்திலும் உறுதுணையாக நின்று உதவி செய்தவனல்லவா கண்ணன். அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக அமர்ந்து கீதை உபதேசம் செய்து யுத்தத்தை மட்டுமல்ல வாழ்க்கையையும் வழிநடத்திக் கொடுத்தவன் கண்ணன்.

உடலுக்கு நோய் வந்தால் உற்ற மருந்து சொல்வான், ஈனக் கவலைகள் நெஞ்சை வாட்டுகின்றபோது அதற்கு இதம் சொல்லி ஆறுதல் கூறுவான். அவனை எப்போது அழைத்தாலும் சாக்கு போக்கு சொல்லாமல் அரை நொடிக்குள் வந்து சேர்வான்; மழைபெய்யும்போது குடை போலவும், பசி நேரத்தில் கிடைக்கும் உணவு போலவும், எங்கள் வாழ்வுக்குக் கண்கள் எங்கள் கண்ணன் என்று பார்த்தன் நயந்து சொல்வான். கேட்ட பொருளை உடனே கொடுப்பான், கேலி செய்தால் பொறுத்துக் கொள்வான், மனம் துவண்டபோது ஆட்டங்கள் ஆடி, பாட்டுக்கள் பாடி துயரம் தீர்ப்பான், மனதில் கொண்ட எண்ணத்தைக் குறிப்பறிந்து புரிந்து கொள்வான், சுற்றிப் பழகும் அன்பர் கூட்டத்தில் இந்த கண்ணனைப் போல ஒரு தோழன் யாருக்குக் கிடைப்பான்?

மனத்தில் கர்வம் தோன்றினாலோ அவன் சொல்லாலும் செயலாலும் நமக்கு ஓங்கி ஒரு அடி கொடுப்பான், நெஞ்சில் கள்ளத்தைத் தேக்கி வஞ்சனை செய்தால் காறி உமிழ்ந்திடுவான், சின்னக் குழந்தையைப் போல சிரித்து விளையாடிக் களித்திருப்பான், அவன் சொன்னபடி நடக்கவில்லை யென்றால் அவ்வளவுதான் அவன் தரும் தொல்லைக்கு அளவே இருக்காது. அப்பேற்பட்ட கண்ணனின் நட்பு இல்லையேல் அவ்வளவுதான் இந்த சகத்தினில் ஏது வாழ்வு?

கோபம் தலைக்கேறி முகம் சிவக்க நிற்கும்போது ஏதோவொன்றைச் சொல்லி குலுங்கிச் சிரிக்கச் செய்திடுவான்; ஏதோவொரு மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கும்போது குறுக்கே புகுந்து ஏதோ சொல்லி மனம் தளிர்க்கச் செய்திடுவான்; பெரும் ஆபத்து நேரிடும் போது பக்கத்தில் நின்று அதனை விலக்கிடுவான்; நமக்கு ஏற்படும் தீமைகளையெல்லாம் விளக்கில் விழும் பூச்சிகளைப் போல விழுந்து அழிந்திடச் செய்திடுவான். உண்மை தவறி நடப்பவர்களை அவன் மன்னிக்கமாட்டான்; ஆனால் மற்றவர்கள் நன்மை கருதி அவன் மட்டும் நிறைய பொய்களைச் சொல்லுவான்; பெண்மைக்குரிய இரக்கமும், எதிர்பாராத காரியங்களைச் செய்வதால் பித்தனைப் போலும், பிறருக்கு இதந்தரும் தண்மை குணங்களும் கொண்டவன் தான் என்றாலும் சில நேரங்களில் தழலைப் போல் சுட்டு எரிக்கவும் செய்வான்.

சூதுவாதறியாத குழந்தை மனம் கொண்டவன்; நல்லவர்களுக்கு ஒரு தீங்கும் நேராது காப்பவன்; தீயோருக்கு விஷம்போல, நோய்போல, தீயினைப் போல கொடியவனாவான். அப்பேற்பட்ட குணநலன்களையுடைய இந்த கண்ணன் யார் தெரியுமா? வேதங்களை உணர்ந்து தவத்தில் சிறந்த முனிவர்களின் உணர்வில் இருக்கும் பரம்பொருளே அவன்!

கீதையெனும் அறவுரை தந்து கீர்த்தி பெற விளங்கியவன். அவன்தான் என் தோழன் என்கிறார் பாரதியார் இந்தப் பாட்டில்.

2. கண்ணன் - என் தாய்.

கண்ணனே என் தாயாக வந்தாள். அவளது விஸ்வரூபம்தான் என்னே! குழந்தையான என்னை வானம் எனும் தன்னிரு கைகளிலே அள்ளியெடுத்துத் தூக்கிப் பின்னர் பூமி எனும் தனது மடியிலே வைத்துத் தாலாட்டிப் உயிரும் உணர்வுமாய்ப் பாலூட்டி மனம் மகிழும் பற்பல கதைகளைச் சொல்லி அவள் மனம் களிப்பாள்.

அடடா! அவள் சொல்லுகின்ற கதைகள்தான் எத்தகையன? இன்பம் தரும் கதைகள், ஏற்றமும் வெற்றியும் தரும் சில கதைகள், துன்பச்சுவை நிரம்பிய கதைகள், தோல்வி வீழ்ச்சி எனும் கதைகள், என் வாழ்வின் பருவங்களுக்
கேற்ப பொருத்தமான கதைகள் இப்படிப்பலப்பல சொல்லிக்கொண்டே யிருப்பாள். மனம் பரவசத்தில் திளைக்கும். குழந்தையாம் எனக்கு அந்தத் தாய் காட்டும் விளையாட்டுகள்தான் எப்படி?

சந்திரன் என்றொரு பொம்மை, அதிலிருந்து தண்மையும் அமுதத்தின் சுவையும், பரந்து விரிந்த மேகக்கூட்டத்தோடு கூடிய மிக அழகான பொம்மை அது. பூமிக்கு இனிமைதருவது மழை. அந்த மழையைக் கொடுக்கும் சூரியன் என்றொரு பொம்மை, அந்த சூரியனின் முகத்தின் ஒளி அதனை விளக்க வார்த்தைகள் இல்லையே! வானவெளியெங்கும் வெள்ளி மணிகளை வாரி இரைத்தாற்போல நட்சத்திரக் கூட்டங்கள், அவற்றை எண்ணி எண்ணி மாளாமல் விட்டுவிட்டேன். அடர்ந்த கானகத்தில் மோனத்தில் ஆழ்ந்தவைபோல் அசையாமல் அமர்ந்திருக்கும் மலைகளின் கூட்டம். நல்ல நல்ல நதிகள், அவை நாடெங்கும் ஓடி விளையாடி வரும். மெல்ல மெல்ல விளையாடிக்கொண்டே விரிந்த கடலில்போய் விழும்; அந்த கடல் பொம்மையோ மிகப் பெரிது. அதற்கு எல்லையே காணமுடியவில்லை. அதன் மீது வீசுகின்ற அலை பாட்டு இசைக்கின்றது, அந்தப் பாட்டு 'ஓம்' என்று என் காதில் ஒலிக்கின்றது. பூமியின் மீதுதான் எத்தனை சோலைகள்; காடுகள்; அவைகளில்தான் எத்தனையெத்தனை வண்ண மலர்கள்; மரங்களிலெல்லாம் கனிவகைகள் இப்படி எத்தனை பொம்மைகள் எனக்கு.

தின்பதற்குப் பண்டங்கள், செவிகளுக்கு நல்ல பாடல்கள்; பழகுதற்கு நல்ல தோழர்கள் அதுமட்டுமா "கொன்றிடுமென இனிதாய், இன்பக் கொடு நெருப்பாய், அனற் சுவையமுதாய் நன்றியல் காதலுக்கே இந்த நாரியர் தமை எனைச் சூழவைத்தாள்". வானில் திரியும் பறவைகள்; நிலத்தில் திரியும் விலங்குகள், கடல் முழுதும் மீன் வகைகள் இப்படி எத்தனை வகை தோழர்கள் அன்னை எனக்களித்தாள்.

எங்கெங்கு காணினும் இன்பமடா! அதை நினைத்துப் பார்க்கவும் கூடுவதில்லை. கோடி வகை சாத்திரங்கள் வைத்தாள் அன்னை அவைகளை அறிந்திடும் வகை ஞானம் வைத்தாள், இவைகளுக்கிடையே நான் வேடிக்கையாய் சிரித்து மகிழ்ந்திடவே இடையிடையே பொய் வேதங்களையும், மதக் கொலைகளையும், அரசர்கள் செய்யும் கோமாளிக் கூத்துக்களையும், வயதில் முதிர்ந்தோர் சிலர் செய்யும் பொய்க்காரியங்களும், இளையோர் தம் கவலைகளையும் அன்னை இங்கே படைத்து வைத்தாள். வேண்டியதனைத்தையும் அன்னை கொடுத்திடுவாள்; அவை வேண்டுமென நான் நினைக்குமுன்பாக அவை எனக்குக் கிடைத்திட வகை செய்வாள்; அடைக்கலம் கொடுத்து ஆதரிப்பாள்; அர்ச்சுனனைப் போல என்னை ஆக்கிடுவாள்; அந்த அன்னையை அவளது அருளை என்றென்றும் நான் பாடுகின்ற தொழிலைச் செய்வேன்; அப்படிச் செய்துகொண்டேயிருக்கும் எனக்கு அவள் நீண்ட புகழ்மிக்க வாழ்க்கையையும், நிகரற்ற பெருமைகளையும் அள்ளியள்ளித் தருவாள்.

3. கண்ணன் - என் தந்தை.

என்னை இந்த பூமிக்கு அனுப்பியவன் யார் தெரியுமா? என் தந்தை. எனக்கு தம்பிமார்கள் உண்டு. அவர்கள் புத மண்டலத்திலே இருக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தில்தான் எத்தனையெத்தனை கிரகங்கள். அவைகள் நியமித்த வரைமுறையோடு நித்தநித்தம் உருண்டு கொண்டிருக்கின்றன. இங்கெல்லாம் எங்கள் இனத்தார் இருக்கின்றார்கள். இவர்களையெல்லாம் படைத்த சாமியாம் என் தந்தையைப் பற்றிய வரலாற்றைச் சிறிது சொல்லுகின்றேன்.

கணக்கற்ற செல்வம் படைத்தவன் என் தந்தை, அவன் சேமித்து வைத்திருக்கும் பொன்னுக்கோர் அளவில்லை. கல்வியில் மிகச் சிறந்தவன், அவன் படைக்கின்ற கவிதையின் இனிமைக்கோர் அளவில்லை. இவ்வளவு பெருமைகள் இருந்தாலும் அவனுக்கு அடிக்கடி  கிறுக்குப் பிடித்து விடும். நல்ல வழியில் நேர்மையாக நடப்பவர்களை மனம் நொந்து போய் மனம் தளரும் அளவுக்கு சோதனைகள் செய்துவிடுவான்.

அவன் பெயரைச் சொல்ல நா தயங்குகிறது. எங்களுக்கு ஈசன் எனலாமா? அல்லது கண்ணன் எனலாமா? அவனுடைய பெயரை மூன்று வகையாகச் சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வகைக்காகவும் சிலர் சேர்ந்து சண்டைகள் செய்வார்கள். அவன் பிறந்தது தேவர் குலம் என்பர் சிலர். பிறந்தது மறக் குலத்தில் பேதமற வளர்ந்தது இடைக்குலத்தில், ஆனால் அவன் மேன்மையானவன் மிக உயர்ந்தவன் என்று பெயர் பெற்றது பார்ப்பன குலத்தில். அவனுக்கு செட்டி மக்களோடு மிகப் பழக்கமுண்டு. அவன் நிறம் நல்ல கருமை, ஆனால் நேயத்தோடு அவன் பழகுவது பொன் நிறப் பெண்களொடு.

பொய்யான சாத்திரங்களைக் கண்டு எள்ளி நகையாடுவான். அவனது தோழர்கள் ஏழை மக்கள்; செல்வம் படைத்த காரணத்தால் செறுக்குடையார் பால் சீறி விழுவான். எத்தனை துன்பம் வந்தாலும் மனம் தளராமல் அதனை எதிர்த்துப் போராடுவோர்க்கு செல்வங்களை அள்ளிக் கொடுப்பான். நேரத்துக்கு நேரம் அவனது புத்தி மாறும். ஒரு நாள் இருந்தது போல் மறு நாள் இருக்க மாட்டான். ஒருவரும் இல்லாத இடம் தேடி ஓடிவிடுவான், பாட்டு கேட்பதிலும் கதை கேட்பதிலும் தன் நேரத்தைச் செலவிடுவான். இன்பமே நன்று, துன்பம் இனியதல்ல என்று அவன் பேதப்படுத்திப் பார்ப்பதில்லை. அன்பு மிகுந்தவன், உயிர்க்குலம் முழுவதும் தெளிந்த அறிவு பெற அன்பாக செயல்புரிவான்; அவனுக்கு ஒரு அமைச்சன் உண்டு அவன் பெயர் விதி. முன்பு என்ன விதித்திருந்தானோ அதனை தவறாமல் நடக்கச் செய்வான் அவன்.

அவன் ஒரு மாலை கோர்த்து வைத்தான், அவை வேதங்கள் எனப்படும். அந்த வேதங்கள் மனிதர் பேசும் மொழியில் இல்லை. ஆனால் இப்புவியில் சிலர் சொல்லுகின்ற வெட்டிக் கதைகளில் வேதம் இல்லை. பூமியில் நான்கு குலங்களை அமைத்தான் நல்ல நோக்கத்தோடு, ஆனால் அவற்றை மூட மனிதர்கள் நாசப்படுத்தி விட்டனர். சீலம், அறிவு, கருமம் இவைகளில் சிறந்தோர் குலத்தில் சிறந்தவராம்; மேலோர் கீழோர் என்று பிறப்பினால் பிரிக்கப்படும் போலிச் சுவடிகளை தீயிலிட்டுப் பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மை உண்டாம்.

அவனுக்கு வயது முதிர்ந்தாலும் வாலிபக் களை மாறவில்லை. அவனுக்குத் துயரம் கிடையாது, மூப்பு கிடையாது, சோர்வு என்பது அவனுக்கு இல்லை, நோய்கள் அவனைத் தீண்டுவதில்லை; பயம் என்பதே இல்லை அவனுக்கு, அவன் யாருக்கும் பரிவதில்லை. எவர் பக்கமாவது நின்று எதிர்ப்பக்கம் துன்பம் தருவதில்லை. நடுநிலையோடு நடந்துகொண்டு அனைவருக்கும் நன்மை செய்து எல்லாம் விதிப்படி நடப்பதைக் கண்டு மகிழ்ந்திடுவான். துன்பப்படுபவர்களை அரவணைத்து அன்பு காட்டுவான், அன்பைக் கடைப்பிடி துன்பங்கள் பறந்து போகுமென்பான். எல்லோரும் இன்பம் அடைந்திட விருப்பமுறுவான்.

4. கண்ணன் - என் சேவகன்.

வீட்டு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் அவர்களால் ஏற்படும் தொல்லைகள் கணக்கில்லை. கூலி அதிகம் வேண்டுமென்பார்கள். அப்படிக் கேட்கும் போதெல்லாம் கொடுத்த அனைத்தையும் மறந்து நன்றி கொல்வார்கள். ஒரு நாள் வேலை அதிகமாக வைத்திருந்தால் வேலைக்கு வராமல் வீட்டிலேயே உட்கார்ந்து கொள்வார்கள். மறுநாள் வரும்போது, ஏனடா நேற்று நீ வேலைக்கு வரவில்லை என்று கேட்டால் போதும் எத்தனை பொய்! பானைக்குள் இருந்து ஒரு தேள் பல்லால் கடித்து விட்டது என்பார். வீட்டில் பெண்டாட்டி மீது பூதம் வந்து விட்டது என்பார். பாட்டி செத்துப்போய் பன்னிரண்டாவது நாள் என்பார். ஓயாமல் பொய் கூறுவார், ஒரு வேலையைச் சொன்னால் அதற்கு மாறாக வேறு வேலையைச் செய்வார். தாயாதியர்களோடு தனியாகச் சென்று பேசுவர்; நம் வீட்டுச் செய்திகளையெல்லாம் ஊரெல்லாம் சென்று பறை அடிப்பது போல் விளம்பரம் செய்வர்; வீட்டில் மிகச்சாதாரணமான பொருளான எள் இல்லை என்றால்கூட, விஷயம் தெரியுமா அவர்கள் வீட்டில் எள் இல்லை என்று பிரச்சாரம் செய்வார். இப்படி வேலைக்காரர்களால் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்த போதும், சேவகர்கள் இல்லாமல் வேலை நடக்கவில்லை.

இப்படி நான் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ ஒருவன் வந்து சேர்ந்தான், என்னிடம் வந்து நான் இடைச்சாதியைச் சேர்ந்தவன், மாடுகன்றுகளை மேய்ப்பேன், வீட்டிலுள்ள பிள்ளை குட்டிகளைக் காப்பேன். வீடு பெருக்குவேன், விளக்கேற்றி வைப்பேன், நீங்கள் சொல்லும் வேலைகளையெல்லாம் அட்டியின்றி செய்வேன்; துணிமணிகளை துவைத்து காயவைத்து பத்திரப்படுத்தி வைப்பேன், வீட்டிலுள்ள கைக்குழந்தைகளுக்கு இனிமையான பாட்டுப்பாடி ஆட்டங்கள் ஆடி அவை அழாதபடி பார்த்துக் கொள்வேன். வெளியூர் செல்லவேண்டும் என்றால் அது காட்டு வழியாக இருந்தாலும், வழியில் திருடர் பயம் இருந்தபோதும், இரவோ, பகலோ எந்த நேரமாக இருந்தாலும் சிரமத்தைப் பார்க்காமல் தேவரீர் தம்முடன் வருவேன். உங்களுக்குத் துன்பம் எதுவும் ஏற்படாமல் காப்பேன். ஐயா, நான் எதுவும் படித்ததில்லை, நாட்டுப்புறத்தில் வளர்ந்த காட்டு மனிதன். இருந்தாலும் எனக்குச் சில வித்தைகள் தெரியும். சிலம்பம் சுற்றுவேன், மல்யுத்தம் தெரியும், குத்துப் போர் தெரியும், ஆனால் நயவஞ்சனை புரிய எனக்குத் தெரியாது. இப்படிப் பலப்பல சொல்லிக்கொண்டு நின்றான்.

 "அது சரி உன் பெயர் என்ன? சொல்" என்று கேட்டதற்கு, " ஐயனே! ஒண்ணுமில்லே கண்ணன் என்று ஊரில் உள்ளோர் சொல்வார்கள்" என்றான்.

அவனை ஏற இறங்கப் பார்த்தேன். நல்ல கட்டான உடல். கண்களில் நல்ல குணம் தெரிந்தது. அன்பும் பாசமும் பொங்க அவன் பேசும் சொற்கள் இவைகளால் 'சரி, இவன் நமக்கு ஏற்ற பணியாள்' என்று மனம் மகிழ்ந்து "தம்பி! நல்லாத்தான் பேசுகிறாய், உன்னைப் பற்றி வானளாவப் புகழ்ந்து கொள்கிறாய், அது கிடக்கட்டும் கூலி எவ்வளவு கேட்கிறாய்? சொல்" என்று கேட்டதற்கு அவன் சொல்லுகிறான். "ஐயனே! எனக்கு தாலிகட்டிய பெண்டாட்டியோ, பிள்ளை குட்டிகளோ எவரும் கிடையாது. நான் ஒரு தனிக்கட்டை. எனக்கு நரையோ, உடலில் சுருக்கமோ ஏற்படவில்லை யாயினும் எனக்கு ஆன வயதுக்கு அளவில்லை, தேவரீர் என்னை ஆதரித்தால் போதும், நீங்கள் தரப்போகும் காசு எனக்குப் பெரிசில்லை, நெஞ்சிலுள்ள அன்புதான் எனக்குப் பெரிசு" என்றான்.

சரி சரி இது ஓர் பழையகால பைத்தியம், பிழைக்கத் தெரியாதவன் என்று எண்ணிக்கொண்டு, மனத்தில் மகிழ்ச்சியோடு, அவனை நான் எனது பணியாளாக ஏற்றுக் கொண்டு விட்டேன். அன்று முதல் அவனுக்கு எங்கள் மேல் அன்பு அதிகமாகிக்கொண்டே வரத்தொடங்கியது. அவனால் நாங்கள் அடையும் நன்மைகளைப் பட்டியலிட்டுச் சொல்லமுடியாத அளவுக்கு அதிகம். கண்களை இமைகள் எப்படிக் காக்கின்றதோ அப்படி அவன் எனது குடும்பத்தைக் காக்கின்றான். ஒரு தடவையாவது வேலையில் சலிப்படைந்து முணுமுணுப்பதைக் காணவில்லை. வீடு வாசல் பெருக்குகிறான், வீட்டை நன்கு துடைத்து சுத்தம் செய்கின்றான், வேலைக்காரர்கள் செய்கின்ற குற்றங்களையெல்லாம் கண்டித்து அடக்குகின்றான். அதுமட்டுமா? குழந்தைகளுக்கு அவன் ஆசிரியராக விளங்குகிறான். வளர்ப்புத்தாய் போல் அவர்களுக்கு அனைத்துப் பணிகளையும் தயங்காமல் செய்கின்றான். வைத்தியரைப் போல ஏதாவது உடல்நலக் குறைவு என்றால் அதற்கேற்ற மருந்து கொடுத்து மருத்துவனாகவும் இருக்கின்றான். எல்லோருடனும் சகஜமாக நடந்து கொள்கிறான். ஒரு வேலையிலும் குறை வைக்காமல் வீட்டுக்கு வேண்டிய சாமான்களையெல்லாம் வாங்கி தயாராக வைத்து விடுகிறான். பால், மோர் இவற்றை வாங்கி வைக்கிறான். வீட்டுப் பெண்களுக்கு தாயைப் போல பிரியமோடு பரிந்து ஆதரித்து நடந்து கொள்கிறான். ஒரு நல்ல நண்பனைப் போலவும், ஒரு மதியூகி அமைச்சன் போலவும், நல்ல ஆசிரியர் போலவும், தெய்வப் பண்புகளோடும், பார்ப்பதற்கு மட்டும் ஒரு வேலைக்காரனாகவும் நடந்து கொள்ளும் இவன் எங்கிருந்தோ வந்து சேர்ந்தானே! இடைச்சாதி என்றல்லவா சொன்னான்! இங்கு இப்பேற்பட்ட தூயவனை நான் வேலைக்காரனாகப் பெற என்ன தவம் செய்து விட்டேன். கண்ணன் என் அகத்தில் கால் வைத்த நாள் முதலாக எண்ணம், விசாரம் (கவலை) எதுவும் அவன் பொறுப்பு என்று விட்டுவிட்டேன். அவன் காலடி எடுத்து என் இல்லத்தில் வைத்த நாள் முதலாய் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், தெளிவே வடிவாம் சிவஞானம், எப்போதும் சிறந்து விளங்கும் நலன்கள் அனைத்தும் ஓங்கி வளர்கின்றன. கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்ணனைக் கொண்டதால் கண் கொண்டேன். கண் கொண்டேன். கண்ணன் என்னை வந்தடைந்து ஆட்கொள்ள காரணமும் இருக்கின்றனவே!

 5. கண்ணன் - என் அரசன்.

எங்கள் அரசன் இருக்கிறானே கண்ணன், அவன் என்ன செய்வான் தெரியுமா? எதிரிகளால் பகை முற்றி முதிர்ந்திடும் மட்டும் எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பான்; எதற்கும் ஓர் புன்னைகை அவ்வளவுதான், இப்படியே நாட்களை, மாதங்களை, ஆண்டுகளை ஓட்டிக் கொண்டிருப்பான். இந்த கண்ணன் என்று பகைவர்களோடு போர் புரிவது, என்று எதிரிகளை அழிப்பது இது நடக்காத காரியம் என்று நாம் மனம் சோர்ந்து போவோம். இப்படி எதிர்பார்த்து எதிர்பார்த்து மனம் சோர்ந்து நாட்கள் யுகங்களாகக் கழிந்து போகும். எதிரிகளோடு போர் என்றால் படை வீரர்களைச் சேர்க்க வேண்டாமா? துணைவர்கள் ஏவலர்கள் இவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டாமா? போருக்கு அதிகமாக செலவு ஆகுமே, அதற்கு செல்வத்தைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டாமா? இவற்றுக்கான எந்த வேலையையும் செய்யமாட்டான். மாடு மேய்ப்பவன் தானே, இவன் வீரமில்லாதவன், பயந்தாங்கொள்ளி என்று மற்றவர்கள் பேசும் ஏச்சுக்கெல்லாம் இவன் வெட்கப்படுவதே யில்லை. கண்ணனைக் கொல்ல பூதகியை அனுப்பிய இவனது மாமன் உல்லாசமாக செங்கோல் ஏந்தி இந்த பூவுலகை ஆளுகின்றபோது, இவன் ஆயர்குல பெண்டிரோடும், அவர்கள் ஆடுகின்ற ஆட்ட பாட்டங்களில் மனம் களித்து அதில் மனத்தைச் செலுத்திக்கொண்டு பொழுதைக் கழிப்பான். மழை வராதா என்று ஏங்கும் பயிர்கள் போல மக்கள் இவன் மனம் திருந்தி போருக்குத் தயாராக மாட்டானா என்று தவிக்கும்போது, இவனோ, சங்கீதம், தாளம், கூத்து, தனிமையில் அமர்ந்து குழலூதுதல் என்று இவற்றில் மனம் செலுத்துவான். அவன் காலைப் பிடித்துக்கொண்டு எங்களுக்கு ஒரு வழிகாட்டு என்று கெஞ்சினால், நாலில் ஒன்று பலித்திடும் பார் என்பான், இதற்கு என்ன பொருள் என்று எப்படி உணர்வது? நாமெல்லாம் அவனது பலத்தை நம்பி இருக்கையில், இவனோ வெட்கமின்றி பதுங்கிக் கிடப்பான், சிலநேரம் தீமைகளை ஒழித்துக்கட்டவும் செய்வான், சில நேரம் ஓடி ஒளிந்துகொண்டு சிறுமைப் படுவான். தந்திரங்களும் நன்கு செய்வான், செளரியங்களையும் ஏற்படுத்திக் கொள்வான், மந்திரசக்தியையும் காட்டுவான், வலிமை இல்லாமல் சிறுமையிலும் வாழ்வான். சரியான காலம் வந்து சேரும்போது, ஓர் கணத்தில் புதிய மனிதனாக உருவெடுத்து விடுவான். ஆலகால விஷத்தைப் போல இவ்வுலகமே அஞ்சி நடுங்கி ஆடும்படி சீறுவான். வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் பகை வெந்து போகும்படி பொசுக்கி விடுவான். உலகமும் வானமும் ஆயிரமாண்டுகள் பட்ட துன்பங்களை நொடியில் மாற்றிவிடுவான். கையிலுள்ள சக்கரத்தை ஓர் கணத்தில் எடுப்பான், அடுத்த கணம் பாரில் தர்மம் ஓங்கி வளர்ந்து விடும். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நேரம் ஏதேனும் உண்டோ? இல்லை கண்ணிமைப்பில் இவை முடிந்துவிடும். இந்த குறுகிய காலத்துக்குள் பகையை ஒழித்துக் கட்டிவிடுவான். கண்ணன் எனும் எங்கள் அரசனின் புகழினை கவிதையால் வடித்து எந்தக் காலமும் போற்றுவேன். திண்ணை வாசல் பெருக்க வந்த என்னை இந்த தேசம் போற்றும் வகையில் தன் மந்திரியாக நியமித்தான். அன்றாடச் சோற்றுக்கு ஏவல் செய்ய வந்த எனக்கு, நிகரற்ற பெரும் செல்வத்தைக் கொடுத்து உதவினான். வித்தை யொன்றும் கற்காத எனக்கு வேத நுட்பங்கள் யாவையும் விளங்கிடுமாறு செய்தான். கண்ணன் எனும் இந்த அருளாளனின் அருள் வாழ்க. கலியின் கொடுமை அழிந்து இந்த பூமியின் பெருமை வாழ்க. கண்ணன் எனும் அண்ணலின் அருள் பெற்ற நாடு அவலமெல்லாம் நீங்கி புகழில் உயரட்டும்!

6. கண்ணன் - என் சீடன்.

யார் இந்த மாயக் கண்ணன்? நானாக என்னுள்ளேயும் இருக்கிறான், என்னிலிருந்து மாறாய் பிறனாகவும் இருக்கிறான், நானும் பிற பொருளுமாய் இரண்டரக் கலந்துமிருக்கிறான், இவ்விரண்டிலும் வேறு வேறாயும் இருக்கிறான், இவன் என்ன மாயம் செய்கிறான்? "ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க" என்று மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறியபடி இவன் மூல வஸ்துவாயிருக்கிற பொழுது ஒன்றாகவும், அதிலிருந்து அந்நியப்பட்டு நிற்கும் இரண்டாவது வஸ்து எதுவுமில்லை எனவும், ஆனால் இந்தப் பிரபஞ்சமாக அவன் நீக்கமற நிறைந்திருக்கும் போது எண்ணற்ற பலகோடி பொருள்களாகவும், உயிர்களாகவும் காட்சியளிக்கிறான்.

தங்கக் கட்டி ஒன்றுதான் எனினும், அதிலிருந்து செய்யப்பட்ட ஆபரணங்கள் பல ரூபங்களாகும். இப்படிக் காட்சியளிக்கும் கண்ணன் சில நேரங்களில் என்னைக் காட்டிலும் அறிவிற் குறைந்தவன் போலவும், என்னோடு சேர்ந்து பழகி, நான் கூறும் அறிவுரைகளைக் கேட்டு அவன் மேம்பாடு எய்துவான் போலவும், நான் பாடுகின்ற கவிதைகளும், அறிவும் பெருமை பெற்றது போலவும், இந்தக் கள்வன் கண்ணன் என்னிடம் சீடனாக வந்து சேர்ந்தான்.

அட தெய்வமே! அவன் அப்படிச் செய்த சூழ்ச்சி வலையில் நான் விழுந்து அதனால் பட்ட தொல்லைகள் பெரிய பாரதக் கதை போன்றது. நானே என் மனத்தினை வெல்லமுடியவில்லை; நான் இந்த உலகத்தினை மாற்றிவிட முடியும், உலகத்தாரை இன்பத்தில் இருக்கச் செய்ய முடியும் என்று எண்ணிக்கொண்டதற்காகத் தண்டிக்கக் கருதியோ என்னவோ இந்த மாயக் கண்ணன் வலிய வந்து என்னிடம் சீடனாகச் சேர்ந்து கொண்டான்.

என்னை ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளியும், என்னுடைய புலமையை வியந்து பாராட்டியும் பல வழிகளில் அவன் மீது அன்பு கொள்ளச் செய்தான். வெறும் வாயை மெல்லும் கிழவிக்கு ஒரு பிடி அவல் கிடைத்தாற்போல்தான். நானும் அவன் முகஸ்துதிக்குக் கட்டுண்டு இவனை எப்படியும் நல்ல பண்புகள் உள்ளவனாக உயர்த்திவிடுவது என்ற ஊக்கத்தோடு அவனுக்குப் பல உபதேசங்கள் செய்யத் தொடங்கினேன்.

"இதோ பாரடா கண்ணா! நீ இன்ன இன்னதெல்லாம் செய்யக்கூடாது, இன்னாரோடெல்லாம் பழகக்கூடாது, இப்படியிப்படி யெல்லாம் பேசக்கூடாது, இவற்றையெல்லாம் விரும்பக்கூடாது, இதெல்லாம் படிக்கக்கூடாது, இன்ன நூல்களைத்தான் நீ கற்க வேண்டும், இன்னாரோடு மட்டும் நட்பு கொள்ள வேண்டும், நான் சொல்லுவனவற்றை மட்டும் விரும்ப வேண்டும்" என்று பல தருமங்களைச் சொல்லிச் சொல்லி அவனோடு உயிரை விடலானேன்.

 நாம் கதைகளில் படிக்கிறோமல்லவா? கணவன் எதையெல்லாம் சொல்லுகிறானோ அதற்கு நேர் மாறாகச் செயல்புரியும் மனைவி பற்றி, அதனைப் போல் இவனும் நான் சொல்லுவதற்கெல்லாம் நேர் எதிராகவே எல்லாவற்றையும் செய்யலானான். ஊரிலுள்ள மற்றவர்கள் என்னைப் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காக வாழ்ந்த எனக்கு, நான் சொன்னதற்கு மாறாக அவன் நடக்கும் விநோதத்தையும், ஊரார் வெறுக்கும் அத்தனை ஒழுக்கக்கேட்டையும் தலைமேல் ஏற்றுக்கொண்டு பழிச்சொல்லுக்கு ஆளாகி, எல்லோரும் இகழும்படியாக என் மனம் வருந்தும்படி நடந்துகொள்வதையும் கண்டேன்.

கண்ணனோ நாளாக நாளாக தனது கெட்ட நடத்தையால் எல்லை மீறிப்போய் வீதியில் பெரியோர்களும், மூத்தோர்களும் இவனைக் கண்டு கிறுக்கன் என்று இகழ்ந்து பேசும் நிலைக்கு வந்து விட்டான். எனக்கு ஏற்பட்ட வருத்தத்துக்கு அளவே கிடையாது. முத்தான இளைஞனாக உருவாக்க நினைத்த எனக்கு இவன் இப்படிப் பித்தன் என ஊராரிடம் பெயர் வாங்கிக்கொண்டு அவர்கள் பேசிய பேச்செல்லாம் இவன் கேட்டுக்கொள்வது என் நெஞ்சை அறுத்தது. அவனைக் கூப்பிட்டு சாத்திரங்களை போதித்து அவனை எப்படியும் மாற்றிவிடுவது என்று அவனைத் தொளைத்தெடுத்தேன். அவன் தேவனாக ஆகாவிட்டாலும், மானுட நிலைக்காவது அவனைத் தேற்றிட வேண்டுமென்று நினைத்து கோபம் கொண்டு கொதித்துப் போய் திட்டியும், சில நேரம் சிரித்துக்கொண்டு நயமாகச் சொல்லியும், சள்ளென்று சில நேரம் எரிந்து விழுந்தும், கேலிகள் பேசி மாற்ற முயன்றும் இன்னும் எத்தனையோ வழிகளில் என் வழிக்கு அவனைக் கொண்டு வர முயன்றேன்.

அவனா கேட்கிறவன்? பித்தனாக ஆகி, காட்டானாக மாறி, எந்த வேலையிலும் கவனமில்லாதவனாகி, எந்த பயனிலும் கருத்தில்லாதவனாகி, குரங்கு போல, கரடியைப் போல, கொம்புகள் உடைய பிசாசு போல ஏதோவொரு பொருளாக எப்படியோ நின்றான் அவன். அதனால், அகந்தையும், மமதையும் ஆயிரம் புண்ணாகி கடுமையான கோபத்துக்கு நான் ஆளாகி எப்படியாவது இந்த கண்ணனை நேராக ஆக்கிக் காட்டுவேன் என்று என் மனதிற்குள் தாபம் கொண்டு, இவனை எப்படியாவது ஒரு தொழிலில் ஓரிடத்தில் தக்கச் செய்வதென்று எண்ணி, அதற்குச் சமயம் பார்த்துக் காத்திருந்தேன்.

ஒருநாள் கண்ணன் தனியாக என் வீட்டில் இருந்த சமயம் அவனை அழைத்து, "மகனே! என்மீது அளவற்ற பாசமும் நேசமும் நீ வைத்திருப்பது உண்மை என்று நான் நம்பி உன்னிடம் ஒன்று கேட்பேன், நீ அதனை செய்திடல் வேண்டும். நாம் யாரிடம் சேர்கிறோமோ அவர்களைப் போலவே நாமும் ஆகிவிடுகிறோம் அல்லவா? சாத்திரங்கள்பால் நாட்டமும், தர்க்க சாத்திர ஞானமும், கவிதைகளில் உண்மைப் பொருளை ஆய்வு செய்வதில் ஆர்வமும் கொண்டோர் மத்தியில், பொருள் சம்பாதிக்க அலையும் நேரம் போக மற்ற நேரங்களில் இருக்க முடியுமானால் நன்மை விளைந்திடும். பொழுதெல்லாம் என்னோடு இருக்க விரும்பும் அறிவுடைய மகன் உன்னைத்தவிர வேறு யார் இருக்கிறார்கள்? ஆகையால், எனது உதவிக்காக எனக்குத் துணையாக நீ என்னுடன் சில நாட்கள் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். முடியாது என்று சொல்லி என் மனம் துயரமடையச் செய்யாமல், நான் சொல்லுவதற்கு சம்மதிக்க வேண்டும்" என்று சொன்னேன். அதற்குக் கண்ணனும் "ஆகா! அப்படியே செய்கிறேன், ஆனால் உங்களோடு வேலை எதுவும் செய்யாமல் சோம்பேறியாக எப்படி இருப்பது? ஏதாவது வேலை கொடுங்கள் செய்துகொண்டு உங்களுடன் இருக்கிறேன்" என்றான்.

 இவனுடைய இயல்பையும், சாமர்த்தியத்தையும் கருதி, "சரி! நான் எழுதுகின்ற கவிதைகளையெல்லாம் நல்ல காகிதத்தில் பிரதி எடுத்துக் கொடுக்கும் வேலையைச் செய்!" என்றேன். "நல்லது அப்படியே செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஒரு நாழிகைப் போது அங்கிருந்தான். "சரி, நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்ப நினைத்தான். எனக்கு கோபம் வந்தது, நான் எழுதிய பழங்கதை யொன்றை அவன் கையில் கொடுத்து, "இதை நன்கு பிரதி எடுத்துக் கொடு" என்றேன். அந்த வேலையைச் செய்பவன் போல கையில் வாங்கிக் கொண்டு கணப்பொழுது அங்கு இருந்தான். பின்னர் "நான் போகிறேன்" என்று எழுந்தான். எனக்கு கோபமான கோபம் வந்தது. "என்னடா சொன்னதற்கு மாறாக இப்போது போகிறேன் என்கிறாய்? உன்னைப் பித்தன் என்று ஊரார் சொல்லுவது பிழையில்லை போலிருக்கிறது" என்றேன். அதற்கு "இந்த வேலையை நாளை வந்து செய்கிறேன்" என்றான். "இந்த வேலையை இங்கே இப்பொழுதே எடுத்துச் செய்கிறாயா, இல்லையா? பதில் சொல்" என்று உறுமினேன். கண்ணிமைக்கும் நேரத்தில் "முடியாது" என்று சொல்லவும், சினத்தீ என் உள்ளத்தில் வெள்ளமாய்ப் பாய, கண்கள் சிவக்க, இதழ்கள் துடிக்க கோபத்தோடு நான் "சீச்சீ...பேயே, கொஞ்ச நேரம் கூட என் முகத்திற்கு எதிரே நிற்காதே! இனி எந்தக் காலத்திலும் நீ என்னிடத்தில் வர வேண்டாம். போ, போ, போ" என்று இடிபோல முழங்கிச் சொன்னேன். கண்ணனும் எழுந்து போகத் தொடங்கினான். என் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வர, "மகனே, போய்வா! நீ வாழ்க! உன்னைத் தேவர்கள் காக்கட்டும். உன்னை நல்லவனாக ஆக்க நினைத்து என்னென்னவோ செய்தேன். தோற்றுப்போய் விட்டேனடா தோற்றுப்போய் விட்டேன். என் திட்டங்களெல்லாம் அழிந்தன. மறுபடியும் இங்கு வராதே! போய் வா, நீ வாழ்க!" என்று வருத்தம் நீங்கி அமைதியாகச் சொன்னேன். கண்ணன் போய்விட்டான்.

திரும்பவும் ஓர் கணத்தில் எங்கிருந்தோ ஒரு நல்ல எழுதுகோல் கொண்டுவந்தான், நான் கொடுத்த பகுதியை மிக அழகாகப் பிரதியெடுத்தான். "ஐயனே! நீ காட்டிய வழிகள் அனைத்தையும் ஏற்று நடப்பேன். சொல்லும் அனைத்துக் காரியங்களையும் ஒழுங்காகச் செய்வேன். தங்களுக்கு இனி என்னால் எந்தத் துன்பமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன்" என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு ஓடி மறைந்தான். கண்களிலிருந்து மறைந்த கண்ணன் மீண்டும் என் நெஞ்சத்தில் தோன்றி பேசத் தொடங்கினான். "மகனே! ஒன்றை உருவாக்குதல், மாற்றுதல், அழித்திடுதல் இவையெல்லாம் உன்னுடைய செயல் இல்லை. இதனைத் தெரிந்துகொள். தோற்றுவிட்டேன் என்று நீ சொன்ன அந்தக் கணத்திலேயே நீ வென்றுவிட்டாய். உலகத்தில் எந்தத் தொழிலைச் செய்கிறாயோ அதில் பற்றோ, பாசமோ வைக்காமல் நிஷ்காம்யமாகச் செயல்புரிந்து நீ வாழ்க! என்றான். வாழ்க கண்ணன்!

7. கண்ணன் - என் சற்குரு.

பல சாத்திரங்கள் வேண்டி தேடினேன். அங்கே அளவற்ற சந்தேகங்கள். பழைய கதைகள் பேசும் மூடர்களின் பொய்களடங்கிய கூடையில் உண்மை எப்படிக் கிடைக்கும்? எந்த வகையாலும் உண்மைத் தெளிவு பெற வேண்டுமென்ற ஆசை மட்டும் நெஞ்சில் எப்போதும் இருந்து கொண்டிருந்த நேரத்தில் தினந்தோறும் ஆயிரம் தொல்லைகள் வந்து சேர்ந்தன. பலநாட்கள் நாடு முழுவதும் சுற்றினேன், அப்படிச் சுற்றிவரும்போது கரைபுரண்டோடும் யமுனை நதிக்கரையில் ஒரு கிழவர் தடியூன்றிச் சென்று கொண்டிருந்தார். முகத்தில் அறிவின் ஒளி வீசியது; தெளிந்த அமைதியான விழிகள், தலையில் சடைகள், வெண்மை நிற தாடி இவற்றோடு கூடிய அந்தக் கிழவரை வணங்கி அவருடன் பல செய்திகள் பேசி வரும்போது, என் உள்ளத்து ஆசைகளை உணர்ந்து கொண்ட அவர், மகிழ்ச்சியோடு என்னிடம் சொன்னார்: "தம்பி! உன் உள்ளத்துக்கு ஏற்றவன், ஆழ்ந்த மோனத்திலிருப்பவன், சிறந்த மன்னர் குலத்தில் உதித்தவன் அப்படிப்பட்டவன் வடமதுரையை ஆண்டுவருகிறான். அவன் தான் கண்ணன். அவனைச் சென்று சரணடைவாயேல் அவன் உனக்கு அனைத்தையும் உணர்விப்பான்" என்றார். நான் உடனே மதுரையம்பதிக்குச் சென்று அங்கு வாழ்கின்ற கண்ணனைப் போற்றி வணங்கி, என் பெயரையும் ஊரையும், வந்ததன் நோக்கத்தையும் சொல்லி, நான் அறிய விரும்பியவைகளை உபதேசிக்க வேண்டுமென்று கேட்டேன்.

ஆனால் அவனோ நல்ல அழகன், இளங்காளையர்கள் புடைசூழ இருந்து கொண்டு, கெட்ட பூமியைக் காத்திடும் தொழிலில் சிந்தை செலுத்திக்கொண்டு, ஆடல் பாடல் இவற்றை ரசித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து முன்பு யமுனையாற்றங்கரையில் பார்த்த அந்த கிழவரைக் கொன்றுவிடலாமா என்று எண்ணினேன். இவனோ, ஒரு சிறிய நாட்டை வைத்துக் கொண்டு அதனைக் காப்பதில் மனம் செலுத்தி கவலைப்பட்டுக் கொண்டிருப்பவன், இவன் எப்படி தவசீலர்களுக்கும் விளங்காத உண்மைத் தேடலுக்கு விடைகளைச் சொல்லமுடியும்? என்று கருதினேன்.

 பின்னர் அவன் என்னைத் தனியிடத்துக்கு அழைத்துச் சென்று "மகனே! உன்னையே நீ ஆழ்ந்து சிந்தித்து உணர்ந்து கொள். நீ அறிய விரும்பும் வாழ்வு பற்றிய உண்மையைச் சொல்லுகிறேன் கேள்! நெஞ்சத்தில் எந்தக் கவலையையும் வைத்துக் கொள்ளாமல், சிந்தையைப் பிரம்மத்தில் நிறுத்திக் களிப்புற்று, உன்னையே நீ மறந்து இருக்கும் போழ்தினில் அங்கு விண்ணையே அளக்கும் உண்மை அறிவு விளங்கிடும். அது சந்திரனைப் போல ஒளியுடையது, அது சத்தியமானது, நித்தியமானது, அதை எப்போதெல்லாம் சிந்திக்கிறாயோ அப்போதெல்லாம் வந்து உன்னைத் தழுவி அருள் செய்யும். அதனுடைய மந்திரசக்தியால் இந்த உலகுக்கெல்லாம் கிடைப்பது அளவற்ற ஆனந்தம் . இதை எப்போதும் மாயை என்று சொல்லும் மூடத்தனமான சாத்திரங்களைப் பொய் என்று ஒதுக்கித் தள்ளிவிடு. பெருங்கடலை பரமாத்மாவாகக் கொண்டால் அதில் விளங்கும் குமிழிகளெல்லாம் உயிர்கள். வானத்தில் சோதிவடிவாக இருக்கும் சூரியன் அறிவென்றால் அதனைச் சூழ்ந்திருக்கும் கதிர்கள் எல்லாம் உயிர்கள். பிரபஞ்சத்தில் காணப்படும் பொருள்கள் யாவையும் அந்தப் பேரறிவில் தோன்றும் வெவ்வேறு வண்ணங்கள். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் இன்பம் பெற்று, நேர்மையாக வாழ்வர். தங்கள் சித்தத்துக்குள்ளே சிவத்தைக் காண்பார். இங்கு அனைவரும் ஒன்றுபட்டு உலகத்தை ஆள்வார். நல்ல உயர்ந்த யானையைப் போல ராஜநடை நடந்து பெருமைகளையெல்லாம் பெற்று வாழ்வர். இங்கு நடப்பவை யெல்லாம் எந்தையாம் ஈசன் திருவருளால் நடப்பவையே. நம்மைச் சூழ்ந்திருக்கும் கவலைகளைப் புறந்தள்ளி விட்டு இன்பம், சுகம், ஆனந்தம் இவைகள் எப்போதும் நிலைத்திருக்கும். ஞானமெனும் ஜோதி அறிவில் சிறந்து விளங்கவும்; நல்ல எண்ணங்கள் நம் மனதில் நிலைத்திருக்கவும்; தர்ம நெறியிலிருந்து சிறிதும் பிறழாமல் நமக்கிட்ட பணியை இந்தப் பூமியில் சிறப்பாகச் செய்து வாழ்வோர், கற்ற கலைகளை நன்கு பயன்படுத்திச் செல்வங்களைத் தேடி, பிறருக்கு நேருகின்ற துன்பங்களைத் துடைத்து, அன்பு கசிய மற்றவர்களைப் பார்ப்பார்கள். அத்தகையோர் இனிய வாழ்க்கைத்துணை, செல்வம், புகழ், ஆட்டம் பாட்டம், சித்திரம், கவிதை ஆகிய கலைகளில் உள்ளத்தைச் செலுத்தி நடப்பர், பிறருக்கு நேர்ந்திடும் துன்பம் கண்டு துடித்திடுவார். அவர்கள் விரும்புகின்ற பொருள் அவர்களுக்கு வந்து சேரும், அத்தகையோர் காட்டிலோ, புதர்களிலோ இருந்தாலும் அந்த இடம் தெய்வத்தோட்டம் எனப் போற்றலாம். ஞானியர்களின் குணங்களைக் கூறினேன்; அந்த ஞானத்தை விரைவில் கிடைக்கப்பெறுவாய் என்று கண்ணன் சொல்லவும், உண்மைநிலையினை உணர்ந்தேன். முந்தைய கேவலமான மனிதக் கனவுகளெல்லாம் எங்கே போயிற்றோ தெரியவில்லை. ஓர் அரிய அறிவு எனும் தனிச்சுடரை மட்டும் கண்டேன். அதனுடைய திருவிளையாடல்தான் இந்த உலகம் என்பதைப் புரிந்துகொண்டேன்.


Sunday, January 3, 2016

மகாகவி பாரதியாரின் 'குயில்பாட்டு'

         
(அறிஞர் கு.ராஜவேலு அவர்கள் எழுதிய "வான்குயில்" எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.)
                                                         குயிலின் கதை:
வைகறை வேளை. உலகைப் போர்த்திய இருள் மெல்ல மெல்ல கிழிகின்ற காலம். கதிரவன் தன்னுடைய ஆயிரம் செங்கதிர்க் கரங்களை அகல விரித்து இப்பாரின் மீது ஆடுகின்ற நேரம், அவனுடைய கோலக்கூத்திலே மெய்மறந்த மாக்கடல், தன் நீண்ட அலைக் கரங்களைக் கொட்டி ஆர்த்துப் பெரு முழக்கம் செய்கின்ற சிறுகாலைப் பொழுது. அவ்விளங்காலை போதிலே, புதுவை நகர் மெருகு ஊட்டிய பொன்போல எழில் பூத்து விளங்குகிறது.

அப்பட்டினத்தின் மேற்கே நிழல் விரிக்கும் நீண்டு உயர்ந்த பசுமரங்கள் அடர்ந்த ஓர் எழிலாரும் மாஞ்சோலை. அவ்விளமரக் காவிலே ஒரு நாள், நம் புலவன் அகம் மகிழ்ந்து சுற்றி வருகின்றான். மாமரத்தின் ஒரு கிளையிலே இசைக்குயில் ஒன்று அமர்ந்து கல்லும் கரையும் வண்ணம், மிக இனிமையான காதற்பாட்டு ஒன்றைப் பாடிக் கொண்டிருக்கிறது. அப்பாட்டின் நெருப்புச் சுவையிலே விண்ணும் மண்ணும் மயங்குகின்றன. குயிலின் கருத்தைக் கவரும் பாட்டிலே கவிஞன் மயங்கி முடிவில் தன்னையும் மறக்கிறான். அந்தக் குயிலைக் காதலித்து அதனுடனே கூடிவாழ வகை கிடைக்காதா என்று ஏங்குகிறான். இல்லையெனில் அதனுடைய "நாதக் கனலிலே நம் உயிரைப் போக்கோமா?" என்றும் பொருமுகின்றான். இவ்வாறு அவன் உள்ளம் கனலாய்க் காய்ந்து, புனலாய் ஓடும் வண்ணம் அக்குயில்: "காதல், காதல், காதல் காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்" என்று பாடி முடிக்கிறது.

புலவன் அக்காதற் குயிலை நோக்கி "உலகை மயக்கும் இசைச் செல்வத்தையுடைய குயிலே! உனக்கு எய்திய துன்பம் யாது?" என்று உசாவுகிறான். மாயக் குயிலும் மானுடர் பேச்சிலே அவனுக்கு, "காதலை வேண்டி கரைகின்றேன், இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன்" என்று மறுமொழி ஈந்தது. சிந்தை நோய் கூறும் குயிலின் வெந்துயர் மாற்றத்தைக் கேட்டுக் காதலால் மயங்கும் கவிஞன் உள்ளம் விம்மிதம் அடைகிறது. அவன் நெஞ்சம் கவல்கிறது (துன்பப்படுகிறது).

"காதலன் யாரையும் நீ பெறாத காரணந்தான் யாதோ?" என்று கவிஞன் அந்தக் குயிலை வினவ, அதற்கு அது தனது நெஞ்சத்தைக் குடைகின்ற உள்ள நோயினை விளக்கிக் கூறுகிறது. பிறப்பிலே குயிலாகக் காட்சி அளித்தாலும் அதற்கு எவ்வாறோ மாந்தர் பேசுகின்ற பேச்சும் நன்கு தெரிகின்றது. மானிடர் மொழி மட்டுமல்ல! மற்ற எல்லோர் மொழிகளையும் உணரும் பெற்றியும் வாய்ந்ததாயுள்ளது. எனினும் அதனுடைய சிந்தை, மானிடப் பெண்கள் காதலினால் ஊன் உருகப்பாடும் பாட்டிலும், உழவனுடைய ஏற்றப் பாட்டினிலும், நெல்லை உரலில் இட்டு இடிக்கும் போது பெண்கள் பாடும் பாட்டினிலும், அவர்களின் கொஞ்சும் தேன்மொழியினிலும் இன்னும் மாந்தர்கள் பயில்கின்ற குழல், யாழ் முதலிய இசைக் கருவிகளின் தேனிசையிலும் தன்னுடைய நெஞ்சை முற்றிலும் பறிகொடுத்துள்ளது. ஆகையால் அதனுடைய காதலும் மானிடர் மீதே பற்றிப் படர்கின்றது. அதனுடைய உள்ளப்பாங்கைக் கவிஞனுக்கு வகையாய், வீணையின் ஏழிசைக் குரலையும் ஒரு குரலிலே அடக்கி, தகவாய் இயம்புகின்றது. "காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன்" என்று புலம்பும் தன் நெஞ்சின் துயரைக் கூறுகின்றது.

                                                      கவிஞனின் காதல்:
மகுடியின் இசையிலே மயங்கும் நாகம் போன்று மாங்குயிலின் பேச்சிலே கவிஞன் கட்டுப்படுகிறான். அவனுடைய உள்ளத்தில் குயிலின் காதற்பாட்டைத் தவிர வேறோர் இசை இல்லை. எங்கிருந்தோ இந்நேரத்தில் பறவைகள் பறந்து வந்து அம்மாஞ்சோலையினுள்ளே புகலடைகின்றன. தங்கள் காதல் உரையாடலுக்குத் தடை வந்ததைக் கண்டு, அந்த நீலக்குயில் நீண்ட பெருமூச்சு விடுகிறது. "ஐயனே! காதல் வழிதான் கரடுமுரடானது என்பர்" அது நம் வாழ்வில் முழு உண்மையோடு விளையாடித் திளைக்கின்றது. உங்களோடு பேசி அளவளாவுகின்ற இன்பத்திற்கும் இப்போது இடையூறு மூண்டுவிட்டது. தாங்கள் அன்போடு அடுத்த நான்காம் நாள் இங்கு வந்தருளல் வேண்டும். மறக்காதீர்! என்னுடைய சிந்தையைப் பறித்துக்கொண்டு செல்கின்றீர்; குறித்த நாளில் வராவிடிலோ இக்குறுவடிவக் குயிலின் ஆவி தரியாது. அறிந்திடுவீர்! நான்காம் நாள் என்பதனை மறந்து விடாதீர். இந்நாட்கள் நான்கையும் பத்து யுகம்போல நான் கழிப்பேன். சென்று வருவீர்! என் சிந்தையை எடுத்துக்கொண்டு செல்கின்றீர் என்பதை மீண்டும் மீண்டும் விண்டு உரைக்கின்றேன். மறவாதீர், சென்று வாருங்கள்" என்று தேற்ற முடியாத பெருந்துயரத்தோடு அவனை வழி அனுப்பி வைக்கிறது அந்த மாயக் குயில்.

இரண்டாம் நாள்: குயில் மறைந்து போகிறது. காதல் வயப்பட்ட கவிஞன் களிவெறி கொண்டவன் போல் தன் வீடு நோக்கித் திரும்புகிறான். வருகின்ற வழியெல்லாம் வஞ்சனைக் குயிலின் உருவமே எங்கும் நிறைந்து, எல்லாமாய் நிற்பதனைக் காண்கின்றான். நாள் ஒன்று போவதற்கு அவன் பட்ட பாட்டைத் தாளமும் படாது, தறியும் படாது. இந்நிலையில் எவ்வாறோ நாள் ஒன்று கழிகின்றது.

மறுநாள் அதே வைகறை வேளை. புத்தி, மனம், சித்தம், புலன் ஒன்றும் அறியாமல் காதல்வயப்பட்ட மனத்தினனாய், கயிற்றினால் ஆட்டுவிக்கப்படும் பாவைபோல கவிஞன் அந்த மாஞ்சோலையை நோக்கி விரைந்து செல்கின்றான். வழியில் இருந்த எந்த பொருளும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. அந்த காலை வேளையில் செஞ்ஞாயிற்றின் செழுங்கதிர் ஒளியினால் பச்சை மரங்களெல்லாம் பளபளத்து மின்னுகின்றன. காதல் குயிலோடு தனித்து உரையாடிக் களித்து இன்புற வேண்டுமென்ற அவன் இச்சையை உணர்ந்தனபோல, சோலைப் பறவையெல்லாம் எங்கோ போய்விட்டன. சிறுகுயிலைக் காணக் கரையடங்கா வேட்கையோடு, ஒவ்வொரு மரமாகப் பார்த்துக் கொண்டே வருகிறான். குயிலும் குரங்கும்: முன்னை நாள் கண்ட மரக்கிளையில் குயிலைக் காணாது அவனுடைய மனம் துடிக்கிறது. முடிவில் வஞ்சனை விளைந்ததுபோல் காணக் கசக்கும் ஒரு காட்சியை அவன் கண்கள் காண்கின்றன. அன்று தன்னிடம் காதல் மொழி பேசிய அந்த நீலிக் குயில் இன்று ஒரு குரங்கினிடம் அவ்வாறே -- அதே காதல் மொழி பேசிக்கொண்டிருக்கிறது. இன்று அது குரங்கினிடம் குரங்கு மொழியில் பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால், பொருளோ நேற்றுப்பாடிய அதே காதற் பாட்டின் பொருள்தான்.

 "வானரரே! ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான் எப்பிறப்பு கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத் தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?" என்று சொல்லி மானுடர்கள் சில வகையில் மேன்மையுற்றிருந்தாலும், உன்போற் மேனி அழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும், கூனியிருக்கும் உன் கொலு நேர்த்தி தன்னிலும் வானரர்க்கு மானுடர் நிகர் ஆவாரோ? பட்டுமயிர் மூடப்படாத தமது உடலை, பட்டு உடைகளால் அலங்கரித்துக் கொண்டாலும், மீசையும் தாடியும் வைத்துக்கொண்டு உமது ஆசை முகத்தினைப் போல் ஆக்க முயன்றாலும், நீங்கள் தாவிக் குதிப்பதைப்போல் அவர்களும் கூடிக் குடித்துவிட்டு ஆடினாலும், கோபுரத்தில் ஏறுகின்ற உங்கள் நேர்த்திக்கு எதிராக இவர்கள் ஏணி வைத்து ஏறமுயன்றாலும், வேறு எதனைச் செய்தாலும், தாவிப் பாய்வதிலே வானரர்க்கு மானுடர் நிகர் ஆவாரோ?

அதெல்லாம் போகட்டும், வாலுக்கு எங்கே போவார்கள்? தலையில் கட்டும் தலைப்பாகையின் கச்சை உங்கள் வாலுக்கு நிகர் ஆகிவிடுமோ? அடடா! உங்கள் சைவ சுத்த போஜனமும், சாதுரியப் பார்வைகளும் உங்களைப்போல் வேறொரு சாதி மண்மீது இருக்கிறதோ?" இப்படி பேசுகிறது குயில்.

குயிலின் பைங்குரல் இசையில் அந்தக் குரங்கு தன் நெஞ்சைப் பறிகொடுக்கிறது. அதன் இயல்புக்கேற்ப காதல் வெறிகொண்டு தாவிக் குதிக்கிறது; தாளங்கள் போடுகிறது; கண்ணைச் சிமிட்டுகிறது; காலாலும் கையாலும் மண்ணைப் பிறாண்டி எங்கும் வாரியிறைக்கிறது.

 "உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு" இது திருக்குறள். காமத்திற்கு உரிய சிறப்பினை இதனைக்காட்டிலும் படம்பிடித்துக் காட்டமுடியுமா? "காதல் வழிதான் கரடு முரடாம் என்பர்" என்று கூறும் கவிஞர், மகாகவி ஷேக்ஸ்பியரின் "The course of love never did run smooth" எனும் வரிகளை நமக்கு நினைவு படுத்துகிறார்.

குரங்கு சொல்லுகிறது: "ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே! பேசமுடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன் காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்; காதலினால் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய், எப்பொழுதும் நின்னை இனிப் பிரிவ தாற்றுகிலேன்". என்று பாடிக்கொண்டு அந்தக் குரங்கு கூத்தாடுகிறது.

அதனுடைய வெறியாட்டத்தைக் கண்டு கவிஞனின் உள்ளம் அலையாடுகிறது. குரங்கைக் கொல்ல எண்ணிக் கைவாளை வீசுகின்றான். ஆனால், 'கனவோ? நனவோ? அன்றித் தெய்வ வலியோ?' என்று உள்ளம் திகைக்கும்படி அவனுடைய சிறுவாளுக்கு அச்சிறு குரங்கு தப்பிச் சென்றுவிடுகிறது. அதே நேரத்தில் சொல்லி வைத்தாற்போல், சோலைப் பறவைகள் எல்லாம் தொகை தொகையாய்த் திரும்பி வருகின்றன. செய்வதறியாது அக்குட்டிக் குயிலைத் தேடுகின்றான். ஆனால் அது மறைந்து போய்விடுகிறது. அவன் உள்ளம் பதைபதைக்கின்றது. உடல் சோர்கின்றது. விழி மயங்குகின்றது. நாணமும் துயரமும் அவனை நலிவுறுத்துகின்றன. மீண்டும் இல்லம் நோக்கித் திரும்புகிறான். தன்னுடைய உணர்வை இழந்து விழுந்து விடுகின்றான்.

மாலை நேரத்து மயக்கம். அவனுடைய நண்பர்கள் அவனைச் சூழ்ந்துகொள்கிறார்கள். அவன் மயக்கமும் பையப் பையத் தெளிகிறது. அவன் நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அவனால் விடையிறுக்க இயலவில்லை. "நண்பர்களே! நாளை வாருங்கள், நடந்தவற்றை நான் முழுவதுமாய் நவில்கின்றேன். இன்று என்னைத் தனியே இருக்க விடுங்கள்' என்கிறான். தோழர்கள் சென்றுவிட்டாலும், அவனுடைய நிலை கண்டு அவன் தாயார் நைந்து போய்விட்டார். தளர்ந்த தன் தனயனின் மயக்கம் தீரத் தன் தளிர்க் கரத்தால் தீம்பால் கொணர்ந்து, அன்பால் அவனைத் தேற்றி, அப்பால் அருந்தச் செய்கின்றார். பாலருந்தியபின் பெருந்துயில் கொள்கின்றான்.

                                                            மூன்றாம் நாள் காதல்:
மூன்றாம் நாள், முந்தைய நாட்களில் நடந்தவற்றை மறப்பதற்காக இயற்கையைச் சரணடைகிறான். அவனுடைய கால்கள் முன்போலவே அவனை அந்த இளமரக்காவிற்கு இழுத்துச் செல்கின்றன. சொந்த நினைவு இழந்து அவனும் சோலையிலே வந்து நிற்கின்றான். மோசக்குயிலை சுற்றுமுற்றும் தேடுகின்றான். கோலப்பறவைகள் கூட்டத்தையும் காணவில்லை.

பின்னர் ஆங்கோர் மாமரத்தின் மோட்டுக் கிளையினிலே அந்த நீசக்குயில் நீண்ட கதை ஒன்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. கீழே ஒரு கிழட்டுக் காளையொன்று அந்தக் குயில் சொல்லும் காதல் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதைக் கண்டு கவிஞன் உள்ளம் புண்ணாகி, சினமென்னும் செந்தீயை, பொறாமைக் காற்று வீசி மேலும் கொழுந்து விட்டெரியச் செய்கிறது. கொன்று விடலாமா என்று எண்ணுகிறான். ஆனால், உள்ளம் மீண்டும் சுருங்குகின்றது. பொய்க்குயில் பேசும் மாயக் காதலை முற்றிலும் கேட்டுவிட்டுப் பின்னர் கொல்லுதலே நல்ல சூழ்ச்சி என்று எண்ணுகிறான். மறைந்து நின்று அந்த உரையாடலைக் கேட்கிறான்.

அந்தக் குயிலும் தன் பொன்போன்ற குரலிலே மின்னல் போன்ற சொல்லெடுத்துத் தன் கரையடங்காக் காதலை அந்தக் கிழக்காளையிடம் சொல்லுகிறது. "காளை யெருதரே! காட்டிலுயர் வீரரே! தாளைச் சரணடைந்தேன், தையலெனைக் காத்தருள்வீர்! காதலுற்று வாடுகின்றேன், காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன் ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல் கொண்டால் தானா வுரைத்தலன்றிச் சாரும் வழியுளதோ?" என்று கூறி, பண்டுபோல் தனது பாழடைந்த பொய்ப்பாட்டை எண்டிசையும் இன்பக் களியேறப் பாடியது.

குயில் அந்தக் கிழக்காளையைப் பார்த்து சொல்லுகிறது: "நந்தியே! பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே! காமனே! மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே! பூமியிலே மாடுபோல் பொற்புடைய சாதி பிரிதும் உண்டோ? மானுடர்களுக்குள்ளே வலிமையுள்ள ஆண்மகனை என்ன சொல்லி அழைக்கிறார்கள். "காளை" என்றுதானே சொல்லுகிறார்கள். அடடா! உனது நீண்ட முகமும், நிமிர்ந்திருக்கும் கொம்புகளும், பஞ்சுப்பொதி போன்ற உடலும், வீரத்திருவாலும், வானத்தில் இடி இடிப்பது போல "மா" என்று நீ உறுமுவதும், உன் முதுகில் ஈனப் பறவைகள் ஏதேனும் அமர்ந்து விட்டால் அதனை உன் வாலை வீசி அடிக்கும் நேர்த்தியும் கண்டு நான் மோகித்துவிட்டேன்".

இவ்வளவையும் சொல்லி முடித்துவிட்டு குயில் மேலும் தொடர்கிறது "காளையரே! உம் மேல் காதலுற்று வாடுகின்றேன், காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை என்பதை அறிவேன். எனினும் என் செய்வேன். என்போல் அபூர்வமாய் காதல் கொண்டால் தானாய் உரைத்தலின்றி வேறு வழியுளதோ?. இப்படி அந்த நீசக் குயில் அந்தக் கிழக் காளையிடம் பாடி முடிக்கும் வரை கவிஞனுக்கு இவ்வுலக நினைவே இல்லை. "பாட்டு முடியும்வரை பாரறியேன் விண்ணறியேன் கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன் தன்னை யறியேன், தனைப்போல் எருதறியேன், பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே கண்டேன்" என்று சினத்தீ மூண்டு தவிக்கும் கவிஞனே அப்பாட்டை வியந்து பாராட்டினான் என்றால், அதன் இன்பச்சுவை எவ்வாறு அவனி முழுவதையும் மயக்கி ஆட்கொண்டிருக்கும் என்பதை நன்கு அறியலாம். கரைபுரண்ட ஆற்று வெள்ளம் வற்றியவுடனே தலைசாய்ந்த நாணற்புற்கள் மீண்டும் நிமிர்வதைப் போன்று பாட்டு முடிந்தவுடன் கவிஞனின் சினமும் நிமிர்ந்து நிற்கிறது.

கைவாளை எடுத்துக் காளையின் மேலே வீசுகின்றான். ஆனால் காளையோ? விரைந்து ஓடிவிடுகிறது. கார்வண்ணக் குயிலும் கடிதில் மறைந்து விடுகிறது. சோலைப் புள்ளின் கூட்டமெல்லாம் மீண்டும் ஒலிசெய்த வண்ணமே விந்தைக் கனி கொடுக்கும் தண்ணார் பொழிலை வந்தடைகின்றன. நாணமில்லா காதல் கொண்ட கவிஞன் வீணிலே அந்தக் குயிலை யாண்டும் தேடி அலைகின்றான். உற்ற பயன் ஏதும் இல்லை. வறிதே வீடு வந்து சேருகின்றான். ஆனால், உள்ளமோ ஓராயிரம் எண்ணங்களை எண்ணுகின்றது. "கண்ணிலே நீர் வடிய, கானக் குயில் முதலில் ஏன் என்னிடம் காதலைப் பேசியது. அந்தப் பாட்டிலே நான் ஏன் நெஞ்சம் கரைந்தேன். பேச முடியாப் பெருங்காதல் ஏன் கொண்டேன்? இன்ப உரையாடல் நிகழும் வேளையிலே புன்பறவைக் கூட்டம் எங்கிருந்து வந்தது? தண்டலையை ஏன் அடைந்தது? என்னைப் பேதையாக்க இவ்வளவும் போதாமல் மேலும் என் சித்தம் திகைப்புறும் வண்ணம் எனக்கு எதிரியாக எங்கிருந்தோ சொத்தைக் குரங்கு ஒன்று வந்ததே? அப்பால் தொழுமாடும் எவ்வாறு போட்டியாகத் தோன்றியது? இவ்விரண்டும் என் காதலுக்கு முற்றிலும் வைரிகளாக மூண்ட கொடுமையை என்னென்பேன்? உலகமே விந்தை நிறைந்த ஒரு விலங்கினக் காட்சிசாலை போன்றல்லவா தோற்றமளிக்கிறது.

                                                           நான்காம் நாள்:
வண்ணக்குயில் கவிஞனைச் சோலைக்கு வரச்சொன்ன நான்காம் நாள், உள்ளம் சோர்ந்து, அறிவிழந்து, சித்தம் திகைப்புற்று, செய்கையறியாமல் தன் வீட்டின் மாடத்திலே ஏக்கமே உருவமாய் இருக்கின்ற இளங்காலை வேளையில் அவனையறியாமலே அவனுடைய நாட்டம் காட்டுத் திசையில் செல்லுகின்றது. என்ன வியப்பு? வானத்தே ஒரு கரும் பறவை வருவதனை அவன் கண்கள் நோக்குகின்றன. "இது நமது பொய்க்குயிலோ?" என்று உள்ளம் திகைக்கின்றான். நீண்ட தொலைவிலே அது நின்ற காரணத்தால் அதன் வடிவம் நன்கு துலங்கவில்லை. ஆனால், மனமோ அதனை விட்டுப் பிரிய முடியாது பேதலிக்கின்றது. உயர்மாடத்தினின்றும் இறங்கி வீதியிலே வந்து நிற்கின்றான். ஒளிக்கடலில் தோன்றும் ஒரு புள்ளியைப் போல் அக்கருங்குயிலும் வானத்தே காட்சியளிக்கிறது.

 "நம்முடைய நாணமிலாப் பெண் குயிலோ இது?" என்று அறிவோம் என்று எண்ணி அவன் விரைந்து அதன் பின்னே செல்லுகின்றான். வானத்தில் வட்டமிட்டு நின்றே வழிகாட்டி அக்கானப் பறவையும் செல்லுகின்றது. அவன் நின்றால் அது நிற்கும்; அவன் சென்றால் அதுவும் செல்லும். இறுதியில் அந்தக் குயில் மாஞ்சோலையைச் சென்றடைகின்றது. ஆங்கோர் கொம்பின் மீது அமர்கிறது. பழைய காதற்பாட்டை இப்போதும் பாடிக்கொண்டிருக்கிறது.

 கவிஞன் உள்ளம் குமைந்து அதன் எதிரில் போய் நிற்கிறான். சினம் பொங்க வினவுகிறான். "நீசக் குயிலே, நிலையறியாப் பொய்மையே, ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும் எண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை நண்ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலுமெனை" என்று நெருப்பெனக் கேட்டு அதனை நெரிக்கிறான். அதனைக் கொல்லவும் நினைக்கிறான், எனினும் பின்னே மனம் இளகிவிடுகிறது.

குயிலின் கண்களிலே நீர் ஆறாய்ப் பெருக்கெடுக்கிறது. வேதனையோடு குயில் கூறுகிறது, "ஐயனே, என்னை இவ்வுலகத்தில் வாழவைக்கத் திருவுளமோ? அன்றிக் கொன்றுவிட எண்ணமோ? தன் துணை பிரிந்தால் அன்றிற்பறவை உயிர் வாழாது. ஞாயிற்றின் வெம்மையில் மலருக்கு வாழ்வு ஏது? தாயே உயிரை எடுப்பதென்றால் மதலைக்குச் சரண் ஏது? தேவர்கள் சினந்துவிட்டால் சிற்றுயிர்கள் என்னவாகும்? நீங்கள் என்னைச் சினந்தால் நான் உயிர் துறப்பேன். நான் குற்றம் புரிந்ததாகச் சொன்னீர்கள். ஆனால் நான் குற்றம் புரிந்தவள் அல்ல. புன்மைக் குரங்கையும், பொது மாட்டையும் நான் கண்டு மெய்மைக் காதல் விளையாடினேன் என்று சொல்லுகின்றீர். ஐயகோ! என் செய்வேன்? நான் எங்ஙனம் உய்வேன்? உங்கள் சொல்லை மறுக்கவும் வழியில்லை. என்மேல் பிழையும் இல்லை. வெவ்விதியே! என்னை நீ என்னுடைய வேந்தனோடு சேர்த்தாலும், அல்லது என்னை நம்பாமல் அவர் என்னை புறக்கணித்துச் செல்ல, அதனால் நான் வெந்தழலில் வீழ்ந்து அழிய நேரிட்டாலும், நான் எக்கதிக்கு ஆளாவேன்?" என்று பல பேசி குயில் புலம்புகிறது.

                                                      குயிலின் முந்தைய பிறப்பு:
குயில் மீண்டும் கவிஞனை நோக்கிக் கூறுகிறது, "என் உயிரே, என்னை விட்டுப் போவதன் முன்னால் நான் சொல்லுவதனை அருள்கூர்ந்து கேட்க வேண்டும். ஒரு நாள் பொதியமலையின் அருகேயுள்ள ஒரு சோலையில் ஆழ்ந்த சிந்தனையோடு நான் அமர்ந்திருந்தேன். அவ்வேளையில் அங்கு ஓர் முனிவர் வந்தார். இவர் யாரோ பெரியவர் என்றெண்ணி அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினேன். அவர் என்னை வாழ்த்தி ஆசி கூறினார். அதன்பின் என் உள்ளத்திலே விடைகிடைக்காமல் இருந்த ஒரு வினாவுக்கு அவரிடம் விடை தேடினேன்.

 "வேதமுனிவரே! மேதினியில் நான் கீழ்ப்பறவை சாதியிலே பிறந்தேன். ஆனால், மற்ற குயில்களைப் போலன்றி என் மனம் மானுடரைப் போல் எண்ணுகிறது, அவர்கள் பேசும் மொழி எனக்குப் புரிகிறது. இதன் காரணம் என்ன? இதன் உண்மையை எனக்கு விளக்கியருள வேண்டும்" என்று வணங்கிக் கேட்டேன்.

 "அப் பெருமுனிவர் பேசினார். "குயிலே! கேள். சேரவள நாட்டின் தென்புறத்தே ஒரு மலை உள்ளது. அம்மலையில் வாழும் வேடர்களுக்கு வீரமுருகன் என்பவன் முன்பு தலைவனாக இருந்தான். முற்பிறப்பில் அந்த வீரமுருகனின் மகளாகப் பிறந்திருந்தாய். அப்போது உன்னைச் "சின்னக்குயிலி" என்ற பெயரால் அழைப்பர். உன்னுடைய அழகு, ஒளிவீசும் முகம் இவற்றுக்கு இணையாக தமிழ்நாட்டில் யாருமே இல்லை. அப்போது, உன்னுடைய மாமன் மகன் மாடன் என்பவன் இருந்தான். நினது பேரழகைக் கண்டு அவன் உன்னை மணக்க விரும்பி உன் நினைவாகவே சித்தம் வருந்தினான். தேமொழியே! அவனுடைய பெருந்துன்பத்தைக் காணச் சகிக்காமல் அவனை மாலையிட நீ வாக்களித்தாய். இந்நிலையில் உன்னுடைய பேரழகின் பெரும் கீர்த்தி தேசமெல்லாம் பரவியது. தென்மலையின் வேடர் தலைவன் மொட்டைப்புலியனின் மகனான நெட்டைக்குரங்கனுக்கு, உன்னை மணமுடிக்க நிச்சயித்தான் அந்த மொட்டைப்புலியன். அவன் உன் அப்பனை அணுகி "உன் தையலை என் தனயனுக்குக் கண்ணாலஞ் செய்யும் கருத்துடையேன்" என்றான். முருகனும் அதற்கு உடன்பட்டான். பனிரெண்டு நாட்களிலே பாவை உன்னை மணம்புரிய அவர்கள் உறுதி பண்ணிவிட்டார்கள். செய்தி கேட்டு மாடன் மனம் புகைந்தான். அவன் உன்னிடம் வந்து தன்னை மணந்துகொள்ளும்படி வற்புறுத்தினான். அவன்பால் கருணை கொண்ட நீ அவனிடம் சொன்னாய், "மாடா! உன்னுடைய சினத்தை நீ தவிர்ப்பாயாக. நெட்டைக் குரங்கனுக்கு நான் பெண்டாட்டியாக நேர்ந்தாலும் மூன்று மாதங்களுக்குள் ஏதாவது மர்மம் செய்து வேற்றுமையை விளைவித்து இங்கே நான் வந்தடைவேன். தாலியை மீண்டும் அவர்களிடமே கொடுத்து விடுவேன். நான்கு மாதத்தில் நாயகனாக உன்னை நான் மணம் புரிவேன். என் பேச்சு தவறமாட்டேன். மாடா! என்னை நம்பு" என்று இரக்கத்தினால் உரைத்தாய்.

 நாட்கள் சென்றன. ஒரு நாள் மாலை, மின்னற்கொடிகள் ஒன்றோடொன்று ஓடி ஒளிந்து விளையாடுவதைப் போன்று நீயும் உன் தோழியரும் காட்டிலே விளையாடிக்கொண்டிருந்தீர்கள். அப்போது சேரமன்னனின் மகன் வேட்டையாட காட்டிற்கு வந்தவன், நீங்கள் இருக்குமிடம் வந்தான். உன்னைக் கண்ட அந்த அரசகுமாரன் உன் மீது மாளாக் காதல் கொண்டான். நீயும் அவனைக் கண்டாய், அவன்மீது ஆறாக் காதல் கொண்டாய், இருவரும் ஆவி ஒன்றென தழுவி நின்றீர். அவ்வேளையில் ஊரிலிருந்து நெட்டைக் குரங்கன் வந்து சேர்ந்தான். தனக்கு உறுதி செய்த வேடர் குலப் பெண், காட்டிற்கு விளையாடச் சென்றிருப்பதறிந்து நின்னைக் காண ஆத்திரத்தோடு ஓடிவந்தான். அங்கு சேர இளவரசனும் நீயும் நெருக்கமாக இருப்பதைக் கண்டான். அவன் உள்ளம் தீப்பற்றி எரிந்தது. நெட்டைக்குரங்கன் வந்த செய்தியை யாரோ இதற்குள் மாடனுக்குத் தெரிவித்தார்கள். அவனும் சின்னக் குயிலியைத் தேடிக்கொண்டு காட்டிற்கு ஓடிவந்தான். கண்களில் கனல் தெறிக்க ஐம்புலன்களும் கலங்க மாடன், குயிலி அயலான் ஒருவனுடன் இருப்பதைக் காண்கிறான். நெட்டைக்குரங்கன் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. தனக்குப் பின்னே வந்து நின்று தணலாய்க் கொதிக்கும் மாடனை நெட்டைக்குரங்கனும் காணவில்லை. குயிலியோடு நிற்பவன் நெட்டைக்குரங்கன் என்று மாடன் நினைத்தான். குரங்கனோ இவள் காட்டில் எவனிடமோ காதல் அமுதம் அருந்துகிறாள் என்று நினைத்தான். இருவரும் தத்தம் உடைவாளை உருவிக்கொண்டு முன்னே பாய்ந்தனர். இளவரசன் மீது இருவர் வீசிய வாட்களும் பாய்ந்தன. சடாரென திரும்பினான் இளவரசன். உடைவாளை எடுத்து ஒரே வீச்சில் மாடனையும் குரங்கனையும் மண்ணிலே சாய்த்தான்.

அடுத்த கணமே அவனும் அடியற்ற மரம்போல் சாய்ந்தான். குருதி கொப்புளிக்க விழுந்து கிடந்த இளவரசன் உடலைத் தன் மடிமீது வைத்து சின்னக்குயிலி கண்ணீர் வடித்தாள். இளவரசன் "வஞ்சியே, நீ அஞ்சாதே. பிறப்பும் இறப்பும் இவ்வையகத்தில் புதுமையன்று. சாவிலே துன்பம் ஒன்றும் இல்லை. நாம் இருவரும் மீண்டும் இம்மண்ணில் பிறப்போம். அப்போது உன்னை மீண்டும் கண்டு அன்பு கொள்வேன். அப்பால் உடலும் உயிரும் ஒன்றென நாம் இல்லறம் காண்போம்" என்று புன்னகை பூக்கச் சொல்லி ஆவி நீங்கினான். இப்பிறப்பில் நீ குயிலாய் காட்சி கொடுக்கின்றாய்" என்று அந்த முனிவர் குயிலின் வரலாற்றைக் கூறி முடித்தார்.

முனிவர் சொன்ன செய்தி கேட்டு என் உள்ளம் நடுங்கியது. மேலும் நடப்பதை அறிய ஆவல் கொண்டேன். அந்த முனிவர் மேலும் பேசினார். "உன்னுடைய மன்னவன் இப்பிறப்பில் தொண்டை வளநாட்டில் கடற்கரைப் பட்டினம் ஒன்றில் பிறந்து வளர்கிறான். உன்னை ஒருநாள் சோலையினிடத்தே காண்பான். உள்ளம் உருக நீ பாடும் காதல் பாட்டினைக் கேட்பான். ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் காரணத்தால் அவன் உன்மேல் மீண்டும் காதல் கொள்வான்" என்றார்.

அது கேட்டு நான் வியப்படைந்தேன். "ஐயனே! இப்பிறப்பில் நானோ குயில் உருவம் கொண்டுள்ளேன். என் கோமானோ பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்றுள்ளார். எங்கள் இருவருக்கும் நெஞ்சம் ஊடுருவிக் காதல் மலர்ந்தாலும், எங்ஙனம் எங்கள் திருமணம் நடக்கும்?" என்றேன்.

"பேதாய்! இப்பிறவியிலும் நீ விந்தியமலைச் சாரலில் உள்ள ஒரு வேடனுக்குக் கன்னியாகவே பிறந்தாய். தீவினைப் பயனாய் மாடன், குரங்கன் இருவருமே கொடும்பேய்களாக அலைகின்றனர். அவ்வாறு அவர்கள் காடு, மலை, மேடு, பள்ளமெல்லாம் சுற்றி அலைந்து திரிந்துவரும் வேளையிலே, உன்னைக் கண்டு விட்டனர். இப்பிறப்பிலும் நீ மன்னனையே மணப்பாய் என்றெண்ணி உன்னைச் சின்னக் குயிலாக்கி, நீ செல்லும் திசையெல்லாம் நின்னுடனே சுற்றி, சூழ்ச்சி பல செய்து வருகின்றனர். நீ இதனைத் தெரிகிலையோ?" என்றார் முனிவர்.

"ஐயோ! பேய்கள் என்னைப் பேதப்படுத்தி, பிறப்பையும் மறக்கச் செய்து வாதைப்படுத்தி வருமாகில், யான் மீண்டும் என் மன்னவனைக் கண்டால் என் செய்வேன்? இப்பேய்கள் அவருக்குத் தீங்கிழைத்தால் நான் எங்ஙனம் தடுப்பேன்? தேவரே! இதற்கு ஓர் மாற்று இல்லையா?" என்று மனம் மறுகி நான் கேட்டேன்.

மாமுனிவரும், "பெண்ணே! வேந்தன் மகன் உன்னைக் கண்டு நேசம் காட்டி நிற்கையில், இப்பேய் இரண்டும் மாயம் பல செய்யும். அவனும் அதன் பயனாய் உன்பால் ஐயம் கொள்வான். சினம் கொண்டு கன்னி உன்னை விட்டுவிட உறுதி கொள்வான். இதற்கப்பால் நேருவதையெல்லாம் நீயே அறிந்துகொள்வாய், எனக்கு சந்தியாவந்தனம் ஆற்றுகின்ற நேரம் வந்துவிட்டது" என்று சொல்லி அவரும் காற்றிலே மறைந்து போனார்.

இதுவே என்னுடைய பழம்பிறப்பின் கதை. இப்பிறப்பின் பின்னைப் பகுதியிலே நடந்தவற்றைப் பார்த்திபனே, நீர் முற்றிலும் அறிவீர்! "

.......................... ஆரியரே! காத லருள்புரிவீர் காதலில்லை என்றிடிலோ சாத லருளித் தமது கையால் கொன்றிடுவீர்!" என்று அருவிபாய் கண்களோடு பூங்குயில் உண்மையை ஒளிக்காது சாற்றியது.

கொலைகாரனின் நெஞ்சையும் தன்னோடு வாரிச் செல்லும் அன்பிற் பெரிய அச்சிறு கருங்குயில் தன் துன்பக் கதையை முடித்தது. எண்ணும் எழுத்தும் கண்ணெனக் கொண்ட பெரிய பாவலனின் உள்ளம் அது கேட்டுப் பாகாய் - அனலில் இட்ட அரக்காய் உருகியது.

அவ்வேளையிலே வியன் உலகும் விரி நீலவானும், உயிர்க்குலம் அனைத்தின் கண்ணும் மனமும் களிகூரத் தன் காவலனின் செந்தாமரைக் கரங்களிலே பைங்குயில் பாய்ந்து விழுந்தது. இன்பவெறி கொண்டு தன் இணைக்கரத்தால் அதனை அவன் ஏந்தி, இருவிழியால் நோக்கினான். ஆராத அன்போடு அதனை முத்தமிட்டான். என்ன விந்தை! அடுத்த கணம் இன்பக் குயிலைக் காணவில்லை, நாடகத்தின் காட்சியும் திரையும் மாறுகின்றன. கதையிலே நெஞ்சையள்ளும் ஒரு நல்ல திருப்பம் நேருகிறது. அற்புதக் காட்சிபோல் அங்கு - அவ்விடத்தில் கோலமெல்லாம் குன்றெனத் திரண்ட பெண் ஒருத்தி நின்றாள். அவள் அழகு பேசும் திறமன்று என்று சொல்லி அப்பெண்மணியை முத்தமிட்டான். அந்த மோனப் பெரு மயக்கத்தில் சித்தம் மயங்கினான். தன்னையும் மறந்து கிடந்தான். பின்னர் சட்டென கண்விழித்தான். ".

.......... பிறகு விழி திறந்து பார்க்கையிலே சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல் பத்திரிகைக் கூட்டம், பழம்பாய் - வரிசையெல்லாம் ஒத்திருக்க நாம் வீட்டில் உள்ளோம் எனவுணர்ந்தேன்". என்று கவிக்குயில் பாரதியின் வான்கவிதை முடிகிறது. இதுவே வண்ணக் குயிலின் உள்ளக் கதை. வான்குயிலின் புறவாழ்க்கை தத்துவத்தைப் பொதித்து மூடியிருக்கும் மாய வாழ்க்கையின் பெருவிளக்கம். இதனை வெறும் கதையாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மகாகவி இந்தக் 'குயில்பாட்டின்' மூலம் அரிய வேதாந்தக் கருத்துக்களை சொல்ல விரும்புகிறார். அது என்ன? என்பதை அனுபவத்தால், அறிவின் தேடலால் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

 "ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும் வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறிரோ?"  கவிஞர்  பாடிய பாடல்களுள் உணர்ச்சிச் செல்வமும் கற்பனை மெருகும் இழைந்து விளங்கும் சிறு காவியம் 'குயில்பாட்டு'. அதைப் பாடி முடிந்தபின் அதனுள் ஆழ்ந்த பொருள் வேறு இருப்பதாக அவரே உணர்ந்தார். 

Saturday, January 2, 2016

பாஞ்சாலி சபதம் - 2ம் பாகம்

                                                                            சூதாட்டச் சருக்கம்

 சூதாட்டச் சருக்கம் எனத் தலைப்பிட்ட இந்தப் பகுதியை மகாகவி பாரதியார் கலைவாணியை வேண்டித் தொடங்குகிறார். எதனையும் தெளிவுற அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல், சிந்திப்பவர்க்கு மகிழ்ச்சி உண்டாகுமாறு உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல், கண்ணீர் சிந்திடுமாறு சோக ரசத்தைப் பிழிந்து தருதல் இவையனைத்தும் ஒளி வளரும் தமிழ் வாணீ! நீ அருளும் தொழில்களன்றோ? அவற்றை எனக்கு சித்திக்கும்படி அருள்வாய் என்கிறார் கலைவாணி வாழ்த்தில்.

மன்னன் திருதராட்டிரனின் அழைப்பை, விதுரன் வந்து சொல்ல, அதன்படி இந்திரப் பிரஸ்தத்திலிருந்து புறப்பட்ட பாண்டவர்கள் அத்தினாபுரம் வந்தடைந்தனர். இவர்கள் வரும் செய்தியறிந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். அந்த நகரத்தின் சந்திகள், வீதிகள், சாலைகள், சோலைகள் எந்த திசை நோக்கினாலும் மக்கட்கூட்டம் நிறைந்து வழிந்தது. இவ்வளவு மக்கட்கூட்டமும் இதுநாள் வரை எங்கே இருந்தது என்று வியக்கும் வண்ணம் எள் விழவும் இடமின்றி நிரம்பியிருந்தனர். வேத விற்பன்னர்கள் வேதகோஷம் இசைத்தனர்; மன்னர்கள் தங்கள் தோள்தட்டி ஆர்ப்பரித்தனர்; யானைகளும், தேர்களும், குதிரைகளும் வீதிகள் தோறும் ஓசை எழுப்பிச் சென்றன. மங்கலம் பாடுவோர் இசைக்கும் ஒலியும், ஆடற்பெண்கள் நாட்டிய நிகழ்ச்சிகளும், கோடி வகை வாத்தியங்களின் இன்னிசை முழக்கங்களும் அந்த நகர் முழுதும் நிறைந்திருந்தன. யுதிஷ்டிரன் முதலாய பாண்டவர்கள் ஓர் தேரில் ஏறி அம்மாண் நகர் வீதிகளில் வந்தபோது, பெண்கள் பொன் விளக்கேந்தி வர, பார்ப்பனர் பூர்ணகும்பங்கள் வழங்க, மக்கள் மலர் மழை பெய்திட, காற்றில் தோரணங்கள் ஆடிட அந்த நகரத்தின் எழில் கூடி விளங்கியது.

இப்படி ஊர்வலமாக வந்த பாண்டவர் மன்னவன் அரண்மனை வந்தடைந்தனர். அரசவையிலிருந்த மன்னன் திருதராட்டிரனை வணங்கி ஆசி பெற்ற பின், பீஷ்ம பிதாமகரின் காலடிகளை வணங்கி, கிருபாச்சாரியார், துரோணர், அவரது புதல்வன் அசுவத்தாமன் மற்றுமுள்ள பெரியோர்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துப் பெற்றனர். பிரிந்திருந்தவர் கூடி அவரவர் குசலம் விசாரித்த பின் அந்தி வேளை வந்தது, சந்தி ஜபம் செய்ய அனைவரும் தங்கள் இருப்பிடம் சேர்ந்தனர்.

இரவுப் பொழுதை இனிதே கழித்தபின் மறுநாள் துயிலெழுந்து, தெய்வங்களைத் துதித்து, தூய பட்டாடைகளை அணிந்து, ஆபரணங்களையும், ஆயுதங்களையும் தரித்து மன்னனின் பொற்சபையினை அடைந்தனர். சபையில் கவுரவரும் கூட்டமாய் அமர்ந்திருந்தனர். பீஷ்மர் அமர்ந்திருந்தார், தர்ம நெறி தவறாத விதுரனும், பார்ப்பனக் குரவர்களும், நாட்டு மந்திரிமாரும் பிற நாட்டினர் பலப்பல மன்னர்களும், கெட்ட மதி படைத்த துரியோதனன் உறவினரும் நண்பர்களும் அந்த வான் பெரும் சபையிலே நிறைந்திருந்தார். புன் தொழில் சூதாட்டத்தில் இந்தப் புவியிலே யாரும் இணையில்லை என்று விளங்கிய சகுனி சபை நடுவினில் குதூகலத்துடன் வீற்றிருந்தான். சபையில் பெரிய பெரிய சூதர்கள் கூடியிருந்தனர். மாயம் வல்ல அவர்கள் கொக்கரித்து ஆர்ப்பரித்த வண்ணமிருந்தனர்.

இந்நிலையில் அவைக்கு வந்த பாண்டவர்கள் பெரியோர்களை வணங்கித் தங்கத்தாலான ஆசனத்தில் அமர்ந்த போது சூதில் வல்ல சகுனி சொல்கிறான். "தர்மத்தின் தோன்றலான உன் வரவினை எதிர்நோக்கி இவர்களெல்லாம் காத்திருக்கிறார்கள். போரில் வென்று பல வெற்றிகளைப் பெற்றிருப்பீர்கள், இப்போது வல்லுறு சூதெனும் போர்தனில் உனது வலிமையைப் பார்ப்போம் வா!" என்றான்.

சகுனியின் வார்த்தையினைக் கேட்ட தருமன் சொல்லுவான், "ஐய! சூது எனும் இந்தச் சதிச்செயலுக்கு என்னை அழைக்கிறாய். இதில் என்ன பெருமை இருக்கிறது. அறப் பெற்றிதான் இதற்குண்டோ? வீரத்தின் பெருமை உளதோ? உன் மனத்தில் வஞ்சனை கொண்டு, எங்கள் வாழ்வினை நீ விரும்பவில்லை என்பதனை அறிவோம். இம்மை மறுமை என இருமையுங் கெடுப்பது இந்தச் சூது. இதற்கு எம்மை அழைக்கிறாய்."

பாபத்தை ஓர் சாத்திரமாகப் பயின்ற சகுனி கல கலவெனச் சிரிக்கிறான். "எதற்கு என்னென்னவோ பேசுகிறாய். உன்னை நாடாளும் மாமன்னன் என்று எண்ணி அழைத்து விட்டேன்; உன்னை மன்னரிலே தலை சிறந்தவன் என்று பலர் சொல்லக் கேட்டதனால், சில பொருள் விளையாட்டில் செலுஞ் செலவினுக்கு அஞ்சமாட்டாய் என்று நினைத்தேன். பாரத நாட்டின் அரசன் ஒரு உலோபி என்று எனக்குத் தெரியுமா? இதில் என்ன வஞ்சனை இருக்கிறது? மன்னர்கள் சூதாடுவது வழக்கம்தானே! இத்தனை பேர் மத்தியில் நட்டநடு மண்டபத்தில், அட சூரசிகாமணியே! உன்றன் சொத்தினை நான் திருடிக்கொள்வேன் என நினைக்கிறாயா? இதில் பயப்பட ஒன்றுமில்லை. விரைந்து ஆட வா! சூதாட அனைத்தும் இங்கு தயாராக உள்ளன. நிச்சயம் நீ வெல்வாய், வெற்றி உனக்கு எப்போதும் இயல்பானது தானே, நிச்சயம் நீ வெல்வாய், ஏன் பலவற்றை நினைத்து மனத்தைக் குழப்பிக் கொள்கிறாய். களியாட்டம் தொடங்கு" என்றான்.

தோலுக்காகப் பசுவைக் கொல்லும் துஷ்டன் இந்த மகாபாவி இப்படிக் கூறலும், அறநூல்கள் தீது என்று விலக்கிய அனைத்துக்கும் அஞ்சுகின்ற தருமன் மனம் நொந்து சொல்லுகிறான்:- "அரசர்களுக்கு விதித்த நூல்களில் சூதாடுதல் விஷம் போன்றது என்று கூறியிருக்கிறார்கள், ஆதலால் நான் சூதாட்டத்தை விரும்பவில்லை. செல்வத்தின் மீதுள்ள பற்றினால் நான் இதனைக் கூறவில்லை. மேலோர் சொன்ன தர்மத்தை நிலைநிறுத்தவே இப்படிக் கூறுகிறேன். என்னை வஞ்சித்து என் செல்வத்தைக் கவருவோர் எனக்கு இடையூறு செய்யவில்லை. பழமையான வேதங்களைக் கொல்வதாக நினைக்கிறேன். என் உயிர்க்கிணையான பாரத நாட்டுக்குக் கேடு தரும் கலியை அழைப்பதாக நினைக்கிறேன். உன்னைப் பணிவோடு வேண்டுகிறேன், உன் நெஞ்சிற் கொண்ட தீய எண்ணத்தை விட்டுவிடு" என்றான்.

தீ கக்கும் விழிகளோடு சகுனி, "என்னப்பா சாத்திரம் பேசுகிறாய்" என்று கேட்டான். நற்குலத்தில் பிறந்த மன்னர்கள், பிறரைத் தாழ்த்தித் தன் சுயபெருமை பேசுவரோ? பேசத்தெரிந்தவன் என்பதற்காக நம்மவர் காத்துவரும் பழைய வழக்கத்தை மறந்தனையோ? மன்னர்களைப் போட்டிக்கு அழைத்தால் மறுப்பது உண்டோ? நன்கு தேர்ந்தவன் வெற்றி பெறுவான். இளைத்தவன் தோற்றிடுவான். இதில் ஏதும் சூது என்று இகழ்ந்திடுவாரோ? இப்படி வெட்கமில்லாமல் சாக்கு போக்கு சொல்ல வேண்டாம். இவ்வளவு மன்னர்கள் உள்ள சபையில் உன்னைச் சூதாட அழைத்து விட்டேன். வந்து ஆட சம்மதம் என்றால் சொல், மனத்தில் துணிவு இல்லை என்றால் அதனையும் சொல்லிவிடு" என்றான்.

வலிமையான விதியை எண்ணினான் தருமன். இந்தக் கேட்டைத் தவிர்க்க முடியாதோ? கேடுகெட்ட சகுனி சொன்னவை தருமன் நெஞ்சை வேதனைப் படுத்தியது. அந்த நாள் முதலாக இந்தச் சூதின் காரணமாக மக்கள் எத்தனை துன்பங்களை அனுபவித்தனர். எப்போதோ நடந்தது என்பதற்காக மூடர்களே! பொய்யை மெய் எனச் சாதிக்கலாமா? முன்பு என்று சொல்லும்போது அதற்கு ஏதேனும் கால வரையறை உண்டா? முன்னர் வாழ்ந்தவர்களெல்லாம் முனிவர்களா? நீங்கள் பிறக்கும் முன்பாக பாரில் மூடர்களே வாழ்ந்ததில்லையா? இந்த பூமி தோன்றிய காலந்தொட்டு இன்று வரையிலும் பற்பல கோடி மழைத்துளிகள் போல வாழ்ந்த மக்களுக்குள்ளேயும் நீங்கள் பிறப்பதற்கு முன்பும் மடமையும், நீசத்தன்மையும் இருக்கத்தானே செய்தன? பொய் ஒழுக்கத்தை அறம் என்று ஏற்றுக் கொண்டும், பொய்மையைச் சாத்திர மென்று ஏற்றுக் கொண்டும் ஐயகோ! இந்த பாரத நாட்டில் அறிவில்லாதவர்களால், வருத்தமுற்று அழிந்து போன அறிவுடை யோர் பல கோடி. பற்பல அறநூல்களைப் பயின்றவன் என்றபோதும், உண்மை உணர்ந்தவர்களில் உயர்ந்தவன் என்றபோதும், விதியின் வசத்தால் தருமனும் சகுனியின் சூழ்ச்சிக்குப் பலியானான். புத்தியைக் காட்டிலும் விதி வலியதன்றோ? இந்த வையத்தில் விதியைக் காட்டிலும் வலிமை பொருந்தியது ஏதேனும் உண்டோ? நதியிலுள்ள ஓர் பள்ளத்தில் நாலாபக்கத்திலிருந்தும் அழுக்குப் படிவது போல செய்யும் கர்மப் பயன் நம்மைச் சேர்வதும் உண்டல்லவா? பொய்மைச் சூதிற்கு தருமன் மனம் இணங்கி விட்டான்.

அங்கு தாயம் உருட்டலானார்கள். சகுனி ஆர்ப்பரித்துச் சிரித்தான். நல்ல பண்புகளுள்ள விதுரனைப் போன்ற சான்றோர்கள் எல்லாம் வாயை மூடிக் கொண்டனர். நடக்கும் சதியைக் கண்டு மதிமயங்கிப் போயினர். அந்த வேளையில் ஐவருக்கு அதிபன் தருமன் சொல்லுகின்றான்:- "சகுனி! பந்தயங்கள் சொல். பரபரக்காதே; அளவற்ற பல செல்வங்களுக்கு உரிமைபடைத்த அரசனாகிய என்னோடு சூதாடுவதற்கு நீ வந்துவிட்டாய். இங்கு பந்தயம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது" என்றான்.

இந்த வார்த்தையைக் கேட்ட துரியோதனன் எழுந்து சொல்கிறான்:- "அருமையான செல்வம் என்னிடம் அளவில்லாமல் இருக்கிறது. சூதில் நீ ஒரு மடங்கு வைத்தால் எதிரே நான் ஒன்பது மடங்காக வைப்பேன். வீண் பெருமை பேசாதே! மேலே நடக்கட்டும்" என்றான்.

 "சூதில் ஒருவன் ஆட, வேறொருவன் பணயம் வைப்பதோ? இது என்ன தருமம், உன் பேச்சு அதர்மம் இல்லையா?"

 "மாமன் சூதாடுவதற்கு மருமகன் பணயம் வைக்கக்கூடாதோ? இதிலே என்ன குற்றம் இருக்கிறது. பொழுது போவதற்காக இந்தச் சூதாட்டத்தை நடத்துகின்றோம். இதற்கு ஏன் இப்படி மூக்காலழுகின்றாய்?" என்று அங்க தேசத்தரசன் சொன்னான்.

சூதாட்டம் தொடங்கியது. தருமன் ஒரு மணிமாலையைப் பணயமாக வைத்தான், மகிழ்ச்சி யடைந்த பகைவன் கன தனங்களை வைத்தான், கண் இமைக்கும் நேரத்திற்குள் அதனை மாமன் வென்று தீர்த்து விட்டான்.

பழியில்லாத தருமன் பின்னர் ஆயிரம் குடம் பொன்னை வைத்தான், அதனையும் சகுனி வென்றான். பொன்னாலான தேர் ஒன்றை வைத்தான் தருமன், அங்கே தாயமுருட்டி சகுனி அதனை வென்றுவிட்டான். பாண்டவர்களிடம் சேவகம் செய்யும் ஆயிரக்கணக்கான அழகிய பெண்டிர், அவர்களைச் சூதில் வைத்திழந்தான் தருமன். வரிசையாக ஒவ்வொன்றாக இழந்து கொண்டே வந்தான் தருமன். நீருண்ட மேகம் போல ஆயிரக்கணக்கான கருத்த வாரணங்கள், அவை அனைத்தையும் இழந்தான். வெற்றிகளைக் குவித்து பெருமை சேர்த்த படைகளை வைத்து இழந்தான். தேர்களை வைத்தான், தேர்ப்பாகர்களை வைத்தான், எண்ணற்ற குதிரைகள் இவைகளையெல்லாம் வைத்து இழந்து விட்டான். பொற்கட்டிகள் நான்கு கோடி வைத்தான், கண் இழப்பவன் போல அவை அத்தனையும் இழந்தான். மாடுகளை மந்தை மந்தையாக வைத்து இழந்தான், ஆடுகளை இழந்தான், ஆட்களை வைத்து இழந்தான்,

இவற்றையெல்லாம் கண்டு பூரித்துப் போன சகுனி சொல்வான், "தருமா இவையெல்லாம் இழந்தமைக்காக வருந்தாதே, இன்னும் உன்னுடைய நாடு இருக்கிறது. அதை இழக்க வில்லையே. வைத்து ஆடு. நம்பிக்கைத் தளராதே" என்றான்.

ஐயகோ! இதை என்னவென்று சொல்லுவது! ஒரு அரசன் செய்யக்கூடிய காரியமா இது? சூதாட்டத்தில் ஒரு நாட்டை வென்று அரசு புரிவதோ? இதென்ன கொடுமை! உலகம் இதனைத் தாங்குமா? வானம்தான் பொறுத்துக் கொள்ளூமா? புத்தியுள்ள மக்களா நாம்? தூ! என்று எள்ளி விதுரன் பேசுகிறான். "பாண்டவர்கள் உங்கள் தீச்செயலைப் பொறுத்துக் கொண்டாலும், துளசிமாலையணிந்த அந்தக் கண்ணனும் பாஞ்சாலத்து அரசன் துருபதனும் கடுங்கோபம் கொண்டு நம்முடைய வம்சத்தையே பூண்டோடு அழித்துவிடமாட்டார்களா? இங்கே அமர்ந்திருக்கக்கூடிய குரு குலத்து மன்னர்களுக்கெல்லாம் நான் ஒன்று சொல்லிக் கொள்வேன். மனதில் குறித்துக் கொள்ளுங்கள். இதனால் விளையப்போகும் போரில் மடிந்து போய் நரகத்தில் கிடந்து வருந்தும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள். குருகுலம் முழுவதும் அழித்திடவன்றோ வஞ்சகன் துரியோதனனை கெட்ட விதி நம்மிடையே வைத்திருக்கிறான். இந்த பூமியில் அவன் பிறந்தவுடனே கிழநரி போலவல்லவா அலறி ஊளையிட்டான். அதனைக் கேட்ட நிமித்திகர்கள் இந்தக் குழந்தை பிறந்ததனால் குலத்தில் பெரும் கலகமொன்று ஏற்படப்போகிறது பாருங்கள் என்று சொன்னதைக் கேட்டோமல்லவா?

விதுரன் திருதராஷ்டிரனை நோக்கி, "சூதாட்டத்தில் உன் மகன் வெற்றி பெறுவதை சொர்க்க போகத்தையே பெற்றவன் போல, பேதையாகிய நீ முகம் மலர்ந்து ஆசை மிகுதியோடு உட்கார்ந்திருக்கிறாய். மேலே சென்று மலையுச்சியில் இருக்கும் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டு வேடனொருவன் கால் நழுவிக் கீழே விழுந்து மாண்டுபோகக்கூடிய பெரிய சரிவு அங்கேயிருப்பதைக் கவனிக்காமலிருப்பதைப் போல உனக்கு ஏற்படப்போகும் அபாயத்தை எண்ணாமலிருக்கிறாய். இங்கு நடைபெறும் சூதில் உன் புத்தியும் கள்ளால் மயங்குவது போல மயக்கமடைந்து வருவதைப் பார். குலம் முழுதும் துரியோதனனுக்காக அழிந்து போகலாமா? அன்புகொண்ட இந்த பாண்டவர்களைப் பாதகச் செயலால் அழிக்க முற்பட்டிருக்கிறாய். நீ கற்ற கல்வியும் கேள்வியும் மண்ணாகிவிட்டது; அத்தனையும் கடலில் கரைத்தப் பெருங்காயம் போல ஆயிற்று. வீட்டிற்குள் நரியை, விஷப்பாம்பை பிள்ளையாக வளர்த்து விட்டோம். நாட்டில் உன் புகழ் ஓங்கிடுமாறு இந்த நரியை விரட்டிவிட்டுப் புலிகளைக் கொள்வாய். மோட்டுக் கோட்டானை, காக்கையை விரட்டிவிட்டு பலம்வாய்ந்த மயில்களைக் கொள்வாய். விளையப்போகும் கேட்டினைக் கண்டு மகிழ்ந்து போவாயோ? உன் காதுகள் கேட்கும் சக்தியை இழந்துவிட்டனவோ?" "சாகப்போகிற வயதில் ஏன் அண்ணே உன் தம்பியின் மக்களுக்குரித்தான சொத்துக்களுக்கு ஆசைப்படுகிறாய்? அவர்கள் உன்னை நம்பித்தானே வந்திருக்கிறார்கள். உன்னைத்தானே தலைவன் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நீ விரும்பினால் அத்தனைச் சொத்துக்களையும் அவர்கள் உனக்குத் தானமாகத் தந்திடுவார்களே. தீயினையொத்த நரகத்தில் ஆழ்த்தக்கூடிய கொடிய செய்கையை ஏன் தொடர்ந்து நடத்த அனுமதித்திருக்கிறாய்?"

"குருகுலத்து அரசன் சபையில் ஆற்றல்மிக்க துரோணர், கிருபர், பெரும்புகழ் வாய்ந்த அந்த கங்கையின் மைந்தன் பீஷ்மர், பேதை நானும் மதிப்பிழந்து போக, கோணல் புத்தி சகுனி மட்டும் சொல்லும் மந்திரம் செல்லுபடியாகிறதே. அருகில் வைத்துக்கொள்ள தகுதியுள்ளவனா அவன்? அவனை வெளியேற்று அண்ணே! தர்ம நெறி தவறியபின் வாழ்வது இன்பம் என்று மட்டும் நினையாதே. புத்தி இழந்த சகுனியின் சூதால் புண்ணியர்களான பாண்டவர்களை எதிரிகளாக்கி, நீ ஒரு கீழ்மையானவன், பாதகன் என்று உலகத்தார் ஏசுவதைக் கேட்டுக்கொண்டு அரசாளக்கூடிய வாழ்வை விரும்பிடலாமோ? சூதாட்டத்தை நிறுத்து; நீ வாழ்க!" என்றான் விதுரன்.

அறிவு சான்ற விதுரன் பேசியதை அரவக்கொடியுடைய துரியோதனன் எரியும் நெஞ்சுடன். கேட்டான். மேலோர் சொல்லும் அறவுரைகளெல்லாம் நீசர்கள் ஏற்றுக்கொள்வதுண்டோ? கண்கள் இரண்டிலும் தீப்பொரி பறக்க புருவங்கள் துடிக்க கோபம் தலைக்கேற, மதி மழுங்கிப் போய் அவன் சொல்லுகிறான், "நன்றி கெட்ட விதுரா! சிறிதும் நாணமற்ற விதுரா! தின்ற உப்பினுக்கே நாசம் தேடுகின்ற விதுரா! அன்று தொடங்கி நீ எங்கள் அழிவையே நாடுகின்றாய். இந்த அரசவையில் உன்னை உட்காரவைத்த என் தந்தையின் மதியை என்னவென்று சொல்வேன்?"

 "அந்தப் பாண்டவர்பால் நெஞ்சையும், எங்கள் அரண்மனைக்கு வயிற்றையும் வைத்துக் கொள்ளும்படி அன்றே தெய்வம் உனக்கு வகுத்துவிட்டது போலும்? உண்மையைச் சொல்லுபவன் போலும், பொதுவான விதிகளை உணர்ந்தவன் போலும் அந்தப் பாண்டவர் பக்கம் நின்றுகொண்டு எங்கள் அழிவுக்கு வழிவகுக்கிறாய். மன்னர்கள் சூழ்ந்த இந்த சபையில் எங்களுடைய எதிரிகளோடு சூதாட்டத்தில் முறையாகப் பணயம் வைத்து வெல்லுகின்றோம். இதில் என்ன குற்றத்தைக் கண்டாய்? யாரிடம் வந்து தர்மத்தைப் பற்றிப் பேசுகிறாய்? யார் வீட்டிலாவது கன்னம் வைத்துத் திருடுகிறோமா? அல்லது பற்களைக் காட்டி கெஞ்சி ஏய்க்கிறோமா? பொய்களைப் பேசியே வாழ்பவர்களும், உதட்டாற் புகழுரைகளைப் பேசி வாழ்பவர்களும் இந்த பூமியில் இருக்கிறார்கள். அவர் தம் வழியில் வந்ததுண்டோ? செய்யக்கூடாதவற்றைச் செய்பவர்களை நல்வழிப்படுத்த நீ முயன்றால், அறிஞர்களுக்கு அது இழுக்கு அல்லவா? உண்மையான அன்பு இல்லாத பெண்ணொருவளுக்கு ஒருவன் ஆயிரம் நன்மைகள் செய்தாலும், அவள் தருணம் கிட்டியபோது முன்பின் எண்ணாமல் அவனை விட்டு விலகிவிடுவாள். வீணான உபதேசம் தேவையில்லை; எங்கள் பொறுமையைச் சோதிக்காதே. உனக்கு எங்கே விருப்பமோ அங்கேயே போய்விடு" என்றான் துரியோதனன்.

நாலாபுறத்திலுமிருந்தும் வந்துள்ள மன்னர்கள் நிறைந்த சபையில் தன்னைக் கொல்வதைப் போன்ற சுடுசொற்களால் சாடுவதை அணுவளவும் பொருட்படுத்தாமல் விதுரன் சொல்லுகின்றான், "சென்றாலும், இருந்தாலும் இனி என்னடா? செய்யும் காரியத்தின் நெறியறியாத சிறியன் நீ! உன்னை அழிந்துபோகாதபடி காக்க முயன்று பார்த்தேன். பொல்லாத விதியிடம் நான் தோற்றுவிட்டேன். விஷம் தோய்ந்த மனத்தை உடையவர்கள் உனக்கு நன்மை செய்ய மாட்டார்கள் என்று கருதியே நானும் உனக்கு நல்வழி காட்ட முயன்றேன். நெடுமரம் போல் வளர்ந்து விட்ட உனக்கு யாரும் நல்லவைகளைக் கூறியதில்லை போலும்."

"தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழி காட்டுவோர் மொழிகளைக் கேட்காத நரபதியே! உன் அரசவையில் கூடியிருக்கிற மன்னர்களும், அமைச்சர்களும், நெறிமுறை காட்டிடும் பார்ப்பார் இவர்கள் உன் அவையில் இருப்பது சிறிதும் தகாது கண்டாய். பொற்கச்சணிந்த வேசைகளும், கேடுகெட்ட வேலைகளைச் செய்யும் அடிமைகளும் மற்றும் குலம்கெட்ட நீசர்கள், பைத்தியக்காரர்கள், இவர்களே உனக்குரிய அமைச்சர்களாக இருக்கத் தகுதியுள்ளவர்கள். போனாலும், இருந்தாலும் இனி என்னடா? உனக்காகவா நான் இவ்வளவையும் இங்கு சொன்னேன்? இந்த மன்றத்தில் நிறைந்திருக்கும் மன்னர்கள், பார்ப்பார், மதியில்லாத மன்னனும் தெரிந்து கொள்வதற்காகச் சொன்னேன். இதெல்லாம் இன்றோடு முடியக்கூடியதா? இனி நடக்கப் போவதை நானும் அறிவேன். பீஷ்மாச்சாரியாரும் அறிவார் தெரிந்துகொள்!

புலன்களை அடக்கி, ஆசைகளையெல்லாம் பொசுக்கி விட்ட யோகியான பீஷ்மரும் ஒன்றும் பேசாமல் இருக்கிறாரே! இதெல்லாம் விதியின் வழியில் நடைபெறுகிறது என்பதை நான் உணர்ந்திருந்தாலும், பேதையாகிய நான் வெள்ளை மனம் படைத்தவனாதலால், மகனே! துரியோதனா! உன் சதி வழிகளைத் தடுத்திட இவ்வளவும் பேசினேன். சரி! சரி! இங்கே பேசுவதனால் எந்தப் பயனும் இல்லை. உன் மனம் போல செய்துகொள்" என்று விதுரன் சொல்லிவிட்டு வாய்மூடித் தலை குனிந்து தன் இருக்கையில் அமர்ந்தான்.

கலியும் கவலையில்லை இனி பூமியில் நமது ஆதிக்கம்தான் என மகிழ்ந்தான். பாரதப் போர் வரப்போகிறது என்று தேவர்களும் மகிழ்ந்தார்கள்.

மீண்டும் சூது தொடங்கியது. சூதாட்டக்காய் உருட்டப்பட்டது. மனவக்கிரம் கொண்ட சகுனி இப்போது பேசுகிறான். "தருமா! சூதில் நீ அழித்ததெல்லாம் மறுபடி உன்னிடமே வந்து சேரும். மனச் சோர்வடைந்திடாதே, ஊக்கத்தோடு விளையாடு" என்றான்.

கோயிலில் பூசனைகளைச் செய்ய வேண்டிய பூசாரி அங்குள்ள சிலைகளைக் கொண்டுபோய் விற்பது போலவும், வாயில் காப்போனாக இருக்கும் காவலாளி வீட்டை சூதில் வைத்து இழப்பது போலவும், ஆயிரக்கணக்கான நீதிகளை உணர்ந்த தருமன் நாட்டைச் சூதில் வைத்து இழந்தான், சிச்சீ! கீழோர் செய்யும் கேவலமான செய்கையைச் செய்து விட்டான். நாட்டில் வாழும் மக்கள் எல்லாம் தம்மைப் போல மனிதர்கள் என்று எண்ணவில்லை. ஆட்டுமந்தை யென்று இவ்வுலகை மன்னர் எண்ணி விட்டார். எத்தனையோ நீதி நூல்கள் அவற்றையெல்லாம் உணர்ந்தவர்கள்தான் என்றாலும் நாட்டை ஆளும் சட்டதிட்டங்களை மனிதர் நன்கு செய்யவில்லை. பாரபட்சம் இல்லாமல், தர்மத்துக்கெதிராகச் செயல்படாமல், வஞ்சனை இல்லாமல், பிறரைத் துயரில் வீழ்த்தாமல் ஊரை ஆளுகின்ற முறைமை உலகில் ஓர் புறத்திலும் இல்லை. ஊம்..... இவைகெளெல்லாம் சாரமற்ற வார்த்தைகள், இவற்றை இனிப் பேசி என்ன பயன்? கதையைத் தொடர்ந்து சொல்வோம்.

சகுனி சொல்கிறான், "தருமா! உன் செல்வம் முழுவதும் இழந்துவிட்டாய். தேசத்தையும், குடிமக்களையும் சூதாடி இழந்துவிட்டாய். பற்பல வளம் பொருந்திய இந்த பூமிக்கு தருமன் அதிபன் என்ற பெரும்புகழ் இனி பழைய கதையாகி விட்டது. இப்போது நான் சொல்வதை நீ கேள்! இன்னுமொரு பணயம் வைத்து நீ ஆடுவாயானால் வெல்வதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி நீ பெறும் வெற்றியினால் இதுவரை நீ இழந்த பொருள் அனைத்தையும் மீட்டு விடலாம்." "செல்வம் எல்லாவற்றையும் இழந்த பின்னர் நீயும் உன் தம்பிமார்களும் எப்படி வாழ்வீர்கள்? பொல்லாத இந்த சூதாட்டத்தினால் உன்னை பிச்சையெடுக்கும்படியாக விடுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. உனது தம்பிமார்கள் இருக்கிறார்களே, அவர்கள் சூரர்கள், வல்லவர்கள். நான் சொல்வதற்காக வருத்தப்படாதே; அவர்களைப் பணயமாக வைத்து ஆடி, இழந்ததை மீட்டுக் கொள்" என்றான் சகுனி.

இதனைக் கேட்ட தேரோட்டி மகன் கர்ணன் சிரித்தான். சபையிலிருந்தோர் கண்ணீர் சிந்தினர். இருள் நிறைந்த மனத்தினன், களவை இன்பமாக நினைப்பவன், அரவக்கொடி கொண்ட வேந்தன் துரியோதனன் உவகைமிக்கோனாய்ச் சொல்லுகிறான், "தருமன் தம்பிமார்களை வைத்து ஆடினால், பரந்து விரிந்த எங்கள் நாட்டினைப் பணயமாக வைக்கிறோம். இதில் அவன் வென்று விட்டால் முன்பு இழந்த அனைத்தையும் அவனிடமே மீண்டும் அளித்து விடுகிறோம். நம்பிக்கையோடு விளையாடு தருமா! நாட்டை இழந்த பிறகு அம்புபோல விழிபடைத்தவள், உங்கள் ஐவருக்கும் உரியவள் உன்னை இகழமாட்டாளா? அந்த மாடுமேய்க்கும் கண்ணன் தான் பேசுவானோ? உன் கவலைகளைத் தீர்த்து வைக்கிறோம் சூதாட்டம் தொடரட்டும்" என்றான்.

 இவ்வளவான பிறகும் தம்பிமார்கள் வாய் திறக்கவில்லை. நெஞ்சம் துவண்டுபோய் தலை குனிந்து உட்கார்ந்திருந்தனர். பொந்திலிருக்கும் நாகம் போல பீமன் மூச்சு விட்டான். காமன் போல் அழகுள்ள பார்த்தன் முகத்தில் களை இழந்து விட்டான். ஒழுக்கமிக்க நகுலன் ஐயோ! நினைவிழந்து விட்டான். முக்காலமும் உணர்ந்த சகாதேவன் எதுவும் நடக்காதது போல அமைதியாக இருந்தான். கங்கை மைந்தன் பீஷ்மன் கனல்போல துடிக்கும் நெஞ்சத்தோடு இருந்தான். பொங்கி வரும் சினத்தீயால் கூடியிருந்த மன்னர்கள் வெப்ப மூச்சு விட்டார். அங்கங்கள் நொந்து விதுரன் சோர்ந்து போனான். சிங்கங்கள் ஐந்தை நாய்கள் சேர்ந்து கொல்லும் காட்சி கண்டு அனைவரும் இவ்வாறாயினர்.

எப்போதும் பிரமத்தில் சிந்தை செலுத்தி உலகம் ஓர் விளையாட்டு என்று எண்ணி வாழ்கின்ற ஞானி சகாதேவனை சூதில் பணயம் என்று வைத்தான் தருமன். பகடை உருட்டப்பட்டது; அங்கு சகுனி வெற்றி பெற்றான். நகுலனையும் சூதில் வைத்து இழந்தான் அப்போதுதான் தருமனுடைய புத்தியில் சிறுபொறி போன்றதொரு எண்ணம் தோன்றியது. என்ன கேவலமான செய்கை செய்து விட்டோம் என்று.

அவ்வெண்ணம் தோன்றிய அடுத்த நொடி சகுனி சொல்கிறான், "ஐய! இவர்கள் இருவரும் வேறொரு தாயின் வயிற்றில் பிறந்தவர் என்றுதானே இவர்களைச் சூதில் பணயம் வைத்திழந்தாய்? பலம்கொண்ட பீமனும், பார்த்தனும் குந்தியின் வயிற்றில் பிறந்தவர் உன்னைவிட கண்ணியமிக்கவர் என்றுதானே இவர்களைப் பணயம் வைக்கவில்லை" என்று புண்ணியமிக்கத் தருமனை அந்தப் புல்லன் கேட்டான்.

தருமனுக்குச் சுள்ளென்று கோபம் வந்தது. அவன் சொல்லுகிறான், "அட! சூதில் அரசை இழந்துவிட்டாலும், எங்களில் ஒற்றுமை நீங்கிவிடவில்லை. உயிராலும், உள்ளத்தாலும் நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். இவர்களுக்குள் மித்திர பேதம் செய்து பிரித்துவிடலாம் என்று பாதக எண்ணம் கொண்டிருக்கிறாய்."

"இதோ! வில்வித்தையில் நிகரற்றவன், ஏழுலகங்களுக்கும் ஈடானவன், கண்ணனுக்கு ஆருயிர்த் தோழன், எங்கள் கண்களைப் போன்ற இனியவன், வண்ணமும், திண்மையும், சோதியும் பெற்று வானத்து அமரரைப் போன்றவன், எண்ணரும் நற்குணங்கள் சான்றவன், புகழ் ஏறும் விஜயனைப் பணயமாக வைக்கிறேன். உன் பொய்மைக் காயை உருட்டுவாய்!" என்று விம்மலோடு கூறினான் தருமன்.

மாயமே உருவான சகுனி மகிழ்ச்சியோடு கெட்ட பகடையை உருட்டினான், அவன் கூறியபடியே தாயம் விழுந்தது, சகுனியும் வென்றான். வெறும் ஈயத்தைப் பொன்னென்று காட்டுகின்றவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்களே. சகுனி கொக்கரித்து ஆர்த்தெழுந்தாடினான்.

அவன் சொல்லுகின்றான், "எட்டுத் திக்குகளையும் வென்ற பார்த்தனை வென்று தீர்த்துவிட்டேன், இனி பீமனைப் பணயமாகக் கூறு" என்றான்.

நெஞ்சம் நிரம்பிய கோபத்தால் நீதியை மறந்த தருமன், "ஐவர் தமக்கோர் தலைவனை, எங்கள் ஆட்சிக்கு வேர் போன்ற வலியனை, ஒரு தெய்வமே எதிர் நின்று எதிர்த்தாலும் சீறியடிக்கும் திறம் படைத்தவனை, நெடிய தும்பிக்கைகளையுடைய யானை பலவற்றின் பலத்தைக் காட்டக்கூடிய பெரும் புகழ் பீமனை உங்கள் பொய்வளர் சூதினில் பணயமாக வைக்கிறேன்! வென்று போ" என்று கோபத்தோடு உரைத்தான்.

அந்தச் சூதில் பீமனைத் தோற்றான். அந்தத் தீயவர்கள் வெல்வதைக் கண்ட துரியோதனாதியர் போர்க்களத்தில் ஒரு யானை அடிபட்டு வீழ்வதைக் கண்டு பல பூதங்கள், நாய், நரி, காகங்கள், மாமிசம் விரும்பும் கழுகுகள் இவையெலாம் உள்ளம் களிகொண்டு மகிழ்தல்போல் நின்று தங்கள் மார்பிலும் தோளிலுங் கொட்டி மகிழ்ந்தார். மனம் களிகொண்டு குதித்தாடினார்.

கூடியிருந்த மன்னர்கள் தங்களை மன்னர்கள் என்பது மறந்து போய் திருடர்களைப் போல் மகிழ்ந்தனர். சின்ன மதிபடைத்த சகுனி சிரிப்போடு, "இன்னும் வேறு பந்தயம் வை" என்றான். தருமன் துக்கத்தால் தன்னை மறந்திருந்ததால், தன்னையே பணயமாக வைத்தான். பிறகு முந்தைய கதையைப் போலத்தான், அந்த மோசச் சகுனிக்கு வெற்றிதான்.

துரியோதனன் பொங்கி எழுந்து பூதலத்து மன்னர்களுக்குச் சொல்கிறான், "பாண்டவர் ஒளி மங்கி அழிந்தனர். இந்தப் புவி மண்டலம் இனி நம்முடையது. இவர்களுடைய அளவற்ற செல்வம் இனி நம்மைச் சார்ந்தது. வாழ்த்துங்கள் மன்னர்களே!" என்று சொல்லி தம்பியை அழைத்து "இந்த நல்ல செய்தியை பறையறைந்து மாநிலம் முழுதும் அறிவிப்பாயடா" என்றான்.

அதுகேட்டு சகுனி, "வெந்த புண்ணில் வேலை நுழைப்பது போல் உன்னைப் போன்றவர்கள் செய்யலாமா? கண்ணில்லாத உனது தந்தை இவர்களை மிகவும் நேசத்தோடு எண்ணியிருப்பதை நீ அறிவாயல்லவா? இவர்களெல்லாம் யார்? உனது சகோதரர்களல்லவா? மகிழ்ச்சிக்காகத் தொடங்கிய சூதாட்டமல்லவா இது, இதில் இவர்களை வெட்கமடைய வைப்பது நியாயமா? இன்னும் பணயம் வைத்து ஆடுவோம். இப்போதுகூட இவர்கள் வெற்றி பெறலாம் அல்லவா? பழையபடி பொன்னும் குடிமக்களும் தேசமும் திரும்பப்பெற்று பெருமையோடு வாழ்வதற்கு இடமிருக்கிறதே.

ஒன்று செய்யலாம். ஒளிபொருந்தியவளும் அமுதம் போன்றவளுமான இவர்களது தேவியை வைத்திட்டால், அவள் மிகுந்த அதிர்ஷ்டமுடையவள் அல்லவா, அதனால் இவர் தோற்றது அனைத்தையும் மீட்டலாமே." இப்படி அந்த மாமன் உரைக்கவும், மனம் மகிழ்ச்சியடைந்த துரியோதனன்,"சரி சரி, நல்லது நல்லது" என்றான்.

நாய் ஒன்று தேன் கலசம் என்றெண்ணிக்கொண்டு வளைந்த வெற்று சட்டிக்குள் நாக்கைவிட்டுத் துழாவி இன்புறுதல் போல் மகிழ்ச்சியடைந்து ஒன்றும் பேசாமலிருந்து விட்டான். உலகத்து தர்மங்களெல்லாம் அழிந்து போயின. பாவிகள் நிறைந்த சபையில் புகழ்ப் பாஞ்சால நாட்டின் தவப்பயனும், ஆவியினியவளும், உயிர்பெற்று உலாவும் அமுதம் போன்றவளும், ஓவியம் போன்ற அழகுடையவளும், அருள் ஒளியைப் போன்றவளும், புவிக்கு லட்சுமியும், எங்கு தேடினும் கிடைத்தற்கரிய திரவியம் போன்றவளும், உலகில் நடைபயிலும் தெய்விக மலர்க்கொடி போன்றவளும், மின்னல்போன்ற வடிவுடையவளும், பேரழகியுமான இன்பவனம் போன்ற திரெளபதியைச் சூதில் பணயமென்று கொடியோர் நிறைந்த அவைக்களத்தில் தர்மத்தின் நாயகன் நிச்சயித்தான். புனிதமான வேள்விக்குரிய பொருட்களை புலை நாய்கள் தின்றிட வைத்திடல் போல், பொன்னாலான உத்தரங்களுள்ள மாளிகை கட்டி பேய்களை அதில் குடியமர்த்துவது போல், மனிதனை விற்றுப் பொன் வாங்கி அதிலோர் அழகிய ஆபரணம் செய்து அதனை ஆங்கோர் ஆந்தைக்குப் பூட்டி அழகு பார்ப்பது போல், கேட்பதற்கு ஆளில்லாமல் உயிர்த் தேவியைக் கீழ் மக்கட்கு அடிமையாக்கினான் தருமன்.

செருப்பு தைப்பதற்குத் தோல் வேண்டுமென்று ஒரு செல்லக் குழந்தையைக் கொல்வார்களோ? ஆசைப்பட்டு விளையாடும் இந்தக் கேவலமான சூதாட்டத்தில் பணயப்பொருளா பாஞ்சாலி? தருமன் பாஞ்சாலியைப் பணயம் என்றவுடன் கெட்ட மாமனும் இரு பகடையென்று உருட்டினான். பொய்மைக் காய்களும் இரு பகடைகள் விழுந்தன. கூடியிருந்த தீயவர் கூட்டம் எழுந்தாடியது. திக்குக்கள் எல்லாம் குலுங்கின. தக்குத் தக்கென்றே அவர்கள் தோளினைத் தட்டிக் குதித்தாடுகின்றார். வேண்டும் இந்த தருமனுக்கு என்று சொல்லி ஓ ஓ என்று கூச்சலிட்டார். கக் கக் கென்றே நகைத்திடுவார். ஓடிவந்து துரியோதனா கட்டிக்கொள் எமை யென்பார். சகுனி மாமனைத் தூக்கிக்கொள் என்பார். அந்தத் தீய சகுனிமேல் மாலைகளை வீசுவார். செல்வங்களை மட்டுமல்ல, நாட்டையும் காமத் திரவியமாம் இந்தப் பெண்ணையும் நம் கைவசமாகச் செய்தான், மாமன் ஓர் தெய்வம் என்பார். துரியோதனன் வாழ்க என்று சொல்லிக் கூத்தாடுவார்.

துரியோதனன் எழுந்தான், மாமன் சகுனியைத் தன் மார்புறக் கட்டித் தழுவினான். "மாமனே! என் துயர் தீர்த்தாயடா, எனக்கு ஏற்பட்ட இழிவைப் போக்கிவிட்டாய். அன்று என்னைப் பார்த்து நகைத்தாளடா மாமனே, அவளை எனக்குரிமையாக்கி விட்டாய். இதை என்றும் மறவேனடா மாமனே! நான் உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன். ஆசை தணித்தாயடா, மாமனே, என் உயிரைக் காத்தாயடா! உனக்கு பூசைகள் செய்வோம், பொங்கலிட்டு வழிபடுவோம். நமது நெடுநாட்பகை நாசமடைந்ததடா, நாம் இனி வாழ்ந்தோமடா! எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை, உயிர் மாமனே, எனக்குப் பேரின்பம் கூட்டிவிட்டாய்" என்று பல சொல்லிவிட்டு துரியோதனன் எண்ணி யெண்ணிக் குதிப்பான். குன்று ஒன்று எழுந்து குதிப்பதுபோல் அவன் கைகொட்டிக் குதித்து ஆடுவான்.

அந்த சபை குழப்பமடைந்து அங்கிருந்தோர் யாவரும் வகை தொகை யொன்றுமின்றி அன்று நடந்துகொண்டதெல்லாம், என்றன் பாட்டினில் ஆக்குதல் எளிதாகுமோ என்கிறார் பாரதி.

திரெளபதியை மன்றுக்கு அழைத்து வர துரியோதனன் இட்ட கட்டளையினால் பூமியில் ஏற்பட்ட அதர்மக் குழப்பத்தை மகாகவி இவ்வாறு வர்ணிக்கிறார். தர்மம் அழிந்து போய், சத்தியமும் பொய்யாகி, தவங்களனைத்தும் பெயர் கெட்டு மண்ணாகி, வானத்துத் தேவர் வயிற்றிலே தீப் பாய்ந்ததுபோலாக, மோன முனிவர்கள் முறை தவறி என்ன செய்கிறோமென்று அறியாமல் மதி மயங்க, வேதங்கள் பொருளை இழந்து வெற்றுரையாகி விட, நாதங் குலைந்து நடுமை யின்றிப் பாழாக, கந்தர்வ ரெல்லாம் களை யிழக்கச் சித்தர் முதல் அந்தரத்து வாழ்வோர் அனைவரும் பித்துற, பிரம்மன் நாவடைத்துப் போக, சரஸ்வதி தேவிக்கு புத்தி மயங்கிட, வான்முகில் போன்ற கருநிறத்துத் திருமால் யோகநித்திரை கலைந்து ஆழ்ந்த துயிலெய்திவிட, செல்வத்தின் அதிபதியாம் ஸ்ரீதேவி முகத்தின் செம்மை நீங்கிக் கருமையாக, மகாதேவன் யோகம் மதிமயக்கமாகி விட, சூரியனாந் தெய்வத்தின் முகத்தே யிருட் படர இப்படியெல்லாம் குழப்பம் ஏற்பட்டதாம்.

மூடன், உள்ளம் கருத்தவன், வீரமிலா கோழை துரியோதனனும் சுறுக்கெனத் திரும்பி விதுரனைப் பார்த்துப் பேசுகிறான். "போ விதுரா! நீ என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்? வளைந்த நெற்றியும் மிகுந்த அழகும் உடைய, முன்னே பாஞ்சாலனின் மகளாகப் பிறந்தவளும், இன்று சூதில் நாம் வென்றெடுத்த விலைமகளிடம் சென்று நடந்த விவரங்களையெல்லாம் சொல்லி நன்கு உணர்த்தி, ராஜ சபையிலிருக்கும் உன் மைத்துனர்களின் தலைவன் தன் வீட்டில் ஏவல் செய்வதற்கு உன்னை அழைக்கிறான் என்று சொல்லி அவளை இங்கு கொணர்வாய்" என்றான்.

துரியோதனன் இங்ஙனம் சுடுசொற்கள் கூறியதைக் கேட்ட பெரியோன் விதுரன் பெரிதும் சினங்கொண்டு, "மூடனே, வரப்போகும் கேட்டை அறியாமல் சொல்லக்கூடாத வார்த்தைகளைக் கீழ்மையினால் சொல்லிவிட்டாய். புள்ளிச் சிறுமான் புலிமீது பாய்வது போல், சிறிய தவளை பெரிய பாம்பிடம் மோதுவதுபோல், பாண்டவர்களின் சினமெனும் நெருப்பைத் தூண்டுகிறாய். தெய்வத் தவத்தியைச் சீர்குலையப் பேசுகிறாய், உன் நன்மைக்காக நீதியெலாம் சொல்லுகிறேன். என் அறிவுரைகள் வேறு யாருக்காகவும் இல்லையடா! பாண்டவர்கள் நாளை இதற்காகப் பழி தீர்த்திடுவார், மாண்டுபோய் தரைமீது, மகனே, நீ கிடப்பாய். தானே தனக்கு அழிவைத் தேடிக்கொள்ளும் கொடுமையை என்னவென்பேனடா? நெஞ்சம் பதறப் பேசுதல் நேர்மை என நினைக்கிறாயா? நீ சொல்லும் கொடிய சொற்கள் உயிர்நாடியில் பாய்வதன்றோ? கெட்டுப்போனவர் வாயில் கொடிய வார்த்தைகள் எளிதாக வந்துவிடும், ஆனால் அது பாதிக்கப்பட்டோர் நெஞ்சங்களைவிட்டு நெடுநாள் அகலாது. நொந்துபோனவர் மனம் சுடும்படியாகச் சொல்லும் சொல் கொடிய நரகத்தில் சேர்த்துவிடும்; கற்கும் வித்தைகளைத் தடுத்துவிடும். கவுரவர்களே! சொல்லிவிட்டேன், மறுமுறை சொல்லமாட்டேன். கீழ்மக்களுக்கு இன்பம் பூமியில் கிடைக்காது. பேராசையினால் தவறானவைகளைச் செய்கிறீர்கள். வரக்கூடாத கொடுமைகளும், பெரும் விபத்துக்களும் உங்களுக்கு வந்து சேரும். ஆகையினால், பாண்டவர்களின் பாதங்களைப் பணிந்து அவர்களிடமிருந்து பறித்துக் கொண்ட எல்லாவற்றையும் மீண்டும் அவர்களுக்கே கொடுத்துவிட்டு பணிவுடன், "ஆண்டவரே, நாங்கள் அறியாமையால் செய்த நீண்ட பழியிதனை நீர் பொறுப்பீர்" என்று சொல்லி அவர்களைத் தங்கள் வளநகருக்கே செல்ல விடுங்கள். குற்றத்தைத் தவிர்க்கக்கூடிய இந்தச் செயலை நீங்கள் செய்யாவிட்டால், மாபாரதப்போர் வரும்; நீர் அழிந்திடுவீர்!" என்று அந்தப் புண்ணியன் விதுரன் கூறினான்.

விதுரன் சொன்னவற்றைக் கேட்ட மூடன் துரியோதனன் இடி இடிப்பதுபோல் பேசலானான்: "சீச்சீ! மடையா! நீ கெடுக. எப்போதும் எம்மைச் சபித்தல் உனக்கு இயல்பாகிவிட்டது. உன் சொற்களை இப்போது எவரும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள்.

யாரடா அங்கே, தேர்ப்பாகன்! நீ போய் இரண்டு கணத்தில் பாரதர்க்கு வேந்தன் பணித்தான் என்று சொல்லி பாண்டவர் தம் தேவியைப் பார்வேந்தர் அரசவைக்கு அழைத்து வா!" என்று இயம்பினான்.

உடனே அந்தத் தேர்ப்பாகன் விரைந்து சென்று பாஞ்சாலி இருக்கும் மனைக்குச் சென்று சோகம் ததும்பும் துடித்தக் குரலுடன், "அம்மனே போற்றி, அறங்காப்பாய் தாள் போற்றி! விதியின் சதியால் யுதிஷ்டிரர் மாமன் சகுனியோடு மாயச் சூதாட்டத்தில் நாட்டை இழந்து, பொருளெலாம் இழந்து, தம்பியர்களையும் பணயம் வைத்துத் தோற்றுப் பின் தன் சுதந்திரத்தையும் இழந்து விட்டார். சூதில் பணயமென்று, தாயே! உன்னையும் வைத்தார். சொல்ல நாவு துணியவில்லை, உன்னையும் தோற்றுவிட்டார். எல்லோரும் கூடியிருக்கும் சபையில் உன்னை அழைத்து வரும்படி அரசன் எனக்குக் கட்டளையிட்டான்" என்றான்.

"யார் சொன்ன வார்த்தையடா? சூதர் சபையிலே நற்குலத்து மாதர் வருவது மரபோடா? யார் சொல்லி நீ வந்து என்னை அழைக்கிறாய்?" என்றாள் திரெளபதி.

அதற்கு அவனும், "மன்னன் துரியோதனனுடைய ஆணையால் வந்தேன்" என்றான்.

"நல்லது; நீ சென்று நடந்த விவரங்களைக் கேட்டு வா. சூதில் வல்ல சகுனியிடம் தோற்ற நாயகரிடம் தாம் என்னை முன்னே பணயம் வைத்து இழந்தாரா? தம்மையே முன்னால் இழந்த பின்னர் என்னை வைத்துத் தோற்றாரா? சென்று சபையில் இதற்கு பதிலைத் தெரிந்து வா" என்று பாஞ்சாலி கூறி, அந்த தேரோட்டி சென்ற பிறகு தன்னந்தனியளாய் தவிக்கும் மனத்தோடு, நிறம் வெளிர, மலர் விழிகள் கண்ணீர் சொரிய, மனத்தில் அச்சம் மேலோங்க, பேயைப் பார்த்த குழந்தையைப் போல வீற்றிருந்தாள்.

பிறகு அந்தத் தேர்ப்பாகன் மன்னனுடைய சபைக்குச் சென்று, "வேந்தே! ஆங்கு அந்தப் பொன்னரசி தாள் பணிந்து 'போதருவீர்' என்றிட்டேன், அதற்கு அவர் 'என்னை முதலில் வைத்திழந்த பின்பு தன்னை என் மன்னர் இழந்தாரா? மாறாகத் தம்மைத் தோற்ற பின்னர் என்னை இழந்தாரா? என்று இந்த அவையிடம் கேட்டுவருமாறு என்னை அந்த மின்னற் கொடியார் பணித்தார், வந்து விட்டேன்" என்று உரைத்தான்.

இதனைக் கேட்ட பாண்டவர்கள் நொந்து போய் ஒன்றும் பேசாதிருந்து விட்டார். மற்றும் அந்த சபையில் வீற்றிருந்த மன்னரெல்லாம் பேச்சிழந்து ஊமைகளாய் வீற்றிருந்தார். மனம் துடித்துத் துரியோதனன் கோபம் கொப்பளிக்க வெறிகொண்டு சொல்லுகிறான், "அட! சிறுபிள்ளை போல கதை சொல்லுகிறாய். என்னுடைய தன்மை உணரவில்லை போலும் நீ. அந்தக் கள்ளக் கரிய விழியாள் சொன்ன கேலி மொழிகளைக் கேட்டுக் கொண்டு வந்து சொல்லுகிறாய். அவள் இங்கு வந்து கிளி போல பேசுவதைக் கேட்க என் மனம் விரும்புகிறது. இங்கு வந்து கேட்க விரும்புவனவற்றைக் கேட்கலாம், சொல்ல வேண்டிய வார்த்தைகளைச் சொல்லலாம். இங்கு வரத் தயங்க அவள் என்ன கூண்டுப் பறவையா? ஐவருக்கும் மனைவியல்லவா, அப்படியிருக்க நாணமேன்? நான் கோபமுற்று கடுமையான செயல்களைச் செய்யுமுன் அந்த மொய் குழலாளை இங்கு அழைத்து வா. மன்னன் அழைக்கிறான் என்று சொன்ன பின்பு அதற்கு மாறாக அவள் ஒன்று சொல்வதோ? உன்னைச் சிதைத்து விடுவேனடா; ஒரு கணத்தில் அவளை இங்கே கொண்டு வா" என்றான்.

துரியோதனன் சொன்ன மொழிகளை அந்தப் பாகன் பாஞ்சாலி முன்பு போய் வணங்கிக் கூறினான். அதற்கு அவள், "தம்பி! என்னை வீணாக அழைப்பதேன்? நாயகர் தன்னைத் தோற்ற பின் என்னை பணயம் வைக்க உரிமை இல்லை. கேவலமான சூதில் விலைப்பட்டபின் என்ன சாத்திரத்தின் அடிப்படையில் என்னைத் தோற்றிட்டார்? அவர் சூதில் தோற்று அடிமைப்பட்டவர், நானோ இப்போது துருபதன் புதல்வி. நிலைமை மாறி அடிமையானவருக்கு மனைவி எனும் உரிமை அவர்க்குண்டோ? "கெளரவர் சபையிலே தர்மம் தெரிந்தவர் யாருமில்லையோ? மன்னருடைய பலம் வீழும் முன்னரே அங்கு சாத்திரங்கள் செத்துக் கிடக்குமோ? புகழ் பெற்ற ஆச்சார்யார்களும், கல்வியிற் சிறந்த மன்னரும் செல்வங்களைச் சூதில் இழப்பதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள், என் மானம் அழிவதையும் பார்த்துக் கொண்டிருப்பார்களோ? பூமியில் எல்லோருக்கும் இன்பம் துன்பம் இவை வரத்தான் செய்யும். எனில் பூமியை ஆளும் மன்னர்கள் தங்கள் பெருமையைக் கொன்று மகிழ்வரோ? அப்படி நடப்பதை அன்பும் தவமும் உடையவர்களும், அந்தணர்களும் பார்த்து மகிழ்ச்சி அடைவரோ? நான் முன்பு கேட்ட அதே கேள்வியை மீண்டுமொருமுறை அவர்களிடம் கேட்டு அதற்குத் தெளிவான பதிலை அறிந்து வா" என்றாள் அந்த மாதரசி.

இதனைக் கேட்ட அந்த ஏழைப் பாகன் என்ன செய்வான்? என்னைக் கொன்று போட்டாலும் கவலையில்லை, இவர் கேட்கும் கேள்விக்கு அவர்கள் விடை தராமல் மீண்டுமொரு முறை வந்து அழைத்துவரச் சொன்னால் நான் அதற்கு இணங்க மாட்டேன் என்று மனத்தில் உறுதி மேற்கொண்டு சபைக்குச் சென்று நடந்ததைக் கூறினான் அந்தப் பாகன். "அந்த மாதரசி மாதவிடாயிலிருக்கிறாள் என்றும் கூறினான். கெட்ட பாதகனான துரியோதனன் மனம் இளகவில்லை. நின்று கொண்டிருந்த பாண்டவர்களின் முகத்தைப் பார்த்தான். அவர்கள் உன்மத்தராய் நிற்பது கண்டான். மேலும் அந்த சபையில் இருந்தவர்களில் எவருக்கும் இவனது இந்த தீமையான எண்ணத்தைத் தடுக்க மனத்தில் வலிமையில்லாமல் இருந்தனர்.

தேர்ப்பாகனைக் கோபத்துடன் பார்த்து மீண்டும் துரியோதனன் சொல்லுகின்றான்: "மறுபடி போய் நமது கட்டளையைச் சொல்லடா! அவளை ஏழு கணத்தில் இங்கே வரும்படி செய். இல்லையேல் உன்னைச் சாகும்படி மிதித்துக் கொல்வேனடா" என்று மன்னன் சொல்லிடப் பாகனும் மன்னனின் கோபத்தை உணர்ந்து, அங்கு உட்கார்ந்திருந்தவர்களை நோக்கி, "என் மீது இப்படிச் சீறுகின்ற மன்னருக்கு நான் என்ன பிழை செய்தேன். அங்கு போய் தேவியை நூறு முறை அழைத்தாலும் அவர் இதே கேள்வியை கேட்டுத் திருப்பி அனுப்புவார். அவர் ஆறுதலடையும்படி ஒரு வார்த்தை சொல்லுங்கள், நான் போய் அழைக்கிறேன். மன்னன் சொல்லும் பணியைச் செய்யவேண்டியவன் நான், அந்தக் கோதை வராவிடில் நான் என் செய்வேன்" என்று புலம்பினான்.

தேர்ப்பாகன் சொன்னதைக் கேட்ட துரியோதனன், "பாகன் அழைத்தால் அவள் வரமாட்டாள், இந்தப் பயலும் பீமனுக்குப் பயந்து கொண்டு செய்வதறியாமல் திகைக்கிறான். இவன் பயத்தைப் பின்னர் போக்குகிறேன் என்று சொல்லி துச்சாதனனை அழைத்து, "தம்பீ! நீ இப்போதே அங்கு போ, அந்தப் பொற்கொடியோடு இங்கு வருவாய்" என்று கூறினான்.

இவ்வுரை கேட்ட துச்சாதனன் அண்ணனுடைய விருப்பத்தை மெச்சி எழுந்தான். இவனைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம். இவன் தீமை புரிவதில் அண்ணனை மிஞ்சியவன். கல்வி எள் அளவுகூட கிடையாது. கள்ளையும் பச்சையான மாமிசத்தை உண்பவன். எதிரிகள் இவனைக் கண்டு அஞ்சுவர். இவனைச் சார்ந்தவர்கள் இவனைப் பேய் என்று ஒதுங்குவார். புத்தி விவேகமில்லாதவன், புலி போல உடல்வலி கொண்டவன், அளவற்ற ஆணவத்தால் கள்ளினைக் குடிக்காமலே வெறிபிடித்தவன். தீமை வழி நிற்பவன், சிவசக்தி நெறி உணராதவன். இன்பம் வேண்டி முறையற்ற செயல் செய்பவன், என்றைக்கும் நல்லோர் இணக்கம் இல்லாதவன். தன் அண்ணனைத் தவிர தான் இந்த பூமிக்கே தலையாயவனாக நினைப்பவன். அண்ணன் எதைச் சொன்னாலும் மறுக்காமல் செய்பவன். இரக்கம் என்பதே இல்லாத பாதகன். அந்தக் காரிகை தன்னை அழைத்து வா என்று அந்த அண்ணன் உரைத்திடல் கேட்டதும், நல்லது என்று உறுமிக்கொண்டு எழுந்தான்.

பாண்டவர் தேவி பாஞ்சாலி இருந்ததோர் மணிப் பைங்கதிர் மாளிகைக்குப் போய்ச்சேர்ந்தான். அங்கு தாங்க முடியாத சோகத்தால் நிலைகுலைந்து போன நேரிழை மாதினைக் கண்டான். அவள் தீட்டு என்று ஒதுங்கினாள், இவனோ, "அடி! எங்கே போகிறாய்?" என்று கத்தினான். இவன் வீரம் செறிந்த ஆண்மகன் அல்ல என்று அவள் பயமில்லாமல் இவனை எதிர்கொண்டு சொல்லுகிறாள். "பாண்டவர்களின் தேவி நான்; துருபதனின் புதல்வி. இதனை இன்று வரை என்முன் யாரும் மறந்து நடந்துகொண்டதில்லை. தம்பி! இங்கு காவல் இல்லை என்ற தைரியத்தில் வரைமுறையின்றி பேசுகிறாய். நீ வந்த செய்தியை விரைவில் சொல்லிவிட்டு இவ்விடத்தை விட்டு நீங்கிவிடு!" என்றாள் அந்தப் பெண்கொடி.

"பாண்டவர் தேவியும் அல்லை நீ, புகழ் பாஞ்சாலன் மகளுமல்ல நீ. புவி ஆளும் என் அண்ணனுடைய அடிமை நீ. மன்னனுடைய சபையிலே நடந்த சூதாட்டத்தில் எங்கள் நேசன் சகுனியோடு சூதாடி உன்னைப் பணயமாக வைத்துத் தோற்றுவிட்டான் தருமபுத்திரன். ஆட்டத்தில் தோற்று விலைப்பட்ட தாதி நீ. உன்னை இப்போது ஆள்பவன் என் அண்ணன் துரியோதனன். மன்னர்கள் கூடியிருக்கிற சபைக்கு உன்னைக் கூட்டி வருமாறு மன்னன் சொல்ல, ஓடிவந்தேன், இதுதான் நான்வந்த காரணம். இனி ஒன்றும் பேசாமல் என்னோடு கிளம்பி வா! அந்த பேடி மகன் தேர்ப்பாகனிடம் நீ பேசிய பேச்சுக்களை நானும் கேட்க விரும்பவில்லை" என்று துச்சாதனன் சொன்னான்.

இதனைக் கேட்ட பாஞ்சாலி, "அச்சா! கேள். மாதவிலக்கென்பதால் நான் ஒற்றை ஆடையில் இருக்கிறேன். மன்னர் சபைக்கு என்னை அழைப்பது நியாயம் இல்லை. அதுமட்டுமின்றி, சகோதரனுடைய மனைவியைச் சூதில் பணயமாகக் கொண்டு ஜெயித்து அவள் ஆதரவின்றி இருக்கும்போது துன்பம் தருதல்தான் மன்னர் குலத்து மரபோ? அண்ணனிடம் என் நிலைமையைப் போய்ச் சொல். நீ போகலாம்" என்றாள்.

இதுகேட்ட துச்சாதனன் 'கக்கக்க' வென்று கனைத்துக்கொண்டு பெருமூச்சுடன் பக்கத்தில் வந்து அந்தப் பாஞ்சாலியின் கூந்தலினைக் கையினால் பற்றிக் கரகரவென இழுத்தான்.

"ஐயகோ" என்று அலறிக்கொண்டு உணர்வு மயங்கிப் பாண்டவர் தேவி பாஞ்சாலி பாதி உயிர் போனவளாய் இருக்கும்போது, அவளது நீண்ட கருங் குழலை அந்த நீசன் பற்றி இழுத்துக் கொண்டு சென்றான்.

வழி நெடுக கூட்டங்கூட்டமாய் மக்கள் சாலையெங்கும் மொய்த்தவராய், "என்ன கொடுமை இது" என்று சொல்லிப் பார்த்துக் கொண்டு நின்றனர். ஊராரின் கீழ்மை சொல்லும் தரமாமோ? வீரமிலா நாய்கள், அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். விலங்காய் மாறிப்போன இளவரசன் துச்சாதனனை மிதித்துத் தரையில் வீழ்த்திவிட்டு அந்த மாதரசியை அவளது அந்தப்புரத்தில் கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டாமா? மாறாக நெட்ட நெடு மரங்களைப் போல் நின்று கொண்டு, என்ன கொடுமையிது என்று புலம்பிக் கொண்டு நிற்கின்றனரே. இத்தகைய பெட்டைப் புலம்பல் பிறருக்கு எந்த வகையில் துணைபுரியும்?

பேரழகு உடைய பெருந்தவம் கொண்ட நாயகியைச் சீரழிய, கூந்தல் சிதையக் கவர்ந்து கொண்டு போய்க் கேடுற்ற மன்னனின் தர்மம் கெட்ட சபையில் கொண்டு போய்ச் சேர்த்தான் துச்சாதனன். அவள் அங்கு 'கோ' வென்று அலறினாள். பாஞ்சாலி விம்மி அழுதாள். 'விதியோ கணவரே! அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, என்னை வேதச் சுடர்த்தீயின் முன் விரும்பி மணம் செய்து கொண்டபின், இந்தப் பாதகர் முன்னால் சீரழியப் பார்த்துக் கொண்டிருப்பீரோ?' என்றாள்.

வில் விஜயனும், புஜவலி கொண்ட பீமனும் பார்க்க, தருமன் தலை குனிந்து நின்றான். மனம் பொருமி அவள் மேலும் சொல்லுகிறாள், "அரசன் அவையில் புகழ்பெற்ற அறிஞர்களும், வேள்வி, தவங்கள் பல புரிந்த வேதியர்களும், மேலோரும் இருக்கின்றனரே. அவர்கள் இந்த அநியாயத்தைக் கண்டு கோபம் கொள்ளவில்லையா? என்னைக் காக்கும் உரிமை படைத்த பாண்டவர்களே அடிமைப் பட்டபின்னர், அவர்களைக் குற்றம் சொல்வது நியாயமில்லை. தர்மம் மங்கிப்போன இந்த அநியாயச் சபையிலே என்னைப் பிடித்து இழுத்து வந்து ஏச்சுக்கள் பேசுகின்றாய்? உன்னை எவரும் நிறுத்தடா என்று சொல்லவில்லையே. என் செய்வேன்?" என்று ஓவென்று ஓலமிட்டு அழுதாள்.

தீப்பொறி பறக்கும் விழிகளால் பாண்டவர்களை வெந்நோக்கு நோக்கினாள். எல்லோரும் வாய்மூடி பெருமை இழந்து சிலைபோல நிற்பதைப் பார்த்து, வெறிகொண்டு துச்சாதனன் அந்த மாதரசியைப் பார்த்துப் பல தீதுரைகள் பேசி, "தாதியடி, தாதி!" என்று இழித்துரைத்தான். கர்ணன் சிரித்தான். பலே என்று சகுனி புகழ்ந்தான். சபையிலிருந்தவர்கள் .... அவர்கள் சிலைகளைப் போல் உட்கார்ந்திருந்தனர்.

அப்போது தகுதி வாய்ந்த பீஷ்மாச்சாரியார் சொல்லுகிறார்:- "பெண்ணே! யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் வைத்து உன்னைத் தோற்றுவிட்டான். இந்த மன்றத்தில் வாதாடி நீ அவன் செய்த முறை சரியல்ல என்கிறாய். சூதில் வல்லவன் சகுனி. அவனுடைய சூழ்ச்சியால் உன் மன்னவனை அவன் தோற்கடித்து விட்டான். இந்தச் சூதில் உன்னைப் பந்தயமாய் வைத்ததே தவறு என்று சொல்லுகிறாய். கோமகளே! பண்டைய காலத்து வேத முனிவர்கள் வகுத்த நீதிப்படி நீ சொல்வது சரியாக இருக்கலாம். இது ஆதிகாலத்து நிலைமை. ஆணுக்கு நிகர் பெண் என்ற நிலைமை அந்தக் காலத்தில் இருந்தது. பிந்நாளில் அந்த நிலை மாறிப் போய், இந்தக் கால நீதிநூல்களின்படி பெண்கள், ஆண்களுக்கு நிகரில்லை என்பதாயிற்று. ஒருவன் தனது மனைவியை விற்றுவிடலாம். தானமாக வேறொருவருக்குத் தந்துவிடலாம். முற்றிலும் மிருகங்களின் நிலைபோலத்தானேயன்றி வேறில்லை. தருமன் தன்னைப் பந்தயம் வைத்து இழந்த பிறகும் உன்னைத் தனக்கு அடிமையாக வைத்திருக்க நீதி உண்டு. தர்மங்களை உணராதவர்கள் இங்கு செய்தவற்றைப் பார்த்தால் கல்லும் நடுங்கும்; மிருகங்களும் வெட்கிக் கண்புதைக்கும். இங்கு நடந்தவை அநீதி என்று தெரிந்தாலும், சாத்திரம், வழக்கம், முறைமை பற்றி நீ கேட்பதனால் சொல்லுகின்றேன் உன் பக்கம் நின்று பேச முடியவில்லை. நடக்கும் தீமைகளைத் தடுக்கும் திறமும் எனக்கில்லை".  இப்படி அந்த மேலோன் சொல்லிவிட்டுத் தலை கவிழ்ந்தான்.

பாஞ்சாலி சொல்லுகிறாள்:- "மிகவும் நன்றாகத்தான் சொன்னீர்கள் ஐயா! முன்பு இலங்காபுரி இராவணன் சீதையை பாதகத்தால் கவர்ந்து சென்று ஆங்கோர் வனத்திடையே வைத்துவிட்டுப் பின் அரசவைக்குச் சாத்திரிமார்களையும் அமைச்சர்களையும் வரவழைத்து தான் இவ்வாறு சீதையைக் கவர்ந்து வந்த செய்தியைச் சொன்னபோது, அவர்கள் 'தக்கது நீர் செய்தீர்! உங்கள் செய்கை தர்மத்துக்கு ஒத்த செய்கைதான்' என்று கூறி மகிழ்ந்தனராம் சாத்திரிமார்.  

'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்'. சூதுவாதறியாத மன்னவனைச் சூதாட வற்புறுத்தியது வஞ்சனையா, நேர்மையா? முன்கூடியே திட்டமிட்டுச் செய்துமுடித்த செய்கை அல்லவா இது? புதிய மண்டபத்தை நீங்கள் கட்டியது எமது நாட்டை அபகரித்திடும் நோக்கத்தில்தான் அல்லவா? மனைவியும், பெண்களும் உடையவர்கள் இவர்கள். பெண்களோடு உடன்பிறப்பாய்ப் பிறந்தவர்கள். செய்வது பெண்பாவமல்லவா? இதனால் பெரும்பழி உங்களுக்கு வந்து சேரும். கண்திறந்து பாருங்கள்" என்று சொல்லி கையெடுத்துக் கும்பிட்டாள். அம்பு பாய்ந்து துடிக்கும் மான்போல துடிதுடித்தாள்.

 கூந்தல் தரையில் புரண்டு புழுதிபடிய அழுவது கண்டும் துச்சாதனன் இரங்கவில்லை. அணிந்த ஆடை குலைவுற்று நின்றாள். அவள் ஆவென்று அழுது துடிக்கின்றாள். வெறும் மாடுபோன்ற துச்சாதனன் அவளுடைய மைக்கூந்தலைப் பிடித்து இழுக்கின்றான்.

இந்தக் காட்சியைப் பார்த்தான் பீமன். கரைபுரண்டெழும் கோபத்தோடு எழுந்தான். மனத்தில் கோபம் துயரம் மேலெழ தருமனைப் பார்த்துச் சொல்லுகின்றான்.

அவன் சொன்ன வார்த்தைகளைக் கேளுங்கள்:- "சூதாடுவோர் வீடுகளில் வேலை செய்யும் பெண்கள் உண்டு. ஆனால் சூதாட்டத்தில் பந்தயமாக எந்தப் பெண்ணும் அங்கு போவதில்லை. என்ன நினைத்து வைத்தாய்? அண்ணே! யாரைப் பணயம் வைத்தாய்? மாதர் குலத்துக்கே மணிவிளக்கு போன்றவளை, அன்பே வாய்ந்த வடிவழகை, பூமி அரசரெல்லாம் கண்டு போற்றி வணங்குபவளை, போரில்வல்ல பாஞ்சால மன்னனின் சுடர் மகளை, அண்ணே! சூதாடி இழந்து விட்டாய். தவறு செய்துவிட்டாய், அண்ணே, தர்மம் கொன்று விட்டாய். நாம் பெற்ற வெற்றிகள் சோரத்தினால் பெற்றது அல்ல, சூதினால் பெற்றதும் அல்ல, வீரத்தினால் படைத்தோம், வெம்போரில் வெற்றி பெற்று படைத்தோம். சக்கரவர்த்தி என்று உலகம் போற்ற வாழ்ந்திருந்தோம்; பொக்கென ஓர் கணத்தே எல்லாம் போகத் தொலைத்து விட்டாய். நாட்டையெல்லாம் சூதில் வைத்து இழந்துவிட்டாய் அண்ணே! அதனை நாங்கள் பொறுத்துக் கொண்டோம். மீண்டும் எங்களையெல்லாம் அடிமை செய்தாய், அதனையும் பொறுத்துக் கொண்டோம். துருபதன் மகளை, திருஷ்டதும்னன் சகோதரியை, இரு பகடையென்றாய், ஐயோ! இவர்களுக்கு அடிமை யென்றாய். இதனைப் பொறுப்பதில்லை, தம்பீ! சகாதேவா! எரி தழல் கொண்டு வா. கதிரை வைத்திழந்த இந்த அண்ணனின் கையை எரித்திடுவோம்" என்றான் பீமன்.

இப்படி பீமன் சகாதேவனிடம் சொல்லியதைக் கேட்ட வில்விஜயன் பீமனுக்குப் பதில் சொல்கிறான். "பீமா! மனமாரச் சொன்னாயோ? என்ன வார்த்தை சொன்னாய்? எங்கு சொன்னாய்? யாவர் முன்னே? பெருமைக்குரிய துருபத ராஜனின் மகளைச் சூதுக் களியிலே இழந்தது குற்றமென்றாய்; சினம் எனும் தீ அறிவை எரித்துவிட்டதால் திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய். 'தருமத்தின் வாழ்வைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்' எனும் இயற்கை மருமத்தை நம்மாலே இந்த உலகம் கற்கும். வழி தேடி விதி இந்தச் செய்கை செய்தான். கருமத்தை மேன் மேலுங் காண்போம். இன்று கட்டப்பட்டு விட்டோம்; பொறுத்திருப்போம்; காலம் மாறும்; தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்: பீமா! இதோ பார் என்னுடைய வில் இருக்கிறது. அதன் பெயர் காண்டீபம்! இதை நினைவில் வைத்துக் கொள்" என்றான். பீமன் தர்மனை வணங்கினான்.

அப்போது துரியோதனனின் மற்றொரு தம்பியான விகர்ணன் எழுந்து பேசுகிறான். "பெண்ணரசி பாஞ்சாலி கேட்ட கேள்விக்குப் பாட்டன் பீஷ்மர் சொன்ன பேச்சை நான் ஏற்கவில்லை. பெண்களை மனத்தில் விலங்கு போல எண்ணி கணவன்மார் எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்றான் பாட்டன். பெருமைக்குரிய வேத நெறிமுறைகள் மாறி பிந்நாளில் அப்படிப்பட்ட வழிமுறைகள் வந்து நிலைத்து விட்டதாகப் பாட்டன் சொன்னான். அப்படி அவன் தவறாகச் சொன்னான். நம் முந்தைய தலைமுறையினர் பாட்டன்மார் இவர்களெல்லாம் மனைவியரை விற்றதாகச் செய்தி உண்டோ? இதுவரை அரசியரைச் சூதில் தோற்ற விந்தையை நீர் கேட்டதுண்டோ? விலை மாதர்களுக்கு விதித்தவைகளை பிற்காலத்தில் எல்லாப் பெண்களுக்குமென்று சாத்திரத்தில் புகுத்தி விட்டார். அதுவும் சொல்லளவில்தானே தவிர வழக்கத்தில் அப்படிச் செய்வதில்லை. சூதர் இல்லங்களில் கூட பணிப்பெண்களைப் பணயம் வைப்பதில்லை என்பதை அறிந்தோம். தன்னை இவன் சூதில் இழந்து அடிமையானபின் தாரம் ஏது? வீடு ஏது? அடிமையான பிறகு அவனுக்கென்று உடைமை என்று ஏதும் உண்டோ? என்று இந்தப் பெண்ணரசி பெண்ணுரிமைக்குரலில் கேட்கின்றார். மன்னர்கள் மகிழ்வெய்துதற்குச் சூதாடுகிறீர்கள் என்றாலும் மனுநீதி தவறி இங்கு நடக்கும் வலிய பாவந்தன்னை பார்த்துக்கொண்டு வாய்பேசாமல் இருப்பீரோ? தாத்தனே! இந்த நீதி சரிதானா? என்றான் விகர்ணன்.

இப்படி விகர்ணன் பேசியதைக் கேட்ட சில மன்னர்கள் எழுந்து அவன் பேச்சுக்கு ஆதரவாகக் கூச்சலிட்டனர். "சகுனி செய்யும் கொடுமை ஏற்கமுடியாது" என்றனர். ஒரு நாளும் உலகம் இந்தக் கொடுமையை மறக்காது என்றனர் சிலர். இப்படி அநியாயம் செய்தால் அழிந்து போவீர், ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டாம் என்றனர் சிலர். செவ்வானம் போல இரத்தம் பாய்ந்து போர்க்களத்தில் இந்தப் பழி தீரும் என்றனர் சிலர்.

விகர்ணன் எழுந்து பேசியதைக் கேட்ட கர்ணன் சொல்கிறான்:- "போதுமடா உன் பேச்சு, சிறியவனே, நாடாளும் மன்னர்கள் எவரும் இதில் தலையிட்டுப் பேசாமல் இருக்கும்போது நீ மட்டும் அதிகப்பிரசங்கம் செய்கிறாயே, விவேகமோ அறிவோ இல்லாதவனே! இவள் பெண் என்பதால் இவள் தூண்ட நீ பிதற்றுகின்றாய். நீபாட்டிலும் பேசிக்கொண்டே போகிறாயே! இவளை நாம் வென்றதால் பாவம் வரும் என்கிறாயே. வெட்கமோ அடக்கமோ இல்லாதவனே! கண்ணியத்தைக் காக்கத் தெரியவில்லையே. உனக்கு என்ன நீதி தெரியும்?" "மார்பில் துணிபோட்டு மறைக்கும் உரிமை அடிமைப்பட்டவர்களுக்குக் கிடையாது. இவள் சிறந்தவளுமல்ல. ஐவருக்கு மனைவியாக இருந்தவள். யாரடா அங்கே பணியாள்! இங்கே வா! பாண்டவர் மார்பில் கிடக்கும் சீலையையும் களைவாய், இந்தப் பெண்ணின் சேலையையும் களைவாய்" என்றான் கர்ணன்.

இவ்வுரை கேட்டனர் பாண்டவர். வேலையாட்கள் வந்து எடுப்பதற்கு முன்பாக, முன்பு பகைவர் கண்டு அஞ்சும் தங்கள் மார்பினை மறைத்த வஸ்திரங்களைக் களைந்தனர். பெண்மான் போன்ற கண்களையுடைய ஞானசுந்தரி, பாஞ்சாலி 'என்ன நடக்குமோ' என்றே தயங்கினாள், தன்னிரு கரங்களைக் கோத்துக் கொண்டாள்.

துச்சாதனன் எழுந்து சென்று அன்னையின் சேலையைக் கழற்றலுற்றான். 'அச்சோ தேவர்களே!' என்று அலறிக்கொண்டு விதுரன் மயங்கி தரைமேல் சாய்ந்தான். பைத்தியம்பிடித்தவன் போல் அந்தப் பேயன் துச்சாதனன் சேலையை உரிகையில், மன ஆழத்தின் ஜோதியினுள் லயித்தாள், அன்னை இவ்வுலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள். 'ஹரி, ஹரி, ஹரி' என்றாள். 'கண்ணா! அபயம் உனக்கபயம் என்றாள். யானைக்கு அருள்புரிந்து அன்று முதலையிடமிருந்து அதனைக் காத்தாய். நீல வண்ணச் சியாமளனே! அன்று காளிங்கன் தலைமீது நடனம் புரிந்தாய்! ஆதிப் பரம்பொருள் நீயே! கண்ணா! பழம்பெரும் வேதப் பொருளே! சக்கரம் கையில் ஏந்தி நின்றாய், கண்ணா! சாரங்க மெனும் வில்லினைக் கையில் உடையாய்! அக்ஷரப் பொருளாவாய்! கண்ணா! அக்கார அமுதுண்ணும் பசுங் குழந்தாய்! துக்கங்கள் அழித்திடுவாய், கண்ணா! தொண்டர் கண்ணீரைத் துடைத்திடுவாய். தக்கவர் தமைக் காப்பாய், அந்தச் சதுர்முக பிரம்மனைப் படைத்தாய். வானத்திற்குள் வானமாய், தீ, மண், நீர், காற்று என பஞ்ச பூதங்களாய் விளங்கிடுவாய். தவ முனிவர்தம் உள்ளங்களில் ஒளிர்பவனே, கானத்துப் பொய்கையிலே, தனிக் கமலமென் பூமிசை வீற்றிருக்கும் அந்தத் திருமகள் அவள் தாளிணைக் கைக்கொண்டு மகிழ்ந்திருப்பாய். ஆதியில் ஆதியப்பா! கண்ணா, அறிவினைக் கடந்த விண்ணகப் பொருளே, சோதிக்குச் சோதியப்பா, என்றன் சொல்லினைக் கேட்டு அருள் புரிவாய். வானவெளியினின் நடுவினிலே பறந்திடும் கருடனின் மேல் சோதிக்குள் ஊர்ந்திடும் கண்ணா, சுடர்ப்பொருளே, பேரருட் பொருளே, அன்று இரணியன் மகன் பிரகலாதனிடம் "கம்பத்தில் உள்ளானோ, அடா! காட்டு உன் கடவுளைத் தூணிடத்தே, வம்புசெயும் மூடா" என்று மகனிடம் உறுமிக்கொண்டு தூணை உதைத்தவனை அந்தத் தீயவல் இரணியனின் உடல் பிளந்தாய்! நம்பி, நின் அடி தொழுதேன், என்னை மானமழியாமல் காத்தருள்வாய் என்று பலவாறாக இறைவனைத் துதித்து அந்தப் பாஞ்சாலி மேலும் பேசுகிறாள். வையகம் காத்திடும் கண்ணா, மணி வண்ணா, என்றன் மனச்சுடரே, ஐய, நின் பதமலரே சரணம். ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி! என்று அவனிடம் முறையிடுகிறாள். 

அப்போது .... பொய்யர்கள் அடையும் துயரத்தைப் போல், நல்ல புண்ணியர் தம் புகழினைப்போல், தையலர் தம் கருணையைப் போல், கடலில் விளையும் அலைகளைப் போல், பெண்மையைப் போற்றுவோர் செல்வம் பெருகுதல் போல், கண்ண பிரானின் அருளால், பாவி துச்சாதனன் கழற்றிடக் கழற்றிடத் துணி புதிது புதிதாய் வண்ணப் பொற் சேலைகளாய், அவை வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே! எண்ணத்தில் அடங்காவே, அவை எத்தனை எத்தனை நிறத்தனவோ! புதிதுபுதிதாகச் சேலைகள் கழற்றக் கழற்ற வந்துகொண்டே யிருக்க அந்த மாதரசி தலைக்கு மேலே கைகுவித்து ஹரி நாமத்தைச் சொல்லச் சொல்லத் துகிற்கூட்டம் பெருகப் பெருக, அந்தப் பாவி துச்சாதனன் சோர்ந்து வீழ்ந்து விட்டான்.

தேவர்கள் வானிலிருந்து பூச்சொரிந்தார். 'ஓம் ஜய ஜய பாரத சக்தி' என்றே ஆவலோடெழுந்து நின்று முன்னை ஆரிய வீட்டுமனும் கைதொழுதான். சாவடி மறவரெல்லாம் 'ஓம் சக்தி சக்தி சக்தி'யென்று கரங் குவித்தார். அரச நீதி பிழைத்த அரவக்கொடியுடையோன் தலை கவிழ்ந்தான்.

இவ்வளவையும் கண்டு கொண்டிருந்த பாண்டவரில், பீமன் எழுந்து சபதம் செய்கிறான். "இங்கு விண்ணவர் ஆணை, பராசக்தி ஆணை, தாமரைப் பூவினில் வந்தான், மறை வழங்கிய தேவனின் திருக்கழல் ஆணை, மாமகளைக் கொண்ட தேவன், எங்கள் மரபுக்குத் தேவன் கண்ணன் தாமரைப் பதத் தாணை, காமனைக் கண்ணழகாலே சுட்டுக் காலனை வென்றவன் பொன்னடி மீதில் ஆணை, இங்கு இந்த சபதம் செய்வேன். இந்த ஆண்மையில்லா துரியோதனன் தன்னை, பெரும் தீயினையொத்த எங்கள் பெண்டு திரெளபதியைத் தன் தொடை மீது வெட்கமின்றி வந்து இரு என்றானை, இந்த நாய் மகனாம் துரியோதனன் தன்னை, பெருமையிழந்த மன்னர் கண் முன்னே என்றன் வலிமையினால் யுத்த அரங்கத்தின் கண், இவனது தொடையைப் பிளந்து உயிர் மாய்ப்பேன். தம்பி சூரத் துச்சாதனன் தன்னையும் ஆங்கே கடைபட்ட அவனது தோள்களைப் பிய்ப்பேன். அங்கு கள்ளென ஊறும் இரத்தத்தைக் குடிப்பேன். இது நடைபெறும் காண்பீர் உலகீர்! இது நான் சொல்லும் வார்த்தை என்று எண்ணிடல் வேண்டா. தடையற்ற தெய்வத்தின் வார்த்தை, இது சாதனை செய்க பராசக்தி!" என்றான்.

பார்த்தன் எழுந்து சபதம் செய்கிறான். "இந்தப் பாதகக் கர்ணனைப் போரில் மாய்ப்பேன். தீர்த்தன், பெரும்புகழ் விஷ்ணு, எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழலடி ஆணை! கார்த்தடங்கண்ணி எம் தேவி அவள் கண்ணிலும் காண்டிப வில்லினும் ஆணை! போர்த் தொழில் விந்தைகள் அனைத்தும் அந்தப் போதில் காண்பாய் - ஹே! பூதலமே!" என்று சபதமேற்றான்.

பாஞ்சாலன் மகள் தேவி திரெளபதி விரிந்த குழலோடு எழுந்தாள், வீர சபதம் ஏற்றாள்: "ஓம்! தேவி பராசக்தி ஆணை உரைத்தேன். பாவி துச்சாதனன் செந்நீரும் அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம் இவை மேவி இரண்டும் கலந்து குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன் யான் -- இது செய்யுமுன்னே முடியேன்" என்று உரை செய்தாள். ஓம், ஓம் என்று உரைத்தனர் தேவர். ஓம் ஓம் என்று சொல்லி உறுமிற்று வானம். பூமி அதிர்ச்சி உண்டாச்சு. விண்ணைப் பூழிப் படுத்தியதாம் சுழற் காற்று. சாமி தருமன் புவிக்கே என்று சாட்சி உரைத்தன பஞ்ச பூதங்களும். நாமும் கதையை முடித்தோம், இந்த நானிலம் முற்றும் நல் இன்பத்தில் வாழ்க என்று மகாகவி பாஞ்சாலி சபதத்தை முடிக்கிறார்.