பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, January 4, 2016

கண்ணன் பாட்டு.


 'முப்பெரும் பாடல்கள்' எனப் போற்றப்பெறும் மகாகவியின் பாடல்களில் கண்ணன் பாட்டும் ஒன்று. மற்ற இரண்டும் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவையாகும்.

 கண்ணன் பாட்டின் சிறப்பு என்ன தெரியுமா? பண்டைய நாட்களில் மாணிக்கவாசகர், ஆண்டாள் நாச்சியார் முதலானோர் தங்கள் பாடல்களில் இறைவனைத் தலைவனாகவும் மற்ற உயிர்கள் அனைத்தும் தலைவியாகவும் பாவித்துப் பாடல்களை இயற்றினர். இறைவன் ஒருவன். உயிர்கள் பல. அந்த ஒருவனான இறைவனை அடைய உயிர்களெல்லாம் நாயக நாயகி பாவங்களைக் கொண்டு பாடல்கள் வெளிவந்தன. ஆனால் மகாகவி பாரதி அந்தப் பழைமையை தவிர்த்துவிட்டு புதிய பாதை வகுத்தான். இங்கு பாரதி தன்னைத் தலைவனாகவும், இறைவனைத் தன் காதலியாக, காதலனாக, சேவகனாக, அரசனாக, அமைச்சனாக, தோழனாக இப்படிப் பற்பல முறையில் பாவித்துப் பாடியிருக்கிறான். இதுதான் அவனைப் புரட்சிக்கவியாகப் பார்க்க உதவுகிறது.

இந்தப் புரட்சி உள்ளத்தைப் போற்றும் விதத்தில்தான் "கண்ணன் பாட்டை" நாம் ஆய்வு செய்ய வேண்டும். கண்ணன் பாட்டு என்ற தலைப்பில் பாரதியார் 23 பாடல்களைப் பாடியிருக்கிறார். இவை முறையே, கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காந்தனாக, காதலியாக, ஆண்டானாக, குலதெய்வமாக என்று வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறார். மற்ற தலைப்புகளில் எல்லாம் ஒவ்வொரு பாட்டு வீதம் எழுதிய பாரதி காதலன் எனும் தலைப்பில் 5 பாடல்களையும், காதலி எனும் தலைப்பில் 6 பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

 "கண்ணம்மா என் காதலி" என்ற பாடல்களில் பண்டைய தமிழிலக்கிய அகத்துறை மரபு சார்ந்ததாக, காட்சி வியப்பு, பின்னே வந்து கண் மறைத்தல், முகத்திரை களைதல், நாணிக்கண் புதைத்தல், குறிப்பிடம் தவறியது, யோகம் எனும் தலைப்பில் பாடல்களை அமைத்திருக்கிறார். பொதுவான விளக்கமாக இல்லாமல் கண்ணன் பாட்டு ஒவ்வொன்றின் கருப்பொருளையும் சிறிது கவனமாக இங்கு பார்க்கலாம்.

 "கண்ணன் பாட்டில்" வரும் முதல் 7 பாடல்களின் கருத்தை மட்டும் கொடுத்திருக்கிறோம். அதற்குரிய பாடல்களையும் இந்த உரையோடு சேர்த்து படியுங்கள். கண்ணன் பாட்டை முதன் முதலில் பாரதியாரின் சீடர் பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் 1917இல் பதிப்பித்தார்கள். அவருடைய பதிப்பின் முன்னுரையில் அவர் பாரதி பற்றி கூறும் கருத்து மனதில் நிறுத்திச் சிந்திக்கத்தக்கது. அந்த பகுதி இதோ:- "பாரதியார் பாடல்களின் பெருமையைப் பற்றி யான் விரித்துக் கூறுவதென்றால், இந்த முகவுரை அளவு கடந்து பெரிதாய் விடும். ஒரு வார்த்தை மட்டும் கூறுகிறேன். இந்த ஆசிரியர் காலத்திற்குப் பின் எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின், இவர் பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான் இப்பொழுதே காண்கிறேன்"

பரலி சு.நெல்லையப்பர் அவர்களின் கூற்று எவ்வளவு தீர்க்கதரிசனமானது. இன்று பாரதியாரின் பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்படாத மேடைகளே இல்லை. பாரதியாரைக் குறிப்பிடாத பேச்சாளர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பரலி சு.நெல்லையப்பர் வெளியிட்ட முதல் பதிப்பிற்குப் பின் அதன் இரண்டாவது பதிப்பு 1919இல் வெளியானது. இந்த இரண்டாம் பதிப்பிற்கு வீர விளக்கு வ.வெ.சு.ஐயர் அவர்கள் முன்னுரை எழுதியிருக்கிறார்கள். அந்த முன்னுரையில் ஐயர் அவர்கள் குறிப்பிடுவதாவது:- "கவிதை அழகை மாத்திரம் அனுபவித்துவிட்டு, இந்நூலின் பண்ணழகை மறந்து விடக்கூடாது. இதிலுள்ள பாட்டுகளிற் பெரும்பாலானவை தாளத்தோடு பாடுவதற்காகவே எழுதப்பட்டவையாக இருக்கின்றன. கடற்கரையில் சாந்திமயமான சாயங்கால வேளையில், உலகனைத்தையும், மோக வயப்படுத்தி நீலக்கடலையும், பாற்கடலாக்கும் நிலவொளியில், புதிதாகப் புனைந்த கீர்த்தனங்களைக் கற்பனா கர்வத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான குரலில் பாடினதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்நூலில் உள்ள பாட்டுக்களை மாணிக்கங்களாக மதிப்பர்"

வ.வெ.சு.ஐயர் அவர்கள் இப்படிக் கூறியிருப்பதிலேயே பாரதியார் புதுவை கடற்கரையில் இந்தப் பாடல்களைப் பாடும்போது உடனிருந்து கேட்டு அனுபவித்திருக்கிறார் என்பது புலனாகிறதன்றோ? இங்கு ஐயர் கூறும் சொற்களைக் கவனிக்க வேண்டும். பாரதி பாடும்போது 'கற்பனா கர்வத்தோடும்' 'சிருஷ்டி உற்சாகத்தோடும்' பாடியதாக விளங்குகிறது. ஆம் உலக மகா கவிகளுக்கொப்பாகத் தானும் ஓர் அரிய பாடலை இயற்றிய அந்த மகாகவிஞனுக்கு கர்வமும், அப்படியொரு பாடலை சிருஷ்டித்ததாலேயே உற்சாகமும் கொள்ளுவதும் இயற்கையன்றோ? பாரதியின் குரல் மிகமிக இனிமையானது என்று அவர் பாடும்போது கேட்ட அனைவருமே சான்று பகர்கின்றனர். அப்படியொரு இனிமையான, கம்பீரமான குரலில் அவர் பாடும்போது கேட்டவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.

இதில் ஒரு வருத்தமான செய்தியும் உண்டு. மகாகவியின் இந்த அற்புதமான பாடல்களை அவர் காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் சரிவர ஆதரிக்கவில்லை. இதனைப் பலரும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். இதைக் குறிப்பிட்டு வ.வெ.சு.ஐயர் அவர்களேகூட இப்படிச் சொல்லியிருக்கிறார்:- "........ஆசிரியரின் நூல்களை நம் நாட்டவர் சரிவர ஆதரிக்காததனாலே, "சுற்றி நில்லாதே போ, பகையே - துள்ளி வருகுது வேல்" "கைதனில் வில்லும் உண்டு காண்டீபம் அதன் பேர்" என்றும் உள்ள அக்ஷர லக்ஷம் பெறுமான பாக்களை எழுதியிருக்கும் அவருடைய உற்சாகம் குன்றிப்போயிருக்கிறது" 

"வ.வெ.சு.ஐயர் அவர்கள் இப்படி எழுதியிருப்பதிலிருந்து கண்ணன் பாட்டு அக்காலத்தில் எப்படி மதிக்கப்பட்டிருக்க வேண்டுமோ அப்படி மதிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது" என்று "வழி வழி பாரதி" எனும் நூலில் சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் அவர்களும் எழுதுகிறார்.

அவர் மேலும் சொல்லுகிறார்:- "போப் ஐயர் வரைந்த "இலக்கண நூற் சுருக்கம்" அவர் காலத்திலேயே இலட்சக் கணக்கில் விலை போயிற்று. ஆனால் பாரதியாரின் கவிதை நூல் சில நூறு பிரதிகள் என்ற அளவில்கூட விலை போகவில்லை. இன்று தமிழ் பெற்றுள்ள எழுச்சிக்கு மூல காரணம் பாரதியாரே என்றாலும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை மதித்தவர் ஒரு சிலரே. குருவிந்தக் கல்லுக்கும் கோமேதகத்திற்கும் உள்ள வாசியை, கண்ட அளவிலே உணர்பவர் ஒரு சிலர்தாமே. அதுபோலத்தான் மேதைமையை உணர்தல் என்பதும்" என்று.

கண்ணபிரானை தோழனாய், தாயாய், தந்தையாய், சேவகனாய், சீடனாய், சற்குருவாய், குழந்தையாய், ஒரு விளையாட்டுப் பிள்ளையாய், காதலனாய், கணிகைக்கும் காந்தனாய், காதலியாய், ஆண்டானாய், குலதெய்வமாய் தரிசிக்கும் வழக்கம் ஆழ்வார்கள் காலத்திலிருந்தே நம் பண்பாட்டில் இருந்திருக்கிறது என்கிறார் சேக்கிழாரடிப்பொடி. அதுமட்டுமல்ல, இந்திய இலக்கிய மரபில் கிருஷ்ண பக்தி எனும் இலக்கிய மரபு தனது அழுத்தமானச் சுவடுகளைப் பல மொழிகளில் பதித்துள்ளது என்றும், பக்தி இயக்கம், இலக்கிய இயக்கமாகவும் விளங்கிய காலம் அது என்றும் பெ.சு.மணி அவர்கள் கூறுகிறார்கள். அவர் தனது கட்டுரையில் கூறுவதாவது:- "மகாகவி பாரதியார் அவர்கள், இந்தியக் கவிதை உலகில் கிருஷ்ணனைப் பற்றிய குறியீட்டுக் கவிதை பெற்றுள்ள சிறப்பைக் குறிப்பிட்டுள்ளார். மகாயோகி அரவிந்தரின் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றிற்கு (அஹானாவும் இதரப் பாடல்களும்) 1916 ஜூலை 16ஆம் நாள் வெளியான "காமன் வீல்" (ஆசிரியர் அன்னிபெசண்ட்) இதழில் எழுதிய விமர்சனத்தில் இந்தியக் கவிஞர்களைக் கவர்ந்த கிருஷ்ண பரமாத்மாவைப் பற்றிய பின்வருமாறு மொழிந்துள்ளார்: "Krishna-symbolism has been in the past, one of the most rapturous themes for the Indian poet's heart. In Hindusthan and in Bengal, in the Maharashtra and the Tamil land, the older seers have written some of their best songs about the picture of the cow-herd boy, his flute and his kine - of God. His love and His illuminations." இடைக்குலச் சிறுவனின் வேய்ங் குழலும், ஆநிரையும், அவன் அன்பும், அருளொளியும் கொண்ட சொல்லோவியங்களை வங்கம், மராட்டியம், இந்திப் பிரதேசம், தமிழ்நாடு முதலான பிரதேசங்களைச் சார்ந்த கவிஞர்கள் தங்கள் பாடல்களில் படைத்ததைப் பாரதியார் குறிப்பிடுகிறார். வ.வெ.சு.ஐயர் அவர்கள் கூறுகையில், "பாரத நாட்டின் குல தெய்வமாகிவிட்ட கண்ணனுக்கும் மாலை சூட்டாத கவிகள் அருமை" எனத் தமிழ் இலக்கிய விமர்சன முதல்வர் வ.வெ.சு.ஐயர் அவர்களும், பாரதியின் கண்ணன் பாட்டின் இரண்டாம் பதிப்பிற்கு 1919இல் எழுதிய முன்னுரையில் சுட்டிக் காட்டினார். கண்ணனை ஆயர்பாடியில் குழலூதும் கண்ணனாகவும், மகாபாரத யுத்தத்தில் கீதோபதேசம் செய்த கிருஷ்ணனாகவும் பார்க்கிறோம். பாரதியாரை முதலில் கவர்ந்தது, குருக்ஷேத்திரக் கிருஷ்ணனே என்பதையும் வ.வெ.சு.ஐயர் கண்ணன் பாட்டு முன்னுரையில் கூறுகிறார்.

அடிமைப்பட்டிருக்கும் நாட்டிற்கு குருக்ஷேத்திர யுத்த களத்தில் சங்கொலிக்கும் கிருஷ்ணனே தேவை; குழலூதும் கண்ணன் அல்ல என சுவாமி விவேகானந்தர் கூறியதை வ.வெ.சு.ஐயர் எதிரொலித்தார்.

1909இல் பாரதியார் பதிப்பித்த "ஜன்மபூமி"யில் இரு பாடல்களுக்கு "ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்" என்றுதான் பெயரிட்டார். பெ.சு.மணி தனது நூலில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பாராட்டிய கண்ணன் பாட்டு பற்றி குறிப்பிடுகையில் இவ்வாறு கூறுகிறார்: "கண்ணனைப் பாடிய ஆழ்வார்கள் அவன் பிள்ளைப் பருவத்தில் ஆய்ச்சியர் இல்லங்களில் புகுந்து வெண்ணெய் திருடி உண்டதையும் காளைப் பருவத்தில் கோபிகையரின் ஆடைகளைக் கவர்ந்ததையும், சுவைபட வருணித்துச் சொல்லியுள்ளார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளைப் பற்றி பாரதியார் "கண்ணன் பாட்டி"லே குறிப்பாகக்கூட எதையும் கூறவில்லை என்று தனது 25-10-1981 "செங்கோல்" இதழில் எழுதியுள்ளார்" என்கிறார். கண்ணன் பாட்டில் அமைந்துள்ள சிருங்கார ரசப் பாடல்களான "கண்ணன் - என் காதலன்", "கண்ணன் - என் காதலி" ஆகிய பாடல்களைப் பற்றி பாரதி புகழ் பரப்பிய கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் கூறும் கருத்துக்கள் கவனிக்கத் தக்கன. "எல்லாவற்றிலும் சிகரமாக விளங்குவது கண்ணனின் காதல் காட்சிகள்தாம். சாதாரண ஆண், பெண் காதல் நெகிழ்ச்சியின் பல்வேறு கவசங்களையே கையாண்டு தெவிட்டாத தேவ சுகத்தைப் பாடும் அந்தக் கவிதையின் கற்பனை, தமிழ் இலக்கியம் அகத்துறைக் காட்சிகளிலும், பக்தி இலக்கியப் பண்புகளிலும் எந்நாளும் அழியாத மகா கவிதை" என்கிறார் தனது "புது யுகக் கவிஞர்" எனும் நூலில். கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் கூறும் கருத்து: "பாரதி, "கண்ணம்மா என் காதலி" என்று அழைப்பது அவருடைய பரபக்தி அனுபவத்தின் முதிர்ச்சி என்றே கொள்ள வேண்டுமே அல்லாமல் வெறும் கவிதை அழகுக்காக அவர் படைத்த கற்பனையென்று தள்ளக்கூடாது". "கண்ணம்மா என் காதலி-6" எனும் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து "In Each Other's Arms" எனும் தலைப்பில் வெளியிட்ட பொழுது, பின்வரும் குறிப்பையும் மகாகவி பாரதியார் இணைத்துள்ளார். (Note:- In the following verses, the Supreme Divinity styled here Krishna is imaged as the beloved woman and the human soul as the lover - CSB) கண்ணன் பாட்டின் காதலன் காதலி பாடல்கள் பற்றி சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் இவை தமிழிலக்கிய அகத்திணை நெறியைப் பின்பற்றி எழுதப்பட்டதாகக் கூறுகிறார். "ஐந்திணை ஒழுக்கப்படி கண்ணன் பாடல்களைப் புனைந்த பாரதியார் அதற்குள்ள துறைகள் பலவற்றையும் கையாண்டுள்ளார். வள்ளலாரைப் போன்று அகப்பொருள் துறையில் அதிகப் பாடல்களைப் பாரதியார் பாடிக் குவிக்கவில்லை. "கண்ணன் என் காதலன்" என்ற தலைப்பிலே நாயகி பாவத்தில் ஆறு பாடல்களையும், "கண்ணம்மா - என் காதலி" என்ற தலைப்பிலே நாயக பாவத்திலே ஆறு பாடல்களையுமாக பன்னிரண்டு பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். தலைவன்பால் தோழியைத் தூது விடுதல், சிறைப்புறத்திருத்தல், நாணிக் கண்புதைத்தல், குறிப்பிடம் தவறுதல் ஆகிய அகப்பொருள் இலக்கியத் துறைகளைக் கண்ணன் பாட்டில் பாரதியார் பயன்படுத்தியுள்ளார். தொல்காப்பியம் அகத்திணையில் வரும் உள்ளப் புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி ஆகியவையும் கண்ணன் பாட்டிலே கூறப்பட்டுள்ளன. முன்கூறப்பட்ட அகத் திணைத் துறைகளோடு, "முகத்திரை களைதல்" எனும் புதிய துறை ஒன்றையும் பாரதியார் சேர்த்து வைத்துள்ளார்" எனக் கூறி ம.பொ.சி. தமது புதுமை நாட்டத்தைப் புலப்படுத்துகிறார்.

1. கண்ணன் - என் தோழன்.

ஒருவனுக்கு அமைந்த உயிர்த்தோழன் அவனுக்கு எந்தெந்த விதங்களி லெல்லாம் உதவி செய்வானோ அங்ஙனமெல்லாம் கண்ணன் தோழனாய் உதவி செய்கிறானாம். அப்படி கண்ணனைத் தோழனாய் அடைந்தவன் பார்த்தன் அல்லவா? அவன் சுபத்திரையை மணம் செய்ய என்ன வழி, அண்ணன் பலராமன் தடையாக இருக்கிறாரே என்று கேட்டதற்கு அவளை சிறையெடுத்துச் செல்ல ஓர் உபாயம் உடனே சொல்லி உதவி புரிகிறான்.

வில்வித்தையில் அர்ச்சுனனுக்கு நிகரான கர்ணனைப் போரில் எப்படி வெல்வது, அவன் தர்மங்கள் அவனைச் சுற்றி நின்று பாதுகாக்கின்றனவே இதற்கு நீதான் ஓர் உபாயம் சொல்லவேண்டுமென்று அவனைத் தஞ்சமடைந்தால் கண்ணன் ஓர் கணத்தில் அதற்கு வழி சொல்லுகிறான்.

 பாண்டவர்கள் கானகத்தில் சுற்றித் திரிந்த நாட்களிலும், குருக்ஷேத்திர யுத்தத்திலும் உறுதுணையாக நின்று உதவி செய்தவனல்லவா கண்ணன். அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக அமர்ந்து கீதை உபதேசம் செய்து யுத்தத்தை மட்டுமல்ல வாழ்க்கையையும் வழிநடத்திக் கொடுத்தவன் கண்ணன்.

உடலுக்கு நோய் வந்தால் உற்ற மருந்து சொல்வான், ஈனக் கவலைகள் நெஞ்சை வாட்டுகின்றபோது அதற்கு இதம் சொல்லி ஆறுதல் கூறுவான். அவனை எப்போது அழைத்தாலும் சாக்கு போக்கு சொல்லாமல் அரை நொடிக்குள் வந்து சேர்வான்; மழைபெய்யும்போது குடை போலவும், பசி நேரத்தில் கிடைக்கும் உணவு போலவும், எங்கள் வாழ்வுக்குக் கண்கள் எங்கள் கண்ணன் என்று பார்த்தன் நயந்து சொல்வான். கேட்ட பொருளை உடனே கொடுப்பான், கேலி செய்தால் பொறுத்துக் கொள்வான், மனம் துவண்டபோது ஆட்டங்கள் ஆடி, பாட்டுக்கள் பாடி துயரம் தீர்ப்பான், மனதில் கொண்ட எண்ணத்தைக் குறிப்பறிந்து புரிந்து கொள்வான், சுற்றிப் பழகும் அன்பர் கூட்டத்தில் இந்த கண்ணனைப் போல ஒரு தோழன் யாருக்குக் கிடைப்பான்?

மனத்தில் கர்வம் தோன்றினாலோ அவன் சொல்லாலும் செயலாலும் நமக்கு ஓங்கி ஒரு அடி கொடுப்பான், நெஞ்சில் கள்ளத்தைத் தேக்கி வஞ்சனை செய்தால் காறி உமிழ்ந்திடுவான், சின்னக் குழந்தையைப் போல சிரித்து விளையாடிக் களித்திருப்பான், அவன் சொன்னபடி நடக்கவில்லை யென்றால் அவ்வளவுதான் அவன் தரும் தொல்லைக்கு அளவே இருக்காது. அப்பேற்பட்ட கண்ணனின் நட்பு இல்லையேல் அவ்வளவுதான் இந்த சகத்தினில் ஏது வாழ்வு?

கோபம் தலைக்கேறி முகம் சிவக்க நிற்கும்போது ஏதோவொன்றைச் சொல்லி குலுங்கிச் சிரிக்கச் செய்திடுவான்; ஏதோவொரு மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கும்போது குறுக்கே புகுந்து ஏதோ சொல்லி மனம் தளிர்க்கச் செய்திடுவான்; பெரும் ஆபத்து நேரிடும் போது பக்கத்தில் நின்று அதனை விலக்கிடுவான்; நமக்கு ஏற்படும் தீமைகளையெல்லாம் விளக்கில் விழும் பூச்சிகளைப் போல விழுந்து அழிந்திடச் செய்திடுவான். உண்மை தவறி நடப்பவர்களை அவன் மன்னிக்கமாட்டான்; ஆனால் மற்றவர்கள் நன்மை கருதி அவன் மட்டும் நிறைய பொய்களைச் சொல்லுவான்; பெண்மைக்குரிய இரக்கமும், எதிர்பாராத காரியங்களைச் செய்வதால் பித்தனைப் போலும், பிறருக்கு இதந்தரும் தண்மை குணங்களும் கொண்டவன் தான் என்றாலும் சில நேரங்களில் தழலைப் போல் சுட்டு எரிக்கவும் செய்வான்.

சூதுவாதறியாத குழந்தை மனம் கொண்டவன்; நல்லவர்களுக்கு ஒரு தீங்கும் நேராது காப்பவன்; தீயோருக்கு விஷம்போல, நோய்போல, தீயினைப் போல கொடியவனாவான். அப்பேற்பட்ட குணநலன்களையுடைய இந்த கண்ணன் யார் தெரியுமா? வேதங்களை உணர்ந்து தவத்தில் சிறந்த முனிவர்களின் உணர்வில் இருக்கும் பரம்பொருளே அவன்!

கீதையெனும் அறவுரை தந்து கீர்த்தி பெற விளங்கியவன். அவன்தான் என் தோழன் என்கிறார் பாரதியார் இந்தப் பாட்டில்.

2. கண்ணன் - என் தாய்.

கண்ணனே என் தாயாக வந்தாள். அவளது விஸ்வரூபம்தான் என்னே! குழந்தையான என்னை வானம் எனும் தன்னிரு கைகளிலே அள்ளியெடுத்துத் தூக்கிப் பின்னர் பூமி எனும் தனது மடியிலே வைத்துத் தாலாட்டிப் உயிரும் உணர்வுமாய்ப் பாலூட்டி மனம் மகிழும் பற்பல கதைகளைச் சொல்லி அவள் மனம் களிப்பாள்.

அடடா! அவள் சொல்லுகின்ற கதைகள்தான் எத்தகையன? இன்பம் தரும் கதைகள், ஏற்றமும் வெற்றியும் தரும் சில கதைகள், துன்பச்சுவை நிரம்பிய கதைகள், தோல்வி வீழ்ச்சி எனும் கதைகள், என் வாழ்வின் பருவங்களுக்
கேற்ப பொருத்தமான கதைகள் இப்படிப்பலப்பல சொல்லிக்கொண்டே யிருப்பாள். மனம் பரவசத்தில் திளைக்கும். குழந்தையாம் எனக்கு அந்தத் தாய் காட்டும் விளையாட்டுகள்தான் எப்படி?

சந்திரன் என்றொரு பொம்மை, அதிலிருந்து தண்மையும் அமுதத்தின் சுவையும், பரந்து விரிந்த மேகக்கூட்டத்தோடு கூடிய மிக அழகான பொம்மை அது. பூமிக்கு இனிமைதருவது மழை. அந்த மழையைக் கொடுக்கும் சூரியன் என்றொரு பொம்மை, அந்த சூரியனின் முகத்தின் ஒளி அதனை விளக்க வார்த்தைகள் இல்லையே! வானவெளியெங்கும் வெள்ளி மணிகளை வாரி இரைத்தாற்போல நட்சத்திரக் கூட்டங்கள், அவற்றை எண்ணி எண்ணி மாளாமல் விட்டுவிட்டேன். அடர்ந்த கானகத்தில் மோனத்தில் ஆழ்ந்தவைபோல் அசையாமல் அமர்ந்திருக்கும் மலைகளின் கூட்டம். நல்ல நல்ல நதிகள், அவை நாடெங்கும் ஓடி விளையாடி வரும். மெல்ல மெல்ல விளையாடிக்கொண்டே விரிந்த கடலில்போய் விழும்; அந்த கடல் பொம்மையோ மிகப் பெரிது. அதற்கு எல்லையே காணமுடியவில்லை. அதன் மீது வீசுகின்ற அலை பாட்டு இசைக்கின்றது, அந்தப் பாட்டு 'ஓம்' என்று என் காதில் ஒலிக்கின்றது. பூமியின் மீதுதான் எத்தனை சோலைகள்; காடுகள்; அவைகளில்தான் எத்தனையெத்தனை வண்ண மலர்கள்; மரங்களிலெல்லாம் கனிவகைகள் இப்படி எத்தனை பொம்மைகள் எனக்கு.

தின்பதற்குப் பண்டங்கள், செவிகளுக்கு நல்ல பாடல்கள்; பழகுதற்கு நல்ல தோழர்கள் அதுமட்டுமா "கொன்றிடுமென இனிதாய், இன்பக் கொடு நெருப்பாய், அனற் சுவையமுதாய் நன்றியல் காதலுக்கே இந்த நாரியர் தமை எனைச் சூழவைத்தாள்". வானில் திரியும் பறவைகள்; நிலத்தில் திரியும் விலங்குகள், கடல் முழுதும் மீன் வகைகள் இப்படி எத்தனை வகை தோழர்கள் அன்னை எனக்களித்தாள்.

எங்கெங்கு காணினும் இன்பமடா! அதை நினைத்துப் பார்க்கவும் கூடுவதில்லை. கோடி வகை சாத்திரங்கள் வைத்தாள் அன்னை அவைகளை அறிந்திடும் வகை ஞானம் வைத்தாள், இவைகளுக்கிடையே நான் வேடிக்கையாய் சிரித்து மகிழ்ந்திடவே இடையிடையே பொய் வேதங்களையும், மதக் கொலைகளையும், அரசர்கள் செய்யும் கோமாளிக் கூத்துக்களையும், வயதில் முதிர்ந்தோர் சிலர் செய்யும் பொய்க்காரியங்களும், இளையோர் தம் கவலைகளையும் அன்னை இங்கே படைத்து வைத்தாள். வேண்டியதனைத்தையும் அன்னை கொடுத்திடுவாள்; அவை வேண்டுமென நான் நினைக்குமுன்பாக அவை எனக்குக் கிடைத்திட வகை செய்வாள்; அடைக்கலம் கொடுத்து ஆதரிப்பாள்; அர்ச்சுனனைப் போல என்னை ஆக்கிடுவாள்; அந்த அன்னையை அவளது அருளை என்றென்றும் நான் பாடுகின்ற தொழிலைச் செய்வேன்; அப்படிச் செய்துகொண்டேயிருக்கும் எனக்கு அவள் நீண்ட புகழ்மிக்க வாழ்க்கையையும், நிகரற்ற பெருமைகளையும் அள்ளியள்ளித் தருவாள்.

3. கண்ணன் - என் தந்தை.

என்னை இந்த பூமிக்கு அனுப்பியவன் யார் தெரியுமா? என் தந்தை. எனக்கு தம்பிமார்கள் உண்டு. அவர்கள் புத மண்டலத்திலே இருக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தில்தான் எத்தனையெத்தனை கிரகங்கள். அவைகள் நியமித்த வரைமுறையோடு நித்தநித்தம் உருண்டு கொண்டிருக்கின்றன. இங்கெல்லாம் எங்கள் இனத்தார் இருக்கின்றார்கள். இவர்களையெல்லாம் படைத்த சாமியாம் என் தந்தையைப் பற்றிய வரலாற்றைச் சிறிது சொல்லுகின்றேன்.

கணக்கற்ற செல்வம் படைத்தவன் என் தந்தை, அவன் சேமித்து வைத்திருக்கும் பொன்னுக்கோர் அளவில்லை. கல்வியில் மிகச் சிறந்தவன், அவன் படைக்கின்ற கவிதையின் இனிமைக்கோர் அளவில்லை. இவ்வளவு பெருமைகள் இருந்தாலும் அவனுக்கு அடிக்கடி  கிறுக்குப் பிடித்து விடும். நல்ல வழியில் நேர்மையாக நடப்பவர்களை மனம் நொந்து போய் மனம் தளரும் அளவுக்கு சோதனைகள் செய்துவிடுவான்.

அவன் பெயரைச் சொல்ல நா தயங்குகிறது. எங்களுக்கு ஈசன் எனலாமா? அல்லது கண்ணன் எனலாமா? அவனுடைய பெயரை மூன்று வகையாகச் சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வகைக்காகவும் சிலர் சேர்ந்து சண்டைகள் செய்வார்கள். அவன் பிறந்தது தேவர் குலம் என்பர் சிலர். பிறந்தது மறக் குலத்தில் பேதமற வளர்ந்தது இடைக்குலத்தில், ஆனால் அவன் மேன்மையானவன் மிக உயர்ந்தவன் என்று பெயர் பெற்றது பார்ப்பன குலத்தில். அவனுக்கு செட்டி மக்களோடு மிகப் பழக்கமுண்டு. அவன் நிறம் நல்ல கருமை, ஆனால் நேயத்தோடு அவன் பழகுவது பொன் நிறப் பெண்களொடு.

பொய்யான சாத்திரங்களைக் கண்டு எள்ளி நகையாடுவான். அவனது தோழர்கள் ஏழை மக்கள்; செல்வம் படைத்த காரணத்தால் செறுக்குடையார் பால் சீறி விழுவான். எத்தனை துன்பம் வந்தாலும் மனம் தளராமல் அதனை எதிர்த்துப் போராடுவோர்க்கு செல்வங்களை அள்ளிக் கொடுப்பான். நேரத்துக்கு நேரம் அவனது புத்தி மாறும். ஒரு நாள் இருந்தது போல் மறு நாள் இருக்க மாட்டான். ஒருவரும் இல்லாத இடம் தேடி ஓடிவிடுவான், பாட்டு கேட்பதிலும் கதை கேட்பதிலும் தன் நேரத்தைச் செலவிடுவான். இன்பமே நன்று, துன்பம் இனியதல்ல என்று அவன் பேதப்படுத்திப் பார்ப்பதில்லை. அன்பு மிகுந்தவன், உயிர்க்குலம் முழுவதும் தெளிந்த அறிவு பெற அன்பாக செயல்புரிவான்; அவனுக்கு ஒரு அமைச்சன் உண்டு அவன் பெயர் விதி. முன்பு என்ன விதித்திருந்தானோ அதனை தவறாமல் நடக்கச் செய்வான் அவன்.

அவன் ஒரு மாலை கோர்த்து வைத்தான், அவை வேதங்கள் எனப்படும். அந்த வேதங்கள் மனிதர் பேசும் மொழியில் இல்லை. ஆனால் இப்புவியில் சிலர் சொல்லுகின்ற வெட்டிக் கதைகளில் வேதம் இல்லை. பூமியில் நான்கு குலங்களை அமைத்தான் நல்ல நோக்கத்தோடு, ஆனால் அவற்றை மூட மனிதர்கள் நாசப்படுத்தி விட்டனர். சீலம், அறிவு, கருமம் இவைகளில் சிறந்தோர் குலத்தில் சிறந்தவராம்; மேலோர் கீழோர் என்று பிறப்பினால் பிரிக்கப்படும் போலிச் சுவடிகளை தீயிலிட்டுப் பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மை உண்டாம்.

அவனுக்கு வயது முதிர்ந்தாலும் வாலிபக் களை மாறவில்லை. அவனுக்குத் துயரம் கிடையாது, மூப்பு கிடையாது, சோர்வு என்பது அவனுக்கு இல்லை, நோய்கள் அவனைத் தீண்டுவதில்லை; பயம் என்பதே இல்லை அவனுக்கு, அவன் யாருக்கும் பரிவதில்லை. எவர் பக்கமாவது நின்று எதிர்ப்பக்கம் துன்பம் தருவதில்லை. நடுநிலையோடு நடந்துகொண்டு அனைவருக்கும் நன்மை செய்து எல்லாம் விதிப்படி நடப்பதைக் கண்டு மகிழ்ந்திடுவான். துன்பப்படுபவர்களை அரவணைத்து அன்பு காட்டுவான், அன்பைக் கடைப்பிடி துன்பங்கள் பறந்து போகுமென்பான். எல்லோரும் இன்பம் அடைந்திட விருப்பமுறுவான்.

4. கண்ணன் - என் சேவகன்.

வீட்டு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் அவர்களால் ஏற்படும் தொல்லைகள் கணக்கில்லை. கூலி அதிகம் வேண்டுமென்பார்கள். அப்படிக் கேட்கும் போதெல்லாம் கொடுத்த அனைத்தையும் மறந்து நன்றி கொல்வார்கள். ஒரு நாள் வேலை அதிகமாக வைத்திருந்தால் வேலைக்கு வராமல் வீட்டிலேயே உட்கார்ந்து கொள்வார்கள். மறுநாள் வரும்போது, ஏனடா நேற்று நீ வேலைக்கு வரவில்லை என்று கேட்டால் போதும் எத்தனை பொய்! பானைக்குள் இருந்து ஒரு தேள் பல்லால் கடித்து விட்டது என்பார். வீட்டில் பெண்டாட்டி மீது பூதம் வந்து விட்டது என்பார். பாட்டி செத்துப்போய் பன்னிரண்டாவது நாள் என்பார். ஓயாமல் பொய் கூறுவார், ஒரு வேலையைச் சொன்னால் அதற்கு மாறாக வேறு வேலையைச் செய்வார். தாயாதியர்களோடு தனியாகச் சென்று பேசுவர்; நம் வீட்டுச் செய்திகளையெல்லாம் ஊரெல்லாம் சென்று பறை அடிப்பது போல் விளம்பரம் செய்வர்; வீட்டில் மிகச்சாதாரணமான பொருளான எள் இல்லை என்றால்கூட, விஷயம் தெரியுமா அவர்கள் வீட்டில் எள் இல்லை என்று பிரச்சாரம் செய்வார். இப்படி வேலைக்காரர்களால் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்த போதும், சேவகர்கள் இல்லாமல் வேலை நடக்கவில்லை.

இப்படி நான் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ ஒருவன் வந்து சேர்ந்தான், என்னிடம் வந்து நான் இடைச்சாதியைச் சேர்ந்தவன், மாடுகன்றுகளை மேய்ப்பேன், வீட்டிலுள்ள பிள்ளை குட்டிகளைக் காப்பேன். வீடு பெருக்குவேன், விளக்கேற்றி வைப்பேன், நீங்கள் சொல்லும் வேலைகளையெல்லாம் அட்டியின்றி செய்வேன்; துணிமணிகளை துவைத்து காயவைத்து பத்திரப்படுத்தி வைப்பேன், வீட்டிலுள்ள கைக்குழந்தைகளுக்கு இனிமையான பாட்டுப்பாடி ஆட்டங்கள் ஆடி அவை அழாதபடி பார்த்துக் கொள்வேன். வெளியூர் செல்லவேண்டும் என்றால் அது காட்டு வழியாக இருந்தாலும், வழியில் திருடர் பயம் இருந்தபோதும், இரவோ, பகலோ எந்த நேரமாக இருந்தாலும் சிரமத்தைப் பார்க்காமல் தேவரீர் தம்முடன் வருவேன். உங்களுக்குத் துன்பம் எதுவும் ஏற்படாமல் காப்பேன். ஐயா, நான் எதுவும் படித்ததில்லை, நாட்டுப்புறத்தில் வளர்ந்த காட்டு மனிதன். இருந்தாலும் எனக்குச் சில வித்தைகள் தெரியும். சிலம்பம் சுற்றுவேன், மல்யுத்தம் தெரியும், குத்துப் போர் தெரியும், ஆனால் நயவஞ்சனை புரிய எனக்குத் தெரியாது. இப்படிப் பலப்பல சொல்லிக்கொண்டு நின்றான்.

 "அது சரி உன் பெயர் என்ன? சொல்" என்று கேட்டதற்கு, " ஐயனே! ஒண்ணுமில்லே கண்ணன் என்று ஊரில் உள்ளோர் சொல்வார்கள்" என்றான்.

அவனை ஏற இறங்கப் பார்த்தேன். நல்ல கட்டான உடல். கண்களில் நல்ல குணம் தெரிந்தது. அன்பும் பாசமும் பொங்க அவன் பேசும் சொற்கள் இவைகளால் 'சரி, இவன் நமக்கு ஏற்ற பணியாள்' என்று மனம் மகிழ்ந்து "தம்பி! நல்லாத்தான் பேசுகிறாய், உன்னைப் பற்றி வானளாவப் புகழ்ந்து கொள்கிறாய், அது கிடக்கட்டும் கூலி எவ்வளவு கேட்கிறாய்? சொல்" என்று கேட்டதற்கு அவன் சொல்லுகிறான். "ஐயனே! எனக்கு தாலிகட்டிய பெண்டாட்டியோ, பிள்ளை குட்டிகளோ எவரும் கிடையாது. நான் ஒரு தனிக்கட்டை. எனக்கு நரையோ, உடலில் சுருக்கமோ ஏற்படவில்லை யாயினும் எனக்கு ஆன வயதுக்கு அளவில்லை, தேவரீர் என்னை ஆதரித்தால் போதும், நீங்கள் தரப்போகும் காசு எனக்குப் பெரிசில்லை, நெஞ்சிலுள்ள அன்புதான் எனக்குப் பெரிசு" என்றான்.

சரி சரி இது ஓர் பழையகால பைத்தியம், பிழைக்கத் தெரியாதவன் என்று எண்ணிக்கொண்டு, மனத்தில் மகிழ்ச்சியோடு, அவனை நான் எனது பணியாளாக ஏற்றுக் கொண்டு விட்டேன். அன்று முதல் அவனுக்கு எங்கள் மேல் அன்பு அதிகமாகிக்கொண்டே வரத்தொடங்கியது. அவனால் நாங்கள் அடையும் நன்மைகளைப் பட்டியலிட்டுச் சொல்லமுடியாத அளவுக்கு அதிகம். கண்களை இமைகள் எப்படிக் காக்கின்றதோ அப்படி அவன் எனது குடும்பத்தைக் காக்கின்றான். ஒரு தடவையாவது வேலையில் சலிப்படைந்து முணுமுணுப்பதைக் காணவில்லை. வீடு வாசல் பெருக்குகிறான், வீட்டை நன்கு துடைத்து சுத்தம் செய்கின்றான், வேலைக்காரர்கள் செய்கின்ற குற்றங்களையெல்லாம் கண்டித்து அடக்குகின்றான். அதுமட்டுமா? குழந்தைகளுக்கு அவன் ஆசிரியராக விளங்குகிறான். வளர்ப்புத்தாய் போல் அவர்களுக்கு அனைத்துப் பணிகளையும் தயங்காமல் செய்கின்றான். வைத்தியரைப் போல ஏதாவது உடல்நலக் குறைவு என்றால் அதற்கேற்ற மருந்து கொடுத்து மருத்துவனாகவும் இருக்கின்றான். எல்லோருடனும் சகஜமாக நடந்து கொள்கிறான். ஒரு வேலையிலும் குறை வைக்காமல் வீட்டுக்கு வேண்டிய சாமான்களையெல்லாம் வாங்கி தயாராக வைத்து விடுகிறான். பால், மோர் இவற்றை வாங்கி வைக்கிறான். வீட்டுப் பெண்களுக்கு தாயைப் போல பிரியமோடு பரிந்து ஆதரித்து நடந்து கொள்கிறான். ஒரு நல்ல நண்பனைப் போலவும், ஒரு மதியூகி அமைச்சன் போலவும், நல்ல ஆசிரியர் போலவும், தெய்வப் பண்புகளோடும், பார்ப்பதற்கு மட்டும் ஒரு வேலைக்காரனாகவும் நடந்து கொள்ளும் இவன் எங்கிருந்தோ வந்து சேர்ந்தானே! இடைச்சாதி என்றல்லவா சொன்னான்! இங்கு இப்பேற்பட்ட தூயவனை நான் வேலைக்காரனாகப் பெற என்ன தவம் செய்து விட்டேன். கண்ணன் என் அகத்தில் கால் வைத்த நாள் முதலாக எண்ணம், விசாரம் (கவலை) எதுவும் அவன் பொறுப்பு என்று விட்டுவிட்டேன். அவன் காலடி எடுத்து என் இல்லத்தில் வைத்த நாள் முதலாய் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், தெளிவே வடிவாம் சிவஞானம், எப்போதும் சிறந்து விளங்கும் நலன்கள் அனைத்தும் ஓங்கி வளர்கின்றன. கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்ணனைக் கொண்டதால் கண் கொண்டேன். கண் கொண்டேன். கண்ணன் என்னை வந்தடைந்து ஆட்கொள்ள காரணமும் இருக்கின்றனவே!

 5. கண்ணன் - என் அரசன்.

எங்கள் அரசன் இருக்கிறானே கண்ணன், அவன் என்ன செய்வான் தெரியுமா? எதிரிகளால் பகை முற்றி முதிர்ந்திடும் மட்டும் எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பான்; எதற்கும் ஓர் புன்னைகை அவ்வளவுதான், இப்படியே நாட்களை, மாதங்களை, ஆண்டுகளை ஓட்டிக் கொண்டிருப்பான். இந்த கண்ணன் என்று பகைவர்களோடு போர் புரிவது, என்று எதிரிகளை அழிப்பது இது நடக்காத காரியம் என்று நாம் மனம் சோர்ந்து போவோம். இப்படி எதிர்பார்த்து எதிர்பார்த்து மனம் சோர்ந்து நாட்கள் யுகங்களாகக் கழிந்து போகும். எதிரிகளோடு போர் என்றால் படை வீரர்களைச் சேர்க்க வேண்டாமா? துணைவர்கள் ஏவலர்கள் இவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டாமா? போருக்கு அதிகமாக செலவு ஆகுமே, அதற்கு செல்வத்தைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டாமா? இவற்றுக்கான எந்த வேலையையும் செய்யமாட்டான். மாடு மேய்ப்பவன் தானே, இவன் வீரமில்லாதவன், பயந்தாங்கொள்ளி என்று மற்றவர்கள் பேசும் ஏச்சுக்கெல்லாம் இவன் வெட்கப்படுவதே யில்லை. கண்ணனைக் கொல்ல பூதகியை அனுப்பிய இவனது மாமன் உல்லாசமாக செங்கோல் ஏந்தி இந்த பூவுலகை ஆளுகின்றபோது, இவன் ஆயர்குல பெண்டிரோடும், அவர்கள் ஆடுகின்ற ஆட்ட பாட்டங்களில் மனம் களித்து அதில் மனத்தைச் செலுத்திக்கொண்டு பொழுதைக் கழிப்பான். மழை வராதா என்று ஏங்கும் பயிர்கள் போல மக்கள் இவன் மனம் திருந்தி போருக்குத் தயாராக மாட்டானா என்று தவிக்கும்போது, இவனோ, சங்கீதம், தாளம், கூத்து, தனிமையில் அமர்ந்து குழலூதுதல் என்று இவற்றில் மனம் செலுத்துவான். அவன் காலைப் பிடித்துக்கொண்டு எங்களுக்கு ஒரு வழிகாட்டு என்று கெஞ்சினால், நாலில் ஒன்று பலித்திடும் பார் என்பான், இதற்கு என்ன பொருள் என்று எப்படி உணர்வது? நாமெல்லாம் அவனது பலத்தை நம்பி இருக்கையில், இவனோ வெட்கமின்றி பதுங்கிக் கிடப்பான், சிலநேரம் தீமைகளை ஒழித்துக்கட்டவும் செய்வான், சில நேரம் ஓடி ஒளிந்துகொண்டு சிறுமைப் படுவான். தந்திரங்களும் நன்கு செய்வான், செளரியங்களையும் ஏற்படுத்திக் கொள்வான், மந்திரசக்தியையும் காட்டுவான், வலிமை இல்லாமல் சிறுமையிலும் வாழ்வான். சரியான காலம் வந்து சேரும்போது, ஓர் கணத்தில் புதிய மனிதனாக உருவெடுத்து விடுவான். ஆலகால விஷத்தைப் போல இவ்வுலகமே அஞ்சி நடுங்கி ஆடும்படி சீறுவான். வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் பகை வெந்து போகும்படி பொசுக்கி விடுவான். உலகமும் வானமும் ஆயிரமாண்டுகள் பட்ட துன்பங்களை நொடியில் மாற்றிவிடுவான். கையிலுள்ள சக்கரத்தை ஓர் கணத்தில் எடுப்பான், அடுத்த கணம் பாரில் தர்மம் ஓங்கி வளர்ந்து விடும். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நேரம் ஏதேனும் உண்டோ? இல்லை கண்ணிமைப்பில் இவை முடிந்துவிடும். இந்த குறுகிய காலத்துக்குள் பகையை ஒழித்துக் கட்டிவிடுவான். கண்ணன் எனும் எங்கள் அரசனின் புகழினை கவிதையால் வடித்து எந்தக் காலமும் போற்றுவேன். திண்ணை வாசல் பெருக்க வந்த என்னை இந்த தேசம் போற்றும் வகையில் தன் மந்திரியாக நியமித்தான். அன்றாடச் சோற்றுக்கு ஏவல் செய்ய வந்த எனக்கு, நிகரற்ற பெரும் செல்வத்தைக் கொடுத்து உதவினான். வித்தை யொன்றும் கற்காத எனக்கு வேத நுட்பங்கள் யாவையும் விளங்கிடுமாறு செய்தான். கண்ணன் எனும் இந்த அருளாளனின் அருள் வாழ்க. கலியின் கொடுமை அழிந்து இந்த பூமியின் பெருமை வாழ்க. கண்ணன் எனும் அண்ணலின் அருள் பெற்ற நாடு அவலமெல்லாம் நீங்கி புகழில் உயரட்டும்!

6. கண்ணன் - என் சீடன்.

யார் இந்த மாயக் கண்ணன்? நானாக என்னுள்ளேயும் இருக்கிறான், என்னிலிருந்து மாறாய் பிறனாகவும் இருக்கிறான், நானும் பிற பொருளுமாய் இரண்டரக் கலந்துமிருக்கிறான், இவ்விரண்டிலும் வேறு வேறாயும் இருக்கிறான், இவன் என்ன மாயம் செய்கிறான்? "ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க" என்று மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறியபடி இவன் மூல வஸ்துவாயிருக்கிற பொழுது ஒன்றாகவும், அதிலிருந்து அந்நியப்பட்டு நிற்கும் இரண்டாவது வஸ்து எதுவுமில்லை எனவும், ஆனால் இந்தப் பிரபஞ்சமாக அவன் நீக்கமற நிறைந்திருக்கும் போது எண்ணற்ற பலகோடி பொருள்களாகவும், உயிர்களாகவும் காட்சியளிக்கிறான்.

தங்கக் கட்டி ஒன்றுதான் எனினும், அதிலிருந்து செய்யப்பட்ட ஆபரணங்கள் பல ரூபங்களாகும். இப்படிக் காட்சியளிக்கும் கண்ணன் சில நேரங்களில் என்னைக் காட்டிலும் அறிவிற் குறைந்தவன் போலவும், என்னோடு சேர்ந்து பழகி, நான் கூறும் அறிவுரைகளைக் கேட்டு அவன் மேம்பாடு எய்துவான் போலவும், நான் பாடுகின்ற கவிதைகளும், அறிவும் பெருமை பெற்றது போலவும், இந்தக் கள்வன் கண்ணன் என்னிடம் சீடனாக வந்து சேர்ந்தான்.

அட தெய்வமே! அவன் அப்படிச் செய்த சூழ்ச்சி வலையில் நான் விழுந்து அதனால் பட்ட தொல்லைகள் பெரிய பாரதக் கதை போன்றது. நானே என் மனத்தினை வெல்லமுடியவில்லை; நான் இந்த உலகத்தினை மாற்றிவிட முடியும், உலகத்தாரை இன்பத்தில் இருக்கச் செய்ய முடியும் என்று எண்ணிக்கொண்டதற்காகத் தண்டிக்கக் கருதியோ என்னவோ இந்த மாயக் கண்ணன் வலிய வந்து என்னிடம் சீடனாகச் சேர்ந்து கொண்டான்.

என்னை ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளியும், என்னுடைய புலமையை வியந்து பாராட்டியும் பல வழிகளில் அவன் மீது அன்பு கொள்ளச் செய்தான். வெறும் வாயை மெல்லும் கிழவிக்கு ஒரு பிடி அவல் கிடைத்தாற்போல்தான். நானும் அவன் முகஸ்துதிக்குக் கட்டுண்டு இவனை எப்படியும் நல்ல பண்புகள் உள்ளவனாக உயர்த்திவிடுவது என்ற ஊக்கத்தோடு அவனுக்குப் பல உபதேசங்கள் செய்யத் தொடங்கினேன்.

"இதோ பாரடா கண்ணா! நீ இன்ன இன்னதெல்லாம் செய்யக்கூடாது, இன்னாரோடெல்லாம் பழகக்கூடாது, இப்படியிப்படி யெல்லாம் பேசக்கூடாது, இவற்றையெல்லாம் விரும்பக்கூடாது, இதெல்லாம் படிக்கக்கூடாது, இன்ன நூல்களைத்தான் நீ கற்க வேண்டும், இன்னாரோடு மட்டும் நட்பு கொள்ள வேண்டும், நான் சொல்லுவனவற்றை மட்டும் விரும்ப வேண்டும்" என்று பல தருமங்களைச் சொல்லிச் சொல்லி அவனோடு உயிரை விடலானேன்.

 நாம் கதைகளில் படிக்கிறோமல்லவா? கணவன் எதையெல்லாம் சொல்லுகிறானோ அதற்கு நேர் மாறாகச் செயல்புரியும் மனைவி பற்றி, அதனைப் போல் இவனும் நான் சொல்லுவதற்கெல்லாம் நேர் எதிராகவே எல்லாவற்றையும் செய்யலானான். ஊரிலுள்ள மற்றவர்கள் என்னைப் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காக வாழ்ந்த எனக்கு, நான் சொன்னதற்கு மாறாக அவன் நடக்கும் விநோதத்தையும், ஊரார் வெறுக்கும் அத்தனை ஒழுக்கக்கேட்டையும் தலைமேல் ஏற்றுக்கொண்டு பழிச்சொல்லுக்கு ஆளாகி, எல்லோரும் இகழும்படியாக என் மனம் வருந்தும்படி நடந்துகொள்வதையும் கண்டேன்.

கண்ணனோ நாளாக நாளாக தனது கெட்ட நடத்தையால் எல்லை மீறிப்போய் வீதியில் பெரியோர்களும், மூத்தோர்களும் இவனைக் கண்டு கிறுக்கன் என்று இகழ்ந்து பேசும் நிலைக்கு வந்து விட்டான். எனக்கு ஏற்பட்ட வருத்தத்துக்கு அளவே கிடையாது. முத்தான இளைஞனாக உருவாக்க நினைத்த எனக்கு இவன் இப்படிப் பித்தன் என ஊராரிடம் பெயர் வாங்கிக்கொண்டு அவர்கள் பேசிய பேச்செல்லாம் இவன் கேட்டுக்கொள்வது என் நெஞ்சை அறுத்தது. அவனைக் கூப்பிட்டு சாத்திரங்களை போதித்து அவனை எப்படியும் மாற்றிவிடுவது என்று அவனைத் தொளைத்தெடுத்தேன். அவன் தேவனாக ஆகாவிட்டாலும், மானுட நிலைக்காவது அவனைத் தேற்றிட வேண்டுமென்று நினைத்து கோபம் கொண்டு கொதித்துப் போய் திட்டியும், சில நேரம் சிரித்துக்கொண்டு நயமாகச் சொல்லியும், சள்ளென்று சில நேரம் எரிந்து விழுந்தும், கேலிகள் பேசி மாற்ற முயன்றும் இன்னும் எத்தனையோ வழிகளில் என் வழிக்கு அவனைக் கொண்டு வர முயன்றேன்.

அவனா கேட்கிறவன்? பித்தனாக ஆகி, காட்டானாக மாறி, எந்த வேலையிலும் கவனமில்லாதவனாகி, எந்த பயனிலும் கருத்தில்லாதவனாகி, குரங்கு போல, கரடியைப் போல, கொம்புகள் உடைய பிசாசு போல ஏதோவொரு பொருளாக எப்படியோ நின்றான் அவன். அதனால், அகந்தையும், மமதையும் ஆயிரம் புண்ணாகி கடுமையான கோபத்துக்கு நான் ஆளாகி எப்படியாவது இந்த கண்ணனை நேராக ஆக்கிக் காட்டுவேன் என்று என் மனதிற்குள் தாபம் கொண்டு, இவனை எப்படியாவது ஒரு தொழிலில் ஓரிடத்தில் தக்கச் செய்வதென்று எண்ணி, அதற்குச் சமயம் பார்த்துக் காத்திருந்தேன்.

ஒருநாள் கண்ணன் தனியாக என் வீட்டில் இருந்த சமயம் அவனை அழைத்து, "மகனே! என்மீது அளவற்ற பாசமும் நேசமும் நீ வைத்திருப்பது உண்மை என்று நான் நம்பி உன்னிடம் ஒன்று கேட்பேன், நீ அதனை செய்திடல் வேண்டும். நாம் யாரிடம் சேர்கிறோமோ அவர்களைப் போலவே நாமும் ஆகிவிடுகிறோம் அல்லவா? சாத்திரங்கள்பால் நாட்டமும், தர்க்க சாத்திர ஞானமும், கவிதைகளில் உண்மைப் பொருளை ஆய்வு செய்வதில் ஆர்வமும் கொண்டோர் மத்தியில், பொருள் சம்பாதிக்க அலையும் நேரம் போக மற்ற நேரங்களில் இருக்க முடியுமானால் நன்மை விளைந்திடும். பொழுதெல்லாம் என்னோடு இருக்க விரும்பும் அறிவுடைய மகன் உன்னைத்தவிர வேறு யார் இருக்கிறார்கள்? ஆகையால், எனது உதவிக்காக எனக்குத் துணையாக நீ என்னுடன் சில நாட்கள் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். முடியாது என்று சொல்லி என் மனம் துயரமடையச் செய்யாமல், நான் சொல்லுவதற்கு சம்மதிக்க வேண்டும்" என்று சொன்னேன். அதற்குக் கண்ணனும் "ஆகா! அப்படியே செய்கிறேன், ஆனால் உங்களோடு வேலை எதுவும் செய்யாமல் சோம்பேறியாக எப்படி இருப்பது? ஏதாவது வேலை கொடுங்கள் செய்துகொண்டு உங்களுடன் இருக்கிறேன்" என்றான்.

 இவனுடைய இயல்பையும், சாமர்த்தியத்தையும் கருதி, "சரி! நான் எழுதுகின்ற கவிதைகளையெல்லாம் நல்ல காகிதத்தில் பிரதி எடுத்துக் கொடுக்கும் வேலையைச் செய்!" என்றேன். "நல்லது அப்படியே செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஒரு நாழிகைப் போது அங்கிருந்தான். "சரி, நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்ப நினைத்தான். எனக்கு கோபம் வந்தது, நான் எழுதிய பழங்கதை யொன்றை அவன் கையில் கொடுத்து, "இதை நன்கு பிரதி எடுத்துக் கொடு" என்றேன். அந்த வேலையைச் செய்பவன் போல கையில் வாங்கிக் கொண்டு கணப்பொழுது அங்கு இருந்தான். பின்னர் "நான் போகிறேன்" என்று எழுந்தான். எனக்கு கோபமான கோபம் வந்தது. "என்னடா சொன்னதற்கு மாறாக இப்போது போகிறேன் என்கிறாய்? உன்னைப் பித்தன் என்று ஊரார் சொல்லுவது பிழையில்லை போலிருக்கிறது" என்றேன். அதற்கு "இந்த வேலையை நாளை வந்து செய்கிறேன்" என்றான். "இந்த வேலையை இங்கே இப்பொழுதே எடுத்துச் செய்கிறாயா, இல்லையா? பதில் சொல்" என்று உறுமினேன். கண்ணிமைக்கும் நேரத்தில் "முடியாது" என்று சொல்லவும், சினத்தீ என் உள்ளத்தில் வெள்ளமாய்ப் பாய, கண்கள் சிவக்க, இதழ்கள் துடிக்க கோபத்தோடு நான் "சீச்சீ...பேயே, கொஞ்ச நேரம் கூட என் முகத்திற்கு எதிரே நிற்காதே! இனி எந்தக் காலத்திலும் நீ என்னிடத்தில் வர வேண்டாம். போ, போ, போ" என்று இடிபோல முழங்கிச் சொன்னேன். கண்ணனும் எழுந்து போகத் தொடங்கினான். என் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வர, "மகனே, போய்வா! நீ வாழ்க! உன்னைத் தேவர்கள் காக்கட்டும். உன்னை நல்லவனாக ஆக்க நினைத்து என்னென்னவோ செய்தேன். தோற்றுப்போய் விட்டேனடா தோற்றுப்போய் விட்டேன். என் திட்டங்களெல்லாம் அழிந்தன. மறுபடியும் இங்கு வராதே! போய் வா, நீ வாழ்க!" என்று வருத்தம் நீங்கி அமைதியாகச் சொன்னேன். கண்ணன் போய்விட்டான்.

திரும்பவும் ஓர் கணத்தில் எங்கிருந்தோ ஒரு நல்ல எழுதுகோல் கொண்டுவந்தான், நான் கொடுத்த பகுதியை மிக அழகாகப் பிரதியெடுத்தான். "ஐயனே! நீ காட்டிய வழிகள் அனைத்தையும் ஏற்று நடப்பேன். சொல்லும் அனைத்துக் காரியங்களையும் ஒழுங்காகச் செய்வேன். தங்களுக்கு இனி என்னால் எந்தத் துன்பமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன்" என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு ஓடி மறைந்தான். கண்களிலிருந்து மறைந்த கண்ணன் மீண்டும் என் நெஞ்சத்தில் தோன்றி பேசத் தொடங்கினான். "மகனே! ஒன்றை உருவாக்குதல், மாற்றுதல், அழித்திடுதல் இவையெல்லாம் உன்னுடைய செயல் இல்லை. இதனைத் தெரிந்துகொள். தோற்றுவிட்டேன் என்று நீ சொன்ன அந்தக் கணத்திலேயே நீ வென்றுவிட்டாய். உலகத்தில் எந்தத் தொழிலைச் செய்கிறாயோ அதில் பற்றோ, பாசமோ வைக்காமல் நிஷ்காம்யமாகச் செயல்புரிந்து நீ வாழ்க! என்றான். வாழ்க கண்ணன்!

7. கண்ணன் - என் சற்குரு.

பல சாத்திரங்கள் வேண்டி தேடினேன். அங்கே அளவற்ற சந்தேகங்கள். பழைய கதைகள் பேசும் மூடர்களின் பொய்களடங்கிய கூடையில் உண்மை எப்படிக் கிடைக்கும்? எந்த வகையாலும் உண்மைத் தெளிவு பெற வேண்டுமென்ற ஆசை மட்டும் நெஞ்சில் எப்போதும் இருந்து கொண்டிருந்த நேரத்தில் தினந்தோறும் ஆயிரம் தொல்லைகள் வந்து சேர்ந்தன. பலநாட்கள் நாடு முழுவதும் சுற்றினேன், அப்படிச் சுற்றிவரும்போது கரைபுரண்டோடும் யமுனை நதிக்கரையில் ஒரு கிழவர் தடியூன்றிச் சென்று கொண்டிருந்தார். முகத்தில் அறிவின் ஒளி வீசியது; தெளிந்த அமைதியான விழிகள், தலையில் சடைகள், வெண்மை நிற தாடி இவற்றோடு கூடிய அந்தக் கிழவரை வணங்கி அவருடன் பல செய்திகள் பேசி வரும்போது, என் உள்ளத்து ஆசைகளை உணர்ந்து கொண்ட அவர், மகிழ்ச்சியோடு என்னிடம் சொன்னார்: "தம்பி! உன் உள்ளத்துக்கு ஏற்றவன், ஆழ்ந்த மோனத்திலிருப்பவன், சிறந்த மன்னர் குலத்தில் உதித்தவன் அப்படிப்பட்டவன் வடமதுரையை ஆண்டுவருகிறான். அவன் தான் கண்ணன். அவனைச் சென்று சரணடைவாயேல் அவன் உனக்கு அனைத்தையும் உணர்விப்பான்" என்றார். நான் உடனே மதுரையம்பதிக்குச் சென்று அங்கு வாழ்கின்ற கண்ணனைப் போற்றி வணங்கி, என் பெயரையும் ஊரையும், வந்ததன் நோக்கத்தையும் சொல்லி, நான் அறிய விரும்பியவைகளை உபதேசிக்க வேண்டுமென்று கேட்டேன்.

ஆனால் அவனோ நல்ல அழகன், இளங்காளையர்கள் புடைசூழ இருந்து கொண்டு, கெட்ட பூமியைக் காத்திடும் தொழிலில் சிந்தை செலுத்திக்கொண்டு, ஆடல் பாடல் இவற்றை ரசித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து முன்பு யமுனையாற்றங்கரையில் பார்த்த அந்த கிழவரைக் கொன்றுவிடலாமா என்று எண்ணினேன். இவனோ, ஒரு சிறிய நாட்டை வைத்துக் கொண்டு அதனைக் காப்பதில் மனம் செலுத்தி கவலைப்பட்டுக் கொண்டிருப்பவன், இவன் எப்படி தவசீலர்களுக்கும் விளங்காத உண்மைத் தேடலுக்கு விடைகளைச் சொல்லமுடியும்? என்று கருதினேன்.

 பின்னர் அவன் என்னைத் தனியிடத்துக்கு அழைத்துச் சென்று "மகனே! உன்னையே நீ ஆழ்ந்து சிந்தித்து உணர்ந்து கொள். நீ அறிய விரும்பும் வாழ்வு பற்றிய உண்மையைச் சொல்லுகிறேன் கேள்! நெஞ்சத்தில் எந்தக் கவலையையும் வைத்துக் கொள்ளாமல், சிந்தையைப் பிரம்மத்தில் நிறுத்திக் களிப்புற்று, உன்னையே நீ மறந்து இருக்கும் போழ்தினில் அங்கு விண்ணையே அளக்கும் உண்மை அறிவு விளங்கிடும். அது சந்திரனைப் போல ஒளியுடையது, அது சத்தியமானது, நித்தியமானது, அதை எப்போதெல்லாம் சிந்திக்கிறாயோ அப்போதெல்லாம் வந்து உன்னைத் தழுவி அருள் செய்யும். அதனுடைய மந்திரசக்தியால் இந்த உலகுக்கெல்லாம் கிடைப்பது அளவற்ற ஆனந்தம் . இதை எப்போதும் மாயை என்று சொல்லும் மூடத்தனமான சாத்திரங்களைப் பொய் என்று ஒதுக்கித் தள்ளிவிடு. பெருங்கடலை பரமாத்மாவாகக் கொண்டால் அதில் விளங்கும் குமிழிகளெல்லாம் உயிர்கள். வானத்தில் சோதிவடிவாக இருக்கும் சூரியன் அறிவென்றால் அதனைச் சூழ்ந்திருக்கும் கதிர்கள் எல்லாம் உயிர்கள். பிரபஞ்சத்தில் காணப்படும் பொருள்கள் யாவையும் அந்தப் பேரறிவில் தோன்றும் வெவ்வேறு வண்ணங்கள். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் இன்பம் பெற்று, நேர்மையாக வாழ்வர். தங்கள் சித்தத்துக்குள்ளே சிவத்தைக் காண்பார். இங்கு அனைவரும் ஒன்றுபட்டு உலகத்தை ஆள்வார். நல்ல உயர்ந்த யானையைப் போல ராஜநடை நடந்து பெருமைகளையெல்லாம் பெற்று வாழ்வர். இங்கு நடப்பவை யெல்லாம் எந்தையாம் ஈசன் திருவருளால் நடப்பவையே. நம்மைச் சூழ்ந்திருக்கும் கவலைகளைப் புறந்தள்ளி விட்டு இன்பம், சுகம், ஆனந்தம் இவைகள் எப்போதும் நிலைத்திருக்கும். ஞானமெனும் ஜோதி அறிவில் சிறந்து விளங்கவும்; நல்ல எண்ணங்கள் நம் மனதில் நிலைத்திருக்கவும்; தர்ம நெறியிலிருந்து சிறிதும் பிறழாமல் நமக்கிட்ட பணியை இந்தப் பூமியில் சிறப்பாகச் செய்து வாழ்வோர், கற்ற கலைகளை நன்கு பயன்படுத்திச் செல்வங்களைத் தேடி, பிறருக்கு நேருகின்ற துன்பங்களைத் துடைத்து, அன்பு கசிய மற்றவர்களைப் பார்ப்பார்கள். அத்தகையோர் இனிய வாழ்க்கைத்துணை, செல்வம், புகழ், ஆட்டம் பாட்டம், சித்திரம், கவிதை ஆகிய கலைகளில் உள்ளத்தைச் செலுத்தி நடப்பர், பிறருக்கு நேர்ந்திடும் துன்பம் கண்டு துடித்திடுவார். அவர்கள் விரும்புகின்ற பொருள் அவர்களுக்கு வந்து சேரும், அத்தகையோர் காட்டிலோ, புதர்களிலோ இருந்தாலும் அந்த இடம் தெய்வத்தோட்டம் எனப் போற்றலாம். ஞானியர்களின் குணங்களைக் கூறினேன்; அந்த ஞானத்தை விரைவில் கிடைக்கப்பெறுவாய் என்று கண்ணன் சொல்லவும், உண்மைநிலையினை உணர்ந்தேன். முந்தைய கேவலமான மனிதக் கனவுகளெல்லாம் எங்கே போயிற்றோ தெரியவில்லை. ஓர் அரிய அறிவு எனும் தனிச்சுடரை மட்டும் கண்டேன். அதனுடைய திருவிளையாடல்தான் இந்த உலகம் என்பதைப் புரிந்துகொண்டேன்.


No comments: