பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, October 4, 2011

மராத்திய மன்னர்களின் வாழ்க்கை

மராத்திய மன்னர்களின் வாழ்க்கையும், நாட்டின் நிலைமையும்.

தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னர் ஏகோஜி என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்குத் தீபாபாய், அண்ணுபாய் என இரு மனைவியர் இருந்தனர். இவர்கள் தவிர கங்காபாய் என ஒரு மனைவியும் இருந்ததாக ஒரு குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. அந்தக் குறிப்பு, "1776இல் கைலாசவாசி ஏகோஜி ராஜா சம்சாரம் கங்காபாய் பரலோகம் அடைந்ததற்கு உத்தரகிரியைக்கு 50 சக்கரம் வழங்கப்பட்டது" என்பது. ஏகோஜிக்கு ஆசை நாயகிகளாக இருந்தவர்கள் 30 பேர் என்பதால் இந்த கங்காபாய் அவர்களில் ஒருவராக இருத்தல் கூடும். ஏகோஜி 1682இல் காலமானர், அவருடைய மனைவி என குறிப்பிடப்படும் கங்காபாய் 1776இல் இறந்தார் என்றால் ஏகோஜிக்குப் பிறகு அத்தனை நாட்களா உயிரோடு இருந்தார்கள்? குழப்பமான செய்திதான்.

ஏகோஜிக்குப் பிறகு அவருடைய மூன்றாவது மகனான துக்கோஜி ஆட்சிக்கு வந்தார். இவருக்குத் திருமணம் செய்து கொண்ட மனைவியர் ஐவரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டவர் அறுவர் என்று தெரிகிறது. இந்த அறுவருள் ஒருவர் கத்திக் கல்யாணம் செய்துகொண்ட மராத்தியப் பெண் அன்னபூர்ணாபாயி என்பவரும் ஒருவர். அவருடைய மகன் தான் பிரதாபசிம்மன். இவரைத் தவிர சாமாபாயி என்றொரு பெண்ணும் இருந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. துக்கோஜி 1736இல் தெய்வகதி அடைந்தார் என்ற குறிப்பினால் அவர் இறந்த ஆண்டு உறுதியாகிறது. அவருடைய மனைவியருள் ஒருவரான லக்ஷும்பாயி என்பவர் 1779இல் இறந்தார் என்று குறிப்பிடப் படுவதால், கணவன் இறந்த பின் இவர் 43 ஆண்டுகள் வாழ்ந்தார் எனக் கொள்ளலாம். துக்கோஜிக்கு அன்னபூர்ணாபாயிக்குப் பிறந்த பிரதாபசிம்ம ராஜா தான் அரசன் ஆனதும் தனது மாற்றாந்தாயான இந்த லக்ஷும்பாயி என்பவரின் நினைவாக மாதிரிமங்கலம் எனும் கிராமத்தில் நிலக்கொடை கொடுத்ததாக ஒரு செய்தி கூறுகிறது.

துக்கோஜிக்குப் பிறகு இரண்டாம் ஏகோஜி எனும் பாவாசாஹேப் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு ஆறு மனைவியர். அவர்களுள் மூத்தவர் சுஜான்பாயி எனும் ராணி. பாவாசாஹேப் இறந்த பின் இவருக்குப் பிள்ளைகள் இல்லாமையால் மூத்த மனைவியான சுஜான்பாயிதான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். இது பற்றிய குறிப்புகள் 1857இல் இரண்டாம் சிவாஜியின் மனைவி காமாட்சியம்பாபாயி அவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு சம்பந்தமான ஆவணமொன்றில் இருக்கின்றன. "தஞ்சாவூரில் ஐந்தாவது மன்னராக பாவாசாஹேப் புத்திர சந்தானமில்லாமல் ஆறு பெண்சாதிகளை விட்டுவிட்டு இறந்து விட்டார்கள் அல்லவா? அவர்களுள் முதல் சம்சாரமான சுஜான்பாயி என்பவர்கள் அவருடைய எல்லா ராஜ்யமும் தான் முக்கியமுடையவர் என்று எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொண்டு ராஜ்யபாரம் நடத்தினார்" என்று குறிப்பிடுகிறது.

துக்கோஜி ராஜாவுக்கு நாயுடு சாதியில் ஐந்து பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட மனைவியராக இருந்திருக்கின்றனர். இவர்கள் மூலமாக அவருக்குப் பிறந்த பிள்ளைகள் மாலோஜிராஜா, அரிச்சந்திரராஜா என்கிற அண்ணாசாஹேப், நானாசாஹேப் என மூவர். இம்மூவரும் துக்கோஜி இருந்தபோதே காலமாகிவிட்டனர். இதில் நானாசாஹேப் என்பவருக்கு அப்பூசாஹேப் என்று ஒரு மகன் இருந்தார். இவர் சரபோஜி IV காலத்திலும் உயிரோடு இருந்திருக்கிறார் என்பது இவர் சென்னை ஆங்கிலேய கவர்னருக்கு எழுதிய ஒரு கடிதம் மூலம் தெரிய வருகிறது. அந்தக் கடிதத்தில் அவர் எழுதுவதாவது. "எங்களுக்கு வேறு வாசற்படி வைத்துச் சுவர் எழுப்பிச் சரபோஜி மகாராஜா ஜனங்க்கள் நமது பக்கம் வராமல், எங்களுக்கு ஒருவித அபாயமும் வராமல் பாதுகாப்புக்கு உங்க்கள் பாரா ஒன்று நியமிக்க வேணும். நாங்க்கள் வெளியே சுவாமி தரிசனத்துக்குப் போகும்போதும் வரும்போதும் தகுந்த பந்தோபஸ்துகள் செய்துகொண்டு வரவேண்டும். நாங்கள் ஏகோஜியின் வமிசத்தார். சரபோஜி மகாராஜா அவர்கள் எங்கள் பிள்ளைகளுக்கு அநியாய போதனை செய்து மித்திர பேதம் செய்து வருகிறார். சரபோஜி மகாராஜா எங்களுக்குச் சத்ரு. ஆகையால் எந்த நேரத்தில் எங்களுக்கு அபாயம் வருமோ என்று அவருக்கு உட்பட்டு நடந்து வருகிறோம்". இதிலிருந்து இவ்விருவருகுள் நல்ல உறவு இருக்கவில்லை என்பது தெரிய வருகிறது.

பிரதாபசிம்ம மகாராஜாவுக்கு ஐந்து மனைவியர் என்றும், சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆசை மனைவியர் ஏழு பேரும் இருந்தனர் என்பதைப் பார்த்தோமல்லவா? இவருக்குப் பின் பதவிக்கு வந்த இவரது மகன் துளஜா ராஜாவுக்கு ஆறு மனைவியர். இவருக்கு ஆசை நாயகிகள் குறித்து விவரங்கள் இல்லை. இந்த துளஜா ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட சரபோஜி IVக்கு இரண்டு மனைவியர். இவர் சேர்த்துக் கொண்ட நாயகிகள் பலர். இது போன்ற ஆசைக் கிழத்தியர் அனைவரையும் ஒரு தனி மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த மாளிகைக்கு "கல்யாண மகால்" என்று பெயர். இங்கு உள்ளப் பெண்களை கல்யாணமால் மகளிர் என்பர். சரபோஜிய்ன் மகன் சிவாஜி IIக்கு முறைப்படி மணந்து கொண்ட மனைவியர் மூவர். அதன் பின் இவருக்குக் குழந்தைகள் இல்லை என்பதால் ஒரே நாளில் இவர் 17 பெண்களை மணந்து கொண்டிருக்கிறார். அதன் பின் இவர் நீண்ட நாட்கள் வாழவில்லை. மூன்று ஆண்டுகளில் இறந்தும் போய்விட்டார். அப்படி இவர் சேர்த்துக் கொண்ட மகளிர் மங்களவிலாஸ் எனும் மாளிகையில் வாழ்ந்து வந்தனர்.

இப்படி மராத்திய மன்னர்கள் திருமணம் செய்துகொண்ட மனைவிமார்களும், சேர்த்துக் கொண்ட மாதர்களும், மாண்டவர் போக மீதமிருந்தவர்கள் நெடு நாட்கள் உயிரோடு இருந்திருக்கின்றனர். இவர்களை யெல்லாம் இந்த மாளிகைகளில் வைத்துக் காப்பாற்றி வந்திருக்கின்றனர். இப்படி இந்தக் குடும்பங்களுக்காக செலவு செய்யப்பட்டிருக்கிறது.

தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் மராத்தியப் பிரதேசத்திலிருந்து வந்தவர்களாதலின், தமிழ் நாட்டு பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபட்டவர்களாக இருந்தனர். இவர்கள் பேசும் மொழியும் மாறுபட்டிருந்தது. ஆகையால் மராத்தியப் பிரதேசத்திலிருந்து பலரையும் இங்கு அழைத்து வந்து குடியமர்த்தினர். இவர்களில் பலர் உயர்ந்த அரசாங்கப் பதவிகளை வகித்தனர். அப்படி உயர் பதவி வகித்தவர்கள் செல்வந்தர்களாகவும், செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருந்து வந்தனர். இவர்களது பெயருக்குப் பின்னால் 'அண்ணா' என்றும் 'அப்பா' என்றும் முடியும்படி இருக்கும். அப்படி மராத்திய ராஜ்யத்தில் பிரபலமாக இருந்த சில 'அப்பா'க்கள், தத்தாஜியப்பா, மானோஜியப்பா, ரகுனாத அப்பா, சோனாஜியப்பா, முத்தோஜியப்பா, மல்ஹர்ஜியப்பா என்பவர்களாவர். இப்போதும் தஞ்சாவூர் நகரத்தில் மானோஜியப்பா தெரு, முத்தோஜியப்பா சந்து போன்ற இடங்கள் உள்ளன. 'அண்ணா'க்களில், சிவாஜி II ராஜாவிடம் அமைச்சர்களாக இருந்த பெரியண்ணா சின்னண்ணா இவர்களைக் குறிப்பிடலாம். இதில் பெரியண்ணா என்பவரது பெயர் முத்தோஜி கோவிந்தராவ், சின்ன அண்ணா என்பவர் ரா.வெங்க்கட் ராவ் கோவிந்தராவ். இவர்கள் பெயரால் ஒரு தர்மஸ்தாபன மடம் இப்போதும் மானோஜியப்பா தெருவில் இருக்கிறது. இவர்கள்தான் மராத்தியிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்த "ஹரிகதை" எனும் அரிய கலையைப் பேணி வளர்த்தவர்கள். இவர்கள் உருவாக்கிய முறைதான் இப்போதும் ஹரிகதையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திருவையாற்றில் சற்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை விழா நடைபெறும் சமயம் தஞ்சாவூரில் "வரகப்பய்யர் சந்து" எனுமிடத்திலுள்ள ஒருவரது வீட்டில் ஸ்ரீ தியாகராஜர் வழிபட்ட ஸ்ரீ ராமபட்டாபிஷேக விக்கிரகம் ஒன்றுக்கு ஆராதனை நடைபெறுவதை நாம் அறிவோம். அந்த சந்துக்கு வரகப்பய்யர் சந்து என்று பெயர் வரக் காரணமான நபர் யார் தெரியுமா? மராத்திய மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த வராஹப்பையா ராமசாமி அய்யர் என்பவரின் பெயரால்தான் இந்த சந்து அழைக்கப்படுகிறது. "சேனாதுரந்தார்" என்று இவரைக் குறிப்பிடுகிறார்கள். ஒரு குறிப்பேட்டில் இவரைப் பற்றிக் குறிப்பிடும் செய்தி, "சத்திரம் வகையாறாவைச் சேர்ந்த திம்மதிகாரர்களின் வேலைபார்க்கும் சேனாதுரந்தார்" என்று இருக்கிறது. சங்கீத வித்தையைக் கண்காணிப்பதும், சரஸ்வதி மகால் பண்டாரக் கண்காணிப்பும் இவருடைய வேலையாக இருந்திருக்கிறது. இவர் சங்கீதத்தில் வல்லவராகவும் தெலுங்கு மொழியில் பண்டிதராகவும் விளங்கியிருக்கிறார்.

பிரபல அப்பா ஒருவரைப் பற்றிய விவரங்களைப் பார்க்கலாமா? மானோஜியப்பா எனும் மானோஜி ராவ். இவர் பிரதாபசிம்ம ராஜாவின் படைத் தளபதியாக இருந்தவர். ஆங்கிலேயக் கம்பெனி படைகளுக்கு எதிராக தேவிகோட்டைப் போரில் வீரமாகப் போர் புரிந்தவர். 16-4-1872இல் கோயிலடியில் நடந்த போரில் இவர் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்தார். ஆற்காட்டு நவாபு சந்தா சாஹேபு இவரிடம் தான் சரண் அடைந்தான்.

இது தவிர லாவணி எனும் ஒரு அரிய கிராமப்புறக் கலையும் மராத்தியர்கள் இங்கு கொண்டு வந்த கலைதான். அதில் பங்கு பெற இருவர் வேண்டும். போட்டியிட்டுப் பாடல்களைப் பாடுவர். ஒரு 'டேப்' எனும் தோல் கருவியைத் தட்டிக் கொண்டு அவ்வப்போதே சமயத்துக்குத் தகுந்தபடி கவி இயற்றிப் பாடும் திறமை வேண்டும். கிராமங்களில் திரெளபதி அம்மன் கோயில் போன்ற இடங்களில் இதுபோன்ற லாவணிகள் நடைபெறுவதைப் பார்த்திருக்கலாம். இதில் மன்மதன் எரிந்தது, எரியாதது என்று இரு கட்சிகளாகப் பிரிந்து பாடும் லாவணி இப்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இப்படி குடியேறிய பெருந்தனக்காரர்கள், அதிகாரிகளுக்கெல்லாம் சிற்றேவல் செய்ய கீழ் மட்டத்திலும் ஆட்கள் தேவைப்பட்டன. அப்படிப்பட்டவர்களும் அங்கிருந்தே இங்கு வரவழைக்கப் பட்டனர். அப்படி வந்து சேர்ந்த பெண்களை 'அக்காமார்' என்பர்.

இங்கு சோழ தேசத்தில் கணக்கற்ற வேதம் படித்த பிராமணர்கள் உண்டு. இங்கிருந்துதான் பாலக்காடு போன்ற இடங்களுக்கு வேத பிராமணர்கள் குடியேறியதாக வரலாறு உண்டு. மராட்டியர்கள் அவர்கள் ஊரிலிருந்து பிராமணர்களையும், படைகளுக்கும், மற்ற பல வேலைகளுக்கும் பிராமணர் அல்லாதவர்களையும் அதிக அளவில் அழைத்து வந்து குடியமர்த்தினர். அங்கிருந்த வந்த பிராமணர்களை 'தேசஸ்த' பிராமணர் என்று அழைப்பர்.

இது தவிர, அப்போது தேவதாசி முறை இருந்தமையால் நல்ல அழகுள்ள பெண்கள் பலர் தேவதாசிகளாக இருந்து வந்தனர். இவர்களில் பதியிலார் என்றும், பரத்தையர் என்றும் சிலர் இருந்து வந்ததால் சமுதாயத்தில் ஒட்டுமொத்த கட்டுப்பாடான ஒழுக்கம் நிலவியதாகச் சொல்ல முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி எனும் 'ராஜராஜ்யம்' இங்கு நிலவியிருக்கவில்லை.

அப்போதும் சாதிப் பிரிவுகள் இருந்து வந்தன. இவர்களுக்கிடையே சச்சரவுகளும் ஏற்பட்டு அரசாங்கம் தலையிட வேண்டியும் இருந்திருக்கிறது. உள் நாட்டுச் சமயங்களைத் தவிர்த்து ஆங்கிலேய, பிரெஞ்சுக்காரர்களின் ஆக்கிரமிப்புக் காரணமாக கிறிஸ்துவம் பரவத் தொடங்கியது. கீழ்மட்ட சாதியினர் பலர் புதிய கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர். ஆற்காட்டுப் படைகள், மைசூரின் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் ஆக்கிரமிப்பின் காரணமாக இஸ்லாமும் இங்கு பரவியது. அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களும் இங்கு ஆங்காங்கே உருவாயின.

இசையும் மருத்துவமும் பேணிக் காப்பாற்றப்பட்டன. மராத்திய மன்னர்களின், குறிப்பாக சரபோஜி IVஇன் அவையில் பல கர்னாடக சங்கீத வித்வாங்களும், மருத்துவ வல்லுனர்களும், தமிழ்ப் புலவர்களும் நிறைந்திருந்தனர்.

இந்த மடாலயங்கள் அரசரின் ஆதரவைப் பெற்றிருந்தன. காஞ்சி காமகோடி மட அதிபரும் கும்பகோணத்துக்கு வந்து சேர்ந்தார். அவருக்கும் மராத்திய மன்னர்கள் மடத்தைக் கட்டி ஆதரவளித்தனர். சம்ஸ்கிருத மொழியும் செழித்து வளர்ந்து வந்தது. பல மொழிப் புலவர்கள் அவையை அலங்கரித்தனர். தமிழ், தெலுங்கு, மராத்தி, பாரசீகம், சமஸ்கிருதம் போன்றவை இங்கு நன்கு பாதுகாக்கப்பட்டன.

1801இல் துளஜா ராஜா இறந்த போது அவருடைய 'அஸ்தி' காசிக்குக் கொண்டு சென்று கங்கை நதியில் கரைக்கப்பட்டதாக குறிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நீண்ட தூர பயணங்கள் அப்போதும் இவர்களால் போக முடிந்திருக்கிறது என்பது வியப்பிற்குரிய செய்தி.

நாட்டில் பெரும் நிலக்கிழார்கள் பலர் இருந்தனர். சிறு நிலவுடைமையாளர்கள் ஒவ்வொரு ஊரிலும் அதிகம் இருந்தனர். இவர்கள் தவிர நிலமற்ற கூலிகளாக பெருமளவு மக்கள் உழைப்பை நம்பி வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்ட சமூக அமைப்புகள், அந்த கால வாழ்க்கை, நீதி பரிபாலனம், புழக்கத்தில் இருந்த நாணயங்கள் இவை குறித்தும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.

கண்டிராஜா அரண்மனை:

தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் கண்டிராஜா அரண்மனை என்றொரு இடம் இருக்கிறது. இந்தப் பெயர் வரக் காரணம் என்ன என்பதற்கு இந்த மராத்தியர் வரலாற்றில் சில குறிப்புகள் காணப்படுகின்றன. 1816இல் ஆங்கிலேயர்கள் இலங்கையில் உள்ள கண்டியைக் கைப்பற்றினார்கள். அப்போது அங்கு விக்கிரமசிங்கன் என்பவர் ஆட்சி செய்து வந்தார். கண்டியைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் மன்னர் விக்கிரமசிங்கனையும், அவரது தாய் மற்றும் நான்கு மனைவியரை அந்த மன்னரின் ஆட்கள் ஐம்பது பேருடன் ஒரு படகில் ஏற்றி தமிழகத்துக்கு அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது. சென்னை சென்றடைந்த அவர்களை சென்னை கம்பெனியார் வேலூருக்கு அனுப்பியிருக்கின்றனர். வெள்ளையரின் கைதிகளாக இங்கு வந்த கண்டிராஜாவும், ராணிகளும் அவர்கள் ஊழியர்களும் பின்னர் ராஜாவைத் தவிர மற்றவர்கள் தஞ்சைக்கு வந்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தஞ்சை மகர் நோன்புச்சாவடிக்கு வந்தார்கள். இந்த விக்கிரமசிங்கனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் கீர்த்திவர்மராஜா. இவர்களுக்காகக் கட்டப்பட்டு தங்க வைக்கப்பட்ட இடம்தான் கண்டிராஜா அரண்மனை.

மராத்தியர் ஆட்சிக்குட்பட்ட தஞ்சை ராஜ்யத்தின் பரப்பளவு:

மராத்திய மன்னர்கள் ஆண்ட பகுதி என்பது இப்போதைய தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தை உள்ளடக்கியப் பகுதிகள். ராஜ்யம் ஐந்து பிரிவுகளாக வகுக்கப்பட்டு ஒவ்வொன்றும் 'சுபா' என்று அழைக்கப்பட்டது. அந்த சுபாக்கள், பட்டுக்கோட்டை, மன்னர்குடி, கும்பகோணம், மாயூரம், திருவாடி (திருவையாறு) என்பன. ஒவ்வொரு சுபாவிற்குள்ளும் பல சீமைகள் என்று பிரிக்கப்பட்டன. நாட்டில் பல சிற்றூர்களிலும் கோட்டைகள் இருந்தன. ஒவ்வொரு கோட்டைக்கும் தலைவராக இருந்தவர் 'கில்லேதார்' என்று அழைக்கப்பட்டார். அப்படி இருந்த சில கோட்டைகள் பட்டுக்கோட்டை, மகாதேவபட்டணம், சாக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, பந்தநல்லூர் ஆகியவை.

கிழக்கிந்திய கம்பெனியாருடன் மராத்திய மன்னர்களின் தொடர்பு.
தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட கிழக்கிந்திய கம்பெனியாருடன் தொடர்பு கொண்டிருந்தனர். 'கும்பெனியார்' என்று அந்தக் காலத்தில் குறிப்பிடப்பட்ட இந்த ஆங்கிலக் கம்பெனியாருடன் மராத்திய மன்னர்கள் பல உடன்படிக்கைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த ஒப்பந்தங்களை கவனித்தால் இவற்றின் மூலம் மராத்திய மன்னர்கள் தங்களுடைய பல உரிமைகளை இழந்ததும், படைகளைக் குறைத்துக் கொள்ள நேர்ந்ததும், ஆங்கிலேயர்களின் படையைத் தஞ்சையில் தங்க வைத்து செலவு செய்ததும், ஆற்காட்டு நவாபுடனான உறவுகளை கும்பெனியார் வழியாக செய்து வந்ததும் தெரியவருகிறது. புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலெயருக்குப் பகை என்றால் தஞ்சை மன்னர்களுக்கும் பகை என்றாகியது. ஆங்கிலேயர்களின் கம்பெனி பிரதிநிதியாக தஞ்சையில் 'ரெசிடெண்ட்' என்று ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். சரபோஜி IV காலத்தில் வரிவசூலையும் ஆங்கிலேயர்களே செய்துகொள்ளத் தொடங்கினர். தஞ்சை நகரம் மட்டும்தான் மராட்டிய மன்னர்களின் நேரடிப் பார்வையில் இருந்து வந்தது.

ஆங்கில அதிகாரிகள் முறையே கவர்னர் ஜெனரலாகவும், கவர்னர்களாகவும், ரெசிடெண்ட் ஆகவும், பிற அலுவலர்களாகவும் இருந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட சிலரது பெயர்களைப் பார்க்கலாம். கவர்னர் ஜெனரலாக இருந்தவர்களில் வாரன் ஹேஸ்டிங்ஸ் இவர் கல்கத்தாவில் இருந்தார். அடுத்து லார்டு கார்ன்வாலிஸ் என்பவர். இவரும் கல்கத்தாவில் இருந்தவர். தஞ்சைக்கு இவர் இரு முறை வந்திருக்கிறார்.

சென்னையில் கம்பெனியின் கவர்னர்களாக இருந்தவர்களில் லார்டு பிகாட் (Lord Pigot) என்பவர் இருமுறை பதவி வகித்தவர். 1773இல் துளஜா ராஜா ஆற்காட்டு நவாபினால் சிறையில் அடைக்கப்பட்டு தஞ்சை நவாபு ஆட்சியில் இருந்தது. அரண்மனை நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன. தளபதி மானோஜி ராவும் சிறையில் அடைக்கப்பட்டார். இவைகள் எல்லாம் அப்போது சென்னையில் கவர்னராக இருந்த விஞ்ச் (Vynch) என்பவரின் தூண்டுதலோடு நடைபெற்றது. சென்னை கவர்னரின் இந்தச் செயலை இங்கிலாந்தில் இருந்த கம்பெனியின் Council of Directors ஏற்றுக் கொள்ளவில்லை. நவாபிடமிருந்து ராஜ்யத்தைக் கைப்பற்றி துளஜாவிடம் ஒப்படைக்குமாறு கம்பெனி உத்தரவிட்டது. உடனே லார்டு பிகாட் 11-4-1776இல் தஞ்சைக்கு வந்து நவாபை நீக்கிவிட்டு துளஜாவை விடுதலை செய்து ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார். அதனையடுத்து துளஜா ஆங்கில கம்பெனியாருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி வெள்ளைத் துருப்புக்கள் தஞ்சையிலும் வேறு சில இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டன. அவர்களின் செலவுக்காக ராஜா 4 லக்ஷம் வராகன் கொடுத்து வந்தார்.

அடுத்ததாக அலெக்சான்டர் டேவிட்சன் (Alexandar Davidson) என்பவர். இவர் 18-6-1785இல் சென்னை கவர்னர் ஆனார். இவரையடுத்து ஆர்ஸ்பால்டு காம்ப்பெல் (Sir Archbald Campbell) என்பவர் வந்தார். இவர் கவர்னராகவும் படைத் தளபதியாகவும் இருந்தார். துளஜா ராஜா காலமானபோது இவர்தான் சென்னை கவர்னர். துளஜாவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அமரசிம்மன் தனது ஆட்சி காலத்தில் ஆடம்பரச் செலவுகள் செய்கிறார் என்று புகார் போனதன் அடிப்படையில் அப்படி ஆடம்பரச் செலவுகள் செய்யக்கூடாது என்று இவர் மன்னருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இவர்களையடுத்து லார்டு ஹோபர்டு என்பவர் கவர்னர் ஆனார். இவர் நான்கு ஆண்டுகள் 1794 முதல் 1798 வரை கவர்னராக இருந்தார். இவர் மன்னர் சரபோஜியிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்திருக்கிறார். இவ்விருவரும் வேட்டைக்கு ஒன்றாகச் சென்றிருக்கிறார்கள். இவரையடுத்து கவர்னராக வந்தவர் சர் தாமஸ் மன்றோ (Sir Thomas Manro) இவர் 1820 முதல் 1827 வரை கவர்னராக இருந்தவர். இவரைப் பற்றிக் குறிப்பிடும் ஆவணம் ஒன்றில் இவரை The Right Hon'ble Major General Sir Thomas Manro K.C.B.Baronet" என்று குறிப்பிடப்படுகிறார். இவரும் 1826இல் தஞ்சாவூருக்கு வருகை புரிந்திருக்கிறார். இவருக்குப் பின் 1829இல் வாஷிங்டன் என்பவர் கவர்னராக இருந்திருக்கிறார்.

ரெசிடெண்டுகள்.
ரெசிடெண்டுகள் என்பவர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் பிரதி நிதிகளாகத் தஞ்சையில் இருந்த அதிகாரிகள். அந்தந்தப் பகுதிகளை ஆண்ட அரசர்களை இவர்கள் மேற்பார்வையிட்டு வந்தனர். அப்படித் தஞ்சையில் ரெசிடெண்டுகளாகப் பலர் இருந்திருக்கின்றனர். அவர்களில் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் என்பவர் ஒருவர். மற்றொருவர் அலெக்சாண்டர் மக்லோட் (Alexandar Macleod) என்பவர். இவர் துளஜா ராஜா காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. ஜி.ஹெச்.ராம் என்றொருவர் இருந்திருக்கிறார். அடுத்து பெஞ்சமின் டூரின் (Benjamin Torin). இவர் 1798 முதல் தஞ்சையில் ரெசிடெண்டாக இருந்திருக்கிறார்.

இந்த ரெசிடெண்டுகளுக்குச் சம்பளம் மராத்திய அரசர்களே கொடுத்து வந்தார்கள். இந்த பெஞ்சமின் டூரினுக்குச் சம்பளம் 1000 பவுண்டுகள். வில்லியம் பிளாக்பர்ன் (William Blackburn) என்பவரும் ரெசிடெண்டாக இருந்திருக்கிறார். ஜான் பைல் (John Fyle), ஜே.பிளாக்பர்ன், கிண்டர்ஸ்லி, மங்கமாரி, பாரட் ஆகியோரும் ரெசிடெண்டாக இருந்து வந்தனர். இதில் பாரட் என்பவர் ஆக்டிங் ரெசிடெண்டாக இருந்தவர். 1847இல் ஜே.பிஷப் என்பவரும், ஹெச்.போர்பஸ் (H.Forbes) ஆகியோரும் ரெசிடெண்டாக இருந்தனர். இந்த போர்பஸ் பட்டுக்கோட்டையில் தங்கியிருந்திருக்கிறார். மராத்தியர் ஆட்சி 1855இல் முடிவுக்கு வந்த பின்னர் பிலிப்ஸ் என்பவர் 1858, 59 ஆண்டுகளில் ரெசிடெண்டாக இருந்திருக்கிறார்.

ஸ்வார்ட்ஸ் பாதிரியார்.
மன்னர் சரபோஜியின் காப்பாளராக இந்த ஸ்வார்ட்ஸ் பாதிரியார் இருந்ததையும், இவருக்காக மன்னர் ஒரு வழிபாட்டுத் தலத்தை சிவகங்கைத் தோட்டத்தில் கட்டிக் கொடுத்திருப்பதையும் முன்னமே பார்த்தோமல்லவா? இவர் ஒரு ஜெர்மானிய பாதிரியார். தரங்கம்பாடியில் 11 ஆண்டுகள் இருந்தவர். பின்னர் திருச்சினாப்பள்ளியிலும் இருந்தார். கி.பி.1769இல் தஞ்சைக்கு வந்தார். இங்கு அவர் கிறிஸ்தவ மதப் பணியில் ஈடுபட்டிருந்தார். துளஜா ராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டு அவரோடு நண்பராகப் பழகினார். இவருக்கு பாரசீகம், உருது, மராத்தி ஆகிய மொழிகள் தெரியும். கிழக்கிந்திய கம்பெனியாரிடம் இவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. 1787இல் துளஜா சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட பிறகு, அந்தச் சிறுவனை கல்வி புகட்டிப் பாதுகாக்கும் பொறுப்பை ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம்தான் கொடுத்திருந்தனர். இவர் 13-2-1798இல் காலமானார்.

அரசாங்க அலுவலர்கள்.
தஞ்சை மராத்தியர் ஆட்சியில் மன்னர்தான் ஆட்சித் தலைவர். அவருக்கு உதவியாகப் பல அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் முறையே சர்க்கேல், சுபேதார், பதக்தார், அமல்தார், சிரஸ்தேடார், தாசில்தால், ஹவில்தார், கொத்தவால், கார்பாரி, கில்லேதார், கார்கூன், திம்மதி, காவல்காரர், ஹர்காரா, வக்கீல், மஹால் மத்யஸ்தர், கமாவிஸிதார், கலாசி, கோட்டிவாலா, நிஷ்பதி, இமாரதி, பதக்னீஸ், காஸ்னீஸ், தஸ்தூர், ராயஸ், ஹேஜிப், சிட்னீஸ், பாக்குவான் இப்படிப் பலப் பலப் பெயர்களில் ஊழியர்கள் இருந்திருக்கிறார்கள்.

சர்க்கேல் என்பவர் தலைமை அதிகாரி போல அதிகாரமுள்ள பதவி. அதற்கடுத்து சுபேதார் எனும் பதவி. மராத்திய ஆட்சிக்குரிய பகுதிகளாகப் பட்டுக்கோட்டை, மன்னார்குடி, மாயூரம், கும்பகோணம், திருவையாறு என சுபாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இதில் ஒவ்வொரு சுபாவுக்கும் ஒரு அதிகாரி உண்டு. அவர்தான் சுபேதார் எனப்படுபவர். இந்த சுபேதார்கள் ஆட்சித் தலைமை மட்டுமல்லாமல், ராணுவத் தலைமையும் பெற்றிருந்தார்.

ஒரு சில ஊர்களை உள்ளடக்கிய பகுதிக்கு பதக் என்று பெயர். இந்த கிராமக் குழுக்களுக்கு பதக்தார் எனும் அதிகாரி இருந்தார். இப்போதைய பஞ்சாயத்து யூனியனுக்கு ஒப்பாகச் சொல்லலாம். வருவாய்த் துறையை கவனித்துக் கொள்ள அமில்தார் என்ற அதிகாரி இருந்தார். ஆவணங்களைக் காக்கும் பணிக்கு சிரஸ்ததார் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். தாசில்தார் என்பவர் ஒரு சிறிய பகுதியில் வரி வசூல் செய்யும் பணியில் இருந்தவர். இராணுவத்தில் ஹவில்தார் என்ற பதவி இருந்தது.

கோட்டையின் காவல் அதிகாரியாக கொத்தவால் என்பவர் இருந்தார். கார்பாரி என்பது அரண்மனையில் ஒரு பெரிய பதவி. கில்லேதார் கோட்டையில் மிகப் பெரிய பொறுப்புள்ள அதிகாரி. ஒரு மஹால் அல்லது சிறு பிரிவுக்கு அதிகாரி மஹால்மத்யஸ்தர் எனப்படுவார். சூப்பர்வைசர் என்கிறோமல்லவா அது போன்ற பொறுப்புள்ளவர் கமாவிஸ்தார். குமாஸ்தா அல்லது கணக்கெழுதியாக இருப்பவர் கார்கூன். நாட்டிலும், வெளியிலும் ஒற்றர்களாக வேவு பார்ப்பவர்களுக்கு ஹர்காரா என்று பெயர். நீதிமன்றங்களில் திம்மதி என்றொரு பதவி இருந்தது. பொது மராமத்து பணியினைச் செய்பவர் இமாரதி எனப்படுவர். ஹேஜிப் என்பவர் கணக்குப் பிள்ளை. சிட்னீஸ் என்பது ஸ்டெனோகிராபர் பணி போன்றது. அதிகாரிகள் சொல்வதை எழுதுவது. காவலர்கள் "காவல்காரர்கள்" என அழைக்கப்பட்டனர். இதுபோன்ற பல பணிகளுக்கு ஆட்கள் இருந்தனர்.

மராட்டியர் ஆட்சியில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள்.

தஞ்சை மராத்தியர் ஆட்சியில் பல்வகையான நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. ஆவணங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பெறும் சில நாணயங்களில் "சக்கரம்" என்பது ஒன்று. மேலும் 'புலிவராகன்', பணம், காசு என்றெல்லாமும் குறிப்பிடப் பெறுகிறது. இதில் பத்துப் பணம் ஒரு சக்கரம் என்று எழுதப்படுகிறது.

இது தவிர சென்னைப்பட்டணம் வெள்ளிப்பணம் என்றொரு நாணயம் குறிப்பிடப்படுகிறது. அதாவது இரண்டரை பணம்த்துக்கு ஒரு சென்னைப்பட்டனம் வெள்ளிப்பணம். சக்கரத்தில் நாலில் ஒரு பங்கு. தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள விவரப்படி நாணய மாற்று கீழ்கண்ட முறையில் இருந்திருக்கிறது.

32 காசுகள் என்பது 1 பணம்.
2 1/2 பணம் என்பது 1 சென்னைப்பட்டண வெள்ளிப் பணம்
4 வெள்ளிப் பணம் அல்லது 10 பணம் என்பது 1 சக்கரம்
4 1/2 சக்கரம் அல்லது 45 பணம் என்பது 1 புலி வராகன்

இந்த வராகன் சில இடங்களில் மாறுபட்ட மதிப்பிலும் இருந்திருக்கிறது. பரங்கிப்பேட்டை வராகன் என்றும், நாகப்பட்டினம் வராகன் என்றும் இருந்திருக்கிறது.

நாணய வகைகளில் தங்க நாணயமும் இருந்திருக்கிறது. இது அதிக அளவில் சாதாரண மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்திருக்கவில்லை. இது தவிர 'ஹொன்னம்' எனும் நாணய மதிப்பு பற்றியும் சில குறிப்புகள் வருகின்றன. கோணிக்காசு என்றும், சாணார்காசு என்றும், கிணிகாசு என்றும் சிலவகை நாணயங்கள் இருந்திருக்கின்றன.

திருமருகல் எனும் ஊரில் அமரசிம்மன் காலத்தில் ஒரு நாணயம் உற்பத்திச் சாலை இருந்திருக்கிறது.

மராத்தியர் காலத்தில் சமயங்களும், ஆலய நிர்வாகங்களும்.

தமிழ் நாட்டுக்கு அன்னியமானவர்களாக இருந்த போதிலும், மராத்தியர்கள் இங்கு வழக்கத்தில் இருந்த ஆலய வழிபாடு, நிர்வாகம் இவற்றில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட வில்லை. இன்னும் சொல்லப் போனால் சில ஆலயங்களின் நிர்வாகத்தை மன்னர்கள் நேரடியாகக் கண்காணித்துச் சிறப்பாக நடத்தி வந்தனர். இவர்கள் தீவிரமாக எந்தப் பிரிவையும் ஆதரிக்கவில்லை. சைவ, வைணவ வேற்பாடுகளை இவர்கள் பார்த்ததில்லை. இருவகை ஆலயங்களையும் நன்கு பராமரித்து வந்தனர். தஞ்சாவூர் நகரத்துக் கோயில்கள் அனைத்துமே இவர்களது பராமரிப்பில் சிறப்பாக நடந்து வந்திருக்கிறது. தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயில், திருவையாறு ஐயாறப்பர் கோயில், திருவிடைமருதூர், கும்பகோணம், திருபுவனம், திருவாரூர், திருப்பழனம்,பந்த நல்லூர், திருவாப்படி, பட்டீச்சரம், மன்னர்குடி, திருவானைக்கா, வைத்தீஸ்வரங்கோயில், திருமயிலாடி, திரு நள்ளாறு, திருவண்ணாமலை, திருப்பதி, மதுரை ஆகிய இடங்களுக்கு இவர்கள் செய்திருக்கும் சேவை குறித்து விவரங்கள் இருக்கின்றன. இவை தவிர, திருவரங்கம், இராமேஸ்வரம், திருப்பனந்தாள், யாழ்ப்பாணம் ஆகிய கோயில்களும் இவர்கள் முழு கவனத்துக்கு ஆளாகியிருக்கின்றன.

கிறிஸ்தவ தேவாலயங்கள் பல இவர்களால் எழுப்பப்பட்டிருக்கின்றன. தஞ்சையில் சரபோஜி ராஜா, தன் காப்பாளராக இருந்த ஸ்வார்ட்ஸ் பாதிரியாருக்காக ஒரு தேவாலயத்தை எழுப்பிக் கொடுத்தார். 1822இல் சரபோஜி ராஜா மருதப்ப மேஸ்திரி என்பவரை தரங்கம்பாடிக்கும், நாகைப்பட்டினத்துக்கும் அனுப்பி கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைப்பது குறித்து மாதிரிகளைப் பார்த்து வர அனுப்பியிருக்கிறார்.

தரங்கம்பாடியில் இருந்த ஒரு பாதிரியார் நடத்தி வந்த ஆங்கிலப் பள்ளிக்கு நிதியுதவி செய்து வந்ததாக 1819இல் உள்ள ஒரு குறிப்பு கூறுகிறது. மாயூரத்திலும் பர்ங்கடிக் எனும் பாதிரியாருக்கு சர்ச் நடத்த நிதியளித்து வந்திருக்கிறார்.

மராத்திய மன்னர்களின் கலைப் பணிகள்.

எப்போதுமே தஞ்சை கலைகளின் இருப்பிடம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. மராத்திய மன்னர்கள் காலத்தில் இசைக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தனர். கோயில்கள் சுவாமி புறப்பாடு போன்ற நேரங்களில் இசையும் நாட்டியமும் நடக்கும்படி சில சேவைகளை இவர்கள் நடத்தி வந்தார்கள். அதில் பல்லகீ சேவை என்பதும் ஒன்று. சுவாமி புறப்பாட்டின்போது இசையும், நாட்டியமும் நடக்கும் நிகழ்ச்சி இது. நாடகங்களும் இவர்கள் காலத்தில் வளர்ந்து வந்திருக்கிறது. தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் சம்ஸ்கிருதத்திலும் நாடகங்கள் நடிக்கப்பட்டிருக்கின்றன.

நாயக்கர் காலத்தில் தமிழகத்துக்கு வந்த பாகவத மேளாவும் மராத்தியர் காலத்தில் செழித்து வளர்ந்திருக்கிறது. மிலட்டூர், நீடாமங்கலம் போன்ற இடங்களில் இன்றளவும் இந்தக் கலை புகழோடு நடத்தப் பட்டு வருகிறது.

இவர்கள் ஆட்சியில் நாட்டியக் கலை சிறந்து விளங்கியது. ஆண்களும் நாட்டியம் ஆடி வந்தனர். நாட்டியம் ஆடும் பெண்கள் குறித்தும், நட்டுவனார்கள் குறித்தும் பல செய்திகள் கிடைக்கின்றன. எல்லா கோயில்களிலும் நாட்டியப் பெண்கள் இருந்தனர். மகாராஜாவின் சபையில் நாட்டியங்கள் அடிக்கடி நடந்து வந்திருக்கின்றன.

நாட்டியப் பெண்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். சில குறிப்பிட்ட ஆபரணங்களை அவர்கள் அணியக்கூடாது. குறிப்பாக வைர ராேக்கோடி, பேசரி, அட்டிகை, வெள்ளி மெட்டி இவை கூடாது. நெற்றியில் குறுக்காக நீளமாக குங்குமம் இடக்கூடாது. அணியும் உடைகளில், புடவை, ரவிக்கை இவைகளில் சில கட்டுப்பாடுகள், கையில் உருமால் வைத்திருக்கக்கூடாது. அரண்மனையில் நாட்டியம் ஆடும்போது இறைவன், ராஜா தவிர வேறு 'நரஸ்துதி' எதுவும் கூடாது. இறைவன் சந்நிதியில் இறைவனை மட்டும்தான் பாடி ஆடவேண்டும் இதுபோன்ற பல கட்டுப்பாடுகள்.

நட்டுவனார்கள் சபையில் இருக்கும்போது துப்பட்டா அல்லது சால்வைகள் கழுத்தில் அணிய வேண்டும். தலையில் கட்டியிருக்கக்கூடாது. காலில் செருப்பு அணிதல் கூடாது. இதுபோன்ற சில கட்டுப்பாடுகள் உண்டு.

தஞ்சையின் பிரபலமான நட்டுவனார்.

தஞ்சாவூரில் பல பிரபலமான நட்டுவனார்கள் இருந்தனர். தஞ்சையில் இருந்த சுப்பராய ஓதுவார் என்பவருடைய பிள்ளைகளான பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர் இருந்தனர். இவர்கள்தான் தஞ்சை நால்வர் என்று புகழ் பெற்றவர்கள். இதில் சிவானந்த நட்டுவனாரைப் பற்றி ஒரு ஆவணம் இருக்கிறது. இவர் தஞ்சை பெரிய கோயிலில் நட்டுவாங்கம் செய்து வந்தவர். அந்த சமயத்தில் தஞ்சையின் கடைசி ராஜாவான சிவாஜி IIஇன் மகளான ராஜஸாபாயி அம்மணி சாயேப் என்பவருக்குத் திருமணம் நடந்தது. நட்டுவனார் சிவானந்தம் அந்தத் திருமணத்துக்குச் சென்றிருந்தார். அப்போது ராஜா சிவாஜி நட்டுவனாரிடம் தஞ்சையில் இருக்கும் தேவதாசிகளுக்கு ஹிந்துஸ்தானிய நாட்டியமும், கர்நாடக நாட்டியமும் கற்றுத்தரும்படி பணித்தார். அந்த உத்தரவுக்கிணங்க சகோதரர்கள் நால்வரும் இரவு பகலாக தேவதாசிகளுக்கு இவ்விரு நாட்டியத்தையும் கற்றுக் கொடுத்தனர். இந்த நிலையில் தஞ்சை பெரியகோயில் அதிகாரி ஒருவர் சிவானந்தம் அரசர் முன்னிலையில் ஆடக்கூடாது என்று தடைவிதித்து விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சிவானந்த நட்டுவனார் அரசரிடம் மேல் முறையீடு செய்திருக்கிறார். இந்த விவரம் ஆவணங்கள் மூலம் கிடைக்கிறது.

இந்த பிரபலமான நட்டுவனார்கள் தஞ்சை மேல வீதியில் இருந்திருக்கிறார்கள். பின்னர் இவர்களில் சின்னையா மைசூர் சமஸ்தானத்துக்குச் சென்று விட்டார். வடிவேலு திருவிதாங்கூர் சமஸ்தான வித்வானாகச் சென்று விட்டார். பொன்னையா முத்துஸ்வாமி தீக்ஷிதருடன் இருந்தார். சிவானந்தம் மட்டும் தஞ்சையில் சிவாஜி ராஜாவின் ஆதரவில் தஞ்சை பெரிய கோயில் நட்டுவாங்கப் பணியில் ஈடுபட்டிருந்தார். மன்னர் சிவாஜி II காலத்தில் வாழ்ந்த இந்த தஞ்சை நால்வரின் புகழ் இன்றும் தொடர்ந்து நாடெங்கும் புகழ் மணம் பரப்பி வருகிறது. இந்த நால்வர் நினைவாக தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் புகழ்பெற்ற நட்டுவனார் ஹேரம்பநாதன் அவர்கள் "சின்ன மேளம்" எனும் பெயரில் ஒரு நாட்டிய விழாவினை நடத்தி வருகிறார். அரண்மனை தேவஸ்தானமும், தஞ்சை இளவரசரும் இந்த நிகழ்ச்சிக்கு உதவி வருகின்றனர்.

மராத்தியரின் புகழ் பரப்பும் 'சரஸ்வதி மகால்'.

அந்த நாட்களில் கல்வி இன்றுபோல் சிறந்து விளங்கவில்லை. அனைவருக்கும் கல்வி போன்ற எந்த நிலையும் இல்லை. மிகச் சிலரே கல்வி கற்று வந்தனர். வேதம் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. அது ஒரு சாரார் மட்டும்தான் படித்து வந்தனர். இங்கு ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களால் தெலுங்கும், நவாபுகள், சுல்தான் கள் ஆகியோரால் இந்துஸ்தானியும், மராத்தியர்களால் மராத்தி மொழியும், இந்த மண்ணுக்குரிய தமிழும், வெள்ளைக்காரர்களால் ஆங்கிலமும் மக்கள் கற்கத் தொடங்கினர்.

தஞ்சையில் "நவவித்யா கலாசாலை" என்றொரு அமைப்பு இருந்திருக்கிறது. இதில் 1785இல் 86 பேர் வேத அத்யாயனம் செய்து வந்திருக்கின்றனர். மற்ற மொழிப் பள்ளிகளில் 385 பேர் படித்து வந்தனர் என்பதும் தெரிய வருகிறது. இந்த வித்யாலயாவில் தங்கிப் படிக்கவும், உணவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

இந்தக் கலாசாலை "சரஸ்வதி பண்டாரம் - சரஸ்வதி மகால்" என்று பெயர் பெற்றது. இதில் பல மொழி சுவடிகளும் இருந்தன. இது நாளடைவில் வளர்ந்து பெரிதாகி இன்று நாடு புகழும் ஒரு ஆவணக் காப்பகமாகத் திகழ்கிறது. மராத்திய மன்னர்கள் இலக்கியத்துக்கும், கலாச்சார பாதுகாப்புக்கும் செய்திருக்கும் பெரிய தொண்டு சரஸ்வதி மகால் நூலகம்.

Saturday, October 1, 2011

'மகாத்மா' காந்தி


காந்தி ஜெயந்தி விழா
2-10-2011

1869 அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. குஜராத்தில் மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்த இவர் 'மகாத்மா' வானது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்காவில் அவருக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது. குடியேறி வாழ்ந்த வெள்ளையர்களின் நிற வேற்றுமை அவரை ஒரு போராளியாக ஆக்கியது. இந்தியாவுக்குத் திரும்பி இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட நினைத்த போது அவரது அரசியல் குரு கோபாலகிருஷ்ண கோகலே சொன்னபடி இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்த்துச் சாதாரண அடித்தட்டு இந்திய மக்களின் வாழ்க்கையை நேரில் கண்டார். இந்தியா வெள்ளையரின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற ஏற்ற வழியொன்றை அவர் கண்டார். அதற்கு வேறு எங்கிருந்தும் கொள்கைகளை இறக்குமதி செய்யவில்லை. இந்த பாரத புண்ணிய பூமியில் காலம் காலமாய் தழைத்து வளர்ந்து வரும் சத்தியம், அன்பு, அகிம்சை இவற்றைக் கொண்டு ஓர் ஆயுதம் தயாரித்துப் போராடினார். இந்திய மக்கள் அவரைப் பின்பற்றினர். நாடும் சுதந்திரம் கண்டது, அவரும் மகாத்மாவாகவும், நாட்டின் தந்தையாகவும் ஆனார். அந்த மகானின் பிறந்த நாள் இன்று 2-10-2011. அவர் நினைவை மட்டுமல்ல, அவர் கடந்து வந்த பாதையை, அவர் காட்டிச் சென்ற வழிமுறைகளை மீண்டும் சிந்தனை செய்வோம். எந்தக் காலத்துக்கும், எந்தப் பிரச்சினைக்கும், எந்த சிக்கலைத் தீர்க்கவும் காந்தியம் ஒன்றே வழி என்பதை என்று நாடு புரிந்து கொள்கிறதோ, அன்றே நமது துயரங்கள் யாவும் தீரும்! இது பிதற்றல் அல்ல. ஆழ்ந்து சிந்தித்தால் இதிலுள்ள உண்மை ஒவ்வொருவருக்கும் புரியும். அப்படி புரியும் காலம் வரவேண்டும். இறைவனிடம் முறையிடுவோம்.

மகாத்மா காந்தி புகழ் ஓங்குக!!

Tuesday, September 27, 2011

வேதநாயக சாஸ்திரியார்


சுவிசேஷ கவிராயர் வேதநாயக சாஸ்திரியார் (1774 - 1864)

கிறிஸ்தவ மத தோத்திரப் பாடல்கள் பலவற்றை இயற்றியவர் இந்த வேத நாயகசாஸ்திரியார். இப்போதும்கூட வேதநாயக சாஸ்திரியார் பாடல் என்ற அறிவிப்போடு பல பாடல்களைக் கேட்டு வருகிறோம் அல்லவா? அந்த வேதநாயக சாஸ்திரியார் திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாளர் மரபில் தோன்றியவர். இவருக்குப் பன்னிரெண்டு வயது ஆகும்போது, தஞ்சை ராஜா சரபோஜிக்கு போஷகராக இருந்த ஸ்வார்ட்ஸ் பாதிரியார் இவரைத் தஞ்சைக்கு அழைத்து வந்தார்.

தஞ்சை மாவட்டம் கடற்கரைப் பிரதேசமான தரங்கம்பாடியில் இருந்த ஒரு கல்வி நிலையத்தில் இவரைக் கல்வி கற்க வைத்தார் ஸ்வார்ட்ஸ். அங்கு இவர் இரண்டு ஆண்டுகள் கல்வி பயின்றார். அதன் பின் இவர் தஞ்சாவூருக்கு வந்து அங்கு இயங்கி வந்த தத்துவக் கல்வி நிலையத்தில் (Theological Seminary) தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

அந்த நாளில் தஞ்சையை அரசு புரிந்தவர் மகாராஜா சரபோஜி IV ஆவார். அவர் கலை இலக்கியங்களில் ஆர்வம் உடையவர். வேதநாயகர் ஒரு சிறந்த கவிஞர். இவர் 52 நூல்களை இயற்றியிருப்பதாகத் தெரிகிறது. இந்தச் செய்தி சென்னை கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் 1956இல் வெளியிட்ட தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் எனும் டாக்டர் தா.வி.வேதநேசன் எழுதிய நூலில் இருக்கிறது.

தஞ்சை மராத்திய வம்சத்தில் வந்தவரும், துளஜா ராஜாவின் சகோதரர் முறை உள்ளவரும், தஞ்சையை சரபோஜிக்கு முன்பு சில காலம் ஆண்டவரும், பின்னாளில் திருவிடைமருதூரில் வாழ்ந்தவருமான அமரசிம்மன் என்பவரின் மகன் பிரதாபசிம்மன் என்பவருக்கு வேதநாயகர் 1-2-1828இல் எழுதியுள்ள கடிதமொன்றில் "சிறிதும் பெரிதுமான அறுபது பொஸ்தகங்களை உண்டு பண்ணினேன்" என்று எழுதியிருப்பதாகத் தெரிகிறது.

இவருடைய நூல்களில் சிறந்ததாகக் கருதப்படுவது "பெத்தலேஹம் குறவஞ்சி". மற்றொரு சிறந்த நூல் "பேரின்பக் காதல்". இது 1813இல் இயற்றப் பெற்றதாகத் தெரிகிறது. இந்த நூல் 1815இல் திருச்சியில் அரங்கேற்றப்பட்ட போது இவருக்கு "வேத சாஸ்திரி" எனும் பட்டம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஸ்வார்ட்ஸ் பாதிரியாருக்குப் பிறகு தஞ்சையில் இருந்தவர் Rev. Kohlhoff என்பவர். இவருடைய பரிந்துரையின் பேரில் மன்னர் சரபோஜி இவருக்கு ஒரு சால்வை அணிவித்து மரியாதை செய்ததோடு, மன்னரை மாதம் இருமுறை பார்க்கவும் அனுமதி வழங்கப் பட்டது. இவருடைய பணியைப் பாராட்டி சரபோஜி மன்னர் இவருக்கு மாதச் சம்பளமும் கொடுக்க ஆணையிட்டார்.

வேதநாயக சாஸ்திரியார் மராத்திய போன்ஸ்லே வம்சத்து வரலாற்றை செய்யுளாக இசைத்துக் கொடுத்திருக்கிறார். 1-2-1828இல் இவர் திருவிடைமருதூரில் வாழ்ந்த பிரதாபசிம்மனுக்கு எழுதிய கடிதத்தில், "Rev.Kohlhoff எனக்காகச் சிபாரிசு செய்ததன் பேரில் மகாராஜா எழுதி வைத்த போன்ஸ்லே வம்ச ராஜ சரித்திரத்தில் சிறிது விருத்தமாகப் பாடிய சில பாடல்களைக் கேட்ட மாத்திரத்தில் செய்து கொடுத்தார்கள்" என இருக்கிறது.

ஆக, இவர் போன்ஸ்லே வம்ச சரித்திரத்தை பாடலாக வடித்திருக்கிறார் என்பது தெரிகிறது. இன்னொரு நிகழ்ச்சியும் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் மன்னர் சரபோஜி இவரை பிரஹதீஸ்வர ஸ்வாமியின் பேரில் ஒரு குறவஞ்சி பாடும்படி கேட்டதாகவும், அதற்கு வேதநாயகர் மறுத்து விட்டதாகவும், அதன் விளைவாக இவ்விருவருக்கும் மன வேற்றுமை ஏற்பட்டது என்றும் தெரிகிறது.

இந்த வேதநாயக சாஸ்திரியார், சில காலம் கர்னல் மெக்கன்சியிடம் சுவடி தயாரிப்பில் ஈடுபட்டு வேலை செய்ததாகத் தெரிகிறது. இவர்24-1-1864இல் காலமானார்.

Monday, September 26, 2011

மராத்தியர் வரலாறு - Part 22


FINAL PART

தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 22

தஞ்சாவூரின் மாமன்னராக விளங்கிய சரபோஜி IV காலமான செய்தியைச் சென்ற பகுதியில் பார்த்தோமல்லவா. அவருடைய ஆட்சியின் தொடக்க காலத்திலேயே ஆங்கிலேயர்கள் ஆட்சி நிர்வாகத்தைத் தாங்களே வைத்துக் கொண்டு மன்னருக்கு செலவுக்கும், கோட்டை நிர்வாகம், பாதுகாப்பு இவற்றுக்காகவும் கணிசமான தொகையினை கொடுத்து வந்தார்கள் என்பதைப் பார்த்தோம். ஆக, சரபோஜி IV காலத்திலேயே தஞ்சாவூர் ஆங்கில கம்பெனியார் வசம் போய்விட்டது. இவருடைய காலத்துக்குப் பிறகு ராஜ்யம் இருந்த நிலைமை எப்படியிருந்திருக்கும் என்பதையும்,  சரபோஜி IV இன் ஆட்சி அதிகாரமில்லாத ஆட்சி என்பதையும்பார்க்கலாம்.

சரபோஜி IVஇன் இரண்டாம் மனைவி அகல்யாபாயிக்குப் பிறந்தவர் சிவாஜி II. 1808ஆம் வருஷம் பிரபவ வருஷம் மாசி மாதம் 23ஆம் தேதி 22-3-1808இல் இவர் பிறந்தார். அதே வருஷம் செப்டம்பர் 30இல் அன்னப் பிராச்சனம், குடுமி கல்யாணம், வித்யாரம்பம், இடுப்பில் சிறு கத்தி அணிதல் ஆகியவை 1811இல் நடைபெற்றது.

இவருக்கு 1818இல் இவரது 10ஆம் வயதில் திருமணம் நடைபெற்றது. முதலில் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சைதம்பா பாயி. ராமச்சந்திர சூர்வேயின் மகள் காமாட்சி அம்பாபாயி எனும் பெண்ணை இவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி சரபோஜி IVஇன் மகள் வயிற்றுப் பேத்தி. மாமனைத் திருமணம் செய்து கொண்டார் இந்த சைதம்பாபாயி. மூன்றாவதாக ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார் இவர், அவள் பெயர் பத்மாம்பாபாயி. இவர்கள் அனைவருமே சிவாஜி IIக்கு முன்னதாகவே காலமாகிவிட்டனர்.
                                                              Shivaji II Raja
இவை தவிர 1852இல் 44ஆம் வயதில் ஒரே நாளில் இவர் 17 கல்யாணங்களைச் செய்து கொண்டாராம்.இவருக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஒத்துப் போகவில்லை. 1838இல் இவரைப் பற்றி ரெசிடெண்ட் ஒரு புகாரை அனுப்பினார். 1848இல் ரெசிடெண்ட் சிவாஜி II தன்னை அலட்சியம் செய்து விட்டதாகப் புகார் அனுப்பினார்.

சிவாஜி II மகாராஜாவுக்கு கூடா நட்பு அமைந்திருந்தது. மாதுசாமி மாடிக் என்பவனுடைய நட்பினால், கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி இவர் கடங்காரர் ஆனார். தாயாருடைய நகைகளை வாங்கி அடகு வைத்துப் பணம் வாங்கி செலவு செய்தார். ஸர்க்கேல் தேவாஜி ராவ் என்பவர் அரண்மனையில் ஒரு கெளரவமான அதிகாரி. அவரை இவர் பதவி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

இப்படி பல வகைகளிலும் நல்ல பெயர் எடுக்காமல் சிவாஜி II ராஜா 1855இல் தனது 48ஆம் வயதில் அக்டோபர் 25ஆம் தேதி காலையில் இறந்து போனார். சிவாஜி IIவின் மனைவியான காமாட்சியம்பாபாயி, கம்பெனிக்கும் மற்ற பாயிமார்களுக்கும் எதிராக ஒரு வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். 1857இல் தொடரப்பட்ட இந்த வழக்கில் அப்போது இந்தியாவில் பிரபல வழக்கறிஞ்சராக இருந்த நார்ட்டன் துரை என்பவர் வக்கீலாக இருந்த நடத்தினார். இந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பின் காரணமாகத்தான் மராத்திய மன்னர் பரம்பரையினருக்கு அவர்களுடைய சொத்துக்கள் திரும்பக் கிடைத்ததாகவும் தெரிகிறது.

1857 ஏப்ரல் 20ஆம் தேதியிட்ட ஒரு ஆவணத்தில் கீழ்கண்ட பாயிமார்களின் பெயர்கள் காணப்படுகின்றன.

சையம்பா உமாம்பா ஜயதாம்பா ஜீஜாயி
தீபாம்பா ராமகுமாரம்பா சகுணாம்பா அபரூபாம்பா
யஷ்வந்தம்மா அனசாம்பா கெளராம்பா அருணாம்பா
சுகுமாராம்பா கிரிஜாம்பா சீமாம்பா

ராஜா இறந்த போது இவருடைய இரு மனைவிமார்களின் வயது 20ம் 12ம் ஆகியிருந்தது. இப்படியாக புகழ் பெற்ற தஞ்சை மராத்திய ராஜ்யம் இந்த சிவாஜி IIஇன் காலத்தோடு முடிவுக்கு வந்தது. அதன் பின் ஆங்கிலேயர்கள் தஞ்சையை நேரடியாக ஆளத் தொடங்கிவிட்டனர்.

முடிவுரை:

தஞ்சை மராத்திய மன்னர்கள் இங்கு சுமார் 180 வருஷங்கள் அதாவது கி.பி. 1676 தொடங்கி 1855 வரையில் ஆட்சி புரிந்தார்கள். அவர்கள் கலை, இலக்கியம், சிற்பம், சித்திரம், மருத்துவம் ஆகிய கலைகளில் நாடு சிறந்து விளங்கும்படி செய்தார்கள். சரபோஜி IV காலத்தில்தான் சிறப்பாக இருந்தது. இந்த நான்காம் சரபோஜி 1798 தொடங்கி 1832 வரை மிக உன்னதமான நிலையில் தஞ்சை ராஜ்யத்தை வைத்திருந்தார். மன்னருக்கும் பல மொழிகள் தெரியும். பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். கலைஞர்களையும் ஆதரித்து வந்தார்.

இவர் காலத்தில் வைத்திய சாஸ்திர கல்விக்காகவும், மேன்மைக்காகவும் "தன்வந்த்ரி மகால்" எனும் மருத்துவ சாலை இயங்கி வந்தது. இவரது மகன் சிவாஜி II காலத்திலும் இது போற்றி பாதுகாக்கப் பட்டது. இங்கு ஆங்கில முறை வைத்தியம் தவிர சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யுனானி ஆகிய மருத்துவ முறைகளும் கொடுக்கப்பட்டன. மனிதர்கள் தவிர பறவைகள், மிருகங்கள் ஆகியவற்றின் மருத்துவங்களும் இங்கு கவனிக்கப் பட்டன. அஸ்வ சாஸ்திரம் (குதிரை வைத்தியம்) கஜ சாஸ்திரம் (யானை) போன்றவற்றுக்கும் வைத்தியம் கற்பிக்கப் பட்டது.

தஞ்சாவூரின் கடைசி மன்னர்கள் பரம்பரை நாயக்க மன்னர்கள் அவர்களை யடுத்து மராட்டி மன்னர்கள் இருந்தார்கள். அவர்களுடைய காலம்
வருமாறு:

நாயக்க மன்னர்கள் 1532 முதல் 1673 வரை சேவப்ப நாயக்கர் தொடங்கி விஜயராகவ நாயக்கர் வரையிலான 141 ஆண்டுகள்.
மராத்திய மன்னர்கள் ஆட்சி 1676இல் தொடங்கி 1855 சிவாஜி II காலம் வரையிலான காலம் வரையிலான 179 ஆண்டுகள்

* இந்த வரலாறு மெக்கன்சி சுவடிகளைப் பின்பற்றி எழுதப் படுகிறது. இதில் கண்டுள்ள சில நிகழ்ச்சிகள் மற்ற சில வரலாற்றுக்கு மாறுபட்டுக் காணப் படுகிறது. குறிப்பாக சந்தாசாஹேபின் மரணம் குறித்தது. சந்தா சாஹேப் மானோஜி ராவிடம் சரணாகதி அடைந்தது, முகமது அலியின் வற்புறுத்தலால் சந்தா சாஹேப் தஞ்சையில் தலை வெட்டப்பட்டது இவைகள் வரலாற்றில் வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. சந்தா சாஹேப் சேனைக்குப் படை வீரர்களைச் சேர்த்துக் கொண்டு வர போய்க்கோண்டிருந்த போது அவரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றதாகவும் சொல்லப் படுகிறது.

** மகாராஜா சரபோஜி IV தனது அன்பிற்குரிய முக்தாம்பாளின் வேண்டுகோளுக்கிணங்க அன்ன சத்திரம் கட்டியது ஒரத்தநாடு எனுமிடத்தில். அந்த சத்திரமும், இன்னம் வேறு பல ஊர்களிலும் கட்டப்பட்ட சத்திரங்களும் பலகாலம் சேவை செய்தன. அவற்றின் சொத்துக்கள் அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வருவாய்த் துறையில் சத்திரம் இலாகா என்று ஒன்று இன்றும்கூட பல ஸ்தாபனங்களை நடத்தி வருகின்றன. முக்தாம்பா சத்திரத்தில் தங்கி இலவசமாக உணவும், இருப்பிடமும் தந்து படித்தவர்கள் ஏராளம்.

***மகாராஜா சரபோஜி திருவையாற்றில் சம்ஸ்கிருதம் கற்பதற்கென்று ஒரு கல்லூரியை உருவாக்கினார். அந்தக் கல்லூரி முதலில் சம்ஸ்கிருதம் மட்டும் கற்பிக்கப் பயன்பட்டது. பின்னர் தமிழ் படிக்கவும், அதன் பின் இப்போது அது ஒரு கலைக்கல்லூரியாகவும் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. கல்வியிலும் கலைகளிலும் சரபோஜி ஆர்வம் கொண்டிருந்தார் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.
வரலாற்றில் குறிப்பிடப்படும் இரண்டு நிகழ்ச்சிகள் ருசிகரமானவை. அதில் ஒன்று:--

***காஞ்சி காமகோடி மடத்தை அலங்கரித்த சந்திரசேகரேந்திர சுவாமிகள் என்பவர் திருவானைக்காவில் இருக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரிக்குத் தாடகம் செய்து, ஆலய குடமுழுக்கையும் முடித்து வைத்தார். அப்போது அவர் காஞ்சியில் இல்லாமல், கும்பகோணத்துக்கு வந்து விட்டார். அவர் கையில் இருந்த பணம் எல்லாம் செலவாகிப் போனது. ஆகையால் அவர் காவிரியின் வடகரையோடு திருக்காட்டுப்பள்ளி, திருனெய்த்தானம், திருவையாறு வழியாக கும்பகோணம் திரும்பும் வழியில் தஞ்சை மன்னரிடம் நிதியுதவி கேட்டனுப்பினார். அப்போதைய மன்னர் (துளஜேந்திர ராஜாவாக இருக்க வேண்டும்) மறுத்துவிட்டார். சுவாமிகளை அவர் தஞ்சைக்கு விஜயம் செய்யும்படி கேட்டுக் கொண்டார். சுவாமிகள் பணம் இல்லாமையால் தஞ்சைக்கு விஜயம் செய்யாமல் காவிரிக் கரையோடு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். மன்னர் சில வீரர்களை அனுப்பி சுவாமிகளின் பரிவாரத்தை வழிமறித்துச் சிறைப்பிடித்து மரியாதையுடன் தஞ்சைக்கு வரவழைத்தார். ஊருக்குள் நுழையும்போது சுவாமிகளுக்குப் பூரணகும்ப நாதஸ்வர மரியாதைகளுடன் அவரை வரவேற்று உபசரித்து, அவர் ஊர் செல்லும்போது நிறைய பணமும் கொடுத்தனுப்பினாராம். மடத்துக்கு இருந்த கடங்கள் அனைத்தும் இந்தப் பணத்திலிருந்து கொடுக்கப்பட்டு மீதம் இருந்தது. அதை நிலம் வாங்கி முதலீடு செய்ய நினைத்த போது, திருப்பனந்தாள் அருகில் ஒரு கிராமத்தில் நிலங்கள் விற்பனைக்கு வந்ததால் கபிஸ்தலம் கருப்பையா மூப்பனார் (நமது ஜி.கே.மூப்பானாரின் பாட்டனார்) தலையிட்டு அந்த நிலங்களை வாங்கி மடத்துக்குக் கொடுத்து நிரந்தர வருமானத்துக்கு வழிவகை செய்தாராம்.

***மற்றொரு நிகழ்ச்சி, திருவாரூரில் பிறந்து திருவையாற்றில் வாழ்ந்து வந்தவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். சதாசர்வ காலமும் ஸ்ரீ ராமபிரானையே நினைத்துப் பாடி வந்தவர். அவருடைய புகழ் நாடெங்கும் பரவிவந்த போது அவரைத் தன் அரசவைக்கு அழைத்துப் பாடப் பணித்ததாகவும், ஸ்ரீ சுவாமிகள் மறுத்து "நிதிசால சுகமா?" எனும் கீர்த்தனத்தைப் பாடினார் என்றும் கூறப்படுகிறது. திருவையாற்றிலும் காவிரியாற்றுக் கரையில் தஞ்சை மராத்திய மன்னர்களுக்கு ஓர் அரண்மனை இருந்தது. காவிரிக் கரையில் அமைந்த புஷ்ய மண்டபத் துறையும் புனிதமாக அவர்களால் போற்றப்பட்டது. அங்கு இசைக் கல்லூரி ஒன்றையும் நிறுவி அது இப்போது சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
***

*** சரபோஜி IV பதவிக்கு வருவதற்கு முன்பு துளஜாவின் தம்பி முறையான அமர்சிங் (அமரசிம்மன்) பதவி வகித்தார். இவரைப் பற்றி இரு வேறு விதமான செய்திகள் காணப்படுகின்றன. அமரசிம்மனின் ஆட்சி காலத்தில் சில சிறப்புகளையும் சில செய்திகள் கூறுகின்றன. அவருடைய காலத்தில் மழையில்லாமல் நாடு வரண்டு கிடந்ததாம். குறைகளை முறையிட மக்கள் வந்தபோது மன்னர் அவர்களுக்கு தைரியம் சொல்லி அனுப்பினார். அரசர் எந்த ஊருக்குப் போகிறாரோ அங்கெல்லாம் மழை பெய்ததாம். அதனால் இவருக்கு மழைராஜா என்ற பெயர் வந்தது.

(*இது அமரசிம்மனை தெய்வீக அருள் பெற்றவராகக் காட்டுவதற்காக அவரது ஆதரவாளர்கள் எழுதி வைத்தக் குறிப்புகள் என்றும், இவை போன்ற செய்திகள் 'திருவிடைமருதூர் பதிவுகள்' எனும் சுவடிகளில் இருப்பதால், இவை அமரசிம்மனின் ஆதரவாளர்களால் எழுதப் பட்டது என்றும் ஒரு கருத்து உண்டு.)



*அவருடைய சமஸ்தானத்தில் புலிகளின் தொல்லை அதிகமாக இருந்ததாம். அரசர் புலி வேட்டைக்குச் சென்று 22 வேங்கைப் புலிகளைச் சுட்டு வீழ்த்தினாராம்.

*கம்பெனிக்குத் தரவேன்டிய சுபா அதிகமாகவே தஞ்சையின் நான்கு சுபாக்களில் இரண்டை கம்பெனி தன்வசப்படுத்திக் கொண்டதாம்.அப்படியும் ராஜா தர வேண்டிய தொகை பாக்கி இருந்ததாம்.

*1795இல் அமரசிம்மன் ராமேஸ்வரம் யாத்திரை சென்றார். வழியெல்லாம் தண்ணீர் பஞ்சம் இருந்தது. ஆனாலும் இவர் போகுமிடங்களில் மழை பெய்ய பஞ்சம் தீர்ந்ததாம். குடிமக்கள் ஏராளமானோர் இவரோடு அந்த யாத்திரையில் பங்கு கொண்டனராம். ராமேஸ்வரத்தில் இவர் துலாபாரம் செய்து கொண்டதும், அங்கு நாகப் பிரதிஷ்டை செய்ததும் வரலாற்றின் ஏடுகளில் இருக்கின்றன.

இந்த அமர்சிங்கின் பதவி நீக்கத்துக்குக் காரணங்களாகச் சொல்லப்படுபவை:

1. துளஜாவின் மனைவியர் சரபோஜிக்கு பட்டம் கிடைக்க வேண்டி சென்னைக்குச் சென்று ஆங்கில அதிகாரிகளிடம் வேண்டினர்.

2. அப்போது ரெசிடெண்டாக இருந்த டூரியன் என்பவர் சரபோஜிக்கு ஆதரவாக இருந்தார்.

*அமரசிம்மனுடைய மூன்றாவது மனைவியாகிய பவானிபாயி சாஹிபுக்கு கி.பி.1798இல் ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் பிரதாபசிம்மன்.

*அமரசிம்மன் அரச பதவியை இழந்த பிறகு கோட்டையின் மூலையில் 22 மாதங்கள் தங்கியிருந்தார், பிறகு திருவிடைமருதூருக்கு 1800இல் புறப்பட்டுச் சென்றார். வழியில் ஆலங்குடியில் 25 நாட்கள், கும்பகோணத்தில் 57 நாட்கள் தங்கியிருந்தார்.

*அமர்சிங் 1802இல் இறந்தார். அவர் இறந்த பொழுது சந்தன மழை பெய்ததாம். அவரோடு அவரது நான்காம் மனைவி பார்வதிபாயி உடங்கட்டை ஏறி மாண்டு போனாள். அவள் தவிர அவருடைய போகஸ்திரி ருக்குமணி தீக்குளித்து இறந்தாள்.

*அமரசிம்மனுக்குக் கொடுக்கப்பட்ட ஓய்வூதியம் 25000 வராகன். அவருடைய மகனுக்கும் அது பின்னர் கொடுக்கப்பட்டது.

*அமரசிம்மனின் மகன் பிரதாபசிம்மன் தன் மாமன் மகளைத் திருமணம் செய்துகொள்வதாக இருந்தான். ஆனால் அதற்கு முன்பு அவன் இறந்து போகவே அந்தப் பெண் திருமணம் ஆகாவிட்டாலும் கடைசி வரை கைம்பெண்ணாகவே இருந்தாள்.

*மராட்டிய வம்சாவளியில் சுஜான்பாயி ஆட்சி புரிந்த தகவலை சில ஆசிரியர்கள் குறிப்பிடவில்லை.



தஞ்சை போன்ஸ்லே வம்ச மரம்.

ஏகோஜி IV
(1.தீபாபாயி 2. சயிராபாயி 3. அண்ணுபாயி 4. அபிமான மனைவியர் 9 பேர்.)
|
ஷாஜி
|
சரபோஜி III
|
துக்கோஜி
|
பாவா சாஹிப் பிரதாப சிம்மன்
|
துளஜா ராஜா அமர்சிம்மன்
|
ஸ்வீகாரம் சரபோஜி IV
|
சிவாஜி II


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு நிறைவு பெற்றது.

குறிப்பு: இந்த வரலாறு முழுவதும் மெக்கன்சி சுவடிகளை அடிப்படையாகக் கொன்டது. பல வரலாறுகள் இருந்த போதும் சுருக்கமாக தஞ்சை வரலாற்றைக் குறித்த நூல் எதுவும் இல்லை. இதனைப் படிக்கும் அன்பர்கள் தங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுத வேண்டுமாய் அன்போடு வேண்டிக் கொள்கிறேன். நன்றி.

குறிப்பு:-- மெக்கன்சி சுவடிகளின் அடிப்படையில் இந்த வரலாறு எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது அல்லவா? யார் இந்த மெக்கன்சி என்பதை இப்போது பார்க்கலாம்.

கர்னல் காலின் மெக்கன்சி (1754 - 1821)

"மெக்கன்சி சுவடிகள்" எனக் குறிப்பிடப்படும் சுவடிகள் சென்னை அரசினர் கிழக்கியல் சுவடிகள் நூலகத்தில் (Government Oriental Manuscripts Library) பேணிக் காப்பாற்றப்பட்டு வருகின்றன. இந்த வரலாற்றுச் சுவடிகளை எழுதி வைத்து தமிழ் நாட்டில் மராத்தியர்களின் சரியான வரலாற்றைத் தொகுத்துத் தந்திருப்பவர் இவர்.

Alphabetical Index of Tamil Manuscripts in the Government Oriental Manuscripts Library, Madras, Vol. III parts I and II (Mackenzie's collection) Madras 1951.

இந்த கர்னல் மெக்கன்சியின் வரலாற்றை இப்போது பார்ப்போம். இவர் ஸ்காட்லாந்து நாட்டில் Island of Lewis எனும் தீவில் Storno நகரத்தில் 1754இல் பிறந்தவர். தன்னுடைய முப்பதாவது வயதில் 1783இல் இந்தியாவுக்கு வந்தார். 1821இல் இவர் காலமாகும் வரையிலும் இந்தியா, இலங்கை, ஜாவா ஆகிய நாடுகளில் பணிபுரிந்து தனது திறமை காரணமாகப் பல பதவி உயர்வுகள் பெற்று சிறப்பாக வாழ்ந்தார். ஸ்காட்லாந்தைவிட்டுப் புறப்பட்ட பின் இவர் இறக்கும் வரை தாய் நாட்டுக்குத் திரும்பவில்லை.

இவருக்கு இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி. ஒரு சகோதரர் அலெக்சாண்டர் என்பவர் கனடா நாட்டிலும், கென்னத் என்பவர் வேறொரு நாட்டிலும், சகோதரி மேரி என்பவர் தன் சொந்த ஊரிலும் இருந்தார்கள்.

அப்போது கிழக்கிந்திய கம்பெனி தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகம் செய்ய கப்பல்களில் புறப்பட்டு வந்தனர். அப்படி சிறப்புப் பெற்ற கிழக்கிந்திய கம்பெனியில் இவர் 2-9-1783ல் வேலைக்குச் சேர்ந்தார். இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹேஸ்டிங்ஸ் இருந்த காலத்தில் இவர் ஒரு                     பொ றியாளராக பணியாற்ற இந்தியா வந்து சேர்ந்தார்.

பொறியாளராக இருந்த போதும், அப்போது கிழக்கிந்திய கம்பெனியார் போர்களில் ஈடுபட்டு வந்ததால், இவரும் போரில் ஈடுபடுத்தப்பட்டார். அங்கு இவருடைய திறமையால் இவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்றார்.

முதலில் நில அளவைத் துறையில் பணியாற்றியபோது 1810இல் இவர் தலைமை நில அளவையாளராக பதவி உயர்வு பெற்றார். அந்த நாளிலேயே இவர் ரூ.1500 ஐ மாத ஊதியமாகப் பெற்றார். 1816இல் இவர் ராயல் ஏஷியாட்டிக் சொசைடியில் உறுப்பினரானார். 1811இல் இவர் ஜாவாவுக்குச் சென்று பணியாற்றினார்.

1796இல் இலங்கைக்குச் சென்றபோது அங்கு ஈழம் பற்றிய செய்திகளைத் தொகுத்தார். Cavelly Venkata Boriah என்பவர் இவருக்கு இந்தப் பணிகளில் உதவி வந்தார். இந்தியா திரும்பிய பின் இவர் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றைத் தேடித் தொகுத்து வந்தார். அவை அனைத்தும் நாட்டின் வரலாற்றையொட்டியப் பதிவுகள் ஆகும்.

பல மொழி பேசுபவர்கள் இவருக்கு உதவி புரிந்தார்கள். அப்படி ஊழியம் புரிந்தவர்களுக்கு இவர்கள் நல்ல ஊதியமும் வழங்கினார். இவருக்கு உதவியர்கள் முறையே: Cavelly Venkata Boriah, Cavelly Venkata Letchumaiya, Abdul Azeez, Bhaskaraiah, Babu Rao, Ramasamy, Srinivasaiah, Sivaramaiah ஆகியோராவர். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இவர்கள் வல்லவர்கள். இவர்களுக்கெல்லாம் மாதம் 40 முதல் 50 வராகன் வரை ஊதியம் வழங்கப்பட்டது.

இவருடைய இந்த வரலாற்றுத் தொகுப்புப் பணியைப் பாராட்டி கம்பெனியார் இவருக்கு மாத ஊதியம் 200 வராகனுடன் மேலும் 100 வராகன் சேர்த்துக் கொடுத்தனர். ஒரு முறை கம்பெனியின் இயக்குனர்கள் இவரது பணியைப் பாராட்டி 9000 வராகன் நன்கொடை அளித்தனர்.

இந்தத் தொகுப்புப் பணிக்காக இவர் செலவிட்ட தொகை 15000 பவுண்டுகள் எனத் தெரிகிறது. வெங்கட லெட்சுமையா என்பவர் உதவியாளர்களுள் முதன்மையானவர். இவருடைய தொகுப்புக்களை அந்த நாள் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் கம்பெனி சார்பில், மெக்கன்சியின் மனைவியிடமிருந்து 10000 பவுண்டு விலைக்கு வாங்கினார்.

இவருடைய அறுபதாவது வயதில் 1812இல் பெட்ரோனெல்லா ஜாகோமினா பார்டெல்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1820இல் உடல் நலம் குன்றி கல்கத்தாவிலுள்ள செளரங்கீ எனுமிடத்தில் தனது 68ஆம் வயதில் உயிரிழந்தார்.

நன்றி: "தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு" ஆசிரியர் கே.எம்.வெங்கடராமையா,                    தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு.
"சரபோஜி மஹாராஜா" சரஸ்வதி மஹால், தஞ்சாவூர் வெளியீடு.
"போன்ஸ்லே வம்சத்து வரலாறு" சரஸ்வதி மஹால் வெளியீடு, தஞ்சாவூர்.

முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய "தஞ்சாவூர் நாயக்கர்கள் வரலாறு" சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

மராத்தியர் வரலாறு - Part 21


Serfoji II
தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 21

சென்ற பகுதியில் துளஜா ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட சிறுவன் சரபோஜி இங்கிலீஷ் கம்பெனியாரின் துணையோடு அமர்சிங்கைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தஞ்சாவூர் ராஜயத்தின் ராஜாவாகப் பதவி ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்தோம். இந்த அமர்சிங்கைப் பற்றி ஆங்கிலேயர்களுக்கு எதிரான உணர்வுகள் கொண்ட தேசபக்தன் எனவும் ஒரு வரலாறு உண்டு. அதற்குள் இப்போது போக வேண்டாம். தஞ்சாவூர் ராஜதானியில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளை மட்டும் பார்ப்போம். இனி....

சரபோஜி, இந்தப் பெயர் தஞ்சை மராட்டிய மன்னர்கள் வரலாற்றில் பெருமைக்குரிய பெயராக விளங்கியது என்பது அனைவருக்கும் தெரியும். அவரது காலம் தஞ்சையின் கலை, இலக்கிய வளர்ச்சிகளுக்கு வித்திட்டது என்பதையும் அனைவரும் அறிவர். அவர் காலத்தில்தான் சங்கீத மும்மூர்த்திகள் வாழ்ந்து வந்தனர். அதிலும் அவர்கள் அனைவரும் சரபோஜியின் ஆளுகைக்குட்பட்ட ஊர்களில்தான் இருந்தனர் என்பதும் பெருமைக்குரிய விஷயம். வைத்திய சாஸ்திரத்தில் வல்லவர்களும், தமிழ்ப் புலவர்களும் இவருடைய சபையில் ஆதரிக்கப் பட்டனர். இவர் செய்த ஒரு புதுமை என்னவெனில், வைத்திய சாஸ்திர நுணுக்கங்களை வைத்தியர்கள் எழுத, அதனைக் கவிதை வடிவில் புலவர்கள் வடித்து வைக்க, இன்றும்கூட "சரபேந்திர ராஜ வைத்திய முறைகள்" எனும் கவிதை நூல்கள் நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. இவை சரஸ்வதி மகால் நூலகத்தின் வெளியீடுகள்.

சரபோஜி II என்ற அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடப்படும் மன்னர் சின்னஞ்சிறு இளைஞனாக பதவிக்கு வந்து நீண்ட காலம் பதவி வகித்து முதிர்ந்த வயதில் காலமானார். இவர் பதவிக்கு வந்தவுடன் தான் பதவுக்கு வருவதற்கு முன்பாக நடைபெற்ற அநியாயங்களுக்கெல்லாம் பரிகாரம் செய்தார். மக்கள் பல தொல்லைகளை அனுபவித்த காரணத்தால் அவர்களுக்கு நன்மை பயக்கும் பல காரியங்களை நடைமுறைப் படுத்தினார். ராஜாங்கத்தின் கணக்கு வழக்குகளில் புகுந்து விளையாடிக் கொண்டிருந்த பெரும் பெருச்சாளிகளைத் துரத்திவிட்டு, அவற்றைச் சீர் செய்தார்.

தனக்குச் சமமான அந்தஸ்து உள்ள காட்டிகே குலத்திலிருந்து யமுனாபாயி, அகல்யாபாயி ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியாரிடமிருந்து தஞ்சாவூர் ராஜ்யத்துக்கு வரவேண்டியிருந்த பாக்கி பணத்தைத் திரும்பப் பெற்றார். தஞ்சாவூரில் அப்போது Resident எனும் பதவியில் இருந்தவரான Macleod என்பவர் சரபோஜியிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. இவர் மீதான புகார்களை சரபோஜி மன்னர் 1800ஆம் வருஷம் மே மாதம் 27ஆம் தேதி ஒரு கடிதம் மூலம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தார். அதன் பேரில் தஞ்சை அரசாங்க அதிகாரிகள் சிலரை கம்பெனியார் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

அதன்படி தத்தாஜியப்பா என்பவருடைய தலைமையில் மேலும் இரண்டு அதிகாரிகளைச் சென்னைக்கு விசாரணையில் பங்கு கொள்ள அனுப்பி வைத்தார் சரபோஜி. கம்பெனி அதிகாரிகள் இவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் ரெசிடெண்ட் மெக்லோட் மீது தவறு இருப்பது தெரிய வந்தது. ஆகையால் அவர் பதவி நீக்கம் செய்யப் பட்டார். பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ரெசிடெண்ட் மெக்லோட் பதவி போனதும் மிகவும் மனம் நொந்து போனார். சரபோஜிக்குத் தான் இழைத்த தீங்குகள் அவரது மனச்சாட்சியை வருத்தியிருக்க வேண்டும். அவரும் அவருடைய மனைவியும் ராஜாவிடம் சென்று தங்கள் பதவி போனபிறகு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தியைச் சொல்லி வருத்தப் பட்டனர். ராஜாவும் மிகவும் பெருந்தன்மையுடன், அவர் தனக்குச் செய்த தீங்குகளை நினையாமல் அவருக்கு பதினாயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவினார்.

ராஜா சரபோஜியின் இரண்டாவது மனைவி அகல்யாபாயிக்கு ஒரு பெண் மகவு பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சுலட்சணாபாயி என்று பெயரிட்டு அருமையாக வளர்த்தனர். சரபோஜிக்கு முன்பாக ராஜ்யத்தை ஆண்ட அமர்சிங் சரியான முறையில் ஆட்சி செய்யாததால் மக்கள் வருத்தமடைந்ததை யொட்டி பிரிட்டிஷ் கம்பெனியார் தாங்களே ராஜ்யத்தை ஆள முன்வந்த போது சரபோஜியும் அதற்கு சம்மதித்து ஆட்சிப் பொறுப்பைக் கம்பெனி கவனித்துக் கொள்ள அனுமதித்தார்.

மெக்கன்சி சுவடிகளின் படியும், மராத்திய வரலாற்றுச் செய்திகளின்படியும், பிரிட்டிஷ் சரித்திர ஆசிரியர்களின் கூற்றுப்படியும் அமர்சிங்கின் மீது பல குறைகள் கண்டுபிடிக்கப் பட்டாலும், நிலைமை அப்படி இல்லை என்பதும் வேறு பல வழிகளில் தெரிய வருகிறது. அமர்சிங்கைப் பற்றிய ஓர் ஆங்கில வரலாற்றாசிரியரின் கூற்றைப் பாருங்கள்.

"A liberal prince (Amar Singh) no doubt, he worked for the welfare of his people. Anxious to promote cultivation, he granted an increase of the ryot's share of the produce, suspended the colletion of duties on grain exported for the relief of the famine sticken Ramnad in 1794, set up a Court and introduced individual settlement in the place of the village settlement."

அமர்சிங் காலத்தில் அவர் அமைச்சர் சிவராயரை தற்போது குடிவாரம் எவ்வளவு என்று கேட்க அவர் 'அனேக நாட்களாக குடிமக்கள் 100க்கு 30 வாரம் பெறுகின்றனர்' என்றார், உடனே அமர்சிங் இனி 100க்கு 40 வீதம் கொடுங்கள் என்று உத்தரவிட்டாராம். இதிலிருந்து ராஜா மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. எனினும் சரபோஜியையும், ஆங்கில கம்பெனியாரையும் ஆதரிப்போர் அமர்சிங் பற்றி ஒரு அவதூறான செய்தியைப் பரப்பி அவரை நீக்க முயற்சித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

அமர்சிங்குக்கு அரசுரிமை இருக்கிறதா இல்லையா என்பது வேறு. ஆனால் அவர் நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்தினாரா இல்லையா, மக்கள் நலனில் அவருக்கு அக்கறை இருந்ததா இல்லையா என்பது வேறு. எனவே அவரை பூதம் போல உருவகப் படுத்தும் முயற்சி நடைபெற்று அவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் கணிக்க முடிகிறது. இல்லையா?

தஞ்சாவூருக்கு ராஜா சரபோஜி மன்னனாக வந்த பிறகு ஆங்கிலேய கம்பெனியார் தங்கள் படைகளை கோட்டையிலிருந்து விலக்கிக் கொண்டு காலி செய்து கொடுத்தனர். அது வரையிலும் தஞ்சை ராஜாவை நம்பாதவர்கள் சரபோஜி வந்ததும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்திருக்க வேண்டும். தஞ்சை ராஜாங்கப் பணிகளை கம்பெனியார் எடுத்துக் கொள்ள வேண்டுமெங்கிற முடிவை எடுத்த போது கல்கத்தாவிலிருந்து கம்பெனியின் இந்திய தலைமை அகம் சென்னை கம்பெனியாருக்கு ஒரு கடிதம் எழுதினர். அதன்படி சரபோஜியின் சம்மதத்தைப் பெறும்படி கூறியிருந்தனர். ராஜாவும் தனது மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தார்.

தஞ்சை மன்னர் சரபோஜியும் ஆங்கில கம்பெனியாரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி ஆங்கிலப் படை தஞ்சைக் கோட்டையை விட்டு வெளியேறிவிடும் என்றும், அதன் பின் ராஜா கோட்டையைத் தன் விருப்பப்படி வலுப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அந்த ஒப்பந்தம் சொல்லியது. அந்த ஒப்பந்தப்படி கம்பெனியார் ராஜாவின் செலவுகளுக்காக ஒரு லட்சம் நட்சத்திர பகோடா பணமும், வரி வசூலில் ஐந்தில் ஒரு பங்கையும் எல்லா செலவுகளும் போக மீதியை அமர்சிங்கை ஆதரிப்பதற்காகக் கொடுப்பதென்றும் தீர்மானித்தது. ஆண்டுக்கு 25000 பகோடா அமர்சிங்குக்குக் கொடுக்க முடிவானது. இந்த ஒப்பந்தம் 1801இல் செய்து கொள்ளப் பட்டது.

இனி கொஞ்சம் ராஜாங்க சமாச்சாரத்துக்கு மாறான சில சொந்த விவகாரங்களைப் பார்க்கலாம். ராஜா சரபோஜி இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட செய்தியைப் பார்த்தோமல்லவா. அந்தத் திருமணத்துக்கு முன்பாக அவருக்கு ஒரு நல்ல அழகியும், குணவதியுமான பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அந்தப் பெண்ணும் ராஜாவுக்கு மனதுக்கு உகந்த வகையில் நடந்து கொண்டு அன்னியோன்னியமாக இருந்து வந்தாள். அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து போயின. இரண்டாவது பிரசவத்தின் போது அந்தப் பெண்ணும் இறந்து போனாள்.

அவள் ஒரு நாள் ராஜாவிடம் தன் நினைவாக அன்னசத்திரம் ஒன்றை கட்ட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தாள். அப்படியொரு விருப்பத்தைத் தெரிவித்திருந்த காரணத்தால், அவள் காலமானதும் ராஜா அவள் விருப்பப்படி ஒரு அன்ன சத்திரம் கட்ட முடிவு செய்தார். அந்தப் பெண்ணின் பெயர் "முக்தாம்பாள்". அவளுடைய பெயரில் ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஒரத்தநாட்டில் ஒரு அக்ரகாரம், கோயில், குளம், தோட்டம் இவற்றையும் அமைத்து அங்கு வேத பண்டிதர்களையும் குடியமர்த்தி அங்கு "முக்தாம்பாள் சத்திரம்" நிறுவப் பட்டது.

இந்த சத்திரம் தொடர்ந்து நன்றாக நடைபெறும் வகையில் அதற்கென்று நிலபுலங்கள் நிவந்தங்களாகத் தரப்பட்டன. இந்த ஆவணம் 1802 ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி துன்மதி வருஷம் துவக்கி வைக்கப்பட்டது. அந்த சத்திரத்தின் வாசலில் இருக்கும் ஒரு கல்வெட்டு கூறுகின்ற செய்தி இதோ:--

"ஸ்ரீமத் போஸ்லே வம்சோத்தம இந்த்ரபதி சிரேஷ்டப்ரஸாத ஜனித ப்ரதாப ஸ்வீக்க்ருததில்லீ வானுபாக ஸ்வாதந்தர்ய வ்பட்சக்ருத தில்லி ராஜ்ய ஸார்வபெளம க்ஷோணீச குலலாம சோளாவனீ நாயக தஞ்சபுராதீச ஸ்ரீமந்த மகாராஜா சத்ரபதி சரபோஜி ராஜே ஸாஹேபயானி ஸ்த்ரீ ஸெளபக்யவதி முக்தாபாயி அம்மாசே நாவே ஸ்ரீஸேது மார்க்கீந்த தஞ்சபுரவ பட்டுக்கோட்டை யாதினீஸ்தலாச மத்யபூமீந்த அன்ன ஸத்ரவ, அக்ரஹாரவ, சிவாலயவ, விஷ்ணுஸ்தல இத்யாதி அமோக தர்ம ப்ரதிஷ்டிலா தாரீக -- சாலிவாஹன சகம் 1722 துன்மதி நாம ஸம்வத்ஸரம் புஷ்ய சுத்த த்ரயோதஸி ஸ்திர வாஸாதிகளீ தை மாசம் பான்சு / ஆங்கிலம் 16-1-1802 ஆகும்."

இன்றும் அந்த சத்திரம் உத்தமி முக்தாம்பாள் நினைவாக ராமேஸ்வரம் செல்லும் யாத்திரீகர்கள் தங்கும் விடுதியாக நிர்வகிக்கப் பட்டு வருகிறது.

இதன் பிறகு ராஜா தீர்த்த யாத்திரைக்காக சோழ மண்டலம் முழுவதும் ஒரு முறையும், ஸ்ரீரங்க யாத்திரை ஒரு முறையும், காவிரி கடலில் கலக்கும் பூம்புகாருக்கு ஒரு முறையும், பழனி மலைக்கு ஒரு முறையும், கங்கை நதியில் புனித நீராடுவதற்கு ஒரு முறையும் பயணம் செய்தார். அப்படி அவர் யாத்திரை செல்லும் வழியெல்லாம் ராஜாவுக்குத் தகுந்தபடி மரியாதைகள் செய்ய ஏற்பாடுகள் செய்து வைக்க தஞ்சை ரெசிடெண்டும் கூடவே வந்தார். கம்பெனி ஒப்பந்தப்படி ராஜாவுக்கு ஏற்ற மரியாதைகளை செல்லுமிடங்களில் எல்லாம் கம்பெனி ஏற்பாடு செய்து தரும்.

மேலும் அந்த ஒப்பந்தப்படி கம்பெனியாருக்கு யுத்தம் காரணமாகத் தேவைப்படும் போதெல்லாம் கோட்டையை உபயோகிக்க அனுமதியும் கொடுக்கப் பட்டிருந்தது. ரெசிடெண்ட்டாக இருந்த Blackburn என்பவர் ராஜா கம்பெனிக்கு உறுதுணையாகவும், நாணயமாகவும் நடந்து கொண்டிருப்பதாகக் கம்பெனி உயர் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார்.

இந்த ரெசிடெண்ட் Blackburn பணிக்காலம் முடிந்து தன் ஊருக்குத் திரும்பிச் சென்ற பிறகும் சரபோஜியிடம் அன்பு கொண்டு அவருக்குச் சில புத்தகங்க்கள், பூகோளப் படங்க்கள், வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்தார்.

பழனிக்கு யாத்திரை போகும் முன்னதாக ராணி அகல்யாபாயிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ராஜகுமாரபாயி என்று பெயர் வைத்தார்கள். இவர் காலத்தில் ஓர் அபூர்வமான பறவை எங்க்கிருந்தோ அரண்மனைக்கு வந்து சேர்ந்தது.

மகாராஜாவின் மனைவி அகல்யாபாயிக்கு மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு பாயம்மாபாயி என்று பெயரிட்டார்கள். ராஜா எல்லா மதத்தினரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தார். இவர் எப்போதும் சிவபூஜை செய்வார். புராண இதிகாச சரித்திர பிரவசனம் கேட்டுக் கொண்டிருப்பார். இந்த மராட்டிய மன்னர்களின் வரலாற்றை சிட்னீஸ் பாபுராயர் என்பவரைக் கொண்டு மன்னர் எழுதச் செய்தார். 1803 மார்ச் மாதம் 25ஆம் தேதி இந்தப் பணி தொடங்கப் பட்டது.

1832 மார்ச் 8ஆம் தேதி சரபோஜிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. மாடியிலிருந்து கிருஷ்ண விலாசம் என்கிற அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கிருந்த எல்லா மஹால்களும் சீல்வைத்து மூடப்பட்டன. அரண்மனைக்கு பலத்த காவல் போடப்பட்டது. இரவு 6 நாழிகையில் பிராயச்சித்தம் எனும் இறப்பதற்கு முன்பு செய்யப்படும் சடங்கு நடந்தது. இரவு 11 நாழிகைக்கு ராஜா உயிர் நீத்தார். காலையில் ஊர் முழுவதும் தண்டோரா போட்டு அறிவிக்கப் பட்டது. காலையில் படைகளின் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் கோட்டைக்கு வெளியே கொண்டு வரப்பட்டது. வடக்கு வாசலில் அலிதர்வாசாவில் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க்க அக்னி மூட்டப் பட்டது. அவருடைய அப்போதைய வயது 54 என்பதைக் குறிக்கும் வகையில் 54 குண்டுகள் முழங்கின. அவரது மகன் சிவாஜி II அவருடைய சிதைக்கு தீ மூட்ட மன்னரின் உடல் தீக்கு இறையானது. அவரைத் தொடர்ந்து சிவாஜி II பட்டத்துக்கு வந்தார்.

(நிறைவை நோக்கி வந்து விட்டோம்)

Sunday, September 25, 2011

மராத்தியர் வரலாறு - Part 20


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 20

துளஜேந்திர ராஜா தனக்கு வாரிசு இல்லாமல் போய்விட்டதால், தன் உறவில் ராஜவம்சத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட செய்தியை சென்னையில் இருந்த ஆங்கிலக் கம்பெனி அதிகாரிகளுக்கும், கவர்னருக்கும் தெரிவித்து ஒரு கடிதம் எழுதிய செய்தியை முந்தைய பகுதியில் பார்த்தோம். இனி.....

தஞ்சாவூர் ராஜ்யத்தில் அரண்மனையில் துளஜா ராஜா செய்துவந்த இதுபோன்ற செயல்களைக் கவனித்துக் கொண்டிருந்த ராஜ குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு இவரது நடவடிக்கைகள் மீது அதிருப்தி ஏற்பட்டிருந்தது. இவருடைய நடவடிக்கைகள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. காரணம் அவர்களது எதிர்பார்ப்புகள் வேறு. துளஜா மிக சீக்கிரத்தில் இறந்து போவார். வாரிசு இல்லாமல் அவர் இறந்து போனதும் ராஜாங்கம் யாருக்கு என்று போட்டா போட்டி நடக்கும். அப்போது அவரவர்க்குக் கிடைத்ததைச் சுருட்டலாம் என்று காத்திருந்தார்கள் அவர்கள். அரண்மனை நிறைய இதுபோன்ற துர்புத்தி படைத்தோர் நிறையவே இருந்தார்கள்.

அவர்களுடைய குறை, முறைப்படியான, எல்லா தகுதிகளும் படைத்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டதோடு, அவனை ஆங்கிலேய அதிகாரிகளிடம் வேறு ஒப்படைத்திருக்கிறார். அவர்கள் அந்தச் சிறுவனுக்கு நல்ல கல்வியைக் கற்பித்து, உத்தமமான ராஜாவாக ஆக்கிவிட்டார்களானால், தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற கவலை அவர்களுக்கு. துளஜாவின் இயலாமை காரணமாக அரண்மனையில் உட்கார்ந்து கொண்டு கிடைத்ததைச் சுருட்டித் தின்று கொண்டிருந்தார்கள் அவர்கள்.

சில சுய நலக்காரர்கள் ஒன்றுகூடி இதற்கு ஏதானும் மாற்று கண்டுபிடிக்க முடியுமா என்று யோசித்தார்கள். பிரதாபசிம்மராஜா இருந்த போது அவருடைய ஆசை நாயகி அன்னபூரணாபாயி என்ற ஒருவருக்கு இரு பிள்ளைகள் பிறந்தது என்பதையும், அதில் கிருஷ்ணசாமி என்கிற ஒருவன் இறந்து போனதையும் ராமசாமி என்ற மற்றொருவன் அமரசிம்மன் என்ற பெயரில் இருந்து வந்ததையும் பார்த்தோம் அல்லவா? அவன் துளஜா ராஜாவுக்குத் தம்பி முறை ஆகிறது. . இவன் திருவிடைமருதூரில் இருந்து வந்தான். அந்த அமரசிம்மனைத் தேடிப் பிடித்தார்கள் அரண்மனையில் இருந்த தீயமனம் படைத்தோர். இவனுக்குச் சட்டப்படி உரிமை கிடையாது என்ற போதிலும், இளைய வயதுக்காரன், மேலும் பிரதாபசிம்ம ராஜா விட்டுச் சென்றிருக்கிற ஒரு வாரிசு. இவனை முன்னிருத்தி ராஜாவாகக் கொண்டு வர வேண்டும். அதிலும் துளஜா இருக்கும் போதே அதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

இதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இவர்கள் துளஜா ராஜா மனச்சோர்வோடு இருந்த ஒரு நாள், அமர் சிங்கை அவர் முன்பாகக் கொண்டு வந்து நிருத்தினார்கள். அந்த அமர்சிங் தான் ராஜாவுக்கு வாரிசு, தனக்குத் தம்பி முறை என்று சென்னை கவர்னருக்கு மன்னர் எழுதியது போல ஒரு கடிதம் தயாரித்து அனுப்பி வைத்தார்கள். அப்படி கடிதம் எழுதிய மறு நாள் அதாவது 1787 ஜனவரி மாதம் 31ஆம் தேதி ராஜா இறந்து போனார்.

மாண்டு போன ராஜாவுக்கு உத்தரகிரியைகளை அமர்சிங்கை விட்டுச் செய்யச் செய்தார்கள். ஒப்புக்காக உடன் சரபோஜியையும் வைத்துக் கொண்டார்கள். அதன் பிறகு தஞ்சை பேராசைக் காரர்கள் சென்னைக்குச் சென்று கவர்னரை சரிக்கட்டுவதற்காகப் போய் முகாமிட்டார்கள். அங்கு கவர்னர் எப்படி நடந்து கொள்வாரோ என்ற பயத்தில் அவருடைய மனைவி லேடி ஆர்சிபால்டு கேமல் என்பவரை மெதுவாக நயிச்சியம் பேசி தன்னக் கட்டிக் கொண்டார்கள். அவர் மூலம் கவர்னரையும் சரிக்கட்டி விடலாம் என்பது அவர்கள் நம்பிக்கை. கவர்னர் இந்த விஷயம் குறித்து கல்கத்தாவில் இருந்த அவர்களது தலைமை பீடத்துக்குக் கடிதம் எழுதி அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டு தஞ்சாவூர் வந்து சேர்ந்தார்.

துளஜா ராஜா இறந்து போன செய்தி குறித்து பியர்சன் என்பவர் எழுதியிருக்கும் பகுதி இது: --

"The next morning Rajah who was rapidly sinking requested the attendance of the Resident Mr.Hudleston, Col. Stuart, the Commandar of the Garrison and Mr.Swartz. The dying prince then sent the following message to them. After stating that in compliance with the suggestion of Mr.Swartz, he has appointed Amar Singh to the Guardian of the Child and regent of the Country, till he should be capable of succeeding to the throne."

"In the course of the evening after the preceding conversation the Rajah's mother visited him and earnestly interceded on behalf of Ramasamy, afterwards called "Amar Singh". This combined with the advice of Father Swartz determined Thulaja Raja to adopt the plan proposed. He accordingly sent for his brother delivered his adopted son into his hands, desired him to be his guardian and earnestly commended him to his care and affection.

But before his death he wanted to adopt some one to succeed him and for that purpose, he chose Serfojee from a collateral branch and appointed his brother Amar Singh as Regent till the boy came of age."

இதற்கு முன்பாக அமர்சிங்கின் ஆதரவாளர்கள் தஞ்சை அரண்மனையில் இருந்த ஆங்கில அதிகாரிகளைச் சரிக்கட்டி வைத்திருந்தார்கள். ஆங்கில அதிகாரிகளும் இவர்கள் எண்ணப்படி நடந்து கொள்ள சம்மதித்திருந்தார்கள். கவர்னர் ஆர்ச்சிபால்டு கேமல், தஞ்சாவூருக்கு வந்து, சரபோஜி, அமர்சிங் இவர்களுக்கு நெருக்கமானவர்களை எல்லாம் அழைத்து விசாரித்து விட்டு 12 பேர் கொண்ட ஒரு குழுவை விசாரித்தார்கள். அந்தக் குழு அமர்சிங்கின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தவர்கள். அவர்கள் எந்த சாத்திரமும், ராஜ்ய சாஸ்திரமும் அறியாதவர்கள். நியாயம், தர்மம் இவற்றையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு இந்த பன்னிருவர் குழு தஞ்சாவூர் ராஜ்யத்தை ஆளும் உரிமை அமர்சிங்குக்குத்தான் உண்டு என்று கவர்னரிடம் ஒப்புதல் அளித்தார்கள்.

இந்த விசாரணைக்குப் பின் கவர்னர் ஆர்ச்சிபால்டு கேமல், அமர்சிங்கை அழைத்து 1787 ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தஞ்சை ராஜாவாக பட்டம் கட்டி அமரவைத்தார்.

அமர்சிங்.

அமர்சிங் தஞ்சாவூர் ராஜாவாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினார். ராஜாங்க நியாயப்படி சரபோஜிதான் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் சிலர் செய்த சூழ்ச்சியினால் அமர்சிங் அந்தப் பதவியில் அமர்ந்தார். தான் அரசனாக ஆனதும் இந்த அமர்சிங்கினால் சிறுவன் சரபோஜிக்குப் பல தொல்லைகள் கொடுக்கப்பட்டன. துளஜா ராஜா தான் இறக்கும் தருவாயில் தனது ஸ்வீகார மகன் சரபோஜிக்கு பாதிரியார் ஸ்வார்ட்சை பாதுகாவலராக நியமித்துவிட்டிருந்தார் அல்லவா? அதனால் அவர் அடிக்கடி அரண்மனை வந்து சரபோஜியைக் கவனித்துக் கொண்டார். அப்படி அவர் அரண்மனையில் இருந்த போது கவனித்த வகையில் அங்கு சரபோஜிக்குச் சரியான பாதுகாப்பு இல்லை என்பதை புரிந்து கோண்டு சென்னை கவர்னருக்குக் கடிதம் எழுதினார்.

அந்த நிலையில் தஞ்சாவூருக்கு கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை கவர்னர் புதிய ரெசிடெண்ட் ஒருவரை நியமித்திருந்தார். அவர் மூலம் ஸ்வார்ட்ஸ் பாதிரியார் சென்னை கவர்னருக்குக் கடிதம் எழுத, அந்தக் கடிதத்தின் விவரங்களை கவர்னர் இங்கிலாந்தில் இருந்த கம்பெனி டைரக்டர்களுக்குத் தெரியப் படுத்தினார். அதன் பேரில் கம்பெனியார் பிறப்பித்த உத்தரவு ஒன்று தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த உத்தரவில், சரபோஜியை அமர்சிங்குடைய தொல்லையிலிருந்து விடுவித்து, அந்தச் சிறுவனை ஸ்வார்ட்ஸ் பாதிரியார் வசம் ஒப்படைத்து அவனுக்குத் தனி அரண்மனையை ஒதுக்கி அங்கு அவனுக்குத் துணையாக சில பண்டிதர்களையும் நியமிக்க வேண்டுமென்று இருந்தது.

"The next morning he (Serfojee) for the first time, since his confinement saw the Sun." வெளி உலகைக்கூட பார்க்கமுடியாதபடி உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்த சரபோஜி அன்றுதான் சூரியனைப் பார்த்தான் என்று எழுதுகிறார்கள் என்றால், அப்போதிருந்த நிலைமையை உணர்ந்து கொள்ள முடிகிறதல்லவா?

"Having noticed that the house, was nearly cleaned out and Serfojee's furniture removed there. I (Resident) conducted him to it and placed a guard of 12 sepoys over him. I have ordered a proper person, recommended by Mr.Swartz, a Maratha Brahman named Dhada Rao to attend to his education." தஞ்சையின் ஸ்தானீகர் (Resident) 1789 அக்டோபர் மாதம் எழுதிய குறிப்பு இது.

கிழக்கிந்திய கம்பெனியார் சரபோஜிக்கும், அவனுடைய குடும்பத்தாருக்கும் செலவுக்கு ஒரு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். "An establishment was formed amounting to one thousand and seventy seven star pagodas monthly for Serfojee and his relatives and one thousand star pagodas each to the three widows of the deceased Rajah." இது 24-9-1790இல் எழுதப்பட்ட குறிப்பு.

அதன் பிறகு சரபோஜி வீணாக பொழுதைப் போக்காமல் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம் ஆங்கிலம் படிக்கவும், எழுதவும், பேசவும் கற்றுக் கொண்டார். ஸ்வார்ட்ஸ் பாதிரியாரும் சரபோஜியிடம் காட்டிய அன்பும், அரவணைப்பும், பரிவும் ஒரு தந்தை மகனிடம் காட்டிய அன்பைப் போன்றது. இந்த அன்புப் பிணைப்பினால் சரபோஜி பல கலைகளையும், மொழிகளையும், பண்பாடுகளையும் கற்கவும், அறிந்து கொள்ளவும் முடிந்தது.

ஆங்கிலம் தவிர சரபோஜியின் தாய் மொழியான மராத்தியையும் படிக்க, எழுத, பேச மிக நன்றாகத் தேர்ச்சி பெற்றார். தமிழ் மொழியும் அவருக்குக் கற்றுத் தரப்பட்டது. இப்படி சரபோஜி பல மொழிகளில் பாண்டித்தியம் பெறுவதற்கு இந்தக் காலம் மிகவும் பயனுடையதாக இருந்தது.

சென்னை கவர்னரோடு அடிக்கடி தொடர்பு கொண்டு ஸ்வார்ட்ஸ் பாதிரியார் அமர்சிங் சரபோஜிக்குக் கொடுத்து வந்த தொல்லைகளை நிறுத்தச் செய்தார். இப்படி எத்தனை நாட்கள் சரபோஜியைத் தஞ்சையில் வைத்துக் கொண்டு பாதுகாப்பு கொடுக்க முடியும். அவனை சென்னைக்குக் கொண்டு வந்து கல்வி பயிற்றுவித்து, வீரம் செறிந்த ஓர் மன்னனாக உருவாக்க வேண்டும் என்று ஸ்வார்ட்ஸ் பாதிரியார் முடிவு செய்தார். கம்பெனி அதற்கு சம்மதித்தது.

ஸ்வீகாரத் தாயாரும் துளஜாவின் மனைவியுமான சுலட்சணாபாயி காலமானதை அடுத்து அவருடைய அந்திமக் கிரியைகளை முடித்துவிட்டு மற்ற இரு தாயார்களுடன் சரபோஜி, ஸ்வார்ட்ஸ் பாதிரியாரின் துணையோடு சென்னைக்குச் சென்றனர். அங்கு இவர்கள் கவர்னரின் மாளிகைத் தோட்டத்து பங்களாவில் தங்கிக் கொண்டு படிப்பைத் தொடர்ந்தார்.

சென்னையில் கவர்னர் மாளிகைத் தோட்டத்தில் வசித்து வந்த சரபோஜிக்கு கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு Gerick (கெரிக்) என்பவரை பொறுப்பாளராக நியமித்துவிட்டு ஸ்வார்ட்ஸ் பாதிரியார் தஞ்சைக்குத் திரும்பினார். சென்னையில் புதிய காப்பாளருடன் விடப்பட்ட சரபோஜி, ஸ்வார்ட்ஸ் பாதிரியார் தன்னுடன் இருந்திருந்தால் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்திருப்பாரோ, அதே மகிழ்ச்சியுடன் கெரிக் என்பவருடனும் பழகிக் கொண்டு வாழ்ந்தார்.

இதற்கிடையே கிழக்கிந்திய கம்பெனியார், தஞ்சை அரசுக்கு வாரிசு அமரசிம்மனா, சரபோஜியா என்பதை ஆய்வு செய்தனர். இதற்கு முன்பு பண்டிதர்களின் குழு பரிசோதித்து அமர்சிங் தான் என்று முடிவு செய்தார்களல்லவா? அந்த குழுவினர் ஆதாரமாகக் காட்டிய சாத்திர நூல்களைக் கொண்டு வாருங்கள் என்றனர் கம்பெனியார். அமர்சிங்கையும் இது குறித்து விசாரித்தார்கள். இந்த ஆவணங்களை யெல்லாம் காசியில் இருந்த மகா பண்டிதர்களுக்கு அனுப்பி அவர்களுடைய முடிவைக் கேட்டிருந்தனர் கம்பெனியார்.

"The Board resolved to call on the most learned Pandits in Bengal and Benaras for answers to the substance of the questions put to the Pandits at Tanjore that those questions were translated by the late Sir William Jones into Sanskrit and transmitted to the Pandits of bengal and Benaras whose answers had been duly received and translated for the use of the Board."

சரபோஜியையும் பாதுகாப்பு கொடுத்து அமர்சிங் தொல்லை கொடுக்க முடியாதபடிக்கு தஞ்சையில் தங்கியிருக்குமாறு சொல்லி அனுப்பி வைத்தனர். அவரும் அதன்படி Gerick உடன் சென்னையிலிருந்து கிளம்பி வருகின்ற வழியில் திருக்கழுக்குன்றம் சென்று அங்கு பறவை தரிசனம் (அங்கு வேதகிரீஸ்வரர் ஆலயம் மலை மீது இருக்கிறது. அங்கு தினமும் கோயில் பிரசாதம் அருந்த இரு கழுகுகள் வந்து அந்த கோயில் குருக்கள் தரும் பிரசாதத்தைச் சாப்பிட்டுவிட்டுப் பறந்து போகும். இதனை மக்கள் கூடியிருந்த தரிசனம் செய்வர்.) செய்து கொண்டு வந்தார்.

முன்பு அமர்சிங்கிடம் இருந்த பயத்தாலும், கையூட்டுப் பெற்றுக் கொண்டு எந்த சாஸ்திரமும் தெரியாத 12 பேர் பொய்யான சாஸ்திரங்க்களைச் சாட்சியாகக் காட்டினார்களல்லவா? அவர்களில் இறந்து போனவர்கள் போக, மீதமுள்ளவர்கள் தங்களுக்கு எந்த சாஸ்திர ஞானமும் கிடையாது என்றும், பொய்யாக அப்படி எழுதிக் கொடுக்கச் சொன்னபடி எழுதிக் கொடுத்தோம் என்று ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம் ஒப்புக் கொண்டார்கள். இந்தச் செய்தியையும் பாதிரியார் சென்னை கவர்னருக்குத் தெரியப் படுத்தினார்.

பொய்யான தகவல்களைச் சொல்லி சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்தது செல்லாது என்று அமர்சிங்கை அரச பதவியில் உட்கார வைத்த அந்த 12 மகா பண்டிதர்களின் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?

1. பாடலாச்சார்யா
2. மாதவாச்சார்யா
3. தாதா ராவ்
4. ஜனாச்சாரி
5. அப்பா சாஸ்திரி
6. ராமா சாஸ்திரி
7. சத்யநிதி ஆச்சார்யா
8. நரசிம்மாச்சாரி
9. ஜனாச்சாரி (2)
10. புஜங்க ராவ்
11. பாப்பண்ணா
12. மாதவாச்சாரின் மருமகன்

இவர்களுள் ஜனாச்சாரி சன்னியாசியாகி விட்டார். தாதா ராவை விசாரித்த போது தான் பொய் சொன்னதாக அழுது கொண்டே சொன்னார். ஜனாச்சாரி (2) தனக்கு உண்மையில் எந்த தர்ம சாஸ்திரமும் தெரியாது என்று ஒப்புக் கொண்டார். அப்பா சாஸ்திரி தனக்கும் தர்ம சாஸ்திரம் தெரியாது, மற்றவர்கள் சொன்ன இடத்தில் கையெழுத்து மட்டும் போட்டதாகச் சொன்னார். இப்படி பலரும் தாங்கள் போலி ஆசாமிகள் என்பதை ஒப்புக் கொண்டனர்.

இந்த விவரங்களையெல்லாம் ஸ்வார்ட்ஸ் பாதிரியார் கம்பெனி அதிகாரிகளுக்கு எழுதினார். அவர்கள் அமர்சிங்கை பதவி நீக்கம் செய்து அனுப்பி விட்டு சரபோஜியை அரசராக ஆக்கும்படி எழுதினார்கள். அதன்படி சரபோஜி 1798 ஜுன் மாதம் சரபோஜி II எனும் பெயரோடு அரச பதவியை ஏற்றுக் கொண்டார். ஆங்கில கம்பெனியார் நீதி நெறி முறைகளுக்குப் புறம்பாக அரசபதவிக்கு வந்த அமர்சிங்கை நீக்கிவிட்டு சரபோஜியை அரசராக அறிவித்த செயலுக்கு தஞ்சை ராஜ்யத்து மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

(இன்னும் வரும்)

மராத்தியர் வரலாறு - Part 19


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 19

துளஜா ராஜா தனது ஆட்சி காலத்தின் தொடக்கத்திலேயே பல சிக்கல்களைச் சந்தித்தான். அவன் மனைவிகளுக்குப் பிறந்த குழந்தைகளும் இறந்து போன செய்திகளையும் சென்ற பகுதியில் பார்த்தோம். இனி ....
Thulaja Raja

துளஜா ராஜாவின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகளை எட்டு வயது ஆகும்போது காட்டிகே ராவ் என்பவனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார். அந்த மகளுக்கு ஒரு பிள்ளை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மாருதிசாமி என்று பெயர். அதற்குப் பின் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு சாந்தம்மாள் என்று பெயரிட்டனர். சாந்தாபாயி என்று சொல்வார்கள் அந்தக் குழந்தையை. இவ்விரண்டு குழந்தைகளைப் பெற்றுவிட்டு ராஜாவின் இரண்டாவது பெண் காலமாகிவிட்டாள்.

தன் மகள் வழியில் பிறந்த இவ்விரு பேத்தி குழந்தைகளையும் ராஜா அன்போடு வளர்த்து வந்தார். அவ்விரு குழந்தைகளும், ராஜாவின் தந்தையார் பிரதாபசிம்மர் காலமான ஆண்டிலேயே இறந்து போயினர். இப்படி துளஜா ராவாவுக்கு தனக்குப் பிறந்த பிள்ளைகளும் இறந்து, மகள் வழியில் பிறந்த பேரப் பிள்ளைகளும் இறந்து தனிமைப் பட்டுப் போனார். ராஜாவின் மனம் வருத்தமடைந்தது. குடும்பத்தில் நேர்ந்த இந்த இழப்பை நினைத்து நினைத்து ராஜா ராப்பகலாம உணவு சரியாக உண்ணாமல், தூக்கம் சரியாகத் தூங்காமல் மூன்று வருஷங்கள் படுத்த படுக்கையில் கிடந்தார்.




ஆற்காடு மீண்டும் தனக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த தஞ்சை மராத்திய மன்னர்கள் தங்களுக்கு இனி கப்பம் செலுத்த வேண்டியதில்லை என்று முதலில் நவாப் முகமது அலி அறிவித்திருந்த போதிலும், சில நாட்கள் கழித்துத் தங்களது நிதி நிலைமை சரியில்லாமல் போகவே, தஞ்சாவூர் ராஜ்யம் தங்களுக்குக் கப்பம் செலுத்தத்தான் வேண்டும், அதிலும் விட்டுப்போன ஆண்டுகளுக்கும் சேர்த்துத் தர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டது. அதன் காரணமாக நவாபின் மகன் தலைமையில் ஒரு படையை அனுப்பித் தஞ்சையைப் பிடித்துக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் பண்ணியதையும், ஆங்கில கம்பெனியாரின் தலையீட்டின் பேரில் நவாப் படைகள் திரும்பப் போன பிறகு துளஜா ராஜா ஆட்சியைப் பெற்ற வரலாற்றையும் பார்த்தோம்.

அப்படி அவர் மீண்டும் ராஜ்யத்தைப் பெற்ற போதிலும் அவருடைய பிரச்சனைகள் தீர்ந்துவிடவில்லை. மைசூரின் ஹைதர் அலி 1781இல் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்து பிடித்துக் கொண்டு கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் தஞ்சையை ஆட்சி செய்யும்படி ஆயிற்று. அந்த காலகட்டத்தில் தஞ்சை ராஜ்ய மக்கள் அனுபவித்தத் துன்பங்களுக்குக் குறைவில்லை. மக்களைத் துன்புறுத்தி கடுமையான வரிவசூல் நடைபெற்றது. நாட்டில் பஞ்சம் ஒரு புறம். விளைச்சல் மிகவும் குறைந்து போனது. 1780இல் விளைந்த நெல்லின் அளவைக் காட்டிலும் பத்து மடங்கு குறைவாக விளைச்சல் இருந்தது. மைசூர் படையெடுப்பின் காரணமாக தஞ்சாவூர் ராஜ்யத்தில் பல பகுதிகளில் விளை நிலங்கள் பயிரிடப்படாமல் போயிற்று. நீர் நிலைகளும் சேதப்பட்டிருந்தன. ஆகையால் நீர் வரத்தும் இல்லை. மக்களில் பெரும் பகுதியினர் பிழைப்பு நாடி வேறு இடங்களுக்குக் குடிபெயர நேர்ந்தது. . தஞ்சாவூர் ராஜ்யத்தின் ஊர்களையெல்லாம் ஹைதரின் படைகள் சூழ்ந்து கொண்டன. அந்த காலத்தில் தஞ்சாவூர் பகுதியில் ஒரு கொடிய பஞ்சம் தோன்றியது. மக்களுக்கு உண்ண உணவில்லாமல், நாளொன்றில் அறுனூறு எழுனூறு பேர் இறக்கலாயினர். கொடுமைகளில் எல்லாம் கொடுமை சிலவிடங்களில் நரமாமிசம் சாப்பிட்டதாகவும் செய்திகள் வந்தன.

இந்த கோளாறுகளை யடுத்து 1782இல் திப்பு சுல்தானும் தன் பங்குக்குத் தஞ்சை மீது படையெடுத்து வந்தார். பிரெஞ்சுக்காரர்கள் அவருக்குத் துணையாக இருந்தனர். இவர்கள் இணைந்து ஆங்கில கம்பெனியாரின் படையைத் தோல்வியுறச் செய்து மாயூரம், சீர்காழி ஆகிய பகுதிகளைப் பிடித்துக் கொண்டு கொள்ளை யடித்தார். இந்தத் தொல்லைகளுக்கு விடிவு காண்பதற்காக துளஜா ராஜா ஆங்கிலக் கம்பெனியாருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு தஞ்சை அரண்மனையில் ஆங்கிலேயர் படையை வைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டார். மராட்டிய மன்னர் ஆங்கிலப் படைகளை நம்பி வாழ வேன்டிய ஒரு சூழ் நிலையும் உருவாயிற்று.


"On the 20th July 1780 Hyder Ali with a formidable army descended into the Carnatic Payenghat through the Chengamma Pass. Slowly extending his depradations, he crossed Coleroon river in May 1781 and entered Tanjore Kingdom. He over ran the entire country. Closely following this devastation famine broke out in the Tanjore country. Many thousands have died of want."

தஞ்சை ராஜ்யத்தில் பஞ்சமும், ஹைதர் அலியின் படையெடுப்பும், இங்கிருந்த சூழ்நிலைகளின் காரணமாக முடிவுக்கு வந்தது. துளஜா ராஜாவுக்குத் தான் இனி நிரம்ப நாட்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை என்பது புரிந்து விட்டது. தனக்குப் பிள்ளைகளோ, பேரப் பிள்ளைகளோ பிறந்தும் தங்கவில்லை. தன் உயிரும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தனக்கு இறந்த பிறகு கொள்ளியிடவோ, ராஜ்யத்தைக் ஆட்சி புரியவோ வாரிசு இல்லாமல் போய்விட்டதே என்ற தவிப்பு ஏற்பட்டது.


துளஜா தனது தந்தையைப் பற்றி நினைத்துப் பார்த்தார். தந்தை பிரதாபசிம்மர் ஒரு ராஜரிஷி போல வாழ்ந்தார். புகழையும், வெற்றியையும், பெருமையும் அடைந்திருந்தார். எண்ணற்ற உறவினர்களை யெல்லாம் அனுசரித்துக் கொண்டு ஆதரித்து வந்தார். மாலையானால் பறவைகள் மரங்களை நாடி வருவது போல எங்கெங்கிருந்தெல்லாமோ உறவினர்கள் ராஜாவை நாடி வந்து சேர்ந்தனர்.

இவ்வளவு பெருமை அவருக்கு இருந்த போதும், அவர் பற்றிய ஒரு நெருடல் மட்டும் துளஜாவுக்கு இருந்து வந்தது. அதாவது பிரதாப சிம்மருடைய தந்தையாரான துக்கோஜி திருமணம் செய்து கொள்ளாமல் வைத்துக் கொண்டிருந்த மனைவிக்குப் பிறந்தவர் இவர் என்பதுதான் அது. அப்படியொரு அவப் பெயர் தனக்கு ஏற்படும்படியாகத் தான் நடந்து கொள்ளவில்லை என்பதில் துளஜாவுக்கு திருப்தி. தனக்கு வாரிசு சட்டப்படியும் இல்லை. உரிமையில்லாத வகையிலும் இல்லை. ஆகையால் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். தன்னுடைய குலத்தில், மராட்டியத்தில் இருக்கும் தனது தாயாதியர், உறவினர்களின் வகையில் நல்ல அழகும், நற்குணங்களும், ராஜ வம்சத்துக்கு ஏற்ற லட்சணங்கள் உள்ள ஒரு குழந்தையை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டு, அதற்கு ஜாதக கர்மாக்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

(ஜாதக கர்மா என்றால், பிள்ளை பிறந்தவுடன் தந்தை வடக்கு திசை நோக்கிச் சென்று ஸ்நானம் செய்து, எள், நெல், பொன், வஸ்திரங்கள், பசு, நிலம் இவைகளையோ, அல்லது இவற்றில் சிலவற்றையோ தானமாகக் கொடுத்து, சுப கிரகத்தின் நேரம் அமைந்ததும், தன் சொந்த பந்தங்களோடு, ஸ்வீகாரம் எடுக்கப் போகும் பிள்ளையின் முகத்தைப் பார்த்தல், பிறகு ஒரு சுப நட்சத்திரம், சுப நாள், சுப ராசி பார்த்து ஜாதகர்மா செய்து கொள்வது.)

மராத்தியர்களின் பூமியான புனா, சதாரா முதலான பகுதிகளுக்குத் தூதர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, ராஜாவுக்குத் தகுந்த வாரிசு அங்கு ராஜ வம்சத்தில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து வரப் பணித்தார்கள். அப்படி சதாரா பகுதிக்குப் போன தூதர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது தெரிய வந்தது. அந்த பிள்ளையை ராஜா ஸ்வீகாரம் எடுத்துக் கொள்வது என்று முடிவாயிற்று. அந்தப் பிள்ளைக்கு "சரபோஜி" என்றும் நாமகரணம் சூட்டப்பட்டது. யார் இந்த 'சரபோஜி'?

சத்ரபதி சிவாஜி, தஞ்சை மராட்டிய வம்சத்தில் முதல் ராஜாவாக இருந்த ஏகோஜி ஆகியவர்களின் தந்தை ஷாஜி. அவருடைய மனைவி ஜீஜா பாயிக்குப் பிறந்தவர் சத்ரபதி சிவாஜி. மற்றொரு மனைவிக்குப் பிறந்தவர்கள் ஏகோஜி, விட்டோஜி ஆகியோர். இந்த விட்டோஜி சதாராவிலும், புனாவிலும் ஆட்சி புரிந்தார்.

இந்த விட்டோஜிக்கு எட்டு பிள்ளைகள். அவர்கள் சம்பாஜி, கெலோஜி, மாளோஜி, பரகோஜி, நாகோஜி, மம்பாஜி, கக்காஜி, திரயம்பகராஜா ஆகியோர். இந்த எட்டாவது பிள்ளையான திரயம்பகராஜாவுக்கு கெங்காஜி என்று ஒரு மகன் இருந்தான். கெங்காஜிக்கு பூவாஜி, தாபூஜி என்று இரண்டு மகங்கள். பூவாஜிக்கு கெங்காஜி என்று மகன். கெங்காஜிக்கு சுபான்ஜி என்றொரு பிள்ளை. சுபான்ஜிக்கு பூவாஜி, ஷாஜி என்று இரு பிள்ளைகள். இவ்விருவரில் ஷாஜி என்பவரின் பிள்ளைதான் இப்போது துளஜா ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ளும் பிள்ளை சரபோஜி. என்ன குழப்புகிறதா? சரி. இந்த குடும்ப மரத்தைப் பாருங்கள். ஓரளவுக்கு குழப்பம் தீரலாம்.

                                  ஷாஜி ராஜா
-------------------------------------------------------------
ஜீஜாபாய்
         |                                                      துக்காபாயி
சத்ரபதி சிவாஜி
                                                 ஏகோஜி விட்டோஜி
                                                                |
                                                திரயம்பகராஜா (8வது)
                                                                |
                                                  கெங்காஜி
                                                                |
                                    தாபூஜி-------------- பூவாஜி
                                                                              |
                                                                     கெங்காஜி
                                                                              |
                                                                      சுபான்ஜி
                                                                              |
                                                          பூவாஜி ஷாஜி
                                                                              |
                                                                      சரபோஜி

இப்படி போன்ஸ்லே வம்சத்தில் ஏகோஜியின் வாரிசுகளின் வழியில் பிறந்த குழந்தை ஒன்று துளஜாவுக்கு ஸ்வீகாரப் புதல்வனாக அமைந்தது அவருக்கு மனத் திருப்தியை அளித்தது. அந்த குழந்தையை முறைப்படி சாஸ்திரோக்தமாக, சம்பிரதாயங்களை அனுசரித்து "நெளபத்" அடித்துக் கொண்டு அழைத்து வந்தனர். 'நேளபத்' அப்படியென்றால் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சகலவிதமான வாத்திய கோஷ்டிகள் முழங்க ஊர்வலமாக வருவது என்று பொருள்.

Noubet: Cerimonial music, the right to use which was specially granted by the Government.

குழந்தையை அழைத்துக் கொண்டு வரும் வழி நெடுக மக்களுக்குச் சர்க்கரை இனிப்பு வழங்குவர். உறவினர்கள் அனைவரும் ஊர்வலமாக உடன் வர, எல்லா சடங்க்குளையும் செய்து குழந்தையை மகனாக ஸ்வீகாரம் ஏற்றுக் கொண்டார்கள். 1787 ஜனவரி 22ஆம் நாள் துளஜா ராஜா சரபோஜியைத் தனது ஸ்வீகார மகனாக ஏற்றுக் கொண்டார்.

அது சரி, இந்த ஸ்வீகார நிகழ்ச்சி பற்றி எதற்கு இத்தனை build up என்றுதானே நினைக்கிறீர்கள். புரிகிறது. இந்த சரபோஜிதான் தஞ்சை மராத்திய மன்னர்களில் கலை, இலக்கியம், மருத்துவம், ஆராய்ச்சிகள், இசைக் கலைஞர்களை ஆதரித்தல் போன்ற எல்லா விஷயங்களிலும் வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட முதன்மையான ராஜாவாகத் திகழப் போகிறார். அதனால்தான். பிரதாபசிம்மர் போர்க்களத்திலும், வீரத்திலும் சிறந்து வின்றார் என்றால் சரபோஜி மேற்சொன்ன கலை, இலக்கியஸ் சமாச்சாரங்களில் சிறந்தவராக இருந்தார் என்பதால்தான் இத்தனை செய்திகள்.

சாஸ்திர முறைப்படி துளஜா சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட போதும், அரசியல் ரீதியாக ஆங்க்கில கிழக்கிந்திய கம்பெனியார், சென்னை கவர்னரின் உத்தரவுப்படி அதனை அங்கீகரிக்க வேண்டும். ஆகையால் துளஜா ராஜா, ஜான் ஹடுல்ஸ்டன், சேனைத் தலைவர்கள், கர்னல் இப்ஸ்லி, கமாண்டர் இஷ்டோட், கிறிஸ்தவ மத போதகரான பாதிரியார் ஸ்வார்ட்ஸ் ஆகியோரிடமும் தனது தத்து பற்றி எடுத்துச் சொன்னார். இதில் ஹடுல்ஸ்டன் என்பவர் தஞ்சாவூரில் ஆங்கிலேயர்களின் பிரதிநிதியாக Resident எனும் பதவியில் இருந்தவர்.

துளஜா தனது தத்துக் குழந்தையான சரபோஜியை அந்த ஆங்கிலேய அதிகாரிகளின் கையில் ஒப்படைத்து, இனி அவனை வைத்துத்தான் ராஜ்ய பாரம் நடத்த வேண்டும் என்று சொன்னார். அடுத்த நாலைந்து நாட்களில் வசந்த பஞ்சமி தினத்தில் ஒரு சிறந்த முஹூர்த்த நேரத்தில் பிரதாப ராமசாமி மகால் (மால்) எனும் சபையில் தர்பார் நடத்தி, நாட்டியம் உட்பட கலா நிகழ்ச்சிகள் நடத்தி அரசாங்க சிம்மாசனத்தில் குழந்தை சரபோஜியை உட்கார வைத்து அவையோர் அனைவரும் அவனை ஆசீர்வதித்தனர். அந்தக் குழந்தைக்கு ராஜாவுக்கு உண்டான மரியாதைகள் செய்த பின்னர் துளஜா மனது அமைதி அடைந்தார். சென்னையில் இருந்த ஆங்கில கம்பெனி அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதம்:--

Letter dated January 26, 1787 to Sir Archibald Campbell, Governor of Madras as translated by Maratha Interpreter.

"It has been my wish for two or three years past to adopt a son; but as I have had no opportunity of carrying it into execution, it has hitherto been delayed. Having now resolved to choose one out of my near relations, I have fixed upon the son of Shahajee (the son of Soubajee Rajah, my near cousin by lineal descent) who is ten years old and proper in all respects. Accordingly on the 2nd of Rubbi Sanni (22nd Jan.) in consequence of my wishes, I adopted and named him Serbojee Rajah with all the forms of our religion; this has afforded great relief to my mind. As your Excellency is my friend and favourer, I have written a letter to give you this pleasing information. I am firmly convinced that whatever favour and protection I have received from the Hon'ble Company and from your Excellency will hereafter be continued to my child Serbojee without deviation."

இப்படியொரு கடிதத்தை துளஜா ராஜா சென்னை கவர்னருக்கு அனுப்பினார்.

(இன்னும் தொடரும்)