பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, February 17, 2021

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம்.

                               

            இந்தியாவில் இடதுசாரி இயக்கமான கம்யூனிஸ்ட் கட்சி முதன் முதலாக கான்பூர் நகரத்தில் 1925 டிசம்பர் 26இல் நடைபெற்ற மகாநாட்டில் தொடங்கப்பட்டது. முதல் பொதுச் செயலாளராக தேர்வானவர் எஸ்.வி.காட்டே என்பார். ஆனால் ஒரு சிலர் இந்த இடதுசாரி அமைப்பு ரஷ்யாவில் தாஷ்கெண்ட் நகரில் 1920 அக்டோபர் 17இல் எம்.என்.ராய் உள்ளிட்ட சில தலைவர்களால் தொடங்கப்பட்டது என்கின்றனர். அவர்கள் குறிப்பிடும் தலைவர்களில் ஒருவர் எம்.பி.டி.ஆச்சார்யா, இவர் பாரதியார் காலத்தில் அவருடன் புதுச்சேரியில் சில காலம் இருந்தவர், மண்டையம் குடும்பத்தாருக்கு உறவினர். இந்த தாஷ்கெண்ட்டில் தொடங்கப்பட்ட இயக்கம் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் கூற்று என்னவென்றால் உலகெங்கிலும் ஆங்காங்கே துவக்கப்பட்ட பல இயக்கங்களுள் தாஷ்கெண்ட் இயக்கமும் ஒன்று என்றும் அதில் பல இந்தியர்களும் அடங்குவர், அவர்களில் பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ.டாங்கே, சென்னையைச் சேர்ந்த சிங்காரவேலர் ஆகியோரும் அடங்குவர்.

            கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் தொடங்கியதே தவிர 1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட காலத்தில் இது ஒரு ஒருங்கிணைந்த அகில இந்திய அளவில் செயல்படாமல் , ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக இயங்கி வந்தன என்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை தடை செய்திருந்தது, என்பதால் ஒரு அகில இந்திய அமைப்பை உருவாக்க முடியாமல் இருந்து வந்தது. 1921க்கும் 1924க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் சிலருக்கு எதிராக மூன்று சதி வழக்குகள் தொடரப்பட்டன. அவை பெஷாவர் சதி வழக்கு, மீரட் சதிவழக்கு, கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கு ஆகியவை. 1924ஆம் ஆண்டில் எஸ்.ஏ.டாங்கே, எம்.என்.ராய், சிங்காரவேலர் உள்ளிட்ட பல வட இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அது கான்பூர் சதிவழக்கு. அவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்றால், இவர்கள் அனைவரும் இந்திய நாட்டை, பிரிட்டிஷ் மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து ஒரு புரட்சியின் மூலம் விடுவிக்க வேண்டுமென்று விரும்பியதுதான். அந்த காலத்து செய்தித் தாள்களில் எல்லாம் இந்த வழக்கு பற்றிய செய்திகள் தினமும் வந்து கொண்டிருந்தன.

            இந்த வழக்கில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சிங்காரவேலர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். எம்.என்.ராய் அப்போது ஜெர்மனியில் இருந்ததாலும், ஆர்.சி.சர்மா என்பவர் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியில் இருந்ததாலும் அவர்களைக் கைது செய்ய முடியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான குலாம் ஹுசேன் என்பவர் மட்டும் தான் காபூல் நகரில் ரஷ்யர்களிடமிருந்து பணம் பெற்றதாக ஒப்புக் கொண்டார், அவரை கோர்ட் மன்னித்து விடுவித்து விட்டது. இதர தலைவர்களான எஸ்.ஏ.டாங்கே, முசாபர் அகமது, நளினி குப்தா, ஷவுகத் உஸ்மானி ஆகியோர் பலதரப்பட்ட கால அளவு தண்டனை பெற்றனர். இந்த வழக்கு பிரபலமடைந்ததால் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் வேர்விட்டு வளரத் தொடங்கியது. 1927இல் எஸ்.ஏ.டாங்கே சிறையிலிருந்து விடுதலையானார்.

            அப்போது ஐக்கிய மகாணம் என்று அழைக்கப்பட்ட இப்போதைய உத்தர பிரதேசத்தில் உள்ள கான்பூரில் 1925 டிசம்பர் 25 அன்று ஒரு கம்யூனிஸ்ட் மாநாடு நடத்தப்பட்டது. அப்போதைய ஆங்கில அரசின் கணக்குப்படி அந்த மாநாட்டில் சுமார் 500 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். அந்த மாநாட்டில் சத்யபக்தா என்பவர் தன் உரையில் எந்தவொரு வெளிநாட்டு இயக்கத்தின் கிளையாக இல்லாமல், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு ‘தேசிய இயக்கமாக’ அமைதல் வேண்டும் என்று வாதிட்டார். ஆனால் அவருடைய இந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது, சத்யபக்தா அந்த மாநாட்டிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினார். அதன் பிறகு அவர்கள் தொடங்கிய கட்சிக்கு “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி” என்று பெயரிட்டனர். அந்த சமயத்தில் இந்தியாவில் பல்வேறு பெயர்களில் இயங்கி வந்த இயக்கங்கள் சில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்தன. அதில்  ஒன்று ஹிந்துஸ்தான் உழைப்பாளர், விவசாயிகள் கட்சி (Labour Kisan Party of Hindusthan). இந்த கட்சி ஏற்கனவே இந்தியாவின் உள்ளே இடதுசாரி இயக்கமாக இயங்கிக் கொண்டிருந்தவர்களுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது.

            1925-ல் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கான்பூர் தொடக்க மாநாட்டுக்குப் பிறகு, எஸ்.வி. காட்டேவுக்குப் பின்னர் ஜி. அதிகாரி, பி.சி. ஜோஷி ஆகியோர் கட்சியின் பொதுச் செயலாளர்களாகப் பணியாற்றினர். 1933-ல்தான் அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சி உருவானதாக அறிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது கம்யூனிச அகிலத்தில் உறுப்பு நாடாக இணைந்தது.

            1926இல் வங்காளத்தில் இந்த கட்சி நடத்திய மாநாட்டில் அப்போது தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். ஆக இந்தியாவில் தொழிலாளர், விவசாயிகள் இயக்கம் இதன் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.

            1928இல் ‘அகில உலக கம்யூனிஸ்ட் அகிலத்தின்’ ஆறாவது மாநாடு நடந்தது. சீனாவில் மாசேதுங் ‘தி கிரேட் மார்ச்’ நடத்தி அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சியைத் தொடங்கியது. அங்கு ஆட்சி புரிந்த ‘கோமிண்டாங்’ கட்சி 1927இல் இடதுசாரிகளுடன் இணையவே, ஐரோப்பியர்கள் குடியேறிய காலனி நாடுகளில் தேசிய முதலாளித்துவ இயக்கத்துடன் கூட்டணிகள் அமைக்க நேர்ந்தது. இந்த ஆறாவது மாநாட்டில்தான் கம்யூனிஸ்ட் அகிலம், இந்திய கம்யூனிஸ்ட்டுகளை, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காந்தியவாதிகளையும், சுயராஜ்யவாதிகளையும் அவர்கள் நடத்தும் அகிம்சை போராட்டத்து எதிராக இயங்க வேண்டுமென்று முடிவெடுத்தது. இருந்த போதிலும் இந்த கம்யூனிஸ்ட் அகிலம் சீனாவின் கோமிண்டாங் கட்சிக்கும், இந்தியாவில் சுதந்திரம் வேண்டி போராடும் சுயராஜ்ய கட்சிக்குமுள்ள வேறுபாட்டினை உணர்ந்திருந்தனர். அவர்கள் கருத்துப்படி இந்திய சுயராஜ்ய கட்சியினர் நம்பிக்கையானவர்களாகவோ அல்லது எதிரிகளாகவோ கருதப்பட முடியாது என்பதுதான். ஆகவே கம்யூனிஸ்ட் அகிலம் மாநாட்டில் கம்யூனிஸ்ட்டுகளை, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குமிடையே நிலவும் வேற்றுமைகளைப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்தது. 1929 ஜூலை 3 முதல் ஜூலை 19 வரை நடந்த கம்யூனிஸ்ட் அகிலம், இந்திய கம்யூனிஸ்ட்டுகளை “Workers and Pesants Party’ யிலிருந்து விலகிவிடுமாறு அறிவுறுத்தியது. இங்கு இவ்விரண்டு கட்சிகளும் தனித்தனி கட்சிகளாக ஆயின.

            1929 மார்சி 20இல் இந்தியாவில் Workers and Pesants Party, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பலரும் பல்வேறு  இடங்களிலும் கைது செய்யப்பட்டனர். மீரட் சதி வழக்கு என்ற பெயரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு சுமார் நான்கு ஆண்டுகள் நடந்தது.

            1934ஆம் ஆண்டு காலகட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் மும்பை, கல்கத்தா, பஞ்சாப் ஆகிய பிரதேசங்களில் தீவிரமாக இருந்தது. சென்னைக்கும் இந்த இயக்கத்தைக் கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சியைச் செயல்படுத்த ஆந்திரா, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலரை ஒன்று திரட்டி சென்னை மாகாணத்தில் கட்சி தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த மாணவர்களில் ஒரு பின்னாளில் பெரும் தலைவராக விளங்கிய பி.சுந்தரையாவும் ஒருவர்.

            1933இல் மீரட் சதி வழக்கிலிருந்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் விடுதலையாகி வெளியே வந்த பிறகு கட்சி சீரமைக்கப்பட்டது. கட்சிக்கு ஒரு மத்தியக் குழு அமைக்கப்பட்டது. 1934இல் இந்த கட்சி கம்யூனிஸ்ட் அகிலம் எனும் உலக அமைப்பில் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

            இந்தியாவில் இருந்த இடதுசாரிகள் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டு செயல்பட்டுக் கொன்டிருந்தார்கள். இவர்கள் தங்களை தனிக் குழுவாக காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி என்ற பெயரில் தனித்து அடையாளம் காட்டிக் கொண்டார்கள். 1934இல் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் இந்த காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை.

            அப்போது கல்கத்தாவில் சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை வகித்து நடத்திக் கொண்டிருந்த மகாத்மா காந்தியை எதிர்த்து ‘காந்தி எதிர்ப்புக் குழு’ என்றவொரு அரசியல் அமைப்பு இருந்து வந்தது. இதைத் தொடங்கியவர்கள் தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்ட்டுகள். இவர்களும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் ஒன்று சேர்ந்து காந்தியத்துக்கு எதிராகச் செயல்படத் தொடங்கின.

            அந்தந்த நாடுகளில் நிலவும் நிலைமைக்கு ஏற்ப வியூகம் வகுக்க முடிவெடுத்த கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவில் சுதந்திரம் வேண்டி போராடும் இந்திய தேசிய காங்கிரசுடன் ஓர் சுமுக உறவை ஏற்படுத்திக் கொண்டு அந்த கட்சியில் சேர்ந்தனர். அவர்கள் தங்களை காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி என்ற பெயரில் காங்கிரசின் இடதுசாரி இயக்கமாக இயங்கிக் கொண்டிருந்தது. இடதுசாரிகள் அகில இந்திய காங்கிரசில் சேர்ந்ததால் மாநிலங்களுக்கு சட்டமன்றங்கள் உருவாக்க வேண்டுமென்கிற கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. எனினும் அவர்களுக்கு இதுபோன்ற சட்டமன்றங்களில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது.

            1937இல் இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் கள்ளிக்கோட்டையில் (Calicut) நடந்த ஒரு ரகசியக் கூட்டத்தில் கேரளத்தின் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பி.கிருஷ்ண பிள்ளை, ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு, என்.சி.சேகர், கே.தாமோதரன் , எஸ்.வி.காட்டே ஆகியோர். இவர்களில் முதல் நால்வரும் கேரளம், கடைசி காட்டே என்பவர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், அவர் சென்னையில் இருந்து வந்திருந்தார். கேரளாவில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 1935இல் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராஜ பி.சுந்தரையா (இவர் அப்போது சென்னையில் தங்கியிருந்தார்) கேரளத்தின் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு, கிருஷ்ண பிள்ளை ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு சுந்தரையாவும் காட்டேயும் பலமுறை கேரளம் சென்று காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியினரைச் சந்தித்துப் பேசினர்.

            1936-37இல் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் சோஷலிஸ்ட்டுகளுக்குமான ஒத்துழைப்பு இருந்து வந்தது. 1936 ஜனவரியில் மீரட்டில் நடைபெற்ற மாநாட்டில் ஒரு ஐக்கிய சோஷலிஸ்ட் இயக்கத்தை அமைப்பதென்றும் அதன் அடிப்படை கொள்கையாக மார்க்சிசம் லெனினிசம் என்று இருக்கும் என்றும் முடிவானது. கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் ஆதிக்கம் பெற்றனர். அது சிறிது காலம் வரை நீடித்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் அகில இந்திய இணைச் செயலாளர்களாக ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடும், இசட்.ஏ.அகமது ஆகியோர் இருந்தனர். மேலும் இரண்டு பேரும் கம்யூனிஸ்ட்டுகள் அந்த கமிட்டியில் இடம் பெற்றனர்.

            1940இல் ராம்கரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், கம்யூனிஸ்ட்டுகள் “பாட்டாளி மக்கள் வழி” என்ற பெயரில் அப்போது யுத்தம் காரணமாக பலவீனமுற்றிருந்த பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒரு பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. வரி கொடாமை இயக்கம் நடத்தி ஒரு ஆயுத எழுச்சிக்கு முயன்றனர். ஆனால் கட்சியின் செயற்குழு கட்சியில் அங்கம் வகித்த கம்யூனிஸ்ட்டுகள் அனைவரையும் கட்சியிலி இருந்து வெளியேற்றினர்.

            1942இல் இரண்டாம் உலக யுத்த சமயத்தில் பிரிட்டனுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே ஜெர்மனியின் ஹிட்லருக்கு எதிரான கூட்டணி உருவானதையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட்டுகள் அகில இந்திய டிரேட் யூனியன் காங்கிரசைத் தன் வசப்படுத்திக் கொண்டது. மேலும் அது வரை பிரிட்டிஷ் இந்திய அரசின் போர் தயாரிப்பில் ஒத்துழைப்பதில்லை என்று முடிவெடுத்திருந்த கட்சி, ஹிட்லர் ரஷ்யா மீது படையெடுத்து லெனின்கிராட் வரை உட்புகுந்து ஆக்கிரமிப்பு நடத்திய பொது ரஷ்யா ஜெர்மனி மீது போர் தொடுத்தது. உடனே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரிட்டிஷ் அரசு எடுக்கும் போர் நடவடிக்கைகளில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும் என்று அறிவித்தது. அந்த ஆண்டில் நாடு முழுவதும் நடந்த வெள்ளையனே வெளியேறு எனும் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

            1946இல் நாடு முழுவதும் மாகாண சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து நின்று போட்டியிட்டது. மொத்தமுள்ள 1585 இடங்களுக்கு நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் 108 பேர் போட்டியிட்டனர். இவர்கள் மொத்தம் 8 இடங்களில் வென்றனர். கட்சி பெற்ற வாக்குகள் ஆறு லட்சத்திற்கும் மேல். இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் அப்போதைய தேர்தல் இப்போது போல் அனைவருக்குமான வாக்குரிமை அல்ல,. இந்திய மக்கட் தொகையில் 86% பேருக்கு அப்போது வாக்குரிமை கிடையாது. கம்யூனிஸ்ட்டுகள் வங்காளத்தில் 3 இடங்களுக்கு போட்டியிட்டு மூன்றிலும் வென்றனர்.

            சுதந்திரம் நெருங்கி வந்த சமயத்தில் இஸ்லாமியர்கள் தனிநாடு பாகிஸ்தான் கேட்டு போராடியபோது கம்யூனிஸ்ட்டுகள் நாட்டு பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் எதிர்ப்பையும் மீறி இந்தியா பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது நடந்த சுதந்திர நாள் விழக்களில் கம்யூனிஸ்ட்டுகள் கலந்து கொள்ளவில்லை. ஆகஸ்ட் 15, 1947 புறக்கணித்தார்கள்.

சுதந்திரத்திற்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

          இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்பும், சுதந்திரம் அடைந்த பின்னர் சில காலமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் குழப்பம் நிலவியது. கட்சியில் இருவேறு கொள்கைக் குழப்பம் ஏற்பட்டு பேதங்கள் வளர்ந்தன. 1948 பிப்ரவரியில் கல்கத்தாவில் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதில் பி.டி.ரணதிவே பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் “ஜனநாயகப் புரட்சி” திட்டம் அறிமுகமானது. இந்த புரட்சித் திட்டத்தின் முதல் கட்டமாக ஜாதிப் பிரிவினையால் ஏற்றத் தாழ்வு நிலைமையை எதிர்த்து நியாயம் கிடைக்க போராடுவது என்று முடிவாகியது.

            நாட்டின் பல பகுதிகளிலும் ஒரு ஆயுதம் ஏந்திய போராட்டம், ஆதிக்க சக்திகள், நிலப்பிரபுக்களுக்கு எதிராகத் தொடங்கியது. குறிப்பாக திருபுரா, தெலுங்கானா, கேரளா ஆகிய பகுதிகளில் இது பெருமளவில் நடந்தது. இதில் குறிப்பிடத்தக்க போராட்டம் தெலுங்கானாவில் நடந்தது. அங்கு ஐதராபாத் நிஜாமை எதிர்த்து மாபெரும் கிளர்ச்சி தோன்றியது. இந்திய கம்யூனிஸ்ட்டுகள் ஒரு மக்கள் படையை உருவாக்கினார்கள். அங்கு போராட்டம் நடத்திய குழுவினர் சுமார் முப்பது லட்சம் மக்கட் தொகை அடங்கிய பகுதியைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்த வன்முறை போராட்டம் ஆட்சியாளர்களால் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து நசுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆயுதம் ஏந்திய போராட்டத்தைக் கைவிட்டது. கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த பி.டி.ரணதிவே பதவியிலிருந்து நீக்கப்பட்டார், இடதுசாரி தீவிரவாதி என்றும் ஒதுக்கப்பட்டார்.

            மணிப்பூர் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதில் இவர்கள் அங்கு ஒரு பலம் பொருந்திய அமைப்பாக இருந்தார்கள். அங்கு விவசாயிகள் போராட்டத்தை முன்னணியில் இருந்து போராடிய ஜனநேதா இர்வந்த் சிங் என்பார் 1946இல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சியின் எழுச்சி கோஷம் “மக்களின் ஜனநாயகம்” ( (People’s Democracy) என்று இருந்தது “தேசிய ஜனநாயகம்” (National Democracy) என்றாகியது.

            பிஹார் மாநிலத்தில் 1939இல் கம்யூனிஸ்ட் கட்சி தொற்றுவிக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் இப்போதைய பிஹார் ஜார்க்கண்ட் ஒருங்கிணைந்த மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நிலச் சீர்திருத்தம், தொழிற்சங்க இயக்கம் ஆகியவைகளை அமைத்துத் தீவிரமாகச் செயல்பட்டார்கள். தொடர்ந்து அறுபது, எழுபது, எண்பதுகளில் இவர்கள் நடத்திய போராட்டங்கள் காரணமாக பிஹாரில் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவுக்கே இடதுசாரிகளின் இயக்கத்துக்கு வலுவூட்டுவதாக இருந்தது. பல பிரபல தலைவர்கள் பிஹாரில் தோன்றினார்கள். விவசாயிகள் சங்கத் தலைவராக சகஜானன்த சரஸ்வதி, கார்யானந்த் சர்மா ஆகியோரும், பிரபல அறிஞர்களான ஜகன்னாத் சர்க்கார், யோகேந்திர சர்மா, இந்திரதீப் சின்ஹா ஆகியோர் குறிப்பிடத்தக்கத் தலைவர்களாக விளங்கினர். சந்திரசேகர சிங், சுனில் முகர்ஜி ஆகியோரும், தொழிற்சங்கத் தலைவர் கேதார் தாஸ் போன்றவர்களும் மக்கள் மத்தியில் பிரபலமான தலைவர்களாக விளங்கினர். பிகாரின் மிதிலா பகுதியில் போகேந்திர ஜா என்பவர் அங்குள்ள நிலப்பிரபுக்கள், பெருந்தனக்காரர்கள் ஆகியோருக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தினார். பிற்காலத்தில் இந்த போகேந்திர ஜா என்பார் நாட்டின் நாடாளுமன்றத்துக்கு ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதே அவருடைய செல்வக்குக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

            வட இந்தியாவில் 1950களின் தொடக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மும்பை போன்ற பகுதிகளில் இருந்த டெக்ஸ்டைல்ஸ் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள், வங்கித் துறையில் தொழிற்சங்கம் அமைத்தும், அமைப்பு சாரா தொழிலாளர்களை ஒருங்கிணைத்து தொழிற்சங்கம் தொடங்கி கட்சியை வளர்க்கத் தொடங்கினர். தேசியத் தலைவர்களான எஸ்.ஏ.டாங்கே, சி.ராஜேஸ்வர ராவ், பி.கே.வாசுதேவன் நாயர் ஆகியோர் இந்தப் பணியில் கட்சியினரை ஊக்கம் கொடுத்து வளர்த்தனர். இந்த அமைப்புகளை வழிகாட்டி நடத்துவது எப்படி என்ற வேறுபட்ட கருத்துக்கள் இருந்த போதிலும் இவர்களுடைய முயற்சியால் இந்த சங்கங்கள் வளரத் தொடங்கின. தீவிர கருத்துக்களையுடைய ஹோமி தாஜி, குரு ராதாகிருஷ்ணன், ஹெச்.எல்.பர்வானா, சர்ஜு பாண்டே, டர்ஷன் சிங், அவதார் சிங் மல்ஹோத்ரா ஆகியோர் இந்த அமைப்புகளில் இருந்து தலைவர்களாக உருவானார்கள். இந்தத் தலைமை பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, ஏழை, உழைப்பாளர், பாட்டாளிகளுக்காகப் பாடுபடுபவர்களாக இருந்தனர். டெல்லியில் “மே தினம்” கொண்டாட்டம் அனைத்துப் பகுதி ஊழியர்கள், தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் இயக்கங்கள் என மக்கள் மத்தியில் உருவாகியது.

            இந்திய குடியரசு அமைந்த பின்னர் நமது அரசியல் அமைப்பு விதிகளின்படி 1952இல் முதல் தேர்தல் இந்திய நாடாளுமன்றத்துக்கு நடந்தது. அந்தத் தேர்தல் முடிவுகளின்படி அமைந்த முதல் நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கட்சியான இந்திய தேசிய காங்கிரசுக்கு முக்கிய எதிர் கட்சியாக விளங்கியது. டெல்லியில் நடந்த டெக்ஸ்டைல் தொழிலாளிகளின் போராட்டத்தை யொட்டி குரு ராதாகிருஷ்ணன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து 24 நாட்கள் அந்த போராட்டத்தை நடத்தியதையொட்டி அந்தக் கட்சி தொழிலாளர் நலனுக்கான கட்சி என்ற நிலையை உருவாககியது. அதற்கு முந்தி வரையில் கம்யூனிஸ்ட்டுகள் என்றால் புரட்சியாளர்கள், ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் என்றிருந்த நிலைமை மாறி டெக்ஸ்டைல் ஊழியர் சங்க தலைவரின் உண்ணாவிரதம் அவர்களை மக்கள் துணைவர்கள் என்ற எண்ணத்தை  உருவாக்கியது. மக்கள் செல்வாக்கும் மெல்ல கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைக்கத் தொடங்கியது. உண்ணாவிரதம் நடந்த இடத்துக்கு மக்கள் அடிக்கடி வந்து ஊக்கம் கொடுக்கத் தொடங்கினர்.

            மக்கள் பிரச்சினைகளுக்காக களம் இறங்கிப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தன்னலமற்ற இந்த செயல்பாடுகள் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கட்சியின் எல்லா மாநிலங்களிலும் இதுபோன்ற தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்களில் கட்சி ஈடுபட்டு தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டனர். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) என்று காங்கிரஸ் கட்சி தொடங்கியிருந்த தொழிற்சங்கத்திலிருந்து பலர் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) அமைப்பை உருவாக்கி பலம் கொண்ட தொழிற்சங்கமாக உருவக்கினர். தொழிலாளர்கள் நலனுக்காக, அமைப்புசாரா தொழிலாளர்கள் உடபட பல துறையினருக்குமாகப் பொராட தொழ்ற்சங்கங்கள் உருவாகின.

            கட்சி சார்புடைய தொழிற்சங்கங்களை உருவாக்கி வளர்க்கும் இடதுசாரித் தலைவர்களை கங்காதர் அதிகாரி, ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு ஆகியோர் பாராட்டி ஊக்குவித்தனர். தெலுங்கானா போராட்டத்தின் ஹீரோவான சிராஜேச்வர ராவ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மிக சிறஒப்பாக செயல்பட்டார்.

            1952இல் திருவாங்கூர் கொச்சி சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலின்போது, கட்சி தடைசெய்யப்பட்டிருந்ததால், இவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. ஆனால் 1957இல் நடந்த தேர்தலில் கேரளாவில் இந்தியாவில் முதன் முறையாக கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை பெற்று ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு தலைமையில் ஆட்சி அமைத்தது. அகில இந்திய நிலைமையில் இந்திய நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான இடங்களைக் கைப்பற்றி பிரதான எதிர்கட்சியாகத் திகழ்ந்தது. இந்த சூழ்நிலையில் 1957இல் மாஸ்கோவில் நடைபெற்ற உலகளாவிய நாடுகளின் கம்யூனிஸ்ட் இயக்க மாநாட்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில், கம்யூனிஸ்ட்டுகள் கேரளாவில் அமைச்சரவை அமைத்து ஆளுவதை எதிர்த்தது.

            1964இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு காரணங்களால் கொள்கை அளவில் மாறுபட்டு இரண்டாக உடைந்தது. சீனாவின் இந்திய படையெடுப்பும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பகுதியினர் சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்தனர், இன்னொரு பகுதியினர் வரவேற்றனர். இப்படி கொளிகள் முரண்பாடுகளால் கட்சி இரண்டாக உடைந்தது. சீனா இந்திய எல்லையினுள் புகுந்து பல பகுதிகளைப் பிடித்துக் கொண்ட நேரத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த வி.கே.கிருஷ்ண மேனன் பொறுப்பேற்கச் செய்து அவர் ராஜிநாமா செய்தார். அவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர் என்பது நாட்டில் பரவலாகப் பேசப்பட்டது. எஸ்.ஏ.டாங்கே உள்ளிட்ட தலைவர்கள் சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்தனர். ஆனால் பி.சுந்தரையா, ஜோதி பாசு, ஹரிகிருஷன் சிங் சுர்ஜீத் போன்றவர்கள் சீன ஆதரவு நிலை எடுத்தனர். ஆனால் கட்சி உடைந்த பொது சீன ஆக்கிரமிப்பை ஒரு காரணமாகச் சொல்லாமல் கொள்கை வேற்றுமை காரணமாக பிரிந்ததாகத்தான் பேசப்பட்டது.

            1970 தொடங்கி 1977 வரையிலான காலகட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு கொண்ட தோழமைக் கட்சியாக விளங்கியது. கேரளத்தில் காங்கிரசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தனர். அதற்கு சி.அச்சுதன் நாயர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதலமைச்சர் ஆனார். ஆனால் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு இருவேறு பக்கம் இருந்த இவ்விரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படத் தொடன்ட்கினர்.

            1986இல் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தர்ஷன் சிங் சீக்கிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். தொடர்ந்து 1987இல் பஞ்சாப் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த தீபக் தவான் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த சமயத்தில் பஞ்சாபில் சுமார் 200 கம்யூனிஸ்ட் தலைவர்கள் பஞ்சாபில் சீக்கிய தீவிரவாதிகள் நடத்திய போராட்டத்தில் கொல்லப்பட்டனர்.

            இந்திய தேர்தல் கமிஷன், கம்யூனிஸ்ட் கட்சியை தேசியக் கட்சியாக அங்கீகரித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்று தொடங்கி இன்று வரை கதிர் அரிவாள் சின்னத்துடன் அதே கட்சியின் பெயரால் போட்டியிட்டு வருகிறது. இந்த நிலைமையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு அரிவாள் சுத்தியல் சின்னம் பெற்றது. 2019இல் நடந்த பொதுத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டே இடம் மட்டும் பெற்றது. தேர்தல் கமிஷன் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி தேசிய கட்சி என்ற அந்தஸ்தை ஏன் நீக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் கோரி கடிதம் எழுதியது. இனி அடுத்த தேர்தலில் இதே நிலை நீடிக்குமானால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது தேசிய அந்தஸ்தை இழக்கும்.

            மத்தியில் காங்கிரஸ் கட்சி உருவாக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) யில் அரசில் பங்கு பெறாமல் அங்கம் வகித்தது. 2004 தேர்தலுக்குப் பிறகு இந்த கூட்டணி ஒரு  Common Minimum programme திட்டத்தை அறிமுகம் செய்தது. யுபிஏ வில் அங்கம் வகிக்கும் இடது சாரிகளும் இந்த காமன் மினிமம் புரோகிராமுக்கு ஆதரவு கொடுத்தன.

            2008 ஜூலை 8 அன்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், UPA அரசு அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். இன்றைய நிலைமையில் இவ்விரு கம்யூனிஸ்ட் இயக்கங்களும் எதிர் கட்சிகளாக இருக்கின்றன என்பதைக் காட்டிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளாகச் செயல்பட்டு வருகின்றன. அதே சமயம் காங்கிரஸ் கட்சிக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். இதில் விந்தை என்னவெனின் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எதிரணியில் இருந்தவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் எதிர்த்திசையில் பயணித்தவர்கள் என்றாலும், மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைந்த பிறகு அனைவரும் ஒருங்கிணைந்து பாஜக எதிர்ப்பு எனும் ஒரே கோட்பாடுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

            கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆன கதையைப் போல பிரம்மாண்டமான எதிர்பார்ப்புகளுடன் வளர்ந்து வந்த கம்யூனிஸ்ட் இயக்கம் இன்று தேய்ந்து வலுவிழந்து காணப்படுகிறது. ஒரு காலத்தில் தொழிலாளர் நலனை முன் வைத்து போராட்டங்கள் நடத்திய கம்யூனிஸ்ட்டுகள் இப்போது திராவிடர் கழகம் போல ஜாதிய அரசியலில் ஈடுபட்டு வருவது அவர்கள் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களின் அறிகுறியாகத் தெரிகிறது. இந்த ஜாதிய எதிர்ப்புப் போக்கு அவர்களுக்கு வலுவைத் தருமா வலுவிழக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

                       

 

 

 

           

           

 

 

 

 

           

No comments: