பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, December 18, 2020

கரும்புத் தோட்டத்திலே:

 பிஜித் தீவில் இந்தியர்கள் படும் கஷ்டங்களைப் பற்றி யாரோ ஒருவர் ஆங்கிலத்தில் பிரசங்கம் செய்திருந்தாராம். அதைப் பற்றி தமிழில் ஒரு கவிதை செய்யும்படி பாரதியாரைப் பத்திராதிபர்கள் கேட்டார்கள்.

ஒரு நாள் மாலை நேரம், வ.வெ.சு.ஐயர், மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் அவர் மகள் யதுகிரி ஆகிய மூன்று பேரும் பாரதியாரின் வீட்டில் இருந்தார்கள்.

பாரதி "நம் இந்து அடிமைகள் பிஜித் தீவில் படும் கஷ்டத்தைப் பற்றி யாரோ பிரசங்கம் செய்திருக்கிறார்களாம். அந்த அடிமைகளின் நிலைமையை விளக்கிக் கவிதை செய்து அனுப்பும்படி கேட்டிருக்கிறார்கள” என்று சொன்னார்.

 வ.வெ.சு.ஐயர் கேட்டார், பாட்டுக்கு என்ன பெயர் வைத்தீர்கள் என்று. பிஜித்தீவு உங்கள் பாட்டால் பிரபலமாகிவிடும் என்றார்.

அதற்கு பாரதி சொன்னார்,  "அதை நினைத்தே 'கரும்புத் தோட்டம்' என்ற பெயரிட்டிருக்கிறேன் அந்தக் கவிதைக்கு. பாட்டைக் கேளுங்கள் என்று, "கரும்புத் தோட்டத்திலே" என்ற பாடலைப் பாடினார் பாரதியார்.

அந்தப் பாட்டைக் கேட்டதும் சிறுமி யதுகிரி துன்பமடைந்து கண்ணீர் விடத் தொடங்கினார். உடனே பாரதியார் யதுகிரியைப் பார்த்து, "ஐயோ, பைத்தியம்! ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவர்களுக்கு நீ ஏன் அழுகிறாய்?" என்றார்.

அதற்கு வ.வெ.சு.ஐயர், "எங்கள் கண்களிலேயே நீர் பெருகும்போது பெண் குழந்தை அவள் என்ன செய்வாள்? அவள் அழுவதில் அதிசயம் இல்லை.... அரசாங்கத்தார் மீட்க முடியாது என்று சொல்லி விட்டார்களா?" என்று கேட்டார்.

அதற்கு ஸ்ரீநிவாசாச்சார்யார் சொன்னார் "அதற்காகத்தான்  பாரதி தெய்வங்களிடம் முறையிட்டிருக்கிறார்" என்று.

 வ.வெ.சு.ஐயர் சொன்னார்,  "போக்கிரித்தனம்! நம் நாட்டு ஜனங்களை நயவஞ்சகமாகப் பேசி, ஆசை காட்டி அந்தத் தரகர்கள் அழைத்துப் போய் இரக்கமில்லாமல் நடத்துவது அயோக்கியத் தனமானது!" என்றார்.

பாரதி சொன்னார்,  "நீர் நூறு வருஷத்திய மனிதர். இனி இங்கிருந்து கொண்டு செல்லப்படும் ஜனங்களைத் தடுக்கலாமே ஒழிய அந்தத் தீவில் அகப்பட்டவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஏதோ ஒரு பத்திரிகையில் பார்த்தேன். ஒரு 'கிருஹஸ்தன்' சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஆபீசுக்குப் போயிருக்கிறான். அவன் சம்சாரம் வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையுடன் உட்கார்ந்திருக்கிறாள். அக்கம் பக்கம் யாரும் இல்லை. ஓர் ஆள் வந்து சீட்டு ஒன்றைக் கொடுத்தானாம். அதில், "உன் புருஷன் சாகும் தருவாயில் இருக்கிறான். உடனே வா" என்று இருக்கிறது. இவள் வீட்டைப் பூட்டிக்கொண்டு முன்பின் யோசனை இல்லாமல் புறப்பட்டாள். அந்த நீசன் ஒரு மணிக்குப் புறப்படும் கப்பல் துறைமுகத்திற்கு அவளை அழைத்துச் சென்றான்.

"கப்பலுக்கு எதற்காக வந்தார்?" என்று கேட்டாளாம் அவள்.

"ஆபீஸ் அதிகாரி கப்பல் தலைவனுக்கு ஒரு காகிதம் கொடுத்தனுப்பினார், கப்பலுக்கு வந்து கம்பிப்படிகளில் ஏறும்போது தலைசுற்றி விழுந்து மண்டை உடைந்தது" என்றானாம் அவன்.

அந்தப் பெண் அதையும் நம்பிக் கப்பலில் ஏறினாளாம். மேல் தளத்துக்குப் போவதற்குள் கப்பல் புறப்பட்டுவிட்டது. அங்கே இவளைப்போல் ஏராளமான பெண்கள் இருந்தார்களாம். எல்லோரும் கப்பல் நகர்ந்தவுடன் அழத் தொடங்கினார்களாம்.

ஏன் என்று இந்தப் பெண் கேட்க, "நாம் அடிமைகள், பிஜித்தீவில் இருக்கும் அடிமைகளுடைய சுகத்திற்காக நாம் நாசம் செய்யப்பட்டோம்!" என்று கதறினார்களாம்.

இப்படி எவ்வளவு குடும்பங்கள் நாசம் செய்யப்பட்டனவோ!" "அந்த புருஷன் விஷயம் என்ன ஆயிற்று? ஒன்றும் இல்லையா?" என்று கேட்டார் ஐயர்.

அதற்கு பாரதி "வீட்டின் வீதிப் பக்கத்து ஜன்னலில் ஒரு துண்டுக் காகிதம் காணப்பட்டது. அதில் எனக்கு உன் ஏழ்மைத் தனத்தில் இருந்து வாழ முடியாது. நான் பெரிய பதவியை அடையப் போகிறேன். என்னை மறந்து விடு!" என்று இருந்ததாம்.

அவன் போலீசில் புகார் கொடுத்தானாம். அந்தப் பெண் இந்தத் தேசத்தைவிட்டுக் கடல் பயணம் போனபின் எங்கே தேடுவது? முடிந்தது அவள் கதை.

"நியாயமான வழியில் உண்மையைச் சொல்லிப் பணம் கொடுத்து அழைத்துப் போகக்கூடாதா? இது தவறான குற்றச் செயல் அல்லவா? இதைக்  கேட்பார் இல்லையா?" என்றார் சீனிவாசாச்சார்யார்.

 "அது முடியாது. எவ்வளவு ஏழ்மை, எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஆண்கள் வெளியில் செல்வார்களே ஒழிய, பெண்களை அனுப்ப ஒப்பமாட்டார்கள்; அதுவும் கண்காணாத இடங்களுக்கு. பிஜித் தீவிலுள்ள இந்தியர்களிடையே போதுமான அளவு பெண்கள் இல்லை; அதற்காக அந்தத் தீவு அதிகாரிகள் இப்படியொரு அநீதி இழைக்கிறார்கள்" என்றார் ஐயர்.

பாரதி சொன்னார்: "ஒரு தவறு என்றால் யோசிக்கலாம். தலைக்கு மேல் போய்விட்ட பிறகு துக்கித்துப் பயன் என்ன?"

அப்போது அங்கிருந்த யதுகிரி, "கப்பல்காரனை அவ்வளவு பெண்களும் கேட்டுக் கொண்டால் விடமாட்டானா?" என்றாள்.

பாரதி சொன்னார்: "அவன் எப்படி விடுவான்! இந்தத் தேசத்துப் பெண்களையே பணங்கொடுத்து பிடித்துக் கொண்டு போய் விடுகிறான். அதிகமாகச் சொன்னால் சாட்டையடி கொடுக்கிறான்!

"அப்படியானால், எல்லோரும் சமுத்திரத்தில் குதித்துவிட்டால்? எல்லோரையும் இப்படித்தான் செய்கிறார்களா?" என்றாள் யதுகிரி.

 "இல்லை, சில அனாதைகள், சோற்றுக்கு இல்லாமல் தவிக்கும் பெண்கள், படிப்பில்லாத மூடப் பெண்கள் எல்லோரையும் ஓர் இடத்தில் சேர்த்து மூன்று நான்கு மாதத்திற்கு ஒரு தரம் கப்பலில் ஏற்றி கொண்டு செல்கிறார்கள். அவன் பேச்சின் மயக்கத்தில் பூலோக நரகமாக இருக்கும் இடம் சுவர்க்கமாகத் தோன்றும்" என்றார் பாரதி.

 அப்போது ஸ்ரீநிவாசாச்சார்யார், "யதுகிரிக்கு என்ன தெரியும்? நீர் எதையாவது சொன்னால், பயம் வந்துவிடும்அவளுக்கு" என்றார்.

அதற்கு ஐயர் "நடக்கும் கஷ்டங்களையும் குழந்தைகள் தெரிந்து கொள்ளவேணும். கோழை நெஞ்சு என்று மூடிவைத்தால் பின்னர் கஷ்டமாகும்" என்றார்.

பாரதி சொன்னார்: "இதுபோன்ற கஷ்டங்களைக் குழந்தைகளின் மனத்திற்குக் காட்டக்கூடாது. நம் பெருமையைக் காட்டினால் கஷ்டம் வந்தாலும் தடுக்கும் சக்தி பகவான் கொடுக்கிறார்" என்றார்.

"யதுகிரி நீ பயப்படாதே, என் பாட்டால் காளி, அந்தப் பெண்களின் அடிமைத்தனம் விலகிப் போகும்படி செய்வாள். நீ சென்று செல்லம்மாவைக் கேட்டு ஜலம் கொண்டு வா. நம் வீடுகளில் எல்லோரும் நன்றாக இருக்கிறோம். ஏதோ ஒரு மூலையில் நடக்கும் விஷயத்துக்கு நீ கவலைப்பட வேண்டாம், எங்கே சிரி! பார்க்கலாம்" என்று யதுகிரியைத் தேற்றி அனுப்பிவிட்டார்.

கரும்புத் தோட்டத்திலே –

அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்து கின்றனரே - ஹிந்து மாதர்தந் நெஞ்சு கொதித்துக் கொதித்து மெய் சுருங்கு கின்றனரே - அவர் துன்பத்தை நீக்க வழியில்லையோ ஒரு மருந்திதற் கிலையோ - செக்கு மாடுகள் போலுழைத் தேங்குகின்றா ரந்தக் (கரும்பு)

 பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு பேயுமிரங்கு மென்பார் தெய்வமே - நின தெண்ண மிரங்காதோ - அந்த ஏழைக ளங்கு சொரியுங் கண்ணீர் வெறும் மண்ணிற் கலந்திடுமோ - தெற்கு மாகடலுக்கு நடுவினிலே யங்கோர் கண்ணற்ற தீவினிலே - தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றா ரந்தக் (கரும்பு)

நாட்டை நினைப்பாரோ - எந்த நாளினிப் போயதைப் பார்ப்பதென்றே யன்னை வீட்டை நினைப்பாரோ - அவர் விம்மி விம்மி விம்மி விம்மி யழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே - துன்பக் கேணியிலே யெங்கள் பெண்கள் அழுதசொல் மீட்டு முரையாயோ? - அவர் விம்மி யழவுந் திறங்கேட்டுப் போயினரே (கரும்பு)

நெஞ்சங் குமுறுகிறார் - கற்பு நீங்கிடச் செய்யும் கொடுமையிலே யந்தப் பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப் பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு தஞ்சமு மில்லாதே - அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் மிஞ்ச விடலாமோ? ஹே! வீர கராளி! சாமுண்டி காளி!! (கரும்பு)


No comments: