பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, December 18, 2020

பாரதியாரின் குயில் பாட்டு உரை நடையில்

                    

           மகாகவி பாரதியாரின் படைப்புகளில் புதுச்சேரியில் படைக்கப்பட்ட முப்பெரும் பாடல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அவருடைய பாடல்களை தேசியப் பாடல்கள், தமிழ் மொழி, சுதந்திரம், சமூகம் ஆகிய தலைப்புகளில் அமைந்த பாடல்கள் தவிர முப்பெரும் பாடல்களும், வசன கவிதைகளும் சிறப்பிடம் பெறுகின்றன.

            குயில் பாட்டு பற்றி பாரதியார் சொல்லும் செய்தி “மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன்” என்பதுதான், அப்படி இவர் பட்டப் பகலில் கண்ட நெட்டைக் கனவான குயில் பாட்டின் உள்ளடக்கமும், அவர் இந்த பாடல் மூலம் சொல்லவந்த வேதாந்தமாக விரித்து பொருளுரைக்க ஏதேனும் சற்று இடமிருந்தால் சொல்லுங்கள் என்றாரே அதற்கான விடையாகவும் இது அமையும்.

            புதுச்சேரிக்கு வேதபுரம் என்றொரு பெயர் உண்டு. அது குறித்து ஆனந்தரங்கம் பிள்ளை டயரி எனும் நூலில் காணப்படும் செய்தி இங்கு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கும் இந்த குயில் பாட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். பாரதி இந்த குயில் பாட்டைத் தொடங்கும் போதே சொல்லுகின்ற செய்தி “காலை இளம் பரிதி வீசும் கதிர்களிலே நீலக் கடலொர் நெருப்பெதிரே சேர்மணி போல் மோகனமாஞ் சோதி பொருந்தி முறை தவறா வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின் மேற்கே, சிறு தொலைவில் மேவுமொரு மாஞ்சோலை”யில் இந்த குயில் பாட்டு தொடங்குகிறது.

            இந்த ஊரின் கடற்கரையில் வந்து மோதுகின்ற வேகத் திரைகள் வேதப் பொருளைப் பாடுகின்றனவாம். கடலில் வீசுகின்ற அலை, புதுவை கடற்கரையில் வேதப் பொருளைப் பாடிக்கொண்டு மொதுவதேன். அதற்கு அந்த புதுவை நகரின் வரலாற்றைச் சிறிது பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

வரலாற்றுச் செய்திகள் சில நேரங்களில் மனத்துக்கு வேதனையளிக்கக் கூடியவையாக இருக்கின்றன. அவை மக்களிடையே நல்லுறவைக் கெடுக்கும் என்றுகூட சிலர் நினைக்கிறார்கள். வட இந்தியாவில் நடைபெற்ற சில ஆலய இடிப்பு நிகழ்ச்சிகள் இன்றைக்கும் மக்கள் மனங்களில் ஆறாத வடுக்களாக இருக்கின்றன. ஆனால் சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மக்கள் மறந்துவிடாமல் இருப்பதற்காக இன்றைய ஊடகங்கள் அந்தத் தேதி நெருங்கும்போதே தூண்டிவிடுவதைப் போல நினைவுப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட செய்திகளை யாரும் தவறாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் நமக்கு இழைக்கப்பட்ட அநீதி, தீமை வரலாற்றில் எழுதப்பட்டிருக்க அதன் மை இன்னமும் காயாமல் இருக்க, அதை நினைவுப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று நினைப்போரும் நம்மவர் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மகாகவி பாரதி சொல்கிறான், ‘நீ வாழும் பகுதியின் வரலாற்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டுமென்று’. அவனுடைய சுதேசிக் கல்வி எனும் கட்டுரையில் நமது பண்டைய வரலாற்றை மக்கள் நினைவில் வைத்திருத்தல் அவசியம் என்கிறான். ஆகவே வரலாற்றில் கறைபடிந்த ஒரு நிகழ்ச்சியை இங்கு நினைவுப்படுத்திக் கொள்வது சரியாக இருக்கும்.

அந்நியர்களின் மீதுள்ள மோகம், அவர்களிடம் நமக்கிருந்த அடிமை புத்தி, நமக்கு எந்த அளவுக்கு சேதங்களை உண்டுபண்ணியது என்பதை நினைவுப்படுத்திக் கொள்ளலாம்.

புதுச்சேரியை மகாகவி பாரதியார் தன் எழுத்துக்களில் எல்லாம்   வேதபுரம் என்றே குறிப்பிடுகிறார். அவ்வூருக்கு இந்தப் பெயர் வரக் காரணமாக இருந்தது அங்கிருந்த வேதபுரீஸ்வரர் ஆலயம்தான். இது 1746-இல் ஃப்ரெஞ்சு கவர்னர் டூப்ளே என்பவரின் மனைவியின் தூண்டுதலால் அந்த ஆலயம் இடித்துத் தள்ளப்பட்டது. இந்த விவரங்களை அப்போது ஃப்ரெஞ்சு கவர்னரிடம் துபாஷியாக வேலை பார்த்துவந்த  ஆனந்தரங்கம் பிள்ளை என்பவர் தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். அந்த நாட்குறிப்பு இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது.

            ஆனந்தரங்கம் பிள்ளை எழுதியுள்ள  17-3-1746ஆம் தேதியிட்ட நாட்குறிப்புப் பகுதியில் அவர் எழுதியிருக்கும் செய்தி அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. அப்போது புதுச்சேரியில் மிகவும் பிரபலமாக இருந்த வேதபுரீஸ்வரர் ஆலயம் கவர்னரின் மனைவியின்  கவனத்துக்கு வந்திருக்கிறது.

மேற்கண்ட தேதியில் அந்தக் கோயிலில் நடந்த ஒரு நிகழ்ச்சியை ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார். எவருடைய தூண்டுதலினாலோ, அன்று இரவில் சிலர் ஆலயத்தின் உள்ளே நுழைந்து அங்கிருந்த சுவாமி சிலைகள், நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவற்றின் மீது மலத்தைக் கரைத்து ஊற்றியிருக்கிறார்கள். மறுநாள் காலையில் கோயில் திறக்கப்பட்டதும் கோயில் ஊழியர்கள், ஆலயத்தில் நடந்திருக்கிற  கோலத்தை  நிர்வாகிகளிடம் முறையிட்டிருக்கின்றனர். இந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது. உடனே ஊர் மக்கள் சாலைக்கு வந்து எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். அன்றைய தினம் புதுச்சேரியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஊரே ஒன்று திரண்டு இந்த அராஜகச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தது. கவர்னர் டூப்ளேக்கு இந்த  தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் கூட்டத்தை விரட்டியடிக்க உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவலும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் காணப்படுகிறது.

                                                                                                                    புதுவையிலுள்ள வேதபுரீஸ்வரர் ஆலயத்தை இடித்துவிடும் எண்ணம் ஃப்ரெஞ்சு அரசுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்திருக்கிறது. அதிலும் கவர்னர் டூப்ளேயும் அவர் மனைவியும் இதில் மிகவும் அக்கறை கொண்டிருந்தனர். அவர்களுடைய இந்த முயற்சிக்கு பாதிரியார்கள் சிலரும், உள்ளூர்க்காரர்கள் சிலரும் ஒத்துழைப்பு நல்கி வந்தனர். அதற்கு முன்பு ஐம்பது ஆண்டுகளாக இந்தக் கோயிலை இடிக்கும் எண்ணம் இருந்த போதும், அப்போதெல்லாம் இங்கிருந்த பிரெஞ்சு அரசுப் பிரதிநிதிகள் அந்தக் காரியத்தைச் செய்யத் துணியவில்லை. அப்படி ஏதாவது செய்துவிட்டால், ‘இது தமிழ் ராஜ்யம், இந்தக் கோயிலுக்கு ஏதேனும் ஈனம் வந்தால் நமக்கு அபகீர்த்தி உண்டாகும், தங்கள் வர்த்தகம் பாழாகிவிடும்’ என்றெல்லாம் எண்ணி அப்படி எதையும் செய்யாமல் இருந்தனர்.

ஃப்ரான்சு நாட்டின் மன்னர் நம் நாட்டில், நம் மண்ணில் இருந்த பழம்பெரும் இந்துக் கோயிலைத் தகர்க்க உத்தரவில் கையெழுத்திட்டு ஆணை பிறப்பித்திருந்தும், இங்கிருந்த கவர்னர்கள் அந்தக் காரியத்தைச் செய்யத் தயங்கி வந்தனர். ஒரு முறை ருத்ரோத்காரி வருஷம் சித்திரை-வைகாசி மாதங்களில் கோயிலை முத்தியாப் பிள்ளை என்பவரைக் கொண்டு இடிக்க முயற்சி மேற்கொண்டனர். இந்த ஆணையை நிறைவேற்ற முத்தியாப் பிள்ளை என்பவர் மறுத்ததால், அவரைக் கட்டி வைத்து காதுகளை அறுப்பதாகவும் தூக்கில் தொங்கவிட்டுவிடுவதாகவும் மிரட்டிப் பார்த்தனர். இந்த அச்சுறுத்தலுக்குப் பயந்து அந்த முத்தியாப் பிள்ளை தன் குடும்பத்தாரைக் கூட்டிக் கொண்டு ஊரைவிட்டே சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டாராம்.

1746-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி. மறுநாள் ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடும் மிதப்பில் ஃப்ரெஞ்சுக்காரர்கள் இருந்தனர். அன்று இரவு ஏழு மணியளவில் வேதபுரீஸ்வரர் ஆலயத்துக்குள் மலம் நிரம்பிய சட்டி ஒன்று வீசப்பட்டது. அந்தச் சட்டி அப்போது பிள்ளையார் சந்நிதியில் பிரதக்ஷணம் செய்து கொண்டிருந்த சங்கரய்யன் என்பவர் மீது வந்து விழுந்து உடைந்தது. இதனையடுத்து கோயில் நிர்வாகிகளும் பொதுமக்களும் ஆனந்தரங்கம் பிள்ளையிடம் சென்று நடந்ததைச் சொல்லி முறையிட்டனர். அவர் கவர்னரிடம் சென்று புகார் தெரிவித்திருக்கிறார். கவர்னர் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து நடந்த உண்மைகளை விசாரித்து அறியுமாறு ஆணையிட்டார். அந்த விசாரணையில் மலச்சட்டி அருகிலுள்ள சம்பா கோயில் எனும் தேவாலயத்திலிருந்துதான் வீசப்பட்டது என்பது கண்டறியப்பட்டது. கவர்னர் அந்த தேவாலயத்தின் பாதிரியாரான கார்த்தோ என்பவரை அழைத்து விசாரித்தார். அதற்கு அவர் ஈஸ்வரன் கோயில் ஆட்களே இந்தக் காரியத்தைச் செய்துவிட்டுத் தங்கள் மீது பழிபோடுகின்றனர் என பதிலளித்திருக்கிறார். ஆளுநர் ஓர் அறிக்கையை பிரெஞ்சு மன்னருக்கு அனுப்பி வைத்தார்.

                                                                                                                        

1748-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதியன்று தனது நாட்குறிப்பில் ஆனந்தரங்கம் பிள்ளை எழுதும் செய்தி– “இன்றைய நாள் காலையில் நிகழ்ந்த விபரீதம் என்னவென்றால்” என்ற முன்னறிவிப்போடு எழுதுகிறார்.

பிரெஞ்சு அதிகாரிகள் கெர்போ, பரதி முதலியோர் ஏராளமான இராணுவ வீரர்களைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு கொல்லத்துக்காரர்கள், கூலிக்காரர்கள் என்று சுமார் இருநூறு ஆட்கள் துணைகொண்டு வேதபுரீஸ்வரர் ஆலயத்தை இடிக்கத் தொடங்கினார்கள். முதலில் கோயிலின் தென்புற மதிலையும், மடப்பள்ளியையும் இடித்தனர். இந்த செய்தி ஊர் முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. உடனே உள்ளூர் வெள்ளாளர், கைக்கோள அகமுடைய முதலிகள், செட்டிமார்கள், பிள்ளைகள், குடியானவர்கள், ஆலய சாத்தாணிகள் ஆகியோர் ஆனந்தரங்கம் பிள்ளையிடம் சென்று நடைபெறும் அக்கிரமம் பற்றி முறையிட்டனர். பலர் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டுத் தாங்கள் ஊரைவிட்டுப் போய்விடப் போவதாகவும், சிலர் தற்கொலை செய்துகொண்டு மாண்டுவிடுவதாகவும் முறையிட்டனர். ஆளுநரிடம் போய் முறையிடப் போவதாகவும் சொன்னார்கள்.

மக்களுடைய முறையீட்டுக்கு ஆனந்தரங்கம் பிள்ளை, “உங்களிடம் இப்போது இருக்கும் ஒற்றுமை முன்னமேயே இருந்திருந்தால், இந்த நிகழ்ச்சி நடந்திருக்காதே!” என்று சொல்லிவிட்டு, “உங்களில் ஒரு சிலர் பெரிய துபாசித்தனம் பெறுவதற்காகவும், சாவடி துபாசித்தனம் பெறுவதற்காகவும் கோயிலை இடிக்க ரகசியமாக ஒப்புக் கொள்ளவில்லையா? அதனால்தானே இன்றைக்கு இந்த விபரீதம் நடந்திருக்கிறது” என்று சொல்லி அவர்களைக் கடிந்து கொண்டிருக்கிறார். இந்தக் கூற்றின்படி ஆலய இடிப்புக்கு அங்கிருந்த நம்மவர்கள் சிலர் ஒப்புக் கொண்டிருப்பதும் தெரிய வருகிறது.

“கவர்னரும், கவுன்சிலும் இந்த முடிவை எடுத்திருப்பதால் இதில் நாம் இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை. ஆகையால் இயன்றவரை வாகனங்கள், சிலைகள் முதலியவற்றை பத்திரமாக எடுத்துச் சென்று காளத்தீஸ்வரர் கோயிலில் கொண்டு போய் வைத்துவிடுங்கள்” என்று அறிவுறுத்தினார் துபாஷ். இப்படி இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் கோயிலின் அர்த்த மண்டபத்தையும், மகாமண்டபத்தையும் இடித்துக் கொண்டிருப்பதாகச் செய்தி வந்து சேர்ந்தது. ஆலயத்து சிலைகளையெல்லாம் எப்படி உடைக்க வேண்டுமோ, அப்படி உடைத்துக் கொள்ளுங்கள் என்று டூப்ளேயின் மனைவி சொல்லிவிட்டாளாம். ஆகவே ஆலயத்தில் இருந்த மூர்த்தங்களை அவமதிப்பு செய்தும், இதர சிலைகளை உடைத்தும் போட்டு விட்டனர்.

இதனைக் குறித்து ஆனந்தரங்கம் பிள்ளை எழுதுவதாவது.

“பின்னையும் அந்தக் கோவிலிலே நடத்தின ஆபாசத்தைக் காகிதத்திலே எழுத முடியாது. வாயினாலேயும் சொல்ல முடியாது. இப்படியெல்லாம் நடப்பித்தவர்கள் என்ன பலனை அனுபவிப்பார்களோ நான் அறியேன். ஆனால் இன்றைய தினம் தமிழரெனப்பட்டவர்களுக்கு எல்லாம் லோகாத்தமானமாய்ப் (லோக அத்தமனம்) போறாப் போலே இருந்தது. பாதிரிகளுக்கும், தமிழ்க் கிருத்துவர்களுக்கும், துரைக்கும், துரை பெண்சாதிக்கும் ஆயிசிலே காணாத மகிழ்ச்சியாய் இருந்தார்கள். இனிமேல் அனுபவிக்கப் போறத் துக்கத்தினை யோசனை பண்ணாமல் இருந்தார்கள்.” (தொகுதி 5. பக்கம் 293)

இப்படிக் குறிப்பிட்ட ஆனந்தரங்கம் பிள்ளை, கோவிலை இடித்தவர்கள் அதற்குண்டான வினையை அனுபவிப்பார்கள் என்று நம்பினார். அதன்படியே 11-09-1748ஆம் நாள் ஆங்கிலேயருடன் நடந்த சண்டையில் கோவிலை இடிப்பதில் முனைப்புடன் இருந்த பரதி என்பாருக்கு தலையில் மரணகாயம் ஏற்பட்டது என்பதையும் ஆனந்தரங்கம் பிள்ளை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

வேதபுரீஸ்வரர் கோவிலை இடித்த அதே நேரத்தில் அருகில் இருந்த மசூதியொன்றையும் இடிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். மசூதியை இடிக்கத் தொடங்கியதும், அப்துல் ரகுமான் என்பவர் ஆளுனரிடம் சென்று மசூதியை இடித்தால் ஒரு சிப்பாய்கூட உயிருடன் இருக்க முடியாது. இடிக்கிறவர்கள் போரிலே விழுந்து செத்துவிடுவார்கள் என்று சொன்னார். ஆளுனரும் மசூதியை இடிப்பதைக் கைவிட்டுவிட்டார். இதன் பிறகு அப்துல் ரகுமான் ஆனந்தரங்கம் பிள்ளையிடம் வந்து கூறிய செய்தி:

பகைவன் வந்து நம் பட்டணத்தை வாங்குவேன் என்று இறங்கியிருக்கும் வேளையில் சகல சனங்களையும் சந்தோஷமாய் வைத்து முதுகைத் தட்டிக் கொடுத்துக் காரியம் கொள்ளுகிறதை விட்டுவிட்டுப் பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக் கொண்டு அவரவர் மனதை முசே துய்ப்ளே முறித்துப் போடுகிறார். இங்கிலீஷ்காரனே செயிச்சால் கூட நல்லது என்று சனங்கள் நினைக்கும்படி பண்ணுகிறார். தமிழர் கோயிலை இடித்து இப்படிப் பட்டணம் நடுங்கப் பண்ணுகிறது துரைக்கு அழகா? “ (தொகுதி 5. பக். 292)

இப்படி அவர்கள் செய்திருக்கும் தீங்கு பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும்; மறக்கவோ அல்லது மன்னிக்கவோ கூடிய நிகழ்ச்சியா அது? அந்நிய மோகம் நம் மக்கள் மனதை எப்படி அடிமைத்தனத்துக்கு ஆட்படுத்தியிருந்தது, கண் முன்னால் நடந்த கொடுமையைத் தடுக்க முடியாத ஆண்மையற்றவர்களாக ஆக்கியது என்பதை காலம் தாழ்த்தியாவது நம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்த நிகழ்ச்சி பற்றி ஆனந்தரங்கம் பிள்ளை டைரியிலிருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

அந்நியர்கள் இங்கு வந்ததால்தான் பல நன்மைகள் கிட்டியது என்றும் நாகரிகம் பெருகியது என்றும் பொய்யான கற்பனையில் மிதக்கும் நம்மவர்கள் சிலர் இனியாவது யோசிக்க ஆரம்பிக்கவேண்டும்,

அப்படி வேதபுரீஸ்வரர் ஆலயம் இங்கு முக்கியமான ஆலயமாகத் திகழ்ந்து வந்த காரணத்தால் இவ்வூருக்கு “வேதபுரம்” என்ற பெயர் இருந்து வந்திருக்கிறது. அப்படிப்பட்ட புதுச்சேரியில் கடற்கரையோரம் கடல் அலைகள் வந்து மோதும்பொது எழுகின்ற ஓசை வேதப் பொருளை உரைப்பதாக பாரதி கற்பனை செய்து பாடுவதுதான் இந்த வரிகள்.

“காலை இளம்பரிதி வீசும் கதிர்களிலே                                                                   நீலக் கடலொர் நெருப்பெதிரே சேர் மணிபோல்                                                         மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா                                               வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி                                                     வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய                                                              செந்தமிழ் தென்புதுவை யென்னுந் திருநகரின்                                               மேற்கே, சிறு தொலைவில் மேவுமொரு மாஞ்சோலை...”

இப்படி தொடங்குகிறது மகாகவி பாரதியாரின் “குயில் பாட்டு”.

            புதுவை நகரை “செந்தமிழ்த் தென்புதுவை” என்று பெருமைப்படுத்திச் சொல்கிறார் பாரதி. இவர் அங்கு சென்று தமிழுக்கு ஒரு அன்பர் குழாமை உருவாக்கியதால் அப்படி அழைத்தாரோ என்னவோ, புதுவையில் பாரதிக்கு ஒரு அன்பர் குழாம் அமைந்தது.

            அந்த திருநகரின் மேற்கே சிறு தொலைவில் மேவுமொரு மாஞ்சோலை.  இந்த மாஞ்சோலை பாரதியாரால் “வெல்லச்சு செட்டியார்” என்று அன்புடன் அழைக்கப்படும் கிருஷ்ணசாமி செட்டியார் என்பவருக்குச் சொந்தமானது.

            அந்த சோலைக்கு நாலா புறங்களிலிருந்தும் வேட்டுவர்கள் பறவை வேட்டைக்காக வந்து செல்வார்களாம். அப்படிப்பட்ட வளமான சோலையில் ஒரு நாள் காலைப் பொழுது. வேடர்கள் வேட்டைக்கு வராத நாளே அங்கு வாழ்கின்ற பறவைகளுக்கு விருந்துத் திருநாளாம். அவர்கள் வந்தால் பறவைகளை வேட்டையாடுவார்கள் என்பதால், அவர்கள் வராத நாளைத் தங்களுக்குத் திருநாளாக எண்ணுகிறதாம் அந்தப் பறவைகள்.

            கவிஞர் அந்தச் சோலையினுள் நுழைகிறார். எங்கும் பறவைகளின் மகிழ்ச்சியொலி கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆங்கோர் உயர்ந்த மரத்தின் நெடுங்கிளை யொன்றில் ஒரு கருங்குயில் அமர்ந்ஹு கூவிக் கொண்டிருக்கிறது. கூவிக்கொண்டிருக்கிறதா, இல்லை ஆண் குயில்கள் உடல் இன்ப உணர்வால் உடலெங்கும் புளகாங்கிதம் அடைய, இசையின் இனிமையால் செயலிழந்து, உள்ளத்தில் காதல் கனல் பெருக, சோலையில் உள்ள மற்ற பறவைகள் எல்லாம் பரவசப்பட்டு தங்கள் பணிகளை மறந்து கிளைகளில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றன.

            அமுதம் இனியது, அந்த அமுதினை காற்றில் கலந்தால் அதன் சுவை காற்றில் பரவி எங்கும் இனிய சுவை மிகுந்து காண, அந்த சுவையும் மின்னலைப் போல் வெட்டியடிக்கும் ஒளிக் கற்றைபோல் விளங்க அந்தக் குயில் பாடிக் கொண்டிருக்கிறது. வானத்து தேவதையே இந்தக் குயில் உருவம் கொண்டு இசைத்துக் கொண்டிருப்பது போல் இருந்தது.

            குயிலின் பாடல் இனிய சுவையுள்ள காற்றில் மெல்ல வந்து கவிஞரை அடைகிறது. அந்தப் பாடலின் இனிமையினால் உள்ளத்தில் ஊறிவரும் கவிதை வெறி மூண்டெழ சொந்த நினைவு அகல, பட்டப் பகலில் கவிஞர்கள் காணுகின்ற நீண்ட கனவினைப் போல் ஆங்கோர் மரக்கிளையில் அமர்ந்து கீதம் இசைத்திருக்கும் குயில் காட்சி தெரிகிறது. அந்தக் குயில் இசைக்கும் பாட்டில் தானும் பரவசமடைந்து, தனக்கும் தன் மனித உரு நீங்கி குயில் உருவம் வாராதோ? என்று ஏங்குகிறார். இந்த குயில் பெண்ணை என்றும் பிரியாமல் காதலித்துக் கூடிக் களிப்புடன் வாழமாட்டோமா? அக்குயில் பாடும் நாதக் கனலில் நம் உயிரைக்கூட போக்கிவிடலாமே என்று பற்பல எண்ணங்களுடன் கவிஞர் உலா வருகிறார்.

            அந்தக் குயிலின் பாட்டை தேவர்கள் கூட கேட்டிருப்பார்களா? அந்தக் குயில் பாடிய பாட்டின் பொருளெல்லாம் கவிஞருக்கு நன்கு புரிந்தது. அது என்ன என்பதை இவ்வுலகுக்குச் சொல்ல வருகிறார். அந்தக் குயில் பாடுகிறது:

            காதல், காதல், காதல்,                                                                                                          காதல் போயிற் காதல் போயிற்                                                                                 சாதல், சாதல், சாதல்.

என்று தொடங்கி காதல் பாட்டினை நெடுகப் பாடிக் கொண்டிருக்கிறது.

            பாட்டு முடிவு பெறுகிறது; கானகம் முழுவதும் ஒரே மெளனம் நிலவுகிறது. அந்தக் குயிலி தன் இனிய குரலில் பாடுகின்ற போது, அதில் இன்ப உணர்வுடன், துன்ப உணர்வும் அதன் சாயலைக் காட்டுவது புரிந்தது. கவிஞர் அந்தக் குயிலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, காட்டில் அதன் பாட்டைக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்த மற்ற பறவைகள் எல்லாம் எங்கோ பறந்து சென்று விட்டன.

            தலை நிமிர்ந்து கவிஞர் பார்க்க, அந்த நெடிய மரக்கிளையில் குயில் சோகத்தைத் தாங்கிக் கொண்டு தலை குனிந்து வாடுவது போல் உட்கார்ந்திருந்தது. இவர் அந்த மரத்தருகே சென்று நின்று கொண்டு, அந்தக் குயிலிடம் பேசுகிறார்.

            “பெண்ணே, என் செல்வமே, பேரின்பப் பாட்டுடையாய், ஏழுலகிலும் இன்பத் தீயை உன் இசையால் மூட்டும் திறன் உடையாய், உனக்கு நேர்ந்த துயரந்தான் என்ன? சொல்” என்கிறார் கவிஞர்.

            அந்த மாயக் குயில் மானுடர் மொழியினில் பேசத் தொடங்க, கவிஞர் மனம் அதிசயித்து நின்றார். குயில் சொல்கிறது “காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில், சாதலை வேண்டித் தவிக்கின்றேன்” என்கிறது.

            “வானத்துப் பறவைகள் எல்லாம் மகிழ்ச்சியுற இனிமையாய்ப் பாடுகிறாய், மற்ற பறவைகள் போல் இல்லாமல் அறிவிலும் சிறந்து விளங்குகின்றாய், உன் மனம் விரும்பிய காதலன் உனக்குக் கிடைக்காமல் போனது ஏன்?” என்கிறார் கவிஞர்.

            உள்ளத்தில் வேதனையும், நாணமும் கலந்து, அவ்வுணர்வைக் குரலில் காட்டி அந்தக் குயில் சொல்லிற்று, “மான அவமானம் பார்க்காமல் உண்மையைத் தங்களிடம் சொல்லிடுவேன், மானுடரே! இந்தப் பெண் மீது இரக்கம் கொண்டு பிழை இருந்தால் பொறுத்தருள வேண்டும்” என்றது அந்தக் குயில்.

            “அறிவிலும், உருவிலும் சிறியதாக விளங்கும் பறவையாக நான் பிறந்திருந்த பொதும், தேவர்கள் கருணையினாலோ அல்லது தெய்வத்தின் சினத்தாலோ எல்லோரும் பேசும் பேச்சை எளிதில் எனக்குப் புரிகிறது. மனிதர்களின் பழக்க வழக்கங்கள் எல்லாம் நான் அறிந்து கொண்டேன். காட்டில் பறந்து திரியும் பறவைகள் எழுப்பும் கலகலவெனும் ஓசையிலும், மரங்கள் அசையும் போது கிளைகள் உரசி எழுப்பும் ஒலியினிலும், ஆற்றில் சலசலத்து ஓடும் நீரின் ஓசை, அது அருவியாய் பொங்கிக் கொட்டும் ஒலியிலும், பரந்து விரிந்து கிடக்கும் நீலக் கடலில் பொங்கி யடிக்கும் அலைகளின் ஓசையிலும், மானுடப் பெண்கள் காதல் கொண்டு ஊன் உருகப் பாடுகின்ற பாடலில் ஊறிடும் தேன்மழையிலும், ஏற்றம் இறைப்பார் பாட்டினிலும், நெல் இடிக்கும் கொற்றொடியார் ‘குக்கு’ என கொஞ்சும் ஒலியினிலும், சுண்ணம் இடிப்பார் தம் சுவை மிகுந்த பண்களிலும், பண்ணையில் பயிர்த்தொழில் செய்யும் மடவார்கள் தங்கள் வேலையோடு பாடுகின்ற பாட்டினிலும், மாதர்கள் வட்டமாய் நின்று தங்கள் வளைக்கரங்கள் ஒலியெழுப்ப கொட்டி இசைக்கும் கூட்டமுதப் பாடலிலும், மூங்கிலால் ஆன குழலில் எழும் ஒலி, மனிதர்கள் கையால் மீட்டி இசைக்கும் வீணை ஒலியினிலும், மனிதர்கள் வாயாலும், கையாலும் வாசிக்கும் பல கருவிகள் எழுப்பும் ஓசையிலும், பாட்டிலும், நாட்டிலும் பொழுதுக்கும் ஒலித்திடும் பாட்டிலும் நான் நெஞ்சைப் பறி கொடுத்தேன்.

            அன்றைய நிகழ்வுகள் குயிலினைக் கண்டது, அதன் தேனினும் இனிய குரலில் பாடிய பாட்டினைக் கேட்டது இவைகள் அனைத்தும் கவிஞனின் மனத்தை இறுகப் பற்றிக் கொண்டு விட்டது. அந்தக் குயில் தன் நெஞ்சத்தின் ஆசையை நோக்கிடுவீர் என்று அவரிடம் கேட்கிறது. அப்படி அது கேட்டபோது சொல் உன் நெஞ்சத்தின் ஆவலை என்றதும் சொல்கிறது, “காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையென்றால் சாதலை வேண்டித் தவிக்கின்றேன்” என்று.

            சின்னக் குயிலி இவ்வாறு சொன்னதுதான் தாமதம், கவிஞரின் உள்ளத்தை இன்ப உணர்வு பற்றிக் கொள்ள, உள்ளமும், உயிரும் அந்த மாயக் குயிலின் பேச்சன்றி வேறெதையும் கேட்கவில்லை. அவர் உள்ளத்தில் புதியதோர் இசைக்கு பல்லவி உருவாகி விட்டது. அது “காதலோ காதல், இனிக் காதல் கிடைத்திலதேல் சாதலோ சாதல்” என அமைந்து விட்டது.  அவர் உள்ளமாம் வீணையில் அந்த ஒலிமட்டுமே ஒலித்ததன்றி வேறு ஒலி கேட்கவில்லை. அவர் சித்தம் மயங்குகிறது, திகைத்துப் போய் சின்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் முன்பு அங்கிருந்து இரை தேட பறந்து சென்ற பறவைகள் அனைத்தும் சோலைக்குத் திரும்ப வந்து சேர்ந்தன. சோலையெங்கும் அந்தப் பறவைகளின் ஒலியே நிரம்பியிருந்தது.

            இவற்றையெல்லாம் கண்டு அந்த நீலக் குயில் சொல்கிறது, ஜோதித் திருவிழியீர்! காதல் பாதை கரடு முரடானது என்பார்கள். துன்பக் கடலில் மிதக்கையில் அங்கிருந்து காப்பாற்ற ஒரு நாவாய் போல் வந்து சேர்ந்தீர். என் மனக் கலக்கம் துன்பமெல்லாம் தீர்வதற்கு உம்மோடு பேசுவதற்கும், அதனால் நான் பெறும் இன்பத்துக்கும் இடையூறு ஏற்பட்டு விட்டது.

            தாங்கள் ஒன்று செய்ய வேண்டும். இன்றிலிருந்து நான்காம் நாள் தாங்கள் அன்புடன் இங்கே வந்தருள வேண்டும். மேற்குலத்தீர்! மறந்து விடாதீர்கள். என் மனதைக் கொள்ளை கொண்டு போகிறீர்கள், தாங்கள் வரவில்லையானால் நான் உயிரோடு இருக்க மாட்டேன். நினைவில் கொள்ளுங்கள் நான்காம் நாள். இந்த நான்கு நாட்களும் நான் பத்து யுகம் போல கழிப்பேன். என் மனதைக் கொண்டு செல்கிறீர்கள், சென்று வாருங்கள் என்று ஆறுதல் சொல்ல முடியாத பெரும் துயரோடு சொல்லிவிட்டு அந்தக் குயில் பறந்து மறைந்து விட்டது.

காதலோ காதல்.

            கவிஞன் சொல்கிறார். நான் கண்டவை அனைத்தும் கனவா, நனவா என்பதறியவில்லை. இருபது பேய் பிடித்துக் கொண்டவனைப் போல கண்களும், முகமும் மகிழ்வெய்தி, மன்மதன் விட்ட அம்புகள் நெஞ்சில் தைத்தவன் போல், கிளையில் அமர்ந்து காதல் பாட்டு பாடிய அந்தக் குயிலின் உருவம் கோடிக் கணக்கில் உலகமெங்கும் நீக்கமற நிறந்திருப்பது போல உணர்ந்த நிலையில் இல்லம் சென்று, மனம் என் வசம் இல்லாமல் ஒரு நாளைப் போக்க ஒரு யுகம் போல உணர்ந்து, நான் பட்ட பாட்டைத் தாளம் படுமோ? தறி படுமோ? யார் படுவார்?

            ஒரு நாள் போயிற்று, நானும், எனது உயிரும், கையில் கரும்பேந்தி நிற்கின்ற மன்மதனும், மாய்மாலக் குயிலும், அதனுடைய நெஞ்சை உருக்கும் தேன் குரல் பாட்டும் இந்திர ஜாலம் போல அன்றைய பொழுதைக் கழித்தேன். மறுநாள் விடிந்தவுடன், முந்தைய நாள் நிகழ்வுகளையெல்லாம் மனதில் எண்ணி, மன்மதன் விளைத்த விந்தை உணர்வினால், புத்தி, மனம், சித்தம், புலன் எதையும் அறியாமல், வித்தை காட்டுவோன் மந்திரம் செய்து ஆடவைக்கும் பொம்மையைப் போல், என் கால்கள் இரண்டும் சோலையை நோக்கி அழைத்துச் செல்ல, மெல்ல அந்த நீலிக் குயிலைக் காணச் சென்றேன். நடந்து வந்த வழி நெடுக நான் எதையும் காணவில்லை, சோலையைச் சென்றடைந்து குயிலைத் தேடுகையில் அங்கே காலை நேர சூரிய ஒளியில் பச்சை மரங்களெல்லாம் பளபள வென்று மிளிர, என் உள்ளக் கிடக்கையை உணர்ந்தவை போல் அந்தச் சோலைப் பறவைகள் எல்லாம் எங்கோ பறந்து போயிருந்தன. காதல் சூடு என் உடலெங்கும் பரவ, நான் அந்த விந்தைச் சிறு குயிலைக் காண, கரை கடந்த ஆசையுடன் எங்கெல்லாமோ சுற்றி அந்த மரத்தை நோக்கி வந்து சேர்ந்தேன்.

குயிலும் குரங்கும்.

            முந்தைய நாள் நான் பார்த்த மரத்தின் கிளையில் அந்தக் குயிலைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே, அந்தக் குயில் எங்கிருக்கும் என்று தேடி வருகையில், அட வஞ்சனையே! பெண்மையே! மன்மதன் எனும் பொய் தேவா! நெஞ்சகமே! தொல் விதியின் நீதியே, பாழ் உலகே! அங்கே நான் என் கண்களால் கண்ட காட்சி தனை என்னவென்று உரைப்பேன். பெண்களால் அறிவிழந்து போகும் பித்தர்களே கேளுங்கள்! காதல் காதலென்று போற்றி கவிதைகள் புனையும் கவிஞரெல்லாம் கேளுங்கள்! பெண்களெல்லாம் கேளுங்கள்! வலிய விதியே நீயும் கேள்! அந்த மாயக் குயில் ஒரு மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு, கண்களில் கண்ணீர் பெருக, அதன் சிறு உடல் பதைக்க, விம்மலுடன் இரக்கப்படும் படி மனத்துயரை வெளிக்காட்டிக் கொண்டு, அம்மம்மா! எங்ஙனம் சொல்வேன், ஒரு ஆண் குரங்குடன், எதையெதையோ சொல்லித் தன் மன வருத்தத்தைக் கொட்டி அளந்து கொண்டிருந்ததைக் கண்டேன்.

            நல்லது எது, தீயது எது என்பதை உணர முடியாத நிலையில் மனத்தில் தெளிவில்லாமல், அந்தக் கணமே அந்தக் குயிலையும், மந்திக் குரங்கையும் கொல்வதற்கு உடைவாளிற் கைவைத்தேன். கொல்லும் முன்பு அந்த குயில் அப்படி அந்தக் குரங்குடன் என்னதான் பேசுகிறது என்பதை தெரிந்து கொள்ல என் மனம் விரும்பியதால், அங்கு அவற்றின் கண்களில் படாமல் ஒரு பெரிய மரத்தின் பின்னால் ஒளிந்து நின்று கொண்டு கேட்டேன்.

            அந்தப் பெண் குயில் சொல்கிறது, “வானரரே! இணையற்ற அழகுடையவரே! பெண்மை எத்தனை பிறவி எடுத்தாலும், ஏந்தலே! உன் அழகை மறக்க முடியுமோ? உன் மீது கொண்ட ஆசையைக் கட்டுப்படுத்த முடியுமா? இந்த பூமியில் வாழும் எல்லா உயிர்களுக்குள்ளும் மனிதர்களே உயர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால் ஊர்கள் அமைத்தல், கோயில், அரசாட்சி, குடிவகுப்பு போன்ற சிலவற்றில் வேண்டுமானால் அந்த மனிதர்கள் உயர்வானவர்கள் என்று சொல்லலாம்.

            ஆனால் உடல் அழகிலும், உள்ளத்து  எண்ணங்களை வெளியிடும் பாங்கிலும், முதுகு கூனி வளைந்திருக்கும் உடல் வாகிலும், உம் போன்ற வானரர்களுக்கு மனிதர்கள் நிகராவார்களா? ஆனமட்டிலும் அவர்கள் என்னதான் முயன்று பார்த்தாலும் பட்டு மயிர் மூடப்படாத தங்கலது உடலை எட்டுவித உடைகளால் அலங்கரித்துக் கொண்டு உமக்கெதிராக வந்தாலும், மீசையையும், தாடியையும் வேடிக்கையாக வளர்த்துக் கொண்டு வானரர்கள் முகத்தைப் போல ஆக்கிக் கொள்ள முயன்றாலும், உங்களைப் போல ஆடிக் குதிக்க முயன்று கூட்டமாய்க் கூடி நின்று குதித்தாலும், கோபுரத்தில் உங்களைப் போல சரசரவென்று ஏறத் தெரியாமல் ஏணி வைத்து ஏறிச் சென்றாலும், வேறு எவற்றையெல்லாம் செய்து பார்த்தாலும், வேகமாகப் பாய்வதற்கு வானரர் போல ஆவாரோ? உங்களைப் போல வாலுக்கு எங்கே போவார்கள்? தலையில் கட்டிய தலைப்பாகையில் துணியை நீட்டிவிட்ட கச்சை வாலுக்கு நிகராகுமா? நீங்கள் தாவும்போது வீசி எழும் வாலைப் போல அவர்கள் கச்சை இணையாகுமா?

            சைவ சுத்த போஜனமும், சாதுரியமாக பார்க்கும் பார்வைக்கும், வானரர்கள் போல வேறொரு சாதி இந்த மண்ணுலகில் இருக்கிறதோ? வானரர்களுக்குள்ளே மணி போல உங்களை நான் அடைந்தேன். நான் பிறப்பில் பறவையாகப் பிறந்திருந்தாலும், நிச்சயமாக முற்பிறவியில் நான் செய்த தவங்களினால் தங்கள் காதலைப் பெறும் பாக்கியம் கொண்டேன். தங்கள் மீது கொண்ட ஆசையினா பாடுகின்றேன், கேட்டருள்வீர்! (வானரங்களின் மொழியில் குயில் பேசியதை ஏதோவொரு திறத்தால் நான் புரிந்து கொண்டேன்)

            அந்த நீசக் குயில் தன் நெருப்புச் சுவைக் குரலில் ஆசை ததும்பப் பாடத் தொடங்கியது. முன்பு என்னிடம் பாடிய அதே பாடல் மறுபடியும் இந்தக் குரங்கினிடம்:

“காதல், காதல், காதல்,                                                                                                     காதல் போயிற் காதற் போயிற்                                                                                              சாதல், சாதல், சாதல்”

            இசையப் பற்றிய ஒரு கருத்து உண்டு, காட்டு விலங்குகளும் இசைக்கு இசையும், கைக்குழந்தைகளும் இசையை உணர்ந்து தனது அழுகையை நிறுத்திவிட்டுப் பாட்டைக் கேட்கும், பாட்டின் சுவையை பாம்புகளும் அறிந்து கொள்ளும், மகுடியின் இசைக்கு படமெடுத்து ஆடும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

            இங்கு அந்தக் குயில் பாடிய பாட்டினைக் கேட்டு அந்தக் குரங்கு கள்ளுண்டவர் அடையும் வெறி கொண்டு அந்தக் குயிலின் பாட்டைக் கேட்டு தாவிக் குதிக்கிறது, தாளங்கள் போடுகிறது, “ஆவி உருகுதடி, ஆகாகா” என்று ரசிப்பதுவும், கண்களைச் சிமிட்டுவதும், காலாலும் கையாலும் மண்ணைப் பிறாண்டி எங்கும் வாரி இறைப்பதுவுமாகப் பேசத் தொடங்குகிறது.

            “என் ஆசைக் குயிலே! அரும்பொருளே, தெய்வதமே, உன்னிடம் பேசமுடியாப் பெருங்காதல் கொண்டு விட்டேன்; காதல் இல்லையென்றால் அடுத்த கணத்தில் சாதல் என்றாய்; ஆனால் உன் காதலினால் என்னைச் சாகும் நிலைமைக்குக் கொண்டு வைத்தாய். எப்போதும் உன்னை நான் பிரிவதைத் தாங்க மாட்டேன், இப்போதே உன்னை முத்தமிட்டு மகிழ்ந்திடுவேன் என்று மயங்கி பலவும் பேசுகிறது. அதன் பேச்சு என் மனதைப் புண்ணாக்கிற்று.

            அந்தக் குயிலிடம் குரங்கு பேசிய காதல் பேச்சைக் கேட்டு, அதனைக் கொன்றுவிட எண்ணி அதன் மீது என் கைவாலை வீசினேன். நடந்த தெல்லாம் கனவா? நனவா? தெய்வ சித்தமா? அந்தச் சிறு குரங்கு என் வாள் வீச்சுக்குத் தப்பி, முகம் சுளித்துக் கொண்டு தாவிப் போய் ஒளிந்து கொண்டது. காதல் மொழி பேசி குரங்கை மோகவெறி பிடித்திடச் செய்த அந்த மாயக் குயிலும் அங்கிருந்து மறைந்தது. வெளியே இரை தேடச் சென்ற சோலைப் பறவைகள் எல்லாம் தொகை தொகையாய் ஒலியெழுப்பிப் பறந்து வர, செய்வதறியாமல் உள்ளம் தடுமாறி நான் நாலாபுறமும் தேடியும் அந்த குட்டிப் பிசாசுக் குயிலை எங்கும் காணவில்லை.

இருளும் ஒளியும்.

            நண்பகல் ஆகிவிட்டது, கதிரவன் உச்சிக்கு வந்து விட்டான், உடலெங்கும் சோர்வெய்தி, விழிகள் மயங்கி மனம் கலங்கி வாழும் வகையாறியாமல் உள்ளம் பதைபதைக்க, வெட்கமும், வருத்தமும் மனதை வாட்டிட நான் வீட்டுக்குத் திரும்பி வந்தேன். உணர்வு நீங்கி மயங்கி படுக்கையில் விழுந்து விட்டேன். மூர்ச்சை தெளிந்து நான் மீண்டும் என் உணர்வு பெற மாலை ஆகிவிட்டது. என்னைச் சுற்றி நாலா புறங்கிளிலும் என் நண்பர்கள் சூழ்ந்து கொண்டு நிற்கின்றனர்.

            ஒருவன் கேட்கிறான், “ஏனடா மூர்ச்சையானாய்? எங்கே போயிருந்தாய்? என்ன செய்தாய்? எதனால் நீ மயக்க முற்றாய்? என்கிறான். பொழுது விடிந்து வானம் வெளுக்கும் முன்பாக வைகறைப் பொழுதில் தனியாகப் புறப்பட்டு எங்கோ சென்றாயாமே? எங்கு சென்றாய், என்ன செய்தி? சாப்பிடக் கூட மறந்து அப்படி என்னதான் வேலை என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்து விட்டார்கள்.

            அவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான், “என்னால் இப்போது விளக்கமாக எதுவும் சொல்வதற்கில்லை. நாளைக்கு வாருங்கள்! நடந்தவைகளை யெல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன். இப்போது எனக்குத் தனிமை வேண்டும், என்னைத் தனியாக விட்டுச் செல்லுங்கள்” என்று சொன்னேன்.

            நண்பர்கள் எல்லாம் புறப்பட்டுச் சென்று விட்டார்கள். செய்வதறியாமல் மனம் வருந்தி நின்ற என் தாயோ, நான் உண்பதற்கு பண்டங்களும், பாலும் கொணர்ந்து தந்தார். சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு நான் தனியாகப் படுத்திருந்தேன். நடந்ததை யெல்லாம் மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து விட்டேன். முன்பு நடந்தன வெல்லாம் இந்த சமயத்திலும் துக்கம் நெஞ்சை அடைக்கிறது. நடந்த வருத்தந் தரும் செய்தி யெல்லாம் ஒன்று திரன்டு மனதில் தேங்கி வருத்தமுண்டாகிறது. சோகக் கதையொன்றை இடையில் நிறுத்திவிட்டு, சம்பந்தமில்லாமல் ஏதேதோ கற்பனைக் கதைகளையும், வருணனைகளையும் வீணில் வளர்க்கும் விற்பன்னர்களின் வித்தை எனக்குத் தெரியவில்லை. மேலும் தொடர்ந்து கதை சொல்ல மனம் வெட்கி தளர்ந்து போகிறது.

            விடியற்காலை வேளையில் சூரியோதயத்தின் அழகிய ஒளி வீச்சினைப் பாடுகிறேன். தங்கத்தை உருக்கி, அடுப்பின் தீயைக் குறைத்துத் தேன் போலாக்கி அதனை எங்கும் பரப்பிவிட்டது போன்ற காட்சி. வானவெளியினை ஜோதிமயமாக்கி சுடர்விட்டுப் பிரகாசிக்கும் விந்தைத் தோற்றத்தைப் புகழ்வோர்கள் இதற்கு உவமை ஏதும் காண்பார்களோ? கண்ணை இனிது என்பார்கள்; கண்ணுக்கு கண்ணாகி விண்ணை அளக்கும் ஒளி உயர் இன்பமல்லவா? மூலத் தனிப் பொருளை மோனத்தில் சிந்தை செய்யும் மேலவரும் அஃது ஓர் பரந்த ஓளி என்பார்கள்; நல்ல சிறந்த ஒளிக்கு வேறொரு பொருளுரைக்கு இணையாகச் சொல்ல எதுவுமே இல்லை.

இந்தப் பகுதியில் பாரதி சொல்ல வரும் கருத்தினை விளங்கிக் கொள்ள இயலவில்லை. பொருள் புரிந்தோர் விளக்கினால் நன்மை தரும்:--

“புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி,                                                                    மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து,                                                                       விண்ணை வெளியாக்கி, விந்தை செயுஞ் சோதியினைக்                                             காலைப் பொழுதினிலே கண் விழித்து நான் தொழுதேன்,                                                  நாலு புறத்துமுயிர் நாதங்கள் ஓங்கிடவும்                                                                           இன்பக் களியில் இயங்கும் புவி கண்டேன்                                                                 துன்பக் கதையின் தொடருரைப்பேன், கேளீரோ!”

(நம் கருத்து:-- விடியற்காலைப் பொழுதில் புல் வெளிகளெல்லாம் மெல்லிய பனியால் படர்ந்து புதுமையில் சிரிப்பதுபோல் காட்சிதரும். மலர்கள் அந்த நேரத்தில்தான் செடிகளில் மலர்ந்து பார்ப்பதற்கு இனிய காட்சி தரும்; மண்ணும் இரவு முழுவதும் யாரும் நடந்திடாமல் புதிதாக தெளிந்து காணப்படும்; நீரும் கலங்கல் இல்லாமல் மலர்ச்சியுடன் காணப்படும்; விண்ணும் தூய்மையாய் காணப்படும், வானத்தில் பற்பல வண்ண ஜாலங்கள் விடியற்காலைப் பொழுதில் காணப்படும். அப்படிப்பட்ட காலைப் பொழுதில் நான் தொழுது எழுந்தேன், நாலா புறத்திலும் வழக்கமான ஓசைகள் எழத் தொடங்கின. விழித்தெழுந்த பூமியும் மகிழ்ச்சியுடன் கண் விழித்துக் கொண்டது; நானும் என்னுடைய துன்பக் கதையைத் தொடர்ந்து சொல்லுகின்றேன்)

(இதற்கு வேறு பொருள் இருந்தால் அறிந்தவர்கள் சொல்லலாம்)

குயிலும் மாடும்.

            காலையில் துயில் நீங்கி எழுந்ததும், என் கால்கள் இரண்டும் முந்தைய நாள் நிகழ்வுகளில் மனம் சென்று, என் கால்கள் தானாகவே அந்த சோலைக்கு இழுத்துச் சென்றது. நானும் சுய நினைவில்லாமலே சோலையின் நடுவே வந்து நின்று சுற்றுமுற்றும் அந்தக் குயில் எங்கேனும் இருக்கிறதா என்று தேடினேன். கூட்டமாய் பறந்து வரும் பறவைக் கூட்டத்தை அங்கு எங்கும் காணோம். ஆங்கேயோர் மூலையில் இருந்த மாமரத்து உச்சிக் கிளையினிலே உட்கார்ந்து அந்த நீலக் குயில் தனது நீண்ட கதையைச் சொல்லுகிறது. கீழே மரத்தடியில் ஒரு கிழட்டுக் காளை குயில் சொல்லும் மாயக் கதையை சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறது. இந்தக் காட்சியைக் கண்டு வெகுண்டேன், மனம் வருந்தினேன், ஆத்திரமடைந்தேன், உடல் சிலிர்த்தது, அந்தக் குயிலைக் கொல்ல கொலை வாள வீச எண்ணினேன். ஆனால் அந்தக் குயில் அப்படி என்னதான் சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதைக் கேட்ட பிறகு கொல்லலாம் என எண்ணி முன்போல் ஒரு மரத்தின் பின்னால் மறைந்து கொண்டு நின்றேன். அந்தக் குயிலோ தனது அதே பழைய மோகனக் கதையைத் தன் பொன்போன்ற குரலில் சொல்லிக் கொண்டிருந்தது. அது அந்தக் காளையிடம் சொல்கிறது;--

            “நந்தியே! பெண்களின் மனங்களைக் கவர்ந்திழுக்கும் காந்தமே! மன்மதனே மாடு உருவத்தில் வந்து காட்சி தரும் மூர்த்தியே! பூமியிலே மாடுபோல பெருமையுடைய சாதி ஏதும் உண்டோ? மனிதர்களும் தங்களுக்குள் பலம் மிகுந்த பிள்ளைகளைக் காளையென்று பெயர் சொல்லி பெருமைப் படுவார் அன்றோ! காளைகளுக்குள்ளே பெருமை பெற்றீர்! பெரியோனே! உனது நீண்ட முகமும், நிமிர்ந்திருக்கும் உன் கொம்புகளும், பஞ்சுப் பொதி போல படர்ந்த திருவுருவமும், உடலின் வலிமையும், வீரம் பொருந்திய வாலும், நீ வானத்து இடி போல “மா” என்று குரல் எழுப்பும் தோரணையும், ஏதேனும் சிறியப் பறவைகள் வந்து உன் முதுகில் உட்கார்ந்து விட்டால் வாலை வளைத்து அதனை அடிக்கும் காட்சியும், பல காலமாக நான் கண்டு உன்மேல் மோகம் கொன்டு விட்டேன். வலிமையான தோற்றமும், உழைக்கும் வலிமையும், தீரமான நடையழகும் உம்மைப் போல எதுவுமே இல்லாத இந்தச் சல்லித் துளிப் பறவைச் சாதியிலே நான் பிறந்து விட்டேன்.

            தினமும் இரவும் பகலுமாகச் சுற்றிப் பறந்து எங்கள் அற்ப வயிற்றுக்காக காடெல்லாம் சுற்றிச் சுற்றி வந்து, காற்றிலே அடித்து மோதிக் கொண்டு, மூட மனிதர்களின் நாற வயிற்றுக்கு உணவாகும் சின்னக் குயிலின் சிறு குலத்தில் பிறந்து விட்டேன்.  இப்பிறப்பால் நான் என்ன பயன் பெற்றேன். என்னைப் போல இன்னொரு பாவி உண்டோ? சேற்றிலே தான் தாமரை மலர்கிறது. சீழ் உடைய நீர்வாழ் உயிர் வயிற்றில் ஒளிவீசும் முத்து பிறக்கிறது என்பதைக் கேட்டதில்லையா? நீசப் பிறப்பு பிறந்த பொதும், அவர் நெஞ்சில் தோன்றும் ஆசைகளைத் தடுக்கத்தான் முடியுமா? காமதேவன் பிடித்து ஆட்ட, சாதி, பிறப்பு தராதரங்கள் பார்த்தா வருகிறான். வெறும் பேச்சுக்களால் பேச்சை வளர்க்க விரும்பவில்லை. புத்தி கெட்ட்தாலோ, அல்லது முன்பு செய்த தவத்தினாலோ, ஆடவர்களுக்குள்ளே காளையாம் தங்களம் நாம் தேர்ந்தெடுத்தேன். மனிதப் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும், நடக்க முடியாதவர்களை அவரவர் ஊர்களுக்குக் கொன்டு விடவும், தெய்வம் போல் நீங்கள் உதவி செய்த பிறகு, உடல் வலியை நீக்கிக் கொள்ள ஓய்வெடுக்கும் நேரத்திலே பாவியாகிய நான் வந்து உங்கள் களைப்பு நீங்க இனிய பாட்டைப் பாடுவேன். உங்கள் முதுகில் வந்து படுத்துக் கொள்வேன். உங்கள் வாலினால் ஈயை அடிக்கும் பொது அந்த அடியையும் நானும் வாங்கிக் கொள்வேன், “மா” என்று பெருங்குரலெடுத்து நீங்கள் கத்தும்போது, நானும் உங்கள் குரலொடு சேர்ந்து கத்துவேன். உங்கள் உடலிலே ஊருகின்ற் உண்ணிகளை உங்கள் உடலில் வலி ஏற்படாமல்  கொத்திக் கொல்வேன். காட்டிலே சுற்றி, கழனியெல்லாம் மேய்ந்து விட்டு, உண்ட உணவை நீங்கள் மெல்ல அசைபோடும் நேரத்தில் அருகில் உட்கார்ந்து பற்பல கதைகளைச் சொல்லிடுவேன்.

            காளை எருதரே! காட்டில் உயர்ந்த வீரரே! உங்கள் பாதங்களைச் சரணடைந்தேன். பெண் என்னைக் காத்தருள்வீர். காதல் கொண்டு வாடுகின்றேன், காதல் கொண்ட செய்தியினை மாதர் தங்கள் வாயால் சொல்வது வழக்கமில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் என்போல அபூர்வமாய் காதல் கொண்டால், தானாகச் சொல்வதைத் தவிர வேறு வழி இருக்கிறதா? ஒரே குலத்தவர் என்றால் எழும் நாணம், இந்த உலகில் மேலோர்கள் எதிரில் இருப்பதுண்டோ? தேவர் முன்பு தன் அன்பை உரைக்க மனதில் வெட்கம் கொள்ள முடியுமோ? அடியவர்கள் தங்கள் எஜமானர்களிடம் தங்கள் குறைகளைச் சொல்ல மாட்டார்களோ? ஆசை வெட்கம் அறியாது அல்லவா? இப்படிப் பலப்பல பேசிக் கொண்டு அந்தப் பொய்க் குயில் முன்போலவே தன் பாழடைந்த பொய்ப்பாட்டை எட்டு திசையும் இன்ப உணர்வொலிக்கப் பாடத் தொடங்கியது. அது

“காதல், காதல், காதல்,                                                                                                  காதல் போயிற் காதல் போயிற்                                                                                            சாதல், சாதல், சாதல்.”

            குயிலின் பாட்டு முடியும் வரை எங்கிருக்கிறேன் என்ற உணர்வே இல்லை. இந்த உலகும், வானமும் கருத்தில் இல்லை. சுற்றி அடர்ந்து நிற்கும் மரக்கூட்டங்களைக் கானவில்லை. என்னையே நான் அறியேன், எதிரில் நிற்கும் எருதினை அறியேன். பொன்னை நிகர்த்த குரல் படைத்த குயிலின் இனிமையை மட்டுமே கண்டேன், படைக்கும் கடவுளே, பிரம்மனே! முன்பு நீதான் இவ்வுலகை படைத்ததாகச் சொல்கிறார்கள். நீரைப் படைத்து, நிலத்தை உருவாக்கி வைத்தாய். நீரை அந்தப் பழைய நெருப்பில் குளிர்வித்தாய்; காற்றை உருவாக்கினாய், காண அரிதான வானவெளிதனைத் தோற்றுவித்தாய். நின்றன் தொழிலின் வலிமையை உனர்ந்தார் யார்? எவருமில்லை.

            இப் பிரபஞ்சத்தைப் படைத்தாய். அந்தப் பிரபஞ்சத்தில் அளவில் ஒரு சிறிதும் மாறாத பெரிய உருவம் கொண்ட பல கொடி உருளை வடிவிலான அண்டங்களை வானவெளியெங்கும் படைத்தாய்.  அந்த அண்டங்கள் அனைத்தும் சீராக எப்போதும் இயங்கச் செய்தாய். எல்லா அண்டங்களும் இயக்கத்தில் இருக்கும்படி சக்தியினைப் படைத்தாய். அம்மாவோ! காலத்தினைப் படைத்தாய்; மாற்றமில்லா திக்குகளைப் படைத்தாய், உலகம் பலவினிலும் தோன்றவும், வளர்ந்து பின் மறையும் பற்பல உயிர்களைப் படைத்து விட்டாய் நான்முகனே!

            மிகப் பெரிய சாதனைகள் இவைகளெல்லாம். உனது சாதனைகளை யெல்லாம் போற்றி பாராட்ட வல்லார் யார்? ஆனாலும் நின் படைப்பில் உள்ள அதிசயங்கள் அனைத்தினிலும் “இசை” எனும்கானம்ருதம் படைத்தது மிகவும் விந்தையடா! பூமி நெடுக பரந்து விரிந்திருக்கும் காடுகள், நீண்ட நெடியமுடிவில்லா வானம், கடல்கள் எல்லாம் விந்தை எனச் சொன்னால், பாட்டினைப் போல ஆச்சர்யம் பாரின் மீது எதுவும் இல்லையடா!

            பஞ்ச பூதங்கள் போல பல புதுமைகளைத் தந்தது விந்தையெனில், நாதங்கள் சேர்ந்து நயம்பட இனிமை தரும் இசைக்கு ஈடாகுமா? விரும்பி காணுகின்ற கோடி அதிசயங்களில் காற்றினால் உண்டாகும் “ஓசை” தரும் இன்பம் ஒப்பிலா இன்பமன்றோ?

            பஞ்சைக் குயில் அங்கே பாடிய இன்னிசை முடிந்தவுடன், மீண்டும் மனதில் வெறி கொண்டு நான் வாளைக் கையிலெடுத்துக் காளையின் மேல் வீசினேன். அந்த வாள் அதன் மேல் படுமுன்பாக காளை விரைந்து ஓடிவிட, வன்னக் குயிலும் பறந்து மறைந்தது, ஏனைய பறவைகள் எல்லாம் எங்கிருந்தோ மீண்டும் பறந்து வந்து மரக் கிளைகளில் அமர்ந்து ஓசை எழுப்ப, வீணில் நானும் அந்த மோசக் குயிலைத் தேடினேன், அகப்படவில்லை, வீடு திரும்பினேன். நடந்தவை அனைத்தையும் நினைத்துப் பார்க்கிறேன், எதுவும் விளங்கவில்லை.

            கண்களில் நீர் ததும்ப அந்த மோசக் குயில் என்னிடம் காதல் கதை சொல்லி நெஞ்சைக் கரைத்ததையும், பேதை நான் அங்கு அதன் மீது மையல் கொன்டதையும், எங்கள் இன்பக் கதையின் இடையில் தடையாக பறவைகள் எல்லாம் புகுந்திட்ட வியப்பினையும், எண்ணி என் மனதில் கமக் கனல் கனன்றது. சித்தம் கலங்கிடும்படியாக அந்த சொத்தைக் குரங்கும், தொழுமாடும் வந்து எனக்கு எதிரிகளாக வந்து சேர்ந்த கொடுமையை எண்ணினேன். என் மனத்தின் வேட்கை தீராமல் மனம் பித்துப் பிடித்தவன் போல் என் மனதை வாட்டுகின்ற நிலைமையை எண்ணியெண்ணிப் பார்த்தேன், எதுவும் விளங்கவில்லை. கண்கள் தானாக மூடிக் கொண்டன, ஆழ்ந்த துயிலில் ஆழ்ந்து விட்டேன்.

நான்காம் நாள்.

            அந்த வஞ்சனைக் குயில் என்னை நயவஞ்சனை புரிந்து காதல் கதை சொல்லி வரச்சொன்ன நான்காம் நாள், என் மதியிழந்து என் வீட்டின் மாடத்தில் மனம் திகைத்து என்ன செய்வதென்றறியாமல் இருந்தேன்.  ஏமாற்றும் அந்தக் குயில் எனக்குச் செய்த தாழ்வையெல்லாம் மீண்டும் மனதில் நினைவுபடுத்திக் கொண்டு வீற்றிருக்கும் நேரத்தில், என் கண்கள் இரண்டும் அந்தத் தோப்புப் பக்கம் திரும்பின.

            அப்போது வானத்தில் சிறு புள்ளியென ஒரு கருமைநிறப் பறவை பறந்து வரக் கண்டேன். அது நமது பொய்க் குயிலோ என்று திகைத்து நின்றேன். அது வெகு தூரத்தில் பறந்ததால் அதன் உருவம் சரியாகத் தெரியவில்லை. அதனைப் பார்த்த பிறகு அதைப் பிரியவும் மனமில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் மாடத்திலிருந்து இறங்கி வந்து வீதியில் வந்து நின்றேன். மேற்குத் திசையில் அந்த கரிய உருவம் ஜோதிமயமான வான்வெளியில் ஒரு கரும்புள்ளியாகத் தெரிந்தது, அது அந்த வெட்கம் இல்லாத நம் குயில்தானா என்பதை சற்று அருகில் சென்று பார்க்கலாமென்று விரைந்து சென்றேன்.  அங்கிருந்த பறவை நான் நடந்தால் தானும் பறந்து, நான் நின்றால் தானும் நின்று எனக்கு வழிகாட்டிக் கொண்டு செல்வது போல் வானத்தில் அது பறந்து செல்ல நானும் தொடர்ந்து நடந்து சென்றேன். இறுதியில் முன்பு நாம் பார்த்த அந்த மாஞ்சோலையை அடைந்த அந்தக் குயில் சோலையினுள் சென்று மறைந்தது.

            நானும் புத்தி கெட்டு அந்த சோலையினுள் சென்று பார்த்தபோது அந்தக் குயில் ஒரு மாமரக் கிளைதனிலே அமர்ந்து கொண்டு பொன்னிழை போன்ற இனிய குரலெடுத்து, முன்பு பாடிய அதே காதல் பாட்டைப் பாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அதனைக் கண்டு என் மனத்தில் கோபம் எழுந்தது. அதன் எதிரில் போய் “நீசக் குயிலே, நிலை அறியாப் பொய்மையே! அந்தக் குரங்கிடமும், கிழட்டு எருதினடமும் நீ பாடிய அதே இழிந்த புலைப் பாட்டை நான் கேட்க வேண்டுமென்பதற்காக என்னை இங்கே அழைத்து வந்தாயோ?” என்று கோபத்தில் பேசலுற்றேன்.

            அதனைக் கொன்றுவிடலாமா என்றுகூட நினைத்தேன். ஆனால், மனம் மீண்டும் இரங்கி அமைதியாய் இருந்து விட்டேன். அதற்குள் அந்தக் குயிலோ, தன் மனத்தை இரும்பாக்கிக் கொண்டு, கண்கள் நீர் சொரிய இசைப்பது போன்ற குரலில் பேசுகிறது.

            “ஐயனே! என் உயிருக்கு நிகரானவரே! ஏழையென்னை இவ்வுலகில் வாழ வைக்க விருப்பமோ, இல்லை ஒருவழியாய்க் கொன்றுவிட சித்தமோ, சொல்லுங்கள். அன்றில் பறவை தன் ஆண் துணை இல்லையேல் உயிர் வாழாதாம். சூரியன் சுட்டெரித்தால் மலர்களுக்கு மலர்ச்சி ஏது? தாயே தன் குழந்தையைக் கொல்வாளோ? கடவுளுக்குக் கோபம் வந்தால் உலகில் சிற்றுயிர்கள் என்னவாகும்? பிரியமானவரே, என் ராஜா! மேலோனே! உங்கள் மனத்தில் கோபம் கொண்டால் நான் மாய்ந்து போவேன். கொடுந்தீயில் வீழ்ந்து மடிவேன். மிருகங்களுக்கு இரையாவேன். என் மீது குற்றம் கண்டு ஆத்திரப் படுவதை நான் அறிவேன், அதற்காக உம் மீது குற்றம் சொலவில்லை, நான் குற்றமற்றவள்.

            “அந்த ஈனக் குரங்கையும், பொதிமாட்டையும் கண்டு அவற்றுடன் நான் காதல் விளையாட்டு விளையாடினேன் என்று சொல்கின்றீர்! என்ன சொல்வேன்! எப்படி இப்பழி சுமந்து வாழ்வேன்! என்ன செய்வேன்! ஐயனே! நீங்கள் சொல்வதை மறுத்துப் பேசுவது முறையில்லை; என்றாலும் என் மீது எந்த குற்றமும் இல்லை; இதைச் சொன்னால் யார் நம்பப் போகிறார்கள்? தங்கள் மீது பாரத்தைப் போட்டுவிட்டேன். பாழாய்ப் போன விதியே! நீ என்னைக் காப்பாற்றி என் வேந்தரோடு சேர்த்து வைத்தாலும் சரி; இல்லாவிட்டால் நான் சொன்னவகைகளை அவர் சிறிதும் நம்பாமல் என்னை தகாதவள் என்றெண்ணிப் புறக்கணித்துப் போனாலும், நான் அந்தக் கணமே தீயில் வீழ்ந்து உயிர்விட நேரிடும் நிலைமைக்குத் தள்ளப்படுவேன். விதியே விதியே என் செய்வேன்!”

குயில் தனது பூர்வ ஜன்மக் கதையை உரைத்தல்.

            “தேவனே! என் அன்பிற்குரியவரே, என் உயிரினும் மேலானவரே! தாங்கள் இங்கிருந்து போவதற்கு முன்பாக நான் சொல்வதைக் கேட்டு அருள்புரிவீர்! முன்பொரு நாள், நான் வானுயர்ந்த பொதியமலையின் அருகில் இருந்த சோலையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது ஆங்கோர் முனிவர் வந்தா, அவர் யாரோவொரு பெரியவர் என்று கருதி அவர் பாதங்களில் வீழ்ந்து பணிந்தேன். அவரும் என்னை வாழ்த்தி அருளினார்.

            அவரிடம் நான், “வேத முனிவர் அவர்களே, இவ்வுலகில் கீழ்மையான ஜென்மமாக பறவையாக நான் பிறந்து விட்டேன். என்போன்ற இதர குயில்களைப் போலல்லாமல், நான் சற்று வித்தியாசமாக பலரும் பேசுகின்ற பல்வேறு மொழிகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றலுடன் இருக்கின்றேன். எல்லோரு மொழிகளும் எனக்கு விளங்குகிறதே அது எப்படி? மனிதர்களைப் போல சிந்திக்கும் ஆற்றலும் இருப்பது எப்படி? அதை நான் அறியும் வண்ணம் தெளிவு படுத்த வேணும்” என்று சொல்லி அவரிடம் இறைஞ்சிக் கேட்டேன்.

            அதற்கு அந்த முனிவர் கூறுகிறார், “குயிலே, கேள்! உன்னுடைய முந்தைய பிறவியிலே வீரம் செறிந்த வேடர் குலத் தலைவன் வீரமுருகன் என்றும் பெயர் கொண்டவனின் மகளாக சேர வளநாட்டில் தென் புறத்தே ஓர் மலையில் நீ வந்து பிறந்து வளர்ந்தாய். இளமையும், பொலியும் அழகும் பெற்று சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நாடுகளுக்குள்ளே உனக்கு நிகரானவர் எவருமில்லை என்ற பெருமையுடன் நீ வளர்ந்தாய். அப்போது மற்றொரு வேடர்தலைவனின் மகன், மாடன் எனும் பெயருடையோன், உன் அழகில் வசப்பட்டுக் காதல் கொண்டு உன்னை மணக்க வேண்டுமென்று விரும்பியிருந்தான். தன் காதலைத் தெரிவிக்க அவன் என்ன செய்தான் தெரியுமா? நித்தமும் உனக்குப் பொன், மலர், புதுத்தேன் இவற்றைக் கொண்டு வந்து கொடுத்து, மனம் முழுதும் உன்னையே எண்ணிக் கொண்டு வாழ்ந்து வந்தான். அப்படி அவன் உன் நினைவாய் வாழ்ந்து வருகையிலே, தேமொழியே! நீயும் அவன் காதலை உணர்ந்து அவனை மாலையிட்டு மணப்பதாக வாக்களித்தாய். அப்படி நீ செய்தது ஆசையால் அல்ல, அவன் வருந்தித் திரிவதைக் காண சகிக்காமல் அப்படிச் சொன்னாய். பெண்ணே!  நீ ஒரு பேரழகி எனும் புகழ் தேசமெங்கும் பரவி தென் மலையின் பக்கம் பரந்த செல்வமும், வீரமும் உடைய ஒரு வேடர் தலைவனுக்கும் தெரிய வந்தது. அந்த மன்னனைக் கண்டு இந்த நாடே நடுங்கும், அத்தகைய வீரன். அவனுடைய மகனான நெட்டைக் குரங்கன் என்பவன், அவனுக்குப் பெண் கேட்டு அந்த மன்னன் உன்னைத் தன் மகனுக்குத் திருமணம் செய்திட விரும்புகிறேன் என்று சொல்லியனுப்பினான்.

            இந்தச் செய்தி கேட்ட உன் தந்தை, பெருமகிழ்ச்சியடைந்து, அதற்கு மகிழ்ச்சியோடு உடன்பட்டான்.  இருவரும் கலந்து பேசி பன்னிரெண்டு நாட்களில் முறைப்படி திருமணம் பண்ணிவைப்பதாக இருவரும் உறுதி செய்தனர்.

            இந்த செய்தியை, அதாவது அடுத்த பன்னிரெண்டு நாட்களில் அன்னியன் ஒருவன் உன்னை மணந்து கொண்டு அழைத்துப் போய்விடுவான் என்கிற செய்தி கேட்டு மாடன் மனம் கலங்கி உன்னிடம் ஏதேதோ உரைத்திட, நீயும் அவனிடத்தில் ஏற்பட்ட கருணையினால் “கோபம் தவிர்த்திடுவாய் மாடா! கட்டாயப்படுத்தப்பட்டு நான் நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டாட்டியாக ஆனாலும், முறைப்படி நான் ஆங்கு அவர் காவலில் போய் வாழ்ந்தாலும், மூன்றே மாதத்தில் ஏதேனும் ரகசியச் செயல்கள் சிலவற்றைச் செய்து அங்கு பேதம் விளைவித்துப் பின்னர் இங்கே வந்துவிடுவேன்.  அவன் கட்டிய தாலியை உன்னிடம் கொடுத்து, நாலைந்து மாதத்தி, மீன்டும் உன்னையே நாயகனாய்ப் பெற்றிடுவேன். உன்னிடம் சொன்ன சொல் தவறுவேனோ? என்னை நம்பு, நம்பிடு மாடப்பா!” என்று சொன்னாய்.

            இது காதல் கொண்டதால் அல்ல! அவன் மீது கொண்ட கருணையினால் அப்படிச் சொன்னாய். (மாதரசி! வேடன் மகளான உனக்கு முற்பிறப்பில் சின்னக் குயிலி என்பது உன் பெயர்)

            அதன் பின் சில நாட்கள் உருண்டோடின. பெண் குயிலான நீயும் உன் தோழியர்களும் ஒரு மாலை நேரத்தில் மின்னல் கொடிகளைப் போல் காட்டின் இடையே மகிழ்வோடு ஆடிக் கொண்டிருந்தீர்கள். அப்போது சேரநாட்டரசனின் மைந்தன் வேட்டையாடவென்று கானகத்துள் வந்தான். அங்கு அவன் ஒரு மானைக் கண்டு அதனைத் துரத்திக் கொண்டு தனியனாய் வந்த சமயம், நீயும் உன் தொழிகளும் கூடிநின்று விளையாடுவதை அவன் கண்டுவிட்டான். உன்னைக் கண்டதும் அவனுக்கு உன் மேல் மையல் உண்டாகிவிட்டது. அவன் ஆசை கரை கடந்து போய் உன்னைத் தனக்குரியவளாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று எண்ணம் கொண்டான். இளம்பெண்ணான நீயும் அவனைக் கண்டவுடன் அவன் மீது மோகம் கொண்டு விட்டாய். உன்னை அவன் கூர்ந்து கவனித்தான். நீயும் அவனை அன்போடு நோக்கினாய். அப்படி உங்கள் இருவரின் பார்வைகளும் சந்தித்த போது உங்கள் உயிரும் ஒன்றாய்க் கலந்தது போல் உணர்ந்தீர்கள். உன் தோழிகள் இளவரசனைக் கண்டதும் அரசகுமாரனிடமிருந்து அஞ்சி ஓடிப்போய் மறைந்து கொண்டனர்.

            அந்த இளவரசன் தனித்து நிற்கும் உன்னிடம் வந்து நான் வஞ்சி தலைவனின் மகன் நான் என்று அறிமுகம் செய்துகொண்டான். உன்னை “வேடர் தலைமகளே! அற்புத அழகுடையாய்! ஆண் மகனாய் நான் பிறந்ததன் பயனை இன்று நான் பெற்றேன். உன்னைக் கண்டதுமே உன் மீது நான் அழியாத காதல் கொண்டேன். என்று சொல்ல, உள்ளத்தில் பொங்கி எழும் காதலை மனத்துள் அடக்கிக் கொண்டு நீ சொன்னாய், “ஐயனே! உங்கள் அரண்மனையில் ஐநூறு பெண்கள் இருக்கிறார்களாம். அவர்களெல்லாம் அழகிற் சிறந்தவர்களாம். கல்வி கற்றுத் தேர்ந்தவராம். கல்லும் உருக இனிமாய்ப் பாடுவார்களாம். பல்விதமான கூத்து வகைகளைக் கற்று திறமையுடன் ஆட வல்லவர்களாம். அப்படிப்பட்டவர்களில் எவரையாவது மணந்து அன்போடு வாழுங்கள். வேட்டுவரின் மகளான் நான் மன்னவனை வேண்டேன். காட்டில் அரசு செய்யும் சிங்கம் குழி முயலின் மீது ஆசை கொள்ளலாமோ? வேற்றிகளைப் போரில் ஈட்டும் மூவேந்தர்கள் வேடர்களுக்குள்ளா பெண் எடுப்பார்?

            முறையாக திருமணம் செய்துகொண்டு பத்தினியாய் வாழ்வதன்றி, பார் வேந்தர் என்றாலும் அவர்களுக்கு நாங்கள் விலைமகளாகக் குடி போவதில்லை. தங்கள் பொன்னான பாதங்களைப் பணிந்து சொல்கிறேன், போய் வாருங்கள். என் தோழிகள் என்னைப் பிரிந்து எங்கோ போய்விட்டார்களே, இப்போது என்ன செய்வேன்? என்று நீ மனம் கலங்கி நிற்கும் போது, இளவரசன் உன் காதலுணர்வை உன் கண்களின் குறிப்பினை அறிந்து, உன் அருகில் வந்து நின்று, ‘பளிச்’சென்று உன் கன்னம் சிவக்க முத்தமிட்டான். கோபம் கொண்டவளைப் போல் நீ விலகிச் சென்றாய், காமவுணர்வு கொண்டார்க்கு நெறிமுறைகள் ஏது? அவன் தாவி உன்னைப் பிடித்துத் தன் மார்போடு தழுவிக் கொண்டு, சொல்கிறான். “உன்னையன்றி எனக்கு வேறோர் பெண் இந்த நிலத்திலுண்டோ? பொன்னே, ஒளிர்மணியே, புத்தமுதே, இன்பமே, பெண்ணே நீயே என் மனையாட்டி, நீயே அரசானி, நீயே என் துணை, எனக்கு நீதான் குலதெய்வம், உன்னையன்றி வேறொரு பெண்ணை இப்பிறப்பில் வீணாக நினைப்பேனோ? என் மீது சந்தேகம் வேண்டாம். இப்போதே உன் வீட்டிற்குச் செல்வோம், உன் வீட்டில் இருப்போர்க்கெல்லாம் என் நிலைமையை எடுத்துரைக்கிறேன். வேத முறைப்படி உன்னை நான் விவாகம் செய்து கொள்கிறேன், என் மாதரசே” என்று வலக்கையைத் தட்டி வாக்களித்தான்.

            நீ உள்ளம் பூரித்தாய், மகிழ்ச்சி கொண்டாய்.  பேரலைபோல் வந்த மகிழ்ச்சியில் மூழ்கி வெட்கத்தை நீக்கினாய், இவ்வுலக நினைவுகளே இல்லாமல், எல்லையில்லா இன்பக் கனவினிலே உறைந்துவிட்டாய். மன்னவனின் திண் தோளை ஆசையோடு கட்டித் தழுவிக் கொண்டு, அவன் இதழில் தேன்பருக சிந்தை கொண்டாய். மன்னன் மகனோ தேனில் விழுந்த ஈயினைப் போல் விந்தைமிகு காந்தத்தால் இழுக்கப்படும் இரும்பினைப் போல் ஆசையோடு உன்னை ஆறத் தழுவி, ஆங்கு உனது கோவை இதழ் பருகிக் கொண்டிருக்கும் நேரத்திலே, அப்போதுதான் சற்று முன்பு ஊரிலிருந்து வந்து இறங்கியிருந்த நெட்டைக் குரங்கன், நீ வீட்டிலிருந்து தோழியர்களுடன் காட்டினில் விளையாடச் சென்றிருக்கும் செய்தி கேட்டு, மகிழ்ச்சியோடு, உன்னை அங்கு காண ஆர்வத்தோடு ஓடி வந்தான். அங்கே வந்து நின்ற அவன் கண்ட காட்சி  மன்னவன் உன்னை உதட்டோடு உதடு வைத்து தேன்பருகும் காட்சிதனைக் கண்டு விட்டான்.

            பட்டப் பகலிலே பாவி மகள் செய்திருக்கும் வேலையைப் பார்! இன்னும் கண்ணாலும் கூட கட்டவில்லை, அதற்குள் அனைத்தையும் மண்ணாக்கி விட்டாள். எனக்கு மானம் போய்விட்டது. நிச்சய தாம்பூலம் நடந்து முடிந்திருந்த சமயத்திலே பிச்சைச் சிறுக்கி செய்த வேலையைப் பார்த்தாயோ! என்று உள்ளத்தில் பற்றி எரியும் நெருப்போடு மனம் கலங்கி நின்றுவிட்டான் நெட்டைக் குரங்கன்.

            மாப்பிள்ளை ஊருக்கு வந்திருப்பதையும், பெண் குயிலி தன் தோழிகளுடன் தோப்பினிலே விளையாடிக் கொண்டிருக்கும் செய்தி கேட்டு நெட்டைக் குரங்கனங்கே ஓடியிருக்கும் செய்தியையும் யாரோ போய் மாடனிடம் சொல்லிவிட்டார்.  அந்த மாடனோ, நாலுகால் பாய்ச்சலில் உடல் வியர்க்க, கண்கள் தீப்பந்தமாக எரிய அங்கு வந்து நின்றான். அப்படி மாடன் வந்து அங்கு கோபமாய் நிற்பதை நெட்டைக் குரங்கனும் கவனிக்கவில்லை. கோபத்தில் ஓடிவந்து நிற்கும் மாடனுக்கோ, அங்கே ஓரிடத்தில் நெட்டைக் குரங்கன் நிற்பதையும் கவனிக்கவில்லை. ஆனால் அங்கே அன்னியன் ஒருவன் மீது பெண் குயிலி கட்டி அணைத்துக்கொண்டு சுற்றிலும் யாரும் இருக்கிறார்களா என்பதைக் கூட கவனிக்காமல் மனம் களிகொண்டு நிற்கிறாள். அந்தக் காட்சியை மாடன் பார்த்தான், நெட்டைக் குரங்கனும் அவ்விருவரின் நிலைமையைப் பார்த்தான்.

            சேர ராஜகுமாரனும், கன்னிகையான நீயும் அங்கு கட்டியணைத்து தேவசுகம் கண்டு கொண்டு கண்விழிகள் திறக்காமல் ஆவிகள் கலந்த நிலையில் அமுத சுகந்தனில் நிலைத்திருப்பதை நான்கு விழிகள் அதனைக் கண்டு விட்டு, தீப்பொறி பறக்க நின்றன. மாடன் தன்னுடைய வாளை உருவி இளவரசனைக் கொன்றிட ஓடிவந்தான்.      நெட்டைக் குரங்கனும் தன் வாளை ஓங்கிக் கொண்டு பாய்ந்தோடி வந்தான்.  இளவரசன் முதுகினில் இரண்டு வெட்டுகள் விழுந்தன. அவன் சட்டென்று திரும்பித் தன் வாளை உருவி இரண்டு வீச்சினில் மாடன், குரங்கன் இருவரையும் வீழ்த்தினான். விழுந்த அவ்விருவரும் பேச்சு மூச்சின்றி அங்கே பிணமாய் விழுந்து கிடந்தார். ராஜகுமாரனும் வெட்டுப்பட்டதால் மயங்கி கீழே சாய்ந்தான். அதன் பிறகு நீயும் பெரும் துயரம் கொண்டு அவனை நீயும் உன் மடியில் வாரியெடுத்து வைத்துக் கொண்டு கண்ணீர் சொரிய புலம்பிக் கொண்டு நின்றாய். அப்போது கண் விழித்த இளவரசன் உன்னிடம் “பெண்ணே! இனி நான் பிழைக்க மாட்டேன். ஒருசில கணத்தில் என் உயிர் போய்விடும். னின் அழுது பயனில்லை.  இறப்பதில் துன்பம் எதுவும் இல்லை பெண்ணே! மறுபடியும் நாம் இந்த மண்ணிலே பிறந்திடுவோம். அப்போது நான் உன்னைக் கண்டு மோகம் கொள்வேன். உன்னைக் கல்யாணம் செய்துகொண்டு இனிதே வாழ்வேன். மறுபடியும் பிறவி உண்டு, இன்பமும் உண்டு. இனி வரும் பிறப்புகளிலும் உன்னோடு இனிதே வாழ்வேன் என்று சொல்லிக்கொண்டே கண்களை மூடியபடி இனிய புன்னகையுடன் தன் உயிரை நீங்கினான்.

            மாடன் செய்த புன்மைச் செயலால் நீ ஒரு பறவை உருவம் பெற்று வாழ்கிறாய். உன் மனம் கவர்ந்த மன்னவனோ தோண்டை வளநாட்டில் சமுத்திரக் கரையில் அமைந்த ஒரு பட்டினத்தில் மனிதனாய்ப் பிறந்து வளர்கிறான். அவன் உன்னை ஒரு சோலையில் காண்பான், அப்போது மனம் மகிழ்ந்து நீ பாடும் பாட்டினை அவன் கேட்பான், பழைய வினைப் பயன்களால் அவன் உன் மீது மீண்டும் காதல் கொள்வான்.” என்று அந்த மாமுனிவர் சொன்னார்.

            நான் அவரிடம் “சாமி, நானோ குயில் உருவம் கொண்டிருக்கிறேன். அந்த அரசகுமாரனோ மனித உருவம் கொண்டு இருக்கிறார். எங்கள் உள்ளத்துள் காதல் இருந்தாலும் கடிமணம் எப்படி நடக்கும். சாகும் தருவாயில் ராஜகுமாரன் சொல்லிய சொல் பொய்யாய் போய்விடாதா?” என்று சொன்னேன்.

            புன்னைகை புரிந்த வண்ணம் முனிவர் பதிலுரைத்தார் “அடி பேதைப் பெண்ணே! இந்தப் பிறவியிலும் நீயோ விந்தியமலைச் சாரலிலே ஒரு வேடனின் மகளாகத்தான் பிறந்தாய். கர்ம வினைகளினால் மாடன், நெட்டைக்குரங்கன் இருவரும் பேயாய் மாறி காடு, மலை இங்கெல்லாம் சுற்றி அலைகின்றார். அவர்கள் அப்படி காடு மலையெல்லாம் சுற்றி வருகையில் உன்னை அங்கே பார்த்து விட்டார்கள். இந்தப் பிறவியில் நீயும் முன்னைப் போலவே இளவரசனையே மணம் செய்து கொண்டு விடுவாய் என்று எண்ணி உன்னைக் குயில் உருவாக்கி, நீ போகின்ற பக்கங்களில் எல்லாம் உன்னுடனே சுற்றுகின்றார் என்பது உனக்குத் தெரியவில்லையா?” என்றார்.

            அதற்கு நான், “அட விதியே! இறந்தவர்கள், உயிரோடு வாழ்கின்றவர்களைத் துன்புறுத்தல் நீதியா? நியாயமா? பேய்கள் எனை இப்படித் துன்புறுத்தி, பிறப்பு மாறினாலும் துன்பம் இழைத்து வருமானால், நான் என் காதலனைக் காணுகின்ற போது கோபமடைந்து ஏதேனும் தீங்கு இழைத்தால் என் செய்வேன்? தேவரே, இதற்கு வேறு ஏதேனும் மாற்று இல்லையோ?” என்று மனம் வருந்தி நான் கேட்டேன். அதற்கு மாமுனிவர் சொன்னார், “பெண் குயிலே, தொண்டை நாட்டிலே, சோலையில் அரசகுமாரன் உன்னைக் கண்டு, மனம் மகிழ்ந்து காதல் கொண்டு, ஆசை மிகுதியுற்று நிற்கையில், பேய்கள் இரண்டும் மோசமான மாயச் செயல்களைச் செய்து, பல பொய் தோற்றங்களைக் காட்டி, மன்னன் மகனை சந்தேகம் கொள்ளச் செய்து விடும். அப்போது அவனும் உன்னை மோசக்காரி என்று எண்ணி மனம் நொந்து உன் மீது கடும் சினம் கொண்டு உன்னை நிராகரிப்பதென்று எண்ணிவிடுவான். பின்னர் விளைவனவெல்லாம் நீயே பின்னால் தெரிந்து கொள்வாய், எனக்கு சந்தியாவந்தனம் செய்யும் நேரமாகிவிட்டது” என்று சொல்லிவிட்டு விரைந்து சென்று மறைந்தார் மாமுனிவர்.

            “அன்பரே! நான் எதையும் மறைத்தோ, மாற்றியோ சொல்லவில்லை. ஐயோ! உங்கள் திருவுள்ளத்தில் இதனை எப்படி கொள்வீரோ தெரியாது. ஆரியரே! காதல் அருள் புரியவேண்டும். காதல் இல்லையெனில் சாதலே வழி, அதனையும் தமது கையால் செய்திடுவீர்” என்று குயிலும் எனது கையில் வந்து வீழ்ந்தது.

            பெண் என்றால் கொல்ல மனம் வருமா? பெண் என்றால் பேயும் இரங்காதோ? பேய்கள் இரக்கமில்லாமல் மாயங்கள் செய்தால் அதனை மானுடரும் கொள்வது சரியாகுமா? காதலில் சந்தேகம் தோன்றிவிட்டால், அந்தக் காதல்தான் நிலைக்குமா? மாதர் தன் மனம் திறந்து காதலைச் சொல்லும்போது மனம் இளகாமல் எவரும் இருப்பாரோ?அன்புடன் நானும் அந்த அருங்குயிலைக் கையிலே எடுத்து என் முன்வைத்துப் பார்த்த பின் உள்ளத்தில் பொங்கி வரும் இன்பவெறி கொண்டு அதனை முத்தமிட்டேன். அங்கே, என்ன அதிசயம், அந்த கோகிலத்தைக் காணவில்லை.

            சொல்லமுடியாத விந்தையடா! விந்தையடா, ஆசைக் கடலின் அமுதடா! அற்புதத்தின் தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா! பெண் ஒருத்தி அங்கு பேருவகை கொண்டு கண்ணை எடுக்காமல் என்னைக் கணப் பொழுது நோக்கினாள், சற்றே வெட்கி தலை குனிந்தாள், சாமீ! இவள் அழகை எப்படி நான் தமிழில் இசைத்திடுவேன். கண்கள் இரண்டும் ஆளை விழுங்கிடும் அதிசயக் காட்சியை நான் கூறுவேனோ! மறுபடி விழியில் மிதக்கும் கவிதையெல்லாம் சொல்லால் சொல்ல முடியுமா? தூய்மையான முத்தின் ஒளியைப் போல பல்லில் கனி இதழிற் பாய்ந்த நிலவினை நான் என்றைக்கும் மறக்க முடியுமோ? இந்த மண்ணின் மேல் நிற்கும் ஒரு மின்னல் கொடிபோன்ற ஒளிர்மணிப் பெண்ணரசின் மேனி நலத்தினையும், வெட்டினையும், கட்டினையும் தேனில் இனியாள் திருத்த நிலையினையும் மற்றவர்களுக்குச் சொல்வேன். கவிதை எனும் கனியைப் பிழிந்து அதில் ஊறிவரும் சாற்றினில் பண், கூத்து எனும் இவற்றின் சாரமெல்லாம் ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான் கலந்து காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால், மாது அவளின் மேனி வகுத்தான் பிரம்மன் என்பேன். பெண்ணவளைக் கண்டு பெருங் களிகொண்டு ஆங்ஙனே அருகில் ஓடித் தழுவி நறுங்கள் இதழினையே முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெரு மயக்கில் சித்தம் மயங்கிச் சில போது இருந்த பின்னே பக்கத்தில் இருந்த பாவையுடன், சோலை முதலான அனைத்தும் மறைந்து போகவும், நான் “ஓஹோ” எனக் கதறி வீழ்ந்தேன்.

            பிறகு கண் திறந்து பார்க்கையில் என்னைச் சூழ்ந்திருந்த பழைய சுவடிகள், எழுதுகோல், பத்திரிகைக் கூட்டம், பழம் பாய், வரிசைகள் எல்லாம் அப்படியே இருக்க, நாம் வீட்டில் அல்லவா இருக்கிறோம் என உணர்ந்தேன்.

            சோலை – குயில் – காதல், என்று சொன்ன அத்தனையும் மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தில் தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சி என்று கண்டு கொண்டேன்.

            ஆன்ற தமிழ்ப் புலவீர்!  இதெல்லாம் கற்பனைதான் என்றாலும், இதில் வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்க யாதானும் சற்றே இடம் இருந்தால் கூறிரோ?

                                    (குயில் பாட்டு நிறைவு பெறுகிறது)

 

 

 

           

           

 

           

 

           

No comments: