லக்ஷ்மி ராமாயணம்
(அயோத்யா காண்டம்
தொடர்ச்சி)
3. கைகேயி சூழ்வினைப் படலம்
முடிசூட்டு
நிகழ்ச்சியின் முன்னேற்பாடுகளை
முறையாக முடித்து
விட்ட மாமன்னன்,
இன்சொல் பேசிடும்
கைகேயி மாளிகையுள்
பின்னிரவு நேரத்தில்
புன்னகையுடன் நுழைந்தார். 37
பஞ்சணை துறந்தவள்
படுத்திருந்த நிலைகண்டு,
நெஞ்சம் பதறிய
தசரதனும் – சிறு
மானைத்தன் துதிக்கையால்
தூக்கிடும் பெரிய
யானையைப் போலே
அணைத் தெடுத்தார். 38
அணைத்த கைகளை
அப்புறப்படுத்தியே
துவண்டு விழுந்தாள்
மின்னற்கொடியாள்.
துணுக்குற்ற
தசரதன், துரிதமாய் வினவினான்,
“நிகழ்ந்தது
என்ன? உனை இகழ்ந்தவர் யாரெ”ன? 39
கண்ணீர் பெருகிய
நெடுங்கண்ணுடனவள்,
‘என்பால் கருணை
உளதென்றால் – நீ
முன்னம் அருளிய
வரங்கள் இரண்டையும்
இன்றே பரிந்து
அளித்திடு’ யென்றாள். 40
மன்னன் வாக்களித்தல்
கள்ளம் கொஞ்சமும்
இல்லா மன்னனும்,
‘வள்ளலாம்,
நும்மகன் இராமன்மேல் ஆணையுடன்,
உள்ளமிசைந்திட
அளிப்பேன் வரங்களை!’ என்ன,
‘இமையோர் சான்றாய்
ஈன்ற வரம் ஈதி! யென்றவள்- 41
வரமொன்றால்
தன்சேய் பரதனுக்கு நாடென்றாள்!
வரமிரண்டால்
சீதையின் கணவனுக்கு வனமென்றாள்.
வேகமிழந்த வேழம்
போலே தசரதனும்,
தேகமதிர, நெடிது
வீழ்ந்தான் நிலம் மீதே! 42
உலர்ந்து வெடித்த
தவன் நாவு!
புலர்ந்து வாடிய
தவன் உள்ளம்!
புலனைந்தும்
பொறி கலங்கியது.
புலம்பிப் புழுங்கினர்
தேவர்கள். 43
மன்னரது வேண்டுகோள்
‘நின்மகன் பரதன்
இவ்வரசு கொள்ளான்!
அன்னான் கொள்ளினும்
இந்நிலம் நள்ளாது.
வனத்திடை இராமனை
மூவுலகார் கொள்ளார்.
மண்ணை நீகொள்!
மற்றது மற’வென்றான். 44
‘’தந்த வரங்களைத்
தவிரென்பது,
தவறன்றி, அறமாமோ
உரை’ கைகேயி உரத்துக் கூறிட,
இடிதாக்கிய
மால்வரை போலே தசரதன்,
பொடிந்து உதிர்ந்தான்
தரைமேலே! 45
கைகேயி கூற்று
பசையற்ற கைகேயி,
திசையினின்று வழுவாமல்
‘இசைந்திடுக
இருவரம் ஈந்தேனென!
மசியாவிடில்
உயிர் மாய்வேன் நானெ’ன்றதும்,
‘ஈந்தேன், ஈந்தேன்’
யென்றபடி மூர்ச்சித்தான் 46
சூரியோதயம்
பொழுது புலர்ந்து,
பறவைகள் ஒலித்ததும்,
அமிழ்து உண்டிட
குமிழும் அமரர் போல்,
அரச வெள்ளம்
நகரமெங்கும் பெருகிவர
பாரகர்கள் வந்தடைந்தார்
வேத மோத! 47
மண்டபமடைந்த
வசிட்ட முனிவரும்,
மனமகிழ்வுடனே
மகுடம் சூட்டிட,
மங்கலப் பொருட்களைச்
சேகரித்தார். – பின்
மன்னனை யழைக்க
சுமித்ரனைப் பணித்தார். 48
வேந்தனை எங்குமே
கண்டிலா சுமித்ரன்,
தாதியை வினவியே
விவர மறிந்தான் - பின்
கேகயி மாளிகை
யடைந்ததும், அவளோ
‘இராமனை இவ்விடம்
கொணரெ’ன்றாள். 49
அன்னை அழைத்ததும்,
அரசர்கள் தொடர்ந்திட,
அரண்மனைக்குள்ளே
நுழைந்தான் இராகவன்
தேரினில் ஏறியே
குமரன் சென்றதை,
குழுமிய மக்களும்,
மகிழ்ந்து பார்த்தனர்.
50
.
தாயை வணங்கிய
தமையனின் எதிரில்,
தனியளாய் வந்தாள்
சிற்றன்னை!
நாயகன் ஆணை
உனக்கென்றே
நயந்தா ளிரு
வரங்களைப் பின்வருமாறு! 51
“ஆழிசூழ் உலகெலாம்
பரதனே ஆளவேண்டும் - நீ
தாழிரு சடைகளுடன்
அருந்தவங்கள் புரிந்தவண்ணம்
புழுதியுடை
கானகத்தில் புண்ணியத் துறைகளாடி,
ஏழிரு ஆண்டின்பின்
வாவென்றான் அரசனெ”ன்றாள். 52
‘மன்னவன் ஆணை’
தானென இல்லை!
நும் பணி ஏற்றலும்
என் கடனே!
பின்னவன் பெற்றிடும்
அரசென்றால் – அதை
எண்ணிட என்மனம்
நிறைகின்றதே! 53
இருளுடை உலகினைத்
தாங்கலி லிருந்து
அவிழ்ந்ததைப்
போலே உணர்கின்றேன்!
நும்பணி தலைமேல்
கொள்ளு கின்றேன்.
இப்போதே வனம்
செல்வேன்" என்றான் இராமன். 54
நகர் நீங்கு படலம்
வெண்கொற்றக்
குடை தாங்கி, விண்ணதிர
பொன்மகுடம்
தரித்தபடி தனை தரிசிக்க
அருமைந்தன்
வருவானென கோசலைத்தாய்
அகமகிழ முகம்மலர்ந்து
அமர்ந்திருந்தாள் 55
இழைக்கின்ற
விதி முன்னே சென்றிட
அறம் வருந்திப்
பின்தொடர்ந்து வந்திட,
குழைகின்ற கவரியின்றி
கொற்றமின்றித்,
தனியனாய் மைந்தன்வர
பரிதவித்து வினவினாள். 56
கரம்குவித்த
ராமன், “நின் காதல் திருமகன்
பரதனேயின்று
மாமுடிதரிக்க உள்ளான்’ யென்றதும்,
“நன்றே நீ நானிலம்
நல்கிய தென்றும்,
ஒன்றி உடன்பட்டுப்
பல்லாண்டு வாழெ”ன்றாள். 57
‘மரவுரி தரித்து
நான் மாதவத்தோருடன்,
காட்டிடை வாழ்ந்து
ஏழிரு ஆண்டின்பின்
மீண்டு வருதலே
அரசகட்டளை’ இராமன் சொன்னதும்,
ஏங்கி இளைத்தாள்;
மனம் வீங்கித் தவித்தாள். 58
“தஞ்சமாக இப்புவியைத்
தாங்கிடென அழைத்தபின்,
வஞ்சனையாய்
உனைமட்டும் வனத்திடையே அனுப்புதல்,
நஞ்சன்றி வேறென்ன?
அருமைந்தே! – இனி
அஞ்சும் என்னுயிர்
தரியாதே!’ புலம்பினாள். 59
கோசலையை இராமன் தேற்றுதல்
‘அன்னையே!
ஐம் பூதங்களும்
அழிந்து போயினும்,
அண்ணலின் ஏவல்
மறுக்க லாகுமோ?
சிறந்த எந்தம்பி
அரசுரிமை ஏற்கட்டும்!
குறித்த நேரத்தில்
திரும்பி நான் வருவேன்.: 60
“என்னையும்
உன்னோடு கொண்டனை” அன்னை கூற,
“என்னை நீங்கி
துயர் கடல் மூழ்கும்
மன்னர் மன்னனைத்
தேற்றிடு நீ” யென்றவன்
சுமித்திரை
அன்னையின் மாளிகை யடைந்தான். 61
தசரதனைக் கண்ட கோசலையின் நிலை
‘நாடு காத்தல்
பரதனது ஆகட்டும்! - இராமன்
காடு செல்லல்
தடைபட வேண்டும்’ என
நாதனை வேண்டிட,
கோசலை சென்றாள். – அங்கே
மூர்ச்சித்திருந்த
மன்னனின் மார்பினில் மூர்ச்சித்தாள்.
62
தெளிவு பெற்றதும்
கலங்கிப் புலம்பினாள்.
ஒளிகுன்றி நினைவின்றி
மன்னன் கிடத்தலின்,
“இராமா, இராமா’
வென அழுகுரலில் உரத்தழைத்தாள்.
வாராய் மன்னன்தன்மை
காண” வென ஓலமிட்டாள். 63
வசிட்ட முனிவர் வருகை
மங்கலங்கள்
நிகழவுள்ள அந்த வேளையில்
அமங்கலமாய்
அழும் ஓசை காதில் அறைந்ததும்,
அரசர்களும்
முனிவர்களும் அதிர்ச்சியுற்றனர்.
விபரமறிய வசிட்டமுனி
விரைந்து வந்தனர். 64
கைகேயி நிகழ்ந்தவை கூறுதல்
மயங்கித் தளர்ந்த
கோசலையால்
விளக்கிச் சொல்லல்
ஆகா ததனால்
மயங்கிய மாமன்னன்
நிலையினைப் பற்றி,
கேகயர்கோன்
மகள் நோக்கிக் கோரினார். 65
தன்னால் நிகழ்ந்த தனைத்து நிகழ்வையும்
தானே தெளிவாய்
தெரிவித் தாள்;
தன்னுணர் வெய்திய
தசரத மன்னனும்,
‘இராமா.. இராமா’
எனப் புகன்றான். 66
முனிவன் கைகேயியை வேண்டுதல்
‘மனுவழி சென்றிடும் குலப்பெண்ணே! – நின்
புதல்வனுக்
கரசினைப் பெற்றுக்கொள்.
வனத்திடை இராமனை
அனுப்புதல் தவிர்த்து
ஏனையோர் உயிரை
காத்துச் செல்’ இறைஞ்சினார். 67
அவளோ..
கொண்ட சொல்
மாறாது வீம்பாயிருந்தாள்.
நயந்து கேட்டவர்,
கடிந்து கொண்டார்.
‘மன்னரும்,
பிறரும் மாண்டு போயிடின்,
உன்னைத்தான்
உலகார் இகழ்வா’ரென்றார். 68
No comments:
Post a Comment