பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, February 18, 2020

லக்ஷ்மி ராமாயணம் -- பாகம் 4


லக்ஷ்மி ராமாயணம் -- பாகம் 4

                                  இராமன் கூற்று

‘அன்புடன் கொணர்ந்த பொருட்களெல்லாம்
அமுதினும் அரிதே என்றறிவேன்.
எமையொத்த முனிவர்க்கும் உரியன. - அவற்றை
யாமும் இனிதின் உண்டனம்’ என்றான். – பின்           109

‘பொங்கிடும் கங்கையை யாம் நாளைப்
பொழுதினில் கடந்திட இருப்பதினால்
இரவினைக் கழித்திடு நின் கிளையோடு.
விடியலில் வந்திடு படகோடு’ யென்றான்.                   110

‘இங்ஙனம் உன்னைப் பார்த்தபின் கண்ணை
எவ்விதம் நானும் அகற்றிடுவேன்?’ என்ன
‘இருத்தி’யென்றதும் ‘துடி’யுடன் குகனும்
துடிப்புடன் காவல் இருக்கலானான்.                           111

நாணலில் துயின்றனர் நாயகன், நாயகி
நற்காவலிலிருந்தான் இமைத்திடா தம்பி.
கதிரவன் உதித்தான் கதிர்களைப் பரப்பி,
கமலமும் விரிந்தது மனதினால் விரும்பி.                      112

‘கொணருதி நாவாய் சடுதியில்’ என்றான்
‘இனிதிரு எம்மொடு’ குகன் சொன்னான்.
‘மீண்டு வருகையில் இருப்போம்’ என்றே,
ஏறினர் மூவரும் ஓடத்தின் மீதே!                                  113

கரையேறினர் மூவரும்! கண்கலங்கினான் குகனும்!
‘பிரியிலேன் நானும்மை, உடனிருந்து உதவிடணும்’ என்றான்
‘அன்புள நால்வர் இன்று ஐவரானோம் – இனிமேல்
உன்கிளை, என்கிளை, இனிது கா’வென்றான் இராமன். 114

                        வனம் புகு படலம்

சிங்கமும், களிரும் குட்டியும், கன்றுமாய்
அங்கங்கே நடைபயின்று அலைந்திருந்த
அடர்காட்டின் இடை புகுந்த மூவரும்
அடைந்தனராம் பரத்வா சாஸ்ரமம்.                            115

அங்கே
சிரமப் பரிகாரம் செய்த பின்னர்,
சித்திர கூடம் புறப்பட்டனர்.
எதிர்ப்பட்ட பாலையொன்று மருதமாகி,
குளிரூட்டி மகிழ்வித்தது சூடுபோக்கி.                         116

சித்திரக் கூடத்தை அடைந்தனர் மூவரும்.
கண்களை மூடியே கடவுளை வேண்டினர்.
இளவல் அமைத்தான் பர்ணசாலையை! – அண்ணன்
உள்ளம் உருகிட அணைத்தான் தம்பியை!                 117

‘மன்னவன் ஆணையைப் பேணிடும் பொருட்டு,
மரவுரி தரித்து நான் கானகம் வந்தேன்.
இடருனக் கிழைத்தது சரியல்ல!’ – நீ
இன்னல்கள் சகிப்பது முறையுமல்ல!’ கலங்கினான்.  118

‘ஐயனே!
நின் தொண்டு இன்பமே தந்திடும் எனக்கு.
துன்பம் தருவதும் ஒன்றுணடு - நீ
முன்னம் பிறந்தவன் என்பதினாலே
மண்ணைத் துறந்திட நேர்ந்ததே!’ யென்றான்.            119

அணைத்துத் தேற்றினான் தம்பியை!
அமர்ந்து நேற்றான் நோன்பினை! – அங்கோ
தலைவனிழந்த அயோத்தி மாநகரம்
தாயிழந்த கன்றுபோல் கதறி யழுதது.                         120

                         பள்ளிப்படை படலம்

‘அவசரக் காரியம் இயற்றுதற் கெனவே
அவசியம் புறப்பட்டு வருக’ வென்றே
முத்திரை பதித்த ஓலையைத் தூதரும்
பத்திரமாகவே பரதனுக் கீந்தனர்.                               121


தொழுதான் பரதன் தம் பாட்டனைத்தாம்
‘எழுக சேனை’ என்றுரைத்தான்.
தழுவும் சத்ருக்ன தம்பியும் தானுமாய்
பொழுதுடன் தேரினில் புறப்பட்டான்.                       122
                  
                    கோசலத்தின் அவல நிலை

பொலிவிழந்த கோசலத்தைக் கண்டதுமே
நலிவுற்ற பரதனோ கலக்க முற்றான்.
பெருந்தீங்கு நிகழ்ந்ததோவென அச்சத்துடன்
பெருந்துயரின் பிடியினிலே அகப்பட்டான்.               123

அரண்மனை யடைந்ததும் விரைந்தான் தந்தையிடம்.
நல்லிடம் எங்கினும் கண்டிலன்; குழம்பினான்.
கேகயி அன்னை அணைத்தாள் தன் மகனை.
கேகய நாட்டின் நலத்தை வினவினாள்.                     124

சுருங்கச் சொன்னான் ‘நலமென்று’
அறிய விழைந்தான் ‘கோ எங்கென்று?’
‘வானகம் எய்தினன்’ என்றவள் கூறிட,
பேரிடி தாக்கிட வேரற்று வீழ்ந்தான்.                         125

‘இராமனைக் கண்டேனும் துயர் தணிவோம்’ என்ன
‘இனிதுள்ளான் கானகத்தில் தவசியாய்
இளவலோடும், துணைவியோடும்’ என்றாள்.
நெருப்புண்டது போல் துடித்துப் போனான்.              126

வனத்தினுள் தமையன் சென்றது, தந்தை
விண்ணுலகு எய்தற்கு முன்போ, பின்போ,
எதனாலோ, யாராலோ என்பது போல்
விதவிதமாய் கேள்விகளை அடுக்கலானான்.             127

                 கைகேயி நிகழ்ந்ததைக் கூறுதல்

உள்ளது உள்ளபடி கூறலானாள் கைகேயி.
நல்லது ஒன்றுமே இல்லாமைக் கண்டவன்
கரங்களால் காதுகளை மூடினான்.
கண்களால் உதிரத்தை உமிழ்ந்தான்                          128

‘பூண்டனென் தமையன் திருத்தவக்கோலம்
மாண்டனென் தந்தை நீயேதான் காரணம்.
தாயென உனை நான் கருதுதலே பாவம்.
உடந்தையாய் இருப்பேன் என்றதே என் கோபம்’      129

                கோசலையின் இருப்பிடம் செல்லுதல்

விரைந்து சென்றான் கோசலையின் இருப்பிடம்.
விசும்பிப் பற்றினான் அவளின் மலர்க்கரம்.
‘கேகயர் கோமகள் இழைத்த கைதவம்
அறிந்திலன் போலும் நீ” வினவினாள்.                       130

"எனையீன்றவள் வினை செய்து
எனக்கீந்த இவ்வரசை ஏலேன் நானெ"ன்றான்.
"நானிலத்தில் நிகழ்ந்திட்ட பாவத்தால்
நரகத்துள் போவேன் நானெ"ன்றான்.                         131

தூய வாசகம் கூறிய தோன்றலை
ஆரத் தழுவினாள் கண்ணீர் பெருகிட.
‘மன்னர் மன்னவா’ விளித்துச் சொன்னாள்,
உன்னை நிகர்த்த தன்மையார் யாருள்ளார்?’.             132
                
                      தசரதனது உடலைக் காணுதல்

மண்மேல் விழுந்து தந்தையைத் தழுவினான்.
கண்ணீர் சொறிந்து அவருடலைக் கழுவினான்.
‘இறுதிக் காரியம் இயற்றுதற்கு வருக’ வென்று
பரதனை வேதியர் அழைத்ததும் வசிட்டர்,                  133

‘மகனல்லன் நீ’யென்று மருகினார் நின் தந்தை
தேர்ந்தலன் நீ ஈமச்சடங்கினை இயற்றுதற்கு’ என்றபடி
ஆகம முறைப்படி ஆகவேண்டியதை
முற்றுவித்தார் சத்ருக்ன மகன் கொண்டு.                    134

அரற்றினான் பரதன்
‘பிரேத பூசனை செய்வதற்கே
பேறு அற்றவன் ஆனேனே!
அரசாட்சி செய்திட நானென்றும்
உரிமையுள்ளவன் ஆவேனோ?’.                                135

தாமரை மலர்செறி தடாகத்துள்ளே
தாவிப் பாய்ந்திடும் மயில்களைப் போலே
அறுபதினாயிரம் அரண்மனை தேவியர்
எரியில் புகுந்தனர் மகிழ்ச்சியினோடே!                      136


தொடரும்............

No comments: