பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, February 18, 2020

"லக்ஷ்மி ராமாயணம்", பாகம் 1


   ("லக்ஷ்மி ராமாயணம்", இது என்ன கம்ப ராமாயணம், வான்மீகி ராமாயணம், துளசிதாசர் ராமாயணம், இப்படி பல ராமாயணங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன லக்ஷ்மி ராமாயணம் எனும் எண்ணம் தோன்றலாம். ஆம்! இது திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் எழுதிய ராமாயணம். இது கம்ப ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு மிக எளிய வரிகளில் ராமாயணத்தின் சுவை குன்றாமல் எழுதப்பட்டது. இதன் பால காண்டம் ஏற்கனவே இந்த வலைப்பூவில் வெளிவந்து பல்லோரும் படித்துப் பாராட்டியிருக்கிறார்கள். இப்போது இந்த அயோத்யா காண்டம் வெளிவருகிறது. இதன் தொடர்ச்சி ஒருசில நாட்களில் இதே பகுதியில் வெளிவரும். தொடர்ந்து இதர காண்டங்களும் வெளிவரவிருக்கின்றன. புதிய முயற்சி, புதிய சிந்தனை, இதன் எதிர்வினை எப்படி என்பதை படிப்பவர்கள் தெரிவிக்க வேண்டுகிறோம். நன்றி.  --------------- "பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்."       

                                                  அயோத்தியா காண்டம்
                               (பிதுர் வாக்கிய பரிபாலனம் சொல்லும் படலம்)
                                      தந்தையின் வாக்கிற்கு கீழ்படிந்த படலம்

கௌசிக முனியிடம் வித்தைகள் கற்றதும்,
தாடகை வதைத்தான்; தனுசுவை முறித்தான்.
மாடத்தில் நோக்கிய நாயகி மணந்தான் - பின்
தாயகம் திரும்பினான் சீதா ராமனாய்.                                    1

அவ்வமையம் .......
கேகைய நாட்டில், பரதனின் பாட்டன்,
பேரனின் பொருட்டு நாட்டம் கொண்டே
பார்த்திடத் துடிப்பதாய் உரைத்திட வந்தான்
'உதாசித்' பெயர்கொண்ட பரதனின் மாமன்.                          2

மைத்துனனின் மொழிகேட்ட தசரதமா மன்னனும்,
வழியனுப்பி வைத்தனன் மைந்தனைத் தன்மாமனுடன் .
இணைபிரியா இளையவனாம் சத்ருக்ன இளவரசன்
துணையாகக் கிளம்பினான் துடிப்புடனே தமையனுடன்.      3

                                        மந்திரப் படலம்
          (தசரதன் தன் மந்த்ராலோசனை சபையை அடைதல்)
ஒருநாள் -
கருமைகுன்றி காதருகில் வெளுத்ததொரு கேசத்தினைக்
கண்ணுற்று தெளிவுற்றார் களிறொத்த  தசரதரும்.
நண்ணும் மூப்பு தம்மை முந்திடுமுன் மூத்தோனுக்கு
மன்னனாய் முடிசூட்டி மகிழ்வமென  முடிவெடுத்தார்.           4

மூவகை தேவருக்கும் இணையான  குலகுருவாய்
தவமுனிவர் போற்றுகின்ற மாதவத்தோன் வசிட்டருடன்
அவையமைச்சர் பெருமக்கள் அறுபதாயிரம் பேர்களுடன்
சபைதனிலே கூடியங்கு ஆலோசனை மேற்கொண்டார்.       5

“என் உணர்வொத்த அவையோரே! – எந்தன்
எண்ண மதைக் கேட்பீரே! - எனைப்
போர்க்களம் ஏனோ மாய்க்கவில்லை.
துறவற தர்மம் நான் ஏற்கவில்லை.                                         6

அருமைந்தர் நால்வரை பெருமையுடன் ஈன்றெடுத்தேன்!
திருமகள் அனையோரை அவர்கட்கு மணமுடித்தேன்! - இனி
அரசபாரம்தனை இராமன் வசம் தந்துவிட்டு – பிறவா
வரம்பெறவே தவம்புரிய முடிவெடுத்தேன்!” என்ன                7

மந்திரக்கிழவர் வசிட்டமுனி  மொழியலுற்றார்,
தந்தையாய்நீ  தக்கதே செய நினைத்தாய்! – நின்றன்
கருமமும், தருமமும் ஓங்கி உய்ய விழைந்தாய்,
அறவழியில் நின்று அரசாள்வான் இராகவன்! ஐயமில்லை”   8

                 தசரதனின் மகிழ்ச்சியும் உரையும்

எண்ணியது நிறைவேறும் எண்ணமதில் மனமகிழ்ந்து                                                  பண்பமை புண்ணியனாம் சுமித்ரனை அழைத்து  
கண்ணின் கருவிழியாம் சீதையின் கொழுநனையே
ஈண்டுவர ஆணையிட்டான் அவைக்கு ஓர்நொடியில்              9

தம்பியும், தானுமாய் வந்தடைந்த இராமனும்,
மாதவத்தோன் வசிட்டனை கரங்கூப்பி வணங்கினான் - பின்
தந்தையின் தாள் பணிந்தோனைத், தந்தையும்,
பனித்த கண்ணுடன் குனிந்து அணைத்தான்.                        10

“ஐயனே!
மூப்பினா லிங்கு தளர்ந்துவிட்டேன் உன் தந்தை
உய்வதற்கு எனக்கு உதவிடுவாய் அருமைந்தே!
மாதவத்தின் பயன்களை  யான் இனிதே பெற்றிடவே
மாமுடி புனைந்து நீ நல்லறம் புரிந்திடுவாய் என்ன            11

‘பெற்றவர் இட்ட  கட்டளை மட்டுமின்றி - இது
கொற்றவன் சாட்டிய கட்டளை யென்பதால்
உற்றவன் ஏற்பது முறையென் றுணர்ந்தவன் 
’தருதி ஆணையினை’யென உரைத்தான் உறுதியாய்.       12

அவையில் கொலுவிருந்த அனைத்து வேந்தர்களும்
உவகை மொழிகளால் வாயுற வாழ்த்தினராம்.
விவரமறிந்த தாய் கோசலையும், சுமித்திரையும்,
அரங்கனைத் தரிசிக்க ஆலயத்துள் சென்றனராம்.           13

                   மந்தரை சூழ்ச்சிப் படலம்.
                தயரதன் கணிதருக்குக் கூறுதல்

முகமன் கூறியே கணிதரை யழைத்து,
முடிபுனை நாளினைக் கணித்திடக் கோரினான்.
‘மங்கல நாளது மறு நாளெ’ன்றதும்,
பொங்கிய மனதினால் புன்னகை சிந்தினான்.                  14

                      இராமனிடம் வசிட்டர் கூறுதல்

“மானிலம் போற்றிடும் புரவலன் நாளை
நானிலம் நினக்கு நல்கிட உள்ளான்.
நல்லன சொல்லுதல் என்னுடை கடமை – அதை
நினைவில் கொள்ளுதல் நின்றன் கடனே!                         15

நீதிமைந்த!
போர்புரிதல் புரவலர்க் கழகென்பார் – ஆயினும்
எவருடனும் பகை கொள்ளலன் நீயென்றால்
போர் ஒடுங்கும், நாட்டு வளம் பெருகும்!
புகழென்றும் ஒடுங்காது நிலைத்து நிற்கும்.                       16

மைந்தனே!
மன்னுயிரைத் தன்னுயிராய்க் கொண்டிடு!
இன்சொல் உதிர்த்தபடி வறியவர்க்கு ஈந்திடு!
வினைத்திட்பம் கொண்டபடி வென்றியன் ஆகிடு!
நடுவுநிலை குன்றிடாமல் கடுந்தவம்போல் ஆண்டிடு!”       17

அறிவுரைகள் கூறியபின் மாமுனிவர் வசிட்டரும்,
முறைப்படியே சடங்குகளை முற்றுவித்தார்.
முடிசூட்டல் நாளையென்றே நகரமெங்கும்
முரசறைய தசரதனும் ஆணையிட்டன்.                               18

சேதியைக் கேட்ட நகரத்து  மாந்தர்கள்
தேவமுது உண்டதைப்போல் மனமகிழ்ச்சி யெய்தினர்
பேருவகைப் பொங்கியெழப் பாசுரங்கள் பாடினர்
பெருமையுடன் பூரித்து வாழ்த்துக்கள் தூவினர்.                 19

                           கூனியின் தோற்றம்

இராவணனின் வன் செயல்கள் ஒன்றுகூடி
உருகொண்டு வந்ததுபோல் வெளிப்பட்டாள்,
உடலின் கூனலொடு உள்ளமும் கோணலுடை
‘மந்தரை’ யென்கின்ற கைகேயி சேடியவள்.                         20

அவள்-
துடிக்கும் நெஞ்சினள்; சினமெனும் தீ
வெடிக்கும் கண்ணினள், இராகவனின்
வில்லுமிழ் மண்ணுருண்டை யொன்றினால்
அடிபட்டு, வன்மம் கொண்டாள் முன்பொரு நாள்.                21

கோலமயிலனைய கைகேயி ராணியுடைய
கோட்டைக்குள் வேங்கையாய் விரைந்து எய்தினாள்!
துயில் கொண்ட அருட்கொடியை சினத்துடனே
கையில் தீண்டி அவசரமாய் எழுப்பினாள்.                          22

“அடி பேதையே! வரவிருக்கும் பெரும்துன்பம்
அறிந்திடாமல் உறங்கினையோ?” என்று வினவினாள்.
“அரு புதல்வர் நால்வருளர் எனைக் காக்க
இடரேதும் வருமோ எனக்கெதிராக!”  பதிலுரைத்தாள்.       23

“ராணி கோசலையின் திருமகன் நாளை
மணிமகுடம் தரிக்க உள்ளான் – அவள்
வாழ்க்கைத் தரம் சிறக்கும்! – நீயோ இனி
தாழ்வடைய இருக்கின்றாய்’ சினந்தாள் கூனி/                    24

                      கைகேயியின் மகிழ்ச்சி
ஆர்த் தெழுந்த பெரு மகிழ்ச்சி
கரை புரண்டு பொங்கி யெழ,
சேதி சொன்ன கூனி கையில்,
ஆரமொன்றப் பரிசளித்தாள்.                                            25

கருத்த மனத்தினளாம் கூனியோ
உறுத்துப் பார்த்தனளாம் ராணியை
வெறிகொண்ட சிறுத்தையாய் உருமாறி,
எறிந்தனளாம் தூரத்தில் ஆரத்தைத் வீசி.                          26             
                              
                             மந்தரை கூறுதல்

சினங்கொண்ட மந்தரை வெகுண்ட வேங்கையாய் – “நின்
பிறந்த சேயொடு பெருந்துயர் அடைவாய்!
உயர்ந்த ஆசனம் இராமனைத் தாங்கிட,
உவகை நீ கொள்ளல் உவந்ததாமோ?                              27

உரிமையுள்ள நின் மகனோ நாடிழப்பான்!
அரசுரிமை ஏதுமின்றித் தாழ்ந்திருப்பான்!
பற்றவரும் பயங்கரத்தை அறிந்திடுவாய் நீ!
அறிவுறுத்தும் எனதுரையை செவிமடுப்பாய் நீ!”              28

                        கைகேயி கூறுதல்
வாயெலாம் கசப்புற வார்த்தைகளாடிய கூனியிடம்
“தீயோய்! மூத்தவனுக்கே முடியென்றும் முறைமை!
போவாய் நீ இவ்விடத்தினின்று ! – நின்
நாவை அறுத்தெறிவேன் இன்று”. என்றாள்.                    29

                       கூனி மேலும் கூறுதல்

‘நற்குணம் பொருந்திய பரதனின் நலனெலாம்
புல்லிடை சிந்திய நல்லமுது போலாகும்.
பெருமையுடன் வாழுகின்ற நீயினிமேல்
பொருளொன்றும் உரிமையின்றிப் போய்விடுவாய்!           30

பெருஞ்செல்வம் பெற்றுவிடின் மாந்தர்க்கு
அருட்குணமும் அழிந்துவிடும் போலுமிங்கே!
இரப்பவர்க்குப் பொருள் ஈயும் நிலையிருக்க - இனி
இரந்துநீ வாழ்ந்திடல்தான் வேண்டுமிங்கே!                        31

இருவருக்கும் சமமாகப் பகிர்ந்திடாமால்
ஒருமகவுக் களித்திடல்தான் முறையாமோ?
அரும் புதல்வன் இராமனென்றே இருந்தாலும்,
பரதனென்றும் அருமையிலே குறைந்தவனோ?”                 32

                        கைகேயி மனம் திரிதல்

தீய மந்தரை செப்பிய உரைகளால்
தூய தேவியின் சிந்தையும் திரிந்தது.
“உவந்தனை நீயென்னை! – என் மகன்
நீள்முடி புனையும் வழியினைப் புகலுதி” யென்றாள்.         33

                          மந்தரை சொல்லுதல்

‘நளிர் மணி நகையாளே!
சம்பரா சுரனுடன் தசரதன் புரிந்த
மாபெரும் போர்தனில் தேரூர்ந்து,
பேருதவி நீசெய்து புரவலனைக் காத்த அன்று!
அருளினான் அவனுனக்கு இரு வரங்கள் தருவதாய்!         34

அவ்வரங்கள் இரண்டினையும், இப்போது கேட்டிடு!
ஒருவரத்தால் பரதனுக்கு மணிமுடியைச்  சூட்டிடு!
பிறிதொன்றால்  பருவங்கள் பதினான்கும் இராமனை நீ,
பெரும்வனத்தில்  தவம் புரிந்திட அனுப்பிடு!’                     35

               கைகேயியின் அலங்கோல நிலை

நயந்து கூறிவிட்டு அங்கிருந்து நழுவினாள் கூனி .
சிதைந்த மனத்தினளாய் பேதலித்தாள் ராணி!
வார்குழல் கலைத்து, வளையல்கள் அவிழ்த்து
நாடகமயில்போல தரையினில் கிடந்தாள்                        36

(லக்ஷ்மி ராமாயணம் தொடர்ந்து வரும். இதன் தொடர்ச்சி சில நாட்களில் இதே வலைப்பூவில் படித்து மகிழலாம். இதுவரை படித்த பகுதி பற்றி உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.)

No comments: