பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, February 18, 2020

லக்ஷ்மி ராமாயணம் -- பாகம் 3



லக்ஷ்மி ராமாயணம் --  பகுதி 3


                   தசரதன் தன் சாப வரலாற்றைக் கூறுதல்

முன்பொருநாள்,
யானைகளை வேட்டை யாட,
சுனையோரம் மறைந்திருந்தேன்.
நீரருந்தும் யானையொலி காதில் விழ
‘சப்தபேதி பாண’ மெய்தேன்.                                              69

அலறியதோர் மனிதக் குரல் கேட்டு,
அஞ்சி நடுங்கி அவ்விடம் வந்தேன்.
பார்வையிழந்த முனிதம்பதியின் மகனொருவன்,
நீர்மொண்ட ஒலியென்று நானுணர்ந்தேன்.                         70

உயிரொடுங்கும் நிலையிருந்த அக்குமரன்
தவித்திருக்கும் பெற்றோர்தம் நீர்வேட்கை
தணித்திட வேண்டுமென கரம்கூப்பி வேண்டினான்.
கணத்துக்குள் கண்மூடி விண்ணுலக மேகினான்.. –             71

மகனைச் சுமந்தபடி நீரெடுத்து நான் வந்தேன்.
அடியோசை கேட்டவர்கள் ஆவலுடன் அளவளாவ,
‘அறியாப் பிழையினால் மகனைக் கொன்ற
கொற்றவன் நானினி உன் மக’னென்றேன்.                         72

நீரெடுத்து வந்தவன் தம் மகனல்லன்
‘மகனைக் கொன்ற பாதகன்’ என்றறிந்து
‘ஏவா மகவைப் பிரிந்து எம்போல்
போவாய் நீயும் விண்ணுலகெ’ன சபித்தார்.                          73

‘விழிபோயிற்றே!’ யென வீழ்ந் தயர்ந்தார்.
‘மகவை இழந்து இறப்பாய்’ என்னாது
‘மகவைப் பிரிந்து’ என்றதே கடிதன்று.
இராமன் பிரிய நான் இறப்பதுறுதி’யென்றார் தசரதன்.        74

                 வசிட்ட முனிவன் அரசவையில் கூறுதல்

காத்திருந்த அவை முன்னே வசிட்டமுனி
கைகேயி வரம் பற்றி கூறலானார்.
வாய்மையுடை பெரியோனுரை கேட்டதுமே
விதியெண்ணி அனைவருமே கலக்கமுற்றார்.                        75             

                      இலக்குவனது போர்க்கோலம்

‘மணிமகுடம் தமையனது தலை மீது,
அணிவிப்பேன் தடை களைந்து!’ யென்றபடி,
பேரிடியாய் முழக்கமிட்டுப் புறப்பட்டான்.
போர்க்கோலம் பூண்ட இளையான் இலக்குவன்.                   76

                         இராமபிரான் நல்லுரை

‘மதியின் பிழையோ, மகனின் பிழையோ அன்று!
விதியின் பிழைதான் இங்கனம் நிகழ்ந்தது. - நீ
வெகுண்டு, பயனில்லை’ யெனச்சொல்லி, அவன்
சீற்றத்தை மாற்றிட முயற்சித்தான் இராமன்.                           77                  

சினம் தணிந்த இலக் குவனை
இனிது இறுக்கித் தழுவினான். – பின்
சுமித்ரைத்தாயை தரிசனம் செய்ய
தம்பியும், தானுமாய் புறப்பட்டான்.                                        78

கண்களை ஒத்தத் தன்னிரு மகன்களும்,
*தண்டாவனம்வரை செல்வதை யெண்ணி,     
தளர்ந்து வருந்திய அன்னையைத் தொழுது,
‘மீள்வோம்! நீ கலங்கா திரு’ யென்றான்.                                 79

 இலக்குவன் அன்னைபால் தமையனுடன் செல்ல விடை கேட்டல்

அன்னையின் திருவடி வணங்கிய இலக்குவன்
“உடன் சென்றிடுவாய் மகனே’ யென
உடன்பட்டு சொல்லிடு தாயே! எனக்கோர,
‘உடனே புறப்படு நீயென்றாள் உளமாற ‘                              80

மறுத்துப் பார்த்தான் இராம பிரான்
மரவுரி தானும் தரித்தான் இளையான்.
குமரர்கள் கோலத்தைக் கண்ணுற்ற தேவர்கள்
குமுறிய நெஞ்சுடன் குழம்பித் தவித்தனர்.                               81

                    பிராட்டி இராமனிடம் வினவுதல் 

சீதையின் அரண்மனை யடைந்தனர் இருவரும்.
நிகழ்ந்தது அறிந்திடா தேவியோ அதிர்ந்தனள்.
நேர்ந்தது யாதென வினவியே வியர்த்தனள்.
தந்தையின் ஆணையை கேட்டதும் வியந்தனள்.                     82

            பிராட்டி கூறுதலும் இராமனின் மறுமொழியும்

‘மன்னரின் கூற்றினைப் படிவது முறையே!
என்னையும் கூட்டிச் செல்வது சரியே!’ என்ன
‘கானகம் கொடிய அரக்கரின் இருப்பிடம்
கால்களும் சுட்டுப் பொசுக்கிடும்’ என்றான்.                             83

‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடெ’ன
நினைத்தவள், நுழைந்தாள் அந்தப் புரத்தினுள்!
துணிந்து புனைந்தாள் மரவுரி அணிகளை
பணிந்து பற்றினாள் கணவனின் கரங்களை!                            84

மரவுரி தரித்த திருமகள் பின்செல,
விற்கை வீரனாம் இளையவன் முன்செல,
கார்வண்ண இராமன் கானகம் செல்வதைக்
கண்டவர்  துன்பத்தை, எவ்விதம் சொல்ல!                               85

                          தைலமாட்டுப் படலம்

செம்பொன் தேரேறிப் புறப்பட்ட மூவரையும்,
கண்ணீர் பெருக்கோடு கண்டனர் அனைவரும்.
அன்புப் பிராவாகத்தில் ஆட்கொண்ட குடிமக்கள்.
பின்தொடர்ந்து நடந்திட உண்டானதோ பெரும்திரள்.             86

                    இராமபிரான் சுமந்திரனிடம் கூறுதல்

நள்ளிரவு நேரத்தில் சோலையொன்றை அடைந்தனர்.
கள்ளமற்ற நகரமாந்தர் கண்ணயர்ந்து உறங்கினர்.
உறக்கமின்றி தவித்தபடி விழித்திருந்த இராமபிரான்
உரையாடத் தொடங்கினார் சுமந்திரனெனும் அமைச்சரிடம்.   87

 ‘உம்மால் செயத்தக்க செயலொன்று உள.
எம்பால் அன்புகொண்டு எனைத்தொடர்வார் பலர்!
பூண்டபேர் அன்பினாரை அனுப்புவது எளிதன்று.
உடனழைத்துச் செல்லுவதும் முறையன்று.                              88

 வேண்டுவது யாதெனில், இவர் விழிப்பதற்குள்
தூண்டிடணும் வெறும்தேரை நகர்நோக்கி,
சென்றிடுவோம் அவ்வமையம் வனம் நோக்கி!
தேர்ச்சுவட்டால் இவர் மீள்வார் நகர்நோக்கி’ யென்றான்.        89

 ‘மன்னவர்க்கும், அத்தையர்க்கும் அன்பு சொல்லி,
மலரினையும், கிளியினையும் பேணிடெ’ன்று
திண்தேர் வல்லான் சுமந்திரன் நோக்கி
கண்ணீர் பெருகிட மொழிந்தாள் பிராட்டி.                                90

திருவடி வீழ்ந்து எழுந்தான் சுமந்திரன்.
‘அரசர்க்கும் அன்னையர்க்கும் சேதி யாதெ’ன
பெருகிய துயருடன் இலக்குவன் நோக்கி,
கனத்த மனத்துடன் வினவியே நின்றான்.                                 91

                  இலக்குவன் சினந்து கூறல்

‘வனத்துக்குள் தன்மகனை அனுப்பிவிட்டும்,
வானகமே சென்றிடா வலிமையுடை அரச’ரென
சினந்து சிவந்த தம்பியை அணைத்துத்
தணித்தான் சினத்தினை தமையன் இராமன். - பின்                  92

விரைந்தனர் மூவரும் கானகத் துள்ளே!
நுழைந்தது தேரொலி அயோத்தியி னுள்ளே!
திரும்பி வந்தனனோ வில் வீரனென
வீறுகொண்டெழுந்த தசரதன் மாண்டுபோனான்.                     93

                      கோசலையின் நிலை

‘பூத்துக் காய்த்த பின் மடிந்திடும்
மூங்கிலும், வாழையும் போலே,
மூப்போ, போரோ, நோயோ யின்றி
இறந்தாரே!’ யெனப் புலம்பினாள் கோசலை.                           94

 மயிற் கூட்டமென மன்னனைச் சூழ்ந்தனர்
அறுபதினாயிரம் அரண்மனை தேவியர்.
சேதிகேட்டு ஓடிவந்த மாமுனிவர் வசிட்டரும்
விதிசெய்த வினையெண்ணி வருத்தமுற்றார்.                           95

       
           வசிட்டன் தசரதன் உடலைத் தைலத்தில் இடுவித்தல்

இறுதிக் காரியம் இயற்றுவதற்கு,
உரியவர் எவரும் அருகிலில்லை.
பரதன் வரும்வரை இவ்வுடலை
பத்திரப் படுத்திட தைலத்தி லிட்டார்.                                        96

 பட்டத்துத் தேவியர் இருவரது
துக்கத்தை எவ்விதம் தாம் உரைப்பது?
திக்பிரமை பீடித்த அவர் மனதை
மாற்றிடத்தான் எங்கனம் நாம் முனைவது?                               97

                       பரதனுக்கு ஓலை போக்கல்

பாட்டனார் வீட்டிருந்த பரதனைக்
கூட்டிவர பணித்தனர் தூதனை! - அவன்
வருமளவும் நகரத்தைக் காக்கவென்று
கதிரவனும்  விரித்துதித்தான் தன் கதிர்களை.                           98

                                 கங்கைப் படலம்

சோலையிலே கண்ணயர்ந்த குடி மக்கள்
காலையிலே கண்விழித்துக் கலக்க முற்றனர்.
மூவரையும் எவ்விடமும் தேடிப் பார்த்தனர்.
தேர்தடத்தைப் பின்பற்றித் திரும்பிப் போயினர்.                      99

தம்பியும், துணைவியும் பின் தொடர,
அன்னம் துயிலும் நந்த வனத்தையும்,
பொன்னைக் கொழித்திடும் நதிகளையும் - இராமன்
தாண்டியபடியே கங்கையை அடைந்தான்.                             100

பொங்கும் கங்கைக் கரைதனிலே,
தங்கியபடி தவம் செய்துவரும்,
முனிவர்கள் எதிர்கொண்டார் மூவரையும் – பின்னர்
இலையுண வளித்தே இன்புற்றார்.                                          101

                             குகப்படலம்

 இராமன் இருந்த குடிலின் வாயிலை குகன் அடைதல்

ஓடங்களின் நாயகன்; வேடர்குல வீரியன்;
இடையினிலே ‘துடி’யென்னும் பறை உடையான்;
‘இடி’யனைய குணமுடையான்;
இருள் கவிந்த நிறமுடைய ‘குகனெ’ன்பான்.,                           102

 தீரனாம் இராமனின் காவியம் அறிந்தவன்
தரிசனம் செய்திட வேட்கையும் கொண்டவன்.
கானகம் எய்திய இராமனை இவ்விடம்
கண்டிட கருத்தாய் உறுதியும் பூண்டவன்.                               103

 நித்தம் உண்ணும் ஊன், மீன், கள்ளின்
நாற்றம் வீசிடும் நல்லான் இன்று
சீற்றம் துறந்து, குறுவாள் தவிர்த்து,
நற்றவ சாலையின் வாயிலை யடைந்தான்.                             104

இலக்குவன் வினவினான், ‘யாரெ’ன்று.
விளக்கினான் குகனும் இன்னாரென்று.
உள்ளத்தூயவன், நல்லவன் இவனென்று
உள்ளே இளவல் அழைத்து வந்தான்.                                      105

அண்ணலைக் கண்களால் கண்டதும் கனிந்தான்.
மண்ணுறக் குனிந்து, வாய்ப்பிளந்து பணிந்தான்.
ஒருக்கை நீட்டியே புன்னகை புரிந்தே
‘இருக்கையில் இருத்தி’ சுட்டினான் இராமன்.                          106

.இருந்திலன் குகனோ அன்புப் பெருக்குடன்
திருத்திக் கொணர்ந்த தேனையும், மீனையும்,
கருத்தாய் படைத்தான் நாயகன் எதிரினில்
‘திருவுளம் கனிந்து ஏற்பீர்’ என்றான்.                                       107

நீள்பெரும் உலகின் நீள அகலமாய்
ஆழ் கடல் மூழ்கி மீனையெடுத்தவன்.
ஆகாயம் தொடும் சிகரத்தினின்று
பாங்காய் தேனையும் எடுத்து வந்தான்.                                   108


(இதன் அடுத்த பகுதி தொடர்ந்து வரும்)

No comments: