பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, February 13, 2020

எரிமலை




1857இல் கிழக்கிந்திய கம்பெனியார் இந்திய சமஸ்தானங்களை வாரிசு இல்லை என்ற காரணத்தைச் சொல்லி அபகரித்துத் தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திக் கொண்ட நேரத்தில் இந்திய சுதேச மன்னர்கள் சிலர் தங்கள் ராஜ்யம் பறிபோவதை எதிர்த்து ஆங்கிலேய கம்பெனியாரை எதிர்த்து ஒரு புரட்சியைத் தொடங்கினார்கள்.  கம்பெனியார் படையில் இருந்த வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளை வெள்ளையர்களிடம் ஒப்படைத்து விட வேண்டுமென்று கட்டளையிட்ட போது, அதை எதிர்த்து பாரக்பூரில் முதல் கலகத்தைத் தொடங்கியவர் மங்கள் பாண்டே. ஆங்கிலப் படையில் இருந்த மங்கள் பாண்டே அவர் படையின் தளபதி தன்னைக் கொல்ல முயன்றபோது அவனைக் கொன்று முதல் புரட்சியைத் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கம்பெனியார் படையில் இருந்த சிப்பாய்கள் ஆங்காங்கே கலகத்தை உருவாக்கி வெள்ளைக்காரர்ளின் கொலைவெறிக்குப் பதிலடி கொடுக்கத் தொடங்க, அதில் நானா சாகேப், தாந்தியா தோபே, லக்ஷ்மி பாய் போன்ற மாவீர, வீராங்கனைகள் களத்தில் இறங்கி போராடி ஒரு நேரத்தில் வெள்ளையர்களைத் திணற அடித்துக் கொண்டிருந்த பொது, சென்னையில் இருந்த ஜெனரல் நீல் என்பான் கல்கத்தாவுக்குச் சென்று அங்கிருந்து கான்பூர் வரை வழிநெடுக இந்திய சிப்பாய்களைக் கொன்று குவித்துக் கொண்டு வந்தான். இறுதியில் வெள்ளையன் கை ஓங்கி, இந்திய சிப்பாய்கள் களபலியானார்கள். நானா சாகேப் மட்டும் தப்பிப் பிழைத்து நேபாள் சென்றதாக வரலாறு சொன்னாலும், அவர் 20ஆம் நூற்றாண்டு தொடக்க காலத்தில் சென்னையில் வந்திருந்த செய்தியையும் மகாகவி பாரதியின் நண்பர் நாராயண ஐயங்கார் என்பவர் நேரில் சந்தித்து அதை விவரிக்கிறார்.

ஆங்கிலேயர்கள், தங்கள் வீர தீர பராக்கிரமங்களை வரலாறாக ஆக்கி அதற்கு “சிப்பாய் கலகம்” என்று பெயரிட்டு தங்கள் படுகொலைகளை நியாயப் படுத்திய போதிலும், இந்திய தேசிய வாதிகள் அதை முதல் சுதந்திரப் போராட்டமாக வருணித்து எழுதியதுதான் வீர சாவர்க்கர் எழுதிய “எரிமலை” எனும் இந்த நூல். இது ஆங்கிலேயர்களின் வரலாற்றுச் செய்திகளை மறுத்து, இந்தியர்களின் எழுச்சியாக எழுதப்பட்டது இந்த தேசிய நூல். இது ஒரு காலத்தில் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப் பட்டிருந்தது. இதனை இருவேறு தமிழறிஞர்கள் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

அதில் ஒருவர்தான் ஜெயமணி சுப்பிரமணியம் என்பவர். இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களிடம் சுறுக்கெழுத்தாளராகப் பணியாற்றியவர். இந்திய தேசிய ராணுவம் அமைந்த காலத்தில் இவர் நேதாஜியுடன் இருந்தவர். 1942 வரை இவர் மலேசியாவில் இருந்தார். பிறகு இந்தியா வந்து 1959 வரை கல்கியில் இருந்தார். பின் 1960இல் அமுதசுரபியில் நேதாஜி பற்றி தொடர் எழுதினார். இவர் 2002இல் தன் 98ஆம் வயதில் காலமானார்.

ஆங்கிலேயர்கள் வரலாற்றுப் பாடத்தில் சிப்பாய் கலகம் என்று வர்ணித்த இந்த போராட்டம் ஒரு சுதந்திரப் போர் என்பதுதான் சாவர்க்கரின் கூற்று. இந்திய சுதேச சமஸ்தான அதிபர்களுக்கு வாரிசு இல்லையென்பதைக் காரணம் காட்டி இவர்கள் அந்த ராஜ்யங்களை அபகரிக்கும் செயல் பகல் கொள்ளை என்பது சாவர்க்கரின் கருத்து. அந்த அராஜகத்தை எதிர்த்துப் போரிட்ட இந்திய வீரர்கள் முதல் சுதந்திரப் போராட்டத்தை நடத்தியதாக வரலாற்று உண்மைகளை எடுத்துச் சொல்கிறார் இந்த நூலில்.

இந்திய வீரர்களை கல்கத்தா முதல் கான்பூர் வரையில் வழியெங்கும் கொன்று குவித்த ஜெனரல் நீல் என்பாருக்கு சென்னையில் ஒரு சிலை அமைத்தது ஆங்கிலேய அரசு. அதனை எடுக்க வேண்டுமென்று 1930களில் ஒரு போராட்டம் நடைபெற்றது. அதனைத் தலைமை வகித்து நடத்தியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த காங்கிரஸ் தியாகி திரு நா.சோமையாஜுலு என்பார். இவர் போராட்டத்துக்கு ஆங்கில அரசு அசைந்து கொடுக்கவில்லை. நீண்ட நாட்கள் நடந்த அந்தப் போராட்டம் பின்னால் கைவிடப்பட்டது என்றாலும், பின் 1936இல் ராஜாஜி தலைமையில் சென்னையில் ஒரு காங்கிரஸ் அரசு உறுவானபோது அந்த சிலை சென்னையில் அகற்றப்பட்டு எழும்பூர் காட்சிக் கூடத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டது. நம் வரலாற்றுச் செய்திகளை ஆங்கிலேய அரசு தங்களுக்குச் சாதகமாக எழுதி வைத்திருந்த பல செய்திகள் நம் சுதேசி அரசு உருவானதும் அதனை நம் கண்ணோட்டத்தில் மாற்றி அமைக்க வேண்டுமென்பது சாவர்க்கரின் கருத்து. அதற்கு முன்னோட்டமாக அவர் சிப்பாய் கலகம் என்று வருணித்த நிகழ்ச்சியை முதல் சுதந்திரப் போராக எழுதியிருகிறார். இந்த நூலைப் படித்தால் இந்தியர்கள் சுதேசி உணர்வைப் பெற்று விடுவார்கள், என்று கருதி பிரிட்டிஷ் அரசு இந்த நூலைத் தடை செய்து வைத்திருந்தது. இதை இப்போது படித்தாலும் தேசபக்தி பற்றி எழும் என்பதை இன்றும் இதை படிக்கும் போது ஏற்படுகிறது. நல்ல மொழிபெயர்ப்பு. உணர்ச்சி பூர்வமாக நம் வீரர்களின் தியாகத்தை நம்மால் உணர முடிகிறது. சென்னை அல்லையன்ஸ் வெளியீடு இந்த நூல்.

1 comment:

சிகரம் பாரதி said...

நல்ல தொகுப்பு. வராலாற்றை வாசிப்பது ஒரு தனி அனுபவம் தான்...

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்