லக்ஷ்மி ராமாயணம்
-- பாகம் 5
ஆறுசெல் படலம்
மந்திரக் கிழவர்
வசிட்ட முனியுடன்,
தந்திரத் தலைவரும்,
நகர மாந்தரும்,
கொற்றவக் குரிசிலை
சூழ அமர்ந்து,
‘நாட்டினை ஆண்டிட,
முடிசூடிட அழைத்தனர். 137
‘நஞ்சை உண்க’
என்றது போலே,
நடுக்கமடைந்து
சோர்ந்தனன் சொன்னான்.
‘மூவுலகாளவே
மூத்தவன் இருக்கையில்
ஈன்றவள் செய்தது
பிழையென்றே’ 138
‘நன்னெறி இது’வென உரைத்தாலும்,
மன்னுயிர் சுமந்து
வாழ்தல் விரும்பேன்.
அன்னதற்குரிய
அண்ணலைக் கொணர்ந்து
மண்ணினை ஆண்டிடச்
செய்திடுவேன். 139
அன்றெனின் அவனுடனே
யிருந்து,
அருந்தவம் நானும்
இயற்றிடுவேன்.
அதுவும் கை
கூடாதாயின்
இனிதின் என்னுயிர்
போக்கிடுவே’னென்றான். 140
அரியணை யேற்று
சிறப்புற ஆளினும்
முடியதைத் துறந்ததை
அவையோர் வியந்தனர்.
அரசினை மறுத்த
பரதனை அமைச்சர்கள்
‘வாழிய நின்
புகழெ’ன பாடியே வாழ்த்தினர். 141
முறைப்படி வேந்தனை
அழைத்திடுவேனென
நெறிப்படி முரசினை
அறையச் செய்தான்.
அன்னையர் மூவர்,
அமைச்சர் தொடர்ந்திட,
முனைப்புடன்
கிளம்பினர் பரத சத்ருக்னர். 142
கங்கை காண் படலம்
யானை, குதிரை,
வீரர்கள் கொண்ட
சேனைக் கடலென
பின் தொடர,
புனலொடு பொங்கிடும்
கங்கை யாற்றின்
வடகரை யடைந்தான்
மரவுரி பரதன். 143
பெரும்படையைக்
கண்ணுற்றான்
கருமேக நிறமுடைய
குகன்! - அவன்
திடுக்கிட்டுத்
துணுக்குற்றான்
கடுப்பாகிக்
கனலுமிழ்ந்தான். 144
அண்ணலை வதம்
செய்திட
வந்தனனோ இவெனென
சீறினான்.
‘அப்படை எலிப்படை!
அரவம் தானெ’ன
ஆரவரக் குரலெடுத்துக்
கூவினான். 145
‘அஞ்சன வண்ணனாம்
எம்பிரான் இராமனை
முன்னவனென்றும்
நினைந்திலன்
வஞ்சகத்தாலே
ஆட்சியைக் கொய்தவன்.
என்னைக் கடந்து
போவது எங்கனம்?’ 146
வில்லெடுத்து
நின்ற குன்றனைய குகன் பற்றி
‘சொல்லெ’ன்று
பரதன் கேட்க, சுமந்திரன் சொன்னான்.
‘கங்கையிரு
கரைகட்கும் தலைவன்,
உங்கள் குலநாயகனின்
துணைவனென்று. 147
இராமனுக்குத்
தோழனெனில்
தொழுதிடல்தான்
மரபென்று
விரைந்து பணிந்த
பரதனைப் பார்த்ததும்
குனிந்து வணங்கித்
தொழுதான் குகனும். 148
‘இவ்விடம் எய்தது
எதற்கெ’ன்று குகன் வினவிட
‘அவ்விடம் அயோத்தி
ஆள்வாரின்றி
அல்லலுறுவதால்
அண்ணனை அழைத்து
அரியணை யேற்றிட
வந்தேன்’ சொன்னான் பரதன்.149
‘தாயுரை ஏற்று
இராச்சியம் பெற்றதைத்
‘தீவினை யென்றே மரவுரி பூண்டனை!
அண்ணலை யழைத்திட
கானகம் வந்தனை!
உன்னை ஆயிரம்
இராமரும் ஒப்பரோ’புகழ்ந்தான் குகன். 150
‘கல்லிடை பரப்பிய
புல்லெனும் படுக்கையில்
வில்லான் துயில்வதை அறிந்ததும்
‘எவ்விடம் உள்ளான்
எம்பிரான் இராமன்?
அவனடி சேர்ந்திட
துடிக்குதென் உள்ளம்’ எனப்பதைத்தான் 151
‘இராமன் இருப்பிடம்
காட்டுதற்கென்றே
நாவாய் கொணர்ந்தான்
நாயகன் குகனும்.
படகினில் ஏறிய
பரிவாரங்கள்
பரத்வாசாஸ்ரமம்
அடைந்தனவாம். 152
திருமுடி சூட்டு படலம்
வினவினராம்
முனி,
‘எடுத்த மாமுடி
விடுத்ததுடன் நீ
முடித்த வார்சடை
தரித்தது ஏன்?’
‘முறைமை நீங்கி
முதுநிலம் ஏலேன்.
இறைவனின் சிரம்தனில்
சூட்டியே மீள்வேன்’ என்றான். 153
விருந்துணவளித்தார்
பரத்வாசர்
விரும்பியே
கனிகளை உபசரித்தார்.
விடிந்ததும்
சேனை கிளம்பியது.
விலகிய பாலை
மருதமாய் மலர்ந்தது. 154
புரண்ட புழுதியும்,
எழுந்த இரைச்சலும்,
அகண்ட சேனையின்
வரவைச் சொன்னதும்,
கனன்ற சினத்துடன்
இளையான் எழுந்தான்.
கனிந்த மனத்துடன்
தமையன் தடுத்தான். 155
நின்றனன் பரதன்
தன்நெடும் படையுடன்.
சென்றனன் முன்னம்
சத்ருக்ன தம்பியுடன்
‘வந்தனம்’ என்றனன்
விழிநீர் பெருக்குடன்.
விழுந்தனன்
தரைமேல் திருவடி பற்றியே’ 156
‘அறந்தனை நினைந்திலை;
அருளும் நீத்தினை;
முறைமையும்
துறந்தனை; மரவுரி தரித்தனை; - என
முறையிட்டுக்
குறை கண்டான் இராமனை
பறைசாற்றி
‘கறை’யென்றான். 157
வாடி மெலிந்த
பரதனைத் தன்னுடன்
வாரியணைத்து
நீர் சொறிந்த இராமனும்.
வலிய புஜம்
கொண்ட மாமன்னர்
‘வலியரோ?’ வென
வினவினான். 158
‘நின் பிரிவின்னும்
பிணியாலும்
கரியவளின் வரமென்னும்
எமனாலும்,
இறந்துபோனார்’
என்ற சொல்லால்
இடி தாக்கிய
அரவமாய் பொருமினான். 159
தேற்றினார்
வசிட்டர்.
மறைகளுக்கெல்லாம்
வரம்பானவனே!
பிறத்தலும்,
இறத்தலும் இயற்கையென்பதை
மறந்தனையோ நீ?’
எனச் சொல்லி இராமனை
இறுதிக்காரியம்
இயற்றுவித்தார். 160
இராமபிரான் பரதனை வினவுதல்
வந்திருந்த
அன்னையர்கள் திருவடியில்
வணங்கியெழுந்த
பின் பரதனிடம்
‘மன்னரின் ஆணையால்
மகுடம் நின்னதே!
மரவுரி தரித்து
ஏன் நீ வந்ததே?’ வினவினான். 161
பரதன் வேண்டினான்;
‘பாவிக்கு மகவான
பாவியானேன்.
சாகவும், தவமேற்கவும்
தகுதியில்லை.
முடிசூடவும்,
அரசாளவும் பொருத்தமில்லை. 162
திரும்பி நீ
வந்து அரசனாய் உருமாறு’
மறுத்தான் இனியான்:
‘பெற்றோர் ஆணையைத்
தட்டுதல் சரியா?
மற்றவர் என்னைத்
தூற்றுதல் முறையா?
இம்மையில் பொய்யுரை
புனைந்தேனென்று
மறுமையில் நரகத்தில்
உழல்வது விதியா? 163
"தரணியை ஆள்வது
பரதனே" என்று
தலைவன் சொன்னதை
நீ ஏற்பாய்!
தலைமுடி தாங்கியே
அரசாண்டு,
நலமுடன் வாழ்ந்திடு
பதினான்காண்டு! 164
மன்னன் இருக்கையில்
மகுடம் ஈந்ததும்
மறுப்பதற்கஞ்சியே
ஒப்புதல் தந்தேன்.
கானகம் சென்றிட
அவர் இட்ட
கட்டளை ஏற்பதும்
சரிதானே?’ புரியவைத்தான். 165
பரதனே!
‘நாட்டின் மகுடம்
தரித்துடு நீ’யென
வசிட்ட மாமுனி
இசைபட சொன்னதும்,
‘ஆள்பவர் ஆள்க!
ஆட்சேபணை யில்லை.
வாழ்வேன் இனிமேல்
காட்டினிலெ’ன்றான். 166
‘ஆண்டுகள் பதினான்கும்
ஆன பிற்பாடு
மீண்டு நான்
வருவேன்! அதுவரையில்
அரியணை அமர்ந்து
நீ அரசாள்வாய்.
பொறுப்புடன்
குடிகளின் குறை தீர்ப்பாய்’ இராமன் சொன்னான். 167
‘பெரியோய்!
நின் அடித்தலம்
இரண்டையும் தலைமேலே
முடித்தலமாகவே
சூடிக்கொள்வேன்.
முறைப்படி குறிப்பிட்ட
நாட்கடந்தால்- நான்
இறப்பது உறுதி’
யென புறப்பட்டான். 168
பாதுகைத் தலையோடு
புக்கிலன் அயோத்தியுள்
மாதவத்தோருடன்
நுழைந்தான் நந்திகிராமத்துள்.
தம்பியும்,
தையலும், பின் தொடர்ந்து வந்திருக்க,
தென்திசையில்
பயணித்தான் அந்தமிலான். 169
(அடுத்து ஆரண்ய காண்டம் தொடரும்.........)