பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, August 10, 2015

காலத்தை வென்ற கலாம்.


ஆழிசூழ் தீவில் தோன்றிய
கேடில் விழுச் செல்வமே!
மீனளந்த மரபில் வந்து
வானளந்த மாமணியே!
அறிவியலில் மேதையாகி
பாரதத்தை உயர்த்தி வைத்தாய்!
நம்மைக் குனிந்து பார்த்த குவலயத்தை
உம்திறமையால் நிமிர்ந்து பார்க்க வைத்தாய்!
இந்திய குடியரசின் தலைமைப் பதவி
உமது திறமைக்குப் பரிசாய் பெற்றாய்!
சரியான மனிதருக்குச் சரியான நேரத்தில்
கிடைத்ததால் பெரும் பேறு பெற்றோம்!
கடைமகனுக்காய் கவலையுற்ற
முதல் குடிமகனும் நீயே!
உல்லாச மாளிகையின் உட்கிடந்து சுகிக்காமல்
பல்லாற்றால் பணிபுரிந்து உலகப் புகழ் பெற்றீர்!
ஏவியது மட்டுமன்று 'அக்னி'
பாவாயும் ஊடாயும் தாவித்தாவிச் சென்று
மேவியதும் மாணவர்மிசை 'அக்னிக்குஞ்சு'
குஞ்சே பெருநெருப்பாய், நஞ்சரிக்கும் பெருஞ்சுடராய்
துஞ்சுவார் அகத்தை கொஞ்சி உசுப்பியவர் நீர்!
கோடுயரக் காடுயரும்
காடுயர மக்கள் பீடுயரும் என்று சொன்னீர்!
வானமுதம் வேண்டி கானமிசைக்காமல்
கானல்லவோ கைகொடுக்கும் என்று சொன்னீர்!
மணம்புரிந்தால் மனைவிக்கும் மகவுக்குமாய் வாழநேருமென
மணக்காமல் மாணாக்கர் உயர்வினை நாடி நின்றீர்!
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வழக்கத்தை இங்கு இல்லையாக வைத்தீர்!
புனிதராக மனித நேயம் காத்தீர்!
முதியோரைப் பேணுவீர் இன்றேல்
கதிகெடுக்கும் சுனாமி வந்து சுருட்டும் என்றீர்!
மாறிவரும் விஞ்ஞான அறிவு கொள்ளவும்
மாற்றாமல் மரபுநெறி காத்திடவும் சொன்னீர்!
எளிமை எனும் சொல்லுக்கு எடுத்துக்காட்டே!
துளியேனும் ஆசைக்கு இடமின்றி வாழ்ந்தீர்!
பட்டியலிட்டு கொண்டமட்டும் பற்றுவாரிடையே நீர்
பெட்டியோடு போய் பெட்டியோடு மட்டுமே திரும்பியவர்!
உமக்கும் ஒரு பற்றுண்டு அப்பற்று அறிவுச்சுடரை
மாணவரிடை பற்றவைக்க விரும்பும் பற்று!
பற்றினீர் அவ்வழி, சாற்றினீர் புதுநெறி
வங்கம் உம்மை வருவியக்கால்
தங்கத் தமிழர் தவிர்த்தார் உம்மை
மதங்கடந்த மகான்கள் உம்மை
மறுதலித்த காட்சி அவர்தம் மாட்சிமைக்குச் சாட்சி!
தமிழனைத் தமிழனே தாழ்த்தினார்
காமராசர், கருப்பையா பட்டியலில் கலாமும் சேர்ந்தார்!
கலக மானுடப் பூச்சிகளினிடையே
உழைப்பில் ஒளிரும் மின்மினி ஆனீர்!
முன்னாள் குடியரசுத் தலைவரே, நீர்
என்னாளும் குடிகளின் தலைவரே!
அலையிடைப் பிறந்த அமுதமும் நீரே!
மலையிடை மறைந்த மணியானீர் நீரே!
புனிதர் நீர் அடக்கமானதால் அன்றோ
பேய்க்கரும்பு இன்று இனிக்கிறது!
கலாம் எனில் கரம் சலாமிடுகிறது
உலாவந்த ஒளிக்கதிரே நீர்
சீராளனாய் மீண்டு வருவீர்! ஏனெனில்
தாரளமாய் எம்முள் விதைக்கப்பட்டீர்!

(9-8-2015இல் தஞ்சையில் நடந்த கவியரங்கொன்றில் திருநெய்த்தானம் அ.இராமகிருஷ்ணன் அரங்கேற்றிய கவிதை)

1 comment:

  1. மாபெரும் மனிதருக்கு அருமையான கவிமாலை!

    ReplyDelete

You can give your comments here