பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, August 10, 2015

ஜி.ஏ.நடேசன்

                                            

தமிழ்நாட்டு அரசியலில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரலாற்றில் ஜி.ஏ.நடேசன் எனும் பெயர் அடிபடுவதைப் பார்க்கிறோம். ஆனால் யார் இந்த ஜி.ஏ.நடேசன் இவருடைய பங்களிப்பு என்ன என்பதைப் பற்றியெல்லாம் விவரமாக நமக்கு எடுத்துச் சொல்வாரும் இல்லை. ஏதோ நமக்குக் கிடைத்த ஒரு சில விவரங்களை இங்கு பார்க்கலாம். இந்த ஜி.ஏ.நடேசனின் முழுப்பெயர் கணபதி அக்ரஹாரம் அண்ணாதுரை ஐயர் நடேசன் என்பது. அடடே! தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றுக்கு மிக அருகில், கணபதி அக்ரகாரத்தைச் சேர்ந்தவரா இவர் என்றவுடன் தஞ்சாவூர் ஆசாமிகளுக்கு ஒரு விழிப்பு தோன்றக்கூடும். கணபதி அக்ரகாரத்தைத் தெரியாதவர்களும் உண்டா என்ன?

ஜி.ஏ.நடேசன் 1873 ஆகஸ்ட் 25ஆம் நாள் தஞ்சை மாவட்டம் காவிரிக்கரையில் கணபதி அக்ரகாரம் எனும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், புத்தக வெளியீட்டாளர், அரசியல்வாதி, சுதந்திரப் போராட்ட வீரர் இத்தனையும் உள்ள தமிழ்நாட்டுக் காரர். ஜி.ஏ.நடேசன் & கம்பெனி என்ற புத்தக வெளியீட்டாளர் பெயரைக் கேள்விப்பட்டிருப்போமே, அவர்தான் இவர்.

இவர் கும்பகோனத்தில் பள்ளிப்படிப்பையும், சென்னை ராஜதானி கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தார். புத்தக வெளியீட்டாளராகப் பணியைத் தொடங்கிய இவர் முதல் கிளைன் பார்லோ (Glyn Barlow) என்பவரிடம் பயிற்சி பெற்று பிறகு சொந்தமாக நூல் வெளியீட்டுக் கம்பெனியாகிய ஜி.ஏ.நடேசன் அண்டு கம்பெனியை 1897இல் தொடங்கினார். இவரது இளமைப் பருவத்திலேயே இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு பங்கேற்கத் தொடங்கினார். 1900ஆம் வருஷம் "தி இந்தியன் ரெவ்யூ" எனும் பெயரில் ஒரு ஆங்கில மாதாந்திர பத்திரிகையைத் தொடங்கினார். இதில் பொதுவாக அரசியல் விஷயங்களை எழுதிவந்ததோடு இலக்கிய சம்பந்தமான கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தார். 

1915இல் மகாத்மா காந்தி முதன்முதலாகத் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்தாரல்லவா? அப்போது அவர் சென்னை ஜார்ஜ் டவுனில் தம்புச் செட்டித் தெருவில் இருந்த ஜி.ஏ.நடேசன் இல்லத்தில் தான் தங்கினார். காந்திஜி அங்கு தங்கிய நாட்கள் ஓரிரு நாட்கள் அல்ல, 21 நாட்கள் அதாவது 1915 ஏப்ரல் 17 முதல் மே 8ஆம் தேதி வரை அங்குதான் தங்கினார். 

முதலில் மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளால் கவரப்பட்டு காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டிருந்த இவர், பின்னர் ஏதோ காரணங்களால் மனம் மாறி இந்தியன் லிபரல் கட்சி என்ற அரசியல் அமைப்பில் இணைந்தார். 1922இல் இவர் அந்தக் கட்சியின் இணைச் செயலாளராகப் பணியாற்றினார். இவருக்கு இருமுறை அரசாங்கத்தின் உயரிய அவைகளில் உறுப்பினர் பதவி கிடைத்தது 1923இல் ஒரு முறை, பிறகு 1931இல் மறுமுறை. இவருடைய பதவிக் காலத்தில் இவர் கனடா நாட்டில் நடைபெற்ற பிரிட்டிஷ் சாம்ராஜ்ய பார்லிமெண்டரி குழுக் (Empire Parliamentary Association) கூட்டத்தில் கலந்து கொண்டார். வேறு சில உயரிய குழுக்களிலும் இவர் இடம் பெற்றிருந்தார். 1938இல் இவர் சென்னை நகரத்தின் ஷெரீப்பாக நியமிக்கப்பட்டார்.

1948 ஏப்ரல் 29ஆம் நாள் ஜி.ஏ.நடேசன் அவர்கள் தனது 74ஆம் வயதில் காலமானார். தனது இறுதி மூச்சு உள்ளவரையிலும் இவர் அயராது உழைத்து வந்தவர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும். 




No comments: