கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல அரசியல் தலைவர்களைப் பார்த்து வருகிறேன். மகாத்மா காந்தியடிகள் தொடங்கி, இன்றைய இளம் தலைமுறை தலைவர்கள் வரையில் பலரது குணாதிசயங்களைக் கண்டு சிலரிடம் மதிப்பும், சிலரிடம் வெறுப்பும், சிலரிடம் அலட்சியப் போக்குமாக இப்படி பலதரப்பட்ட எதிர்வினைகளை நான் கடைபிடித்து வருகிறேன். தனி நபருடைய விருப்பு வெறுப்புகள் அரசியல் தலைவர்களை ஒன்றும் செய்துவிடப் போவதில்லை; ஆனால் எந்தவித பலனையும் எதிர்பாராமல் பொதுவாக அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளை கவனிப்பவர்களின் கருத்து எப்போதும் வெகுஜன கருத்தாகத்தான் இருக்க முடியும்.
1.வேதாரண்யம் வேதரத்தினம்
பிள்ளை.
முதன் முதலாக பாபு ராஜேந்திர பிரசாத் தமிழகத்துக்கு வந்தார். அவரை அழைத்து வந்தவர் வேதாரண்யம் வேதரத்தினம் பிள்ளை. பட்டுக்கோட்டை சின்னக்கடைத் தெருவில் ஒரு பொதுக்கூட்டம். அப்போது பட்டுக்கோட்டை ஜஸ்டிஸ் கட்சியின் கோட்டை. நாலைந்து பெஞ்சுகளைப் போட்டு அதில் சில நாற்காலிகள். வேதரத்தினம் பிள்ளை பேசிக்கொண்டிருக்கிறார். பாபு ராஜேந்திர பிரசாத் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். மேடைக்குப் பின்புறமும் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் கையில் வைத்திருந்த குடையின் முனையால் ராஜன்பாபுவின் இடுப்பில் குத்திக் கொண்டிருந்தனர். திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்த அவர் ஒரு கட்டத்தில் வலி தாங்காமல் எழுந்து கொண்டார். அவர் கண்களில் கண்ணீர். இதனை அறிந்த வேதரத்தினம் பிள்ளை எழுந்து பேசினார். பாபு ராஜேந்திர பிரசாத் பிஹாரில் மிகப் பெரிய தலைவர். அங்கு நிகழ்ந்த பூகம்பத்தின் போது இவர் தனியொரு மனிதனாக இருந்து நிவாரணங்களை மக்களுக்கு வழங்கி சேவை செய்தவர். அப்படிப்பட்டவரின் அருமை தெரியாமல் இங்கு சிலர் அவரைக் குடையால் குத்தி அவமதிக்கிறார்கள். அவர் சிந்திய கண்ணீர் வீண் போகாது. ஜஸ்டிஸ் கட்சியின் கோட்டையாகத் திகழும் இதே பட்டுக்கோட்டையை காங்கிரசின் கோட்டையாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சவால் விட்டுவிட்டு கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்று விட்டார். பிறகு சில நாட்கள் கழித்து பட்டுக்கோட்டையில் மிகச் செல்வாக்கு உடையவரும் செல்வந்தருமான நாடிமுத்துப் பிள்ளையை ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து காங்கிரசுக்குக் கொண்டு வந்தார். அது முதல் பட்டுக்கோட்டை காங்கிரஸ் கோட்டையாக மாறியது. நியாயத்துக்காகச் சவால் விட்டு சாதித்துக் காட்டிய வேதரத்தினம் பிள்ளையை மறக்க முடியுமா?
2. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான
கிராமணியார்
தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் பாடுபட்ட அருமையான தலைவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார். அவரை ராஜாஜி 'கிராமணி' என்றுதான் அழைப்பார். அவர் மேடையேறினால் தமிழ் ஆற்றொழுக்கோடு அழகாக தவழ்ந்து வந்து விழும். அவர் பேசியதை அப்படியே அச்சிட்டால் ஒரு சிறிய இலக்கணப் பிழைகூட இல்லாமலும், வாக்கியங்கள் முழுமையாகவும் இருப்பதை கவனிக்கலாம். அவர் பேசும் விஷயத்தை அழுத்தம் கொடுக்க அடிக்கடி ஆம்! என்ற சொல்லை பயன்படுத்துவார். மகாகவி பாரதியும் ஓரிடத்தில் "இந்தியா உலகுக்கு அளிக்கும், ஆம்! இந்தியா உலகுக்கு அளிக்கும், ஆம்! ஆம்! இந்தியா உலகுக்கு அளிக்கும்" என்று சொல்லுவான். தான் சொல்லும் கருத்தை வலுவாகச் சொல்லும் பாணி இது. இதனை ஐயா ம.பொ.சி. கையாண்ட விதம் மிகவும் அருமையாக இருக்கும். அவர் பேச்சுக்களை அதிகம் கேட்டிருக்கிறேன், தமிழன் குரல், செங்கோல் போன்ற இதழ்களை விடாமல் படித்திருக்கிறேன். அவர் எந்த நேரத்திலும், யாரையும் பற்றி கடுமையான சொற்களால் தாக்கியதில்லை. அவரைக் காங்கிரசிலிருந்து நீக்கியபோது கூட அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜ் அவர்களைப் பற்றி ஒரு தரக்குறைவான சொல்லைக்கூட பயன்படுத்தியதில்லை. எந்த அரசியல் எதிரியையும் தரக்குறைவாக விமர்சித்ததில்லை. இத்தனைக்கும் அவர் காலத்தில் திராவிட இயக்கத்தை அவரைப் போல வேறு யாரும் எதிர்த்தவர்களும் இல்லை எனலாம். அத்தகைய 'மகான்' போல ஒரு தலைவர் இன்று இல்லையே என்கிற ஏக்கம் மட்டும் என்றென்றைக்கும் உண்டு.
3. கு.காமராஜ்.
பெருந்தலைவர் காமராஜ் என்று போற்றி பாராட்டப்பட்ட கு.காமராஜ் அவர்கள் அரசியலில் நெளிவு சுளிவுகளை நன்கு கற்றறிந்தவர். ஏட்டறிவினால் தலைவராக ஆனவர் அல்ல அவர், ஆனால் அனுபவ அறிவினால் இந்த அகிலத்தைக் கட்டியாண்டவர். அவரது தோற்றமே தமிழகத்தின் நகர்ப்புறமல்லாத கிராமப்புற மனிதரின் தோற்றத்தை நினைவு படுத்தக் கூடியது. தனது உடை அலங்காரம், பேச்சு, தன்னுடைய கவுரவம், தன் நிலைமைக்கு இப்படி கண்ட இடங்களில் காரிலிருந்து இறங்கி ஏழை எளிய தெருவோர மக்களிடம் பேசினால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கருதாமல் காரியமே கண்ணாக அவர்களது குறைகளைக் கேட்டறிந்து நன்மைகள் பல செய்தவர். அரசியலில் சாணக்கியத் தனம் சிறிதும் குறைந்தவர் அல்ல அவர். ஆனானப்பட்ட ராஜாஜியையே சமாளித்த காங்கிரஸ்காரர் என்றால் பார்த்துக் கொள்ளலாம் அவரது திறமையை. சுதந்திர இந்தியாவில் முதல் தேர்தல் வந்தது. சிறைக்குச் சென்ற பல தியாகிகள் சட்டமன்ற தேர்தலில் நிற்க விரும்பினார்கள். ஆனால் தியாகம் வேறு, தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேறு. 1952 தேர்தலில் எப்படியும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டுமென்கிற சூழ்நிலை. அப்பை சப்பையாக யாரையாவது நிறுத்திவிட்டு தோல்வி அடைந்துவிட்டால் காங்கிரசின் எதிர்காலம் என்னாகும்? தேர்தலுக்குப் பணமும் செலவு செய்ய வேண்டும், செல்வாக்கும் இருக்க வேண்டும், வெறும் தியாகமும் சிறை சென்றதும் மட்டும் வெற்றியைத் தந்து விடுமா? அதனால் சில தியாகிகள் புறக்கணிக்கப்பட்டு அதுவரை எதிர்கட்சியில் இருந்தவர்களையும், அரசியலில் ஈடுபடாமல் இருந்த செல்வந்தர்களையும் காங்கிரசுக்கு இழுத்து சீட் கொடுத்து வெற்றி பெற வைத்தார். காரைக்குடியில் சா.கணேசனுக்கு, அரக்கோணத்தில் ஜமதக்னிக்கு இப்படி பலருக்கு சீட் இல்லை. ஆனால் இதில் பெருந்தலைவரின் அரசியல் வெற்றி பெற்றது. தியாகியாகவே வாழ்ந்து தியாகியாகவே மறைந்த மாபெரும் தியாகி காமராஜ் அவர்கள்.
4. ப.ஜீவானந்தம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள், அவர்கள் நடத்திய போராட்டங்கள், பிறகு ஜனநாயகப் பாதையை ஏற்றுக்கொண்டு தேர்தல் முறைக்கு வந்து அரசியல் நடத்தியது இவை அத்தனையும் அவர்களுடைய நேர்மையைப் பறை சாற்றுவதாக இருந்தது. அதிலும் தொடக்க காலத்திய கம்யூனிஸ்ட் தலைவர்களான ப.ஜீவானந்தம், கே.டி.ராஜு, எம்.கல்யாணசுந்தரம், மணலி கந்தசாமி, ஏ.எம்.கோபு, எம்.காத்தமுத்து போன்றவர்கள் குறிப்பாகத் தஞ்சை மாவட்டத்தில் அதிகம் அரசியல் செய்தவர்கள். ஒருமுறை கரூர் திருவள்ளுவர் விளையாட்டுத் திடலில் நடந்த பொருட்காட்சியில் கலை அரங்கத்தில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சு மக்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டு வந்து அரங்கத்தினுள் நுழைய வைத்தது. அவர் பேசிக்கொண்டிருந்தது ரவீந்திரநாத் தாகூரின் "கீதாஞ்சலி". ஆங்கிலத்திலிருந்து கீதாஞ்சலி வரிகளைத் தமிழாக்கி மிக அழகாக நிதானமாகச் சொல்லி வந்ததை ரசிக்காத மக்களே இல்லை. அதுவரை கீதாஞ்சலியைப் படிக்காதவர்களைக் கூட தேடிக் கண்டுபிடித்து படிக்க வைத்த பேச்சு அது. தமிழுக்குக் கிடைத்த மிக உயர்ந்த பண்பாளர் ப.ஜீவானந்தம்.
5. எம்.காத்தமுத்து.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர் எம்.காத்தமுத்து. இன்றைய அரசியல் தலைவர்களைப் போல அவரை நினைக்க முடியாது. மிகவும் எளிமையானவர். நாகைப்பட்டினமோ அல்லது திருத்துறைப்பூண்டியோ அவரது தொகுதி என்று நினைக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அவரை அணுகலாம். ஒரு தொழிற்சங்கம் நடத்திய போராட்டம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. அவர்களுடைய போனஸ் நிறுத்தப்பட்டது திருமதி இந்திரா காந்தி காலத்தில் அப்போது இத விஷயம் டெல்லி நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த விவரங்களை நேரடியாக அறிந்து கொள்ள அவரை அடிக்கடி சந்தித்தோம். அவர் சென்னையிலிருந்து தஞ்சைக்கு ராமேஸ்வரம் விரைவு வண்டியில்தான் வருவார். அது காலை சுமார் 5 மணியளவில் தஞ்சைக்கு வரும். அவர் கையில் ஒரு சிறிய தோல்பெட்டி, ஒரு ஹோல்டால் இவற்றுடன் இறங்குவார். அவரை அழைக்கச் செல்லும் நாங்கள் அவற்றை வாங்கிக் கொள்ள விரும்பி கேட்டபோது, அவர் சொன்னது இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் சொன்னார், "அவரவர் சுமையை அவரவரே சுமக்கத்தான் வேண்டும். நாம் செய்ய வேண்டிய எந்த காரியத்தையும் வேறு ஆட்களிடம் ஒப்படைப்பது தவறு. நம் வேலையை மிகவும் அக்கறையோடு நம்மால் மட்டும்தான் கவனிக்க முடியும். அதே அக்கறையுடன் அடுத்தவர் செய்வார் என்று எதிர்பார்க்க முடியுமா?" என்றார். அவர் சொன்னது மனதில் பளீரென்று உறைத்தது. இன்னொரு முறை ராமேஸ்வரம் வண்டியில் தஞ்சையிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அவர் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்வார் என்று நினைத்திருந்த எனக்கு அவரும் அவருடன் வேறு சிலரும் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தது ஆச்சரியம் தந்தது. இரவு வெகுநேரம் அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு பயணம் செய்தேன். விழுப்புரம் தாண்டியது தூங்கிவிட்டேன். எழும்பூர் சென்றதும் நாங்கள் இறங்கி நடந்தோம். அவர் எழும்பூரில் பீப்பிள்ஸ் லாட்ஜ் எனும் விடுதியில் தங்குவார். காரணம் அங்குதான் ரூ.5க்கு அப்போது அறை கிடைக்கும். நிலையத்தை விட்டு வெளியேறும் இடத்தருகில் இன்னொரு இடதுசாரிக் கட்சி எம்.பி. ஒருவர் வெளியே போய்க்கொண்டிருந்தார். அவரை வரவேற்க சிலர் வந்து அவரது சிறிய கைப்பெட்டியை வாங்கிக் கொண்டு போர்ட்டிகோவில் நின்று கொண்டிருந்த காரின் கதவை திறந்துவிட்டு ஏறிக்கொண்டு போயினர். தோழர் எம்.காத்தமுத்து புன்னகை புரிந்தார். என்ன சிரிக்கிறீர்கள் என்றேன். அவர் சொன்னார், எந்த கம்யூனிஸ்டுக்கு பெட்டியைச் சுமந்துகொண்டு, காரையும் திறந்துவிட்டு அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்கள் என்றார், புரிந்து கொண்டேன்.
இன்னமும் பல தலைவர்களைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். அடுத்தடுத்து சொல்லுகிறேன். பயனுள்ளதாக இருக்கிறதோ, இல்லையோ, இப்படியும் சில தலைவர்கள் இங்கு இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்வதற்காகத்தான் இந்தக் கட்டுரை.
1 comment:
அருமையான பகிர்வு
புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
Post a Comment