"நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்"
நாஞ்சில் நாட்டில் நிலவி வந்த ஒரு சமுதாய வாழ்க்கை முறையை அறிந்திராதவர்களுக்கு இது என்ன புதிதாக இருக்கிறதே என்ற வியப்பு ஏற்படலாம், நாஞ்சில் நாடு எனப்படுவது இப்போதைய கன்னியாகுமரி மாவட்டம் என்று சொல்லலாம். இது அந்த நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட பிரதேசமாக இருந்தது. இந்தப் பகுதியில் பூர்வீகக் குடிகள் தவிர, சேர, சோழ, பாண்டிய நாட்டிலிருந்தெல்லாம் மக்கள் வந்து குடியேறி வாழ்ந்து வந்தனர்.
இப்படி பல பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து குடியேறியவர்கள் தத்தமது நாட்டின் கலாச்சாரத்தையே பின்பற்றி வாழ்ந்து வந்திருக்கின்றனர். நாஞ்சில் நாட்டு வேளாளர்கள் பெரும்பாலும் பாண்டிய தேசத்தவர்கள். அவர்களுடைய குலதெய்வங்கள் பாண்டிய நாட்டில் பரவிக் கிடந்தன. அவர்கள் திருமண பந்தங்களையும் பாண்டிய நாட்டிலேயே செய்து கொண்டனர்.
ஆனால் அன்றைய நாஞ்சில் நாட்டை ஆண்ட மன்னர்கள் சேர அரச வம்சத்தினர். தங்கள் ராஜ்யத்தின் ஒரு பகுதியில் வந்து குடியேறிய பாண்டிய நாட்டார் தங்கள் பந்த பாசங்களைத் தங்கள் பூர்வீக மண்ணுக்குத் தந்து வந்ததில் இந்த சேர மன்னர்களுக்கு அதிருப்தி உண்டு. ஆகையால் இவர்களையெல்லாம் தங்கள் நாட்டின் நிலைக்குடிகளாக செய்துவிட சேர அரசர்கள் எண்ணினார்கள்.
இங்கு ஒரு கர்ண பரம்பரைச் செய்தி கூறப்படுகிறது. கர்ண பரம்பரை என்றால் செவிவழி சொல்லப்பட்டு வந்த செய்தி. ஒரு சேர அரசன் இந்த வேளாளர் மக்கள் தங்கள் பூர்வீக நாட்டுக்குப் போய்விடாதபடிக்கு இவர்களுக்கு ஒரு புதிய சட்டத்தை உருவாக்கினான். அதுதான் "மருமக்கள் தாயம்" எனப்படும் சட்டம். இதற்கு சரியான உறுதியான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் செவிவழி சொல்லப்படும் செய்தி இதுதான்.
சரி! இனி விஷயத்துக்கு வருவோம். அது என்ன "மருமக்கள் தாயம்". நாஞ்சில் நாட்டு வேளாளன் ஒருவனின் பூர்வீகச் சொத்து அவனது சகோதரியின் குழந்தைகளுக்குத் தாய முறைப்படி போய்ச்சேரும். அவனுடைய குழந்தைகளுக்கு ஏதோ சிறிய உரிமை மட்டும் தரப்படும், அதைத் தவிர பெருமளவு சொத்தும் மருமக்களுக்குத்தான் போய்ச்சேரும். இதை 'உகந்துடமை' என்பார்கள்.
இப்படிப்பட்ட சமூக நிலைமை காரணமாக நாஞ்சில் நாட்டு வேளாளர்கள் சொத்துரிமை இல்லாத தங்களது சொந்தக் குழந்தைகள் ஒரு புறம், மாமனின் சொத்துக்களை அனைத்தையும் பெற்றுக் கொண்டு செழித்து நிற்கும் அவன் சகோதரியின் குழந்தைகள் ஒரு புறம் என்று மக்கள் திண்டாடித் திணறிக் கொண்டிருந்தனர். பொதுவாக ஒரு தந்தையின் அன்பும், பாசமும் தன்னுடைய மக்களுக்குத்தான் இருக்கும். ஆனால் செயற்கையாகக் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டம் அதற்கு மாறாக சொத்தை சகோதரி மக்களுக்குக் கொடுத்துவிட்டுத் தன் மக்கள் திண்டாடுவதைப் பார்க்கும் அவலம் ஏற்பட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொத்துத் தகறாறு இந்தப் பகுதியில் ஏராளமாக உருவாகி நீதிமன்றம், வழக்கு என்ற நிலை ஏற்பட்டது. இது தவிர நாஞ்சில் நாட்டில் ஒருவன் பல தாரங்களை மணந்து கொள்ளலாம். கணவன் இறந்த பிறகு அந்த விதவை மறுமணம் செய்துகொள்ளும் உரிமை இருந்தது. அப்படியிருந்தும் பெண்களின் அவலம் அந்தப் பகுதிகளில் மிக அதிகமாக இருந்து வந்தது.
இந்த அநியாய சட்டத்தையும், சமூக மூடப் பழக்கத்தையும் எதிர்த்து ஒரு இயக்கம் நாஞ்சில் நாட்டில் தொடங்கப் பட்டது. நேரடியாக எதிர்த்துப் போராடியவர்கள் தவிர சில பெரியோர்கள் மறைமுகமாக இந்த அநியாயங்களை எதிர்க்கத் தலைப்பட்டனர்.
அப்படிப்பட்ட பெரியோர்களில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் ஒருவர். இவர் நேரடியான போராட்டம் நடத்தி இந்த சமூக அவலத்தை எதிர்க்காமல் ஒரு வேலை செய்தார். அப்போது "மலபார் குவார்டர்லி ரெவ்யூ" என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடந்து வந்தது. அதில் இவரைப் போன்ற பெரியோர்கள் கொடுமையான இந்தச் சட்டத்தை எதிர்த்தும், கேலி செய்தும், பெண்களின் அவலங்களைச் சுட்டிக் காட்டியும் ஆங்கிலத்தில் கட்டுரைகளை எழுதி வந்தார்கள். இந்த வகையில் இவர்களுடைய எதிர்ப்பு பெருமளவில் மக்கள் மத்தியில் பரவியது. ஆட்சியாளர்கள் பார்வைக்கும் இவைகள் போய்ச்சேர்ந்தன.
அப்போதுதான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் மருமக்கள் வழி மான்மியம் எனும் கவிதை வடிவிலான ஒரு காவியத்தைப் படைத்துத் தன் பெயரைப் போடாமல், புனை பெயரில் பத்திரிகையில் எழுதி வெளியிட்டார். அந்தக் காவியம் படிப்பதற்கு ஒரு நகைச்சுவைக் காப்பியம் போலத் தோன்றும்.
இந்தக் காப்பியத்தில் நாஞ்சில் நாட்டு வேளாளர் குலப் பெண் ஒருத்தி. தன்னுடைய வாழ்நாளில் நடந்த துயரங்களையெல்லாம் சொல்லிச் சொல்லி வருந்துகிறாள். இவள் ஒரு பரம ஏழை. தன்னுடைய பதினாறாம் வயதில் செல்வந்தர் ஒருவருக்கு ஐந்தாம் மனைவியாகப் போகிறாள். கணவன் வீடு எப்படி இருந்தது தெரியுமா?
இவள் கணவன் வீட்டில் இவளது மாமியார், சக்களத்திகள், மதனி. இவர்கள் அனைவரும் இவளைப் படுத்திய பாடு, அப்பப்பா, படிப்போர் கண்களில் கண்ணீர் கொட்டும். இப்படி இவள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாளில், இவள் கணவனுக்கும், அவனுடைய மருமகனுக்கும் குடும்ப விஷயமாகப் பிணக்கு ஏற்பட்டு விடுகிறது. பிணக்கு முற்றி வழக்காக மாறி நீதிமன்றம் சென்றது.
வழக்கு நடந்தது. வாய்தா, வாய்தா, வழக்கு முடிவில்லாமல் சென்றது. அந்த நீண்ட நெடிய பயணத்தின் இடையே அந்தக் கணவன் வியாதியால் படுக்கையில் வீழ்ந்து விட்டான். அப்படி அவன் படுத்துக் கிடக்கும் நாளில் அவனுக்கு இழைக்கப்பட்ட துன்பங்கள் கணக்கிலடங்கா. அவனுக்கு மரணம் நெருங்கி வந்துவிட்டது என்பது புரிந்தது. தன் மருமகனை அழைத்துத் தன் மக்களை அவனிடம் ஒப்படைத்து அவர்களைக் காப்பாற்றும்படி வேண்டிக் கொண்டான்.
என்ன கொடுமை. அவன் உயிர் பிரிந்ததுதான் தாமதம். அவனுடைய மனைவியும் குழந்தைகளும் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு விரட்டப்பட்டார்கள். அந்தத் துயரமான சமயத்தில் அந்தப் பெண் தங்கள் குல வழியில் நிலவிவரும் இந்த மருமக்கள் வழித் தாயத்தை இழித்தும் பழித்தும் புலம்புவதாக அமைந்து இந்தக் காவியம்.
அந்தப் பெண்ணின் கணவனுக்கு இவள் ஐந்தாவது மனைவி என்பதைப் பார்த்தோமல்லவா. இந்த காவியத்தில் அந்தக் கணவனுடைய மருமகன் தன் மாமனைப் பார்த்துச் சொல்வதாக வரும் வரிகள் இதோ.
"ஆரைக் கேட்டு நீர் ஐந்து கலியாணம்
அடுக்கடுக் காகச் செய்தீர் ஐயா!
பட்டப் பெயரும் பஞ்ச கலியாணிப்
பிள்ளை யென்று நீர் பெற்று விட்டீரே!"
இன்னொரு இடத்தில் அந்த மருமகனின் தந்தை வீரபத்திர பிள்ளை வந்து தன்னுடைய மகனுக்காக இவள் கணவனிடம் சண்டையிடுகிறான். அப்போது அவன் சொல்லும் சொற்கள்:
"வைய வைய வைரக்கல்லும்
திட்டத் திட்டத் திண்டுக்கல்லும்"
கணவன் உடல் நலம் கெட்டுப் படுத்த படுக்கையாகி தவிக்கும் காட்சி.
"படிப் படியாய் இப்படி அவர் பாடு
குறைந்து குறைந்து கொண்டே வந்தது
அண்டை வீடாகி, அறைப்புரை யாகி;
படிப்புரை யாகிப் பாயிலும் ஆனார்
எழுந்து நடக்க இயலா தானார்
நடந்தவர் கீழே நடந்தார், அம்மா!"
கணவன் இறக்கும் தருவாயில் அவனுக்கு அளிக்கப்பட்ட மரியாதை.
"கணவர்க்கு அந்திம காலம் தண்ணீர்
குடிக்கும் பாத்திரம் குடுக்கை ஆனதும்
பரந்த சட்டி படிக்கம் ஆனதும்
பாலும் அன்னப் பாலே ஆனதும்"
அவன் சாகும் காட்சி
"ஏங்கி அழுத எங்களை நோக்கினார்
வாடி அழுத மக்களை நோக்கினார்
கடவுளை எண்ணிக் கையை எடுத்தனர்
கண்ணை மூடினர், கயிலை போய்ச் சேர்ந்தனர்."
நாலு கால்கள் உள்ள ஒரு பெரிய யானையின் மீது உட்கார்ந்திருக்கும் ஈ ஒன்று தான் அந்த பெரிய யானையை ஓட்டிச் செல்வதாகச் சொல்லிக் கொள்ளுமாம். அதுபோல வக்கீல் குமாஸ்தா நாலு கைகள் உள்ள ஒரு பெரிய கருப்புக் கோட்டை அணிந்த வக்கீலைத் தான்தான் வழிநடத்துவதாகப் பீற்றிக் கொள்வானாம். இதெல்லாம் நீதிமன்ற காட்சிகளில் தருகிறார்.
கோர்ட்டுக்குப் போக வேண்டாம். உங்கள் காசு பணத்தை இழக்க வேண்டாம் என்று கவிஞர் சொல்லும் பகுதியைப் படிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கும். அவர் சொல்லுகிறார்.
"குத்தி ரத்தம் குடித்திடும் ஐயா!
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்!
குதித்துக் குடியைக் கெடுத்திட வேண்டாம்!
'இன்ன படியென்று எழுதிவிட்ட
சிவனே வரினும் சிறிதும் அஞ்சேன்."
"வீட்டை விட்டு வெளிவரா உமக்கு
கோர்ட்டுக் காரியம் கொஞ்சமும் தெரியுமோ?
பாரப் படிகளும் பட்டிகைப் படிகளும்
சாக்ஷிப் படிகளும் சமன்ஸுப் படிகளும்
ஜப்திப் படிகளும் வாசற் படிகளும்
ஏணிப் படிகளும், இப்படி அப்படி
எல்லாப் படிகளும் ஏறி இறங்கி,
வாணாள் கொடுத்து வாண தீர்த்தம்
ஆட ஆளும் நீரோ" ஐயா!
கோர்ட்டு பீஸு, குமாஸ்தா பீஸு,
கூடிக் காப்பி குடிக்கப் பீஸு,
வெற்றிலை வாங்கிட வேறொரு பீஸு,
வக்கீல் பீஸு, மகமைப் பீஸு,
வக்காலத்து வகைக்கொரு பீஸு,
எழுதப் பீஸு, சொல்லப் பீஸு,
எழுதிய தாளை எடுக்கப் பீஸு
நிற்கப் பீஸு, இருக்கப் பீஸு,
நீட்டின கையை மடக்கப் பீஸு,
பாரப் பீஸு, கீரப் பீஸு,
பார இழவு பயிற்றுப் பீஸு,
கண்டு பீஸு, காணாப் பீஸு,
முண்டுத் துணிக்கொரு முழு மல் பீஸு,
அந்தப் பீஸு, இந்தப் பீஸு,
ஆனைப் பீஸு, பூனைப் பீஸு,
ஏறப் பீஸு, இறங்கப் பீஸு,
இப்படியாக என்றென்றைக்கும்
பீஸு பீஸாகப் பிச்சுப் பிடுங்கும்
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்
குதித்துக் குடியை முடித்திட வேண்டாம்."
வழக்கில் வாதாடி, குறுக்கு விசாரணை நடத்தி அனைவரையும் திகைக்க வைக்கும் சாமர்த்தியமான வக்கீல் எப்படி நடந்து கொள்வாராம்.
".............. வக்கீல் உம்மைக்
கூட்டில் ஏற்றிக் குறுக்கு மறுக்காய்க்
கிராஸு கேட்டுக் கிடுக்கி விடுவான்;
சந்தேகமில்லை, சந்தேகமில்லை நீர்
அண்டப் புரட்டனை அறிய மாட்டீர்
புத்தியில் பெரியவர், பொல்லாத வம்பர்
ஆளும் தரமும் அறிந்திட வல்லவர்
சீரும் திறமும் தெரிந்திடச் சமர்த்தர்
ஆடிக் கறப்பதை ஆடிக் கறப்பார்
பாடிக் கறப்பதைப் பாடிக் கறப்பார்
தயவாய்ச் சொல்லுவார், தக்கில் கேட்பார்
இரைந்து சொல்வார், எச்சில் எழும்புவார்;
பார் பார் என்பார், பல்லைக் கடிப்பார்
போருக்கு நிற்பார், புலிபோல் பாய்வார்,
அங்கும் இங்கும் அசையாதே என்பார்
குனியாதே என்பார், கோட்டைப் பார் என்பார்
கோட்டையும் கூடக் கூட்டாக்காமல்
கேள்விகள் பலவும் கேட்க வருவார்.
ஓடும் குதிரைக்கு உச்சியில் கொம்புகள்
ஒன்றா? இரண்டா? உடன் சொல் என்பார் - நாம்
குதிரைக்கு ஏது கொம்புகள் என்றால் - அது
கோர்ட்டு அலட்சியக் குற்றம் என்பார்.
கேள்வியை நன்றாய்க் கேட்டுச் சொல்லும்
இரண்டா? ஒன்றா? என்பது என் கேள்வி:
உண்டா, இல்லையா? என்று நான் உம்மிடம்
கேட்டேனா ஓய்! காது கேட்காதோ?
என்றெல்லாம் சொல்லி ஏமாற்றி விடுவார்."
கோர்ட்டுக்குச் செல்லாதீர்கள் என்று கவிஞர் சொல்லும் வாசகங்களைக் கேளுங்கள்.
"பள்ளியில் பாடம் படிக்கவில்லையோ?
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்
அரை அடி சுவருக்காக ஐக்கோர்ட்டு
வரையிலும் ஏறி வழக்குப் பேசி
அந்திபுரத்து மந்திரம் பிள்ளை
அடியோடு கெட்டது அறிய மாட்டீரோ?
வடக்கு வீட்டு மச்சம்பியும் அவர்
மருமக்களுமாய் வருஷம் எட்டாக
மாறி மாறி வாதம் செய்து
யாவையும் போக்கி, இரவா வண்ணம்
இரந்து திரிவதை இவ்வூரில் நாம்
கண்ணால் இன்று காணவில்லையோ?
வேலுப் பிள்ளை வீட்டு நம்பரில்
ஐந்தாம் சாக்ஷி ஆண்டி அவனை
அழ அழப்படுத்தி அறுபது ரூபாய்
வாங்கிக் கொண்டு மேல் வாய்தாத் தோறும்
வீட்டுக் காரியம் வெட்ட வெளிச்சம்
முட்டப் பஞ்சம், மூதேவி வாசம்
பானையிலே பத்து அரிசி இல்லை
உப்போ புளியோ ஒன்றுமில்லை
உச்சிக்கு எண்ணெய் ஒரு துளி இல்லை
தொட்டில் கட்ட துணியுமில்லை
காந்திமதிக்கு கண்டாங்கி இல்லை
எனக்கும் வேட்டி யாதொன்று மில்லை
இப்படி இருக்க, எப்படி உமக்காய்
கோர்ட்டில் மொழி நான் கொடுக்க வருவேன்?
பின்பு வழக்காடுவதுதான் எப்படியாம்? என்று நாம் கேட்பதாக வைத்துக் கொள்வோம். அதற்கு கவிமணி, மனியான வாக்கால் சொல்லுகிறார்.
"ஐயா! ராஜி ஆவதே உத்தமம்!
ஐயா! ராஜி ஆவதே உத்தமம்!
இப்படி இந்த காவியத்தின் நயத்தைச் சொல்லி மாளாது. ஒரு முறை படித்தே பார்த்து விடுங்களேன்.
நாட்டில் நிலவும் இத்தகைய அநியாயச் சட்டம் ஒழியாதோ, எங்கள் அவலம் தீராதோ என்று அந்த ஐந்தாம் மனைவி, கணவனை இழந்து கதறும் காட்சியில்
"கற்றவர் உளரோ! கற்றவர் உளரோ!
பெற்ற மக்களைப் பேணி வளர்த்திடாக்
கற்றவர் உளரோ! கற்றவர் உளரோ!
அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!
வறுமைக்கு இரையாய் மக்களை விரட்டிடும்
அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!
நீதியும் உளதோ! நீதியும் உளதோ!
மாதர் கண்ணீர் மாறா நிலத்தில்
நீதியும் உளதோ! நீதியும் உளதோ!
தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!
பொய்வழிப் பொருளைப் போக்கும் இந்நிலத்தில்
தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!
இந்தக் காவியம் திருவனந்தபுரத்திலிருந்து வெளியான "தமிழன்" எனும் பத்திரிகையில் 1917ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி பகுதி பகுதியாக வெளியாகி 1918 பிப்ரவரியில் நிறைவடைந்தது.
பல அறிஞர்கள் இந்தப் பிரச்சினையை எழுப்பிப் பரப்பி வந்த காலகட்டத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த சர் சி.பி.இராமசாமி ஐயரின் முயற்சியால் ஒரு சீர்திருத்த மசோதா 1926இல் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டது. 1927இல் இந்த சட்டம் அமலானது. மக்களை வாட்டி வந்த மருமக்கள் தாயம் எனும் பழக்கமும் முடிவுக்கு வந்தது. ஒரு நல்ல சீர்திருத்தத்துக்கு ஒரு தமிழ்க் காவியம் உதவியிருக்கிறது.