பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, April 24, 2015

29. செய்கை


       வேதபுரத்தில் வேதபுரீசர் ஆலயம் என்ற சிவன் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியக் கடவுளுக்குப் பல அடியார் ரத்தமிழைத்த வேல் சாத்தும் கிரியை சென்ற திங்கட்கிழமை மாலையிலே நிகழ்ந்தது. அன்று காலையில் ஸ்வாமிக்குப் பலவிதமான அபிஷேகங்கள் நடந்தன. சந்தனாபிஷேகம் நடக்கும் சமயத்தில் நான் ஸந்நிதிக்குப் போய்ச் சேர்ந்தேன். எனக்கு முன்னாகவே என்னுடைய சிநேகிதர் பிரமராய அய்யர் அங்கு வந்து தரிசனம் பண்ணிக்கொண்டிருந்தார்.

       "சூரபத்மனை அடித்த உஷ்ணம் அமரும் பொருட்டாக எம்பெருமான் சந்தனாபிஷேகம் செய்து கொள்ளுகிறான்" என்று பிரமராய அய்யர் சொன்னார். அங்கே ஒரு பிச்சி (பித்துப் பிடித்துக் கொண்டவள் போலே காணப்பட்ட பெண்) வந்து கந்தர் ஷஷ்டி கவசம் சொல்லிக் கொண்டு ஸந்நிதியிலே நின்று நர்த்தனம் செய்தாள். இந்த வினோதமெல்லாம் கண்டு பிறகு தீபாராதனை சேவித்துவிட்டு நானும் பிரமராய அய்யரும் திருக்குளத்துக்கரை மண்டபத்திலே போய் உட்கார்ந்தோம். அங்கே விடுதலையைப் பற்றி பிரமராய அய்யர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார். பிறகு நாட்டியத்தைப் பற்றிக் கொஞ்சம் சம்பாஷணை நடந்தது. சங்கீதத்தில் நம்மவர் தற்காலத்தில் சோக ரஸம், சிங்கார ரஸம் என்ற இரண்டு மாத்திரம் வைத்துக் கொண்டு மற்ற ஏழையும் மறந்து போய்விட்டது போல, நாட்டியத்திலும் சோகம், சிங்காரம் இரண்டு தான் வைத்திருக்கிறார்கள்.

        மற்ற ஏழும் ஏறக்குறைய கிருஷ்ணார்ப்பணம் என்று பலவிதமாகப் பேசினார். நாட்டியம் மிகவும் மேலான தொழில். இப்போது அந்தத் தொழிலை நமது நாட்டில் தாஸிகள் மாத்திரமே செய்கிறார்கள். முற்காலத்தில் அரசர் ஆடுவதுண்டு. பக்தர் ஆடுவது லோக பிரசித்தம். கண்ணன் பாம்பின் மேலும், சிவன் சிற்சபையிலும் ஆடுதல் கண்டோம். கணபதி, முருகன், சக்தி முதலிய தெய்வங்களுக்கெல்லாம் தனித் தனியே பிரத்தியேகமான கூத்துவகைகள் சாஸ்திரங்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன. கவலையை வெல்லுதல் குறி. கவலை நீங்கினால் ஆட்டமும் பாட்டமும் இயற்கையிலே பிறக்கும். பூர்வீக ராஜாக்கள் அனுபவித்த சுகமும் அடைந்த மேன்மையும் இக்காலத்தில் இல்லை. ராஜயோகியானால் அவனுக்கு நாட்டியம் முதலிய தெய்வக் கலைகள் இயற்கையிலே சித்தியாகும்.

         இங்ஙனம் பிரமராய அய்யர் பேசிக்கொண்டிருக்கையில் அவ்விடத்துக்கு மேற்படி கோயில் தர்மகர்த்தாவாகிய வீரப்ப முதலியாரும் வந்து சேர்ந்தார். வீரப்ப முதலியார் நல்ல தீரன்; பல பெரிய காரியங்களை எடுத்துச் சாதித்தவர். இவருடைய குமாரன் மகா வீரனென்று போர்க்களத்தில் கீர்த்தியடைந்திருக்கிறான். இவர் வந்தவுடனே சம்பாஷணை கொஞ்சம் மாறுபட்டது. ஏதேதோ விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோவில் பணிவிடைக்காரன் ஒருவன் கையிலே மஞ்சள் காயிதங்கள் கொண்டு வந்து ஆளுக்கொன்று வீதம் கொடுத்தான். அதென்ன காகிதமென்றால், அன்று மாலை கோயிலில் நடக்கப்போகிற பெரிய பாளையம் மடாதிபதியின் உபந்நியாசத்துக்கு எல்லாரும் வந்து "சிறப்பிக்கவேண்டும்" என்ற அழைப்புக் காயிதம்.

அந்தக் காயிதத்தின் மகுடத்தில் ஒரு விருத்தம் எழுதியிருந்தது. அவ்விருத்தத்தின் பின்னிரண்டடிகள் பின் வருமாறு:

      "தோகை மேல் உலவும் கந்தன் 
         சுடர்க் கரத்திருக்கும் வெற்றி 
      வாகையே சுமக்கும் வேலை 
         வணங்குவ தெமக்கு வேலை."


(மயிலின் மேலே உலவுகின்ற கந்தனுடைய கையில் வெற்றி மாலை சூடி நிற்கும் வேலாயுதத்தை வணங்குவதே நம்முடைய தொழில்.)

         இவ்விரண்டு பாதங்களையும் படித்துப் பார்த்துவிட்டு பிரமராய அய்யர் "நல்ல பாட்டு" என்றார். வீரப்ப முதலியார் பின்வருமாறு பிரசங்கம் செய்யலானார்:

        "கேளும் காளிதாஸரே, பிரமராய அய்யரே, நீரும் கேளும். தெய்வத்தைப் போற்றுவதே நம்முடைய வேலையென்றும், அதைத் தவிர நமக்கு வேறு எவ்விதமான தொழிலும் கிடையாதென்றும் சொல்லிக் கொண்டிருப்போர் சோம்பரில் முழுகிப் போய்த் தம்முடைய வாணாளையும் வீணாகச் செய்து பிறரையும் கெடுக்கிறார்கள். செய்கை பிரதானம். செய்கையை விடுதல் பாவம். கடவுள் நமக்கு ஐம்புலன்களையும், அறிவையும் கொடுத்து எப்போதும் உழைப்பினாலேயே தனக்கும் பிறர்க்கும் நன்மை தேடும்படி ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்கு மாறாகச் செய்கையற்றுச் சும்மா இருப்பதை இன்பமென்று நினைப்போர் நாசத்தை அடைவார்கள். தெய்வம், கிய்வம் எல்லாம் வீண் பேச்சு. வேலை செய்தவன் பிழைப்பான் வேலை செய்யாதவன் செத்துப்போவான்" என்றார்.

அப்போது பிரமராய அய்யர்:

             "சோம்பேறி தெய்வத்தின் பெயரை ஒரு முகாந்தரமாகக் காட்டித் தன்னுடைய சோம்பரை ஆதரிப்பதாகச் சொன்னீர்கள்; இருக்கலாம். அதனாலே தெய்வத்தை நம்பிச் செய்கைப் பொறுப்பில்லாமல் இருப்போரெல்லாம் சோம்பேறிகளென்று நினைப்பது குற்றம். உண்மை அப்படியில்லை. இயற்கையின் வலிமையிலே இயற்கையின் கொள்கைப்படி, இயற்கையே மனிதரின் செயல்களை யெல்லாம் நடத்துகிறான். இது மறுக்க முடியாத சத்தியம். இதை உணர்ந்தவன் ஞானி; இந்த ஞானமுண்டாகித் தான் செய்யும் செய்கைகளுக்குத் தான் பொறுப்பில்லை யென்றும் தெய்வமே பொறுப்பென்றும் தெரிந்து கொண்டு நடக்கும் பெரியோர் சோம்பரிலே முழுகிக் கிடப்பதில்லை. அவர்கள் அக்நியைப் போலே தொழில் செய்வார்கள். எப்போதும் ஆனந்தத்திலே இருப்பதனால் அவர்களிடம் அற்புதமான சக்திகள் பிறக்கும். அந்த சக்திகளைக் கொண்டு அவர்கள் செய்யும் தொழில் உலகத்தாருக்குக் கணக்கிட முடியாத நன்மைகளைச் செய்யும். பகவான் கீதையிலே என்ன சொல்லுகிறார்? தெய்வமே செய்கிறது. தான் செய்வதாக நினைப்பவன் மூடன். ஆதலாலே முன் பின் யோசனை செய்யாமல் அப்போதப்போது நேரிடும் தர்மத்தை அனல் போலே செய்ய வேண்டும். ஆதலால், ஹே அர்ஜுனா!

     "வில்லினை யெடடா - கையில 
      வில்லினை யெடடா - அந்தப் 
      புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா! 
      வாடி நில்லாதே - மனம் 
      வாடி நில்லாதே - வெறும் 
      பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே! 
      ஒன்றுள துண்மை - என்றும் 
      ஒன்றுள துண்மை - அதைக் 
      கொன்றி டொணாது குறைத்தலொண்ணாது
! 
      துன்பமுமில்லை - கொடுந் 
      துன்பமுமில்லை - அதில் 
      இன்பமுமில்லை பிற பிறப் பில்லை! 
      படைகளுந் தீண்டா - அதைப்
       படைகளுந் தீண்டா - அனல் 
      சுடவு மொண்ணாது புனல் நனையாது! 
      செய்தலுன் கடனே - அறம் 
      செய்தலுன் கடனே - அதில் 
      எய்தறும் விளைவினில் எண்ணம் வைக்காதே 
      வில்லினை யெடடா"  


என்று பகவான் சொன்னார்.

             ஆதலால் பகவானுக்குத் தொழிலே பொறுப்பில்லை. ஆனால் தொழிலுண்டு. அது தெய்வத்தாலே கொடுக்கப்படும். உண்மையான தெய்வபக்தி யுடையவர்கள் செய்யும் செய்கையினால் கிருதயுகம் விளையும். அவர்கள் எவ்விதமான செய்கையும் தமக்கு வேண்டியதில்லை யென்று உதறி விட்டவுடனே பகவான் அவர்களைக் கருவியாகக் கொண்டு மகத்தான செய்கைகளைச் செய்வான்" என்று பிரமராய அய்யர் சொன்னார்.

            அப்போது வீரப்ப முதலியார் என்னை நோக்கி "உமது கருத்தென்ன?" என்று கேட்டார். நான் "எனக்கெனச் செயல் யாதொன்று மில்லை" என்ற முன்னோர் பாடலை எடுத்துச் சொல்லி சக்தி நாமத்தைக் கூறி "நான் செய்கையற்று நிற்கின்றேன். பராசக்தி என் மூலமாக எது செய்வித்தாலும் அவளுடைய இஷ்டமே யன்றி என்னுடைய இஷ்டமில்லை" என்றேன்.

             இந்தச் சமயத்தில் தண்டபாணிக்குப் பூஜை நடந்து தீபாராதனையாய்க் கொண்டிருப்பதாக ஒருவன் வந்து சொன்னான். எல்லாரும் எழுந்து சேவிக்கப் புறப்பட்டோம். சபை கலைந்தது.


28. கடற்கரை யாண்டி


                 ஒரு நாள், நடுப்பகல் நேரத்திலே, நான் வேதபுரத்தில் கடற்கரை மணலின்மேல் அலைக்கு எதிரே போய் உட்கார்ந்திருந்தேன். காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக் குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான். அலைகள் எதிரே மோதின வடகீழ்த் திசையிலிருந்து சில்லென்று குளிர்ந்த காற்று வீசிற்று. குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் கண் கூசிற்று. சிறிது தொலையில் ஒரு வெளிநாட்டு வியாபாரக் கப்பல் வந்து நின்றது. நானும் பொழுது போகாமல், ஒரு தோணிப் புறத்திலேயிருந்து கடலையும் அலையையும் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தேன். 'அடா! ஓயாமல், ஓ-யா-மல், எப்போதும் இப்படி ஓலமிடுகிறதே! எத்தனை யுகங்களாயிற்றோ! விதியன்றோ இந்தக் கடலை இப்படியாட்டுவது?

               விதியின் வலிமை பெரிது. 'விதியினால் அண்டகோடிகள் சுழல்கின்றன. விதிப்படியே அணுக்கள் சலிக்கின்றன. மனுஷ்யர், தேவர், அசுரர் முதலிய பலகோடி ஜீவராசிகளின் மனங்களும், செயல்களும் விதிப்படி நடக்கின்றன.

              இந்த சூரியன் விதிக்குக் கட்டுபட்டிருக்கிறான். மேகங்களெல்லாம் விதிப்படி பிறந்து, விதிப்படி யோடி, விதிப்படி மாய்கின்றன இவ்வாறு யோசனை செய்து கொண்டிருக்கையிலே அங்கொரு யோகி வந்தார். இவருக்கு வேதபுரத்தார் "கடற்கரையாண்டி" என்று பெயர் சொல்லுவார்கள். ஏழைகள் இவரைப் பெரிய சித்தரென்றும், ஞானியென்றும் கொண்டாடுவார்கள். கண்ட இடத்தில் சோறுவாங்கித் தின்பார். வெயில் மழை பார்ப்பது கிடையாது. சில மாதங்கள் ஓரூரில் இருப்பார். பிறகு வேறெங்கேனும் போய், ஓரிரண்டு வருஷங்களுக்குப் பின் திரும்பி வருவார். இவருடைய தலையெல்லாம் சடை. அரையிலொரு காவித்துணி. வேதபுரத்திலே தங்கும் நாட்களிலே இவர் பெரும்பாலும் கடலோரத்தில் உலாவிக்கொண்டிருப்பார். அல்லது தோணிகளுக்குள்ளே படுத்துத் தூங்குவார். இந்தக் கடற்கரை யாண்டி நடுப்பகலில் நான் அலைகளைப் பார்த்து யோசனை செய்வது கண்டு புன்சிரிப்புடன் வந்து என்னருகே மணலின் மேல் உட்கார்ந்து கொண்டு "என்ன யோசனை செய்கிறாய்?" என்று கேட்டார்.

"விதியைப் பற்றி யோசனை செய்கிறேன்" என்றேன்.

"யாருடைய விதியை?" என்று கேட்டார்.

"என்னுடைய விதியை; உம்முடைய விதியை; இந்தக் கடலின் விதியை; இந்த உலகத்தின் விதியை" என்று சொன்னேன். அப்போது கடற்கரையாண்டி சொல்லுகிறார்:

"தம்பி, உனக்கும், கடலுக்கும், உலகத்துக்கும் விதி தலைவன். எனக்கு விதி கிடையாது. ஆதலால் உங்கள் கூட்டத்தில் என்னைச் சேர்த்துப் பேசாதே" என்றார்.

"எதனாலே?" என்று கேட்டேன்.

அப்போது அந்த யோகி மிகவும் உரத்த குரலில், கடலோசை தணியும்படி பின்வரும் பாட்டை ஆச்சரியமான நாட ராகத்தில் பாடினார்:

"சேல் பட்டழிந்தது செந்தூர் வயற் பொழில்; தேங்கடம்பின்
 மால் மட்டழிந்தது பூங்கொடியார் மனம்; மாமயிலோன்
 வேல் பட்டழிந்தது வேலையும் சூரனும்; வெற்புமவன்
 கால் பட்டழிந்த திங்கென் தலைமேலயன் கையெழுத்தே!"

கந்தரலங்காரத்தில் நான் பலமுறை படித்திருக்கும் மேற்படி பாட்டை அந்த யோகி பாடும்போது, எனக்கும் புதிதாக இருந்தது. மேலெல்லாம் புளகமுண்டாய் விட்டது. முதலிரண்டடி சாதாரணமாக உட்கார்ந்து சொன்னார். மூன்றாவது பதம் சொல்லுகையில் எழுந்து நின்று கொண்டார். கண்ணும், முகமும் ஒளிகொண்டு ஆவேசம் ஏறிப்போய் விட்டது. "வேல் பட்டழிந்தது வேலை (கடல்)" என்று சொல்லும்போது சுட்டு விரலால் கடலைக் குறித்துக் காட்டினார். கடல் நடுங்குவது போல் என் கண்ணுக்குப் புலப்பட்டது.

பிறகு சொன்னார்.

"தெய்வத்தின் வேலாலே கடல் உடைந்தது. மலை தூளாய்விட்டது. சூர்பத்மன் சிதறிப்போனான். அந்த முருகனுடைய திருவடி என் முடிமீது தொட்டது; நான் விடுதலை கொண்டேன். 'விடுதலைப் பட்டது பாச வினை விலங்கே'."


இங்கனம் அவர் சொல்லிக் கொண்டிருக்கையில் மழை வந்துவிட்டது. நானெழுந்து வீட்டுக்குப் புறப்பட்டேன். அவர் அப்படியே அலையில் இறங்கி ஸ்நானம் செய்யப் போனார். நான் மணலைக் கடந்து சாலையில் ஏறும்போது, கடற்புறத்திலிருந்து சிங்கத்தின் ஒலி போலே 'விடுதலை' 'விடுதலை' 'விடுதலை' என்ற ஒலி கேட்டது.





27. கடல்



                  ஒரு நாள் மாலையில் நான் வேதபுரம் கடற்கரையில் தனியிடத்தில் மணல் மேலே போய்ப் படுத்துக் கொண்டிருந்தேன். பகலில் நெடுந்தூரம் நடந்த இளைப்பினால் அப்படியே தூங்கிப் போய் விட்டேன். அந்தத் தூக்கத்திலே கண்ட கனவை எழுதுகிறேன்.

                  நடுக்கடலில் ஒரு தீவு; அதனிடையே பெரிய அரண்மனை. அரண்மனைக்கருகே சிங்காரத் தோட்டம். அதில் ஒரு நீரோடை. அதனருகே புல்லாந் தரை மேல் பதினாறு வயதுள்ள ஒரு கன்னிகை உட்கார்ந்திருந்தாள். அவள் என்னைக் கண்ட மாத்திரத்தில் எழுந்து அரண்மனைக்குள் ஓடிப்போய் விட்டாள். நான் அவ்வழியைப் பின்தொடர்ந்து சென்றேன். போகிற வழியில் ஒரு பெரிய பாம்பு கிடந்தது. என்னைக் கண்டவுடன் படத்தைத் தூக்கி என் மேலே பாய்ந்து கடிக்க வந்தது. நான் ஓடினேன். அது என்னைத் துரத்திக் கொண்டு வந்தது. ஓடி யோடிக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தேன். பாம்பு காலுக்கு மிகவும் சமீபமாக வந்தது. கடலுக்குள்ளே குதித்தேன். கடலிலே புயற்காற்று, ஓரலையைத் தூக்கி மூன்று பனையளவு பள்ளத்தில் வீழ்த்துகிறது. எப்படியோ சாகாமல் அந்த அலைக்குத் தப்பிவிட்டேன். நெடுநேரத்துக் கப்பால் அலை அடங்கிற்று. நான் நீச்சை விடவில்லை, எப்படியோ நீந்திக் கொண்டு வருகிறேன். ஆனால் கரை தென்படவில்லை. பிறகு கைகளில் நோவுண்டாயிற்று. என்னால் நீந்த முடியவில்லை. என்னுடைய குல தெய்வத்தின் பெயரை உச்சரித்தேன். அங்கே ஒரு கிழவன் தோணி விட்டுக் கொண்டு வந்தான். 

                 "அண்ணே, அண்ணே, என்னை உன்னுடைய தோணியில் ஏற்றிக்கொள்ளு. நான் புயற் காற்றில் அடிபட்டு மிகவும் நொந்து போயிருக்கிறேன்" என்று சொன்னேன். அவன் தனது தோணியில் ஏற்றிக் கொண்டான். தோணியை விட்டுக் கொண்டு கடலிலே போகிறோம்; போகிறோம்; வழி தொலையவேயில்லை. "அண்ணே, கரை சேர இன்னும் எத்தனை காலம் செல்லும்? எனக்குப் பசி கண் அடைக்கிறதே. நான் என்ன செய்வேன்?" என்று சொன்னேன். அந்தக் கிழவன் தின்பதற்குக் கொஞ்சம் அரிசி மாவும், ஒரு மிடறு தண்ணீரும் கொடுத்தான். இளைப்பாறி அப்படியே கண்ணயர்ந்தேன். (கனவுக்குள்ளே ஒரு தூக்கம்.) கொஞ்சம் ஆயாஸம் தெளிந்தவுடனே கண்ணை விழித்துப் பார்த்தேன்; கரை தெரிந்தது. கிழவன் என்னைக் கரையிலிறக்கி விட்டு, மறுபடி தனது தோணியைக் கடலிலே செலுத்திக் கொண்டு போனான்.

                நான் அவனிடம் ஏதெல்லாமோ கேள்வி கேட்டேன். அவன் ஒன்றுக்கும் மறுமொழி சொல்லவில்லை. கண்ணுக்கெட்டும் வரை அவன் தோணியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மறுபடி அந்தத் தீவுக்குள் கொஞ்ச தூரம் போனவுடனே பழைய அரண்மனை தெரிந்தது. அதனருகே சிங்கார தோட்டம், அந்த நீரோடை, அந்தப் பெண்ணும் முன்போலவே புல்லாந் தரைமேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். என்னைக் கண்டவுடன் மறுபடி யெழுந்து தன் வீட்டை நோக்கி யோடினாள். நான் தொடர்ந்து போகவில்லை. தொடர்ந்து போனால் முன் போலவே வழியில் பாம்பு கிடக்குமென்று நினைத்து மிகவும் பயங் கொண்டவனாய், அதிவேகமாகக் கடற்கரையை நோக்கி ஓடிச் சென்றேன். ஓடும் போதே பாம்பு துரத்திக்கொண்டு வருகிறதா என்று பல முறை திரும்பிப் பார்த்தேன். பாம்பு வரவில்லை. கரைக்கு வந்து சேர்ந்தவுடனே இந்தத் தீவிலிருந்து எப்படியேனும் வெளியேறிப் போகலாமென்று யோசித்தேன். அந்தப் பெண் யாரென்று தெரிந்துகொண்டு பிறகுதான் அந்தத் தீவிலிருந்து புறப்பட வேண்டுமென்று மற்றொரு யோசனை யுண்டாயிற்று. அப்போது பசியும் களைப்பும் அதிகமாக இருந்தபடியால் அவற்றைத் தீர்க்க ஏதேனும் வழியுண்டா என்று சுற்றிப் பார்த்தேன். கரை யோரமாகவே நெடுந்தூரம் நடந்து வந்தபோது அங்கே ஒரு குடிசை தென்பட்டது. அந்தக் குடிசைக்குள்ளே போய் நுழைந்தேன். அதற்குள்ளே ஒரு பிள்ளையார் வைத்திருந்தது. அந்த மூர்த்தியின் முன்னே ஓர் இலையில் சோறு, கறி, பாயஸம், பக்ஷணம் முதலியனவும், ஒரு குடத்தில் நீரும், பக்கத்தில் புஷ்பம், சந்தணம் முதலிய பூஜாதிரவியங்களும் வைத்திருக்கக் கண்டேன்.

                    எனது பசியின் கொடுமையினால் அந்த ஆகாரத்தைத் தின்றுவிடலாமென்று யோசித்தேன். பிறகு சிந்தனை பண்ணிப் பார்த்தேன். 'போன ஜன்மத்தில் என்ன பாவம் பண்ணியோ இந்த ஜன்மத்தில் இந்தத் தீவில் வரவும், இத்தனைக் கஷ்டப்படவும் ஏது வுண்டாயிற்று. இப்போது பசித் துன்பத்தைப் பெரிதாக எண்ணி எந்த மகானோ ஸ்வாமி பூஜைக்காக வைத்திருக்கும் திருவமுதை அபகரித்தால், இன்னும் பாவ மேற்படும். ஆதலால் அந்தக் காரியம் செய்யக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டேன். பசி தாங்கவில்லை. நாமே பூஜை நைவேத்தியம் முடித்து விட்டுப் பிறகு அந்த உணவைக் கொள்ளலாமென்று நினைத்து ஸ்நானம் செய்து இடம் கிடைக்குமா என்று பார்க்கும் பொருட்டு வெளியே வந்து சிறிது தூரம் சுற்றிப் பார்த்ததில் அங்கே ஒரு சுனை யிருந்தது. அதில் ஸ்நானம் செய்து ஸந்தி முதலிய கர்மங்களை முடித்து விட்டு மறுபடி குடிசைக்குள்ளே போய்ப் பார்க்கையில் பிள்ளையார் மாத்திரந்தானிருந்தது. சோறு வடை தண்ணீர் பூ சந்தணம் ஒன்றையும் காணவில்லை. எனக்கு வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. 

             "பிள்ளையாரே, பிள்ளையாரே, உனக்கு எங்கள் வேதபுரி சேர்ந்தவுடனே முப்பத்து மூன்று தேங்காய் உடைத்துப் பூஜை செய்கிறேன். எனக்கிந்த ஆபத்து நேரத்தில் உதவி செய்ய மாட்டாயா?" என்று வேண்டி வருத்தப்பட்டேன்.

             இந்த நிலையில் எனது கனவு தடைப்பட்டது. பல குழப்பங்களுண்டாயின. செய்தி நினைப்பில்லை. பிறகு மறுபடியும் நான் கடலைகளின்மீது மிதந்து செல்வது கண்டேன். யுகப்பிரளயம் போலே யிருந்தது. என் கைகள் புடைத்தன. கண் தெரியவில்லை. பிரக்கினை சரியில்லை. கடலைத் திவலை திவலையாக உடைத்து நாசம் செய்து விடவேண்டு மென்ற நோக்கத்துடன் வாயு புடைப்பது போலிருந்தது; அதே சமயத்தில் எனதுடம்பைக் கடலலைகள் பந்தாடினது. என்னுயிரைக் கால தூதர் பந்தாடுவதுபோல் தோன்றிற்று. அப்போது மீண்டும் குல சக்தியின் பெயரை ஸ்மரித்து, விநாயகரை நினைத்தும் "பிள்ளையாரே, என்னை வேதபுரத்துக் கரை சேர்த்து விட்டால் உமக்கு மூவாயிரத்து முந்நூறு தேங்காய் உடைக்கிறேன். காப்பாற்ற வேண்டும், காப்பாற்ற வேண்டும்" என்று என்னை அறியாமல் கூவினேன்.

             சிறிது நேரத்துக்குள் புயற் காற்று நின்றது. அங்கே ஒரு தோணி வந்தது; தோணியின் அழகு சொல்லி முடியாது. மயில் முகப்பும், பொன்னிறமும் கொண்டதாய் அன்னம் நீந்தி வருவது போலே மெதுவாக என்னருகில் வந்த அத்தோணியிடையே ஒரு மறக்குமாரன் ஆசனமிட்டு வீற்றிருந்தான். அவன் முகத்தினொளி தீ யொளி போலே விளங்கிற்று. தோணியைக் கண்டவுடனே நான் கை கூப்பினேன். அப்போது தோணிக்காரனிடம் என்னை யேற்றிக் கொள்ளும்படி அவன் கட்டளையிட்டான். அவர்கள் என்னை யேற்றிக் கொண்டனர். அந்தத் தோணியில் ஏறினவுடனே என் உடம்பிலும், மனதிலுமிருந்த துன்பங்களெல்லாம் நீங்கிப் போயின. என் உடம்பைப் பார்த்தால் ராஜாவுடை தரித்திருக்கிறது. பதினாறு வயது பிள்ளையாகவே நானுமிருந்தேன். தோணியிடையிருந்த மன்னன் கரத்திலே வேல் தெரிந்தது. அப்போது கண்ணை விழித்தேன். வேதபுரத்துக் கடற்கரை; மாலை வேளை; மணல்மீது நான் படுத்திருப்பது கண்டேன்.

                 நம்பிக்கை யுண்டாகவில்லை. கண்ணை நன்றாகத் துடைத்துப் பார்த்தேன். தீவும், புயற்காற்றும், கனவென்று தெரிந்து கொண்டேன். அந்தத் தீவில் என்னைக் கண்டவுடன் ஓடி மறைந்த பெண்ணின் வடிவம் என் கண் முன்னே நிற்பது போலிருந்தது. பிறகு தோணியிலே கண்ட மன்னன் வடிவம் தெரிந்தது...... வீடு வந்து சேர்ந்தேன்.

               வேதபுரத்தில் மௌனச் சாமியார் என்றொருவர் இருக்கிறார். அவரிடம் கனவைச் சொல்லி, அந்தத் தீவிலே கண்ட பெண் யாரென்று கேட்டேன். "உன்னை யார் காப்பாற்றிய தென்பதை நீ அறியவில்லை. அந்தப் பெண் உன்னிடம் அன்பு கொண்டாள். இரண்டாம் முறை தோணியிலே தோன்றிய இளவரசன் கையில் ஒரு வேல் இருந்தது கண்டனையா? அதுவே உனக்குப் பெண்ணாகத் தோன்றிற்று. உன்னைக் கவலைக் கடலில் வீழ்த்திய பெண்ணே பிறகு வேலாகத் தோன்றி உன்னைக் காத்தாள்" என்று சொன்னார். 

                சக்தியே வேலென்றும் அதுவே உயிருக்கு நல்ல துணையென்றும் தெரிந்து கொண்டேன். சீக்கிரத்தில் நல்ல நாள் பார்த்து வேதபுரத்திலுள்ள ஏழைப் பிள்ளையாருக்கு மூவாயிரத்து முன்னூறு தேங்காய் உடைக்க வேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கிறேன்.


26. புதிய கோணங்கி

வேதபுரத்தில் ஒரு புது மாதிரிக் குடுகுடுப்பைக்காரன் புறப்பட்டிருக்கிறான். உடுக்கைத் தட்டுவதிலே முப்பத்தைந்து தாளபேதங்களும், அவற்றிலே பல வித்தியாசங்களும் காட்டுகிறான். தாள விஷயத்திலே மகா கெட்டிக்காரன். உடம்பு மேலே துணி மூட்டை சுமந்து   கொண்டு போவதில்லை. நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான். தலையிலே சிவப்பு துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிருக்கிறான். பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு; மீசையும் கிருதாவுமாக மிகவும் விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்துக்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்றாகப் பொருந்தி யிருக்கிறது. ஆள் நெட்டை; தடியன். காலிலே ஹைதராபாது ஜோடு மாட்டியிருக்கிறான். நேற்றுக் காலையிலே, இவன் நம்முடைய வீதி வழியாக வந்தான்;
உடுக்கையிலே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்காரன் வேலை செய்வதுபோல   செய்கிறான். நல்ல கெட்டிக்காரன். அவன் சொன்னான்:

"குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது; ஜாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது; சொல்லடி, சொல்லடி, சக்தி மகாகாளீ, வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு! தரித்திரம் போகுது. செல்வம் வருகுது; படிப்பு வளருது; பாவம் தொலையுது; படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான்; ஐயோவென்று போவான்.

வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது; தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான். சாத்திரம்வளருது; சூத்திரம் தெரியுது; யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது; மந்திர மெல்லாம் வளருது, வளருது! குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு. சொல்லடீ, சொல்லடீ, மலையாள பகவதீ. அந்தரி, வீரி, சண்டிகை; சூலி! குடுகுடு குடுகுடு"

இப்படி அவன் சொல்லிக்கொண்டு போவதை நான் மெத்தையிலிருந்து கேட்டேன். இதென்னடா புதுமையாக இருக்கிறதென்று ஆச்சரியத்துடன் அவனை நிற்கச் சொன்னேன். நின்றான். கீழே இறங்கிப் போய், அவனைச் சமீபத்திலே அழைத்து "எந்த ஊர்?" என்று கேட்டேன். "சாமி, குடுகுடுப்பைக்காரனுக்கு ஊரேது, நாடேது? எங்கேயோ பிறந்தேன், எங்கேயோ வளர்ந்தேன், எங்கெல்லாமோ சுற்றிக் கொண்டு வருகிறேன்" என்றான். அப்போது நான் சொன்னேன்:

"உன்னைப் பார்த்தால் புதுமையாகத் தெரிகிறது. சாதாரணக் கோணங்கிகளைப் போலில்லை. உன்னுடைய பூர்வோத்திரங்களைக் கூடிய வரையில் ஸவிஸ்தாரமாகச் சொல்லு. உனக்கு நேர்த்தியான சரிகை வேஷ்டி கொடுக்கிறேன்" என்றேன். அப்போது, குடுகுடுப்பைக்காரன் சொல்லுகிறான்: 

"சாமி, நான் பிறந்த இடம் தெரியாது. என்னுடைய தாயார் முகம் தெரியாது. என்னுடைய தகப்பனாருக்கு இதுவே தொழில். அவர் தெற்குப் பக்கத்தைச் சேர்ந்தவர். "ஒன்பது கம்பளத்தார்" என்ற ஜாதி. எனக்குப் பத்து வயதாக இருக்கும் போது, தஞ்சாவூருக்கு என் தகப்பனார் என்னை அழைத்துக் கொண்டு போனார். அங்கே வைசூரி கண்டு செத்துப் போய் விட்டார்.

பிறகு நான் இதே தொழிலினால் ஜீவனம் செய்து கொண்டு பல தேசங்கள் சுற்றி ஹைதராபாத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது இருபது இருக்கும். அங்கே ஜான்ஸன் என்ற துரை வந்திருந்தான். நல்ல மனுஷன். அவன் ஒரு "கம்பெனி ஏஜெண்டு." இந்தியாவிலிருந்து தாசிகள், நட்டுவர், கழைக் கூத்தாடிகள், செப்பீடு வித்தைக்காரர், ஜாலக்காரர் முதலிய பல தொழிலாளிகளைச் சம்பளம் கொடுத்துக் கூட்டிக்கொண்டு போய், வெள்ளைக்காரர் தேசங்களிலே, பல இடங்களில் கூடாரமடித்து வேடிக்கைக் காண்பிப்பது அந்தக் கம்பெனியாரின் தொழில். விதிவசத்தினால் நான் அந்த ஜான்ஸன் துரை கம்பெனியிலே சேர்ந்தேன். இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய தேசங்களிலே ஸஞ்சாரம் செய்திருக்கிறேன். அமெரிக்காவுக்குப் போயிருக்கிறென். இரண்டு வருஷங்களுக்கு முன்பு சண்டை தொடங்கினபோது, மேற்படி "கம்பெனி" கலைந்து போய்விட்டது. எங்களுக்கெல்லாம் பணம் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பி விட்டார்கள். உயிருள்ளவரை போஜனத்துக்குப் போதும்படியான பணம் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆனாலும், பூர்வீகத் தொழிலைக் கைவிடுவது நியாயமில்லை என்று நினைத்து இங்கு வந்த பின்னும் பலவூர்களில் சுற்றி, இதே தொழில் செய்து வருகிறேன்.

ஐரோப்பா முதலிய தேசங்களில் சுற்றின காலத்தில் மற்றக் கூத்தாடிகளைப்போலே வீண்பொழுது போக்காமல் அவ்விடத்துப் பாஷைகளைக் கொஞ்சம் படித்து வந்தேன்.
எனக்கு இங்கிலீஷ் நன்றாகத் தெரியும். வேறு சில பாஷைகளும் தெரியும். அனேக புஸ்தகங்கள் வாசித்திருக்கிறேன். இங்கு வந்து பார்க்கையிலே அவ்விடத்து ஜனங்களைக் காட்டிலும் இங்குள்ளவர்கள் பல விஷயங்களிலே குறைவு பட்டிருக்கிறார்கள்;
நம்முடைய பரம்பரைத் தொழிலை வைத்துக் கொண்டே ஊரூராகப் போய் இங்குள்ள ஜனங்களுக்குக் கூடியவரை நியாயங்கள் சொல்லிக் கொண்டு வரலாமென்று புறப்பட்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய விருத்தாந்தம்" என்றான்.

ஒரு ஜரிகை வேஷ்டி எடுத்துக் கொடுக்கப் போனேன்; போன தீபாவளிக்கு வாங்கினது; நல்ல வேஷ்டி.

"சாமி, வேண்டியதில்லை" என்று சொல்லி விட்டு அவன் மறுபடி உடுக்கை யடித்துக் கொண்டு போய்விட்டான். போகும்போதே சொல்லுகிறான்.

"குடுகுடு, குடுகுடு, குடுகுடு, குடுகுடு, சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது, தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது, எட்டு லச்சுமியும் ஏறி வளருது, பயந் தொலையுது, பாவந் தொலையுது, சாத்திரம் வளருது, சாதி குறையுது, நேத்திரம் திறக்குது, நியாயந் தெரியுது, பழைய பைத்தியம் படீலென்று தெளியுது. வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது, சொல்லடீ சக்தி, மலையாள பகவதி, தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது."

என்று சொல்லிக் கொண்டே போனான். அவன் முதுகுப் புறத்தை நோக்கி, தெய்வத்தை நினைத்து, ஒரு கும்பிடு போட்டேன்.




Wednesday, April 22, 2015

25. பிழைத்தோம்

                          மாலை நாலு மணியாயிருக்கும்.

நான் சிறிது ஆயாஸத்தினால் படுத்து இலேசான தூக்கம் தூங்கி விழித்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டு தாம்பூலம் போட்டுக் கொள்ள யோசனை செய்து கொண்டிருந்தேன். அப்போது வீரபுரம் கிருஷ்ணய்யங்கார் வந்து சேர்ந்தார். இவர் நமக்கு ஆப்த சிநேகிதர். நல்ல யோக்கியர். ஆனால், சூதுவாது தெரியாத சாதுவான பிராணி.

இவர் வந்தவுடனே "ஓராச்சரியம்!" என்று கூவினார். "என்ன விஷயம்?" என்று கேட்டேன். "நேற்று ராத்திரி ஒரு கனவு கண்டேன்" என்றார். "என்ன கனவு? சொல்லும்" என்றேன்.

வீரபுரம் கிருஷ்ணய்யங்கார் பின்வருமாறு சொல்லலானார்.

"டாம், டாம், டாம் என்று வெடிச்சத்தம் கேட்கிறது. எங்கு பார்த்தாலும் புகை. அந்தப் புகைச்சலுக்குள்ளே நான் சுழற் காற்றில் அகப்பட்ட பக்ஷி போலே அகப்பட்டுக் கொண்டே. திடீரென்று எனக்குக் கீழே ஒரு வெடி கிளம்பும். அது என்னக் கொண்டு நூறு காதவழி தூரத்தில் ஒரு க்ஷணத்திலே எறிந்து விடும். அப்படிப்பட்ட வேகத்தை சாமானியமாக விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நம்மாலே ஸ்மரிக்கக்கூட முடியாது."

"மனோவேகம் என்பதின் பொருளை நேற்று ராத்திரித்தான் கண்டேன். அடே ராமா! ஒரு தள்ளுத் தள்ளினால் நேரே தலையை வானத்திலே கொண்டு முட்டும். அங்கே போனவுடன் மற்றொரு வெடி, அது பாதாளத்திலே வீழ்த்தும். எட்டுத் திசையும் பதினாறு கோணமும், என்னைக் கொண்டு மோதினபடியாக இருந்தது. வெடியின் சத்தமோ சாமானியமன்று. அண்ட கோளங்கள் இடிந்து போகும்படியான சத்தம். இப்படி நெடுநேரம் கழிந்தது. எத்தனை மணி நேரம் இந்தக் கனவு நீடித்ததென்பதை என்னால் இப்போது துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால் சொப்பனத்திலே அது காலேயரைக்கால் யுகம் போலிருந்தது. மரணாவஸ்தை இனிமேல் எனக்கு வேறு வேண்டியதில்லை. மூச்சுத் திணறுகிறது. உயிர் தத்தளிக்கிறது. அந்த அவஸ்தை ஒரு முடிவுக்கு வருமென்றாவது, என் பிராணன் மிஞ்சுமென்றாவது எனக்கு அப்போது தோன்றவே யில்லை."

"நெடுநேரம் இப்படி என்னைப் புரட்டித் தள்ளிய பிறகு ஒரு சுவர் மேலே கொண்டு மோதிற்று. அந்தச் சுவரில் 'ஓம் சக்தி' என்று ஒளி எழுத்துக்களால் பலவிடங்களில் எழுதப்பட்டிருந்தது. அவற்றுள் மிகவும் ஒளி பொருந்திய எழுத்தின் கீழே ஒரு சிறு பொந்திருந்தது. அந்தப் பொந்துக்குள்ளே போய் விழுந்தேன். ஆரம்பத்தில் இவ்வளவு சிறிய பொந்துக்குள் நாம் எப்படி நுழைய முடியுமென்று நினைத்தேன். பிறகு சொப்பனந்தானே? எவ்விதமாகவோ அந்தப் பொந்துக்குள் என் உடம்பு முழுதும் நுழைந்திருக்கக் கண்டேன். அதற்குள்ளே போனவுடன் புகைச்சலுமில்லை, வெடியும் நின்றுவிட்டது. மூச்சுத் திணறவுமில்லை, ஆறுதலுண்டாயிற்று. 'பிழைத்தோமப்பா' என்று நினைத்துக் கொண்டேன். இவ்வளவுதான் கனவு. "இந்தக் கனவின் பொருளென்ன? இது என்ன விஷயத்தைக் குறிப்பிடுகின்றது?" என்று கிருஷ்ணய்யங்கார் கேட்டார்.

"கனவுக்குப் பொருள் கண்டுபிடித்துச் சொல்லும் சாஸ்திரம் எனக்குத் தெரியாது" என்று சொன்னேன்.

கிருஷ்ணய்யங்காருக்குத் திருப்தி ஏற்படவில்லை. நான் கனவு சாஸ்திரத்திலேயே ஒரு வேளை நம்பிக்கை யில்லாமல் இருக்கலாமென்று நினைத்து அவர் கொஞ்சம் முகத்தைச் சிணுங்கினார், பிறகு சொல்கிறார்:

"அப்படி நினையாதேயுமையா! கனவுக்குப் பொருளுண்டு; பல முறை கனவிலே கண்டது நனவிலே நடப்பதை நான் பார்த்திருக்கிறேன்" என்றார்.

"காலைச் சுற்றின பாம்பு கடித்தாலொழியத் தீராது" என்று வசனம் சொல்லுகிறது. ஆதலால், நான் இவ்ருக்கு ஏதேனும் விடை சொல்லித்தான் தீரவேண்டுமென்று கண்டுபிடித்துக் கொண்டேன். எனவே பின்வருமாறு சொன்னேன்.

"அந்த வெடிப்புத்தான் உலகநிலை; அந்த சக்தி மந்திரமே தாரகம். அந்தப் பொந்து விடுதலை. அதற்குள் நுழைவது கஷ்டம். தெய்வ வெடியினாலே தள்ளினாலொழிய மனிதன் ஜீவன் முக்தி நிலையில் நுழைய முடியாது. உள்ளே நுழைந்து விட்டால் பிறகு அது விஸ்தாரமான அரண்மனையாகக் காணப்படும். அதற்குள்ளே நுழைந்தவர்களுக்கு அதன் பிறகு எந்தவிதமான அபாயமுமில்லை.அ தற்குள்ளே போனவர்கள் உண்மையாகவே பிழைத்தார்கள்" என்று சொன்னேன். கிருஷ்ணய்யங்கார் இதைக் கேட்டு மிகவும் சந்தோஷத்துடன் விடை பெற்றுச் சென்றார்.

Monday, April 20, 2015

24. "சந்திரிகையின் கதை" ‍ 9ஆம் அத்தியாயம்.

                                                        ஒன்பதாம் அத்தியாயம்
                                                         பெண்டாட்டிக்கு ஜயம்

மறுநாட் காலை முதல் முத்தம்மா பாடு கொண்டாட்டந்தான். வீட்டில் அவளிட்டது சட்டம். அவள் சொன்னது வேதம். சோமநாதய்யர் ஏதேனுமொரு காரியம் நடத்த வேண்டுமென்று சொல்லி, அவள் கூடாதென்றால் அந்தக் காரியம் நிறுத்தி விடப்படும். அவர் ஏதேனும் செய்யக் கூடாதென்று சொல்லி அவள் அதைச் செய்துதான் தீரவேண்டுமென்பளாயின் அது நடந்தே தீரும். இங்ஙனம் முத்தம்மா தன் மீது கொடுங்கோன்மை செலுத்துவது பற்றி அவருக்கு அடிக்கடி மனவருத்தமேற்படுவதுண்டு. ஆனால், அந்த வருத்தத்தை அப்போதப்போதே அடக்கி விடுவார். ''தெய்வத்தினிடம் ஒருவன் உண்மையான பக்தி செலுத்தப் போனால், அது அவனை எத்தனையோ சோதனைகளுக்குட்படுத்தும் என்கிறார்கள். அதினின்றும் ஒருவன் தனது பக்தியைச் சோரவிடுவானாயின், அவன் உண்மையான பக்தனாவனோ? உண்மையான பக்தியால் கடைசியில் எய்தப்படும் பயன்கள் அவனுக்குக் கிடைக்குமோ? நாம் இவளை ப்ரத்ய‡ தெய்வமாகவன்றோ பாவித்து நடத்துகிறோம். எனவே, இவள் ஏது செய்தாலும் பொறுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். நாம் மனவருத்தப்படலாகாது'' என்று தீர்மானித்துத் தம்மைத் தாமே தேற்றிக் கொள்வார். இப்படியிருக்கையில் ஒரு நாள் முத்தம்மா தன் கணவனை நோக்கி:- ''நாளை ஞாயிற்றுக்கிழமை தானே? உங்களுக்கோ கோர்ட்டு வேலை கிடையாது. ஆதலால் நாமிருவரும் குழந்தைகளையும் வேலைக்காரனையும்....

(குறிப்பு:- பாரதியார் இக்கதையைப் பூர்த்தி செய்வதற்குள் காலஞ் சென்றுவிட்டதால், ''சந்திரிகையின் கதை'' முற்றுப்பெற இயலாமல் இப்படியே நிறுத்த வேண்டியதாயிற்று.)



23. "சந்திரிகையின் கதை" ‍ 8ஆம் அத்தியாயம்.

                                                                 எட்டாம் அத்தியாயம்
                                               சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு

1907-ம் வருஷம்- அதாவது விசாலாட்சியின் விவாகம் நடந்த இரண்டு வருஷங்களுக்கப்பால்-மே மாதத்தில் ஒரு நாள் மாலை நல்ல நிலவடித்துக் கொண்டிருக்கையில் மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் ஹைகோர்ட் வக்கீல் சோமநாதய்யர் தம் வீட்டு மேடையில் நிலா முற்றத்திலே இரண்டு நாற்காலிகள் போட்டுத் தாமும் தம்முடைய மனைவி முத்தம்மாளும் உட்கார்ந்து கொண்டு, அவளுடன் சம்பாஷணை செய்து கொண்டிருந்தார்.

''காபி போட்டுக் கொண்டு வரலாமா?'' என்று முத்தம்மா கேட்டாள்.

''எனக்கு வேண்டியதில்லை. பகலிலே உண்ட ஆகாரம் இன்னும் என் வயிற்றில் ஜீரணமாகாமல் அப்படியே கிடக்கிறது. இன்றிரவு சாப்பிடலாமா, உபவாசம் போட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்படியிருக்கையில் காபி குடிப்பது உடம்புக்கு மிகவும் கெடுதியென்று நினைக்கிறேன். உனக்கு வேண்டுமானால் காபி போட்டுக் கொண்டு வந்து குடித்துக் கொள்'' என்றார் சோமநாதய்யர்.

''எப்போது பார்த்தாலும் ஏதாவது நோய் சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்கள். அதுவும் என்னைக் கண்டால் போதும், உடனே நீங்கள் நோயழுகை அழுவதற்கு ராஜா. 'இன்றைக்கு என் உடம்பு ஸௌக்யமாக இருக்கிறது. ஒரு வியாதியுமில்லை' என்று உங்கள் வாயினாலே சொல்ல ஒரு தரங்கூடக் கேட்டதில்லை. என் உயிர் உள்ளவரை அந்த நல்ல வார்த்தையை நான் ஒரு தரமேனும் காது குளிரக் கேட்கப் போகிறேனோ, அல்லது கேட்காமலே பிராணனை விடப் போகிறேனோ, தெரியாது. கை உளைச்சல், கால் உளைச்சல், அங்கு வீக்கம், இங்கு குடைச்சல், வயிற்றுவலி, தலைவலி, அஜீர்ணம், அஜீர்ணம், அஜீர்ணம்-எப்போதும் இதே அழுகை கேட்டுக் கேட்டு எனக்குக் காது புளித்துப் போய்விட்டது. இனிமேல் ஒரு வார்த்தை சொல்லுகிறேன். அதை ஜாக்கிரதையாக ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டிருங்கள். அதாவது, உங்கள் உடம்பு சுகமாகவும் ஆராக்கியமாகவும் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். வியாதியிருந்தால் எனக்குச் சொல்ல வேண்டா. இந்த ஒரு தயவு எனக்கு நீங்கள் அவசியமாகச் செய்யவேண்டும்'' என்றாள்.

சோமநாதய்யருக்குக் கோபம் பளிச்சென்று வந்துவிட்டது. அவருக்கு முற்கோபம் அதிகம். மனைவியை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டத் தொடங்கிவிட்டார். ''நன்றி கெட்ட நாய், முண்டாய், உன் பொருட்டாக நான் படும் பாடு 'பஞ்சு தான் படுமோ? சொல்லத்தான் படுமோ, எண்ணத்தான் படுமோ?' நாய் போலே உழைக்கிறேன். கும்பகோணத்தில் நல்ல வரும்படி வந்து கொண்டிருந்தது. இங்கு வந்தது முதல், வரவு நாளுக்கு நாள் குறைவு பட்டுக்கொண்டேயிருக்கிறது. எனவே, உனக்கும் உன் குழந்தைக்கும் சோறு, துணி, மருந்துகள் சம்பாதித்துக் கொடுப்பதில் எனக்கு நேரும் கஷ்டங்களும் மன வருத்தங்களும் கணக்கில் அடங்க மாட்டா. நான் முன்பு சேர்த்து வைத்த சொத்தையெல்லாம் விழுங்கி அதற்கு மேல் பதினாயிரம் ரூபாய் வரை கடன் ஏறிப் போயிருக்கிறது. எத்தனையோ பொய்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏமாற்ற வேண்டியிருக்கிறது. நீதி ஸ்தலத்திலே போய் மனமறிந்த பொய்களைச் சொல்வதே நமக்குப் பிழைப்பாய்விட்டது. இந்த வக்கீல் தொழிலும் சரி, வேசைத் தொழிலும் சரி. தர்மத்தைக் கெடுத்து இகத்தையும் பரத்தையும் நாசம் பண்ணிக்கொண்டு உன் பொருட்டாகப் பாடுபடுகிறேன். மேலும் ஒரு வழக்கு ஜயித்தால் பத்து வழக்குகள் தோற்றுப் போகின்றன. அதில் என் மனதுக்கேற்படும் துக்கத்துக்கும் அவமானத்துக்கும் கணக்கில்லை. தவிரவும் இத்தொழிலோ கோர்ட்டிலேனும் கட்சிக்காரரிடமேலும் ஓயாமல் தொண்டைத் தண்ணீரை வற்றடிக்குந் தொழில். அதனால் உடம்பில் அடிக்கடி சூடு மிகுதிப்பட்டு மலச்சிக்கல் உண்டாக்குகிறது. மலச்சிக்கலே சர்வ ரோகங்களுக்கும் ஆதாரமென்று நவீன வைத்திய சாஸ்திர பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். ஆதலால் உடம்பில் எப்போதும் ஓய்வின்றி ஏதேனும் வியாதி இருந்து கொண்டேயிருக்கிறது. இதனாலும் குழந்தைகளுக்கு உடம்புக்கேதேனும் வந்தால் அப்போது என் மனத்திலுண்டாகும் பெருந் துயரத்தாலும் அவர்களுடம்பு நேரே இருக்க வேண்டும், கடவுளே, என்றெண்ணி நான் எப்போதும் ஏக்கப்படுவதனாலும், தலை மயிர் நரைத்துப் போய்விட்டது. மண்டையில் வழுக்கை விழுந்துவிட்டது. உனக்காகப் பாடுபட்டே நான் கிழவனாய் விட்டேன். உன் தொல்லையாலேயே என் பிராணன் போகப் போகிறது. அடா, தீராத நோயிருந்தால், எப்படி சகிப்து? ஒரு நாளா, இரண்டு நாளா, ஒரு வாரமா, இரண்டு வாரமா, ஒரு மாதமா, இரண்டு மாதமா, ஒரு வருஷமா, இரண்டு வருஷமா, உன்னுடன் கூடி வாழத் தொடங்கிய கால முதலாக இன்றுவரை எப்போதும், ஒரு கணந் தவறாமல் என் உடம்பு ஏதேனம் ஒரு நோயினால் கஷ்டப்பட்டுக் கொண்டு தானிருக்கிறது. இத்தனை நோயையும் இத்தனை கஷ்டத்தையும் பொறுத்துக்கொண்டு என் உயிர் இதுவரை சாகாமலிருக்கிறதே, அதுதான் பெரிய ஆச்சரியம். இவ்வளவுக்கும் நான் உன்னிடமிருந்து பெறும் கைம்மாறு யாது? பேதைச் சொற்கள், மடச்சொற்கள், பயனற்ற சொற்கள், மனதைச் சுடும் பழிச் சொற்கள், காது நரம்புகளை அறுக்கும் குரூரச் சொற்கள், இவையே நான் பெறும் கைம்மாறு. ஓயாமல் 'புடவை வேண்டும்', 'ரவிக்கை வேண்டும்', 'குழந்தைகளுக்கு நகைகள் வேண்டும்' ,- வீண் செலவு! வீண் செலவு! வீண் செலவு! என்ன துன்பம், என்ன துன்பம்! என்ன துன்பமடா, ஈசா! எனக்கிந்த உலகத்தில் சமைத்து விட்டாய்! இந்தக் கஷ்டத்தையெல்லாம் இன்னும் எத்தனை காலம் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமோ? என் பிராணன் என்றுதான் நீங்கப் போகிறதோ?'' என்று சொல்லி சோமநாதய்யர் அழத் தொடங்கிவிட்டார்.

அப்போது முத்தம்மா:- ''அழுகையெல்லாம் என்னிடம் கொண்டு வருகிறீர்கள். புன்னகை, சந்தோஷம், சிருங்கார ரஸம் இதற்கெல்லாம் வேறு பெண் ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் என்னைத் தள்ளிவிட்டு வேறு ஸ்திரீயை பகிரங்கமாக விவாகம் செய்துகொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.

இன்னொரு புதுப்பெண்-சிறு பெண்ணை மணம் புரிந்துகொண்டு அவளுடன் இன்புற்று வாழத் தொடங்குவீர்களாயின் உங்களுக்குள்ள மனக்கவலையெல்லாம் நீங்கிப் போய்விடும். பிறகு புத்தியில் தெளிவும் சுறுசுறுப்பும் ஏற்படும். அப்பால் கோர்ட்டில் சாமர்த்தியமாகப் பேசும் திறமை மிகுதிப்பட்டு, உங்களுக்கு வக்கீல் வேலையில் நல்ல லாபம் வரத் தொடங்கும். உடம்பிலுள்ள வியாதிகளெல்லாம் நீங்கிப் போய்விடும். நீங்கள் சந்தோஷத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வீர்கள். மலச்சிக்கலால் எல்லா வியாதிகளும் தோன்றுவதாகவன்றோ நீங்கள் சொல்லுகிறீர்கள். எங்கள் அத்தங்கார் விசாலாட்சி அப்படிச் சொல்லமாட்டாள். அவளும் உங்கள் போலே பெரிய வேதாந்தியும் ஞானியுமாதலால் அவளுடைய கருத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். பணக்கவலைகளாலேயும் மனக்குறைவுகளாலேயுந்தான் வியாதிகள் தோன்றுகின்றன என்பது விசாலாட்சியின் கொள்கை. நீங்கள் வேறு விவாகம் செய்து கொள்ளுங்கள். நானோ மூன்றுப் பிள்ளைகளைப் பெற்றுக் கிழவியாய் விட்டேன். புதிதாக ஒரு சிறு பெண்ணை மணம் புரிந்து கொண்டால் உங்களுக்கு மனக்குறைவுகளெல்லாம் நீங்கிப் போய்விடும். அப்பால் யாதொரு வியாதியும் வராது'' என்றாள்.

இது கேட்டு சோமநாதய்யர்:- ''உன்னையும் உன் குழந்தைகளையும் வைத்துக் காப்பாற்றுவதிலேயே எனக்குச் சுமை தலை வெடித்துப் போகும் போலிருக்கிறது. இன்னும் ஒருத்தியைப் புதிதாக மணஞ் செய்து கொண்டு அவளையும் அவளுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளையும் இந்த ஜாப்தாவுடன் சேர்த்து சம்ர‡ணை பண்ணுவதென்றால் என் தலை நிச்சயமாக வெடித்தே போய்விடும். உன்னைத் தள்ளி வைக்கும்படி அடிக்கடி சிபார்சு செய்கிறாய். உன்மீது என்ன குற்றஞ் சுமத்தித் தள்ளி வைப்பேன்? பிள்ளையில்லாத மலடியென்று சொல்லி நீக்குவேனா? பொய்யாகவும், எனக்கு மகத்தான அவமானம் நேரும்படியாகவும் உன்மீது விபசார தோஷத்தை ஆரோபித்து விலக்கி வைப்பேனா? அப்படியே ஏதேனுமொரு முகாந்தரம் சொல்லி விலக்கி வைத்தாலும் உன்னையும் குழந்தைகளையும் காப்பாற்றும் கடமை என்னை விட்டு நீங்காது. மேலும் கிழவனாய்விட்ட நான் இப்போது ஒரு சிறு பெண்ணை மணம் புரிந்து கொண்டால் அவளைப் போலீஸ் பண்ணிக் காவல் காக்குந் தொழில் எனக்குப் பெருங் கஷ்டமாகிவிடும். ஆதலால் உன்னைத் தள்ளிவைத்துவிட்டு வேறு விவகாம் செய்து கொள்ளும்படி நீ தயவுடன் சிபார்சு செய்யும் வழக்கத்தை இன்றுடன் நிறுத்திக் கொள்ளும்படி, அதாவது, என் காது நரம்புகளையும் இருதய நரம்புகளையும் அறுப்பதற்கு நீ நிஷ்கிருபையாகவும் இடையின்றியும் மறவாமலும் மீட்டும் மீட்டும் உபயோகித்து வரும் அஸ்திரங்களில் இந்த ஒற்றை அஸ்திரத்தின் பிரயோகத்தையேனும் இனி நிறுத்தி விடும்படி, நான் உன்னை மிகவும் தாழ்மையுடன் பிரார்த்தனை செய்கிறேன்'' என்றார்.

''சரி, எனக்குத் தலைநோகிறது. நான் கீழே போய்க் காபி போட்டு சாப்பிடப் போகிறேன்'' என்று சொல்லி முத்தம்மா எழுந்தாள்.

''காப்பி குடித்துவிட்டு இங்கு திரும்பி வருவாயா?'' என்று சோமநாதய்யர் கேட்டார்.

''எதற்கு? இன்னும் ஏதேனும் அழுகைகளேனும் வசைகளேனும் மிச்சமிருக்கின்றனவோ? நான் குரூர வார்த்தைகள் சொல்வதாக வருத்தப்படுகிறீர்களே? நீங்கள் என்னைப் பற்றி என்னிடம் சொல்லும் வார்த்தைகளெல்லாம் அமிர்தமயமாக இருக்கின்றன என்று தான் நினைத்திருக்கிறீர்களோ? சற்று நேரத்துக்கு முன் என்னுடன் கூடி வாழ்வதில் நீங்கள் அடையும் இன்பத்தை விஸ்தாரமாக வர்ணித்தீர்களே? அச்சொற்கள் என் செவிக்கு தேவாமிர்தமாகத்தான் இருந்தன. கேட்கக் கேட்கத் தெவிட்டவில்லை. சரி. அது வீண் பேச்சு. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சிப் பயனில்லை. எத்தனை காலம் உங்களுடன் வாழும்படி பகவான் தலையில் எழுதியிருக்கிறானோ, அது வரை இப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் தங்களுடைய திருவாயினின்று பிறந்து கொண்டேதானிருக்கும். அவற்றை நான் சகித்துத்தான் தீரவேண்டும். எனக்கு நிவர்த்தியேது? நீங்களாவது என்னை விலக்கி வைத்து விட்டு மற்றொருத்தியை விவாகம் செய்து கொண்டு சௌக்கியமாக வாழ்வீர்கள். நான் அப்படிச் செய்ய முடியுமா? எனக்கு வேறு புகலேது?'' என்று முத்தம்மா சொன்னாள்.

'அடியே நாயே, நான் மறுவிவாகம் செய்துகொள்ளலாமென்ற வார்த்தையை என் காது கேட்க உச்சரிக்கக் கூடாதென்று நான் சொன்னேனோ, இல்லையோ? இப்போதுதான் சொல்லி வாய் மூடினேன். மறுபடி அந்தப் புராணத்தை எடுத்து விட்டாயே உனக்கு மானமில்லையா? வெட்கமில்லையா? சூடு சுரணையில்லையா? இதென்னடா கஷ்டமாக வந்து சேர்ந்திருக்கிறது? இவள் வாயை அடக்குவதற்கு ஒரு வழி தெரியவில்லையே, பகவானே! நான் என்ன செய்வேன்? ஏதேனும் ஒரு வியாதி வந்து இவள் வாயடைத்து ஊமையாய் விடும்படி கிருபை செய்யமாட்டாயா, ஈசா?'' என்று கூறி சோமநாதய்யர் பிரலாபித்தார்.

''சரி, போதும், போதும், காது குளிர்ந்து போய் விட்டது. என்னைக் காபி குடித்துவிட்ட மறுபடி இங்கு வரும்படி சொன்னீர்களே, எதற்காக?'' என்று முத்தம்மா மீண்டுமொருமுறை வினவினாள்.

''காபி குடித்துவிட்டுவா. பிறகு விஷயத்தைச் சொல்லுகிறேன். முதலிலேயே இன்ன காரணங்களுக்காகத்தான் அழைக்கிறேன் என்று உனக்கு முச்சலிக்கா எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால்தான் வருவாயோ?'' என்று சோமநாதய்யர் கர்ஜித்தார்.

''சரி; வருகிறேன். இதற்காகத் தொண்டையைக் கிழித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது ஹைகோர்ட்டில்லை; வீடு'' என்று சொல்லி முத்தம்மா அந்த ஏழைப் பிராமணன் மீது ஒரு கடைசி அஸ்திரத்தை பிரயோகம் செய்துவிட்டு கீழே இறங்கிச் சென்றாள்.

அவள் போனவுடன் சோமநாதய்யர்:- ''ஹைகோர்ட்டில் எனக்கு யாதொரு லாபமும் கிடைக்கவில்லையாம். அதற்காகக் கேலி பண்ணிவிட்டுப் போகிறாள். இந்த நாயின் வாயை அடக்க ஒரு வழி தெரியவில்லையே!'' என்று நினைத்து வருந்தினார்.

''வில்லம்பு சொல்லம்பு மேதினியிலே யிரண்டாம்;
வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்.''

என்று பழைய பாட்டொன்று சொல்லுகிறது. இந்தச் சொல்லம்பைப் பிரயோகிப்பதில் ஆண் மக்களைக் காட்டிலும் பெண்கள் அதிகத் திறமையுடையவர்களென்று தோன்றுகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஆண் மக்கள் பெண்மக்களுக்குச் செய்யும் சரீரத் துன்பங்களும், அநீதிகளும், பலாத்காரங்களுமே போலும். வலிமையுடையோர் தம் வலிமையால் எளியாரைத் துன்பப்படுத்தும்-போது எளியோர் வாயால் திரும்பத் தாக்கும் திறமை பெறுகிறார்கள். கை வலிமை குறைந்தவர்களுக்கு அநியாயம் செய்யப்படுமிடத்தே அவர்களுக்கு வாய்வலிமை மிகுதிப்படுகின்றது. மேலும், மாதர்கள் தாய்மாராகவும் சகோதரிகளாகவும் மனைவியராகவும் மற்ற சுற்றத்தாராகவும் இருந்து ஆண் மக்களுக்கு சக்தியும் வலிமையும் மிகுதிப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் வேலை செய்கிறார்கள். அவ்வலிமையும் சக்தியும் தமக்கு விரோதமாகவே செலுத்தப்படுமென்று நன்கு தெரிந்த இடத்திலும், மாதர்கள் தம்மைச் சேர்ந்த ஆண் மக்களிடம் தமக்குள்ள அன்பு மிகுதியாலும், தாம் ஆடவர்களின் வலிமையை சார்ந்து வாழும்படி நேர்ந்திருக்கும் அவசியத்தைக் கருதியும், அவர்களிடத்தே மேற்கூறிய குணங்களேற்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இடையின்றி முயற்சி பண்ணுகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ளவேண்டிய குணங்களெல்லாவற்றிலும் மிக மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை. மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்குந் திறனும், பாயுந் திறனும் கொண்டிருப்பது மட்டுமேயன்றி ஒட்டகத்தைப் போலே பொறுக்குந் திறனும் எய்தவே டும். அவ்விதமான பொறுமை பலமில்லாதவர்களுக்கு வராது. மனத்திட்டமில்லாதோரின் நாடிகள் மிகவும் எளிதாகச் சிறகடிக்கக் கூடியன. ஒரு இலேசான எதிர்ச்சொல் கேட்கும்போதும், இலோசன சங்கடம் நேரும்போதும் அவர்களுடைய நாடிகள் பெருங் காற்றிடைப்பட்ட கொடியைப் போல் துடித்து நடுங்கத் தொடங்குகின்றன. மனத்திட்பமில்லாதோருக்கு நாடித் திட்பமிராது. அவர்களுக்கு உலகத்தில் புதிய எது நேர்ந்தபோதிலும், அதை அவர்களுடைய இந்திரியங்கள் சகிக்குந் திறமையற்றவனவாகின்றன. மனவுறுதியில்லாத ஒருவன் ஏதேனும் கணக்கெழுதிக் கொண்டிருக்கும் போது, கக்கத்திலே ஏதேனும் குழந்தைக் குரல் கேட்டால் போதும், உடனே இவனுடைய கணக்கு வேலை நின்றுபோய்விடும். அல்லது தவறுதல்களுடன் இயல்பெறும். அடுத்த வீட்டில் யாரேனும் புதிதாக ஹார்மோனியம் அல்லது மிருதங்கம் பழகுகிற சத்தம் கேட்டால் போதும். இவனுடைய கணக்கு மாத்திரமேயன்றி சுவாசமோ ஏறக்குறைய நின்று போகக் கூடிய நிலைமை எய்திவிடுவான். புதிதாக யாரைக் கண்டாலும் இவன் கூச்சப்படுவான்; அல்லது பயப்படுவான்; அல்லது வெறுப்பெய்துவான். மழை பெய்தால் கஷ்டப்படுவான். காற்றடித்தால் கஷ்டப்படுவான். தனக்கு சமானமாகியவர்களும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களும் தான் சொல்லும் கொள்கையை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால், இவன் செவிக்குள்ளே நாராச பாணம் புகுந்தது போலே பேரிடர்ப்படுவான்.

பொறுமையில்லாதவனுக்கு இவ்வுலகத்தில் எப்போதும் துன்பமேயன்றி, அவன் ஒரு நாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கெத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ, அத்தனைக்கத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றியுண்டாகிறது. இது பற்றியேயன்றோ நம் முன்னோர் ''பொறுத்தார் பூமியாள்வார், பொங்கினார் காடாள்வார்'' என்று அருமையான பழமொழியேற்படுத்தினார்.

இத்தகைய பொறுமையை ஒருவனுக்குச் சமைத்துக் கொடுக்கும் பொருட்டாகவே, அவனுடைய சுற்றத்து மாதர்களும், விசேஷமாக அவன் மனைவியும், அவனுக்கு எதிர் மொழிகள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். கோபம் பிறக்கத் தக்க வார்த்தைகள் சொல்லுகிறார்கள். வீட்டுப் பழக்கந்தான் ஒருவனுக்கு நாட்டிலும் ஏற்படும். வீட்டிலே பொறுமை பழகினாலன்றி, ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமையேற்படாது. பொறுமை எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, ஒருவனுக்கு அத்தனைக்கத்தனை வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றியுங் குறையும். அவனுடைய லாபங்களெல்லாம் குறைந்து கொண்டேபோம். பொறுமையை ஒருவனிடம் ஏற்படுத்திப் பழக்க வேண்டுமானால் அதற்கு உபாயம் யாது? சரீரத்தில் சகிப்புத் திறமையேற்படுத்தும் பொருட்டாக ஜப்பான் தேசத்தில் ஒரு குழந்தையாக இருக்கும்போதே ஒருவனுடைய தாய் தந்தையார் அவனை நெடு நேரம் மிக மிகக் குளிர்ந்த பனிக்கட்டிக்குள் தன் விரலை அல்லது கையைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும்படி செய்து பழக்குகிறார்கள். மிக மிகச் சூடான வெந்நீரில் நெடும்பொழுது கையை வைத்துக் கொண்டிருக்கும்படி ஏவுகிறார்கள். இவை போன்றன உடம்பினால் சூடு குளிரைத் தாங்கும்படி பயிற்றுவதற்குரிய உபாயங்களாம். இது போலவே சுக துக்கங்களை சகித்துக் கொள்வதாகிய மனப்பொறுமை ஏற்படுத்துவதற்கும், சூடான சொற்களும் சகிக்க முடியாத பேதைமைச் சொற்களும் சொல்லிச் சொல்லித்தான், ஒருவனைப் பழக்க வேண்டும். அவற்றைக் கேட்டுக் கேட்டு மனிதனுக்குக் காதும் மனமும் நன்கு திட்பமெய்தும், இங்ஙனம் பொறுமை உண்டாக்கிக் கொடுக்கும் பொருட்டாகவும், மனிதனுடைய மனத்தில் அவனாலேயே அடிக்கடி படைத்துக் கொள்ளப்படும் வீண் கவலைகளினின்றும் வீண் பயங்களினின்றும் அவன் மனத்தை வலிய மற்றொரு வழியில் திருப்பிவிடும் பொருட்டாகவும், ஒருவனுடைய மாதா அல்லது மனைவி அவனிடம் எதிர்பார்க்கப்படாத, பேதைமை மிஞ்சிய, கோபம் விளைக்கக்கூடிய சொற்கள் உரைக்கிறார்கள். அவனுடைய அன்பு எத்தனை ஆழமானதென்று சோதிக்கும் பொருட்டாகவும் அங்ஙனம் பேசுகிறார்கள். அன்பு பொறுக்கும். அன்பிருந்தால் கோபம் வராது. அன்றி ஒருவேளை தன்னை மீறிக் கோபம் வந்தபோதிலும் மிகவும் எளிதாக அடங்கிப் போய்விடும். இத்தகைய அன்பைக் கணவன் தன் மீதுடையவனா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு மாதர் பல சமயங்களில் கோபம் விளைக்கத் தக்க வார்த்தைகளை மனமறியப் பேசுகிறார்கள். நம்முடன் பிறந்து வளர்ந்து நம்மைத் தாயாகவும் மனைவியாகவும் சகோதரியாகவும் எப்போதும் காப்பாற்றிக் கொண்டும், கவனித்துக் கொண்டும், நம்மிடம் தீராத அன்பு செலுத்திக்கொண்டும் வருகிற மாதர்கள் சில சமயங்களில்-அனேக சமயங்களில்-நமக்குப் பயனற்றனவாகவும், கழி பெரும் பேதைமையுடையனவாகவும் தோன்றக் கூடிய மொழிகளைப் பேசுவதினின்றும் ஆடவர்களாகிய நம்முடை பலர் அம்மாதர்களை மகா மடைமை பொருந்தியவர்களென்று நினைப்பது தவறு. அங்ஙனம் நினைத்தல் நமது மடைமையையே விளக்குவதாம். ஆண்மக்கள் பிரத்யேகமாகக் கற்கும் வித்தைகளிலும், விசேஷமாகப் பயிலும் தொழில்களிலும், பொதுவாக சரீர பலத்திலும் மாதரைக் காட்டிலும் ஆண்மக்கள் உயர்ந்திருக்கக் கூடுமேயெனிலும், சாதாரண ஞானத்திலும், யுக்தி தந்திரங்களிலும், உலகப் பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாக இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை.

ஆதலால், குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விக குணத்தையும், ஆதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய் மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும்போது, வாயை மூடிக்கொண்டு பொறுமையுடன் கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அங்ஙனமின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே , அவள் தாயாயனினும், உடம்பிலும் உயிரிலும், பாதியென்று அக்கினியின் முன் ஆணையிட்டுக் கொடுத்த மன¨வியாயினும், அவள் மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து பெருஞ் சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி எய்துவோராய்ப் பொங்கிப் பொங்கித் துயர்ப்பட்டுத் துயர்ப்பட்டு மடிவார்.

இந்த சங்கதிகளெல்லாம் சோமநாதய்யருக்கு மிகவும் இலேசாகத் தென்படலாயின. சில மாதங்களுக்கு முன்பு அவருடைய கிழத் தாயாகிய ராமுப் பாட்டி இறந்து போய்விட்டாள். அவள் சாகுமுன்பு இவரைத் தனியாக அழைப்பித்து இவருடன் சிறிது நேரம் சம்பாஷணை செய்து கொண்டிருந்தாள். அவள் சொன்னாள்: ''அட, அய்யா, சோமூ! உன் பொண்டாட்டி முத்தம்மாளை நீ சாமான்யமாக நினைத்து விடாதே. அவள் மகா பதிவிரதை. உன்னை சாட்சாத் பகவானுக்கு சமமாகக் கருதிப் போற்றி வருகிறாள். உன்னுடைய ஹிதத்தைக் கருதியும் உனக்குப் பொறுமை விளைவிக்கும் பொருட்டாகவும் அவள் சில சமயங்களில் ஏறுமாறாக வார்த்தை சொன்னால், அதைக் கொண்டு நீ அவளிடம் அதிக அருவருப்பும் கோபமும் எய்தலாகாது. நானோ சாகப் போகிறேன். இன்னும் இரண்டு தினங்களுக்கு மேல் என் உயிர் தறுகி நிற்குமென்று தோன்றுவில்லை. நான் போனபின் உனக்கு அவளைத் தவிர வேறு கதியேது? தாய்க்குப் பின் தாரம். தாய் இருக்கும் போதே ஒருவன் அவளிடம் செலுத்தும் உண்மைக்கும் பக்திக்கும் நிகரான உண்மையையும் பக்தியையும் தன் மனைவியிடத்திலும் செலுத்த வேண்டும். இதுவரை நீ முத்தம்மாளை எத்தனையோ விதங்களில் கஷ்டப்படுத்தி வதைத்து வதைத்து வேடிக்கை பார்த்தாய்விட்டது. கொண்ட பெண்டாட்டியின் மனம் கொதிக்கும் படியாக நடப்பவன் வீட்டில் லட்சுமிதேவி கால் வைக்க மாட்டாள். அந்த வீட்டில் மூதேவி தான் பரிவாரங்களுடன் வந்து குடியேறுவாள். இந்த வார்த்தையை எப்போதும் மறக்காதே. இதை ஆணி மந்திரமாக முடிச்சுப்போட்டு வைத்துக் கொள். குழந்தாய், சோமு. அந்தப் பராசக்தி லலிதாம்பிகை தான் உனக்கும் உன் பெண்டு பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுளும் மாறாத ஆரோக்கியமும் கொடுத்து, உங்களை என்றும் சந்தோஷ பதவியிலிருத்திக் காப்பாற்றிக் கொண்டு வரவேண்டும்'' என்றாள்.

அந்த வார்த்தை அவருக்கு அடிக்கடி நினைப்புக்கு வரலாயிற்று. ''அத்தையருமை செத்தால் தெரியும்'' என்பது பழமொழி. ராமுப்பாட்டியின் முதுமைக் காலத்தில், சோமநாதய்யர் அவளை யாதொரு பயனுமில்லாமல் தன்னுடைய இம்சையின் பொருட்டாகவும் நஷ்டத்தின் பொருட்டாகவும் நிகழ்ச்சி பெற்று வரும் ஒரு கிழ இருமல் யந்திரமாகப் பாவித்து நடத்தி வந்தார். அவள் ஒரேயடியாகச் செத்துத் தீர்ந்த பிறகுதான், அவருடைய மனதில் அவள் மிகவும் மகிமை பொருந்திய தெய்வமாகிய மாதா என்ற விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. ''அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'' என்ற வசனம் அவருக்கு உண்மைப் பொருளுடன் விளங்கலாயிற்று. தாயிற் சிறந்த கோயிலில்லை. உலகத்தையெல்லாம் படைத்துக் காப்பவளாகிய சாட்சாத் ஜகன்மாதாவே தனக்குத் தாய் வடிவமாக மண்மீது தோன்றிக் காப்பாற்றுகிறாள். '' புருஷ ஏவேதம்ஸர்வம்'' என்று வேதம் சொல்லுகிறது. இவ்வுலகத்திலுள்ள பொருளெல்லாம் கடவுளேயென்பது அந்த வாக்கியத்தின் அர்த்தம். ''ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்''-உலக முழுதும் கடவுள் மயம். நம் வீட்டை நாயாக நின்று காப்பதும் கடவுள் தான் செய்கிறார். தோழனாகவும பகைவனாகவும், ஆசானாகவும் சீடனாவும், தாய் தந்தையாராகவும், பெண்டு பிள்ளைகளாவும் நம்மைக் கடவுளே சூழ்ந்து நிற்கிறார். எனிலும் பிற வடிவங்களால் அவர் நமக்குச் செய்யும் உபகாரங்களைக் காட்டிலும் தாய் தந்தையராக நின்று அவர் செலுத்தும் கருணைகள் சால மிகப் பெரியன. தாய் தந்தையரிருவருமே கடவுளின் உயர்ந்த விக்ரகங்களாக வணங்குதற்குரியர். அவ்விருவருள் தாயே நம்மிடத்து அதிக தெய்வீகமான அன்பு செலுத்துவது கொண்டும், நாம் கைம்மாறிழைக்க முடியாத பேரருட் செயல்கள் தந்தையிடமிருந்து நமக்குக் கிடைப்பதைக் காட்டிலும் தாயினிடமிருந்து அதிகமாகக் கிடைப்பது கருதியும், அவள் ஒருவனாலே தந்தையைக் காட்டிலுங்கூட உயர்வாகப் போற்றப்படத் தக்கவள். இதனைக் கருதியே ''அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம்'' என்ற வசனத்தில் தந்தையின் பெயருக்கு முன்னே தாயின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

சோமநாதய்யர் காமம் குரோதம் முதலிய சேஷ்டைகள் உடனே அடக்கிக் கொள்ளக்கூடிய சக்தி பெறாவிடினும், கல்வி கேள்விகளால் அவருக்கு ஏற்பட்டிருந்த புத்தித் தெளிவு இடைக்கிடையே அந்தக் காம முதலிய தீயகுணங்களைக் கண்டித்து நன்கு சுடர் வீசும் சமயங்களும் இருந்தன. அந்த நேரங்களில் அவருடைய புத்திக்குப் பெரிய பெரிய உண்மைகள் புலப்படுவதுண்டு. மேலும் தாம் சுமார் இரண்டு வருஷங்களின் முன்னே விசாலட்சியிடம் அவமானப்பட்ட கால முதலாக, அவர் பர ஸ்த்ரீகளின் விஷயத்தில் புத்தியைச் செலுத்தும் வழக்கத்தை நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டே வந்தார். ''பாவத்தின் கூலியே மரணம்'' என்று கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது. துக்கத்தையும் பயத்தையும் இவற்றால் விளையும் மரணத்தையும் ஒருவன் வெல்ல விரும்புவானாயின், இங்கு பயங்களுக்கும் துக்கங்களுக்கும் முக்கிய ஹேதுவாக இருக்கும் பாவங்களை விட்டு விட வேண்டும். யாதேனுமொரு பாவத்தை வெல்லும் முயற்சியில் ஒரு மனிதன் மிகவும் கஷ்டப்பட்டுக் கைதேறி விடுவானாயின், பிறகு மற்றப் பாவங்களை வெல்வதில் அவனுக்கு அத்தனை கஷ்டமிராது. அவனுக்கு அசுர யுத்தத்தில் தேர்ச்சியுண்டாய்விடும். அசுரர்களென்பன பாவங்கள். தேவர்கள் ஹிதம் பண்ணும் சக்திகள்.

எப்போதுமே சோமநாதய்யர் பாவச் செய்கைகளுக்கு அதிகமாக ஈடுபட்டவரல்லர். முக்கியமாக வியபிசார தோஷத்துக்கு அவர் அதிக வசப்பட்டவரல்லர். பெரும்பாலும், இப்பாவத்தை அவர் மானசீகமாகச் செய்து வந்தவரேயல்லாமல் கார்யாம்சத்தில் அதிகமாக அனுசரித்தது கிடையாது. ஆனால் யேசு கிறிஸ்து நாதர் சொல்லுகிறார்:- அன்ய ஸ்திரீகளுடன் சம்பந்தப்படுவோர் மாத்திரமே வியபிசாரமாகிய பாதகத்துக்கு ஆட்பட்டோர் என்று கருதுதல் வேண்டா. வெறுமே மனத்தால் ஒருவன் தன் மனைவியழிய மற்றொரு ஸ்த்ரீயை விரும்புவானாயின், அவனும் வியபிசார பாவத்துக்குட்பட்டவனேயாவான்'' என்கிறார். இந்த விஷயத்தை உலகத்தார் சாதாரணமாக கவனிப்பது கிடையாது. பிறனுடைய சொத்தைத் திருடி, ஊர்க்காவலாளிகளின் விசாரணைகளில் அகப்பட்டு, தண்டனையடைந்து சிறை புகுந்து வாழ்வோன் மாத்திரமே கள்வனென்று பாமரர்கள் நினைக்கிறார்கள். பிறனுடைய சொத்தை அபகரிக்க வேண்டுமென்று மனதில் எண்ணினால் போதும். அங்ஙனம் எண்ணிய மாத்திரத்தாலேயே ஒருவன் கள்வனாகி விடுகிறான். கள்வனுக்குரிய தண்டனை அவனுக்கு மனிதர்களால் விதிக்கப்படாவிடினும், கடவுளால் அவசியம் விதிக்கப்படுகிறது.

ஆனால், இள மூங்கிலை வளைத்து விடுதல் சுலபம், முற்றிப் போன மூங்கிலை வளைக்க முடியாது. அதை வளைக்கப் போகுமிடத்தே அது முறிந்து போய்விடும். மனித இருதயத்தை இளமைப் பிராயத்தில் சீர்திருத்துதல் சுலபம். பின்னிட்டு முதிர்ந்த வயதில் மனித இருதயத்தை வளைத்தல் மூங்கிலை வளைப்பது போல் ஒரேயடியாக அசாத்தியமன்று. ஆனால் மிகவும் சிரமமான வேலை. இது பற்றியே முன்னோரும் ''இளமையிற் கல்'' என்று உபதேசம் புரிந்தனர்.

எனிலும், வருந்தினால் வாராததொன்றுமில்லை. மனித இருதயம் எப்போதுமே முற்றிப்போன மூங்கிலாகும் வழக்கமில்லை. இளமை யிலிருப்பதைக் காட்டிலும் வயதேறிய பிறகு தவம் முதலியவற்றைப் பயிலுதல் மிகவும் சிரமமென்பது கருதி எவனும் நெஞ்சந் தளர்தல் வேண்டா. கல்வியும் தவமும் எந்தப் பிராயத்திலும் தொடங்கலாம். இதைப் பற்றியே சோமநாதய்யர் அடிக்கடி யோசித்துக் கடைசியாகத் தவம் பயிலுதல் அவசியமென்று நிச்சயித்துக் கொண்டார். தவமென்றால் காட்டிலே போய், மரவுரியுடுத்து கந்த மூலங்களை புசித்துக்கொண்டு செய்யும் தவத்தை இங்க பேசவில்லை. ஆளுதலாகிய உண்மைத் தவத்தையே இங்கு குறிப்பிடுகிறோம். ஆத்ம ஞானத்தை-அதாவது, எல்லாம் ஒன்று; எல்லாம் கடவுள்;எல்லாம் இன்பம் என்ற ஞானத்தை-ஒருவன் தனது நித்திய அனுபவத்தில் பயன்படுத்தி நன்மையெய்த வேண்டுமாயின் அதற்காக அவன் கைக் கொண்டொழுக வேண்டிய சாதனங்களில் மிக உயர்ந்தது தவம்.

அதாவது, இந்திரியங்களை அதர்ம நெறிகளில் இன்புற வேண்டுமென்ற விருப்பத்தினின்றும் தடுத்தல். இந்தி‘ரியங்களைத் தடுத்தலாவது மனதைத் தடுத்தல். மனமே ஐந்து இந்திரிய வாயில்களாலும் தொழில் புரியும் கருவி. சஞ்சலம் பயம் முதலிய படுகுழிகளில் வீழ்ந்து தவிக்காதபடி மனத்தைக் காத்தலும் வலியது. மற்றெல்லாப் பாவங்களுக்கும் காரணமாவது, பயம், எனவே, பயத்தை வென்றால் மற்றப் பாவங்களை வெல்லுதல் எளிதாய் விடும். மற்றப் பாவங்களை வென்றால், தாய்ப் பாவமாகிய பயத்தை வெல்லுதல் பின் எளிதாம். இவ்விரண்டு நெறியாலும் தவத்தை ஏக காலத்தில் முயன்று பழகுதல் வேண்டும்.

இவ்வக¨த் தவத்தையே சோமநாதய்யர் விரும்புவராயினர். மேலும் தவங்களில் உயர்ந்தது பூஜை. மனத்தைத் தீய நெறியில் செல்ல விடாமல் தடுப்பதற்கு மிகவும் சுருக்கமான உபாயம் அதனை நன்னெறியிலே செலுத்துதல். மனதைச் செலுத்துதற்குரிய நன்னெறிகள் அனைத்திலும் உயர்ந்தது பூஜை. அன்பால் செய்யப்படும் உபசாரங்களே பூஜைகள் எனப்படும். எல்லாமாகிய கடவுளிடத்திலும், கடவுளாகிய எல்லாப் பொருள்கள், விசேஷமாக எல்லா உயிர்களிடத்திலும், இடையாறத நல்லன்பு செலுத்துவதும், அந்த அன்பின் கரியைகளாகிய வழிபாடுகள் புரிவதுமே மிகச் சிறந்த தவம்; அதுவே அறங்களனைத்திலும் பேரறம். அ·தே மோட்ச வீட்டின் கதவு. அன்பே மோட்சம். அன்பே சிவம். இதனையே பகவான் புத்தரும் நிர்வாணமாகிய மகா முக்திக்குக் கருவியாகக் கூறினார். 'கடவுளிடத்தும் மற்றெல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதே மோட்சத்துக்கு வழி' யென்று யேசு கிறிஸ்துவும் சொல்லியிருக்கிறார். மேலும், மற்ற மனிதர்களைத் தொழுதலும் வழிபடுதலும்-அவர்களிடத்துத் தீராத அன்பு செலுத்தி அவர்களுக்குத் தொண்டு புரிதலும்-இல்லாதோன் கடவுளுக்குச் செய்யும் ஜபம் முதலிய கிரியைகளால் கடவுளிடத்தே அன்புடையவன் என்று தன்னைக் கூறிக் கொள்ளுதல், வெறும் வேஷமாத்திரமேயன்றி உண்மையான தெய்வ பக்தியைக் காட்டுவதாகாது என்று கிறிஸ்து நாதர் உபதேசித்தருளினார். கண்ணுக்குத் தெரியும் கடவுளராகிய மனிதரிடத்தே அன்பு செய்யாதவன் கண்ணுக்குத் தெரியாத ஜகத்தின் மூல ஒளியாகிய ஆதிக் கடவுளிடத்தே அன்பு செய்ய வல்லன் ஆகமாட்டான் என்று கிறிஸ்துநாதர் சொல்லுகிறார்.

இதனையெல்லாம் சோமநாதய்யர் நன்றாக அறிந்தவராதலால், மற்ற ஜீவர்களிடத்தில் அன்பு செலுத்திப் பழகுவதை முக்கிய விரதமாக எடுத்துக் கொண்டார். மற்ற உயிர்களிடத்திலும், விசேஷமாக மற்ற மனிதரிடத்திலும் உண்மையான அன்பு செலுத்திப் பழகுதல் சாமான்யமான காரியமன்று. சமஸ்காரங்களாலும் கணக்கில்லாத அனந்த கோடி சிருஷ்டிகளில் அனந்த கோடிகளாகத் தோன்றி மறையும் ஜீவ குலத்துக்குப் பொதுவாக ஏற்பட்டிருக்கும் பூர்வ ஸம்ஸ்காரங்களாலும் மனிதருக்கு இயல்பாகவே மற்ற உயிர்களிடமும், மற்ற மனிதரிடமும் பெரும்பாலும் பயம், வெறுப்பு, பகைமை முதலிய முதலிய த்வேஷ குணங்கள் ஜனிக்கின்றன. பல உயிர்களிடம் அன்பும் நட்பும் ஜனிப்பதுமுண்டு. ஆனால், பொதுவாக ஜீவர்கள் இயற்கையிலேயே ஒருவருக்கொருவர் சகிப்பில்லாமை, அசுயை முதலிய குணங்களுடையோராகின்றனர்.

இந்த அநாதியான ஜீவ விரோதம் என்ற குணத்தை நீக்கி சர்வ ஜீவ காருண்யமும் சர்வ ஜவீ பக்தியும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற இச்சை சோமநாதய்யருக்கு உண்டாயிற்று. எனவே, அவர் ஆடு மாடுகளைக் கண்டால் முன்போல் இகழ்ச்சிக் கொள்கை கொள்வதில்லை. ஏழைகளைக் கண்டால், கொடிய நோயாளிகளைக் கண்டால், குரூபிகளையும் மிகுந்த முதுமையால் உருச் சிதைந்து விகார ரூபமடைந்திருப்போரையுங் கண்டால், அருவருப்பு எய்தி முகஞ் சுளிப்பதை நிறுத்தி, அவர்களை மானசீகமாக வந்தனை செய்யவும், ஆசீர்வாதம் பண்ணவும், இயன்றவரை புறக் கிரியைகளாலும் அவர்களுக்கு இனியன செய்யவும் முயன்றார்.

இதுவரை தமக்குக் கோபமும் அருவருப்பும விளைவித்துத் தம்மால் இகழ்ச்சியுடனும் எரிச்சலுடனும் புறக்கணிப்படும் மனிதர்களைக் காணும் போது முகமலர்ச்சி கொள்ளவும், அவர்களிடம் தாழ்மையுரையும் இன்சொற்களும் பேசவும் பழக்கப் படுத்திக்கொள்ளத் தொடங்கினார்.

இ·தெல்லாம் ஆரம்பத்தில் அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இ·தனைத்திலும் சிரமம் யாதென்றால், அவருக்கு முத்தம்மாளிடம் சுமுகமாக இருந்து அவளிடம் அன்பு காட்டுதல். அவளைக் கண்டவுடனே முகத்தைச் சுளிக்காமலிருக்க அவருக்கு சாத்தியப்படவில்லை. பரஸ்திரீகளிடம் காமமுறாமலிருப்பது அவருக்கு நாளடைவில் ஒருவாறு எளிதாயிற்று. ஆனால், முத்தம்மாளிடம் பிரேமை செலுத்துவதெப்படி? விவாகம் செய்து, ருதுசாந்தி முடிந்து சில மாதங்கள் வரை அவருக்கு முத்தம்மாளுடைய உறவும் ஊடாடுதலும் இன்பம் பயந்து கொண்டிருந்தன. அப்பால் அவை அவருக்கு ஸ¤கஹேதுக்களாகாமல் மாறிப் போய்விட்டன. பதினைந்தாம் வயதில் அந்த பாக்கியவதி அவருடைய சயன வீட்டுக்கு ஒரு ஆண் குழந்தையையும் கொண்டு வரத் தொடங்கினாள். அவர் அவளை முத்தமிடப் போகும் சமயத்தில் அந்தக் குழந்தை வீறிட்டழத் தொடங்கிற்று. அல்லது மல மூத்ர விஸர்ஜனம் செய்து அவளுடைய மடியையும் இவருடைய வேஷ்டியையும் அசுத்தப்படுத்தலாயிற்று. அன்றைக்குத் தொடங்கிற்று பெருங் கஷ்டம். பிறகு புதிய குழந்தைகள் இரண்டு பிறந்தன. தமக்கும் தம்முடைய மனைவிக்கும் இளமைப்பிராயம் தவறிவிட்டன என்ற எண்ணம் அக்குழந்தைகளைப் பார்க்குநதோறும் அவருள்ளத்தில் எழலாயின. இதினின்றும் அவர் குழந்தைகளிடம் அருவருப்படைதல் என்ற பரம மூடத்தனத்துக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்ளாமல் தப்பினார். ஆனால் அதைக் காட்டிலும் ஆயிரம் பங்கு அதிக மூடத்தனமாகத் தமது பத்தினியை நோக்கும் பொழுதெல்லாம் அவளிடத்தில் வெறுப்பெய்துவதும் முகத்தைச் சுளிப்பதுமாகிய தீயவழக்கத்தில் தம்மையறியாது விழுந்து, நாளுக்குநாள் அந்தப் படுகுழியில் தமது சித்தத்தை அதிக ஆழமாக அமிழ்ந்துபோக இடங் கொடுத்தார். இத்தனை காலத்துக்கு அப்பால் இவருக்குண்டாகிய புதிய தெளிவின் பயனாக, இப்போது அந்த மனைவியிடம் அன்பு செலுத்த முயற்சி பண்ணினார். அந்த முயற்சி இவருக்கு ஆரம்பத்தில் வேப்பெண்ணெய் குடிப்பதுபோல் மிகவும் கசப்பாக இருந்தது. அவளோ, இவரிடத்திலே தோன்றிய மாறுதலைக் கண்டு உள்ளத்தில் மகிழ்ச்சி கொண்டாளாயினும், இவருடைய புதிய அன்பை உறுதிப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்துடன் இவரைப் பல கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தத் தொடங்கினாள். எனவே இவர் நம்பிக்கையையும் ஞானத்தையுந் துணைக் கொண்டு வேப்பெண்ணெய் குடிக்கப்போன இடத்தில் இவருடைய முதுகில் சவுக்கடிகள் வேறு விழலாயின. மகா பதிவிரதையாகிய முத்தம்மா தன்னுடைய கணவன் இங்ஙனம் வேப்பெண்ணெய் குடிக்க வந்த சமயங்களில், அவருக்குச் சர்க்கரை முதலியன கொடுத்து அவருடைய கஷ்டத்துக்குப் பரிகாரங்கள் செய்யாதபடி இங்ஙனம் சவுக்கடிகள் கொடுத்து அவருடைய முதுகைக் காயப்படுத்தியது அவளுடைய விரத மகிமைக்குப் பொருந்துமோ என்று சிலர் ஐயுறலாம். ஆனால், அவள் உயர்ந்த பதிவிரதையாகிய காரணம் பற்றியே, எத்தனைக்கு எத்தனை விரைவாக நடத்துதல் சாத்தியமோ அத்தனைக்கத்தனை விரைவாக அவரை அஞ்ஞான விஷயத்திலிருந்து பரிபூர்ணமாக விடுவித்து அவருக்கு ஞானாமிர்தத்தைப் புகட்டவேண்டுமென்ற கருத்துடையவளாயினாள்.

ஜீவாமிர்தமாகிய தர்ம பத்தினியின் காதலை ஒரு பரம மூடன் வேப்பெண்ணெய்க்கு ஒப்பாகக் கருதி வருமிடத்தே, கூடிய அளவு விரைவில் அவனுக்கு என்ன கஷ்டம் விளைவித்தேனும் அவனை அந்த மகா நரகமாகிய அஞ்ஞானத்தினின்றும் வெளியேற்ற முயலுவதே தனது முக்கியக் கடமையென்று அவள் நியாயமாக நிச்சயித்தாள். அவனுக்கு சாசுவதமான ஞானமும் நித்ய இன்பமும் ஏற்படுத்திக் கொடுத்து அவனைக் காப்பாற்ற வேண்டுமென்று கருதி, அதனால் அவனுக்குச் சிறிது காலம் வரை அதிக சிரமங்கள் ஏற்பட்ட போதிலும் தீங்கில்லையென்று தீர்மானம் செய்தாள். ஒருவன் காலில் ஆழமாக விஷமுள் பதிந்திருக்கையில் அதை ஊசி கொண்டெடுக்கும்போது அவன் அந்த ஊசி குத்தும் வேதனையைப் பொறுக்கமாட்‘மல் முள்ளையெடுக்க முயலாதபடி மிட்டாய் தின்று தன் மனதை அந்த நோயினின்றும் புறத்தே செலுத்த வேண்டுமென்று விரும்புவானாயின், அவனுக்கு இதத்தை நாடுவோர் அப்போது செய்யத்தக்கது யாது? அவனுக்கு ஊசி குத்துவதனால் வேதனையைப் பொருட்டாகக் கூடாதென்று அவனிடம் நிஷ்கருணையாகத் தெரிவித்து விட்டு ஊசியை ஆழமாகப் பதித்து விஷமுள்ளை எடுத்துக் களைதல் நன்றா? அல்லது, ஊசியைப் புறத்தே போட்டு விட்டு அவனுக்கு ஜிலேபி காபியால் விஷமுள்ளின் செயலை நிறுத்திவிடலாம் என்று அவன் நினைப்பது மடமையன்றோ? அதற்கு நாம் இடங்கொடுக்கலாமோ? அவன் அழ அழ, ஊசியை அழுத்தி விஷமுள்ள எடுத்தெறுந்தாலன்றி அவனுக்கு விஷமுள்ளின் செய்கையால் மரணமேற்படுமென்பதை அவனுக்கு வற்புறுத்திக் கூறி எங்ஙனமேனும் ஊசியை உபயோகித்தலன்றோ உண்மையான அன்புக்கும் கருணைக்கும் அடையாளமானது?

இங்ஙனம் ஆலோசனை புரிந்தே, முத்தம்மா நமது சோமநாதய்யருக்கு அடிக்கடி விளாற்றுப் பூஜைகள் நடத்தி வந்தாள். இங்ஙனம் நல்லெண்ணங் கொண்டே அவள் தம்மிடம் கடுஞ் சொற்களும், கடுநடைகளும் வழங்குகிறாளென்ற விஷயம் நாட்பட, சோமநாதய்யருக்கும் சிறிது சிறிது அமர்த்தமாகத் தொடங்கிவிட்டது. இருந்தபோதிலும் அவரால் சகிக்கமுடியவில்லை.

காதற்கோயில் மிகத் தூய்மைகொண்ட கோயில் . ஒரு முறை அங்கு போய்ப் பாவஞ் செய்து வெளியே துரத்துண்டவன் மீளவும் அதனுள்ளே புகுமுன்னர் அவன் படவேண்டிய துன்பங்கள் எண்ணிறந்தன.

கண்ணைக் குத்திப் பார்வையை அழித்துக் கொள்ளுதல் சுலபம். ஆனால் இழந்த பார்வையை மீட்டும் ஏற்படுத்திக் கொள்ளுதல் எளிதில் இயல்வதொரு காரியமா? சோமநாதய்யருக்குக் குருட்டுக் கண்ணை மாற்றி மறுபடி நல்ல கண் கொடுக்கவேண்டுமென்ற விருப்பத்துடன் முத்தம்மா வேலை செய்தாள். அதில் அவள் செய்த சிகிச்சைகள் அவருக்கு சகிக்க முடியாதனவாகவேயிருந்தன.

ஆனால் எப்படியேனும் தாம் இழந்த பார்வையை மீட்டும் பெறவேண்டுமென்ற பேராவல் அவருக்கும் இருந்தபடியால், சிகிச்சையிலுண்டாகிய சிரமங்கள் பொறுக்க முடியாதனவாகத் தோன்றினும், பல்லைக் கடித்துக் கொண்டு, தம்முடைய முழு சக்தியையும் செலுத்தி ஒருவாறு சகித்துக் பழகினார்.

எனவே முத்தம்மாளை ஓயாமல் தம்முடன் இருக்கும்படிக்கும் பேசும்படிக்கும் வற்புறுத்தத் தொடங்கினார். இவர் எத்தனைக்கெத்தனை அவளுறவையும் ஊடாட்டத்தையும் விரும்பத் தொடங்கினாரோ, அத்தனைக்கு அத்தனை அவள் இவரிடமிருந்து ஒதுங்கவும் மறையவும் தொடங்கினாள். ''இவளை நாம் காதலுக்கு யோக்யதையில்லாத மனையடிமைப் புழுக்கச்சியாகவும் குழந்தை வளர்க்கும் செவிலியாகவும் நடத்தி வந்தோம். அப்போதெல்லாம் இவள் நமக்கு மிகவும் பணிவுடன் அடிமையிலும் அடிமையாய் நடந்து வந்தாள். இப்போது நாம் பரமார்த்தமாக இவளுடைய அன்பைக் கருதி அதனை வேண்டிச் சருவப் புகுந்தபோது, இவள் பண்ணுகிற மோடியும் இவள் செய்யும் புறக்கணிப்புகளும் பொறுக்க முடியவில்லையே! இதென்னடா கேலி! சொந்தப் பெண்டாட்டியைக் காதலிராணியாகக் கொண்டாடப் போனவிடத்தே அவள் நம்மை உதாசீனம் பண்ணினாள். என்ன செய்வது? பதிவிரதையாவது, வெங்காயமாவது? நாம் இளமை தவறிவிட்டோமென்பது கருதி இவள் நமது காதலை உண்மையாகவே அருவருக்கிறாளோ, என்னவோ? எவன் கண்டான்? ஸ்திரீகளுடைய இருதயத்துக்கு ஆழங் கண்டோன் யார்? கடலாழங் காணுதல் எளிது; மாதர் மனத்தை ஆழங் காணுதல் அரிது. ஆண்மக்களைக் காட்டிலும் பெண்களுக்கு எட்டு மடங்கு அதிகம் காமமென்று நீதி சாஸ்திரம் சொல்லுகிறது. எனவே, தலை வழுக்கையாய், நரை தொடங்கிக் கிழப்பருவத்திலே புகத்தொடங்கிய என்னிடம் இவள் உண்மையாகவே அவமதிப்புக் கொண்டாளெனின் அ·தோர் வியப்பாகமாட்டாது. என்னே உலக விசித்திரம்! என் குடும்பத்தில் மாத்திரமா, உலக முழுமையிலும் மனிதரெல்லாரும் வீட்டுப்பெண்டாட்டியென்றால் அவள் தன் விருப்பத்துக்கு கடமைப்பட்ட அடிமைச்சியாகவே கருதுகிறார்கள். புதியதொரு சித்திரத் தெய்வத்தின்மீது காதல் கொள்வதுபோல் நான் சொந்தப் பெண்டாட்டியிடம் காதல் செய்யப் புகுமிடத்தே, அவள் என்னை இப்படிக் கேலி பண்ணுகிறாள். எனிலும் இவள் பதிவிரதையல்லளென்று கருதவும் நியாயமில்லை. எனது பெற்ற தாய் இறக்கப் போகுந் தருணத்தில் இவள் மகா சுத்தமான பதிவிரதையென்று சொல்லிவிட்டு மடிந்தாளே. அவள் தீர ஆராய்ச்சி செய்து நிச்சயப்படுத்தாத வார்த்தையை மரண காலத்தில் சொந்த மகனிடம் சொல்லக் கூடுமென்று நினைக்க இடமில்லையே. தாய் நம்மிடம் பொய் சொல்லிவிட்டா போவாள்? மேலும், அவள் இந்த வார்த்தை என்னிடம் சொல்லிய காலத்தில், அவளுடைய முகத்தை நான் நன்றாக உற்று கவனித்தேனன்றோ? அவள் அச்சொல்லைப் பரிசுத்தமான இருதயத்துடனம் உண்மையான நம்பிக்கையுடனும் கூறினாளென்து அவள் முகத்தில் மிகத் தெளிவாக விளங்கிற்றன்றோ? மேலும், அவள் தீர ஆழ்ந்து பாராமல் வஞ்சிக்கப்பட்டவளாய் அங்ஙனம் தவறாது நம்பிக்கை கொண்டிருக்கக் கூடுமென்று நினைக்கப் புகுவோமாயின், அது பெரு மடைமைக்கு லட்சணமாகும். பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். எத்துணை மறைந்த போதிலும் பெண் மர்மம் பெண்ணுக்குத் தெரிந்து விடுமன்றோ? ஒரு வருஷமா, இரண்டு வருஷமா? இவளுடைய நடையை என் மாதா பத்து வருஷகாலமாக, இரவு பகல் கூடவேயிருந்தது மிகவும் ஜாக்கிரதையுடன் கவனித்து வந்தவளன்றோ? மேலும் என் மாதா புத்திக்கூர்மையில்லாத மந்தமா? இருபது கம்பிளியை போட்டு ஒரு ரகசியத்தை மூடி வைத்தாலும், அது அவளுடைய கண்களுக்குத் தெரிந்து விடுமன்றோ? தாய் சொல்லியதை மறுப்பதில் பயனில்லை. அதில் ஐயப்படுவது மூடத்தனம். 'ஐயமுற்றான் அழிவுறுவான்' என்று பகவத் கீதையில் கண்ணபிரான் அருளிச் செய்திருக்கிறானன்றோ? நிச்சயமாக நம்முடைய புத்திக்குப் புலப்படும் உண்மையன்றைப் பற்றி வீண் சம்சயப் படும் அதிகாரம் மனத்துக்குக் கொடுப்போமாயின், அது நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும். நம்முடைய முத்தம்மா பதிவிரதைதான். நம்முடைய உண்மையைச் சோதி த்-தறியும் பொருட்டாகவே, நம்மை இந்த வலிய சோதனைகளுக்கு உட்படுத்துகிறாள். இதனால் நாம் அவளிடம் கொண்டிருக்கும் பிரேமைத் தழல் அவிந்து போக இடங் கொடுக்கக்கூடாது. இதனால் நாம் அவளிடம் விரசப்படலாகாது. அவள் தான் நமக்குத் தாரகம். வேறு புகல் நமக்கில்லை. எக்கலாத்திலும் நம்முடைய வழிகளை இருள் மூடாத வண்ணம் நம் மாதா கருணையுடன் நிறுத்தி விட்டுப்போன நித்ய விளக்கன்றோ இந்தக் கண்மணி முத்தம்மா? மேலும், மூட நெஞ்சமே! பாவியாகிய புழு நெஞ்சமே! முத்தம்மா நம்மை என்ன சோதனைகள் செய்கிறாள்? ஊடல் தானே பண்ணுகிறாள்? ஊடலன்றோ காதலின் மிக இனிய பகுதியாவது?

உணவினும் உண்டதறலினிது காமம்
புணர்தலின் ஊட லினிது

என்றன்றோ சாட்சாத் பிரமதேவனுடைய அம்சபூதரும் மகாகவியுமாகிய திருவள்ளுவ தேவர் அருளியிருக்கின்றார். நாய் மனமே! உனக்கு என் காதற் கிளியிடமிருந்த இகழ்ச்சியெண்ணம் இன்னும் உன்னை முற்றிலும் விட்டு விலகவில்லை. 'இவளாவது? நம்மிடத்தில் ஊடல் காட்டுவதாவது?' என்ற கர்வ சிந்தனையால், இந்த விஷயத்தில் மனதுக்குக் கஷ்டமேற்படுகிறதேயன்றி வேறில்லை. இவள் என்ன காரணத்தால் உனக்கு இத்தனை துச்சமாய் விட்டாள்? துச்ச மனமே? இவளைக் காதலிராணியென்று கொண்ட இடத்தில், உணர்வு, உயிர், உடம்பு என்ற மூன்றும் அவளுக்கே சமர்ப்பணமாகி விட்டனவன்றோ? அவள் ஊடினால் அதுவும் ஓரின்பம். அவள் கூடினால் அதுவும் ஓரின்பம். மேலும், காதலி சொல்லும் வசை மொழிகளெல்லாம் நம்முடைய செவிகளில் அமிர்தம் போல் விழுவதன்றோ? ஆண்மைக்கு லட்சணமாம்? காதலிப் பெண் உண்மையாகவே சினங் கொண்டோ அல்லது பொழுது போக்கின் பொருட்டாகவோ, நம்மைத் திட்டினால், நாம் அந்தத் திட்டுக்களையெல்லாம் மிட்டாயென்று நினைப்பதன்றோ புருஷலட்சணம்? அங்ஙனமின்றி அவளிடம் எதிர்த்துச் சினங் கொள்ளுதல் பேடித்தன்மையன்றோ? அவள் எது செய்தாலும் அவளே நமக்குத் தெய்வம், அவளே நமக்கு இன்பம். அவள் வலிய வந்து நம்மை முத்தமிட்டபோதிலும், அவளருளே கதி. அவள் நமது தசையை வாளைக் கொண்டு அறுத்தபோதிலும், அதுவே நமக்கு சுவர்க்க போகம்.''

என்று இங்ஙனம் நிலாமுற்றத்தில் நாற்காலியின் மீதுட்கார்ந்து நிலவை நோக்கி ஆலோசனை செய்து கொண்டிருந்த சோமநாதய்யர் அப்படியே நித்திரையில் ஆழ்ந்து விட்டார். பிறகு அவர் கண்ணை விழித்துப் பார்க்கையிலே, சந்திரன் உதித்த இடத்தினின்றும் நெடுந்தூரம் விலகிவந்திருப்பது கண்டார். மாலையில் சுமார் ஏழுமணிக்கு முத்தம்மா காபி போட்டுக் குடித்துவிட்டு வருவதாகச் சொல்லி விட்டுக் கீழே போனாள். இப்போது மணி எத்தனையிருக்குமென்று அவர் தம்முடைய சட்டைப் பையிலிருந்த கைக்கடிகாரத்தை எடுத்து நோக்கினார். நடுநிசி, பன்னிரண்டு மணியாய் விட்டது. படுக்கையறைக்குள்ளே போய்ப் பார்த்தார். அங்கு திமிதிமியென்று மண் எண்ணெய் மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இன்னும் ஒரு கணம் இவர் தாமதப்பட்டு வந்திருப்பாரானால் கண்ணாடிக் குழாய் வெடித்துப் போயிருக்கும். அதனிலும் பெரிய ஆபத்துக்கள் விளைந்தாலும் விளைந்திருக்கும். இவர் விளக்கின் ஸ்திதியைப் பார்த்தவுடனே பளிச்சென்று பாயந்து திரியைக் குறைத்தார். விளக்கு நேரே எரிந்தது. அவர்களுடைய படுக்கைய¨யில் மூன்று கட்டில்களுண்டென்று முன்னமேயே சொல்லியிருக்கிறேன். அவற்றுள் ஒரு கட்டிலின் மீது அனந்த கிருஷ்ணனைத் தழுவிக் கொண்டு முத்தம்மா படுத்திருந்தாள். மற்றொரு கட்டிலில் மூத்த குழந்தைகள் இரண்டும் படுத்திருந்தன. சோமநாதய்யருடைய கட்டில் சும்மா கிடந்தது. முத்தம்மாளை எழுப்பிக் கீழே அழைத்துப் போய் போஜனத்துக்கு ஏற்பாடு பண்ணலாமா என்று ஒரு கணம் சோமநாதய்யர் யோசனை பண்ணினார். அப்பால், ''அறிவுடனே கண்ணை விழித்து நன்றாகப் பார்த்துக் கொண்டே படுகழியிற் போய் விழ்வதொப்பப் பசியில்லாமல் உண்பதிலிருந்தே நோய்களும், சாவும் ஏற்படுதல் ப்ரத்ய‡மாகத் தெரிந்திருந்தும் நாம் தினந்தோறும் பசியின்றி உண்டு மரணத்துக்கு வழிதேடுதல் பேதமையினும் பெரிய பெரும் பேதைமையாகுமன்றோ?'' என்றொரு நினைப்பு அவருக்குண்டாயிற்று. ''இன்றைக்கு நல்ல நாள். பசியில்லாத சமயங்களில் உபவாசம் போடுவதாகிய நல்ல வழக்கத்தை இன்றிரவே தொடங்கி விடுவோம். பிரிய ரத்தினமாகிய முத்தம்மாளும் ஆழ்ந்து நித்திரை செய்கிறாள். இவளை இப்போ எழுப்பிச் சோறுபோடச் சொல்லித் தொல்லைப்படுத்துதல் பாவமாகும். ஆதலால் 'உபவாசமே கிடப்போம்'' என்று தீர்மானம் பண்ணி, சோமநாதய்யர் விளக்குத் திரியை மிகவும் சிறிதாக்கிக் குறைத்து மேஜையினின்றும் விளக்கையெடுத்துப் படுக்கையறையின் மூலையன்றில் தரைமீது வைத்தார். மெல்ல வந்து முத்தம்மா துயிலெழாதபடி மெதுவாக அவளைத் தழுவி அவளுடைய கன்னத்தில் ஒரு முத்தமிட்டார். பிறகு தம்முடைய கட்டிலின் மீதேறிப் படுத்துக் கொண்டார். விரைவில் நித்திரை போய்விட்டார். அன்றிரவு முழுதும் சோமநாதய்யர் மிகவும் ஆச்சரியமான இன்பக் கனவுகள் கண்டார்.