பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, April 3, 2015

10. அர்ஜுன சந்தேகம்.


ஹஸ்தினாபுரத்தில் துரோணாசாரியாரின் பள்ளிக்கூடத்தில் பாண்டு மகாராஜாவின் பிள்ளைகளும் துரியோதனாதிகளும் படித்து வருகையில், ஒரு நாள் சாயங்கால வேளையில் காற்று வாங்கிக்கொண்டு வரும்போது, அர்ஜுனன் கர்ணனைப் பார்த்து, "ஏ கர்ணா! சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?" என்று கேட்டான். (இது மகாபாரதத்திலே ஒரு உபகதை; சாஸ்திர பிரமாணமுடையது; வெறும் கற்பனையன்று).

"சமாதானம் நல்லது" என்று கர்ணன் சொன்னான்.

"காரணமென்ன?" என்று கிரீடி கேட்டான்.

கர்ணன் சொல்லுகிறான், "அடே, அர்ஜுனா, சண்டை வந்தால் நான் உன்னை அடிப்பேன். அது உனக்குக் கஷ்டம். நானோ இரக்க சித்த முடையவன். நீ கஷ்டப்படுவதைப் பார்த்தால் என் மனம் தாங்காது. ஆகவே இரண்டு பேருக்கும் கஷ்டம். ஆதலால் சமாதானம் சிறந்தது" என்றான்.

அர்ஜுனன், "அடே கர்ணா, நம் இருவரைக் குறித்து நான் கேட்கவில்லை. பொதுப்படையாக உலகத்தில் சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா? என்று கேட்டேன்" என்றான்.

அதற்குக் கர்ணன், "பொது விஷய ஆராய்ச்சிகளில் எனக்கு ருசியில்லை" என்றான்.

இந்தப் பயலைக் கொன்று போடவேண்டும் என்று அர்ஜுனன் தன் மனதுக்குள்ளே தீர்மானம் செய்து கொண்டான். பிறகு அர்ஜுனன் துரோணாசாரியாரிடம் போய் அதே கேள்வியைக் கேட்டான்.

"சண்டை நல்லது" என்று துரோணாசாரியார் சொன்னார்.

"எதனாலே?" என்று பார்த்தன் கேட்டான்.

அப்போது துரோனாச்சாரியார் சொல்லுகிறார்: "அடே விஜயா, சண்டையில் பணம் கிடைக்கும்; கீர்த்தி கிடைக்கும், இல்லாவிட்டால் மரணம் கிடைக்கும். சமாதானத்தில் சகலமும் சந்தேகம்--ச--ச--ச--" என்றார்.

பிறகு அர்ஜுனன் பீஷ்மாசார்யாரிடம் போனான். "சண்டை நல்லதா, தாத்தா, சமாதானம் நல்லதா?" என்று கேட்டான். அப்போது கங்கா புத்திரனாகிய அந்தக் கிழவனார் சொல்லுகிறார். "குழந்தாய், அர்ஜுனா, சமாதானமே நல்லது. சண்டையில் நம்முடைய க்ஷத்திரிய குலத்திற்கு மகிமையுண்டு. சமாதானத்தில் லோகத்துக்கே மகிகை" என்றார்.

"நீர் சொல்லுவது நியாயமில்லை" என்று அர்ஜுனன் சொன்னான்.

"காரணத்தை முதலாவது சொல்ல வேண்டும், அர்ஜுனா, தீர்மானத்தை அதன் பிறகு சொல்ல வேண்டும்" என்றார் கிழவர்.

அர்ஜுனன் சொல்லுகிறான், "தாத்தாஜி, சமாதானத்தில் கர்ணன் மேலாகவும் நான் தாழ்வாகவும் இருக்கிறோம். சண்டை நடந்தால் உண்மை வெளிப்படும்" என்றான்.

அதற்கு பீஷ்மாச்சாரியார், "குழந்தாய், தர்மம் மேன்மையடையும், சண்டையாலேனும், சமாதானத்தாலேனும், தர்மம் வெல்லத்தான் செய்யும். ஆதலால் உன் மனதில் கோபங்களை நீக்கி, சமாதானத்தை நாடு. மனுஷ்ய ஜீவரெல்லாம் உடன் பிறந்தாரைப் போலே, மனுஷ்யர் பரஸ்பரம் அன்போடிருக்க வேண்டும். அன்பே தாரகம். முக்காலும் சொன்னேன். அன்பே தாரகம்" என்று சொல்லிக் கண்ணீர் ஒரு திவலை உதிர்த்தார்.

சில தினங்களுக் கப்பால் அஸ்தினாபுரத்துக்கு வேத வியாஸர் வந்தார். அர்ஜுனன் அவரிடம் போய்ச் சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா என்று கேட்டான்.

அப்போது வேத வியாஸர் சொல்லுகிறார், "இரண்டும் நல்லன. சமயத்துக்குத் தக்கபடி செய்ய வேண்டும்" என்றார்.

பல வருஷங்களுக் கப்பால் காட்டில் இருந்து கொண்டு துரியோதனாதிகளுக்குத் தூது விடுக்கு முன்பு, அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனை அழைத்து, "கிருஷ்ணா சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா?" என்று கேட்டான்.

அதற்குக் கிருஷ்ணன், "இப்போதைக்கு சமாதானம் நல்லது. அதனாலே தான் சமாதானம் வேண்டி ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்படப் போகிறேன்" என்றாராம்.

9. குதிரைக் கொம்பு


சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரீவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் என்று சொல்லிக் கொண்டான். இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்த பல பண்டிதர் விளங்கினார்கள். ஒரு நாள் அரசன் தனது சபையாரை நோக்கி, "குதிரைக்கு ஏன் கொம்பில்லை?" என்று கேட்டான். சபையிலிருந்த பண்டிதர்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். அப்போது கர்நாடக தேசத்திலிருந்து அந்த அரசனிடம் சம்மானம் வாங்கும் பொருட்டாக வந்திருந்த வக்ரமுக சாஸ்திரி என்பவர் தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். அரசன் அனுமதி தந்தவுடன் மேற்படி வக்ரமுக சாஸ்திரி பின்வருமாறு கதை சொல்லத் தொடங்கினார்:

"கேளீர், ரீவண மஹாராஜனே, முற்காலத்தில் குதிரைகளுக் கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட தமது மூதாதையாகிய ராவணேசுரன் காலத்தில், அந்த ராஜனுடைய ஆக்கினைப்படி பிரமதேவன் குதிரைகளுக்குக் கொம்பு வைக்கும் வழக்கத்தை நிறுத்தி விட்டான்" என்றார்.

இதைக் கேட்டவுடன் ரீவண நாயக்கன் உடல் பூரித்துப் போய், "அதென்ன விஷயம்?" அந்தக் கதையை ஸவிஸ்தாரமாகச் சொல்லும்" என்றான்.

வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறார்:

"இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. அந்தக் காலத்தில் ஒரு வருஷத்துக்குப் பதின்மூன்று மாசமும், ஒரு மாசத்துக்கு முப்பத்துமூன்று தினங்களும் ஒரே கணக்காக ஏற்பட்டிருந்தன. ஆகவே பதினொரு நாளுக்கு ஒரு மழை வீதம், வருஷத்தில் முப்பத்தொன்பது மழை பெய்தது. பிராமணர் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்துநாலு கலை ஞானங்கள், ஆயிரத்தெட்டு புராணங்கள், எல்லாவற்றிலும் ஓரெழுத்துக்கூடத் தவறாமல் கடைசியிலிருந்து ஆரம்பம் வரை பார்க்காமல் சொல்லக்கூடிய அத்தனை திறமையுடனிருந்தார்கள். ஒவ்வொரு பிராமணன் வீட்டிலும் நாள்தோறும் தவறாமல் இருபத்து நாலாயிரம் ஆடுகள் வெட்டிப் பலவிதமான யாகங்களை நடத்தி வந்தார்கள். ஆட்டுக் கணக்கு மாத்திரம்தான் புராணக்காரர் சொல்லியிருக்கிறார். மற்ற மிருகங்களின் தொகை அவர் சொல்லி யிருக்கலாம். இப்படியே மற்ற வருணத்தாரும் தத்தம் கடமைகளை நேராக நிறைவேற்றிக் கொண்டு வந்தார்கள். எல்லா ஜீவர்களும் புண்யாத்மாக்களாகவும், தர்மிஷ்டராகவும் இருந்து இகத்தில் இன்பங்களையெல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாக்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர். அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன், தனக்கு மூத்தவனாகிய பரதனுக்குப் பட்டங்கட்டாமல் தனக்கே பட்டம் கட்டிக்கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்குக் கோபமுண்டாய் ராமனையும் லக்ஷ்மணனையும் ராஜ்யத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான். அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிப்போய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணடைந்தார்கள். அவன் இவர்களுக்கு அபயம் கொடுத்துக் காப்பாற்றி வருகையில் ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகைக் கண்டு மோகித்து, அவளைத் திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டகாரண்யம் புகுந்தான். அங்கு ராமர், லக்ஷ்மணர் முனிவர்களை யெல்லாம் பலவிதங்களிலே ஹிம்சை செய்தனர்; யாகங்களைக் கெடுத்தனர். இந்த விஷயம் அங்கே அதிகாரம் செய்து வந்த சூர்ப்பநகைத் தேவியின் காதில் பட்டது. ராவணன் தங்கையாகையாலும், பிராமண குலமானபடியாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்க மாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லக்ஷ்மணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டு வரும்படி தனது படையிடம் உத்திரவு கொடுத்தாள். அப்படியே ராம லக்ஷ்மணரைப் பிடித்துத் தாம்பினாலே கட்டிச் சூர்ப்பனகையின் சன்னிதியிலே கொண்டு சேர்த்தனர். அவள் அவ்விருவரையும் கட்டவிழ்த்து விடும்படி செய்து பலவிதமான கடூர வார்த்தைகள் சொல்லி பயமுறுத்திய பிறகு ராஜபுத்திரராகவும், இளம் பிள்ளைகளாகவும் இருந்தபடியால், இதுவரை செய்த துஷ்ட காரியங்களையெல்லாம் க்ஷமிப்பதாகவும், இனிமேல் இவ்விதமான காரியங்கள் செய்தால் கடுந்தண்டனை கிடைக்கு மென்றும் சொல்லி, நானாவிதமான புத்தி புகட்டிய பின்பு, அவர்களைச் சிறிது காலம் அரண்மனையிலிருந்து விருந்துண்டு போகும்படி செய்தாள். அப்போது சீதை சூர்ப்பநகையிடம் தனியாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில், ராமன் தன்னை வலிமையாலே தூக்கிக் கொண்டு வந்தானென்றும் தனக்கு மறுபடியும் மிதிலைக்குப் போய்த் தனது பிதாவுடன் இருக்கப் பிரியம் என்றும் சொன்னாள். இதைக் கேட்டு சூர்ப்பநகை மனமிரங்கி, சீதையை இலங்கைக்கு அனுப்பி, அங்கிருந்து மிதிலையில் கொண்டு சேர்க்கும்படி ராவணனுக்குச் சொல்லி யனுப்பினாள். ராவணனுடைய அரண்மனைக்கு வந்து சேர்ந்தவுடனே அவளை மிதிலைக்கு அனுப்பும் பொருட்டு நல்ல நாள் பார்த்தார்கள். அந்த வருஷம் முழுவதும் நல்ல நாள் அகப்படவில்லை. மறு வருஷமும் நல்ல நாள் கிடைக்கவில்லை. ஆகையால் சீதையை இரண்டு வருஷம் தனது அரண்மனையிலேயே தங்கிவிட்டுப் போகும்படி ராவணன் ஆக்கினை செய்தான்.

தண்டகாரண்யத்தில் இராமன் சூர்ப்பநகையிடம் "சீதை எங்கே?" என்று கேட்டான். மிதிலைக்கு அனுப்பிவிட்டதாகச் சூர்ப்பநகை சொன்னாள். "எப்படி நீ இந்தக் காரியம் செய்யலாம்?" என்று கோபித்து லக்ஷ்மணன் சூர்ப்பநகையை நிந்திக்கலானான். அப்போது சூர்ப்பநகை தன் இடுப்பில் பழங்கள் அறுத்துத் தின்னுவதற்காகச் சொருகி வைத்துக் கொண்டிருந்த கத்தியைக் கொண்டு லக்ஷ்மணனுடைய இரண்டு காதுகளையும், கால் கட்டை விரல்களையும் நறுக்கி விட்டாள். இவளுடைய வீரச் செய்கையைக் கண்டு ராமன் இவள் மேல் மோகங்கொண்டு "அட! சீதையைத்தான் மிதிலைக்கனுப்பி விட்டாய், என்னை நீ விவாகஞ் செய்து கொள்ளு" என்றான். இதைக் கேட்டவுடனே சூர்ப்பநகை கன்னமிரண்டும் சிவந்து போகும்படி வெட்கப்பட்டு, "நீ அழகான பிள்ளைதான், உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். ஆனால், அண்ணா கோபித்துக் கொள்ளுவார். இனிமேல் நீ இங்கிருக்கலாகாது. இருந்தால் அபவாதத்துக்கு இடமுண்டாகும்" என்றாள்.

அப்போது ராமன், "சீதையை எப்போது மிதிலைக்கனுப்பினாய்?" யாருடன் அனுப்பினாய்? அவள் இப்போது எவ்வளவு தூரம் போயிருப்பாள்?" என்று கேட்டான்.

அதற்குச் சூர்ப்பநகை, "இனிமேல் சீதையின் நினைப்பை விட்டுவிடு. அவளை இலங்கைக்கு அண்ணன் ராவணனிடத்தில் அனுப்பியிருக்கிறேன். அவன் அவளை மிதிலைக்கு அனுப்பினாலும் அனுப்பக்கூடும். எது வேண்டுமானாலும் செய்யக்கூடும். மூன்றுலகத்திற்கும் அவன் அரசன். சீதையை மறந்து விடு" என்றாள்.

இதைக் கேட்டு ராமன் அங்கிருந்து வெளியேறி எப்படியேனும் சீதையை ராவணனிடமிருந்து மீட்க வேண்டுமென்று நினைத்துக் கிஷ்கிந்த நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அந்தக் கிஷ்கிந்த நகரத்தில் அப்போது சுக்கிரீவன் என்ற ராஜா அரசு செலுத்தினான். இவனுக்கு முன் இவனுடைய தமையனாகிய வாலி ஆண்டான். வாலிக்கும் ராவணனுக்கும் மிகுந்த சிநேகம்; இரண்டு பேரும் ஒரு பள்ளிக்கூடத்திலே கணக்கு வாசித்தார்கள். மூன்று உலகத்திலும் கப்பம் வாங்கின ராவணன் கிஷ்கிந்தா பட்டணத்துக்கு வாலி யாதொரு கப்பமும் செலுத்த வேண்டியதில்லையென்று சொல்லி விட்டான். இந்த வாலி தூங்கிக் கொண்டிருக்கையில் தம்பி சுக்கிரீவன் இவன் கழுத்தை மண்வெட்டியால் வெட்டியெறிந்துவிட்டு அவன் மனைவியாகிய தாரையை வலிமையால் மணந்துகொண்டு அனுமான் என்ற மந்திரியின் தந்திரத்தால் ராஜ்யத்தை வசப்படுத்திக் கொண்டான். இதைக்கேட்டு ராவணன் மகா கோபத்துடன் சுக்கிரீவனுக்குப் பின்வருமாறு ஓலை யெழுதியனுப்பினான்.

"கிஷ்கிந்தையின் சுக்ரீவனுக்கு இலங்கேசனாகிய ராவணன் எழுதிக் கொண்டது. நமது சிநேகனைக் கொன்றாய்; உன் அண்ணனைக் கொன்றாய்; அரசைத் திருடினாய். இந்த ஓலை கண்டவுடன் தாரையை இலங்கைலிலுள்ள கன்யா ஸ்திரீ மடத்துக்கு அனுப்ப வேண்டும். ராஜ்யத்தை வாலி மகன் அங்கதனிடம் கொடுக்க வேண்டும். நீ ஸந்நியாஸம் பெற்றுக் கொண்டு ராஜ்யத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படாத விஷயத்தில் உன்மீது படையெடுத்து வருவோம்."

மேற்படி உத்திரவு கண்டவுடன் சுக்ரீவன் பயந்து போய் அனுமானை நோக்கி "என்ன செய்வோம்?" என்று கேட்டான். அனுமான் சொல்லிய யோஜனை என்னவென்றால்:

"வாலியிடம் பிடித்துக் கொண்ட தாரையையும், பதினேழு வயதுக்குட்பட்ட வேறு பதினேழரைக் கோடிப் பெண்களையும் ராவணனுக்கு அடிமையாக அனுப்ப வேண்டும். ராவணனாலே ஆதரித்துப் போற்றப்படும் வைதிக ரிஷிகளின் யாகச் செலவுக்காக நாற்பது கோடி ஐம்பது லட்சத்து முப்பத்து நாலாயிரத்து இருநூற்று நாற்பது ஆடுமாடுகளும், தோற்பைகளில் ஒவ்வொரு பை நாலாயிரம் படி கொள்ளக் கூடிய நானூறு கோடிப் பைகள் நிறைய சோமரஸம் என்ற சாறும் அனுப்பி அவனைச் சமாதானம் செய்து கொள்ள வேண்டும். இளவரசுப் பட்டம் அங்கதனுக்குச் சூட்டுவதாகவும் வருஷந்தோறும் நாலாயிரம் கோடிப் பொன் கப்பம் கட்டுவதாகவும் தெரிவிக்க வேண்டும். இத்தனையும் செய்தால் பிழைப்போம்" என்று அனுமான் சொன்னான்.

சுக்ரீவன் அப்படியே அடிமைப் பெண்களும் ஆடுமாடுகளும் சாறும், முதல் வருஷத்துக் கப்பத் தொகையும் சேகரம் பண்ணி அத்துடன் ஓலையெழுதித் தூதர் வசம் கொடுத்தனுப்பினான். தூதர்கள் ஆடுமாடுகளையும், சாற்றையும், ராவணன் அரண்மனையிலே சேர்ப்பித்தார்கள். அடிமைப் பெண்களையும் பணத்தையும் முனிவரிடம் கொடுத்தார்கள். ஓலையை ராவணனிடம் கொடுத்தனர். போகிற வழியில் தூதர் அடிக்கடி தோற்பையிலுள்ள சாற்றைக் குடித்துக் கொண்டு போனபடியால் தாறுமாறாக வேலை செய்தார்கள். ராவணன் தனது நண்பருடன் ஆடுமாடுகளையெல்லாம் அப்போதே கொன்று தின்று அந்தச் சாற்றையுங் குடித்து முடித்தவுடனே ஓலையைப் பிரித்து வாசித்துப் பார்த்தான். அடிமைப் பெண்களும் ஏன் தன் வசம் வந்து சேரவில்லையென்று விசாரணை செய்தான். முனிவர்களின் மடங்களில் சேர்த்துவிட்டதாகவும், அவர்கள் அந்தப் பணத்தையெல்லாம் யாகத்திலே தக்ஷிணையாக்கியெடுத்துக் கொண்டபடியால், இனிமேல் திருப்பிக் கொடுப்பது சாஸ்திர விரோதமென்று சொல்லுவதாகவும், அடிமைப் பெண்கள் ஆசிரமங்களிருந்து பெரும்பாலும் ஓடிப்போய்விட்டதாகவும் செய்தி கிடைத்தது. தூதர்களையெல்லாம் உடனே கொல்லச் சொல்லிவிட்டு அந்த க்ஷணமே சுக்கிரீவன் மேல் படையெடுத்துச் செல்லும்படி சேனாதிபதியிடம் அக்கினை செய்தான். அப்படியே நல்லதென்று சொல்லி சேனாபதி போய்ப் படைகளைச் சேகரித்தான். இந்தச் செய்தியெல்லாம் வேவுகாரர் மூலமாகக் கிஷ்கிந்தைக்குப் போய் எட்டிவிட்டது. உடனே அனுமான் சொற்படி சுக்ரீவன் தனது படைகளைச் சேர்த்தான். ராவணன் படை தயாரான பிறகும், அதை நல்ல லக்னம் பார்த்து அனுப்ப வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்தான். இதற்குள்ளேற் அனுமான் தன்னுடைய ஜாதி ஒரு விதமான லேசான குரங்கு ஜாதியாகையால் விரைவாகக் குரங்கப் படைகளைத் திரட்டிக் கொண்டு இலங்கையை நோக்கிப் புறப்பட்டான். இவனுடைய சேனையிலே ராம லக்ஷ்மணரும் போய்ச் சேர்ந்தார்கள். இந்தச் சேனையிலே நாற்பத்தொன்பது கோடியே தொண்ணூற்று நாலு லட்சத்து முப்பத்தேழாயிரத்து முந்நூற்றம்பத்தாறு காலாளும், அதற்கிரட்டிப்பு குதிரைப் படையும், அதில் நான்கு மடங்கு தேரும், அதில் எழுபது மடங்கு யானைகளும் வந்தன.

இவர்கள் இலங்கைக்கு வருமுன்னாகவே ராவணன் சேனையிலிருந்து ஒரு பகுதி இவர்களை எதிர்த்துக் கொன்று முடித்து விட்டன. ராம லக்ஷ்மணர் மாத்திரம் சில சேனைப் பகுதிகளை வைத்துக் கொண்டு ரகஸ்யமாக இலங்கைக்குள்ளே வந்து நுழைந்து விட்டார்கள். இந்தச் செய்தி ராவணன் செவியிலே பட்டது. உடனே ராவணன் 'ஹா!ஹா!ஹா! நமது நகரத்திற்குள் மனிதர் சேனை கொண்டு வருவதா! இதென்ன வேடிக்கை! ஹா!ஹா!ஹா!' என்று பேரிரைச்சல் போட்டான். அந்த ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாய் விட்டான். சூரியமண்டலம் தரைமேலே விழுந்தது. பிறகு ராவணன் ராமனுடைய சேனைகளை அழித்து, அவனையும் தம்பியையும் பிடித்துக் கொண்டு வரும்படி செய்து, இராஜகுமாரர் என்ற இரக்கத்தினால் கொல்லாமல் விட்டு, அவ்விருவரையும் தனது வேலையாட்களிடம் ஒப்புவித்து ஜனகன் வசம் சேர்க்கும்படி அனுப்பினான். பிறகு சீதையும் மிதிலைக்குப் போய்ச் சேர்ந்தாள்.

மறுபடி, ஜனகன் கிருபை கொண்டு அந்த ராஜனுக்கே சீதையை விவாகம் செய்து கொடுத்துவிட்டான். அப்பால் ராம லக்ஷ்மணர் அயோத்திக்குப் போய்ப் பரதனுக்குப் பணிந்து நடந்தார்கள். இதுதான் நிஜமான 'ராமாயணக் கதை' என்று வக்ரமுக சாஸ்திரி ரீவண நாயக்கன் சபையிலே கதை சொன்னான்.

அப்போது ரீவணன், "சாஸ்திரியாரே, குதிரைக்கு ஏன் கொம்பில்லை என்று கேட்டால் இன்னும் அதற்கு மறுமொழி வரவில்லையே?" என்று கேட்டான்.

வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறான்:

"ராமன் படையெடுத்து வந்த செய்தி கேட்டு, ராவணன் "ஹா, ஹா, ஹா" என்று கூச்சலிட்டபோது, சத்தம் பொறுக்கமாட்டாமல் சூரிய மண்டலம் கீழே விழுந்ததென்று சொன்னேனன்றோ? அப்போது சூரியனுடைய குதிரை ஏழுக்கும் கொம்பு முறிந்து போய்விட்டது. சூரியன் வந்து ராவணன் பாதத்தில் விழுந்து, "என் குதிரைகள் சாகா வரமுடையன, இவற்றைப் போல் வேகம் வேறு கிடையாது. இவற்றிற்குக் கொம்பு முறிந்து போய்விட்டது. இனி உலகத்தாரெல்லாம் என்னை நகைப்பார்கள், என்ன செய்வேன்?" என்று அழுது முறையிட்டான். ராவணன் அந்தச் சூரியனிடம் கிருபை கொண்டு பிரமதேவனிடம் "இனிமேல் ஒரு குதிரைக்கும் கொம்பில்லாதபடி படைக்க வேண்டும், அவ்வாறு செய்தால் சூரியனுடைய குதிரைகளை யாரும் நகைக்க இடமிராது" என்று சொன்னான். அது முதலாக இன்று வரை குதிரைக்குக் கொம்பில்லாமல் பிரமதேவன் படைத்துக் கொண்டு வருகிறான்.

இவ்விதமாக வக்ரமுக சாஸ்திரி சொல்லியதைக் கேட்டு ரீவண நாயக்கன் மகிழ்ச்சிகொண்டு, மேற்படி சாஸ்திரிக்கு அக்ஷரத்துக்கு லக்ஷம் பொன்னாக அவர் சொல்லிய கதை முழுதிலும் எழுத்தெண்ணிப் பரிசு கொடுத்தான்.

Thursday, April 2, 2015

8. சிறு கதை.

ஒரு வீட்டில் ஒரு புருஷனும் ஸ்திரீயும் குடியிருந்தார்கள். ஒரு நாள் இரவில் புருஷன் வீட்டுக்கு வரும்போது ஸ்திரீ சமையல் செய்து கொண்டிருந்தாள். சோறு பாதி கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஸ்திரீ அன்றிரவு கொஞ்சம் உடம்பு அசெளகரியமாக யிருந்தபடியால், தனக்கு ஆகாரம் வேண்டாமென்று நிச்சயித்துப் புருஷனுக்கு மாத்திரமென்று சமைத்தாள்.

புருஷன் வந்தவுடன் "நான் இன்றிரவு விரதமிருக்கப் போகிறேன். எனக்கு ஆகாரம் வேண்டாம்" என்றான்.

உடனே பாதி கொதிக்கிற சோற்றை அவள் அப்படியே சும்மா விட்டுவிட்டு அடுப்பை நீரால் அவித்து விடவில்லை. தங்களிருவருக்கும் உபயோக மில்லாவிடினும் மறுநாள் காலையில் வேலைக்காரிக்கு உதவுமென்று நினைத்து, அது நன்றாகக் கொதிக்கும் வரை காத்திருந்து வடித்து வைத்து விட்டுப் பிறகு நித்திரைக்குச் சென்றாள்.

அது போலவே, கர்மயோகி தான் ஒரு தொழில் செய்யத் தொடங்கி, இடையிலே அது தனக்குப் பயனில்லை யென்று தோன்றினால், அதை அப்படியே நிறுத்தி விட மாட்டான். பிறருக்குப் பயன் தருமென்பதைக் கொண்டு, தான் எடுத்த வேலையை முடித்த பிறகே வேறு காரியம் தொடங்குவான்.


                                                          பிரார்த்தனை

                       கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள
                       மனத்திடனும்,   இளைஞருடைய    உத்ஸாகமும்,
                       குழந்தையின் ஹிருதயமும், தேவர்களே! எனக்கு
                       எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க!

7. வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை


வேதபுரத்தில் வீதியிலே ஒரு பண்டாரம் நன்றாகப் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தான்.

அவன் நெற்றியிலே ஒரு நாமம், அதன் மேலே விபூதிக் குறுக்கு, நடுவில் ஒரு குங்குமப் பொட்டு.

"உனக்கு எந்த ஊர்?" என்று கேட்டேன்.

"நடுப்பட்டி" என்று அந்தப் பண்டாரம் சொன்னான்.

"நீ எந்த மதம்?" என்று கேட்டேன்.

"வைசாக்தம்" என்றான்.

சிரிப்புடன் "அதற்கு அர்த்தமென்ன?" என்று கேட்டேன்.

"வைஷ்ணவ -- சைவ -- சாக்தம்" என்று விளக்கினான்.

"இந்த மதத்தின் கொள்கை யென்ன?" என்று கேட்டேன்.

அப்போது பண்டாரம் சொல்லுகிறான்.

"விஷ்ணு தங்கை பார்வதி; புருஷன் சிவன். எல்லா தெய்வங்களும் ஒன்று. ஆதலால் தெய்வத்தை நம்ப வேண்டும், செல்வத்தைச் சேர்க்க வேண்டும். இவ்வளவுதான் எங்கள் மதத்தினுடைய கொள்கை" என்றான்.

"இந்த மதம் யார் உண்டாக்கினது?" என்று கேட்டேன்.

"முன்னோர்கள் உண்டாக்கினது. தனித் தனியாகவே நல்ல மதங்கள் மூன்றையும் ஒன்று சேர்த்தால் மிகவும் நன்மையுண்டாகுமென்று எனக்குத் திருப்பதி வெங்கடேசப் பெருமாளும், தில்லை நடராஜரும் கனவிலே சொன்னார்கள். ஆதலால் ஒன்றாகச் சேர்த்தேன்" என்று அந்தப் பண்டாரம் சொன்னான்.

6. இருள்.

வித்யாநகரம் என்ற பட்டணத்தில், எண்ணூறு வருஷத்துக்கு முன், திடசித்தன் என்று ஒரு ராஜா இருந்தான். அவனுடைய பந்துக்களிலே சிலர் விரோதத்தினால் அவனுக்குப் பல தீங்குகள் செய்யலாயினர். ஒரு நாள் அவன் நித்திரை செய்யும்போது எதிரிகள் அரண்மனை வேலைக்காரரிலே சிலரை வசமாக்கி உள்ளே நுழைந்து அவன் கால்களைக் கட்டி எடுத்துக் கொண்டு போய், சமீபத்திலிருந்த மலைச் சாரலில் ஒரு குகைக்குள்ளே போட்டு வெளியே வரமுடியாதபடி ஒரு பாறையால் மூடி வைத்து விட்டார்கள். இவ்வளவுக்குமிடையே அவன் கண் விழிக்காதபடி மூக்கிலே ஒரு மயக்கப் பச்சிலையின் சாற்றைப் பிழிந்து விட்டார்கள்.

நெடுநேரம் கழிந்த பிறகு, பச்சிலையின் மயக்கம் தெளியவே அரசன் கண்ணை விழித்துப் பார்க்கும்போது, கை கால்கள் கட்டுண்டு தான் பேரிருளிலே கிடப்பதை உணர்ந்து கொண்டான். "எங்கிருக்கிறோம்" என்று சிந்தித்தான். இடம் தெரியவில்லை. "நமக்கு யார் இவ்விதமான தீமை செய்திருக்கக்கூடும்?" என்று யோசனை செய்து பார்த்தான். ஒன்றும் தெளிவாக விளங்கவில்லை. எழுந்து நிற்க முயற்சி செய்தான். சாத்தியப் படவில்லை. தாகம், நாக்கை வறட்டிற்று; கண்கள் சுழன்றன. நெஞ்சு படீல் படீலென்று புடைத்துக் கொண்டது. "தெய்வமே, என்னைக் கொல்லவா நிச்சயித்து விட்டாய்?" என்று கூவினான்.

"ஆம்" என்றொரு குரல் கேட்டது.

"ஆமென்கிறாயே, நீ யார்?" என்று வினவினான்.

"நான் காலன். உன் உயிரைக் கொண்டுபோக வந்திருக்கிறேன்" என்று அந்த மறைகுரல் சொல்லிற்று.

அப்போது திடசித்தன்: "நான் யெளவனப் பருவத்தில் இருக்கிறேன். அறிவிலும் அன்பிலும் சிறந்த என் மனைவியையும், சிங்கக்குட்டி போன்ற என் மகனையும் செழிப்பும் புகழும் மிகுந்த என் நாட்டையும் விட்டு விட்டு உன்னுடன் வருவதில் எனக்குச் சம்மதமில்லை. இங்கிருந்து போய்விடு" என்றான். மறை குரல் கொல்லென்று சிரித்தது.

"நான் எப்போது கொண்டு போகப்பட்டேன்" என்று திடசித்தன் கேட்டான்.

"விடியும் ஒரு ஜாமத்திற்குள்ளே" என்று குரல் சொல்லிற்று. இது கேட்ட மாத்திரத்திலே திடசித்தன் அயர்ந்து போனான். கண்கள் முன்னிலும் அதிகமாகச் சுழன்றன. நெஞ்சு முன்னிலும் விரைவாக அடித்தது. கால்கள் பதறலாயின.

அப்போது அவனுடைய தாய் சொல்லிக் கொண்டிருந்த மந்திரமொன்று நினைப்பு வந்தது. உடனே உச்சரித்தான். தாய் இறந்து போகும் சமயத்தில் அவனை அழைத்து அந்த மந்திரத்தை அவன் காதிலே உபதேசம் செய்துவிட்டு, "மகனே, உனக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வந்த சமயத்திலும் நீ இம்மந்திரத்தை உச்சரித்தால் விலகிப் போய்விடும்" என்று சொல்லியிருந்தாள். இப்போது அதனை உச்சரித்தான். 'கரோமி' (செய்கிறேன்) என்பதே அம்மந்திரம். "கரோமி, கரோமி, கரோமி" என்று மூன்று தரம் சொன்னான்.

காலிலே ஒரு பாம்பு வந்து கடித்தது.

"தாயே, உன் மந்திரத்தின் பயன் இதுதானா? என்று அலறினான்.

"அஞ்சாதே, மந்திரத்தைச் சொல்லு, மந்திரத்தைச் சொல்லு, மந்திரத்தைச் சொல்லு, மந்திரத்தைச் சொல்லு" என்று அசரீரி வாக்கு பிறந்தது.

இந்தப் புதிய வாக்கைக் கேட்கும்போது அவனுடைய தாயின் குரலைப் போலவே யிருந்தது.

கரோமி, கரோமி, கரோமி, செய்கிறேன், செய்கிறேன், செய்கிறேன் என்று மறுபடி ஜபிக்கலானான்.

"குரு, குரு, குரு (செய், செய், செய்) என்றது அசரீரி.

உடனே மூச்சை உள்ளே இழுத்து அமானுஷிகமான வேகத்துடன் கையை உதறினான். கைத்தளைகள் படீரென்று நீங்கின. உடைவாளை யெடுத்தான்.

"செய், செய், செய்" என்று மறுபடி சத்தம் கேட்டது.

பாம்பு கடித்த கால் விரலைப் பளிச்சென்று வெட்டி எறிந்து விட்டான். குரு, குரு, குரு என்ற சத்தம் மீண்டும் கேட்டது.

உடம்பிலிருந்த துணியைக் கிழித்து, மண்ணிலே புரட்டி அதிக கால் ரத்தம் விரலிலிருந்து விழாதபடி சுற்றிக் கொண்டான்.

அப்போது அவனுடைய சரீரத்திலே மறுபடியும் ஆயாஸமுண்டாயிற்று. அப்படியே சோர்ந்து விழுந்தான். ஜ்வரம் வந்து விட்டது. மரண தாக முண்டாயிற்று.

"ஐயோ, தாகம் பொறுக்கவில்லையே! என்ன செய்வேன்?" என்று புலம்பினான்.

"மந்திரத்தை ஜபம் பண்ணு" என்றது அசரீரி.

"கரோமி, கரோமி, கரோமி" என்று தாய் மந்திரத்தை மறுபடி ஜபித்தான்.

"செய்" என்று கட்டளை பிறந்தது.

"என்ன செய்வது?" என்றேங்கினான்.

"சோர்வதையாதே, செய்கை செய்" என்றது தொனி.

"என்ன செய்வது?" என்று பின்னொரு முறை கேட்டான்.

"கல்லிலே முட்டு" என்று கட்டளை பிறந்தது.

எழுந்து வந்து குகையை மூடியிருந்த பாறையிலே போய் முட்டினான். மண்டை யுடைந்து செத்தால் பெரிதில்லை யென்று துணிவு கொண்டு செய்தான். மண்டை உடையவில்லை. குகையை மூடிச் சென்றவர்கள் அவசரத்திலே அந்தக் கல்லை மிகவும் சரிவாக வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். பாறை சரிந்து கீழே விழுந்துவிட்டது. வெளியே வந்து பார்த்தான். சூரியோதயம் ஆயிற்று. கரோமி, கரோமி, கரோமி, செய்கிறேன் செய்கிறேன், செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தனது ராஜதானி போய்ச்சேர்ந்தான். பிறகு அவனுக்கோர் பகையுமில்லை.

Monday, March 30, 2015

5. ஓர் வியாதிக்கு ஓர் புதிய காரணம்.

மகாகவி பாரதியார் கதைகள்.

5. ஓர் வியாதிக்கு ஓர் புதிய காரணம்.

வேதபுரி என்ற ஊரில் ஒரு பள்ளிக்கூடத்து வாத்தியாரும் ஒரு செட்டியாரும் சிநேகமாக இருந்தார்கள். வாத்தியார் செட்டியாரிடம் கொஞ்சம் கடன் வாங்கி யிருந்தார். செட்டியாருக்கு ஒரு நாள் காலிலே முள் தைத்துப் பிரமாதமாக வீங்கியிருந்தது.

"செட்டியாரே, கால் ஏன் வீங்கி யிருக்கிறது?" என்று வாத்தியார் கேட்டார்.

"எல்லாத்துக்கும் காரணம் கையிலே பணமில்லாததுதான்" என்று செட்டியார் சொன்னார்.

சில தினங்களுக்குப் பின் வாத்தியாருக்குப் பலமான ஜலதோஷம் பிடித்திருந்தது. செட்டியார் வந்தார். "ஏன் ஐயரே, ஜலதோஷம் பலமாக இருக்கிறதே" என்று கேட்டார்.

"கையிலே பணமில்லை. அதுதான் சகலத்துக்கும் காரணம்" என்று வாத்தியார் சொன்னார். செட்டியார் புன்சிரிப்புடன் போய் விட்டார்.

மகாகவி பாரதியார் கதைகள். 3 & 4


3. அமெரிக்காவுக்குப் போன சீன ராஜகுமாரன்.

சீன தேசத்திலிருந்து ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவுக்குப் போயிருந்தானாம். அப்போது ஒரு பிரபுவின் மனைவி சீனத்து விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருக்கையிலே அவள், "உங்களுடைய சீன தேசத்தில் கலியாணமாகும்வரை மணப்பெண் தனது புருஷன் முகத்தைப் பார்ப்பது வழக்கமில்லையாமே! மெய்தானா?" என்று கேட்டாள். அதற்கு ராஜகுமாரன், "உங்கள் தேசத்தில் சில பெண்கள் கலியாணமான பிறகு தன் புருஷன் முகத்தைப் பார்ப்பதேயில்லை என்று கேள்விப்படுகிறேன். அது மெய்தானா?" என்றான்.

4. சாஸ்திரியார் மகன்.

ஒரு பிராமணப் பையன் தனது விளையாட்டு வண்டி தெருவிலே ஒடிந்து போனபடியால், அதைப் பார்த்து அழுதுகொண்டு ந்ன்றான். அதைக் கண்ட ஒரு சிப்பாய், "குழந்தாய், ஏன் அழுகிறாய்?" என்று கேட்டான்.

பையன்: "வண்டி ஒடிஞ்சுப் போச்சு"

சிப்பாய்: "இதற்காக அழாதே. வீட்டிற்குப் போ. உன்னுடைய தகப்பனார் அதைச் செப்பனிட்டுக் கொடுத்து விடுவார்."

பையன்: "எங்கப்பா சாஸ்திரியார்; அவராலே வண்டியை நேர்ப்படுத்திக் கொடுக்க முடியாது. அவருக்கு ஒரு தொழிலும் தெரியாது. யார் வீட்டிலாவது அரிசி கொடுத்தால் வாங்கிக் கொண்டு வருவார். வேறே ஒரு எழவும் தெரியாது" என்று விம்மி விம்மி அழுதான். சிப்பாய் சிரித்துக் கொண்டே போய் விட்டான்.