திருவரங்கம்
அன்று அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள் பரபரப்பாக அலைந்து
ஓடி ஒளிய இடம் தேடிக் கொண்டிருந்தார்கள். திருவரங்கத்தின் இதயத்தானமான அரங்கன் ஆலயம்
இன்னும் அதிகமாக திமிலோகப் பட்டுக் கொண்டிருந்தது. வடக்கில் இருந்து படையெடுத்து வந்து
தமிழகத்தில் பல ஆலயங்களைக் கொள்ளையடித்து, பலவற்றை இடித்து சோழ நாட்டையே கதிகலங்க அடித்துக்
கொண்டிருந்த படை கண்டியூரில் முகாமிட்டிருந்தது. அந்தப் படை அங்கிருந்து கிளம்பி காவிரியின் தென்கரையோடு திருவரங்கத்தை நோக்கி வந்து
கொண்டிருந்தது. வரும் வழியில் திருப்பூந்துருத்தி, செந்தலை முதலான ஆலயங்களை கொள்ளையடித்து,
இடித்துத் தள்ளிவிட்டு காவிரியைக் கடந்து திருவரங்கத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.
திருவரங்கம் அரங்கநாதப் பெருமானுக்கு ஆராதனைகள்
நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த செய்தி அங்கிருந்தவர்களுக்கு ஒரு இடிபோல வந்து சேர்ந்தது.
செய்வதறியாமல் அனைவரும் பதறிப்போய் ஒருவருக்கொருவர் அரங்கனை அந்த அரக்கர்களின் கைகளில்
அகப்படாமல் எப்படிக் காப்பது என்பதை யோசித்துக் கொண்டிருந்தனர்.
பிள்ளைலோகாச்சாரியார் என்கிற அந்த வைணவ
ஆச்சார்யார் ஆலய நிர்வாகிகளுடனும், பக்தர்களுடனும் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தார்.
வருபவர்கள் மிகப் பெரிய கொள்ளைக்காரர்கள், அதிலும் ஆலயங்களை அழிப்பதிலும், விக்ரகங்களைக்
கொள்ளை அடிப்பதிலும் அவர்கள் காட்டிய வேகம், அனைவரையும் கவலையுறச் செய்தது.
ஆலயத்தின் சில மூத்த பட்டாச்சார்யார்கள்
பிள்ளைலோகாச்சாரியாரிடம் தனிமையில் ஆலோசனை செய்து எப்படியும் அரங்கன் விக்ரகத்தைக்
காப்பாற்ற வேண்டுமென்றும், அந்தப் பணியில் தங்கள் உயிர் நீத்தாலும் கவலையில்லை என்றும்
முடிவு செய்தார்கள்.
அப்போது ஒரு பட்டர் லோகாச்சார்யாரிடம்
சொன்னார், “ஸ்வாமி, நீங்கள்தான் இதற்கு ஒரு நல்ல யோசனை சொல்ல வேண்டும், எந்தக் காரணம்
கொண்டும் அரங்கன் விக்ரகம் அந்த அநாச்சார கும்பலிடம் அகப்பட்டுவிடக் கூடாது” என்றார்.
ஆச்சார்யார் சொன்னார், “கவலை வேண்டாம்,
நான் சொல்கிறபடி செய்யுங்கள். நம்மால் முடிந்த வரை ஆலயத்தைக் காப்பாற்ற ஆனதைச் செய்வோம்.
முதலில் அரங்கன் விக்ரகத்தை ஒருவரும் அறியாமல் நான் எடுத்து கண்காணாத இடத்துக்குக்
கொண்டு சென்று விடுகிறேன். படையெடுப்பின் உக்கிரம் தணிந்தபின் நான் திரும்பவும் அரங்கனை
இங்கே ஏளப்பண்ணி விடுகிறேன்” என்றார்.
“அதுசரிதான், ஆனால் உள்ளே மூலஸ்தானத்தில்
சயனித்திருக்கும் பெருமான் சிலைக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் என்ன செய்வது?” என்று கேட்டார்
ஒருவர்.
ஆச்சாரியார் சொன்னார், “கவலையை விடுங்கள்.
வருபவர்கள் அனைவரும் அனாச்சாரமானவர்கள். அவர்களுக்கு
ஆலயத்தின் அமைப்போ, விதிமுறைகளோ எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுடைய நோக்கமெல்லாம்,
விலைமதிப்பற்ற விக்ரகங்களையும், விலை உயர்ந்த ஆபரணங்களையும் அபகரிப்பது தான் நோக்கம்.அதனால்
எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, சொல்லுகிறேன்” என்றார்.
ஆச்சாரியார் என்ன சொல்லப் போகிறாரோ என்று
அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர் சொன்னார், “கவலைப் படவேண்டாம்.
மூலவர், பள்ளிகொண்ட அரங்கநாதனை அவர்கள் கண்களில் படாமல் மூலத்தானத்து வாயிலை மறைத்து
ஒரு சுவர் எழுப்பி அங்கு ஒரு அறை இருக்கிறது என்பதைத் தெரியாமல் செய்து விடலாம். இதர
விக்ரகங்களையெல்லாம் பூமியில் ஆழக் குழி தோண்டி மண்ணில் புதைத்து விடலாம். அவன் படையெடுப்பு
முடிந்த பின்னர் அவற்றை வெளியில் எடுத்து விடலாம்.” என்றார்.
அவருடைய யோசனை அனைவருக்கும் பிடித்திருந்தது.
அரங்கனுக்கு ஒரு தீங்கு வராமல் காப்பாற்ற வேண்டுமானால் இந்த நேரத்தில் சமயோசித புத்தியுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று
அனைவரும் விரும்பினர்.
உடனே மூலத்தானத்தின் வாயிற்படி இருப்பதை
மறைத்து ஒரு பெரும் சுவர் எழுப்பப்பட்டது. அரங்கன் உத்சவ விக்ரகம் ஆச்சார்யார் வசம்
கொடுத்து அவரை அதைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளச் சொல்லி வழி அனுப்பி வைத்தனர்.
அப்போது அந்த கோயிலில் சதிர் ஆடுகின்ற
வெள்ளையம்மாள் அங்கு வந்தாள். அவள் பதற்றத்துடன் காணப்பட்டாள். கோயிலையும், விக்ரகங்களையும்,
ஆபரணங்களையும் எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்கிற வேகத்துடன் வெள்ளையம்மாள்
அங்கே வந்தாள்.
அவள் பட்டர்களிடம் “பெருமாளின் ஆபரணங்களையெல்லாம்
எதையும் ஆலயத்தினுள் வைக்காதீர்கள். அவற்றை பத்திரமாக எடுத்துக் கொண்டு போய் வெளியில்
எங்காவது பத்திரப்படுத்தி விடுங்கள்.” என்றாள்.
“ஆமாம் வெள்ளையம்மா, அவற்றையெல்லாம் அப்படியே
வெளியே எடுத்துக் கொண்டு போய், வரும் கொள்ளைக்காரர்கள் கண்களில் படாமல் காப்பாற்றிவிடலாம்.
ஆனால் வருகின்ற கொள்ளையர்கள் கோயிலைத் தாக்கி உள்ளே புகுந்து, நாசம் செய்வார்கள் என்பது
நிச்சயம்.” என்றார் ஒரு பட்டர்.
“ஆமாம், நிச்சயம் அவர்கள் குறியெல்லாம்
கோயில் செல்வத்தின் மீதுதான். விக்ரகங்களும்
நகைகளும் அவர்கள் கையில் சிக்காமல் பாதுகாக்க வேண்டும். சிலவற்றை ஆலயத்துப் பிரகாரத்தில்
இரகசியமாக குழிதோண்டி புதைத்து வைத்து விடலாம். வெளியில் கொண்டு போய் பாதுகாப்பாக வைத்துக்
கொள்ள முடிந்தவற்றை எடுத்துச் சென்று விடுங்கள். ஆனால் ஆலயத்துக்கு எந்த சேதமும் ஏற்படாமல்
என்னால் முடிந்த வரை நான் அந்த கொள்ளைக்காரர்களை எனக்குத் தெரிந்த சாகசங்களைக் கொண்டு
தடுக்க முயற்சி செய்கிறேன்” என்றாள் வெள்ளையம்மாள்.
வெள்ளையம்மாள் அந்த ஆலயத்தில் நடனமாடி
இறைவழிபாடு செய்யும் தேவதாசி மட்டுமல்ல, அரங்கனிடம் அளவற்ற பக்தி கொண்டவள் என்பதால்
எல்லோரும் அவள் சொன்னவற்றுக்கு உடன்பட்டு அதன்படியே பல விக்ரகங்கள் பிரகாரங்களில் குழிதோண்டி
புதைக்கப்பட்டன. ஆபரணங்கள் வெளியே கொண்டு போகப்பட்டன.
அப்போது எதிரியின் படைகள் திருவரங்கத்தை
நோக்கி வேகமாக வந்து கொன்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. உயிர்த்தியாகம்
செய்தாவது ஆலயத்தைக் காப்பாற்றுவது என்று பட்டர்களும் உள்ளூர் பக்தர்களும் தயாராக இருந்தார்கள்.
படையெடுப்பாளர்களின் குதிரைப் படை மிக
வேகமாக திருவரங்கப் பெருநகருள் வந்து நுழைந்தது. நேராக அந்த படைகளும், பின்னால் வந்த
காலாட்படைகளும் ஆலயத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டன.
கீழ்த்திசையிலிருந்து வந்த படைகள் கீழைக்
கோபுர வாயில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே
நுழைந்தது. அப்படி நுழைந்த வீரர்கள் அனைவரும் கோயிலின் உட்புறங்களுக்கெல்லாம் சென்று
விக்கிரகங்களையும், ஆபரணங்களையும் தேடத் தொடங்கினார்கள். கண்களில் பட்டவற்றை யெல்லாம்
அடித்து நொறுக்கினார்கள்.
அப்படித் தேடி அலைந்த அவர்களுக்கு எதுவுமே
கிடைக்கவில்லை. அதனால் ஆத்திரம் கொண்டு அவர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் போட்டு உடைத்தனர்.
கதவுகள் நொறுக்கப்பட்டன. தீவைத்து எரிக்கப்பட்டன. புதையல் இருக்குமோ என்று சுற்றுப்
பிரகாரங்களை ஆங்காங்கே தோண்டத் தொடங்கினர்.
அப்போது அங்கு சர்வ அலங்கார பூஷிதையாக
வெள்ளையம்மாள், தன்னுடைய ஆடற்கலை பளபளக்கும் உடைகளுடன், உடலெங்கும் ஆபரணங்களுடன் அழகாக
நடந்து வந்தாள். கோயிலினுள் நுழைந்த படைத் தலைவன், வரும் அந்த அழகியைப் பார்த்து மனம்
மயங்கி நின்றான். அவள் சிந்திய புன்னைகையில் தன்னைப் பறிகொடுத்தான் அந்த படைத் தலைவன்.
அவன் அருகில் வந்த வெள்ளையம்மாள், மெல்லிய
குரலில் சொன்னாள் “நீங்கள் தேடுகின்ற புதையல் எங்கிருக்கிறது என்பது எனக்குத் தெரியும்”
என்றாள்.
உடனே படைத் தலைவன் “எங்கே, எங்கே அந்த
இடத்தை உடனே காட்டு, இல்லாவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று பதறினான்.
வெள்ளையம்மாள் நிதானமாக அவனிடம் “ஏன் இந்த
அவசரம், நான்தான் புதையலைக் காட்டுகிறேன் என்கிறேனே. பேசாமல் என்கூட வா, ஒருவருக்கும்
தெரிய வேண்டாம். புதையல் இருக்குமிடத்தை நான் காட்டிவிட்டுச் சென்று விடுகிறேன். பிறர்
பார்த்தால் நான் காட்டிக் கொடுத்ததாக நினைப்பார்கள், ஆகையால் அமைதியாக என்னுடன் வா”
என்று சொல்லி நடந்தாள்.
படைத்தலைவன் அவள் சொன்னபடி மெல்ல வெள்ளையம்மாளோடு
நடந்தான். அவள் ஆலயத்தின் கீழக்கோபுரத்தை அடைந்தாள். அங்கு உட்புற்மாக கோபுரத்தின்
மேலே போகும் படிக்கட்டுகளை நோக்கி நகர்ந்தாள். படைவீரனும் உடன் செல்ல அவள் கோபுரத்தின்
படிகள் வழியாக அவனை அழைத்துச் சென்றாள்.
இருவரும் கீழைக் கோபுரத்தின் மேல்பகுதிக்குச்
சென்றார்கள். அங்கு கலசங்களுக்கு நாற்புறமும் சற்று விசாலமான ஒரு ஆள் நடக்கும் அளவுக்கு
இடம் இருந்தது. அங்கு இருவரும் சென்றதும், படைவீரன் எங்கே புதையல் என்று கேட்பது போல
அவளை நோக்கினான்.
இதுதான் சமயம் என்று வெள்ளையம்மாள் கையை
ஒருபுறமாக நீட்டிக் காண்பிக்க அவன் ஆவலோடு திரும்ப அந்த சமயம் பார்த்து அவன் முதுகைப்
பிடித்து வேகமாகக் கீழே தள்ளிவிட்டாள். மேலிருந்து தலைகீழாக விழுந்த படைத்தலைவன் விழுந்த
இடத்தில் உடல் சிதறி இரத்த வெள்ளத்தில் மாண்டுபோனான்.
அடுத்த கணம் வெள்ளையம்மாள், தன்னை அந்தப்
படை வீரர்கள் சும்மா விடமாட்டார்கள் என்று உணர்ந்து தானும் மேலேயிருந்து கீழே பாய்ந்து
விழுந்து உயிர்த்தியாகம் செய்தாள். கொள்ளையடிக்க வந்த பாவியின் உடல் சிதறிக் கிடந்த
உடலுக்கு அருகில் புனிதமான வெள்ளையம்மாளின் உடலும் விழுந்து உயிர் பிரிந்தது.
கால ஓட்டத்தில் ஏராளமான வரலாற்று நிகழ்வுகள்
நடந்து முடிந்தன. எங்கோ கொண்டு செல்லப்பட்ட அரங்கனின் விக்ரகம் பல இடங்களிலும் மறைத்து
வைக்கப்பட்டு ஒரு வழியாக மீண்டும் அரங்க மாநகருக்கு வந்து சேர்ந்தது. இடிபாடுகளைச்
சரிசெய்து, ஏராளமான பக்தர்கள் உயிர்த்தியாகம் செய்த இடங்களை புனருத்தாரணம் செய்து மீண்டும்
அரங்கனுக்கு வழிபாடுகள் தொடங்கப்பட்டன.
தமிழ்நாட்டின் மானத்தையும், அரங்கனின்
புனிதத்தையும் காத்து, வடக்கே இருந்து படையெடுத்து
வந்த இந்த வெறியர்களின் கைகளில் கரங்களில் ஆலயம் சிக்கிவிடாமல் காத்த அந்த மாதரசியின்
பெயரே அந்த திருவரங்க கீழைக் கோபுரத்துக்கு இடப்பட்டு “வெள்ளை கோபுரம்” என்ற பெயரில்
நிலைபெற்று நிற்கத் தொடங்கியது. அமைதியும், இறை பக்தியும் தழைத்து வளர்ந்த அந்த காவிரிக்கரை
நகரம் மெல்ல மெல்ல தன் இயல்வு வாழ்க்கைக்குத் திரும்பியது. காலவோட்டத்தில் திருவரங்கம் எனும் இந்த வைணவத் தலம்
தன் பாரம்பரிய பெருமைகளைப் பறை சாற்றிக் கொண்டு மொட்டை கோபுரத்துடன் விளங்கியது. பின்னர்
இருபதாம் நூற்றாண்டில் பல சான்றோர்களின் முயற்சியாலும், அகோபில மடத்து ஜீயரின் முன்னெடுப்பாலும்,
தமிழக பக்த ஜனங்களின் நன்கொடையாலும் முன்புற ராஜகோபுரம் வானளாவ எழுந்து இன்று புகழ்
பரப்பிக் கொண்டிருக்கக் காரணமாக அமைந்தது வெள்ளையம்மாள் செய்த தியாகம். இப்படிப்பட்ட
தியாகங்களால் பாதுகாக்கப்பட்டதுதான் நமது பண்பாடும் கலாச்சாரமும். இந்த புனிதமான கலாச்சாரத்தை
எந்த காலத்திலும் எவராலும் அழிக்கமுடியாது.
ஆக்கம்:
தஞ்சை
வெ.கோபாலன், இயக்குனர் பாரதி இலக்கியப் பயிலகம்,
28/13,
எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக்
கல்லூரி சாலை, தஞ்சாவூர்
613007. #9487851885
No comments:
Post a Comment