மகாகவி பாரதியாரைப் பல்வேறு கோணங்களில் நம்முடைய முந்தைய பாடங்களில் பார்த்தோம். இந்த பாடத்தில் அவருடைய பத்திரிகைகளின் தொடர்பு பற்றி அறிந்து கொள்ளலாம். பத்திரிகைகள் வாயிலாகத்தான் பாரதி பெரிதும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அவருடைய பாடல்கள் அனைத்துமே பத்திரிகைகளில் வெளிவந்துதான் பிரபலமடைந்தன. எனவே பாரதியின் பத்திரிகை பணி பற்றி நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை நம்முடைய
முதல் பாடமாகப் பார்த்தோம் அல்லவா? அதில் அவர் எட்டையபுரத்தை விட்டு நீங்கி, மதுரை
சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக சுமார் மூன்றரை மாதகாலம் பணியாற்றிய செய்தியைப்
பார்த்தோம். பாரதியாரை ஜி.சுப்பிரமணிய ஐயர், அவருடைய திறமைகளைக் கண்டு சென்னைக்கு அழைத்து
வந்து தனது 'சுதேசமித்திர'னில் பணிக்கு அமர்த்தினார். அது முதல் மகாகவி பாரதியார் ஓர்
தலைசிறந்த பத்திரிகையாளராகத் திகழ்ந்த வரலாறு அனைவரும் அறிந்த வொன்று. பாரதியார் எட்டையபுரம்
ஜமீனைவிட்டு விலகிய பிறகு வேறு பணிக்குச் செல்ல முயன்ற சமயத்தில் மதுரை நேடிவ் கல்லூரியில்
தமிழாசிரியராக இருந்த கோபாலகிருஷ்ணய்யர் என்பவரின் உதவியால் மதுரை சேதுபதி உயர்நிலைப்
பள்ளியில் பணிக்குச் சேர்ந்தார். 1-8-1904-ல் பணியில் சேர்ந்த அவர் 10-11-1904 வரையில்
அங்கு பணிபுரிந்தார். மதுரையிலிருந்து பாரதி சென்னை சென்றதற்கு மூன்று காரணங்களை முனைவர்
பா.இறையரசன் தனது "இதழாளர் பாரதி" எனும் நூலில் குறிப்பிடுகிறார். இந்த நூல்
நியு செஞ்சுரி புத்தக நிறுவனத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் அவர் கூறும் காரணங்களாவன:-
1) 'சுதேசமித்திரன்' பத்திரிகை நிறுவனர் ஜி.சுப்பிரமணிய அய்யர் மதுரை வந்தபோது மதுரை
நேடிவ் கல்லூரி தமிழாசிரியர் கோபாலகிருஷ்ண அய்யரின் அறிமுகத்தால் பாரதியைச் சந்தித்து
அவரது திறமையையும் அறிவாற்றலையும் உணர்ந்து தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் சென்று அங்கு
தன் பத்திரிகையில் பணிக்கு அமர்த்தினார் என்பது ஒன்று.
2) பாரதி தனது உறவினர் லட்சுமண அய்யர் என்பவர் சென்னை சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சிக்
கல்லூரி யொன்றில் முதல்வராக இருந்ததால் அவருக்கு ஒரு கடிதம் எழுதி தனக்குச் சென்னையில்
ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து தருமாறு வேண்ட, அவருடைய முயற்சியால் 'சுதேசமித்திர'னில்
சேர்ந்தார் எனும் செய்தி மற்றொன்று.
3) மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பாரதியாருடன் பணியாற்றிய அய்யாசாமி அய்யர் என்பவர்,
'இந்து' பத்திரிகை செய்தியாளராக இருந்த தனது மாமா மூலம் 'சுதேசமித்திர'னில் வேலை வாங்குவதற்கு
உதவினார் என்று மற்றொரு செய்தி.
இப்படிப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், பாரதியை சென்னைக்கு ஜி.சுப்பிரமணிய ஐயர் அழைத்துச்
சென்றார் என்பதுதான் பரவலாக அனைவராலும் பேசப்படும் செய்தியாகும்.
"சுதேசமித்திரன்"
எது எப்படியோ, இவற்றில் ஏதோ ஒரு வழியில் பாரதி சென்னைக்குச் சென்று 'சுதேசமித்திர'னில்
பணிக்குச் சேர்ந்தார். *சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பதினேழரை ரூபாய் சம்பளத்துக்குப்
பணியாற்றிய பாரதி 'சுதேசமித்திர'னில் மாதம் நாற்பது ரூபாய் ஊதியமாகப் பெற்றார் 'சுதேசமித்திரன்'
பத்திரிகையில் பாரதியின் வேலை தந்தி மூலம் வரும் செய்திகளையும், ஆங்கில இதழ்களில் வரும்
செய்திகளையும், ஆங்கில சொற்பொழிவுகளையும் தமிழில் மொழிபெயர்ப்பது; அச்சுப்பிழை திருத்துவது
முதலியன. சுதேசமித்திரனில் கதை, கவிதை, கட்டுரை, தலையங்கம் இவை எழுதும் வாய்ப்பு அவருக்கு
அப்போது கொடுக்கப்படவில்லை. (*சேதுபதி உயர்நிலைப்பள்ளியில்
பாரதி பணியாற்றிய காலத்தில் அவர்களுடைய சம்பளப்பட்டியலின் பிரதியொன்று எட்டையபுரம்
பாரதி அன்பர் அமரர் இளசை மணியன் அவர்களிடம் இருந்தது. அதில் சி.சுப்பிரமணிய பாரதி,
தமிழ் பண்டிட் என்று எழுதப்பட்டு அதில் பாரதியார் தன் மணியான எழுத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்)
'சுதேசமித்திர'னில் அவர் சுமார் இரண்டரை ஆண்டுகள்
பணிபுரிந்தபின், அதிலிருந்து ஜி.சுப்பிரமணிய அய்யரின் அனுமதியோடு விலகிக்கொண்டு 'இந்தியா'
பத்திரிகையில் ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார்.
இதற்கிடையே இவர் 'சக்கரவர்த்தினி' இதழின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்று சிலகாலம் அதன்
ஆசிரியராக இருந்திருக்கிறார். இந்த 'சக்கரவர்த்தினி' எனும் பத்திரிகை பெண்கள் முன்னேற்றத்திற்காக
நடத்தப்பட்ட பத்திரிகை, அதிலிருந்து இவர் நீங்கியபின் வேறொருவர் அதன் ஆசிரியராக இருந்தார்
என்பதும் தெரிய வருகிறது.
வ.ரா. என அழைக்கப்பட்ட திருப்பழனம்
வ.ராமசாமி ஐயங்கார் பாரதியாரின் அன்பிற்குப் பாத்திரமானவர். பாரதியார் 'சுதேசமித்திரனை'
விட்டு நீங்கியதற்கு இவர் கூறும் காரணம் "பாரதியார் ஜி.சுப்பிரமணிய ஐயரோடு ஏற்பட்ட
மனவேறுபாடு காரணமாக 'சுதேசமித்திர'னை விட்டு நீங்கவில்லை. மாறாக ஜி.சுப்பிரமணிய அய்யர்
காங்கிரசில் இருந்த இரு பிரிவினரில் மிதவாதி
அல்ல என்றாலும், லாலா லஜபதி ராய், பால கங்காதர
திலகர், போல புரட்சிக்காரரும் இல்லை. எனவே அரசியலில் அதிதீவிரரான பால கங்காதர திலகரின்
சீடரான சுப்ரமணிய பாரதியார் 'சுதேசமித்திர'னை விட்டு நீங்கியதில் வியப்பொன்று மில்லை".
ஆரம்ப காலத்தில் 'சுதேசமித்திர'னில் பாரதி பணியாற்றிய போது அதன் அலுவலகம் அரண்மனைக்காரன்
தெரு (அர்மேனியன் தெரு) வில் இருந்தது. இவர் அதன் அருகிலுள்ள தம்புச் செட்டித் தெருவில்
ஒரு வீட்டில் குடியிருந்தார்.
"சக்கரவர்த்தினி"
பாரதியார் 'சுதேசமித்திர'னில் பணியாற்றிக்
கொண்டிருந்த போதே 1905-ல் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்ட "சக்கரவர்த்தினி"
எனும் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்தப் பத்திரிகையை பி.வைத்தியநாதய்யர்
என்பவர் நடத்தி வந்தார். "சக்கரவர்த்தினி" எனும் பெயரே இங்கிலாந்தின் மகாராணியார்
விக்டோரியாவின் பெயரால் அவருடைய ஆட்சியின் பொன்விழாவை முன்னிட்டுத் துவக்கப்பட்டது
என்பது தெரிகிறது. இந்த இதழ் 32 பக்கங்களில் ஆண்டுச் சந்தா ரூ.2 என்றும், தனியிதழ்
3 அணா என்றும், நோக்கம் 'பெண்கள் முன்னேற்றம்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாகத்
தெரிகிறது.
இந்த பத்திரிகையில் பாரதியார் குழந்தைத்
திருமணம், சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம், வரதட்சணை, கைம்பெண்கள் மீதான கொடுமைகள் ஆகிய நடைமுறைகளைக் கடுமையாக எதிர்த்துக்
கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பெண் கல்வி பற்றி இவர் வலியுறுத்தி எழுதியதும் தெரிய
வருகிறது. 'சுதேசமித்திர'னில் பணியாற்றியபோது அடக்கி வைக்கப்பட்டிருந்த இவரது எண்ணங்கள்,
உணர்வுகள் அனைத்தும் 'சக்கரவர்த்தினி'யில்
வெளிப்படலாயிற்று. 1906-ல் ஓராண்டு பணிக்குப் பிறகு பாரதியார் இந்தப் பத்திரிகையிலிருந்தும்
வெளியேறினார். 'சக்கரவர்த்தினி' பத்திரிகையில் பாடலொன்று பத்திரிகையின் நோக்கமாக வெளியாகியது,
அது:
"பெண்மை யறிவோங்கப் பீடுயரும் பெண்மைதான்
ஒண்மையுற வோங்கும் உலகு"
இது பாரதியார் எழுதியதாக இருக்க
வேண்டுமென்று பலரும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். முன்பே குறிப்பிட்டபடி இது
பெண்களுக்காக நடத்தப்பட்ட பத்திரிகையாதலால் இந்த இதழ்களில் இப்போதைய பெண்கள் பத்திரிகை
போல கதைகள், தொடர்கதை, சமையல் குறிப்பு, அழகுக் குறிப்புகள் இவைகள் இல்லாமல் தனது கட்டுரைகள்,
கவிதைகள் இவற்றோடு பெண்கள் முன்னேற்றத்திற்காக பல எழுத்தாளர்களுடைய கருத்துக்களையும்
இடம்பெறச் செய்தார். இந்த இதழில் ஆங்கில ஆண்டு, மாதங்கள்தான் அச்சிடப்பட்டு வெளியிடப்
பட்டது. இதற்குப் பிறகு இந்தியா பத்திரிகையில் பொறுப்பேற்ற போது, அந்தப் பத்திரிகையில்
ஆங்கில ஆண்டு மாதம் இவற்றோடு தமிழ் ஆண்டும் மாதமும் குறிக்கப்பெற்றன. இவ்வாறு தமிழ்
ஆண்டை முதன்முதலில் பத்திரிகைகளில் வெளியிட்ட பெருமை பாரதியைச் சேர்ந்தது. இந்தப் பத்திரிகையை
விட்டு நீங்கிய பின் பாரதியார் 'இந்தியா' பத்திரிகையில் சேர்ந்து எழுதத் தொடங்கினார்.
"இந்தியா"
இந்த பத்திரிகையை மண்டையம் திருமலாச்சாரியார்
தொடங்கி பாரதியாரை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் செய்திருந்தாலும், பத்திரிகையில்
ஆசிரியர் என்று மண்டையம் திருமலாச்சாரியாரின் உறவினர் சீனிவாசன் என்பவர் பெயர்தான்
கொடுக்கப்பட்டிருந்தது. அதில் வரும் எழுத்துக்கள்தான் பாரதியாருடையதே தவிர, ஆசிரியர்
என்ற பெருமை சீனிவாசனுக்கே. சிலர் இந்த இதழை பாரதியார் தொடங்கினார் என்று கூறுவார்கள்.
ஆனால் அந்த அளவுக்கு பாரதியாரிடம் நிதிவசதி இல்லை என்பது ஊரறிந்த விஷயம். மண்டயம் குடும்பத்தார்
தொடங்கி அதில் பாரதியார் பணியாற்றினார் என்பதே சரியான செய்தி. அதே மண்டயம் குடும்பத்தைச்
சேர்ந்த ஸ்ரீநிவாசாச்சாரியார் "இந்தியா பத்திரிகை சென்னையில் வெளிவர ஆரம்பித்த
கொஞ்ச நாட்களுக்கெல்லாம் பாரதியார் அதில் வந்து சேர்ந்தார்" என்று குறிப்பிடுவதிலிருந்து
மேற்கண்ட செய்தியை நாம் உறுதி செய்து கொள்ளலாம்.
'இந்தியா' பத்திரிகையில் பாரதியாரின்
எழுத்துக்கள் ஆங்கில ஏகாதிபத்தியத்தை மிகக் கடுமையாகத் தாக்கின. “இந்தியா”
4-8-1906 இதழில் பாரதியார் "வேதாந்தி" எனும் புனைபெயரில் 'சுவாமி அபேதானந்தா'
பற்றிய ஓர் கவிதையை எழுதி வெளியிட்டிருந்தார். பிறகு 6-10-1906ல் ஓவியர்மணி ரவிவர்மா
பற்றிய கவிதையை வெளியிட்டார். இந்தக் கவிதையும் அதன்பிறகு வெளிவந்தனவும் எல்லாம் பாரதியின்
பெயரிலேயே வெளிவந்தன.
இதே 1906-ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் கல்கத்தாவில்
நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டுக்கும் பாரதியார் சென்று வந்திருக்கிறார். அப்போதுதான்
அவர் கல்கத்தாவில் நிவேதிதா தேவியைச் சந்தித்தார். வார இதழாக ஒவ்வோர் சனிக்கிழமையிலும்
வெளிவந்த 'இந்தியா' இதழின் ஓராண்டு சந்தா ரூ.3, ஆறு மாத சந்தா ரூ.1 அணா 12. இது சாதாரண
மக்களுக்கு உரிய சந்தா. அரசாங்கத்தாருக்கும், ஜமீன்தார்களுக்கும், ரூ.200க்கு மேல்
ஊதியம் பெறுபவர்களுக்கும் சந்தாத் தொகை அதிகம். இந்தப் பத்திரிகையில் குறிக்கோளாக
"சுதந்திரம்" "சமத்துவம்" "சகோதரத்துவம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
'இந்தியா' இதழின் எழுத்துக்களில் வெளியான வேகத்தைப்
பொறுக்க மாட்டாத ஆங்கில அரசாங்கம் அதன் உரிமையாளர் திருமலாச்சாரியாருக்கும் ஆசிரியராகப்
பதிவு செய்யப்பட்டிருந்த சீனிவாசன் என்பவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்தது.
20-8-1908-ல் ஆசிரியர் எனக் குறிப்பிடப் பட்டிருந்த சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.
சீனிவாசன் கைது செய்யப்பட்ட ஆறாவது
நாள் மகாகவி பாரதியாரை அவருடைய நண்பர்கள் பலர் சேர்ந்து அடுத்ததாக அவரும் கைது செய்யப்படலாம்
என்றும், சிறைவாசம் மிகக் கொடுமையானது அந்தக் கடுமையை பாரதியாரால் தாங்கமுடியாது என்பதாலும்,
அவருடைய எழுத்துக்கள் சுதந்திரப் போருக்கு உத்வேகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்து மக்களை
எழுச்சிக் கொள்ளச் செய்ய வல்லது, அப்படிப்பட்ட எழுத்து சிறையில் முடங்கிவிடுமானால்
சுதந்திரப் போரின் கூர் மழுங்கிவிடலாம் என்று எண்ணி அவரை எப்படியாவது அப்போது ஃப்ரெஞ்சு
ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரிக்கு அனுப்பிவிட வேண்டுமென்று முயற்சி செய்து அனுப்பி
விட்டார்கள்.
அவருடைய நெருங்கிய நண்பரும், வக்கீலுமான துரைசாமி அய்யர் முழு முயற்சியால் பாரதியார்
சைதாப்பேட்டை ரயில் நிலையம் சென்று புகைவண்டியில் புதுச்சேரி அனுப்பப்பட்டார் என்று
வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. பலரும் அப்படித்தான் எழுதுகின்றனர். ஆனால் மைலாப்பூரில்
இருந்த பழம்பெரும் தேசபக்தரும் வைத்தியருமான டாக்டர் நஞ்சுண்ட ராவ் என்பவர் இவரை ஓர்
படகில் ஏற்றி பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக புதுச்சேரி அனுப்பினார் என்று 'தினமணி'யில்
ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. பெரும்பாலும் அவர் ரயிலில் பயணம் செய்துதான் புதுச்சேரிக்குச்
சென்றார் என்றுதான் கூறுகிறார்கள். இவ்விரண்டு செய்திகளில் எது சரியானது என்பதை ஆய்வாளர்கள்தான்
சொல்ல வேண்டும்.
புதுச்சேரிக்குச் சென்ற பிறகும் பலவித
துன்பங்களை அனுபவித்த பாரதி, அங்கிருந்த மண்டையம் குடும்பத்தாரின் உதவியோடு புதுவையில்
தொடங்கப்பட்ட 'இந்தியா' பத்திரிகையில் மீண்டும் பணியாற்றத் தொடங்கினார். ஃப்ரெஞ்சு
பகுதியில் இருந்துகொண்டு ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக பாரதியார் தீயைக் கக்குவது
போல எழுதினார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த பத்திரிகையைக் கண்டு ஆங்கில அரசாங்கம்
கடும் கோபம் கொண்டு சட்டப்படியாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் பாரதியாருக்கு எதிரான
பற்பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. இவருடைய பத்திரிகைகள் பிரிட்டிஷ் இந்தியாவிற்குள்
நுழைய முடியாதபடி பறிமுதல் செய்யப்பட்டும், அஞ்சல் அலுவலகங்களிலிருந்து எடுத்துக் கொண்டு
போய் அழித்தும் அராஜகம் புரிந்தனர். பத்திரிகைக்கு வந்த மணியார்டர்கள் கொடுக்கப்படாமல்
தடுத்து நிறுத்தப்பட்டன. பத்திரிகையை மக்கள் படிக்க முடியாமல் ஒரு புறம், நிதி நெருக்கடி
ஏற்படும்படி மணியார்டர்கள் பறிமுதல் இப்படி பிரிட்டிஷ் அரசு முடிந்தவரை தீமை இழைத்தது.
இதன் விளைவு 'இந்தியா' பத்திரிகை பொதுமக்களுக்குச் சரியாகப்
போய்ச்சேர முடியாத நிலை ஏற்பட்டது. ஏராள நஷ்டம் ஏற்பட்டு, பத்திரிகை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில்
1910 செப்டம்பரோடு 'இந்தியா' இதழ் நின்று போனது. அப்படி அது நின்று போன காலத்தில் பத்திரிகை
சுமார் நாலாயிரம் பிரதிகள் விற்பன ஆனதாம். இதில் வெளியிடப்படும் கார்ட்டூன்கள் பாரதியார்
வடிவமைத்துக் கொடுத்தவை. அந்தப் படங்களும் ஆங்கில அரசாங்கத்தை நிலைகுலைய வைத்தன. எது
எப்படியிருந்த போதிலும் 'இந்தியா' பத்திரிகை மகாகவி பாரதியாரின் வரலாற்றோடு இரண்டறக்
கலந்து விட்ட பெயர் என்பதும், இந்த பத்திரிகையில் வெளிவந்த காரசாரமான கட்டுரைகள், கார்ட்டூன்கள்
காரணமாகத்தான் பாரதியார் கைது செய்யப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதும்
மறுக்கமுடியாத உண்மை. வார இதழாக வெளிவந்த 'இந்தியா' பத்திரிகையின் அளவை நாளிதழ் அளவில்
வெளியிட்டுப் புதுமை செய்தார் பாரதி. செய்திகளை வெளியிடும்போது அவற்றை பெருநகரங்கள்
வாரியாகப் பிரித்து, பம்பாய், கல்கத்தா, லாகூர், சென்னை என்ற தலைப்புகளிட்டு வெளியிட்டதோடு
ராய்ட்டர் எனும் செய்தி ஸ்தாபனம் அனுப்புகின்ற தந்திகளை தமிழாக்கம் செய்தும் வெளியிட்டு
வந்தார்.
பாரதியார் 'இந்தியா' இதழின் மூலமாக
மிகத் திறமையாகப் பணியாற்றி அரசியலிலும், பத்திரிகைத் துறையிலும் முன்னணியில் விளங்கினார்.
இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில்தான் இவர் 1906ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்கு
சென்று வந்தார். அதுபோலவே 'பாலபாரதா' இதழின் ஆசிரியர் என்ற முறையில்தான் கலவரத்தில்
முடிந்த 1907 சூரத் காங்கிரசுக்கும் இவர் சென்று வந்தார். ஆக, இவர் பத்திரிகையாளராகத்தான்
காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு பெற்றார் என்பதும் இந்தத் துறையின் மீதுதான் பாரதி ஈடுபாடு
கொண்டிருந்தார் என்பதும் தெளிவாகிறது.
மேலும் 1908ல் திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணிய
சிவாவும் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்த போது, இவர் திருநெல்வேலிக்குச் சென்று அங்கிருந்து
பத்திரிகைக்குச் செய்தி அனுப்புகையில் தன்னை "திருநெல்வேலிக்குச் சென்றிருக்கும்
நமது பிரதிநிதியின் அறிக்கை" என்று செய்திகளை வெளியிட்டார். தமிழ்நாட்டில் பாரதியின்
புகழ் பத்திரிகைத் துறையில் பெருமைபட விளங்கிய நிலையில், இவர் இந்தியாவின் மற்ற மாகாணங்களில்
இருந்த பல பத்திரிகையாளர்களோடு தொடர்பு வைத்திருந்தார். அந்த வகையில் பால கங்காதர திலகர்,
விபின் சந்த்ர பால், அரவிந்தர் போன்றவர்களோடு இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.
வாசகர்கள் எழுதும் மடல்கள் பகுதியில்
அரசியல் விழிப்பூட்டும் கடிதங்கள் வெளியிடப்பட்டன. இந்திய சுதந்திரப் போர் குறித்து
இங்கிலாந்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து அப்போது அங்கு வசித்து வந்த வ.வெ.சு.ஐயர்,
டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் ஆகியோர் எழுதும் செய்திக் கடிதங்களை "லண்டன் கடிதம்"
எனும் தலைப்பில் வெளியிட்டு வந்தார். 'இந்தியா' இதழில் இலக்கியம், ராஜரீகம் (அரசியல்),
கைத்தொழில் இவைகள் பற்றியும் பல தலைப்புகளில் செய்திகளை வெளியிட்டு வந்தார்.
"பாலபாரதா" ஆர் "யங் இந்தியா"
'இந்தியா' இதழ் நடந்து கொண்டிருந்த
போதே "பாலபாரதா" எனும் ஆங்கில ஏட்டைத் தொடங்கினார் பாரதி. இது வார இதழா,
மாத இதழா என்பதில் குழப்பம் நிலவிய போதிலும் பாரதி ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள்
இது வாரப் பத்திரிகை என்றும் இதன் பொறுப்பாசிரியராக பாரதி பொறுப்பேற்றார் என்றும் தெரிவிக்கிறார்.
முதலில் இது வாரப்பத்திரிகையாக இருந்து 1907 நவம்பர் முதல் மாத இதழாக வெளிவந்தது.
'இந்தியா' 1906 அக்டோபர் 27ம் தேதி இதழில் "நமது ஆபீசிலிருந்து "பாலபாரத்"
என்ற ஆங்கில வாரப் பத்திரிகை பிரசுரமாகப் போகின்றது" என்று விளம்பரப்படுத்தப்
பட்டிருக்கிறது. இது 'இந்தியா' பத்திரிகையின் துணை ஏடாக வெளிவந்திருக்கிறது. இதனைப்
பின்னர் மைலாப்பூர் டாக்டர் எம்.சி. நஞ்சுண்ட ராவ் என்பவர் வாங்கி நடத்தியதாகத் தெரிகிறது.
புதுச்சேரியில் 'பாலபாரதா' இதழ்
'இந்தியா' அலுவலகத்திலிருந்தே வெளிவந்தது. பாரதியார் ஈஸ்வரன் தர்மராஜா கோயில் வீதியில்,
தான் குடியிருந்த 22-ம் எண் இல்லத்திற்கு "பாலபாரத மந்திரம்" என்று பெயரிட்டிருந்தார்
என்பதை 'இந்தியா' இதழில் வந்துள்ள ஒரு விளம்பரத்திலிருந்து தெரிகிறது. 1910 வாக்கில்
இந்த 'பாலபாரதா' பத்திரிகைக்கு உள்நாட்டு ஆண்டுச் சந்தா ரூ.3 என்றும், மாணவர்களுக்கு
ரூ. 2 என்றும், வெளிநாட்டுக்கு 6 ஷில்லிங் என்றும் விளம்பரப்படுத்தி யிருந்தனர்.
இந்த பத்திரிகையின் முகப்பு அட்டையில்
'பாலபாரதா ஆர் யங் இந்தியா' (Balabharata or Young India) என்ற பெயர் அச்சிடப்பட்டு
அதன் கீழ் சுவாமி விவேகானந்தரின் "Arise, Awake and stop not till the Goal
is reached" எனும் வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். அதற்குக் கீழே குண்டலினி சக்தியைக்
குறிக்கும் படமும், பாலபாரதக் கொடி ஏந்திய இளைஞனின் படமும் இருக்கும். கீழே ஒரு தாமரையின்
படம். அதன் இதழ்களில் Unbounded Light of Liberation என எழுதப்பட்டிருக்கும். இந்தப்
பத்திரிகை தொடக்கத்தில் எட்டுப் பக்கங்களோடு வார இதழாகவும், பிறகு மாத இதழாக மாறியபின்
முன்பின் அட்டைகளைச் சேர்த்து 24 பக்கங்களோடும் வெளிவந்தது.
இந்த இதழில் சுவாமி விவேகானந்தரின்
உரைகள், அரவிந்தரின் எழுத்துக்கள் இவை அதிகம் இடம் பெற்றன. பாரதியாரும் பிற இதழ்களில்
வரும் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தார். பாரதியாரின் ஞானகுரு நிவேதிதா
அம்மையார் அடிக்கடி தனது ஆலோசனைகளை வழங்கி வந்தார். இந்திய விஞ்ஞானி ஜகதீச சந்திர போஸ்,
சாக்ரடீஸ் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகளும் வெளியாகின.
"விஜயா"
'விஜயா' இதழும் சென்னையிலிருந்து பாரதியோடு
புதுச்சேரிக்கு வந்து அங்கிருந்து வெளியாகத் தொடங்கியது. பாரதியார் ஆசிரியராக இருந்த
ஒரே நாளிதழ் 'விஜயா'தான். 1909 - 1910 காலகட்டத்தில் இது புதுச்சேரியிலிருந்து வெளிவந்தது.
பாரதியார் நடத்திய பத்திரிகைகள் அனைத்தும் அடக்குமுறைகளால் நசுக்கப்பட்டுக் கிடந்த
இந்த காலகட்டத்தில் அவரது கருத்துக்களை, கட்டுரைகளைத் தாங்கி வந்த ஒரே இதழ் 'விஜயா'
தான். சமீப காலம் வரை 'விஜயா' இதழ் எதுவும் கிடைக்காமல் இருந்தது. ஆய்வாளர்கள் அனைவரும்
'விஜயா' என்றொரு பத்திரிகை வெளிவந்தது என்றுதான் எழுதினார்களே தவிர அந்த பத்திரிகை
இதழ்கள் எதையும் எடுத்துக்காட்டாகக் காட்ட முடியாமல் இருந்தது. இந்த நிலையில் பாரதி
ஆய்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும் Madras Institute of Development
Studies எனும் நிறுவனத்தில் இணைப் பேராசிரியராகவும், தமிழ்ச் சமூக வரலாறு பற்றிய ஆய்வுகளை
நடத்தியவருமான ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் பெருமுயற்சி மேற்கொண்டு பாரிஸ் நகரத்தில்
'விஜயா' இதழ்கள் இருப்பதைக் கண்டுபிடித்து அதனை வெளிக் கொணர்ந்திருக்கிறார். நாகர்கோயிலில்
உள்ள 'காலச்சுவடு' பதிப்பகம் இதனை நூலாக வெளியிட்டிருக்கிறது. ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள்
புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வரலாற்றாய்வு மையத்தில் பி.ஹெச்.டி.
பட்டம் பெற்றவர். இவர் வ.உ.சி., பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோருடைய படைப்புக்களை ஆய்வு
செய்து நூல்களை வெளியிட்டிருக்கிறார். தற்போது மகாகவி பாரதியார் 1906 முதல் 1916 வரையிலான
காலகட்டத்தில் 'தி ஹிந்து' பத்திரிகையில் எழுதிய ஆங்கில கடிதங்களை லண்டன் கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார். அந்த நூலில் அவர்
எழுதியுள்ள முகவுரையைத் தனி புத்தகமாக “பாரதி இலக்கியப் பயிலகம்” 11-9-2008 அன்று வெளியிட்டிருக்கிறது.
'விஜயா' பத்திரிகையில் மகாகவி பாரதியார்
உலக நாடுகளில் நிலவிய பிரச்சினைகள் குறித்தெல்லாம் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
2007-08ம் ஆண்டில் பாரதி இலக்கியப் பயிலகம் நடத்திய அஞ்சல் வழிப் பயிற்சியில் ஏழாவது
பாடமாக "பாரதியாரின் 'விஜயா' பத்திரிகை கட்டுரைகள்" எனும் தலைப்பில் ஆ.இரா.வேங்கடாசலபதி
அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகளைப் பாடமாக வெளியிட்டிருக்கிறோம். 'விஜயா' கட்டுரைகளில்
நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலவரங்களை நன்கு தெரிந்து கொள்ளலாம். அந்த நூலில்
காணப்படும் அனேக கட்டுரைகளின் கருத்துக்கள் இன்றைக்கும் நமக்குப் பொருந்தக் கூடியதாக
இருப்பதை நாம் காணமுடியும்.
இந்த பத்திரிகையின் முதல் பக்கத்தில்
"விஜயா" என்று பெரிய எழுத்துக்களால் தலைப்பு காணப்படுகிறது. அதன் கீழே ஆங்கிலத்திலும்
VIJAYA என எழுதப்பட்டிருக்கிறது. தலைப்பில் 'ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம்'
என்று காணப்படுகிறது. இதன் ஃப்ரெஞ்சு வடிவத்தையும் மேற்புறத்தில் காணலாம். இப்பத்திரிகை
பிரதி தினம் மாலையில் பிரசுரிக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. மக்களால் மிகவும் விரும்பி
படிக்கப்பட்ட இந்த பத்திரிகை 1910-ம் வருஷம் பத்திரிகைகள் சட்டம் பிரிவு 4, உட்பிரிவு
1ன் படி தடை செய்யப்பட்டது. அதுமுதல் இந்த இதழ் நிறுத்தப்பட்டு விட்டது.
"கர்மயோகி"
மகரிஷி அரவிந்தர் கல்கத்தாவிலிருந்து
"கர்மயோகின்" எனும் தலைப்பில் ஓர் வார இதழை நடத்தி வந்தார். அவர்மீது சுமத்தப்பட்ட
சதி வழக்குகளிலிருந்து விடுதலையான பின் சந்திரநாகூரிலிருந்து கப்பல் மூலம் புதுச்சேரி
வந்த பின் அந்த பத்திரிகை நின்று போய்விட்டது. மகான் அரவிந்தர் நடத்தி வந்த அந்த பத்திரிகையின்
பெயரிலேயே பாரதியார் தமிழில் "கர்மயோகி" எனும் வாராந்தர பத்திரிகையை வெளியிட்டார்.
சைகோன் சின்னையா என்பவரின் அச்சுக்கூடத்தில் இந்தப் பத்திரிகை அச்சிடப்பட்டதாக எல்லா
ஆய்வாளர்களும் எழுதியிருக்கிறார்கள். இந்த இதழில் பாரதியார் "ஆரிய நாகரிகம்",
"நமது சொந்த நாடு", "ஒற்றுமையே வலிமை" என்றெல்லாம் கட்டுரைகள்
எழுதினார். இந்தப் பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதுவோர் சொந்தப் பெயரில் எழுதாமல் புனைபெயரில்
எழுதுமாறு பாரதியார் வெண்டுகோள் விடுத்திருந்ததாக போலீஸ் இரகசியக் குறிப்புகளில் காணப்படுவதாகக்
கூறுகின்றனர்.
வ.ரா. அவர்கள் தன்னுடைய 'மகாகவி பாரதியார்'
எனும் நூலில் சொல்லுகின்ற செய்தியாவது, "கர்மயோகி" பத்திரிகையைப் பாரதியார்
தொடங்கி நடத்திய காலத்தில் (1910-ல்) இந்தியா முழுதும் அரசியல் கிளர்ச்சி அதிகம் இருந்தது.
இதனிடையே லோகமான்ய திலகருக்கு ஆறு வருஷம் சிறைவாசம்; அவர் பர்மாவில் இருந்த மாண்டலே
சிறைக்குக் கொண்டு போகப்பட்டார்.
அரசாங்கத்தார் போராட்டக்காரர்களை இரண்டு
விதமாகக் கையாண்டார்கள்; அடக்கு முறையை ஒரு
கையால் உபயோகப் படுத்திக் கொண்டு; மற்றொரு
கையால் சீர்திருத்தமும் வழங்கினார்கள். இதற்கு மிண்டோ மார்லி சீர்திருத்தம் என்று பெயர்.
இந்தச் சீர்திருத்தத்தின் மூலமாய்,
மாகாணச் சட்டசபைகளில் மக்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையில் இருப்பார்களென்று மார்லி
இங்கிலாந்திலிருந்து கொண்டு சொன்னார். இது தவறு என்று அரவிந்தர் தமது 'கர்மயோகின்'
பத்திரிகையில் தெளிவாக எடுத்துக் காண்பித்தார்.
சட்டசபையில் கேள்வி கேட்கும் உரிமை
மட்டும் தான் மக்கள் பிரதிநிதிகளுக்கு, கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சர்க்கார் பிரதிநிதிகளிடமிருந்து
பெற முடியாது என்றும் அரவிந்தர் எழுதியிருந்தார். அரவிந்தர் 1909ஆம் ஆண்டில் எழுதியதை,
நாட்டு மக்கள் இருபது வருஷங்களுக்குப் பிறகு அனுபவத்தில் தெரிந்து கொண்டார்கள்.
'பதஞ்சலி யோக சூத்திரம்' என்ற சமஸ்கிருத
நூலை, சுவாமி விவேகானந்தர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
மூலத்துக்கும் விவேகானந்தருடைய மொழிபெயர்ப்புக்கும் சில இடங்களில் முரண் இருக்கிறது
என்பது பாரதியாரின் எண்ணம். மூலத்திலிருந்தே அவர் யோக சூத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்து,
பகுதி பகுதியாகக் 'கர்மயோகி' பத்திரிகையில் வெளியிட்டார்.
'கர்மயோகி' தொடங்கி சுமார் இரண்டு
ஆண்டுகள் நடந்தது. இந்தப் பத்திரிகையும் நாட்டுப் பற்றைத் தூண்டும் விதத்தில் எழுதி
வந்தது. பின்னர் மற்ற பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட அந்த கதியே இதற்கும் ஏற்பட்டு பத்திரிகை
மூடுவிழா கண்டது.
"தர்மம்"
'கர்மயோகின்' போலவே அரவிந்தர் கல்கத்தாவில் 'தர்மா'
என்றொரு இதழையும் நடத்தி வந்தார். அவரது வழியைப் பின்பற்றியே பாரதியாரும் 'தர்மம்'
என்ற பெயரில் ஒரு இதழைத் தொடங்கி நடத்தினார். இந்த பத்திரிகை வெளியீட்டில் நாம் கவனிக்க
வேண்டியது என்னவென்றால், இது இலவசமாக மக்களுக்கு
விநியோகிக்கப்பட்டது. பத்திரிகைக்கு சந்தா கிடையாது எனினும் நன்கொடை கொடுத்தால் வாங்கிக்
கொண்டார். இந்த பத்திரிகையை நாகசாமி என்பவரும் வ.ரா. அவர்களும் மேலும் சிலரும் சேர்ந்து
நடத்தியதாகத் தெரிகிறது. சைகோன் சின்னையா என்பவர், திரும்ப சைகோன் செல்லுகையில் பாரதியிடம்
கொடுத்த பணத்தில் இந்த இலவச பத்திரிகையைத் தொடங்கியதாக நாகசாமி என்பவர் சொல்லுகிறார்.
'தர்மம்' இதழின் ஆசிரியராகப் பதிவு செய்யப்பட்டவர் ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் என்பவர்.
இது ஒரு மாத இதழ். வ.வெ.சு.ஐயரின் வீட்டு முகவரியைத் தாங்கி இந்த இதழ் வெளியாகியிருக்கிறது.
இந்த பத்திரிகையும் பிறகு நின்று போயிற்று.
"சூரியோதயம்"
1908-ம் வருஷத்தில் 'சூரியோதயம்'
எனும் தமிழ் வார இதழ் புதுச்சேரியிலிருந்து வெளிவந்தது. இந்த பத்திரிகை 300 பிரதிகள்
வரை விற்றதாகவும் தெரிகிறது. 5-7-1908ல் நின்று போன இந்த இதழ் மீண்டும் பாரதியாரால்
1910 லிருந்து வெளியிடப்பட்டது. இந்த இதழின் ஆசிரியர் நீலகண்ட பிரம்மச்சாரி என்றாலும்
பாரதியாருடைய கட்டுரைகள் இந்தப் பத்திரிகையில் வெளிவந்தன. பரலி சு.நெல்லையப்பர் இந்த
இதழில் உதவி ஆசிரியராக இருந்து பணியாற்றினார். 'சூரியோதயம்' இதழும் ஆங்கில ஆட்சியாளர்களின்
தடையுத்தரவினால் நிறுத்தப்பட்டது.
இந்த 'சூர்யோதயம்' பத்திரிகையைப்
பற்றியும் வ.ரா. அவர்கள் குறிப்பிடுகிறார். அவர் கூறுவதாவது:- "நீலகண்ட பிரமச்சாரி
என்பவர் புதுச்சேரிக்கு வந்தார். இவர் பாரதியாருக்கு எப்படிப் பழக்கமானார் என்பது எனக்குத்
தெரியாது. பின்னர், திருநெல்வேலி சதி வழக்கில் இவர் முக்கிய எதிரியாயிருந்தார் என்பது
தெரியும். புதுச்சேரியில் 'சூர்யோதயம்' என்ற பத்திரிகையை இவர் நடத்தினார். இந்தப் பத்திரிகைக்குப்
பாரதியார் கட்டுரைகள் கொடுத்து உதவி வந்தார்."
மீண்டும் "சுதேசமித்திரன்"
1910 முதல் 1914 வரையிலான காலகட்டத்தில்
பாரதி தொடங்கிய அனைத்துப் பத்திரிகைகளும் அரசாங்கத்தின் கெடுபிடிகளால் மூடப்பட்ட நிலையில்
பண வரவு இல்லாமல் அவர் வறுமை நிலை எய்தினார். அவருடைய எழுத்துக்கள் நின்று போயின, எப்போதாவது
ஏதாவதொரு சிறு பத்திரிகையில் வெளிவருவதைத் தவிர. நண்பர்கள் வற்புறுத்தவே பாரதியார்
மீண்டும் 'சுதேசமித்திர'னுக்கு எழுதத் தொடங்கினார். என்றாலும் இது ஒன்றுதான் ஒழுங்காக
நடைபெற்றுக் கொண்டிருக்கும் பத்திரிகை, இதற்கும் நான் எழுதுவதால் ஆபத்து நேராமல் இருக்க
வேண்டுமே என்று பாரதி கவலைப் பட்டாராம். 1915ல் ஜி.சுப்பிரமணிய அய்யர் 'சுதேசமித்திரனை'
ஏ.ரங்கசாமி ஐயங்காருக்கு விற்று விட்டார். இவர் பாரதியின் எழுத்துக்களை தைரியமாக 'சுதேசமித்திர'னில்
வெளியிட்டு அவருக்கு பணமும் அனுப்பினார்.
ஆனால் ரங்கசாமி ஐயங்கார் பாரதியிடம் அரசியல் கலப்பில்லாத
கட்டுரைகளையும் பாடல்களையும் தந்து உதவும்படி கேட்டுக் கொண்டார். கட்டுரை பாட்டு இவற்றுக்கு
இவ்வளவு பணம் என்ற நிர்ணயம் கிடையாது. மாதம் முப்பது ரூபாயைக் கொடுத்து விடுவார். மாதம்
முழுவதும் பாரதியார் எதுவும் எழுதாவிட்டாலும் இந்த முப்பது ரூபாய் புதுச்சேரிக்கு மணியார்டரில்
சென்று விடும். 1915 லிருந்து பாரதியார் 'சுதேசமித்திர'னில் தொடர்ந்து எழுதலானார்.
புதுச்சேரி வாழ்க்கைக்கு இந்த முப்பது ரூபாய் பாரதிக்குப் பெரிதும் தேவைப்பட்டது.
1918 டிசம்பரில் பாரதியார் புதுச்சேரியை
விட்டு வெளியேறி கடலூரில் கைதாகி, பிறகு சில
நாட்களுக்குப் பின் விடுதலையான பின் தன் மனைவியின் ஊரான கடையம் சென்றார். அங்கு இருந்தபோதுதான்
பாரதி தம்முடைய நூல்களைப் பிரசுரம் செய்வதற்கு பெரிதும் முயற்சி செய்தார். நூல்களை
வெளியிட பணம் வேண்டுமென பலருக்கும் கடிதங்கள் எழுதினார். இந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்து
விட்ட நிலையில் மீண்டும் 1920 ஆகஸ்ட் மாதத்தில் பாரதியார் சென்னை வந்து சேர்ந்தார்.
அவருடைய நண்பர் எஸ்.துரைசாமி அய்யர் பாரதியை அழைத்துக் கொண்டு சென்று 'சுதேசமித்திரன்'
ரங்கசாமி ஐயங்காரிடம் மீண்டும் சேர்த்து விட்டார்.
ரங்கசாமி ஐயங்கார் பாரதியாரை வரவேற்றுப்
பேசிக் கொண்டிருக்கையில் 'இப்போதெல்லாம் நமது பேப்பரின் பாலிசி தெரியுமோல்லியோ? அதை
அனுசரித்து எழுத வேண்டியிருக்கும்' என்றாராம். அதற்கு பாரதியார் 'அதைப்பற்றி நீங்கள்
கவலைப்பட வேண்டியதில்லை. என்னை நீங்கள் நாமம் இல்லாத ரங்கசாமி ஐயங்காராகவே எண்ணிக்
கொள்ளலாம்' என்றாராம். இப்படி பாரதியாரின் தம்பி சி.விஸ்வநாத ஐயர் எழுதுகிறார். தன்
இயலாமை காரணமாக அங்கு கூலிக்கு வேலை செய்யும்போது, ஆசிரியர் சொல்வதை மீற முடியுமா?
அல்லது இவருக்கு இயல்பான அந்த தேசிய உணர்வுடன் உணர்ச்சிவசப்பட்டு எழுதினால் வேலைதான்
நிலைக்குமா? வயிறு இருக்கிறதே, இவர், இவருடைய மனைவி மக்கள் இப்படி?
பாரதியார் 'சுதேசமித்திரனில்' அரசியல்
கலப்பில்லாத பொதுச் செய்திகளையே பெரிதும் எழுதினார். ஆயினும் விடுதலை உணர்வும் தேசபக்தியும்
அவர் எழுத்துக்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் வெளிப்படத்தான் செய்தது. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் போன்ற பல புகழ்பெற்ற
பத்திரிகையாளர்கள் அப்போது பாரதியாருடன் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.
"விவேகபானு". பாரதியார்
வெளியிலிருந்து எழுதிய பத்திரிகைகளில் ஒன்று "விவேகபானு". அவர் சென்னைக்கு
வந்து பிரபலமான பத்திரிகையாளராக ஆவதற்கு முன்பாக மதுரையில் இருந்தபோது, முதன் முதலில்
அவருடைய "தனிமை இரக்கம்" எனும் பண்டிதத் தமிழில் எழுதப்பட்ட கவிதை வெளியானது.
அடுத்ததாக பாரதியாரின்
எழுத்துக்கள் வெளிவந்த பத்திரிகை "சர்வஜனமித்திரன்" என்பதாகும். இதுவும்
திருநெல்வேலியிலிருந்து வெளியாகியது. அதன் ஆசிரியராக இருந்தவர் வேதமூர்த்தி முதலியார்
என்பவராகும். இது வாரம் இருமுறை பத்திரிகை. சென்னைக்கு வந்து பிரபலமான பத்திரிகையாளராக
ஆவதற்கு முன்பாக இந்த இதழில் 1904ம் ஆண்டில் பாரதியார் கட்டுரை எழுதியுள்ளார். இந்தக்
கட்டுரையில் பொதுவாகச் செல்வந்தர்கள் செய்யும் அநியாயங்களைக் கண்டித்திருந்ததாகவும்,
இந்த விஷயம் எட்டயபுரம் ஜமீன்தாருக்குச் சொல்லப்பட அவர் பாரதியிடம் மன வேறுபாடு கொண்டார்
என்றும் பாரதியாரின் தம்பியான சி.விஸ்வநாத ஐயர் எழுதியிருக்கிறார்.
'தி ஹிந்து'
அடுத்ததாக பாரதி எழுதியது 'தி ஹிந்து'
பத்திரிகையில். 1904 முதல் 1914 வரையிலான காலகட்டத்தில் பாரதியார் 'தி ஹிந்து' பத்திரிகையில்
எழுதிய ஆங்கில கடிதங்களைத் தேடித் தொகுத்து
ஆ.இரா.வேங்கடாசலபதி ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். பாரதியாரின் ஆங்கிலப் புலமை ஆங்கிலேயரே
படித்து ஆச்சரியப்படும்படியாக இந்த எழுத்துக்களில் இருந்தது.
"ஞானபானு"
"ஞானபானு" எனும் பெயரில்
ஒரு சுப்பிரமணிய சிவா ஆசிரியராக இருந்து நடத்தினார். 1913 ஏப்ரலில் தொடங்கப்பட்ட இந்த
பத்திரிகை சென்னை மைலாப்பூரிலிருந்து வெளியானது. பாரதியார் 1913ல் தொடங்கி 1915ல் பத்திரிகை
நின்று போகும் வரை இதில் எழுதினார். இதில் பாரதியார் தனது சொந்தப் பெயரிலும், புனைபெயரிலும்
எழுதியுள்ளார். மற்ற பத்திரிகைகள் பாரதியாரின் கட்டுரைகளை வெளியிடத் தயங்கிய நேரத்தில்
அச்சமின்றி அவற்றை சுப்பிரமணிய சிவா வெளியிட்டார். பாரதியாரின் கவிதைகள் பல இந்த 'ஞானபானு'வில்தான்
வெளியாயிற்று. முன்பு எழுதி காணாமல் போன 'சின்னச் சங்கரன் கதை'யை மீண்டும் இதில் தொடராக
எழுதினாலும், அது 6 பகுதிகளோடு நின்று போனது. தொடர்ந்து அவர் அதை எழுதி முடிக்கவில்லை.
"காமன்வீல்".
அன்னிபெசண்ட் 1914ல் தொடங்கிய ஆங்கில
வார இதழ் "காமன்வீல்". இதில் பாரதியார் எழுதிய ஆங்கில கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன.
இதே அன்னிபெசண்டை கேலி செய்து பாரதியார் முன்பு "A Fox with Golden
Tail" எழுதியிருந்தாலும், அவர்களுக்குள் இருந்த நட்பு முறியவில்லை. அடுத்ததாக
"ஆர்யா" எனும் ஆங்கில இதழ். இதனை புதுச்சேரி வந்த பிறகு அரவிந்தர் நடத்தினார்.
அரவிந்த அன்னை இதனை ஃப்ரெஞ்சு மொழியில் வெளியிட்டார். 1914 ஆகஸ்ட் 15, அரவிந்தரின்
பிறந்த நாளில் இதன் முதல் இதழ் வெளியானது.
பத்திரிகைத் துறை வளரத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின்
முற்பகுதியில் அதன் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கியவர் பாரதி. தொடக்க காலத்திலேயே பழைய
முறைகளை உதறி எறிந்துவிட்டு பல புதுமைகளைச் செய்து காட்டியவர் பாரதி. இப்பொழுதெல்லாம்
Cover Story என்றும் Feature என்றும் செய்திக் கோர்வை சுவையாக வெளியிடப்படுவதற்கு வித்திட்டவர்
பாரதி. அன்றாட சுவையான நிகழ்ச்சிகளை நேரடியாகச் சொல்லாமல் 'தராசு' என்ற தலைப்பில் மிக
அழகாக வெளியிட்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் “இடிப்பள்ளிக்கூடம்” என்ற தலைப்பில் வாத்தியார்
சுப்பிரமணிய ஐயர் என்பவரது வீட்டுத் திண்ணையில் நடக்கும் அரட்டைக் கச்சேரியின் சுவாரசியத்தையும்
சுவை குன்றாமல் அளித்து வந்தார். அதில் பங்கு பெறுவோர் பற்றிய வர்ணனை பாரதியாரின் நகைச்சுவை
உணர்ச்சிக்குச் சான்று பகரும்.
இந்தப் பாடத்தை நிறைவு செய்ய ஓர் சுவையான
நிகழ்ச்சியைச் சொல்லி முடித்துக் கொள்வோம். பாரதியார் புதுச்சேரியில் இருந்த காலத்தில்
பிரிட்டிஷ் வேவுகார இரகசிய போலீசார் பலவேறு வேடங்களிட்டு பாரதியாரை அணுகினர். அதில்
சங்கீதம் கற்றுக் கொள்வதற்கென்று சிலர், தமிழ் படிக்கவென்று சிலர், பாரதியாருடைய கவிதைகளின்
இரசிகர் என்று சிலர், எழுத்தாளர் என்று சிலர் இப்படிப் பல விதம். இவர்களெல்லாம் போலீஸ்
தரப்பில் தன்னை வேவு பார்க்க அனுப்பப்பட்டவர்கள் என்பது பாரதிக்குத் தெரியும்.
“பாரதி
பற்றிய எதிர்கால ஆய்வுகள்” என்ற தலைப்பில் முதுமுனைவர் டி,.என்.ராமச்சந்திரன் அவர்கள்.
வேதப் பாடல்களின்
சூக்குமப் பொருள்களை மகாகவி ஸ்ரீ அரவிந்தரிடம் பயின்றார். காசியில் வடமொழியைப் பயின்ற
மகாகவி, ஸ்ரீ அரவிந்தரிடம் வேத நுட்பங்களை அறிந்து கொண்டார்.. எதையும் இலகுவில் ஈர்த்து
வாங்கித் தக்கவைத்துக் கொள்ளும் வல்லபம் பாரதியாரின் இயல்பு என்பதை நாம் அறிந்து கொள்ள
வேண்டும். அதிக முயற்சியில்லாமல் விரைவிலே வேதநுட்பங்களைத் தாம் பெற்றமை பற்றி மகாகவி
இங்ஙனம் கூறியுள்ளார்.
“வித்தை
நன்கு கல்லாதவன் என்னுளே வேத
நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்
வேத ரிஷிகளின்
கவிதை என்று மகாகவி அருளிய பாடல்கள் ஸ்ரீ அரவிந்தருடைய நட்பால் மகாகவி பெற்றார் என்பது
உண்மை. முனைவர் பிரேமா நந்தகுமார் அவர்கள் இதுபற்றி 40 பக்கங்கள் கொண்ட நீண்ட கட்டுரை
ஆங்கிலத்தில் வரைந்துல்ளார். மிகச் சிறப்பான கட்டுரை இது. .அவரால் இக்கட்டுரை மேலும்
விளக்கம் பெற்று நூல் வடிவம் பெற வேண்டும். தமிழிலும் அவர் இதுவகையில் ஒரு நூல் வரைய
வேண்டும்.
ஸ்ரீஅரவிந்தர்
உபநிடதம், பகவத் கீதை ஆகியவற்றை மொழிபெயர்த்தவர். மகாகவியும் உபநிடதங்கள் சிலவற்றையும்
பகவத் கீதையையும் மொழிபெயர்த்திருக்கிறார்.
ஞானரதம் என்ற
நூலை மகாகவி வரைந்திருக்கிறார். இதில் மகாகவி தத்துவ விசாரம் திறம்படச் செய்திருக்கிறார்.
சந்திரிகையின் கதையில் இது நிகழ்கிறது. இவற்றையெல்லாம் துலக்கி ஒரு நூல் வரையப் படவேண்டும்.
பாரதியார் வரைந்த
சந்திரிகையின் கதை முற்றுப் பெறவில்லை. சந்திரிகை பிறப்பு வரையில் நிகழ்ந்தவை நூறு
பக்கங்கள் வருகின்றன. ஆனால் சந்திரிகையின் சிறுகுழந்தைப் பருவம் நடைபெறும் இடத்தில்
கதை நின்றுவிட்டது. இதை எப்படி பாரதியார் முடித்திருப்பார் என்று அக்கதையை மூவர் எழுத
முனைந்து தோற்றனர். இவருள் புதுமைப்பித்தனும் ஒருவர். மகாகவியின் படைப்புகளில் உண்மையான
தோய்வுள்ள ஒருவர் இக்கதையைத் தொடர்ந்து வரைந்து முடிக்க வேண்டும்.
‘வசனகவிதை’
என்ற தலைப்பில் இன்று குறிக்கப்பெறும் பாரதி படைப்புகள் வசன கவிதையாக எழுதப்படவில்லை.
இவற்றுள் வால்ட் விட்மன், தாகூர் ஆகியொரது தாக்கம் தெளிவாகக் காணப்படுகிறது. இதுவகையில்
பயனுள்ள ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.
பாரதி அகராதி
ஒன்று சமைக்க வேண்டும். மகாக்வி எளிய தமிழைக் கையாண்டார். ஆனால் பற்பல நேரங்களில் அவரது
பாடல் அடிகள் விண்ணோக்கிப் பாய்ந்து வித்தாரம் பயில்கின்றன.. மகாகவியின் சொற்களையும்
சொற்றொடர்களையும் நில நேரங்களில் வாக்கியங்களையும் புரிந்து கொள்வது எளிதன்று.
“கள்ளையும்
தீயையும் சேர்த்து நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்து” என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.
இதன் உண்மைப் பொருள் என்ன?
“கொன்றிடும்
என இனிதாய், இன்பக் கொடுநெருப்பாய் அனற்சுவை அமுதமாய்” என்று குறிப்பிடுறார், இதன்
பொருள் என்ன?
“சீதக் கதிர்மதி
மேற்சென்று பாய்ந்து அங்கத் தேன் உண்ணுவாய் மனமே” என்கிறார், இதன் பொருள் என்ன?
“சீர் அவிரும்
சுடர் மீனொடு வானத்துத் திங்களையும் சமைத்தே ஓர் அழகாக விழுங்கிடல்” என்கிறார், இதன்
பொருளென்ன?
இப்படிப் பலப்பல
காட்டுகள் காட்டலாம். சொற்களில் சிலவற்றை எடுத்துக் கொள்ளுவோம். காணிநிலம் வேண்டும்
என்று அவர் பாடியுள்ளார். காணி நிலம் என்றால் எட்டு மனை. மனை ஒன்றுக்கு 2400 ச.அடி
என்று சிலர் கணக்கிடுகிறார்கள். இது தவறு. காணி என்றால் உரிமை என்று பொருள். மஞ்சட்
காணி, காணியாட்சி, குடிக்காணி பாத்தியம் என்றெல்லாம் நாட்டு வழக்கில் வருகின்றன.
“அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி” என்று மகாகவி பாடுகிறார். இங்கு அம்பு என்பது கணை, பாணம் என்று பொருள்
தராது. அம்பு என்றால் தண்ணீர் என்று பொருள்.
அம்புஜம் என்பது நீரில் தோன்றும் தாமரையைக் குறிக்கும். “அம்பிலே சிலையை நாட்டி” என்று
தொடங்கும் பழம்பாடல் கம்பரது பெருமையைப் போற்றும் பாடல். சிலை என்பது மலை. அம்பு என்பது
நீர் நிரம்பிய கடல். பாற்கடலை மந்தர மலையால் கடைந்தது இவ்வடியில் சுட்டப்படுகிறது.
அம்புக்கும் தீக்கும் என்கிறபோது நீருக்கும் நெருப்புக்கும் என்று பொருள்படும். நீரும்
நெருப்பும் கூறப்பட்டுவிட்டபடியால், ஆகாயம், காற்று, பூமி என்றுள்ள பூதங்களையும் உபலட்சணத்தால்
கொள்ள வேண்டும்.
“ஐயத்திலும்
துரிதத்திலும் சிந்தி அழிவது என்னே” என்கிறார் மகாகவி. திரிதம் என்பது விரைவைக் குறிக்கும்,
என்ற அளவிலே நிறைவு கொள்ளாமல், திரிதம் என்பது பாவம் என்றும் பொருள்படும் என்பதை உணர
வேண்டும். ‘துரிதக் க்ஷேத்வாரா’ என்று சங்கல்ப மந்திரித்தில் வரும்.
அளவை என்ற சொல் பிரமாண சாத்திரத்தைக்
குறிக்கும். பலப்பல அளவை நூல்கள் தமிழில் பண்டு இருந்தன. இவ்விவரம் அறியாத பேராசிரியர்
ஒருவர் “யான் சொலும் கவிதை என் மதி அளவை இவற்றினை” என்று வரும் மகாகவியின் சொற்களை
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தலைப்பட்டு மதியளவை என்பதை extent of intellect என்று
தவறாக மொழி பெயர்த்திருக்கிறார்.
சீன தேசத்து
ஞானியான கன்பூசியஸ் (Confucius) அருளிய மார்க்கத்தை
மகாக்வி கன்பூசிமதம் என்று குறிப்பிடுகிறார். சீன தேசத்து உச்சரிப்பையே (கன்பூஜி) மகாகவி
தமிழிலும் தந்திருக்கிறார். இதை விளங்கிக் கொள்ள முடியாத மொழிபெயர்ப்பாளர், கன்பூஜி
மடம் என்பதைக் கண்ணாமூச்சி விளையாட்டு என்று மொழிபெயர்த்திருக்கிறார்.
தமிழ்ப் பல்கலைக்
கழகத்தின் முதன் துணைவேந்தர் டாக்டர் வ.அய்.சுப்ரமணியம் அவ்ர்கள் பாரதியார் கையாண்ட
சொற்களில் 82 சதவிகிதம் செவ்விய தமிழ்ச்சொற்கள் என்று அறிவித்திருக்கிறார். எடுத்துக்
காட்டுக்கு ஒன்றைக் காண்போம். பாரத மாதா தாமே பணித்தன்று என்று பாரதியார் வேல்ஸ் நகர
இளவரசருக்குக் கூறிய வரவேற்புப் பாடலின் தலைப்பில் கூறியிருக்கிறார். இதில் இரண்டு
செய்திகள் நாம் கற்க வேண்டியவை உள. பாரத மாதா தானே என்று சொல்லாமல், பாரத மாதா தாமே
என்று மகாகவி மரியாதைப் பன்மையில் பேசியது நினைவில் கொள்ளத் தக்கது. பணித்தன்று என்று
சொன்னால் பணித்தது என்று பொருள்படும்.
வல்வில் ஓரியைக் கழைதின் யானையார் பாடிய
பாடல் இப்படித் தொடங்குகிறது.
“ஈயென இரத்தல் இழிந்தன்று அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று கொள் எனக்
கொடுத்தல் உயர்ந்தன்று அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று”
இங்கு இழிந்தன்று
என்று வரும் சொல்லிற்குப் பொருள் இழிந்தது என்பதாம். அதுபோன்றே உயர்ந்தன்று என்ற சொல்லிற்குப்
பொருள் உயர்ந்தது என்பதே.
மகாகவி பாரத
மாதா தாமே பணித்தன்று என்று கூறும்போது பணித்தன்று என்பதற்கு பணித்தது என்றே பொருள்
கொள்ள வேண்டும். இதை விபரீதமாகப் புரிந்து கொண்டு அன்பர் ஒருவர் பணித்தது என்று என்று
பொருள் கொண்டு அதன் அடிப்படையில் பல பக்கங்கள் தவறான விளக்கம் அளித்திருக்கிறார்.
பாரதியாரின்
சில வாக்கியங்களுக்கு என்ன பொருள் என்று நமக்கு விளங்கவில்லை. “அல்லினுக்குப் பெருஞ்சுடர்”
என்றும் “கல்லினுக்குள் அறிவொளி” என்றும் “புல்லினில் வைரப்படை” என்றும் பாரதியார்
எவற்றைக் குறிக்கின்றார் என்பது தெளிவு படுத்தப்படல் வேண்டும் இப்படிப்பட்ட சொற்றொடர்களுக்கும்,
வாக்கியங்களுக்கும் பட்டியல் போட்டு ஆதாரத்தோடு விளக்கம் சமைத்தல் வேண்டும்.
சொற்களுக்கும்
“காரண, தூல, சூக்கும” சரீரங்கள் உண்டு என்றும் அம்மூன்று நிலைகளிலும் மகாகவியின் சொற்கள்
பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் நம உணர்ந்து கொளல் வேண்டும். சுருக்கமாகச் சொன்னால்,
சொல்லெடுத்துச் சூக்குமத்தில் விட்டெறிந்து சுட்டபழம் உதிர்த்தவர் நம் மகாகவி. ஆக்வே
மகாக்வியின் படைப்புகளுக்கான சொற்பொருள் அகராதி, சொறொபொருள் அடைவு, பெயர்ச்சொல் அகராதி,
அடைவு ஆகியவை உருவக்கப்பட வேண்டும். இது வகையில் ஷேக்ஸ்பியர், மில்டன்,போன்ற மேனாட்டுப்
புலவர்களைப் புரிந்து கொள்வதற்கென்று சமைக்கப்பட்ட அகராதிகள், அடைவுகள் ஆகிய்வற்றையும்
கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
ஞானிகள், விஞ்ஞானிகள்,
அருளாளர்கள், கவிகள், கட்டுரிஅயாளர்கள், சிறுகதை நாவல் ஆசிரியர்கள், அரசியல்வாதிகள்
வரலாற்றில் இடம் பெற்றவர்கள், இதிகாச, புராண பாத்திரங்கள், நண்பர்கள் என்றுள்ள பல்லோரைப்
பற்றியும் மகாகவி செய்திகள் தந்திருக்கிறார். இதுவகையில் ஒரு பெயர்ச்சொல் அகராதியை
உருவாக்கினால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அப்பட்டியலி, இடம் பெறுவர். வெறும் பட்டியலாக
அமைக்காது, அவரவர்களைப் பற்றிய முக்கியமான தகவல்களையும் உருவாக்கித் தருதல் மிகப் பயனுள்ள
பணியாகும்.
பாரதியார் சுதேசமித்திரன்,
சக்ரவர்த்தினி, இந்தியா, இந்தியா புதுவை, பாலபாரதி என்ற ஆங்கில வாராந்தரி, பாலபாரதா
அல்லது யங் இந்தியா என்ற பெயர் மாற்றம் பெற்ற ஆங்கிலப் பத்திரிகை, கர்மயோகி (மாத இதழ்)
சூர்யோதயம் (மாத இதழ்) தர்மம் (மாத இதழ்) சுப்ரமணிய சிவா தோற்றுவித்த ஞானபானு, சென்னையில்
வெளிவந்த தி இந்து, அரவிந்தரின் ஆர்யா, அன்னிபெசண்ட் அம்மையாரின் நியு இந்தியா, காமன்வீல்,
தி மெட்ராஸ் ஸ்டாண்டர்ட் என்ற ஆங்கில இதழ் முதலிய பத்திரிகைகளுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
சித்ராவளி என்ற பத்திரிகையை வெளியிடப்போவதாக அறிவித்தார். ஆனால் அப்படி பத்திரிகை வெளிவரவில்லை.
இதே போல் அமிர்தம் என்ற பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்க அவர் திட்டமிட்டார். அம்முயற்சி
கைகூடவில்லை.
சுதேசமித்திரன்
காரியாலயமே கதைகளுக்குப் பெரும் பங்கு அளித்து நடத்தி வந்த கதாரத்நாகரம் என்ற மாதப்
பத்திரிகையிலும் பாரதியார் கதைகள் இடம் பெற்றன. இவை தவிர திரு வி.க. அவர்களின் நவசக்தி
ஆண்டு மலரிலும், காரைக்குடியினின்றும் பிரசுரமான தன வைசிய ஊழியன் என்ற வாரப் பத்திரிகையிலும்
சுப்ரமணிய சிவாவின் பிரபஞ்சமித்திரன்,இந்திய தேசாந்திர் ஆகிய பத்திரிகைகளிலும் பாரதியாரின்
பாடல்களும் கட்டுரைகளும் வெளிவந்தன.
இந்த
பாடத்தைத் தயாரிக்க உதவிய நூலாசிரியர்கள் அனைவருக்கும் நமது இதயபூர்வமான நன்றியறிதலை
உரித்தாக்குகிறோம். பத்திரிகைத் துறையில் பிற்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாகவும்,
இன்று கடைப்பிடிக்கப்படும் பல தொழில்முறை உத்திகளுக்கு முன்னோடியாகவும் பாரதி விளங்கியிருக்கிறார்.
அந்த மகானுடைய பத்திரிகைத் துறைப் பணி வருங்கால சந்ததியினருக்கு ஊக்கமும் உற்சாகமும்
கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்க பத்திரிகையாளர் பாரதி!
வினாக்கள்:
1.
பாரதி மதுரை
சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்துவிட்டு சென்னையில் “சுதேசமித்திரனில்” சேர்ந்தது
எப்படி?
2.
பாரதியின்
“சக்கரவர்த்தினி” பத்திரிகையில் பணியாற்றியது பற்றிய விவரங்ளைக் கூறுக.
3.
“இந்தியா” பத்திரிகையின்
முதலாளியின் பெயரும், அந்த பத்திரிகை பாரதியைப் பெரிதும் வெளிக்கொணர காரணமாயிருந்தது
பற்றியும் கூறுக.
4.
பாரதி ஆசிரியராக
இருந்து நடத்திய இதர பத்திரிகைகளும், அவற்றின் சிறப்பம்சங்களும், கிடைக்காமல் இருந்த
“விஜயா” இதழ்கள் நமக்குக் கிடைத்த விவரங்களையும் விளக்குக.
5.
பாரதி கடலூரில்
கைதாகி கடையம் சென்று மீண்டும் சென்னைக்கு வந்து “சுதேசமித்திரனில்” பணியாற்றியபோது
அவருக்கு இருந்த எழுத்து சுதந்திரம் பற்றி கூறுக.
6.
பாரதி ஒரு பத்திரிகையாளர்
என்பதை விளக்க, அவர் பணியாற்றிய பத்திரிகைகள், அவர் எழுதிய இதழ்கள், தி இந்துவில் அவருடைய
ஆங்கில எழுத்துக்கள் பற்றி விரிவான செய்திகளைத் தருக.
No comments:
Post a Comment