பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, February 17, 2021

பாரதியை முழுமையாகப் புரிந்து கொள்வோம்.

                  

            இந்த ஆண்டு மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு. 1921 செப்டம்பர் 11இல் காலமான பாரதியாருக்கு 2021 செப்டம்பரில் நினைவு நூற்றாண்டு நிறைவு பெறுகிறது. பாரதியார் காலத்தில் அவரை நன்கு புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. அவர் மறைந்து பல ஆன்டுகளுக்குப் பிறகுதான் அவர் வரலாறும் வெளிவரத் தொடங்கியது. அவர் ஒரு தெய்விகப் புலவர் என்பதும் மக்களுக்குப் புரியத் தொடங்கியது. அவர் வாழ்ந்த காலத்தில் அவரைப் போற்றவோ,, பாராட்டவோ, அவர் பெருமை உணர்ந்து அவருக்குத் தகுந்த மரியாதை அளிக்கவோ, அதிகம் பேர் இல்லை என்பது வருத்தத்துக்குரியதே.

            இன்று பாரதியைத் தெரியாதவர்களே தமிழகத்தில் இருக்க முடியாது என்கிற அளவில் அவர் புகழ் பரவிக் கிடக்கிறது.. அவர் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பேசாத சொற்பொழிவாளர்களே கிடையாது என்கிற நிலைமை வந்து விட்டது. பாரதியின் நினைவு நூற்றாண்டாகிய இப்போது அவருக்கு ஆங்காங்கே விழாக்கள் நடைபெற்று வருகின்றன. எட்டயபுரத்தில் நடைபெறும் விழா இவ்வாண்டு சூழ்நிலையின் காரணமாக நடைபெறாமல் போனாலும், , சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள பாரதி நினைவு இல்லத்தில் பாரதி விழா பத்து நாட்கள் ஊடகங்கள் வாயிலாக களைகட்டியிருக்கிறது..

            இந்தச் சூழ்நிலையில் நம் மனங்களில் எழுகின்ற ஒரு கேள்வி, அது பாரதியாரை இப்போதாவது நாம் பரிபூரணமாகப் புரிந்து கொண்டு விட்டோமா என்பதுதான் அது. நெல்லையில் தன் பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்ட பாரதி காசியில் ஜெயநாராயணா கல்லூரி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற செய்தி நமக்குக் கிடைக்கிறது. அது தவிர அவர் தமிழை முறைப்படி எந்த ஆசானிடமும் கற்றதாகத் தெரியவில்லை. வடமொழியில் நல்ல பயிற்சி அவருக்குக் காசி நகரில் கிடைத்திருக்கலாம், எனினும் அவர் சம்ஸ்கிருத மொழியிலும் நல்ல புலமை பெற்றிருந்திருக்கிறார். சந்திரிகையின் கதையில் வீரேசலிங்கம் பந்துலு கதாபாத்திரம் தெலுங்கு பேசுவதாக அமைந்த இடங்களில் தெலுங்கில் உரையாடலைத் தந்திருக்கிறார், அந்த அளவுக்குத் தெலுங்கு மொழிப் பயிற்சி இருந்திருக்கிறது.. இந்தி மொழி நிச்சயம் தெரிந்திருக்கிறது என்பதற்கு அவரது காசி வாசமே சான்று. புதுச்சேரியில் இருந்த காலத்தில் பிரெஞ்சு மொழி ஞானமும் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இவை தவிர வேறு பல மொழிகளிலும் அவருக்கு நல்ல பழக்கம் இருந்ததால்தானே அவர் “நாமறிந்த மொழிகளிலே” என்று சொல்ல முடிகிறது.

            அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் மூன்றே மாதங்கள் மதுரையில் ஆசிரியராகப் பணியாற்றிய பின் சென்னை மாநகருக்கு வந்து “சுதேசமித்திரன்”, “சக்ரவர்த்தினி”, “இந்தியா” ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றிய பொதும் அவர் வேறு எந்தெந்த மொழிகளைக் கற்றார் என்பதும் தெரியவில்லை. ஆனால் அவர் எழுத்துக்கள் அவ்ருடைய மேதமையையும், பன்மொழிப் புலமையையும் எடுத்துக் காட்டுவதாகவும்,, உலக வரலாற்றில் ஆழங்கால் பட்டவராகவும், உலக நடப்புகளை அவ்வப்போது எடுத்துக்காட்டி எழுதியிருப்பதிலிருந்து தெரிய வருகிறது. அவர் இறக்கும் தருவாயில் கூட ஜன்னி கண்டு இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கூட ஆப்கானிஸ்தான் மன்னர் அமானுல்லா கானைப் பற்றிய வியாசம் எழுதவேண்டுமென்று படுக்கையிலிருந்து எழுந்து கொண்ட வரலாறு நம் கண்களில் நீரை வரவழைக்கிறது.

            பாரதிக்கு தமிழில் மிக உயர்ந்த புலமை எப்படி எங்கிருந்து யாரால் கிடைத்தது என்பது எவரும் அறியாதவொன்று. சிலவிடங்களில் பாரதி பயன்படுத்தியிருக்கிற சொற்களின் சரியான பொருளறியாமல் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் உண்டு. ஆனால் அவருடைய எழுத்துக்களை ஆழமாகப் பார்க்கும் போது அவருடைய ஆழ்ந்த புலமை வெளிப்படுகிறது. சில சொற்பிரயோகங்கள் நம்மை பிரமிப்படைய வைக்கிறது, இவர் எப்போது எங்கே இவற்றைக் கற்றுக் கொண்டார் என்று.. அப்படிச் சில செய்திகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

            முதுமுனைவர் தஞ்சை டி.என்.ராமச்சந்திரன் அவர்கள் பாரதியியலில் தலைசிறந்த ஆய்வாளர். அவர் பாரதி பற்றி எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகள் குறித்து ஒரு நூலை பாரதி நூற்றாண்டு சமயத்தில் எழுதியிருக்கிறார். அதில் அவர் சொல்லும் கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்தக் கூடியவை, விடை காண வேன்டியவைகள்.

            பாரதி தமிழை மட்டுமல்ல, புலமை மிக்க அவருடைய ஆங்கில எழுத்துக்கள், சம்ஸ்கிருத மொழியில் அவருடைய பாண்டித்தியம் ஆகியவையும் வியப்பளிக்கக் கூடியவை. வேதங்களை எங்கு எவரிடம் கற்றார் என்பது தெரியவில்லை, ஆனால் அவர் சொல்லும் வேதங்களின் சூட்சுமங்கள் வியக்க வைக்கின்றன. அவர் புதுச்சேரியில் இருந்த சமயம், அவர் அரவிந்தரிடம் ரிக் வேதத்தின் பல ஸ்லோகங்களைப் பாடம் கேட்டார் என்ற தகவல் கிடைக்கிறது. அதன் தாக்கம் தானோ அவருடைய “வசன கவிதை” என்ற கருத்து கூட விரவிக் கிடக்கிறது. எதையும் விரைந்து கற்கக் கூடிய கற்பூர புத்தி அவருக்கு இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. அரவிந்தரிடம் அவர் ரிக் வேதம் கற்ற விவரத்தை

“வித்தை நன்கு கல்லாதவன் என்னுளே                                                                         வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்”

எனும் வரிகளில் குறிப்பிடுவதாக முதுமுனைவர் டி.என்.ஆர். அவர்கள் குறிப்பிடுகிறார். அரவிந்தர் பகவத் கீதை, உபநிடதம் ஆகியவைகளை மொழியாக்கம் செய்திருப்பதைப் போலவே பாரதியும் செய்திருக்கிறார்.

            பாரதியாருடைய “ஞானரதம்” அவருடைய தத்துவக் கருத்துக்களை விளக்குவதாக அமைந்திருக்கிறது. அவருடைய “வசன கவிதை” யாப்பிலக்கணத்துக்கு உட்பட்ட கவிதைகளாக அல்லாமல் புதிய வசன நடையில் அமைந்திருக்கிறது. இதில் பாரதி புகுத்தியிருக்கும் கருத்துக்களும், வசன அமைப்புகளும் தமிழுக்குப் புதிது. அரவிந்தரின் ரிக் வேத விளக்கங்களே பாரதி வசன கவிதை எழுதத் தூண்டுதலாக இருந்தது என்கிற கருத்தும் உண்டு. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் சொல்லப்படும் கருத்து ரிக் வேதம் இந்திரனை முழுமுதல் கடவுளாகக் கருதிய காலத்தில் உருவான ஆதி வேதம். அதில் இயற்கையின் அம்சங்களே வழிபடும் தெய்வங்கள், அதைத்தான் வசன கவிதையில் பாரதி ஞாயிறு, சக்தி, காற்று, கடல் என்ற தலைப்பில் எழுதுகிறார் என்பதால் இந்த வசன கவிதை அரவிந்தரிடம் கற்ற பாடங்களின் விளைவு என எண்ணத் தோன்றுகிறது. இது பற்றி பாரதி ஆர்வலர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டால் அறிந்து கொள்ள முடியும்.

            பாரதியாரின் உரைநடை எளிய சொற்களால் அமைந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் அவர் சில இடங்களில் பயன்படுத்தும் சொற்கள் நேரடியாகப் பொருள் கொள்ள முடியாத சொற்களாக அமைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட சில வரிகளைப் பார்க்கலாம்.

            குயில் பாட்டில் “இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்தது போல், மின்னற் சுவைதான் மெலிதாய், மிகவினிதாய் வந்து பரவுதல் போல்” என்கிறார். காற்றில் இனிமை பொருந்திய அமுதினைக் கலந்து அதன் மின்னல் சுவை, மெலிதாய் மிக இனிதாய் வந்து பரவுதல் என்பதை எப்படிப் பொருள் கொள்வது? மின்னல் சுவை என்பது என்ன? இன்னமுதை காற்றில் கலப்பது எங்ஙனம்? மின்னல் சுவை என்பது எப்படி இருக்கும்? இவைகளை நாம் கற்பனையில் எண்ணிப் பார்க்கும் போது அது இயல்பில் நடக்க முடியாதவை என்றாலும், மானசீகமாக அது இனிமையானவை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.  .

            அதே பாடலில் “நாதக் கனலினிலே நம்முயிரைப் போக்கோமோ?” என்கிறார். நாதம் என்பது கனலாக உருவகித்து,, அதில் நம் உயிர் கலப்பது என்றால், இதன் பொருளையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி, மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து, விண்ணை வெளியாக்கி, விந்தைசெயுஞ் சோதியினை” என்று வரும் வரிகளின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

காணி நிலம் வேண்டும், பராசக்தி காணி நிலம் வேண்டும்” என்று பாடுமிடத்தில் இங்கு “காணி நிலம்” என்பது தனக்கே உரிமையுள்ள நிலம் என்று பொருள் கொள்ள வேண்டும், காணி என்பது நிலத்தின் அளவல்ல என்பதையும் முதுமுனைவர் டி.என்.ஆர்.விளக்குகிறார். பாரதியின் வாழ்நாளில் அவர் விரும்பிய காணி நிலம் அவருக்குக் கிடைக்கவில்லை ஆயினும் தற்போது கோவையில் அவர் பெயரால் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் “காணிநிலம்” என்ற பெயரில் பாரதி விரும்பியபடி நிலமும், அதில் கிணறும் சுற்றிலும் தென்னை மரங்களும் கொண்ட பகுதி நவீன தேவைகளான நூலகம், மண்டபம், பூங்கா என்ற பல வசதிகளுடன் உருவக்க திட்டமிட்டிருப்பது பாரதியின் கனவை நனவாக்கக் கூடியவைகளே.

“ஓம் சக்தி” என்ற பாடல் “நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்” என்று தொடங்குகின்ற பாடலில் வரும் வரிகள்: “அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி”. இந்த பாடலுக்கு விளக்கம் சொல்லி ஒரு பத்திரிகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரபலமானவர் கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் இங்கு சொல்லப்படும் “அம்பு” எனும் சொல்லுக்கு, வில்லில் பூட்டும் அம்புக்கோ, அல்லது தீயினுக்கோ என்று பொருள்பட எழுதியிருந்தார். ஆனால் இங்கு அம்பு எனும் சொல் நீரைக் குறிக்கும். பேச்சு வழக்கில் நீரும் நெருப்பும் என்றுதான் சொல்வார்கள், அதைப் போல இங்கு அம்புக்கும் தீக்கும் என்றால் நீரையும் நெருப்பையும் குறிப்பது என்று பொருள் கொள்ள வேண்டும். அம்புஜம் எனும் சொல்லே நீரில் விளையும் தாமரை என்று பொருள்படுகிறது.

பாரதியின் வசனகவிதை எனும் தலைப்பில் காணப்படும் பகுதி அதிகம் பேசப்படுவதில்லை.. இதில் முதல் பகுதியாக “காட்சி” எனும் தலைப்பில் முதற்கிளை “இன்பம்” என்றும், இரண்டாம் கிளை “புகழ்” என்ற தலைப்பில், ஞாயிறு, சக்தி, காற்று, கடல் ஆகிய தலைப்புகளிலும், தொடர்ந்து “ஜகத் சித்திரம்”, “விடுதலை”, எனும் தலைப்பில் சிறு நாடகங்களும் எழுதி நிறைவில் நிலவுப் பாட்டு என்றொரு பாடலையும் எழுதியிருக்கிறார். பாரதியைப் பயின்றவர்கள் இந்தப் பகுதியை அதிகம் எடுத்துக் கையாண்டதாகத் தெரியவில்லை. இதில் பாரதி சொல்லுகின்ற கருத்துக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

“காட்சி” என்ற தலைப்பில் முதற்கிளையாக “இன்பம்” எனும் தலைப்பை எடுத்துக் கொண்டு சொல்கிறார், இவ்வுலகம் இனியது, இதில் உள்ள வான் இனிமையுடைத்து; காற்று இனிது, தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது, ஞாயிறு நன்று, திங்களும் நன்று என்று தொடங்கி இறைவன் படைப்பில் இந்த உலகத்தின் ஓவ்வொன்றும் இனிமையுடையது என்பதை வலியுறுத்துகிறார். இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தும் இனியது என்பதை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டுச் சொல்கிறார். உலகில் மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது, கடல் இனிது, மலை இனிது, காடு நன்று, ஆறுகள் இனியன, உலோகமும், மரமும், செடியும், கொடியும் மலரும், காயும் கனியும் இனியன. பறவைகள், ஊர்வன, விலங்கள், நீர்வாழ்வன, இவற்றோடு மனிதரும் மிகவும் இனியர் என்று சொல்லி, ஆண் நன்று, பெண் இனிது, குழந்தை இன்பம், இளமை இனிது, முதுமை நன்று, உயிர் நன்று காதல் இனிது என்று முடிக்கிறார்.

தெய்வம் என்பது எது? எனும் வினாவுக்கு அவர் சொல்லுகின்ற விடை “மனம் தெய்வம், சித்தம் தெய்வம், உயிர் தெய்வம், காடு, மலை, அருவி, ஆறு, கடல், நிலம் நீர், காற்று, தீ வான், ஞாயிறு, திங்கள் வானத்துச் சுடர்கள் இவைகள் எல்லாம் தெய்வங்கள் என்கிறார்.

இவ்வுலகிலுள்ள எல்லா உயிரும் இன்பம் எய்துக, எல்லா உடலும் நோய் தீர்க, எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க, “தான” வாழ்க என்று சொல்லி, “தெய்வங்களை வாழ்த்தி, தெய்வங்களும் இன்பமெய்துக என்று வாழ்த்துகிறார்.

“ஞாயிறு” என்கிற தலைப்பில் “ஒளி தருவது யாது? தீராத இளமை உடையது யாது? வெய்யவன் யாவன்? இன்பம் எவனுடையது? மழை எவன் தருகின்றான்? கண் எவனுடையது? உயிர் எவன் தருகின்றான், புகழ் எவனுக்கு உரியது? அறிவு எதுபோல் சுடரும்? அறிவுத் தெய்வத்தின் கோயில் எது? என்று கேட்டு விடையாக “ஞாயிறு” என்று சொல்லி, அது நன்று என்று நிறைவு செய்கிறார்.

அந்த ஞாயிறு தருவது ஒளி. அந்த ஒளியைப் பார்த்து கேட்கிறார், “ஒளியே, நீ யார்?” என்று. “நீ ஞாயிற்றின் மகளா? அன்று நீ ஞாயிற்றின் உயிர், அதன் தெய்வம். ஞாயிற்றிடத்தே நின்னைத்தான் புகழ்கின்றோம், ஞாயிற்ற்ன் வடிவம் உடல், நீ உயிர், ஒளியே, நீ எப்போது தோன்றினாய், நின்னை யாவர் படைத்தனர்? ஒளியே நீ யார், உனது இயல்பு யாது, நீ அறிவின் மகள் போலும், அறிவுதான் தூங்கிக் கிடக்கும், அதன் தெளிவு நீ போலும், ஒளியே நினக்கு வான்வெளி எத்தனை நாட் பழக்கம்? உனக்கு அதனிடத்தே இவ்வகைப்பட்ட அன்பு யாது பற்றியது? அதனுடன் நீ எப்படி இரண்டறக் கலக்கிறாய்? உங்களையெல்லாம் படைத்தவள் வித்தைக்காரி, அவள் மோகினி, மாயக்காரி, அவளைத் தொழுகிறோம், ஒளியே வாழ்க!”

ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு? வெம்மையேற ஒளி தோன்றும். வெம்மையைத் தொழுகின்றோம். வெம்மை ஒளியின் தாய், ஒளியின் முன்னுருவம். வெம்மையே நீ தீ. தீதான் வரத் தெய்வம். தீதான் ஞாயிறு. தீயின் இயல்பே ஒளி. தீ எரிக. அதனிடத்தே நெய் பொழிகின்றொம். தீ எரிக. அதனிடத்தே தசை பொழிகின்றொம், தீ எரிக. அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம், தீ எரிக. அதற்கு வேள்வி செய்கின்றோம், தீ எரிக. தீயில் எத்தனை வகை? அறத்தீ, அறிவுத்தீ, உயிர்த்தீ, விரதத்தீ, வேள்வித்தீ, சினத்தீ, பகைமைத் தீ, கொடுமைத் தீ. இவை அனைத்தையும் தொழுகின்றோம். தீயே நீ எமது உயிரின் தோழன் உன்னை வாழ்த்துகின்றோம்.

மழை பெய்கின்றது, காற்றடிக்கின்றது, இடி குமுறுகின்றது, மின்னல் வெட்டுகின்றது, புலவர்களே! மின்னலைப் பாடுவோம் வாருங்கள். மின்னல் ஒளித் தெய்வத்தின் ஒரு தோற்றம். மின்னலைத் தொழுகின்றோம். நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக. நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்ந்திடுக. நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக, நம்து பாட்டு மின்னலுடைத்தாகுக. நமது வாக்கு மின்போல் அடித்திடுக, மின் மெல்யதைக் கொல்லும், வலியதிலே வலிமை சேர்க்கும்.

குறிப்பாக “காற்று” என்கிற பகுதியில் அவர் சொல்லும் விளக்கம் புதுமையானவை. அவர் சொல்கிறார் “அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம். கூரையிலிருந்து போடும் கல் தரையில் விழுகின்றது. அதன் சலனம் எதனால் நிகழ்வது? உயிருடைமையால். ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது? உயிர் நிலையில். ஊமையாக இருந்த காற்று ஊதத் தொடங்கிவிட்டதே! அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது? உயிர் நேரிட்டிருக்கிறது.”. காற்றின் செயலால் நிகழும் இந்த அற்புதங்களை மிக துல்லியமாகக் கணித்துச் சொல்கின்ற விளக்கங்கள் புதுமையானவை.

உயிரற்ற பொருட்களும் இயங்குவதற்கு ஒரு சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தியைப் பற்றி அவர் சொல்லும் விளக்கம் அறிந்து கொள்ள வேன்டியவை. சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒரு குமிழியாம். சக்தி பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர். சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது. அசையாமையில் அசைவு காட்டுவது. சக்தி அடிப்பது, துரத்துவது, கட்டுவது, பிணைப்பது, கலப்பது, தறுவது, புடைப்பது, வீசுவது, சுழற்றுவது, கட்டுவது, சிதறடிப்பது, தூற்றுவது, ஊடிவிடுவது, நிறுத்திவது, ஓட்டுவது, ஒன்றாக்குவது, பலவாக்குவது, சக்தி குளிர் செய்வது, அனல் தருவது, சக்தி உணர்வது.

“மண்ணிலே வேலி போடலாம், வானத்திலே வேலி போடலாமா? என்றான் ராமகிருஷ்ண முனி. ஜடத்தைக் கட்டலாம், சக்தியைக் கட்டலாமா? உடலைக் கட்டலாம், உயிரைக் கட்டலாமா? உயிரைக் கட்டு, உள்லத்தைக் கட்டலாம். “மண்ணிலெ வேலி போடலாம், வானத்திலே வேலி போடலாமா” போடலாம். மண்ணிலும் வானந்தானே நிரம்பி இருக்கிறது. மண்ணைக் கட்டினால் அதிலுள்ள வானத்தைக் கட்டியதாகாதா? உடலைக் கட்டு, உயிரைக் கட்டலாம், உயிரைக் கட்டு, உள்ளத்தைக் கட்டலாம், உள்லத்தைக் கட்டு, சக்தியைக் கட்டலாம்.

இப்போது என்னுள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது. இது எனக்குப் போதும், “சென்றது கருத மாட்டேன். நாளைச் சேர்வது நினைக்க மாட்டேன்.

“ஊமையாம இருந்த காற்று ஊதத் தொடங்கிவிட்டதே! அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது? உயிர் நேரிட்டிருக்கிறது என்று சொல்லி தொடர்ந்து காற்றின் சிறப்பினைச் சொல்லும்போது காற்றாடி, உயிர் உள்ளது, நீராவி, வண்டி உயிருள்ளது, யந்திரங்கள் உயிருடையன என்று ஜடப் பொருள்களும் சக்தியின் உருவமான காற்று எப்படி இயக்குகின்றது என்பதைச் சொல்வது கவிதை உத்தியின் ஒரு புதுமை.

காற்றுதான் உயிர்களுக்கெல்லாம் மூலாதாரம். அவர் சொல்கிறார், “காற்றைப் புகழ நம்மால் முடியாது. அதன் புகழ் தீராது. அதை ரிஷிகள் “ப்ரத்யட்சம் ப்ரஹ்மம்” என்று போற்றுகிறார்கள். பிராணவாயுவைத் தொழுகின்றோம், அவன் நம்மைக் காத்திடுக. அபாநனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க. வியாநனைத் தொழுகின்றொம் அவன் நம்மைக் காக்க. உதாநனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க. சமாநனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க, உயிரை வணங்குகின்றோம், உயிர் வாழ்க” என்று முடிக்கிறார்.

அந்த உயிரின் பெருமை என்ன தெரியுமா? அதுதான் கண்கண்ட தெய்வம். எல்லா விதிகளும் அதனால் அமைவன,எல்லா விதிகளும் அதனால் அழிவன. உயிரே! நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம் என்று பஞ்ச பூதங்களின் மூலாதாரம் உயிர் என்பதை விளக்குவதெல்லாம் படித்து அறிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகளாகும்.

இதனைத்தான் சந்தியாவந்தனம் என்று தினமும் காலை, நண்பகல், மாலை ஆகிய வேளைகளில் அந்தணர்கள் செய்யும் கடமையில் மந்திரமாக “பிராணாயஸ் ஸ்வாகா, அபாநாய ஸ்வாகா, வியாநாய ஸ்வாஹ, உதநாய ஸ்வாஹா, சமாநாயா ஸ்வாகா” என்று சொல்லி நீரில் அர்க்கியம் விட்டு நாள்தோறும் வணங்கும் வழக்கம் இருந்து வருகிறது.

இயற்கை நமக்கு எந்தெந்த வழிகளிலெல்லாம் உயிர் கொடுத்து நம்மை வழிநடத்துகிறது என்பதை உணர்ந்து அந்த இயற்கையின் அங்கமான பஞ்ச பூதங்களை நாள்தோறும் வணங்குவது ஏதோ பொழுதுபோக்கு என்று கருதாமல், அதன் உட்பொருளை, தத்துவக் குறிப்பை புரிந்து கொண்டு செயல்பட பாரதிக்கு அந்த வயதில் எப்படித் தோன்றியது? இதனையும் நாம் சிந்திக்க வேண்டும்.

பாரதி தான் பெரிதும் மதித்துப் போற்றிய பெரியோர்கள் சிலரைப் பற்றிய பாடல்களைப் பாடியிருக்கிறார். அதில் சகோதரி நிவேதிதா தேவி முக்கியமானவர். பாரதியார் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சமயம் அங்கு சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார். அப்போது அவர் பாரதியிடம் அவர் மனைவியை மாநாட்டுக்கு அழைத்து வரவில்லையா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பாரதி பெண்களை இதுபோன்ற அரசியல் விஷயங்களில் நாங்கள் ஈடுபடுத்துவதில்லை என்று சொன்னதும் சகொதரி நிவேதிதா இறைவன் படைத்த உங்கள் இரு கண்களில் ஒன்றைக் குருடாக்கிக் கொண்டுதான் பார்ப்பீர்க்களா என்று கேட்டதும் அதிர்ந்து போனார் பாரதி. அதுமுதல் அவரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டதுடன் பெண் விடுதலை பற்றி பாரதி பெரிதும் பாடுபட்டார், எழுதினார். அந்த நிவேதிதா பற்றி பாரதி எழுதியுள்ள பாடல் சிறியதுதான் என்றாலும், தான் குருவாக ஏற்றுக் கொண்டவரைப் பற்றிய பாடல் என்பதால் அது முக்கியத்துவம் பெறுகிறது. அந்தப் பாடல்:--

“அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய், அடியேன் நெஞ்சில்                                                                                                                                         இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம் பயிர்க்கு மழையாய் இங்குப்           பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும் பொருளாய் புன்மைத் தாதச்       சுருளுக்கு நெருப்பாகி விளங்கியதாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.”

            பாரதியார் போற்றி வழிபட்டுப் பாடிய மற்றொருவர் அபேதாநந்தா. சுவாமி அபேதாநந்தர் என்பவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடராக விளங்கியவர். சுவாமி விவேகானந்தரைப் போல இவரும் இன்னொரு துறவி. இவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் பக்தி கொண்டு துறவியாகி அமெரிக்க நாட்டில் சென்று சேவைகள் புரிந்து வந்தார். 1906ஆம் ஆணில் இவர் இலங்கை வழியாக தூத்துக்குடிக்கு வந்து இறங்கினார். அப்போது அவரை கப்பலோட்டிய தமிழன் என்றழைக்கப்படும் வ.உ.சிதம்பரம் பிள்ளையும், தூத்துக்குடி பிரமுகர்களும் வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து சென்னைக்கு வருகை புரிந்த பொது பாரதியார் தன்னுடைய “இந்தியா” இதழில் அவரைப் போற்றிப் பாடிய பாடல் “அபேதானந்தா” என்கிற தலைப்பில் பாரதியார் பாடல்களில் இடம்பெற்றிருக்கிறது.

            அந்தப் பாடலில் பாரதியார் அபேதாந்தரை சுருதியும் உபநிடத்தையும் பழுதற உணர்ந்தவர், உயர் பிரம நிலையைக் கண்டு பேரொளியிடைக் களித்தவர் என்றும், பூமியின் மறுபுறமுள்ள பகலில் கூட பரிதியின் ஒளி சென்றிடா நாட்டில் மெய்யொளி பரப்பிடச் சென்றவர் என்றும் புகழ்ந்துரைக்கிறார்.

            மெய்ப்பொருள் ஒன்றே, இதில் அவரவர் உன் கடவுள், என் கடவுள் என்று பேதங்களைக் கொணர்ந்து பகை கொள்வதை இழிவென்று சொல்லி, நல்லதை இங்கு அறிவுறுத்தும் பரமகுரு இவர், அவர் ஞானம் எனும் பயிரைப் பாழாக்கும் புலன்களெனும் விலங்கினத்தை அழித்த வீரன் என்று புகழ்கிறார். அவரைப் போற்றி பாரதி பாடியுள்ள 32 வரிகள் அமைந்த பாடலில் நிறைவாக

“தூய அபேதாநந்தன் எனும் பெயர் கொண்டு ஒளிர் தருமிச் சுத்த ஞானி         நேயமுடன் இந்நகரில் திருப்பாதம் சாத்தி அருள் நெஞ்சிற் கொண்டு           மாயமெல்லாம் நீங்கி இனிது எம்மவர் நன்னெறி சாறும் வண்ணம் ஞானம்    தோய நனி பொழிந்திடும் ஓர் முகில் போன்றான், இவன் பதங்கள் துதிக்கின்றோமே”.

என்ற இந்தப் பாடலைப் பாடி பாரதி அவரை வரவேற்கிறார்.

            அடுத்து ஓவியர் மணி ராஜா ரவிவர்மாவைப் பற்றிய பாடல். இவர் கேரளாவில் திருவனந்தபுரத்திலிருந்து 25மைல் தூரத்திலுள்ள கிளிமானூர் அரண்மனையில் 1848இல் பிறந்தவர். இவர் இளம் வயதிலேயே தன் தாய் மொழியான மலையாளம் தவிர சம்ஸ்கிருதம் உடன் சில இந்திய மொழிகளைக் கற்றதோடு, ஓவியம் வரைவதில் சிறந்து விளங்கியவர். திருவாங்கூர் ராஜா ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் உதவியால் 1862இல் அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் ஓவியக் கலையைப் பயின்று தேர்ந்தார். தஞ்சாவூர் அரண்மனை ஓவியராக விளங்கிய அழகிரி நாயுடுவிடமும் இவர் பயின்றார். ஓவியக் கலையில் சிறப்பான நிலையை அடைந்த ரவிவரமா அரச பரம்பரையில் திருமணமும் செய்துகொண்டார். அப்போது பரோடா சமஸ்தானத்தில் ஆட்சி புரிந்து வந்த மகாராஜா மூன்றாம் சத்யாஜிராவ் கெயிக்வாட் ஆட்சி காலத்தில் இவர் அங்கு சென்று தங்கினார். அங்கு தன் ஓவியப் பணியைத் தொடங்கியவர் 1896இல் அவருடைய முதல் படமான அன்னபட்சியுடன் இருக்கும் தமயந்தியின் ஓவியத்தை வரைந்தார். இவருடைய ஓவியgகள் வியன்னா நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டது. புராண கடவுளர்களின் படங்களையும், புராண நாயகிகளான சகுந்தலை, தமயந்தி ஆகியோரது படங்கள் இவருடைய சிறப்பான படங்கள். இவர் 1906இல் காலமானார்.  அவரைப் பற்றிய பாடல் 20 வரிகளில் அமைந்தவொன்று. அந்தப் பாடலில் “மன்னர் மாளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம் உன்னரும் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான், நன்னரோவியங்கள் தீட்டி நல்கிய பெருமான் இந்நாள் பொன்னணி உலகு சென்றான் புவிப்புகழ் போதும் என்பான்” என்று அவரது மறைவுக்கு இரங்கற்பா பாடியிருக்கிறார் பாரதியார்.

            சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் குடும்ப உறுப்பினரும், எட்டயபுரம் சமஸ்தான இசைக் கலைஞருமான சுப்பராம தீட்சிதர் ஒருவர்.

பாரதி விழா செப்டம்பர் 11லும், டிசம்பர் 11லும் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. இங்கெல்லாம் பாரதியின் பாடல்கள், கதைகள், கட்டுரைகள் பற்றி பலரும் சொற்பொழிவாற்றுகின்றனர். அப்படி உரையாற்றும் அறிஞர் பெருமக்கள் எல்லாம் இவைபோன்ற சிக்கலான பல சொல் வடிவங்களை பாரதி பயன்படுத்தியிருப்பதைப் பற்றி விரிவாக, விளக்கமாகப் பேசினால் பாரதியை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலும்.

மக்களுக்கு அதிகம் அறிமுகமான பாடல்களை மட்டும் எடுத்துப் பேசிவிட்டுப் போவதைக் காட்டிலும் சற்று ஆழமாக அவனது கவிதைகளில் காணப்படும் புதுமைகளையும் எடுத்துரைத்தால், இளைய சமுதாயம் பயன்பெறும். அந்த வகையில் இனி வரும் பாரதி விழாக்கள் அமையுமானால், அது தமிழுக்கும், பாரதியின் நினைவுக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும்.

கட்டுரை ஆக்கம்:

தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007. # 9487851885.

 

 

 

 

 

 

No comments: