பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, January 10, 2021

பாரதியின் தேசியம்.

 

                                                  

“அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி                                                     அகத்திலே அன்பினோர் வெள்ளம்,                                                                    பொறிகளின் மீது தனியரசாணை,                                                             பொழுதெலாம் நினது பேரருளின்                                                             நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்                                                      நிலைத்திடல் என்று இவை அருளாய்,                                                                குறி குணம் ஏதுமிலதாய் அனைத்தாய்க்                                                             குலவிடும் தனிப்பரம் பொருளே!”

          பாரதி என்ற பெயரை உச்சரித்த மாத்திரத்தில், நம் உள்ளத்துள் ஓர் ஒளி பிறக்கிறது. மனங்களில் தேசியம் எனும் உணர்வு பிறக்கிறது. தமிழும் தேசியமும் இணைந்தது என்றால் அது நம் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது.  

சுதந்திரப் பள்ளு என்ற பாடலை முதலில் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டின் சுதந்திரத்தை அவன் வாழ்ந்த காலத்தில் காண கொடுத்து வைக்கவில்லை. என்றாலும் மனத்தால் இந்திய சுதந்திரத்தை அவன் கண்டு, மகிழ்ந்து பாடிய பாடல் இன்று நம் குழந்தைகளெல்லாம் பாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆடுவோமே – பள்ளுப் பாடுவோமே,                                                                    ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்                                                        எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு  என்று தொடங்கி சுதந்திரத்தின் களிப்பை வெளிப்படுத்துகிறான். தொடர்ந்து வரும் வரிகளில்                                                  

  நாமிருக்கும் நாடு       நமதென்பதறிந்தோம்,                                                                                       இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்

என்ற வரிகளை நாம் பலமுறை கேட்டிருந்தாலும் அதை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும் போதுதான் அதிலுள்ள ஒரு சூட்சுமம் நமக்குத் தெரிய வருகிறது. அந்த வரிகளில் இழையோடிக் கொண்டிருக்கும் உட்பொருளை நாம் ஆழமாகச் சிந்தித்திருக்கிறோமா என்பது தெரியவில்லை.

நாம் இருக்கும் நாடு நமது இல்லாமல் வேறு யாருடையது? அதற்கு விடைதேடப் போகும்போதுதான் நமக்குப் புரிகிறது, அவன் காலத்தில் மக்கள் மத்தியில் நிலவிக் கிடந்த அறியாமையில் “இந்த நாடு ஆங்கிலேயர்களுடையது, இதில் அவர்கள் தயவில் நாம் இருக்கிறோம் என்ற உணர்வில் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் பாரதி அடித்துச் சொல்கிறான், “நாம் இருக்கும் இந்த நாடு நம்முடையது, இது நமக்கு மட்டுமே உரிமையானது” என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

நம்முடையது என்கிற எண்ணம் கூட இல்லாமல், அந்நியர்களின் கருணையினால் நாம் இங்கே வாழ்ந்து கொண்டிருப்பதாக பாமர மக்கள் நினைக்கும் வகையில் நம்மை அடிமைப் படுத்தி வைத்திருந்தார்கள்.

 “பாரத மக்களே, நீங்கள் வாழ்கின்ற இந்த பூமி, இந்த நாடு, உங்களுக்குச் சொந்தமானது, இதன் முழு உரிமையும் உங்களுடையது, நீங்கள் நினைப்பது போல அந்நியர்களின் தயவால், அவர்கள் மண்ணில் நாம் அடிமைப்பட்டு வாழ்வதாக எண்ணல் வேண்டா. விழித்தெழுங்கள், இது உங்கள் நாடு, நமது புராதன புண்ணிய தேசம்”  என்று தட்டி எழுப்பியிருக்கிறான்.

அடுத்து வரும் வரிகளில் காணப்படும் கருத்து

 “கல்வியில் உயர்ந்த தமிழ்நாடு, கம்பன் பிறந்த தமிழ்நாடு”

அந்நியர்கள் வந்து ஆக்கிரமித்து நமது கல்வி, கலாச்சாரம், பண்பாடு அனைத்திலும் ஊடுறுவி நம்முடைய பாரம்பரிய கல்வியை ஒழித்துவிட்டு லார்டு மெக்காலேயின் கல்வி முறையைக் கொண்டு வந்து புகுத்தி, நம்மை அவர்களுக்கு ஊழியம் செய்யும் சேவகர்களாக ஆக்கிய நிலை இந்த வரியில் வெளிப்படுகிறது.

சுதந்திரமடைந்த பாரத சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பாரதி கோடிட்டுக் காட்டுகிறான்.  இது முப்பது கோடி ஜனங்களின் சங்கமாக இருக்கும், ஓர் ஒப்பிலாத சமுதாயமாக இருந்து உலகத்துக்கு ஒரு புதுமையாக விளங்கும் என்பது பாரதியின் கனவு.

இங்கே “மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இருக்காது.                                மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இருக்காது” என்று சொல்லி

இனி ஒரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம் என்கிறான். அது என்ன விதி?       

 “தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”

சோற்றுக்கு இல்லையென்று ஒருவன் கூட இந்த நாட்டில் வருந்தக் கூடாது. அந்த நிலைமையை உருவாக்குவோம் என்பது அறைகூவல்.

இங்கே “எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம், எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் ஓர் விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்”

இந்த உணர்வு மட்டும் இங்கே நிலைத்து விட்டால், பூசல்கள் அழிந்துபோகும், வேற்றுமைகள் மறைந்து போகும்.

பாரதியே ஒருமுறை குவளைக் கண்ணனிடம் சொன்னாராம், “கிருஷ்ணா, நான் காலத்தால் முந்திப் பிறந்து விட்டேன், இந்த மக்கள் என்னைப் புரிந்து கொள்ள இன்னும் பல காலமாகும்” என்று சொன்னது எத்தனை உண்மை என்பதை இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

பாரதி “சத்ரபதி சிவாஜி தன் சைனியங்களுக்குச் சொன்னது” எனும் தலைப்பில் ஒரு நீண்ட பாடலை இயற்றினார்.

அதில் பாரத நாட்டின் பழம்பெருமைகளை யெல்லாம் சொல்லி, அத்தகு பெருமைமிக்க பாரத நாட்டில் அந்நியர் வந்து ஆக்கிரமித்திருக்கிற செயலைச் சொல்லி, நாட்டை மீட்கத் தன் சைனியத்துக்கு அழைப்பு விடுக்கிறார். சத்ரபதி சிவாஜி சொல்வது போல, பாரதி இந்திய சுதந்திரப் போராளிகளுக்கு விடுக்கும் அழைப்பு அது.

அவர் சொல்கிறார்

“பாரத பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்                      பாரத நாடு பார்க்கெலாம் திலகம், நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்! 

 என்றெல்லாம் சொல்லி இந்த நாடு எப்படிப்பட்ட நாடு தெரியுமா? என்று கேட்டு அவரே விடையும் சொல்கிறார்.

“தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர் ஆவலோடு அடையும் அரும்புகழ் நாடு!  ஊனமொன்றறியா ஞான மெய்ப் பூமி! வானவர் விழையும் மாட்சியர் தேயம்!       பாரத நாட்டிசை பகர யான் வல்லனோ?” என்று சொல்லி துவண்டு கிடந்த தன் படை வீரர்களுக்குச் சொல்வது போல இந்த நாட்டு மக்களுக்குச் சொல்கிறார்.

“நீரதன் புதல்வர், இந்நினைவு அகற்றாதீர்!” என்று அழைப்பு விடுப்பது சிவாஜியின் சைனியத்துக்கு மட்டுமல்ல, அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியர்களாகிய நமக்கும் தான்.

1906ஆம் ஆண்டில் வங்காள மாநிலத்தை மக்களிடையே பேதங்களை உண்டாக்கவென்று இரண்டாகப் பிரித்தார்கள்.

அப்போது உருவான மக்கள் எழுச்சி -- இந்திய மக்கள் அந்நியர்களுக்கு எதிராக களத்தில் இறங்கிய முதல் போர்க்களம் –

ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் வாய் மூடி, ஊமைகளாய், செவிடர்களாய்  அடிமைப்பட்டுக் கிடந்த பாரதத் திருநாட்டு மக்கள் விழித்துக் கொண்டார்கள். எச்சரிக்கை மணி ஒலித்தார்கள் இந்திய தேசிய வாதிகள்.

வங்கப் பிரிவினையின் விளைவு, இந்தியாவில் ஒரு புதிய மதம், புதிய மார்க்கம், “தேசிய உணர்வு” “தேசபக்தி” என்ற சக்தி உருவானது. வங்கப் பிரிவினை தோற்றுவித்த இந்திய ஒருமைப்பாட்டின் மறு பெயர் இந்திய தேசியம்.

வங்க மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி தான் எழுதிய புதினமொன்றில்  “வந்தேமாதரம்” என்றொரு பாடலை புகுத்தினார்.  அது அப்போது உருவான தேசபக்தி எனும் மார்க்கத்துக்கு ஒரு ‘மந்திரச் சொல்லாக’ பயன்பட்டது.

ஆனால் அதே காலகட்டத்தில் தென் தமிழ்நாட்டில் தோன்றிய பாரதியாரின் உணர்வில் இந்த பாரத புண்ணிய பூமி ஒரே தேசம், ஒரே நாடு, என்று வணங்க வேண்டுமென்றுதான் அவன் கவி உள்ளமும் தூண்டியிருக்கிறது.

இமயம் தொடங்கி குமரி வரையிலான இந்திய நிலப் பகுதியைத் தன் கவிதைகளில் வைத்துப் பாடினார்.  முப்பதுக்கும் மேற்பட்ட பாடல்களில் இந்த தேசத்தை “பாரத மாதா” வாக இந்த மண்ணின் அன்னையாகப்  பார்த்து வணங்கியிருக்கிறார் பாரதி.

பாரதியாருக்கு தேசப் பற்று என்பது தெய்வப் பற்றுக்குச் சமமாகும்.

அவர் சொல்கிறார், “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும், நற்றவ வானினும் நனி சிறந்த தனவே” என்று.

உலகில் செல்வத்தில் கொழிக்கும் நாடுகளும் உண்டு. ஒரு வேளை சொற்றுக்கு வழியின்றி எலும்பு தெரிய மாண்டுபோன மக்கள் வாழும் பல ஆப்பிரிக்க நாடுகளும் உண்டு.

தான் பிறந்த நாட்டை தெய்வமாகக் கருதி பாடிய கவிஞர் பாரதி மட்டும்தான். அவர் சொல்கிறார்

“பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் பாரத நாடு”

“ஞானத்திலே பர மோனத்திலே, உயர் மானத்திலே, அன்ன தானத்திலே,  கானத்திலே அமுதாக நிறைந்த கவிதையிலே உயர் நாடு இந்த நாடு”

இறை வழிபாட்டாளர்கள் அவரவர்களுக்குப் பிடித்தமான கடவுளர்களை வணங்குகிறார்கள்.

தேசத்தையே தெய்வமாக எண்ணிப் பாடியவன் பாரதி. அவன் வணங்குகின்ற தேசமென்கிற தெய்வத்துக்கு ஒரு மந்திரம் வேண்டாமா?

அதுதான் “வந்தே மாதரம்” எனும் மந்திரம். “தாயை வணங்குவோம்” “பாரதத் தாயை வணங்குவோம்”

“வந்தே மாதரம் என்போம் – எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்         ஜாதி மதங்களைப் பாரோம், உயர் ஜன்மம் இந்த தேசத்தில் எய்தினராயின்   வேதியராயினும் ஒன்றே, அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே.                  ஆயிரம் உண்டிங்கு ஜாதி, எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி?                        ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர், தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும், இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?

“வந்தேமாதரம்” என்கிற ஒரு சொல்லில் அடங்கியிருக்கும் அத்தனை உணர்வுகளையும் இந்தப் பாடலில் வடித்துக் காட்டியிருக்கிறார் பாரதி.  “வந்தேமாதரம்” எனும் சொல், பாரதியிடம் ஒரு மந்திரமாகவே பயன்பட்டது.  

தேசபக்தர்களைப் போலீசார் தடி கொண்டு தாக்கும் போது கூட இந்த “வந்தேமாதரம்” எனும் மந்திரத்தை உச்சரித்தபடியே அந்தத் தாக்குதலை ஏற்றுக் கொண்டார்கள். இந்த மந்திரம் அவர்கள் பெறும் தடியடியின் வலியைக் கூட போக்கிடும் மருந்தாக அவர்களுக்கு விளங்கியிருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே பாரதி இந்த மண்ணை விட்டுப் பிரிந்து இறந்து போனாலும், அவன் மனம் மட்டும் கற்பனையில் இந்திய விடுதலைக் காட்சிகளைக் கண்டு களித்திருக்கிறது.

“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு” என்று சொல்லி ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே என்று கூத்தாடச் செய்தது.

அரவிந்தர் ஒரு முறை சொன்னார், “தேசியம் என்பது ஒரு மதம். அது கடவுளால் அளிக்கப் பட்ட மதம். அதற்கு அழிவு இல்லை அந்த தேசியம் எனும் கடவுளுக்கு ஆராதனை செய்வதற்கென்றே சுப்பிரமணிய பாரதியாரை இறைவன் படைத்தான்” என்கிறார் அரவிந்தர்.

அன்றைய இந்திய மக்களின் நிலை கண்டு பாரதி மனம் புழுங்கினார்.

“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் அஞ்சி அஞ்சிச் சாவர், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே!            வஞ்சனைப் பேய்கள் என்பார், இந்த மரத்தில் என்பார், அந்தக் குளத்தில் என்பார்,   துஞ்சுது முகட்டில் என்பார், மிகத் துயர்ப்படுவார், எண்ணிப் பயப்படுவார்!

ஆம்! மூட நம்பிக்கைகளும், மூட பழக்க வழக்கங்களும் மண்டிக் கிடந்த இருண்ட நாட்கள் அவை. அப்படிப்பட்ட நிலைமையை மாற்றுதல் என்பது எளிதான காரியமா என்ன? அவர்களது நிலைமை கண்டு பரிதாபப் படுகிறான் பாரதி.

“சிப்பாயைக் கண்டு அஞ்சுவார், ஊர்ச் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்” 

ஆம்! இது ஏதோ பாரதியார் கற்பனையில் கண்டு சொன்ன செய்தியாக எண்ணுதல் வேண்டாம். நான் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் என் இளமைக் காலத்து வாழ்க்கை அமைந்தது. 1945 அப்போது எனக்கு 8 வயது. தெருவில் சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்த போது ஒருவர் இந்திய சிப்பாய் உடையில் தன் உடைமைகளோடு தெருவில் வந்தார். சிறுவர்களாகிய நாங்கள் ஓடி ஒளிந்தது மட்டுமல்ல, தெருத் திண்ணைகளில் உட்கார்ந்திருந்த பெரியவர்கள் கூட உள்ளே சென்று கதவுகளைத் தாளிட்ட காட்சிகளை நான் பார்த்திருக்கிறேன். அத்தனை பிற்போக்கான காலமாக அப்போது இருந்திருக்கிறது. ராணுவத்தில் பணியாற்றிய அந்த ஊர் தலைமை ஆசிரியரின் மகன் யுத்தம் முடிந்து வீடு திரும்பியபோது கண்ட காட்சி அது.

“துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டில் ஒளிப்பார்       அப்பால் எவனோ செல்வான், அவன் ஆடையக் கண்டு எழுந்து நிற்பார்,       எப்போதும் கைகட்டுவார், இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார்.

நெஞ்சு பொறுக்குதிலையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்    கொஞ்சமோ பிரிவினைகள்? ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ?”

“கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்        பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்தே                         துஞ்சி மடிகின்றாரே, இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.”

 “அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருள் அவனியில் இல்லை”.

இதைவிட என்ன கேவலம் வேண்டும். அன்னியனின் வெள்ளைத் தோலைக் கண்டதும் “துரை” “துரைசாணி” என்றும் “எஜமான்” என்றும் உடலை வளைத்து நம்மவர்கள் வணங்கிடும் கொடுமை அவன் மனத்தைத் துன்பப்படுத்தி யிருக்கிறது.

“இறைவனுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்பிக் கொண்டிருந்த மக்களுக்கு மத்தியில் இந்த தேசத்தின் நிலைமை கண்டு விளித்து “உறங்காதே விழித்தெழு!”  என்று இந்த நாட்டுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடியவன் பாரதி.

“நீடுதுயில் நீக்கப் பாடி வந்த பாவலன்” என்று பாரதிதாசனால் புகழப்படும் பாரதி “சுதந்திரம்” எனும் ஒளியைக் காட்ட, திருப்பள்ளி எழுச்சி பாடினான்.

பொழுது புலர்ந்தது, யாம் செய்த தவத்தால், புன்மை இருட்கணம் போயின யாவும்               எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,      தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குன் தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்  விழிதுயில் கின்றனை இன்னுமெந் தாயே! வியப்பிதுகாண் பள்ளி எழுந்தருளாயே!”

கிராமப் புறங்களில் மார்கழி மாதங்களில் பஜனை செய்வது தமிழ்நாட்டில் நிலவி வந்த பழக்கம்.  இறைபக்தி பஜனைகளைத் தேசபக்தி பஜனையாக மாற்ற ஊக்குவித்தான் பாரதி.         

நாடு என்பது என்ன? நிலமும், நீரும், ஆறுகளும், ஏரிகளும், குளங்களும், வயல்களும், வீடுகளும் வெட்ட வெளிகளும் கொண்ட நிலப்பரப்பு! மட்டும்தானா?

மலைகளும், மடுக்களும், காடுகளும் மண்டிக் கிடக்கும் மண்வெளி மட்டும் தானா?

இந்த தேசம் என்பது, இதில் வாழ்கின்ற பல்லாயிரக் கணக்கான மக்கள்  வழிபடும் ஒரு தெய்வம் என்று உருவகப்படுத்தியவன் பாரதி.

தாயின் மடியில் கிடப்பதைப் போல சொந்தத் தாய் மண்ணின் மீது கிடப்பது இன்பம் தருவது என்று அவன் கருத்து வியப்புக்குரியது அல்ல.

நாட்டைப் பற்றிய எண்ணங்களும் அப்படித்தான். என் நாடு, என் மக்கள், என்று தேசத்தைக் கடவுளாக வழிபடும் வழக்கம் தான் பாரதியின் தேசியம்.

 “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே”                      "முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே                     “அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே”.                    இதை வந்தனை கூறி மனத்தில் இறுத்தி என் வாயுற வாழ்த்தேனோ?             "இதை வந்தே மாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ?”  

என்று நாம் வாழும் மண்ணின் பெருமையை, புனிதத்தை, உயர்வை மனமார புகழ்ந்து பாடுகிறான். அடுத்த பகுதியில் அவன் சொல்லும் கருத்து நம் மனங்களை இதமாக மெல்ல வருடிக் கொடுக்கும் வரிகளாக அமைத்திருக்கிறான்.

இன்னுயிர் தந்து, எமை ஈன்று வளர்த்து, அருள் ஈந்ததும் இந்நாடே! எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே! அவர் கன்னியராகி நிலவினில் ஆடிக் களித்ததும் இந்நாடே! தங்கள் பொன்னுடல் இன்புற நீர்விளையாடி, இல் போந்ததும் இந்நாடே” என்று பெருமைப் பட்டுக் கொள்கிறான்.

நம் தாய்மார்கள் இம்மண்ணில் மதலையராய்ப் பிறந்தது மட்டுமா, நிலவினில் இங்கு ஓடியாடி விளையாடியதும் இங்குதான், நீர்நிலைகளுக்குச் சென்று தங்கள் பொன்னுடல் இன்புற நீர்விளையாடி வீடு திரும்பியதும் இந்த மண்ணில்தான்.

அப்படிப்பட்ட இந்த புனிதமான மண்ணை “தாயே வணக்கம்” “தாயே வணக்கம்” என்று போற்றி வணங்க வேண்டாமா என்கிறான்.

நம் முன்னோர்கள் இங்கே பிறந்தார்கள், வாழ்ந்தார்கள், முடிந்தார்கள். முடிந்த பின் அவர்கள் எங்கே போனார்கள்? இதோ, இந்த மண்ணில், மண்ணோடு மண்ணாகக் கலந்து, இங்கேதான் வாழ்கிறார்கள்.

அவர்கள் மாண்டு போக அவர்களுடைய உடல்கள் இந்த மண்ணில் ஒன்றாகக் கலந்து இங்கு பரவிக் கிடக்கும் மண்ணோடு மண்ணாக ஆகிப் போனார்களே, இந்த புனிதமான மண்ணை நான் வணங்க வேண்டாமா? இதை வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று சொல்லி போற்ற வேண்டாமா? என்கிறார்.

நம் மண்ணில் நாம் நடந்து செல்கையில், நாம் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியில் கிடக்கும் மண்ணிலும் என்றோ இந்த மண்ணில் வாழ்ந்த நம் முன்னோர்களின் தூசு படிந்து கிடக்கிறது அல்லவா?

ஒரு தேசம் என்பது வெறும் மண், மலை, காடு, நதிகள் மட்டுமல்ல, நம் உணர்வு பூர்வமான நம் முன்னோர்களுடனான உறவு, பந்தம் பாசம் அனைத்தும் இணைந்தே இருக்கிறது என்பதை பாரதி விளக்கிக் கூறுகிறார்.

தேசத்தின் மீது கொண்ட பக்திதான் “தேசியம்”. தேசிய உணர்வு என்றால் நம் தேசத்தில் வாழும் மக்களின் நல்வாழ்வும், சமூக நல்லிணக்கமும், அண்டை அயல் நாடுகளோடு நாம் கொண்டிருக்கும் உறவும், அதன் மேன்மையுமே நமது தேசியம். தாயையும், தந்தையையும், தான் பிறந்த மண்ணையும் நேசிக்காத உயிர்கள் உலகில் இருக்க முடியாது.

நம் தேசத்தில் பண்டைய நாட்களில், கல்வி மிக உயர்ந்த நிலையில் இருந்து வந்திருப்பதற்கு நம் சங்க கால புலவர்களுடைய வரலாறுகளும், அவர்கள் படைத்துச் சென்றிருக்கின்ற இலக்கியங்களுமே சான்று பகர்கின்றன. உலக மக்களெல்லாம் நாகரிகமற்று காடுகளில் திரிந்த காலத்தில் நமது மக்கள் நாகரிகத்தின் உச்சத்தில் உயர்ந்தும், கல்வி கலாச்சாரத்தில் சிறந்தும் வாழ்ந்து வந்த வரலாறு நம்முடையது.

நமது பாரம்பரிய சுதேசிக் கல்வி எப்போது யாரால் மாற்றப்பட்டது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?  அந்நியர்கள் இந்த மண்ணில் காலடி எடுத்து வைக்கும் வரை நாம் நமது பாரம்பரிய கல்வியைப் பயின்று, நாகரிகத்தின் உச்சத்தில்தான் வாழ்ந்து வந்திருக்கிறோம்.

அந்நியர்கள் காலடி எடுத்து வைத்த பிறகு, அவர்களுடைய நாகரிகத்தை மேலானதாகக் கருதிக் கொண்டு நாம் நமது பண்டைய பெருமைகளையெல்லாம் தொலைத்துவிட்டு அவர்களைப் பின்பற்றத் தொடங்கியதன் விளைவு? நம் கல்வி அழிந்தது நம் நாகரிகம் அழிந்தது, வாழ்க்கை முறை தாழ்வுற்றது.

லார்டு மெக்காலே என்பவரைக் கொண்டு இந்தியர்களுக்கு ஒரு கல்வித் திட்டத்தை புகுத்தினார்கள். அவர்களது நோக்கம் இந்திய மக்களை மேன்மையடையச் செய்வது அல்ல, அவர்களுக்குச் சேவகம் செய்வதற்கு ஒரு கூட்டம் தேவைப்பட்டது, அதனால் தான் மெக்காலே கல்வித் திட்டத்தில் உருவானவர்களைத்  தங்களுக்கு ஊழியம் செய்ய பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்கள்.

1885இல் ஏ.ஓ.ஹ்யூம் தொடங்கிய காங்கிரசும் அடிப்படையில் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெறுவது என்பது அல்ல. ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் மன்றாடிச் சில சலுகைகளைப் பெறுவதற்காகத்தான்.           

அதன் நோக்கம், பயன்பாடு இவை சுய முன்னேற்றத்துக்கானது அல்ல, அவர்கள் கற்ற கல்வி அந்நியர்களுக்குச் சேவகம் செய்ய உதவும் அடிமைக் கல்வி. 1885இல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் 1906க்குப் பிறகுதான் -- பால கங்காதர திலகர் காலத்தில்தான், தங்கள் நிலைமையை உணர்ந்து, அந்நியரின் நுகத்தடியை அகற்றி சுயாட்சி பெறவேண்டும் எனும் உத்வேகத்தைப் பெற்றார்கள். அந்த காலகட்டத்தில் லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால் எனும் மூவரும் இந்திய சுதேசி இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.

1907இல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்ற தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளில் பாரதியாரும் ஒருவர். அப்போது காங்கிரசில் பெரும்பாலும் மிதவாதிகள் தான் தலைவர்களாக இருந்தார்கள். திலகர் போன்ற ஒரு சிலரே தீவிர போக்குடைய தலைவர்கள். தமிழ்நாட்டில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, பாரதியார் பொன்றவர்கள் திலகரைப் பின்பற்றும் தீவிர தேசபக்தர்கள். அந்த மாநாட்டில் மெக்காலே கல்வித் திட்டத்துக்கு மாற்றாக இந்திய தேசிய கல்வித் திட்டமொன்று அறிமுகம் செய்தார்கள். அந்த மாநாட்டுக்குச் சென்றிருந்த போதுதான் பாரதி, நிவேதிதா அம்மையாரை தரிசித்தார், அவரிடம் புதிய தேச உணர்வை பெற்றார்.

கல்கத்தா மகாநாட்டுக்குச் சென்று வந்த பிறகு பாரதியார்  “தேசியக் கல்வி” பற்றி ஒரு கட்டுரைத் தொடரை “சுதேசமித்திரனில்” எழுதினார்.  அதுபற்றி சொல்வதற்கு முன்பு பாரதி தன் சுயசரிதையை கவிதையாக எழுதிய பகுதியில் சொல்லும் கருத்தினை இப்போது பார்க்கலாம்.

அந்த கவிதையின் முக்கியத்துவம் கருதி அதனை முழுமையாக இங்கே தருகிறேன்.

“நெல்லையூர் சென்று அவ்வூணர் கலைத்திறன் நேருமாறு எனை எந்தை பணித்தனன்,            புல்லை உண்கென வாளரிச் சேயினைப் போக்கல் போலவும், ஊன்விலை வாணிகம்         நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை நாடுவிப்பது போலவும், எந்தைதான் அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை,  ஆரியர்க்கு இங்கு அருவருப்பாவதை நரியுயிர்ச்சிறு சேவகர், தாதர்கள், நாயெனத் திரி ஒற்றர், உணவினைப்               பெரிதெனக் கொடு தம் உயிர் விற்றிடும் பேடியர், பிறர்க்கு இச்சகம் பேசுவோர்                        கருதும் இவ்வகை மக்கள் பயின்றிடும் கலை பயில்கென என்னை விடுத்தனன் அருமை மிக்க மயிலைப் பிரிந்தும் இவ் அற்பர் கல்வியில் நெஞ்சு பொருந்துமோ?

கணிதம் பன்னிரெண்டாண்டு பயில்வர், பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்   அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்,                      வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழு நாட்டில் பொருள் கெடல் கேட்டிலார்,               துணியும் ஆயிரம் சாத்திரம் நாமங்கள் சொல்லுவார் எட்டுணை பயனும் கண்டிலார்.

கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும், காளிதாசன் கவிதை புனைந்ததும்          உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்து அளந்ததோர்  பாஸ்கரன் மாட்சியும்                நம்பரும் திறலோடு ஒரு பணினி ஞால மீதில் இலக்கணம் கண்டதும்                       இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்            சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும், தெய்வ வள்ளுவர் வான்மறை செய்ததும்     பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பார் அளித்துத் தர்மம் வளர்த்ததும்                             பேரருட் சுடர் வாள்கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்ததும்       வீரர் வாழ்த்த மிலேச்சர் தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்  அன்ன யாவும் அறிந்திலார் பாரதத் தாங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்.

முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும், மூண்டிருக்கும் இந்நாள் இகழ்ச்சியும்       பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்                   என்ன கூறி மற்று எங்கணுர்த்துவேன், இங்கு இவர்க்கெனது உள்ளம் எரிவதே.

மெக்காலேயின் கல்வியை பாரதி எந்த அளவுக்கு வெறுத்தான் என்பதும், மாறாக இந்திய தேசியக் கல்வி எப்படி இருக்க வேண்டுமென்று பாரதியே ஒரு கட்டுரைத் தொடரை வெளியிட்டிருக்கிறான்.

பாரதி சொல்லும் தேசியக் கல்வி எப்படிப்பட்டது?

ஒவ்வொரு துறையிலும் என்னென்னா பாடங்கள் நடத்த வேண்டுமென்பதை விரிவாக விளக்கிக் கூறுகிறான். வரலாறு என்று எடுத்துக் கொண்டால், மாணவர்கள் வசிக்கும் அந்தந்த பகுதியின் வரலாற்றை முதலில் சொல்லுங்கள்.    

தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் பெரிதும் மிதவாதிகளால் வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது. பால கங்காதர திலகர் போன்ற தீவிர தேசபக்தர்களின் ஆதரவாளர்களாக தமிழ்நாட்டில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, மகாகவி பாரதியார், ஸ்ரீநிவாசாச்சாரியார், சுரேந்திரநாத் ஆர்யா, சக்கரைச் செட்டியார், வக்கீல் துரைசாமி ஐயர், ஹரி சர்வோத்தம ராவ்  போன்ற மிகச் சிலரே இருந்தனர்.

கல்கத்தாவில் இருந்த தீவிர சுதந்திரப் போராட்ட வீரராக விளங்கிய விபின் சந்த்ர பால் அவர்களைச் சென்னைக்கு அழைத்து வந்து கடற்கரையில் ஒரு கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்தவர் பாரதியார்.

தமிழ்நாட்டில் தமிழ் மொழியை முதன்மை மொழியாகப் பயன்படுத்தாமல் ஆங்கிலம் மூலமாக பயிற்சி அளித்து தமிழை ஒரு துணை மொழியாக வைத்துக் கொண்டால், அது தேசியம் எனும் சொல்லுக்கு முழுதும் விரோதமானது என்கிறார். இன்று ஆங்கில வழிக் கல்வி பயிலும் பள்ளிகளில் சேர்ப்பதென்பது சாதாரணமாகி விட்டதே.

 “ தமிழ்நாட்டில் தேசியக் கல்வியென்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையை பிரதானமாக நாட்டாமல், பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும், தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால், அது “தேசியம்” என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியும் என்பதில் ஐயமில்லை. தேச பாஷையே பிரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்து விடக் கூடாது.”  என்பதுதான் அவர் கருத்து.

 “அந்தந்த தேசத்தில் மக்கள் பேசுகின்ற மொழியே முதன்மையானது என்பது தேசியக் கல்வியின் கொள்கை, இதை மறந்து விடக் கூடாது. அவரவர்களது தாய் மொழியை பேணிப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ்நாட்டிலிருந்து முழுவதும் தமிழ் மொழியையே முதன்மை மொழியாக வைத்திருக்க வேண்டும். பாரதி சொல்லும் புதிய கல்வித் திட்டத்தில் ஒருசில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறான். அவை

தமிழ்நாட்டில் உருவாகும் தேசியப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியராக வருபவர்களுக்கு திருக்குறள், நாலடியார் முதலான தமிழ் நூல்களில் தகுந்த புலமை இருக்க வேண்டும்.” “சிப்பாய்கள் கலகம்” என்பது முதல் சுதந்திரப் போர், அது கலகம் அல்ல. சத்ரபதி சிவாஜியை ஒரு கலகக் காரன் என்று சொன்னதை மாற்றி ஒரு சுதேசி வீரன் என்பதை வலியுறுத்திச் சொல்கிறார்.

1857 இல் நடந்த புரட்சியில் உயிர்நீத்த மங்கள் பாண்டே, ராணி லட்சுமி பாய், தாந்தியா தோபே போன்றவர்களை புரட்சிக்காரர்கள் அல்ல, முதல் சுதந்திரப் போர் வீரர்கள். வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும். இந்தியாவின் கண்ணியத்தையும் பெருமையையும் காப்பாற்றத் தங்கள் இன்னுயிர் ஈந்த மாவீரர்களைப் போற்ற வேண்டும்.

தேசியக் கல்வியில், சொல்லிக் கொடுக்கப்படும் பாடங்கள் எழுத்து, படிப்பு, கணக்கு, இவை தவிர லேசான சரித்திர பாடங்கள் ஆகியவை தாய் மொழியில் இருத்தல் வேண்டும் என்கிறார். சரித்திரம் என்றால் நாம் இன்று படிக்கும் சரித்திரம் அல்ல. தேசியக் கல்வியில் புவியியல், மதங்கள் பற்றிய விளக்கங்கள், ராஜ்ய சாத்திரம் எனும் தலைப்பில் இப்போதைய பொலிடிகல் சயின்ஸ், பொருள் நூல் எனப்படும் எகனாமிக்ஸ், அறிவியல் பிரிவுகள், ஆகியவை தவிர கைத்தொழில், விவசாயம், தோட்டக் கலை, வர்த்தகம் ஆகியவை பற்றிய கல்வியும், நடைமுறைப் பயிற்சியும் அளிக்க வேண்டும். சரீரப் பயிற்சி அதாவது உடற்பயிற்சி என்பதை வலியுறுத்துகிறார்.

இந்திய பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, வர்த்தகம் இவைகள் எப்படி இருந்தன, யாரை நம்பி இருந்தன என்பது போன்ற விவரங்களையெல்லாம், சுதந்திரத்துக்குப் பிறகு அதன் வளர்ச்சியோடு ஒப்பிட்டு பார்த்தால்தான் சுதந்திரப் பெருமை புரியும்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமிப்பதற்கு முன்பாக 16ஆம் நூற்றாண்டு வரையில் எப்படி இருந்தது . அதுவே 1947இல் இந்திய சுதந்திரத்துக்குப் பிற்பட்ட பொருளாதாரம் எப்படி வளர்ந்தது என்பதை  ஒருசேர கவனித்தால் தான் அடிமை இந்தியா எப்படி இருந்தது என்பதும், சுதந்திர நாடான பின்பு நாடு எப்படி முன்னேறியது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

சுரண்டல் எனும் சொல்லுக்கு இலகணமாய் ஆங்கிலேயர்கள் நமது வளம் பொருந்திய மூலப்பொருட்களை எடுத்துக் கொண்டு போய் அவற்றை பொருள்களாக்கி நம் தலையில் கட்டி லாபம் சம்பாதித்த வரலாறு ஏராளமாக உண்டு.

1850 தொடங்கி இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 வரையிலான காலகட்டத்தில், விவசாயத்தைப் பெரிதும் நம்பியிருக்கும் இந்திய நாடு பெரும் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக மாபெரும் பஞ்சமும் நம் நாட்டை வாட்டி எடுத்தது.இந்திய மக்களின் தலைவிதியை நிர்ணயிக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் திட்டமிட வேண்டியிருந்தது.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவை இந்தியர்கள் ஆளத் தொடங்கிய பின் அந்தப் பணி நம் அரசின் கைகளுக்கு வந்த பிறகுதான் ஐந்தாண்டு திட்டங்கள் 1952இல் தொடங்கப்பட்டு, திட்டக்குழு அமைக்கப்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

பாரதியார் காலத்தில் இந்தியாவின் மொத்த மக்கட் தொகை 30 கோடி. இதில் இப்போதைய பாகிஸ்தான், வங்க தேசம், பர்மா ஆகியவைகளும் அடங்கும். இன்றைய நிலைமையில் பாகிஸ்தான், வங்கதேசம், பர்மா இவைகள் நம்மிடம் இல்லாத நிலையில் அது 136 கோடி அளவுக்கு பெருகிக் கிடப்பதையும் நாம் அறிவோம். இந்த அளவு உலகின் மக்கட் தொகையில் சுமார் 18 சதவீதமாகும்.

அத்தனை பேருக்கும் அடிப்படை வசதிகளையும், உணவுப் பொருட்கள் உற்பத்தியையும், கல்வி, தொழில், வேலை வாய்ப்பு இவைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததைப் போல ஐந்து அல்லது ஆறு மடங்கு அனைத்தும் அதிகரித்து விட்டது தெரிகிறது.  

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பஞ்சம் வாட்டியதைப் போல மக்களைப் பட்டினி போடும் நிலைமை சுதந்திரம் பெற்ற பிறகு இல்லை என்பதே வளர்ச்சியின் அடையாளம். அந்நியரின் சுரண்டல் இல்லை, இவற்றையெல்லாம் கருதியே அன்றைய சுதந்திரப் போராளிகள் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டார்கள். அப்படி சுதந்திரம் பெறுவதற்கு தேச உணர்வை ஊட்ட வேண்டியிருந்தது. அதுதான் தேசிய உணர்வு.

பாரதி சுதந்திரத்துக்காக போராடியது அடிமைத் தளை நீங்குவதற்கு மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியும், மக்கள் வாழ்க்கைத் தரமும் உயர வேண்டுமென்பதற் காகத்தான். சுதந்திரம் பெற்ற பாரத தேசம் எப்படி பாரதி விரும்பிய புதிய பாரதம் இன்று உருவாகி வருகிறது என்பது நாம் பாரதியின் நினைவுக்குச் செலுத்தும் நன்றிக் கடனாகும்.

பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்

பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி

மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்

பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)

 

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)

 

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு

சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

 

காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்

 

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்

பண்ணி மலைகளென வீதி குவிப்போம்

 

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)

 

குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்

கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்

நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்

ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

 

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்

வானையளப் போம்கடல் மீனையளப்போம்

சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்

சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)

 

புதிய பாரதம் தான் பாரதி கண்ட கனவு என்பதால் அவன் காண விரும்பிய புதிய பாரதம் உதயமாகி விட்டது, இது மேலும் வளர்ச்சி பெறும்.         

    தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற காந்தி திரும்பி இந்தியாவுக்கு 1914இல் வந்த பிறகு,  அதாவது 1919இல் அவர் உலகப் புகழ் பெற்ற ஒரு மகாத்மாவாக ஆகிவிடுவார் என்பதைக் கணித்து அவர் அப்போது இயற்றிய பாடலில் சொல்கிறார்:

“வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்,                                                              தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்                                                     பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை                                                                       வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க வாழ்க! 

காந்திஜி இந்திய அரசியலில் ஈடுபடுமுன்பாகவே, அவர் மகாத்மாவாக போற்றப்படுவார் என்பதை உணர்ந்து சொன்னவர் மகாகவி பாரதியார். காந்தியடிகளை மகாத்மா என புகழ்ந்தது ரவீந்திரநாத் தாகூர் என்று சொல்லிக் கொண்டிருக்கிற நேரத்தில், 1919இல் பாரதி பாடிய இந்தப் பாடலில் அவரை மகாத்மா என்று போற்றுவதை நாம் நிச்சயம் குறிப்பிடத்தான் வேண்டும்.

அவருடைய “சுதந்திர தாகம்” எனும் பாடல் மனதை உருக வைக்கும் தன்மையுடையது என்பதால் தான் “கப்பலோட்டிய தமிழன்”என்ற படத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை தன் மூச்சு நிற்குமுன் இந்தப் பாடலைக் கேட்க விரும்பியதாகச் சொல்வார்கள். அந்தப் பாடல்

“என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?                                                                                            என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?                                                                 என்றெம  தன்னைகை விலங்குகள் போகும்?                                                                   என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்? 

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?                                                                     பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?                                                                          தஞ்ச மடைந்த பின் கைவிடலாமோ?                                                                                       தாய் உந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

மகாகவியின் இந்தப் பாடல் வரிகளுடன் என்னுடைய உரையை நிறைவு செய்து கொள்கிறேன். தேசபக்தி, தேசியம் எனும் சொற்களுக்கு விளக்கமாக விளங்கிய மகாகவி பாரதியின் புகழ் ஓங்குக! வந்தே மாதரம்.

                                     

 

 

         

           

 

No comments: