இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியை தென்னாட்டில்
நிலைபெற வைத்தவர் ராபர்ட் கிளைவ். ஆசிய நாடுகளில் தங்கள் வியாபாரத்தைத் தொடங்குவதற்காக
வந்து நம் நாட்டில் இறங்கியவர் இவர். இங்கே
இருந்த குறுநில மன்னர்களின் அனுமதியோடு கோட்டையைக் கட்டிக் கொண்டு இந்தியாவில் அவர்களுடைய
பொருட்களை விற்பனை செய்து, இங்கிருந்து ஏராளமான செல்வங்களை அள்ளிச் செல்லத் தொடங்கிய
காலம் கிளைவின் காலம்.
அப்போது சென்னைப் பட்டணத்தில் ஆங்கிலேயர்களும்,
புதுச்சேரியில் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியும் கால் பதித்துத் தங்கள் முகாம்களை
ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்தியாவில்
ஆங்காங்கே சின்னஞ்சிறு ராஜ்யங்கள் அரசர்களாலும், பாளையக் காரர்களாலும் ஆளப்பட்டு வந்ததைப்
பயன்படுத்திக் கொண்டு, மெல்ல அவர்களிடம் தாங்கள் கொண்டு வந்த பொருள்களைக் காட்டி, தங்கள்
ஆயுத பலத்தைப் பயன்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தைச் சிறிது சிறிதாக இங்கே நிலைநிறுத்தத்
தொடங்கினார்கள்.
தென்னிந்தியாவில்
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாருக்கும், பிரெஞ்சு கம்பெனியாருக்கும் போட்டா போட்டி
நடந்து கொண்டிருந்தது. 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் டெல்லியில் இருந்த முகலாயர்களின்
ஆட்சி புகழ் மங்கிவரும் நேரம் அது. அப்போது இந்தியாவில் நூற்றுக்கணக்கான சுதேச சமஸ்தானங்கள்
சிறுசிறு பகுதிகளை ஆண்டு வந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் மேலாதிக்க அரசாக மத்தியில்
முகலாயர்களுடைய அரசு இருந்து வந்தது. இந்தியாவின் வளம், செல்வம் இவற்றைக் குறிவைத்து
இங்கிலாந்து நாட்டிலிருந்து கிழக்கிந்திய கம்பெனியும், பிரான்ஸ் நாட்டின் கிழக்கிந்திய
கம்பெனியும் இந்தியாவை வேட்டைக் காடாக்கி டெல்லி முகலாய சக்ரவர்த்தியின் ஆதரவோடு இங்கு
வந்து தங்கள் வியாபாரத்தைத் தொடங்கி தங்களை வளர்த்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
ஐரோப்பாவிலிருந்து
பல்வேறு பொருட்களைக் கொணர்ந்து இங்கே விற்று, இங்கிருந்து அரிய பல பொருட்களையும், செல்வங்களையும்
அவரவர்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்றனர். டில்லி முகலாய சக்கரவர்த்தி ஆட்சியில் தென்னிந்தியாவில்
வரிவசூல் செய்ய ஐதராபாத் நிஜாமும், அவருக்குக் கீழே தமிழ்நாட்டுப் பகுதிகளில் வரிவசூல்
செய்ய ஆற்காடு நவாபும் நியமிக்கப் பட்டிருந்தார்கள். ஆற்காட்டு நவாப் தெற்கே ஆங்காங்கே
பாளையக்காரர்களை நியமித்து அவர்களைக் கொண்டு மக்களிடம் வரிவசூல் செய்து நிஜாமுக்கும்
அவர் மூலமாக முகலாய மன்னருக்கும் அளித்து வந்தார்கள். இந்த சூழ்நிலையில் தென்னிந்திய
வரலாற்றில் ஆற்காட்டு நவாப் முக்கியத்துவம் பெறுகிறார். பிரிட்டிஷாரும் பிரெஞ்சுக்
கம்பெனியாரும் இங்கே வந்து தங்கள் ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொள்ள முயன்ற நேரத்தில்
ஆற்காட்டு நவாபின் உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதனால் ஆற்காடு முக்கியத்தும்
பெற்ற இடமாக ஆனது.
இங்கிலாந்தின்
கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்த பல நிறுவனங்களுடன் வர்த்தக
தொடர்பில் இருந்தார்கள். பிரான்ஸ் கம்பெனி புதுச்சேரியைப் பிடித்துக் கொண்டு தங்கள்
வியாபாரத்தை நடத்தினார்கள். அந்தந்த கம்பெனிகள் அவர்கள் பிரதேசத்திலும், அண்டை அயலிலும்
இருந்த சுதேச மன்னர்களோடு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு தங்கள் வியாபாரத்தை வெற்றிகரமாக
நடத்திவந்தார்கள்.
அவர்கள் வியாபாரம்
செய்வதாகச் சொல்லி உட் புகுந்திருந்தாலும், அவர்கள் இந்த பிரதேசங்களை எப்படியேனும்
கவர்ந்து கொள்வது என்பதிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார்கள். ஆற்காடு நவாபைத் தங்கள்
பக்கம் இழுத்துக் கொண்டால் தங்கள் நோக்கம் நிறைவேற ஏதுவாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள்.
இங்கிலாந்துக்கும்
பிரான்சுக்கும் ஐரோப்பாவில் அப்போதெல்லாம் விரோதம் நிலவி வந்தது என்பது வரலாற்றில்
காணுகின்ற செய்தி. அங்கு நிலவிய அவர்களது விரோதம், வியாபாரம் செய்ய வந்த இந்தியாவிலும்
விரோதமும், போட்டியும் இருந்ததால், அந்தந்த பகுதிகளில் இருந்த நவாப்புகளுடன் நட்பு
கொண்டு, அவர்களது ஆதரவைப் பெற எல்லா முயற்சிகளும் செய்து வந்தனர். நம் நாட்டில் இருந்த
இந்த சுல்தான்களுக்கெல்லாம் இவ்விரு ஐரோப்பிய வியாபாரிகள் ஆயுதங்களையும், ஆடம்பரப்
பொருட்களையும் கொடுத்து, இதர உதவிகளையும் செய்து
அவர்களுடைய ஆதரவைப் பெற்று வந்தார்கள்.
தட்சிண பிரதேசத்தில்
ஐதராபாத் நிஜாமாக ஆசஃப் ஜா என்பவர் தனது குடும்ப அரசாட்சியை நடத்திக் கொண்டு, டெல்லி
நவாபுக்கு வரிவசூல் செய்து அனுப்பும் பிரதிநிதியாகவும் இருந்து செயல்பட்டார். இவருடைய
ஆளுகைக்கு உட்பட்ட தென் இந்திய பகுதிகளை கர்நாடகப் பிரதேசம் என்றழைத்தார்கள். இவருக்கு
தமிழ் பேசும் பகுதிகளில் இருந்த சுதேச மன்னர்கள், ஜமீன்தார்கள், பாளையக்காரர்கள் இவர்களிடமிருந்தெல்லாம்
வரி வசூல் செய்ய ஆற்காட்டு நவாபை நியமித்திருந்தார்.
ஆற்காட்டு நவாபுக்கு
வரிவசூலில் உதவி செய்திட தென் இந்தியா நெடுக ஏராளமான பாளையக்காரர்கள் இருந்தார்கள்.
அப்போது வளர்ந்து வந்த விஜயநகர சாம்ராஜ்யம் தெற்கே வலிமையான அரசாக உருவான சமயம், தமிழ்நாட்டின்
பல பகுதிகளில் அவர்களுடைய பிரதிநிதிகள், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், செஞ்சி ஆகிய இடங்களில்
ஆட்சி புரிந்து வந்தார்கள். நாயக்க மன்னர்கள் என்று இவர்களை அழைப்பார்கள். இந்த அரசாங்கங்கள்
எல்லாம் சுயேச்சையான அதிகாரமுடைய நாடுகளாகவே இருந்து வந்தன. தஞ்சையில் கடைசி நாயக்க
மன்னர் விஜயராகவ நாயக்கர் மதுரை நாயக்கர்களால் போரில் கொல்லப்பட்ட பிறகு பிஜப்பூர்
சுல்தானின் விருப்பப்படி மராத்திய தளபதி ஏகோஜி என்பவர் தஞ்சையில் மராத்திய ஆட்சியைத்
தொடங்கினார்.
1748இல் ஐதராபாத்
நிஜாம் ஆசஃப் ஜா காலமானார். அவருடைய இடத்துக்கு இருவர் போட்டியிட, ஒருவருக்கு பிரிட்டிஷ்
கம்பெனியும், இன்னொருவருக்கு பிரான்ஸ் கம்பெனியும் ஆதரவுக் கரம் நீட்டின. இதில் பிரான்ஸ்
ஆதரவளித்தவர் வெற்றி பெற்று ஐதராபாத் நிஜாமாக ஆனார். தெற்கே ஆற்காட்டில் ஆண்டு வந்த
ஆற்காடு நவாப் பதவிக்கு சந்தா சாஹேபை பிரான்ஸ் கம்பெனியும், முகமது அலிக்கு இங்கிலீஷ்
கம்பெனியும் ஆதரவு கொடுத்தன. பிரெஞ்சுப் படையின் ஆதரவுடன் ஆற்காட்டு நவாபாக உட்கார்ந்த
சந்தா சாஹேப், அவருக்குப் போட்டியாக ஆற்காட்டு நவாபாக ஆகவேண்டிய முகமது அலி கான் வாலாஜா
என்பவருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடலானார்.
சந்தா சாஹேப்
ஒரு மிகப் பெரிய படையுடன் புறப்பட்டுப் போய் முகமது அலிகான் தங்கியிருந்த திருச்சிராப்பள்ளி
கோட்டையை முற்றுகை இட்டார். அங்கு முகமது அலிகான் தன்னுடைய சிறிய படையுடனும், 600 பிரிட்டிஷ்
படைவீரர்களுடன் சந்தா சாஹேபை எதிர் கொண்டார். முகமது அலியின் பலவீனமான நிலைமையைப் பார்த்து
பிரிட்டிஷ் கம்பெனி திருச்சிராப்பள்ளியையும், தென் இந்தியாவையும் கைகழுவிவிட்டு விடலாம்
என்று எண்ணினார்கள் . அந்த சமயம் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியில் குமாஸ்தாவாக
இருந்த ராபர்ட் கிளைவ் போர் வீரனாக மாறி முதல் கர்நாடக யுத்தத்தில் பங்கெடுத்தவர்,
தங்கள் கம்பெனியின் தோல்வி மனப்பான்மையைக் கண்டு மனம் கொதித்து, அப்போது சென்னை கவர்னராக
இருந்த தாமஸ் சாண்டர்ஸ் என்பவரிடம் முறையிட்டார். அதாவது சந்தா சாஹேப் ஆற்காட்டை விட்டு
நீங்கி முகமது அலி வாலாஜாவை எதிர்த்துத் திருச்சிக்குப் போய் அங்கு முற்றுகையிட்டிருக்கிற
நேரத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகள் ஆற்காட்டை முற்றுகையிட வேண்டுமென்று
விரும்பினார். அப்படிச் செய்தால் சந்தா சாஹேப் ஆற்காட்டைக் காப்பாற்ற இங்கே ஒடிவருவார்
என்பது அவர் கருத்து. இந்த ஆலோசனையை கவர்னர் சாண்டர்ஸ் ஏற்றுக் கொண்டாலும், கிளைவுடன்
தங்கள் படையில் இருந்த 350 பிரிட்டிஷ் படைவீரர்களில் 200 பேரை மட்டுமே அழைத்துச் சென்று
ஆற்காட்டை முற்றுகையிட ஆலோசனை சொன்னார்.
இந்த 200 வீரர்களுடன்,
ஒரு 300 இந்திய சிப்பாய்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு ஆற்காடு நோக்கி படையெடுத்தார்
ராபர்ட் கிளைவ். இது நடந்தது 1751 ஆகஸ்ட் 26ஆம் தேதி. 29ஆம் தேதி காலையில் அந்தப் படை
புறப்பட்டு சென்னையிலிருந்து 42 மைல் (68 கி.மீ) தூரத்தில் இருக்கும் காஞ்சிபுரம் வந்தடைந்தது.
கிளைவின் ஒற்றர் படை ஆற்காடு நிலவரத்தைப் போய் பார்த்து வந்து, ஆற்காட்டில் உள்ள
படையில் தங்கள் படையை விட இரு மடங்கு வீரர்கள் இருப்பதாகத் தெரிவித்தனர். காஞ்சிபுரத்திலிருந்து
27 மைல் (43 கி.மீ) தூரத்தில் இருந்த ஆற்காட்டுக்குச் செல்லும் வழியில் பயங்கர இடியுடன்
கூடிய மழை, புயல் தாக்கி கிளைவின் பயணம் தடைப்பட்டு, இரண்டு நாட்கள் கழித்து ஆற்காட்டைச்
சென்றடைந்தது.
அங்கு ஆற்காட்டில்
கோட்டையைப் பாதுகாத்துக் கொண்டிருந்த சந்தா சாஹேபின் படைக்கு, ராபர்ட் கிளைவின் படை
திடீரென்று வந்து தாக்கும் என்பது தெரியாது. கோட்டைக்குள் காவலில் இருந்த சந்தா
சாஹேபின் படை பலம் அதிகமாக இருந்த போதிலும், சென்னையிலிருந்து வரும் ஆங்கில கம்பெனியாரின்
படைபலம் அதிகமாக இருக்குமென்று கருதி, கோட்டையை விட்டுவிட்டு அவர்கள் ஓடிவிட்டனர்.
இப்படி ஆற்காட்டைப் பிடிக்க எதிர்ப்பே இல்லாமல் போனதால், கிளைவ் மிக சுலபமாக
ஆற்காட்டைப் பிடித்துக் கொண்டு ஒரு துப்பாக்கி குண்டைக் கூட வீணடிக்காமல் அந்த கோட்டையைப்
பிடித்துக் கொண்டார். ராபர்ட் கிளைவிடம் ஆற்காடு விழுந்து விட்டது என்ற செய்தி திருச்சியில்
முற்றுகையில் இருந்த சந்தா சாஹேபுக்குச் சொல்லப்பட்டது. உடனே அவர் தன் படைவீரர்கள்
4000 பேரையும், உடன் 150 பிரெஞ்சுப் படை வீரர்களையும் தன் மகன் ரஸா சாஹேப் என்பவன்
தலைமையில் ஆற்காட்டுக்கு அனுப்பி வைத்தார்.
செப்டம்பர்
23 ஆம் தேதி ரஸா சாஹேப் தன்னுடைய படை வீரர்கள் 2000 பேரையும், புதிய சிப்பாய்கள்
5000 பேரையும் 120 ஐரோப்பியர்கள் 300 குதிரைப் படை வீரர்களுடன் ஆற்காடு கோட்டையைக்
கிளைவிடமிருந்து மீட்பதற்காகச் சென்றான். அந்த காலகட்டத்தில் ஆற்காட்டில்
ஜனத்தொகை ஒரு லட்சம் இருந்தது. அந்த கோட்டையைப் பிடித்திருந்த ராபர்ட் கிளைவ் ஆற்காட்டு
மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்பதற்காக, தன் படை வீரர்கள் பொதுமக்களுக்கு எந்தவிதமான
தொல்லைகளையும் தரக்கூடாது, கொள்ளையிடக் கூடாது என்று உத்தரவிட்டதோடு, மக்களிடமிருந்து
சந்தா சாஹேப் பறிமுதல் செய்த அனைத்து சொத்துக்களையும் அதனதன் உரிமையானவர்களிடமே திரும்பக்
கொடுத்துவிட வேண்டுமென்று உத்தரவிட்டார்.
இப்படிப்பட்ட
நடவடிக்கைகளினால் உள்ளூர் மக்களிடம் கிளைவ் நல்ல பெயர் வாங்கிக் கொள்ள முடிந்தது. போன
சூட்டில் அந்த கோட்டையினுள் தண்ணீர் பஞ்சம் தீர வழி செய்துவிட்டு, கோட்டையைப் பாதுகாக்கவும்
ஆட்களைத் தயார் செய்தார். அப்போது கோட்டைக்குள் இரண்டு மாதத்துக்கு தேவையான உணவு பொருட்கள்
மட்டுமே இருந்தது. ஆற்காட்டு கோட்டையின் சுற்றளவு ஒரு மைல் தூரம் இருக்கும். கோட்டை
சுவர் உயரம் குறைவாகவும், சிலவிடங்கள் இடிந்தும் கிடந்தது. கோட்டை பாதுகாப்புக்கான
பீரங்கி அமைப்புகள் அறவே இல்லை. சுற்றிலும் இருந்த அகழிகள் சில இடங்களில் தண்ணீர் தேங்கி
இருந்தாலும் பெரும்பாலும் வறண்டு கிடந்தது. இதற்கிடையே கிளைவின் படை வீரர்களில் சிலர்
உடல் நலம் கெட்டு படுத்த படுக்கையாக ஆனார்கள். மிகுந்தது 120 ஐரோப்பிய வீரர்களும்
200 சிப்பாய்களும் மட்டும்தான். இவர்களை வைத்துக் கொண்டு சந்தா சாஹேபின் படையை எதிர்த்து
நின்று கோட்டை அவர்கள் வசம் விழுந்துவிடாமல் காக்க வேண்டியிருந்தது.
சந்தா சாஹேபின்
படை கோட்டைக்கு வெளியே சில மைல் தூரத்தில் முகாமிட்டது. சென்னையில் இருந்து கிளைவுக்கு
உதவி புரிய ஆங்கிலப் படை எதுவும் வராமல் இருக்க வழி மறித்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டன. உணவுப் பொருட்களும் கோட்டைக்குள் போக முடியாமல் தடைகளை ஏற்படுத்தினார்கள்.
கோட்டை மீது இருமுறை படைகள் சென்று மோதிய போதிலும், இரண்டு முறையும் தோல்விதான்
மிச்சம். நிலைமைகளை ராபர்ட் கிளைவ் பார்த்து விட்டு செப். 14 இரவு நேரத்தில் கோட்டைக்கு
வெளியில் தங்கியிருக்கும் சந்தா சாஹேப் படைகள் மீது தாக்குதல் நடத்தினார். எதிர்பாராத
இந்த தாக்குதலால் அச்சமடைந்து சந்தா சாஹேப் படை வீரர்கள் சிதறி ஓடினார்கள். கிளைவ்
படையில் ஒரு உயிர் சேதம் கூட ஏற்படவில்லை.
இரண்டு நாட்களுக்குப்
பிறகு கவர்னர் சாண்டர்ஸ் கிளைவின் பாதுகாப்புக்காக, இரண்டு பெரிய பீரங்கிகளை ஆற்காட்டுக்கு
அனுப்பி வைத்திருந்தார். அந்த பீரங்கிகளை ஆற்காட்டு கோட்டைக்குள் கொண்டு செல்ல உதவிட,
தங்கள் படையின் பெரும் பகுதியை உடன் அனுப்பி வைத்தார். குறைந்த அளவிலான படை வீரர்களுடன்
கோட்டைக்குள் இருந்த ராபர்ட் கிளைவ், இரவு நேரத்தின் இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு,
கோட்டைக்கு வெளியே முகாமிட்டிருந்த சந்தா சாஹேப் படையின் மீது தாக்குதல் நடத்த அனுப்ப,
கிளைவின் படை மிகப் பெரியது என்று கருதி, அவர்கள் சிதறி ஓடினார்கள். குறைவான வீரர்களுடன்
ராபர்ட் கிளைவ் சுலபமாக வெற்றியை ஈட்டினார்.
சந்தா சாஹேப்
அனுப்பிய ரசா சாஹேபின் படைகள், மதில் சுவற்றை ஒட்டிய உயர்ந்த கட்டடத்தினுள் புகுந்தது.
கிளைவ் இவர்களை விரட்ட ஏற்பாடு செய்த போதிலும், எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டினால்
கிளைவின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. கிளைவ் தாக்குதல் நடத்தியதில் பிரெஞ்சு
படை வீரர்களில் பலரும் மாண்டு போனார்கள். இந்த தாக்குதலில், ஆங்கிலேய வீரர்கள் பதினைந்து
பேரும் இறந்தார்கள். கிளைவின் பிரிட்டிஷ் படைகள் நாலா புறமும் சூழந்துகொண்ட நிலையில்,
பதுங்கியிருந்த ரசாவின் படைகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர். வெளியுலக தொடர்புகளிலிருந்து
துண்டிக்கப்பட்டு உயர்ந்த கட்டடங்களுக்குள் பொறியில் மாட்டிக் கொண்ட எலிகள் போல, உண்ண
உணவு, குடிக்க தண்ணிர் இல்லாமல் வாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குக் கிடைத்ததெல்லாம்
அழுக்கு படிந்த தேங்கிய தண்ணீர் தான். அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்து
உணவை வலிய பறித்து உண்டார்கள். இப்படி எத்தனை நேரம் தாக்குப் பிடிக்க முடியும், அவர்கள்
ஓய்ந்து போனார்கள். இதற்கிடையே சென்னை ஜார்ஜ் கோட்டையில் கவர்னர் சாண்டர்ஸ் புதிதாக
சிப்பாய்களை நியமித்தும், இங்கிலாந்திலிருந்து புதிய படைவீரர்களை வரவழைத்தும் தயாரிப்பு
வேலைகளில் ஈடுபட்டார்.
அக்டோபர் மூன்றாவது
வாரத்தில் 130 பிரிட்டிஷ் வீரர்களும் 100 இந்திய சிப்பாய்களும் படையில் சேர்த்துக்
கொள்ளப் பட்டனர். அக்டோபர் இறுதியில் பீரங்கிப் படையொன்று பிரான்ஸிலிருந்து புதுச்சேரிக்கு
வந்து சேர்ந்தது. அந்தப் படை ஆற்காட்டை நோக்கி வந்து, கிளைவ் இருக்குமிடத்துக்கு வடமேற்கே
நிலை நிறுத்தப்பட்டது. அந்தப் படை கிளைவின் ஒரு பீரங்கியைத் தாக்கி அழித்துவிட்டு இன்னொன்றை
பழுதாக்கி விட்டது. ஆறு நாட்கள் பிரெஞ்சு படை கோட்டையைக் கடுமையாகத் தாக்கியது. அந்தத்
தாக்குதலால் கோட்டைச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. உள்ளே இருந்த பிரிட்டிஷ்
படை இந்த உடைப்பை சரிசெய்ய முயன்றது. இதற்கிடையே கோட்டையின் இன்னொரு பகுதியிலும் பிரெஞ்சு
படையால் சுவர் உடைக்கப்பட்டது. கோட்டை முற்றுகை நீண்டுகொண்டே போயிற்று. உணவுப் பொருட்களும்,
வெடி மருந்துகளும் கிட்டத்தட்ட தீர்ந்து போகிற நிலைமை. கோட்டை முற்றுகையின் ஐம்பதாவது
நாளும் நெருங்கி வந்தது. கிளைவுக்கு இருந்த ஒரே நம்பிக்கை மராத்திய படையின் தலைவன்
மொராரி ராவ் வாக்களித்தபடி, அவர்கள் படையின் உதவியைத்தான். அந்நாள் வரை தஞ்சை மராத்தியர்கள்
முகமது அலியின் படைகளுக்கும், சந்தா சாஹேபின் படைகளுக்கும் இடையில் நடந்த போரில் நடுநிலை
வகித்து வந்தார்கள். ஆனால் பிரிட்டிஷ் படைகளின் பக்கம் தங்களுக்கு அனுதாபம் ஏற்பட்டு
இப்போது உதவி செய்ய தயாராகிவிட்டார்கள்.
மராத்திய படை
மொராரி ராவ் தலைமையில் பிரிட்டிஷ் படைகளுக்கு உதவ தயாராக இருப்பதறிந்து, சந்தா சாஹேபின்
தம்பி ரசா சாஹேப் எதிர்வரும் ஆபத்தை உணர்ந்து கொண்டான். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து
விடுபட அவன் கிளைவுக்கு ஒரு தூது அனுப்பினான். பரிசுப் பொருட்களை அனுப்பி, கிளைவ் இனி
தப்பிக்க வழியில்லை, அதனால் சரணாகதி அடைந்து விடுவதே நல்லது என்பதைச் சொல்லி அனுப்பினான்.
ஆனால் ராபர்ட் கிளைவ் மறுத்து விட்டார். உடனே ரசா சாஹேப், தான் உடனடியாக கோட்டையைத்
தாக்கி உட்புக இருப்பதாகத் தகவல் அனுப்பினான். இதனால் கிளைவின் படை எதிர்வரும் கோட்டை
முற்றுகையை எதிர்கொள்ள தயாரிப்பு வேலைகளில் இறங்கியது.
இதற்கிடையே
கிளைவ் ரசா சஹேபுக்கு அனுப்பிய பதிலில் தான் கோட்டையைப் போரிட்டுப் பிடித்துக் கொண்டவன்
என்றும், தன்னுடைய படை வீரர்கள் ஈவிரக்கம் இல்லாத முரடர்கள் என்றும், அப்படியிருக்கும்
போது, ரசா தன் படைகளை விட்டுத் தாக்குவதற்கு முன்பு நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டுமென்பதை
வலியுறுத்தி செய்தி அனுப்பினான். ரசா சாஹேப் துணிந்து நவம்பர் 14ஆம் தேதி தாக்குதலை துவக்குவதென்று முடிவெடுத்தான். காரணம்
அன்று ரம்ஜான் பண்டிகை. ஆனால் நவம்பர் 13இல் ஒரு ஒற்றன் கிளைவிடம் வந்து ரசா சாஹேப்,
அடுத்த நாள் கோட்டையைத் தாக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் சொன்னான். மறுநாள் எதிரிகளின்
படை கோட்டையை நோக்கி நகரத் தொடங்கியது. தங்கள் படைக்கு முன்னால் ஏராளமான யானைகள் அடங்கிய
ஒரு யானைப் படையை அனுப்பினார்கள். அதன் முகபடாமில் இரும்பு தகடுகள் பொறுத்தப்பட்டிருந்தன.
அந்த யானைகள் வேகமாக வந்து கோட்டைக் கதவுகளை முட்டித் தகர்த்தால் மரக் கதவுகள் உடைந்து
திறந்து கொள்ளும் அபாயம் இருந்ததை உணர்ந்து கொண்டார் கிளைவ். அப்படி கோட்டையை
முட்டி உடைக்க வேகமாக வந்து கொண்டிருந்த யானைகளின் மேல் கிளைவின் பீரங்கிகள் தாக்குதல்
நடத்தின.
தாக்குதல்களுக்கு
உள்ளான யானைகள் மிரண்டு போய் திரும்பி ஓடத் தொடங்கின. அப்படி ஓடுகின்ற போது அவற்றை
நடத்தி வந்த ரசாவின் வீரர்களைத் துவம்சம் செய்துகொண்டு ஓடின. ரசாவின் வீரர்கள் அகழியின்
மீது மரப் பலகைகளை வீசி பாலம் அமைக்கத் தொடங்கினார்கள். அந்த மரப் பாலத்தைத் தாண்டி
கோட்டையைப் பிடிப்பது அவர்கள் திட்டம். இதனைப் புரிந்து கொண்ட கிளைவ் சாமர்த்தியமாக
அந்த மரப் பாலத்தைத் தகர்த்து அந்த முயற்சியைத் தடுத்து விட்டார். ரசாவின் படை வீரர்கள்
கோட்டை அகழியின் வறண்ட பகுதிகளைக் கண்டறிந்து அதன் மூலமாய் கோட்டைக்குள் புக முயற்சி
செய்தார்கள். ஆனால் கோட்டைக் குள்ளிருந்து கிளைவின் பிரிட்டிஷ் படைகள் கடுமையாக பீரங்கித்
தாக்குதலை நடத்தத் தொடங்கியது. இன்னொரு பிரிவினர் கோட்டையைக் காப்பதில் எல்லா ஏற்பாடுகளையும்
செய்து கொண்டிருந்தனர். ரசாவின் முன்னால் செல்லும் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களையும்,
வெடி மருந்துகள், குண்டுகள் இவற்றை பின்னால் இருக்கும் படை அனுப்பிக் கொண்டே இருந்தது.
இப்படி தாக்குதல் நடத்திய ரசா படையை உள்ளே இருந்த கிளைவின் பிரிட்டிஷ் படை அடித்துத்
துரத்தியது.
ரசாவின் வீரர்கள்
ஓடத் தொடங்கினார்கள். இந்தப் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. தாக்குதல்
நடத்திய ரசாவின் படையில் நானூறு பேர் உயிரிழந்தனர். கிளைவின் படையில் ஐந்தாறு பேர்கள்
மட்டுமே இறந்தார்கள். கோட்டை முற்றுகை பயங்கரமான இரவு முழுதும் தொடர்ந்தது எந்த நேரத்திலும்
ரசாவின் படைகள் மறுபடியும் கோட்டையைத் தாக்கலாம் என்ற ஐயம் இருந்து கொண்டிருந்தது.
ஆனால் மறுநாள் பொழுது விடிந்ததும் கோட்டைக்கு வெளியே எதிரியின் படைகளின் நடமாட்டத்தையே
காணோம். முந்தைய இரவு முன் பொழுதில் நடந்த பீரங்கித் தாக்குதலுக்கிடையே ரசா தன் வீரர்களை
மெல்ல முற்றுகையை நீக்கிக் கொண்டு பின்வாங்க ஆணையிட்டிருந்தான். அவன் படை வேலூருக்குச்
சென்றடைந்தது. அப்படி அவர்கள் பின்வாங்கி ஓடுகின்ற போது ஏராளமான துப்பாக்கிகள், குண்டுகள்
இவற்றை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.
பிரெஞ்சுப்
படையின் ஆதிக்கம் ஓங்கிவிடும், பிரிட்டிஷ் கம்பெனியார் தென்னிந்தியாவை பிரான்சுக்கு
விட்டுக் கொடுத்துவிட்டுத் திரும்பிவிட வேண்டுமென்று எண்ணியிருந்த சூழ்நிலையில், படைவீரர்களின்
எண்ணிக்கையில் பிரெஞ்சு படை அதிகம் இருந்தாலும் கிளைவின் சாமர்த்தியத்தால் போரின் முடிவை
அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டார். ஆள்பலம் மட்டும் போதாது, வெற்றிக்கு வேறு பல தந்திரங்களும்
உண்டு என்பதை கிளைவ் நிரூபித்து விட்டார். கிளைவின் இந்த வெற்றி இந்தியாவில் பிரிட்டிஷ்
கிழக்கிந்திய கம்பெனியாருக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்ததென்றால்
அது மிகையில்லை. ராபர்ட் கிளைவின் வரலாற்றை எழுதிய மார்க் பென்ஸ் ஜோன்ஸ் என்பார் எழுதுகிறார்,
“கிளைவின் இந்த சாதனை, அவருடைய அதிர்ஷ்டமாகவோ,
எதிரிகளின் தவறான நடவடிக்கைகள் மூலமாகக்கூட இருக்கலாம், இந்த நிகழ்வானது இந்தியாவில்
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரின் நாடு பிடிக்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாகவும்,
தாங்கள் தோற்கடிக்கப் பட முடியாதவர்கள் என்கிற எண்ணத்தையும், இந்தியாவில் தாங்கள் நிரந்தரமாக
நிலைத்து விடலாம் என்ற எண்ணத்தை இந்த வெற்றி கொடுத்தது” என்கிறார்.
இந்த ஆற்காடு
வெற்றிக்குப் பிறகு ஏராளமான இந்திய சிப்பாய்கள் பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய படையில்
சேர்ந்தார்கள். எதிரிகளின் படைவீரர்களும் கட்சி மாறி கிழக்கிந்திய கம்பெனி படையில்
சிப்பாய்களாகச் சேர்ந்து கொண்டார்கள். ஆங்கில படையின் வலிமை அதிகரித்துக் கொண்டே போன
நிலயில் பிரான்சின் காலனி ஆதிக்க ஆசைக் கனவு, மெல்ல மெல்ல அழியத் தொடங்கியது. அதன்
தொடர்ச்சியாக பின்னர் ஐரோப்பாவில் நடந்த ஏழாண்டு
போரில் பிரான்சின் தோல்விக்குப் பிறகு அவர்கள் இந்தியாவை காலனியாக ஆக்கும் கனவை அறவே
மறந்துவிட வேண்டி இருந்தது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் இங்கே நிலையாக காலூன்றி
ஆட்சி செலுத்தத் தொடங்கினார்கள். அப்படி இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியார்
இங்கு காலூன்ற காரணமாக இருந்தவர் ராபர்ட் கிளைவ்.
No comments:
Post a Comment