பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, January 10, 2021

தமிழகத்தில் ஐரோப்பியர்கள் ஆதிக்கம்.

                 வரலாற்றுப் பெருமைகள் அதிகம் பெற்றதும், முதுபெரும் நாகரிகத்துக்குப் பெயர் பெற்ற பாரதத் திருநாட்டில் ஐரோப்பியர்கள் காலடி எடுத்து வைத்த பிறகு இங்கு பல மாற்றங்கள் நிகழ்ந்தன. காலங்காலமாக நாம் கடைபிடித்து வந்த கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை, இறை நம்பிக்கை, இவை அத்தனையும் தலைகீழாகப் புறட்டிப் போடப்பட்டு ஒரு கலவை சமுதாயமாக இந்த நாடு மாற்றப்பட்டுவிட்டது.  பாரதத் திருநாடு நாலா புறங்களிலும் இயற்கை அரண்களால் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், வடமேற்கு திசையிலிருந்து அந்நிய நாட்டவர்கள் இங்கே உள் நுழைந்து இங்கே தங்கள் ஆதிக்கத்தை மெல்ல மெல்ல நிலைநிறுத்தி, ஒரு காலகட்டத்தில் இந்த அருமைத் தாய் நாடு பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டு தவித்துக் கொண்டிருந்தது. அந்த நிலைமை இருபதாம் நூற்றாண்டில்தான் மாறி இங்கு அந்நியர்களே அதிகாரத்தில் இல்லை, நம்மை நாமே ஆண்டுகொள்ளும் ஒரு முழு இந்திய சமுதாயமாக மாறி நம்மை நாமே ஆண்டுகொள்ளும் ஜனநாயக அமைப்பிற்குள் வந்திருக்கிறோம்.

            பழம்பெருமை வாய்ந்த நம் பாரதத்தில் உள் நிழைந்த அந்நிய சக்திகளில் போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டென்மார்க்கைச் சேர்ந்தவர்கள், ஆங்கிலேயர்கள் என்று பலரும் இந்த நாட்டைத் தங்கள் வேட்டைக்காடாக மாற்ற வீறுகொண்டு எழுந்து வந்தார்கள். இவர்கள் இந்த புண்ணிய பூமியில் காலடி எடுத்து வைத்த பொது இங்கே தங்கள் நாட்டு வாணிபப் பொருட்களை விற்கவும், நம் நாட்டுப் பொருட்களை வாங்கிச் செல்லவுமாகச் சொல்லித்தான் அன்றைக்கு துண்டு துண்டாக ஆங்காங்கே ஆண்டுகொண்டிருந்த மன்னர்களின் சம்மதத்தைப் பெற்றுத் தங்கள் தொழிலைத் தொடங்கினார்கள்.

            முதலில் நம்பக்த் தன்மை உடையவர்களைப் போல வேடமிட்டு, நம் நாட்டு சமஸ்தானங்களின் ராஜாக்களின் அனுமதியோடு இங்கே தொழிலைத் தொடங்கியவர்கள், போகப்போக இந்த வளம் மிக்க நாட்டின் செல்வச் செழிப்பால் கவரப்பட்டு நாடு பிடிக்கும் ஆசைகொண்டு ஆங்காங்கே வன்முறையைக் கடைபிடித்து போர்க்களங்களை உருவாக்கித் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டார்கள்.

            அந்நியர்கள் தமிழ்நாட்டில் நுழைந்து நாடுபிடிக்கத் தொடங்கியவர்களில் பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், ஆகியோரைச் சொல்லலாம். இவர்கள் வருகையால் அமைதி தவழ்ந்து கொண்டிருந்த தமிழகத்தில் ஆங்காங்கே சிறு பூசல்களும், சண்டைகளும் நடந்தேறி வந்தன.

            அந்நியர்களின் காலடி படாத புண்ணிய பூமியாக தென் இந்தியப் பகுதிகள் இருந்து வந்தன. அந்நிய படையெடுப்புகளால் வட இந்தியாவின் பெரும்பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், தென் தமிழ் நாடு பாதிப்படையாமல்தான் இருந்து வந்தது. ஆனால் 17ஆம் நூற்றாண்டில் ஒரு திருப்பு முனை நேர்ந்தது. வாணிபம் செய்யும் நோக்கில் இங்கே ஐரோப்பியர்கள் மெல்ல காலடி எடுத்து வைக்கத் தொடங்கினார்கள்.  அவர்களுடைய சாமர்த்தியம் எடுத்த எடுப்பில் இங்குள்ள மன்னர்களோடு பொர் தொடுத்து, அதில் வெற்றி பெற்று நாடுகளைக் கைப்பற்றுவதில்லை. மாறாக நம் மன்னர்கள் அறியாத அபூர்வமான பொருட்களைக் கொணர்ந்து வர்த்தகம் புரிவதாகச் சொல்லி மெல்ல மெல்ல நாடு பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். நம் நாட்டு சிற்றரசர்கள், எதையும் உண்மையென நம்பி இவர்களுக்கு இடம் கொடுத்து ஆதரிக்கவும் தொடங்கினார்கள். அப்படி காலடி எடுத்து வைத்த பெரும்பாலான மேற்கத்தி நாட்டுக் காரர்கள், குறிப்பாக தமிழ் நாட்டின் கடற்கரைப் பிரதேசங்களில் முதலில் தங்கள் மதத்தை இங்குள்ள மக்களிடம் பரப்பத் தொடங்கினர். அவர்களை மதமாற்றம் செய்வது அதிகரித்தது. ராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி காலத்தில் ஒரு மேலைநாட்டுப் பாதிரியார் வந்து தான் கோயில் கட்டிக் கொள்வதாகச் சொல்லி இடம் கேட்டு ஆங்கோர் தேவாலயம் கட்டி, கடற்கரை ஓரமாக வாழ்கின்ற மீனவர்களை ஒட்டுமொத்தமாக மதம் மாற்றினார். அது நாளடைவில் அதிகரித்து, மறவர் நாட்டின் அரசுரிமை உடைய ஒரு மன்னரிடமே அதைச் செய்தபோது கிழவன் சேதுபதி விழித்துக் கொண்டு, அந்த பாதிரியாரை சிறைபிடித்ததாக ராமநாதபுரத்து வரலாறு சொல்கிறது.

            கிழவன் சேதுபதி போல ஒருசில மன்னர்கள் விழித்துக் கொண்டாலும், பெரும்பாலான சிற்றரசர்கள் இதனைக் கண்டு கொள்ளமல் விட்டுவிடவே, ஐரோப்பியர்கள் மதமாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டு மக்களை மதமாற்றம் செய்து வைத்தனர்.

            போர்த்துகீசியர்கல் முதலில் மேற்குக் கடற்கரையில் கள்ளிக்கோட்டையில் வந்து இறங்கி அங்கு தங்கள் ஆதிக்கத்தைத் தொடங்கி, பின்னர் இந்தியா சுதந்திரம் அடையும் போது கூட கோவாவில் அவர்கள் ஆட்சி தொடர்ந்து வந்ததை நாம் அறிவோம். அப்படி இந்தியாவில் முதன் முதல் காலடி எடுத்து வைத்த போர்த்துகீசியர்கள் வாணிபம் செய்ய வந்திருப்பதாகச் சொல்லித்தான் ஆங்காங்கே இருந்த சுதேச மன்னர்களிடம் இடம் வாங்கி வாணிபத்தைத் தொடங்கினார்கள். அவர்கள் இங்கு விளையும் சில பொருட்களை வாங்கிக் கொண்டும், அவர்களிடம் இருந்த பல ஆடம்பரப் பொருட்களை இங்கே விற்றும் முதலில் பண்டமாற்று வழியைப் பின்பற்றினர். இந்த போர்த்துகீசியர்கள் மேலைக் கடற்கரையில் வந்து இறங்கி அவர்கள் மெல்ல மெல்ல குடியேறிய பகுதி மேற்குப் பகுதிதான்.

            தமிழ்நாட்டுப் பகுதியான மதுரையில் நாயக்க மன்னர்கள் ஆண்டுவந்த காலத்தில் பெர்னாண்டஸ் பாதிரியார் இங்கே ஒரு கிறிஸ்தவ சபையைத் தொடங்கினார். வீரப்ப நாயக்கர் என்பவர் காலம் அது. இந்த பெர்னாண்டஸ் பதினான்கு ஆண்டுகள் இங்கே மதமாற்றம் செய்து ஏராளமானவர்களை மதமாற்றம் செய்வித்தார். அப்போது நம் தமிழ் மக்கள் இவர்களைப் பறங்கியர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவர்களுடைய பசு மாமிச உணவுப் பழக்கத்தையும், மதுபான பழக்கத்தையும் நம் மக்கள் விரும்பவில்லை. நம் மக்களின் வெறுப்புணர்வு காரணமாக இங்கு குடியேறின போர்த்துகீசியர்கள் இங்கே காலூன்றமுடியவில்லை. மதுரையில் அவர்கள் எடுத்த முயற்சி வீணானதாயிற்று.

 

 

 

No comments: