இந்த
சொற்றொடரைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது மகாகவி பாரதியாரின் “கண்ணன் – என் சேவகன்”
எனும் பாடல்தான். அதில் அவர் தனக்கு அமைந்த சேவகன் ஒருவனைப் பற்றி அழகாக முன்னிலைப்
படுத்துகிறார். அவன் எப்படிப்பட்டவன் என்பதைச் சொல்வதற்கு முன்பு, பொதுவாக நமக்கு அமையும்
சேவகர்கள் எப்படியிருப்பார்கள் என்று சொல்லிவிட்டு, இப்போது தன்னிடம் வந்து நிற்கும்
இந்த சேவகனைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறார். அந்த அழகான, பொருள் பொதிந்த வரிகளை முதலில்
பார்த்து விடுவோம். அவர் சொல்கிறார்.....
“கூலி மிகக் கேட்பார், கொடுத்ததெலாம் தாமறப்பார், வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே
தங்கிடுவார்”.
மறுநாள்
அவன் வேலைக்கு வந்துதானே ஆகவேண்டும், அப்படி அவன் வரும்போது, “ஏனடா நீ நேற்றைக்கு இங்கு
வரவில்லை?” என்றால் அவன் சொல்லும் பதில்கள்தான் நம்மை திகைக்க வைக்கின்றன. அவன் சொல்கிறான்,
“பானையிலே தேள் இருந்து, பல்லால் கடித்ததென்பார்; பாட்டியார் செத்துவிட்ட பன்னிரெண்டாம்
நாளென்பார், அதுமட்டுமா? “வீட்டிலே பெண்டாட்டி மேல் பூதம் வந்ததாம்” எப்படி இருக்கிறது
காரணங்கள்? அத்தோடு விட்டால் பரவாயில்லை, அவன் அடுக்கிக் கொண்டே போகும் பொய்க்காரணங்களைக்
கேட்டு அழுவதா, சிரிப்பதா தெரியவில்லை.
அவன்
சொல்கிறான், “பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளாம்” இப்படி அவன் ஓயாமல் பொய்
உரைப்பான், நாம் ஒன்று செய்யச் சொல்லி ஏவினால் வேறொன்றைச் செய்து வருவான். நமக்கு உறவு
என்போர் அனைவருமே நம் நன்மைகளில் மிகுந்த அக்கறை உடையவர்கள் என நினைக்க முடியாது. சில
தாயாதியர் உண்டு, அவர்களுக்கு நம்மைப் பற்றிய ரகசியங்கள் தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும்,
ஆகையால் நம் வீட்டு நிகழ்வுகளை வேலையாள் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டு அவை துன்பகரமாக
இருக்குமானால் அவர்களுக்கு மகிழ்ச்சி, இன்பம் பயப்பதாக இருக்குமானல் அவர்களுக்கு ஏமாற்றம். நம் வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள்
இருக்கும், அவற்றை நாம் வீட்டினுள் விவாதிப்பதும், ஓர் முடிவெடுப்பதுவும் நடப்பது இயற்கைதானே?
அப்படிப்பட்ட செய்திகள் இவர்கள் காதில் விழுந்து விட்டால் போதும், இவர்கள் வேலைக்குப்
போகும் இதர வீடுகளில் போய் “உங்களுக்கு விஷயம் தெரியுமா? அவர்கள் வீட்டில் இப்படியெல்லாம்
பிரச்சனைகளாம், அவர்கள் பேசிக்கொண்டார்கள்” என்று ஒலிபெறுக்கி இல்லாமல் ஒலிபரப்பு செய்வார்கள்.
வீட்டில்
மிகச் சாதாரண, எப்போதாவது பயன்படக் கூடிய பொருட்களில் “எள்” ஒன்று. எள் தானேயென்று
நாம் தேவைப்படும்போது வாங்கிக் கொள்வோம் என்றிருப்போம். அப்படிப்பட்ட நேரத்தில் ஏதோவொரு
சந்தர்ப்பத்தில் எள் இல்லை என்பது தெரியவருகிறது. அது எப்படிப்பட்ட அகில உலக பிரச்சனை?
அதைப் போய் ஊர் முழுதும் போய் தெரிந்தவர்களிடமெல்லாம், “அம்மா விஷயம் தெரியுமா? அவுங்க
வீட்டுல விசேஷத்துக்கு எள்ளைத் தேடினால், வீட்டில் எள் இல்லை” என்பதை மிகப் பெரிய குற்றம்
போல எடுத்து உரைப்பார்கள். இப்படி நாம் வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கும் ஆட்களால்
உண்டாகும் தொல்லைகள் மிக அதிகம் என்பதை அனைவரும் அனுபவித்திருப்பார்கள். ஆனால் அப்படி
நம் ஏவலுக்கென்று ஓடியாடி வேலை செய்ய ஒரு ஆள் இல்லையென்றாகி விட்டால் ஒரு வேலையும்
நடப்பதில்லை. இது அனுபவத்தில் கண்டது என்கிறார் பாரதியார். அதில் நான் மட்டும் விலக்காகிவிடுவேனா,
நானும் அப்படிப்பட்ட இடரைச் சந்தித்தவன் தான். அப்போதுதான் ஒருவன் வந்து நின்றான்,
தான் வேலைக்கு வருவதாகச் சொல்லிக் கொண்டு.
பாரதி
கேட்கிறார், திடுதிப்பென்று ஒருவன் வந்து நான் வேலைக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டால்
உடனே சேர்த்துக் கொண்டுவிட முடியுமா? முடியாதல்லவா? அவன் யார், எங்கிருந்து வருகிறான்,
அவனுக்கு என்ன அனுபவம் இவற்றையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா? ஆமாம்,
அதனால் தான் நான் உனக்கு என்ன வேலைகள் எல்லாம் தெரியும் என்று கேட்டேன். அவன் சொன்னான்,
“ஐயனே! நான் சாதியிலே இடைச்சாதி. அட இது என்ன இடைச்சாதி என்று வியந்த போதுதான் புரிந்தது,
அவன் சொல்வது தான் “இடைப்பட்ட சாதி”, அதாவது தேவர்களுக்குள்ளும் இல்லை, மனிதர்களுக்குள்ளும்
இல்லை, இவர்கள் இரண்டு பேருக்கும் இடைப்பட்டவரான தேவாம்சம் பொருந்திய மனிதருள் தேவன்
அதாவது ஒரு அவதார புருஷன் என்று சொல்கிறான் என்று. (உலக வழக்கில் யாதவர்களை இப்படி
குறிப்பிடுவார்கள்) வீட்டிலுள்ள மாடுகன்றுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மேய்ந்த
பின் வீட்டில் கொண்டு வந்து பத்திராமாய்ச் சேர்த்திடுவேன்.
வீட்டை
நன்கு பெருக்கி சுத்தம் செய்து, மாலையானால் இருள் நீங்கும்படி விளக்குகளை ஏற்றி வைத்து,
யார் என்ன சொன்னாலும் அவர்கள் சொன்ன வேலைகளை விரைந்து செய்து முடிப்பேன், வீட்டிலுள்ளோர்
துணிமணிகளை யெல்லாம் நன்கு துவைத்து காயவைத்து மடித்து வைப்பேன், வீட்டிலுள்ளோர் சொல்லும்
பணிகளையெல்லாம் அவர்கள் சொன்னபடி கேட்டுச் செய்வேன். வீட்டிலுள்ள சின்ன குழந்தைகள்
அவ்வப்போது அழும், விஷமங்கள் செய்யும், அடம் பிடிக்கும் அல்லவா, அப்போதெல்லாம் நான்
அவர்களுக்கு சிங்காரமாகப் பாடல்கள் பாடியும், அதற்கேற்ப ஆட்டங்கள் ஆடியும், குழந்தைகள்
அழாதபடி பார்த்துக் கொள்வேன்.
எஜமான்
வெளியூர் பயணம் செய்கிறார் அதிலும் காட்டு வழியில் செல்கிறார் எனும்போது, அங்கு வழியில்
கள்வர் பயம் இருக்குமென்பதால், இரவு எந்நேரமாக இருந்தாலும் என் சிரமங்களைப் பார்க்காமல்,
எஜமானருடன் களைப்பின்றி சுற்றி வந்து, அவருக்கு எவ்வித துன்பமும் ஏற்படாதபடி காப்பேன்” என்கிறானாம் அவன்.
இப்படி தொடங்குகிறது பாரதியாரின் “கண்ணன் என்
சேவகன்”. பின்னர் அவன் யார் என்பதையும், அவன் திறமைகள் என்பதனைத்தையும் எஜமான் கேட்டுத்
தெரிந்து கொண்டு அவனைத் தனக்குப் பணியாளாக அமைத்துக் கொள்கிறார் என்று போகிறது பாரதியாரின்
பாடல்.
பாரதிக்கு
அமைந்த சேவகன் இருக்கிறானே, அவன் தன் எஜமானரிடம் எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல்,
அவரே வியந்து பாராட்டும் வகையில் நன்றியை எதிர்பார்க்காமல் பணியாற்ற முன்வருகிறான்.
வேலையாள் என்றதும் அவனுக்கு என்ன கூலி கொடுப்பது என்ற கேள்வி எழுமல்லவா? அவரே கேட்கிறார்.
அதற்கு
அவன் சொல்கின்ற பதில்தான் நம்மை அதிசயிக்க வைக்கிறது. அவன் சொல்கிறான், “ஐயனே, தாலிகட்டும்
பெண்டாட்டி, சந்ததிகள் ஏதுமில்லை, நானோர் தனி ஆள். உடலில் நரை திரை தோன்றாவிடினும்
எனக்கு ஆனவயதுக்கு அளவில்லை. தேவரீர் ஆதரித்தால் போதும் அடியேனை, நெஞ்சிலுள்ள காதல்
பெரிது எனக்குக், காசு பெரிதில்லை” என்றான். இப்படியும் ஒருவன் இருப்பானா? வியந்து
போய் அவன் திறமைகளையெல்லாம் சொல்லி, அவனை நான் பணியாளாகக் கொள்வதற்கு என்ன தவம் செய்து
விட்டேன், அவன் எனக்காக “எங்கிருந்தோ வந்தான்” என வியக்கிறார் பாரதி கண்ணன் என் சேவகனில்.
பாரதியின்
இந்த கண்ணன் பாட்டிலுள்ள ‘கண்ணன் – என் சேவகன்” பாட்டைப் படிக்கும் போது காப்பியங்களில்
ஒன்றான இராமாயணத்தில் இவனைப் போலவே ஒருவன் எவ்வித பயனையும் எதிர்பார்க்காமல், தனக்கென்று
எதையும் கேட்காமல், தான் மதிக்கும் இராமனுக்கு சேவை செய்வதே தன் ஜன்ம லட்சியம் என்று
ஒருவன் இருந்தது நம் நினைவுக்கு வருகிறது. பயன் கருதாது துணை புரிந்த கங்கைக் கரை வேடன்
“குகன்”தான் அந்த மாமனிதன்.
“இராம
காதையில்” குகன் எனும் பாத்திரம் ஏன் படைக்கப்பட்டது? அல்லது அவனைக் குறிப்பிட்டு ஒரு
படலம் எழுதும் வகையில் அவன் முக்கியத்துவம் பெற்றது எப்படி? இந்த குகன் எனும் படகோட்டி
இல்லையென்றால் இராமனால் கங்கையாற்றைக் கடந்து சென்றிருக்க முடியாதா? வழிநெடுக எத்தனையெத்தனை
நதிகளையெல்லாம் கடந்து வந்த இராமனுக்கு கங்கையைக் கடப்பது என்பது ஒரு சிரமமான காரியமா
என்ன? இல்லை! ஆனால் உலகில் சுயநலம் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்தாலும், தனக்கென்ற
சுயநலம் எதுவுமின்றி தன் மனதுக்கு நிறைவான, பக்தி கொண்டு ஒரு பெரியோருக்குச் சேவை செய்வதைத்
தன் கடமையாகக் கொண்ட ஒருவனும் இருந்தான் என்பது உலகுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்
குகன் எனும் பாத்திரம்.
கைகேயி
கேட்ட வரம் ஒன்றினால் மன்னன் தசரதன் பரதன் அரசாளவும், பட்டத்துக்குரிய மூத்த மகன் இராமன்
ஏழிரெண்டாண்டுகள் வனமாளவும் வரம் கேட்ட விவரத்தைக் கம்பர் சொல்வது:
“ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என் சேய் அரசாள்வது; சீதை கேள்வன் ஒன்றால் போய் வனம் ஆளவது; எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்”
தீயினும் சுடவல்ல இத்தீய சொல்லைக் கேட்டு
தசரதன் அயர்ந்தான், நாகப் பாம்பனைய கொடியவள் நாவில் வந்த சொற்களைக் கேட்ட மன்னன் தசரதன்
மயங்கி வீழ்ந்தான். பின்னர் மெல்ல நினைவு மீண்டு எழுவான், நிற்பான், அவள் கேட்டது உண்மைதான்
என்பதறிந்து மீண்டும் வீழ்வான், உயிரடங்கிய உடல்போல வீழ்ந்து கிடந்தான். பின் மீண்டும் எழுந்தான், செய்வதறியாது திகைத்தான்.
கையோடு
கையைப் புடைத்துத் தன் கோபத்தை வெளிப்படுத்தினான், வாய் கடித்து, நெஞ்சு சோர்ந்து வலியிழந்து
இவ்வையகத்தையே கட்டியாண்ட தசரதன் அனைத்தும் அழிந்து வெட்டப்பட்ட மரமென வீழ்ந்து மயங்கினான்.
பின்னர்
நடந்தவை அனைத்தும் காப்பியம் நமக்குக் காட்டிவிட்ட காட்சிகள். கானகத்தில் இராமனையும்,
சீதையையும், இலக்குவனையும் கொண்டு போய் இறக்கிவிட்டு சுமந்திரன் ஊர் திரும்ப, பளிங்குத்
தரையில் நடந்து பன்னீரில் நீராடி, மாடத்தில் வெண்ணிலவு கண்டு மகிழ்ந்திருக்க வேண்டிய
அம்மூவரும் அந்தோ, அந்தக் கொடியவள் கைகேயி கேட்ட வரத்தினால் கல்லும் முள்ளும் மலிந்த
கானகத்துள் நடக்கத் தொடங்கினர்.
வழியில்
கங்கையெனும் புண்ணிய நதி, அதனைத் தாண்டி தென்திசை நோக்கிச் செல்ல விரும்பி அங்கிருந்து
முனிவர்களோடு அவர்கள் ஆசிரமத்தில் அமர்ந்து ராமன் உரையாற்றிக் கொண்டிருக்க, வாயிற்புறத்தில்
இலக்குவன் காவல் இருக்கிறான். அப்போது எங்கிருந்தோ கடல் அலைபோல் ஓசை கேட்கிறது. இலக்குவன்
ஓசை வந்த திசை நோக்கிப் பார்த்தான். அங்கு ஒரு பெருங்கூட்டம், வேடுவர் கூட்டமென உணர்ந்தான்
இலக்குவன். அந்தக் கூட்டத்தின் முன்னால் அறையில் கட்டிய துணியை இழுத்துக் கட்டி அதில்
கூர்மையான வாளையும் செறுகிக் கொண்டு, நச்சரவத்தின் கடும் பார்வையோடும் ஒருவன் அந்தக்
கூட்டத்துக்குத் தலைமை தாங்கி வருகிறான்.
யார்
அவன்? சிருங்கிபேரம் எனும் கங்கைக்கரை நாட்டுக்கு அதிபன் அவன். தன் தோற்றத்தால் பிறரை
அச்சுறுத்தக்கூடிய குகன் தன் உடன் வந்த வேட்டுவ மக்கள் அனைவரையும் அந்த ஆசிரமத்துக்கு
வெகுதூரத்தில் நிறுத்தினான். இவர்கள் கூச்சலால் அங்கிருக்கும் இராமனுக்குத் துன்பம்
வரக்கூடாது என்பது அவன் கருத்து.
வீரத்தோடு
நடைபோட்டு தன்னந்தனியனாய் குகன் ஒரு கையில் தேன் நிறைந்த ஒரு குடுவை, மறு கையில் கங்கையில்
அன்று தேர்ந்தெடுத்துப் பிடித்த சிறந்த மீன்கள் இவற்றோடு இராமன் தங்கியிருக்கும் ஆசிரமம்
நோக்கி தனித்தே வருகிறான்.
இராமன்
யார், எப்படி இருப்பார் என்பதெல்லாம் அந்த குகனுக்குத் தெரியாது. ஆனால் இராமன் அயோத்தி
ராஜகுமாரன் என்பதும் அவன் பராக்கிரமத்தையும், இரக்கம், நல்ல குணம் இவற்றைக் கேட்டறிந்து
அவன் மீது கட்டற்ற பக்தி கொண்டு அத்தகையவன் தானிருக்கும் கானகம் வந்த செய்தி கேட்டு
அவரை தரிசிக்க வருகிறான்.
பெரியோர்களைக்
காணச் செல்லும்போது வெறுங் கையுடனா போவது. எண்ணிப் பார்த்தான், இராமனுக்காக இந்த உலகையே
கொடுக்கலாமே. பூமி தொடங்கி ஆகாயம் வரை இயன்றால் இராமனுக்குப் படைக்கலாமே என்கிற எண்ணம்.
உயரே பார்த்தான், வானுயர்ந்த மலைகள், அவற்றில் எண்ணிறந்த உயர்ந்த மரங்கள் அவற்றின்
உச்சியில் அடர்ந்து வைத்திருக்கும் தேனடைகள். ஆகா, நாம் வசிக்கும் கானகம் வந்த இராமனுக்கு
நம் காட்டின் தேனைக் கொடுக்கலாமென்று மலைமீதேறி தேனை ஒரு குடுவையில் சேர்த்துக் கொணர்ந்தான்.
போதுமா இது? இவனுக்கு வேறு என்ன கொடுக்கலாம். தான் படகோட்டி பிழைக்கும் இந்த கங்கையில்
வாழும் கெழுமிய மீன்களைப் பிடித்துத் தந்தால் என்ன? உடனே கங்கையில் இறங்கி அங்கிருந்து
தேர்ந்தெடுத்த மீன்களைப் பிடித்துச் சேர்த்து இரு கரங்களிலும், மீனையும், தேனையும்
கொணர்ந்தான் குகன். அவனுக்கு இந்த பூமியின் அடிமுதல் முடி வரை இராமனுக்குத் தரவேண்டுமென்கிற
எண்ணம். மிகவும் ஆழமுடைய கங்கையின் வெகு ஆழத்தில் வாழ்ந்த மீன்களைப் பிடித்தான், வானுயர்ந்து
நிற்கும் மலையின் உச்சியில் இருந்த மரத்திலிருந்து தேனை எடுத்தான் அடியும், முடியும்
என் இராமனுக்கே என்று அவற்றை அவரிடம் சேர்ப்பதற்கென கொண்டு வந்தான்.
ஆசிரமத்தின்
வாயிலில் மரவுரி தரித்து, தலையில் ஜடாமுடியும் கையில் வில் அம்புமாக நிற்கும் இலக்குவனை
இராமனோ என்று சற்றுத் தயங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்படியொருவன்
வருவதைக் கண்ட இலக்குவன் குகனை நோக்கி “ஐயனே! நீவிர் யார்? என்று வினவினான்.
அவன்தான்
இராமன் என்று கருதிக் கொண்டிருந்த குகன் சொல்கிறான், “தேவா! நின் கழல் சேவிக்க வந்தேன்.
நான் இந்த கங்கை நதியில் நாவாய்கள் ஓட்டுபவன் தங்கள் அடியவன்” என்கிறான்.
இலக்குவனுக்குப்
புரிந்தது, இவன் தன்னைத்தான் இராமன் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறான் என்று. உடனே
குகனிடம் சொல்கிறான், “ஐயனே! இங்கேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டுத் தன் அண்ணனிடம்
சொல்ல உள்ளே செல்கிறான்.
உள்ளே
சென்று, அங்கு முனிவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்த இராமனிடம் பணிந்து “கொற்றவ, நின்னை
தரிசிக்கவென்று, ஒரு பெருங்கூட்டத் துடனும், சுற்றத்தார்களுடனும் ஒருவன் வந்திருக்கிறான்.
தூய உள்ளமுடையவன். பெற்ற தாயினும் அன்பு காட்டக்கூடிய நல்லவன், கங்கை நதியில் நாவாய்கள்
ஓட்டி வாழும் வேட்டுவர் குல மன்னன் குகன்” என்றான்.
இராமனுக்கு
மகிழ்ச்சி, தம்பியை நோக்கி, “அவனை என்பால் அழைத்து வா” என்றான். பரிவோடு இலக்குவன்
போய் குகனை அழைத்து வருகிறான். இராமனை முதன் முதல் இவன்தான் ராமன் என்றறிந்த கருத்த
மேனியுடைய மலைபோன்ற குகன் மண்ணில் உடல் முழுதும் படும்படியாக வீழ்ந்தெழுந்து தொழுதான்.
எழுந்து நின்று வாய் புதைத்து இராமன் முகம் நோக்கி நின்றான்.
“உட்கார்”
என்று இராமன் சொன்ன போதும் உட்காரவில்லை குகன். ஐயனே தங்களுக்காகத் தேர்ந்தெடுத்த மீன்களையும்,
தேனையும் கொணர்ந்தேன், தங்கள் திருவுள்ளம் என்னவோ?” என்றான் குகன்.
இராமன்
குகனின் அன்பின் ஆழத்தைப் புரிந்து கொண்டான். என்னே இவன் அன்பு. என்னே இவன் பண்பு.
உட்கார் என்று சொல்லியும் வாய் புதைத்து நின்ற பாங்கு இராமனை கனிந்திடச் செய்தது. இப்போது
தனக்காக அவன் அன்போடு தேனும் மீனும் கொணர்ந்த செய்தியைச் சொன்னதும் இராமனுக்கு மனதிற்குள்
இப்படியொரு அன்பா, நான் இவற்றை உண்ணலாமா என்பது கூட தெரியாமல் அன்பின் மிகுதியினால்
கொணர்ந்து தந்து உண்பாயாக என்கிறானே என்பது போல இளநகை முகத்தில் தோன்ற குகனிடம் பேசலானான்.
“உன்
உள்ளத்தில் உள்ள மிகுந்த அன்பின் காரணமாக எனக்கென்று அரியதாக இவற்றைக் கொண்டு வந்திருக்கிறாய்
எனும்போதே, அவை அமிழ்திலும் பெருமை மிக்கதன்றோ? ஆழ்ந்த அன்போடு தரும் எதுவும் அமிழ்தம்,
இவற்றை நாம் அன்போடு ஏற்றுக் கொண்டு உண்டதாகவே எண்ணிக்கொள்” என்றான்.
மறுநாள்
கங்கை நதியைக் கடந்து இராம, இலக்குவன், சீதை செல்வதற்கு படகினைத் தயார் செய்து வை என்று
குகனை அனுப்பினார் இராமன். குகன் ஐயன் இட்ட கட்டளைப்படி மறுநாள் கங்கை நதியைக் கடக்க
ஓர் படகைக் கொணர்ந்து காத்திருந்தான். அண்ணலும், சீதையும், இலக்குவனும் படகுக் கரை
வந்ததும், அவர்கள் பாதங்களை கங்கை நீரால் *நீராட்டி மனம்
மகிழ்ந்து பாதத்தை படகில் வைக்க வேண்டி அடுத்த கரை கொண்டு சேர்த்தான்.
(*இந்த இடத்தில்
ஒரு செய்தியை பேராசிரியர் இரா.ராதாகிருஷ்ணன் சொல்வார். அதாவது முன்பு விசுவாமித்ர முனிவருடன்
இராம லட்சுமணர் கானகத்தில் சென்று கொண்டிருக்கும் போது ராமனின் பாத துகள் பட்டு ஒரு
பாறை பெண்ணாக மாறியதாம், அது போல இப்போது ராமன் காலிலுள்ள மணல் பட்டு தன் படகு பெண்ணாகி
விட்டால் என்ன செய்வது என்று அவர் காலை கங்கையின் புனித நீரால் நீராட்டினான் என்பார்.
இது நகைச்சுவைக்காகச் சொன்னது என்றாலும், ரசிக்கக் கூடியது)
முன்பின்
அறியாத, தனக்கென்று எதையும் கேட்டுப் பெறத் தெரியாத வேட்டுவக் குலத் தலைவன் காட்டிய
அன்பு இராமனிடம் எதையும் எதிர்பார்த்தா? இல்லையே. அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்?
உண்மையான அன்பு இருந்தால் பயன் கருதாது சேவை செய்வதை பாரதியின் சேவகனும் செய்தான்,
இராமனின் தம்பியரில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட குகனும் செய்தான்.
எதற்கும்
பயன் எதிர்பார்க்கும் இவ்வுலகில், இப்படி பயன் கருதாமல் உள்ளத்தை அர்ப்பணிப்பு செய்யும்
அபூர்வ மனிதர்களும் நம் நாட்டில் இருந்திருக்கிறார்கள். பாரதியின் சேவகனையும், இராமனின்
குகனையும் நட்புக்கு இலக்கணமாய், அன்புக்கு இலக்கணமாய்க் கொண்டால் வாழ்வு இனிமையுறும்.
1 comment:
அருமையான பதிவு
https://tamilmoozi.blogspot.com/?m=1
Post a Comment