பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, April 16, 2020

மறைந்த மாயம்!

                                                        மறைந்த மாயம்!         
                                                               
          இந்தத் தலைப்பு யாரைப் பற்றியது? இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் ஏராளமான தலைவர்கள் பெயர்களைத் தெரிந்த அளவுக்கு இளம் தலைமுறையினர் நேதாஜி என அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போசை அறியவில்லை.  உண்மையில் முதன் முதலில் சுதந்திர விழா கொண்டாடி இந்திய மூவண்ணக் கொடியை யேற்றி உரையாற்றியது சுபாஷ்தான். அது நடந்தது அந்தமான் தீவில், ஜப்பானியர்கள் கீழை நாடுகளையெல்லாம் வென்று பர்மாவையும் பிடித்து அந்தமான் தீவுகளைத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அதை சுபாஷிடம் அளித்ததும், அங்கு நமது கொடியை ஏற்றி வைத்து உரையாற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
“On this day in the year 1943, (30-12-1943) Netaji Subhash Chandra Bose hoisted the National Flag for the first time at the Gymkhana Ground (present Netaji Stadium) in Port Blair. He also announced the Islands, the first Indian Territory freed from the British rule.”

            ஜப்பானியர்கள் அந்தமான் தீவை நேதாஜியிடம் ஒப்படைத்த போதும், ஜப்பானிய படைகள் இந்தியர்கள் மீது நடத்திய கொடுமை ஒரு பக்கம் நடந்த சோக வரலாறு.

            சிப்பாய் கலகம் எனும் முதல் சுதந்திரப் போரில் காசியைச் சுற்றிய கிராமங்களில் நுழைந்து கண்டவர்களையெல்லாம் கொலை செய்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கர்னல் நீல் என்பானுக்குச் சென்னையில் ஒரு சிலை திறந்து வைத்திருந்தார்கள். அதை எடுக்க ஒரு போராட்டம் நா.சோமையாஜுலு என்பவர் தலைமையில் நடந்தது. அது 1936இல் ராஜாஜி முதலமைச்சராக ஆனபோது பெயர்க்கப்பட்டு எழும்பூர் காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அதைப் போல கல்கத்தாவில் ஹால்வெல் என்ற ஆங்கிலேயப் படை தளபதி ஒருவனுக்கு சிலையொன்று வைக்கப்பட்டது. 1940ஆம் ஆண்டில் சில இளைஞர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் அந்தச் சிலையை உடைக்க முயன்றனர். பிரிட்டிஷ் அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

            காந்திஜி தலைமையில் நடந்த அகிம்சை போராட்டம் ஒரு புறம் நடந்தாலும், ஆயுதபலம், படைபலம் கொண்டுதான் பிரிட்டிஷ் அரசை வெளியேற்ற முடியும் என்று போஸ் நம்பினார். அப்படியொரு படையை நிறுவி தானே முன்னின்று இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற முடிவெடுத்தார். சில தலைவர்கள் முயற்சியால் இவரை எப்படியாவது ரஷ்யாவுக்கு அனுப்பிவிட முயற்சிகள் நடந்தன.

            அந்த நிலையில் நேதாஜி உண்ணாவிரதம் மேற்கொண்டார். கட்டாயப் படுத்தி இவருக்கு உணவு செலுத்த போலீஸ் முயன்று தோற்றது, அதனால் அரசு அவரை விடுதலை செய்து வீட்டுச் சிறையில் கொண்டு போய் வைத்தது. அங்கு அவர் உறவினர்கள் உட்பட எவரையும் பார்க்காமல் தனிமையில் இருந்தார். உணவு மட்டும் ஓரிடத்தில் வைக்கப்படும், அவர் எடுத்துக் கொள்வார். வெளியில் இருந்தவர்களிடம் இவர் யோகியாகி விட்டார் யாரிடமும் பேசமாட்டார் என்று ஒரு வதந்தியும் இருந்தது.

            அப்படி அவர் வெளியில் வராமல் இருந்த காலத்தில் தாடி மீசை வளர்ந்ந்து உருமாறி காணப்பட்டார். இந்த நிலையில் 1941 ஜனவரி 15 அன்று இரவு போஸ் தங்கியிருந்த இல்லத்திலிருந்து இரண்டு பேர் இஸ்லாமியர்கள் போல தோற்றத்தில் கிளம்பி ஒரு காரில் ஏறி வெளியேறினர். அந்தக் கார் கல்கத்தாவிலிருந்து நாற்பது மைலுக்கு அப்பால் இருந்த ஒரு ரயில் நிலையம் சென்று அவரை இறக்கிவிட, அந்த இருவரும் ரயிலில் ஏறிச் சென்று விட்டனர்.

(இந்த நிகழ்வு குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரிசா மாநில கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஒருவர் கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் சொல்லியிருப்பதாவது: பம்பாயில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ.டாங்கே ஒரிசா, கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரான (அந்த கட்டுரை ஆசிரியருக்கு) தகவல் அனுப்பி ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் ஒருவரை, மாறுவேஷத்தில் எப்படியாவது பெஷாவருக்குக் கொண்டு வந்து சேர்த்துவிடச் சொன்னதாகவும், அதன்படி மாறு வேஷத்தில் இருவரும் பெஷாவர் சென்று அங்குக் காத்திருந்த இரஷ்ய நாட்டுக்காரர்களிடம் அவரை ஒப்படைத்து விட்டதாகவும் அந்த கட்டுரையாளர் எழுதியிருந்தார். கடைசி வரை தான் அழைத்துச் செல்லும் நபர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்பது அவருக்குத் தெரியாதாம்.)

            1941 ஜனவரி 17ஆம் தேதி இவர்கள் பெஷாவரை அடைந்தனர். அங்கு அவர்களை ஒருவர் காரில் வந்து அழைத்துச் சென்றார். மெளல்வி உடையில் இங்கிருந்து சென்றவர் அங்கு ஒரு பட்டாணியராக (பதான்) உருமாறி இருந்தார். அவர் அங்கிருந்து காபூல் நகரை அடைவதற்கு பல சிரமங்களுக்கு உள்ளானார். ஒரு சோதனைச் சாவடியில் இவரை அழைத்துச் சென்றவர் அங்கிருந்தவர்கள் இவரை சந்தேகத்துடன் பார்த்ததைக் கண்டு, இவர் என் அண்ணன், காது செவிடு, ஊமை, இவரை சாகிசாகிப் மசூதிக்கு யாத்திரைக்காக அழைத்துச் செல்கிறேன் என்று பொய் சொல்லி காபூலை அடைந்திருக்கிறார்கள். இந்திய எல்லையைக் கடந்து ஆப்கானிஸ்தான் எல்லைக்கு வந்துவிட்டனர். அங்கு யாரையும் தெரியாது, குளிர், பனி தொல்லை. ஒரு தங்கும் விடுதிக்குச் சென்றனர். அங்கு, ஒட்டகங்கள், குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. அங்கு குகை போன்ற ஒரு அறையில் தங்கினார்கள். ஒரு ஆப்கன் போலீஸ்காரர் இவர்களைச் சந்தேகத்துடன் கண்காணித்து வந்தார். கடைசியில் நேதாஜியின் கை கடிகாரத்தைப் பறித்துக் கொண்டு சென்றுவிட்டான். அந்த அறைக்கு வாடை ரூ.1. படுக்கைக்கு அரை ரூபாய். அந்த அறையில் ஒரு வாரகாலம் கழித்தனர்.

            அங்கு ஒரு இந்திய வியாபாரி இருந்தார், பெயர் உத்தம் சந்த். அவரைக் கண்டுபிடித்துப் போய்ச் சேர்ந்து அவரோடு தங்கினார்கள். சுபாஷ் ரஷ்யாவுக்குச் செல்ல நினைத்து அவர்களைத் தொடர்பு கொண்டார், ஆனால் சரியான பதில் இல்லை. உடனே இத்தாலிக்கோ அல்லது ஜெர்மனி பெர்லினுக்கோ போவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டனர்.

            அதற்குள் அவருக்கு காபூலில் பல இடையூறுகள், துன்பங்கள். கடைசியில் இத்தாலி தூதரின் மனைவி உத்தம் சந்தை அழைத்து, ரோம் நகரிலிருந்து இரண்டு பேர் வந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் நேதாஜியை அங்கு அழைத்துக் கொண்டு போவார்கள் என்று செய்தியைச் சொன்னார்.

            அங்கிருந்து காரன்டைன் என்ற பெயருடன் கார், ரயில், விமானம் மூலம் பல இடங்களையும் கடந்து பத்து நாட்களுக்குப் பிறகு பெர்லின் நகரைச் சென்றடைந்தார் போஸ். கல்கத்தாவில் சுபாஷ் காணாமல் போனதிலிருந்து சரியாக 73ஆம் நாள் போஸ் பெர்லின் நகரில் சென்று இறங்கினார். பெர்லினில் ஹிட்லர் சுபாஷை வரவேற்றார்.

            சுபாஷுக்கு உதவிய உத்தம் சந்த் சுபாஷ் 1943இல் ராவில்பிண்டியில் கைது செய்யப்பட்டார். ராவல்பிண்டி சிறையில் இருந்த போதுதான் உத்தம் சந்த் இந்த வரலாற்றினை முதன்முதலாக எழுதி வெளியிட்டார்.

             இந்தியாவிலிருந்து தலைமறைவாகி, பெஷாவர் சென்று அங்கிருந்து ஆப்கன் தலைநகர் காபூலில் தங்கி, அங்கிருந்து ஜெர்மனியில் பெர்லின் நகர் சென்றது வரை இந்த கட்டுரையின் முதல் பகுதியில் படித்தோம். இனி....


            பெர்லினில் சுபாஷுக்கு ஹிட்லர் சிறப்பான வரவேற்பளித்தார். ஜெர்மானியர்களும், இத்தாலியர்கௌம் சுபாஷ் மீது பற்று மிக வைத்திருந்தனர். பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவை மீட்டெடுத்து சுதந்திர நாடாக ஆக்க அவர் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஜெர்மனியில் இருந்த போது அங்கு ஓர் இந்தியப் படையை உருவாக்கி, அதற்கு ஜெர்மனியின் ஒத்துழைப்பையும் பெற்றார். நேதாஜி ஜெர்மனியில் இருந்தபோதுதான் எமிலி என்கிற ஆஸ்ட்ரிய / ஹங்கேரிய நாட்டுப் பெண்ணை மணந்து கொண்டார். எமிலி 1910 டிசம்பர் 26இல் பிறந்தவர். இவர் 1996 மார்ச் 13இல் ஆஸ்ட்ரியாவின் வியன்னா நகரில் காலமானார். நேதாஜியின் மகள் இந்தியா வந்து கல்கத்தாவுக்கும், ஜப்பான் டோக்கியோவில் வைக்கப்பட்டிருக்கும் நேதாஜியின் அஸ்தி கலசத்தையும் பார்த்துவிட்டுப் போனார்.

            ஆசியாவின் கீழ்த்திசையில் ஜப்பான் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்துக் கொண்டிருந்தது. அவர்கள் வென்ற பகுதிகளில் இருந்த இந்திய படைவீரர்களை யெல்லாம் பிரிட்டன் ஜப்பானிடம் சரணடையச் சொல்லி விட்டது. அப்படி சரணடைந்த இந்திய வீரர்களைக் கொண்டு நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்.

            ஜெர்மனியும், ஜப்பானும் ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பல் கொடுத்து உதவின. 1943 ஜூன் 20ஆம் நாள் நேதாஜி பெர்லினை விட்டுக் கிளம்பி ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரை வந்தடைந்தார். அங்கு அவருக்குப் பெரும் வரவேற்பு. தொடர்ந்து பர்மா, சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் இந்தியர்கள் தவிர, ஜப்பானியர்கள், சீனர்கள், மலாய், பர்மியர்களும் அடக்கம்.

            சுபாஷ் ஜப்பானில் இந்தியாவில் நாடுகடத்தப்பட்டு அங்கு வசித்து வந்த ராஷ் பிகாரி கோஷ் என்பவரைச் சந்தித்தார். அவர் நிறுவிய இந்தியா லீக் அமைப்பின் தலைவராகவும் சுபாஷ் நியமிக்கப்பட்டார்.

            பிரிட்டிஷாரால் கைவிடப்பட்டு ஜாப்பானிடம் சரணடைந்த இந்தியச் சிப்பாய்களைக் கொண்டு இந்திய தேசிய ராணுவம் நிறுவப்பட்டது. அந்தப் படைப் பிரிவுகள் காந்தி பிரிகேட், நேரு பிரிகேட், ஆசாத் பிரிகேட், ஜான்சிராணி பிரிகேட் என்ற பெயரில் பிரிக்கப்பட்டது. ஜான்சிராணி பிரிகேட்டுக்கு இளம்பெண்கள் பலர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

            1943 அக்டோபர் மாதம் இதிய குடியரசை சுபாஷ் அறிவித்தார். அவர்தான் படைத்தளபதியும். ஜப்பானியர்கள் தாங்கள் கைப்பற்றிய அந்தமான் நிக்கோபார் தீவுகளை இந்திய சுதந்திர அரசாங்கத்துடன் ஒப்படைத்தது. 1943 டிசம்பர் 30இல் சுபாஷ் அந்தமானுக்கு வந்து போர்ட் ப்ளேரில் இந்திய மூவண்ண கொடியை ஏற்றி சுதந்திர தின சொற்பொழிவாற்றினார். இன்றும் அந்த சொற்பொழிவு வலைத்தளங்களில் இருக்கின்றன.

              ‘நேதா’ என்றால் தலைவர், சுபாஷ் சந்திர போஸ் எனும் பெயர் மெல்ல நேதாஜி என்றே வழங்கத் தொடங்கியது. இவர் ஐம்பதாயிரம் வீரர்கள் கொண்ட ஒரு இந்திய படையை உருவாக்கினார். ஏற்கனவே ராணுவத்தில் இருந்தவர்கள்தான் ஐ.என்.ஏ. என்ற இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்ததனால் இவர்கள் அல்லாமல் புதியவர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. கிழக்காசிய நாடுகளில் எல்லாம் இருந்த இந்தியர்கள் ஐ.என்.ஏ.வுக்கு ஏராளமாக பண உதவி செய்தார்கள். ஒரு வங்கி தொடங்க ஒருவர் ஐம்பது லட்சம் கொடுத்தார், பெண்கள் சிலர் எடைக்கு எடை தங்கம் கொடுத்தனர். நேதாஜி போகுமிடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு.

            நேதாஜி எந்த நாட்டுக்கும் அடிமையாகவில்லை, தன் ராணுவத்துக்கு வேண்டிய தளவாடங்களைக் கூட ஜப்பானிடம் பணம் கொடுத்து வாங்கினார். ஐ.என்.ஏ. என்பது சுதந்திரமான இந்திய ராணுவமாகத் திகழ்ந்தது. அவர் பிரகடனம் செய்த சுதந்திர இந்தியாவுக்கு மூவண்ணக் கொடி தேசியக் கொடி. ஆட்சி மொழி இந்தி. “டெல்லி சலோ, டெல்லி சலோ” என்பது ராணுவத்தின் போர் முழக்கம், ‘ஜெய் ஹிந்த்’ என்பது நேதாஜியின் அறைகூவல். ஐ.என்.ஏ.வின் ஜான்சிராணி பிரிகேடுக்கு சென்னையைச் சேர்ந்த மேஜர் லக்ஷ்மி.

            1944 ஜனவரி 26 (காங்கிரசில் ஜனவரி 26ஐ சுதந்திர தினமாக வெகுகாலமாக அனுசரித்து வந்தனர்) அன்று ஐ.என்.ஏ.வின் ராணுவ அணிவகுப்பை நேதாஜி பார்வை யிட்டார். ‘டெல்லி சலோ’ ‘ஜெய் ஹிந்த்’ எனும் ராணுவ கோஷங்களுடன் படை டெல்லி நோக்கிப் புறப்பட்டது.

            1944 ஆகஸ்ட் 3ஆம் தேதி தேசிய ராணுவம் பர்மா அரக்கான் பகுதியில் பிரிட்டிஷ் ராணுவத்துடன் நடந்த போரில் வெற்றி பெற்றது. இந்திய தேசிய ராணுவம் இம்பால், மணிப்பூர், கொஹீமா ஆகிய இடங்களைக் கைப்பற்றியது. போர் உச்ச கட்டத்தை நெருங்கிய சமயம் ஜப்பானிலிருந்து ஆயுதங்கள் வருவது குறைந்தது. வேறு வழியின்றி படையைப் பின்வாங்க நேதாஜி உத்தரவிட்டார்.

            அந்த நேரம் அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டுகளை வீசி படுநாசத்தை விளைவித்தது. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இடங்களில் விழுந்த அணுகுண்டுகள் போரின் திசையை மாற்றியது. பர்மாவிலும் பிரிட்டிஷ் ராணுவம் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் நேதாஜி ஜப்பான் செல்வதற்காக 1945 ஆகஸ்ட் 16ஆம் தேதி விமானத்தில் ஏறினார். அந்த விமானம் என்னவாயிற்று? அதில் பயணித்த நேதாஜி என்னவானார்? அன்று அவருடன் விமானத்தில் பயணம் செய்த கர்னல் ஹபிபுர் ரஹ்மான் விமானம் ஃபார்மோசா தீவுக்கருகில் தீப்பற்றி விழுந்தது, அதில் நேதாஜி தீக்காயங்களுடன் மருத்துவமனை ஒன்றில் காலமானார் என்று சொல்லியிருக்கிறார்.

            இந்திய சுதந்திரம் என்பது மகாத்மா காந்திஜியின் தலைமையில் நடந்த அகிம்சை, சத்தியாக்கிரக போராட்டங்களாலும், நேதாஜி போன்றோர் தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தினாலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் உயிர்த்தியாகம் செய்தும், சிறைக்குச் சென்று கடுந்தவம் செய்தும் கிடைத்தது என்பதை சுதந்திர இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இந்தியனும் உணர்ந்தால் சுதந்திரத்தின் விலை என்ன என்பது தெரியும். இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட ஒவ்வோர் தியாகியையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் ஒவ்வொருவரும் உறுதி மேற்கொள்ள வேண்டும்.  சுதந்திரத்தின் அருமை தெரியாமல், சுதந்திரத்துக்காக நம்மவர்கள் செய்த அரும்பெரும் தியாகத்தை உணராதவர்கள், தேசபக்தி யில்லாதவர்கள், இவர்களால் எல்லாம் அரும்பெரும் தேசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் புரியும். 

             கல்கத்தாவிலிருந்து பெஷாவருக்கும், பிறகு அங்கிருந்து காபூலுக்கும், அங்கிருந்து பெர்லினுக்குமாக விரைந்து மறைந்தவர் சுபாஷ் என்பதால் இந்த கட்டுரையின் தலைப்பு அவர் மறைந்த மாயம் என்பது.  வாழ்க நேதாஜி புகழ்!