பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, April 16, 2020

பத்திரிகையாளர் சந்திப்பு.


                                   
          பத்திரிகையாளர் சந்திப்பு என்பது நீண்ட நெடு நாட்களாக நமக்குத் தெரிந்த நிகழ்வு. என்னுடைய 83 வயதில் நேரு காலம் தொடங்கி பல பெருந்தலைவர்களையும், கலைத்துறையினர், முக்கிய அயல்நாட்டு விருந்தினர், அரசு அதிகாரிகள் ஆகியோர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புகள் பற்றி முன்பெல்லாம் பத்திரிகைகளில் வரும், அப்போது அந்த சந்திப்பு நிகழ்ச்சி எப்படி நடந்திருக்கும் என்பதை அரசு திரையரங்குகளில் வெளியிடும் நியூஸ் ரீல் மூலம் தான் அறிந்து கொள்ள முடிந்தது. இப்போதெல்லாம் டி.வி.நிகழ்ச்சியை இடையில் நிறுத்திவிட்டு இப்போது இன்னார் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார் என்று சொல்லி ஒரு நிகழ்ச்சியைக் காட்டுகிறார்கள்.

டி.வி.அறிமுகமான புதிதில் சில பெருந்தலைவர்கள் நடத்திய பிரஸ் மீட் நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறேன். ஒரு மாநாட்டு அறையில் நிறைய நிருபர்கள் காமிராக்கள், எழுதும் நோட்புக் சகிதம் உட்கார்ந்திருப்பார்கள். முக்கிய விருந்தினர் அருகில் சில உதவியாளர்கள் இருப்பார்கள். நிருபர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் பெயர், எந்த ஊடகம் போன்றவை கொண்ட ஒரு அட்டை கொடுக்கப்படும்.

உதவியாளர்கள் அவர்களில் குறிப்பிட்ட எவராவது ஒருவரைக் கேள்வி கேட்கச் சொல்வார். அவர் மட்டும் எழுந்து கேட்க வேண்டிய கேள்வியைக் கேட்பார். நிருபர்கள் என்பவர்கள் மிகுந்த தகுதி வாய்ந்த, திறமை வாய்ந்த, கட்டுப்பாடு, கண்ணியம் காப்பவர்களாக இருந்ததால் சுயகட்டுப்பாட்டோடு அவரவருக்கு கிடைக்கும் வாய்ப்பில் கேள்விகள் கேட்பார்கள், கேள்விகளும் முக்கியமானதாகவும், அவசியமான விவரங்களைத் தெரிந்து கொள்ளும் விதத்திலும் இருக்கும்.  பேட்டி அளிப்பவர் சொல்வதை அனைவரும் குறித்துக் கொள்வார்கள். கூடியமட்டும் வந்திருக்கும் அனைத்து நிருபர்களுக்கும் வாய்ப்பு வரிசைப்படி கொடுக்கப்படும். கேட்ட கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்காமலும், ஒரே நேரத்தில் பலரும் கத்தி ஒன்றும் புரியாமல் செய்ய மாட்டார்கள்.  புதிய செய்திகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும் அறிவுபூர்வமாகவும் கேள்விகள் அமையும். மறுநாள் எல்லா ஊடகங்களிலும் ஒரே மாதிரியான செய்தி வெளியாகும், எங்காவது ஒருசில மாற்றங்களும் இருக்கும்.

ஆனால் இப்போது பத்திரிகையாளர் சந்திப்பு என்பது சந்தைப்பேட்டையை நினைவு படுத்துவதாக இருக்கிறது. வழக்கம் போல பிரபல ஊடகங்கள் தவிர, ஏனைய சின்னஞ்சிறு பத்திரிகை அல்லது ஏதாவது ஊடகங்கள் சார்பிலும், புகைப்படக் கருவி, வீடியோ காமரா சகிதம் அவை நிறைந்து தயாராக இருக்கிறார்கள்.

            பேட்டி அளிப்பவர், வந்தோம், கேட்ட கேள்விகளுக்கு உடனடியாக பதிலளித்தோம் என்பது இல்லை. அவர் வந்து கூட்டம் அமைதியடையும் வரை காத்திருக்க வேண்டும். இடையில் கூடியிருப்பவர்கள் தங்களுக்குள் விவாதம் செய்வதெல்லாம் கூட நமக்குக் கேட்கும். தான் தயார் என்பதை ஒலிபெருக்கி மூலம் சொல்லி கேளுங்கள் என்றதும் தொடங்கும் ‘கோரஸ்’. ஒரே நேரத்தில் பலரும் பல்குரலில் பல்வேறு கேள்விகள். எந்த குரல் உரத்து ஒலிக்கிறதோ அந்தக் குரலுக்குடையவரை முக்கியஸ்தர் பார்த்து அவருக்குப் பதிலளிக்கிறார். உடனே அடுத்த கேள்விக்கும் ஒரே கோரஸ். இப்படிப்பட்ட சந்திப்புகளில், கேள்வி கேட்பவர்களின் கூச்சல் மெலிதாக டிவியில் கேட்கிறது, என்ன கேட்கிறார்கள் என்பது ஒலிபரப்பாவதில்லை. பதில் சொல்லும் போதுதான், கேட்டவர் என்ன கேட்டிருப்பார் என்பது ஓரளவு புரிகிறது.

            பேட்டி அளிப்பவருடன் சில உதவியாளர்கள் இருக்க வேண்டும். முன்கூட்டியே ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஒரு எண்ணைக் கொடுத்து அதனை அந்த உதவியாளர்கள் வைத்திருக்க வேண்டும். சந்திப்பு தொடங்கியவுடன் அவர் முதலில் முக்கியமான ஊடகங்களின் நிருபர்களுக்கான எண் அட்டையை எடுத்துக் காட்டி அல்லது சொல்லி, அவரைக் கேள்வி கேட்கச் சொல்ல வேண்டும். அதனை அடுத்து ஒவ்வொருவரின் எண்ணையும் வரிசையாகச் சொல்லி அவர்களைக் கேட்கச் செய்ய வேண்டும். கேள்வி கேட்க விரும்புபவர்கள் எவரையும் விட்டுவிடாமல் அனைவருக்கும் வாய்ப்பு அளித்திட வேண்டும். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பக் கேட்டு அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கும் நிலையை யாரும் உருவாக்கக் கூடாது, அப்படி தேவையில்லாமல் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைப் பலரும் கேட்பதை உடன் இருக்கும் அதிகாரிகள் அனுமதிக்காமல் அனைவரும் ஒரே நேரத்தில் கூச்சலிட்டு கேள்விகள் கேட்காமலும் ஒரு ஒழுங்கினை கடைபிடித்து நடந்து கொண்டால், எல்லோராலும் கேள்விகள் கேட்க முடியும், ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டு தொல்லை தராமலும், தரமான, அவசியமான விளக்கங்களைக் கேட்டு வெளியிட ஊடகங்கள் முன்வர வேண்டும். சுய கட்டுப்பாடு அவர்களாகவே உருவாக்கிக் கொண்டாலும் சரி, அல்லது பேட்டி அளிப்பவர் சார்பில் உடனிருப்பவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தாலும் சரி, பத்திரிகையாளர் சந்திப்பு என்பது ஒரு கட்டுப்பாட்டுடன் கண்ணியமிக்கதாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். செய்வார்களா?

No comments: