30
ஜனவரி 1948, வெள்ளிக்கிழமை, விடியற்காலை 3.30க்கு தூங்கி எழுந்தார். சில நிமிஷங்கள்
பிரார்த்தனை செய்துவிட்டு வேலைகளில் ஈடுபட்டார். 4-45க்கு எலுமிச்சம்பழச் சாறும் தேனும்
கலந்த வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தினார். பிறகு சிறிது நேரம் கழிந்தபின் மீண்டும் படுத்து
உறங்கிவிட்டு காலை 6 மணிக்கு விழித்தெழுந்தார்.
பிறகு உதவியாளர் பியாரிலாலிடம் காங்கிரசை புனரமைப்பு செய்ய தான் எழுதிய புதிய
விதிகள் அடங்கிய பிரதியைக் கொடுத்து அவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு ஏதேனும் விடுபட்டிருந்தால்
சேர்க்கும்படி சொன்னார்.
காலை
பத்திரிகைகளைப் படித்து முடித்தார். அரை மணி கழித்து குளிக்கச் சென்றார். பிறகு பியாரிலாலிடம்
சென்னை மாகாணத்தில் ஏற்பட்டிருந்த உணவுப் பஞ்சத்தை எங்ஙனம் சமாளிப்பது என்பது பற்றி,
தங்களது நவகாளி அனுபவத்தை வைத்து ஒரு குறிப்பு தயாரிக்கச் சொன்னார்.
(தேசப் பிரிவினையின் போது ஏற்பட்ட
மதக் கலவரம் வங்காளத்தில் உச்சத்துக்குச் சென்ற சமயம் காந்திஜி நவகாளி என்ற இடத்துக்கு
நேரில் போய் அங்கு உண்ணாவிரதமிருந்து சமய ஒற்றுமைக்குப் பாடுபட்டார். அந்த சமயம் நவகாளியில்
எப்படி உணவு பற்றாக்குறையை சமாளித்தார்கள் என்பதையொட்டி ஒரு அறிக்கை தயார் செய்யச்
சொன்னார். இப்போது அந்த நவகாளி எனும் ஊர் பங்களாதேஷில் இருக்கிறது.)
அடுத்ததாக நடைபெறவிருந்த
காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் காங்கிரசின் விதிமுறைகளை மாற்றி, காங்கிரஸ்
என்ற கட்சியை “லோக சேவா சங்கம்” என்ற பெயரில்
மாற்றி, கிராம பஞ்சாயத்துக்களை உருவாக்கி, கிராம சேவை ஊழியர்களை நியமித்து நிர்வாகம்
நடத்த ஆலோசனை கூறப்பட்டிருந்தது.
காலை
9-30 மணிக்கு வங்கமொழி கற்கத் தொடங்கினார். நவகாளி யாத்திரை வந்தது முதல் அவர் வங்க
மொழியைக் கற்கத் தொடங்கியிருந்தார். பிறகு பியாரிலால் கொண்டு வந்து கொடுத்த காங்கிரஸ்
புனரமைப்பு விதிகளை பார்வையிட்டார். பகல்
12 மணிக்கு டெல்லி முஸ்லீம் தலைவர்கள் வந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். மறுநாள்
தான் சேவாகிராம் செல்லப்போவதாகவும், 1948 பிப்ரவரி 2ஆம் தேதி அங்கு ஒரு மகாநாடு நடைபெறப்
போவதாகவும்
அவர்களிடம் காந்திஜி சொன்னார்.
பிறகு
பிஷன் எனும் ஊழியரை அழைத்துத் தனக்கு வந்திருந்த கடிதங்களைக் கொண்டு வரச் சொன்னார்.
அவற்றைப் படித்துவிட்டு இன்றைய தினமே பதிலெழுத வேண்டும், ஏனென்றால் நாளைக்கு நான் இருப்பேனோ
இல்லையோ, யார் கண்டார்கள் என்றார். பிறகு சுதிர் கோஷ், பியாரிலால் இருவரிடமும் பேசிக்கொண்டு
இருந்தார்.
பகல்
2-15. காந்திஜியைப் பேட்டி காண வந்திருந்தவர்களுக்கு பேட்டியளிக்கத் தொடங்கினார். இலங்கை
டாக்டர் டி சில்வா, அவர் மகள் வந்திருந்தனர்.
பிப்ரவரி 14 அன்று இலங்கை சுதந்திரம் பெறுவதால், காந்திஜியிடம் சுதந்திர தினச்
செய்தி வாங்கிச் செல்ல அவர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு ஒரு செய்தி கொடுத்துவிட்டு
அதில் காந்திஜி கையெழுத்திட்டார். அதுதான் அவருடைய கடைசி கையெழுத்து.
3
மணிக்கு மேலும் பலரும் வந்து சந்தித்தார்கள். 4 மணிக்கு சர்தார் வல்லபாய் படேல் தன்
மகள் மணிபென் படேலுடன் வந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தார். 4-30க்கு சிறிது ஆட்டுப்பால், பழரசம் அருந்தினார்.
மாலை 5 ஆகிவிட்டது. அப்போது அவர் பிரார்த்தனை மேடையில் இருக்க வேண்டும். 5-10க்கு அவசரமாகக்
கிளம்பி பேத்திகள் மனுகாந்தி, ஆபாகாந்தி ஆகியோர் தோள்களில் கைபோட்டுக் கொண்டு பேசிக்கொண்டே
வேகமாக மேடைக்கு நடந்து வந்தார்.
பிரார்த்தனைக்
கூட்டத்துக்காக சுமார் 500 கூடியிருந்தனர். அவர் வருவதைக் கண்டு கூட்டத்தினர் எழுந்து
நின்றனர். காந்திஜி அனைவரையும் கைகுவித்து வணங்கியபடி வந்தார். அப்போது..........
கூட்டத்தின்
இடப்பக்கத்திலிருந்து ஒருவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்து வந்து காந்திஜிக்கு
எதிரில் அவர் பாதங்களைத் தொட்டுக் கும்பிடக் குனிந்தார். மனுகாந்தி அவரைத் தடுக்க முயன்றார்,
காரணம் பாதங்களைத் தொட்டுக் கும்பிடுவது காந்திஜிக்குப் பிடிக்காது. மனுகாந்தியை வந்த
மனிதர் ஒதுக்கித் தள்ள, அவர் கையில் இருந்த நோட்டுப்புத்தகம், ஜபமாலை, எச்சில் உமிழும்
படிக்கம் இவை கீழே விழுந்து விட்டன. மனுகாந்தி அவற்றை எடுக்க முயன்ற நேரத்தில், வந்தவர்
காந்திஜிக்கு முன் சில அடி தூரத்தில் நின்று கொண்டு கைத்துப்பாக்கியால் அவரை நோக்கி
மூன்று முறை சுட்டார். மூன்று குண்டுகளில் இரண்டு அவர் உடலை ஊடுறுவிக் கொண்டு போய்விட்டன,
ஒன்று அவர் உடலினுள் தங்கிவிட்டது.
முதல்
குண்டு பாய்ந்ததுமே அவர் கால்கள் தடுமாறி, கரங்கள் சரிந்தன; இரண்டாவது குண்டு வெடித்ததும்
இவர் “ஹே, ராம்!” என்று இருமுறை சொல்லிக் கொண்டே மூன்றாவது குண்டு பாய்ந்ததும் கீழே
சாய்ந்தார். அப்போது சரியாக மாலை 5 மணி 17 நிமிடம். அவர் கீழே விழுந்தபோது அவர் மூக்குக்
கண்ணாடியும் விழுந்தது. காலில் அணிந்திருந்த செறுப்புகள் நழுவின. காந்திஜி உடல் தரையில்
சரிந்து விழுந்து கிடந்தது. ஒரு சகாப்தம் அன்றைக்கு முடிந்து மண்ணில் விழுந்து விட்டது.
1 comment:
அருமையான வரலாறு செய்தி
https://tamilmoozi.blogspot.com/?m=1
Post a Comment