எல்லாம்
வல்ல இறைவன் அருளால் இன்றைய
தினம் “மங்கையர்க்கரசியார்” பற்றி சில வார்த்தைகள்
உங்களிடம்
சொல்லவிருக்கிறேன். சைவம்
தழைக்கவும், தன்
கணவனையும், பாண்டிய நாட்டையும் அழிவிலிருந்து
காத்து சைவநெறியில்
உய்க்கவும் தன்னை
ஈடுபடுத்திக் கொண்ட
மாதரசியாம் மங்கையர்க்கரசியின் வரலாறு பெண்களுக்கெல்லாம் பெருமை
சேர்க்கும் வகையில்
அமைந்தது.
மங்கையர்க்கரசியார் வரலாறு நமக்குச் சொல்லுகின்ற
கருத்து யாதெனின்,
திருமண பந்தத்தில்
கணவன் மனைவியாக
வாழும் இருவரும்
ஆன்மிகத்தில் ஒருங்கிணைந்து
வாழ வேண்டும்
எனும் கடமையுடையவர்கள்.
ஆனால் இங்கு
கணவன் சமணத்தில்
ஈடுபாடு கொண்டு
வாழ,
மனைவி மங்கையர்க்கரசியாரோ சைவம் சார்ந்து தன்
பாரம்பரிய சைவ
நெறியில் தானும்
திளைத்துத் தன்
கணவனும் திளைத்திருக்க
விரும்பி அவனை
சமண நெறியிலிருந்து பிறழ்ந்து சைவ நெறுக்குக்
கொணர்ந்த வரலாற்றைச்
சொலவது.
தமிழும் சைவமும்
தழைத்த பாண்டிய
நாட்டின் மதுரை
மாநகரில் அரசாண்ட
நின்றசீர் நெடுமாறன்
சமணர்கள் விரித்த
வலையில் வீழ்ந்து
மனம் மாறி
சைவ நெறியைக்
கைவிட்டுத் தான்
மட்டுமல்லாமல், தன்
நாட்டு மக்களையும்
சமணத்தைத் தழுவ
விட்டுத் துன்பத்துக்
காளாகினான்.
சோழ நாட்டு
இளவரசியான மங்கையர்க்கரசியை பாண்டியன் நின்றசீர் நெடுமாறன்
திருமணம் செய்து
கொண்டு வாழ்கின்ற
போது அந்த
தேவி சைவ
நெறியில் அசைக்க
முடியாத பற்றுக்
கொண்டு தன்
கணவனும், நாட்டு மக்களும் சமண
நெறியில் தவிப்பது
கண்டு மாற்று
என்ன செய்வதென்று
தவித்துக் கொண்டிருந்தாள்.
அம்மை
மங்கையர்க்கரசியார் செய்த
நற்தவப் பயனால்
பாண்டிய நாட்டின்
அமைச்சர் குலச்சிறையார்
சைவத்தைப் பற்றுக்
கோடாகக் கொண்டு
சைவ நெறியில்
ஈடுபட்டிருந்தார். அவருடைய
உதவியுடன் அம்மையார்
சோழ நாட்டில்
இருந்த திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளுக்குத் தூது அனுப்பி, அவரை மதுரை நகருக்கு
அழைத்தார்.
அப்படி திருஞானசம்பந்த மூர்த்திப் பெருமான் மதுரைக்கு
வந்த காரணம்
கொண்டு அங்கு
சைவம் தழைத்தது.
அந்த வரலாறு
மிக விரிவாக
சைவ இலக்கியங்களில் பேசப்படுகின்றது. சோழ நாட்டிலிருந்து சைவப் பெரியார் ஞானசம்பந்த
மூர்த்தியை பாண்டிய
நாட்டுக்கு அழைக்க
வேண்டி நேர்ந்த
சூழலைப் பயன்படுத்திக்
கொண்டு மங்கையர்க்கரசியார் செய்த நற்செயலால் சமண
நெறியில் தவித்திருந்த
நின்றசீர் நெடுமாறன்,
சைவத்துக்கு மாறவேண்டிய
சூழலை உருவாகியது.
ஞானசம்பந்தர் மதுரைக்கு
வந்து ஆலவாய்
திருக்கோயிலில் தரிசனம்
செய்ய நுழையும்
காலை அங்கு
அவரை வரவேற்க
வந்து நின்றிருந்த
அம்மை மங்கையர்க்கரசியார் எங்ஙனம் இருந்தார் என்பதை
சேக்கிழார் சுவாமிகள்
தன் திருத்தொண்டர்
புராணத்தில் வர்ணிக்கிறார்.
“பானலங் கண்கள்
நீர்மல்கப் பவளவாய்
குழறி யானும் என் பதியும் செய்த தவம் என்கொல்” என்கிறார்
அதுமட்டுமின்றி அன்று மதுரையில்
சம்பந்தர் பெருமான்
தங்கியிருந்த சைவ
மடத்துக்குச் சமணர்கள்
தீயிட்டபோது அந்த
கொடிய தீ
அரசன் நெடுமாறனுக்கு
வெப்பு நோயாகச்
சென்று வருத்தத்
தொடங்கியது. அந்த
சூழலில் அரசியார்
அமைச்சர் குலச்சிறையாருடன் அரசனுக்கு நேர்ந்த கொடிய
அந்த வெப்பு
நோய் குறித்து
அறிந்து கோள்ள
நேரிட்டது.
அதை சேக்கிழார்
சொல்லுவது:
“வெய்ய தொழில்
அமண் குண்டர்
விளைக்கவரும் வெப்பு
அவர் தாம் செய்யுமதி மாயைகளால், தீராமைத் தீப்பிணியால் மையலுறு மன்னவன் முன்
மற்றவரை வென்றருளில்
உய்யும் எமது உயிரும்
அவன் உயிரும்
என உரைத்தார்கள்.”
தீமனம் கொண்ட அமணர்கள்
செய்யும் தீவினையால்,
மன்னனுக்கு வெப்பு
நோய் வந்தது.
அதனால் வருத்தமுற்ற
மன்னனுடைய நோயை,
சம்பந்தர் இந்த
அமணர்களை வாதில்
வென்றால் எம்
உயிரும், மன்னன் உயிரும் உய்யும்
என உரைத்தார்கள்.
அன்றைய பாண்டிய
நாட்டு சூழ்நிலையில்,
மன்னனும், மக்களும் சமணம் தழுவியிருந்த
காலத்தில் சைவத்துக்கு
பாண்டிய நாட்டில்
உண்டான கேட்டினைப்
போக்கி, நல்ல காலத்தை உருவாக்க
சுவாமிகளால்தான் முடியும்
என்று அம்மையும்,
அமைச்சரும் நம்பினார்கள்.
தன்னுடைய கணவனுக்கும்,
அவன் ஆளும்
இந்த பாண்டிய
நாட்டுக்கும் ஏற்படவிருந்த
தீமையைப் போக்க,
உண்மையான பதிபக்தி
கொண்ட கற்பரசியான
மங்கையர்க்கரசிக்குத் தெய்வீக ஆற்றல்
தானாகவே உண்டாகும்
என்பதும், அதன் மூலம் ஏற்பட
விருக்கும் தீமைகளை
அழித்தொழித்திட முடியும்
என்பதுதான் இந்த
வரலாறு சொல்லும்
உண்மை.
அதைத்தான் திருவள்ளுவர்
பெருமான் சொல்கிறார்:
“தெய்வம் தொழாஅள்,
கொழிநற் தொழுதெழுவாள்,
பெய்யெனப் பெய்யும்
மழை”
என்று.
இவற்றையெல்லாம் கருதித்தான்
திருஞானசம்பந்தர் மதுரை
சோமசுந்தரப் பெருமானைப்
போற்றிப் பாடும்கால்,
“மங்கையர்க்கரசி வளவர்கோன்
பாவை” என்று புகழ்பாடி, “மானின் நேர் விழி
மாதராய் வழுதிக்கு
மாபெரும் தேவி”
என்று அழைத்தும்
திருப்பதிகம் பாடியிருக்கிறார்.
கணவன்பால் வைத்திருந்த
பக்தி, அன்பு, அவன் நன்மையில்
கொண்டிருந்த நாட்டம்
இவற்றாலன்றோ அந்த
மங்கையர்க்கரசியாரை திருஞானசம்பந்தர் தன் தேவாரத்தில் “ எங்கள்
தெய்வம்” என்றும், “தென்னர் குலப்
பழிதீர்த்தத் தெய்வப்
பாவை” என்றும் போற்றுகிறார். அந்த
நற்குணங்களால் அன்றோ
அந்த பாண்டிமா
தேவி “நெடுமாறன் தனக்குச் சைவவழித்
துணையாய், நெடுங்காலம் மருவிப் பின்
ஆசில் நெறியவரோடும்
கூட ஈசர்
அடிநிழற் கீழ்
அமர்ந்திருக்க அருளும்
பெற்றார்” என்கிறார்.
மங்கையர்க்கரசியாரின் இந்த வரலாறு
பெண்மையின் தெய்விக
ஆற்றல் நோன்புக்கும்,
அதனால் விளையும்
நன்மைக்கும் அசையாத
சாட்சியாக விளங்கும்
என்கிறார் சேக்கிழார்.
No comments:
Post a Comment