முயற்சியால் ஆகாதெனினும்!…
தஞ்சை வெ.கோபாலன்
பசுபதிக்கு அந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது. அலுவலகத்தில் முக்கியமான பணியில் ஈடுபட்டிருந்த அந்த நேரத்தில் இந்த தந்தி வந்திருக்க வேண்டாம். தஞ்சையிலிருந்து அந்த தந்தியை அனுப்பியிருந்தவர் அங்கு மேம்பாலத்தின் அருகிலுள்ள காது கேட்காதோர் வாய் பேசாதோருக்கான தனிப் பள்ளியின் தலைமை ஆசிரியர். பசுபதியின் மகன் கண்ணன் அங்குதான் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பிறவியிலிருந்தே காதும் கேட்காது, வாயும் பேசமுடியாது. பன்னிரெண்டு வயது வரை வீட்டில் வைத்து எல்லா வைத்தியங்களும் பார்த்த பிறகு நரம்பியல் நிபுணர் ஒருவர் பார்த்துவிட்டு இனி இவனுக்கு வைத்தியம் செய்ய பணத்தைச் செலவு செய்யாதீர்கள். இவன் இப்படியே இருந்து ஏதாவது தொழிலைக் கண்ணால் பார்த்துக் கையால் செய்யத் தக்க வகையில் கற்றுக் கொடுத்து பிழைக்க ஒரு வழியைக் காட்டிவிடுங்கள். அவ்வளவுதான் நீங்கள் இனி செய்யக் கூடியது என்று சொன்னதால் தஞ்சாவூரில் இவனைப் போன்றவர்கள் தங்கி படிக்கும் வசதி கொண்ட பள்ளியில் இவனைக் கொண்டு போய் சேர்த்தார். அவனும் இப்போது கிட்டத்தட்ட ஐந்தாறு ஆண்டுகளாக அங்குதான் இருந்தான். இப்போது இன்று இந்த அவசரத் தந்தி சொன்ன செய்தி அவனைக் காலை முதல் காணவில்லை என்பதுதான். பசுபதிக்கு கையும் ஓடாமல் காலும் ஓடாமல் அடுத்த சீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ராகவனிடம் விஷயத்தைச் சொன்னார்.
இருவரும் பசுபதியின் மேலதிகாரியிடம் சென்று தன்னுடைய காது கேட்காத வாய் பேசமுடியாத மகனை அவர்களைப் போன்றவர்க்கென்று நடக்கும் போர்டிங் பள்ளியில் இருந்து காணாமல் போய்விட்டதாகத் தகவல் வந்திருக்கிறது. என் மகனை உடனே போய் தேடவேண்டும், இப்போதே தஞ்சாவூர் போக அனுமதியும் இரண்டு நாள் விடுப்பும் தேவை என்று கேட்டார்கள். வேதாரண்யத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பசுபதியின் அந்த அதிகாரி சற்று அலட்சியமாக “ஏன்யா! அவனைக் காணும்னா எங்கே போயி தேடுவீங்க? அவனுக்கோ காதும் இல்லை வாயும் இல்லை; என்னய்யா பண்ணப் போறீங்க? போய் பேசாம போலீசிலே ஒரு புகார் கொடுங்க, அவுங்க கண்டுபிடிச்சி கொடுப்பாங்க” என்றார்.
பசுபதிக்கு ஆத்திரம் வந்தது. காணாமல் போனது அவர் மகன் இல்லை, தன்னுடைய மகன். அவருடைய மகனாக இருந்தால் இப்படிப் பேசுவாரா? அலுவலகங்களில் ஏதோ ஒரு அதிகாரி என்று உட்கார்ந்து விட்டால் தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களை இப்படியெல்லாம் பேச யார் சொல்லிக் கொடுத்தார்கள்? இவர்களுக்கு மனிதாபிமானமே இருக்காதா? இவர்தான் தூக்கிப் பிடித்து அந்த துறை பணிகளைச் செய்யப் போகிறாரா? என்ன செய்வது தன்னுடைய எதிர்காலம் இந்த ஆள் கையில் இருப்பதறிந்து பசுபதி சற்று தணிந்து போக தீர்மானித்தார்.
“அதெல்லாம் சரிதான் சார். அவனுக்குப் பேசமுடியாது, காதும் கேட்காது என்கிறேன், அவன் யார்கிட்டே போயி தான் யார் என்பதையெல்லாம் சொல்ல முடியும். உங்களிடம் சொல்லிவிட்டுப் போகவேண்டியது என் கடமை, சொல்லிவிட்டேன், நான் வரேன் சார்” என்றார் பசுபதி.
“ஆபீஸ் விஷயங்களில் எல்லாம் இப்படி தூக்கி எறிந்து பேசமுடியாது மிஸ்டர் பசுபதி. இப்படிப்பட்ட ஒரு மகனை இருட்டில் குருட்டுப் பூனை குறுக்குச் சட்டத்தில் பாய்ந்ததைப் போல பிள்ளையைத் தேடப்போறேன்னு சொன்னா, எங்கே போயி தேடுவீங்க?” என்றார் அவர் மறுபடியும்.
“நீச்சல் தெரியாம தண்ணில விழுந்துட்டா என்ன செய்வோமோ அதைச் செய்வோம் சார். காலையும் கையையும் அசைத்து நீந்த முயற்சிப்பது இல்லையா, அப்படி. அவன் போகக்கூடிய இடங்கள், அவனுக்குத் தெரிந்தவர்கள் வீடுகள், இப்படி பல இடமும் போய் தேடிப்பார்த்துத்தான் கண்டுபிடிக்க முடியும். எல்லாம் தானா வருவான் என்று உங்களைப் போல அலட்சியமா நானும் உட்கார்ந்திருக்க முடியாது சார். அவன் உடம்பில் ஓடறது என் ரத்தம். இங்கே என் ரத்தம் கொதிக்குது சார்” என்றார் பசுபதி.
அதிகாரி விட்டபாடில்லை. “அதெல்லாம் சரிதான்யா! அப்படி தேடியும் அவன் கிடைக்கலைன்னா என்ன சார் பண்ணப் போறீங்க?” என்றார்.
பசுபதிக்கு ஆத்திரம் தலைக்கேறியது, “அங்கேயே தற்கொலை பண்ணிக்கொண்டு செத்துப் போவேன் சார்” என்றார் சூடாக.
“சரி, சரி இது போல நாடகபாணில பேசாதீங்க. போயிட்டு வாங்க. உங்க சவுகரியம்” என்றார் வெறுப்புடன்.
“இவர் கிடக்கிறார் விடுங்க பசுபதி, இவர் புள்ளையா இருந்தா இப்படி பேசுவாரா, வாங்க நீங்க, நானும் உங்களோடு வரேன். உங்களைத் தனியா விட கவலையா இருக்கு” என்றார் நண்பர் ராகவன்.
இருவரும் உடனே பேருந்து நிலையம் சென்று வேதாரண்யத்திலிருந்து திருச்சி செல்லும் பஸ்சில் ஏறி தஞ்சைக்குப் பயணமானார்கள். அங்கு சென்ற இருவரும் அந்த பள்ளிக்கூடத்துக்குச் சென்று என்ன நடந்தது என்று விசாரித்தார்கள்.
அங்கிருந்தவர்கள் சொன்னார்கள், அன்று பள்ளித் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அன்றைக்கு ஆங்கில பாடத்தில் தேர்வு. இவனிடம் கேள்வித் தாளைக் கொடுத்த சில நிமிஷங்களில் இவன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வெறும் விடைத்தாளை ஆசிரியையிடம் கொடுத்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டானாம். திரும்பி வருவான் என்று காத்திருந்த ஆசிரியர்கள் அவன் வராதது கண்டு பயந்து போய் தந்தி கொடுத்ததாகச் சொன்னார்கள்.
இவனுக்கு இங்கு யாரையுமே தெரியாதே. எங்கு போயிருப்பான். அந்த பள்ளிக்கூடத்துக்கு அருகில் இருந்த மேம்பாலம் வழியாக பெரிய கோயிலுக்குப் போகவும், மறுபாதையில் சென்றால் மருத்துவக் கல்லூரி இருக்கும் பகுதிக்கும் போகலாம். அங்கிருந்து இறங்கி போகும் ஒரு பாதை ரயில் நிலையம் போகும். அந்தப் பாதையில் போய் பார்க்கலாம் என்று பசுபதியும் நண்பரும் போனார்கள்.
சற்று தூரத்தில் ஒரு டீக்கடை. அந்த டீக்கடைக் காரரிடம் பசுபதி கேட்டார், “ஏன்யா, காது கேட்காத வாய் பேசமுடியாத ஒரு பையன் மேம்பாலம் பள்ளிக்கூடத்திலிருந்து இந்த பக்கமா வந்தானா? அப்படி யாரையாவது பாத்தீங்களா?” என்றார்.
அவர் சொன்னார், “அமாங்க, அப்படியொரு ஊமைப் பையனை அழைத்துக் கொண்டு யாரோ ஒரு ஆள் இங்கே வந்து டீ வாங்கி குடிச்சாங்க. அவங்களைப் பார்த்தா அந்தப் பையனுக்கும் அந்த ஆளுக்கும் சம்பந்தம் இருக்கறதா தோணலீங்க. சந்தேகமா இருக்கு, ஸ்டேஷன் பக்கமா போனாங்க ரெண்டு பேரும் போய் அங்கே பாருங்க”.
இருவரும் ஸ்டேஷன் பக்கம் போய் சுற்றிப் பார்த்தார்கள். கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் இங்கே ஒரு ஊமைப் பையனைப் பார்த்தீங்களா என்று கேட்டார்கள். எல்லோரும் கைவிரித்துவிட்டார்கள். பையனைத் தேடும் பரபரப்பில் இருவரும் ஒன்றுமே சாப்பிடவில்லை. நன்றாக இருட்டத் தொடங்கிவிட்டது. வேறு வழியில்லை போலீசில் போய் ஒரு புகாரைக் கொடுத்துவிடலாம் என்று அங்கு போனார்கள். நல்ல காலம் அந்த பள்ளி தலைமை ஆசிரியரும் தங்கள் விடுதியிலிருக்கும் இந்த மாணவனைக் காணவில்லை என்று புகார் கொடுக்க வந்திருந்தார். இவர்களும் அந்தப் புகாரில் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டு பஸ்சைப் பிடித்து வேதாரண்யம் போக முடிவு செய்தனர்.
வழிநெடுக பசுபதி புலம்பிக் கொண்டே வந்தார். என்ன செய்கிறானோ, வாய்கூட பேசமுடியாம என்ன பாடு படுகிறானோ என்றெல்லாம் புலம்ப ராகவன் ஆறுதல் சொல்லிக் கொண்டே வந்தார். வேதாரண்யம் பஸ் தஞ்சையிலிருந்து புறப்பட்டு போய்க்கொண்டிருந்தது.
வழியில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கோபுரம் தெரிந்தது. பசுபதி “அம்மா! மாரியம்மா! என் புள்ளைய நீதான் காப்பாத்திக் கொண்டு சேர்க்கவேணும் அம்மா. உன்னை விட்டா எனக்கு ஏது கதி” என்று சொல்லிக் கொண்டே ஓவென அழத் தொடங்கினார்.
பஸ்சில் இருந்தவர்கள் இவரைத் திரும்பிப் பார்த்தனர். பாவம் என்ன கஷ்டமோ என்று அவர்களும் வருந்தினர். ராகவன் நிலைமையைச் சமாளித்து மெல்ல அழைத்துக் கொண்டு போனார். திருவாரூரில் இவருக்கு ஒரு உறவினர் இருந்தார். அங்கு ஒருக்கால் இவன் போயிருக்கலாமோ, அங்கேயும் போய் பார்த்துவிட்டு ஊருக்குப் போய்விடலாம் என்று திருவாரூர் போனார்கள். அங்கு அவரது உறவினர் வீட்டுக்குப் போனதும் அவர்கள் இவர்களை வரவேற்று என்ன விசேஷம் இப்படி திடீர்னு வந்திருக்கீங்க என்று விசாரித்த போதே அவன் இங்கு வரவில்லை என்பது தெரிந்து போயிற்று.
அவர்களிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு ஒருக்கால் அவன் இங்கு வந்தால் எங்களுக்குத் தகவல் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு நாகப்பட்டினம் பஸ் ஏறி அங்கிருந்து வேதாரண்யம் போய்ச் சேர்ந்தார்கள். வீட்டுக்குப் போகும்போது மணி இரண்டைத் தாண்டியிருக்கும். பசுபதியின் மனைவி வாசலில் நின்று கொண்டு இவர்கள் வரவை எதிர்பார்த்திருந்தாள் பாவம். பையனை எங்கும் காணவில்லை என்றதும், அவள் அந்த நள்ளிரவிலும் வாய்விட்டு ஓவென்று கதறினாள். அருகிலிருந்த சில வீட்டுக்காரர்கள் இவள் அழுகையைக் கேட்டு வாசல் விளக்கைப் போட்டு என்னவென்று அறிந்து கொள்ள வந்து சேர்ந்தனர்.
அப்படி வந்திருந்தவர்களிடம் நடந்த காரியங்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோது அவ்வூர் சப் இன்ஸ்பெக்டர் அங்கு மோட்டார் பைக்கில் வந்து சேர்ந்தார்.
வந்தவர், “சார், இங்கே பசுபதிங்கறது யாரு?” என்றார்.
போலீசைக் கண்டதும் துடிப்போடு பசுபதி, “நாந்தான் சார் பசுபதி, என்ன சார் விசேஷம்?” என்றார்.
“இல்லை, இந்த நேரத்துல என்ன இங்கே இப்படி கூட்டமா நிக்கறீங்க?” என்றார்.
“தஞ்சாவூர்ல இருந்த எங்க வாய்பேசமுடியாத பையன் காணாம போயிட்டான் சார். அவனைப் போய் எங்கெல்லாமோ தேடிப் பார்த்துட்டு இப்பதான் சார் வரேன். அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட சேதி சொல்லிக்கிட்டிருக்கேன், அதான் கூட்டம்” என்றார் பசுபதி.
“கவலைப் படாதீங்க பசுபதி. அந்த விஷயமாத்தான் நான் வந்தேன். உங்க பையன் பத்திரமா இருக்கான். இப்பதான் சேதி வந்தது. அதைச் சொல்லிட்டுப் போகத்தான் உங்களைத் தேடி வந்திருக்கேன். அவனை அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன்லேர்ந்து ஆட்கள் அழைச்சிட்டு வராங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவாங்க” என்றார் எஸ்.ஐ.
“என்ன ஆச்சு சார், ஏதாவது விவரம் தெரியுமா சார்” என்றார் ராகவன்.
“இருங்க, அவுங்க வந்ததும் தெரிஞ்சுடுது. பையன் கிடைச்சுட்டான்ல சந்தோஷமா இருங்க, இப்ப வந்துடுவாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இரு போலீஸ்காரர்களும், பையனும் அவருடன் கூட வேதாரண்யத்து இளைஞர் ஒருவரும் வந்து இறங்கினார்கள்.
பசுபதியும் குடும்பத்தாரும் ஓடிப்போய் பையனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஓவென்று அழுதார்கள். அனைவரையும் ராகவனும் எஸ்.ஐ.யும் சமாதானப் படுத்தி ஆசுவாசப் படுத்தினார்கள்.
பசுபதி மட்டும் சற்று சமாதானமடைந்து ஜாடையில் பையனிடம் ஏதோ கேட்க அவனும் ஜாடையில் சொல்லிக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் பேசிய விவரம் அவர்களைத் தவிர மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போது ஜீப்பில் வந்திறங்கிய வேதாரண்யத்து இளைஞன் மட்டும் பேசினான்.
“ஐயா! நான் வேதாரண்யத்துக்காரந்தான். நான் பூண்டி காலேஜ்ல எம்.ஏ. படிச்சுகிட்டு இருக்கேன். அங்கே ஹாஸ்டலில்தான் இருக்கேன். நான் அடிக்கடி புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குப் போவேன் சார். அப்படி அங்கே போனபோது, செறுப்பு போட்டுட்டுப் போனா பார்த்துக்கன்னு ஒருத்தர் வாசலில் உட்கார்ந்திருப்பார். செறுப்பு பார்த்துக் கொள்ள அவருக்கு எல்லோரும் காசு கொடுப்பாங்க. கடைகளிலும் போடலாம் ஆனா, அங்கு டோக்கன் எல்லாம் கிடையாது, இந்த ஆள் டோக்கன் போட்டுக் கொடுப்பான்.
அப்படி நான் போனபோது அந்த ஆளுக்குப் பக்கத்துல செறுப்புக்குள்ள டோக்கன்களைச் செறுகிக் கொண்டு இந்தப் பையன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன். பையனைப் பார்த்தா இந்த வேலை செய்யறவனா தெரியலையே இவன் ஏன் இங்க உட்கார்ந்திருகான் என்று அவனை நீ யாருடான்னு கேட்டேன். அவன் நான் சொன்னதைக் கவனிச்சதாகவே தெரியல. அந்த செறுப்புக் காவல் காக்கும் நபரைக் கேட்டேன், அந்த ஆள், நீங்க உங்க வேலைய பாருங்க தம்பி, அவன் யாராயிருந்தா உங்களுக்கு என்ன? என்றான்.
அதனால் எனக்குச் சந்தேகம் வந்தது. உடனே போய் பூண்டி போலீசிலே போய் விஷயத்தைச் சொன்னதும் அவங்கள்ள ஒருத்தர் எங்கூட வந்து செறுப்பு காவலரிடம் கேட்க அவன் விஷயத்தைக் கக்கிவிட்டான். இந்த பையனை தஞ்சை மேம்பாலம் பக்கம் பார்த்து, இவனுக்குப் பேசமுடியாதுன்னு தெரிஞ்சு தனக்கு உதவியா இருக்கட்டும்னு கூட்டிக்கிட்டு வந்துட்டதாக சொன்னான்.
அவர்கள் தஞ்சாவூர் போலீஸ் நிலையத்துக்குக் கேட்டாங்க போலிருக்கு. அவங்க, ஆமாம் அங்க ஒரு புகார் வந்திருக்கு, இதப் போல ஒரு பையனைக் காணும்னு, அவன் ஊர் வேதாரண்யம்னு அவன் அப்பா விலாசம் எல்லாம் கொடுத்திருக்கார். பையனைப் புடிச்சிட்டிங்கன்னா உடனே வேதாரண்யத்துக்குத் தகவல் கொடுக்கச் சொன்னாங்க.
அப்போது அம்மாபேட்டை போலீஸ் ஜீப் ஒண்ணு வந்தது. அதில் இருந்தவர்கள் தாங்கள் வேதாரண்யம்தான் போகிறோம் என்று சொன்னதால, பையனை பத்திரமா அவங்க கிட்ட ஒப்படைச்சி வேதாரண்யம் அழைச்சுப் போகச் சொன்னாங்க. நானும் பையனோடு அப்பா விலாசத்தைப் பார்த்துட்டு, அடடே நம்ம வீட்டுக்கு அடுத்த தெருதான், எனக்குத் தெரியும்னு நானும் அவுங்க கூடவே வந்துட்டேன் என்று விவரங்களைச் சொன்னார்.
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? புன்னை நல்லூர் மாரியம்மன் செய்த மாயமா, இதெல்லாம் எதேச்சையாக நடந்த செயலா? அதென்னவோ, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் பசுபதி மட்டும் நிச்சயமாக நம்பினார், நான் உன் கோயிலைத் தாண்டி வரும்போது உன்னிடம் கெஞ்சி வேண்டிக் கொண்டேன் அல்லவா, நீ அனுப்பி வச்சுட்டியே அம்மா, தாயே, மகமாயி, நீயே எனக்குக் கண்கண்ட தெய்வம் என்று சொல்லி உருகிப் போனார்.
No comments:
Post a Comment