பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, March 12, 2020

திராவிடத்தால் வீழ்ந்த தமிழ்.


                                                                                        
            பொதுவாக தமிழர்கள் மத்தியில் திராவிட இயக்கங்கள்தான் தமிழை வளப்படுத்தி வந்திருக்கிறது என்கிற எண்ணம் தோற்றுவிக்கப் பட்டிருக்கிறது. இந்த கூற்று உண்மையா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், சுதந்திரத்துக்கு முன்பு தமிழகத்தில் இருந்த மொழிப் பற்றும், மொழியின் செயல்பாடும், திறனும் இன்றைக்கு இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் தமிழ்மொழி என்றும் இளமையான மொழி, நாளும் தன்னை வளப்படுத்திக் கொள்ளும் வகையறிந்த மொழி என்றெல்லாம் போற்றப்படும் நிலையில் யாரும் இந்த மொழியை உரம் போட்டு, நீர் ஊற்றி வளர்க்க வேண்டியதில்லை.

            திராவிட இயக்கத்தார் தங்களால் தமிழ் வளர்ந்தது என்று சொல்லிக் கொள்ள காரணமாக இருந்தது அவர்கள் இயக்கம் தோன்றுவதற்கு முன்பு இங்கு பரவலாக பேச்சு வழக்கில் தமிழ் மொழி மணிப்பிரவாள நடையாக இருந்ததுதான் காரணம். பேச்சிலும் சரி, எழுத்திலும் சரி தமிழ் மொழியோடு வடமொழிச் சொற்களும் கலந்து வந்ததுதான் மணிப்பிரவாளம். இவர்கள் செய்ததெல்லாம் வடமொழியை எதிர்க்கிறேன் என்று சொல்லி அவற்றை நீக்கிவிட்டு ஆங்கிலத்தின் அடிவருடிகள் என்பதை நிலைநிறுத்துவது போல இன்று தமிழ் மொழியைத் தமிழாகப் பேசமுடியாமல் “தங்கிலீஷ்” எனும் கலப்பு மொழியாக ஆங்கிலத்துடன் கலந்து பேச வைத்துவிட்டனர்.

            அன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த ஒருசில சொற்களைத் தமிழில் இவர்கள் மாற்றியமைக்க முயன்றார்கள் என்பது உண்மையாயினும் அதைத் தவிர மொழியின் வளத்தையோ, மொழியின் தனித் தன்மையையோ இவர்கள் பொதுமக்கள் மத்தியில் வளர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவர்கள் பேசும் மேடைப் பேச்சில் மட்டும் பேசுகின்ற இலக்கண மொழி நடை, மேடையை விட்டு கீழே இறங்கி விட்டால் கொச்சையான ஆங்கிலம் கலந்த “தங்கிலீஷ்” மொழியே.

            ஆங்கிலேயர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது, அப்படி அவர்கள் இந்தியாவை விட்டுப் போவதாயிருந்தால் தமிழ்நாட்டையாவது தங்கள் ஆட்சியில் வைத்திருக்க வேண்டுமென்பது இவர்கள் கோரிக்கை. தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சி தொடங்கிய காலத்தில் தான் இங்கு மெட்ரிக் பள்ளிகள் அதிகமாகத் தொடங்கப்பட்டன. அங்கெல்லாம் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஆங்கிலமே பயிற்று மொழியாகவும், பள்ளி வளாகத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டுமென்கிற கட்டுப்பாடும் இருந்த காரணத்தால் மாணவர்கள் தமிழைப் பிழையின்றி பேச முடியாமல் போய்விட்டது. தாய்மொழிக்கு இதுதான் கதி என்றால் இது யாரால் வந்த வினை என்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது. இப்போதைய கல்வி முறையில் மதிப்பெண் பெறுவதே நோக்கமென்றாகி விட்ட நிலையில் படிக்கும் பிரிவுகளில் அதிக கவனமெடுத்து மதிப்பெண் பெறுகிறார்கள். தாய்மொழியில் மதிப்பெண் பெறுவது அவர்களுக்கு முக்கியமில்லை, காரணம் தொழிற்கல்வி போன்றவற்றில் மொழிக்கான மதிப்பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. உயர்கல்விக்குப் போகிறவர்களும் மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளையும் அவை இல்லாவிட்டால் வணிகவியல், அறிவியல் என்றெல்லாம் படிக்க விரும்புகிறார்களே தவிர தமிழ் மொழியைச் சொல்லித் தரும் தமிழ் பிரிவுக்கு வேறு எங்கும் இடம் கிடைக்காதவர்களே செல்கின்றனர். பொதுவாக தமிழ் பண்டிதர்கள் கிணற்றுத் தவளைகளாகவே இருந்து கொண்டு உலக வாழ்வின் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் ஒரு தனியுலகில் கற்பனையான மிதப்பில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள்.

            ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிச் சென்ற பிறகு இந்தியாவில் “செப்பு மொழி பதினெட்டுடையாள்” என்று பாரதி சொன்னது போல இந்திய மொழிகளை வளப்படுத்தவும், அதை ஆட்சி மொழியாகவும், பேச்சு வழக்கில் பிழையின்றி பேசவும் முயற்சி செய்யாமல் போனதற்கு திராவிட இயக்கமே காரணம். சுதந்திரத்துக்குப் பிறகு தென்னகத்தில் இந்திய மொழிகளே கோலோச்ச வேண்டு மென்கிற எண்ணத்தில் தான் தமிழ்நாட்டில் “இந்தி பிரச்சார சபா” மகாத்மா காந்தியடிகளால் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய மொழிகள் அனைத்தும் இருவேறு பாரம்பரிய மொழிகளின் வழித்தோன்றல்கள். வடமொழி ஒன்று தமிழ் மொழி மற்றொன்று. மகாகவி பாரதியின் வாக்கால் சொல்லுவதென்றால் “ஆதிசிவன் பெற்று விட்டான், என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்” என்றும் “ஆன்ற மொழிகளினுள்ளே, உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” என்றும் சொல்வதிலிருந்து வடமொழியும் தமிழும் ஆதி நாட்களில் இருந்து இரட்டையர்களாக இருந்து வந்திருப்பது தெரியும். ஆரியம் என்ற சொல்லை திராவிடத்தார் விரித்துரைத்த வக்கிர எண்ணங்களினால் அதையொரு எதிரியாகக் கருதும் நிலைமையை இங்கே உருவாக்கினார்கள்.

            வடமொழிக்கு நிகராகத் தமிழும் இங்கே நிலைபெற்றிருந்த காரணத்தால் தான் வான்மீகியைக் கரைத்துக் குடித்த கவிச்சக்கரவர்த்தி கம்பன் அழியா புகழ் காவியமாம் “கம்ப ராயாயணத்தைப்” படைத்தான். வியாசரின் “பாரதத்தைப்” படித்த பிறகுதான் வில்லிபுத்தூரார் “வில்லி பாரதம்” எழுத முடிந்தது. நளவெண்பாவும், வேறு பல நூல்களும் வடமொழியின் தாக்கத்தால் இங்கே தமிழில் வெளிவந்தன. காளிதாசனும் கம்பனும் இந்தியா முழுவதிலும் போற்றப்பட்டு வந்திருக்கின்றனர். அரைகுறையாகத் தெரிந்த சில ஆங்கில ஆசிரியர்களின் பெயரையும், மதமாற்றம் கருதி இங்கே வந்து பாமர மக்களிடை உரையாடவென்று தமிழைப் பேசப்பழகிய கிறிஸ்தவ மதபோதகர்கள் தமிழ் கற்ற பெருமையை இன்றளவும் வானளாவப் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பவர்கள் அல்லவா இவர்கள்.

            இந்தியாவில் பல மாநிலங்களில் மும்மொழித் திட்டம் அமுலில் இருந்து வருகிறது. மும்மொழித் திட்டமா அதற்குத் தமிழ்நாட்டில் இடமே இல்லை என்று தடுத்து நிறுத்தியதன் பலன், மற்ற மாநிலங்கள் அவரவர் தாய்மொழியைக் காப்பாற்றி, போற்றி, வளர்க்க முடிந்த நிலையில் தமிழகம் தமிழ் மொழியை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தி மொழியை தேசிய மொழியாக அறிவிக்க இவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மொத்தமுள்ள இந்திய ஜனத்தொகையில் தமிழக மக்கள் மட்டுமே தேசிய மொழியைப் புறக்கணித்து விட்டு இன்னமும் அன்னிய மோகத்தில் ஆங்கிலமே எங்கள் மொழி என்று பாதுகாத்துத் தூக்கிப் பிடித்து வருவதுதான் தமிழ்மொழியின் அழிவுக்குக் காரணமாக இருக்கிறது.

            உலகத்தில் சூரியனே அஸ்தமிக்காக ஏகாதிபத்திய மொழியாக இருந்த ஆங்கிலம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் இந்திய எல்லையினுள் தமிழ்நாடு எனும் குறுகிய பிரதேசத்தில் மட்டுமே இன்னமும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு பழைய முறையில் கூட்டத்தின் தலைவரை “அக்கிராசனாதிபதி” என்றும் தேர்தலில் போட்டியிடுபவரை “அபேட்சகர்” என்று கூறி வந்ததைக் “கூட்டத்தின் தலைவர்” என்றும் “வேட்பாளர்” என்றும் இப்படி பல சொற்களை இவர்கள் மாற்றி புகுத்தினார்களே தவிர ஆங்கிலத்தின் சொல்லாடல், சொற் பிரயோகம் இவைகளை மக்கள் வழக்கத்திலிருந்து மாற்றி இருக்கிறார்களா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

            தமிழர் ஒருவர் தன் மகனிடம் சொல்லும் உரையாடல் இதோ: “நீ ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் எனக்கொரு ஏ.சி. டூ டயர் டிக்கெட் சென்னைக்கு புக் செய்துவிட்டு, வரும் வழியில் பேங்க்குக்குப் போய் செக்கை என்கேஷ் செய்து கொண்டு வா. போகும்போது பைக்கை எடுத்துக் கொண்டு போ. ஸ்பீடா போகாதே” இப்படியொரு உரையாடலைக் கேட்கும் போது தமிழகத்தில் தமிழ் மொழி நன்கு வளர்ந்திருக்கிறதா அல்லது திராவிடம் போற்றும் ஆங்கிலத்தின் தாக்கம் வளர்ந்திருக்கிறதா என்பதை நாம் ஆழ்ந்தி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

            தமிழில் சிறப்பெழுத்தாகவும் ஒலியில் சிறந்ததாகவும் விளங்கும் “ழ” “ல” “ள” போன்ற எழுத்துக்களின் உச்சரிப்பைத் தமிழராயிருப்போர், சரியாக உச்சரிக்கச் சொல்லித் தராத வரையில் தமிழைப் போற்றுகிறோம் என்று ஆதாயம் கருதி ஒலமிடலாமே தவிர காரியத்தில் சாத்தியமில்லை. தமிழை “தமிள்” என்றும் தமிழரைத் “தமிளர்” என்றும், தான் மட்டுமல்லாமல் தன் வாரிசுகளையும் இன்று வரை அப்படியே பழக்கப் படுத்தியவர்கள் கொள்கை என்று பேசுவதற்காகவேனும் சரியாக உச்சரிக்கப் பழக்கக் கூடாதா? மொழியும், இனமும் மொழிப் பற்று என்பதும் சுயநலத்துக்கான ஆயுதமாகத்தான் இங்கே பயன்பட்டு வருகிறதே தவிர, தமிழ் மொழி, அதன் மீது பற்று கொண்ட, திராவிடம் பேசாத பலரால்தான் இன்னமும் காப்பாற்றப்பட்டு பாதுகாக்கப் படுகிறது. இதை ஆயிரம் கோயிலில் சத்தியம் செய்யலாம். மொழி மக்களுக்கானது, அது எந்த இயக்கத்தின் ஆளுமைக்குள்ளும் வருவதல்ல. தமிழ் மொழியை முறையாகப் போற்றிப் பாதுகாத்தாலே போதும், யாரும் அதை வளர்த்தேன் என்று சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை, அது வளர்க்க வேண்டிய அளவு இளைத்த மொழியல்ல. தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் உயிர், இதை நினைவில் கொண்டால் போதும், தமிழ் காலாகாலத்துக்கும் செழிப்போடு வாழும்! வாழ்க தமிழ்!

No comments: