பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 30, 2020

சுதந்திரப் போரில் திருச்சியின் பங்கு.


                                                     
            தமிழகத்தில் காவிரியும் அதன் உபநதிகளும் பாய்ந்து வளம் பெருக்கும் மாவட்டம் திருச்சிராப்பள்ளி. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இதிலிருந்து  பின்னாளில் கரூர், பெரம்பலூர், அரியலூர் என்று பல மாவட்டங்களாகப் பிரியவும் செய்தது.1918ஆம் ஆண்டில் திருச்சி ஜில்லா முதல் அரசியல் மாநாடு இங்கே இரண்டு நாட்கள் நடைபெற்றது. முயற்சி எடுத்து நடத்தியவர் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன். இதற்கு ராஜாஜி, ஈ.வே.ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு வி.க. போன்றவர்களை அழைத்துப் பேச வைத்தார்.

திருச்சிராப்பள்ளியில் 1919லேயே அன்னிபெசண்ட் தொடங்கிய ஹோம்ரூல் இயக்கம் தீவிரமாக நடைபெற்றது. அதில் எஃப்.ஜி.நடேசய்யர், சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஆர்.நாராயண ஐயங்கார், தேசியக் கல்லூரி மாணவன் சதாசிவம், எம்.எஸ்.ராஜா ஆகியோர் இந்த கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டார்கள். இவர்கள் மாணவர்கள் கன்வென்ஷன் ஒன்றையும் இங்கே நடத்தி அதற்கு அருண்டேல், டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆகியோரை அழைத்து வந்தனர்.

பெரம்பலூர் தாலுகா எசனை எனும் ஊரில் மாவட்ட மாநாடு ஒன்றையும் நடத்தினர். அதில் வடக்கே பர்தோலி சத்தியாக்கிரகம் போல இங்கேயும் வரிகொடா இயக்கம் நடத்துவது என்று தீர்மானித்தார்கள். ஆனால் அது நடைபெறவில்லை.

ஒத்துழையாமை இயக்கம் இம்மாவட்டத்தில் தீவிரமாக நடத்தப்பட்டது. இதில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், வ.வெ.சு.ஐயர், டாக்டர் சாஸ்திரி ஆகியோர். இங்கு கல்லூரி முன்பு மறியல், கள்ளுக்கடை முன்பு மறியல் இவைகளெல்லாம் நடந்தன. மாணவர்கள் அரசியல் இயக்கங்களில் ஈடுபடுவதானால் அவர்கள் தங்கள் கல்லூரிகளை விட்டு வெளியேற வேண்டும், வக்கீல்கள் தங்கள் தொழிலை விட்டுவிட வேண்டும் என்று காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை ஏற்று கல்லூரியை விட்டு வெளியேறியவர்கள் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, மணக்கால் சதாசிவம், காங்கிரஸ் அலுவலக நிர்வாகியாக இருந்த ஆர்.கிருஷ்ணசாமி, தஞ்சை தியாகராஜன், புதுக்கோட்டை எஸ்.வெங்கட்ராமன், முகமது உஸ்மான், சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசிய மூவண்ணக் கொடியை ஏற்றி சாகசம் புரிந்த சேரங்குளம் பாஷ்யம் (ஆர்யா) ஆகியோர்.

வக்கீல் தொழிலை விட்டு வெளிவந்தவர்கள் என்.ஹாலாஸ்யம் ஐயர், ரா.நாராயண ஐயங்கார், டி.வி.பாலகிருஷ்ண சாஸ்திரி ஆகியோர்.

திருச்சி தேசிய கல்லூரியின் முன்பு ஒரு மறியல் நடந்தது. பொதுவாக கல்லூரி நிர்வாகம் மறியல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள், காவல் துறையின் உதவியோடு அவர்களை அங்கிருந்து அகற்ற முற்படுவார்கள், அல்லவா? ஆனால் திருச்சி தேசியக் கல்லூரியில் என்ன நடந்தது தெரியுமா? கல்லூரி முதல்வர் தொண்டர்களையெல்லாம் அழைத்து, கெளரவித்து, அனைவருக்கும் குடிக்க பானங்கள் வழங்கி அன்போடு அனுப்பி வைத்தார். இயக்கத்துக்கு அவர் கொடுத்த மறைமுகமான ஆதரவு இது. இந்த தேசியக் கல்லூரியில் படித்த பலர் பிற்காலத்தில் போற்றத் தகுந்த தேசபக்தர்களாக விளங்கினர். அவர்களில் மதுரையைச் சேர்ந்த டாக்டர் பிச்ச-முத்தம்மாள் என்பவரும் ஒருவர்.

திருச்சியில் நடந்த கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டு டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி, வி.பாலசுப்ரமணியம், சி.டி.கோபாலன், சோடாக்கடை மகமது உசேன், அமீத்கான் சாஹிப், அப்துல் வகாப் ஆகியோர் சிறை சென்றனர். அரசாங்கப் பணியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ப.சங்கிலியா பிள்ளையும், வடிவேல் ஆசாரியும் சர்வே இலாகா விலிருந்து ராஜிநாமா செய்துவிட்டு வெளியேறினர். 1922இல் தடையை மீறி கூட்டங்களில் பேசியதற்காக மாயவரம் எஸ்.ராமநாதன், செயின்ட் ஜோசப் கல்லூரியை விட்டு வெளியேறிய இக்னேஷியஸ் ஆகியோர் கைதாகினர்.

1922ஆம் ஆண்டில் ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு டாக்டர் டிஎஸ்.எஸ்.ராஜன் தலைவர். அதன் அலுவலகம் இரட்டைமால் வீதியில் லட்சுமிநாராயண ஐயர் என்பார் வீட்டில் இயங்கியது. அப்போது திருச்சிதான் காங்கிரசின் தலைமையகம். 1923ஆம் ஆண்டில் அலுவலகம் சின்னக் கடைத் தெருவில் ஆர்.சீனிவாசய்யர் என்பாருக்குச் சொந்தமான வீட்டின் கீழ் தளத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு. ராஜாஜி, ஈ.வே.ரா., டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் ஆகியோர் துணைத் தலைவர்கள்.

திருச்சி தோல் கிடங்கு அதிபர் ந.மு.கா.ஜாமியான் ராவுத்தர் பொருளாளர். பின்னாளில் டெல்லியில் அமைச்சராக இருந்த கே.சந்தானம், எஸ்.ராமநாதன், ஈரோடு தங்கபெருமாள் பிள்ளை, கே.சுப்ரமணியம் ஆகியோர் செயலாளர்கள். அலுவலக நிர்வாகி எஸ்.வெங்கட்ராமன்.

(இங்கு ஒரு செய்தியை நான் சொல்ல விரும்புகிறேன். இந்த வரலாற்றைப் பல ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய வலைப்பூவான www.tamilnaduthyagigal.blogspot.in என்ற தளத்தில் எழுதியிருந்தேன். அதை படித்துவிட்டு அந்த நிர்வாகி எஸ்.வெங்கட்ராமன் அவர்களின் புதல்வி அது தன்னுடைய தந்தையென்றும், அந்த அம்மையார் அமெரிக்காவில் இருப்பதாகவும், மகள் பெங்களூரில் இருப்பதாகவும்,  இந்த தியாகிகள் வரலாற்றில் தன் தந்தையைப் பறியும் எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பிறகு அவரைப் பற்றிய விவரங்களைச் சேர்த்து அவர் பெயரையும் தியாகிகள் பட்டியலில் சேர்த்தேன்.)

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சென்னை நகருக்கு மாற்றினார்கள். டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு கைதான பின் துணைத் தலைவரான ஈ.வே.ராமசாமி நாயக்கர் அலுவலகத்தை ஈரோட்டிற்கு மாற்றினார். அப்போது மானேஜராக இருந்த எஸ்.வெங்கட்ராமனும் ஈரோடு செல்ல நேர்ந்தது.

1927இல் அகில இந்திய காங்கிரஸ் சென்னையில் நடைபெற்றது. எஸ்.சீனிவாச ஐயங்கார் மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொடுத்தார். இவர் அட்வகேட் ஜெனராலகவும் ஆனார். காங்கிரசின் தலைவராக இவர் தேர்ந்தெடுத்த பின் காங்கிரஸ் அலுவலகம் திருச்சியில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது. கிராமங்களுக்கெல்லாம் சென்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்ய பலர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

1919இல் மார்ச் 30ஆம் தேதி மகாத்மா காந்தி திருச்சிக்கு முதன் முதலாக விஜயம் செய்தார். அவருடன் அலி சகோதரர்கள் என அழைக்கப்பட்ட மகமது அலி, ஷவுக்கத் அலி ஆகியோரும் வந்தனர்.  திருச்சியில் ஒரு பொதுக்கூட்டத்தில் இவர்கள் பேசினார்கள். 1927இல் இரண்டாவது முறையாக காந்தி திருச்சிக்கு கதர் தொழில் குறித்து விஜயம் செய்தார். லால்குடியில் அப்போது ஒரு பொதுக்கூட்டம், அதில் பூவாளூர் பொன்னம்பலனார் என்பவர் ஏற்பாடுகளைச் செய்தார்.

1933இல் காந்தி ஹரிஜன நிதி வசூலுக்காக திருச்சிக்கு வருகை புரிந்தார். அப்போதும் சில கூட்டங்களில் பேசினார். ஒரு நாள் ஸ்ரீரங்கம் உயர்நிலைப் பள்ளி மைதானத்திலும் பேசினார். கடைசியாக 1946இல் மதுரையில் ஆலய பிரவேசம் மதுரை வைத்தியநாத ஐயர் தலைமையிலும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உதவியாலும் சிறப்பாக முடிந்த நிலையில் மீனாட்சியம்மனைத் தரிசிக்க சென்னையிலிருந்து ரயில் மூலம் மதுரைக்குப் போனபோது ஒரு முறை திருச்சிக்கு வந்தார். ரயிலில் இருந்தபடி அவர் பல ஊர்களில் உரையாற்றினார்.




           


Thursday, March 12, 2020

திராவிடத்தால் வீழ்ந்த தமிழ்.


                                                                                        
            பொதுவாக தமிழர்கள் மத்தியில் திராவிட இயக்கங்கள்தான் தமிழை வளப்படுத்தி வந்திருக்கிறது என்கிற எண்ணம் தோற்றுவிக்கப் பட்டிருக்கிறது. இந்த கூற்று உண்மையா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், சுதந்திரத்துக்கு முன்பு தமிழகத்தில் இருந்த மொழிப் பற்றும், மொழியின் செயல்பாடும், திறனும் இன்றைக்கு இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் தமிழ்மொழி என்றும் இளமையான மொழி, நாளும் தன்னை வளப்படுத்திக் கொள்ளும் வகையறிந்த மொழி என்றெல்லாம் போற்றப்படும் நிலையில் யாரும் இந்த மொழியை உரம் போட்டு, நீர் ஊற்றி வளர்க்க வேண்டியதில்லை.

            திராவிட இயக்கத்தார் தங்களால் தமிழ் வளர்ந்தது என்று சொல்லிக் கொள்ள காரணமாக இருந்தது அவர்கள் இயக்கம் தோன்றுவதற்கு முன்பு இங்கு பரவலாக பேச்சு வழக்கில் தமிழ் மொழி மணிப்பிரவாள நடையாக இருந்ததுதான் காரணம். பேச்சிலும் சரி, எழுத்திலும் சரி தமிழ் மொழியோடு வடமொழிச் சொற்களும் கலந்து வந்ததுதான் மணிப்பிரவாளம். இவர்கள் செய்ததெல்லாம் வடமொழியை எதிர்க்கிறேன் என்று சொல்லி அவற்றை நீக்கிவிட்டு ஆங்கிலத்தின் அடிவருடிகள் என்பதை நிலைநிறுத்துவது போல இன்று தமிழ் மொழியைத் தமிழாகப் பேசமுடியாமல் “தங்கிலீஷ்” எனும் கலப்பு மொழியாக ஆங்கிலத்துடன் கலந்து பேச வைத்துவிட்டனர்.

            அன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த ஒருசில சொற்களைத் தமிழில் இவர்கள் மாற்றியமைக்க முயன்றார்கள் என்பது உண்மையாயினும் அதைத் தவிர மொழியின் வளத்தையோ, மொழியின் தனித் தன்மையையோ இவர்கள் பொதுமக்கள் மத்தியில் வளர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவர்கள் பேசும் மேடைப் பேச்சில் மட்டும் பேசுகின்ற இலக்கண மொழி நடை, மேடையை விட்டு கீழே இறங்கி விட்டால் கொச்சையான ஆங்கிலம் கலந்த “தங்கிலீஷ்” மொழியே.

            ஆங்கிலேயர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது, அப்படி அவர்கள் இந்தியாவை விட்டுப் போவதாயிருந்தால் தமிழ்நாட்டையாவது தங்கள் ஆட்சியில் வைத்திருக்க வேண்டுமென்பது இவர்கள் கோரிக்கை. தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சி தொடங்கிய காலத்தில் தான் இங்கு மெட்ரிக் பள்ளிகள் அதிகமாகத் தொடங்கப்பட்டன. அங்கெல்லாம் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஆங்கிலமே பயிற்று மொழியாகவும், பள்ளி வளாகத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டுமென்கிற கட்டுப்பாடும் இருந்த காரணத்தால் மாணவர்கள் தமிழைப் பிழையின்றி பேச முடியாமல் போய்விட்டது. தாய்மொழிக்கு இதுதான் கதி என்றால் இது யாரால் வந்த வினை என்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது. இப்போதைய கல்வி முறையில் மதிப்பெண் பெறுவதே நோக்கமென்றாகி விட்ட நிலையில் படிக்கும் பிரிவுகளில் அதிக கவனமெடுத்து மதிப்பெண் பெறுகிறார்கள். தாய்மொழியில் மதிப்பெண் பெறுவது அவர்களுக்கு முக்கியமில்லை, காரணம் தொழிற்கல்வி போன்றவற்றில் மொழிக்கான மதிப்பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. உயர்கல்விக்குப் போகிறவர்களும் மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளையும் அவை இல்லாவிட்டால் வணிகவியல், அறிவியல் என்றெல்லாம் படிக்க விரும்புகிறார்களே தவிர தமிழ் மொழியைச் சொல்லித் தரும் தமிழ் பிரிவுக்கு வேறு எங்கும் இடம் கிடைக்காதவர்களே செல்கின்றனர். பொதுவாக தமிழ் பண்டிதர்கள் கிணற்றுத் தவளைகளாகவே இருந்து கொண்டு உலக வாழ்வின் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் ஒரு தனியுலகில் கற்பனையான மிதப்பில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள்.

            ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிச் சென்ற பிறகு இந்தியாவில் “செப்பு மொழி பதினெட்டுடையாள்” என்று பாரதி சொன்னது போல இந்திய மொழிகளை வளப்படுத்தவும், அதை ஆட்சி மொழியாகவும், பேச்சு வழக்கில் பிழையின்றி பேசவும் முயற்சி செய்யாமல் போனதற்கு திராவிட இயக்கமே காரணம். சுதந்திரத்துக்குப் பிறகு தென்னகத்தில் இந்திய மொழிகளே கோலோச்ச வேண்டு மென்கிற எண்ணத்தில் தான் தமிழ்நாட்டில் “இந்தி பிரச்சார சபா” மகாத்மா காந்தியடிகளால் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய மொழிகள் அனைத்தும் இருவேறு பாரம்பரிய மொழிகளின் வழித்தோன்றல்கள். வடமொழி ஒன்று தமிழ் மொழி மற்றொன்று. மகாகவி பாரதியின் வாக்கால் சொல்லுவதென்றால் “ஆதிசிவன் பெற்று விட்டான், என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்” என்றும் “ஆன்ற மொழிகளினுள்ளே, உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” என்றும் சொல்வதிலிருந்து வடமொழியும் தமிழும் ஆதி நாட்களில் இருந்து இரட்டையர்களாக இருந்து வந்திருப்பது தெரியும். ஆரியம் என்ற சொல்லை திராவிடத்தார் விரித்துரைத்த வக்கிர எண்ணங்களினால் அதையொரு எதிரியாகக் கருதும் நிலைமையை இங்கே உருவாக்கினார்கள்.

            வடமொழிக்கு நிகராகத் தமிழும் இங்கே நிலைபெற்றிருந்த காரணத்தால் தான் வான்மீகியைக் கரைத்துக் குடித்த கவிச்சக்கரவர்த்தி கம்பன் அழியா புகழ் காவியமாம் “கம்ப ராயாயணத்தைப்” படைத்தான். வியாசரின் “பாரதத்தைப்” படித்த பிறகுதான் வில்லிபுத்தூரார் “வில்லி பாரதம்” எழுத முடிந்தது. நளவெண்பாவும், வேறு பல நூல்களும் வடமொழியின் தாக்கத்தால் இங்கே தமிழில் வெளிவந்தன. காளிதாசனும் கம்பனும் இந்தியா முழுவதிலும் போற்றப்பட்டு வந்திருக்கின்றனர். அரைகுறையாகத் தெரிந்த சில ஆங்கில ஆசிரியர்களின் பெயரையும், மதமாற்றம் கருதி இங்கே வந்து பாமர மக்களிடை உரையாடவென்று தமிழைப் பேசப்பழகிய கிறிஸ்தவ மதபோதகர்கள் தமிழ் கற்ற பெருமையை இன்றளவும் வானளாவப் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பவர்கள் அல்லவா இவர்கள்.

            இந்தியாவில் பல மாநிலங்களில் மும்மொழித் திட்டம் அமுலில் இருந்து வருகிறது. மும்மொழித் திட்டமா அதற்குத் தமிழ்நாட்டில் இடமே இல்லை என்று தடுத்து நிறுத்தியதன் பலன், மற்ற மாநிலங்கள் அவரவர் தாய்மொழியைக் காப்பாற்றி, போற்றி, வளர்க்க முடிந்த நிலையில் தமிழகம் தமிழ் மொழியை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தி மொழியை தேசிய மொழியாக அறிவிக்க இவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மொத்தமுள்ள இந்திய ஜனத்தொகையில் தமிழக மக்கள் மட்டுமே தேசிய மொழியைப் புறக்கணித்து விட்டு இன்னமும் அன்னிய மோகத்தில் ஆங்கிலமே எங்கள் மொழி என்று பாதுகாத்துத் தூக்கிப் பிடித்து வருவதுதான் தமிழ்மொழியின் அழிவுக்குக் காரணமாக இருக்கிறது.

            உலகத்தில் சூரியனே அஸ்தமிக்காக ஏகாதிபத்திய மொழியாக இருந்த ஆங்கிலம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் இந்திய எல்லையினுள் தமிழ்நாடு எனும் குறுகிய பிரதேசத்தில் மட்டுமே இன்னமும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு பழைய முறையில் கூட்டத்தின் தலைவரை “அக்கிராசனாதிபதி” என்றும் தேர்தலில் போட்டியிடுபவரை “அபேட்சகர்” என்று கூறி வந்ததைக் “கூட்டத்தின் தலைவர்” என்றும் “வேட்பாளர்” என்றும் இப்படி பல சொற்களை இவர்கள் மாற்றி புகுத்தினார்களே தவிர ஆங்கிலத்தின் சொல்லாடல், சொற் பிரயோகம் இவைகளை மக்கள் வழக்கத்திலிருந்து மாற்றி இருக்கிறார்களா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

            தமிழர் ஒருவர் தன் மகனிடம் சொல்லும் உரையாடல் இதோ: “நீ ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் எனக்கொரு ஏ.சி. டூ டயர் டிக்கெட் சென்னைக்கு புக் செய்துவிட்டு, வரும் வழியில் பேங்க்குக்குப் போய் செக்கை என்கேஷ் செய்து கொண்டு வா. போகும்போது பைக்கை எடுத்துக் கொண்டு போ. ஸ்பீடா போகாதே” இப்படியொரு உரையாடலைக் கேட்கும் போது தமிழகத்தில் தமிழ் மொழி நன்கு வளர்ந்திருக்கிறதா அல்லது திராவிடம் போற்றும் ஆங்கிலத்தின் தாக்கம் வளர்ந்திருக்கிறதா என்பதை நாம் ஆழ்ந்தி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

            தமிழில் சிறப்பெழுத்தாகவும் ஒலியில் சிறந்ததாகவும் விளங்கும் “ழ” “ல” “ள” போன்ற எழுத்துக்களின் உச்சரிப்பைத் தமிழராயிருப்போர், சரியாக உச்சரிக்கச் சொல்லித் தராத வரையில் தமிழைப் போற்றுகிறோம் என்று ஆதாயம் கருதி ஒலமிடலாமே தவிர காரியத்தில் சாத்தியமில்லை. தமிழை “தமிள்” என்றும் தமிழரைத் “தமிளர்” என்றும், தான் மட்டுமல்லாமல் தன் வாரிசுகளையும் இன்று வரை அப்படியே பழக்கப் படுத்தியவர்கள் கொள்கை என்று பேசுவதற்காகவேனும் சரியாக உச்சரிக்கப் பழக்கக் கூடாதா? மொழியும், இனமும் மொழிப் பற்று என்பதும் சுயநலத்துக்கான ஆயுதமாகத்தான் இங்கே பயன்பட்டு வருகிறதே தவிர, தமிழ் மொழி, அதன் மீது பற்று கொண்ட, திராவிடம் பேசாத பலரால்தான் இன்னமும் காப்பாற்றப்பட்டு பாதுகாக்கப் படுகிறது. இதை ஆயிரம் கோயிலில் சத்தியம் செய்யலாம். மொழி மக்களுக்கானது, அது எந்த இயக்கத்தின் ஆளுமைக்குள்ளும் வருவதல்ல. தமிழ் மொழியை முறையாகப் போற்றிப் பாதுகாத்தாலே போதும், யாரும் அதை வளர்த்தேன் என்று சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை, அது வளர்க்க வேண்டிய அளவு இளைத்த மொழியல்ல. தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் உயிர், இதை நினைவில் கொண்டால் போதும், தமிழ் காலாகாலத்துக்கும் செழிப்போடு வாழும்! வாழ்க தமிழ்!

Wednesday, March 11, 2020

“தாயினும் நல்லான்”


 “உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்                                                                              நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா                                                                           அலகிலா விளையாட்டுடையார் அவர்                                                                            தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!  
    
 அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி                                                 அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிர்க்காக ஏகி                                                                      அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு  அயலாரூரில்                                          அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.

 நாடிய பொருள் கைகூடும், ஞானமும் புகழும் உண்டாம்                                                வீடியல் வழியது ஆக்கும் வேரியம் கமலை நோக்கும்                                                          நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய   வாகை                                                                சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவோர்க்கே.

 நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே                                                                        தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே                                                                           சென்மமும் மரணமும் இன்றித் தீருமே                                                                         இன்மையே “ராம” என்ற இரண்டு எழுத்தினால்.

            இராம காதையில் தனக்கென வாழா பெருந்தகைகள் சிலரை கம்பர் நமக்குக் காட்டுகிறார். சுயநலமும், தற்பெருமையும் பேசித்திரியும் இந்த நாளில் அப்படிப்பட்ட தன்னலம் கருதா நாயகர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளுதல் நலம் அல்லவா? அப்படிப்பட்ட தன்னலம் கருதா கதா பாத்திரங்கள் இராமாயணத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை நீங்களும் சிந்தனை செய்து பார்த்தால் விளங்கும். ஒருவன் அனுமன், இன்னொருவன் குகன், இன்னொருவர் சபரி. இவர்கள் இராமபிரானிடம் எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல் அன்பினால் பணி செய்ததை நாம் உணர்கிறோம்.  அந்த உணர்வுதான் மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்குமுள்ள வித்தியாசம். இனி காப்பியத்தில் தாயினும் நல்லான் யார் என்பதைப் பார்ப்போம்.

            எந்தத் தாய் பிரதிபலன் எதிர்பார்த்துத் தன் மக்களை வளர்க்கிறாள்? அன்பு செலுத்துகிறாள். அந்தக் காலத்தில் தூக்குதூக்கி என்றொரு படம். அதில் வரும் பழமொழிகள். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டு வந்தால் சகோதரி, உயிர்காப்பான் தோழன், கடைசி வரியை இங்கே சொல்ல எனக்குத் தயக்கமாக இருக்கிறது, நீங்களே பின்னர் தெரிந்து கொள்ளுங்கள்.       
                           
            ராமாயண காப்பியத்தை அறியாதார் யார்? அயோத்தி மன்னன் தசரதன். அவனுக்கு புத்திர காமேஷ்டி யாகம் செய்து நான்கு ஆண் மக்கள் பிறந்தனர். அவர்கள் ராமன், இலக்குவன், பரதன் சத்ருக்னன். இதில் இராமனும் லக்குவனும் இணைபிரியாதவர்கள். பரதனும் சத்ருக்னனும் நெருக்கமானவர்கள்.

ஒருநாள் தசரதன் அவைக்கு விஸ்வாமித்திரர் எனும் முனிவர் வருகை தருகிறார். கோபத்துக்கு பிரபலமான இந்த முனிவர் வந்தது அனைவருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தாலும், தசரதன் பயபக்தியோடு ஓடிப்போய் அவரை வரவேற்று உபசரித்து முனிவர் வேண்டுவது என்ன என்று விசாரிக்கிறான்.

அப்போது முனிவர் சொல்கிறார்:

 என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறொன்று உடையரானால்             பன்னகமும் நகுவெள்ளிப் பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்                             தன்னகரும் கற்பக நாட்டு அணிகவரும் மணிமாட அயோத்தி என்னும்               பொன்னகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய்!

முனிவர் சொல்கிறார் நான் செய்யும் யாகத்துக்கு இடையூறாக இருந்து தடை செய்துவரும் அரக்கர்களை அழிக்க நின் மக்களில் அந்த கருத்த இராமனை என்னுடன் அனுப்பு என்றதும் தசரதன் மூர்ச்சையாகிறான். யாகத்தைக் காக்கத் தானே வருவதாகவும் ராமன் குழந்தை என்றும் யாசிக்கிறான். ஆனால் முனிவர் சினம் கொண்டு அனுப்பினால் உன் மகன் ராமனை அனுப்பு என்றதும் வேறு வழியின்றி அவருடன் ராமனையும் அவனுக்குத் துணையாக இலக்குவனையும் முனிவருடன் அனுப்புகிறார்.

முனிவருடன் சென்ற இராம இலக்குவர் தாடகையை வதம் செய்து மாரீசன் சுபாகு எனும் இரு அரக்கர்களை விரட்டிவிட்டு யாகத்தை நிறைவு செய்ய உதவுகிறார்கள். பின் முனிவர் அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு மிதிலையில் ஜனக மகாராஜா வைத்திருக்கும் சிவதனுசை வளைக்க இவ்விருவரையும் அழைத்துச் செல்கிறார். வழியில் ராமனின் கால்தூசி பட்டு ஒரு பாறையிலிருந்து அகலிகை சாபம் நீங்கி மனித உருக்கொண்டு எழுகிறாள்.

மிதிலை நகரில் அரண்மனை மாடத்தில் ராமன் சீதையைக் காண்கிறார். அரசவையில் வைக்கப்பட்ட வில்லினை நாணேற்ற முடியாமல் இதர மன்னர்கள் திணர, இராமன் மட்டும் அதை கையில் எடுத்தான், வில்லில் அம்பைத் தொடுத்தான், எடுத்தது கண்டார் ஏனையோர் வில் இற்றதைக் கேட்டார். வில்லை ஒடித்த இராமனுக்குச் சீதையுடன் திருமணம். அவன் இதர மூவருக்கும் அதே அரண்மனைப் பெண்களுடன் திருமணம்.

அயோத்தி திரும்பும் வழியில் பரசுராமன் எதிர் கொண்டு ராமன் சிவதனுசை வளைத்ததை பரிகசித்துத் தன் வில்லை வளைக்கச் சொல்ல, இராமனும் அதன்படி வளைத்து இதற்கு இலக்கு எது என்கிறான். தோற்ற பரசுராமன் தன் அவதாரம் முடிந்து திரும்ப இது வழிவகுக்கிறது.

ஊர் திரும்பிய ராமனுக்கு முடிசூட்டு விழா நிச்சயமாகிறது. அதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அப்போது தசரதனின் இளைய மனைவியான கைகேயியின் பணிப்பெண் கூனி என்கிற மந்தரை கைகேயியின் மனதைக் கலைத்து இராமனை 14 ஆண்டுகள் கானகம் போகவும், தன் மகன் பரதன் நாட்டை ஆளவும் வரம் கேட்க வைக்கிறாள்.

“ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள, நீ போய்த்                                                        தாழிரும் சடைகள் தாங்கி, தாங்கரும் தவம் மேற்கொண்டு                                             பூழிரும் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள்ஆடி,                                                     ஏழிரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன்’ என்றாள்.

அதன்படி இராமன் இலக்குவன் சீதை ஆகிய மூவரும் கானகம் புறப்பட அமைச்சர் சுமந்திரன் தேர் ஓட்டிக் கொண்டு கானகத்தில் கொண்டு விடுகின்றனர். அதன் பிறகு.....
கங்கைக் கரைக்குச் சென்ற இராம லக்ஷ்மண சீதை ஆகியோர் அதன் வடக்குக் கரையில் ஆசிரமங்கள் அமைத்துத் தங்கியிருந்த முனிவர்களுடன் உபசரிப்பை ஏற்றுக் கொண்டு தங்கினர். அங்கு இவர்கள் கங்கை நதியில் நீராடினர். இராமனின் திருவடி பட்ட மாத்திரத்தில் பாவங்கள் நீங்கும் அல்லவா, ஆனால் இங்கு அவன் மேனி முழுதும் கங்கையில் அமிழ்ந்து நீராடியதால் அந்த கங்கையின் சிறப்பு அதிகமாயிற்று, அது புனிதம் அடைந்தது என்கிறார் கம்பர்.

முனிவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. இராமபிரான் தங்கள் ஆசிரமத்துக்கு வந்து தங்களுடன் தங்கி தாங்கள் அளிக்கும் உணவை உண்பதைக் கண்டு அவர்களுக்குப் பேரானந்தம். உணவு ஆனபின்பு இராமன் ஆசிரமத்தின் உள்ளே அமர்ந்து முனிவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறான்.

 “ஆய காலையின்; ஆயிரம் அம்பிக்கு நாயகன் போர்க்குகன் எனும் நாமத்தான்                தூய கங்கைத் துறவிடும் தொன்மையான்; காயும் வில்லினன், கல்திரள் தோளினான்.”

அந்த நேரத்தில் வெளியில் ஏராளமான மனிதர்கள் வந்து கூடுகின்ற போது எழுகின்ற ஓசை, அந்த கானகத்தின் அமைதிக்கு மாறாக இராமன் காதுகளில் வந்து விழுந்தது.

“சிருங்கிபேரம் எனத்திரைக் கங்கையின் மருங்கு தோன்றும் நகருடை வாழ்க்கையன் ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன்; இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான்.”

அந்த காட்டில் சிருங்கிபேரம் எனுமிடத்தில் வசித்துக் கொண்டு, கங்கையின் இரு கரைகளுக்கும் உரிமை பூண்டு, கங்கை நதியில் படகுகளை ஓட்டும் உரிமை பெற்றவனுமான குகன் எனும் வேட்டுவ அரசன் தன் உற்றார், பரிவாரங்கள் புடைசூழ பெருங்கூட்டமாக வந்து இராமனைக் காண வந்திருக்கிறான். அவனுக்கு தசரத சக்கரவர்த்தி என்பவரைப் பற்றி தெரியும், அவருடைய குமாரர்கள் தான் வசிக்கும் இந்த கானகத்துக்கு வந்திருக்கிறார்கள் என்றதும் அவர்களை தரிசிக்க வேண்டுமென்கிற ஆர்வத்தோடு தன்னுடைய பரிவாரங்கள் அனைவரையும் அங்கு அழைத்துக் கொண்டு வந்து சேர்கிறான். பெரியவர்களைப் பார்க்கப் போகும்போது ஏதேனும் வாங்கிக்கொண்டு செல்லும் வழக்கப்படி அவன் கையில் தேனும், மீனும் கொண்டு வந்தான்.

இராமனைப் பார்த்ததில்லை, கேள்வி மட்டுமே பட்டிருக்கிறான், எனினும் அவன் மனதில் இராமன் மீது அளவுகடந்த பக்தி, மரியாதை, அன்பு. அவனைத் தரிசித்துப் பேசிவிட வேண்டுமென்கிற ஆசையில் வந்திருக்கிறான். தன் கூட்டத்தார் பெரும் கூட்டமாக வந்திருப்பதால் அவர்களது ஆரவாரம் இராமனுக்குத் தொல்லையாக இருந்து விடுமோ என்கிற அச்சத்தால், அவர்களை யெல்லாம் சற்று தூரத்தில் நிற்க வைத்துவிட்டு அவன் மட்டும் தனியனாக இராமன் இருக்கும் ஆசிரமத்தின் வாயிலுக்கு வருகிறான்.

இராமன் எப்படி இருப்பான், குகனுக்குத் தெரியாது. அவன் அந்த ஆசிரமத்தின் வாயிலுக்கு வந்து நிற்கிறான். ஒரு கையில் குடுவை ஒன்றில் புதிதாக ஆய்ந்து எடுத்தப் புத்தம் புதிய தேன் நிரம்பியிருக்கிறது. மற்றொரு கையில் கங்கையில் அன்று பிடித்த மீன்கள் இருக்கின்றன.

பாவம் குகன், காட்டில் வாழ்கின்ற வேட்டுவ மன்னன். அவனுக்குத் தெரியுமா இராமபிரான் தவக்கோலத்தில் இருப்பவர், மீன் உண்பாரா இல்லையா என்று. ஆசை பற்றி அவனுக்கு உகந்த அந்த மீன்களை இராமனுக்குக் கொடுத்துவிட வேண்டுமென்கிற அன்பினால் கொண்டு வந்தான். இன்னொரு கையில் ஒரு குடுவை நிரம்ப தேன். புத்தம்புதிய தேன்.

இப்போது நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது. கானகத்தில் கிடைக்கும் கனிகள், கிழங்குகள் போன்றவற்றைக் கொண்டு வராமல் தேனையும் மீனையும் குகன் கொண்டு வருவானேன்? குகனுக்கு இந்த உலகத்தை அப்படியே இராமனுக்குக் கொடுத்து விட வேண்டுமென்கிற ஆசை. அடி முதல் முடி வரையிலான உலகியல் பொருட்கள் அனைத்தையும் தன் அன்பினால் இராமனுக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்கிற உந்துதல். பார்த்தான் மேலே மிக உயரமான மலைச் சிகரத்தின் உச்சியில் அடர்ந்த மரத்தில் கட்டியிருந்த தேன்கூட்டிலிருந்த தேனை எடுத்து அதனை ஒரு குடுவையில் சேர்த்துக் கொண்டான். பின் மிக ஆழமான பகுதியாகத் தேர்ந்தெடுத்து,  கங்கையில் இருந்த நல்ல மீன்களைச் சேகரித்து எடுத்துக் கொண்டான். ஆக, இவ்வுலகின் அடியிலிருந்து முடிவரையிலான பொருட்களை இராமனுக்குக் கொடுப்பதாக அவனுக்கு எண்ணம்.

இவ்விரு பொருட்களையும் தன் இரு கரங்களில் எடுத்துச் சென்று ஆசிரமத்தின் முன்பு நிற்கிறான். அப்போது வெளியில் அரவம் கேட்டு வெளியே வந்தான் லட்சுமணன். குகனுக்குத்தான் இராமனைப் பார்த்தது கிடையாதே, இலக்குவனை இராமன் என்று நினைத்துக் கொண்டு விட்டான்.

குகனைப் பார்த்து இலக்குவன் கேட்டான். “நீங்கள் யார் ? உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள்?”

அதற்கு குகன்         “தேவா! நின்கழல் சேவிக்க வந்தேனென்;                                                                                   நாவாய் வேட்டுவன் நாய் அடியேன்” என்றான்.

அப்போது குகன் இலக்குவனையே இராமனாக எண்ணிக் கொண்டு மிகுந்த பணிவுடன் சொல்கிறான், “ஐயனே, இந்த கங்கை நதியில் நாவாய்களை ஓட்டும் வேட்டுவன் நான். அயோத்தி மன்னன் தசரத குமாரன் இராமபிரான் இங்கே வந்திருப்பதாக அறிந்தேன். நின் சேவடி கண்டு தொழுது செல்லவே நான் இங்கு வந்தேன்” என்கிறான்.   
       
குகனுக்கு இவன் தான் இராமபிரானோ எனும் சந்தேகம். இருந்தாலும் எப்படிக் கேட்பது. நின்சேவடி தொழ வந்தேன் என்று சொல்லி வைத்தான்.

உடனே இலக்குவன் “சற்று இருங்கள், நீங்கள் வந்திருக்கும் செய்தியை நான் போய் உள்ளே இருக்கும் இராமபிரானிடம் சொல்கிறேன்” என்று சொல்லி போகிறான்.

இலக்குவன் இராமனிடம் சொல்கிறான். “கொற்றவ! தங்களைக் காண இந்த காட்டின் அரசன் வேட்டுவ மன்னன், கங்கையில் படகு செலுத்தும் உரிமை பெற்றவன், குகன் எனும் நாமம் உடையவன், தாயினும் மிக நல்லவனான தூயவன், இந்த சிருங்கிபேரம் எனும் பகுதிக்கு அரசன் குகன் என்பான் தங்கள் சேவடி சேவிக்க விரும்பி வந்திருக்கிறான்” என்கிறான்.

அந்தப் பாடலைப் பார்ப்போம்.
 “நிற்றி ஈண்டு என்று புக்கு நெடியவற் றொழுது தம்பி,                                              “கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன் நிமிர்ந்த கூட்டச்                                            சுற்றமும் தானும்: உள்ளம் தூயவன், தாயின் நல்லான்;                                                   எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு இறைகுகன் ஒருவன்” என்றான்.

            உடனே இராமபிரான் இலக்குவனிடம் “என்பால் அழைத்தி நீ அவனை” என்கிறான்.

            குகனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. இலக்குவன் தன்னை வருக, வந்து இராமனைக் காண்க என்று சொன்னதும் விரைந்து உள்ளே நுழைந்தான். அங்கே அவன் காணத் துடித்துக் கொண்டிருந்த இராமனைத் தன் “கண்ணின் நோக்கினான்”. இங்கு கண்ணின் நோக்கினான் எனும் சொல்லை கவனிக்க வேண்டும். பார்த்தல், நோக்குதல், காணுதல் இவைகளுக்குள் உள்ள வித்தியாசம். ஒரு நோக்கத்தோடு காண்பது நோக்குதல்.

அப்படிக் கண்டதும் மனம் கனிந்து நின்றான். தன் கருத்த உடல் மண்ணில் பதியும் வண்ணம் தரையில் விழுந்து வணங்கினான். தன் உடலை நன்கு வளைத்து, கைகளால் வாயைப் பொத்திக் கொண்டு பக்தியோடு நின்றான்.

            குகன் காட்டிய மரியாதை, அன்பு இவற்றைக் கண்டு மனம் மகிழ்ந்த இராமன் அவனை “ஈண்டு இருத்தி” என்று அமரச் சொல்கிறான்.

            இராமனிடத்தில் இருக்கும் மரியாதைக்கு அப்படியெல்லாம் குகன் சொன்னவுடன் உட்கார்ந்துவிடுவானா? இல்லை, உட்காரவில்லை. எல்லையில்லா அன்பினை மனதில் தேக்கிக் கொண்டு வந்திருந்த குகன் சொல்கிறான். “ஐயனே! தாங்கள் உண்ணவேண்டு மென்று தேர்ந்தெடுத்த மீன்களையும், ஆராய்ந்தறிந்து சேர்த்த தேனையும் கொண்டு வந்திருக்கிறேன். தங்கள் திருவுளம் எப்படியோ?” என்கிறான்.

            “தேனும் மீனும் அமுதினுக்கு அமைவதாகத் திருத்தினென் கொணர்ந்தேன். என்கொல் திருவுளம்?” என்கிறான்.

            குகனின் அன்பையும், தான் என்னவெல்லாம் உண்போம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அன்பின் மிகுதியால் அவன் விரும்பும் மீனையும், தேனையும் தவ ஒழுக்கம் பூண்டிருக்கிற தனக்குக் கொணர்ந்து கொடுப்பதன் மூலம் தன் ஆராத அன்பை வெளிக்காட்டும் அந்த நல்ல உள்ளத்தை நினைத்து முகத்தில் முருவல் பூக்க மனம் நெகிழ்ந்து போகிறான்.

அரியதாம்; உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்                                          தெரிதாக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே!                                          இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?

            அன்பால் உருகி நிற்கும் குகனை நோக்கி இராமன் சொல்கிறான். “உள்ளார்ந்த அன்போடு நீ கொணர்ந்த இவற்றை நாம் உண்டதாகவே எண்ணிக்கொள்” என்கிறான்.

            தன்னிடம் இவ்வளவு அன்பு காட்டும் குகன் தன்னைப் பிரிய மனமின்றி தன்னையே வணங்கிக் கொண்டு நிற்கும் பாங்கைக் கண்டு மனம் கசிந்து சொல்கிறான், “அன்பனே! நாங்கள் இன்றிரவு இங்கே தங்கவிருக்கிறோம். நாளை உதயமாகின்ற போது விடியற்காலையில் கங்கை நதியைக் கடந்து அப்பால் செல்ல விரும்புகிறோம். நீ இப்போது உன் பரிவாரங்களோடு உன் ஊருக்குத் திரும்பிச் சென்று நாளைக் காலையில் படகுடன் இங்கு வந்து சேர்! நாங்கள் உன் படகில் இந்த கங்கையாற்றைக் கடந்து செல்வோம்” என்றான் இராமன்.

            அப்போது கண்களில் நீர்வழிய அன்பின் மிகுதியால் இராமன் எப்பேர்ப்பட்ட சக்கரவர்த்தி குமாரன். ராஜ்யபாரம் செய்யவேண்டிய அரசகுமாரன். இப்படி அவன் தவக்கோலம் பூண்டு, மரவுரி தரித்து அரண்மனை வசதிகளை யெல்லாம் துறந்து கானகத்தில் தவக்கோலத்தில் இருக்கும் நிலைமை கண்டு மனம் உருகினான்.

            “ஐயனே, தங்களைப் பிரிந்து செல்ல என் மனம் இடம் தரவில்லை. இந்த கோலத்தில் தங்களைப் பார்க்க நேர்ந்த என் கண்களைத் தண்டிக்காத கள்வன் நான். என்னை இங்கிருந்து போகச் சொல்லாதீர்கள். நான் இங்கேயே இருந்துத் தங்களுக்கு அடிமை செய்வேன்” என்கிறான்.

            குகனின் சொற்களைக் கேட்டு இராமனும் மனம் உருகினான். சீதையின் முகத்தை நோக்கினான், தம்பி இலக்குவனின் முகத்தையும் நோக்கினான். பாருங்கள் இவனுக்கு நம் மீதுள்ள பாசத்தைப் பாருங்கள், இவன் கொண்ட அன்பு எத்தகையது பாருங்கள் என்பதுபோல் பார்த்தான். கண்கள் மலர்ச்சி தர குகனை நோக்கிச் சொல்கிறான் “யாதினும் இனிய நண்ப! இருத்தி ஈண்டு எம்மொடு” இனியவனே நீ இங்கு எங்களோடு இருந்து கொள்ளலாம் என்று பதிலிறுத்தான்.

            குகனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. இராமபிரான் தன்னை இங்கேயே தன்னுடன் தங்கியிருக்க அனுமதித்து விட்டான். குகன் தன் படை வீரர்களை அழைத்தான். காட்டு மிருகங்கள் அங்கிருப்பவர்களைத் துன்புறுத்தாதவாறு காவல் செய்ய அந்தத் தவப்பள்ளியைச் சுற்றி நிற்க வைத்தான். அவர்களோடு இரு கண்களிலும் கண்ணீர் சோர குகனும் காவலுக்கு நின்றான்.

            தன்னுடன் இலக்குவனும் கண் விழித்து காவல் செய்து வரும்போது குகன் இலக்குவனிடம் கேட்கிறான். “ஐயனே! தாங்கள் வாழும் திருநகரை நீங்கி அயோத்தியை விட்டு இந்த கொடும் வனம் புகுவதற்கு என்ன காரணம்?” என்கிறான். இலக்குவன் நடந்த விவரங்களை அவனுக்கு எடுத்துரைக்கிறான். அதனைக் கேட்க கேட்க குகன் கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன. இராமன் மீது இதுவரை இல்லாத அளவு மேலான பக்தியையும் அன்பையும் கொள்கிறான்.

            அன்று இரவு இலக்குவன் இராமனும் சீதையும் படுத்து உறங்க பாறைகளுக்கு நடுவில் புற்களை நிறைய கொணர்ந்து பரப்பி படுக்கை தயார் செய்கிறான். இராமன் தூங்கும்போது கண் விழித்து இமைக்காமல் இலக்குவன் இரவு முழுவதும் காவல் இருந்தான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தானும் கண்விழித்துக் காவல் காத்த குகன் இலக்குவனின் பக்தி கண்டு மனம் உருகினான்.

            மறுநாள் பொழுது விடிந்தது. இராமன் எழுந்து கடமைகளையெல்லாம் முடித்தஃபின் அங்கிருந்து புறப்படத் தயார் ஆனான். குகனை அழைத்துப் படகினைக் கொணர்வாயாக என்றான்.

            இராமன் எங்கே தன்னை விட்டுவிட்டு கங்கையைக் கடந்து சென்றபின் கானகத்தினுள் சென்று விடுவானோ என்று குகனுக்குக் கவலை. இராமனைப் பிரிய மனமின்றி அவனிடம் கேட்கிறான், தாங்கள் இங்கேயே இருந்து விடுங்கள். தங்களுக்கு வேண்டிய ஏவல்களைச் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். உங்களை காட்டு விலங்குகளிடமிருந்தும், காவல் செய்து ஏவல் செய்யவும் காத்திருக்கிறோம். தயை கூர்ந்து தாங்கள் இங்கேயே தங்கிவிட வேண்டும் என்று வேண்டுகிறான்.

            குகனுடைய அன்பினைப் புரிந்து கொண்ட இராமனும் தன் வெண்பற்கள் தெரிய புன்முருவல் செய்தான். உன் அன்புக்கு என்ன கைமாறு செய்வேன். வீரா! நீ படகு ஓட்டி பிழைக்கும் இந்த கங்கை நதி உட்பட பல புண்ணிய நதிகளாடி, பல புண்ணிய தலங்களை வழிபட்டு மீண்டும் சில நாட்களில் இனிதாய் உன்னை வந்து சேருவேன்: என்கிறான்.

            நாயகன் சொன்ன சொல்லை தலைமேற் கொண்டு குகனும் விரைந்து சென்று தன் படகைக் கொண்டு வந்தான். இராமன் சூழ்ந்திருந்த முனிவர்கள் அனைவரையும் வணங்கி ஆசிபெற்று தானும் சீதையும் இலக்குவனுமாக அந்த படகில் ஏறுகின்றனர்.

            இந்த இடத்தில் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. குகனின் பக்தியை எடுத்துக் காட்ட சொல்லப்படும் செய்தி இது.

            இராமன் படகில் கால் வைக்கத் தன் வலக்காலை எடுத்தபோது குகன் தடுத்து நிறுத்துகிறான். ஐயனே தங்கள் கால் தூசி பட்டு வனத்தில் ஒரு பாறை பெண்ணாக மாறியதாகச் சொன்னார்கள். அதுபோல் தங்கள் காலிலுள்ள தூசி பட்டு என் படகும் பெண்ணாக மாறிவிட்டால் என் செய்வேன். ஆகவே சற்று இருங்கள், தங்கள் பாதங்களை நன்கு தூசியில்லாமல் கழுவியபின் படகில் ஏறலாம் என்று சொல்லி இராமனின் பாதங்களில் கங்கை நீர் கொண்டு பாதபூஜை செய்தபின்பு இராமனைப் படகில் ஏற்றினான் என்றொரு கதையும் உண்டு. இராமனை பாத செய்யப் போகிறேன் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று அவன் கால் தூசி பட்டு என் படகும் பெண்ணாக மாறிவிட்டால் என்ன செய்வேன் என்ற காரணத்தைச் சொல்லி பாதத்தில் கங்கை நீரைவிட்டு பாதபூஜை செய்தான் என்பதும் ஒரு சுவையான செய்திதானே!

            கங்கை நதியைக் கடந்து சென்று மறுகரையில் இறங்கிய இராமனைப் பிரிய மனமின்றி குகன் மறுபடியும் அவனிடம் வேண்டுகிறான். குகனுடைய அன்பை, அதிலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய அன்பை, பக்தியை எண்ணி பெருமிதம் கொள்கிறான். குகனிடம் இராமனுக்கு அன்பும் இரக்கமும் அதிகரிக்கிறது. இப்படியும் ஒருவனா? தாயினும் நல்ல குணம் படைத்த இந்த குகனை நண்பனாகக் கொள்வதா, இல்லை தம் தம்பியரில் ஒருவனாகவே ஏற்றுக் கொள்வதே தகும் என்ற முடிவுக்கு வருகிறான் இராமன்.

            குகன் சொல்லுகிறான், “ஐய! நாயேன் நான் ஒன்று சொல்ல இருக்கிறது” என்கிறான்.

            “சொல்” என்று இராமன் அனுமதித்தபின் குகன் பேசுகிறான். “ஐயனே, தாங்கள் இவ்விடமே தங்கியிருந்தால், உங்களை நானும் என் கூட்டத்தாரும் கண்ணை இமை காப்பது போல் காப்போம். உணவுக்கு கனிகளும், காய்களும், கிழங்குகளும் கொண்டு வந்து தருவோம். தாங்கள் வசிப்பதற்கு உறைவிடம் தயாரித்துக் கொடுப்போம். ஒரு நொடிப் பொழுதுகூட உம்மைப் பிரியாமல் உம்மோடு இருப்போம். நானும் உங்களோடு வருவேன்” என்று அன்போடு உரைக்கிறான்.

            குகன் பேசப் பேச ராமன் மனம் இளகுகிறது, அவனுடனேயே தங்குவதற்காக அல்ல. அப்படித் தங்கி ஒரேயிடத்தில் இருந்தால் அது தந்தையின் ஆணைக்கு எதிரானது அல்லவா, அன்னை கைகேயி என்ன ஆணையிட்டாள். உன் தந்தை உன்னிடம் சொல்லத் தயங்குவதால் நான் சொல்லுகிறேன். தந்தை உனக்கு இட்ட ஆணை என்ன தெரியுமா?

“ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீபோய்த்                                                        தாழிரும் சடைகள் தாங்கி, தாங்கரும் தவம் மேற்கொண்டு                                              பூழிரும் கானம் நண்ணி, புண்ணிய நதிகள் ஆடி                                                               ஏழிரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன்’ என்றாள்.

ஆம்! தவக்கோலம் பூண்வது மட்டுமல்ல, கானகம் செல்ல வேண்டும், அங்கே கானகத்தினூடே ஓடுகின்ற புண்ணிய நதிகளில் எல்லாம் புனிதநீராட வேண்டும். ஏழிரண்டு ஆண்டுகள் கானகத்தில் கழிக்க வேண்டுமே தவிர, குகன் ஏற்பாடு செய்யும் ஆசிரமத்தில் ஒரேயிடத்தில் தங்கி, அவன் சேவைகளைப் பெற்றுக் கொண்டு பதினான்கு ஆண்டுகளைக் கழித்துவிட முடியுமா? அன்னையின் ஆணையை தலைமேற்கொண்டு கானகம் வந்திருக்கும் இராமனுக்கு குகனின் அன்பு தெரிந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை. அதை அன்போடும், பரிவோடும், குகனிடத்தில் எடுத்துக் கூறுகிறான்.

            “என் உயிர் அனையாய் நீ!” தம்பீ குகா, என் உயிர் போன்றவன் நீ. “இளவல் உன் இளையான்”. என் தம்பியாகிய இலக்குவன் உனக்கும் இளையவன் உனக்கும் தம்பி. சீதை உனக்கு அண்ணி. இந்த பூமியும் கடலும் எல்லாம் உனக்கே சொந்தம். துன்பம் என்று ஒன்று இருந்தால் இன்பமும் அடுத்து வருவதன்றோ. இப்போது பிரிவு என்றால் மறுபடி கூடுவோம் என்றல்லவா பொருள். உனக்கு உடன் பிறப்புகளாக நாங்கள் நால்வர் ஏற்கனவே இருக்கிறோம். அன்பனே! இனி எங்களோடு உன்னையும் சேர்த்து நாம் ஐவரானோம்” என்கிறான் இராமன்.

“துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அஃது அன்றிப்                                           பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்                                            முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா                                               அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்.”

            நான் அயோத்தியை விட்டு வந்தேன் என்றால் அங்குள்ள மக்களைக் காக்க அங்கு என் தம்பி பரதன் இருக்கிறான். இங்குள்ள மக்களைக் காக்க உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? உன் சுற்றத்தார் எல்லாம் எனக்கும் சுற்றத்தார் அல்லவா? அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் அது எனக்கும்தான் துன்பம் என்பதை நீ அறியாயோ? ஆகவே இங்குள்ள மக்களை எல்லாம் காப்பாற்ற நீ இங்கு இரு. இது என் ஆணை என்றான் இராமன்.

            வேறு வழியில்லை. இராமன், இலக்குவன், சீதை கானகத்தினுள் பயணம் செல்லத் தொடங்கினர். கண்களில் நீர் சோர வழியனுப்புகிறான் குகன். அவன் உடல்தான் அங்கு இருக்கிறது, அவன் உயிர், எண்ணம் அனைத்தும் இராம, இலக்குவ சீதையுடன் கானகம் செல்கிறது.

            இனி இராமன் கானகத்தினுள் செல்வதும், வனத்தில் பாரத்துவாஜ முனிவரைக் கண்டு அவரிடம் ஆசி பெற்று பின் சித்திரகூடம் சேர்ந்ததும், இராமகாதை சொல்லும் வரலாறாகும். இங்கு குகனின் நிலைமை என்ன? தன் உயிரைப் பிரிந்த உடலைப் போல அவன் இராமனை நினந்து நினைந்து உருகிக் கொண்டிருந்தான்.

            சித்திரகூடம் சென்றடைந்த இராமனுக்கு இலக்குவன் ஒரு பர்ணசாலை அமைத்துக் கொடுக்கிறான். சித்திரகூடம் என்பது இயற்கை வளங்கள் நிரம்பிய பகுதி. அங்கே மேகங்கள் வானத்தில் யானைக் கூட்டங்களைப் போல காட்சியளிக்கிறது. கானகத்தின் பசுமை ஒளி சூரியனின் தேரில் பூட்டிய குதிரைகள் போலவும், மூங்கில் புதர்களில் சிக்கிய பாம்பு உரித்த தோல்கள் மாளிகை மீது பறக்கின்ற கொடிகள் போலவும்,, மலைகளில் உள்ள சிகரங்கள், அருவிகள், பசுமையான சோலைகள், களிறுகள் சூல்கொண்ட பிடிகளுக்குத் தேன் கொடுக்கும் காட்சிகள், கடுவன்களும் மந்திகளும் மரத்துக்கு மரம் தாவி விளையாடும் காட்சிகள், கடிச்சியர் கவண் வீசி பறவைகளை விரட்டுகின்ற காட்சிகள், நீர் வற்றிப் போன காட்டாறுகள், கற்பக மலர்கள்; அசுணப் பறவைகள் பாடல் கேட்டு துயில் கொள்ளும் கரடிகள், அருவி நீரின் நறுமணம் இப்படி மாறி மாறித் தோன்றுகின்ற இயற்கைக் காட்சிகளையெல்லாம் இராமன் சீதைக்குக் காட்டிக்கொண்டே செல்கிறார் இந்தப் பகுதியில்.

            இங்கே இலக்குவன் அமைத்த பர்ணசாலையைப் பற்றி கம்பர் அழகாக வர்ணிக்கிறார். காட்டில் விளைந்த மூங்கில்களை அளவாக வெட்டி, அதனை பூமியில் நட்டு அதன்மேல் வரிச்சுக் கோல்களைப் பரப்பி, உலர்ந்த தேக்கு இலைகளால் கூரை அமைத்து, அதன் மேல் நாணற் புற்களைப் பரப்பி, நாற்புறமும் மூங்கில் கால்களை நெறுக்கமாக நாட்டி அதன் மேல் மண் பூசி சுவர் அமைத்த வகையினை அழகாக வர்ணிக்கிறார் கவிஞர்.

            மாபெரும் உலகத்தைக் கட்டிக் காக்கும் இராமபிரான் ஒரு சிறு குடிலுக்குள் குடிபுகுந்தான். இப்படி இராம லக்ஷ்மணர்கள் சித்திரகூடத்தில் இருக்கும் நேரத்தில் நாம் சற்று அயோத்திக்குச் சென்று அங்கு பாட்டன் வீட்டுக்குப் போன பரதன் என்ன செய்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும்.

            பாட்டன் வீட்டுக்குச் சென்றிருந்த பரதனுக்கு உடனடியாக அயோத்தி திரும்பச் சொல்லி கைகேசி அழைப்பு அனுப்பினாள். பரதனும் தம்பி சத்ருக்குனனுடன் உடனே கிளம்பி வருகிறான். ஊரெங்கும் அமைதி நிலவுகிறது. சோகம் எங்கும் பரவிக் கிடக்கிறது. அரண்மனைக்குச் செல்கிறான் கைகேயியைச் சந்தித்து நடந்த விவரங்களைக் கேட்டபின் கோபமடைந்த பரதன் நீ என் தாயுமில்லை, நான் உன் மகனுமில்லை உனக்கும் எனக்கும் இனி எந்த உறவுமில்லை என்று கோபமடைந்து சபதம் ஏற்று தாய் கோசலையைக் காணச் செல்கிறான். அங்கு கோசலையுடன் பேசிக் கொண்டிருந்த நடந்த விவரங்களைக் கேட்டறிகிறான்.

            அப்போது கோசலை கேட்கிறாள் பரதனிடம் “பரதா! உன் தாய் சூழ்ச்சி செய்து ராமனைக் காட்டுக்கு அனுப்பியது பற்றி முன்பே உனக்குத் தெரியாதா?” என்கிறாள்.

            அவ்வளவுதான் சோகத்தில் பரதன் வெடித்து வார்த்தைகளைக் கொட்டுகிறான். தாய் கொசலையைப் பார்த்து இப்படி சொல்லிக்கொண்டே போகிறான்.
“தாயே! கைகேயி செய்த சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமானால் நான் நரகத்துக்குப் போவேன். எப்படி தெரியுமா? தர்மத்தை அழித்து தீயவழி நடப்போன் போகும் நரகத்துக்குப் போவேன்.”

கல்மனம் படைத்தவனும், மாற்றான் மனைவியின் மீது காமம் கொண்டு திரிபவனும், காரணமின்றி பிறர் மேல் கோபப்படுபவனும், கொடுமை செய்து உயிர்களைப் பறிப்பவனும், தவசிகளுக்குத் துன்பம் தருபவனும் போகும் நரகத்துக்கு நான் போவேன்.

ஐம்பெரும் பாவங்களான அரசன், ஆசிரியர், தாய் தந்தையர் ஆகியோரையும் பெண்களையும் வாளால் கொன்றவன் போகும் நரகத்துக்கு நான் போவேன்.

அரசாங்க பொருட்களை வஞ்சனையால் கவர்ந்தவன -- போரில் தோற்று புறம் காட்டி ஓடியவன் -- யாசகம் பெற்று கொண்டுவந்த ஒருவன் பொருளைத் தட்டிப் பறிப்பவன் போகும் நரகத்துக்கு நான் போவேன்.

துளசி மாலை அணிந்த திருமாலை பரம்பொருள் அல்ல என்பானும், வேதநெறிகளைப் பின்பற்றாமல் தவறுகளைச் செய்து வருபவனும், பொய் எனும் பேய் பிடித்தவன் ஆகியோர் போகும் நரகத்துக்கு நான் போவேன்.

பெற்ற தாய் பசியால் வாட தான் மட்டும் வயிறு முட்ட சாப்பிடுபவன், தலைவனை அம்போ என்று விட்டுவிட்டு ஓடிப்போகின்றவன் ஆகியோர் போகும் நரகத்துக்கு நானும் போவேன்.

பொய் சாட்சி சொன்னவன், போருக்கு பயந்து ஓடியவன், அடைக்கலமாக வைத்த பொருளை வஞ்சகமாக அபகரிப்பவன் ஆகியோர் போகும் நரகத்துக்கு நான் போவேன்.

வேதம் ஓதும் அந்தணர் வாழும் இல்லத்தைத் தீக்கிரையாக்கியவன். தன் சொந்தப் பிள்ளையைகே கொன்றவன், பொய் வழக்கு போட்டவன், தேவர்களைப் பழித்தவன் ஆகியோர் போகும் நரகத்துக்கு நான் போவேன்.

கன்றுக்கு பால் விடாமல் தாய்ப்பசுவிடம் தானே பாலைக் கறந்து குடித்தவனும், நீதி மன்றத்தில் பொய்சாட்சி சொல்லி பிறர் பொருளை அபகரித்தவன், செய்நன்றி கொன்றவன் ஆகியோர் போகும் நரகத்துக்கு நான் போவேன்.

இப்படி ஏராளமான பாவங்களையெல்லாம் சொல்லி அவற்றையெல்லாம் செய்கின்றவன் எந்த நரகத்துக்குப் போவானோ அந்த நரகத்துக்கு நான் போவேன் என் தாய் கைகேசி செய்த சூழ்ச்சி எனக்குத் தெரிந்திருக்குமாயின் என்று கதறுகிறான்.

பரதனின் நல்ல மனதை கோசலையும் புரிந்து கொள்கிறாள். தந்தைக்கு இறுதிக் கடன் செய்யச் சொல்லி பரதனைக் கேட்கிறார்கள். அவன் தன் அண்ணன் இராமனைத் தேடி கானகம் செல்கிறான்.

“எழுந்தது பெரும்படை எழு வேலையின் மொழிந்தபேர் ஊழியின்; முழங்கி முந்நெழ  அழிந்தது கேகயன் மடந்தை ஆசை, போய்க் கழிந்தது துயர், நெடும் காதல் தூண்டவே.”

பரதன் தன் படைகளை முன்னதாக போகவிட்டுத் தானும் தன் தம்பியுமாகப் பின்னால் தவக்கோலம் பூண்டு மரவுரி தரித்து தேர்மீதேறி கானகம் புறப்படுகிறார்கள். தாயர்கள் மூவரும், கோசலை, கைகேயி, சுமத்திரை ஆகியோரும் அமைச்சர் பெருமக்களும், நல்லோர் அனைவரும் அவனுடன் கானகம் புறப்படுகின்றனர். இத்தனைக்கும் காரணமான கூனியும் அந்தக் கூட்டத்தோடு தடியூன்றி உந்தி உந்தி நடந்து செல்வதைப் பார்த்து அவளைச் சத்ருக்குனன் கொன்றுவிட பாய்ந்து செல்கிறான். அவனை பரதன் தடுத்து விடுகிறான்.
கடல் போன்ற பரதனின் படை பரிவாரங்கள் அனைத்தும் கங்கையின் வடக்குக் கரையினை அடைந்தது. ஆற்றின் மறுகரையில் இருந்து கொண்டு சிருங்கிபேரம் எனும் அந்தக் காட்டுப் பிரதேசத்தின் அரசனும், கங்கையில் படகோட்டும் உரிமை பூண்ட நாம் முன்பே பார்த்தோமல்லவா, இராமனுக்கு தேனும் மீனும் கொணர்ந்து கொடுத்த அந்த தீவிர இராம பக்தன் குகன் இவர்கள் வருகையைக் கவனிக்கிறான்.

ஓ! இராமனைக் காட்டுக்கு அனுப்பியது போதாது என்று  இங்கும் வந்து ராமனை அழிக்கப் படையோடு வருகிறானோ என்று கோபம் அடைகிறான். உடனே தன் இடையில் தொங்கிய ஊதுகுழலை எடுத்து குகன் ஊதுகிறான். அது தன் படை வீரர்களுக்கு அழைப்பொலி. போர் நெருங்கி வந்துவிட்டது, வாருங்கள் வீரர்களே என்பது அதன் பொருள். குகன் தன் தோட்கள் பூரிக்க வாயை மடித்து உதடுகளைக் கடித்துக் கொண்டு கண்கள் தீயினை உமிழ வருகின்ற படையை எதிர்கொள்ள தயாரானான்.

அவன் தோற்றத்தைக் கம்பர் வர்ணிக்கிறார்.
 “கட்டிய சுரிகையன்(வாள்); கடித்த வாயினன்;                                                                 வெட்டிய மொழியினன்; விழிக்கும் தீயினன்                                                                   கொட்டிய துடியினன்; குறிக்கும் கொம்பினன்;                                                                கிட்டியது அமர் எனக் கிளர்ந்த தோளினான்.     
                 
இதோ வருகிறதே இந்தப் படை ஒரு எலிக்கூட்டம். நான் நாகம் போன்றவன் என்று போர் முரசு கொட்டி கங்கையின் தென்கரைக்கு வந்து சேர்ந்தான். அங்குதான் பரதன் தன் பெரிய சேனையோடு வந்து கொண்டிருக்கிறான், அதை எதிர்கொள்ள குகனும் கங்கை நதியைக் கடந்து தென்கரை வந்து சேர்ந்தான்.

தன் படை வீரர்களை அழைக்கிறான். “வீரர்களே! வாருங்கள், ஒன்று திரண்டு வாருங்கள். நம் அன்பிற்குரிய இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வந்திருக்கிறான். அதன் பிறகு அவன் நாடு திரும்பி அரசை ஏற்றுக் கொள்ள முடியாதவாறு அவனை இங்கேயே இப்போதே கொன்றுவிடும் சூழ்ச்சியோடு இதோ அந்தப் படை வந்து கொண்டிருக்கிறது. அந்தப் படையை முன்னேற முடியாதபடி தடுத்து அவர்களை இங்கேயே அழித்து விடவேண்டும்” என்று முழங்குகிறான் குகன்.

 “அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே                                                      வஞ்சனையால் அரசெய்திய மன்னரும் வந்தாரே                                                            செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன  செல்லாவோ                                                           உஞ்சிவர் போய்விடின் நாய் குகன் என்றெனை ஏசாரோ?”   

கருமைநிற மேனியன் ராமன் என் உயிர் நாயகன், அவனை நாட்டை ஆளவிடாதபடி வஞ்சனையால் அரசினைக் கைப்பற்றியவர்கள் இதோ வருகிறார்கள். தீயைக் கக்கிடும் என் அம்புகள் செலுத்தினால் அவர்கள் மீது பாயாதா என்ன? இவர்க்ள் மட்டும் என்னிடமிருந்து தப்பிச் சென்று விட்டார்களானால் மக்கள் என்னை “நாய்க் குகன்” என்றல்லவா பேசுவார்கள்.  
                
   “ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?                                                              வேழ நெடும்படை கண்டு விலங்கிடும்  வில்லாளோ?                                                    தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ?                                           ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ?”   

நெடிய ஆழமுள்ள இந்த கங்கை நதியைத் தாண்டி இவர்கள் போய் விடுவார்களோ? இவர்கள் கொண்டு வரும் யானைப் படையைக் கண்டு அஞ்சுபவனா நான். ராமன் என்னைத் தன் தோழன் என்றல்லவா சொன்னார், அதுவல்லவோ நான் அடைந்த பேறு. இவர்களை உயிர் பிழைத்துப் போகும்படி நான் விட்டுவிட்டால், இந்த அறிவிலி குகன் இறக்கவில்லையே என்றல்லவா மக்கள் என்னை ஏசுவார்கள்.

            பரதனுக்கு நாட்டை தான் ஆளவேண்டுமென்கிற ஆசை. அதனால் அண்ணன் எனும் கருதாமல் இராமனை அழிக்கத்துணிந்து விட்டான். இலக்குவன் இருக்கும்போது அது நடக்குமா? அது போகட்டும், நான் ஒருவன் இருப்பதைக் கூட அல்லவா இவன் மறந்து விட்டான். என்னை வீரன் என்று நினைக்க வில்லையோ? அரசர்கள் என்றால் வீரமுள்ளவர்கள், வேடர்கள் என்றால் தாழ்ந்தவர்கள் என்ற நினைப்போ? வேடர்கள் செலுத்தும் அம்புகள் அரசர்கள் மார்பில் தைக்காதோ? அதையும் பார்த்து விடுகிறேன். பேராசையால் இராமனைக் கொல்ல வரும் இவனுக்கு ஒரு பாடம் கற்பிக்கிறேன்.

            மண்ணாசை பிடித்த மன்னர்கள் எதையும் செய்யத் துணிவர்கள், சரிதான். ஆனால் இராமனுக்குத் தம்பியாகப் பிறந்துவிட்ட இந்த பரதன் எப்படி அப்படி செய்யத் துணிந்தான்? இருக்கட்டும் என்னிடமிருந்து தப்பிப் பிழைத்துப் போனால்தானே!

            இராமனே அரசுரிமை பெற்றவன். அவனே காட்டில் தவம் புரிய வந்த பின்னர் அரசுரிமை இல்லாத இவன் தவறான வழியில் அரசனாக ஆகிவிடுவானோ? அதற்கு நான் இடம் கொடுத்து விடுவேனோ? இவனைத் தடுப்பதில் என் உயிர் போனாலும் கவலை இல்லை, இவனைத் தடுத்தேன் எனும் புகழைப் பெறுவேன்.

 “ஆடு கொடிப்படை சாடி அறத்தவரே ஆள                                                                      வேடு கொடுத்தது பார் எனும் இப்புகழ் மேவீரோ!                                                              நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும்                                                           காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ?”

கொடிகள் பறக்க பெரியதொரு படையொடு வரும் இவனைப் போரில் வீழ்த்திவிட்டு, நாட்டை மீண்டும் இராமனிடம் வேடர்கள் கொடுத்தார்கள் எனும் பெருமையை அடைந்திடுவோம்! நாட்டையே கொடுத்த என் நாயகன் இராமனுக்கு நாம் ஆளும் இந்தக் காட்டையும் கொடுத்தோம் எனும் பெருமையைப் பெறுவோம்.

            குகன் இப்படியெல்லாம் பேசினானே தவிர அவன் மனதில் ஒரு பயம். ஒருக்கால் இராமன் தன் தம்பியை நாம் அழித்துவிட்டோம் என்று கோபப்பட்டால் என்ன செய்வது என்கிற கவலை.

            குகன் இப்படி கோபத்தில் சூளுரைக்க, அதே சமயம் எதிரில் படைகளுடன் வரும் பரதனிடம் அவனுடன் வருகின்ற அமைச்சர் சுமந்திரர் எதிரில் வரும் குகனைப் பற்றிச் சொல்கிறார். “பரதா! அதோ பார், தன் படைகளுடன் கையில் வில்லேந்தி வந்து நிற்கிறானே அவன் யார் தெரியுமா? அவன் தான் குகன். இந்த கங்கையாற்றின் இரு கரைகளிலும் உள்ள நிலப்பகுதிகளுக்குச் சொந்தக்காரன். உங்கள் குலநாதனாம் இராமனுக்கு உயிர்த் துணைவன். ஏராளமான படகுகளுக்குச் சொந்தக்காரன். மகாவீரன். யானை பலம் கொண்டவன், வில்வீரன்” என்கிறார்.

 “கங்கை இரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்                                                  உங்கள் குல தனிநாதற்கு உயிர்த் துணைவன் உயர் தோளான்                                      வெங்கரியின் ஏறனையான் வில் பிடித்த வேலையினான்                                                கொங்கலரும் நறும் தண்தார்க் குகன் என்னும் குறியுடையான்.”

  “கற்காணும் திண்மையான், கரைகாணாக் காதலான்                                                     அற்காணில் கண்டனைய அழகமைந்த மேனியான்                                                         மற்காணும் திருநெடுந்தோள் மழைகாணும் மணி நிறத்தாய்                                           நிற்காணும் உள்ளத்தான் நெறியெதிர் நின்றனன்” என்றான்.   
  
            பரதா! அந்த குகன் வீரம் நிறந்தவன் மட்டுமல்ல, நெஞ்சம் முழுவதும் அன்புடையவன். உன் வரவை எதிர்பார்த்து அதோ அந்தக் கரையில் தன் படைகளோடு நிற்கிறான் பார்! என்கிறார் அமைச்சர்.

            அமைச்சரே! அந்த குகனுடைய பெருமைகளைத் தாங்கள் சொல்லக் கேட்டதுமே என் அண்ணன் இராமன் தோழன் என தழுவிக் கொண்ட அவனை நானே முதலில் சென்று காண்பேன்” என்று சொல்லிக் கிளம்பினான் பரதன்.

            இப்படிச் சொல்லி குகனைக் காணப் புறப்பட்ட பரதன், மனதில் அன்போடு குன்று எழுந்து செல்வது போல குகனை நோக்கிச் செல்கிறான். கங்கைக் கரையை அடைகிறான்.

            அப்படி வந்து நிற்கும் பரதனை குகன் உற்றுப் பார்க்கிறான். அவன் திருமேனி இருக்கும் நிலைமையைக் காண்கிறான். அங்கே பரதன் மரவுரி தரித்து தவக் கோலம் பூண்டு நிற்பதைப் பார்க்கிறான். கல்லும் கனியும்படியான துயரத்தோடு நிற்பதைக் கண்டதும் குகன் கையில் வைத்திருந்த வில் தானாக நழுவிக் கீழே விழுகிறது. நெஞ்சம் துக்கத்தால் விம்முகிறது. திகைத்து நிற்கிறான் குகன். தான் நினைத்தது ஒன்று, இங்கே நடப்பொது வேறொன்று.

 “நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான், அயல்நின்றான்                                                 தம்பியையும் ஒக்கின்றான், தவவேடம் தலைநின்றான்                                                    துன்பம் ஓர் முடிவில்லை, திசைநோக்கித் தொழுகின்றான்                                              எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான்.

            அடடே! இந்த பரதன் என் நாயகன் ராமனைப் போலவே இருக்கிறானே! அவன் அருகில் நிற்கும் சத்ருக்னன் இலக்குவனைப் போலவே இருக்கிறானே. இருவருமே இராம இலக்குவரைப் போல தவக் கோலத்தில் இருக்கிறார்களே. முடிவில்லா துன்பத்தால் தாக்குண்டு காணப்படுகிறார்களே, இராமன் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறார்களே! அடடா, நானல்லவா தவறாக நினைத்து விட்டேன். எம்பெருமான் இராமனுக்குத் தம்பியாகப் பிறந்தவன் தவறும் இழைப்பானோ? இது தெரியாமல் போயிற்றே எனக்கு என்று சொல்லி ஒரு படகில் ஏறி கங்கையின் வடகரைக்குச் செல்லப் புறப்படுகிறான் குகன்.

            படகில் ஆற்றைக் கடந்து இறங்கி வந்து தொழுகின்ற குகனை, பிரம்மனும் தலைவணங்கும் தகுதி படைத்த பரதன் வணங்கினான். உடனே குகன் பரதனின் காலடியில் விழுந்து வணங்குகிறான். காலடியில் விழுந்த குகனைப் பரதன் தூக்கி நிறுத்தித் தந்தையினும் களிகூரத் தழுவுகிறான். இங்கே தொழுதல் என்றால் தரையில் விழுந்து தொழுவது.   

            இங்கு கம்பன் இயற்றியுள்ள பாடலின் அழகினை நாம் படித்து இன்புறுதல் வேண்டும். யார் காலில் யார் விழுந்தார், யார் விழுந்தவனைத் தூக்கி தழுவினான் என்பதை இதைவிட அழகாக ஒருவராலும் சொல்ல முடியாது.

 “வந்தெதிரே தொழுதானை வணங்கினான், மலர் இருந்த                                                அந்தணனும் தனை வணங்கும் அவனும் அவன் அடிவீழ்ந்தான்                                      தந்தையினும் களிகூரத் தழுவினான் தகவுடையோர்                                                      சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான்.”

வந்தெதிரே தொழுதவன் குகன், மலர் இருந்த அந்தணனும் தலை வணங்கும் அவன் என்பது பரதன். தொழுதல் என்றால் பாதங்களில் வீழ்ந்து தொழுதல். அப்படித் தொழுத குகனை பரதனும் வணங்கினான். அவன் (குகன்) அவனடி வீழ்ந்தான் (பரதன் கால்களில் விழுந்து வணங்கினான். அப்படி விழுந்த குகனை தந்தையினும் களிகூர பரதன் தழுவினான்.

            இந்த வரிகள் பற்றிய குழப்பம் யார், யார் காலில் விழுந்தார் என்பதைப் பற்றிய விவாதம் நடக்கிறது. மேலே சொன்ன கருத்து சரி என்பதற்கு அடுத்து வரும் பாடலில்

 “கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்தெழும் உயிரன் ஆகி                                              மீட்டும் மண்ணதனில் வீழ்ந்தான், விம்மினன், உவகை வீங்கத்                                      தீட்டரும் மேனி மைந்தன் சேவடிக் கமலப் பூவில்,                                                          பூட்டிய கையன், பொய்யில் உள்ளத்தான் புகலல் உற்றான்”

இந்த வரிகளில் குகன் அடைந்த நிலையைச் சொல்வதால், முந்தைய நிலையில் விழுந்து வணங்கியவன் குகன் என்பது தெளிவாகிறது.

            குகன் பரதனிடம் “நீ வந்த காரியம் என்ன?” என்கிறான்.

            அதற்கு பரதன் “அயோத்தி அரசுக்கு உரிமையுள்ளவன் இராமன். நாட்டை அவனுக்குக் கொடுக்காமல் முறை தவறிவிட்டனர். அந்த அநீதியை நீக்கி இராமனை அயோத்தி அரசனாக முடிசூட்ட அழைத்துச் செல்லவே வந்திருக்கிறேன்” என்கிறான் பரதன். இதைக் கேட்ட குகனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. மேலே சொன்ன பாட்டில் சொன்னது போல மீண்டும் பரதன் காலில் வீழ்ந்து வணங்கினான்.

            அப்போது குகன் சொல்கிறான் உணர்ச்சி மேலிட:
 “தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்                                                       தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப்                                                        போயினை என்றபோழ்து புகழினோய்! தன்மை கண்டால்                                             ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா!”

            தாய் கேட்டுக் கொண்டபடி, தந்தை கொடுத்த ராஜ்யத்தை வேண்டாமென்று உதறிவிட்டு கவலையோடு அண்ணன் இராமனைத் தேடி கானகம் வந்திருக்கும் உன் செயலைக் கண்டால், ஆயிரம் இராமர் உனக்கு ஈடாவார்களோ தெரியவில்லை என்கிறான். இது உயர்வு நவிர்ச்சி.

            குகன் மேலும் சொல்கிறான், “பரதா! உன்னை என்ன சொல்லிப் புகழ்வேன். நானோ காட்டில் வாழும் வேடன். சூரியனுடைய ஒளியானது எப்படி நிலவு, நட்சத்திரங்கள் இவற்றின் ஒளியை இருக்குமிடம் தெரியாமல் செய்கிறதோ, அப்படி நீயும் உன் குலத் தோன்றல்களின் புகழையெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் செய்துவிட்டாய், உன்னுடைய இந்தச் செயலால்.

 “மன்புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம்                                               உன்புகழ் ஆக்கிக் கொண்டாய், உயர்குணத்து உரவுத் தோளாய்!”

            இராமனின் குணங்களைக் கண்டு அவன்பால் ஈர்க்கப்பட்ட குகன் இப்போது பரதனின் குண நலன்களைக் கண்டு அவன்பாலும் ஈர்க்கப்படுகிறான். இராமன் இங்கே இரவுப் பொழுதில் எங்கே தங்கி இளைப்பாறினார் என்கிறான் பரதன். அந்த பாறைகளுக்கிடையேயான இடத்தைக் குகன் காட்ட பரதன் கண்ணீர் விட்டுக் கதறுகிறான்.

            என்னாலன்றொ அண்ணா உங்களுக்கு இப்படிப்பட்டத் துன்பங்கள் வந்தன. புல்தரையில் படுத்திருந்தாய்; கனிகளையும் கிழங்குகளையும் உண்டாய். நீங்கள் பட்ட துன்பங்கள் தெரிந்த பின்னும் நான் உயிரோடு இருக்கிறேனே என்று வருந்தினான்.

            குகனைப் பார்த்து பரதன் கேட்கிறான், இராமன் தங்கிய இடத்தைக் காட்டினாய் அப்பா, தம்பி இலக்குவன் எங்கு தங்கினான் என்கிறான். அதற்கு குகன் அளித்த விடை.

 “அல்லையாண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச                                            வில்லை ஊன்றிய கையொடும், வெய்து உயிர்ப்போடும் வீரன்                                      கல்லையாண்டு உயர்ந்த தோளாய், கண்கள் நீர்சோரக் கங்குல்                                      எல்லை காண்பளவும் நின்றான், இமைப்பிலன் நயனம் என்றான்”

பரதா! அண்ணலும் பிராட்டியும் உறங்கும் வேளையில், தம்பி இலக்குவன் கையில் வில்லை தரையில் ஊன்றியபடி கண்களில் நீர் சோர, விடியும் மட்டும் தூங்காமல் காவல் இருந்தான் என்கிறான் குகன்.

            இதையெல்லாம் கேட்டு பரதன் மிகுந்த மனக் கலக்கமும் துக்கமும் அடைகிறான். மறுநாள் காலை குகன் படகு ஓட்ட பரதன் அவனுடன் தாய்மார்கள் கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியோருடன் பயணம் செல்கிறான்.

            இந்தப் பெண்கள் எல்லாம் யார் என்று குகன் கேட்கிறான். அதற்கு பரதன் சொல்லும் பதில். கோசலையைக் காட்டி இவர்தான் தசரத மகாராஜாவின் மூத்த தேவி, இராமனைப் பெற்றெடுத்த தாய். உடனே குகன் அவள் கால்களில் விழுந்தான். குகனை கோசலையிடம் “இவன் பெயர் குகன், இராகவனின் இன்னுயிர்த் தோழன், இலக்குவனுக்கும், சத்ருகுனனுக்கும் எனக்கும் மூத்த அண்ணன் என்கிறான் பரதன்.

            அடுத்ததாக சுமித்திரையைக் காட்டி இவர் யார் என்கிறான் குகன். அதற்கு பரதன் இவர் இலக்குவனையும், சத்ருகுனனையும் பெற்றெடுத்த தேவி என்கிறான் பரதன்.

            பிறகு கைகேயியைக் காட்டி இவர் யார்? என்று குகன் கேட்க, பரதன் சொல்கிறான்.

 “படரெலாம் வளர்த்தாளைப் பழிவளர்க்கும் செவிலியைத் தன் பாழ்த்த பாவிக்                குடரிலே நெடுங்காலம் கிடந்தேற்கும் உயிர்ப்பாரம் குறைந்து தேய                                  உடரெலாம் உயிர் இழந்தவெனத் தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே                      இடரிலா முகத்தாளை உணர்ந்திலையோ இந்நின்றாள் எனை ஈன்றாள்."

உலகத்தில் மிகக் கொடிய பாவி இவள். பழிகளையும் துன்பங்களையும் பெற்று வளர்த்தவள். உலகில் எல்லோரும் துன்பத்தில் வாட இவள் முகம் மட்டும் துயர் இல்லாமல் இருப்பவள். இவள்தான் என்னைப் பெற்றவள் என்கிறான் பரதன்.

            பரதனின் தாய் என்றதும் கைகேயியையும் பணிந்து வணங்கினான் குகன். கங்கையைக் கடந்து அனைவரும் பரத்வாஜர் ஆசிரமம் சென்றடைந்தனர்.

            பரதனின் படை புழுதி எழுப்பிக் கொண்டு சித்திரகூடம் நோக்கி வந்து சேருகிறது. வெகு தூரத்தில் புழுதி எழுப்பிக்கொண்டு பெரும் படை வருவதை இலக்குவன் ஒரு குன்றின் மேலேறி பார்த்து விடுகிறான். அவனுக்குத் தாங்கமுடியாத கோபம். இராமனைக் கொல்லவே பரதன் படியோடு வருகிறான் என்று இலக்குவன் நினைத்து விட்டான். இராமனிடம் ஓடிப்போய் சொல்கிறான்.

            பரதன் வரும் செய்தியைச் சொல்லி அவனை எதிர்த்துப் போரிட தன்னைத் தயாரித்துக் கொள்கிறான் இலக்குவன். தாக்க வரும் பரதனைத் தான் அழித்துவிடுவேன் என்று இராமனிடம் சொல்ல, இராமனோ அமைதியாக இலக்குவனைப் பொறுமையுடன் இருக்க வேண்டுகிறான்.

            பரதன், சத்ருகுனன் உடன்வர இராமன் முன்பாக வந்து சேருகிறான். அப்போது பரதன் இருந்த நிலைமையை கம்பர் கூறுகிறார்.

 “தொழுதுயர்ந்த கையினன், துவண்ட மேனியன்                                                              அழுது அழி கண்ணினன், அவலம் ஈது என                                                                     எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை                                                                         முழுதுணர் சிந்தையான் முடிய நோக்கினான்”

தலைமீது குவித்த கரங்கள்; வாடிய உடல், அழுதழுது சோர்ந்த கண்கள், துயரத்தின் முழு வடிவமாக வந்து நிற்கிறான் பரதன்.

            பின்னர் நடந்தவைகள் இராம காதையின் உயிரோட்டமான பகுதிகள். நாம் இந்த இராமாயணக் காட்சியில் கண்ட குகன் எந்த எதிர்பார்ப்பும் இன்றி இராமனிடம் காட்டிய அன்பு ஒரு தாய் தன் பிள்ளையிடம் காட்டும் அன்புக்கு நிகர் என்பதைக் காண்கிறோம். எந்தவித எதிர்பார்ப்பும், பிரதிபலனும் இல்லாமல் அன்பு ஒன்றிற்காகவே தன்னையே ஒப்படைக்கத் தயாராக இருந்த குகன் காப்பியத்தின் ஒப்புயற்வற்ற ஒரு நாயகன் என்பதும், அவனை கம்பர் பெருமானே “தாயினும் நல்லான்” என வர்ணித்திருப்பதில் இருக்கும் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்தால், தனக்காக வாழாத பெரும் உள்ளங்கள் இருந்த வரலாறு நமக்குத் தெரியவரும்.

            தாயினும் நல்லான் குகனின் பெருமை வாழ்க என்று சொல்லி இந்த வரலாற்றை இத்துடன் நிறைவு செய்கிறேன்.