திருமலைராயன்பட்டினம் மண்மேடிட்ட வரலாறு.
பழைய தஞ்சை மாவட்டத்தின் கடற்கரையோரம்
நாகப்பட்டினத்துக்குச் சில கல் தொலைவில் திருமலைராயன் பட்டினம் என்றோர் ஊர். அங்கு
ஓர் சிற்றரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் பெயர் திருமலைராயன். 1455 – 1468 காலகட்டத்தில்
விஜயநகர சாம்ராஜ்யத்துப் பிரதிநிதிகள் இந்தப் பகுதிகளை ஆண்டு வந்தபோது இந்த திருமலைராயன்
ஆட்சி நடந்தது. இந்த திருமலைராயன் அரசவையில் தமிழ்ப் புலவர்கள் அறுபத்து நான்கு பேர்
இருந்தனராம். இவர்களைத் தண்டிகைப் புலவர்கள் என்று அழைத்தார்கள். இவர்கள் அனைவருக்கும்
பல்லக்கில் பயணிக்க வசதி செய்து கொடுத்திருந்தான் மன்னன். இப்படி ஆடம்பரம் அதிகமிருந்ததால்,
அவர்களிடம் புலமையைக் காட்டிலும் செருக்கே அதிகமிருந்தது. அரசனிடம் பரிசில் பெற வரும்
இதர புலவர்களை இவர்கள் மட்டம் தட்டி, வஞ்சகமாக வெளியேற்றி விட்டு தாங்கள் மட்டுமே மன்னனிடம்
செல்வாக்கோடு இருந்து வந்தனர். இவர்களால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேறும் புலவர்கள்
மனம் வருந்தி சாபமிட்டுச் செல்வர்.
இவைகளையெல்லாம்
பற்றி கேள்விப் பட்டு கவி காளமேகம் திருமலைராயன்பட்டினம் சென்று இந்த அகந்தைப் புலவர்களின்
கொட்டத்தை அடக்குவது என்று எண்ணங் கொண்டார்.
தண்டிகைப் புலவர்களின் தலைவராக இருந்தவர் “அதிமதுரக் கவி” என்பார். இவர் மிக
இனிய கவிதைகளைப் பாடுபவர் என்பதால் இவருக்கு இந்தப் பெயரை மன்னனே அளித்திருந்தார்.
இவருடைய சொந்த ஊர் திருக்கோவிலூர். இவர் நல்ல புலமையுடையவர் என்றாலும் தலைக்கனம் பிடித்தவர்.
அரசனின் அன்பைப் பெற்றிருந்ததால் இவர் அகந்தை அதிகமாக இருந்து வந்தது. இவரை மட்டம்
தட்டவும், இதர கவிஞர்களை பரிசில் பெற விடாமல் தடுப்பதை நிறுத்த வேண்டியும் இவர்களுக்குப்
பாடம் புகட்ட எண்ணி கவி காளமேகம் இந்த ஊருக்குச் சென்றார். மேலும் இவருடைய ஆசைநாயகி
மோகனாங்கி இவ்வூரில் முத்துக்கள் அதிகம் கிடைப்பதால் தனக்கொரு முத்துமாலை வாங்கி வரும்படி
இவரிடம் சொல்லியிருந்தாள்.
இவற்றையெல்லாம்
கருதி கவி காளமேகம் நெடுந்தூரம் பயணம் செய்து காரைக்கால் அருகில் இருந்த இந்த திருமலைராயன்
பட்டினத்தை அடைந்தார். காளமேகம் தெருவில் நடந்து
சென்று கொண்டிருந்த போது எதிரில் ஒரு ஆடம்பரமான பல்லக்கில் ஒரு புலவர் உட்காந்து துதிபாடும்
கூட்டம் பின்வர மிக ஆணவமாக வந்து கொண்டிருந்தார். அவர்தான் அதிமதுரக் கவிராயர். இவர்
திமிரை அடக்க எண்ணியிருந்த நேரத்தில், கவிராயரின் கட்டியக்காரன் ஒருவன் எல்லோரும் அதிமதுரத்தைப்
புகழ்ந்து வாழ்த்துப் பாட யாரோவொரு வெளியூர்க் காரன் சும்மா நிற்பதறிந்து கவியிடம்
வந்து தன் கைத்தடியினால் தட்டி காளமேகத்தைப் பார்த்து “நீயும் கவிராயரைப் புகழும் முழக்கத்தைச்
சொல்” என்றான். காளமேகம் வெகுண்டெழுந்தார். அப்போது அவர் ஒரு வெண்பா பாடினார், அது:
“அதிமதுரம் என்றே அகிலம் அறியத் துதிமதுரமாய் எடுத்துச் சொல்லும் புதுமையென்ன? காட்டுச் சரக்குலகில் காரமில்லாச் சரக்குக் கூட்டுச் சரக்கதனைக் கூறு”
“அதிமதுரம் என்றே அகிலம் அறியத் துதிமதுரமாய் எடுத்துச் சொல்லும் புதுமையென்ன? காட்டுச் சரக்குலகில் காரமில்லாச் சரக்குக் கூட்டுச் சரக்கதனைக் கூறு”
இதன் பொருள், “அதிமதுரம் என்பது காட்டில்
விளையும் ஒரு மருந்துச் சரக்கு; அதை எதற்காக இப்படிப் போற்றிப் புகழ்ந்து முழங்கிக்
கொண்டு தெருவோடு போகவேண்டும்?”
அந்தக்
கட்டியக் காரன் வந்திருப்பவர் ஒரு புலவர் என்று தெரிந்து கொண்டு, இந்த விவரங்களைப்
போய் அதிமதுரக் கவிராயரிடம் தெரிவித்தான். இந்த அதிகப் பிரசங்கிப் புலவனை அரசவையில்
தலைகுனிய வைத்து ஓடவிடவேண்டுமென்று முடிவு கட்டினார் அதிமதுரம். அந்தக் கட்டியங்காரனிடம் கவி காளமேகம் தான் பாடிய
பாடலை எழுதிக் கொடுத்து அரசவையில் கொண்டு போய்க் கொடு என்று அனுப்ப அவனும் அதைக் கொண்டு
போய் அரசவையில் கொடுத்ததும் அரசன் உட்பட அதிமதுரக் கவியும் அவர் உடனிருந்த புலவர்களும்
சினம் கொண்டனர்.
அந்தப்
புலவனை உடனே அரசவைக்கு அழைத்துவர அரசன் கட்டளையிட்டான். கவி காளமேகம் கம்பீரமாக அரசவையினுள் நுழைந்தார்.
மன்னனிடம் சென்று ஒரு எலுமிச்சம் பழத்தைக்
கொடுத்து நின்றார். இவரை மன்னன் உட்காரச் சொல்லவில்லை. அதிமதுரக் கவியின் சூழ்ச்சிக்குப்
பலியாகி மன்னனும் ஆணவத்தோடு இருப்பது உணர்ந்த காளமேகம் தான் வழிபடும் அன்னை அகிலாண்டேஸ்வரியை
மனதால் வணங்கிவிட்டு தனக்கொரு இருக்கை அவையில் வேண்டுமென்று கலைமகளை வேண்டிட அரசனின்
இருக்கையே நீண்டு காளமேகத்துக்கு இடம் கொடுத்தது. உடனே சென்று அந்த ஆசனத்தில் அமர்ந்து
கொண்டு கலைமகளுக்கு நன்றி செலுத்தினார். இந்த புதியவரின் தெய்வீக சக்தி கண்டு அவையே
அதிசயித்துப் பார்த்தது. கவி காளமேகம் அங்கிருந்த புலவர் கூட்டத்தைப் பார்த்து “நீவிர்
யாவரோ?” என்று வினவ, பதிலுக்கு அவர்கள் “நாங்கள் ‘கவி’ராயர்கள்” என்றனர். அவர்கள் காளமேகத்தை
நீர் யார் என்று வினவ காளமேகம் ஒரு பாடல் பாடி தன்னை யார் என்பதை விளக்கினார். அது:
‘தூது
அஞ்சு நாழிகையில், ஆறு
நாழிகையில் சொற்சந்தமாலை, சொல்லத்
துகளிலா அந்தாதி ஏழு நாழிகைதனில், தொகைபட
விரித்துரைக்கப் பாதஞ்செய் மடல் கோவை பத்து நாழிகைதனில், பரணி ஒரு நாள் முழுதும், பார
காவியமெலாம் ஓரிரு தினத்தில் பகரக் கொடி கட்டினேன், சீதஞ்செயும் திங்கண் மரபினான் நீடுபுகழ்
செய்ய திருமலைராயன் முன் சீறுமாறு என்று மிகு
தாறுமாறுகள் செய் திருட்டுக் கவிப் புலவரைக் காது
அங்கு அறுத்துச் சவுக்கிட்டு அடித்துக் கதுப்பில் புடைத்து வெற்றிக்
கல்லணையினொடு கொடிய கடிவாளமிட்டு ஏறு கவி காளமேகம் நானே” என்று தன் பெருமைகளை வெளியிட்டார்.
அதிமதுரக்
கவி காளமேகத்திடம் “நீர் எம்போல் விரைவாகக் கவிபாட வல்லவரோ?”
என்று கேட்டதும் பாடினார்:
என்று கேட்டதும் பாடினார்:
“இம்மென்னும்
முன்னே எழுநூறும் எண்ணூறும், அம்மென்றால்
ஆயிரம் பாட்டாகாதோ – சும்மா இருந்தால்
இருந்தேன், எழுந்தேனேயாமாயின் பெரும்
காளமேகம் பிளாய்!”
அவைப்
புலவர்கள் தங்களைக் கவிராயர்கள் என்று சொன்னார்கள் அல்லவா, இங்கு ‘கவி’ என்ற சொல்லுக்குக்
குரங்கு என்று பொருள் கொடுத்து காளமேகம் பாடுகிறார். சம்ஸ்கிருதத்தில் கபி என்றால்
குரங்கு. ஓகோ நீங்கள் கவிராயர்களா (குரங்குகளா?) அப்படியானால்.....
“வால்
எங்கே? நீண்ட வயிறெங்கே? முன்னிரண்டு கால்
எங்கே? உட்குழிந்த கண் எங்கே? சாலப் புவிராயர்
போற்றும் புலவீர்காள் இவர் கவிராயர்
என்றிருந்தக் கால்.”
நீங்கள் கவிராயர்கள் என்றால் உங்கள்
வால், நீண்ட வயிறு, முன்னங் கால்கள், உட்குழிந்த கண்கள் இவைகள் எங்கே? என்று கேட்கிறார்.
ஆத்திரமடைந்த்ச
அவைப் புலவர்கள் இவரை அரிகண்டம் பாடச் சொல்கிறார்கள். அரிகண்டம் என்பது என்ன என்பதைச்
சொன்னால் பாடுவேன் என்கிறார்.
அவர்கள்
சொன்னார்கள்: “கழுத்தில் கத்தியைக் கட்டிக் கொண்டு, நாங்கள் கேட்கும் தலைப்பில் உடனுக்குடன்
செய்யுள் இயற்ற வேண்டும். சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப் பிழை இருக்கக் கூடாது. பிழையாக
இருந்தால் உம் கழுத்து வெட்டப்படும், வென்றால் பாராட்டு கிடைக்கும்” என்றனர்.
காளமேகம்
சமாளித்துக் கொண்டு அரிகண்டம் என்ன, யாம் எமகண்டமே பாடி உங்களை வெல்வேன் என்றார். எமகண்டமா
அப்படியென்றால் என்ன என்றனர் புலவர்கள்.
ஒரு
பெரிய குழிவெட்டி அதில் தீமூட்டி மேலே ஒரு
கூடையில் உட்கார்ந்துகொண்டு புலவர்கள் கேட்கும் விதத்தில் பாடவேண்டும், தவறினால்
தீயினுள் தள்ளிவிடுவர், புலவர் மாண்டுபோவார். இதைக் கேட்டு அச்சமடைந்த புலவர்கள் அதை
நீர் செய்ய வல்லீரோ என்றதும், காளமேகம் ஒப்புக்கொண்டு அவ்வகையில் பாடி வென்றார். பிறகும்
கூட புலவர்களோ மன்னனோ இவரை மதிக்கத் தவறிவிட்டார்கள்.
ஆத்திரமடைந்த
காளமேகம் அந்த ஊரே அழிந்து போகும்படி அறம்பாடினார்.
“கோளர்
இருக்கும் ஊர், கோள்கரவு கற்ற ஊர், காளைகளாய்
நின்று கதறும் ஊர்; நாளையே விண்மாரி
அற்று வெளுத்து மிகக் கறுத்து மண்மாரி
பெய் கவிந்த வான்”
கவி காளமேகம் அறம் பாடியதால் அவ்வூர்
மண்மாரி பெய்து அழிந்தது. காளமேகம் ஊர் திரும்பினார். அந்த திருமலைராயன்பட்டினம் கவி காளமேகத்தின் கோபத்தால்
மண்மேடிட்டு அழிந்து போயிற்று. இந்த திருமலைராயன்பட்டினம் என்பது காரைக்கால் நாகப்பட்டினம்
மார்க்கத்தில் இருக்கும் ஒரு கடற்கரை கிராமமாக இப்போது இருக்கிறது.
1 comment:
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
Post a Comment