பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, October 11, 2019

கவி காளமேகம்


                                                            கவி காளமேகம்.

            கவி காளமேகம் தமிழ்ப் புலவர்களில் சிலேடையெனும் இருவேறு வகையான பொருட்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைச் சொல்லுவது. ஒரு பொருளை இன்னொன்றோடு ஒப்பிட்டு இவ்விரு பொருளுக்குமான ஒற்றுமையை விளக்குவது. அப்படிப்பட்ட சிலேடைகளைச் சொல்லி வெண்பாக்கள் எழுதி பெரும் புகழ் பெற்றவர் காளமேகம். இவருடைய கிண்டல், பிடிக்காதவர்களை மட்டம் தட்டிப் பாடுவது, எதிரிகளைக் கடுமையாக விமர்சித்துப் பாடுவது போன்றவை இவருடைய பாடல்களில் அதிகம் காணலாம். 15ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களின் கீழுள்ள சிற்றரசர்கள் ஆண்ட காலம். அப்போது மதுரை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், செஞ்சி போன்ற இடங்களில் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களால் அனுப்பபட்ட சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர்.  அப்படிப்பட்ட காலத்தில் கவி காளமேகம் என்பார் பிறந்து இதர புலவர்களைப் போலன்றி இவர் பல புதிய முறைகளைக் கையாண்டு தமிழ்க் கவிதைகளை இயற்றி அனைவரையும் மகிழ்ச்சியும் அடையச் செய்திருக்கிறார், சில வேண்டாதவர்களை வெறுப்படையவும் செய்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு விநோதமான கவிஞரின் பாடல்களை எல்லோரும் படித்திருப்பார்களா தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பள்ளிக்கூட பாடங்களில் இவருடைய சிலேடைப் பாடல்கள் பாடமாக வைக்கப்பட்டிருந்தது, இப்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை.

            யார் இந்த கவி காளமேகம்? இவருடைய சொந்த வாழ்க்கை வரலாற்றுக்கும், இவரது கவிதைகளுக்கும் அதிகம் சம்பந்தம் உண்டு. இவருக்குப் பிடிக்காதவர்களை இவர் நேருக்கு நேர் மிகக் கடுமையாகத் தாக்கி பாடல்களைப் பாடிவிடுவது வழக்கம். சிலரை முகஸ்துதி செய்து பாடவும் செய்திருக்கிறார். பொதுவாக கிண்டல் செய்து பாடுவதில் இவர் வல்லவர். ஒருவர் சொல்லும் சொல்லின் வேறொரு பொருளை மனதில் கொண்டும் சில பாடல்களைப் பாடி பாடலைக் கேட்டவரை இவர் திணரடித்திருக்கிறார். இவர் ஒரு ஆசுகவி, பிறரை வசைபாடுவதில் வல்லவர் என்பதால் “வசைபாட காளமேகம்” என்றொரு சொல்வழக்கே உருவானது.

            இவர் வாழ்க்கை வரலாறே மிகவும் சுவையானது. பழங்காலக் கவிஞர்கள் வறுமை காரணமாக மன்னர்களிடமெல்லாம் சென்று இரந்துண்டு வாழ்ந்த வரலாறு இவரிடம் இல்லை. இவர் கவிஞராக ஆனதே ஒரு சுவையான வரலாறு. இவருடைய வாழ்க்கை வரலாற்றை இந்நூலில் மிக சுருக்கமாகப் பார்ப்போம்.

            காவிரிக் கரையில் தஞ்சாவூர் ராஜ்யத்தில் நாயக்க மன்னர்கள் ஆண்ட காலம் அது. விஜயநகர மன்னர்களால் இங்கு அனுப்பப்பட்டு இந்தப் பகுதிகளைக் குறிப்பாக முந்தைய முழுமையான தஞ்சாவூர் மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதிகளில் நான்கு நாயக்க மன்னர்கள் சுமார் 130 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கின்றனர். அவர்கள் சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகியோராவர். கடைசி மன்னரான விஜயராகவ நாயக்கர் மதுரை நாயக்க அரசர்களோடு எற்பட்ட விரோதம் காரணமாக தஞ்சை கோட்டைக்குள் நடந்த போரில் நடந்த போரில் கொல்லப்பட்டார். இவருக்குப் பிறகு மதுரை அழகிரி நாயக்கர் என்பார் சிலகாலம் அரசாளத் தொடங்கியவுடன், கடைசி மன்னன் விஜயராகவனின் பேரன் புஜப்பூர் சுல்தான் அலி அடில்ஷா விடம் உதவி கேட்டு, அவர் வெங்கோஜி எனும் மராட்டிய வீரன் தலைமையில் ஒரு படையை அனுப்பு தஞ்சாவூரை மீட்டு அந்த மராத்தா வம்சம் சுமார் 180 ஆண்டுகள் தஞ்சையை ஆண்டது என்பது வரலாறு. கடைசி மராத்திய மன்னர் இரண்டாம் சிவாஜி மன்னர் 1855இல் காலமான பின்பு பிரிட்டிஷார் ஆட்சியைத் தாங்களே எடுத்துக் கொண்டனர். இந்த இரண்டாம் சிவாஜியின் தந்தைதான் சரபோஜி மன்னர்.

            இப்படி நாயக்கர்கள் தஞ்சாவூர் ராஜ்யத்தை ஆண்ட காலத்தில் வாழ்ந்தவர் புலவர் காளமேகம். இவர் கும்பகோணம் எனும் தலத்துக்குத் தெற்கே சிலகல் தூரத்திலுள்ள நந்திபுரம் என்கிற நாதன்கோயில் எனும் ஊரில் பிறந்தவர். இவருக்கு மதுரை அருகிலுள்ள திருமோகூர் எனும் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் காளமேகப் பெருமாளின் பெயர் சூட்டப்பட்டதாயினும் இவரை வரதன் என்றே அனைவரும் அழைப்பர். திருமோகூர் பெருமாள் ஆலயத்தில் மடப்பள்ளியில் பரிசாரகராக இருந்த ஒருவருடைய மகன் தான் இந்த வரதன் எனும் காளமேகம்.  இவருடைய இயற்பெயர் வரதன் என்பதாகவே இருந்திருக்க வேண்டும். இவன் அன்னை அகிலாண்டேஸ்வரியின் அருளால் புலவனாக ஆன பின்பு, இவன் கவிதைகளை நீருண்ட மேகம் போல பொழிவதால் காளமேகம் என்ற பெயரையும் அடைந்திருக்கலாம். இதனை வலியுறுத்த தஞ்சை மாவட்டத்தில் நாகைக்கு அருகில் சில கல் தொலைவில் அமைந்துள்ள திருமலைராயன்பட்டினம் எனும் ஊரில் சிற்றரசர் திருமலைராயன் என்பவர் அவையில் தலைமைப் புலவராக இருந்த அதிமதுரகவி என்பார் நம் காளமேகத்துடன் மோதித் தோற்றவர். அவர் காளமேகத்தைக் குறிக்கும் வகையில் இயற்றியுள்ள ஒரு பாடலில் “வாசவயல் நந்தி வரதா, திசையனைத்தும் வீசுகவி காளமேகமே” என்று இவரைக் குறிப்பிடுவதிலிருந்து இவர் இயற்பெயர் வரதன் என்பது விளங்குகிறது.
அந்தப் பாடல்:

“வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்                                                                                  வீசுகவி காள மேகமே – பூசுரா                                                                                 விண்தின்ற வெளவழலில் வேவுதே பாவியேன்                                                                           மண்தின்ற பாணமென்ற வாய்:”

            இவருடைய தந்தையார் திருவரங்கம் அரங்கநாதப் பெருமாள் ஆலயத்திலுள்ள ம டப்பள்ளியில் பரிசாரகராக இருந்து வந்தார். ஆகையால் அவரைப் பின் பற்றி வரதனும் அதே ஆலயத்தின் மடப்பள்ளியில் பரிசாரகனாகப் பணிசெய்யத் தொடங்கினார். இப்படி ஆலயங்களில் மடப்பள்ளியில் பணியாற்றுவோர் பாரம்பரியமாக அதே தொழிலைச் செய்து கொண்டு வருவதால் அதிகம் கல்வி கற்க வாய்ப்பு கிடையாது. அது போலவே வரதனும் தன் சமையல் தொழிலை நன்கு செய்து பெருமாளுக்கு நல்ல ருசியான புளியோதரை, ததியோன்னம், அக்கார அடிசில் (சர்க்கரைப் பொங்கல்) போன்றவற்றைச் செய்து படைப்பதை மிகத் திறமையாக செய்து வந்திருக்க வேண்டும். இவன் கல்வித் தகுதி பற்றி தெரிந்து கொள்ள எந்தவித சான்றுகளும் இல்லை. எனவே முறையாக தமிழ் படித்து இலக்கண இலக்கியங்களைக் கற்று கவி எழுதும் ஆற்றல் உள்ளவனாக இருந்திருக்க முடியாது.  அப்படியென்றால் காளமேகம் கவிஞனானது எப்படி, ஆசுகவியாகி, சிலேடைக் கவிகளில் தலைசிறந்து விளங்கியது எப்படி என்கிற ஐயம் எழுவது இயற்கையே. ஆம்! அவன் கவிஞனானது ஒரு விசித்திரமான சூழ்நிலைதான். சிலருக்கு யோகம் அடிக்கும், வேறொருவருக்குப் போகவேண்டிய பெருமைகள் சிலசமயம் பெறுபவர் அலட்சியத்தாலோ, அல்லது காலக் கொடுமையாலோ, அவருக்குக் கிடைக்காமல்  எதிர்பாராத ஒருவருக்குக் கிடைத்துவிடுவது உண்டு. அப்படிக் கிடைத்ததுதான் வரதனுக்குக் கவிபாடும் திறமை கிடைத்தது.

            வரதன் திருவரங்கப் பெருமாள் ஆலயத்தின் மடப்பள்ளியில் பரிசாரகன். அவனுக்கு அருகில் இருக்கும் திருவானைக்காத் தலத்தில் இருக்கும் அகிலாண்டேஸ்வரி அம்மன் அனுக்கிரகம் செய்து அளித்த பிச்சையே கவிபாடும் திறன். அது ஒரு விசித்திரமான சூழ்நிலை சந்தர்ப்பம். திருவரங்கம் ஆலயம் வைணவ ஆலயம். அந்த ஆலயத்தின் பரிசாரகன் ஒரு வைணவன்தான், ஆம்! வரதன் எனும் வைணவப் பெயருடைய நம் வரதன்தான். இவனுக்கு தின்ன கோயில் பிரசாதம் நிறைய கிடைக்கும். அதை வேளை தவறாமல் நன்கு சாப்பிட்டுவிட்டு வேலைகளைக் கவனிப்பதோடு சரி. வேறு கல்விக்கோ, விளையாட்டுக்கோ சந்தர்ப்பமும் இல்லை, ஆசையும் இல்லை. ஆகவே நன்கு சாப்பிட்டுவிட்டு பணியாற்றி வந்தான்.

            நாயக்கர்கள் இந்த சோழ நாட்டில் நன்கு காலூன்றி ஆண்டுகொண்டிருந்த சமயம் இங்கிருந்த ஆலயங்களில் ஆடல்மகளிர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்கள் ஆலய பூஜா காலங்களில் ஒவ்வொரு சந்நிதிகளிலும் நடனம் ஆடும் வழக்கம் இருந்து வந்தது. அப்படி எல்லா ஆலயங்களிலும் இருப்பதில்லை. சிவாலயங்களில் மட்டும் நடராஜப் பெருமான் இடது பதம் தூக்கி நடனம் ஆடி, அதிலும் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடியதால், சிவாலயங்களில் மட்டும் நாட்டிய மங்கையர் நிறைய பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இவர்கள் ஒவ்வொரு கால பூஜைகளின் போதும் ஒவ்வொரு சந்நிதியிலும் நாட்டியம் ஆடவேண்டும். நமது ஆலய வழிபாட்டிலும் சரி, பூஜா விதிகளிலும் சரி, இந்த ஆடல் மகளிர்களுக்கு என்று தனி மரியாதை உண்டு. இப்போதும் கூட பூஜை மந்திரங்களில் நிறைவாக சோடசோபசாரம் என்று உபசாரம் செய்யும் வழக்கம் உண்டு. அதில் சத்தரம், சாமரம் போன்றவைகளை வீசவும், கீதம், நாட்டியம் ஆகியவைகளைச் சமர்ப்பித்தும் பூஜைகளை முடிப்பது வழக்கம். இப்போதெல்லாம் அவைகள் “கீதம் சமர்ப்பயாமி” “ நாட்டியம் சமர்ப்பயாமி” என்போது நின்று போயிற்று. முன்பெல்லாம் கீதம் எனும் போது பாடுவதற்கு ஆட்கள் உண்டு. நாட்டியம் எனும்போது அவ்வாலயத்தில் பணிபுரியும் நடனக் கலைஞர் ஆடுவதும் உண்டு. கோயில் குட ஆரத்தி என்று ஒரு சிறு குடம்போன்ற பாத்திரத்தின் மீது திரிவைத்த  தீப ஆராதனை உண்டு. அதனைச் செய்யும் உரிமை இந்த பெண்மணிகளுக்கு இருந்தது. இவர்கள் அந்த குடத்தின் மீது திரியில் ஒளியூட்டி கர்ப்பக்கிரகத்தினுள் சென்று குருக்களிடம் கொடுக்கும் உரிமை பெற்றிருந்தனர். அப்படிப்பட்ட அழகிய நடன மாது ஒருத்தி திருவானைக்கோயிலில் பணியாற்றி வந்தாள், அவள் பெயர் மோகனாங்கி.

            திருவரங்கம் பெருமாள் ஆலயத்து மடப்பளி ஊழியன் வரதனுக்கு, திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் -  அகிலாண்டேசுவரி ஆலயத்தில் நாட்டியப் பெண்ணாகப் பணியாற்றி வந்த மோகனாங்கி மீது ஆசை வந்து அவளிடம் பழகத் தொடங்கினான். இந்த 15ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சைவ, வைணவ பூசல்கள் அதிகம் இருந்த காலம். விவாதங்களும் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். இதையொட்டியே பிரபல கதாசிரியரும் “கல்கி” பத்திரிகை ஆசிரியருமான ரா.கிருஷ்ணமூர்த்தி எனும் கல்கி தனது “பொன்னியின் செல்வன்” புதினத்தில் ஆழ்வார்க்கடியான் எனும் வீர வைணவன் பாத்திரத்தைப் படைத்தார். அந்த ஆழ்வார்க் கடியான் அடிக்கடி சைவர்களோடு மோதி சண்டைக்குப் போவான். சைவ, வைணவ பூசல் உச்சத்தில் இருந்த காலம் அது. கல்கியின் பொன்னியின் செல்வனில் ஒரு காட்சி, திருவானைக்கா சிவாலயத்தின் மதிற்சுவரை யொட்டி ஆழ்வார்க்கடியான் நடந்து போய்க் கொணிருப்பான், அப்போது ஒரு காகம் மதிலின் மேல் உட்கார்ந்து கொண்டு மூக்கால் சுவற்றின் மீது தேய்த்தது. அதனால் சுவற்றிலிருந்து ஒரு சிறிய சுண்ணாம்புக் காரை பெயர்ந்து கீழே விழுந்தது. அதைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்த ஆழ்வார்க்கடியான் தன் கையில் இருந்த கனத்த கைத்தடியை ஆட்டிக் கொண்டு, “சீரங்கத்து வீர வைஷ்ணவக் காக்காயே, திருவானைக்காவை இடித்துத் தள்ளு, தள்ளூ” என்று கூக்குரல் இட்டானாம். இது வேடிக்கையான சம்பவமாகச் சித்தரிக்கப் பட்டாலும், அப்படிப்பட்ட சைவ வைணவப் பூசல்கள் நடந்து கொண்டிருந்த காலம் அது.

            கோயில் என்றால் வைணவர்களுக்குத் திருவரங்கம் தான்; அதே போல சைவர்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரம். அப்படி வைணவத்தின் தலையாய கோயில் திருவரங்கத்தில் மடப்பளி பரிசாரகன் அருகிலுள்ள திருவானைக்கா அருள்மிகு ஜம்புகேச்வரர் ஆலயத்து ஆடலழகி மோகனாங்கியுடன் உறவு வைத்திருப்பதை அன்றைய வைணவர்கள், அதிலும் கோயில் எனப்படும் திருவரங்கக் கோயில் வைணவர்கள் இவனைச் சும்மா விடுவார்களா? அவனைப் பலவிதங்களிலும் இந்த உறவை விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டும் வரதன் கேட்பதாயில்லை. மோகனாங்கி வீட்டுக்கே சென்று அங்கேயே உண்டும் உறங்கவும் தொடங்கி விட்டான். இருந்தாலும் மக்கள் மத்தியில் இந்த உறவு தவறாகவே பார்க்கப்பட்டது.

            இந்த நிலையில் மார்கழி மாதம், ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. ஜம்புகேச்சரம் எனும் திருவானைக்கா ஆலயத்தில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஓதப்பட்டு வந்தது. தினந்தோறும் ஆலயத்தில் எல்லோரும் ஒன்றுகூடி திருவாசகத்தை இனிமையாகப் பாடுவார்கள். இதில் ஆலயத்தின் ஆடல்மகளிர் கலந்து கொண்டு பாடவும், ஆடவும் செய்வார்கள். அதில் ஒரு பாடல் “உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்” என்ற பாடலைப் பாடத் தொடங்கினார்கள். அதில் வரும் ஒரு வரி “எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க” என்பது. இந்தப் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்த மோகனாங்கிக்கு இந்த வரியின் பொருள் புரியுமாதலால் அந்தப் பகுதிக்கு அவளால் ஆட முடியவில்லை. சிவனை வழிபடும் நான் சிவனை வழிபடும் இன்னொருவர் தோள் மீதுதான் சேரமுடியும்” என்ற பொருளில் வரும் இந்த அடிக்குத் தான் எப்படி சிவத்தொண்டு புரிந்து கொண்டு ஒரு வைணவனோடு வாழ்வது என்பது மனத்தை உறுத்தியது. ஆகவே அந்த அடிக்கு ஆடாமல் நின்று விட்டதோடு, குற்ற உணர்வினால் குன்றிப் போனாள். இதனைக் கண்டு அவளுடைய தோழிகள் இவளைக் கேலி செய்தனர். அவர்கள் செய்த கேலியினால் மனம் துவண்டு போய் அங்கிருந்து புறப்பட்டு தன் இல்லம் அடைந்தாள்.

            மோகனாங்கி கடமைக்காக ஆலயத்தில் பணியாற்றுபவள் அல்ல. ஆழ்ந்த சிவபக்தியும் அவளுக்கு இருந்த காரணத்தால் அவள் பக்தி சிரத்தையோடு தன் பணிகளைச் செய்து வந்தாள். திருவாசகம் பாடிய மாணிக்கவாசகப் பெருமான் இப்படியொரு அறிவுரை சொல்லியிருக்கிறாரே. சிவனை வழிபடும் ஒருத்தி எப்படி வைணவனாக இருப்பவன், அதிலும் வைணவக் கோயிலில் பணியாற்றுபவன், அவனுடன் காதல் கொண்டு இணைந்து வாழ முடியும்? இந்த சிந்தனை அவள் மனத்தை அரித்த காரணத்தால், அவ்விடத்தை விட்டு அகன்று தன் இல்லத்துக்கு விரைந்து சென்றாள். தான் ஒரு சிவனுக்கு அடியாளாக இருந்து கொண்டு வைணவன் ஒருவனோடு வாழ்வது இன்றோடு முடிந்தது. இனி வரதனை உள்ளே விடுவதில்லை என்று உறுதி மேற்கொண்டாள்.

            அன்றிரவு வரதன் மோகனாங்கி வீட்டுக்கு வழக்கம் போல வந்தான். வாயிலில் மோகனாங்கியின் வீட்டு வேலைக்காரி நின்றுகொண்டு அன்று நடந்த விவரங்களைச் சொல்லி இனி மாற்று மதத்தவனாகிய வைணவன் வரதனோடு சிவமதத்தவளான மோகனாங்கி உறவுகொள்ள மாட்டாள் என்று சொல்லிவிட்டாள். வரதனுக்கு மிகுந்த வேதனை உண்டாகியது. தம்மையும் தன் அன்புக்குப் பாத்திரமான மோகனாங்கியையும் பிரிப்பது நாம் இருவரும் வெவ்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் என்பதால் தானே. இதற்கு ஒரு முடிவு கண்டே ஆகவேண்டும். மோகனாங்கி இல்லாமல் தன்னால் வாழமுடியாது என்று எண்ணிக்கொண்டே இல்லம் சென்றார்.

            மறுநாட் காலை வரதன் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு திருமண் இட்டுக் கொள்ளாமல், நேராக ஜம்புகேச்சரம் சென்று அங்கு இருந்தவர்களிடம் தான் சைவ சமயத்தைத் தழுவ வந்திருப்பதாகச் சொன்னான். அவர்களுக்கு அதிர்ச்சி. இதென்ன கூத்து, வைணவனாக இருந்து கொண்டு வைணவ ஆலயத்தில் பணியாற்றிக் கொண்டு இருப்பவன் இப்பொழுது வந்து சைவனாக ஆகிறேன் என்கிறானே. அவர்கள் சொன்னார்கள், நீ சைவனாக ஆனபிறகு திருவரங்கத்தில் பணியாற்ற முடியாது, ஆகையால் நீ இந்த ஆலயத்தில் பரிசாரகனாகப் பணிக்குச் சேர்ந்துவிடு என்றதும் அவனும் சம்மதித்து திருநீறணிந்து, சிவ தீட்சை பெற்று ஐந்தெழுத்தை ஓதி சைவனாகி அதே கோயிலில் மடப்பளியில் பரிசாரகனாக ஆனான்.

            தானொரு வைணவன் என்பதால் தன்னை ஏற்றுக் கொள்ள மறுத்த மோகனாங்கியிடம் சென்று தான் சைவனாகிவிட்டதையும், ஜம்புகேச்சரத்தில் மடப்பளியில் வேலை என்றும் சொன்னான். மோகனாங்கிக்கும் மகிழ்ச்சி, தான் விரும்பியபடி வரதனுடன் வாழலாம், அவனும் சைவனாகிவிட்டான். அன்று முதல் உடலெங்கும் பனிரெண்டு திருமண் அலங்கரித்த இடங்களில் திருநீறு பூசி சைவனாக விளங்கினான். அந்தக் கோலத்துடன் மோகனாங்கியைச் சென்று கண்டதும் மனம் மகிழ்ந்து சைவனாக ஆகிவிட்ட தன் அன்புக்கு உரியவனை ஏற்றுக் கொண்டாள். இவ்விருவருக்கிடையே இருந்த உறவு அன்பின் அடிப்படையிலானது, ஒரு தாசியுடனான உறவு என்பதாக மேம்போக்காகக் கொள்வதற்கில்லை. காரணம், ஒரு கணவன் மனைவிக்கு இடையிலான அன்பும் அரவணைப்பும் இவ்விருவரிடத்தும் இருந்ததே தவிர உடல் இச்சையைத் தணித்துக் கொள்ள ஒரு தாசியிடம் செல்வது போல அமையவில்லை, அதனால் தான் அவர்கள் பல ர் முன்னிலையிலும் கணவன் மனைவி போன்று சகல உரிமைகளுடன் வாழ்க்கை நடத்தினர், ஆலய நிர்வாகமும் இவர்கள் இருவருக்கும் ஆலயத்தில் பணிகளைக் கொடுத்து வைத்திருந்தது.

            இப்படி வரதனும் மோகனாங்கியும் திருவானைக்கா ஆலயத்தில் சீரிய முறையில் தத்தமது பணிகளைச் செய்து வரும் நாளில் அந்த ஆலயத்தில் அருள்பாலித்து வரும் அகிலாண்டேஸ்வரி அம்மனின் அருள் பெற்று தான் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்குபவனாக ஆகவேண்டுமென்கிற நோக்கத்துடன் ஒரு சக்தி உபாசகன் அம்மையின் சந்நிதியில் தவமிருந்தான். அம்பாள் பார்வையில் படும்படி சந்நிதியின் எதிரில் அமர்ந்து கொண்டு இரவு பகல் பாராமல் உணவோ, குடிக்க நீரோ கூட கேட்காமல் கண்மூடி அம்பிகையின் வரம் வேண்டி அவன் தவம் புரிந்து வந்தான். நாட்கள் சென்று கொண்டிருந்தன, அவன் தவம் பலிக்கும் நேரம் வரவில்லை. அவனுடைய கடும் தவத்தை மெச்சி அகிலாண்டநாயகியான அம்பாள் ஒரு சிறு பெண் வடிவம் தாங்கி, ஒரு நாள் நடு ஜாம வேளையில் வாயில் தாம்பூலம் நிறைந்திருக்க, தவமிருக்கும் உபாசகனின் முன்னால் போய் நின்று அவனை அழைத்தாள். ஆழ்ந்த தவத்தில் இருந்த அவன் ஒரு குரல் கேட்டு மெல்ல கண் திறந்து பார்த்தான். எதிரில் ஒரு சிறுவயதுப் பெண், வாய் நிறைய தாம்பூலம் தரித்த கோலம். கண் விழித்துப் பார்த்த சக்தி உபாசகனைப் பார்த்து அன்னை பேசினாள்.

           “அன்பனே! உன் கடும் தவம் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். நீ உன் வாயைத் திற இந்தத் தாம்பூலத்தை உமிழ்ந்துவிட்டுப் பேசுகிறேன். உன் வாயைத் திற, இதை  உமிழ்ந்து விடுகிறேன். பிறகு நீ விரும்பிய சக்திகளைப் பெறுவாய்!” என்றாள் அன்னை.
இன்னமும் பராசக்தியின் கருணையை, அருட் செயலை உணர்ந்து கொள்ளாத, புரிந்து கொள்ளாத நிலையில் அந்த உபாசகன் ஒரு சிறு பெண் தன் வாய் எச்சிலை என் வாயில் உமிழ்வதாவது, இது என்ன விளையாட்டு என்று கோபப்பட்டு, “என் தவத்தைக் கலைத்து உன் எச்சிலை உமிழ என் வாயையா தேர்ந்தெடுத்தாய். நீ உடனே இங்கிருந்து ஓடிவிடு. என் சக்திக்கு முன்னால் உன்னால் நிற்க முடியாது, போ! போய், உன் எச்சிலை எங்கேனும் உமிழ்ந்து விடு” என்று விரட்டிவிட்டான்.

            “ஓ, இந்த பக்தனுக்கு இன்னமும் விவேகம் வரவில்லை. வரம் பெறுவதென்பது இவன் விஷயத்தில் அத்துணை சுலபமில்லை, இவன் இன்னமும் பக்குவப்படவில்லை, உரிய அறிவினைப் பெற இவன் இன்னம் நெடுங்காலம் தவமியற்ற வேண்டும்” என்று அன்னை அவ்விடத்தை விட்டு அகன்று சென்றாள்.

            இதற்கிடையே, திருக்கோயிலில் மடப்பள்ளி வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்ப வரதன் காத்துக் கொண்டிருந்தான். அப்போது மோகனாங்கி வந்து தனக்கு இன்று கோயில் பணியில் கும்ப ஆரத்தி வேலை இருப்பதாகவும், அது முடிந்து வீடு திரும்ப நேரமாகுமென்றும், தான் பணி முடிந்து வரும்வரை கோயில் மகா மண்டபத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருங்கள், நான் வரும்போது உங்களை எழுப்பி அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போயிருந்தாள். அதனால் மண்டபத்தில் ஒரு வசதியான இடம் பார்த்து வரதன் படுத்து நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்.

            இப்படி வரதன் நன்கு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான் அம்பாள் அகிலாண்டேஸ்வரி தன்னை வேண்டி தவமியற்றிக் கொண்டிருக்கும் சக்தி உபாசகனிடம் சென்று தாம்பூலத்தை உமிழ வாயத் திறக்கும்படி கேட்க, அவன் அன்னையை போ என்று விரட்டிவிட்டிருந்தான். அன்னை நேராக மண்டபத்திற்கு வந்தாள், அங்கு குறடை ஒலியுடன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வரதனைத் தட்டி எழுப்பினாள். தூக்கக் கலக்கத்தில் எழுந்து உட்கார்ந்த வரதனிடம் அன்னை, “அன்பனே வாயைத் திற, என் தாம்பூலத்தை உமிழ வேண்டும்” என்று சொன்னாள். அந்தப் பெண் என்ன சொல்கிறாள் என்பதைக் கூட உள் வாங்கிக் கொள்ளாத வரதன் அவள் தன் வாயைத் திறக்கச் சொல்கிறாள் என்பதை மட்டும் காதில் வாங்கிக் கொண்டு வாயைப் பிளந்து “ஆ”வென்று திறந்து காட்டினான். அன்னை தன் வாயிலிருந்த  தாம்பூலத்தை கற்சட்டி போலத் தன் வாயை அகலத் திற்ந்து காட்டிய வரதனின் வாயில் உமிழ்ந்தாள்.  அடுத்த கணமே வரதன் ஒரு புது மனிதனாக ஆனது போல உணர்ந்தான். இங்கே சறுமுன் வந்து வாயைத் திறக்கச் சொன்ன பெண் யார், என்ன செய்தாள், நமக்குள் ஏன் இந்த மாற்றம், மனம் கற்பனையில் ஊறித் திளைக்கிறதே, எண்ணும் எண்ணமெல்லாம் கவிதைகளாக வந்து தோன்றுகின்றதே” என்று எண்ணியவுடனே அன்னையின் மீது அற்புதமான கவிதையொன்றைப் பாட அவன் ஓர் அற்புத கவிஞனாக மாறிப்போனான். மந்த புத்தியும், மடப்பளிப் பணியால் வ்யிறு நிறைய உண்டு கொழுத்ததை மறந்தான், இப்போது கவிபாடும்  ஒரு புது மனிதனாக, திறம் படைத்த ஓர் புலவனானான். தன்னை மறந்தான், தன்னை மண்டபத்தில் காத்திருக்கச் சொல்லிவிட்டுச் சென்ற மோகனாங்கியை மறந்தான், அவன் உள்ளம் ஆயிரம் கவிதைகளை ஊற்றெடுக்கச் செய்து பொழிந்து தள்ளத் தொடங்கி, அவ்விடத்தை விட்டு அகன்று சென்று விட்டான்.

            மோகனாங்கி வரதனிடம் சொல்லிச் சென்றபடிக்கு தன் பணிகளெல்லாம் முடிந்த பிறகு மண்டபத்துக்கு வந்து வரதனைத் தேடினாள். மண்டபத்தினுள் எங்கு தேடியும் வரதனைக் காணவில்லை. இங்கே தானே படுத்துறங்கச் சொன்னேன், சொல்லாமல் கொள்ளாமல் எங்கே சென்றிருப்பார்? சரி, வீட்டுக்குப் போயிருக்கலாம், அங்கே போய் பார்க்கலாம் என்று மோகனாங்கியும் வீடு நோக்கி நடந்தாள்.

            மோகனாங்கி வீட்டுக்குச் சென்றால் வரதன் அங்கே உறங்கிக் கொண்டிருந்தான். பொழுதும் விடிந்தது. வழக்கம் போல எழுந்து ஸ்நான பானங்களை முடித்துக் கொண்டு மடப்பள்ளி பணிக்குச் செல்லாமல் வரதன் வீட்டில் இருந்த அம்பாள் படத்துக்கு முன்பாக நின்று கொண்டு கவிதை மழையாகப் பொழிந்து பாடிக் கொண்டிருந்தான். இதென்ன கூத்து? சாப்பாட்டு ராமனாக இருந்த இவருக்கு இப்படி பக்திப் பாடல்களைப் பொழிந்து தரும் சக்தி எப்படி வந்தது. இரவு என்ன நடந்தது? இப்படி பல கேள்விகள் மோகனாங்கியின் மனதைக் குடைந்தெடுத்தன. திகைத்துப் போய் நின்று கொண்டிருந்த மோகனாங்கியிடம் சென்று வரதன் முதல் நாள் இரவு கோயில் மண்டபத்தில் நடந்தவற்றை விவரமாக எடுத்துரைத்தான்.  அதைக் கேட்டு அவளும் அங்கே அம்பாள் சந்நிதியில் ஒரு சாக்தன் அம்பாளின் அருளை வேண்டி தனக்கு எல்லா கலைகளையும் கொடுத்தரு:ள வேண்டுமென்று தவம் கிடக்கிறான். அன்னயோ, இந்த வரதனைத் தேர்ந்தெடுத்து இப்படி காளமேகம் போல கவிபொழிய வைத்து விட்டாளே என்று திகைத்துப் போனாள். மடப்பள்ளியில் சோறு பொங்கிக் கொண்டிருந்த வரதன் அப்போது முதல் காளமேகமானான். கவி பொழிதலால் கவி காளமேகம் என்றே பெயர் பெற்று விளங்கினான்.

            நடந்த  விவரங்களைக் கேட்டு ஊரிலுள்ளார் பலரும் இவர்கள் இல்லம் வந்து நடந்த அதிசயத்தைப் பற்றிக் கேட்டு வியந்து போயினர். வந்த புலவர்களிடம் காளமேகம்  பற்பல கவிதைகளைப் பாடிக் காட்டினான். ஆசுகவி, மதுரகவி, சித்திரக் கவி, வித்தாரக்கவி என்று பற்பல வகைக் கவிதைகளையும் பாடி வந்தவர்களை மகிழ்வித்தான்.

            “வரதா, சாதாரணமான மனிதனான உன்னை அன்னை அகிலாண்டேஸ்வரி ஒரு கவிஞனாக அல்லவா ஆக்கி விட்டாள். எல்லா வகைக் கவிதைகளையும் உன்னால் இயற்ற முடியும். உனக்கு அருள் பாலித்த அன்னை அகிலாண்டேஸ்வரியின் புகழை” ஒரு பாடலாகப் பாடு” என்றனர். உடனடியாக காளமேகம் என்று புதிய பெயர் பெற்ற அவன்  அன்னை அகிலாண்டேஸ்வரியின் பெயரில் “திருவானைக்கா உலா” என்றொரு அரிய பிரபந்தத்தை இயற்றிக் காட்டினான்.  சொற்சுவையும், பொருட்சுவையும் மிகுந்து பக்தி வசப்பட்டு அவன் பாடிய அந்தப் பிரபந்தத்தைக் கேட்டு புலவர்கள் ஆனந்தப் பட்டார்கள்.  இவர் இனி வரதனல்ல, கவி காளமேகமே என்று புகழ்ந்து சென்றனர்.

            திருவானைக்காவில் சாதாரண வரதனாக நாட்டியக்காரி மோகனாங்கியுடன் வாழ்பவன், என்ற நிலை மாறி இவனுடைய புகழ் அருகிலுள்ள ஊர்களுக்கெல்லாம் பரவி கவி காளமேகத்தின் பெருமை ஊரறிய தெரியலாயிற்று. மோகனாங்கியுடன் சில காலம் மகிழ்ச்சியோடு திருவானைக்காவில் வாழ்ந்து வந்த காளமேகத்துக்கு வெவ்வேறு ஊர்களுக்கெல்லாம் சென்று தன் கவித்திறனைக் காட்டி, பல்வகைப் பாடல்களையும் பாடி, பரிசில்களைப் பெற்று வரவேண்டுமென்கிற ஆசையின் காரணமாக மோகனாங்கியிடம் சொல்லிவிட்டு ஊர் ஊராகச் சுற்றத் தொடங்கினார் காளமேகம். அவர் மரியாதைக்குரிய கவிஞராக ஆகிவிட்டதால் முன்போல அவன் இவன் என்றெல்லாம் சொல்லக் கூடாது அல்லவா.

            இவர் போகிற இடங்களில் எல்லாம் கவிமழை பொழிவது கண்டு மக்கள்  இவரைப் பாராட்டி புகழ்ந்து தள்ளினர். முதலில் இவர் திருவானைக்காவில் இருக்கும் விநாயகரைப் புகழ்ந்து பாடினார். அது:

 “ஏரானைக் காவிலுறை யென்னறளித்த                                                                                 பேரானைக் கன்றுதனைப் போற்றினால் – வாராத                                                                புத்தி வரும் பத்தி வரும் புத்திரவுற் பத்திவரும்                                                             சத்திவரும் சித்திவரும் தான்.”

திருவானைக்காவில் கோயில் கொண்டிருக்கும் பெண்யானை வடிவெடுத்த அன்னை அகிலாண்டேஸ்வரி அன்று சிவபெருமான் கருணையினால் பெற்றெடுத்த ஆற்றல் மிக்க யானை முகனாம் விநாயகனைத் தொழுது வழிபட்டால், உலகில் வேறெதனாலும் கிடைத்திடாத அறிவுத் திறன் வரும், இறைவனைத் தொழுது நல்ல வண்ணம் வாழும் பக்தி வரும்; புத்திர பெளத்திர செளபாக்கியங்கள் கிட்டும்; சக்தி தரும் ஆற்றல் பலவும் கிட்டும்; அட்டமாசித்திகள் அனைத்துமே வந்து சேரும்.

            கவி காளமேகம் செல்லுமிடங்களில் எல்லாம் இவன் ஒரு ஆசுகவி என்பதறிந்து மக்கள் இவரிடம் பற்பலத் தலைப்புகளைக் கொடுத்து, அதற்கேற்ப கவிபாடச் சொல்லிக் கேட்பர்.  ஒரு ஊரில் ஒரு புலவர் இவரிடம் சிவபெருமானைப் பல விதங்களில் படுகிறீர்கள், அவனை நீராக, நெருப்பாக, கூறாக (பிரிவுகளாக) கொளுத்துவதாக (எரிப்பதாக), நட்டமாக, நஞ்சாக ஆவார் என்பதாக ஒரு பாட்டு பாடுவாயாக என்றார். உடனே காளமேகம் பாடிய பாட்டு:

 “நீறாவாய், நெற்றி நெருப்பாவாய், அங்கமிரு                                                             கூறாவாய் மேனி கொளுத்துவாய் – மாறாத                                                           நட்டமாவாய் சோறு நஞ்சாவாய் நாயேனை                                                            இட்டமாய்க் காப்பா யினி.”

இதன் பொருள்: நெற்றியிலே பூசும்போது நீ திருநீறாக ஆவாய்;  உன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் மன்மதனை எரித்தது போல் நெருப்பாவாய்; உன் மேனி இரு கூறாக ஆகி ஒருபுறம் சிவன், மறுபுறம் சக்தி என்று மாதொரு பாகனாவாய்; கொளுத்தும் தீயாகவும் ஆவாய்; எப்போதும் நடனம் ஆடிக் கொண்டிருப்பாய்; நஞ்சை உண்டாலும் அதனை உன் உணவாகக் கொள்வாய் (பாற்கடலைக் கடைந்தபோது வந்த நஞ்சினை உண்டது); இனி நாயேனாகிய என்னை விருப்புடனே காப்பாயாக.

            நதியொன்றின் கரையோடு கவிஞர் நடந்து போகும்போது ஆற்றில் முழுகி எழுந்த ஒரு பெண்மணி தன் குடத்தில் ஆற்று நீரை மொண்டு கொண்டு கரையேறுவதைப் பார்த்தார். அப்போது அங்கிருந்த ஒரு மனிதர் கவிஞரைப் பார்த்து “குடத்தில் கங்கை அடங்கும்” என்று ஈற்றடி வருமாறு ஒரு பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டார். அப்போது கவிஞர் பாடியது.

“விண்ணுக்கு அடங்காமல், வெற்புக்கு அடங்காமல்                                                  மண்ணுக்கு அடங்காமல் வந்தாலும் – பெண்ணை                                                   இடத்திலே வைத்த இறைவர் சடாம                                                                          குடத்திலே கங்கை அடங்கும்.”

           பெருக்கெடுத்தோடி வரும் கங்கை ஆறு ஒரு குடத்தினுள் அடங்குமா?  கவிஞர் எப்படிப் பாடப் போகிறார் என்ற ஆர்வம் கேட்டவர்களுக்கு. கவிஞரோ உடனே கருத்த மேகம் மழை பொழிவது போலப் பாடத் தொடங்கினார்.  இப்பாடலின் பொருள் கங்கை நதி தேவலோகத்து நதி; அதனைத் தன் முன்னோர்கள் மோட்ச கதி அடையவேண்டுமென்பதற்காக பகீரதன் தவம் செய்து பூமிக்குக் கொண்டு வந்தான். அப்போது கங்கை சொன்னாள், நான் பூமியில் வந்து இறங்கும்போது பூமி தாங்காது, அப்போது என்னைத் தாங்கிக் கொள்ளும் சக்தி யாருக்கேனும் இருந்தால் வந்து தாங்கிக் கொள்ளச் சொல் என்றது. உடனே பகீரதன் சிவபெருமானை நோக்கி தவம் செய்தான். அவரும் என்ன வேண்டுமென்று கேட்டபோது, பூமிக்கு இறங்கி வரும் கங்கைத் தன்னைத் தாங்கிக் கொள்ள பூமியில் யாருக்கும் முடியாது என்கிறாள். என் முன்னோர்கள் மோட்சமடைய கங்கை நீர் வேண்டும், எனவே கங்கை பூமிக்கு வரும்போது தாங்கள்தான் தாங்கிக் கொண்டு இறக்கி வைக்க வேண்டுமென்றான். அவரும் ஒப்புக்கொண்டு தன் தலை ஜடாமுடியை விரித்து வைத்து கங்கையைத் தன் முடியில் இறங்கச் சொன்னார். அகந்தையினால் தன்னை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது என்று இறங்கிய கங்கையை சிவபெருமான் தன் ஜடாமுடியில் இறங்கிய அடுத்த கணம் முடியைக் கொண்டு மூடித் தன் ஜடாமுடிக்குள் அடைத்துவிட்டார் என்கிறது புராணம்.

            அந்த நிகழ்வை நினைவுகொண்டு காளமேகம் பாடிய பாடல் இது. விண்ணுக்கும் என்றால் வானத்துக்கும் அடங்காமல், இமய மலைக்கும் அடங்காமல் (வெற்பு என்றால் மலை), இந்த பூமியால் தன்னைத் தாங்கிக் கொள்ளமுடியாது என கர்வம் கொண்டு இந்த மண்ணுக்கும் அடங்காமலும் வந்து வீழ்கின்ற இந்த கங்கையை, தன் ஒரு பாகத்தில் பெண்ணைக் கொண்ட ஈசன் தன் ஜடா (ம)குடத்திலே அடக்கினார் என்று முடிக்கிறார் பாடலை. நல்ல அற்புதமான கற்பனை, விண்ணுக்கு அடங்காத, வெற்புக்கு அடங்காத, மண்ணுக்கு அடங்காத கங்கை நதியை அர்த்தநாரீஸ்வரரான ஈசன் தன் ஜடா மகுடத்தில் அடக்கினார் என்பது கவிஞர் கூறும் கருத்து.
           
           


           






1 comment:

Yarlpavanan said...

சிறப்பு
பாராட்டுகள்