பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, October 11, 2019

தஞ்சையை ஆண்ட பிரதாபசிம்ம ராஜா



                                                                                                 பிரதாபசிம்மன்

                தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்ட கடைச்சோழர் வம்சமான விஜயாலயன் பரம்பரை 1279ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது. பின்னர் பாண்டியர்கள் வசம் சில காலமும், அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட சிற்றரசர்களால் சுமார் 148 ஆண்டுகள் ஆளப்பட்டது. மதுரை நாயக்க மன்னர்களான சொக்கநாத நாயக்கர், அவர் தம்பி அழகிரி நாயக்கர் ஆகியோருடன் தஞ்சாவூரின் நாயக்க மன்னரான விஜயராகவ நாயக்கருக்கு மோதல் ஏற்பட்டது. விஜயராகவரின் பெண்ணை மதுரை சொக்கநாதர் தன் தம்பிக்காகப் பெண் கேட்டபோது, விஜயராகவர் பெண் தர மறுத்து விட்டார். காரணம் தன் அத்தையான, அதாவது ரகுநாத நாயக்கரின் சகோதரி ஒருவரை மதுரை திருமலை நாயக்கருக்குத் திருமணம் செய்து கொடுத்து, அந்தப் பெண் மதுரையில் அகால மரணம் அடைந்து விட்டதால், தன் பெண்ணையும் மதுரை நாயக்கரின் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டார். இதனால் இவ்விரு நாயக்க மன்னர்களுக்கிடையே போர் நிகழ்ந்து, அதில் தஞ்சைக் கோட்டை வாசலில் ராஜகோபால சாமி கோயில் முன்புறம் தஞ்சை விஜயராகவர் கொல்லப் பட்டார். அவர் முன்கூட்டியே செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி அரண்மனையின் அந்தப் புறம், வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. அதில் அரண்மனை பெண்டிர் அனைவருமே இறந்து போய் விட்டனர்.

               தஞ்சை விஜயராகவ நாயக்கருக்கு ஒரு மகன், பெயர் மன்னாரு தாசன். இந்த மன்னாரு தாசனுக்கு ஒரு ஆண் குழந்தை இருந்தது, அதன் பெயர் செங்கமலதாஸ். போரில் விஜயராகவரின் மகன் மன்னாரு தாசனும் மரணம் அடைந்து விட்டதால், மதுரை நாயக்கர்கள் தஞ்சையை அபகரித்துக் கொண்டார்கள். அரண்மனை அந்தப்புறம் வெடி வைத்துத் தகர்க்கப் பட்டபோது இந்த குழந்தை செங்கமலதாஸ் ஒரு தாதியால் காப்பாற்றப்பட்டு நாகப்பட்டணத்தில் ஒருவரிடம் வளர்ந்து வந்தான்.

               அந்த செங்கமல தாஸ் எனும் சிறுவன் வளர்ந்து பெரியவனான சமயம், முன்பு தஞ்சை அமைச்சராக இருந்த ராயசம் வெங்கண்ணா என்பவர் இந்த சிறுவன் தான் தஞ்சைக்கு அரசனாக வரவேண்டியவன், ஆனால் மதுரை நாயக்க மன்னர்கள் தஞ்சையை ஆண்டு கொண்டிருக்கிறார்கள், ஆகவே ராஜ்யத்தை அவர்களிடமிருந்து மீட்டு இந்த செங்கமல தாசிடம் தர வேண்டுமென்று ராயசம் வெங்கண்ணா பிஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷாவிடம் சென்று முறையிட, அவர் தன் தளபதியான ஷாஜியின் மகன் பெங்களூரில் இருந்த ஏகோஜி எனும் வெங்கோஜியை அழைத்து, அவரைத் தஞ்சைக்குச் சென்று ராஜ்யத்தை மீட்டு இந்த செங்கமலதாசை அரசனாக்கும்படி அனுப்பி வைத்தார்.
அலிஅடில்ஷாவின் ஆணைப்படி ஏகோஜி தஞ்சைக்கு வந்து அரசைக் கைப்பற்றி செங்கமலதாசை அரியணையில் அமர்த்திய பின் ஊர் திரும்புவதற்காக, வடக்கில் காவிரி, கொள்ளிடம் இவற்றைத் தாண்டி திருமழபாடி எனுமிடம் சென்ற பொது, அவரது மனைவியரில் ஒருவருக்கு குழந்தை பிறந்ததால் அங்கேயே சில காலம் தங்கி இருக்க நேர்ந்தது. அந்த இடைப்பட்ட காலத்தில் அரச பதவியை ஏற்றுக் கொண்ட செங்கமல தாஸ் யாருடைய முயற்சியினால் அரசனாக ஆனானோ, அந்த ராயசம் வெங்கண்ணாவுக்கு அமைச்சர் பதவி தரவில்லை. மேலும், அரண்மனைக்குள் நானா நீயா என்ற போட்டி வேறு. ஆகவே பெரியவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாகத் திருமழபாடியில் தங்கியிருந்த ஏகோஜியைச் சந்தித்து, அவரையே வந்து ஆட்சியை ஏற்றுக் கொள்ளும்படி அழைத்தனர். முன்பு தஞ்சையை மீட்டு செங்கமலதாசிடம் ஒப்படைத்த உடனேயே தன்னுடைய படைத் தளபதிகள் இருவரை கோட்டைக்கு வெளியே தங்கியிருந்து தங்களுக்குச் சேரவேண்டிய பேஷ்கஷ் தொகையை வாங்கி வருவதற்காக நிறுத்தியிருந்தார்.

               தஞ்சை திரும்பிய ஏகோஜிக்கு தஞ்சையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மதுரை நாயக்கர்கள் ஊர் திரும்பிவிட்டதாலும், தஞ்சை நாயக்கர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாமையாலும், அலிஅடில்ஷாவின் அனுமதியோடு ஏகோஜி, 1596 இல் தஞ்சையின் அரசராக பதவி யேற்று ஆளத் தொடங்கினார். அது முதல் தஞ்சை சுமார் 190 வருஷங்கள் மராத்திய வம்சத்து அரசர்களின் ஆட்சியில் இருந்து வந்தது.
தஞ்சையில் அரசராக இருந்த ஏகோஜி என்கிற வெங்கோஜி, சத்ரபதி சிவாஜியின் சகோதரர். ஷாஜியின் இன்னொரு புதல்வர். இவர் தனது முந்தைய நாயக்க மன்னர்கள் காலத்தில் செய்து கொண்டிருந்த நல்ல பணிகளையெல்லாம் தொடர்ந்து செய்து மக்களுக்கு நன்மைகளைச் செய்யத் தொடங்கினார். ஆகையால் ஏகோஜிக்கு தஞ்சையில் நல்ல வரவேற்பும், மதிப்பும் இருந்தது. மராத்திய போன்ஸ்லே வம்சத்தாரில் இந்த ஏகோஜியை நான்காம் ஏகோஜி என்கிறார்கள். இவருக்குத் திருமழபாடியில் பிறந்த மகன் பெயர் சரபோஜி. இவரை போன்ஸ்லே வம்ச வரிசைப்படி மூன்றாவது சரபோஜி என்கின்றனர்.

               அந்த சமயம் மதுரை நாயக்க மன்னர்களுக்குக் கட்டுப்பட்ட நாயக்க மன்னர் திருச்சியில் இருந்தார். அவர் தஞ்சையின் மீது படையெடுத்து வந்து போர் புரிந்து தோல்வியடைந்தார். அவர் தஞ்சை மராத்தியர்களுக்கு திருக்காட்டுப்பள்ளியை அடுத்த செந்தலைப் பகுதிகளை ஏகோஜிக்குக் கொடுத்து சமாதானம் செய்து கொண்டார். 1598இல் ஏகோஜி ராஜாவுக்கு ஒரு குழந்தை பிறந்து மூன்றாவது மகனான அவனுக்கு துக்கோஜி என்று பெயரிட்டார். ஏகோஜியின் இரண்டாம் மனைவி அண்ணுபாயி என்பவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவருக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள் இருந்தனர். ஏகோஜி 1604இல் காலமானார். 

               அவரை அடுத்து தஞ்சைக்கு அவருடைய மூத்த மகன் மூன்றாம் ஷாஜி பட்டமேற்றுக் கொண்டார். இவருடைய தாயின் பெயர் தீபாபாயி. ஏகோஜியின் மனைவியருள் ஒருவர். அவருடைய வழிகாட்டலுக்கேற்ப 3ஆம் ஷாஜி அரசாட்சி செய்து வந்தார். இவர் காலத்தில் இரு வேறு படையெடுப்புகள் தஞ்சையின் மீது நடைபெற்றன. இவருடைய இரண்டாவது தம்பி துக்கோஜி என்பவருக்கு 1617இல் ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு ஏகோஜி என்று பெயரிட்டனர். இவர் 5ஆம் ஏகோஜி ஆவார். இவரை பாவா சாஹிப் என்றும் அழைப்பார்கள். 3ஆம் ஷாஜி 1633இல் காலமானார். இவர் இறந்த பிறகு இவருடைய முதல் தம்பியான 3ஆம் சரபோஜி என்பவர் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு சுலட்சணா பாயி, அபரூபா பாயி, ராஜஸ பாயி என்று மூன்று மனைவியர். தங்களுக்கு இந்த தஞ்சை ஆட்சியைக் கொடுத்த பிஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷாவின் கீழ் பணிபுரிந்த சில பிரபுக்களுக்கு ஆதரவு அளித்து நன்றிக் கடன் செய்து வந்தார்.
இவருடைய தம்பி துக்கோஜி, இவருக்கு அருணாபாயி, ராஜகுமாராபாயி, மோகனாபாயி, மஹினாபாயி, லட்சும்பாயி என்று ஐந்து மனைவியர். இவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் உடனிருந்த பெண்கள் அறுவர், இதில் ஐந்து பேர் நாயக்கர் வம்சத்தார், ஒருவர் மட்டும் மராத்தியர். அவருடைய பெயர் அன்னபூர்ணாபாயி. இந்த அன்னபூர்ணா பாயிக்கு இரு குழந்தைகள், முதலில் ஒரு ஆண் பெயர் பிரதாபசிம்மன், அடுத்து ஒரு பெண், அவள் பெயர் சாமாபாயி.

              துக்கோஜியின் மகன் 5ஆம் ஏகோஜி. இவரை பாவாசாஹிப் என்று அழைப்பார்கள் என்பதைப் பார்த்தோம் அல்லவா? இந்த பாவாசாஹிபு எனும் 5ஆம் ஏகோஜிக்கு சுஜான்பாயி, ஜெயந்திபாயி, சக்வார்பாயி, சுகுமார்பாயி, கிரிஜாபாயி, பார்வதிபாயி என்று ஆறு மனைவியர். இவர்கள் எல்லாம் முறைப்படித் திருமணம் செய்துகொண்ட மனைவியர் தவிர திருமணமாகாமல் சிலரையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் வரலாற்றின் மூலம் தெரியவருகிறது.

             துக்கோஜி 1657இல் காலமானார். அவருக்குப் பின் அவர் மகன் 5ஆம் ஏகோஜி என்கிற பாவாசாஹிப் ஆட்சிக்கு வந்தார். அவர் ஒரு சந்தேகப் பிராணி. எவரையும் நம்பமாட்டாராம். இவருடைய காலத்தில் ஆற்காடு நவாபு வம்சத்தைச் சேர்ந்த சந்தா சாஹேப் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்தார். உடல் நலமில்லாமல் இருந்த 5ஆம் ஏகோஜி துணிந்து போர்க்களத்தில் இறங்கி கடுமையாகப் போரிட்டார். சந்தா சாஹேபுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு, இனியும் போரிட்டுப் பயனில்லை என்பதை உணர்ந்து தஞ்சை மன்னரிடம் இருந்து சிறிது பணம் பெற்றுக் கொண்டு திருச்சிக்குப் போய்விட்டார். இந்த பாவாசாஹேப் எனும் 5ஆம் ஏகோஜி 1658இல், அதாவது துக்கோஜி இறந்து மறு ஆண்டில் காலமானார்.

              அப்போது அடுத்து யார் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது எனும் கேள்வி எழுந்தது. 5ஆம் ஏகோஜி என்கிற பாவாசாஹேபின் மனைவி சுஜான் பாயி என்பவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவர் சுமார் இரண்டு ஆண்டுகள் தான் ஆட்சி புரிய முடிந்தது. காரணம் பதவி ஆசை காரணமாக சிலர் சென்னைப்பட்டணத்தில் இருந்த கம்பெனியாரிடம் சென்று புகார் அளித்து தஞ்சை அரசுக்கு சுபான்யா என்கிற  காட்டு ராஜா என்பவன், இவன் அரசுரிமை பெற்றவன் என்று சொல்லி, சுஜான் பாயை நீக்கிவிட்டு இவனை அரசராக்கினார்கள். ஆனால் அவர்கள் சூழ்ச்சி நெடுங்காலம் நீடிக்கவில்லை. 1661இல் இவர்கள் சூழ்ச்சி வெளிப்பட்டு சுபான்யா என்கிற காட்டுராஜாவை விரட்டிவிட்டு பாவா சாஹேபின் மனைவி அன்னபூர்ணாபாயியின் புதல்வனான பிரதாபசிம்மன் எனும் இளைஞனை அரசராக ஆக்கினார்கள்.

              இந்த பிரதாபசிம்ம ராஜா தன் காலத்தில் மிகவும் சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கிறார். இவர் மனைவி திரெளபதாபாயி என்பவருக்கு துளஜா என்பவர் பிறந்தார். பின்னாளில் இந்த துளஜா ராஜா மிகச் சிறப்பாக நாட்டை ஆண்ட வரலாறு இருக்கிறது. இவர்தான்  தனக்குப் பிறந்த குழந்தைகள் இறந்து போனதால் சதாராவுக்குச் சென்று சத்ரபதி வம்சத்தில் வந்த சரபோஜியைத் தத்து எடுத்துக் கொண்டு வந்தவர். அந்த சரபோஜி மன்னரின் ஆட்சியின் சிறப்புகள், அவர் வளர்த்த கலைகள், அவர் உருவாக்கிய சரஸ்வதி மகால் நூலகம் இவைகள் இன்றளவும் பேசப்பட்டு வருவதை அறிவோம்.

              பிரதாபசிம்ம ராஜா காலத்தில் நடந்த ஒரு ருசிகரமான சம்பவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். இவருடைய ஆட்சியில் சையிது என்பவர் கில்லேதார் எனும் கோட்டைக் காவல் தலைவராக இருந்தார். பிரதாபசிம்ம ராஜா முறையாகத் திருமணம் செய்துகொள்ளாத தாய்க்குப் பிறந்தவர் என்பதால் இவருக்கு ஒரு அலட்சியம். அவர் ஆட்சியில் நடந்த பல்வேறு தர்ம காரியங்களையெல்லாம் இவர் சீரழித்து வந்தார். இவர் தீய எண்ணம் கொன்டவராக இருந்தார். இவரால் தான் சுபான்யா எனும் காட்டுராஜா குறுக்கு வழியில் பதவிக்கு வந்து பிறகு துரத்தப்பட்டார் என்பதால் இவருக்கு பிரதாப சிம்மர் மீது காட்டம் இருந்தது. மன்னருக்கு சாதகமாக இருந்த பல அதிகாரிகளை, கில்லேதார்களை இவர் மிகவும் துன்புறுத்தி வந்தார். பிரதாப சிம்மர் அரசுரிமை பெற தானே காரணம் என்றும் சொல்லி வந்தார். இவருக்கு ஒரு ஆசை. தன் மகளை சந்தா சாஹேபின் மகனுக்குத் திருமணம் செய்து வைத்து, அந்த மருமகனைத் தஞ்சாவூருக்கு அரசனாக ஆக்க வேண்டுமென்று விரும்பினார்.

               இந்த சையீதுவுக்கு ஒரு தம்பி உண்டு, பெயர் சையது காசிம். இவர் மன்னர் பிரதாபசிம்மரின் பாதுகாப்புப் படையில் இருந்தார். இவருக்குத் தன் அண்ணன் செய்யும் துரோகக் காரியங்களில் சம்மதமில்லை. ஆகையால் தன் அண்ணன்  செய்ய நினைத்திருக்கும் சதிச் செயல்களை மன்னரிடம் சென்று சொல்லிவிட்டார். இந்த சதி பற்றி தனக்குத் தெரியும் என்பதாக மன்னர் பிரதாபசிம்மர் காட்டிக் கொள்ளவில்லை. சையீது தனது மகளுக்குத் திருமணம் செய்யப் போவதாகவும், மணமகன் சந்தா சாஹேபின் மகன் என்றும் சொன்னபொது, திருமணத்தைத் திருவிடைமருதூரில் வைத்துக் கொள்ளச் சொல்லி அரசர் பணித்தார். அதன்படி அந்தத் திருமணம் திருவிடைமருதூரில் நடைபெற்றது.

               தஞ்சாவூர் கோட்டை வாயில் தினமும் சூரியோதயத்தின் போதுதான் திறக்கப்படும். மாலையில் வெளியிலிருந்து வேலைக்கு வருவோர் கோட்டையை விட்டு வெளியேறிய பின் சூரிய அஸ்த்தமனத்தின் பொது மூடப்பட்டு விடும். சையீதின் திட்டம், திருமணம் நடந்து முடிந்த கையோடு படையோடு பொழுது புலரும் போது உள்ளே நுழைந்து கோட்டையைப் பிடிப்பது என்று திட்டமிட்டிருந்தார். அதனை உணர்ந்த அரசர் கோட்டை வாசலில் தகுந்த வீரர்களை நிறுத்தி, படையோடு வரும் சையீதை மட்டும் உள்ளே விட்டு, படைகளை நிறுத்திவிடும்படி கட்டளையிட்டார். அதன்படி உள்ளே நுழைந்த சையீது தனிமையாக நின்றார். அவரை அரசர் அழைப்பதாகச் சொல்லி வீரர்கள், சபா மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே பெரிய மண்டபத்தின் நாலா புறமும் திரைச்சீலைகள் தொங்க பெரிய பெரிய தூண்களுக்குப் பின்னால் வீரர்கள் ஒளிந்திருந்தனர். ராஜா பிரதாபசிம்மர் மட்டும் ஒரேயொரு ஆனத்தில் அமர்ந்திருந்தார். சையீது சபா மண்டமத்தினுள் நுழைந்த உடன் ராஜா, சற்று இரு வந்துவிடுகிறேனென்று சொல்லி உள்ளே சென்றவுடன், வீரர்கள் சையீதுவை சூழ்ந்து கொண்டு அவனைக் கொன்றுவிட்டனர். அவர் இருந்த கில்லேதார் பதவிக்கு மல்லார்ஜி காடேராவ் என்பார் நியமிக்கப் பட்டார்.

              இது பாவ காரியம் என்பதை உணர்ந்து பிரதாப சிம்மர் ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வந்தார். வரும் வழியில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் இவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து உபசரித்து அனுப்பினார். திருச்சியைக் கைப்பற்றியிருந்த சந்தா சாஹேப் தஞ்சையை முற்றுகையிட்டுக் கோட்டையைப் பிடித்து தன் உதவியாளர் சப்தர் அலி என்பாரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு திருச்சிக்குச் சென்றார். இந்த சப்தர் அலி திருவையாற்றுக்கு மேற்கே ஒரு அணையைக் கட்டி இரண்டாண்டு காலம் இருந்ததாகத் தெரிகிறது.

              பிரதாபசிம்ம ராஜா சதாராவில் இருந்த ஷாஹு மன்னரின் உதவியைக் கேட்டுப் பெற்றார். அவர் ரகோஜி, பதேசிங் எனும் இரு வீரர்களின் தலைமையில் அறுபதினாயிரம் குதிரைகள் கொண்ட பெரும் படையை உதவிக்கு அனுப்பினார். இந்த செய்தியறிந்த சப்தர் அலி தஞ்சையை விட்டுவிட்டு திருச்சிக்கு ஓடிவிட்டார். சதாரா படைகள் தொடர்ந்து திருச்சிக்குச் சென்று அதையும் பிடித்துக் கொண்டு அதன் பொறுப்பை முரார்ஜிராவ் கோர்படே என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு, சந்தா சாஹேபைச் சிறைப் பிடித்துக் கொண்டு சதாராவுக்குச் சென்றார்கள்.

             திருச்சியைப் பிடித்துக் கொண்ட முரார்ஜிராவ் கோர்படேவுக்கு ஒரு ஆசை. திருச்சியோடு தஞ்சையையும் தானே பிடித்துக் கொண்டால் என்ன என்கிற பேராசை. அதற்காக தன் அமைச்சர் இன்னிஸ்கான் என்பவர் தலைமையில் ஒரு படையைத் தஞ்சாவூருக்கு அனுப்பினான். பிரதாபசிம்மர் தன் தளபதி மானோஜி ராவ் தலைமையில் ஒரு படையை அனுப்பி இன்னிஸ்கானைத் தோல்வியுறச் செய்து ஓடவைத்து விட்டார். இந்த நிலையற்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு  சந்தா சாஹேபின் நண்பனான முகமது ஆரப் என்பவன் பிரெஞ்சுக் காரர்களின் உதவியோடு, இரவு நேரங்களில் தஞ்சையைக் கொள்ளையடிக்கத் தொடங்கினான். பிரதாப சிம்மர் உடனே மல்லார்ஜி காடேராவ், மானோஜி ராவ் ஆகியோர் தலைமையில் ஒரு படையை அவர்களைப் பிடிக்க அனுப்பினார். அந்த மராத்தியப் படை கொள்ளையடித்தவர்களைக் கொன்று, அவர்களிடமிருந்து பல விலையுயர்ந்த பொருட்களை மீட்டு வந்தனர்.

             இங்கு தெற்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கேள்விப்பட்ட ஐதராபாத் நிஜாம் உல்முல் ஹக் என்பார், பெரிய படையொன்றை வழிநடத்தி திருச்சிக்கு வந்து மொரார்ஜி கோர்படேயைத் திருச்சியிலிருந்து துரத்திவிட்டு, தன்னுடன் வந்த அன்வரூதின் கான் என்பவரிடம் திருச்சியை ஒப்படைத்தார். இந்த அன்வரூதின் கானின் மகன் மகபூஸ் கான் தஞ்சை மன்னருக்குத் ஆளனுப்பித் தங்களுக்கு பேஷ்கஷ் (கப்பம் கட்டுதல்) செலுத்தப் பணித்தார். அவர் கேட்ட தொகை மிக அதிகம் என்பதால், அதில் சிறிது குறைத்துக் கொள்ளுங்கள் என்று பிரதாபசிம்மர் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாமல் பகபூஸ்கான் தஞ்சையின் மீது படையெடுத்து வந்து போரிட்டார். ஆனால் தஞ்சை மராத்திய படையிடம் தோற்றுப் போய் தன் தந்தை அன்வர்தீன் கானிடம் விவரத்தைச் சொன்னார். தன் மகன் செயல் தவறு என்று தெரிந்தும், தன் படை தோல்வியுற்றதை அந்த அன்வர்தீன் கானால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆகையால் அவரே ஒரு படையை வழிநடத்தி வந்து தஞ்சையைத் தாக்கினார். பசுபதிகோயிலில் நடந்த அந்தப் போரில் அன்வர்தீன்கான் படை தோற்றது, அவரும் தோல்வியோடு ஆற்காட்டுக்குத் திரும்பினார். அந்தப் போரில் அவர் உட்கார்ந்திருந்த யானை உடல் முழுவதும் ஈட்டியால் துளைக்கப்பட்டு நான்கு புறமும் தாங்க உயிரிழந்து நின்றதாக செய்திகள் உண்டு.

             சதாராவுக்குக் கைது செய்து கொண்டு செல்லப்பட்ட சந்தா சாஹேப் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டார். அதில் ஒன்று அவர் இனி தஞ்சாவூர் பக்கம் போகக் கூடாது என்பது. இப்போது ஆந்திராவில் இருக்கும் அதோனி எனும் இடத்திலிருந்து ராசத் மொகிதீன்கான் என்பவருடன் தெற்கே வந்த சந்தா சாஹேப் புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக் காரர்களின் உதவியைப் பெற்று, ஆற்காட்டுக்குச் சென்று அன்வர்தீன் கானைக் கொன்றார்.

             அப்போது அன்வர்தீன் கானின் மகனும் ஆற்காட்டு நவாபுமான முகமது அலி நாகப்பட்டணத்துக்கு வந்து, அங்கிருந்து பிரதாபசிம்ம மகாராஜாவுக்கு ஒரு தகவல் சொல்லி அனுப்பினார். தன்னுடைய ராஜ்யத்தை சந்தா சாகேபு முறைகேடாகத் தன் தந்தையைக் கொன்று பிடித்துக் கொண்ட செய்தியைச் சொல்லி உதவி கேட்டார்.  மன்னரின் ஆலோசனைப்படி முகமது அலி திருச்சிக்குச் சென்று தங்கினார்.
இந்த காலகட்டத்தில் பிரதாப சிம்மரின் மகன் துளஜாவுக்கு ராஜசா பாயி என்பவரைத் திருமணம் செய்து வைத்தார். பிரதாப சிம்மரின் முதல் மனைவியின் பெயர் அஹல்யா பாயி. இவர் இறந்து விட்டார். இன்னொரு மனைவியான எஸ்வந்த பாயிக்கு இரண்டு பெண்கள். இன்னொரு மனைவிக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் பெயர் ராமசாமி, இன்னொருவன் கிருஷ்ணசாமி. இந்த ராமசாமி பின்னாளில் அமர்சிங் எனும் பெயரால் தஞ்சைக்கு அரசரானார். கிருஷ்ணசாமி இளம் வயதில் காலமானார்.

             ராசத் மொகிதீன்கான் சந்தா சாஹேபுடன் சேர்ந்து முகமது அலி தங்கியிருக்கும் திருச்சியை நோக்கிப் படையெடுத்தார். போகும் வழியில் தஞ்சை மன்னரிடம் சிறிது பணம் கேட்டார். அரசர் அவர்களுக்குப் பணவுதவி செய்ய மறுத்து விட்டார். உடனே அவ்விருவரும் தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டனர். கிட்டத்தட்ட 75 நாட்கள் தொடர்ந்து போர் நடைபெற்றது. இதற்குள் ஐதராபாத்திலிருந்து நாஜர் ஜங் பெரும் படையுடன் வருவதறிந்து சந்தா சாஹேபும், ராசத் மொகிதீன் கானும் முற்றுகையை விலக்கிக் கொண்டு புதுச்சேரிக்குச் சென்று விட்டனர். பிறகு புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக் காரர்களிடம் உதவி கேட்டுப் போரிட்ட போது நாஜர் ஜங் போரில் கொல்லப்பட்டார். சந்தா சாஹேப் திருச்சியை நோக்கி மீண்டும் படையெடுத்து வந்தார். அப்போது மதுரையிலிருந்து அல்லும் கான் என்பவர் சந்தா சாஹேபுக்கு உதவியாக வந்தார்.

              திருச்சியில் இருந்த ஆற்காட்டு அரசுரிமை பெற்ற முகமது அலி தஞ்சை பிரதாப சிம்மரிடம் உதவி கேட்டனுப்பினார். தஞ்சை மன்னர் ஒரு பெரும் படையை மானோஜி ராவ் என்பவர் தலைமையில் திருச்சியை நோக்கி அனுப்பினார். இவர்களுக்குப் பக்க பலமாக புதுக்கோட்டையிலிருந்து விஜயரகுநாத தொண்டைமான் படைகளும், ராமநாதபுரம் சேதுபதியின் படைகளும், மைசூர் ஸ்ரீரங்கப்பட்டினம் அரசர் நந்தி ராஜாவும், மொரார்ஜி கோர்படேயும் முகமது அலிக்கு உதவிக்கு வந்தனர். அல்லும் கான் தஞ்சை மானோஜி ராவுடன் பொரிட்டார். அப்போது ஆங்கில மேஜர் ஒருவர் பீரங்கியைச் சுட்டதில் அல்லும் கான் குண்டடிபட்டு இறந்தார். சந்தா சாஹேபுக்கும் முகமது அலிக்கும் சண்டை வெகு நாட்கள் நடந்தது. சந்தா சாஹேபுக்கு உதவிக்கு வந்த பிரெஞ்சுப் படை பின்வாங்கி விட்டது. சந்தா சாஹேபுக்கு உணவுப் பொருட்கள் வரமுடியாதபடி வழிகள் அடைக்கப்பட்டன. பொறியில் அகப்பட்ட எலி போல சந்தா சாஹேப் திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் தீவில் அகப்பட்டுக் கொண்டார். நாலா புறமும் எதிர்களின் படைகள். தப்பிப் பிழைக்க வழியில்லை. அத்தனை எதிர்களில் தஞ்சை தளபதி மானோஜி ராவிடம் சென்றால் தான் தான் உயிர் பிழைக்க முடியும் என்று புரிந்து கொண்டு இரவோடு இரவாக ஒரு குதிரையில் ஏறிக் கொண்டு ஒரு சிப்பாய் தீவர்த்தி வெளிச்சம் காட்ட கல்லணையை அடுத்த கோவிலடி எனுமிடத்தில் முகாமிட்டிருந்த மானோஜி ராவின் கூடாரத்திற்கு வந்து சரண் அடைந்தார். முன்பு சந்தா சாஹேப் தஞ்சைக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் கருதி இவனுக்கு அடைக்கலம் தருவது முடியாது என்று மானோஜி ராவ் மறுத்தும், சந்தா சாஹேப் உங்களை விட்டால் எனக்கு வேறு எவரும் உதவ மாட்டார்கள் என்று சொன்னதால் மன்னர் பிரதாப சிம்மருக்குச் செய்தி சொல்லி அனுப்பியதன் பேரில், மன்னர் நம்மைச் சரண் என்று வந்தவர்களைக் காப்பாற்றுவது நமது கடமை என்று சொல்லி சந்த சாஹேபை தஞ்சைக்குக் கொண்டு வந்து இப்போது கீழராஜ வீதியில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியிருக்கும் வளாகத்தில் ஒரு இல்லத்தில் சிறை வைக்கப்பட்டார்.

               சந்தா சாஹேப் தஞ்சைக்குச் சென்று சரணடைந்து விட்ட செய்தி திருச்சியில் போரிட்டுக் கொண்டிருந்த முகமது அலி, மொரார்ஜி கோர்படே, நந்தி ராஜா, ஆங்கிலப் படைத் தளபதி வெலிங்டன் ஆகியோர் சந்தா சாஹேபை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கேட்டனர். ஆனால் சந்தா சாஹேப் பரிதாபமாகக் கெஞ்சி, தன்னைக் கொல்வதானால் தங்கள் கைகளால் கொன்று விடுங்கள், அவர்களிடம் என்னை அனுப்பி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டதற் கிணங்க, 3—6—1752 அன்று தஞ்சாவூரில் இப்போது கோர்ட் ரோடும், காந்திஜி சாலையும் சந்திக்கும் ஆற்றுப் பாலம் எனப்படும் இடத்தருகில் சந்தா சாஹேபின் தலை வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட தலை திருச்சியில் இருந்த முகமது அலிக்கு அனுப்பப்பட்டது. பிறகு அவர் உடலையும் முகமது அலி கேட்டதால் அதுவும் திருச்சிக்கு அனுப்பப் பட்டு அங்கே புதைக்கப்பட்டது.

               இதற்கிடையே மானோஜி ராவின் தஞ்சைப் படைகள் கோயிலடிப் பகுதிகளைக் கைப்பற்றியது. தனக்கு உதவி செய்த தஞ்சை அரசுக்கு முகமது அலி கோயிலடி கோட்டையையும், இளங்காடு பகுதிகளையும் பிரதாபசிம்ம ராஜாவுக்கு அன்பளிப்பாக அளித்தார். நந்தி ராஜாவும், மொரார்ஜி கொர்படேயும் திருச்சியை தாங்கள் எடுத்துக் கொள்ள விரும்பினர். முகமது அலி திருச்சியில் ஒரு பெரும் படையை நிறுத்தி விட்டு சென்னைக்குச் சென்றார். வழியில் பண்ருட்டி அருகில் திருவதிகை எனும் இடத்தில் முகமது அலியை மொரார்ஜி கொர்படேயின் தம்பி எதிர்த்துப் போரிட்டு இறந்து போனார். இந்த தகவலறிந்து மொரார்ஜி கோர்படே தன் ஊரான குத்திக்குச் சென்று விட்டார், நந்தி ராஜாவும் ஸ்ரீரங்கப் பட்டணம் போய்ச் சேர்ந்தார்.

               இந்த காலகட்டத்தில் பிரதாப சிம்ம ராஜா தன் மகன் துளஜாவுக்கு ராஜகுமாரா பாயி என்பவரைத் திருமணம் செய்வித்தார். தொடர்ந்து மோகனா பாயியையும் திருமணம் செய்து ஆக மொத்தம் துளஜாவுக்கு மூன்று மனைவியர்.

               அப்போது ஆங்கில கம்பெனியின் சென்னை கவர்னராக இருந்தவர் பிக்கெட் என்பார். இவர் காரைக்காலுக்குச் சென்று பிரெஞ்சுக்காரர்களோடு போரிட்டார். பின் புதுச்சேரிக்கும் சென்று பிரெஞ்சுக் காரர்களுடன் போர் நடந்தது. இந்த போர்களில் எல்லாம் ஆங்கில கவர்னர் பிக்கெட்டுக்கு பிரதாபசிம்ம ராஜா தன்னுடைய படை வீரர்களை அனுப்பி உதவி செய்தார். அப்படி அவர் ஆங்கில கவர்னருக்குச் செய்த உதவிக்கு பிரதியாக பின்னாளில் அந்த கவர்னர் பிரதாபசிம்மரின் மகனான துளஜாவுக்கு ஒரு பேருதவியைச் செய்தார். அது என்ன உதவி என்பதைப் பின்னர் பார்க்கலாம்.

               பிரதாபசிம்ம ராஜாவுக்கு வயது அதிகமானதாலோ என்னவோ அவர் மிகவும் கோபப்படலானார். அவர் இறப்பதற்கு மூன்று மாதம் முன்பிருந்து நள்ளிரவு நேரத்தில் கோட்டைக்கு வெளியிலிருந்து ஏதோ அழுகுரல் கேட்குமாம். வெளியிலுள்ளவர்களுக்குக் கோட்டைக்குள்ளிருந்து அதே அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்ததாம். இது எதனால் என்பதெல்லாம் விளங்கவில்லை. இந்த சுழ்நிலையில் பிரதாபசிம்ம ராஜா 1685இல் காலமானார். அவர் உடலுடன் அவர் மனைவியர் யமுனா பாயியும், சக்குவார்பாயியும் உடன்கட்டை ஏறி உயிரிழந்தனர்.

               பிரதாபசிம்ம ராஜா காலமானதும் அவரது மகன் துளஜா அரசனாக வந்தார். இவர் பதவிக்கு வந்ததை யொட்டி ஆற்காடு நவாப் முகமது அலி அவருக்கு ஒரு அபூர்வ பறவையைப் பரிசாக அளித்தார். அதன் பெயர் முதர்முருகு என்பதாம். அதன் கால்கள் ஒட்டகத்தின் கால்கள் போல் இருக்குமாம். அதன் உயரம் ஒன்றரை ஆள் உயரத்துக்கு இருக்குமாம். இந்த பறவையின் படம் ஒன்று மராத்தியர் வரலாற்றில் காணப்படுகிறது.

               துளஜா ராஜா ஆட்சிக்கு வந்ததும், முகம்மது யூசுப்கான் என்பவர் ஆண்டுகொண்டிருந்த மதுரை மீதும், மைசூர் ஹைதர் அலி மீதும் படையெடுத்தார். அருணகிரி அப்பா என்பவரை மதுரைக்கும், வெங்கடராவ் காடேராவ் என்பவரை மைசூருக்கும் தளபதிகளாக அனுப்பி வைத்தார். இதற்கு முன்பு ஹைதர் அலி தஞ்சைக்கு வந்திருந்த போது துளஜா அவருக்கு நான்கு யானைகளையும், ஒரு லட்சம் வராகன் பணமும் கொடுத்து அனுப்பினாராம். பிரதாபசிம்ம ராஜா காலத்திலேயே தஞ்சை மராத்திய மன்னர்கள் ஆற்காடு நவாபுக்குச் செலுத்த வேண்டிய கப்பப் பணத்தை நேரடியாகக் கொடுக்காமல் சென்னையில் இருந்த ஆங்கில கம்பெனியார் மூலம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். துளஜாவிடம் அமைச்சராக இருந்த உசேன்கான் சூர் என்பவர் ஆற்காட்டுக்குச் செலுத்த வேண்டிய கப்பப் பணத்தை முன்பு போல ஆங்கில கம்பெனி மூலம் அனுப்பாமல் நேரடியாகச் செலுத்தினார். இதனால் பின்னர் நடந்த விளைவுகள் துளஜா ராஜாவுக்கு எதிராகப் போயிற்று.

               ராமநாதபுரம் சேதுபதி அரசருடன் துளஜா ராஜாவுக்கு மனவேற்றுமை ஏற்பட்டு, ராமநாதபுரத்தின் மீது துளஜா படையெடுத்தார். அங்கு போய் சேதுபதி மன்னரிடம் தான் படை நடத்தி வந்த செலவுக்குப் பணம் கேட்டுப் பெற்று வந்தார்.

              ஆற்காட்டு நவாபுக்குச் செலுத்த வேண்டிய கப்பப் பணம் கட்டாமல் நின்று போயிற்று. அதனால் நவாப் முகமது அலிக்குத் தஞ்சாவூரைத் தனதாக்கிக் கொள்ள ஆசை வந்து விட்டது. முதலில் நின்று போன கப்பப் பணம் அனைத்தையும் உடனே செலுத்தும்படி தஞ்சைக்கு செய்தி அனுப்பினார். அப்படியும் துளஜா பணம் செலுத்தாமல் இருந்தார். அதனால் கோபமடைந்த சுல்தான் முகமது அலி தன் மூத்த மகன் உமதத்துல் உமரா என்பவர் தலைமையில் ஒரு பெரும் படையை தஞ்சாவூருக்கு அனுப்பினார். துளஜா போர் செய்யும் நிலையில் இல்லை. அதனால் முகமது அலியுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். அதன்படி உடனடியாக சுல்தானுக்கு ஐம்பது லட்சம் பணம் கொடுத்தார். கும்பகோணம், சீர்காழி போன்ற பகுதிகளை அவரிடம் அடமானம் வைத்தார், முன்பு தனக்குக் கிடைத்த இளங்காடு பகுதிகளையும் சுல்தானிடம் கொடுத்து விட்டார்.

              மறுபடி சுல்தான் முகமது அலி தன் இரண்டாவது மகன் மதார் முலுக் என்பவரை தஞ்சாவூருக்குப் படையுடன் அனுப்பினார். அவர் தஞ்சாவூருக்கு வந்து கோட்டையைத் தாக்கிப் பிடித்துக் கொண்டு நாரோ பண்டிதர் என்பவரை ஆட்சியை கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அங்கேயே தன் படைகளையும் வைத்திருந்தார். இவர் 17-9-1773 முதல் 11-4-1776 வரையிலான காலகட்டத்தில் துளஜாவைக் காவலில் வைத்துவிட்டு தானே ராஜ்யத்தை ஆண்டார்.

              இப்படி துளஜா துன்பங்களுக்கு ஆளாகி, ஆட்சியை இழந்து சிறைப்பட்டதற்கு அவர் செய்த சில பாவ காரியங்கள் தான் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். அப்படி அவர் என்னதான் பாவத்தைச் செய்துவிட்டார் என்பதைப் பார்க்கலாம்.

              துளஜா தனக்கு உதவியாக இருக்க மராத்திய பிரதேசத்திலிருந்து தனக்கு நம்பிக்கையான ஆள் தேவை என்று லிங்கோஜி என்பவரை தஞ்சைக்குக் கூட்டி வந்து அரண்மனையில் வைத்திருந்தார். துளஜாவின் குழந்தைகளுக்கு உடல்நலம் இல்லாத காரணத்தால் அரண்மனைக்குள் வைத்தியர்களும் ஜோசியர்களுமே இருப்பார்கள் என்று சொல்வார்கள். அப்படி அவர் கவனம் குழந்தைகள் பக்கம் திரும்பியிருந்ததைப் பயன்படுத்தி இந்த லிங்கோஜி, மகாராஜாவைப் பார்ப்பதற்காக வந்த ஜமேதார் பதவி வகித்து வந்த கோனேரி ராவ் என்பவரை தன் சகாக்களுடன் சேர்ந்து தாக்கி கீழே தள்ளிவிட்டார். பின்னர் மகாராஜா என்ன வொல்வாரோ என்ற பயத்தில் ராஜாவிடம் போய் கோனேரிராவ் தங்களிடம் தகாத முறையில் பேசி வம்பு செய்ததால் கைகலப்பு ஏற்பட்டு அவர் தாக்கப்பட்டார் என்று சொன்னதும், ஏற்கனவே கவலையில் மூழ்கி யிருந்த துளஜா ராஜா அவனைப் பிரியில் கட்டிக் கொண்டு போய் கோட்டைக்கு வெளியே எறியுங்கள் என்று சொல்லிவிட்டார். அதன்படியே குற்றுயிரும் குலை உயிருமாக கோனேரி ராவைத் தெருவோடு இழுத்துச் சென்றபோது அவர் இறந்து விட்டார். அவர் உடல் கோட்டைக்கு வெளியே வீசப்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் இந்த மகா பாபம் மகாராஜாவை சும்மா விடாது என்று சபித்தார்கள். அதன்படியே துளஜா இப்போது நாட்டையும் இழந்து சிறையில் இரண்டாண்டுகளுக்கு மேல் இருக்கும்படி ஆயிற்று என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.

              சிறைப்பட்ட துளஜா ராஜா தான் ஏற்கனவே காரைக்கால், புதுச்சேரி பொருக்காக பிக்கெட் எனும் ஆங்கில கவர்னருக்கு உதவி செய்ததால், இப்போது தனக்கு ஏற்பட்ட நிலையை அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். அவர் தன்னுடைய எஜமான்ர்களான இங்கிலாந்தில் இருந்த கம்பெனியாருக்கு எழுதி கேட்டார். அவர்கள் நவாப் முகமது அலியின் செயலை ஏற்கவில்லை. லார்ட் பிக்கெட்டுக்கு செய்தி யனுப்பி உடனடியாக நவாப் படைகளை தஞ்சாவூரை விட்டுப் போகச் சொல்லிவிட்டு துளஜாவுக்கு மீண்டும் ஆட்சியை மீட்டுக் கொடுக்கச் சொல்லி உத்தரவு அனுப்பினர். அதன்படி மீண்டும் துளஜா ராஜா தஞ்சைக்கு மன்னராக ஆனார். தான் அனுபவித்த துன்பங்களுக்கு தான் அழைத்து வந்த லிங்கோஜி காரணம் என்பதால் அவனை மராத்திய பிரதேசத்துக்கு அனுப்பிவிட்டு கோட்டையில் கில்லேதார், பவுஜ்தார் எனும் பதவிகளை ஆங்கிலேயர்களுக்கு அளித்தார். அது தவிர லட்சம் பொன்னும், நாகூர் எனும் ஊரையும் அதனை அடுத்துள்ள 277 கிராமங்களையும் ஆங்கிலேயர்களுக்கு அளித்தார். அதன் பின்னால் நவாபுக்கு கப்பம் கட்டுவது நிறுத்தப்பட்டது.
துளஜா ராஜாவுக்கு வாரிசு இல்லாமல் போனதால் மராத்திய அரசர் குடும்பத்தைச் சேர்ந்த சத்ரபதி சிவாஜியின் தம்பிக்கு ஏழாம் தலைமுறையில் வந்த 10 வயது சிறுவனாக இருந்த சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டு வந்து தஞ்சையில் அவரை அடுத்த அரசராக்கினார். சரபோஜியை தஞ்சையை மட்டும் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நாட்டின் இதர பகுதிகளை ஆங்கில கம்பெனியாரின் ரெசிடெண்ட் என்பார் கவனித்துக் கொண்டார். சரபோஜி சிறுவனாக இருந்தமையால் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரின் கவனிப்பில் கல்வி கற்று வந்த காலத்தில் துளஜாவின் தம்பி முறை ஆகும் அமர்சிங் என்பார் ஆட்சியில் சில காலம் இருந்தார். பிறகு அமர்சிங் திருவிடைமருதூருக்குச் சென்று தங்கிவிட்டார், சரபோஜியின் ஆட்சியும், அவருக்குப் பின் இரண்டாம் சிவாஜியும் ஆட்சி புரிந்தனர். இரண்டாம் சிவாஜி 1855இல் காலமான பிறகு தஞ்சை ஆட்சி முழுவதையும் ஆங்கிலேயர்களே எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

(சரபோஜியின் ஆட்சி பற்றியும் அவர் மகன் இரண்டாம் சிவாஜி ஆட்சி பற்றியும் மராத்திய ஆட்சி முடிவுக்கு வந்தது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.)





















































































































No comments: