பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, October 17, 2019

காந்தியும் கடவுளும்


                                                                  
            “காந்தியும் கடவுளும்” நல்லதொரு தலைப்பு. காந்தியை அவர் காலத்தில் நேரில் பார்த்தவர்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். அவரைப் பற்றி படித்தவர்கள் அதிகமானவர்கள் இருக்கலாம். என்னைப் பொறுத்த வரை 1946இல் நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, அவர் தமிழகத்துக்கு விஜயம் செய்தார்.  அவர் ரயில் வண்டியில் இருந்த வண்ணம் மாயவரம் ரயில் நிலையத்தில் அனைவரையும் வணங்கிய காட்சியை அவருக்கு எதிரில் நின்று பார்த்த பேறு எனக்குக் கிட்டியது.

            மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையே ஒரு பாடப் புத்தகம் போன்றதுதான் . அதில் அவர் எதிர்கொள்ளாத விஷயங்கள் எவையுமே இல்லை என்று சொல்லிவிடலாம். அவருடைய கட்டுரையொன்றில் அவர் கேட்கிறார், “வாழ்க்கையின் நோக்கம் என்ன?” என்று.  இதற்கு நாம் என்ன விடை சொல்வோம். பலரும் பல நோக்கங்களைச் சொல்லலாம். ஆனால் அவர் இந்தக் கேள்விக்கு  சொல்லுகின்ற விடை என்ன வென்பதை  நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் சொல்கிறார் “நாம் நம்மையே நன்கு புரிந்து கொள்வதற்கான காலமே நம் வாழ்க்கை” என்று.  இது என்ன பதில், ஒன்றும் புரியவில்லையே என்று நாம் நினைக்கலாம். ஆனால் நம் பிறப்பு நம் முயற்சியால் இல்லை, நாளை அல்லது அடுத்த விநாடி என்ன நடக்கும் என்பது நம் முயற்சியில் இல்லை. அப்படியானால் நம் வாழ்க்கை என்பது எந்த சக்தியாலோ இயக்கப்படுகிறது. அப்படி நாம் பிறந்தது முதல் இறக்கும் வரையிலான நிகழ்ச்சிகளை எந்த சக்தி அமைத்ததோ, குழந்தையாக இருந்த நம்மை இளமையாக, நடுத்தர வயதினராக, முதுமையாக இறுதியில் உயிர் நீங்கி இறப்பது வரை நம்மை இயக்கும் சக்தி எதுவோ, அதனைப் புரிந்து கொள்வதுதான் வாழ்க்கை.

 நாம் நம்மைப் பற்றி உணர்வதற்கு முன்பே நம்மைச் சுற்றிலும் வாழ்கின்ற அனைத்து உயிர்களைப் பற்றியும் சிந்திக்கலாமே.  அவைகள் படைக்கப்பட்ட விதம், யாரால் படைக்கப்பட்டது, ஏன் படைக்கப்பட்டது , எப்படி, எனும் வினாக்களை எழுப்பி அவற்றுக்குப் பதில் கண்டுபிடித்தால் நம் வாழ்க்கையின் நோக்கமும் நன்றாகப் புரிந்து விடும். இவை அனைத்துக்குமே விடை தெரிந்து விட்டால் நம்மை இயக்குகின்ற , நம்மால் உணர முடிகின்ற ஆனால் கண்களால் காணமுடியாத அந்த சக்தியைத் தான்  கடவுள் என்கிறார்கள் என்பது காந்தியின் கருத்து. ஆகையால் கடவுளைப் பற்றி நாம் உணர்ந்து கொள்ள நம் வாழ்க்கையே ஆயுதம். இதை அவர் வாக்கால் சொல்வதானால்:

The purpose of life is undoubtedly to know oneself. We cannot do it unless we learn to identify ourselves with all that lives. The sum total of that life is God.

காந்திஜியின் படைப்புகளின் தொகுப்பு Collected Works of Gandhi என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. பவர்ன்ஸ் ஜர்னல் ஒவ்வொரு தலைப்பிலுமாக 16 புத்தகங்கள் ஒரு தொகுதியாக வெளியிட்டிருக்கிறார்கள். ஆமதாபாத் நவஜீவன் பதிப்பகம் 5 தொகுதிகளைத் தமிழில் வெளியிட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு ல.சு.ரங்கராஜன். அந்த நூல்களில் அவருடைய பல்வேறு உரைகளில் கடவுள் பற்றி சொல்லும் கருத்துக்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் அவர் சொல்கின்ற கருத்து ஒன்று.  அது “கடவுள் இருக்கிறார் – ஆயினும் இல்லை.”  இது என்ன விசித்திரமான பதில் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?  அவர் சொல்கிறார் இங்கே நான் சொல்கின்ற “இல்லை” எனும் சொல் “இருக்கிறார் என்பதன் நேரடியான எதிர்ப் பதமாக சொல்லவில்லை. கடவுள் இருப்பதை கண்களில் காட்ட முடியாது எனும் பொருளில் சொல்கிறேன். ஆனால் செயல்களால் உணர முடியும் என்பது என் கருத்து என்கிறார்.  பூமியில் உயிரோடு வாழும் மனிதனின் உள்ளே இருப்பது “ஆன்மா” என்கிறோம். இறந்தவர்களுக்கு அனுதாபம் சொல்லும் போது அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் என்கிறோம். ஆங்கிலத்தில் R.I.P., that is Rest in Peace என்பதாகும். அப்படியென்றால் என்ன. நாம் உயிரோடு வாழும் வரை நம்மை இயக்குவது எது என்பதை அறியவில்லை. அந்த இயக்கம் நின்றவுடன் உயிர் பிரிந்து விட்டது என்கின்றனர். உயிர் என்பது மூச்சா? அல்லது வேறு ஏதேனும் பொருள் உண்டா. நம் முன்னோர்கள் அதனை ஆன்மா என்று சொல்கிறார்கள். அது நம் உடலை விட்டுப் பிரிந்த பிறகு அதுவே கடவுள் எனப்படுகிறது. இதில் “பக்தி” என்பது அந்த உடலுக்கும் ஆன்மாவுக்குமுள்ள உறவைத் தேடுதலே பக்தி. ஒருவன் தன் ஆன்மாவைப் புரிந்து கொண்டான் என்றால் அந்த தேடல் பக்தி நிலையிலிருந்து ஞானம் என்ற நிலைக்குச் சென்று விடுகிறது.

               collected works of Gandhi என்கிற நூல்களில் அவர் சொல்வதாவது “கடவுள் இருப்பதை மறுப்பவர்கள் ஆன்மா என்று ஒன்று உண்டு என்பதை ஒப்புக் கொள்ளாமையால் வாழ்வின் நோக்கத்தை விட்டு வழிமாறிப் போய்விட வாய்ப்பு இருக்கிறது. மனிதன் பிறரிடம் நம்பிக்கை இழந்து நிலைமை மோசமடைந்து விட்டால் ஒழுக்கமின்மை பரவிவிடலாம். அதனால் தான் ஒழுக்கத்தைக் கற்பிக்கும் எதிலும் நம்பிக்கைக் கொள்வதால் தானும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டியவனாக ஆகிறான். வள்ளுவர் வாக்கும் அதுதான் “ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்”.

           அவதாரம் என்கிறார்களே, அவர்கள் யார். கடவுள் அந்த அவதார உருவில் வந்து பூமியில் பிறக்கிறாரா என்று கேட்கலாம். அப்படி அல்ல. “வாழ்வில் அனைத்திலும் தார்மிக பலம் கொண்ட ஒரு மனிதன் தீமைகளுக்கோ, தீயவர்களுக்கோ அஞ்சாமல் வாழ்ந்து காட்டுவானானால் அவன் அவதாரமாகக் கருதப்படுகிறார்” என்கிறார் காந்தி. ஆனால் அப்படிப் பட்டவர்கள்  தங்களை ஒரு அவதாரம் என்று அறியமாட்டார்கள். சத்தியம் ஒன்றே கடவுள் வேறெதுவும் கடவுளில்லை, என்று சொல்லும் அவர் அந்த சத்தியத்தைக் கடைப்பிடிப்பவன் கடவுளை உணர்ந்தவனாகிறான் என்கிறார். ஒருவனுடைய நற்பண்புகள் உயிரற்றவை அல்ல. அவைகள் அனைத்துமே ஏற்றுக் கொள்ளக் கூடியவை, காரணம் அவனது நற்பண்புகளால் பிற உயிர்கள் நலம் பெறுகின்றன.

           காந்தியடிகள் மனிதனுக்கு உள்ள குணங்களை மூன்று விதமாகச் சொல்கிறார்  அவை தாமசம், ராஜசம், சத்வம் ஆகியவை. இவற்றில் தாமச குணம் ஒரு மனிதனை அறிவற்றவனாகவும் சோம்பலுள்ளவனாகவும் ஆக்குகிறது. ராஜச குணம் அவனைத் துணிவுள்ளவனாகவும் உலகியல் நோக்கங்களில் வெற்றி காண்பவனாகவும் ஆக்கிவிடுகிறது.  சத்வ குணம் என்பது அமைதி, சுய கட்டுப்பாடு இவைகளோடு எதையும் புரிந்து கொள்பவர்களாகவும் வைக்கிறது. இவர்கள் புற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் கடவுள் தத்துவத்தில் மனத்தைச் செலுத்துகிறார்கள். இந்த சத்வ குணம் தான் மனதை அமைதியில் செலுத்தும் வல்லமை கொண்டது.

அவர் சொல்கிறார்: “மனிதனின் அறிவுக்கு விளங்கும் வகையில் கடவுள் இருப்பதை நிரூபணம் செய்ய முடியாது” என்று. அவர் ஒரு எடுத்துக்காட்டினைச் சொல்கிறார். “தானியங்களை உண்பதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அவன் உணர்ந்திருக்கிறான், ஆனால், தானியங்களை உண்ணும்போது பலன்கள் விளைவதை அவனால் கண்ணால் பார்க்கவோ, அல்லது அறியவோ முடிவதில்லை. ஆன்மாவும், கடவுளும் அறிவினால் அறியப்படுபவை அல்ல, இவை இரண்டும் தம்மைத் தாமே அறிந்து கொள்வன என்கிறார் காந்தி.

கடவுளை அறிவதில் இரண்டு நிலைகள் உண்டு. அவை (1) நம்பிக்கை மற்றும் (2) அந்த நம்பிக்கையிலிருந்து எழுகின்ற அனுபவம். மனித குலத்தின் மாபெரும் ஆசான்கள் கடவுள் இருக்கிறார் என்பதைத் தங்கள் அனுபவத்தின் மூலமே சான்று உரைத்திருக்கிறார்களே தவிர எதையும் காட்டி இதுதான் கடவுள் என்று சான்றளிக்கவில்லை. ஆனால் நம்மால் காண முடியாத நம் சக்திக்கு மீறிய செயல்கள் அனைத்தையும் கடவுளின் செயல் என்று சொல்வது வழக்கமாக ஆகிவிட்டது.

காந்தி சொல்கிறார்: “முதலில் நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தேன். ஆனால் ஆழ்ந்த சிந்தனையின் மூலமும், மதங்களைப் பற்றி படித்தறிந்ததன் மூலமும் நம்பிக்கை எழுந்தது. அது நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. கடவுள் என் இதயத்தில் உணர்வு நிலையில் உறைகிறார் என்பதை உணர்ந்து வருகிறேன். ஆனால், இந்த விஷயத்தில் ஒருவருடைய அனுபவம் மற்றவர்களுக்குப் புரிய வைக்கவோ, நம்பச் செய்யவோ முடியாது. நம்பிக்கை, முயற்சி , சுய அனுபவம் இவைகள் மூலம் தான் அதனை புரிந்து கொள்ள முடியும்.”:

“சத்தியமே வாழ்வில் தலையாய தர்மம். சத்தியம் என்பதை உண்மையைப் பேசுவது என்று மட்டும் தான் நினைக்கிறோம்.  ஆனால் நம் உள்ளத்தாலும், செயலாலும் உண்மையாக இருப்பதே சத்தியம். என்னைப் பொறுத்த வரை கடவுள் என்றால் சத்தியம் மாத்திரமே எனக் கருதி நான் வழிபட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த சத்தியம் தான் கடவுள் என்றால், அந்த கடவுளை நான் இன்னமும் தரிசிக்கவில்லை, ஆயினும் நான் தேடிக் கொண்டே இருக்கிறேன்.” என்கிறார் காந்தி.

சரி! கடவுளுக்குப் பணி புரிகிறேன் என்கிறார்களே, அப்படியென்றால் என்ன? யாருக்கு என்ன சேவை செய்கிறார்கள்? கடவுள் என்று சொல்லப்படுவது அல்லது சொல்லப்படுபவர் யார், எங்கு எப்படி இருப்பார் என்பது தெரிந்தாலல்லவா அவருக்குச் சேவை செய்ய முடியும். அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டுமென்று நான் நினைத்தால், நான் செய்ய வேண்டியது ஒன்று உண்டு. நமக்குக் கடவுள் யார் என்பதோ, எப்படி இருப்பார் என்பதோ தெரியாது. ஆனால், நாம் நம்மைச் சுற்றியிருக்கிற பலவற்றைப் பார்க்கிறோம்.  இங்கு வாழும் உயிரினங்களும், உயிரற்ற ஜடப் பொருட்களும் யாரால் எப்படி உருவானது என்பது நமக்குத் தெரியுமா? அந்த உயிர்கள் அனைத்தும் நாம் அறியாத ஒரு சக்தியால் படைக்கப்பட்டது என்றால், அவைகளுக்கு நாம் செய்யும் சேவையே கடவுளுக்குச் செய்யும் சேவை எனக் கொள்ள வேண்டும். இல்லையா?

திருமூலர் திருமந்திரத்தில் சொல்லும் ஒரு பாடலை இங்கே சொல்ல விரும்புகிறேன். அது:
                    “யாவர்க்குமாம் இறைவற்கொரு  பச்சிலை                                                                                   யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை                                                                                       யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி                                                           யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே”   (திருமந்திரம் 252)

          கடவுள் உருவாக்கிய எல்லா ஜீவன்களுக்கும், உயிரினங்களுக்கும், புல், பூண்டு, பூச்சிகள், பிராணிகள், பறவைகள், மிருகங்கள் முதலான எல்லா ஜீவன்களுக்கும் நாம் எவ்வகையில் சேவை செய்ய முடியும் என்ற கேள்விக்குக் காந்தி பதில் சொல்கிறார். உலகில் இறைவன் படைத்த அனைத்துக்கும் உன்னால் சேவை செய்ய முடியாது; அதனால் உன்  கண்களுக்குத் தெரியும்படியான, உன் அருகிலுள்ள உயிர்கள் அனைத்துக்கும் உன்னால் ஆன, அவைகளுக்குத் தேவைப்படுகின்ற உதவிகளைச் செய்வதே கடவுள் சேவை. எடுத்துக்காட்டாக திருமூலர் சொல்வதைப் போல பசுவுக்கு ஒரு கைப்பிடி புல், நாம் உணவு தயாரிக்கும் முன் ஒரு கைப்பிடி அரிசியை பிறருக்குக் கொடுக்கவென்று எடுத்து வைப்பது, பிறரிடம் சண்டையிட்டு மனத்தை வருத்திக் கொள்ளாமல் இனிமையாகப் பேசுவது இவைகளோடு, முடிந்தால் அந்த இறைவனை நினைத்து ஒரு இலை கொண்டு அர்ச்சிப்பது.

மனித வாழ்வின் இறுதியான, நிலைப்பாடு கடவுளை அடைவது என்று சொல்கிறார்கள். மனிதனுக்கு வயது ஏற ஏற வாழ்க்கை எப்படிப்பட்டது என்கிற அறிவு தோன்றுகிறது. இந்த வாழ்வு முடிவுக்கு வந்த பின் என்னவாகும் என்கிற கவலை ஏற்படுகிறது. இறந்த பிறகு யாருக்கும் ஒரு உதவியோ அல்லது துன்பமோ தர முடியாது. காலப்போக்கில் நம் பிள்ளை குட்டிகள் கூட நம்மை மறந்து விடுவார்கள். அப்படிப்பட்ட நிலையில் நாம் யாரை நினைக்க முடியும்? இந்த உலகைப் படைத்து, அதில் பல்வகை உயிர்களை உருவாக்கி, அவைகளை வாழவைத்து அழிக்கும் தொழிலையும் செய்யும் அந்த மகா சக்தியே கடவுள் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட சக்தியிடம்,  தான் ஒரு மனசாட்சியுள்ள மனிதனாக வாழ்ந்தால்தான் வாழ்க்கையை முறையாகப் பயன்படுத்தியதாக ஆகுமென்கிற எண்ணமும் உண்டாகிறது.

நான் என்னை கவனித்துக் கொள்வதைப் போல, அடுத்தவனையும் கவனித்துக் கொள்ள வேண்டும், நாம் படும் துன்பம் நமக்கு எப்படியோ அப்படியே அடுத்தவன் துன்பமும் நமக்கு வருத்தத்தைத் தரவேண்டும். நமக்குப் பசிக்கு உணவு தேவைப்படுவதைப் போல, ஏழை வசதியற்றவனுக்கும் பசி எடுக்கும் அவனுக்கும் உதவி தேவைப்படும் என்கிற எண்ணமே இறைவனை உணர்ந்ததாகக் கருதப்படும்.

“மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை” என்பதைப் பலரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு தேவைகள் இருக்கின்றன, நன்மைகளை எதிர்பார்க்கிறோம். அதைப் போலவே பிறரது தேவைகள், நன்மைகள் இவற்றை உணர்ந்து நம்மைப் போலவே அவர்களையும் கவனித்துக் கொள்வதே கடவுளை அறியும் மார்க்கமாகும். இது புரிந்து கொள்ள சற்று சிரமமான காரியம் தான்.  இந்தத் தத்துவத்தை எல்லோரும் புரிந்து கொள்ளும் சக்தி இருந்தால் பிரச்சினை இல்லை.  உலகில் நம்மால் உருவாக்க முடியாத ஒன்றை, நம் சக்திக்கு மீறி,  அதுவாகவே உருவாகியிருக்கிற எதையும் இறைவனாக எண்ணி வழிபடுவது சுலபமாக இருக்கும்.  அது அவரவர் மேம்பட்ட சிந்தனையைப் பொருத்தது.

இது சம்பந்தமாக நிகழ்ச்சி யொன்றில் காந்தியிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளையும், அதற்கு அவரளித்த பதில்களையும்  பார்க்கலாம்.  ஒருவர் கேட்கிறார் மதத்தின் பெயரால் அல்லாமல் பிற உயிர்களுக்குப் பணி செய்ய முடியாதா? என்று. அதற்கு அவர்  “ஏன்? சேவை என்பதில் மதமோ, இனமோ பிரிவுகளோ எப்படி வரும்? பிறருக்கு நீ செய்யும் சேவையே உலகில் மிகச் சிறந்த மதம், மனதால், செயலால் உண்மை எனும் பண்பு உன்னை வழி நடத்தினால் அதனிலும் மேம்பட்ட வழி எதுவுமில்லை” என்கிறார்.

 காந்திக்கு ஒரு நண்பர் இருந்தார், அவர் பெயர் கோபராஜு ராமச்சந்திர ராவ். அவர் ஒரு நாத்திகர், காந்தியிடம் அன்பு கொண்டவர். காந்தியின் தீண்டாமை ஒழிப்பில் அவருக்கு ஆர்வமிருந்ததால் இந்த நட்பு ஏற்பட்டது. அவர் காந்திஜியுடன் கடவுள் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவார். அவர் காந்திக்கு ஒரு கடிதம் எழுதுகிறார், அதில் அவர் “கடவுள் என்று நீங்கள் சொல்வது எதைக் குறிக்கிறது?” என்கிறார். அதற்குக் காந்தி “கடவுள் மனிதர்களின் புரிதல்களுக்கு அப்பாற்பட்டவர்” என்று பதில் சொன்னார்.

அவர் 1944ஆம் ஆண்டில் காந்திஜியைச் சந்திக்கிறார். அதன் பின் காந்தி இறக்கும் வரை அவருடன் கூடவே இருந்திருக்கிறார். அவர் “காந்தியுடன் ஒரு நாத்திகர்” என்ற நூலை எழுதினார். (“An Atheist with Gandhi”) என்ற அந்த நூலில் காந்தியின் கடவுள் என்ற பெயரில் அவர் எழுதியிருப்பவை காந்தியின் கடவுள் கொள்கையை விளக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

ஒரு கொள்கையை அதன் அறிவார்ந்த மேன்மையைக் கொண்டோ அல்லது அது சொல்லும் தத்துவங்களைக் கொண்டோ காந்தி எதையும் மதிப்பீடு செய்வதில்லை. அவர் தான் கொண்டிருந்த கடவுள் பக்தியை எப்படி மதித்தாரோ, அதே அளவுக்குத் தான் கொண்டிருந்த நாத்திகத்தையும் மதித்தார் என்கிறார் அந்த நூலாசிரியர். சிலர் சந்தர்ப்ப வாதிகளாக இருப்பார்கள்; வேறு சிலர் தேர்ந்த நடைமுறை வாதிகளாக இருப்பார்கள். காந்தி ஒரு நடைமுறை வாதியாக எல்லா சூழ்நிலைகளிலும் அதனதன் இயல்பான முரண்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் படைத்திருந்தார்.

காந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு 1914இல் திரும்பிவிட்ட போதும், அவருடைய குருநாதர் கோபாலகிருஷ்ண கோகலேயின் அறிவுரைப்படி இந்தியா முழுவதும் ரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணித்து இந்திய மக்களின் வாழ்க்கை நிலைமை, அவர்கள் வாழ்வில் மேம்பட தான் செய்யவேண்டிய காரியங்கள் பற்றியெல்லாம் கவனித்து வந்தார்.

அப்போது பிரிட்டிஷ் ஆதிக்கம் இந்த மண்ணில் வேரூன்றியிருந்ததால், பண்டைய பெருமைகளை இந்திய மக்கள் இழந்து, தாங்கள் அந்நியருக்கு அடிமைப்பட்டவர்கள் எனும் உணர்வை சில தலைமுறையினர் மத்தியில் வளர்த்துக் கொண்டனர்.  சிலர் இந்த நாடே ஆங்கிலேயருடையது, அவன் தயவில் நாம் இங்கு வாழ்கிறோம் என்ற எண்ணம் கூட இருந்திருக்கலாம். அதனால்தானோ என்னவோ பாரதி “நாம் இருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம், இது நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம்” என்று பாட நேர்ந்தது. இந்த எண்ணத்தை மாற்றுவதென்பது எளிதானதன்று. இந்திய மக்களின் பெருமைகளை, பாரம்பரியத்தைப் புரிய வைக்கவே அவர் மிகவும் சிரமப் பட வேண்டியிருந்தது. காரணம் முன்னை இருந்த மேன்மையும், பின்னை நாளில் நேர்ந்த இழிவையும் உணராத மக்கள் தங்களை ஆளவந்த தேவகுமாரர்கள் என்று ஆங்கிலேயர்களை எண்ணிக் கொண்டிருந்தார்கள். அதை மாற்றவே காந்தி பாடுபட வேண்டியிருந்தது.  அதில் ஒன்றுதான் அவர் பாடத் தொடங்கிய “ரகுபதி ராகவ ராஜாராம்” என்பது. இன்று இந்த கூட்டத்தில் நாம் நினைவுகூரும் திரு வீ.சு.ராமலிங்கம் அவர்கள் சொல்வார், காந்திஜி  ஹரே ராம்! என்று சாகும் போதும் சொன்னார் என்கிறார்கள், ராமனைப் புகழ்வதாக ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பஜனைப் பாடலையும் பாடுகிறார்கள். ஆனால் இவை அயோத்தி  ராமனைக் குறிப்பதாக அல்லாமல் பொதுவாக இறைவனைக் குறிக்கும் விதத்தில் “ராம்” என்றழைக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது என்பார்.

உலகில் மனிதர்களையும், நம்மைத் தவிர இங்கு நம்மைச் சுற்றியிருக்கும் உயிரினங்கள் அனைத்தையும் பார்க்கும் போது இத்தனை வகையான உயிரினங்கள் இங்குத் தோன்றக் காரணமாக இருந்தது என்ன என்ற கேள்வி எழும். இவை பற்றிய ஆழ்ந்த அறிவும் ஞானமும் இருந்தால் இது குறித்து அலசி ஆராய்ந்து எது எதெல்லாம் நம் சக்திக்கு அப்பாற்பட்டதோ, எவைகள் நம்மால் முழுதும் அறிந்து கொள்ள முடியவில்லையோ அல்லது எவையெல்லாம் நம்மால் காணமுடியவில்லையோ அதையெல்லாம் சர்வசக்தி படைத்த கடவுள் என்றும் நம்பத் தொடங்கினார்கள். காந்தி எல்லா உயிர்களையுமே கடவுளாகக் கருதித்தான் அவர்களுக்குச் சேவை செய்வதை பக்தி பூர்வமாக செய்து வந்தார்.

தென்னாப்பிரிக்காவில் ஆதிக்கம் செலுத்திய வெள்ளையர்களை எதிர்க்க காந்தியிடம் ஆயுத பலமோ, படை பலமோ, வீரியமிக்க மனிதர்களோ இல்லை யென்பதால் அவர் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்க ஓர் புதிய ஆயுதத்தைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அவர் நடத்தும் அகிம்சை வழி போராட்டத்துக்கு ஒரு நல்ல பெயர் வேண்டுமென்று கேட்டபோது அவருக்குக் கிடைத்ததுதான் “சத்தியாக்கிரகம்” எனும் சொல். அதற்கு முன்பு வரை இவர் போராட்டத்தை ஆங்கிலத்தில் PASSIVE RESISTANCE என்று சொல்லிக் கொண்டிருந்த போது காந்தி சொன்னார் நான் செய்வது சத்தியாக்கிரகம், இந்த இரண்டு சொற்களுக்கும் வித்தியாசம் உண்டு. அமைதியாக எதிர்ப்பது அல்லது தடுப்பது என்பது Passive Resistance. ஆனால் தன்னுடைய சொல்லான “சத்தியாக்கிரகம்” என்பது கோரிக்கையை எத்தனை எதிர்ப்பு இருந்தாலும், வன்முறை மூலமாக அடக்க முயன்றாலும் அவற்றுக்கு அடிபணியாமல், அகிம்சை முறையில் வலியுறுத்திக் கொண்டே இருப்பது.  இறக்க நேர்ந்தாலும் தொடர்ந்து என் எதிர்ப்பைக் காட்டுவேன் என்ற பொருள் படும் என்று விளக்கினார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக முன்பொருமுறை தென்னாப்பிரிக்காவில் இருந்த போது நடந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

ஒரு நாள் காந்தி தன் அலுவலகத்தில் வீற்றிருந்தார். அப்போது தமிழ் நாட்டிலிருந்து பிழைப்புக்காக நேட்டால் வந்து அங்கு ஒரு ஆங்கிலேயர் வீட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த தமிழர் ஒருவர், வந்து நின்றார். அவர் வாயில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. தலையில் இருந்த முண்டாசை அவிழ்த்துத் தன் கையிடுக்கில் வைத்துக் கொண்டு உடம்பை வளைத்து காந்தியை வணங்கினார். வாயில் ரத்தத்தோடு வந்து நிற்கும் அவரைப் பார்த்து காந்தி திகைத்துப் போய் “நீ யார், உனக்கு என்ன நேர்ந்தது? ஏன் எப்படி அடிபட்டுக் கொண்டு வந்து நிற்கிறாய்?” என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

வந்தவர் கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்சம் இந்தி கலந்த தமிழில் பதில் சொன்னார். தான் கங்காணிகள் மூலம் தென்னாப்பிரிக்காவில் ஒரு வெள்ளை முதலாளியிடம் வேலைக்காக ஒப்பந்தக் கூலியாக வந்ததாகவும், அவரிடம் பணியாற்றிக் கொண்டிருந்த போது கோபப்பட்டு அந்த முதலாளி தாக்கியதில் தன் முன் பற்கள் இரண்டு உடைந்து போனதாகவும், அவர் தன்னைக் கொடுமைப் படுத்துவதாகவும் தெரிவித்தார். ஒப்பந்தக் கூலிகள் ஒப்பந்த காலம் முடியும் முன்பு வெளியே போக முடியாது. வேண்டுமானால் இன்னொருவர் சம்மதித்தால் இரு முதலாளிகளின் சம்மதத்தோடு இவர் இன்னொருவரிடம் வேலைக்குப் போகலாம். இல்லையேல் இவருக்குச் சிறை அல்லது 25 பவுன் அபராதம் உண்டு.

காந்தி சொன்னார், முதலில் உன் மேல் துணியைத் தலையில் கட்டிக்கொள். வெள்ளையர்களிடம் நிற்பது போல தலைப் பாகையைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு குனிந்து நிற்காதே நிமிர்ந்து நில் என்று சொல்லி, அவர் அவன் வழக்கை எடுத்து நடத்தினார். அப்போது அந்த மனிதனுக்கு காந்தி தெய்வம். காந்திக்கு அந்த பரிதாப நிலையில் இருந்த மனிதன் கடவுள். இதுதான் அவர் சொல்லுகின்ற கடவுள் தத்துவம்.

தென்னாப்பிரிக்காவில் நகரம் அமைத்துக் குடியேறிய வெள்ளையர்களுக்குத் தாங்கள் ஆக்கிரமித்த வளமான நிலங்களில் வேலை செய்ய ஆட்கள் வேண்டியிருந்தது. அங்கு கரும்பு, காப்பி, தேயிலை முதலியவற்றைப் பயிர் செய்தார்கள். அந்த வேலைகளுக்காக இந்தியாவிலிருந்து ஒப்பந்தக் கூலிகளைப் பிடித்துக் கப்பலில் ஏற்றி கொண்டு வரும் பணிகளை கங்காணிகளிடம் ஒப்படைத்திருந்தார்கள். அந்த கங்காணிகள் கல்கத்தா, தமிழ்நாட்டில் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் குறிப்பாக நாகப்பட்டினம் துறைமுகத்தை அடுத்த பல ஊர்களுக்கும் சென்று அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி, ஆப்பிரிக்கா சென்று ஐந்து ஆண்டுகள் பணியாற்றலாம், அதில் கிடைக்கும் பணத்தில் சொந்தமாக நிலம் வீடு வாங்கி அங்கேயே நிரந்தரமாகக் குடியேறிவிடலாம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி நாகப்பட்டினம் அழைத்துச் சென்று கப்பலில் ஏற்றி ஒருமாத காலம் பயணம் செய்து ஆப்பிரிக்க துறைமுகங்களில் கொண்டு போய் இறக்கி அங்கு தேவைப்படும் வெள்ளையர்களுக்கு இவர்களை அடிமைகளாகப் பணியாற்றக் கொண்டு விட்டு விடுவார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் காந்தியிடம் வந்தவர். அதுமுதல் அவரைப் போன்ற பல ஒப்பந்த தொழிலாளர்களுக்காக பாடுபட்ட காந்தி அவர்களுக்குக் கடவுளாகத் தோன்றினார். காந்தியும் அவர்களுக்குச் செய்யும் சேவையே கடவுளுக்குச் செய்யும் சேவையாகச் செய்தார்.

இந்தச் செய்தி ஆப்பிரிக்கா முழுவதும் பரவியது. அங்கு நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்க ஒரு இயக்கத்தைத் தொடங்கினார். அவர்கள் மனித பலம், ஆயுத பலம், அதிகார பலம் என இப்படி எல்லா வகையிலும் பலமிகுந்தவர்களாக இருந்தமையால், காந்தி அவர்களை எந்த சக்தி கொண்டு எதிர்ப்பது என்கிறபோது அவர் நம்பியது “தெய்வ சக்தியை”. தெய்வம் அல்லது கடவுள் என்பவர் நம் முன்பு காட்சி யளிப்பார் என்று நம்பினால் நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. வட மொழியில் ஒரு பழமொழி உண்டு, “தெய்வம் மனுஷ்ய ரூபேண” என்று. எப்போதெல்லாம் நம் சக்திக்கு மீறிய செயல்கள் நடக்கின்றதோ, அப்போது எங்கிருந்தோ வந்து உதவி செய்பவர் உருவத்தில் கடவுள் நமக்கு உதவி செய்கிறார் என்கிற நம்பிக்கை பிறக்கிறது.

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன ஒரு குட்டிக் கதையை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்.  கடவுள் யார் என்பதை அந்தக் கதை விளக்கும், அந்தக் கொள்கையைத் தான் காந்தியடிகளும் பின்பற்றினார். ஒரு கிராமத்தினுள் வெள்ளம் புகுந்து ஊரே மூழ்கும் நிலைமை வந்துவிட்டது. ஊர் மக்கள் தங்கள் உடைமைகளை யெல்லாம் சுமந்து கொண்டு ஊரைவிட்டுப் போகத் தொடங்கினர். அப்போது கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டிருந்த ஒருவன் தன் குடிசையின் வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனையும் அவர்கள் “வா எங்களுடன் ஊரே மூழ்கப் போகிறது” என்று அழைத்த போது அவன் சொன்னான், “என்னை நான் வணங்கும் கடவுள் காப்பாற்றுவார், நீங்கள் போங்கள்” என்று. சிறிது நேரம் கழித்து மீதமிருந்த பலரும் ஒரு படகில் ஏறி வெள்ளத்தோடு கரைக்குப் போய்க் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் இவனைப் பார்த்து “நீயும் வந்து விடு, இனி ஊரே மூழ்கப் போகிறது, நீ இறந்து போவாய்” என்று அழைத்த போதும் அவன் கடவுள் என்னைக் காப்பாற்றுவார் என்று இருந்து விட்டான். வெள்ளம் அதிகமானதும் தனியொரு மனிதன் ஒரு படகில் வந்து கொண்டிருந்தவன், இவனைப் பார்த்து, “இனியும் தாமதிக்காதே உடனே வந்து இந்தப் படகில் ஏறிக்கொள் பிழைக்கலாம்” என்றான். அவன் மறுத்துவிட்டு கூரையின் உச்சியில் போய் உட்கார்ந்து விட்டான். இறுதியில் வெள்ளம் ஊரை மூழ்கடித்து விட்டது. இந்த பக்தனும் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போனான்.

அவனைக் கடவுள் முன் கொண்டு போய் நிறுத்தினார்கள். அப்போது அவன்கோபத்துடன் கடவுளிடம் கேட்டது “உம்மையே நம்பிய என்னை ஏன் கை விட்டீர்?” என்று.

அதற்கு கடவுள் சொன்னார், “அடே! முட்டாளே!  நான் ஊர் மக்களோடு வெளியேறும் போது நீயும் வந்து விடு என்று அழைத்தேன், நீ மறுத்தாய். மறுமுறை படகில் பலருடன் நானும் இருந்து உன்னை வந்துவிடும்படி அழைத்தேன். அப்போதும் வரவில்லை. இறுதியாக நான் மட்டும் ஒரு தனிப் படகில் வந்து உன்னை அழைத்தேன் அப்போதும் வரவில்லை. நீ ஒரு நிர்மூடன், இப்போது வந்து என்னை கேள்வி கேட்கிறாய்” என்றபோதுதான் அவனுக்குப் புரிந்தது, கடவுள் மனிதனாக அல்லது ஏதோவொரு ஜீவனாக வந்து நம்மைக் காப்பாற்றுவாரே தவிர நான் நினைக்கும் விதமாக நேரில் வந்து அல்ல என்பதை அவன் உணர்ந்தான்.

“அத்வைதம்” எனும் சொல்லுக்கு “இரண்டு அல்லாதது” என்று பொருள். அந்த அத்வைதத்துக்குப் பொருள் சொல்ல வந்த பாரதியின் பாடல் வரிகளோடு என் உரையை நிறைவு செய்கிறேன்.   
                  
கேளப்பா,சீடனே! கழுதை யொன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கர சங்கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.
சுத்த அறிவே சிவமென் றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குரு சிவமென் றுரைத்தார் மேலோர்,
வித்தை யிலாப் புலையனு மஃதென்னும் வேதம்;
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றொ நிகழ்த்து வீரே?
உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;                                                            எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்!
  
                                                                                   
தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர்,                                                                                                     பாரதி இலக்கியப் பயிலகம்            .                      

No comments: