சத்ரபதி சிவாஜி
பதினாறாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்திய வரலாற்றில், டெல்லி முகலாய மன்னர்களின் ஆட்சிக்கு
உட்பட்ட பல சிற்றரசர்கள் நாடெங்கும் பரவியிருந்தனர். டெல்லி சுல்தான்களுக்குக் கட்டுப்
பட்டு தெற்கே நிஜாமும், வேறு பல தட்சிண சுல்தான்களும் ஆட்சி புரிந்து வந்தனர். மராத்திய
வம்சத்தின் வீர பரம்பரையில் வந்த பல மாவீரர்களும் இவர்களில் எவராவது ஒருவரிடம் தளபதிகளாக,
போர்ப்படையில் முக்கிய பதவிகள் வகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள். இவர்கள் நிலையாக ஓரிடத்தில்
ஒருவரிடம் பணிபுரியாமல் அவ்வப்போது மாறுகின்ற சூழ்நிலைகளுக்கேற்ப தலைமையை மாற்றிக்
கொண்டும், இன்றைய அரசன் நாளைய விரோதியாகப் போரிடுவது போன்ற பல நிகழ்ச்சிகள் தட்சிண
சுல்தான்களிடையே நடைபெற்றுக் கொண்டிருந்தன.
நாம்
எடுத்துக் கொண்டிருக்கும் இந்த வரலாற்றுப் பதிவுகள் நடந்த காலத்தில் தேவகிரி எனுமிடத்தில்
நிஜாம் பாதுஷாவும், விஜயதுர்க்கம் எனுமிடத்தில் இப்ராஹிம் பாதுஷாவின் புதல்வன் அலியடில்ஷா
என்பாரும் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். இவ்விரு சுல்தான்களுக்கிடையே போர் மூண்டது.
அந்தப் போரில் நிஜாமின் பக்கம் மாலோஜி, விட்டோஜி எனும் இரண்டு மராத்திய வீரர்கள் நிஜாமுக்கு
வெற்றிகளைத் தேடித் தந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சேவையைப் பாராட்டி நிஜாம்
தான் வென்ற பகுதிகளில் நாலில் ஒரு பாகத்தை இவர்களுக்கென்று பகிர்ந்தளித்தார்.
இவ்விருவரில்
மாலோஜி என்பவருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். முதல்வர் ஷாஜி, அடுத்தவர் சரபோஜி
என்றும் பெயரிடப்பட்டனர். ஷாஜிக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவர் தந்தை மாலோஜி ஒரு
போரில் இறந்து போனார். குழந்தைகள் சிறுவர்களாக இருந்ததால் அவ்விருவரையும் விட்டோஜியின்
பாதுகாப்பில் வளர்ந்தனர்.
ஷாஜி
இளைஞனாக வளர்ந்த போது துக்காவுபாயி எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்
1620இல் சதாராவின் மன்னராக ஆனார். அவர் சதாராவின் மன்னராக இருந்த போது இரண்டாவது மனைவியாக
ஜீஜாபாயி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
தேவகிரியின்
பாதுஷா நிஜாம் விஜயதுர்கம் பாதுஷா அலியடில்ஷாவை மதிக்கவில்லை. காரணம் தன்னுடைய படையில்
மாபெரும் மராத்திய வீரர்கள் ஷாஜி முதலானோர் இருக்கும் தைரியம் அவருக்கு. இந்த சூழலில்
விஜயதுர்க்கம் பாதுஷா அலியடில்ஷா தேவகிரி பாதுஷா நிஜாமுடன் டெல்லி சுல்தான் ஜஹாங்கீரின்
உதவியுடன் போருக்குப் புறப்பட்டார். இந்தப் போரில் நிஜாமின் படைத் தளபதி ஷாஜியிடம்
டெல்லி சுல்தான் படைகள் தோற்றுப் போயின. அதே போரில் ஷாஜியின் தம்பி சரபோஜி அலியடில்ஷாவின்
படைத் தளபதியான ஜோகர்கான் என்பவரால் கொல்லப்பட்டார். அந்தப் போரில் வெற்றி ஈட்டித்
தந்த ஷாஜியை நிஜாம் கெளரவித்துப் பாராட்டினார். பிறகு ஷாஜி சதாராவுக்குத் திரும்பிவிட்டார்.
இந்த
சூழ்நிலையில் நிஜாம் படைக்கு வெற்றி ஈட்டித் தந்த ஷாஜி தன் பக்கம் இழுக்க வேண்டுமென்று
விஜயதுர்க்கம் பாதுஷா அலியடில்ஷா விரும்பினார். எதிரியின் படைத் தளபதி தன் பக்கம் வருவாரா
என்றும் சந்தேகித்தார். ஆனால் நிஜாமுக்கும் ஷாஜிக்கும் இடையே ஏதோ மனவருத்தம் இருந்த
காரணத்தால் அவர் தயக்கமின்றி எதிரியாக இருந்த அலியடில்ஷா பக்கம் சேர்ந்து விட்டார்.
ஷாஜி தன் பக்கம் வந்துவிட்ட தைரியத்தில் அலியடில்ஷா மீண்டும் நிஜாம் மீது போரிட ஷாஜி
தலைமையில் பெரும் படையை அனுப்பினார். அப்போது நடந்த போரில் அலியடில்ஷாவின் படை ஷாஜி
தலைமையில் பெரும் வெற்றியைப் பெற்றது. நிஜாம் தோற்றுப் போனார். இந்த வெற்றியைக் கொண்டாடும்
விதமாக அலியடில்ஷா தன்னுடைய ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் பாதியை ஷாஜிக்கு பகிர்ந்து
அளித்து அவரை கெளரவப்படுத்தினார். தொடர்ந்து அலியடில்ஷா வின் தளபதியாக ஷஜி தென்னிந்தியாவின்
பல பகுதிகள் மீது போர் தொடுத்து இப்போதைய கேரளப் பகுதிகளையும் வென்று பெரும் புகழ்
பெற்றார். அவர் வென்றெடுத்த பகுதிகளிலுள்ள சிற்றரசர்கள் எல்லாம் அலியடில்ஷாவுக்குக்
கப்பம் கட்டவும் ஏற்பாடு செய்து விட்டார்.
வெற்றி
வீரராக ஷாஜி விளங்கி வருகையில் 1627 பிப்ரவரி 19இல் மனைவி ஜீஜாபாயிக்கு முதல் மகன்
பிறந்தான், அந்த மகன் பெயர் சாம்பாஜி. இந்த சாம்பாஜி வளர்ந்து பெரியவனாக ஆன போது சிவனேரி கோட்டையின் தலைவர் விசுவாசராவ் என்பவரின்
பெண்ணான ஜெயந்திபாயி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். பிறகு 1629இல் ஜீஜாபாயிக்கு
இரண்டாவது மகன் பிறந்தார். அந்தக் குழந்தை பிறந்த ஊரான சிவனேரியின் நினைவாக அந்த மகனுக்கு
“சிவாஜி” என்று பெயரிட்டனர். ஷாஜி பிறந்த குழந்தையுடன் சதாராவுக்குச் சென்றுவிட்டார்.
அங்கு 1630இல் ஷாஜியின் முதல் மனைவியான துக்காபாய் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
ஷாஜி
தேவகிரி பகுதியைச் சேர்ந்த எண்பது கோட்டைகளைத் தனதாக்கிக் கொண்டார். அப்போதிருந்த பல்வேறு
பிரிவுகளைச் சேர்ந்த மராத்தியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சூரிய வம்சம் என்றும் சந்திர
வம்சம் என்று பிரித்து வாழ்ந்தனர். ஷாஜியின் வளர்ச்சியைக் கண்ட டெல்லி பாதுஷா அலியடில்ஷாவுடன்
இணைந்து ஷாஜிக்கு எதிராக பீமா நதிக் கரையில் மூன்றாண்டு காலம் போரில் ஈடுபட்டார். ஷாஜி
ஒரு சமாதான உடன்படிக்கையின்படி தான் வென்ற நிலப் பகுதிகளை டெல்லி பாதுஷாவுக்கும் அலியடில்ஷாவுக்கும்
பிரித்துக் கொடுத்துவிட்டுத் தான் சதாராவுக்குச் சென்று விட்டார்.
அலியடில்ஷாவுக்கும்
ஷாஜிக்கும் சமாதானம் ஏற்பட்டு விட்ட பிறகு அலியடில்ஷா அவரைத் தென் புறத்திலுள்ள பிரதேசங்களில்
உள்ள சிற்றரசர்களிடம் சென்று கப்பம் தொகை பெற்று வரப் பணித்தார். அவரும் அவருடன் ரணதுல்லாகான் என்பவரும் இக்கேரி
ராஜா வீரபத்ரர், கொங்க நாயக்கர், காவேரிப்பட்டணத்து ஜெகதேவர், ஸ்ரீரங்கப்பட்டனம் கண்டீரவர்,
தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கர், செஞ்சி வெங்கட்ட நாயக்கர், மதுரை திருமலை நாயக்கர் முதலான
அரசர்களையெல்லாம் வென்று அந்த நாடுகளை கப்பம் கட்டச் செய்தார். இதனால் மகிழ்ந்த அலியடில்ஷா
ஷாஜிக்கு பெங்களூர் ஜாகீரைக் கொடுத்து அனுப்பினார்.
பெங்களூரு
ஷாஜிக்குப் பிடித்தமான இடமாக இருந்தமயால் ஷாஜி தன் மனைவியர்களுடன் சதாராவிலிருந்து
கிளம்பி பெங்களூருக்குச் சென்று தங்கினார். மகன்கள் சிவாஜிக்கும் ஏகோஜிக்கும் கல்வி
அங்குதான் கற்பிக்கப்பட்டது. மகன் சிவாஜிக்கு வயது பன்னிரெண்டாயிற்று. ஷாஜியின் முதல்
மனைவியின் மகன் ஏகோஜிக்கு 1640இல் இவர் வயதில் சிறியவர் என்ற போதிலும் அவருக்கு இளவரசுப்
பட்டம் சூட்டினார். பெங்களூருக்கும் அவரையே அதிபதியாக்கினார். மூத்த மகன் சிவாஜிக்கு
சதாரா, புனே பகுதிகளுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி அங்கு அனுப்பி வைத்தார். சதாராவுக்குச்
சென்ற சிவாஜி வீரத்தினால் பல சிறு சிறு கோட்டைகளையெல்லாம் பிடித்துத் தனதாக்கிக் கொண்டார்.
இவ்வளவும்
ஆன பிறகு அலியடில்ஷா பெங்களுரில் இருந்த ஷாஜியை தன்னிடம் அழைத்துவருமாறு தூது அனுப்பியும்
ஷாஜி போகவில்லை. அதனால் ஆத்திரமடைந்த அலியடில்ஷா முஸ்தபாகான் என்பவரின் தலைமையில் பல
தளபதிகளையும் சேர்த்து ஒரு படையுடன் அனுப்பி ஷாஜியைக் கட்டாயமாகப் பிடித்து வரும்படி
அனுப்பினார். ஆனால் அலியடில்ஷாவின் வஞ்சனை எண்னத்தை அறிந்த ஷாஜி தன் மூத்த மகன் சாம்பாஜியைப்
பெங்களூரில் ஏகோஜிக்குத் துணையாக இருக்கும்படி சொல்லிவிட்டு தான் தன்னுடைய படைத் தலைவர்களுடன்
முஸ்தபாகானைப் பார்க்கப் போனார். தன்னைத் தேடி வந்த ஷாஜியை முஸ்தபாகான் அருகில் ஒரு
கூடாரத்தில் தங்க வைத்து, ஒருநாள் இரவு தன் படைவீரர்களைக் கொண்டு அந்த கூடாரத்தைச்
சூழ்ந்து கொண்டான். அப்போது நடந்த போரில் ஷாஜி காயம் பட்டுக் கீழே மூர்ச்சையாகி விழுந்தார்.
மூர்ச்சைத் தெளிந்த ஷாஜியை முஸ்தாபாகான் அவரை அலியடில்ஷாவைக் காண விஜயபுரத்துக்குச்
செல்லுமாறு பணித்தான்.
இதனைக்
கேள்விப்பட்ட சாம்பாஜி ஒரு பெரு படையுடன் புறப்பட்டு வந்து முஸ்தாபாகானுடன் போரிட்டார்.
நடந்த விஷயங்களையெல்லாம் கேள்விப்பட்ட சிவாஜி அலியடில்ஷாவோடு போருக்குத் தயாரானார்.
இவற்றையெல்லாம் அறிந்து அலியடில்ஷா மூன்று தளபதிகளின் தலைமையில் படைகளை அனுப்பி புரந்தர்
கோட்டையில் இருக்கும் சிவாஜியைச் சிறைப்பிடித்து வருமாறு அனுப்பி வைத்தார். அந்த மூன்று
தளபதிகளின் தலைமையில் சென்ற படை முதலில் சிரோபலம் எனும் கோட்டையைப் பிடித்து அங்கு
தங்களில் ஒருவனான பல்லாளன் என்பவனை இருக்கச் சொல்லிவிட்டு, மற்ற இருவரான பத்தேகான்,
முசேகான் ஆகியோர் சிவாஜி இருந்த புரந்தர் கோட்டையை முற்றுகை யிட்டார்கள். சிரோபலக்
கோட்டையை எதிரிகளிடமிருந்து மீட்க சிவாஜி பீமன் என்பவரின் தலைமையில் ஒரு படையை அங்கு
அனுப்பினார். பீமன் அங்கு சென்று அங்கு முகாமிட்டிருந்த பல்லாளனைக் கொன்று, அந்தக்
கோட்டையை மீட்டுக் கொண்டு சிவாஜியிடம் திரும்பினார். புரந்தர் கோட்டையை முற்றுகையிட்ட
படைகளுடன் சிவாஜி தீரத்துடன் போரிட்டார். கொட்டையின் மீதேறி உள்ளே நுழைய முயன்ற வீரர்களைத்
துரத்தினார். ஓடிய அவர்கள் மீண்டும் கோட்டையை நோக்கி வந்த போது சிவாஜி அந்த படைத்தலைவர்களில்
ஒருவனான முசே கானைக் கொன்றார்.
மராத்திய
மாநிலத்தில் சித்திரக்கல் என்றொரு கோட்டை இருந்தது. அங்கு இருந்தவர் மாபெரும் குதிரைப் படைகளுடன் வந்து பீஜப்பூர் கோட்டைக்குள்
சென்று கொள்ளையடித்துக் கொண்டு போனார். இப்படி தனக்கு எதிராக எல்லாம் நடப்பதை அறிந்த
அலியடில்ஷா தான் தணிந்து போக நிச்சயித்து தன்னிடம் வந்திருக்கும் ஷாஜிக்கு எந்தத் தீங்கும்
இழைக்காமல் அவரை திரும்ப அனுப்புவதே சிறந்தது என்றெண்ணி அவரை விடுவித்தார். அப்படி
அவரை அனுப்பும் போது அலியடில்ஷா ஷாஜியிடம் பெங்களுரில் இருந்து சாம்பாஜியையும், ஷாஜி
குடும்பத்தார் அனைவரையும் சதாராவுக்குத் திஎரும்பிவிட வேண்டுமென்றும், சிவாஜி சிம்ஹகட் கோட்டையை விட்டுவிட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
சித்திரக்கல் கொட்டையில் இருப்பவர் பீஜப்பூர் கோட்டையை கொள்ளை யடித்துச் சென்றதால்
அங்கு ஷாஜி படையுடன் சென்று அவனைக் கொன்றுவிட்டு வருமாறு பணித்தார். ஷாஜியும் அவ்வண்ணமே
சித்திரக்கல் சென்று போரிட்டு கொள்ளையடித்த பரமா என்பவனைக் கொன்று அவன் சேர்த்து வைத்திருந்த
செல்வங்களையெல்லாம் கொண்டு வந்து அலியடில்ஷாவிடம் கொடுத்துவிட்டு, தான் சதாராவுக்குத்
திரும்பினார்.
சிவாஜி
புரந்தர் கோட்டைக்குச் சென்றிருந்தார். அங்கு தன் அமைச்சரான சுவர்ணர் என்கிற சோஜாஜி
பண்டிதரை அழைத்து அதுவரை நடந்தவற்றையெல்லம் சொல்லி, டெல்லி பாதுஷா ஒளரங்கசீபையும்,
அலியடில்ஷாவையும் அடக்க வேண்டுமென்று ஆலோசனை கேட்டார். அவரும் அப்படிச் செய்வது சரியே
என்று ஆலோசனை சொன்னார். டெல்லி பாதுஷாவோடும், அலியடில்ஷாவோடும் போரிடுவதற்கு சரியான
இடம் எது என்பதை அமைச்சருடன் சிவாஜி ஆலோசனை செய்தார். மேலைக் கடற்கரைப் பக்கம் பிரதாபகெடி
எனுமிடத்துக்கு அருகிலுள்ள ஜாவளி எனும் நகரத்தை முதலில் நம்மதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும்,
அங்கு செல்லுகின்ற வழியில் இருக்கும் சிற்றரசர்களெல்லாம் அலியடில்ஷாவுக்குக் கப்பம்
கட்டுபவர்கள் என்பதால் முதலில் அவர்களை வென்று வழி ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று
முடிவு செய்தார். அதற்கு முதலில் சிம்மகெடி எனும் கோட்டையைக் கைப்பற்ற வேண்டும் என்று
பெரும் படையைத் தயார் செய்தார். விஜயதசமி நாளில் படைகளுடன் சிவாஜி புறப்பட்டார். வழியில்
எதிர்த்து வந்த அனைவரையும் வென்றார். பாசிராஜா, கிருஷ்ண ராஜா, ஜனகராஜா, சந்திரராஜா
ஆகியோரின் கோட்டைகளைப் பிடித்து அவற்றுக்கு ராய்கட் என்று பெயர் சூட்டிவிட்டு ஜெயவலி
நகரத்துக்கு வந்தார். அங்கு இருந்த சந்திரராஜாவை விரட்டிவிட்டு அங்கும் தங்கள் தளபதிகளை
நிறுத்தினார். தொடர்ந்து சென்று மேலைக் கடற்கரையை அடைந்து அங்கே கடலையொட்டி ஒரு கோட்டையை
எழுப்பி அதற்கு சிவலங்கை என்று பெயர் சூட்டினார்.
அந்தக் கோட்டையில் அரியணையேறிய சிவாஜி முதலாவதாக தன் பெயரில் ஒரு சகாப்தம் தொடங்க
எண்ணி அதற்கு சிவசகம் என்று புதிய ஆண்டு வரிசை முறையை உருவாக்கினார். இந்த தகவல்களையெல்லாம்
துரத்தியடிக்கப்பட்ட சந்திரராஜா அலியடில்ஷாவிடம் சொன்னார்.
சிவாஜியை
ஒழித்தால் தான் தனக்கு நிம்மதி என்று கருதி அலியடில்ஷா தன்னிடமிருந்த பல தளபதிகளில்
அப்சல்கான் என்கிற அப்துல்லாகானை அழைத்து, சிவாஜி தனக்கு எதிராக செய்துவரும் செயல்களையெல்லாம்
சொல்லி, உடனே அவருடன் பன்னிரெண்டு தளபதிகளையும் படைகளுடன் அழைத்துச் சென்று, சிவாஜியைச்
சிறைப்படுத்தி கொன்டுவருமாறு ஆணையிட்டார். அந்த நேரத்தில் சிவாஜி புனே நகருக்கு வந்திருந்தார்.
அவர் புனேவில் இருக்கும் நேரத்தில் சந்திரராஜா படையுடன் சென்று ஜாவளிக்குச் சென்று அதையும் பிரதாபகெடியையும் பிடித்துக் கொள்ள அனுப்பி
வைத்தார். அப்சல்கானும் தனக்களிக்கப்பட்ட பணியை, சிவாஜியைப் பிடித்துக் கொண்டு வருவதற்காகப்
படையுடன் புறப்பட்டான். பல சந்தர்ப்பங்கள் அப்சல்கானுக்கு எதிராக அமைந்திருந்த போதிலும்
அவன் சிவாஜியைப் பிடிப்பதே நோக்கம் என்று புறப்பட்டான்.
சிவாஜி
பவானி தேவி. குலதெய்வமான ஜெகதாம்பா துளஜா பவானியை மனத்தால் துதித்துக் கொண்டு எந்த
காரியத்திலும் ஈடுபடுவார். அப்படி அவர் வழிபடும் அந்த பவானி சில நேரங்களில் அவர் மனதில்
சொல்வதை அவர் உடனடியாகச் செய்து முடிப்பது வழக்கம். அது போல அப்போது பவானி அம்மன் சிவாஜியை
உடனடியாக ஜாவளிக்குத் திரும்பச் சொல்வது போல உணர்ந்து, புனே உட்பட பல கொட்டைகளை வலுப்படுத்தி
வைக்க ஆணையிட்டுவிட்டு, அந்த வழியாக அப்சல்கான் வரும்போது அவனைத் தடுக்காமல் மேலே போக
அனுமதித்து விடுமாறும் பணித்தார். வழியில் அவரவர் படைகளை அப்சல்கான் கண்களில் படாமல்
ஒளித்து மறைந்திருக்கச் செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். அப்சல்கானை தன்னுடைய இருப்பிடம்
வரை வரவிட்டுவிட்டு அவனை அழித்தவுடன் நகரா அடித்து செய்தி பரப்பப்படும், அது ஒவ்வொரு
கோட்டையாக பரவிவிடும். அப்போது அவரவர் படைகளை வெளிக் கொணர்ந்து அப்சல்கானுடன் வருகின்ற
படையை அழிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுச் சென்றார்.
அப்சல்கான்
வழியில் உள்ள பிரபலமான ஆலயங்களைக் குறிப்பாக பண்டரிபுரத்துக்குச் சென்று விட்டோபா மூர்த்திக்கு
ஊறு செய்துவிட்டுச் செல்ல விரும்பினார். ஆனால் அங்கு ஆலயத்தில் இருந்த விட்டோபா மூர்த்தியின்
விக்ரகம் அங்கு இல்லாமல் போய் விட்டது. ஏமாற்றமடைந்த அப்சல்கான் துளஜாபுரம் சென்று
அங்கு கோயில் கொண்டிருந்த துளஜா பவானி விக்ரகத்துக்கு கேடு விளைவிக்க எண்ணி அங்கு போனால்,
அங்கும் துளஜா பவானி விக்ரகம் காணாமல் போயிருந்தது. தொடர்ந்து விடாமல் அவன் செம்பு
மகாதேவரின் ஆலயத்தை உடைக்க விரும்பி அங்கே சென்று தன் அழிவு வேலையைக் காட்டினான். அவன்
படையில் இருந்த இதர மராத்திய சர்தார்கள் அப்சல்கானின் இந்த அடாத செயலைத் தடுத்தார்கள்.
பின்னர் அங்கிருந்து பல்லிவனம் எனும் இடத்துக்குச் செல்ல, அங்கு கோயில் கொண்டிருந்த
விக்ரகமும் மறைந்து போய்விட்டது.
தான்
நினைத்தபடி சிவாஜி ராஜாவுக்கு தீங்கு விளைக்க எண்ணி அழிவு வேலைகளை நிறைவேற்ற முயன்றாலும்
அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே விஞ்சியது. அப்சல்கான் தன் பக்கமிருந்த கிருஷ்ணாஜி பண்டிதரை
அழைத்து சிவாஜியிடம் தூது அனுப்பினான். அவர் போய் சிவாஜியைச் சந்தித்து, அவர் தன் வசமுள்ள
சிமாகெடி, பீமநதி, புரந்தரகெடி ஆகியவற்றை அப்சல்கான் வசம் ஒப்படைத்துவிட வேண்டுமென்றும்,
அவர் சிவாஜியை நேரில் சந்தித்துப் பேசும் போது வேறு எவைகளைச் செய்ய வேண்டுமென்று சொல்வார்
என்று சொன்னார். சிவாஜி ராஜா இவர்களுடைய சதிகளை நன்கு உணர்ந்தவர் என்பதாலும் அப்சல்கான்
என்ன எண்ணத்துடன் தன்னை நாடி வருகிறான் என்பதை உணர்ந்திருந்தாலும், அந்த அப்சல்கானைத்
தான் ஜாவளியில் சந்திப்பதாக கிருஷ்ணாஜி பண்டிதரிடம் சொல்லி அனுப்பினார்.
இதற்கிடையே
அப்சல்கான் தன் பெரும் படையோடு வழிநெடுக எந்தவித எதிர்ப்புமின்றி படையை வழிநடத்திக்
கொண்டு வந்து கொண்டிருந்தான். சிவாஜி ஒன்று நினைத்திருக்க அதற்கான திட்டங்களும் தயாராக
இருக்க, இந்த விவரங்களையோ அல்லது அப்சல்கான் ஏதேனும் விளைவித்து விடுவானோ என்று சம்பாஜி
ஒரு படையோடு வந்து அப்சல்கானை எதிர்த்தார். ஆனால் கொடு வெறி பிடித்த அப்சல்கான் அந்தப்
போரில் சம்பாஜியை வீழ்த்தி அவரைக் கொன்று விட்டான். இந்த செய்தியைக் கேட்ட தந்தை ஷாஜி
மனம் உடைந்து படுத்த படுக்கையானார். இரண்டு மாதங்கள் படுத்திருந்த அவர் மகன் இறந்த
சோகத்தால் பீடிக்கப்பட்டு இறந்தார். அது கி.பி.1658ஆம் ஆண்டு. ஷாஜியின் இறுதிச் சடங்குகளை
ஏகோஜி நடத்தினார். ஜீஜாபாய் தன் மகனான சிவாஜியைக் காண வந்திருந்தார். அவரைப் பிரதாபகெடியில்
தங்க வைத்துவிட்டு சிவாஜி தன் அண்ணன் வீழ்த்தப்பட்ட ஆத்திரத்தில் அப்சல்கான் வருகையை
எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
ஜாவளிக்கு
வந்த அப்சல்கானை ஊருக்கு வெளியில் ஒரு கூடாரம் அமைத்து அங்கே வந்து தங்கியிருந்து தன்னை
அங்கேயே சந்தித்துப் பேசலாம் என்று சிவாஜி ராஜா சொல்லியனுப்பி யிருந்தார். அதன்படி
அப்சல்கான் ஊருக்கு வெளியில் இருந்த அந்த முகாமில் தங்கினான். அவனை வரவேற்க பெருமளவில்
ஏற்பாடுகளைச் செய்து அங்கே விருந்துக்கும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி, அப்சல்கானுக்கு பானங்களையும் கொடுத்து சிவாஜி சரியான நேரத்துக்குக்
காத்திருந்தார்.
வரவேற்புகள்
எல்லாம் முடிந்த பின்னர் சிவாஜி அப்சல்கானை வரவேற்றார். சிவாஜியின் அழைப்பை ஏற்று அவரை
அப்படியே தழுவிக் கொள்வது போல கரங்களை அகல விரித்து அவரைக் கட்டிப் பிடித்தான், உடனே
மடியில் இருந்த கட்டாரியை எடுத்து சிவாஜி ராஜாவின் வயிற்றில் குத்தினான். இதுபோல வெல்லாம்
நடக்குமென்று தெரிந்து வைத்திருந்த சிவாஜி ராஜா தான் புறப்படு போதே தன் உடையின் உட்பகுதியில்
மெல்லிய இரும்பினால் ஆன கவச ஆடையை அணிந்திருந்தார். அதில் கத்தி இறங்காததால் அப்சல்கானின்
கத்திக் குத்து சிவாஜி ராஜாவின் வயிற்றில் இறங்கவில்லை. எதற்கும் தயாராக இருந்த சிவாஜி
ராஜா உடனே தன் பிச்சுவா கத்தியால் அப்சல்கானை அடித்து இடது கையில் அணிந்திருந்த புலி
நகத்தால் அவன் வயிற்றைக் குத்தி இழுத்த வேகத்தில் அவன் வயிறு கிழிந்து உள்ளிருந்து
குடல் வெளியே விழுந்தது. காட்டெருமை போல இருந்த அப்சல்கான் அதைப் பொருட்படுத்தாமல்
வெளிவந்த தன் குடலை மேலே அணிந்திருந்த போர்வையால் மீண்டும் வயிற்றுக்குள் தள்ளி அது
வெளிவரா வண்ணம் இறுகக் கட்டிக் கொண்டு தன் பட்டா கத்தியைக் கொண்டு சிவாஜியைத் தாக்க
எத்தனித்தார். போரில் புலியான சிவாஜி அவனைத் தன் பட்டாக் கத்தியால் அடித்துத் தாக்கி
வீழ்த்தினார். 1659இல் சிவாஜியின் வாளுக்கு இரையானான் அப்சல்கான்.
இதெல்லாம்
க்ஷத்திரியர்களுக்கிடையே யான விவகாரம் என்று அமைச்சர் கிருஷ்ணாஜி பண்டிதர் வேடிக்கைப்
பார்க்க பார்ப்பதை விட்டு இவர் ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு சிவாஜி யோடு போரிட வந்தார்.
அவரை ஒரு பொருட்டாகவே கருதாத சிவாஜி, அந்தணர்களுக்குத் தீங்கு விளைப்பதை விரும்பாத
அந்த மாபெரும் வீரன் , அவரை விலக்கிவிட்டு அலட்சியப்படுத்தி விட்டு போய்க் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்துக்
கொண்டிருந்த சிவாஜி ராஜாவின் மெய்க்காவலன் ஒருவன் அந்த கிருஷ்ணாஜி பண்டிதரைத் தன் வாளால்
ஒரே வெட்டில் வெட்டி சாய்த்து விட்டான். தர்மத்தை இழந்த அந்த பண்டிதன் பிணமாகி விழுந்தான்.
முன்பே
சிவாஜி தன்னுடைய தளபதிகளுக்கு அறிவுறுத்தியிருந்தபடிக்கு அவர்கள் அனைவரும் வரும் வழி
நெடுக அப்சல்கான் படையை போகவிட்டு விட்டு மறைந்து கொண்டிருந்தார்கள். சிவாஜி அப்சல்கானைப்
பழி தீர்த்தவுடன் நாகரா மூலம் தகவல் அனுப்பப்படும் என்று சொல்லியிருந்தபடி நாகரா ஒலிக்கப்பட்டது.
ஓசை கேட்கும் தூரத்தில் இருந்த இன்னொரு இடத்தில் இந்த சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த
நாகரா ஒலிக்கப்பட்டு, இப்படியே வழி நெடுக இருந்த கோட்டைகளுக்கெல்லாம் தகவல் அறிவிக்கப்பட்டு
விட்டது. அப்சல்கான் விழுந்த உடனே அவனுடைய படைகளை சிவாஜியின் படை சூழ்ந்து கொண்டு அதை
சின்னாபின்னப் படுத்திவிட்டது. சிறை பிடிக்கப்பட்ட அப்சல்கானின் சர்தார்களை சிவாஜி
ராஜா மரியாதைகளோடு திரும்பச் செல்ல அனுமதித்தார். இந்த செய்திகள் எல்லாம் பிஜப்பூர்
சுல்தான் அலியடில்ஷாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. தன்னுடைய சூழ்ச்சி பலிக்காததோடு தான்
பெரிதும் நம்பியிருந்த அப்சல்கான் கொலையுண்டது அவருக்கு பெரும் வருத்தத்தை அளித்தது.
அவன் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை. சிவாஜி ராஜாவின் அண்ணன் சம்பாஜியைப் போரில் கொன்ற
போது சிவாஜி ராஜாவும் அப்படித்தானே வருந்தியிருப்பார்கள். இதை உணராதவராக அலியடில்ஷா
இப்போது தன் நம்பிக்கைக்குரிய தளபதி இறந்ததற்காக வருத்தப்படுவது எப்படி சரியாகும்.
சிவாஜி
புனேயில் இருக்கும் போதே அலியடில்ஷா தன்னை அழிக்க அப்சல்கானை அனுப்புகிறார் என்கிற
செய்தியைக் கேள்விப்பட்டு தன் உடனடியாக புறப்பட்டு வழிநெடுக தக்க ஏற்பாடுகளைச் செய்து
விட்டு அப்சல்கானைத் தன்னுடைய இடத்தில் வைத்து ஒழித்து விட திட்டமிட்டார். அதன்படி
எல்லாம் முடிந்தது. அவர் புனேயை விட்டு புறப்படும் முன்பாக அங்கு நேதாஜி என்பவரை அங்கு
பார்த்துக் கொள்ளும்படி ஏற்பாடு செய்துவிட்டு வந்திருந்தார். அலியடில்ஷா தன் தளபதி அப்சல்கான் இறந்த கோபத்தில்
பெரும் படையொன்றைத் திரட்டி வருகிறான் என்கிற செய்தி நேதாஜிக்குக் கிடைத்தது. உடனே
அந்தத் தகவனை சிவாஜி ராஜாவுக்கு தெரியப்படித்தினார்.
இவற்றையெல்லாம்
எதிர்பார்த்திருந்த சிவாஜி தன்னுடைய பெரும் படையுடன் புறப்பட்டு வழியில் அலியடில்ஷாவுக்குச்
சொந்தமான பல கோட்டைகளைப் பிடித்துக் கொண்டார். அவர்களில் ஒருவனான ஹிலால்கான் என்பவன்
சிவாஜியிடம் சரணடைந்து அவர் பக்கம் போய்விட்டான். கட்சித் தாவல் அப்போதே இருந்திருக்கிறது.
சிவாஜி ராஜா தான் வென்ற இடங்களில் எல்லாம் கோட்டைகளைத் தன் தளபதிகள் வசம் பாதுகாப்பாக
இருக்க வைத்துவிட்டு பனால்கட் எனுமிடத்தில் இருந்த கோட்டையைக் கைப்பற்றி அங்கே தங்கினார்.
சிவாஜி இந்தக் கோட்டையைத் தாக்கக் கூடும் என்பதை அறிந்திருந்த அலியடில்ஷா ருஸ்தும்கான்
என்பவரை அனுப்பி விவரம் தெரிந்து வர அனுப்பினார். அவர் சென்று சிவாஜி பனால்கட்கெடியைப்
பிடித்துக் கொண்டு அங்கே தங்கியிருக்கும் விவரத்தை அலியடில்ஷாவுக்குத் தெரியப்படுத்தினார்.
தோல்வியைத்
தாங்கிக் கொள்ள முடியாத அலியடில்ஷா இந்த விவரங்களையெல்லாம் டெல்லி பாதுஷா ஒளரங்கசீபுக்குச்
சொல்லி அனுப்பினார். இதனைக் கேட்ட ஒளரங்கசீப் கோபமடைந்து ஜுல்ப்கர் கான் என்பவரின்
தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பினார். இந்த டெல்லி படையுடன் ருஸ்தும்கான் படையும்
சேர்ந்து கொண்டு சிவாஜி இருக்கும் பனால்கட் கோட்டையை நோக்கி வந்தன. இப்படி டெல்லி பாதுஷா படையும், ருஸ்தும்கான் படையும்
தன்னைத் தாக்க வரும் செய்தியறிந்து சிவாஜி தன் கோட்டையை விட்டு புறப்பட்டு எதிரியின்
படைகள் வரும் வழியில் குறுக்கிட்டு அவர்கள் எதிர்பாராத படிதாக்கி அவர்களைத் தோற்கடித்து
விரட்டியடித்தார். ஓடியவர்கள் திரும்பத் திரும்ப வந்து சிவாஜியைத் தாக்க முயன்றும்
ஒன்றும் செய்யமுடியாமல் தோற்றுப் போயினர்.
தன்
படை, அலியடில்ஷாவின் சுல்ப்கர்கான் படையும் சிவாஜியிடம் தோற்ற செய்தியைக் கேட்டு ஒளரங்கசீப்
கோபமடைந்து சிவாஜி இருக்குமிடத்தை விசாரித்தார். சிவாஜி எதிரிகளின் கோட்டைகளையெல்லாம்
ஒன்றன் பின் ஒன்றாக வென்று விட்டதையும், சிவாஜியின் படை நேதாஜி தலைமையில் மேலும் பல
கோட்டைகளை வென்றெடுக்க முயல்வதையும் கேள்விப் பட்டார். உடனே ஒளரங்கசீப் தன் மாமனாரான
சயிஷ்டாகான் என்பவரை அழைத்து பல தளபதிகளின் தலைமையில் பெரும்படையொன்றை அனுப்பி எப்படியாவது
சிவாஜியைப் பிடித்து வருமாறு பணித்தார். அதன்படி சயிஷ்டாகான் பெரும் படையோடு சிவாஜி
இருக்குமிடம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். இதற்கிடையே அலியடில்ஷா சிவாஜியின் திறமைகள்
சூழ்ச்சிகள் அனைத்தும் அறிந்தவனாக இருந்தமையால், சயிஷ்டாகான் வருவதை அறிந்தால் சிவாஜி
அவரை வழிமறிக்க வாய்ப்பிருப்பதால், அவரை பனால்கட் கோட்டையிலிருந்து வெளிவராத படி கொட்டையை
முற்றுகை யிடுமாறு ஜோகர்கான் என்பவர் தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தார். அதன்படியே
ஜோகர்கான் தன் படையுடன் சென்று பனால்கட் கோட்டையை கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் முற்றுகையிட்டார்.
ஒளரங்கசீபின்
மாமனாரான சயிஷ்டாகான் சக்ராபதி கோட்டையை முற்றுகை யிட்டார். இப்படி தான் இருக்கும்
கோட்டையையும், சக்ராபதி கோட்டையும் எதிரியின் படைகள் முற்றுகை இட்டிருப்பதைப் பற்றி
சிவாஜி பொருட்படுத்தவில்லை. ஜீஜாபாய் தன் மகன் சிவாஜி பனாலகெடி கோட்டையில் மாட்டிக்
கொண்டிருக்கிறார் என்கிற செய்தியைக் கேள்விப் பட்டார். சயிஷ்டாகான் சக்ராபதி கோட்டையை
முற்றுகையிட்டிருக்கும் செய்தியையும் கேள்விப் பட்டார். தன் மகனை எப்படியும் இந்த இக்கட்டான
சந்தர்ப்பத்தில் காப்பாற்றி வெளிக்கொணர வேண்டுமென்று ஜீஜாபாய் திட்டமிட்டார். சிவாஜியின்
புனா தளபது நேதாஜியும் இன்னொரு தளபதியான ஷிலால் கான் என்பவரும் அப்போது ஜீஜாபாயைச்
சந்திக்க வந்திருந்தனர். அவர் கேட்டுக் கொண்டபடி
சிவாஜியை மீட்பதற்காக அவ்விருவரும் பனால்கெடி கோட்டைக்குப் படையுடன் புறப்பட்டார்கள்.
அவர்களை சயிஷ்டாகான் வழிமறித்தான். அப்போது நடந்த போரில் சிவாஜிக்கு ஆதரவாகச் சென்ற
தளபதி ஷிலால்கானின் மகன் இறந்து போனான். இதையெல்லாம் சிவாஜி ராஜா கேள்விப்பட்டு வருத்தமடைந்தார்.
துளசி பவானி அம்மனை வேண்டிக் கொண்டு படுத்தார். நள்ளிரவில் எழுந்து பனாலாகெடிக்கு திரயம்பக
பாஸ்கர் என்பவரைக் காவலுக்கு வைத்துவிட்டு ஒருவரும் அறியா வண்ணம் இவர் கோட்டையை விட்டு
வெளிப்போந்து ஐந்து காத தூரத்தில் இருந்த விசால்கட் கோட்டையைச் சென்றடைந்தார். இதை
அறிந்த டெல்லி படைத் தளபதி சிவாஜியைப் பிடித்து வர படையை அனுப்பினான். இதற்கிடையே பல்லிவனத்தரசர்
எசவந்த ராஜாவும், ஸ்ரீஉங்கார்பூர் சூரியராஜாவும் விசால்கட் கோட்டையைப் பிடித்துக் கொள்ள
முற்றுகை யிட்டனர். சிவாஜி அங்கிருந்தும் புறப்பட்டு ராஜகெடிக்குச் சென்று அங்கே இருந்த
தாய் ஜீஜாபாயைச் சந்தித்து வணங்கினார். சிவாஜியைப் பிடிப்பதற்காக அனுப்பப்பட்ட டெல்லி
தளபதி தன் இயலாமை குறித்து அவமானப் பட்டுத் திரும்பிப் போய்விட்டார்.
சிவாஜியின்
ஆணைப்படி திரயபக பாஸ்கர் பனாலகெடி கோட்டையை ஜோகர்கானிடம் ஒப்படைத்துவிட்டு சிவாஜியிடம்
திரும்பி வந்தார். அலியடில்ஷாவுக்கு ஜோகர்கான் மீது சந்தேகம். இவன் சிவாஜிக்கு உடந்தையாக
இருந்துய் அவரை விட்டுவிட்டான் என்று கருதினார். அதனால் அவனை அழைத்து சிவாஜியை விடுவித்ததற்காக
உனக்கு என்ன கிடைத்ததோ அதை என்னிடம் கொடுத்திவிடு என்றார். தன் மீது சந்தேகம் கொண்டு
இப்படிக் கேட்கிறார் அலியடில்ஷா என்பதறிந்து ஜோகர்கான் அங்கிருந்து புறப்பட்டு கர்னூலுக்குப்
போய்விட்டான். இவன் இப்படித் தப்பிப் போய்விட்டான் என்று கருதிய அலியடில்ஷா ஒரு படையை
அனுப்பி ஜோகர்கானுக்குத் தக்க பாடம் புகட்டும்படி சொல்லி அனுப்பினார். அவர்கள் சென்று
ஜோகர்கானுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டனர்.
சிவாஜிக்கு
ஒரு ரகசிய செய்தி வந்தது. சயிஷ்டாகான், கரதலப் கான் என்பவனுடன் ஒரு படையை அழைத்துக்
கொண்டு ராஜகெடி கோட்டைக்கு வந்திருப்பதாக சிவாஜிக்குத் தகவல் கிடைத்தது. அவர் ரகசியமாக
ஒரு சிறிய படையை ஜெயவலி எனும் பகுதியில் காட்டில் மறைவாகப் பதுங்கியிருக்குமாறு அனுப்பி
வைத்தார். இந்த கரதலப் கான் வழிநெடுக பல கோட்டைகளைப் பிடித்துக் கொண்டு சிவாஜியின்
படை மறைந்திருக்கும் காட்டுப் பகுதிக்குள் நுழைந்தான். அப்போத் கரதலப் கான் படைக்கும்,
சிவாஜி படைக்கும் கடும் போர் நிகழ்ந்தது. போரின் முடிவு தனக்கு சாதகமாக இருக்காது,
தான் இறப்பதும் நிச்சயம் என்று தெரிந்த வுடன் அந்த கரதலப் கான் தான் கொள்ளையடித்த பொருட்கள்
அனைத்தையும் சிவாஜி படையிடம் ஒப்படைத்துவிட்டுத் தன்னைத் தூண்டி அனுப்பி வைத்த சயிஷ்டாகானிடம்
போய்ச் சேர்ந்தான்.
சிவாஜி
தன்னுடைய நண்பன் நேதாஜியுடன் படைகளுடன் புறப்பட்டு வல்லிவனத்துக்குச் சென்றார். அங்கு
ஜெயவந்தி ராஜா என்பவர் அரசாண்டு கொண்டிருந்தார். இவர்கள் வல்லிவனத்துக்குப் போயிருந்த
சமயம் அதன் அரசர் சிருங்கார்ப்பூர் எனும் பிரதேசத்தின் அரசரான சூர்யராஜா என்பவரிடம்
போயிருந்தார். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சிவாஜி ராஜா சித்ரபுளினம்
எனுமிடத்துக்குச் சென்றார். அங்கிருந்து மேலைக் கடற்கரைப் பகுதிகளுக்கெல்லாம் சென்று
அங்கிருந்த சிற்றரசர்களை யெல்லாம் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து அங்கு வாணிபம்
செய்ய வந்து இறங்கியிருந்த ஐரோப்பிய வெள்ளையின மக்களையும் தனக்குக் கப்பம் செலுத்தும்படி
செய்துவிட்டு ஊர் திரும்பினார்.
பிறகு
சிவாஜி சித்ரதுர்க்கம் கோட்டையைப் பிடித்துக் கொண்டு அதற்கு மண்டன கட் என்று பெயர்
சூட்டினார். பெங்களூர், செஞ்சி ஆகிய பகுதிகளையும் கைப்பறிக் கொண்டு அப்போது வியாபாரம்
செய்ய வந்திறங்கியிருந்த பிரெஞ்சுக் காரர்களை 1680இல் சந்தித்து அவர்களுடன் ஒரு உடன்படிக்கை
செய்து கொண்டு புனேவுக்குத் திரும்பினார்.
இப்படி
சிவாஜி ராஜா எவருக்கும் அடிபணியாத, எந்தப் போரிலும் வெற்றி பெற்று, தேவையான இடங்களில்
சூழ்ச்சி செய்து யாரிடமும் தோல்வியடையாமல் தொடர்ந்து தன் வீரப்பயணத்தைச் செய்வது கண்டு
அலியடில்ஷாவும், ஒளரங்கசீபும் சிவாஜியின் போர்த்திறமை குறித்து வியந்து போனார்கள்.
திரும்பத் திரும்ப சிவாஜியோடு மோதி சண்டையிட்டு தோல்வியடைவதினும் சும்மா இருப்பதே சுகம்
என்று தீர்மானித்தனர். இருந்தாலும் ஒளரங்கசீபுக்கு இந்த சிவாஜியை உயிரோடு பிடித்துக்
கொண்டு வந்து நேரில் பார்க்க வேண்டுமென்கிற ஆசை ஏற்பட்டது. அந்த ஆசை இதுவரை நிறைவேறவில்லை.
சிவாஜியின் ஒரு உருவப் படத்தையாவது பார்க்கவேண்டுமென்று ஒளரங்கசீப் சொல்ல, ஒரு சித்திரம்
வரைவோன் போய் சிவாஜியைப் பல இடங்களிலும் தேடியும் அவர் இருக்குமிடம் மட்டும் தெரியவே
இல்லை. அப்படி அந்தச் சித்திரக்காரன் அவர் படத்தை வரைய திண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில்
ஒரு நாள் சிவாஜி ஒரு குதிரையின் மீதேறி படு வேகமாக ஓட்டிச் சென்று கொண்டே அருகில் விளைந்திருந்த
சோளக் கதிர்களைப் பறித்துத் தின்றுவிட்டு அதன் சக்கையை குதிரைக்கு ஊட்டிவிட்டதை அவன்
பார்த்தான். உடனே அதை மனதில் வாங்கிக் கொண்டு அவன் சிவாஜியை ஒரு படம் வரைந்து ஒளரங்கசீபுக்கு
அனுப்பி வைத்தான். அந்தப் படத்தில் சிவாஜி பயணித்த வேகம், அவர் சோளக் கதிரை பறித்த
லாவகம், அதைத் தின்றுவிட்டு சக்கையை குதிரைக்குக் கொடுத்தது கண்டு ஒளரங்கசீப் வியந்து
போய், இந்த மாவீரனை வெல்வது என்பது இயலாது என்ற முடிவுக்கு வந்தார்.
இதன்
பிறகு சிவாஜி தன் அண்ணன் சம்பாஜியின் மனைவி மக்களையெல்லாம் கூட்டிக் கொண்டு ராஜாபுரத்தில்
கொண்டு போய்த் தங்க வைத்தார். சம்பாஜியின் மகன் உமாஜி, அவர் மனைவி சக்குபாயி, அவர்களுக்கு
ஒரு மகன் ஆகியோர் இருந்தனர். அந்த குழந்தைக்கு பரசோஜி என்று பெயர்.
ஷாஜியின்
முதல் மனைவியின் மகன் ஏகோஜி என்பதால் ஷாஜியின் விருதுகள் அனைத்தும் அவருக்குக் கிடைத்தன.
ஏகோஜி தன் மனைவியரான தீபா பாயி, சயி பாயி ஆகியோருடன் தன் படையுடன் பெங்களூருக்குப்
புறப்பட்டுச் சென்றார். இந்த சமயத்தில் அலியடில்ஷா ஏகோஜியுடன் நல்லுறவை ஏற்படுத்திக்
கொள்ள விரும்பி அவருடன் பேசி அவரைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டதோடு அவரை பெங்களூரில்
இருக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
இந்த
காலகட்டத்தில் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த விஜயராகவ நாயக்கருக்கும், மதுரை சொக்கநாத
நாயக்கர் அவர் தம்பி அழகிரி நாயக்கர் ஆகியோருடன் பெண் கொடுத்தல் விஷயமாக விரோதம் உன்டாகி
மதுரைக் காரர்கள் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்து விஜயராகவ நாயக்கரையும் அவர் மகனையும்
போரில் கொன்று விட்டனர். விஜயராகவ நாயக்கர் தான் போருக்குப் போகும் முன்பாக தன் நம்பிக்கைக்கு
உரிய ஆள் ஒருவரிடம் சொல்லி தான் போரில் மாண்டு போனால் தன் அந்தப்புரப் பெண்கள் யாரும்
மதுரை நாயக்கர் வசம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றும் அப்படி நேருமானால் அரண்மனையின்
அந்தப் புரத்தை வெடிவைத்துத் தகர்த்துவிட வேண்டுமென்று சொல்லிவிட்டுப் போனார். அதன்படி
அவர் மாண்ட பின் அரண்மனை அந்தப்புரம் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. எல்லா பெண்களும்
உயிரிழந்தனர். அதில் விஜயராகவ நாயக்கரின் பேரக் குழந்தை ஒன்று மட்டும் தப்பிப் பிழைத்தது.
அந்த செங்கமலதாஸ் எனும் குழந்தையை ஒரு ஆயா நாகைப்பட்டணம் கொண்டு போய் வளர்த்தாள். இந்த
செய்தி அறிந்த ராயசம் வெங்கண்ணா எனும் அமைச்சர் அந்தப் பையனை வளர்ந்து இளைஞனாக இருந்த
நேரத்தில் பல வீரர்களுடன் சென்று அலியடில்ஷாவிடம் முறையிட்டு இந்தச் சிறுவன் தான் தஞ்சைக்கு
வாரிசு என்றும், மதுரை நாயக்கர்கள் தஞ்சையை ஆக்கிரமித்துக் கொன்டிருக்கிறார்கள் என்பதைச்
சொல்லி இந்த பையன் செங்கமலதாசுக்கு ஆட்சியை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி
அலியடில்ஷா பெங்களுரில் இருந்த ஏகோஜியை அழைத்து தன் தளபதிகள் ஏதில்ஷா, காதர் கலாஸ்கான்
எனும் இருவரையும் அனுப்பி தஞ்சையை மீட்டுக் கொடுக்கச் சொன்னார். அவர்கள் ஏகோஜி தலைமையில்
வந்து தஞ்சையை மீட்டு செங்கமலதாசுக்குக் கொடுத்தனர். வரும் வழியில் அவர்கள் ஆரணியை
வென்று அங்கு வேதாஜி பாஸ்கர் என்பவர் வசம் கொடுத்துவிட்டு தஞ்சையை மீட்டுக் கொடுத்தனர்.
அப்படிச் செய்துவிட்டு ஏகோஜி ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தபோது திருமழபாடி எனும்
இடத்தில் 1596இல் அவருடைய மனைவி தீபாபாயிக்கு
ஒரு மகன் பிறந்தான். அவருக்கு சரபோஜி என்று பெயரிட்டார். மீட்டுக் கொடுத்த தஞ்சாவூரில்
மீன்டும் தகராறு ஏற்பட்டு ஏகோஜியிடம் பஞ்சாயத்துக்குப் போன பொது அவரையே தஞ்சையை எடுத்துக்
கொள்ள வேண்டுமென்று கேட்டதால், அவர் அலியடில்ஷாவுக்குச் சொல்லி அவர் அனுமதியுடன் தஞ்சைக்குத்
திரும்பி அரசராக ஆனார். அலியடில்ஷா அனுப்பி வைத்த சர்தார்களான இருவரையும் நிறைய பரிசுப்
பொருட்களுடன் திரும்ப அனுப்பி வைத்தார்.
சிவாஜிக்கு
எட்டு மனைவியர், அவர்கள் சயிபாயி, காசிபாயி, சக்வராபாயி, புதுனாபாயி, சகுணாபாயி, சோயரிபாயி,
மாளவோ, விசாரே குலத்திலிருந்து இரு பெண்கல் ஆகியோர் ஆக எண்மர். இதில் மூத்த மனைவி சயிபாயிக்கு
மூன்று பெண் குழந்தைகள். 1596இல் ஆண் குழந்தை சம்பாஜி பிறந்தார். சிவாஜியின் மூத்த
பெண் சக்குவார்பாயியை நிம்பல்கர் குடும்பத்திலும், இரண்டாவது பெண் ராணு பாயியை ஜாதவ்
குடும்பத்திலும், மூன்றாவது பெண் அம்பிகா பாயியை மாடிக் குடும்பத்திலும் திருமணம் செய்து
கொடுத்தார். மாடிக் குடும்பத்தாருக்கு ஷாஜி செஞ்சிப் பகுதியில் சில பகுதிகளைக் கொடுத்தார்.
சிவாஜியின்
இன்னொரு மனைவியான சக்வராபாயிக்குக் கமலா பாயி என்றொரு பெண், இவளை சிவாஜி, நேதோஜி என்பவருக்குத்
திருமணம் செய்து கொடுத்தார். சுகுணா பாயிக்கு
ராஜகுமாரா பாயி என்றொரு பெண் இருந்தாள். இவளை கேனோஜி சிற்கே என்பவருக்கு மணம் முடித்துக்
கொடுத்தார். சிவாஜியின் இன்னொரு மனைவி சோயரி பாயிக்கு ராஜராஜா என்ற ஒரு மகனும் தாது
பாயி எனும் ஒரு மகளும் இருந்தனர். மற்ற மனைவியருக்கு மக்கட்பேறு இல்லை.
சிவாஜி
தன் மூத்த மகன் சம்பாஜிக்கு 1602இல் பட்டம் கட்டி புனே பகுதியையும், இன்னொரு மகன் ராஜா
ராம் என்பவருக்கு செஞ்சி அரசையும் அளித்தார். அதன் பின் புனே சுல்தான்கள் வசம் போய்விட்டது. ராஜாராம் செஞ்சியை விட்டு நீங்கி மீண்டும் தந்தையிடம்
சென்ற பிறகு அவருக்கு பனாலகெட் கோட்டை கொடுக்கப்பட்டது.
ஒரு
முறை சிவாஜி ராஜா ராமேஸ்வரம் யாத்திரை சென்று தனியொரு ஆளாகத் திரும்பி வந்து கொண்டிருந்த
போது ஏகோஜியின் ஆட்சியின் கீழ் இருந்த தஞ்சாவூருக்கு வந்திருந்தார். இவர் வந்தது ஏகோஜிக்குக்
கூட தெரியாது. சிவாஜி ராஜா ஊருக்குள் வந்து தஞ்சாவூர் கோட்டையை நன்கு சுற்றிப் பார்த்தார்.
தன் வழிப்பயணத்துக்கு பணம் தேவைப் பட்டதால், தன்னுடைய தலைப்பாகை, மோதிரம் இவற்றை ஒரு கடையில் அடமானம்
வைத்து பணம் வாங்கிக் கொண்டு ஊர் திரும்புகையில் திருமானூர் அருகில் கொள்ளிட வெள்ளத்தில்
மாட்டிக் கொண்டு அங்கிருந்த கிராம மக்களால் யார் என்றே இவ்ரைத் தெரியாமல் காப்பாற்றி
கரை சேர்த்தனர். இதில் சிவாஜி ராஜாவின் குதிரையும் ஆற்று வெள்ளத்தில் போனதை கிராம மக்கள்
காப்பாற்றினர். சிவாஜி ராஜாவுக்கு காய்ச்சல் வந்து சில நாட்கள் அந்த கிராம மக்கள் பாதுகாப்பளித்து
சுகப்படுத்தினர். உடல் நலம் பெற்றதும் இவர் விடை பெற்றுக் கொண்ட பொதும் அவர் தன்னை
யார் என்று அறிமுகம் செய்து கொள்ளாமலே ஊர் திரும்பிய சமயம் அவ்வூர் மக்களுக்கு இரு
குறுவாளையும் ஒரு கேடயத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டுச் சென்றார். (ஒய்.பி.சவான்
மகாராஷ்ட்ரா மாநில முதல்வராக இருந்த போது மும்பையிலிருந்து வந்த ஒரு ஆய்வுக் குழு,
திருமானூர் அருகில் கொள்ளிடக் கரையருகில் இருந்த ஒரு பவானி அம்மன் ஆலயத்தில் சத்ரபதி
சிவாஜி அந்த கிராம மக்களுக்குக் கொடுத்த இரு குறு வாட்களும் கேடயமும் அம்மன் விக்ரகத்துக்குப்
பின்புறம் சுவற்றில் மாட்டப்பட்டிருந்ததை, சிவாஜியினுடையது என்பதைக் கண்டு பிடித்து
எடுத்துச் சென்ற வரலாறு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜியின் 1974இல் அவர் முடிசூடிய
300ஆம் ஆண்டு விழா மலரில் வெளிவந்தது). சிவாஜி ராஜா ஊர் திரும்பிய பிறகு தஞ்சை ஏகோஜிக்கு
ஒரு கடிதம் எழுதி தான் தஞ்சையில் ஓரிடத்தில் தன் தலைப்பாகை, மோதிரம் இவற்றை அடகு வைத்திருப்பதைச்
சொல்லி அதனை மீட்டு தனக்கு அனுப்புமாறு கடிதம் எழுதினார் என்கிற செய்தி, இரண்டாம் சரபோஜி
எழுதி தஞ்சை ஆலயத்தில் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருக்கிற “போன்ஸ்லே வம்சத்து வரலாறு”
எனும் பகுதியில் விவரங்கள் காணப்படுகின்றன. இது இப்போது நூலாகவும் வெளிவந்திருக்கிறது.
சத்ரபதி
சிவாஜி தன்னுடைய வீரத்தினாலும், தட்சிண சுல்தான்களையும், டெல்லி பாதுஷாவையும் எதிர்த்துப்
போரிட்டு மேற்குப் பகுதியில் பற்பல கோட்டைகளைத் தனதாக்கிக் கொண்டு எதிரிகளுக்கு சிம்ம
சொப்பனமாக இருந்தவர், தனது 53ஆம் வயதில் 3-4-1680இல் காலமானார். சத்ரபதி சிவாஜியின்
புகழும் வீரமும் காலம் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் வீர காவியம் ஆகும். வாழ்க சத்ரபதி
சிவாஜி மகராஜ் புகழ்!!
No comments:
Post a Comment