பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, June 3, 2017

“நன்னெறி” Part V

    
இந்தப் பகுதியில் “நன்னெறி”யில் பாடல் 21 முதல் 25 வரையில் பாடலுடன் உரையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற பாடல்களுக்கும் விளக்கம் தொடர்ந்து வரும்...

            21. இலக்கணம் கல்லார் அறிவு கற்றார் அறிவுக்குமுன் செல்லாது.


எழுத்தறியார் கல்விப்பெருக்கம் அனைத்தும் 
எழுத்தறிவார்க் காணின் இலையாம்; - எழுத்தறிவார்
ஆயும் கடவுள் அவிர்சடைமுடி கண்டளவில்
வீயும் சுரநீர் மிகை.

பகீரதன் எனும் மன்னனின் முன்னோர்கள் இறந்து போய் அவர்களுடைய அஸ்தியெல்லாம் குவியல் குவியலாகக் கிடந்தன, இறந்த அவன் முன்னோர்கள் நற்கதியடையவேண்டுமானால் அவற்றை தேவலோகத்து நதியான கங்கையில் கரைத்தால் அவர்களுக்கு மோட்சம் கிட்டும் என்று பெரியோர்கள் சொன்னதால், மன்னன் பகீரதன் அந்த கங்கையை வேண்டி கடும் தவம் செய்கிறான். கங்கை அவன் முன் தோன்றி தான் தேவலோகத்திலிருந்து கீழே பூமிக்கு வரத்தயார், ஆனால் தான் பூமிக்கு வந்திறங்கும்போது வரும் வேகத்தை இங்கு யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது, ஆகையால் நீ பரமேஸ்வரனை நோக்கித் தவம் செய், அவர் பூமியில் விழும் கங்கையைத் தாங்கிக் கொள்ளலாம் என்றதால் மீண்டும் பகிரதன் தவம் செய்கிறான். சிவபெருமான் அவன் முன் தோன்றி கங்கை சொன்னதைச் சொல்கிறான். ஓகோ கங்கைக்கு அவ்வளவு கர்வமா, அவள் பூமிக்கு இறங்கி வரட்டும் நான் தாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி, தன் ஜடாமுடியை விரித்துவைத்துக் கொண்டு கங்கை பூமிக்கு வருவதற்குத் தயாராக இருக்கிறார்.

கங்கையும் படுவேகமாக பூமியில் இறங்கும்போது, அவளை சிவன் தன் ஜடாமுடிக்குள் விழுந்ததும், ஜடாமுடியை இழுத்துக் கட்டி அதனுள் கங்கையை அடக்கி விடுகிறார். கங்கையின் மனதில் இருந்த கர்வம் அடங்கிப் போகிறது என்கிறது புராணம். அதைப் போல பல்துறை நூல்களையெல்லாம் கற்று அவற்றின் செய்திகளையெல்லாம் தனதாக்கிக் கொண்டு அறிவில் சிறந்து விளங்கும் கற்றவர்களு முன்னிலையில் கல்வியறிவு என்பதே இல்லாதவர் அடங்கி இருப்பர் என்கிறது இந்தப் பாடல்.

                          22. அறிவுடையோர் உயர்குலத்தவர் அறிவிலார் இழிகுலத்தவர்


ஆக்கும் அறிவான் அல்லது பிறப்பினால் 
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க; - நீக்கு
பவர்ஆர் அரவின் பருமணிகண்டு?  என்றும்
கவரார் கடலின் கடு.

இந்தப் பாடலில் இரண்டு உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று கடும் விஷமுள்ள நாகப்பாம்பு வயது முதிர்ந்த காலத்தில் தன்னுள் இருக்கும் விஷத்தை ஒளிவீசும் நாகரத்தினம் எனும் விலைமதிப்பற்ற மணியைத் தரும். அது விஷமுள்ள பாம்பிடமிருந்து கிடைத்தது என்பதால் மக்கள் நிராகரிப்பதில்லை, மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து ஆலகால விஷம் வெளிப்படுகிறது. முன்பு சொன்ன நாகரத்தினக்கல் விஷப்பாம்பிடமிருந்து வந்தது ஆனால் இப்போது நல்ல பாற்கடலில் உருவாகிறது ஆலகால விஷம். பாம்பு தந்த கல்லை விரும்பிப் பெற்றதுபோல் இந்த ஆலகால விஷத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா? நிராகரித்துவிடுகிறார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நன்கு கற்றுத் தேர்ந்து அறிவாற்றல் மிக்கவர்களாக மக்கள் நன்மதிப்பைப் பெற்றவர்கள் மட்டுமே மேலோராகக் கருதப்பட வேண்டும். ஏனைய கல்வியறிவில்லாத, தீய குணங்களையுடையோர் என்னதான் செல்வம் படைத்தவராக இருந்தாலும் அவர்கள் கீழ்மக்களே. மேலோர் கீழோர் என்று அடையாளம் காண இந்த எடுத்துக்காட்டுகள் உதவுகின்றன அல்லவா?


23. மனவுறுதியை விட்டுவிடலாகாது

பகர்ச்சி மடவார் பயிலநொன்பு ஆற்றல்
திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி 
பெறும்பூரிக் கின்றமுலை பேதாய்!  பலகால்
எறும்பூரக் கல்குழியுமே.

எறும்பூரக் கல் தேயும்” என்றொரு பழமொழி இருக்கிறதல்லவா? எறும்புகள் புற்றிலிருந்து புறப்பட்டு போகும்போது அவரி ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில் ஒரே வழியில் செல்லும். அப்படித் தொடர்ந்து பாறையின் மீது எறும்பு ஊரிச் செல்லுமாயின் அந்த பாறையில் அவை சென்ற தடம் பதிந்து விடும்.

அதுபோலவே, இளம் பெண்களுடன் மிக நெருக்கமாகப் பழகிக் கொண்டிருந்தால், தீய எண்ணம் எதுவும் இல்லாமல் நல்ல முறையில் பழகிவந்தாலும் கூட அதனால் மனம் சில சமயம் பிறழ்ந்து அதுவரை அவன் கட்டிக்காத்து வந்த பிரம்மச்சர்யம் எனும் மனவுறுதி தளர்ந்து வலிமை இழக்க நேரிடும். ஆகவே தன் மனவுறுதி கெடாமல் இருக்க வேண்டுமானால், பிற பெண்களுடன் பழகும்போது இந்த நீதியை மனதில் கொள்ளுதல் நலம்.

                                24. ஓருவர்தம் நற்குணத்தையே பேசுதல் வேண்டும்


உண்டு குணமிங்கு ஒருவர்க்கு எனினும்கீழ் 
கொண்டு புகல்வதவர் குற்றமே;  - வண்டுமலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பன்றோ
காக்கை விரும்பும் கனி.

பூத்துக்குலுங்கும் மலர்த்தோட்டத்தில் ஏராளமான மலர்கள் பூத்திருக்கும். தேனருந்த வரும் வண்டுகள் அந்த தேனொழுகும் மலரில் அமர்ந்து தேனுண்ண மணம் வீசும் உயர்ந்த மலர்களை வந்தடையும். ஆனால் இடுகாட்டில் பிணந்தின்னும் காக்கை அழுகிய பொருட்களைத்தான் விரும்பித் தின்னுமே தவிர சுவை பொருந்திய நல்ல மணம் வீசும் பழங்களையா விரும்பி உண்ணும்? உண்ணாது அல்லவா?

அதைப் போல இங்கு என்னதான் உயர்ந்த குணங்களையுடையவர்களாக இருந்தபோதும், நல்ல செய்கைகள் உடையவர்களாக இருந்தாலும், கீழ்மக்கள் அவரிடமுள்ள குறைகளை மட்டுமே பெரிதாக எடுத்துக் காட்டுவார்களே தவிர அவரது நல்ல குணங்களைப் பாராட்ட மாட்டார்கள்.


25. மூடர் நட்புக் கூடாது

கல்லா அறிவின் கயவர்பால் கற்றுணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே;  - வில்லார் 
கணையிற் பொலியுங் கருங்கண்ணாய்! நொய்துஆம்
புணையிற் புகும்ஒண் பொருள்.


வில்லினில் பூட்டப்பட்ட அம்பின் முனையை ஒத்த கூர்மையான கண்களையுடைய பெண்ணே! கேள்! நீரில் மிதக்கும் தெப்பம் இருக்கிறதே, அதன் மீது கனமான பொருள்களை ஏற்றினாலும் அந்த கனத்தால் அந்தத் தெப்பம் மூழ்கியா விடுகிறது? இல்லையல்லவா. மிதக்கும் தெப்பத்தின் மீது ஏற்றப்பட்ட கனமான பொருள் எப்படி தனது கனத்தை அங்கு இழக்கிறதோ அதைப் போல கல்வி அறிவில்லாத மூடர்களிடம் சேர்ந்த சான்றோர்களும் தங்களுடைய பெருமைகளை இழந்து போய்விடுவர்.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வாழ்க்கைக்குத் தேவையான நன்னெறிகள். அவ்வப்போது தங்கள் தளத்தில் வாசிக்கிறேன். பதிவிற்கு நன்றி.