பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, June 4, 2017

"நன்னெறி" Part VIII

தன் நிறைவுப் பகுதி இது. இதில் 36ஆம் பாடல் முதல் 40ஆம் பாடல் வரையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் 40 பாடல்களையும் உரையோடு படிக்க  நல்ல வாய்ப்பு. நீதிநூல்களை நமது குழந்தைகளுக்குக் கற்பிப்பது சிறப்பு. இளம் வயதில் இதுபோன்ற நீதிகள் அவர்களது பிஞ்சு நெஞ்சில் பதியுமானால் எதிர்கால தலைமுறை சிறப்பாக அமையும். இதனை விரும்பிப் படித்துப் பாராட்டியோர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக டாக்டர் பி.ஜம்புலிங்கம் அவர்கள் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றி பணிநிறைவு பெற்ற அறிஞரின் பாராட்டுகளை பெரிதும் மதிக்கிறேன். நன்றி.

36. தக்கார்கே உதவுக

தக்கார்கே ஈவர் தகார்க்களிப்பார் இல்லென்று
மிக்கார்க் குதவார் விழுமியோர்; - எக்காலும் 
நெல்லுக்கு இரைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக்கு யிரைப்பரோ போய்.

வயல் வெளிகளிலும், தோட்டத்திலும் பயிர் செய்திருக்கின்ற நெற்பயிருக்கும் இதர பயிரினங்களுக்கும்தான் எல்லா காலத்திலும் நீர் இறைத்துப் பாய்ச்சுவார்கள். வீணாய் மண்டிக்கிடக்கிற புற்களுக்கும் புதர்களுக்குமா நீர் பாய்ச்சுவார்கள்? மாட்டார்கள் அல்லவா?

அதுபோல கற்றறிந்த மேன்மக்கள் ஏதேனும் கொடையளிக்க வேண்டுமென்றால் தக்கவர்களுக்கே கொடுத்து மகிழ்வார்கள். தகுதிகள் இல்லாத, குறையுடைய மக்களுக்குப் போய் இந்தா பெற்றுக்கொள் என்று கொடுப்பார்களா? மாட்டார்கள்.

37. பெரியோர் முன் த‌ற்புகழ்ச்சி கூடாது.

பெரியோர் முன் தன்னைப் புனைந்துரைத்த பேதை 
தரியா துயர்வகன்று தாழும்; - தெரியாய்கொல்
பொன்னுயர்வு தீர்த்த புணர் முலையாய்! விந்தமலை
தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.

முன்பொரு காலத்தில் நமது பாரத தேசத்தின் மையத்தில் இருந்த விந்திய மலை வளர்ந்து கொண்டே இருந்தது. தான் மேலும் மேலும் உயரமாக வளர்ந்து கொண்டு வருவதில் அந்த மலைக்கு ஒரு இறுமாப்பு. இதை உணர்ந்தார் கயிலை மலையில் இருந்த சிவபெருமான். இந்த விந்திய மலையின் அகந்தைக்கு ஒரு முடிவு கட்ட நினைத்து குறுமுனியாம் அகத்தியரை அழைத்துத் தாங்கள் தெற்கே செல்லுங்கள் என்று அவரைத் தென்பாரதத்துக்கு அனுப்பினார். அகத்தியரும் நடந்தே தென்னகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது விந்தியமலை அவருக்கு வழிவிடாமல் நெடிது வளர்ந்து வழியை மறைத்து நின்றது. அதன் அகந்தையை ஒழிக்க எண்ணி அகத்தியர் அதன் மீது ஏறிநின்று காலால் உதைத்து அந்த மலையைப் பாதாளத்துக்குள் அழுத்திவிட்டார். குறுமுனியின் வல்லமை தெரியாமல் அவரிடம் மாட்டிக்கொண்டு விந்தியமலை பாதாளத்தினுள் புகுந்தது. அகந்தை நம்மை அழித்துவிடும் என்பதற்கான பாடம் இது.

இது எதற்காக இங்கே சொல்லப்படுகிறது. கற்றறிந்த பெரியோர்களைச் சந்திக்கும்போது அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதைத் தெரிந்து கொள்ளத்தான். பெரியோர்களிடம் சென்று நாம் நம் தற்பெருமையைச் சொல்லி விளம்பரப்படுத்திக் கொள்ளுதல் கூடாது. அடக்கத்துடன் அவரிடம் மரியாதையாக நடந்து கொள்ளல் வேண்டும். அப்படியின்றி அவரிடம் நாம் தற்பெருமை பேசினால் விந்திய மலை பூமிக்குள் அழுந்தியதைப் போல நாமும் அமுங்கிப்போவோம்.

38. நல்லோர் நட்பு நன்மையே பயக்கும்

நல்லார்செயுங் கோண்மை நாடோ றும் நன்றாகும்
அல்லார்செயுங் கேண்மை ஆகாதே; - நல்லாய் கேள்! 
காய்முற்றின் தின்தீங் கனியாம் இளந்தளிர்நாள்
போய்முற்றின் என்னாகிப் போம்.

நல்லவளே கேள்! செடி கொடிகளில் மலர்ந்து பிஞ்சு வைத்து காயாகி பின்னர் கனியாகும்போது அது உண்ண இனிமையாக இருக்கும். ஆனால் செடியில் துளிர்விடும் இளம் தளிர் முற்ற முற்ற என்னாகும், முற்றிய இலையாகும் பின்னர் காய்ந்து போய் சருகாகும். ஆக இவ்விரண்டுக்குமுள்ள வேறுபாடுகளை கவனிக்க வேண்டும். ஒன்று காயாகி, கனிந்து உணவாகும், மற்றது முற்றி காய்ந்து சருகாகும்.

அதுபோல நல்லாரோடு இணக்கமாக இருந்து பழகினால் நன்மைகள் வரும்; தீயாரோடு சேர்ந்து பழகிக் கெட்டுப்போனால் தீமைகளே நம்மை வந்தடையும். நல்லோர் நட்பு நன்மை தரும், தீயோர் கேண்மை தீமையில் முடியும்.

39. மூடருடனான நட்பு கேடு பயக்கும்.

கற்றறியார் செய்யுங் கடுநட்பும்;  தாம்கூடி
உற்றுழியுந் தீமைநிகழ் வுள்ளதேபொற்றொடீஇ !
சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த
அன்றே மணமுடைய தாம்.

பொற்கொடியே! தோட்டத்தில் வளர்ந்த கொடி மெல்ல அருகிலுள்ள மரத்தின்மீது படர்ந்து உயரத்துக்குச் சென்று பூத்துக் குலுங்குகிறது. அந்த மலரின் நறுமணம் பூக்கின்ற அன்று மட்டும் சிறிது நேரம் இருக்கும், பின்னர் வாடி வதங்கிப் போய் நாற்றமெடுக்க ஆரம்பிக்கும் அல்லவா? அதுபோல கற்றறியா மூடருடன் கூடும் நட்பும் தொடருமானால் அதனால் தீமைகளே வந்து சேரும்.

40. புலவர்களுக்கு அரசர்களும் ஈடாகமாட்டார்கள்.

பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி 
மன்னும் அறிஞரைத்தாம் மற்றெவ்வார்; - மின்னுமணி
பூணும் பிறவுறுப்புப் பொன்னே! அதுபுனையாக் 
காணும் கண்ணொக்குமோ காண்.

நாம் ஆபரணங்களை அணிவதில் ஆசை கொள்கிறோம், அதிலும் பொன்னால் ஆன ஆபரணங்கள் என்றால் உடலெங்கும் அவற்றை எடுத்து அணிந்து கொள்கிறோம். கை, கால், கழுத்து, காது என்று உடலின் எல்லா பாகங்களிலும் பொன்னால் ஆன நகையை அணிந்து கொள்கிறோம். கண்களுக்கு மட்டும் எந்த ஆபரணமும் இல்லை அல்லவா? ஆனால் அந்த கண்ணுக்கு ஈடாக வேறு இந்த உறுப்புகளை ஈடாகச் சொல்ல முடியுமா? முடியாது. கண்கள்தான் சிறப்பானவை.

அதுபோல வேந்தர்கள் பகட்டான உடைகளும், தங்கக் கிரீடமும், கழுத்தில் ஆபரணங்களும் அணிந்து கொண்டு பளிச்சென்று தோன்றினாலும், அவைகள் எதையுமே அணியாத நன்கு கற்றுணர்ந்த சான்றோர்கள் முன்னால் அத்தனை ஆபரணங்கள் அணிந்த மன்னர்கள் ஈடாக மாட்டார்கள்.

                         நிறைவு பெற்றது.


No comments:

Post a Comment

You can give your comments here