பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, May 18, 2017

"நன்னெறி" Part IV

"நன்னெறி" எனும் இலக்கியத்தின் முதல் மூன்று பகுதிகளை ஒவ்வொன்றிலும் ஐந்து பாடல்கள் வீதம் அவைகளுக்கான விளக்கங்களுடன் வெளியாகியது. இப்போது இந்த நான்காம் பகுதியில் பாடல் எண்.16 முதல் பாடல் எண் 20 வரையிலான பாடல்களும் அவைகளுக்கான விளக்கங்களையும் காணலாம். இதர பாடல்கள் தொடர்ந்து வெளிவரும்.

16. மேலோர் இழிந்தோர்க்கும் உதவுவார்

தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர் 
தம்மை மதியார் தமையடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர்; இடர்தீர்ப்பர்; அல்கு
கழியினும் செல்லாதோ கடல்?

கடல் மிகப் பெரிது எனினும், அது தன்னிலும் எல்லாவிதத்திலும் குறைந்த விதத்தில் தேங்கிக் கிடக்கும் உப்பங்கழியானாலும் அது தன்னைவிட தாழ்ந்தது என்று கருதாமல் அதனுள்ளும் புகுந்து சென்று பாயும் அல்லவா? அதைப் போல கல்வியில் சிறந்த பண்பாளர்கள் தங்களுடைய தகுதிகளை எண்ணித் தம்மை மிக உயர்ந்தவர்கள் என்பதால் ஒதுங்கி இருக்க மாட்டார்கள். மாறாக தன்னிலும் தகுதி முதலானவற்றில் குறைந்தவர்கள் என்றாலும் அவற்றை யொரு பொருட்டாகக் கருதமாட்டார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு உதவிகள் ஏதேனும் தேவைப்படுமானால் உயர்ந்தோர் தகுதி பார்க்காமல் ஓடிப்போய் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பர். அவர்கள் துன்பங்களை நீக்க பாடுபடுவர். இங்கு உயர்வு தாழ்வு பார்த்து பெரியோர்கள் செயல்பட மாட்டார்கள் என்கிறது இந்தப் பாடல்.

17. வள்ளல்கள் வறுமையிலும் உதவிபுரிவார்கள்

எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன் 
மைந்தர்தம் ஈகைமறுப்பரோ?பைந்தொடிஇ!
நின்று பயனுதவி நில்லா அரம்பையின் கீழ்க்
கன்றும் உதவும் கனி.

நல் வளையல்கள் அணிந்த பெண்ணே! வாழைத் தோட்டத்தில் ஏராளமான வாழை மரங்கள்; தழைத்துச் செழித்து வளர்ந்து பூவிட்டு, அது காயாகி, பின்னர் கனிந்தபின் மக்களுக்கு அந்தந்த காலத்தில் பூவாகவும், காயாகவும், பின்னர் கனியாகவும், அந்த மரம் பயன் தந்து முடிந்ததும் மரத்தின் தண்டாகவும் பிறருக்குக் கொடுத்து உதவுகிறது. அதன் பின் அந்த மரம் பயனற்றுப் போனதும், அருகில் அதன் வேர்க் கிழங்கிலிருந்து கிளம்பும் வாழைக் கன்று வளர்ந்து மரமாகி முன்னதைப் போலவே பூ, காய், கனி அனைத்தும் கொடுக்கும் காலத்தில், நமக்கு முந்தி இங்கு இருந்த மரம் இப்படிக் கொடுத்துக் கொடுத்து அல்லவோ வீழ்ந்து போயிற்று, நாமும் அதுபோல ஆகிவிடாமல் இருக்க அவற்றைக் கொடுக்காமல் இருந்தால் என்ன என்று நினைப்பதில்லை.

அதைப் போல தன்னிடம் வந்து இரப்போர்க்கு ஒரு தந்தைக் கொடுத்துக் கொடுத்து வறுமையில் வீழ்ந்துவிட்டான், நாம் நம் தந்தையைப் போல ஆகிவிடக் கூடாது என்று எண்ணி, அவருடைய மக்கள் பிறருக்குக் கொடுக்கும் ஈகைக் குணத்தைக் கைவிட்டு விடுவார்களா? மாட்டார்கள். தந்தை வழியில் தனயனும் வள்ளல் தன்மையோடுதான் இருப்பான் என்கிறது இந்தப் பாடல்.

18. இன்சொல்லையே உலகம் விரும்பும்

இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே; - பொன்செய் 
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல்.

தகதகவென்று மின்னுகின்ற பொன் வளையல்களை அணிந்த பெண்ணே! காலையில் உதிக்கும் சூரியன் வெப்பமுடையவன். நேரமாக ஆக அவனது வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகும். அப்படிப்பட்ட வெப்பம் தனக்கு நல்லது என்றெண்ணி கடல்நீர் பொங்கி எழுவதில்லை. மாறாக இரவில் வானில் உதயமாகும் இதமான சந்திரனின் மங்கிய குளிர்ந்து வீசும் ஒளியைக் கண்டு அல்லவா கடல் பொங்குகிறது.
அதுபோல இவ்வுலக மக்கள் கொடுஞ் சொற்களைக் கேட்டு மகிழ்வதில்லை; மாறாக இன்சொல் கேட்டால் மகிழ்ந்து போகிறார்கள் என்கிறது இந்தப் பாடல்.

19. நல்லார் வரவு இன்பம் பயக்கும்

நல்லோர் வரவால் நகைமுகங்கொண் டின்புறீஇ 
அல்லோர் வரவால் அழுங்குவார் - வல்லோர்
திருந்தும் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா
வருந்துங் கழற்கால் வர.

மரம் செடி கொடிகளுக்கும் இயற்கை மாற்றங்களுக்கும் தொடர்பு உண்டு. இனிமையான தென்றல் காற்று வீசுகின்ற பருவத்தில் மாமரம் தளிர்த்துத் துளிர்விட்டு வளரத் தொடங்கும்; ஆனால் அதே மரம் சுழல்காற்று வீசுமாயின் அதனால் மரம், கிளை, இலைகள் அனைத்தும் பாழ்படும் என்பதால் நிலைகுலைந்து காணப்படும்.

அதைப் போல பெரியோர்களை நாடி நல்லவர்கள் வருவார்களாயின் பெரியோர் மகிழ்ச்சியடைவர். இன்முகம் காட்டி வரவேற்பர். ஆனால் தீயோர் வருவாராயின், ஐயோ இப்படிப்பட்ட தீயவர்கள் வருகிறார்களோ என்ன தீமை விளையுமோ என்று அச்சப்படுவார்கள் என்கிறது இந்தப் பாடல்.

20. பெரியோர் பிறர் துன்பம் கண்டிரங்குவார்

பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம் 
எரியின் இழுதாவார் என்க; - தெரியிழாய்!
மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்
கண்டு கழலுமே கண்.

ஒருவனுக்கு உடலில் நோய் வந்து விடுகிறது, அதனால் உடல் உறுப்புகளில் சில பாதிப்படைகின்றன. அதனைக் கண்டு கண்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்ற போதிலும் பாதிக்கப்பட்ட உறுப்புகளைக் கண்டு வருந்திக் கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன.


அதுபோல குண நலன்கள் நிறைந்த பெரியோர்கள் பிறருக்கு உண்டாகும் துன்பங்களைக் கண்டு தனக்கு வரவில்லை என்றபோதும், பிறரது துயரைக் கண்டு தீயில் வார்த்த நெய்யினைப் போல உருகுவர். 

No comments: