திருவையாறு பாரதி இயக்கம், திருவையாறு பாரதி இலக்கியப் பயிலகம்
ஆகியவை சார்பில், தஞ்சை வெ.கோபாலன் எழுதிய “தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு” எனும் நூலும்
“சுதந்திர கர்ஜனை” எனும் வரலாற்று நூல்கள் ஞாயிற்றுக் கிழமை வெளியிடப்பட்டன.
இந்த நூல்களில் ஆசிரியரும், திருவையாறு பாரதி இலக்கியப் பயிலகத்தின்
இயக்குனருமான தஞ்சை வெ.கோபாலனின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் நூல்கள் வெளியீட்டு
விழாவும் ஞாயிறு அன்று திருவையாறு சரஸ்வதி அம்பாள் பள்ளியில் முனைவர் இராம.கெளசல்யா
அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது மேனாள் அமைச்சர் குறள்நெறிச்செல்வர் சீ.நா.மீ.உபையதுல்லா
அவர்கள் நூல்களை வெளியிட தஞ்சை பரிசுத்தம் பொறியியல் கல்லூரி தாளாளரும், தொழிலதிபருமான
சே.ப.அந்தோணிசாமி அவர்கள் முதல் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார். விழாவில் நாயக்கர் வரலாறு
நூலை அறிமுகம் செய்து தஞ்சை அனன்யா பதிப்பகத்தின் கவிஞர் வியாகூலனும், “சுதந்திரக்
கர்ஜனை” நூலை தியாகி திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் அவர்களின் புதல்வர் கி.முத்துராமகிருஷ்ணனும்
உரையாற்றினர்.
தொடர்ந்து இந்த நூலாசிரியர் இதுவரை எழுதி வெளியாகியுள்ள “வேதாரண்யம்
உப்பு சத்தியாக்கிரகம்”, “திருவையாற்று வரலாறு”, “பாரதி போற்றிய பெரியோர்கள்”, “தஞ்சையை
ஆண்ட மராத்திய மன்னர்கள்”, “பட்டினத்தார் பாடல்களுக்கான எளிய உரை”, இப்போது வெளியாகும்
“தஞ்சாவூர் நாயக்க மன்னர்கள்”, “சுதந்திர கர்ஜனை” ஆகிய நூல்களைப் பற்றி விமர்சனம் செய்து
பேசினார் குப்பு வீரமணி அவர்கள்.
வழக்குரைஞர் நா.பிரேமசாயி, பி.ராஜராஜன், ஜி.ரவிக்குமார், இரா.மோகன்
ஆகியோரும் ஆசிரியரைப் பற்றியும், அவரது நூல்கள் பற்றியும் பேசினார்கள். 80ஆம் அகவையினுள் நுழையும் ஆசிரியர் தஞ்சை வெ.கோபாலன்
பற்றிய ஓர் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் லட்சுமி ரவி ஒரு வாழ்த்துப் பா எழுதி அளித்தார்.
தஞ்சை மராத்திய மன்னர்களுக்கு முன்பாக தஞ்சையை விஜயநகர சாம்ராஜ்யத்தின்
அரச குடும்பத்தார் ஆண்டு வந்தனர். கிருஷ்ணதேவராயரின் தம்பி அச்சுததேவராயரின் உறவினர்
சேவப்ப நாயக்கர் தஞ்சாவூருக்கு விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தி சார்பில் நியமிக்கப்
படுகிறார். அவரைத் தொடர்ந்து வந்த அச்சுதப்ப நாயக்கர், அவரது மகன் ரகுநாத நாயக்கர்,
இறுதியாக விஜயராகவ நாயக்கர் ஆகியோர் தஞ்சையை சுமார் 128 ஆண்டுகள் ஆண்ட வரலாற்றை இந்நூல்
விவரிக்கிறது. நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சதர் பற்றிய
சிறப்பான குறிப்புகள் இந்நூலில் காணப்படுகின்றன. சேவப்பர் நாயக்கர் நீர்நிலைகள் பதுகாப்பு,
நீர் பங்கீடு பற்றியெல்லாம் மிகச் சிறப்பான நடவடிக்கைகளை செய்திருக்கின்றார். அச்சுதப்ப
நாயக்கர் திருவரங்க ஆலய கோபுரங்களையும், சுற்றுப்பிரகாரங்களையும் கட்டிக் கொடுத்த விவரங்கள்
இந்நூலில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடைசி அரசர் விஜயராகவர் மதுரை நாயக்கர் படைகளால்
தஞ்சை நகரத்தின் மையப்பகுதியில் வெட்டிக் கொல்லப்படும் செய்திகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
“சுதந்திர கர்ஜனை” எனும் நூல் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில்
1857இல் நடந்த சிப்பாய் கலகம் என வருணிக்கப்பட்ட முதல் சுதந்திரப் போரில் தொடங்கி இந்தியா
சுதந்திரம் அடைந்த 1947 வரையிலான வரலாற்றைச் சுருக்கமாகக் காணக் கிடைக்கின்றது. இவ்வரலாறு
சிப்பாய் கலகம் தொடங்கி பின்னர் விக்டோரியா மகாராணி இந்தியாவை இங்கிலாந்து நேரடியாக
ஆளத் தொடங்கிய காலம்; பின்னர் 1906 வரையிலான திலகர் காலம், 1915க்குப் பின் இந்தியாவுக்கு
வந்த மகாத்மா காந்தியடிகள் காலம் 1942இல் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டங்கள்,
1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் நமக்குக் கிடைத்த சுதந்திரம் வரை கூறப்பட்டிருக்கிறது. இது
வெறும் வரலாற்று ஆவணமாக இல்லாமல், ஒரு வரலாற்றுப் புதினம் போல சொல்லப்பட்டிருக்கிறது.
பெரும்பாலும் காந்திய கொள்கைகளின்படி நடத்தப்பட்ட சுதந்திரப்
போரில் அகிம்சை, சத்தியாக்கிரகம் ஆகிய காந்திய தர்மங்கள் காக்கப்பட்ட விதமும், பின்னர்
1942இல் மும்பை காங்கிரசின் தீர்மானத்தின்படி “வெள்ளையனே நாட்டைவிட்டு வெளியேறு” போராட்டம்,
அதன் பின் விளைவுகள் என்று சுதந்திர வரலாறு பேசப்படுகிறது. 1942 போராட்டத்தில் அதிகம்
வெளியில் அறியப்படாத பல தமிழ் நாட்டு நிகழ்வுகள் குறிப்பிடப் படுகின்றன. வரலாற்றில்
ஆர்வமுள்ள பலருக்கும் இந்த நூல்கள் பெருத்த நல்வராவாக அமைந்திருக்கின்றன.
கூட்ட ஏற்பாடுகளை பாரதி இயக்கத்தின் நா.பிரேமசாயி, திங்களூர்
சீனிவாசன், இரா.மோகன் ஆகியோர் செய்திருந்தனர். நூலாசிரியர் தஞ்சை வெ.கோபாலன் ஏற்புரை
நிகழ்த்த, இயக்கத்தின் செயலர் சார்பில் இரா.முத்துக்குமார் நன்றி உரையாற்றினார்.
நூல்கள் கிடைக்குமிடம்:
அனன்யா பதிப்பகம்,
குழந்தை ஏசு ஆலயம் அருகில்,
புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613005
No comments:
Post a Comment