பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 19, 2016

பாராட்டு மடல்


திருவையாறு சரஸ்வதி அம்பாள் பள்ளியில் 2016 ஜூலை 3ஆம் நாள் ஞாயிறன்று என்னுடைய இரண்டு நூல்கள் "தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு", "சுதந்திர கர்ஜனை" ஆகியவை வெளியீடும், என்னுடைய 80ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சியையும் திருவையாறு பாரதி இயக்கம் சார்பில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அப்போது கும்பகோணம் திருமதி லட்சுமி ரவி அவர்கள் வழங்கிய பாராட்டு மடல் இது. அன்பர்கள் பார்வைக்காக:




Monday, 4 July 2016

மகுடாபிஷேகத்திற்கு ஒரு மகிழமலர்ச்செண்டு. - திரு.வெ .கோபாலனின் 80 ம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் வாசித்தது.

அரங்கிலுள்ளோர் அனைவரையும்
அடக்கத்துடன் வணங்குகின்றேன்!  

கலைத்துறைகள் பலவற்றில்
காலூன்றி சேவையாற்றும்
மகத்தான மாமனிதனுக்கு -
மகுடம் சூட்டி மகிழ்ந்திருக்கும்
ஆன்றோர்கள் அவைதனிலே,
அணில்குஞ்சு நான் வந்து,
இயன்றவரை என் முதுகில்
மணல் சுமக்க விழைகின்றேன்!

தமிழ் பணிகள் செய்துவரும்
தலைசிறந்த குடிமகனின்
அறிமுகம் கிடைத்ததற்கே - நான்
முகம் மலர்ந்து போகின்றேன்! - அவரின்
தொண்டினைப் பற்றியெல்லாம் இதுகாறும்
துல்லியமாய் எடுத்துரைத்தீர் - நான் அவரின்
பண்பினைப் பற்றி மட்டும்
பணிவாகக் கூறுகின்றேன்!

பதவி ஓய்வு பெற்றபின்
சாய்வு, தொய்வு ஏதுமின்றி
கலைப்பணியே கடமையென
கண்ணியமாய் வாழுகின்றார்.
எழுத்துச் சரத்துக்குள் எண்ணிலடங்கா
எண்ணங்களை ஏற்றிவைத்து
வலைத்தளத்தை வடிகாலாய்
வடிவமைத்துக் கொண்டுள்ளார்.

அவரோடு உரையாடுகையில்,
கருத்துச் செறிவோடு
கணக்கற்ற செய்திகளும்,
வருடக் குறிப்போடு
வரலாற்று நிகழ்வுகளும்,
உணர்ச்சிப் பெருக்கோடு
உதிரும் கவிதைகளும் - என்
சிற்றறிவுக்குள்  செல்லமுடியாமல்
சிக்கித் தவித்ததே உண்மை!

எளிமையின் உருவமவர்!
எளிதில் பிறர்க்கு உதவுபவர்!
சிந்தனை செய்வதில் செம்மல்!
சமூக சீர்திருத்த ஆர்வலர்!
அறிவுச் சுரங்கம்!
அள்ளக் குறையா அட்சயபாத்திரம்!
கற்பனையின் உச்சம்!
காருண்யத்தின் விருட்சம்!

கதை, கட்டுரை, நாடகங்கள்
இலக்கியம், வரலாறு, நாட்டியங்கள்
இவையெல்லாம் அவரின் சுவாசங்கள்!
அவற்றிற்கெல்லாம் நேசமாய் என் வந்தனங்கள்!
விழா நாயகனாம் திரு.கோபாலனின்
வானுயர்ந்த செயல்திறனை,
கார்மேகம் சூழ்ந்துவந்து
நீர்துளியால் வாழ்த்தட்டும்!
வான் மீதிருந்து தேவர்கள்
வாழ்த்துப்பா பாடட்டும்!

ஒரு மலருக்குச் சிறப்பு - அதன்
நிறமும், மணமும்.
கடலுக்குச் சிறப்பு - அதன்
அலையும், ஆழமும்.
மலையின் சிறப்பு - அதன்
உயரமும், சிகரமும்.
தஞ்சையின்  சிறப்பு - அதன்
பெரியகோவிலும்,
வெ.கோபாலனின் அரும்பெரும் தோண்டும்! - ஆம்
தஞ்சையின்  சிறப்பு - அதன்
பெரியகோவிலும்,
வெ.கோபாலனின் அரும்பெரும் தோண்டும்!

வாழ்க அவரின் பணி!
வளர்க அவரின் தொண்டு!

நன்றி வணக்கம்!

No comments: