பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 23, 2015

தீபம் நா.பார்த்தசாரதி

                                
தீபம் நா.பார்த்தசாரதி அவர்களையும், அவர் ஆசிரியராக இருந்து நடத்திய “தீபம்” இதழைப் பற்றியும் அறியாத தமிழ் வாசகர்கள் இருக்க முடியாது. அவருடைய “குறிஞ்சிமலர்”, “சமுதாய வீதி”, “பொன் விலங்கு”, “நித்திலவல்லி”, “பாண்டிமாதேவி”, “சத்திய வெள்ளம்” போன்ற புதினங்கள் மிகப் பெருமளவில் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றவைகள். இதில் குறிஞ்சி மலர், பொன்விலங்கு ஆகியவை  தொலைக்காட்சி நெடுந்தொடர்களாகவும் வந்தது நினைவிருக்கலாம்; அதுமட்டுமல்ல குறிஞ்சிமலரில் அரசியல் வாதியொருவர் கதாநாயகனாக நடித்ததும் அனைவரும் அறிவர்.

 இவர் சுமார் 40 புதினங்களும், சிறுகதைகள், சிறுகதைத் தொகுதிகள், கவிதை கட்டுரை ஆய்வு நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிறார்.

அடிப்படையில் இவர் ஒரு தமிழாசிரியர். எழுத்துலகில் தனக்கென்று ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு நல்ல தமிழில் எழுதி வந்தார். தன்னுடைய சொந்தப் பெயரான நா.பார்த்தசாரதி என்பது தவிர இவர் ஏராளமான புனைபெயர்களையும் சூட்டிக்கொண்டு எழுதி வந்தார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் போன்ற பல பெயர்கள் இவருக்கு உண்டு. எழுதும் விஷயத்துக்கேற்ப இவருடைய புனைபெயர்களும் பொறுத்தமாக அமையும்.
இவருடைய கதைகளை வரலாற்று நவீனம் என்றும் சமகால பிரச்சினைகளை அலசும் கதைகள் என்றும் பிரித்துப் பார்க்கலாம். இவருடைய கதைகளில் காதல் என்பது மிக நளினமாக, சங்ககால இலக்கியத்தில் காணப்பெறும் காதல் காட்சிகளைப் போல உள்ளத்தின் ஆழத்தில் மறைந்து கிடக்கும் உணர்வுகளை மெல்ல வெளிக்கொணரும் விதத்தில் அமைந்திருக்கும். சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் என்பது பெருமைக்குரிய விஷயம்.

இவர் இராமநாதபுரம் மாவட்டம் நதிக்குடி எனும் கிராமத்தில் பிறந்தவர். மகாகவி பாரதியார் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் இவர் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் தமிழாசிரியர் என்பதால் நல்ல தமிழில் இவரால் எழுத முடிந்தது. கல்கி இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றி பின் சொந்தமாக ‘தீபம்’ இதழைத் தொடங்கி நடத்தி வந்தார்.
பின்னர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் நடத்திய தினமணி கதிர் இதழின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றினார். பிறகு அதிலிருந்தும் விலகி சுயேச்சையாக இருந்துகொண்டு எழுத்துப் பணியில் ஈடுபடலானார்.

இவர் பல அயல்நாடுகளுக்கும் பயணம் சென்று அது குறித்தெல்லாம் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இதய நோயால் பாதிக்கப்பட்டு இவர் உயிரிழக்க நேர்ந்தது. இவருடைய படைப்புகள் ஏராளமானவை இலக்கியத் தரத்தோடு படிப்பவர்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.


No comments:

Post a Comment

You can give your comments here