பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 23, 2015

தி.ஜானகிராமன்

                                              

இப்போதைய இளைய தலைமுறையினரில் தமிழ் சிறுகதை, புதினம் ஆகியவற்றில் பரிச்சயம் இல்லாதவர்களிடம் இந்தப் பெயரைக் கேட்டால் ஒருக்கால் தெரியாமல் இருக்கலாம், ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் இவர் பெயரை அறிந்தே வைத்திருந்தார்கள். “அம்மா வந்தாள்”, “மோகமுள்”, “செம்பருத்தி” “மரப்பசு” போன்ற நாவல்கள் ஒருகாலத்தில் இளைஞர்கள் விரும்பிப் படித்தவைகள். இவருடைய பத்து சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து காவல்துறை அதிகாரியாக இருந்த திருமதி திலகவதி ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். அவருடைய எண்ணற்ற சிறுகதைகளில் அவர் தேர்ந்தெடுத்தவை 1.கங்கா ஸ்நானம் 2. சிலிர்ப்பு 3. பரதேசி வந்தான் 4. பிடி கருணை 5. முள்முடி 6. மேரியின் ஆட்டுக்குட்டி 7. கோதாவரிக் குண்டு 8. பசி ஆறிற்று 9. சத்தியமா! 10. செய்தி. ஆகியவை. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையை வெளிப்படுத்தும் கதைகள்.

தமிழ் எழுத்துலகுக்கு இவரது பங்களிப்பு பற்றி திருமதி திலகவதி சொல்லும் கருத்துக்கள் கவனிக்கத் தக்கது. “ஜானகிராமனின் படைப்புகள் படைப்புலகில் அடியெடுத்து வைப்போர்க்கு எண்பதுகள் வரை ஆதர்சமாக இருந்தன”. ஆம்! இது சத்தியமான வாக்கு. அந்தக் காலத்தில் தி.ஜானகிராமனைப் படிக்காமல் தமிழில் சிறுகதை, நாவல் எழுத யாரும் முயற்சித்ததாகத் தெரியவில்லை. தஞ்சை மாவட்டத்தின் காவிரிக்கரை மக்களின் சொல்வழக்கும், நடவடிக்கைகளும் அவருடைய பாத்திரப் படைப்புகளில் முழுமையாக நிறைந்திருக்கும். எடுத்துக்காட்டாக “செம்பருத்தி” கதையின் பெரும்பகுதி தஞ்சை மண்ணில் ஒரு சிறு கிராமத்தில் நடக்கிறது. அந்தக் கதையில் வரும் தெருவில் இருபுறமும் வரிசையான வீடுகள். ஒவ்வொரு வீட்டுக்காரரும் தன் வீட்டு வாசலை சாணி தெளித்து நன்றாகப் பெருக்கிக் கோலமிட்டு வைப்பார்கள். இருவீட்டு வாசலுக்கு நடுவில் இவர்கள் குவித்த மண் திட்டாக குவிந்திருக்கும். இரவு நேரங்களில் உணவருந்தியபின் கையலம்ப அவர்கள் பின்புறம் போகாமல் வாசலில் அந்த மண்திட்டில் கை அலம்புவது உண்டு. இந்த சிறிய விஷயத்தைக் கூட ரசித்து எழுதும் அவரது எழுத்தில் எதார்த்தம் குடிகொண்டிருந்ததில் ஆச்சரியம் இல்லை. இவருடைய எழுத்துக்களில் கர்நாடக இசை ஒரு முக்கிய அங்கம் வகிக்கும். அந்தந்த சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி இவர் குறிப்பிடும் ராகங்கள், கதையின் அந்தப் பகுதியில் மிகுந்திருக்கும் ரசங்களுக்கேற்ப அமைந்திருக்கும். அந்த ராகம் சோகத்தை வெளிப்படுத்தக்கூடியது என்றால், அந்த காட்சியும் சோகமயமாகவே இருக்கும். அப்படி இவர் பல ராகங்களைத் தன் கதைகளில் கொண்டுவந்திருக்கிறார். அதிலும் மோகமுள் எனும் நாவல் ஒரு இசைக் கலைஞரைப் பற்றியது. அது திரைப்படமாகவும் வந்து மக்கள் மனங்களைக் கவர்ந்திருக்கிறது.

அம்மா வந்தாள் எனும் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘தி இல்லஸ்டிரேடட் வீக்லி” இதழில் “அப்பூஸ் மதர்” எனும் தலைப்பிட்டுத் தொடராக வெளியிட்டு வந்தார்கள். அதில் வரும் அப்புவை யாரால் மறக்க முடியும். அப்புவின் அம்மாவின் கள்ள உறவை பச்சையாக எந்த இடத்திலும் விளக்கி எழுதாமல் இலை மறைவு காய் மறைவாக அந்த உறவை சொல்லும் யுத்தி யாருக்கு வரும்?

பெண்களின் மன சங்கடங்களை, உணர்வுகளை மென்மையாக தெளிவாக எழுதுவதில் கைதேர்ந்தவர் தி.ஜா. அந்தக் காலத்தில் எந்த விஷயத்தையும் வீட்டில் வயதான பெண்மணிகள் பச்சையாகப் பேசமாட்டார்கள். அவர்கள் பூடகமாகப் பேசி விளக்கும் அழகை அவருடைய எழுத்துக்களில் காணமுடியும். நேரடியான உரையாடல்கள் ஒருபுறம் இருந்தாலும், ஜாடை மாடையான செய்திகள் சொல்வதன் மூலம் அந்த சூழ்நிலையின் இறுக்கத்தை வெளிப்படுத்தும் வல்லமை படைத்தவர் தி.ஜா. அவரைப் படித்தவர்கள் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது, அந்த அளவில் அவர் எல்லோர் மனங்களிலும் ஒரு நிலையான இடத்தைப் பிடித்துவிட்ட உணச்சிகளை வெளிப்படுத்தும் வல்லமை படைத்த எழுத்தாளர்.

அவருடைய நாவல்கள் ஏதோ ஒருவருடைய கற்பனையில் உதித்த சம்பவங்களாக இல்லாமல் ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்த, நேரில் பார்த்த நிகழ்ச்சிகளை மறுபடியும் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். காலத்தால் மறக்க முடியாத ஓர் அற்புதமான எழுத்தாளர், மண்வாசனை துலங்க எழுதிய அவர் எழுத்துக்கள் காலம் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.
தி.ஜா. என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் தி.ஜானகிராமன் அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். யதார்த்தம் அவருடைய எழுத்தின் உயிர்மூச்சு. இவர் பிறந்தது 1921 பிப்ரவரி 28இல்.

இவர் சுமார் பன்னிரெண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.


இவருடைய நாடகங்களான “வடிவேலு வாத்தியார்”, “நாலு வேலி நிலம்” ஆகியவை எஸ்.வி.சகஸ்ரநாமம் குழுவினரால் நாடகங்களாக நடிக்கப்பட்டவை. 1979இல் இவருக்கு சாகித்ய அகாதவி விருது வழங்கப்பட்டது. தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பெற்ற தி.ஜானகிராமன் 1982 நவம்பர் 18 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க தி.ஜா. புகழ்!

No comments: