பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, December 24, 2015

அன்னதான சிவன்

திருக்குடந்தை மாநகரில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் "மகாமகம்" விழா நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதையொட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியரகம் ஒரு மலர் வெளிக்கொணர விருப்பதாகவும் அதற்கு கட்டுரைகள் அனுப்ப விரும்புவோர் அனுப்பலாம் என்று ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுத்து அது "தினமணி" இதழில் இரு நாட்கள் வந்தன. அந்த முகவரிக்கு நான் அனுப்பிய கட்டுரை, அப்படியொரு மின்னஞ்சல் முகவரி இல்லையென்று திரும்பி வந்துவிட்டது. போகட்டும், மலரில் இல்லாவிட்டாலும் இந்த வலைப்பூவிலாவது வெளிவரட்டுமென்று இதில் வெளியிடுகிறேன். படித்தபின் கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி.   தஞ்சை வெ.கோபாலன். 

                               
                        அன்னதான சிவன்
புண்ணியங்களில் எல்லாம் பெரும் புண்ணியம் பசித்தவர்களுக்கு உணவளித்தல் என்கின்றனர் நமது பெரியோர்கள். சமீபத்தில் சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த சமயம் மக்கள் உணவுக்கும், குடிநீருக்கும் தவித்த தவிப்பினை நாமெல்லாம் அறிந்திருக்கிறோம் அல்லவா? அந்தக் காலத்தில் சுமார் எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இப்போது போல ஊரெங்கும் உணவு விடுதிகளும், தேநீர் கடைகளும் கிடையாது. மிகப் பெரிய ஆலய திருவிழாக்கள் போன்ற விசேஷ தினங்களில் அந்தந்த ஊர்களில் மக்கள் பெருமளவில் வந்து கூடுவார்கள். லட்சக் கணக்கில் வந்து கூடுகின்ற அந்தக் கூட்டத்தினர் உணவுக்கு எங்கே செல்வர்? அப்போதெல்லாம் அதற்கென்று சில அறக்கட்டளைகள் மாயூரம், கும்பகோணம் போன்ற இடங்களில் ஏற்படுத்தப்பட்டு, விசேஷ தினங்களில் அந்தந்த ஊர்களுக்கு வரும் பக்தர்களுக்கு தர்ம காரியமாக உணவளிக்க ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார்கள். அங்கெல்லாம் வருகின்ற அத்தனை பேருக்கும் இல்லையெனாமல் உணவு அளித்து வந்திருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் ஏராளமான உணவு விடுதிகள் ஏற்பட்டுவிட்டதனாலோ என்னவோ, அதுபோன்ற தர்மங்கள் ஓரளவு நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், முன்பு போல முழுவீச்சில் நடைபெறுவது இல்லை.

கும்பகோணத்தில் சென்ற நூற்றாண்டில் நடந்த சில மகாமக நிகழ்ச்சிகளின் போதெல்லாம் அங்கு தேப்பெருமாநல்லூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் இல்லையெனாமல் அன்னதானம் செய்யும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். காஞ்சி மகாசுவாமிகள் என அழைக்கப்படும் பூஜ்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அறிவுரையின்படி, அந்தப் பெரியவர் ஒவ்வொரு ஊராகச் சென்று மகாமகம் வருவதற்கு ஓராண்டுக்கு முன்னாலிருந்து அரிசி, பருப்பு, புளி போன்ற உணவுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் நல்லமனம் படைத்தவர்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்று ஒரு பெரிய மாட்டு வண்டியில் வைத்து தேப்பெருமாநல்லூர் கொண்டுவந்து சேமித்து வைத்திருப்பார்.

ஒரே நாளில் பல்லாயிரம் பேர் உணவருந்தும் அளவுக்கு அவருடைய சேமிப்பு வளர்ந்து விடும். அவருடைய இயற்பெயரை விட இவர் செய்யும் இந்த தர்ம காரியத்தை வைத்து இவரை அனைவரும் “அன்னதான சிவன்” என்றே அழைத்தார்கள். அவர் உயிர்வாழ்ந்த காலம் வரை இந்த புண்ணிய காரியம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது என்பதை இந்த நாடே நன்கு அறியும்.

இந்த அன்னதான சிவனின் இயற்பெயர் ராமசாமி ஐயர் என்பது. முன்பே சொன்னதைப் போல கும்பகோணத்தை அடுத்த தேப்பெருமாநல்லூர் என்பது இவருடைய ஊர். அவர் இந்த அரிய பணியை 1919 முதல் தொடங்கி நடத்தி வந்திருக்கிறார். காஞ்சி சங்கர மடம் தங்கள் தலைமையகமான காஞ்சியைவிட்டு கும்பகோணம் வந்த பிறகு மராட்டிய மன்னர் துளஜாஜி மகாராஜா செய்த உதவியினால் இங்கேயே நிலைபெற்று இருந்தார்கள். தேப்பெருமாநல்லூர் ராமசாமி ஐயர் எனும் அன்னதான சிவன் 1916இல் சங்கரமடத்தினுள் தன் வாசத்தைத் தொடங்கி 1939இல் காலமாகும் வரை அங்கேயே இருந்து வந்தார்.

1933ஆம் ஆண்டு மகாமகத்தைப் பற்றிய ஒரு செய்தியை ரா.கணபதி தன்னுடைய நூல் ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார். நூற்றுக்கணக்கான கட்டை வண்டிகளில் விறகு வந்து இறங்குமாம்; ஊறுகாய்க்காக பெருநெல்லிக்காய் வண்டிகளில் கொண்டுவந்து தருவார்களாம். பெரிய கொட்டாய் அமைத்து அங்கு சமையல் நடந்து கொண்டிருக்குமாம். அப்போது சாம்பார், ரசம் போன்றவை கொதிக்கும்போது வருகின்ற வாசனையை வைத்தே அவர் எதில் என்ன குறைவு, என்ன சேர்க்க வேண்டுமென்பதையெல்லாம் சரியாகச் சொல்லி சமையல் நல்ல ருசியாக இருக்கும்படி பார்த்துக் கொள்வாராம். சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்வதற்காக அவர் இரண்டு கட்டை வண்டியில் தென்னை விளக்குமாற்றைக் கொண்டு வந்து வைத்திருப்பாராம்.

ஏராளமானவர்களுக்கு சமைக்க வேண்டியிருக்குமென்பதால் சாதத்தை ஒரே நேரத்தில் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடமாட்டார். முதலில் பத்து பதினைந்து மூட்டை அரிசியை பெரிய பெரிய அண்டாக்களில் கொதிக்கவிட்டு, வெந்த சாதத்தைத் தரையில் நீண்ட சாக்குப் படுதாவின் மீது மெல்லியதாகப் பரப்பி, அதன் மீது புதிய துணியைப் பரப்பி வைத்து அதன் மீது மேலும் பத்து பதினைந்து மூட்டை அரிசியை அப்படியே பரப்பிவிடுவாராம். அதன் மீது தடித்த சாக்குப் படுதாவை விரித்து அழுத்தி மூடிவிடுவாராம். கீழேயுள்ள வெந்த சாதத்தின் சூட்டில் மேலேயுள்ள அரிசியும் வெந்து சாதமாகிவிடுமாம். இதனை அன்னப் பாவாடை என்று அழைப்பர். அரை மணி நேரத்தில் மேலே பரப்பப்பட்ட அரிசி மிகவும் நன்றாக வெந்து சாப்பிடும் பதத்தில் இருக்கும் என்கிறார்கள்.

ஆயிரக்கணக்கானோர் உணவருந்த வேண்டுமென்றால், அத்துணை பேருக்கும் வேண்டிய தயிர், மோர் வேண்டுமல்லவா? அதற்கு அவர் என்ன செய்வார் தெரியுமா? அந்தக் காலத்தில் குளிர்பதனப் பெட்டிகள் எல்லாம் இல்லையல்லவா; அதனால் அவர் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தார். திருவிழா தொடங்குவதற்கு சில வாரங்கள் அல்லது மாதங்கள் முன்னதாகவே இவர் ஊர் ஊராகச் சென்று பாலை வாங்கி சேகரித்துக் கொள்வார். அதற்கு உறை ஊற்றி தயிராக ஆக்கியபின் அதனை மரத்தினால் ஆன பீப்பாய்களில் நிரப்பி அதன் வாயை நன்றாக காற்று புகாமல் அழுத்தி வாயை மெழுகினால் பூசி மூடிவைத்து விடுவார். அப்படி தயாரான மரப் பீப்பாய்களை ஆழமான நீர்நிலைகளில் மூழ்கும்படி போட்டு வைத்துவிடுவார். பிறகு தேவைப்படும்போது அந்த பீப்பாய்களை எடுத்துத் திறந்து பார்த்தால் அதிலுள்ள தயிர் புத்தம்புதிதாக முதல்நாள்தான் உறையூற்றித் தயாரித்த தயிர் போல இருக்குமாம்.
சிவனின் அன்னதானம் நடக்கும் இடம் திருவிழாவின் முந்தைய நாள் வரை அங்கு இப்படியொரு மிகப்பெரிய நிகழ்ச்சி நடக்கப்போவதற்கான அறிகுறிகள் எவையும் இருக்காதாம். முதல்நாள் இரவுதான் சாப்பாட்டுக்குத் தேவையான சாமான்கள் வந்து இறங்குமாம். நள்ளிரவுக்குப் பிறகு ஏராளமான ஆட்கள் சமையல் வேலையில் ஈடுபட்டு மறுநாள் ஆயிரக்கணக்கான நபர்கள் உணவருந்த தேவையானவைகள் தயாராகிவிடுமாம்.
இதில் ஒரு சுவாரசியமான செய்தி என்னவென்றால், இத்தனைக்கும் காரணமான “அன்னதான சிவன்” அங்கு தயாராகும் உணவில் ஒரு சிறிதும் சுவைத்ததோ சாப்பிட்டதோ கிடையாதாம். அவர் மட்டும் அருகிலுள்ள யார் இல்லத்திற்காவது சென்று தனக்கு உணவு அளிக்க முடியுமா என்பாராம், இவர் வரவுக்காக மகிழ்ந்து அவர்களும் இவரை உபசரித்து, உணவைப் படைத்து மகிழ்வார்களாம். இந்த அன்னதான சிவனுக்குப் படைத்தால், அது அந்த சிவபெருமானுக்கே படைப்பதாக அவர்கள் கருதிவந்தார்கள் என்கிறார்கள். அந்த நாட்களில் இப்படியும் மனிதர்கள் இருந்தார்கள் என்பதை இப்போது சொன்னால், நம்புவதுகூட சிரமமாகத்தான் இருக்கும். வாழ்க அன்னதான சிவன் புகழ்!

(ஆக்கம்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,                    28/13, எல்.ஐ.சி.குடியிருப்பு 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007.     கைபேசி எண்: 9486741885. மின்னஞ்சல்:  privarsh@gmail.com)No comments:

Post a Comment

You can give your comments here