பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, April 25, 2015

32. காற்று I

தேவதரிசனம்
       
மணல், மணல், மணல். பாலைவனம், பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல்.
மாலை நேரம்

அவ் வனத்தின் வழியே ஒட்டகங்களின் மீதேறி ஒரு வியாபாரக் கூட்டத்தார் போகிறார்கள்.
வாயு, சண்டனாகி வந்து விட்டான்.

பாலைவனத்து மணல்களெல்லாம் இடை வானத்திலே சுழல்கின்றன. ஒரு க்ஷணம் யமவாதனை; வியாபாரக் கூட்டம் முழுதும் மணலிலே அழிந்து போகிறது.

வாயு கொடியவன். அவன் ருத்ரன். அவனுடைய ஓசை அச்சந் தருவது.

அவன் செயல்கள் கொடியன. அவனை வாழ்த்துகின்றோம்.

வீமனும் அனுமானும், காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும்.

உயிருடையன வெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்.

உயிர்தான் காற்று. பூமித் தாய் உயிரோடிருக்கிறாள். அவளுடைய மூச்சுத் தான் பூமிக் காற்று. காற்றே உயிர். உயிர்களை அழிப்பவனும் அவனே. காற்றே உயிர். எனவே, உயிர்கள் அழிவதில்லை. சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது. மரண மில்லை.

அகில வுலகமும் உயிர் நிலையே. தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் எல்லாம் உயிர்ச் செயல். உயிரை வாழ்த்துகின்றோம்.

காற்றே, வா. மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனதை மயக்கும் இனிய வாசனையுடன் வா. இலைகளின் மீதும் நீர் நிலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த பிராண-ரஸத்தை எங்களுக்குக் கொண்டு வந்து கொடு. காற்றே வா. 

எமது உயிர் நெருப்பு நீடித்து நின்று நல்ல ஒளி தரும் வண்ணம், நன்றாக வீசு. சக்தி குறைந்து போய் அதனை அவித்து விடாதே. பேய் போலே வீசி அதை மடித்து விடாதே. மெதுவாக, நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்கொண்டிரு. உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம். உன்னை வாழ்த்துகிறோம். 

சிற்றெறும்பைப் பார். எத்தனை சிறியது! அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது. யார் வைத்தனர்? மகா சக்தி. 

அந்த உறுப்புக்க ளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன. எறும்பு உண்ணுகிறது. உறங்குகிறது. மணம் புரிகின்றது. குழந்தை பெறுகிறது, ஓடுகிறது. தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது. இதற்கெல்லாம் காற்றுதான் ஆதாரம். மகா சக்தி காற்றைக் கொண்டுதான் உயிர் விளையாட்டு விளையாடுகிறாள். காற்றைப் பாடுகிறோம். 

அஃதே அறிவிலே துணிவாக நிற்பது. உள்ளத்திலே சலனமாவது. உயிரில் உயிர், உடம்பில் வலிமை. வெளி யுலகத்தில் அதன் செய்கையை அறியாதார் யார்? அறிவார் யார்? காற்றுத் தேவன் வாழ்க.

மழைக்காலம். மாலை நேரம். குளிந்த காற்று வருகிறது. நோயாளி உடம்பை மூடிக் கொள்ளுகிறான், பயனில்லை. காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது. உயிர் காற்றாயின் அதற் கஞ்சி வாழ்வதுண்டோ? காற்று நம்மீது வீசுக. அது நம்மை நோயின்றிக் காத்திடுக.

மாலைக் காற்று நல்லது. கடற் காற்று மருந்து. ஊர்க் காற்றை மனிதர் பகைவனாக்கி விடுகின்றனர். அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை. அதனால், காற்றுத் தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கின்றான். காற்றுத் தேவனை வணங்குவோம். அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. அழுகின பண்டங்கள் போடலாகாது. புழுதி படிந்திருக்கலாகாது. எவ்விதமான அசுத்தமும் கூடாது. 

காற்று வருகிறான். அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம். அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம். அவன் வரும் வழியிலே கற்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்தி வைப்போம். அவன் நல்ல மருந்தாகி வருக. அவன் நமக்கு உயிராகி வருக. அமுதமாகி வருக. காற்றை வழிபடுகின்றோம். அவன் சக்தி குமாரன். மகாராணியின் மைந்தன். 

அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம். அவன் வாழ்க.




No comments:

Post a Comment

You can give your comments here