பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, April 25, 2015

30. சும்மா I



          நேற்று சாயங்காலம் நான் தனியாக மூன்றாவது மெத்தையில் ஏறி உட்கார்ந்திருந்தேன். நான் இருக்கும் வீட்டில் இரண்டாவது மெத்தையிலிருந்து மூன்றாம் மெத்தைக்கு ஏணி கிடையாது. குடக்கூலி வீடு. அந்த வீட்டுச் செட்டியாரிடம் படி (ஏணி) கட்டும்படி எத்தனையோ தரம் சொன்னேன். அவர் இன்றைக்காகட்டும், நாளைக்காகட்டும் என்று நாளைக் கடத்திக் கொண்டு வருகிறார். ஆதலால் மூன்றாம் மெத்தைக்கு ஏறிப்போவது மிகவும் சிரமம். சிறிய கைச்சுவர் மேல் ஏறிக்கொண்டு அங்கிருந்து ஒரு ஆள் உயரம் உந்தவேண்டும். மூன்றாங் கட்டின் சுவரோரத்தைக் கையால் பிடித்துக்கொண்டு கைச்சுவர் மேலிருந்து உந்தும்போது கொஞ்சம் கை வழுக்கி விட்டால் ஒன்றரை ஆள் உயரம் கீழே விழுந்து மேலே காயம் படும். நான் தனிமையை விரும்புவோன். ஆதலால், சிரமப்பட்டேறி அடிக்கடி மூன்றாங் கட்டிலே போய் உட்கார்ந்திருப்பது வழக்கம். இந்த மார்கழி மாதத்தில் குளிர் அதிகமானபடியால் வெயில் காய்வதற்கும் அது இதமாம். இங்ஙனம் நேற்று மாலை நான் வெயில் காய்ந்து கொண்டிருக்கையிலே குள்ளச்சாமியாரும் வேணு முதலியும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இரண்டாங்கட்டு வெளிமுற்றத்தில் வந்து நின்று கொண்டு என்னைக் கைதட்டிக் கூப்பிட்டார்கள். நான் இறங்கி வரும் பொருட்டாக வேஷ்டியை இடுப்பில் வரிந்து கட்டினேன். அதற்குள் குள்ளச் சாமியார் என்னை நோக்கி "நீ அங்கேயே இரு, நாங்கள் வருகிறோம்" என்று சொன்னார்.

       இந்தக் குள்ளச் சாமியாரைப்பற்றி முன்னொருமுறை எழுதியிருப்பது ஞாபகமிருக்கலாம். இவர் கலியுக ஜடபரதர், மகா ஞானி, சர்வஜீவ தயாபரன். ராஜயோகத்தால் மூச்சைக் கட்டி ஆளுகிற மகான். இவர் பார்ப்பதற்குப் பிச்சைக் காரன் போலே கந்தையை உடுத்திக்கொண்டு தெருக்களில் உலாவுவார். இவருடைய மகிமை ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் மாத்திரம் எப்படியோ தெரிந்திருக்கிறது. தெருவில் இவர் நடந்து செல்லுகையில் ஸ்திரீகள் பார்த்து இவரைக் கை யெடுத்துக் கும்பிடுவார்கள்.

            குழந்தைகளெல்லாம் இவரைக் கண்டவுடன் தாயை நோக்கி ஓடுவது போலே ஓடி இவருடைய முழங்காலை மோர்ந்து பார்க்கும். இவர் பேதை சிரிப்புச் சிரித்துக் குழந்தைகளை உச்சி மோர்ந்து பார்ப்பார். ஆனால் சாமானிய ஜனங்களுக்கு அவருடைய உண்மையான மகிமை தெரியமாட்டாது. கண்மூடித் திறக்கு முன்னாகவே கைச்சுவர் மேல் ஒரு பாய்ச்சல் பாய்ந்து அங்கிருந்து மேல்மெத்தைக்கு இரண்டாம் பாய்ச்சலில் வந்து விட்டார். இவரைப் பார்த்து இவர் போலே தானும் செய்ய வேண்டுமென்ற எண்ணங் கொண்டவனாய் வேணு முதலி ஜாக்கிரதையாக ஏறாமல் தானும் பாய்ந்தான். கைப்பிடிச் சுவர்மேல் சரியாகப் பாய்ந்து விட்டான். அங்கிருந்து மேல்மெத்தைக்குப் பாய்கையில் எப்படியோ இடறித் தொப்பென்று கீழே விழுந்தான். இடுப்பிலேயும் முழங்காலிலேயும் பலமான அடி; ஊமைக் காயம். என் போன்றவர்களுக்கு அப்படி அடிபட்டால் எட்டு நாள் எழுந்திருக்க முடியாது. ஆனால் வேணு முதலி நல்ல தடியன். "கொட்டாப்புளி ஆசாமி." ஆதலால் சில நிமிஷங்களுக்குள்ளே ஒருவாறு நோவைப் பொறுத்துக் கொண்டு மறுபடி ஏறத் தொடங்கினான்.

              குள்ளச் சாமியார் அப்போது என்னை நோக்கி, "நாமும் கீழே இறங்கிப் போகலாம்" என்று சொன்னார். சரி யென்று நாங்கள் வேணு முதலியை ஏற வேண்டாமென்று தடுத்து விட்டுக் கீழே இறங்கி வந்தோம். இரண்டாங் கட்டு வெளி முற்றத்திலேயே மூன்று நாற்காலிகள் கொண்டு போட்டு உட்கார்ந்து கொண்டோம்.

             அப்போது வேணு முதலி என்னை நோக்கி "அங்கே தனியாக ஹனுமாரைப் போலே போய்த் தொத்திக் கொண்டு என்ன செய்தீர்?" என்று கேட்டான்.

             "சும்மாதான் இருந்தேன்" என்றேன்.

வந்து விட்டதையா வேணு முதலிக்குப் பெரிய கோபம். பெரிய கூச்சல் தொடங்கி விட்டான்.

            "சும்மா, சும்மா, சும்மா, சும்மா இருந்து சும்மா இருந்து தான் ஹிந்து தேசம் பாழாய்க் குட்டி சுவராய்ப் போய் விட்டதே? இன்னம் என்ன சும்மா? எவனைப் பார்த்தாலும் இந்த நாட்டில் சும்மாதான் இருக்கிறான். லக்ஷலக்ஷ லக்ஷமாகப் பரதேசி, பண்டாரம், ஸந்நியாசி, சாமியார் என்று கூட்டம் கூட்டமாகச் சோம்பேறிப் பயல்கள். கஞ்சா அடிக்கிறதும், பிச்சை வாங்கித் தின்கிறதும், சும்மா உலாவுகிறதும்தான் அந்தப் பயல்களுக்கு வேலை. இரண்டு வேளை ஆகாரம் ஒருவனுக்கு இருந்தால், அவன் தொழில் செய்யும் வழக்கம் இந்த தேசத்திலே கிடையாது. ஜமீந்தார், மிட்டாதார், பண்ணையார், மிராசுதார், இனாம்தார், ஜாகீர்தார், மடாதிபதிகள், ராஜாக்கள் எல்லாருக்கும் சும்மா இருப்பதுதான் வேலை. சோம்பேறிப் பயல்களுடைய தேசம்" என்று பலவிதமாக வேணு முதலி ஜமாய்க்கிற சமயத்தில் குள்ளச்சாமி மேற்கு முகமாகச் சூரியனை நோக்கித் திரும்பிக் கொண்டு, "சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணம் என் றெம்மால் அறிதற்கெளிதோ பராபரமே" என்ற தாயுமானவர் கண்ணியைப் பாடினார். வேணு முதலி அவரை நோக்கி, "சாமியாரே, நீர் ஏதோ ராஜயோகி என்று காளிதாஸர் சொல்லக் கேள்விப்பட்டேன். உம்முடன் நான் பேசவில்லை. காளிதாஸரிடம் நான் சொல்லுகிறேன். நீர் சந்நியாசி யென்று சொல்லி ஜன்மத்தையே மரத்தின் ஜன்மம் போலே யாதொரு பயனுமில்லாமல் வீணாகச் செலவிடும் கூட்டத்தைச் சேர்ந்தவர். மரமாவது பிறருக்குப் பழங்கள் கொடுக்கும், இலைகொடுக்கும், விறகு கொடுக்கும். உங்களை மரத்துக்கொப்பாகச் சொல்லியது பிழை. உங்களாலே பிறருக்கு நஷ்டம்; மரத்தால் பிறருக்கு எத்தனையோ லாபம்" என்றான். இங்ஙனம் வேணு முதலி சொல்லிக்கொண்டிருக்கும் போதே குள்ளச் சாமியார்;

            "சும்மா இருக்கச் சுகம் சுகமென்று சுருதியெல்லாம் 
            அம்மா நிரந்தரம் சொல்லவுங் கேட்டு அறிவின்றியே 
            பெம்மான் மவுனி மொழியையுந் தப்பி என் பேதைமையால்             வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதி வசமே!"

     என்று தாயுமானவருடைய பாட்டொன்றைச் சொன்னார்.

             வேணு முதலிக்குக் கீழே விழுந்த நோவு பொறுக்க முடியவில்லை. அந்தக் கோபம் மனதில் பொங்குகிறது. அத்துடன் சாமியார் சிரித்துச் சிரித்துப் பாட்டு சொல்வதைக் கேட்டு அதிகக் கோபம் பொங்கிவிட்டது. வேணு முதலி சொல்லுகிறான்:

               "ஓய் சாமியாரே, நீர் பழய காலத்து மனுஷ்யன்; உம்முடன் நான் தர்க்கம் செய்ய விரும்பவில்லை. என்னுடைய சாமர்த்தியம் உமக்குத் தெரியாது. நான் பன்னிரண்டு பாஷைகளிலே தேர்ச்சியுடையவன். உமக்குத் தமிழ் மாத்திரம் தெரியும். நான் இந்த யுத்தம் முடிந்தவுடன் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போய் அங்கெல்லாம் இந்து மதத்தை ஸ்தாபனம் செய்யப் போகிறேன். நீர் தெருவிலே பிச்சைவாங்கித் தின்று திண்ணை தூங்குகிற பேர்வழி. உமக்கும் எனக்கும் பேச்சில்லை. தேசத்திற்காகப் பாடுபடுவதாக 'ஹம்பக்' பண்ணிக்கொண்டிருக்கிற காளிதாஸர் - இந்த விதமான சோம்பேறிச் சாமியார்களுடன் கூடிப் பொழுது கழிப்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை விளைவிக்கிறது. உங்களிடமிருந்து தான் அவர் இந்த சும்மா இருக்கும் தொழில் கற்றுக் கொண்டார் போலும்!" என்று வேணு முதலி இலக்கணப் பிரயோகங்களுடன் பேசத் தொடங்கினான்.

மறுபடி சாமியார்:

          "சும்மா இருக்கச் சுகம் உதய மாகுமே 
           இம்மாயா யோகம் இனி ஏனடா - தம்மறிவின் 
           சுட்டாலே யாகுமோ சொல்ல வேண்டாம் கர்ம 
           நிஷ்டா சிறு பிள்ளாய் நீ"

என்ற தாயுமானவருடைய வெண்பாவைப் பாடினார். 
அப்போது வேணு முதலி என்னை நோக்கி "ஏனையா! காளிதாஸரே, இந்தச் சாமியார் உமக்கு எத்தனை நாட்பழக்கம்?" என்று கேட்டான். நான் ஜவாப் சொல்லாமல் "சும்மா" இருந்து விட்டேன். அப்பொழுது குள்ளச்சாமியார் சொல்லத் தொடங்கினார்.

               அத்துடன் இந்தக் கதையே வெகு நீளம். அது சுருக்கிச் சொன்னாலும் இரண்டு பாகங்களுக்குள்ளே தான் சொல்ல முடியும். நாலைந்து பாகம் ஆனாலும் ஆகக்கூடும்.  அவ்வளவு நீண்டகதையை இத்தனை காயிதப் பஞ்சமான காலத்தில் ஏன் சொல்லப் புறப்பட்டீர் என்றாலோ அது போகப் போக ஆச்சரியமான கதை. அற்புதமான கதை! இதைப்போலே கதை நான் இதுவரை எழுதினது கிடையாது. நான் வேறு புஸ்தகங்களிலே படித்ததும் கிடையாது. நீங்கள் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். எழுந்து கூ கூ கூ என்று கூவி ஆடிப்பாடிக் குதிக்கத் தொடங்குவீர்கள். நான் கேட்காத அற்புதத்தைக் கேட்டேன். காணத்தகாத அற்புதத்தைக் கண்டேன். ஆதலால் உலகத்திலே இதற்கு முன் எழுதப்பட்ட கதைகள் எல்லாவற்றிலும் அற்புதத்திலும் அற்புதமான கதையை உங்களுக்குச் சொல்லப் புறப்பட்டேன். ஆனால் இந்த வியாசம் நீண்டு போய்விட்டதே; அடுத்த பாகத்தில் தானே சொல்ல முடியும். நான் வாக்குத் தவற மாட்டேன். இரண்டாம்பாகம் சீக்கிரம் உங்களுக்குச் சொல்லுகிறேன். கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள்.
   
       


1 comment:

இன்னம்பூரான் said...

அன்பார்ந்த கோபாலன்,
இங்கு ஒரு கோபால் இருக்கிறார். நான் 'சும்மா கிடப்பதே சுகம்' என்று சும்மா எழுதிய உடனே, ம்ஹாகவியின் இந்த சிந்த்னையை தூண்டும் கட்டுரையை அனுப்பினார். நான் சும்மா கிடக்காவிட்டால், இந்த 'சும்மா' அனுபவும் கிடைத்திருக்காது.

பொங்கல் வழ்த்துக்கள்.
இன்னம்பூரான்